Friday, June 28, 2024

மீன் பண்ணையும், மீனவதாரம் எடுத்தவனும்...........(அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 8 )

இன்றைக்குப் போகும் டூரில் நிறைய நடக்கவேண்டியிருக்கும் என்பதால்  அதுக்குப் பொருத்தமான காலணிகள் எல்லாம் போட்டுக்கிட்டு, டூர் கம்பெனி சொல்லியிருந்த நேரத்துக்கு ஹொட்டேல் வாசலுக்கு வந்துட்டோம்.
பகல்  பத்தரை மணி முதல் மாலை  அஞ்சரை மணி வரை சுத்தப்போறோம் ! ஒரு மலைப்பயணமும் இருப்பதால் குளிரை எதிர்கொள்ளும் வகையில் உடை இருக்கணுமாம். நான் கொண்டுவந்திருந்த  'லைஃப் ஸேவர்'  பேருதவி !   தெர்மல் உள்ளாடைகளுக்கு நான் வச்ச பெயர்தான் இது  :-)   


அதே லேண்ட் ஸீ டூர் கம்பெனிதான்.   பிக்கப் வண்டிகள் குறிப்பிட்ட ஹொட்டேல்களில் போய் பயணிகளைக் கூட்டிவந்துருது . நேத்துப் போலவே ஒரு இடத்தில் வேற வண்டிக்கு மாறினோம். முதலில் அறிமுகம், யார்யார் எந்த நாட்டில் இருந்து வந்துருக்கோமுன்னு......  நேற்றும் இன்றும் நாம் மட்டும்தான்  நியூஸிப் பயணிகள் !  நியூஸின்னதும் எல்லோரும் வியப்புடன் நம்மைப் பார்க்கறாங்க.  அவ்ளோ தூரமா..........  தென் துருவத்தில் இருந்து வடதுருவமா !!!!

வண்டி கிளம்பிப்போகும்போது....நேத்துப் பார்த்த அதே காட்சிகள்......   என்னடான்னு யோசனையா இருந்தது....  முதலில் போனது டோட்டம் போல்ஸ் பார்க் ! அடராமா.... நேத்துதானே வந்துருந்தோம்.... காமணி ஸ்டாப். எல்லோரும் இறங்கிப்போனார்கள், என்னைத்தவிர.  நானும் டூர் ட்ரைவர் & கைடு வேலையில் வந்த ஸ்டெல்லாவும் பேசிக்கிட்டு இருந்தோம். நியூஸியைப் பத்தி ஆர்வமா விசாரிச்சுக்கிட்டு இருந்தாங்க. 


படம்:  இங்கே நம்மூர்லே

அப்ப நான் சொன்னேன்..... எங்க நாட்டிலும் இப்படி டோட்டம் போல்ஸ் நிறைய ஏகப்பட்ட இடங்களில்  இருக்கு. எப்படி இந்த ஒத்துமை வந்துருக்கும்னு தெரியலை.  எங்க நாட்டில் முதலில் குடியேறுன மவோரி மக்கள்  கலாச்சாரம் இது. அவுங்க வந்து ஆயிரம் + ஆண்டுகள் ஆச்சு. 

இங்கேயும் இதைச் செதுக்கின மக்கள்  வந்து ஆயிரம் + வருஷங்கள் ஆச்சுதான். பாலிநேஷியாவிலிருந்து வந்த மக்கள்னு ஸ்டெல்லா சொன்னதும்..... "அட ! எங்க நாட்டிலும்தான்" !!!  கனூ என்னும் மரப்படகில் (மரத்தைக்குடைஞ்சு செய்த படகு )

 இப்போ 'அட !!! ' சொன்னது ஸ்டெல்லா !

"ஒருவேளை தங்கள் சொந்தத் தீவைவிட்டுப் படகுகளில் கிளம்பின மக்கள், கடலில் துடுப்புப்போட்டுப் பயணம் செய்யும்போது,  அலைகளின்   வேகத்தில் திசை மாறிப்போய் வடக்கும் தெற்குமா வேவ்வெற பக்கங்களில் பிரிஞ்சு போயிருக்கலாம்..... இல்லே ?"

நான் சொன்னதை ஸ்டெல்லா முழுவதுமா ஆமோதிச்சாங்க. ச்சும்மா ஒரு  சொந்தத்  தியரிதான். இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.  ஆராய்ச்சியாளர்கள்தான் இன்னும் விரிவா  ஆராய்ந்து சொல்லணும் !


இதுக்குள்ளே திரும்பி வந்த நம்மவர்,'ஒரு படத்தைக் காமிச்சார்'.... நேத்து நான் பார்க்காதது.  'டோட்டம் போல்' வாசலுக்கு அந்தாண்டை பஸ் நிப்பாட்டுன இடத்தில் இருக்காம் !  அட ராமா...... அப்போ போர்ச்சுகீஸியர்களும் இங்கே குடியேறியிருக்காங்களா !  ஃபர்ஸ்ட் நேஷன் பீப்பிள்னு சொல்றது முதலில்  வந்த பாலிநேஷியா மக்களைத்தானே ?

கிளம்பி அதே லயன்ஸ்கேட் ப்ரிட்ஜ் வழியா  கபிலானோ நதிக்கரைக்குப் போறோம். ஒரு அரைமணி நேரம் ஆகியிருக்கும்.  இங்கே சால்மன்  மீன்கள் பண்ணை இருக்கு.  Capilano River Salmon Hatchery.
சின்னக்காடு போல இருக்கு.  நதிக்கரையில் தீயணைப்பு வண்டி நிக்குது.  எனக்கு 'திக்'னு ஆச்சு!   எங்கே தீ பத்துச்சோ ?  இப்பக் குழாய்களைச் சுருட்டிக்கிட்டு இருக்காங்க.  நம்மவர் போய் விசாரிச்சதில் இது பயிற்சி வகுப்புன்னு சொன்னாங்களாம். அப்பாடா....  

கைடு காட்டிய பாதையில் காட்டுக்குள் போறோம்.   அந்த 'நிறையநடை'யின் ஆரம்பம்!  நல்லவேளை வாக்கிங் ஷூ போட்டுருக்கேன்......  
ஒரு ஷெட் போல் இருக்கும்  கட்டடத்துக்குள் போறோம்.  இந்த மீன்களில்  நிறைய  வகைகள் இருக்கு போல ! வெவ்வேற பெயர்களில் இவைகளின் வளர்ச்சி, வாழ்க்கைன்னு விவரங்கள்  வச்சுருக்காங்க. கைடும் கொஞ்சம் விளக்கம் சொன்னாங்க. இதெல்லாம்  ஆத்தோரத்துலே முட்டையிட்டுப் போகுமாம்.  குஞ்சுகள்  வெளிவந்து ஆத்துலேயே வளர்ந்து   பெரிசானதும்  கடலுக்குப் போயிருதுங்க. கடல் மீன்களா வளர்ந்து பருவம் வந்ததும்,  திரும்ப ஆத்துக்கே வந்து முட்டையிட்டுட்டு போகுதுங்களாம் ! பிறந்த இடத்துக்குத் திரும்பி வருதுன்றது எவ்வளவு ஆச்சரியமான சமாச்சாரம் பாருங்க !!!!







இந்த நதியில் கொஞ்சதூரத்தில் ஒரு அணை கட்டப்போய், மீன்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டு எண்ணிக்கை குறைஞ்சு போனப்ப..... 1971 இல் இந்தப் பண்ணையை ஆரம்பிச்சு, பசங்களை இங்கே வளர்த்து, கொஞ்சம் பெருசானதும் ஆத்துலே விடறாங்க.  இந்தப் பாதையை நாம் கண்ணாடித்திரைக்குப் பின்னால் பார்க்கும் வகையில் அமைச்சுருக்காங்க. பிலுபிலுன்னு மேயுதுங்க !
நல்லா காசு  சம்பாரிச்சுக்கொடுக்குதுங்களாம் இந்த சால்மன் மீன்கள். ச்சினூக் வகை சால்மன் மீன்கள் கிட்டத்தட்ட அஞ்சடி நீளமும் 61.4 கிலோ எடையிலும் இருக்குமாம்!  ஹைய்யோ !!!

மீன்களை ஆற்றில் விடும்பகுதி கட்டடத்துக்கு வெளியில்  இருக்கு. குனிஞ்சால்  க்ரில் வழியாகப் பார்க்க முடியும்.  கரடுமுரடா சரிவான பாதை அமைப்பு. அதுலே கொஞ்சம் பாலன்ஸ் பண்ணி நடக்கும்போது.... ஒரு காலில் வித்தியாசமா ஒரு ஃபீலிங்....  

சமதரைக்கு வர்றதே கஷ்டமா இருக்கு. காலை இழுத்துவச்சு ஒரு வழியா வந்தேன். பார்த்தால்......   the Soul left my Sole............. பெருமாளே......

முன்பாதத்தில் பாதி, அடியில் மடங்குது.  இந்த ஷூவுக்கும் ஒரு 'கதை' இருக்கே!   இந்தியாவில்போய்க்  கொஞ்ச காலம் இருக்கும்படியாச்சு.  அங்கே போய் தினமும் காலையில் நடக்கணும். நடந்து நடந்து உடல் பாதியாக இளைக்கணும், இளைக்கும் என்றெல்லாம் கனவுகளைக் கண்டபடியே.... வாக்கிங்  ஷூ ஒன்னு சென்னையில்  வாங்கினேன். நார்த் ஸ்டார் !  லைட் வெயிட் !(கதைக்கு வயசு 15 , கேட்டோ !)

வழக்கம்போல் புதுத்துடைப்பம் ரொம்ப நல்லா ஒரு வாரம் பெருக்குனதோடு சரி ! அப்படியே புதுசாவே இத்தனை வருஷம் குந்தியிருந்தது.  இப்போ  இந்தப் பயணத்தில் நடை அதிகம்னு தெரிஞ்சதும்,  உள்ளூரில் போடும் ஷூ கனமா இருக்கேன்னு இதை எடுத்துப் போட்டுப் பார்த்துட்டுப் பொட்டியில் வச்சேன்.  இன்னைக்குக் காலையில் இருந்து இதுவரை நல்லாத்தானே இருந்துச்சு ! இப்ப என்னவாம்.....

டூரிலிருந்து விலகி ஹொட்டேலுக்குப்போயிடலாமான்னா....   ரொம்ப தூரம் வந்துருக்கோம். இந்தக் காட்டிலிருந்து போக  வண்டி  ஏது ? நைலான் ஸோல் கழண்டு வந்துருக்கு.  கொஞ்சம் பிசின் போட்டு ஒட்டிக்கலாமுன்னு பார்த்தால்..... சூப்பர் க்ளூ, காட்டில் கிடைக்குமா ?  நம்ம விஞ்ஞான மூளையைக் கசக்கி, ச்சூயிங் கம் இருந்தால் தாற்காலிகமா ஒட்டிக்கும், இல்லே ?  ஆனால் ச்சூயிங்க் கம் வாங்கப் பொட்டிக்கடை இங்கெ ஏது ? 

விசாரங்கள்..... விசாரங்கள்..... நம்ம விஞ்ஞானி, ஒரு கயிறு போட்டுக்  கட்டிடலாமேன்னார். கயிறு ? தன்னுடைய  கைகுட்டையைச் சுருட்டிக் கட்டிவிட்டார்.  பாலத்தின் நின்னு மக்களை ஃபோட்டோ எடுத்துக் கொடுக்கறாங்க கைடு.  அப்படியே  உதட்டில் சிரிப்போடு ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்தாச்சு. 


 கிளம்பி பஸ்ஸுக்குப் போறோம். அதா... கைகுட்டையைக் காணோம்..... ஒரு காலை உதறி நடந்தாக் கொஞ்சம் சமாளிக்கலாம்.  எனக்கு அந்தமாதிரி நடக்க வரும்.....  ஆ.... அப்படியா ? எப்புடி ?
எப்பிடீன்னா இப்புடீ..... கீழே இருக்கும் சுட்டியில் பாருங்க!

சட்டாம்பிள்ளை........

 https://thulasidhalam.blogspot.com/2008/08/blog-post_17.html

யாரும் கவனிக்காத அளவில் மெல்லக் கால் உதறி ஒருவழியா பஸ்ஸுக்குள் போயிட்டேன்.  கழட்டிக்கொடு என்னன்னு பார்க்கலாம்னு இவர் கேட்டுக்கிட்டே இருக்கார். அக்கம்பக்கம் பார்க்கவா ?

'பெருமாளே  இப்படிப் பண்ணிட்டயேடா.... இக்கட்டில் இருந்து காப்பாத்து'ன்னு மனசுக்குள்ளே  முணங்கிக்கிட்டே இருக்கேன். ஓடும் பஸ்ஸில் தெரியும் அக்கம்பக்கத்துக்குக் காட்சிகள் கண்ணில் படுதுதான்.ஆனால் மனசில் ஒன்னுமே பதியலை..... இன்னும் அஞ்சு, அஞ்சரை மணி நேரம் எப்படி சமாளிக்கப்போறேன்...... பெருமாளே.... கைவிட்டுடாதே....

பஸ் ஓரிடத்தில் நின்னதும்,  'எல்லோரும் இறங்கி என் கூட வாங்க'ன்னுட்டு கைடு முன்னால் போறாங்க.  கட்டக்கடைசியா நான் மெல்ல நடந்து சாலையைக் கடந்து எதிர்சாரிக்குப் போறேன்.  கவலைபடிந்த முகத்துடன் இவர் கூடவே வந்துக்கிட்டு இருக்கார். 
மொத்த குழுவிற்குமாக டிக்கெட்ஸ் வாங்கிவந்து எல்லோருக்கும் பிரிச்சுக்கொடுத்தாங்க, கைடு. கூடவே ஆளுக்குப் பதினைஞ்சு டாலர் டிஸ்கவுன்ட் கூப்பானும் ! ஆஹா.... உள்ளே செருப்புக்கடை இருந்தால் தேவலைன்னு மனசு கணக்குப்போடுது....

அப்போ மற்ற காலில்  ஏதோ  வித்யாசமான உணர்வு..... வலதுகாலைத் தூக்கி  ஸோல் எப்படி இருக்குன்னு தொட்டுப் பார்த்தால் கையோட வந்துருச்சு !   இப்ப இடதுகாலில் கொஞ்சூண்டு ஒட்டிப்பிடிச்சிருக்கும் ஸோலை லேசா இழுத்தவுடன்  ட்டடா.....

பெருமாளே பெருமாளேன்னு அரற்றினால் அவருக்கும் பேஜாரா இருந்திருக்காதா  ? ஆனாலும் அவர் ஷூ ரிப்பேர்காரரா என்ன ?  இப்போதைக்கு உனக்கு உடனடி உதவி இதுதான்னுட்டார் !

"பெருமாளே,  யூ ஆர் க்ரேட் "! 

எனி ப்ராப்லம் ?  நோ ! ப்ராப்லம் ஸால்வ்டு :-)

இப்ப ரெண்டு காலும் ஒரே மாதிரி ! கழண்டுவந்த ரெண்டும் குப்பைத் தொட்டிக்குப் போச்சு ! என் உயரம் சடார்னு ஒரு செமீ குறைஞ்சது.....................
ஆங்..... இப்ப எங்கே இருக்கோம்னு மூளை கேட்டதுக்கு பதில்.... தொங்குபாலம் !

தொடரும்...........:-)


Wednesday, June 26, 2024

வலை இல்லாமல் வாழ்வது இனி வரும் காலங்களில் கஷ்டமே !!!! (அலாஸ்கா பயணத்தொடர்...... பாகம் 7 )

பகல் சாப்பாட்டுக்கு எங்கே போகலாமுன்னு 'யோசிச்சு'  அந்த தோசைக்கடைக்கே போகலாமுன்னு  சொன்னார் நம்மவர். அதான்  மூணுவேளையும் தோசை மட்டுமில்லாம மற்ற ஐட்டங்களும் சமைச்சுக் கொடுக்கறாங்களாமே !
றையை விட்டுக்கிளம்புமுன் நம்ம சக்கரைக்குட்டிகளை க்ளிக்கிட்டு, கத்தி ஜெபம் பண்ணிக்கிட்டே கிளம்பினேன்.நேத்துப் போனமாதிரி சுத்தாமல்.... ஒரு லெஃப்ட் அப்புறம் ரைட்தான்.   டூர் கம்பெனி பஸ் ஒன்னு .....  பார்க்க நல்லாவே  இல்லை. என்ன டிஸைனோ ?

பகல் நேர டேவீத்தெருவில் கலகலப்பு கம்மி.  ஒரு கடைக்குள் நுழைஞ்சு சின்னதாக் கத்தி ஒன்னு வாங்கியாச். அப்படியே ஒரு தட்டும்! மாம்பழம் வச்சுத் திங்கணுமா இல்லையா !
தோசைக்கடையில் கூட்டமொன்னும் இல்லை.  பகல் ரெண்டு மணி இப்போ ! லஞ்சு நேரம் முடிவுக்கு வருது போல ! கடைப்பணியாளர்கள் ஓடிவந்து உபசரிச்சாங்க. மொதலாளி  சொல்லியிருந்தாராம், நாம் வருவோம்னு !!!! (நெசமாவா ? ) 

சரவணன்  வரலையான்னு கேட்டேன். வேற ஒரு வேலையா இப்போதான் கிளம்பிப்போனார். நான் சரவணனின் மனைவின்னு அறிமுகப்படுத்திக்கிட்டாங்க, மொதலாளியம்மா ! அட ! 

நம்மவர்  மட்டர் பனிர், ரைஸ் & சப்பாத்திக்கு சொன்னார். எனக்கு அவ்வளவாப் பசி இல்லை. ப்ரேக்ஃபாஸ்ட் மெனுவைப் பார்த்துக்கிட்டு இருந்தவள், புனுகுலு  இப்ப இருக்கா,  இல்லை காலையில் மட்டும்தானான்னு கேட்டதுக்கு,  செஞ்சு தர்றோமுன்னு சொன்னாங்க. இது நம்ம  போண்டா மாதிரிதான்.  திருநெல்வேலி  தர்மராஜ், இன்றைக்கு சமயலறையில் ! வந்து நம்மைக் கண்டுக்கிட்டுப்போனார் !
இங்கே ப்ரேக்ஃபாஸ்டுக்கு இட்லி உண்டுன்னு சொன்னதை 'நம்மவர்' மனசில் குறிச்சுக்கிட்டார். 

மொதலாளியம்மா, ரொம்ப ஸ்வீட்.  



நாங்க சாப்பாடு முடிச்சுக்கிளம்பும்போது மணி மூணு. நிதானமா  நடந்து , வழியில் இருக்கும் அழகை க்ளிக்கிக்கிட்டே போறோம். நம்ம தெரு திருப்பத்தில் ஒரு கம்யூனிட்டி கார்டன் !   நம்மூரிலேயும் சில இடங்களில் இது இருக்குன்னாலும், இங்கே இடம் ரொம்பவே பெருசு. பொதுவா காலி மனையொன்னை இப்படி தோட்டம் வைக்க விட்டுவைப்பாங்க.  அக்கம்பக்க வீட்டுக்காரர்களும், தோட்டவேலை ஆர்வம் உள்ள மக்களும் சேர்ந்து காய்கறிகள், பூச்செடிகள் இப்படி வச்சுப் பராமரிப்பாங்க. இதெல்லாம் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும். இங்கே என்னன்னா.... நகர மையத்தில்!  ப்ரைம் லொகேஷன் இல்லையோ !!!!

பெரிய  கட்டட நிறுவனங்கள் இப்படி இடத்தை வாங்கிப்போட்டுட்டு, சில வருஷங்களுக்கு கம்யூனிட்டி கார்டனுக்கு விடுவாங்கன்னும், இப்படிச் செய்வதால்,  நிலத்துக்கு  உண்டான வரியின் தொகையில் நல்ல கழிவு கிடைக்குமுன்னும் ஒரு பேச்சு !  இந்த இடத்தில் ஒரு பெட்ரோல் பங்க் முதலில் இருந்ததுன்னும் ஒரு தகவல் கிடைச்சது.  

அட ! இப்ப இதே இடத்துக்கு முன் எதிர்வாடையில் ஒரு பெட்ரோல் ஸ்டேஷன் இருக்கே !



கிட்டப்போய்ப் பார்த்தால்..... இங்கே புதுசா அடுக்குமாடிக் கட்டடம் வரப்போகுதுன்னு அறிவிப்பு !  இவ்ளோ செடிகளின் கதி என்ன ஆகும் ? ப்ச்.... 




இந்த தோட்டத்தாண்டை இருந்து பார்த்தால் நம்ம ஹொட்டேல் தெரியுது !
அறைக்குத் திரும்பியதும் சக்கரைக்குட்டி காத்திருக்கு ! பொறு ! இப்பதான்  கத்தி வந்துருச்சே ! ச்சும்மாச் சொல்லக்கூடாது...... அப்படி ஒரு இனிப்பு !!!!
வேறெங்கே போகலாமுன்னு பார்த்ததில், ஒரு கோவிலுக்குப்போனால் தேவலைன்னு தோணுச்சு. வலைவீசுனதில்  ஒரு பத்துப்பனிரெண்டு கோவில்கள் இருக்குன்னு தெரிஞ்சது.  கோவில்கள் திறந்திருக்கும் நேரம்தான் ஒவ்வொன்னும் ஒருவிதம் தவிர ஒவ்வொன்னும் ஒரு ஏரியாவில். நம்ம ஹொட்டேலில் இருந்து சுமார் 26 - 30 கிமீ தூரம் வேற ! கூகுள் மேப் சொல்ற டைமிங் எல்லாம் நடைமுறைக்குப் பக்கம் இல்லவே இல்லை.....

கோவில்னு நினைச்சுட்டதால்  ஒரு கோவிலுக்குப் போயே ஆகணும் போல இருக்குன்னு  ஸ்ரீ மஹாலக்ஷ்மி கோவிலுக்குக் கிளம்பினோம். மாலை ஆறரைக்குத்தான் கோவில் திறக்குறாங்க.

இங்கே நம்மூரிலும் மாலை ஆறரைக்கு பெரிய பிள்ளையார் கோவிலும், ஏழு மணிக்கு  இன்னொரு பிள்ளையார் கோவிலும் திறப்பாங்க. வேலை முடிஞ்சு வர எப்படியும் அஞ்சரை ஆறு ஆகிருதுல்லே ? அதனால் இந்த டைமிங் நமக்குப் பழகிப்போச்சுதான். 

டாக்ஸி பிடிச்சுக் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தப்ப மணி ஏழுக்குச் சமீபம். வழியில் பயங்கர ட்ராஃபிக்.  டாக்ஸி ஓட்டுநர் பஞ்சாபி.  இங்கே இதுவரை நாம் பயணம் செஞ்ச டாக்ஸி ஓட்டுநர்கள் எல்லோரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்தான்.  இங்கேயே பிறந்து வளர்ந்த பஞ்சாபி மக்களும் ஹிந்தி நல்லாவே பேசறாங்க.  இப்போ இந்த டாக்ஸி ஓட்டும் இளைஞர் பெயர் அர்பித்.  கோவில் வாசலில் இறக்கிவிட்டவர், காத்திருக்கவான்னு கேட்டதுக்கு, வேணாமுன்னு சொன்னது நாம் செய்த தவறு.  கோவிலில் எவ்வளவு நேரம் ஆகுமுன்னு நமக்குத் தெரியாதில்லையா ? 
எதுக்கும் இருக்கட்டுமுன்னு அவர் மொபைல் நம்பரை வாங்கி வச்சுக்கிட்டோம்.  தேவைப்படும்போது கூப்பிடுங்கன்னு சொல்லிட்டுப்போனார்.
குடியிருப்புப் பகுதியில் வீடுகளோடு வீடாக இருக்குக் கோவில். வாசல் அலங்காரமும் கதவும்தான் வித்தியாசப்படுத்துது!  அலங்காரக்கதவைத் திறந்து உள்ளே போறோம். 


 சின்னதாக இருக்கும் முன்னறையில் ஒருபக்கம் சின்ன மேடையில் புள்ளையார்.  நமக்கெதிரே இன்னொரு ஜோடிக்கதவுகள். நமக்கிடப்பக்கம் ஒரு சின்ன அறை, கோவில் அலுவலகம். நம் வலப்பக்கம் கீழே பேஸ்மென்ட்டுக்குப் போகும் படிகள். அங்கேதான் காலணிகளுக்கான ஷெல்ஃப் வச்சுருக்காங்க. 
காலணிகளை அங்கே விட்டுட்டுப் படியேறி மேலே வந்து புள்ளையாரைக் கும்பிட்டுக்கிட்டு மற்ற கதவுகளைத் திறந்து உள்ளே போறோம்.  நல்ல பெரிய ஹால். எதிர்ப்பக்கம் கடைசியில் மூலவர் சந்நிதி ! திருவாச்சி எல்லாம் வச்சு அலங்கரிச்ச மேடையில் ஸ்ரீமஹாலக்ஷ்மியின் படம் !  சின்னக்கூட்டமாக் கொஞ்சம் பக்தர்கள் உக்கார்ந்து ஏதோ ஸ்லோகம்,  புத்தகம் பார்த்துச் சொல்லிக்கிட்டு இருக்காங்க. 



சந்நிதிக்கு வலப்பக்கம்  சிவனும், இடப்பக்கம்  அயோத்யா ராம்லல்லாவுமாகப் படங்கள் ! 






இடப்பக்கச் சுவரில் சின்ன மாடங்களில் ஹனுமன், சிவலிங்கம், ஸ்ரீராமர்.  வலப்பக்க மாடங்களில்  ஸ்ரீக்ருஷ்ணரும், புள்ளையாரும்.

சிலைகள்  வருமுன் படங்களாக வைத்துப் பூஜை நடத்தியிருப்பார்கள் போல ! ஒவ்வொரு சிலையாக வந்துகொண்டு இருப்பதாகத் தோணுது !
ஸ்ரீ மஹாலக்ஷ்மி சிலை விரைவில் வரும் என்று நம்பறேன்.   நல்லா அலங்கரிச்ச ஒரு கலசத்தில் ஸ்ரீலக்ஷ்மியை  ஆவாஹனம் செஞ்சுருக்காங்க. சந்நிதிக்குமுன் இருக்கும்  கலச உண்டியல் அழகு !
வாசலுக்கருகில் ஆரத்தி சமயம் ஒலிக்கும் வாத்தியங்கள் !

கோவிலுக்கு வயசு 34 !  467 E 11th Ave E, Vancouver, BC  V5T 2C8, Canada  என்பது விலாசம்.  வெளிநாடுகளில் இருக்கும் கோவில்களில் எல்லாம் தரிசன நேரங்கள், உள்ளூர் பக்தர்களின் வசதிகளைப் பொறுத்துதான் இருக்கும்.  வாரநாட்களில் காலை, மாலைன்னு திறந்து வைக்க முடியாதே. எல்லோரும் வேலைக்குப் போகும் மக்களில்லையோ !!!
கொஞ்சநேரம் உக்கார்ந்திருந்து மனதுக்குள்  தெரிஞ்ச நாலு ஸ்லோகம் சொல்லிக் கும்பிட்டபின்  கிளம்பினோம்.  பக்தர்களோடு உக்கார்ந்து ஸ்லோகம் சொல்லிக்கிட்டு இருந்தவர்களில் ஒரு பெண் எழுந்துவந்து ஸ்வாமி ப்ரஸாதமாக  ரெண்டு பேரீச்சம்பழம் கொடுத்தாங்க.

கோவிலைவிட்டு வெளிவந்தப்பதான் எப்படி திரும்பிப்போகப்போறோம் என்ற நினைப்பு வந்துச்சு. அதான் அர்பித் கொடுத்த நம்பர் இருக்கேன்னு பார்த்தால்.......  நெட் கனெக்‌ஷன் இல்லாமல் எப்படிக்கூப்பிடுவது ? 

முதல் தவறுக்கு முன்னால் செய்த பெருந்தவறு என்னன்னா.... நம்மவர் ஃபோனில் ரோமிங் வசதியைச் சேர்க்காமல் விட்டது.  நம்ம நியூஸி டெலிகாம் சர்வீஸ்,  கனடா மண்ணில் கால் வச்சவுடன், ரோமிங் போடவான்னு கேட்டப்ப , சரின்னு ஒரு சொல் சொல்லாமல் விட்டது.  அதான் ஹொட்டேலில் வைஃபை இருக்கு, வெளியே நகரின் மத்தியில்  எல்லாம்  இலவச வைஃபை இருக்கு.  மூணு நாளுக்கு இது  வேணுமான்னவர்,  உனக்கு அலாஸ்கா பயணத்துக்கு  நெட் கனெக்ஷனுக்குப் பணம் கட்டியிருக்குன்னு கூடுதல் தகவல் சொல்லி என் மனதில் பாயஸம் வார்த்தார் ! 

இப்ப என்ன செய்யறது ?  ஙேன்னு கோவிலுக்கு வெளியில் நின்னுக்கிட்டு இருக்கோம்.  அப்ப அந்தப்பக்கமா வந்த ஒரு இந்தியரிடம் , அர்பித்தின் எண்ணைக் காமிச்சு, அதுக்குக் கூப்பிடணும் என்றதும் அவர்  ஃபோன் போட்டுக் கொடுத்தார்.   ரிங் போகுது. யாரும் எடுக்கலையேன்னால் மெஸேஜ் விடச் சொல்லுச்சு....  நம்ம எண்ணைச் சொல்லிக் கூப்பிடுங்கன்னுட்டு ஃபோனைத் திருப்பிக்கொடுத்து நன்றியும் சொன்னோம். 

கொஞ்ச நேரத்தில் அர்பித் கூப்பிட்டு, வேறொரு பயணியை இறக்கிவிடரொம்ப தூரம்    போய்க்கொண்டு இருக்கேன். திரும்பிவர  ஒன்னரை ரெண்டு மணி நேரம் ஆகலாமுன்னு சொன்னார். சட்னு இன்னொரு டாக்ஸியை இந்தக் கோவிலுக்கு அனுப்புங்கன்னு சொல்லி இருக்கலாம், இல்லே..............  சொன்னோமா ?  ஊஹூம்..... 

கோவிலுக்குள்ளே போய் யாரையாவது கேட்கலாமுன்னு போனார்.  அங்கே ஒரு புண்ணியவான், ஒரு  டாக்ஸி கம்பெனியைக் கூப்பிட்டு வரச் சொல்லிட்டார்.  கோவிலில் இருந்து வெளிவந்த இன்னொரு தம்பதியர், தனியா வாசலில் (அடுத்த வீட்டு பெஞ்சு ) உக்கார்ந்திருந்த என்னிடம், 'உங்களை எங்கியாவது கொண்டு விடணுமா'ன்னு கேட்டதுக்கு,  நன்றி சொல்லி, டாக்ஸி வருதுன்னேன்.  ஒரு நெட் கனெக்ஷன் இல்லாம எவ்ளோ கஷ்டம் பாருங்க.....  அப்படி இப்படின்னு மணி எட்டேகாலாயிருக்கு ! அங்கே வசந்தகாலம் என்பதால் இன்னும் வெளிச்சம் இருக்கு.

டாக்ஸியில்  ஹொட்டேலுக்குத் திரும்பும்போது,   நேரா அறைக்குப் போகாமல் எங்கியாவது டின்னரை முடிச்சுக்கிட்டே போயிடலாமுன்னு அந்த  டாக்ஸிக்காரரிடம் ( பஞ்சாபிதான்),  நல்ல இண்டியன்  ரெஸ்ட்டாரண்டில் இறக்கிவிடுங்கன்னதும்,  அதே போல் இறக்கிவிட்டுட்டுப் போனார்.

அங்கேயும் குறுகலான இடம்தான். கூடவே ஒரு Bபாரும். அதுலேதான் காசுன்னார் நம்மவர்.  மலாய் கொஃப்தா &   கார்லிக் நான் ஆச்சு. பில்லுக்குப் பணம் அடைக்கும்போது,  ஒரு டாக்ஸியைக் கூப்பிடுங்கன்னு கேட்டுக்கிட்டு,   ஹொட்டேலுக்கு  வந்து சேர்ந்தோம்.

மணி பத்தைத்தாண்டியிருக்கு.  வாசல் மரங்களில் விளக்கலங்காரம் ! 

 லாபியின் அடுத்த பக்கம் ஒரு வின்டேஜ் வண்டி. க்ளிக் க்ளிக் !



நாளைக்கும் ஒரு டூர் ஏற்பாடாகி இருக்கு.  ரெடியா இருங்க. போகலாம். 

வலை இல்லாமல் வாழ்வது கஷ்டம் என்று பட்டுத் தெரிஞ்சுக்கிட்ட நாள் இது !

தொடரும்........:-)