Tuesday, April 21, 2015

தங்கப்பழத்தைத் திங்கவா முடியும்? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 42)


அதிசயம் காமிச்ச அற்புத மாதா கொரட்டி முத்தி  விஷயம் கொஞ்சம் விவரம் கேக்கலாமுன்னு  ஓஃபீஸ் கட்டிடத்துக்குள் போனால்.... அங்கே ரெண்டு மூணு  பதின்மவயதினர்,   ஒரு 200 மில்லி  கொள்ளளவு இருக்கும் சின்ன பாட்டிகளில்  தண்ணீர் ரொப்பி அடுக்கி வச்சுக்கிட்டு இருந்தாங்க. என்னன்னு விசாரிச்சால் தீர்த்தமாம். அடுத்த விநாடி நடந்ததுதான், இதுவும்  ஒரு இந்துக்கோவில் என்ற எண்ணத்தை நிரூபிக்கும் சமாச்சாரமாகிருச்சு.  இன்னொரு பையன் அங்கிருந்த குழாயில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடிச்சுக்கொண்டு வந்து  தீர்த்தம் ஃபில்லிங்  ஏரியாவுலே வச்சதும், அதுலேஇருந்து சின்ன டம்பளராலே மொண்டு பாட்டில்களை நிரப்ப ஆராம்பிச்சாங்க. காலியான பாத்திரத்தை  எடுத்துக்கிட்டு திரும்ப குழாயாண்டை போனார் பையன். அப்ப, நான்   என்னன்னு கேட்டதுக்கு சரியாத்தான்  பதில் சொல்லியிருக்காங்க. தீர்த்தம்!!!!

'அச்சனைக் காணேணும்' என்று சொன்னப்ப.... 'அச்சன்  அடுத்துள்ளஒரு ஸ்தலத்திலேய்க்குப் போயிட்டுண்டு.  வைகிட்டு மடங்கும்' என்றதால் சரின்னு தலையாட்டிட்டு வந்துட்டேன்.

ஹிந்துக்கோவில்களில் நடக்கும் எல்லா விசேஷங்களும் இங்கேயும் நடக்குது. கோவில் திருவிழாவுக்குக் கொடி ஏற்றுதல், குழந்தைகளுக்கு முதல்முதலில் சோறு கொடுக்கும் அன்னப்ராஸனம்,  விஜயதசமிக்கு வித்யாரம்பம்  இப்படி அவர்களுக்குள்ள  சடங்குகள் படி.






ஆகக்கூடி  மனுஷ்யர் எல்லாம் ஒன்னுபோலவே! மதச்சடங்குகள் மட்டுமே  அந்தந்த மதங்களின் விதி அனுசரிச்சு.  இந்த ஏற்பாடு நல்லாத்தானே இருக்கு! பின்னே  எதுக்காக சண்டை போட்டுக்கறோம்?:(

இந்தப் பள்ளியில் பூவன்பழக்குலை நேர்ச்சையாகக்  கொண்டுபோய் கொடுக்கறது  ஒரு சிறப்பு வழிபாடு. இதுக்கு ஒரு 'புராணக் கதை'யும் உண்டு.  ரொம்ப காலங்களுக்கு முந்தி கொரட்டியிலிருந்து 10 கிமீ தூரத்தில் இருக்கும் மேலூர்  என்ற  கிராமத்திலிருந்து பக்தர் ஒருவர், தன் தோட்டத்தில் விளைஞ்ச பூவன்பழக்குலை ஒன்னைத் தூக்கிக்கிட்டு  கொரட்டிமுத்திக்குச் சமர்ப்பிக்க நடந்து வந்துக்கிட்டு இருந்தார். முரிங்கூரைக் கடந்துவரும் சமயம், அங்கே  தன் வேலையாட்களுடன் ஒரு தோட்டத்திலிருந்த நிலச்சுவான்தார் ஒருவர்,  பழக்குலையைக் கண்டதும் அதுலே ரெண்டு பழம்கொடுத்துட்டுப்போன்னு இவரிடம் கேட்க, பக்தர்சொல்றார்,' இல்லைங்க. இது பள்ளிக்குக் கொண்டு போகும் நேர்ச்சை.'

அடுத்தவன் கொண்டுபோறதைக் கேட்க அவமானமா இருக்காதோ? அல்பம்:(

இப்படி அவர் மறுத்ததும்,  சுத்தி நின்னுக்கிட்டு இருந்த வேலையாட்கள் முன்னால் தனக்கு மானக்கேடு ஆகிருச்சு நினைச்ச முதலாளி,  பழக்குலையில் இருந்து தானே ரெண்டு பழம் பறிச்செடுத்து தின்றார். பக்தருக்கோ,  பணக்காரர் அதிகாரத்தின் முன்னால் என்ன செய்வதுன்னு தெரியாம கண்ணீரோடு அந்த இடத்தைக் கடந்து போறார். அவர் போனதும்  முதலாளிக்கு வயித்துவலிஆரம்பிச்சது.

எத்தனையோ மருத்துவர்களிடம் போய் சிகிச்சை செய்தும் வயித்து வலி குணமாகலை. அப்பதான்   பள்ளிக்குக் கொண்டுபோன பழத்தை எடுத்துத் தின்னதன் பலன் இதுன்னு அவருக்குத் தோணுது. உடனே  முத்தியிடம் தன்னை   மன்னிக்கச்சொல்லி பிரார்த்தனை செஞ்சு,  தன்னிடம் இருக்கும் நிலங்களில் பாதியை பள்ளிக்கு எழுதிக் கொடுக்கறார். வயித்துவலி போயேபோச்!

அதுக்குப்பிறகு  பள்ளியில் ப்ரசாதமா பூவன்பழம் கொடுப்பது  ஆரம்பிச்சு இருக்கலாம்.  பூவன்குலை நேர்ச்சை வந்துருச்சு.  யாரோ ஒரு பக்தர் தங்கக்குலை செஞ்சு கோவிலுக்கு  சமர்ப்பிச்சு இருக்கார்!  இந்த பூவன்பழத்தை வீட்டுக்குக் கொண்டுபோய் நல்லா காயவச்சு பொடி பண்ணி வச்சுக்கிட்டு  வயித்துவலி யாருக்காவது வரும்போது ஒரு சிட்டிகை வாயில் போட்டுக்கும்  அருமருந்தா ஆகி இருக்கு! நம்புனாதான் தெய்வம்!

அதிசயம் என்று சொல்லும் இன்னும் சில சமாச்சாரங்களும்  இருக்கு கேட்டோ!   நான் ஆரம்பத்தில் ஜமுனா கோட்ஸ் நூல் ஆலைன்னு சொன்னேன்  பாருங்க..... ஆக்ச்சுவலா அந்த ஆலை இன்று இருக்குமிடத்தில்  ஒரு  படை வீரர்களுக்கான  விமானதளம் ஒன்னு Military Air Base கட்டணும் என்பது ஆரம்பகால  ஏற்பாடாம். ஒவ்வொருமுறை வேலை ஆரம்பிக்கும்போதும் எதாவது தடை ஏற்பட்டு வேலை நின்னு போயிருமாம். ஒரு வயசான பெண்மணி, கையில் குழந்தையோடு  அங்கே வந்து நின்னு, கட்டிடம் கட்டாதீங்கன்னு  கண்ணீர் விட்டு அழுவாங்களாம். பலமுறை இப்படி ஆனதைப் பார்த்த ஒப்பந்தக்காரர், கொரட்டி முத்திதான் கையில் பிள்ளை யேசுவோடு வர்றாங்கன்னு நினைச்சு, வெள்ளியில் கடப்பாரை, மண்வெட்டின்னு கட்டடம் கட்டும் கருவிகளைச் செஞ்சு  கொட்டுமுழக்கோடு பெரிய  ஊர்வலமாக் கொண்டுபோய்  பள்ளியில் சமர்ப்பிக்கிறார். அப்படியும் அவர் முயற்சி நிறைவேறலை.

ஏர் பேஸ் வர்றது நின்னு போச்சு. அந்த இடத்தில்தான்  ஜமுனா கோர்ட்ஸ் ஆலை வந்து சுமார் மூவாயிரம் பேர்களுக்கு வேலை கிடைக்கக் காரணமா இருந்துச்சு. இந்த ஆலை அப்புறம்  மதுரா கோட்ஸ் கம்பெனிக்குக் கைமாறிட்டாலும்,உள்ளூர் மக்கள் ஜமுனான்னுதான் இன்னும் சொல்லிக்கிட்டு இருக்காங்க.

ஆயிரம் தொழிலாளர்கள்தான் அங்கே வேலை செஞ்சாங்கன்றது  ஒரு தகவல். மனுஷ குணாதிசயப்படி   மூணாம் வாய்ப்பாடு எளிதாக எல்லோருக்கும் வந்துருக்கு:-)


அங்கேயும்  எண்பதுகளில் தொழிலை நடக்கவிடாம அரசியல் புகுந்து  கொடி பிடிச்சுக்  குழப்ப ஆரம்பிச்சதுன்னு   ஒரு சமயம் ஹிந்து பத்திரிகையில் வாசிச்ச  நினைவு.

ஒரிஜினல் கோவில் ஆறு நூற்றாண்டுகளுக்கு  முன்பே  இருந்துருக்குன்னு  ஆவணங்கள் சொல்லுதாம். 14 ஆம் நூற்றாண்டு.  15 ஆகஸ்ட்  1381 கட்ட ஆரம்பிச்சு  செப்டம்பர்  8 , 1382லே முடிச்சுருக்காங்க.!

அப்ப அந்தக் காலக்கட்டத்தில் ஏகப்பட்ட சிற்றரசர்கள் இந்தப்பகுதிகளில்  ஆண்டுக்கிட்டு இருந்துருக்காங்க.  அதுலே அடுத்துள்ள இரு நாட்டு அரசர்களுக்குள்  சண்டை வந்துருது. கொரட்டி கைமல்,கொடஸேரி  கர்தா என்ற பெயருடையவர்கள். இவர்கள் வம்சாவழியினர் இப்பவும் இங்கே வாழ்ந்துகிட்டு இருக்காங்க என்பதால் சம்பவத்துக்கு நம்பகத்தன்மை கொஞ்சம் கூடுதல்! சண்டையில் ரெண்டு பக்கத்து வீரர்கள் பலரும் செத்துடறாங்க.  கொரட்டி கைமலின் வலக்கை போல் இருந்த தளபதி  கவலக்காடன் கொச்சு வரீதும் இறந்துட்டார்.

அப்பல்லாம் இந்தப் பகுதிகளில்  இருந்த ஒரே சர்ச் அம்பழக்காடு பள்ளிதானாம். இதைக் கட்டுனது  மூணாம் நூற்றாண்டாம்.  செயிண்ட் தாமஸ் இந்தியாவுக்கு வந்த காலத்தில் கட்டுனதாக சிலர்சொல்றாங்க. எல்லாம் கேள்வி ஞானம்தான்.  ஆதாரமெல்லாம் கிடையாது.  அங்கே கொண்டு போய்  மதச்சடங்குகள் செஞ்சு ராணுவ மரியாதையோடு  தன் படைத்தலைவனை புதைக்கணுமுன்னு  கொரட்டி கைமல்  ஏற்பாடுகள் செஞ்சு , சவப்பெட்டியை   ஊர்வலமா எடுத்துக்கிட்டு அம்பழக்காடு கொண்டு போறாங்க.

'எங்க எல்லோருக்கும் பொதுவான பள்ளி  இது. இங்கே புதைக்க விடமாட்டோமு'ன்னு  கொடஸேரி கர்தா தகராறு செஞ்சதால்  சவப்பெட்டியை எடுத்துக்கிட்டுத் திரும்பி வர்றாங்க. கொரட்டிப்பகுதிக்கு வந்துக்கிட்டு இருக்கும்போது ஒரு அஞ்சு நிமிச ஓய்வுக்குச் சவப்பெட்டியை கீழே வச்சுட்டு, மீண்டும் தூக்கும்போது பெட்டி,  எடுக்க வரலையாம்!

சரி, கொச்சு வரீதுக்கு இங்கே இருக்க விருப்பமுன்னு அங்கேயே   புதைச்சுட்டாங்க. தம்புராட்டி(அரசி) இங்கே  ஒரு நினைவுச்சின்னம் இருக்கணுமுன்னு  நினைச்சு  20 அடிஉயர கற்சிலுவையைச் செய்ஞ்சு  (க்ரானைட் கல்லாம்)  கொச்சு வரீதைப் புதைத்த இடத்தில் நட்டு வச்சுருக்காங்க.  அதைத்தான் கோவிலின்  'பின்பக்க முன்வாசலில்' பார்த்தோம். கொஞ்சநாள் கழிச்சு தம்புராட்டி,  இங்கே  சின்னதா  ஒரு பள்ளியையும்  கட்டுனாங்களாம்.



காலப்போக்கில் கிறிஸ்துவ மத சம்ப்ரதாயங்கள் ஏகத்துக்கும் மாறிவந்துருக்கு. மலபார் கரையோரம் இருக்கும்  செயிண்ட் தாமஸ்  குழுவைச் சேர்ந்த பழைய கிறிஸ்த்தியானிகளையும் உதயம்பேரூர்  கவுன்ஸில் என்ற  Diampher Synod  ஒன்னு சேர்த்து சிலபல மாற்றங்களைச் செஞ்சுருக்காங்க. அதன்பின் போர்த்துகீஸியர்கள் வரவால்  பள்ளிகள் கட்டும் விதத்திலும் சில மாற்றங்கள் வந்துருக்கு. gothic style அனுசரிச்சு உசரமான சுவர்களும் ரொம்பவே உசரத்தில் இருக்கும் மேற்கூரைகளுமான சர்ச் கட்டிடங்கள்.

1790 இல் திப்புசுல்த்தான் படையெடுப்பு. திருவாங்கூர் கொச்சின் பகுதிகள் தாக்கப்பட்டு  திப்புவின்  படைகள் பள்ளிக்குத் தீ வச்சுட்டாங்க. கூரையும் அப்போ இருந்த ஆல்ட்டரும்  தீயால் அழிஞ்சு போச்சு. நல்லவேளையா சுவர்களுக்கு ஒன்னும் ஆகலை. அதையே வச்சுத்தான்  மேற்கூரையும்  கருவறை மேடையும் திரும்பக் கட்டினாங்க.

நாங்க அங்கே இருந்த காலக்கட்டத்தில் (1976 - 1977) அந்தப்பள்ளி இப்படித்தான் இருந்துச்சு.  நம்மகிட்டே அப்போ ஏது கெமெரா என்னும் ஆடம்பரம்!  ஸோ இது சுட்ட படம்:(
அப்போ.....


இப்போ....

1985லே இந்தப்பள்ளியின்  ஆல்ட்டரை மட்டும் தனியா எடுத்து வச்சுட்டு,   முழுசுமா இடிச்சுட்டு  நவநாகரீக ஸ்டைலில் கட்டி இருக்காங்க.  ரெண்டே வருசம், 8 செப்டம்பரில்  கிறிஸ்தியானி ஸ்டைலில் கும்பாபிஷேகம் நடந்துருச்சு. அதே ஆல்ட்டரில் இன்னும்கொஞ்சம் அலங்காரங்கள், அப்போஸ்தலர்களின் சொரூபங்கள் எல்லாம்  சேர்த்துருக்காங்க. நடுவில் யேசுவின் தாய் கன்னிமரியாள், அவருக்குக் கீழே யேசு. இவருக்கு  ஒரு பக்கம்  தாய் கொரட்டி முத்தி, இன்னொரு பக்கம் தந்தை ஜோஸஃப்  குழந்தையை ஏந்தியபடி  நிக்கறாங்க.

ஓபெரா நாடகம் பார்க்கும் தியேட்டர்களில் இருக்கும் பால்கனி போல  ஒன்னு!  அங்கே யேசுவின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் சித்திரங்களாக!

மதராஸ்- கொச்சி  ரயில்பாதைகள் போட்ட பிறகு  ஒருநாள்  கொரட்டி வந்த  ரயில் அங்கிருந்து கிளம்பாம ஏதோ எஞ்சின் தகராறு ஆகிப்போச்சாம். ரயிலில் இருந்த மக்கள்ஸ் வண்டியை விட்டுக் கீழே இறங்கி நின்னப்ப கொட்டுமுழக்கு சப்தம் கேட்டு என்னன்னு போய்ப் பார்த்திருக்காங்க. பள்ளியில் பெருநாள் ஆகோஷம்(சர்ச்சில் திருவிழாக் கொண்டாட்டம்) நடக்குது.  மக்கள்ஸ் அதுலே கலந்துக்கிட்டு  சாமி கும்பிட்டுவிட்டு திரும்ப ரயிலாண்டை வந்ததும்  எஞ்சின் தன் ஸ்ட்ரைக்கை முடிச்சுக்கிட்டு சட்னு கிளம்புச்சாம். கேரளம் என்றாலே  வேலை நிறுத்தம்தான் போல:-))))

இப்படி  இங்கேயும் கதைகளுக்குப் பஞ்சமே இல்லை!!!!!

மாதாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.  ஆமென்!

நன்றி நவிலல்: படங்கள் தந்துதவிய  கொரட்டி மாதாவுக்கு என்  மனம் நிறைந்த நன்றிகள். 

14 comments:

said...

கதைகள் சுவாரஸ்யம்... நம்புவோம்...!

நான் தான்... 'தான்' தான்... எனக்குத் தான் - இவைகளால் தான் சண்டை...!

said...

கிறிஸ்த்துவ நண்பர்கள் சிலர் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். எந்த நாட்டில் எந்த இடத்தில் இருக்கிறோமோ அந்த இடத்தின் கலாச்சாரத்தை பின்பற்றினால் சுலபமாக மதத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை என்று கூறியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு கேரளா போன்ற இடங்களில் இந்துக்களின் கலாச்சாரம் அதிகமாக இருக்கும். இதுவே வடகிழக்கு மாநிலங்கள் என்றால் புத்த மதத்தின் சாயல் இருக்கும். அந்தந்த கலாச்சாரத்திற்கு ஏற்றபடி வளைந்து கொடுப்பதால்தான். உலகம் முழுவதும் பரவி நிற்கிறது.

மற்றபடி பயணத் தொடர் வழக்கம் போல் இனிமை.

said...

நம்மூரில் கோவில்கள் என்றால் அது எந்தமதத்தவருடையதனாலும் கதைகள் சுவாரசியம் குன்றாமல் இருக்கும் ஒருவேளை ஜீன்சில் கலந்து விட்டதோ.

said...

தங்கப்பழம் சூப்பர்,,,,,,,,,,,
அருமையான நல்லிணக்கப் பதிவு.
நன்றி.

said...

நம்பினால்தான் தந்தையே என்னும் போது நம்பினால்தான் இறைவன் என்பதும் உண்மைதான்.

நிறைய தகவல்கள் தெரிஞ்சிக்கிறோம் உங்க பதிவுல இருந்து.

ஆனாலும் பழைய கோயிலை இடிச்சிட்டு புதுசு கட்டியிருக்காங்கன்றது ஒரு மாதிரியா இருக்கு. புதுசை விட பழசில் கோயில் அருமையா இருக்கு.

பழக்கதையும் அருமை. அடுத்தவன் கிட்ட அடிச்சு வாங்கித் திங்குறவனுக்கெல்லாம் இதுதான் நடக்கும்.

said...

எத்தனை எத்தனை செய்திகள்..... ஒவ்வொரு வழிபாட்டுத் தலத்திலும் கிடைக்கும் செய்திகளும் கதைகளும் உங்கள் மூலம் படிப்பதில் மகிழ்ச்சி....

தொடர்ந்து பயணிப்போம்...

said...

எத்தனை தகவல்கள் அற்புதங்கள் அருமையான பதிவு நன்றி நன்றி! தொடர வாழ்த்துக்கள்....!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

இந்த 'நான்' எப்போ ஒழியுமுன்னு தெரியலையே:(

said...

வாங்க செந்தில் குமார்.

சரியான பாய்ண்ட்டைச் சொல்லிட்டீங்க! பழக்கமானவைகளை வச்சுக்கிட்டே புதுச்சாமி கும்பிட்டால்.... எல்லாம் சுலபம்தான்!

said...

வாங்க ஜி எம் பி ஐயா.

ஜீன்ஸ்.... இருக்கலாம். மனுஷனுக்குக் கதை விடுவதில் ப்ரியம் அதிகம்:-)

said...

வாங்க மகேஸ்வரி.

வணக்கம். முதல் வருகைக்கு நன்றி.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க ஜிரா.

கோவில் மட்டுமா புதுசு? அந்த பில்க்ரிம் செண்ட்டர் அமைப்பு கூட புதுசுதான். பணம் அதிகமாக ஆக புதுசுக்குத்தானே மவுசு!
எனக்கு அந்த பழைய சர்ச்சுதான் பிடிச்சுருக்கு.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கூடவே வருவது மகிழ்ச்சி!

நன்றீஸ்.

said...

வாங்க இனியா.

ஒவ்வொரு கோவில்களிலும் எக்கச்சக்கக் கதைகள். சிலசமயம் எதை நம்பலாமுன்னு மனசு ஆரம்பிக்கும். உடனே மண்டையில்(மனசின் மண்டையில்) ஒரு தட்டு தட்டி வைப்பேன்:-)