Friday, February 28, 2020

பதிவர், பதிவர் குடும்ப சந்திப்புகள் (பயணத்தொடர் 2020 பகுதி 20 )

நம்ம மரத்தடிகாலத் தோழியருடன் மத்யானம் ஒரு சந்திப்பு இருப்பதால்  காலையில் ஒரு வேலையாக எக்ஸ்ப்ரெஸ் அவென்யூ மால்வரை போயிட்டு வந்தோம். கிறிஸ்மஸ் அலங்காரம் பண்ணி இருந்தாங்க.
அந்நிய செலாவணிக்குக் கொஞ்சம் காசு தேவைப்படுது.  யானை வாங்குனவர் அங்குசம் வாங்கறதும் உண்டே!  ஆனா என் 'யானை' பலமுறை வெவ்வேற செலவு வச்சுக்கிட்டே இருக்கு.  சாம்ஸங் கடையைப் பார்த்ததும், ஒரு ஸ்பேர் சார்ஜிங் கேபிள்  வேணுமுன்னு நுழைஞ்சதில்,  ஸ்க்ரீன் கவர் ஒன்னும் வாங்கவேண்டியதாப் போயிருச்சு. பழசு நல்லா இருக்குன்னாலும்  சிலபல இடங்களில்  எண்ணெய்க் கறை போல  இருக்கு. என்னதான் தொடைச்சாலும் போறதில்லை (அது தவிர நம்ம எஸ் 9+ போய், இப்பப் புது மாடல்கள் வந்துருக்கே..... அதுலே ஒன்னு.... கிடைச்சால் தேவலைன்ற நப்பாசைதான் உண்மை ) 
அங்கிருந்த நபர், இந்த எஸ் 9+ நல்லாவே இருக்கு. எதுக்கு புதுசுன்னதோடு ( நல்லா வியாபாரம் பண்றாங்க போங்க ! ) மேலே போட ஸ்க்ரீன் கவர் மட்டும் ஒரிஜினல் வந்துருக்கு. அதைப் போட்டுக்குங்கன்னார். கண் கண்ணாடி துடைக்கும் மிருதுவான துணியில் துடைச்சால் போதுமாம். 'நம்மவருக்கு' ஒரே மகிழ்ச்சி. ஆயிரங்கள் தப்பிச்சது, ஆஹா....
'நாத்திகர்களை எப்போதும் கனிவாகவே பார்க்கிறான் நாராயணன்' என்பது இன்னொரு முறையும் நிரூபணமாச்சு.

  "உங்களுக்குத்தாம்ப்பா இது பிரசாதம். எனக்கெல்லாம்  இது வெறும் ஸ்வீட்தான்.  எனக்குத் திருப்பதி லட்டு பிடிக்கும்."
(இது எப்படி இருக்கு?  லட்டு மட்டும் பிடிக்குமுன்னா, தெருவோரக்கடையில் வாங்கித் தின்னக்கூடாதா? திருப்பதி லட்டுவில் சேர்மான சமாச்சாரங்கள் தவிர, அது சாமியின் 'நேரடிப் பார்வையில்'  பிரசாதமாத் தயாராகுதே அதுதானே அந்த சுவைக்குக் காரணம், இல்லையோ? )  



ஆனா ஒன்னு... இவுங்களைச் சந்திக்கும்போதெல்லாம் எப்படியே என் வசம் தி.ல. இருக்குது என்பது(ம்) உண்மை!
ஆனால் இது எதுவும் நட்புக்குப் பங்கமில்லை, கேட்டோ !

வரேன்னு சொன்ன நால்வரில் மூவர் வந்தாங்க. கூடிப்பேசிக் களித்துச் சிரிச்சுன்னு நேரம் போச்சு. 'நம்மவர்' ஆஃபீஸ் வரை போனவர், சீக்கிரமாவே திரும்பி வந்துட்டார். வெ. பஜ்ஜி என்ற  அபூர்வ ஸ்நாக்கும் காஃபியுமா  உபசாரமும் ஆச்சு!  வெ. விக்கற விலைக்குக் கேட்டால் அடி விழுமோன்னு பயந்து நான் வாயைத் திறக்கலை.

கீழே லோட்டஸின் கிச்சன் பணியாளர்தான் வெ.பஜ்ஜிக்கு ஐடியாக் கொடுத்தாங்க.  ஆறு மணி போல தோழிகள்  கிளம்பிப்போனதும் மனசுக்குள் சட்னு ஒரு வெறுமை வந்தது உண்மை.

நாங்களும் ஏழுமணிக்குக் கிளம்பி நம்ம பதிவர் சிஜி அண்ணன் வீட்டுக்குப் போனோம். அண்ணன் இப்போ, இந்தப் பூவுலகில் இல்லை. ஆனால்  அந்த அன்பு அப்படியே அந்த வீட்டுலே நிறைஞ்சுருக்கே!  வாசலில் அமைதியாகக் கார்த்திகை தீப ஒளி   !
அண்ணி லேடி எம்ஜிஆர்  வேஷத்தில் !   கண் சிகிச்சை நடந்துருக்கு. அண்ணன் மகர்  ப்ரசன்னாவைத்தான் பார்க்க  முடியலை. அவசர வேலையா வெளியூர் போயிருக்கார். நாளைக்கு வந்துருவாராம். ஆனால் நாம் நாளைக்கு வெளியூர் போறோம்.  அண்ணியின் தம்பி ஊரில் இருந்து வந்துருந்தார்.  நம் பயணத்தில் அவர் ஊருக்கும் போகப்  போறோம் !
குழந்தைகள்  வளர்ந்துட்டாங்க.  கார்த்திகை தீபத்துக்குப் பள்ளிக்கூடத்தில் கைவேலை செஞ்சு  கொண்டுவந்த அகல் நல்லா இருக்கு!

எல்லோரும் நல்லா இருக்கணும் என்ற ஆசிகளோடு பெருமாளின் லட்டு சமர்ப்பித்தோம். அண்ணிக்குக் குரல் தழுதழுத்தது....
முன்னேற்பாட்டின்படிக் காலை எட்டுமணிக்கு வண்டியை சதீஷ்  அனுப்பிட்டார். வழக்கமா நமக்கு சீனிவாசனே சாரதியாக  வருவார் இல்லையா.... இப்போ  மருமகன் முருகனின் சாரத்யம்.  பூலோக வைகுண்டத்தில் ஸ்ரீரங்கனின் பாதம் பணியக் கிளம்பினோம். முருகன் ஒன்னும் சாப்பிடாமல் வந்துருக்காரேன்னு நம்ம  'கீதா'வுக்குப் போகலாமுன்னா, இதே தெருவோரக் கடையில் சாப்பிட்டுக்கறேன்னார். சுடச்சுட இட்லிகள்  பொட்டிக்குள் இருந்து  வருது .  சதுரப்பொட்டிதான் இட்லிக் குக்கர்! அட!
சென்னை திருச்சி ஹைவேயில் நடுவில் ஒரு இடத்தில்  முருகனுக்கு டீ ப்ரேக்.  அஞ்சு மணி நேரத்தில்  ஸ்ரீரங்கத்துக்குள் நுழைஞ்சாச்சு. விண்ணை முட்டும் ராஜகோபுரம் பார்த்ததும் மனசு கூத்தாடுனது உண்மை!
ஹொட்டேல் ஹயக்ரீவா போய்ச் சேர்ந்தோம்.  கல்யாண சீஸனாம். மார்கழி வருதேன்னு இந்த மாசம் ஏகப்பட்டக் கல்யாணங்கள்.  அதனால் ஹயக்ரீவாவில் இடம்  ஒரே ஒருநாளுக்கு மட்டுமே கிடைச்சது. இதே காரணத்தால்  அடுத்தடுத்து நாம் தங்குன இடங்களிலும் ஓர் இரவே !
முதலில் பகல் சாப்பாடுன்னு கீழே பாலாஜி பவன்.  சாப்பாடானதும்  நம்ம பதிவர் வெங்கட் நாகராஜின் வீட்டுக்கு ஒரு சின்ன விஸிட். மூணு பதிவர்கள் இருக்கும் குடும்பம்  அவுங்கது.  நம்ம கீதா சாம்பசிவம்  அம்பேரிக்கா போயிருக்காங்க. இங்கே பெருமாளைத்தவிர வேற சொந்தம் இல்லாத நமக்கு, இப்போ ரெண்டு பதிவர் குடும்ப சொந்தம் கிடைச்சாச்சு.  வரும்போதெல்லாம் எட்டிப் பார்த்துட்டுப் போனால்தான் திருப்தி.

ஒரு நாள் மட்டும் தங்கல் என்பதால் முதலில்  வெங்கட் வீட்டுக்குப் போய் எட்டிப் பார்த்துட்டு வந்துட்டோமுன்னால், சாயங்காலம் தொடங்கி இரவு வரை பெருமாளின் மாளிகையாண்டை இருக்கலாமுன்னு  'வரட்டுமா?'ன்னு சேதி அனுப்பினேன்.   'வாங்க'ன்னு பதில்.


வீட்டுக்குப் போனால் ரோஷ்ணியம்மா இருக்காங்க.  மகளுக்குப் பரிட்சை என்பதால் பள்ளிக்கூடம் போயாச்சு.  மகள் வரும்வரை இருந்து பார்த்துட்டே போகணும்னு 'நம்மவர்' சொல்லிட்டார்.  நாங்க நாலுபேரும்  நேரிலும், ஃபோனிலுமாப் பேசிக்கிட்டு இருந்தோம்.  வீட்டைக் கண்ணாடி போல் பளிச்ன்னு வச்சுருக்காங்க.  சுவரில்  அலங்காரங்கள்  அருமை. அமேஸானில் வாங்கினதாம். இங்கே நியூஸிக்கு அமேஸான் சமாச்சாரம்  வர்றதில்லை.
ரோஷ்ணி வந்தவுடன் கொஞ்ச நேரம் இருந்துட்டு, வச்சுக்கொடுத்ததை வாங்கிக்கிட்டு கிளம்பினோம்.
அடுத்ததாகப் பெருமாள். ரங்கா கோபுரம் வழியாக உள்ளே போறோம்.   செல்ஃபோன்  கெமராவுக்கு  டிக்கெட் கிடையாதாம்.  ஒரு இருபது ரூபாயாவது வசூலிக்கலாம் என்பது என் எண்ணம். கோவிலுக்கு வருமானம் ஆச்சு, இல்லையோ?

ரெங்கவிலாஸ் மண்டபம் கடந்து அகலங்கன் வீதி போனால்  பனை மட்டைகள் கட்டிக்கிட்டு சொக்கப்பனை தயாரா இருக்கு! ஆஞ்சி சந்நிதிக்கும், கார்த்திகை கோபுரத்துக்கும்  கொஞ்சம் தென்ன ஓலைகளால் மறைப்பு.


முதலில் கருடமண்டபத்தில்   நம்ம  பெரிய திருவடியை வணங்கி, அந்தாண்டை ஆர்யபட்டாள் கோபுர வாசலாண்டை போறோம். பெரியவரை தரிசனம் பண்ணிக்கிட்டால் அக்கடான்னு மத்தவங்களைப் பார்க்கலாம்.  இனிமேல் இன்றைக்கு தரிசனம் இல்லைன்ற அறிவிப்போடு கோபுரவாசலை மூடி வச்சுருக்காங்க.  அட ராமா........   என்ன ஆச்சு ?

இன்றைக்குச் சொக்கப்பனை கொளுத்தும் விழா இருக்கே அதுக்கு நம்பெருமாள் வந்து பார்த்துட்டுப் போவாராம். கொழுந்து விட்டு எரியும் தீயில் எல்லாம் களேபரமா இருக்கும்  என்பதால் பெரியவருக்கு லீவு போல !

பார்க்க ரொம்பவே அகலமாப் பெருசா இருக்கு சொக்கப்பனை சமாச்சாரம்.  பத்து நாளைக்கு முன்னேயே  இதுக்கான  'முஹூர்த்தக்கால்' நடும்  விழா நடக்குமாம்.  சுமார் இருபதடி உயர தென்னை மரக்காலின் நுனியில் சந்தனம் பூசி, மாவிலை, பூமாலை, மற்ற மங்கலப்பொருட்கள் கட்டிவிட்டு, வேதமந்திரம் முழங்க தீர்த்தம் தெளிச்சுட்டு  அந்த மரத்தை நட்டு வைப்பாங்களாம். அப்ப 'நம்ம ஆண்டாள்'  வந்து நின்னு கையை உயர்த்தி மரியாதை செய்வாளாம்.

படம்:  கூகுளாண்டவர் அருளிச்செய்தது:-)

அப்புறம்  அந்த மரத்தண்டைச் சுத்தி கம்பி ஃப்ரேம்  வச்சு அதன் மேல்  பனையோலை மட்டைகளை அடுக்கி விட்டுருவாங்க. சொக்கப்பனை ரெடி !

விஷ்ணுவும் பிரம்மனும் தங்களுக்குள்  யார் பெரியவன் என்ற போட்டியில்  சிவனின் அடிமுடி காணப்போனப்ப, சிவன்  அக்னி ஸ்வரூபமாய்  அடிமுடி தெரியாதபடி நின்னதைத்தான் நாம் சொக்கப்பனை விழாவா நடத்தறோம். அதே  ஜோதிமயம்.

பனை ஓலை என்றதால்  எரியும்போது படபடன்னு தெறிக்கும் என்பதால் கோபுரங்களுக்கு ஒரு பாதுகாப்பு வேணுமுன்னு பச்சைத் தென்ன ஓலை மட்டைகளைப் போர்த்தி வச்சதும் நல்லதே!

நாம் பிரகாரம் சுத்தி வரலாமுன்னு முதலில் போனது துலாபார மண்டபம் கடந்து,  களஞ்சியம்/ கொட்டாரம் இருக்கும் இடத்துக்கு!  செங்கமலவல்லித் தாயார், ஸ்ரீராமர் இங்கே இருக்காங்க. இங்கேயே ஒரு மண்டபத்தில் பெரிய அளவு  காலணிகள் தொங்கவிட்டுருக்காங்க.  பெரியவருக்கானது.


திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை அடுத்த நந்தக்கோட்டை கிராமத்துலே இருக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் செஞ்சு, தலையில் சுமந்துக்கிட்டு  வந்து பெருமாளுக்குச் சமர்ப்பணம் செய்யறாங்க.  ஒன்னரை அடி நீளம், முக்கால் அடி அகலம் உள்ளவை.  மூணு ஆட்கள், ஏழுநாள் விரதம் இருந்து இதைத் தைச்சுத் தருவாங்களாம். அதுவும் பெருமாள் தனக்கு செருப்பு வேணுமுன்னு 'கனவில்' ஆர்டர் கொடுத்தால்தான்.  எழுபத்தியெட்டு வருஷங்களுக்குப்பின் புதுச் செருப்பு.  2017 ஆம்  வருஷம்  கிடைச்சுருக்கு.

(பக்தர்கள் குறை தீர்க்கவும், உலக நடப்புகளைப் பார்த்து சீர் செய்யவும் அப்பப்ப வெளியில் போனால்தானே செருப்பு தேயும். கிடந்தபடியே  ஞானக்கண்ணால் பார்த்தால் போதுமுன்னு இருந்தால்......  ஆனாலும் பெருமாளுக்கு ரொம்பத்தான்  இல்லே? )

இந்த சமூகத்தினரின் பக்தியை ஊருலகத்துக்குச் சொல்லத்தான்  ஏழாவது ப்ரகார  கோபுரவாசலுக்கு (கலியுகராமன் வீதி/ மேற்கு சித்திரை வீதி) சக்கிலியன்கோட்டை வாசல் னு பெயர் வச்சுருக்காங்க, அந்தக் காலத்தில்.

(இப்ப ஜாதியைச் சொல்ற வழக்கமில்லை, கூடாதுன்னு அரசு அறிவிச்சபடியால்  யாரும் சொல்றதில்லை. ஜாதியே கூடாதுனு சொல்லும் அரசு, ஜாதிச் சங்கங்களும், கட்சிகளும்  தொடங்கிக்க  அனுமதி கொடுக்கறது என்ன டிஸைன்னு தெரியலை!  ஒரு சமயம்  அஞ்சு பொண் பெற்றால் அரசனும் ஆண்டின்னு இருக்கும் பழமொழியை ஒரு பதிவில் சொல்லப்போக....  ஒரு வாசகரால்  ரொம்பவே மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டேன்....  போதுண்டா சாமி....  )



அஞ்சு களஞ்சியங்களையும் புதுப்பிச்சு, இடத்தையும் சீர்படுத்தி இருக்காங்க.  அங்கே ஒரு வெள்ளைக்குதிரை, கல்கியை ஞாபகப்படுத்துச்சு :-)
தொடரும்..........:-)


Wednesday, February 26, 2020

சண்டை ஒத்து நைனா, சமாதானங்காப் போதாம்..... (பயணத்தொடர் 2020 பகுதி 19 )

காலையில் ஆறேமுக்காலுக்கெல்லாம் ரெடியாகி, வண்டி வந்ததும் கிளம்பிப்போறோம்.  ட்ராவல்ஸ் ஓனர் சதீஷ்தான் வண்டி ஓட்டுநர்.  ப்ரேக்ஃபாஸ்ட் எங்கியாவது வழியில் சாப்பிட்டுக்கறதா திட்டம்.  ஆனால் எங்கேயும் வண்டியை நிறுத்தாமல்  மூணு மணி நேரத்தில் ஊருக்குள்ளே போயிட்டோம். எட்டுவருசங்கறது கொஞ்சம் நீண்ட காலம்தான் இல்லே? ஊரே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கு. நம்ம எம் எஸ் அம்மாவைப் பார்த்ததும்தான் 'திருப்பதி'ன்ற உணர்வே வந்துச்சு:-)

பீமாஸ் ரெஸிடன்ஸி போய்ச் சேர்ந்தோம்.  இங்கேயே பெருமாள் தரிசனம் ஆச்சுன்னும் சொல்லலாம். அருமையான  நிக்கறான் 'அவன்' !
பீமாஸ் ரெஸிடன்ஸியில் இருக்கும் மோஹினி ரெஸ்ட்டாரண்டில் இட்லி, தோசை, காஃபி, டீன்னு ஆச்சு. இடம் நல்லா நீட்டா இருக்கு. ரெஸ்ட் ரூம் கூட  சுத்தமே!
பெரிய திருவடியை கும்பிட்டபடியே சப்தகிரி செக்பாய்ண்ட் போய்ச் சேர்ந்து வண்டிகளின் வரிசையில் காத்திருக்கோம்.  சதீஷ்தான் இறங்கிப்போய் எல்லாம் சரியாக்கி வந்தார்.  காரில் மலையேறிப் போக  ஒரு கட்டணம்  உண்டு. வண்டிக்கான ஃபிட்னஸ் எல்லாம்  சரியா இருக்கணுமாம். அதானே...வழியில் நின்னுபோச்சுன்னா ? அப்புறம் வண்டியில் இருக்கும் மூட்டை முடிச்சுகளையும் ஸ்கேன் செய்யறாங்க.   'நம்மவர்' கையில் மட்டும் ஒரு பையும்  தண்ணீர் பாட்டில்களோடு ஒரு பேக் பேக்கும்.   வேறேதும் இல்லை.

மலையேறிப்போகும்போது எந்த நேரத்தில்  திருமலைக்குள் நுழையலாமுன்னும் ஒரு நேரம் அந்த டோல் டிக்கெட்டிலேயே  இருக்கு. கிளம்பி  ஒரு முக்கால் மணி நேரத்துலே ( சரியாச் சொன்னால் நாப்பது நிமிட் ) மேலே போகணும். கொஞ்சம் லேட்டானாலும் ஓக்கே. ஆனால் சீக்கிரமாக மட்டும் போயிடக்கூடாது. அப்படிப்போனால்  அபராதம் கட்டணும்.

அதானே  முப்பத்தியாறு வளைவுகள்  இருக்கும்  பத்தொன்பது கிலோ மீட்டர் மலைப்பாதையில் நிதானமே இல்லாமல்  விர்ருன்னு ஓட்டிக்கிட்டுப் போறது ஆபத்து இல்லையோ?  விபத்து ஏற்பட்டால்... அது அவுங்களோடு மட்டுமா ?   பின்னால் வரும் வண்டிகள், பாதையைக் கண்காணிக்கும் தேவஸ்தான ஊழியர்கள், ஆம்புலன்ஸ்   இத்யாதிகள்னு எல்லோரையும்  ஒரு விதத்தில் பாதிக்குதே....


கிளம்பிய கொஞ்ச தூரத்தில் ஒரு புள்ளையார் கோவில். சின்னக்கோவில்தான். ஸ்ரீ வரசித்தி விநாயக ஸ்வாமி வாரி டெம்பிள். போற காரியம் நல்லபடி லபிக்கணும்னு  போய்க் கும்பிட்டுக்கணும். கும்பிட்டோம்.
சீராக மேலே ஏறிப்போகும் மலைப்பாதையில் அங்கங்கே  அலங்கார வளைவுகள்.  சுத்தமான ரோடு.  போறதுக்கும் திரும்பி வர்றதுக்கும் தனித்தனி சாலைகள் போட்ட பிறகு பயணம் சுகமே !
1982 லே நாங்க ரெண்டுபேரும் முதல்முறையா சேர்ந்தாப்லெ மலைக்குப் போய் வந்ததை இப்ப நினைச்சாலும் சிரிப்புதான்.  மரத்தடி காலத்துலே   பதிவு எழுதியே ஆச்சு பதினாறு வருஷம்.  பார்க்கணுமுன்னா இங்கே :-)

பெரிய திருவடியை மூணாவது முறையா ஸேவிச்சபடி, அந்த மண்டபம் கடந்து கொஞ்ச தூரத்தில் வண்டியை நிறுத்தினார் சதீஷ்.  இனி வண்டியில் போக முடியாது.  நடராஜாதான்.  அவர் வண்டியைப் பார்க்கிங்கில் போட்டுட்டு அங்கே தான் இருப்பாராம். தரிசனம் முடிஞ்சதும் ராம் பகீச்சா  வந்துருங்கன்னார்.

கையில் பையோடு இறங்குன 'நம்மவர்' சட்னு  வண்டிக்குப்பின்னால் போய் வேற வேஷத்தில் வந்தார். வேஷ்டி !  அட, பையில் இதுதானா?  ஏனாம்?  நாம் போகும் என் ஆர் ஐ வரிசைக்கான ட்ரெஸ் கோட் இதுதானாம் !  ஓ.....

இனி கேமெரா, செல்ஃபோன் எதுவும் 'சாமிக்கு' ஆகாதுன்னு கோவில் சட்டம் இருப்பதால்  எங்க செல்ஃபோன்ஸ்களை சதீஷிடம் ஒப்படைச்சுட்டு,  நான் வெறுங்கையாகவும், 'நம்மவர்' சட்டைப்பையில் காசு (இது மட்டும்தான் எல்லா இடங்களிலும் செல்லும் சமாச்சாரம் ) பாஸ்போர்ட், ஆன்லைன் புக்கிங் செஞ்ச ப்ரின்ட் அவுட்னு வச்சுக்கிட்டு  அம்போன்னு நடந்து போறோம்.

சரியான வழி எதுன்னு புரியாமல் இங்கேயும் அங்கேயுமாக் கொஞ்சம் அலைக்கழிஞ்சு ஒருவழியா வைகுந்தம் காம்ப்ளெக்ஸ் கண்டுபிடிச்சுப்போய் வரிசையில் நின்னாச்சு. நம்மிடம் ஒரு ஃபாரம் கொடுத்து பாஸ்போர்ட்  விவரங்கள் எல்லாம் எழுதச் சொல்றாங்க. எழுதி ரெடியா வச்சுக்கிட்டோம்.

மணி பதினொன்னே முக்கால்.  வரிசை நகர்ந்த மாதிரி இல்லை. அதிலும்  மலேசிய மக்கள், நேப்பாள் மக்கள்  பலரும் ஒரு பெரிய குழுவாக வந்துருக்காங்க.  தனித்தனியா  ஃபாரத்தில் எழுதிக்காம மொத்த பெயரையும் ஒரே ஃபாரத்தில் எழுதச் சொன்னதில் அப்படியே  எழுதிட்டாங்க.  கையில் ஒரு தாளும் கட்டுப் பாஸ்போர்ர்டுமா வரிசை நகர்ந்ததும்,  செக் பண்ணறவர் ஒவ்வொரு பெயரையும் பார்த்து ஆள் யாருன்னு கேட்டு, அவுங்க பாஸ்போர்ட்டைத் தேடி எடுத்து  அதில் இருக்கும் படத்தையும் நேரில் இருக்கும் முகத்தையும் 'உத்துப் பார்த்து'  (!)  அவரே இவர்னு உறுத்திப்படுத்தறார். கூட்டத்தில் ஆளையும், கையில் இருக்கும் பாஸ்போர்ட் கொத்தில்   பாஸ்போர்ட்டைத் தேடறதுலேயேயும்  நேரம்தான் வீணாகிக்கிட்டு இருக்கு. தனித்தனியா அவரவர் கையில் இருந்தால் சுலபம் இல்லையோ?

இதே போல இன்னும் ரெண்டு இடத்தில் நேர விரயம். நமக்கு இதை முடிச்சுட்டு, ஒன்னரைக்குக் கல்யாண உற்சவம்  (ஆர்ஜித ஸேவா ) கோஷ்டியில் போக முடியுமான்னு தெரியலை. உள்ளே நம்மை அனுப்பி அப்புறம் ஸ்கேன் செஞ்சு....  கம்பி வரிசைக்குள்ளில் அனுப்பறாங்க.  எங்கே இருக்கோமுன்னு கூடத் தெரியலை. ஆனால் போனமுறை சட்னு  கோபுர வாசலுக்குப் போனமாதிரி இல்லை. வேறெங்கோ இருக்கோம்.

 ரொம்ப நேரம் மெள்ள மெள்ள நகர்ந்து போய் ஒரு சின்ன ஹாலுக்கு வந்ததும், இன்னொருமுறை பாஸ்போர்ட் செக்கப்.  இந்த இடத்தில்தான்  என் ஆர் ஐ வரிசை பணம் கட்டணும்.  மற்றபடி  கவுண்டர் போல கூண்டுக்குள்  அலுவலர்  உக்கார்ந்துருக்க, அதுவரை வரிசையில் வந்த  மக்கள்  கூண்டைச்சுத்தி நின்னு ஒரே சமயத்தில்  குட்டிஜன்னலுக்குள் கையை நுழைச்சா எப்படி ?  (மற்ற தரிசனங்களுக்கு நாம் ஆன்லைனில் பணம் கட்டி இருந்தோம். )

இந்தாண்டைத் தலையைத் திருப்பினால்  கல்யாண உற்சவத்துக்குப் பணம் கட்டுனவங்க   இந்தப் பக்கம் வாங்கன்னு ஒருவர் கத்திக்கிட்டு இருக்கார். இப்ப எனக்கு எங்கே போறதுன்னே தெரியலை. இவரோ ஜன்னலாண்டை மாட்டிக்கிட்டார்.

ஒரு வழியா  எல்லாம் முடிஞ்சு இவர்  வந்தவுடன்,  தரிசன வரிசைக்குக் கை காட்டுன இடத்துக்குள்  போனோம்.  அதே கம்பித்தடுப்பு வரிசைகள்.  போகப்போக  வரிசைகள் எண்ணிக்கை அடுத்தடுத்து வளருதே தவிர  மக்கள் கூட்டம் குறையலை.  இதுலே  ஸ்பெஷல் தரிசனம் கூட்டத்தையும் ,  இலவச தரிசனக் கூட்டத்தையும்  நம்மளோடு சேர்த்து விட்டுட்டாங்க.  கம்பி வரிசைக்குள்ளில் தள்ளுமுள்ளு ஆகுது. பின்னால் இருந்து நம் தோளை யாரோ தொட்டதும் திரும்பிப் பார்ப்போமா இல்லையா.... அப்போ நம்மைத் தள்ளிக்கிட்டு அவுங்க முன்னாலே போயிடறாங்க. அடுத்த முறை திரும்பக்கூடாதுன்னு இருந்தால்,  முன்னாலே போனவங்களோடு நாங்க வந்துருக்கோம்னதும் நம்மவர்,  கொஞ்சம் தள்ளிக்கம்மா.... அவுங்க போகட்டுமுன்னு சொல்றார். 

கார்த்திகை தீபம், கூட்டம் இருக்காதுன்னு நினைச்சால்  இன்றைக்கு டபுள் கூட்டமாம்!  இன்னொரு பக்கம் சீனியர் சிட்டிஸன்ஸ் வரிசையையும் இப்போ நம்மோடு சேர்த்தாச்சு.  தாங்க முடியாத யாரோ ஒருத்தர் கோவிந்தா கோவிந்தான்னு கூவுனதும், அவ்ளோதான்  பூரா சனமும் கோவிந்தனைக் கூப்பிடறாங்க.  அவன் வந்து காப்பாத்துவானா என்ன?  இன்னொரு கூட்டம் பஜனைப்பாடல்கள் பாட ஆரம்பிச்சது.  'வந்தவன்' அதைக்கேட்டு ரசிச்சுக்கிட்டே நின்னுட்டானோ என்னவோ.....

அரை மணி முக்கால் மணி இப்படி நின்னு நின்னு நகர்ந்து நகர்ந்து  கோவில் கோபுர வாசலாண்டை வந்துட்டோம்.  மைக்கில் ஒருத்தர் சொல்றார்..... 'ஏன் பேசாம  வர்றீங்க? அந்த கோவிந்த நாமத்தைச் சொல்லுங்கோ... கோவிந்தா கோவிந்தா.....'

சனத்துக்கு ஆவேசம் வந்துருச்சு.  'அதெப்படி சொல்லப்போச்சு' ன்னு இன்னும் உச்ச ஸ்தாயியில்  கதறக் கதற.... நாம்  கூட்டத்தினால்  தள்ளப்பட்டு  உள்ளே போயிட்டோம்.  கருவறை வந்தாச்சு. அங்கே பார், அங்கே பார்ன்னு என்னை ரெடியா இருக்கச் சொல்லிக்கிட்டே இருக்கார் 'நம்மவர்'. போனமுறை நடந்தது நினைவு வந்து பயந்துட்டார்.........

ரொம்ப தூரத்துலே மினுக் மினுக் வெளிச்சத்தில் லேசாத் தெரியறான்.  இதுலே அங்கே பட்டாச்சார்யார்கள் குறுக்கும் நெடுக்குமா  போறதுலே சரியாத் தெரியலை.  'பார்த்தியா பார்த்தியா'ன்னு  காதாண்டை குரல் விடாமக்கேட்டுக்கிட்டே இருக்கு.... எதோ பார்த்தேன்.......னு சொல்லும்போதே இடதுபக்கம் நாம் வெளியேறணும்.  வல்லரக்கி ஒருவர் கைப்பிடிக்க வந்தார்.  சட்னு கையை உதறி முறைச்சுப் பார்த்தேன். அந்த விநாடியில் ஒரடி பின்னுக்குப்போய் ரெண்டு விநாடி இன்னொருக்கா இருட்டுலே பார்த்துட்டு வெளியே வந்துட்டேன்.

போதுண்டா..... உன்னோடு இனி ஒருக்கிலும் சமாதானம் இல்லை. பழைய சண்டையைப் புதுப்பிக்க வந்தேன்னு வச்சுக்கோ.

பரவசம், திருப்தி இதெல்லாம் எங்கே? வலம் திரும்பி நடந்தால்  ஒரு இடத்தில்  வரிசையா உண்டியல்கள்.   போடக்கூடாதுன்னு தடுத்தேன்.  'ருச்சிக்காவோடதை போட்டுட்டு வரேம்மா'ன்னார். ஆகட்டும்.  நம்ம  பல்மருத்துவர்தான்.  அவுங்க அப்பா அம்மாவின்  கல்யாணப் பொன் விழாவுக்காகக் கொஞ்சம் பணம் கொடுத்தாங்க பாலாஜிக்காக.

அப்புறம் ப்ரசாதம்  வாங்கிக்கணும். 'நீர்மோர் சாதமோ'ன்னு நினைக்கும்போது கையில் வந்தது சின்னதா ஒரு  லட்டு.  வெளியே போகுமிடத்தில்தான் கூட்டம் இல்லை.  காலை வீசிப்போட்டு நடந்தேன்.  இனி அடுத்த  சாங்கியம், லட்டு வாங்கிக்கறது. நம்ம டிக்கெட்டில் ஆளுக்கு ரெண்டு.  போற வழியில் சின்னப்பொண் ஒரு அஞ்சு வயசு இருக்கும், தர்மம்னு உக்கார்ந்துருந்தாள்.  அவள் கையில் அந்த லட்டுவை வச்சேன். முகத்தில் ஒரு பிரகாசமும் சிரிப்பும்.  சாப்பிடுன்னதும்  சாப்பிட ஆரம்பிச்சது பிஞ்சு. நல்லா இருக்கட்டும்!

லட்டுக் கட்டடத்துக்குள் போனால் மாடியில் விநியோகம்.  அங்கே போனா நம்ம டிக்கெட் மட்டும் ஸ்கேன் ஆகமாட்டேங்குது. ( குசும்பன்..... வேலையைக் காமிக்கிறான் ) அதைக் கீழே இருக்கும் ஒரு கவுன்ட்டரில் போய்ச் சொல்லி அங்கே வாங்கிக்கலாமாம்.  அங்கே தேடிப்போய்  கவுன்டரைக் கண்டுபிடிச்சு சமாச்சாரம் சொன்னால்.... அவர்  பத்துநம்பரை எழுதிக்கொடுத்துட்டு, இதைக் காமிச்சு மேலே போய் வாங்கிக்குங்கன்றார். திரும்ப மேலே வந்தால்....  அந்த லட்டு விநியோகஸ்தருக்கு அந்த நம்பர்களைக்  கம்ப்யூட்டர் கீபோர்டில் போடத் தெரியலை.  அடுத்த கவுன்டருக்குப் போன்னு உத்தரவு.  கொஞ்சம் குரலை உசத்தியதும், இன்னொரு ஆள் வந்து நம்பரை அடிச்சுக்கொடுத்தார்.  நடந்த குழப்பத்துக்கு ஸாரி சொல்லும் விதமா நாலு லட்டுகளோடு, கொஞ்சம்  உதிர்ந்து கிடக்கும் பூந்திக்குவியலில் இருந்து ஒரு கை அள்ளிப் போட்டார் அந்தப் பையில்.

இன்னும் ஒரு நாலு கூடுதலா வாங்கிக்கணும். நட்புகள் உறவுகள் எல்லாம் லட்டுக்காக வெயிட்டிங்.  கீழே போய்  கூடுதல் லட்டுக்கான கவுன்டரில் காசைக்கட்டி வாங்கிக்கிட்டோம். போதுண்டா சாமி. (இனி வருவே? )

இப்ப ராம் பகீச்சாவுக்குப் போகணும்.  வாயிலே இருக்கு வழின்னு தேடித்தேடிப்போய் அங்கே நம்மைக் கொண்டுபோகும் பேட்டரிக் கார் வருமுன்னு நின்னால்  காணவே காணோம்.  பொடிநடையில்  நடந்து போறோம்.  அந்தாண்டை இருந்து நம்மைப் பார்த்த சதீஷ் ஓடி வர்றார்.  ஒரு போலீஸ் அவுட்போஸ்ட் இருந்துச்சு. அங்கே நம்மை நிக்கச் சொல்லிட்டு, ஓடிப்போய் வண்டியைக் கொண்டு வந்ததும் நாம் கிளம்பிட்டோம்.
கீழே போகும் வழியில் கடைசியில் இருக்கும் ஆஞ்சி சந்நிதியாண்டை அஞ்சு நிமிட் க்ளிக்ஸ் ஆச்சு. போயிட்டு வரேண்டான்னு கும்பிடு போட்டுட்டு, நேரா பீமாஸ் ரெஸிடன்ஸி மோஹினி வந்தப்ப மணி நாலே கால்.  சதீஷ் அங்கே கொஞ்சம் பிரசாதம் (சாம்பார்சாதம்)  சாப்பிட்டாராம். ஆனாலும்  எப்படிப் போதும்?  இங்கே நம்மவருக்கும் சதீஷுக்கும் சாப்பாடு ஆச்சு.  எனக்கு ஒன்னும் வேண்டியில்லை.  ஒரு டீ குடிச்சேன்.

இனி தாயாரை ஸேவிச்சுட்டுப் போகணும். அங்கே திருச்சானூர் போனால்.....  நூறு ரூ டிக்கெட் வாங்கிக் கோவிலுக்குள் போறோம்.  கொதிக்கும் மனசைக் குளிர்விக்கக் குட்டியானை வெளியே வருது. பின்னால் தாயார் புறப்பாடு !  வஸந்த மண்டபத்தில் இருந்து ஊஞ்சலாடப் போறாளாம்! ஆஹா.....
சட்னு மூலவரை தரிசனம் செஞ்சுட்டு வரலாமுன்னு உள்ளே போய் அங்கேயும்  கொஞ்சம் நேரம் கடந்துதான் போச்சு. 'உன் புருஷன் பண்ணும் அநியாயத்தைப் பார்'னு கோள் மூட்டிட்டு, அங்கே இருக்கும் ஸ்ரீநிவாஸன் சந்நிதியில்  கிடைச்ச  அற்புத தரிசனத்தில்  மயங்கி, மன நிறைவோடு மற்ற சந்நிதிகளிலும்  தரிசனம் முடிச்சுக்கிட்டு வெளியே வந்தோம். இங்கேயும் நம்ம டிக்கெட்டுக்கான லட்டுகளுக்கு வெளியே  ஒரு கட்டடத்தில் போய் வாங்கிக்கணும். வாங்கியாச். தாயாரின் மனசு போலவே தாயாரின் லட்டுகளும்  மிருதுவே!  சுவையும் 'அதை விட 'அருமை !  ஆனால் ரொம்ப நாள் வச்சுக்க முடியாது.(லட்டுலேயே சேதி சொல்லிடறாங்களோ? )
வஸந்த மண்டபத்தில் தாயார் ஊஞ்சலில் ஜொலிப்போடு ஆட, யாரோ  பாடறாங்க. கச்சேரி !  கையில் கேமெராதான் இல்லை.  இப்பவாவது படம் எடுக்கலாமேன்னு   சதீஷைத் தேடிப்போனவர், ரொம்ப நேரம் கழிச்சுக் கண்டுபிடிக்க முடியலைன்னு திரும்பி வர்றார்.  ரெண்டு வாசலும் ஒரே மாதிரி இருக்குன்னு  வேற வாசலில்  போயிருக்கார்.
நான் போய் பார்க்கிறேன்னு போனால், நான் எங்கே காணாமப்போயிருவேனோன்னு கூடவே ஓடி வர்றார்.  அந்த வாசலுக்கு வெளியில் வந்தால் சதீஷ் கண்ணெதிரில்.  ஆனால் வண்டி பார்க் செஞ்சுருக்கும் இடம் கொஞ்சம் உள்ளே போகணுமாம். சதீஷையே, அவரோட செல்லில்   கொஞ்சம் படம் எடுத்துத்தரச் சொன்னேன்.

ஊஞ்சல் முடிஞ்சு ஆரத்தி வைபவம்.  நாலைஞ்சு க்ளிக்ஸ் ஆச்சு.  தாயாரும் கிளம்பறாங்க.  திரை போட்டாச்சு. நாங்களும் கிளம்பினோம். இனி நேரா  சென்னைதான். ஒரு மணிமாலை மட்டும் வாங்கினேன் ஜன்னுவுக்கு. இப்ப அதை பெரியவள் போட்டுண்ட்ருக்காள். 
வர்ற வழியில் ஒரு சின்ன டீ ப்ரேக் சதீஷுக்கு.  திருத்தணி தாண்டி இருந்தோம்.
ஒன்பது மணிக்கு லோட்டஸ் வந்துட்டோம்.  அவ்ளோதான் ஆச்சு திருப்பதி.... திருப்தி இல்லாத ஒரு திருப்பதி.....

வீடு திரும்பியபின் நம்ம வீட்டுப்பெருமாளிடம் நடந்ததைச் சொல்லிப் புலம்பினால்  சிரிக்கிறான்.

 " உன்னை யாரு அங்கே போகச் சொன்னது? நாந்தான் இங்கேயே இருக்கேனே"  

"ஆமாண்டா. புத்தி வந்தது. இனி இல்லை, பார்த்துக்கோ ! "

தொடரும்.........:-)