Thursday, July 31, 2008

வந்தான்யா... வந்தான்யா வெள்ளைக்காரன்................(ஃபிஜிப் பயணம் பகுதி 6)

மகளையும் நண்பரையும் இன்னிக்கு இங்கே கூட்டிவருவதான ஏற்பாட்டின்படி காலை எட்டுமணிக்கெல்லாம் நாங்க புறப்பட்டோம். கல்யாண வீட்டில் இன்னிக்குப் பத்து மணிக்குப் பெரிய பூஜை நடக்கப்போகுது. எப்படியும் அது முடிய மூணுமணி நேரமாகும். அதுக்குள்ளே வந்து சேர்ந்துக்கலாமுன்னு.........


ஃபர்ஸ்ட் லேண்டிங் போகணுமுன்னா லௌடூக்கா ( Lautoka) நகரைத் தாண்டித்தான் போகணும். இதுதான் நாட்டின் சுகர் சிடி( Sugar City). ஃபிஜி சுகர் கார்ப்பரேஷன் ஆலை இங்கே இருக்கு. ஆரம்பிச்சப்ப இது கலோனியல் சுகர் கம்பெனி (Australian Colonial Sugar Refining Company.). ஆரம்பிச்சது வெள்ளைக்காரர்கள். ஆமாம்.....வெள்ளையர்கள் இங்கே எப்ப, எப்படி வந்தாங்க?


18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் (டிசம்பர் 1787) கேப்டன் வில்லியம் ப்ளை William Bligh என்றவர் இங்கிலாந்திலே இருந்து 45 பேர் அடங்கிய ஒரு குழுவோடு புறப்பட்டு H.M.S. Bounty. என்ற கப்பலில் Tahiti தீவை நோக்கி வந்தார். இவ்வளோதூரம் வரும் நோக்கம் என்னவா இருக்கும்?
ரொம்ப அல்பத்தனமானது. இங்கே கிடைக்கும் ப்ரெட் ஃப்ரூட் என்ற மரத்தின் கன்னுகளை எடுத்துக்கிட்டுப்போய் மேற்கிந்தியத் தீவுகளில் நடணுமாம். நல்லதுதானே? இதுலே என்ன அல்பத்தனம்?


மேற்கிந்தியத் தீவுகளில் இவுங்க கொண்டுவந்து வச்சுருக்கும் ஆப்பிரிக்க அடிமைகளுக்குச் சாப்பாடா இந்த ப்ரெட் ஃப்ரூட்டைக் கொடுக்கணுமாம். மலிவாக் கிடைக்கும் சமாச்சாரம். ஒரு மரத்திலே ஏராளமான காய்கள் காய்க்கும். அப்படியே பறிச்சுத் தின்னுங்கடான்னு சொல்லி விட்டுரலாம். ரொட்டின்னா அதைச் செஞ்சு கொடுக்கணும். 'ஈஸ்ட்டைப்போடு, மாவு பிசைஞ்சு அதைச் சுட்டு எடு'ன்னு ஆயிரத்தெட்டு வேலை. இது பெயரிலேயே ப்ரெட் இருக்கே. இதைத் தின்னா.... ரொட்டியையே தின்றதுக்குச் சமம்னு ஒரு நல்லெண்ணம். அடிமைகள்கிட்டே வேலை மாத்திரம் வாங்கிக்கணும். துன்னச் சோறுகூடப் போடக்கூடாது. ஹூம்.....

இந்த மரத்தின் காய்கள் பார்க்கறதுக்குப் பலாப்பழம் போல இருக்கும். ஆனா சைஸ் சின்னது. ஒரு பெரிய தேங்காய் அளவுலே இருக்கும். கேரளாவில் இதை 'கடச் சக்க'ன்னு சொல்வாங்க. தோலைச் சீவிட்டுப் பெரிய துண்டுகளா வெட்டி அப்படியே வேகவச்சுத் திங்கலாம். உருளைக்கிழங்கு போல ஒரு ருசி. இதுலே மசாலா போட்டுக் கறி பண்ணிக்கலாம். மெலிசாச் சீவி, சிப்ஸாப் பொரிச்சு எடுக்கலாம். நமக்குச் சொல்லித்தரணுமா என்ன?


வந்த வேலையை முடிச்சு, நிறைய கன்னுகளை எடுத்துக்கிட்டுத் திரும்பிப்போகும் வழியில் கப்பலில் இருந்த மாலுமிகளுக்கிடையே கருத்துவேறுபாடு சண்டைன்னு ஆகி ரெண்டு குழுவா பிளவுபட்டுப் போச்சு. இந்த கேப்டன் தன் கப்பலில் இருக்கும் மற்ற மாலுமிகளைக் கொஞ்சமும் மதிக்காம அடிமைகள் போல நடத்துவாராம். போதாததுக்கு ஆபாசமாத் திட்டவும் செய்வாராம். எத்தனை நாள்தான் பொறுத்துப்போவாங்க. சிலபேரைக் கொன்னுத் தண்ணியிலே தூக்கிப்போட்டுட்டு, கேப்டனையும் அவருக்கு ஆதரவா இருந்த 18 மாலுமிகளையும் கப்பலில் இருந்த ஒரு 23 அடி நீளப்படகில் ஏத்திவிட்டுட்டுப் பொழைச்சாப் பொழையுங்க, செத்தா சாவுங்க''ன்னுட்டுக் கப்பலை ஓட்டிக்கிட்டு போயிட்டாங்க கேப்டனின் 'எதிரிகள்.'இந்தப் படகையே, தன்கிட்டே இப்ப மிச்சம் இருக்கும் 17 பேரை(ஒருத்தர் செத்துட்டார்) வச்சுக்கிட்டு 3618 மைல் ஓட்டிக்கிட்டுப் போயிருக்கார். . சரியான கில்லாடிக் கேப்டந்தான். இந்த சம்பவம் இவருக்கு வீரதீரமான ஆள்தான்னு நல்ல பெயரைச் சம்பாரிச்சுக் கொடுத்துருக்கு. அப்படிப் போகும்போது ஃபிஜித் தீவுகளில் ரெண்டு பெரிய சைஸ் தீவுகள் இருக்குன்னு சொன்னேனில்லையா? அதுகளுக்கிடையில் பயணம் செஞ்சுருக்காங்க அப்ப. இவ்வளவுதூரம் இந்தப்பக்கம் வந்தாலும் ஃபிஜித்தீவில் இறங்காமச் சும்மாப் போனவங்கதான் இவுங்க.


மூணாம் முறையாக இந்தப் பஸிபிக் கடல் பகுதிகளுக்கு கேப்டன் ஜேம்ஸ் குக் பயணப்பட்டப்ப , வில்லியம் ப்ளையைத் தன் குழுவில் சேர்த்துக்கிட்டார். வில்லியம் சார்ட் வரைஞ்சு குறிப்பு எடுத்து வைப்பதில் நிபுணராம். கேப்டன் குக்கிடம் ரொம்ப நல்ல பெயர் வாங்கி இருக்கார்.


ஒரு பயணத்தில் ஹவாய்த்தீவில் இருந்த ஒரு குழுவினரால் கேப்டன் குக் கொல்லப்பட்டார் . தலைவனை இழந்த கப்பலைத் தைரியமா இங்கிலாந்துவரை திருப்பிக்கொண்டுவந்து சேர்த்தவர் இந்த வில்லியம் ப்ளை.


சரித்திரக்குறிப்புகளின் படி இந்தத் தீவுகளை முதலில் 'கண்டவர்' இவர்தான்.


19 ஆம் நூற்றாண்டுகளில் ஒரு காலக்கட்டத்தில்தான் முதல்முதலா சில வெள்ளைக்காரங்க இங்கே கால் பதிச்சாங்க. கப்பல் உடைஞ்சுப்போய் அப்படியே மிதந்து வந்தவங்க, ஆஸ்தராலியாவில் இருந்து தப்பி ஓடிப்போன குற்றவாளிகள்ன்னு ஒரு சிலர். சரியான வருசத்தைப் பத்தி எந்தக் குறிப்பிலும் இல்லை என்பதுதான் விசனம்.


அப்ப இங்கே பிஜியன்களிடம் ரொம்பவே நாகரிகம் இல்லாத காட்டுமிராண்டிகள் வாழ்க்கை. அவுங்க வந்தே 3300 வருசம் ஆகி இருந்துருக்கு. உடல் பலம் உள்ளவன் தலைவன் ஆகறது, வெவ்வேற குழுக்களாப் பிரிஞ்சு சண்டை, சச்சரவுன்னு இருந்துருக்காங்க. கூடவே நரமாமிசம் தின்னும் பழக்கம்வேற. 'மதம் பிடிக்காத' வாழ்க்கை. மெலனீசியா, பாலினீசியான்னு வெவ்வெற இடங்களில் இருந்துவந்து அப்படியே துண்டுபோட்டு உக்கார்ந்தவங்கதான். சில குழு மக்களுக்கு நீள முடி, கம்பி மாதிரி சுருண்ட முடி, மாநிறத் தோல், சிலது நல்ல கருமையான நிறமுன்னு இருந்தாலும் எல்லாரும் வாட்டசாட்டமான உடலமைப்பும் உயரமும் கூடுனவுங்க. சின்னச்சின்னதா குழு. அந்தக் குழுக்களுக்கு தலைமையா இன்னொன்னு தலைக்குத் தலையா அமைச்சுக்கிட்டு வாழ்ந்துக்கிட்டு இருந்தாங்க. கூட்டம் பெருகப்பெருகப் பாலினீசியர்கள் மெள்ள மெள்ள இடம் பெயர்ந்து சமோவா, டோங்கான்னு பக்கத்துத் தீவுகளுக்குப் போயிட்டாங்க. இப்ப இதெல்லாம் தனித்தனி நாடுகள்.வெள்ளையர்களைத் தொடர்ந்து சில வியாபாரிகள், சீனர்கள் எல்லாம் வந்துருக்காங்க. ரெண்டாவது பெரிய தீவுன்னு சொன்ன வனுஆ லெவு தீவில் சந்தன மரங்கள் இருந்துருக்கு. ஒரு பத்துவருசம் இதே வேலையா இருந்து மரங்களையெல்லாம் வெட்டிக்கிட்டுப் போயிருக்காங்க சில வியாபாரிகள்.
அதே சமயம் மதம் என்ற ஒன்னு இல்லாத மனிதர்களுக்கு மதபோதனை செய்ய கிறிஸ்த்துவ மெஷினரிகள் வந்து சேர்ந்தாங்கப்பா. (ரெண்டு மூணு பேரைக் காணோமாம். ருசியா இருந்துருப்பாங்க போல!) ரெண்டு பெரிய குழுக்களுக்கு இடையே பொழுதன்னிக்கும் சண்டை இருந்துக்கிட்டு இருந்த காலக்கட்டம். சண்டைகளால் தளர்ந்து போயிருந்த ஒரு குழுவின் தலைவர்
Ratu Seru Cakobau என்பவர் 1854 வது வருசம் கிறிஸ்த்துவ மதத்தைத் தழுவினார். இதுக்குள்ளே இங்கே இருந்த வெள்ளையர்கள் 2000 பேருக்குக்கிட்டே ஆகி இருந்தாங்க.ஊர் ரெண்டு பட்டா....யாருக்கோ கொண்டாட்டமாமே! அதுதான் ஆச்சு. நாங்க எதுக்கு இருக்கோம்? உங்க நாட்டை நாங்க எப்படி நல்லா ஆக்கிக் காட்டுறோம் பாருன்னு தலையை விட்டாங்க. அப்ப இங்கே இருந்த முக்கியமான ஏழு குழுக்களின் தலைவர்களைக் கூப்புட்டுப்பேசி நாடு முழுசுக்கும் ஒரு தலைவர் இருக்கணுமுன்னு சொல்லி Ratu Seru Cakobau 1865 லே முதல் தலைவர் ஆனார். (இந்த ஏழு தலைவர்கள் தான் இன்னமும் கிரேட் கவுன்சில் ஆஃப் சீஃப். இவுங்களில் ஒருத்தர், தலைகளுக்கு மேலே ஒரு பெருந்தலையாத் (paramount chief )தேர்ந்தெடுக்கப்படுவார். எல்லாம் இந்த ஏழு குழுக்களுக்குள்தான். வெளியே இருந்து யாரும் உள்ளெ நுழைஞ்சுற முடியாது) ரெண்டு வருசத்தில் டோங்கா தீவைச் சேர்ந்த ஒருத்தர் தலைவரா உள்ளே நுழைஞ்சதும் சண்டை மறுபடி ஆரம்பிச்சுருச்சு. பழைய தலைவர் சமயம் பார்த்து, தன்னை இந்த நாட்டுக்கு ராஜாவா அறிவிச்சுக்கிட்டார். ராஜான்னு ஆனதும் வருசாவருசம் தலைவனைத் தேர்ந்தெடுக்கறது என்ற பிரச்சனையை ஒழிச்சார். மத்தவங்க சும்மா இருப்பாங்களா?


ராஜா என்ற அந்தஸ்த்தோடு இன்னொரு ராஜாகிட்டே உதவி, பேச்சுவார்த்தை (நேரடியா ராஜாகிட்டே இல்லை. அவரோட பிரதி நிதிகள் மூலமாத்தான்) எல்லாம் ஆனது. October 10, 1874 ஒப்பந்தம் போட்டு முடிச்சாங்க. பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தில் இன்னொரு காலனியா இருந்துட்டுப்போகட்டுமே...... பெரிய மனசுதான்:-)ஃபிஜி நாட்டுக்குன்னு சில கொள்கைகள் உருவாக்குனாங்க. இங்கே இருக்கும் லோக்கல் ஃபிஜியர்களின் கலை கலாச்சாரம் எல்லாம் முற்றிலுமா பாதுகாக்கறோமுன்னு முதல்படியா, நாட்டில் இருக்கும் நிலமெல்லாம் ஃபிஜியன்களைத்தவிர வேற யாருக்கும் விக்கவோ வாங்கவோ அதிகாரம் இல்லைன்னு சட்டம் போட்டாங்க.இந்த கவுன்சில் ஆஃப் சீஃப், அரசுக்கு உதவியா இருந்து அரசாங்கத்தை வழி நடத்தணும். எந்த மாற்றம் கொண்டுவந்தாலும் அவுங்க சரின்னாத்தான் முடியும். அரசு அதிகாரிகளா இருக்கும் உரிமை ஃபிஜியர்களுக்கு மட்டும்தான்.எந்த நிலையிலும் ஃபிஜியர்களின் நல்வாழ்வுதான் முக்கியம். அவுங்க விவகாரத்தில் தலையிட மத்த ஆட்களுக்கு உரிமை இல்லைன்னு பலவிதமான சட்டங்கள்.

( Ba அருகில் இருக்கும் கிராமத்தின் தலைவர் குடியிருப்பு)
பிரிட்டன் பிடிக்கும் இடங்களில் எல்லாம் மக்களை உக்கார்த்திவச்சுச் சோறு போட்டு வளர்ப்பாங்களா? அங்கே இருக்கும் மக்களைக்கொண்டே எதாவது செஞ்சு பணம்காசு சேர்த்து அதை ராஜாவுக்குக் கொடுக்கணும். அதே சமயம் அந்த நாடும் கொஞ்சம்போல வளரவும் செய்யும். என்ன செய்யலாமுன்னு திட்டம் போட்டப்ப இனிப்பான விஷயம் மாட்டுச்சு. அதுதான் கரும்பு.


முதல் கவர்னரா Sir Arthur Gordon வந்து சேர்ந்தார். இவர் ஏற்கெனவே மொரிஷியஸ் தீவுகளுக்கு கவர்னரா இருந்தவர். அனுபவஸ்த்தர். என்னமாதிரி அனுபவம்? நாப்பது வருசம் முன்னேயே (1834) கரும்புத்தோட்டக் கூலிவேலைக்கு இந்தியாவில் இருந்து ஆட்களை மொரிஷியஸுக்குக் கொண்டு போனதுதான். அதே டெக்னிக்கை இங்கே செஞ்சுட்டா வேலை சுலபம். அஞ்சே வருசம் பக்கவாத் திட்டம் போட்டு 1879லே இந்தியாவிலே இருந்து 463பேரைக் கொண்டு வந்து இறக்கியாச்சு. கரும்புத்தோட்டத்திலே கரும்பும் விளைஞ்சு நிக்குது.இனி கரும்பைச் சக்கரையா மாத்தணுமுல்லே? அங்கங்கே சின்னச்சின்னதா ஆலைகள் முளைச்சது. சரியான நிர்வாகம் இல்லாம எல்லாம் நஷ்டம். அதனாலே Colonial Sugar Refining Company(ஆஸ்தராலியன் கம்பெனி)
கலோனியல் ஷுகர் ரிஃபைனிங் கம்பெனிகிட்டே ஒப்பந்தம் போட்டு அவுங்க வந்து இங்கேபெரிய தீவில் மூணும், ரெண்டாவது பெரிய தீவில் ஒன்னுமா மொத்தம் 4 இடத்துலே பெரிய அளவில் ஆலைகள் வச்சாங்க.. கரும்பு கொண்டுவர்றதுக்குப் போட்ட ரயில் பாதைகள் எல்லாம் அப்போ போட்டதுதான். 1880 முதல் 1973 வரை இந்தக் கம்பெனிதான் ஆலைகள் நடத்துச்சு.96 வருசம் பிரிட்டிஷ் காலனி நாடா இருந்த ஃபிஜிக்கு 1970, அக்டோபர் மாசம் 10 ஆம் தேதி சுதந்திரம் கொடுக்கப்பட்டது. அதுக்குப்பிறகு வெளிநாட்டுக் கம்பெனிகள் மெள்ள மெள்ள பின்வாங்கிட்டாங்க. அந்தக் காலக்கட்டத்தில் (1973)சக்கரை ஆலைகளும் ஃபிஜி ஷுகர் கார்ப்பரேஷனா ஆச்சு.


பெரிய தீவில் இருக்கும் மூணு ஆலைகளில் நாட்டின் மேற்கில் பெருசுதான் இந்த லௌடொகா நகரில் இருக்கு. ( ஆமாம். உழக்கு மாதிரி இருக்கும் நாட்டுக்கு கிழக்கும், மேற்கும் பார்த்துக்கிட்டு இருக்கேன்) இந்த ஊருக்கு இன்னொரு பெருமையும் இருக்கு. இங்கேதான் துறைமுகம்( இதுவும் மேற்குக்கானது) இருக்கு. கிழக்குக்கானது தலைநகரில் சுவா சிட்டியில். மேற்கில்தான் தொழிற்சாலைகள் கூடுதல் என்பதால் இந்தத் துறைமுகம்தான் எப்போதும் பரபரப்பாக இயங்குது.
( படத்தின் பின்புலத்தில் தெரிவது பிஜி ஷுகர் மில்)


ஜப்பான் நாட்டுக்கு இங்கிருந்து பைன் மரத்தூள் ஏற்றுமதி. அந்தப்பக்கம் வரும்போது குவிச்சுவச்சுருக்கும் மரத்தூள் மலையில் இருந்து 'கும்'ன்னு வாசம் அப்படியே ஆளைத் தூக்குது. துறைமுகத்துக்கும் சக்கரை ஆலைக்கும் இடைப்பட்ட விளையாட்டு மைதானத்தில் பல்வேறு குழுக்கள் 'ரக்பி' பயிற்சிக்காக விளையாடிக்கிட்டு இருக்காங்க. ஃபிஜி ரக்பி குழுவும் ரொம்ப ஸ்ட்ராங்கானதுதான்.


சனிக்கிழமை கோவிலுக்குப்போகும் வழக்கத்தை விட்டுறவேணாமுன்னு லௌடோகா நகரில் இருக்கும் ஹரே கிருஷ்ணா கோவிலுக்குப் பத்து நிமிசம் போயிட்டுப்போகலாமுன்னு வண்டியை அந்தப் பக்கம் திருப்புனார்.
இடது பக்கம் இருக்கும் பொட்டானிக்கல் கார்டனில் ரோடுக்குப் பக்கத்தில் நாலு தாழை மரம். மஞ்சளா அங்கங்கே தாழம்பூக்கள்.
'கிருஷ்ணா காளியா மந்திர்' நமக்கேத்தமாதிரி கருப்புக் கிருஷ்ணர். காளிங்கன் மேல் நர்த்தனம் ஆடுகிறார். பளிங்குச்சாமியையே பலவருசமாப் பார்த்துக்கிட்டு இருக்கேனேன்னு அதுக்கு மாற்றாகக் கம்பிக்கதவுகளுக்கு அப்புறம் இருந்து அருள் பாலிக்கிறார். முன்வாசலில் துளசிச் செடிகள் தளதளன்னு நிக்குது.சாமி கும்பிட்டு முடிச்சு ரிஸார்ட் நோக்கிப் போகும் வழியில் இருக்கும் ஒரு கோரோவில் இளநீர் சீவி அடுக்கி வச்சுருக்கறது கண்ணில் பட்டுச்சு. மட்டாவாலு கிராமம். 'அதிர்ஷ்டக்கார பயபுள்ளே'ன்னு நினைச்சுக்கிட்டேன். இவுங்களைக் கூட்டிக்கிட்டு வரும்போது அங்கே வண்டியை நிறுத்துனோம்.
ஆளுகளைப் பார்த்ததும் ஓடிவந்த பெண்மணியுடன் கூடவே சில குழந்தைகளும், நாய்களும்.


கேமெராவைப் பார்த்ததும் களங்கமில்லாத சிரிப்புடன் போஸ் கொடுத்தாங்க. பெயர் செரியானா. ஒரு இளநீரில் உள்ளே தேங்காய் முற்றி இருந்துச்சு. அதை வேணாமுன்னு கீழே போட்டதும் நாய்கள் அதைக் கவ்வி எடுத்துக்கிட்டுப் போய்ப் பல்லில் சுரண்டித் தின்னுச்சுங்க. எனக்கு மனசெல்லாம் அப்படியே....... நாயாப் பொறந்தாலும் நியூஸியில் பொறக்கணும்.
இங்கே கல்யாணவீட்டுக்கு வந்து சேரும்போது 11.30 ஆகிருச்சு. ரொம்ப ஒன்னும் மிஸ் பண்ணலை. ( இங்கே நடந்தவைகள் தனிப்பதிவாக வரும்)
நடந்துகொண்டிருக்கும் நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் மகளின் நண்பரின் முகத்தில் திகைப்பு, வியப்பு, சிரிப்புன்னு எட்டு ரஸங்களும் ( நவத்தில் கோபம் நீங்கலாக) மாறிமாறி வருவதைக் கவனிச்சேன்:-) அதான் அவுங்களுக்கு நேர் எதிரா நானும் மகளும் உக்கார்ந்துருந்தோமே. மகளும் இதைக் கவனிச்சவள் என்னிடம், ' இதுதான் ஆலன் பார்க்கும் முதல் இந்தியக் கல்யாணம்' என்றாள். அடக் கடவுளே..... புள்ளெ பயந்துட்டா என்ன செய்யறது? ஏழுநாள் கல்யாணமா அமைஞ்சுபோச்சே.....'தென்னிந்தியக் கல்யாணங்கள் எல்லாம் இப்ப ரொம்பவே சுருங்கிப்போச்சு. ஒன்னரை நாள்தான் அதிகபட்சம். வேணுமுன்னா நாம் அதை இன்னும் சுருக்கி ஒரு நாள் இல்லே அரைநாளில் முடிச்சுடலாமு'ன்னு அஷ்ஷூரன்ஸ் கொடுத்தேன். அதுவும் இந்தியாவில் நடத்தினால் பெண்களுக்கு இவ்வளவு வேலையும் இருக்காது. நோகாம நோம்பு கும்புட்டுறலாம் இல்லை?


அதுக்குள்ளே பகல் நிகழ்ச்சிகள் முடிஞ்சதும், விட்டதைப் பிடிப்பதுபோல 'குடி' உரிமை நிலை நாட்டப்பட்டது. அங்கே இருந்த இளந்தாரிகள் எல்லாம் ஆலனைப் போதும் போதுமென்ற அளவு உபசரிச்சாங்க. அவரும் எல்லாரிடமும் விகல்பம் இல்லாமப் பேசிக்கிட்டு அதை சமரசம் உலாவும் இடமா மாற்றிக்கிட்டு இருந்தார்.


சாப்பாட்டுக்கு அப்புறம் மகள் பிறந்த ஆஸ்பத்திரி, முதல்வீடு, முதல் பள்ளிக்கூடம், கிண்டர்கார்டன், விளையாடிய பார்க் இப்படி எல்லா இடத்துக்கும் கொண்டுபோய்க் காமிச்சுட்டு ( பின்னாளில் அவள் பதிவு எழுதும்போது பயன்படலாம்) ரிஸார்ட்டில் கொண்டுபோய் விட்டுட்டு வந்தோம். போகும்போதே பாதிவழியில் மழை ஆரம்பிச்சது. நேரமாக ஆக வானமே பொத்துக்கிட்டதுபோல அடிச்சுப்பேய்ஞ்ச பேய்மழையை பலவருசங்களுக்குப் பிறகு அனுபவிச்சோம்.மழைக்கு இதமா ஒரு காஃபி குடிச்சா எவ்வளோ நல்லா இருக்கும்? சக்கரை நகரில் தேடித்தேடி அலைஞ்சுக் கடைசியில் ஒரு சீனக்கடையில், அந்த நபர் ஒன் காஃபி ஒந்தாலர்ன்னு 'மிரட்டியும்' கேக்காமல் ரெண்டு காஃபி வாங்கிக் குடிச்சுட்டு பா போய்ச் சேர்ந்தோம்.


தொடரும்............:-)

Tuesday, July 29, 2008

ராணிக்கு ஒன்னுன்னா ராஜாவுக்கும் ஒன்னு........(ஃபிஜிப் பயணம் பகுதி 5)

நேத்துக் காலை & மாலை பூசைகளுக்கிடையில் கிடைச்ச இடைவெளியில் பழைய நண்பர் ஒருத்தரை( முந்தி இருந்த வீட்டுலே இவர் அடுத்த வீட்டுக்காரர்) ஒரு பத்து நிமிசம்(??) பார்த்துட்டு வந்தோம். நாட்டோட நிலமை சரியில்லை. எல்லாம் 'கைவித்தி'களுக்கு( நேட்டிவ் ஃபிஜியன்களைக் குறிப்பிடும் சொல்) போகப்போகுது. வியாபாரமும் முன்னைப்போல இல்லை. எல்லா இந்தியர்கள் வீட்டிலும் வருங்காலம் பற்றிய கவலை. அதான் சந்தர்ப்பம் கிடைக்கும்போதே வேற இடத்துக்குப் போயிறலாமுன்னு ஒரு எண்ணம். இங்கேயே நாலைஞ்சு தலைமுறைகளா இருந்துட்டோம். இப்ப திடீர்னு போக முடியுமா? நாங்க இதுவரை சம்பாதிச்சதையெல்லாம் இங்கேயே வீடு வாசலுன்னு போட்டாச்சு. இதையெல்லாம் வித்துட்டுக் கிளம்பலாமுன்னாலும் யாரும் வாங்கிக்கத் தயாரா இல்லை. அப்படி அப்படியே விட்டுட்டுத்தான் போகணும். இந்தியாவுக்குப் போணுமுன்னாலும் அங்கே மட்டும் எங்களுக்கு யார் இருக்கா? சொந்த பந்தம் எங்கேன்னு தேடறது. அதான் பிள்ளைகளை மட்டும் ஆஸ்தராலியா, நியூஸிலாந்து, கனடான்னு அனுப்பிட்டோம். இப்பப் பாருங்க வயசான காலத்துலே தனியாக் கிடக்க வேண்டி இருக்கு.இவுங்க அப்பா, குட்டப்பன் நாயர் சின்ன வயசுலே இங்கே வந்து செட்டில் ஆனவர். பலசரக்கு வியாபாரம். பிள்ளைகள் எல்லாம் இங்கே பிறந்தவங்கதான். மூத்த மகனுக்கே இப்ப 79 வயசாகுது. இதுவரை யாருமே இந்தியாவுக்குப் போனதில்லை. மலையாளம் பேசத்தெரியாத மலையாளிகள். சமையலில் மட்டும் 'அவில்' எல்லாம் உண்டு. அவியலைத்தான் இப்படிச் சொல்றாங்க.எங்களுக்குத் தெரிஞ்சே நாலு தலைமுறைகள் ஒன்னாவே இருந்த வீடு இது. மூத்தவங்க எல்லாம் இறந்து போய், இளைய தலைமுறைகள் யாருமே நாட்டில் இல்லாம 'அம்போ'ன்னு இருக்காங்க. இந்த அழகில் அந்த வீட்டம்மா சீக்கு வந்து நடக்கமுடியாமல், நாக்கும் குழற ஆரம்பிச்சுக் கிடக்கறாங்க. எவ்வளவு சுறுசுறுப்பா ஓயாமல் வேலை செஞ்ச உடம்பு. மகளுக்குக் காது குத்தி மொட்டை அடிச்சப்ப எப்படியெல்லாம் வந்து உதவுனாங்க. மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு. ஒரு பத்துப்பதினைஞ்சு வருசம் முந்திகூட நியூஸிலாந்து சுற்றிப்பார்க்க வந்து நம்ம வீட்டில் நாலைஞ்சுநாள் தங்கிட்ட்டுப் போனாங்க.இதேபோலத்தான் இன்னொரு தோழியின் தந்தை ஒண்டிக்கட்டையா இங்கிருக்கார். (தோழி இருப்பது நியூஸியில்) யாராவது வீட்டை வாங்கிக்கிட்டாக் கிளம்பிருவாராம்!!!! இந்தியர்கள் யாரும் வாங்க மாட்டாங்க. ஃபிஜியன்கள் வாங்குனாத்தான் உண்டு. ஆனா அவுங்ககிட்டே காசு பணம் ஏது? இவருக்கு வயசும் 87. இப்ப என்ன செய்யறாருன்னு கேட்டேன். 'ட்ராவிடியன் கல்ச்சர்'ன்னு புத்தகம் எழுதிக்கிட்டு இருக்காராம். 'எழுத்தாளருக்கு இன்னொரு எழுத்தாளருடன் சந்திப்பு' என்ற வகையில் சற்றுநேரம் உரையாடிட்டு வந்தேன். இந்த 'எழுத்து' என்னும் விசயம் எத்தனை பேருக்கு ஒரு ஆசுவாசமா இருக்குன்னு பாருங்க!!!கடைத்தெருவில் கொஞ்சம் சுத்திட்டு (எல்லாம் இந்த தசாவதாரம் ஹிந்திப்படம் கிடைக்குமான்னுதான்) அப்படியே டாங்கி டாங்கி கோயிலுக்குப் போனோம். ஒரு அரைமணிநேரப் பயணம் கிங்க்ஸ் ரோடில்.
சொல்ல மறந்துட்டேனில்ல? ஏர்ப்போர்ட்டில் இருந்து வெளியே வந்து மெயின் ரோடில் சேரும் இடத்தில் இருந்து வலது பக்கம் போனால் தலைநகர் வரை குவீன்ஸ் ரோடு. இடது பக்கம் திரும்பி அதே தலைநகர்வரை போகும் ரோடு கிங்க்ஸ் ரோடு. ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்? ஒன்னுமில்லை... தீவைச் சுத்தியே போகும் ஒரே ரோடுதான்னு சொல்லிறமுடியாது.தலைநகருக்குப்போக ராணியில் 5 மணி நேரம். ராஜாவில் 7 மணியாகும்.
ராணிக்குப் பராமரிப்பு பரவாயில்லை. ராஜாவுக்கு ரொம்பவே மோசம். ராணியின் வழியில் அவ்வளவா ஊர்கள் இல்லை. ராஜாவுக்கு அங்கங்கே சின்னச்சின்னதா ஊர்கள். நாட்டின் பெருந்தலைகள் விமானநிலையம் வரப்போக ஏதுவாக இருப்பதால் ராணியை நல்லாக் கவனிச்சுக்குறாங்க.
ஹைவேயில் பராமரிப்பு, மராமத்து நடப்பதைக் கண்கூடாக் கவனிச்சேன்.ரெண்டு மூணு மைலுக்கு ஒரு குழுன்னு 'ரோட் ஒர்க்ஸ்' நடந்துக்கிட்டு இருக்கு. குழு மொத்தமும் அஞ்சாறு ஃபிஜியன்கள்தான். குண்டும் குழியுமா இருக்கும் இடங்களில் தரைக்கு வலிக்காத விதமா லேசா பூப்போல கடப்பரையால் ஒருத்தர் லேசாத் தோண்டறார். இன்னொருத்தர் ரோடின் ஒரு பக்கத்தில் கொட்டி இருக்கும் சரளைக்கல் ஜல்லிகளை கொஞ்சமா வாரி குழியில் ரொப்புரார். இன்னொருத்தர் ஒரு மக் போல இருக்கும் குட்டித் தகரடப்பாவில் தாரை மொண்டு ஊத்துறார். இப்ப இன்னும் கொஞ்சம் ஜல்லி அதுமேலே விழுது. நல்ல உயரமான, திடமான உடம்புள்ள இன்னொருத்தர் திமுசுக் கட்டையால் அந்தக் குழியை அலுங்காமக்கொள்ளாம ஒத்தி எடுக்கறார். அவ்ளோதான். ஆச்சு, இனி அதுக்குப் பக்கத்தில் அரை அடி தூரத்துலே இருக்கும் இன்னொரு குழிக்குச் சேவை தொடர்கிறது இதே மாதிரி.


தெருவேலைக்கான 'ட்ராஃபிக் கோன்'களைச் சுற்றி வச்சதால் போக்குவரத்து நெளிஞ்சு வளைஞ்சு போகுது. ஒரு அரைமணியில் இந்தக் கூம்புகள் வேற குழிக்குத் தேவையா இருக்கேன்னு இடமாற்றம் ஆன அடுத்த அஞ்சு நிமிசத்தில் செப்பனிடப்பட்ட இடத்தில் ஓடும் வண்டியில் தாரெல்லாம் ஜல்லியோடு ஒட்டிக்கிட்டுப் போயிருது. இந்தக்குழியில் இருந்து அங்கே, அங்கே இருந்து இங்கேன்னு நாள் முச்சூடும் நாலைஞ்சு குழிகளை நிரப்பியே அன்றைக்கான பராமரிப்பு வேலை முடிஞ்சதுன்னு வையுங்க.


மறுநாள் காலையில் பழையபடி, இங்கேயே இதே வேலைதான். ராத்திரியில் போக்குவரத்து குறைவா இருக்கும் சமயம் ரோலர் எல்லாம் வச்சு ஒழுங்கா இந்த வேலையைச் செய்யலாம்தான். ஆனால் இங்கே யாரும் அஞ்சரைக்குமேலே வேலைக்கு வரமாட்டாங்க. பேசாம இதை ஒரு ஒப்பந்தக்காரருக்கு விட்டாலாவது உருப்படியா வேலை நடக்கும். ஆனா பொதுப்பணித்துறை அரசாங்கத்துப் பிரிவாச்சே.இவ்வளவு என்னத்துக்கு...... டவுன் கவுன்சிலுக்குச் சொந்தமான பார்க்குகள், விளையாடும் திடல்கள் இருக்குல்லே. இங்கே புல்வெட்ட ஒரு லான்மோவர் இல்லை. சின்னதா லைன் ட்ரிம்மர் வச்சுக்கிட்டுப் புல்வெட்டியாறது. ஒரு திடல் வெட்ட ஒரு மாசம் ஆகும். கடைசிப்பகுதி முடிச்சவுடன் மறுபடி முதல் பகுதியில் இருந்து ஆரம்பிக்கணும். அதுக்குள்ளே புல் முளைச்சு ரெடியா இருக்கும். எப்படியும் ஒரு ஆளுக்கு(ஃபிஜியன்) மாசம் முழுசும் வேலை இருக்கு.
அப்ப எல்லா நேடிவ் ஃபிஜியன்களும் நல்லபடியாக் கஷ்டமில்லாமல் இருக்காங்களான்னு பார்த்தால்.......ஊஹூம். இந்திய விவசாயிகள்??
அவுங்களிலும் பாதிக்கு மேல் ரொம்பக் கஷ்ட ஜீவனம்.
கொஞ்சம்பேர் சுமாரான வாழ்க்கைவசதிகளுடன் இருந்தாலும் இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்த வண்டி ஓடுமுன்னு தெரியலை.முந்தியே சொன்னபடி விவசாய நிலங்கள் எல்லாமே ஃபிஜியன்களுக்கு மட்டுமே அந்தந்த கிராமத்துக்கு உரியது. அதை இந்திய விவசாயிகளுக்கு ஒப்பந்தம் போட்டுக்கிட்டுக் கொடுப்பாங்க. அதுலே கிடைக்கும் வருசாந்திரப் பணத்தை, அந்தக் கிராமத்து மக்களுக்குப் பிரிச்சுக் கொடுப்பார் கிராமத் தலைவர்.ராணுவப்புரட்சி நடந்து....... நேட்டிவ் ஃபிஜியன்களுக்கு முன்னுரிமை கொடுக்கணுமுன்னு சொல்லிக்கிட்டு இருந்த அரசியல் தலைவர்களும், எல்லா மக்களுக்கும் மேலே பெரிய தலைகளா இருந்த கவுன்ஸில் ஆஃப் சீஃப் என்ற குழுமமும் சேர்ந்து என்ன செய்யலாமுன்னு மண்டையை உடைச்சுக்கிட்டு யோசிச்சு ஒரு முடிவுக்கு வந்தாங்க. இந்திய விவசாயிகள் நம்ம நிலத்தையெல்லாம் பயிரிட்டுக் கொள்ளை லாபம் அடிக்குறாங்க. முதல்லே அவுங்களுக்கு நிலத்தைக் கொடுக்கக்கூடாது. நிலமில்லேன்னா எப்படிச் சம்பாதிப்பாங்கன்னு பார்க்கலாம். (எனக்கு ஒரு கண்போனாப் பரவாயில்லை. அவனுக்கு ரெண்டும் போகணும்?)"அப்ப ஏற்கெனவே ஒப்பந்தம் இருக்குங்களே, அதை என்ன செய்யறது?"
அது இருந்துட்டுப் போகட்டும். அவகாச காலம் முடிஞ்சபிறகு இனிமே புதுப்பிக்கக்கூடாது. இந்த சமயம் பார்த்து ஒப்பந்தம் முடிஞ்ச காலக்கட்டத்தில் இருக்கும் மக்களுக்கு நிலம் கிடைக்கலை. நிலம் கொடுக்காததால் கிராமத்துக்கு லீஸ் பணமும் கிடைக்கலை. என்னதான் கிராமத்தலைவர் நினைச்சாலும் மேலிட உத்தரவு இல்லாமல் அவராலும் ஒன்னும் செஞ்சுக்க முடியாது. கடைசியில் உனக்குமில்லை எனக்குமில்லைன்னு பல நிலங்கள் சும்மாவே கிடக்குது.சரி. இந்தியர்களுக்கு வேணாம்ப்பா. நாங்களே இதைப் பயிரிட்டுக்கறோமுன்னு சொல்வாங்களா? அதுவும் இல்லை. கரும்புத்தோட்டமுன்னா அது வருசத்துக்குண்டான பயிர். வேலை அதிகம். இந்தியர்களுக்கு இருக்கும் பொறுமை , வங்கியில் கடன் வாங்கி விவசாயம் பார்ப்பதுன்னு இதெல்லாம் அறவே இல்லை. இவுங்களை நம்பி எந்த வங்கியும் கடனும் கொடுக்காது. வாரக்கூலியாக் கிடைக்கும் காசையே கூலி வாங்குன அன்னிக்கே செலவாக்கும் மனப்போக்கு இவுங்கது. வீட்டைச் சுத்தியும், கண்பார்க்கும் இடத்தில் எல்லாம் கப்பக் கிழங்கை நட்டுவச்சு
அதையே முக்கிய உணவாக் குடும்பம் முழுசுக்கும் கொடுத்துக் காப்பாத்தத்தான் பெண்கள் இருக்காங்களே. கடல் மீன்கள், நக்காய்ன்னு சொல்லும் சிப்பி இனங்கள், இன்னும் நார்த்தங்காய், ஆரஞ்சுன்னு எது கிடைச்சாலும் மார்கெட்டில் கொண்டுவந்து வித்து............ இவுங்க சமூகத்துலேயும் பெண்கள்தாங்க முக்கால்வாசிக் குடும்பச்சுமையைத் தாங்கிக்கறாங்க.இந்த ரெண்டு பிரிவுகளும் இல்லாம மூணாவது பிரிவா (கொஞ்சம் அதிக மக்கள் தொகையுடன்) இருப்பது வியாபாரிகளான குஜராத்திகள். நிலத்துக்கும் இவுங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கடைகண்ணின்னு ஆரம்பிச்சு இப்ப தொழிற்சாலைகள்வரை எல்லாமே இவர்கள் வசம்தான். பணம் என்னும் கோட்டைச் சுவரால் பாதுகாக்கப்பட்டவர்கள். 'தவுலத் கா தீவார்'னு ஒரு ஹிந்திப்பட வசனம் நினைவுக்கு வருது. நாட்டுக்கு வரிகள் மூலம் வரும் வருமானம் முக்கால்வாசி இவுங்களாலேதான். இவுங்களாலேதான் பலருக்கு வேலைவாய்ப்பும்.எப்படியாவது அண்டைஅயல் நாடுகளுக்குப் போய்விடணும் என்ற தவிப்பு இவுங்களுக்கு இப்போதைக்கு இல்லை. ஆனாலும் குடும்பத்தில் ஒருத்தர் ரெண்டுபேர் என்ற அளவில் அண்டைஅயல்களுக்கு இடம்பெயர்ந்து இருக்காங்க. ஆனாலும் இன்னும் வேர்கள் இங்கேதான். எப்பவாவது இங்கே இருக்கவே முடியாத நிலை வந்துச்சுன்னு வையுங்க ( ஐயோ...அதெல்லாம் எதுக்கு? டச்வுட்) கையில் பணப்புழக்கம் இருப்பதால் பிஸினெஸ் மைக்ரேஷன் சலுகையில் இடம் பெயர்ந்துறலாம். அவ்வளவா பிரச்சனை இருக்காது.
இவ்வளவு போராட்டங்கள் இருக்குமிடத்திலும் பள்ளிக்கூடங்களுக்கு குறைவே இல்லை. இந்த பா என்ற ஊரில் மட்டும் எடுத்துக்கிட்டீங்கன்னா.......
குஜராத்தியர்கள், , தென்னிந்திய சங்கம், இந்த ஊர் முஸ்லீம்கள், இங்குள்ள பஞ்சாபிகள், உள்ளூர் ஹிந்துஸ்தானிகள், ஆர்யசமாஜம், கத்தோலிக்கக் கிறிஸ்த்தவர்கள்னு எக்கச்சக்கமான பள்ளிக்கூடங்கள். மாணவர்கள் எண்ணிக்கையும் ஒரே இடத்தில் குவியாமல் பரவலாத்தான் இருக்கு. இத்தனூண்டு ஊருக்கே, இந்த மாவட்டத்து மக்கள் தொகை 14 ஆயிரத்துச் சொச்சம், இத்தனைப் பள்ளிக்கூடமுன்னா மொத்த நாட்டையும் கணக்குலே எடுத்தா..............................?


என்னென்னவோ யோசனையும் மண்டைக்குடைச்சலும்......

இதோ பாருங்க இங்கே டாங்கி டாங்கியிலும் ஒரு பள்ளிக்கூடம் முளைச்சிருக்கு. எல்லாம் நல்லதுக்குத்தான்.
"ஆமா, இங்கே கோயிலில் இருந்த கோபுரம் என்னாச்சு?"


"கோபுரமெல்லாம் இங்கே அப்பவே இல்லையே. என்ன ஞாபகத்துலே உளறுறே?.""குட்டியா ஒரு கோபுரம் இருந்துச்சு. முந்தி எடுத்த படம் வீட்டுலே இருக்கு.
பார்த்துட்டுச் சொல்றேன்....."மண்டபத்துலே நுழைஞ்சவுடன் எதிர் சுவரில் சின்னதா மூணு சன்னிதிகள். நடுவில் முருகன். அவருக்கு வலது புறம் அம்மா, இடதுபுறம் மாமா. ஒவ்வொன்றின் முன்னாலும் சின்னதா ஒரு தகர உண்டி. மாமாவுக்கு முன்னே இருந்ததில் 'வங்கஷ் பெர்மால்' vankash permal னு கோணமாணலா எழுதி வச்சுருக்கு.மேலே உள்ள படம் அன்றும், கீழே இன்றும் ( பிங்க் பார்டர் பட்டுப்பாவாடையில் மகள்)பழைய ஆல்பத்தைத் தேடிப்புடிச்சுப் பார்த்தால்.........
அட! ஆமாம். கோயிலுக்கு கோபுரம் இல்லை!!!கொசுவத்தி லேசா புகைஞ்சுது.......
அப்போது ஏதோ விசேஷம். .....ம்ம்.... வேப்பமரத்தில் பால் வருதுன்னு, அதைப் பார்க்க, நாங்க அக்கா மாமாவோடு சேர்ந்து போயிருந்தோம். ஊர்லே இருந்து வந்தவள்னு என்னைப் பார்த்ததும் ஓடிவந்து கூப்புட்டுக் கிட்டுப்போய் ..........உபசரிப்பு. ஏதோ என் வீட்டு விசேஷத்துக்கு சமைக்கிறமாதிரி.... சமையல் சரியா வந்துருக்கான்னு பாருங்கன்னு கேட்டுக்கேட்டுச் செஞ்சாங்க.

தமிழ்க்காரங்களா இருந்தும் நம்மாலே தமிழில் பேசமுடியலை என்ற அங்கலாய்ப்பும், தமிழ்ப் பேசும் ஆட்களைக் காணும்போது ஒரு மகிழ்ச்சியும் அதுவும் நம்மை மாதிரி தமிழ்நாட்டுலே இருந்து வந்தவங்கன்னா கேக்கவே வேணாம். கண்ணுலே நல்லாத் தெரியும்.


ஊர்க்காரவங்களா? ஊர்லே எல்லாரும் நல்லா இருக்காங்காங்களான்னு ஆசையோடு கேக்குறதைப் பார்க்கும்போது மனசு கொஞ்சம் ஒடிஞ்சு போயிருது எனக்கு.
வேலைக்கு ஆள் வேணுமுன்னதும் கொஞ்சம்கூட மனசுலே இரக்கமே இல்லாம, 'எல்லாம் நம்ம காலனி நாடுகள்தானே. நமக்கு இல்லாத உரிமையா'ன்னு புடிச்சுக்கிட்டு வந்து விட்ட வெள்ளைக்காரங்களை என்ன செஞ்சாத் தகும்? வர்ற வழியிலேயே சீக்குவந்து செத்தவங்க எத்தனை பேரோ?
( பாட்டியும் அக்காவும் மகளும்)இப்படிக் கொணாந்தவங்களை கிர்மிட்( girmit. agreements), லே வந்தவங்கன்னு சொல்வாங்க. மகள் பிறந்த சமயம், இந்த ஊரில் கிர்மிட்லே வந்த மக்களில் கடைசி ஜீவனா இருந்த 'சுந்தராம்பாள் பாட்டி', தள்ளாடும் வயசுலேயும் கஷ்டம் பார்க்காம ஊர்க்காரப் பாப்பா( அது நாந்தான்)வூட்டுப் புள்ளையைப் பார்க்கணுமுன்னு வந்த அன்பை மறக்க முடியுமா?
தொடரும்.............:-)

விடை சொன்னால் அடிக்க வராதீங்க.....

அசராம அடிச்சு ஆடுன அன்புள்ளங்களுக்கு முதலில் நன்றி சொல்லிக்கறேன்.

இது என்னன்னு இப்பத் தெரியுதுங்களா?


Olive Boat. ஒலிவ ஓடம்.
சும்மா ஒரு கிண்ணத்துலே வச்சுத் தின்னால் ஆகாதா? இந்தப் படகுலே வச்சு ரொம்ப ஸ்டைலாப் பறிமாறணுமாம்!!ஒரு கடையில் பார்த்தப்ப 'நாவல்ட்டியா' இருக்கேன்னு ஆசையா விலை பார்த்தேன். 20$. சீச்சீ.... இந்தப் படகு, புளிப்பா இருக்கு.கொஞ்சநாள் போனதும் அதே கடையில் 'சேல் டேபிளில்' உக்கார்ந்து இருக்கு,

ரெண்டு டாலர் ஸ்டிக்கர் ஒட்டிக்கிட்டு. இவரும் 'வேணுமுன்னா வாங்கிக்கோயேன்'னு ரொம்ப தாராள மனசோட சொல்றார். வேணாம் விலை அதிகமா இருக்குன்னு ஒரு வேகத்துலே சொல்லிட்டேன்.இவர்வேற இருவது டாலர் சாமானை வெறும் ரெண்டுன்னு போட்டுருக்கான். இது அதிகமாப்போச்சான்னு எரியும் தீயில் நெய்யை வார்த்துக்கிட்டு இருக்கார். இவருக்கு நெய் சாப்பிடத்தான் தடா போட்டுருக்கு:-)பாழாப்போன மனசு கேக்குதா? அடுத்தவாரம் அந்தப் பக்கம் போனப்ப எட்டிப்பார்த்தேன். இன்னும் அங்கேதான் இருக்கு எனக்காகக் காத்துக்கிட்டு. துணிஞ்சு கையில் எடுத்துப் பார்த்தால்........ 50% கழிவு. ஒரு டாலருக்குக் கிடைக்கும்.அப்புறம்?புதிர் போடலாமேன்னு வாங்கியாந்தேன்:-)நம்ம ஹெய்டியும், ராகவனும் பழத்தைச் சரியாக் கண்டு பிடிச்சாங்க. அப்படியும் அவுங்க அரைக்கிணறுதான்:-))))ஏற்கெனவே திவா...... கடைசி முயற்சியும் செஞ்சு பார்த்துட்டுச் சோகமா இருக்கார்.சுண்டைக்காய் கால்பணம், சுமைகூலி முக்காப்பணமுன்னு ஒலிவ ஊறுகாய் வாங்கத்தான் செலவாயிருச்சு. தின்னு தீர்க்கத்தானே போறோமுன்னு சமாதானப்படுத்திக்கிட்டேன்.நம்ம சந்திரன் 'நாவாய்'ன்னு அழகாச் சொன்னார். அவரையும் அதே கிணத்துலே தள்ளிட்டேன். எதுகான நாவாய்ன்னு சொல்லலை பாருங்க....அதுக்கு:-)

நம்ம நானானி, சின்ன அம்மிணி, ராஜ நடராஜன்( நீங்கதான் அந்த நட்டுவா?)வெயிலான், விவேக் எல்லாம் நாவல்பழமுன்னு சொல்லி எச்சியூற வச்சுட்டாங்க:-)

மறுபடியும் சொல்லிக்கறேன்..... நம்ம வகுப்புக் கண்மணிகளுக்கு நன்றி.

Monday, July 28, 2008

புதிருக்கு இது ஒரு க்ளூ:-)


போன புதிர் கொஞ்சம் கஷ்டமாப் போயிருச்சா?


இந்தப் படத்தைப் பாருங்க. இதை வச்சு அதைக் கண்டு பிடிக்க முயற்சி செய்யுங்க.ஆல் த பெஸ்ட்:-)

Sunday, July 27, 2008

இது என்ன?கையாலே வர்ணம் தீட்டியதாம். விலை 20 டாலர்கள்.
இது என்னவாக இருக்கலாம்?


Friday, July 25, 2008

கல்யாண வீட்டு விஷயங்கள்: நான்காம் நாள்.

இன்று முதல் கல்யாண வீட்டு நிகழ்ச்சிகள் சூடு பிடிக்க ஆரம்பிச்சது. நாலைஞ்சுவிதமான சம்பிரதாய வகைகள். இதுக்கப்புறம் அது, அதுக்கப்புறம் இன்னொண்ணுன்னு வரிசை கட்டியிருந்துச்சு.


இன்னிக்குக் காலையில் கணபதி பூஜை. சரியா எட்டரை மணிக்கே ஆரம்பிச்சது. பண்டிட் சரியான நேரத்துக்கு வந்து ஆரம்பிச்சுட்டார். மணைப்பலகையின் மீது சிகப்புப் பட்டுத் துணி விரிச்சு அதுலே ஒரு கிண்ணம் கோதுமையைச் சுத்திவரப் பரத்தினார். மூலைகள் சந்திக்கும் பகுதியிலேக் கோதுமையைக் கொஞ்சம் உள்ளெ தள்ளியதும் அழகான கரைபோட்ட டிசைனா ஆனது. இன்னொரு கிண்ணம் கோதுமை நடுவுலே குவிச்சு அதையே கணபதி உருவமாச் செஞ்சார். எல்லாத்துக்கும் நமக்கு அரிசின்னா இவுங்களுக்குக் கோதுமை:-)

அரிசியும் இருந்துச்சு ஒரு சின்னக் கிண்ணத்தில். பக்கத்திலே சிகப்புக் குங்குமம் கொஞ்சமாத் தண்ணீரில் கரைச்சு வச்சுருந்தாங்க. கிழக்குப் பார்த்தச் சுவத்துலே 'வரனும் கன்யாவும் சுகமா இருக்கட்டும்'னு குஜராத்தியில் எழுதுன பட்டுத் துணி. அதுலேயும் நடுவில் ஒரு புள்ளையார். எதிராப் போட்ட இன்னொரு மணை மாப்பிள்ளைக்கு. அவர் வந்து உக்கார்ந்ததும் குழைச்சக் குங்குமத்தைத் தொட்டு நெற்றியில் தீற்றி அதுக்கு மேலே ஒரு சிட்டிகை அரிசியை ஒட்ட வைக்கிறாங்க. கழுத்தில் ஒரு பூ மாலை.

பூ மாலைகள் விற்கும் வியாபாரம் இந்த நாட்டில் இல்லாததால், விசேஷங்களுக்கு இப்படி வீட்டுலே பூக்கும் ஒத்தை நந்தியாவட்டைப் பூக்களைத் தொடுத்து இடையிடையே ரோஜா, பச்சை இலைகள் சிலன்னு வச்சுக்கறாங்க. சும்மா இருக்கும் பெண்களுக்குப் பூமாலைகள் தயாராக்கி ஃப்ரிட்ஜில் வைப்பதுதான் ஒரு வேலை. (துல்சி பென் ஃபோட்டோ கிராஃபரா வேலை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. கோபால் பாய் ஆஃபீஸுக்கு அட்வைஸ் பண்ணப் போயிட்டார்)

வழக்கமான கணபதி பூஜைதான். சமஸ்கிரத மந்திரம். தீபாராதனை ஆனதும் எல்லாருக்கும் லாப்ஸியில் ( உடைஞ்ச கோதுமை) செஞ்சப் பிரஸாதம். சக்கரைப்பொங்கல் போல இருந்துச்சு. கடைசியில் கலசத்தில் இருக்கும் தேங்காய் வெற்றிலைபாக்கு பூ எல்லாத்தையும் மாப்பிள்ளையின் அம்மாவின் முந்தானையில் வாங்கினாங்க. சம்கிப் புடவையில் கவனமா ஒரு பெரிய கைகுட்டையை முந்தானையில்வச்சு அதுக்குள்ளே வாங்கினாங்க. அதைஅப்புறம் தனியா ஒரு மூட்டையாக் கட்டிவைச்சாங்க. ஒரு மணி நேரத்தில் பூஜை முடிஞ்சது. பண்டிட் கிளம்பிப்போனதும் இன்னும் சில சாஸ்த்திரங்கள். அலங்காரமா இருந்த (செயற்கைத்) தேங்காயை மாப்பிள்ளை கையில் கொடுத்துட்டு, ரெண்டு கோலாட்டக் குச்சி மாதிரி இருந்ததை கால் கை, தோள், தலைன்னு வச்சு எடுத்தாங்க.

'காப்டன்' மாமி (மனி பென்)தான் (இவுகளைப்பத்தி அப்புறம் சொல்றேன்)இதுக்கெல்லாம் பாட்டு ஆரம்பிக்கறது. கோரஸா எல்லாரும் சேர்ந்து பாடுனாங்க. இது எல்லாத்துக்கும் என்ன பொருள்ன்னு அப்பப்பக் கேட்டுக்கிட்டே இருந்தேன். எல்லாக் கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். "தெரியாது". முன்னோர்கள் இப்படிச் செய்வாங்க அதையே கடைப்பிடிக்கிறோம். அர்த்தம் தான் தெரியலையே தவிர எல்லோருக்கும் அபாரா ஞாபக சக்தி. ஒன்னு விடாம அனுசரிக்கிறாங்க:-))))


அடுத்த நிகழ்ச்சி ஹல்தி பூசுவது. நம்ம பக்கத்து நலங்கு மாதிரி தண்ணீரில் குழைச்ச மஞ்சள் பொடியை மாப்பிள்ளையின் முகம் கை கால்களில் பூசும் நிகழ்ச்சி. தாய் ஆரம்பிச்சுவச்சாங்க. அடுத்து ரெண்டு அக்காக்கள். அப்புறம் மற்ற உறவினர்னு ஒரு முக்கால் மணி நேரம் ஆச்சு. எல்லாரும் நெத்தியில் குங்குமம் பூசிப்பூசி முகம் முழுக்க சிகப்பாக்கி வச்சுருந்தாங்க.
(மணமகன் தாய் தந்தையுடன்)

அடுத்ததாக மாப்பிள்ளையை ஒரு நாற்காலியில் உக்காரவச்சு இனிப்புத் தருவது. சொந்தக்காரர்கள், நண்பர்கள்ன்னு எல்லாரும் ஒவ்வொரு இனிப்புப் பெட்டிகளைக் கொண்டுவந்துருந்தாங்க. டப்பாவில் இருந்து கொஞ்சம் எடுத்து மாப்பிள்ளைக்கு ஊட்டுதல். பாவம்..... நுள்ளி நுள்ளிக் கொஞ்சமாக் கொடுத்தாலும் எவ்வளோன்னு தான் திங்க முடியும். இது முடிஞ்சதும் வந்திருந்த இனிப்புகளை எல்லாருக்கும் கொண்டுவந்து நீட்டிக்கிட்டு இருக்காங்க. ஒரு அறுபது எழுபது தட்டுகள். பெயர் தெரியாத பல ரகங்கள். நான் நல்லா வெட்டுனேன்:-)

இது முடிஞ்சதும் பரபரன்னு எல்லாரும் ஓடிப்போய் கட்டிக்கிட்டு இருந்த அலங்காரப்புடவைகளை மாத்திச் சாதாரணப்புடவைகள், சல்வார் கமீஸுன்னு உடுப்பு மாத்திக்கிட்டு அடுத்த வேலைக்குத் தயாரா ஆனாங்க.

நாம் கொழுக்கட்டைக்கு மேல் மாவு கிளறுவது போல கிளறி அதைச் சின்ன உருண்டைகளா உருட்டுனாங்க. எல்லாம் குறைஞ்சது 28 இருக்கணுமாம். அரிசி மாவு, கோதுமை மாவு, மஞ்சள் பொடி சேர்த்த மாவுன்னு நாலு வகை உருண்டைகள். அரிசி மாவு உருண்டைகளை மட்டும் சின்னப்பூரியா திரட்டி நெய்யில் பொரிச்சு வெள்ளையா எடுத்தாங்க. மற்ற உருண்டைகள் கொஞ்சம் காத்தாறவிட்டுக் கொஞ்சம் உலர்ந்ததும் அதைத் தனித்தனியா (சீடை மாதிரி) பொரிக்கணுமாம். நேத்து வர்ணம் தீட்டி வச்ச மண் பானைகளில் ஒவ்வொரு வகையில் எவ்வேழுன்னு போட்டு வைக்கணுமாம். எதுக்கு இதெல்லாம்? என் கேள்விக்குப் பதில் 'க்யா மாலும். வைஸாயீ கர்னேக்கா' :-)))) எல்லாவிதமான சாஸ்த்திர சம்பிரதாயங்களும் மனி மாமி சொல்படி:-))))

சமையல்வேலைகளில் மட்டுமே மூழ்கிப்போயிறாமல், சட்னு சமையலை முடிச்சுக்கிட்டு, வண்ணவண்ணப் புடவைகளில் பளிச்னு வேசம் மாறிவந்து உற்சாகத்தோடு கலந்துக்கறது பார்க்க ரொம்ப நல்லா இருக்கு. சோம்பல், சோர்வு எல்லாம் மருந்துக்கும் இல்லை. அடிஷனல் அட்ராக்ஷனா ஒவ்வொரு ரகமான ப்ளவுஸ்கள் விண்டோஸ் & டோர்ஸ்ன்னு கண்ணுக்கும் விருந்து.

மாலையில் தேங்காய் மாற்றும் வைபவம். சம்கி எல்லாம் ஒட்டிவச்சுருந்த ஒரு அலங்காரத் தேங்காய், இன்னும் மங்கலப்பொருட்கள் எல்லாம் வச்ச ஒரு தட்டு மாப்பிள்ளையின் பக்கத்தில் இருந்துச்சு. எல்லா மங்கல நிகழ்ச்சிகளையும் தொடங்கி வைப்பது பெற்ற தாய்க்கு இருக்கும் உரிமையாம். மணமகனின் தாய் முதலில், பையன் நெற்றியில் ஈரக் குங்குமம் தடவி அதன் மேல் அரிசியை ஒட்டவச்சாங்க. அலங்காரத் தேங்காயை மாப்பிள்ளை கையில் கொடுத்தாங்க. சாதாரணத் தேங்காயை எடுத்து அதுக்கு கொஞ்சம் குங்குமம் தடவி, வலது கையில் பிடிச்சுக்கிட்டாங்க. மாப்பிள்ளையின் கையில் இருக்கும் அலங்காரத் தேங்காயை இடது கையில் பிடிச்சு எடுத்துக்கிட்டு வலது கையில் இருக்கும் தேங்காயை அவர் கைகளில் வச்சாங்க. ஒரு விநாடியில் அதை எடுத்து இது, இதை எடுத்து அதுன்னு நாலுமுறை ரீப்ளேஸ் ஆச்சு. அவ்ளோதான். சாதாரணத் தேங்காய் கீழே இருக்கும் தாம்பாளத்தட்டுக்கு வந்துருச்சு.தேங்காய் மாற்றம் ( பெரியம்மா, அக்கா, இன்னும் சிலர்)

அம்மாவுக்கு அப்புறம் அக்காள், தங்கை, மற்ற உறவினர், நண்பர்கள்ன்னு ஒவ்வொருவரா வந்து மாப்பிள்ளை கையில்....... தேங்காய் கை மாறிக்கிட்டே இருக்கு. எல்லாரும் தேங்காய் வீட்டில் இருந்தே கொண்டு வந்துருக்காங்க. கொண்டுவராதவங்க.... அங்கே ஒரு தட்டில் கொஞ்சம் காசைப்போட்டுட்டு, அங்கே இருக்கும் தேங்காயை எடுத்து சாங்கியம் செய்யறாங்க. யார் தேங்காயை மாத்துறாங்களோ, அவுங்க யாரு என்னன்ற விவரம் நம்ம மனி மாமி & க்ரூப்பால் பாட்டா வந்துக்கிட்டு இருக்கு. மணமகனுக்கு யார் யார் என்ன உறவுன்னு தெரியவருது. நமக்கும்தான்:-)

அடுத்து 'கர்பா' ன்னு சொல்லும் கும்மி நிகழ்ச்சி. நாங்க வெளியே பந்தலுக்கு வரப்போறொமுன்னதும் ஆண்கள் எல்லாம் அடிச்சுப்புடிச்சு எழுந்து குடி மேசைகளை அப்படியேப் புல் வெளியில் லாகவமா நகர்த்திக்கிட்டாங்க. ஒரு சொட்டும் தளும்பாமல் இழுத்ததைப் பார்க்கணுமே:-)))கர்பா டான்ஸ்

மனி மாமி குரலெடுக்கப் பாட்டு ஆரம்பமாச்சு. ஒரு 20 நிமிசமானதும், தாண்டியா என்னும் கோலாட்டம். ஒரு பெண்மணி மட்டும் ரொம்ப சீரியஸாக் கவனமா அடிபிறளாமல் ஆடுனாங்க. சமீபத்தில் இந்தியாவில் இருந்து வந்தவங்களாம். இந்த நடனத்தில் ஆண்களும் கலந்துக்கிட்டு ஒரே ஆட்டம். தீபக் பையா சுழண்டு சுழண்டு ஆடினார். தினமும் யோகா செய்கிறார். பாடி நல்லா ஃபிட்டா இருக்கு:-)

இரவு விருந்தில் செம்மீன்கள் சிறப்புவகை. பகல் விருந்தில் பால் பாயாஸம், இரவில் மாம்பழ ஜூஸ் இப்படிக் கூடுதல் சுவை.

உங்களுக்காக சில நிமிச வீடியோக்கள் இந்தப் பதிவில் யூ ட்யூபின் உதவியோடு இணைச்சிருக்கேன்.

நாட்டாமை.... தீர்ப்பைச் சொல்லு(ங்க)

இன்றைக்கான முதல் ஐயம்:

கலப்பை ஓட்டுனா...... சரி..... கலப்பையை வூட்டுக்குளே கொணாந்து வச்சுக்கிட்டாக் கணினி மெதுவா நடக்குமா?

வலை உலகத் 'தோழி'யின் ஐயம் தீர்ப்பவர்களுக்கு ஒரு பத்துப் பின்னூட்டம்
பரிசு அளிக்கப்படும்(தோழியின் கையால்)

Thursday, July 24, 2008

இடது காலை எடுத்து வச்சு வா வா..... (ஃபிஜிப் பயணம் பகுதி 4)

நீள நீள நடை பாதைகளுடன் செடியும் கொடியுமா வளைஞ்சு நெளிஞ்சு, குடிசை போல மேற் கூரையுடன் அங்கங்கே பெர்ண் மரச்சிற்பங்களுடன் ஸ்பூக்கியா இருக்கு ஃபர்ஸ்ட் லேண்டிங்.சுமார் 3500 வருசங்களுக்கு முன்பு ஒரு சிறு படகில் மேலினீசிய( Melanesian) இனத்தைச் சேர்ந்தவர்கள் வந்த படகு ஒரு பவளப்பாறையில் கரைதட்டி நின்ன இடம் இது(வாம்). கோபமாப் படகில் இருந்து இடது காலை வச்சு இறங்கியவர்தான் இந்தத் தீவின் முதல் மனிதர்.
('வலது காலை எடுத்து வச்சு வா வா'ன்னு யாரும் பாடலையோ?)

இந்த இடத்தைச் சரியாக் கண்டுபிடிச்சு(???)பத்து வருசத்துக்கு முன்னாலே ஃபர்ஸ்ட் லேண்டிங் என்ற பெயரில் ரிஸார்ட் கட்டி, இப்ப வியாபாரம் கொழிக்குது. பெயரை நியாயப்படுத்தணுமுன்னு ஒரு மனுசனின் இடது பாதம் போல செயற்கையா ஒரு தீவு உண்டாக்கி ( இருக்கும் தீவுகள் காணாதுன்னு இதுவேறயா?) அலங்கரிச்சு அதுக்குப்போக ஒரு பாலம் போட்டு வச்சுருக்கு. இதுகூட இப்ப வந்ததுதான்.
இந்த இடத்துக்கு வூடா பாய்ண்ட்ன்னு பெயர். பெரிய பெரிய ராட்சத அளவில் டேங்க் கட்டி, வெளியே இருந்து வரும் எண்ணெய்க் கப்பல்களில் இருந்து பெட்ரோல் & டீஸல்களை ஸ்டோர் செஞ்சுக்கும் இடம். இங்கே சுத்திகரிப்புக்கு ஏற்பாடு இல்லாததால் ரெடி டு யூஸ் என்ற சுத்திகரிச்ச எண்ணெய்கள். வூடா பாயிண்டில்(Vuda point) அஞ்சாறு ராணுவ வீரர்கள் இங்கிட்டும் அங்கிட்டுமா நடக்கறாங்க. நாட்டுக்கே எண்ணெய் இருக்கும் இடமாச்சே...யாராவது எதாவது செஞ்சுட்டா?
இந்தப் பயணத்தில் கவனிச்சதுலே முதலில் மனசில் இருப்பது போலீஸ் செக் பாய்ண்ட்ஸ். ரெண்டு மூணு மைலுக்கு ஒன்னுன்னு எக்கசக்கமா இருக்கு. முன்னே இப்படியெல்லாம் இல்லவே இல்லை. ஊருக்கு ஒன்னு இருக்கும். நாட்டில் இப்ப வன்முறைகள் அதிகமாகிக்கிட்டு இருக்குபோல.
எல்லா இடத்திலும் காவல்துறையில் வேலையில் இருப்பவர்கள் ஃபிஜியன்கள் மட்டுமே. கடைத்தெருவிலும் (எல்லா ஊரிலும்) கடையின் முன்பக்கம் இருக்கும் கண்ணாடி ஜன்னல்கள், கதவுகள் எல்லாம் கம்பி வலை அடிச்சுப் பாதுகாப்புக்கான க்ரில்ஸ் போட்டு வச்சுருக்கு. ஷோ கேஸில் என்ன இருக்குன்னுக்கூடத் தெரியலை.வீடுகளுக்கும் செக்யூரிட்டி, அலாரம் சர்வீஸ் கம்பெனிகள் பாதுகாப்பு. நாங்க தங்கி இருந்த வீடு புத்தம் புதுசு. கட்டி ஒரு மாசம்கூட ஆகலை. இன்னும் சாமான்கள் எல்லாம் எடுத்துக்கூட வைக்காமல் பொட்டிகளிலேயே கிடக்கு. அதுக்குள்ளே கல்யாணம் வந்துட்டதால் உறவினர்களை எல்லா இடத்திலும் போட்டுவச்சுட்டாங்க.


மொபைல் ஃபோனில் இணைச்சு வச்சுருக்காங்களாம் செக்யூரிட்டி சம்பந்தமுள்ளவைகளை. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கம் எல்லாம். அந்த வீட்டுக்குழந்தை ( ஒன்னரை வயசுப் பையன்) எப்பவும் ரிமோட் வச்சுக்கிட்டு விளையாட்டா கேட்டைத் திறக்கறதும் மூடறதுமா இருக்கான். இதுலே அவனோட அப்பாவுக்குப் பெருமை கலந்த அங்கலாய்ப்பு. 'ரிமோட்டை ஹாக் செய்வது ஆம்புளைங்க தொழிலாச்சே. வேற எப்படி இருப்பான்?' ன்னு சொன்னதும் கோபாலுக்குச் சிரிப்புத் தாங்கலை. கோபால் வீட்டுக்கு வந்ததும் முதல் வேலை 'எல்லா' ரிமோட்டையும் வாரி மடியில் வச்சுக்கிட்டுத்தான் சோஃபாவில் உட்காருவார்:-)))) டிவி ரிமோட்டுன்னு இல்லை. எதா இருந்தாலும் தன் கையில் வச்சுக்கணும். பார்த்துக்கிட்டு இருக்கேன், எங்கியாவது சில டம்மி ரிமோட்ஸ் கிடைச்சா வாங்கிவந்து இந்தக் கூட்டத்தில் வச்சுவிடணும்.


வெள்ளை மணற்பரப்பில் இருக்கைகள், சன் பாத் எடுக்கும் சாய்வு நாற்காலிகள் எல்லாம் அங்கங்கே இருக்கு. கடலில் டைடு குறைவா இருக்கும்போது இந்தப் பவளப்பாறைகள் வரை நடந்து போய்ப் பார்க்கலாம். அங்கங்கே தேங்கி நிற்கும் தண்ணீரில் நீல நிற மீன்களும், நீல நிற நட்சத்திர மீன்களும் உக்கார்ந்து ஓய்வெடுத்துக்கிட்டு இருக்குதுங்க.
படம்...... ரிஸார்ட்டில் தங்குவதற்கு புரேன்னு சொல்லும் குடில்கள் கட்டி விட்டுருக்காங்க. புல் கூரையோடு அமர்க்களமா இருக்கு. வார வாடகை. ஆனால் ஸ்பெஷலில் அஞ்சு நாள் கட்டணத்துக்கு ஏழு நாள் தங்கிக்கலாம்.
ட்ராப்பிக்கல் மரங்களும் பூச்செடிகளுமா ஜிலுஜிலுன்னு வெய்யிலே தெரியாமல் இருக்கு.
இங்கேயே ரெஸிடன்ஷியல் ப்ராப்பர்ட்டி விக்கறாங்களாம். வேணுமான்னு கேட்டு விளம்பரம் வச்சுருக்காங்க. ரிட்டயர் ஆன வெள்ளைக்காரர்களுக்கு ஏற்ற இடம். நமக்குச் சரிப்படாது:-)))) மகள் & கோவைக் கூப்பிட்டுக்கிட்டு நா(ன்)டி டவுனுக்குக் கிளம்பினோம். 25/30 நிமிச ட்ரைவ்.


மகளுக்கும் நண்பருக்கும் கல்யாணத்துக்குப் போட்டுக்க இந்திய வகை ஆடைகள் வேணுமாம். அவுங்களைக் கூட்டிக்கிட்டு நா(ன்)டி டவுனுக்குப் போனோம். நாலைஞ்சு இடத்தில் பார்த்துட்டும் ஒன்னும் சரிவரலை. நேத்துப் பார்த்த நெருங்கிய தோழியின் கடையில் வாங்கி அவுங்களுக்கு நஷ்டம் வைக்கக்கூடாதுன்னு தீர்மானிச்சிருந்தேன். கடைசியில் அலுத்துப்போய் ஒரு கடையில் விசாரிச்சப்ப, எதிர்கடையில் இருக்கும் பாருங்கன்னு கை காமிச்சாங்க. அது நம்ம தோழியின் கடை:-) கடையின் பெயர் ரூபம்.


மகளைப் பார்த்துத் தோழிக்கு ஆனந்தம். முந்தி அங்கிருந்தப்ப வாராவாரம் ஞாயிறு அவுங்க வீட்டிலேதான். அப்போ மகள் மலையாளம்கூடக் கொஞ்சம் பேசுவாள். நான் கறாராச் சொன்னேன்....காசு வாங்கிக்கிட்டாத்தான் துணி எடுப்பாள்ன்னு:-)பிடிச்சமாதிரி கிடைச்சது ரெண்டு பேருக்கும். இளசுகளை மத்த ஷாப்பிங் செஞ்சுச்சுத்திப் பார்க்க அனுப்பிட்டு நாங்கள் பழங்கதையில் மூழ்கினோம். தோழியின் கணவர் இங்கே வாத்தியார் வேலைக்கு வந்தவர், 35 வருசங்களுக்கு முன்னே. பள்ளிக்கூடங்கள் ஆரம்பிச்சு உயர்நிலைப்பள்ளி லெவலுக்கு வந்தவுடன், இந்தியாவில் விளம்பரம் கொடுத்துப் பட்டதாரி ஆசிரியர்கள் வர ஆரம்பிச்சு இருந்த காலக்கட்டம். ஒப்பந்த முறையில் 3 வருசம் வந்துட்டு அப்புறம் வேணுமுன்னா ஒவ்வொரு மூணு வருசமா ஒர்க்கிங் விஸா வாங்கிக்கலாம். நாங்க இங்கே 6 வருசம் இருந்தது இந்தக் கணக்குதான்:-) என்ன ஒன்னு மறுபாதிக்கு ஒர்க்கிங் விஸா கிடையாது. சிட்டிஸன்ஷிப் கிடைச்சால் (9 வருசத்துக்குப்பிறகு) ரெண்டுபேரும் வேலைக்குப் போகலாம். வியாபாரம் தொடங்கலாம்.....தோழி ஒரு கடையை ஆரம்பிச்சு நடத்துனது இப்படித்தான். கால் நூற்றாண்டு ஆகிருச்சு. இந்தியாவில் மட்டுமே இருந்து ரெடிமேட் உடைகள் வரவழைச்சு விக்கறாங்க. ஒரே மகள். கல்யாணம் முடிச்சு இப்பக் கானடாவில் இருக்காள்.என் மகளைத் தூக்கிவச்சுக் கொஞ்சும் அன்பான அக்கா:-)

தோழிக்கு ஊரோடு போயிறலாமுன்னு சிலவருஷமா எண்ணம். ஊரில் ஒரு வீடு கட்டி முடிச்சு, அதை வாடகைக்கு விட்டுட்டு வந்து நாலு மாசமாச்சாம். திரும்பிப்போனால் வசிக்க ஒரு இடம் வேணுமே..... அடுத்தவருசக் கடைசியில் போகும்விதமா ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்காங்க. பிசினஸை விக்கணும். முழுக்க முழுக்க குஜராத்திகள் நடத்தும் சாம்ராஜ்யத்தில் 25 வருசம் தாக்குப்பிடிச்ச தோழிக்கு உண்மையில் ஒரு சபாஷ் போட்டே ஆகணும். வருசாவருசம் வெள்ளம் வரும் நாடாக இருக்குல்லையா அதனால் வெள்ளத்துக்கான காப்பீடு கிடையாது. ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மட்டும் வெள்ளக் காப்பீடு தரும். அதுக்குப் பிரிமியம் ரொம்ப அதிகம். எல்லோராலும் கொடுத்துக் கட்டுப்படி ஆகாது.என்னதான் கவனிச்சுக் கடையில் துணிகளை அடுக்கி வச்சாலும் புயல் எச்சரிக்கை வானொலியில் வந்தால் வயித்துக் கலக்கம்தான். இடுப்புவரை நிற்கும் தண்ணீரில் மெதுவா நடந்து வந்து கடையைத் திறந்து(??) ஒதுக்க முடிஞ்சதை ஒதுக்குவாங்களாம். நல்லவேளையா வீடு கொஞ்சம் பக்கத்தில் (அடுத்த தெருவில்) இருப்பதால் சமாளிக்க முடியுது.இதுக்காகவே பலர் அந்தக் காலத்திலேயே கடைகளின் மாடியிலே வீடு ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்காங்க. மழை ஆரம்பிச்சவுடன், அப்பப்போய்ப் பார்த்து சாமான்களை ஒவ்வொரு ஷெல்ஃபாக மேலே ஏத்திக்கிட்டே இருப்பாங்களாம்.இவ்வளவுதூரம் வந்தமே...மகளுக்கும் நண்பருக்கும் கோயிலைக் காட்டிட்டுப் போகலாமுன்னு கிளம்பினோம். மகளுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை.அவள் ஒரு Atheist. நண்பருக்கு? சின்னப்பையனா இருந்தப்ப எப்பவாவது அப்பா அம்மாவோடு சர்ச்சுக்குப் போவாராம். மத்தபடி அவரோட கடவுள் நம்பிக்கையைப் பத்தி நான் ஒன்னும் கேட்டுக்கலை.


கோவிலில் படியேறும் சமயம், கோயில் அலுவலில் இருக்கும் ஒருவர், மகளிடம் 'உள்ளே போக அனுமதி இல்லை'ன்னு சொன்னார். சரியான உடை இல்லையாம்.( பின்னே? ஹாலிடேவாசியா சின்ன ஷார்ட்ஸ் போட்டுருந்தாள். அந்தந்த இடங்களுக்கான மரியாதை தரணுமா இல்லையா?நமக்குத்தான் துப்பட்டா இருக்கே.... அதை இடுப்பில் சுலு (ஃபிஜியன் உடை. சராங், லுங்கி மாதிரிக் கட்டுவது) போல இடுப்பில் கட்டிக்கோன்னேன். வேணாமாம். 'நான் வெளியே இருக்கும் இருக்கையில் உக்கார்ந்துக்கறேன். நீங்களே போங்க'ன்னுட்டாள்.ஒவ்வொரு சந்நிதியாக் காமிச்சு சுருக்கமா இது எலிஃபெண்ட் காட், இது அவரோட அம்மா, இது அப்பா, இது மாமின்னு சொல்லி மூலவரை மட்டும் யங்கஸ்ட் சன் ஆஃப் த ஃபேமிலின்னு சொன்னேன்:-) எல்லாமே ஒரு ஃபேமிலி அஃபேர் ன்னு நினைச்சுக்கிட்டாரோ என்னவோ? நிமிஷத்துலே புரியும் புராணமா நம்மது?
நண்பருக்கு இளநீர், கரும்பு எல்லாம் ருசி பார்க்கணுமாம். நம்ம மகள் நம்மூரில், சிங்கையில்ன்னு இதையெல்லாம் ருசிச்சதைச் சொல்லி ஆசையைக் கிளப்பி விட்டுருக்காள்போல. மார்கெட்டில் இருக்கான்னு போய்ப் பார்த்தோம். பலாப்பழம் மாதிரி கண்ணுலே ஆப்ட்டது. ஓடுனேன். நம்ம அதிருஷ்டம் பாருங்க. சமைக்கும் பலாப்பிஞ்சுகளாம். இன்னும் பழம் சீசன் வரலையாம். தேங்காய்கள் மட்டும் வழக்கம்போல ஏழுஎட்டு வச்சுக் கூறுகட்டி இருந்துச்சு. ரெண்டு டாலர். விலைவாசி ஏறுதுதான். நியாயம்தானே? டாரோ கிழங்குகள் நாலைஞ்சு வச்சுக் கூறு கட்டி விக்கிறாங்க. இதையெல்லாம் விற்பவர்கள் நேட்டிவ் ஃபிஜியன்கள்தான்.
இளநீர் எங்கேயும் இல்லை.


ஆமாம். இவ்வளோத் தென்னைமரங்கள் இருக்கு. வெய்யிலும் பிச்சு வாங்குது. இளநீர் வியாபாரம் நடந்தா எல்லோருக்கும் எவ்வளோ நல்லது. ஏன் யாருமே இதைப்பத்தி யோசிக்கலை. தாய்லாந்து இளநீர் எப்படி சிங்கையில் சக்கைப்போடு போடுது பார்த்தீங்கதானே? எங்கியாவது ஃபிஜியன் கோரோ ( குடியிருப்பு கிராமம்)வில் கேட்டுப் பார்க்கணும்.ரோட்டோரமா ரெண்டு பலகையைப்போட்டு இப்படி கோரோ அருகில்,அப்படியே போய்க்கடலில் பிடிச்சாந்து மீன், நண்டு எல்லாம் வித்துக்கிட்டு இருப்பாங்க. நண்டுகளைக் கைகால் நீட்டவிடாமத் தென்ன ஓலையில் கட்டி வச்சுருப்பாங்க. மக்கள் வண்டியை நிறுத்தி பேரம் பேசி வாங்குவாங்க. யாரும் வாங்கலைன்னா? அன்னிக்கு அவுங்க அடுப்புலே வேகும், ராச்சாப்பாடுக்கு.இதே போலத்தான் ஏராளமாக் கரும்பு விளையும் நாட்டிலேத் திங்க ஒரு கரும்பு கிடைக்கறதில்லை. விளையும் கரும்புகள் எல்லாம் ஒப்பந்தப்படி ஆலைக்குத்தான் போகணும். மார்கெட்டில் விற்பனை செய்யத் தடா. நாங்கள் அங்கிருந்தப்பவும் பொங்கல் பண்டிகைக்கு கரும்பெல்லாம் பூஜையில் வைப்பதில்லை. வீட்டு எதிரில் இருக்கும் கரும்புத்தோட்டத்தைப் பார்த்துக்கிட்டே தீபாராதனை செய்வதுதான்.அவுங்களை ஃபர்ஸ்ட் லேண்டிங்கில் விட்டுட்டு நாங்க கலியாண வீட்டுக்குப் போனோம்.பதிவின் நீளம் கருதி இனிமேல் வரும் ஒவ்வொரு பகுதியும் சுற்றுலா & கல்யாண வீடுன்னு பிரிச்சுப் போடப்போறேன்:-)
அடுத்தடுத்த நாட்களில் வெளிவரலாம்!


Tuesday, July 22, 2008

டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் பகுதி 2..

பதிவுலகில் ஒரே பூண்டு வாசனை வருதேன்னு பார்த்தால் நம்ம புதுகைத் தென்றல் பூண்டு ரசம், பூண்டு குழம்புன்னு தாளிச்சுக்கிட்டு இருக்காங்க.
போனவாரம் சனிக்கிழமை கோயிலுக்குப் போயிட்டு வரும்போது அப்படியே சூப்பர் மார்கெட் விசிட். பால் வாங்க வந்தேன். நேராப் போனமா பாலை எடுத்தமா.....ஊஹூம்.....
ஒரு சுத்துச் சுத்திட்டுப்போகணும், எல்லாப் பகுதிகளுக்கும். ஒவ்வொன்னும் ஒவ்வொரு கிரகத்துக்குன்னு ஒதுக்கி இருக்குன்னு வச்சுக்கலாம். அப்ப நவகிரகம் சுத்துன பலன் வந்துருதுல்லே?ஒரு பிரிவில் பூண்டு போட்ட 'வலைப் பை' 450 கிராம் 59 சதம். இது சீனாவிலே இருந்து இறக்குமதி. உள்ளூர் தினசரியில் ஒரு செய்தி வந்துருந்துச்சு. இதைச் சமையலுக்குப் பயன்படுத்தலாமாம். ஆனால் நட்டு முளைக்க விடக்கூடாதாம். ஏனாம்? அதுலே இங்கே நம்ம பூமிக்குச் சரிப்படாத ஏதோ ஒன்னு அவுங்க பயன்படுத்தும் ரசாயன உரத்தில் இருக்காம். அப்படியா? அப்ப எதுக்கு நாட்டுக்குள்ளே விட்டீங்க? ஆகாதுன்னா, 'இறக்குமதி வேணாம். செய்யக்கூடாது' ன்னு சொல்லி இருக்கலாமே.... ஒரு பக்கம் சீனாவோடு ஃப்ரீ ட்ரேடுன்னு ஒப்பந்தம் போட்டுக்கிட்டு.....என்னமோ கதை....நமக்கும் வருசத்துக்குன்னு பார்த்தால் 3 கிலோ பூண்டு வேண்டி இருக்கு. 5 பை எடுத்துக்கிட்டேன். அப்புறம் இன்னும் சில சாமான்களை வாங்கிக்கிட்டுச் செக்கவுட் வந்து ரசீது போட்டு எல்லாம் ஆச்சு. வழக்கம்போல கடையை விட்டுக் கிளம்புமுன் ரசீதைச் சரி பார்த்தால்......அடப்பாவி இப்படிக் கொள்ளை அடிச்சுட்டாங்களே..... 59க்குப் பதிலா 69ன்னு கணக்குப் போட்டுருக்கு.இங்கே எல்லாக்கடைகளிலும் இப்படியான விசயங்களுக்குன்னே ஒரு கவுண்ட்டர் இருக்கும். அங்கே இருந்தவரிடம் இப்படி கொள்ளையடிச்சுட்டாங்கன்னு சொன்னேன்:-) அவர் போய் பூண்டு இருந்த பகுதியில் விலை பார்த்துட்டு வந்து 3.50 டாலர் கொடுத்தார். 50 சதம்தானே தரணும். எதுக்கு இவ்வளவு கொடுத்தேன்னு கேட்டேன்.


இது கடையின் கொள்கையாம். தவறா பில் போட்டுட்டா அந்தப் பொருளுக்கான முழுக்காசையும் கொடுத்துருவாங்களாம். எப்ப இருந்து இந்தப் புதுக்கொள்கைன்னு கேட்டால்.... இப்ப புது மேனேஜ்மெண்ட் பிஸினெசை வாங்கி இருக்காம் . அப்ப இருந்துதான் இந்தக் கொள்கையுமாம்.
நல்லா இருப்பான்னு வாழ்த்திட்டு வந்தேன். கடைசியில் பால் வாங்க விட்டுப்போச்சு(-:இப்ப அடுத்த சவால். எல்லாத்தையும் உரிக்கணும். போன டிப்ஸுலே சொன்னதுபோல ஹாட் ஏர் அவன்லே போட்டுட்டுத் தமிழ்மணம் பார்த்துக்கிட்டு இருந்தேன். பத்து நிமிசத்துக்குப் பதிலா ** நிமிசம் போட்டுட்டேன் போல இருக்கு. oops.......நானானியை நினைவுகூறும் விதம் 'சுட்ட பூண்டு' :-)))))
இருக்கட்டும். எதுக்காவது போட்டுத் தீர்க்கலாம். நல்லவேளை ஒரு பொதி மட்டும் அவன்லே போட்டுருந்தேன். வீடு பூராவும் பூண்டு மணம் அப்படியேச் சுத்திச்சுத்தியடிக்குது........ ஜன்னல்களைத் திறந்துவச்சும் பயன் இல்லை.
சரி. இருந்துட்டுப்போகட்டும்.... பேய் வராதுன்னு நினைச்சுக்கிட்டேன். கோபால் வேற ஊரில் இல்லை.
அதுக்குப்பிறகு திடீர்னு நினைவுக்கு வருது பூண்டு உரிக்கன்னு ஒரு சாதனம் வாங்கி வச்சது. அது கிடைச்சப்ப வீட்டில் உரிக்காத பூண்டு இல்லை. கடையில் ஒன்னேஒன்னு வாங்கலாமுன்னா ஒன்னரை வெள்ளி கொடுக்கணும். இருந்துட்டுப்போகுது, பூண்டு வாங்காமலாப் போயிடுவோம்.அப்பப் பார்த்துக்கலாமுன்னு எடுத்துவச்சதை மறந்தே போயிருக்கேன். இது சரியா உரிக்கலைன்னா? அதான் ஒரு வருசத்துக்கு வாரண்ட்டி இருக்கே. திருப்பிக் கொடுத்தால் ஆச்சு.இது ஒர் சின்ன மிக்ஸி மாதிரிதான் இருக்கு. உள்ளே ஒரு சிலிகான் பலூன். பூண்டைப் பற்களாகப் பிரிச்சு அதுலே போட்டு 10 விநாடி ஓடவிட்டால் போதுமாம். அந்த பலூனை எடுத்துட்டு, கூடவே இணைப்பாக வந்த ஒரு ப்ளேடு மாட்டி, ஓட்டினால் உரிச்சதை அரைச்சும் கொடுத்துரும். வெங்காயம் பச்சை மிளகாய், தக்காளி என்று எல்லா ஈர மசாலாவும் அரைச்சு எடுக்கலாம். ஆனால் தேங்காய் அரைக்க முடியாது. கொஞ்சம் கொரகொரன்னு அரைச்சு எடுக்கணுமுன்னா இதுலே அரைச்சுக்கலாம்.


அவ்வளவா நம்பிக்கை இல்லாமல் பூண்டு எடுத்து போட்டு உரிக்கவிட்டேன்.
அட! நிஜமாவே உரிச்சுக்கொடுத்துருச்சு. வெளியில் எடுத்து ஒரு தட்டில் கொட்டித் தோல் உரிஞ்சதை எடுத்துக்கலாம்.

வெற்றி வெற்றி வெற்றி.Bravetti Garlic peelar. விலை 30 டாலர். கூடுதலுன்னு நினைச்சா........'கிச்சன் திங்ஸ்' விற்கும் ஸ்பெஷாலிட்டி ஷாப்பில் வெறும் சிலிகான் பலூன் மட்டும் (சின்னதா வாய் இருக்கு) $7.95க்குக் கிடைக்குது. பூண்டை அதுலே போட்டுக் கையால் உருட்டுனாப் போதுமாம். எனெக்கென்னமோ இதுக்குப்போய் எட்டு டாலரான்னு....... கொஞ்ச நாள் பொறுக்கலாம். எப்படியும் சீனர்கள் செஞ்சு அனுப்பத்தான் போறாங்க. சாதாரணக் கடைகளில் ச்சீப்படப்போகுது 2 டாலருக்கு. அப்ப வாங்கிக்கலாம். அங்கே ஸேல் வரும்போது இதுவே ஒரு டாலருக்குக் கிடைக்குமே:-))))


நெல்லுக்குத்த, நீரிறைக்க மாவரைக்க மெசினு


அல்லும்பகலும் ஆக்கிஎடுக்க அடுப்பூதும் மெசினு


இந்த வரிசையில்............


பூண்டு குழம்பு வைக்க ஒரு பூண்டுரிக்கும் மெசினு....
'விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி' பாட்டு அடிக்கடி ஞாபகம் வருது.
கொசுறு டிப்ஸ்:
'சம்பவங்களை' அப்பப்ப நடக்கும்போதே படம் மட்டும் புடிச்சுவச்சுக்குங்க. அப்புறமா நேரம் (வரும்)கிடைக்கும் போது பதிவு எழுதிக்கலாம்:-)