Friday, October 31, 2008

வெளிநாட்டுப் படம் பார்த்தேன்.

ஆங்கிலத்துலே சப் டைட்டில்ஸ் கூட இருந்துச்சு. ஆங்கிலத்துலே பேசும் வரிகளுக்கும் கூட!

இங்கிலாந்து, அமெரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இப்படி நாலு நாட்டையும் கலந்து காட்டுன படம். என் வழக்கத்துக்கு மாறாகக் கொஞ்சம் கதையையும் விஸ்தரிக்கவா?


ப்ரிட்டனில் இருக்கும் ஒரு இஸ்லாமியரின் மகள் மேரி யூனியில் படிக்கிறாள். பாய் ஃப்ரெண்ட் உண்டு. மகளுடைய காதல் விவகாரம் இன்னொருத்தர் சொல்லித்தான் அப்பாவுக்குத் தெரியுது. ( இது வழக்கம்தானே?)
அவர் வந்து 'உன் பொண்ணைச் சரியா வளர்க்கலை. இது நம்மைப்போன்ற இஸ்லாமியர்களுக்கு மத விரோதமானது'ன்னு மூட்டி விட்டுடறார்.
மேரிக்கு அம்மா இல்லை. இறந்துட்டாங்க. அவுங்க ஒரு வெள்ளைக்காரப் பெண்.

இந்த அப்பா, இப்ப ஒரு வெள்ளைக்காரப் பெண்ணைக் கல்யாணம் செஞ்சுக்காம 'லிவிங் டு கெதர்' உறவுலே இருக்கார். அந்தம்மா சொல்லுது, பொண்ணோட பாய் ஃப்ரெண்ட் நல்ல பையன். மகள் அவனைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டா என்ன தப்பு? ன்னு.

இங்கே இருக்கும் மற்ற இஸ்லாமியர் சமூகம் தன்னை இழிவாப் பேசுமுன்னு சொல்லி அப்பா சண்டை போடறார். மகள் கிட்டே, அவளோட விருப்பப்படியே கல்யாணம் அந்த வெள்ளைக்காரப்பையன் (பெயர் Dave)கூட நடக்கும் அதுக்கு முன்னே ஒரு பத்து நாள் ஊருக்குப்போய் தன்னுடைய அம்மா, அண்ணன் குடும்பத்தைப் பார்த்துட்டு வரலாமுன்னு மகளைக் கூட்டிக்கிட்டுப் பாகிஸ்தான் போறார். (கொஞ்சம் கதையை யூகிக்க முடியுதா? ம்ம்ம்ம்ம்ம்....அதேதான்)

அண்ணனுக்கு ரெண்டு பையன்கள். இசையில் ஈடுபாடு உள்ளவர்கள். நல்ல வசதியுள்ள குடும்பம். கொஞ்சம் விசால அறிவு படைத்த அண்ணனும் அண்ணியும். பாட்டி மட்டும் பழைய சம்பிரதாயங்களில் ஊறியவர். பெரிய பையன் மன்ஸூருக்கு அமெரிக்காவில் போய் ம்யூஸிக் படிக்க விருப்பம். சின்னவன், மசூதியில் ஒரு முல்லாவைச் சந்திக்க நேரிடுகிறது. அவர் 'சங்கீதம் பாடுவது, படிப்பது எல்லாம் அல்லாவுக்குப் பிரியம் இல்லாத விஷயம். இன்னும் சரியான முஸல்மானாக இருப்பது, அது இது'ன்னு சொல்லி அவனுக்கு ஒருவித மூளைச்சலவைச் செஞ்சு வைக்கிறார். இதெல்லாம் மனசுக்குள்ளே போய் ஒரு குழப்பமான நிலையில் இருக்கும் சின்னவன் கடவுளுக்காகவே இனி வாழணுமுன்னு முடிவு செஞ்சுக்கிட்டார். தினமும் மசூதியில் ஒலிபெருக்கியில் பாங்கு விளிப்பது முதல் எல்லாம் செஞ்சு முல்லா சொன்ன பேச்சுக்கு அடிமையா இருக்கார். இவரோட குரல் அருமையை சிலாகிச்சுப் பேசும் முல்லா, இந்தக் குரல் அல்லாவுக்கு மட்டுமே சேவை செய்யணுமுன்னும் சொல்றார்.

மகளைக் கூட்டிவந்த லண்டன்கார அப்பா, தன்னுடைய அண்ணன், அம்மாவிடம் வந்த நோக்கத்தைச் சொல்லும்போது அவருடைய அண்ணனும் அண்ணியும் மட்டும் பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக் கல்யாணம் பண்ணவே கூடாதுன்னு எதிர்ப்புக் காட்டுறாங்க. இதுவிசயமா, பெண்ணின் சின்னம்மா என்ன சொல்றாங்க? அவுங்களை ஏன் கூட்டிவரலைன்னு அண்ணன் கேக்கும்போது, 'அவளை நான் கல்யாணம் செஞ்சுக்கலை. முதல் மனைவி விவாகரத்து வாங்குனப்ப பாதி சொத்தை அவளுக்குக் கொடுக்கணுமுன்னு தீர்ப்பு ஆகிருச்சு. எனெக்கென்ன பைத்தியமா? நாளைக்கு இவளும் இப்படிச் செஞ்சுட்டா? அதான் கட்டாமச் சேர்ந்து வாழ்க்கை நடத்தறேன். என் பொண்ணு விஷயத்துலே அவளுக்கு என்ன உரிமை இருக்கு ஏதும் சொல்ல? ன்னதும் அண்ணன் இதெல்லாம் சரியில்லைன்னு தலையை ஆட்டுறார். வீட்டுலே நடக்கும் இந்த விசயத்தை முல்லாவிடம் சொல்லிச் சிக்கலைத் தீர்க்கும் உபாயம் எதாவது இருக்கான்னு சின்னவன் கேட்க, அதுக்கு அவர் சொன்னவழி.......

லண்டன்காரர் மகளுடனும், சின்னவனுடனும், முல்லா அனுப்பிய இன்னொரு ஆள் கூடவும் சேர்ந்து பாகிஸ்தான் எல்லையைக் கடந்து ஆஃப்கானிஸ்தான் போய்ச் சேர்றாங்க. எங்கே போறோமுன்னு மகள் கேட்டதுக்கு, ஒரு கல்யாணத்தைப் பார்க்கப்போறோமுன்னு அப்பா சொல்றார். சந்தோஷமாப் போகும் மகளுக்கு அங்கே இருக்கும் சில பெண்கள் அலங்காரம் செஞ்சுவிடறாங்க. கல்யாணப்பெண் எங்கேன்னு கேக்கும் மேரிக்கு அதிர்ச்சி. அவள்தான் கல்யாணப்பொண்ணு. மாப்பிள்ளை அவளோட கஸின்.(சின்னவன்) அவளோட எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் மிரட்டிக் கல்யாணம் நடந்துருது. மறுநாள் காலை, அப்பா, மேரியை ( இனி அவள் பெயர் மரியம்) அங்கேயே விட்டுட்டு லண்டன் போயிட்டார்.

மூத்தவன் மன்ஸூர் அமெரிக்காவுக்குப் போய், இசைக் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். அங்கே சகமாணவியுடன் ஏற்பட்ட பழக்கம் காதலா மாறுது. அந்தப் பொண்ணு இவரைக் கல்யாணம் செஞ்சுக்க வற்புறுத்துது. இவர் தயக்கம் காட்டுறார். காரணம் மதம் இல்லை. கலாச்சாரம்னு சொல்றார். 'எனக்காக உன் கலாச்சாரத்தை எவ்வளவுநாள் விட்டு இருக்கமுடியும்? ஒரு நாள் இல்லேன்னா ஒருநாள் உனக்கு இந்த வாழ்க்கை போரடிச்சு, நீ மீண்டும் உன் பழக்கவழக்கம், கலாச்சாரத்துக்குப் போகணுமுன்னு ஆயிரும். அதனால் வேணாம்.' பொண்ணு பிடிவாதம் பிடிக்குது. 'உனக்காக நான் ஆல்கஹால், சிகெரெட் எல்லாத்தையும் விட்டுட்டேன் பாரு'ன்னுது.

உலகவர்த்தக மையத்தைத் தகர்த்த சம்பவம் நடக்குது அந்த நாளில். எல்லாம் ஒரே குழப்பம். சிலநாளில் ரெண்டுபேரும் ரெஜிஸ்தர் கல்யாணம் செஞ்சுக்கறாங்க. அன்னிக்கு இரவு இவுங்க தூங்கும்போது , இவரைமட்டும் போலீஸ் கடத்திக்கிட்டுப் போயிருது. விசாரிக்கறாங்க, இவருக்கும் அல்கெய்தாவுக்கும் என்ன தொடர்புன்னு.

அங்கே மரியத்துக்கு எப்பவும் காவல். அந்த வீட்டுப் பெண்கள் நிலையைப் பார்த்துப் பரிதாபமாவும் இருக்கு. ஒரு நாள் ஆண்கள் இல்லாத சமயம் அந்த வீட்டுப் பெண்கள் மேரியைத் தப்பிக்க விடுறாங்க. ஓட்டமான ஓட்டம் ஓடி பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இருக்கும் ஆற்றுக்கு வந்துட்டாள். தப்பிப்போக அங்கே தண்ணீருக்கு மேலே கயிறு கட்டுன தொட்டில் போல ஒரு அமைப்பு இருக்கு. அதுலே உக்கார்ந்து அந்தப் பக்கம் போய்க்கிட்டு இருக்காள். அதுக்குள்ளே வீட்டுக்குவந்த சின்னவனும் அந்த ஆஃப்கானியும் இவள் தப்பிட்டாளுன்னு தெரிஞ்சு தேடிக்கிட்டு ஓடிவர்றாங்க.

(சினிமா என்பதால் இங்கே ஒரு இண்டர்வெல் விடவா?. பாக்கி இன்னொரு பதிவாப் போடவா....இல்லை..... சொல்லி முடிச்சுடவான்னு ஒரு குழப்பம். ஒருவழியா முடிவு எடுத்துட்டேன்.)

அமெரிக்காவில் குற்றவாளிகளை விசாரிக்கறதுலே நம்மூரே தேவலை என்ற அளவுக்குக் கொடூரம். மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். போதாக்குறைக்கு அந்த மன்ஸூர் போட்டுருந்த தாவீஸ்/தாயத்தைப் பிரிச்சுப் பார்க்கறாங்க. அதுலே கட்டம்கட்டி என்னவோ எண்கள் எழுதுன காகிதம் இருக்கு. அந்த எண்கள் எல்லாம் குரான் லே இருக்கும் வாசகத்தின் எண்களாக இருக்கலாம். அதுலே 9 ன்னு ஒரு கட்டத்துலேயும், 11 ன்னு ஒரு கட்டத்துலேயும் இருக்கு. இது போதாதா?

"இசைக்கல்லூரி மாணவன்னு சொல்றே. ஆடம்பரமான அபார்ட்மெண்ட்லே இருக்கே. கார்வேற வச்சுருக்கே. இதுக்கெல்லாம் யார் காசு கொடுத்தா? அல்கெய்தா தானே? பின் லேடன் என்ன சொல்லி உன்னை இங்கே அனுப்புனார்.? கல்லூரியில் சேர்ந்தப்பக் கொடுத்த விண்ணப்பத்துலே உன் ஆர்வம் எல்லாம் ப்ளேன்னு சொல்லி இருக்கியே."

அப்புறம் அருவருப்பா அந்த செல்லுலே யக்.......

அடுத்தபக்கத்துக்கு இன்னும் கொஞ்ச தூரமே இருக்கும்போது, இந்தப் பக்கம் இருந்து அந்த தொட்டிலமைப்புக் கயிறை இழுத்து மரியத்தை மீண்டும் அந்த வீட்டுலே கொண்டுபோய்ப் பூட்டிவைக்கிறங்க. இவளைத் தப்பியோடாமப் பார்த்துக்கறது பெரிய கஷ்டமுன்னு சலிச்சுக்கும் சின்னவரிடம், அதெல்லாம் ஒரு குழந்தை பிறந்தாச் சரியாப்போயிடுமுன்னு சொல்றார் அந்த ஆஃப்கானி. "அதுக்குச் சான்ஸே இல்லை என்னைக் கண்டாலே வெறுப்பு. இதுவரை சம்பந்தம் ஒன்னுமில்லை"

மறுபடி ஓடு அந்த மௌலானாகிட்டே. 'அடப்பாவி. இன்னுமா ஒன்னுமில்லை. அவள் உன்னை விட வயசுலே பெரியவளாச்சேன்னு பயந்துக்கிட்டு இருக்காதே. ஆண் எப்பவுமே பெண்ணைவிட வலிமை வாய்ந்தவன். ஞாபகம் வச்சுக்கோ. அவளை எப்படியாவது மடக்கிடு.'
'எஸ் பாஸ்'ன்னு சொல்லாதது ஒன்னுதான் பாக்கி.

மரியம் கர்ப்பமா இருக்காள். ஆண்குழந்தையாப் பிறக்கணுமேன்னு அங்கே ஒரு மரத்துலே (சில துண்டுத் துணிகளைக் கட்டிவச்சு எல்லாரும் பிரார்த்தனை செய்யரது வழக்கம்போல இருக்கு!) இவளும் ஒரு சின்னத் துணியைக் கட்டிவச்சுக் கும்புட்டுக்கறாள். இஸ்லாமியர்கள் அல்லாவைத் தவிர வேற யாரையும் கும்புடமாட்டாங்கன்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஒருவேளை இந்த மரத்தடி , முஸ்லீம் சாது ஒருவரின் சமாதியோ என்னவோ!

பொண் குழந்தை பிறந்துருது. இப்ப அவளோட கடுங்காவல் கொஞ்சம் குறைஞ்சமாதிரி இருக்கு. குழந்தை பிறந்த விவரத்தை அப்பாவுக்கு எழுதியிருக்கேன். இதை அனுப்புங்கன்னு அந்த வீட்டு அம்மாகிட்டே கொடுக்கறாள். கடிதம் போயிருது. எங்கே? அவளொட பாய் ஃப்ரெண்ட்க்கு.

மேரி/மரியம் பிரிட்டிஷ் குடியுரிமை உள்ள பெண். அவள் விருப்பத்துக்கு எதிராக அங்கே பிடிச்சுவச்சுருக்காங்கன்ற விவரம் தெரிஞ்சுபோனதும், மேரியோட ஸ்டெப் மதரின் துணையோடு காவல்துறைக்குப் புகார் கொடுக்கறார் அந்த பாய்ஃப்ரெண்ட்.

அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் வேகமா நகருது. பாகிஸ்தானின் காவல்துறை வேற வழி இல்லாமல் மௌலானாவிடம் பேசி முடிச்சு, மேரி இருக்குமிடம் தெரிஞ்சுக்கிட்டு, ஆஃப்கானிஸ்தான் போய் அவளைக் காப்பாற்றிக் கூட்டிக்கிட்டு வருது. என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்த சின்னவன்( படத்துலே இவர் பெயர் சர்மட்) கூடவே கிளம்பி பாகிஸ்தான் வந்துடறார்.

இதுக்கிடையில் மேரியைப் பார்க்க அவுங்க ஸ்டெப் மதர் வந்து துணைக்கு இருக்காங்க. திரும்ப லண்டன் போயிறலாமுன்னு சொல்றாங்க. இவ்வளவு கொடுமை செஞ்சவங்களைக் கோர்ட்டுக்குக் கொண்டுபோய் நிறுத்தியே ஆகணுமுன்னு மேரியின் எண்ணம்.

மௌலானாவைக் கோர்டில் விசாரிக்கும்போது, பெண்ணின் விருப்பத்திற்கு மாறாகக் கல்யாணம் செய்வது தப்பே இல்லை. மதத்துக்காக என்னவும் செய்யலாமுன்னு ஒரே போடு போடறார். இங்கே பாகிஸ்தானில் இருக்கும் இன்னொரு மௌலனா வாலி( இவர் மௌலானாக்களுக்குத் தலைவரா இருக்குமோ)அவர்களைக் கோர்ட்டு அழைச்சப்ப அவர் வரலைன்னு மறுத்துடறார். மேரி போய் அவரைச் சந்திச்சு
விஷயத்தைத் தெளிவுபடுத்தி, பெண்ணுக்கு விருப்பம் இல்லாத கல்யாணம் கட்டி வைக்கக் குரான் அனுமதிக்குதான்னு கேக்கும்போது அவர் இல்லைன்னு சொல்றார். அதைக் கோர்ட்டுலே வந்து சொல்லச்சொல்லி வேண்டும்போது, இது டைம் வேஸ்ட். எனக்கு அஞ்சு நேரம் சாமி கும்பிடும் வேலை இருக்குன்றார். அநீதி இழைக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு ஆதரவா வந்து ஒரு வார்த்தைச் சொல்றதை சாமி வேணாமுன்னு சொல்லுமான்னு மேரி கேக்கக் கொஞ்சம் விவாதம் போகுது.

கடைசியில் அவர் கோர்ட்டுக்கு வந்து குரானில் இருக்கும் விளக்கங்களையும், திருமணங்களில் பெண்ணுக்கு இருக்கும் உரிமைகளையும் சொல்றார். கூடவே சங்கீதம் அல்லாவுக்குப் பிடிக்காதுன்னு யார் சொன்னாங்க. இதுவரை அவதரித்த ஒரு லட்சத்து இருபத்திநாலாயிரம் மகான்களில் அல்லாவுக்கு விருப்பமானவர்கள் நாலே பேர்தான். மோசஸ், இயேசு, தாவீத், நபிகள் நாயகம். இதுலே சங்கீதம் பாடுனவர் தாவீதுன்னும் சொல்றார். இறைவனை இசை மூலமும் அடையலாம்.

படம் முழுசும் பார்த்தாலும் தெரிஞ்சமுகம் எனக்கு மௌலானா வாலி தான். நம்ம நஸ்ருதீன் ஷா.

மேரிக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்குது. சர்மத்க்கு சிறைவாசம். மேரியையும், 'துணைவி'யையும் கூட்டிப்போக அப்பா லண்டனில் இருந்து வர்றார். அப்பாவைப் பார்க்கவே வெறுப்பா இருக்கு மேரிக்கு.

கடைசியில் புறப்பட்டுப்போய் போர்டிங் பாஸ் எல்லாம் வாங்கிக்கிட்டுப் ப்ளைட்டுக்குக் காத்திருக்காங்க. மேரி, திடீர்னு மனம்மாறி, நான் இங்கேயே இருக்கப்போறேன். எனக்கான கடமை இங்கேதான் இருக்கு. என்னை இந்த இக்கட்டுலே இருந்து காப்பாத்துன நண்பன் dave க்கு நான் விளக்கமாக் கடிதம் போடுவேன். நீங்க போங்கன்னு சொல்லிடறாள்.

தாலிபான்காரர்களால் அடிச்சு நொறுக்கப்பட்டப் பள்ளிக்கூடத்தை மீண்டும் நடத்தப்போவதுதான் மேரி செய்யப்போகும் கடமை & சேவை.

மேரி/மரியமா நடிச்ச இமான் அலி, சில கோணங்களில் நம்ம ஷோபனாவை நினைவுபடுத்தறார்.

படத்தின் பெயர் குதா கே லியே (Khuda kay liye). In the name of God ன்னு ஆங்கிலத்தலைப்பு வச்சுருக்காங்க.

இந்தப் படம் சில அவார்டுகளையும் வாங்கி இருக்கு. அவை.

Honoured with the Roberto Rosselini award in Italy

Best film award at 31th Cairo International Film Festival
Best Foreign film award at Muscat Film Festival

கடவுள், மதம், நல்லது கெட்டது இப்படித் தெளிவில்லாம ஒரு குழப்ப நிலையில் இருக்கும் இளைஞர்களை, மதவெறியர்கள் எப்படியெல்லாம் மூளைச் சலவை செஞ்சு தப்பான வழியில் கொண்டுபோறாங்கன்னு சொல்லுது.

படம் பார்த்து முடிஞ்சதும் மனசுக்குள்ளேக் கொஞ்ச நேரம் பாரமா இருந்துச்சு.

மனுசன் வாழ்க்கை ஒரு ஒழுங்குலே நடக்கணுமுன்னு, வழிநடத்த ஒரு வழிகாட்டியா இருக்கணுமுன்னு உண்டாக்கப்பட்ட மதங்கள், இன்றைய நிலைமையில் மனிதத்தை அப்படியே மறக்கடிச்சு, மதங்களுக்காகவே மனுசன்னு ஆக்கிவச்சுக்கிட்டு இருப்பதைப் பார்த்தால்...............

மதங்கள் , மனுசனைப் பிடிச்சுக்கிட்டு, மனுசத்தன்மையைப் பழி வாங்கிருச்சோ......

Thursday, October 30, 2008

பீம்பாய் பீம்பாய் புதிருக்கான விடையச் சொல்லிட்டுப் போகலாமே

எஸ் பாஸ். அதேதான் பாஸ். நீங்களே கோடி காமிச்சீங்களே பாஸ்.
மக்கள்தான் பாஸ், அதைச் சரியாப் புரிஞ்சுக்கலை.

இல்லையே....புதுசா நம்ம வகுப்புலே சேர்ந்திருக்கும் மாணவி சிந்து, சரியான பதிலைக் கண்டுபிடிச்சுட்டாங்களே.....

அப்படியா பாஸ். எனக்குச் சொல்லவே இல்லையே பாஸ்.

புது மாணவி சிந்துவுக்கு எல்லாரும் சேர்ந்து ஒரு 'ஓஓஓஓஓஓஒ' போடுங்க:-))))

சரிங்க பாஸ்....ooooooooooooo

படம்: மைக்கேல் மதன காமராஜன்.

ரம்பம் பம் ஆரம்பம்

Love has started
It gives me happiness
I didn't sleep from 7 to 8 days
thinking you



சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சேர்ந்திருந்தால் .
If both we join together, it is a festival
our eyes and hands have joined.
It is a good time.


சிவராத்திரி, தூக்கம் ஏது....
It's a non sleeping day.
Don't sleep
We won't sleep on
our first night



அடுத்த பாட்டில் இந்த கோனை எதுக்கு இருக்கு?
குற்றாலம் என்றதை இப்படி ஆக்குன மகானுபாவன் யார்?
Your touch is like jasmine & cool like konai!
This girl will live & talk with me forever

Wednesday, October 29, 2008

இதெல்லாம் என்னன்னு கொஞ்சம் பாருங்களேன்.

புதிர் வகையில் சேர்த்துறலாமான்னு இருக்கேன். தமிழை இப்படி 'முழி' பெயர்த்து இருக்காங்க!

கொஞ்சம் சிரிச்சு வைக்கலாமேன்னு:-))))))


******************
Love has started
It gives me happiness
I didn't sleep from 7 to 8 days
thinking you
**********************

If both we join together, it is a festival
our eyes and hands have joined.
It is a good time.
*************************
It's a non sleeping day.
Don't sleep
We won't sleep on
our first night
************************

Your touch is like jasmine & cool like konai!
This girl will live & talk with me forever
******************************
அனைவருக்கும் விழாக்கால வாழ்த்து(க்)கள்.

Monday, October 27, 2008

குன்றைக் குடையாய் எடுத்தாய்...... குணம் போற்றி!.

வழக்கமில்லாத வழக்கமாக் காலையில் காதுக்குள்ளே விழுந்த இரைச்சலைக் கேட்டுக் கண்முழிச்சேன். வானம் பொத்துக்கிட்டதோ?

ஃப்யூ ஷவர்ஸ்ன்னுதானே சொன்னாங்க. இது என்னடா நம்ம ஊருக்கு, அதுவும் இன்னிக்குன்னு பார்த்து.... கன்னுக்குட்டியெல்லாம் நனைச்சுறாது? அடடா..... ஜன்னல் வழியாப் பார்த்தால் தோட்டம், முற்றம் எல்லாம் அரிசி கொட்டிவச்சுருக்கு. இந்த மழையிலே அரிசி 'காயப்போட்ட'ப் புண்ணியவான் யாரு? ஐய்யோடா..... இது கனவில்லை என்று காதில் சொல்லுங்கோ....

இதேபோலப் பிரளயம் நடந்துருக்கு, முந்தி கோகுலத்தில். இந்திரனுக்கு ஒரே கடுப்பு. மழையாக் கொட்டித்தள்ளுறான். உயிரினங்கள் எல்லாம் கடும் மழையில் மாட்டிச் செய்வதறியாது மயங்கும் நேரம், ஏழே வயதுப் பாலகன் கோவர்தன மலையை அப்படியே அலாக்காத் தூக்கி( தன் இடது கை சுண்டு விரலால்) நிறுத்தினதும் சகல உயிர்களும் மலைக்கடியில் தஞ்சம் அடைஞ்சது. ( நல்ல காலம். கை மட்டும் கொஞ்சம் தவறி இருந்தால் கூண்டோடு காலி).மழை விட்டப்பாட்டைக் காணொம். ஏழு பகலும் ஏழு இரவும் விடாத மழை. கடைசியில் இந்திரன் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு மழையை வாபஸ் வாங்கிட்டார்.

நவீன கால இந்திரனுக்கு இத்தனைநாள் காத்திருப்பது எல்லாம் வேலைக்காகாது. காலையில் ஆரம்பிச்ச மழை, பகல் ஒரு மணிக்கு ஸ்விட்ச் போட்டாப்போல 'டக்'ன்னு நின்னுச்சு. அப்பாடா.....கன்னுக்குட்டிகள் நனையாது.

அறுபது மைல் நீளம், நாற்பது மைல் அகலம், அறுபது மைல் உயரம் உள்ள மலைன்னு புராணங்களில் இருக்கும் வர்ணனையை மனசில் நினைச்சுக்கிட்டேக் கோவர்தனகிரியைப் பார்க்கப் போனாராம் இன்னிக்குப் பிரசங்கம் செஞ்ச இஸ்கான் பக்தர். இது என்னடா கண்ணனுக்கு வந்த சோதனைன்னு வெறும் அம்பது மீட்டர் உயரம், ஒன்பது கிலோமீட்டர் நீளம் வரும் சின்ன குன்றுதான் கண்ணில் பட்டதாம். மலையைச் சுற்றிவரும் மலைப்பாதை (பரிக்ரமா)யில் நடந்துகொண்டே சிந்திச்சாராம். அந்தக் காலத்தில் புராணங்கள் எழுதிவச்சவர்களுக்குக் கற்பனை வளம் ஜாஸ்தின்னு! டில்லியில் இருந்து போனால் மூணு மணிநேரப் பயணம். மதுரா, பிருந்தாவனத்தில் இருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் இந்த இடம் இருக்கு.

என் அருகில் இருந்த (மூத்த) தோழி (இன்னொரு தோழியின் அம்மா) நீ கோவர்தன மலைக்குப் போயிருக்கியான்னு கேட்டாங்க. 'கோவர்தன கிரியும், கிருஷ்ணனும் வேறுவேறில்லைன்னு இப்பத்தானே பிரசங்கத்தில் சொன்னாங்க. அந்த கோபாலே என் வசம் இருக்கும்போதுத் தனியா மலையைப் பார்க்கப் போகணுமா என்ன?'ன்னு சொல்லி வச்சேன்:-)

எங்க ஊர் கோவிலில் இன்னிக்கு கோவர்தன பூஜை. எல்லாத்தையும் ஊர் உலகத்துக்கு முன்னாலே கொண்டாடும் என் பழக்கம் இனி கோயிலுக்கும் வந்துருச்சு. தீபாவளிக்கு மறுநாள் கொண்டாடப்படவேண்டியது. அன்னிக்கு வேலைநாள் என்றபடியால் இந்த ஞாயிறு. இதுக்கும் அந்த மூத்தத் தோழி, 'கியோங் யே லோக் உள்ட்டா கர்த்தே ஹை. திவாலிகே பாத் கர்னே ச்சாஹியே நா'ன்னும் சொன்னாங்க. நம்ம வாய்ச் சும்மா இருக்கா? 'ஆஜ்கல் பூரா ஸமானா மே சப்காம் உள்ட்டாயீ ஹோதா ஹைநா. இஸ்லியே இதர் பி'

நேத்து இரவு கோவிலுக்குப் பூஜைக்குப் போனப்பவே, இன்னிக்கான வேலைகளை, அலங்காரங்களைச் செய்ய ஆரம்பிச்சுக் கோவர்தனகிரி உருவாகிக்கிட்டு இருந்துச்சு. 'பிஹைண்ட் த ஸீன்' உங்களுக்குக் காமிக்கலாமேன்னு நாலைஞ்சு படம் எடுத்துவந்தோம்.

ஒரு நீள மேஜையில் காலி அட்டைப் பெட்டிகளை மலைத் தொடர் போல் அடுக்கிவச்சு அகலமான ஃபுட் ராப்பர் போட்டு நீட்டாச் சுத்திச் சுத்தி மலை உச்சிகள் (?) ஆடாமல் அசையாமல் செஞ்சாச்சு. ஒரு ஒன்னரை இஞ்சு உயரம் வரும் மூணு மெகா ட்ரேக்களில் சாக்லேட் கேக்குகள் செஞ்சு அதைத் துண்டுகளாக வெட்டி மலைகளை மூடிக்கிட்டு இருந்தாங்க. சாணகம் வச்சுச் செய்யறதில்லையான்னு 'என் அறிவை'க் கொஞ்சமாக் காட்டுனேன். கிருஷ்ணர் மட்டும்தான் சாணகமாம். மற்றது அதே வண்ணத்தில் இருக்கும் கேக்குகளாம். இது ஒரு பக்கமுன்னா கோவில் ஹாலில் சுவர்களைப் புகைப்படங்களால் (முக்கால்வாசி மாடும் கன்னுகளும்தான்)அலங்கரிச்சுக்கிட்டு ஒரு பக்தை.

அரைமுழம் நீளம் வரும் ஊசிவச்சுப் பூச்சரங்கள் கோர்த்து எடுத்துக்கிட்டு இன்னொரு பக்தை. இவர்கள் கூடவே வந்து ஓடிவிளையாடிக் கொண்டிருக்கும் குட்டிக் குட்டி கண்ணன்களும் ராதைகளும்.

நேத்து, மாலை நேரப் பூஜை முடிஞ்சவுடன் தீபாவளிக் கொண்டாட்டத்துக்கு போயிட்டேன். (இதைப் பற்றி அப்புறம் சொல்றேன்). இன்னிக்குக் கதையைப் பார்க்கலாம். இங்கே கோயில் ஹால் கொஞ்சம் சின்னதுதான். 7 x 8 மீட்டர்தான் இருக்கும். ஆனால் கதவுகள் மட்டும் பயங்கரக் கனமாச் சும்மாக் கிண்னுன்னு இருக்கும். பழையகால மரக்கதவுகள். கதவைத் திறந்தவுடன் இடி இடிக்கிறமாதிரி மிருதங்கத்தை விளாசிக்கிட்டு இருக்கார் ஒரு பக்தர். பஜனை நடந்துக்கிட்டு இருக்கு! அது முடிஞ்சவுடன் 'சட்'னு ஒரு நிசப்தம் வந்துச்சுப் பாருங்க..... மழை ஓய்ஞ்சாப்புலேன்னேச் சொல்வொமெ அப்படி:-) பிரசங்கம் நடந்ததும் ஹாலுக்கு மறுபுறம் இருக்கும் திறந்த வெளித் தோட்டத்துக்கு எல்லாரும் போனோம்.





நேற்றைய 'மலை மேசை' அலங்காரம் முழுசும் முடிஞ்சு கம்பீரமாத் தோட்டத்தில் நிக்குது. சாய்வா வச்ச இன்னொரு பலகையில் கிருஷ்ணர் (அவருக்கு மட்டும் கம்பீரம் கொறைச்சலா என்ன?) இயற்கை வண்ணங்களுடன், இடது கை உயர்த்தி நிக்கிறார். பச்சை இலைகள் பேக் ட்ராப். பட்டாணிப் பருப்புக்களால் ஆன மஞ்சள் பட்டாடை. பவழ உதடுகளுக்களுக்கு ஒரு செந்நிற இலை. காலில் கொலுசு சூப்பர். ரெண்டுரெண்டு வரிசை வெள்ளைப்பட்டாணிகளின் இடையிலே ரெட் கிட்னி பீன்ஸ். ராஜ்மான்னு சொல்வோம் பாருங்க அது. இடுப்புலே இருக்கும் ஆரஞ்சு நிற.உத்தரீயம் மைசூர் பருப்பு. தலையில் உள்ள க்ரீடம், கைவளை, மார்பில் திளங்கும் ஹாரம் இப்படி வகைவகையாப் பருப்போ பருப்பு! செயற்கை ரசாயனப்பொருட்கள் ஒன்னுமே இல்லாம எல்லாமே இயற்கை! எனக்கு ரொம்பப் பிடிச்சது.


நகருக்குள்ளே நாலு கால்நடைகள்(??) அனுமதி இல்லை என்றதால் சிட்டிக் கவுன்ஸில்கிட்டே விசேஷ அனுமதி வாங்கி ரெண்டு கன்னுக்குட்டிகளைக் கொண்டுவந்துருந்தாங்க. தரையில் ஈரம் கூடுதலா இருந்ததால் அதுகளை அந்த ட்ரெயிலரிலேயே வச்சாச்சு. ரெண்டும் செல்லம்போல இருந்துச்சு.



கோபூஜை முடிஞ்சதும், நாங்கள் கோவர்தனகிரியைத் தாங்கும் கிருஷ்ணனை வலம் வந்தோம். மலைப்பாதைக் கற்கள் எல்லாம் சாக்லேட்த் துண்டுகள். டெஸிகேட்டட் தேங்காய்ப்பூவுக்குப் பச்சை நிறம் கலந்து மலையில் புல் நிறைஞ்சுருக்கு. கேக்கையும் தேங்காய்ப்பூவையும் இணைக்கப் பச்சை நிற வெஜிடபிள் ஜெல்லிக் கலவை. அங்கங்கே இருக்கும் குளங்கள், நீர் நிலைகள் எல்லாம் சின்னச் சின்னப் பாத்திரங்களில் ஊத்திவச்சு உறைஞ்சுபோனப் பச்சை நிற ஜெல்லியில் தகதகன்னு ஜொலிக்குது. பாசி படிந்த குளங்கள்!!!! எது என்ன இடம் என்ற விவரங்கள் அடங்கிய பெயர்ப்பலகைகள். எங்கூர் ரோட் ஸைன்ஸ் கெட்டது போங்க!



பெரிய பெரிய பாத்திரங்களில் பலவகையான பர்பி, பால் லட்டு, ட்ரைஃபிள் இப்படி இனிப்புகள் கையில் வச்சுக்கிட்டுப் பக்தைகள். நாங்கள் எல்லாரும் அதை வாரிவாரி (தின்னுட்டோமுன்னு நினைச்சுக்காதீங்கப்பா) எடுத்து கிரிராஜனுக்கு படைக்கிறோம். ஒரு இனிப்பு மலையா அதை மாத்திட்டுத்தான் மறுவேலை! சின்னப் பசங்க ரொம்ப ஆர்வமா கைக்குக் கிடைச்சச் சந்துலே எல்லாம் திணிச்சுவைக்கிறாங்க.


சரியான குளிர். வழக்கமில்லாத வழக்கமாத் தோட்டத்துலே செருப்போடு வரலாமுன்னு விதியைத் தளர்த்தினாங்க. மதியம்வரை பெய்ஞ்ச மழையில் தரையெல்லாம் ஒரே ஈரம். எங்கள் சாக்ஸ் & பாதங்கள் எல்லாம் தப்புச்சு. ஸ்ரீ கிருஷ்ணா நீ நல்லா இருக்கணுமுன்னு மனசார வாழ்த்தினேன். இதுக்குள்ளே மணி ஏழாயிருச்சு. நம்ம கோவிலில் எந்த ராஜா எந்தப் பட்டினம் போனாலும் ஏழு மணிக்கு ஆரத்தின்னா அது ஏழு மணிக்குத்தான். கோவர்தன கிரிதாரியை அங்கேயே விட்டுட்டு உள்ளே ஓடுனோம்.


வழக்கமான ஆரத்தி ஒரு பக்கம் அதுபாட்டுக்கு நடக்குது. கர்ப்பக் கிரகத்தின் முன்னால் ஒரு மேசையில் இந்த விழாவுக்காக வச்சுருந்த குட்டிக் கண்ணனுக்கு வலம்புரிச் சங்கில் அபிஷேகம். கண்குளிரப் பார்த்தோம்.

அடுத்த முக்கிய நிகழ்ச்சிக்காக எல்லாரும் பந்தியில் உக்கார வேண்டியதாப் போச்சு. இன்னிக்கு விருந்து ஸ்பான்ஸார் செஞ்சது ஒரு மூணுவாரக் குழந்தை. பிள்ளைகிட்டே இருந்து பிடுங்கித் தின்னுட்டோமுன்னு சொல்லமாட்டீங்கதானே? கோவில் முந்திபோல இல்லாமல் வரவு செலவுகளில் தள்ளாடுதுன்னு நமக்குத் தெரியும் என்பதால் ஒரு சின்னத் தொகையைச் சாமிக்குன்னு தட்டுலே (கோயில் ஆட்கள் கேக்காமலேயே) எல்லாரும் போட்டோம்:-)

இந்த வாரம் எங்களுக்கு லேபர் டேயை முன்னிட்டு லாங் வீக் எண்ட். அதனால் கோயிலில் ஆட்களும் கம்மிதான். சமையலோ எக்கச் சக்கமாச் செஞ்சு வச்சுருந்தாங்க. சிம்பிள் மெனுதான். சாதம், பருப்பு, தக்காளிச் சட்டினி, பீன்ஸ், உருளை & பனீர் போட்ட ஒரு கூட்டு, போண்டா ( ஹை! வலைப்பதிவர் சந்திப்பு!) பப்படம், ராஸ்பரி சேர்த்த கேஸரி( அம்பி உங்க பங்கை நானே சாப்புடவேண்டியதாப் போச்சு), லெமன் ஜூஸ் தாகத்துக்கு .

இதில்லாம கிரிராஜாவை அலங்கரித்த இனிப்புவகைகள் வேறு. இஷ்டம்போல் எடுத்துக்கலாம். நம்ம வீட்டில் நாம் ரெண்டே பேர் என்றதால் கொஞ்சமாக் கொண்டுவந்தேன். மறுநாள் திங்கள் தீபாவளிப் பண்டிகையைக் கோவிலில் கொண்டாடப்போறோம். அதுக்கான அறிவிப்பைச் செஞ்சாங்க.


சாப்பாட்டை எடுத்துவச்சுக் கொடுக்க முடியாது என்றதால் கிரிவலம் வந்த பலனை நம் வலைநட்புகளுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

Thursday, October 23, 2008

தீபாவளி ... வத்தலகுண்டு ஸ்டைல்!!!!!(மரத்தடி நினைவுகள்)

நம்ம வத்தலகுண்டுலே அப்பல்லாம் தீபாவளிப் பண்டிகையைவிட கார்த்திகை தீபம்தான் பெரிய விழாவாக இருந்தது! ஆனாலும் தீபாவளியையும் சுமாரா...ச்சீச்சீ நல்லாவேதான் கொண்டாடின ஞாபகம் இருக்குது!

எங்க வீட்டுலே தீபாவளிக்கு மறுநாள் வர்ற நோம்புதான் ரொம்ப விசேஷம். அதுக்கு கேதார கெளரி நோம்புன்னு பேரு!

நாங்க மதுரை ஜில்லாவுலே அப்ப இருந்தாலும், எங்க முன்னோர்கள் எல்லாம் ஆந்திராவுலெ இருந்து வந்தவங்களாம். எப்படி, பட்டணத்துக்கு வந்தோம்னு சொல்றதுக்கே ஒரு 'குடும்பக் கதை' இருக்கு!

தீபாவளிக்கு 'மட்டன்' வாங்கறது முக்கிய விஷயம். அதுவும் தீபாவளிக்கு மொத நாள் ராத்திரியிலிருந்தே அதை வேக வச்சிகிட்டு இருப்பாங்க! எங்க வீட்டுலே அம்மா மட்டும் நான்வெஜ் சாப்பிடமாட்டாங்க.

வழக்கமில்லாத வழக்கமா தீபாவளிக்கு முதல்நாள் சாயந்திரம் 'கறிக்கடை' திறந்திருக்கும். மத்த நாளிலே காலையிலே மட்டும் தான் திறப்பாங்க. அதுலெயும் அன்னைக்கு வெட்டுன ஆட்டுக் கறி வித்து முடிச்ச உடனே கடையைக் கழுவிட்டுப் போயிருவாங்க! கடைன்னவுடனே பெருசா கேஷ் கவுன்ட்டர் வச்சுநிறைய பேரு வேலை செய்யற 'சூப்பர் மார்கெட்'ன்னு நினைச்சுக்காதீங்க!

வத்தலகுண்டுலே வாரச் சந்தை கூடறதுக்கு ஒரு இடம் இருக்கு. அதுக்குள்ளெயே ஒரு நீளமா ஒரு சுவர் இருக்கும். அந்தச் சுவத்துக்கு அந்தப் பக்கம்தான் 'கறிக்கடை'

அந்தப் பக்கம் போக சுவரிலே 'கேட்' ஒண்ணும் இருக்காது. ஒரு இடைவெளி விட்டு அந்தச் சுவரைக் கட்டியிருப்பாங்க.

அங்கே சிமெண்டாலே ஒரு நீள மேடையிருக்கும். குறுக்காலே ஒரு மறைவும் இல்லாம கடைக்காரங்களே அந்த இடத்தைப் பங்கு போட்டிருப்பாங்க. ஒரு வட்டமான பெரிய மரத்துண்டு ஒவ்வொரு கடைக்கும் இருக்கும். மேலே கயிறு கட்டி அதுலே நல்ல கனமான கொக்கிங்க தொங்கிக்கிட்டு இருக்கும். இதுதான் கடைங்கறது.

அந்தக் கொக்கிங்களிலே தோலுரிச்ச ஆடுங்க தலைகீழாத் தொங்கிகிட்டு இருக்கும். வாங்குற ஜனங்களுக்குச் சந்தேகம் வந்துருமுன்னு எல்லாத் தோலையும் உரிச்சுட்டு வாலில் மட்டும் கொஞ்சூண்டு ரோமம் விட்டுவச்சுருப்பாங்க.. அதைப் பார்த்து, வெள்ளாடா இல்லை செம்மறியான்னு கண்டு பிடிப்பாங்களாம்.

சுவத்திலே இருக்கற இடவெளியிலே ஒரு கண்ணும், செய்யற வேலையிலே ஒரு கண்ணுமா இருப்பாங்க அங்கே வேலை செய்யறவுங்கெல்லாம்! நம்ம தலை தெரிய வேண்டியதுதான், 'பாப்பா, இங்கே வா. நம்ம கடையிலேதான் நீங்க எப்பவும் வாங்கறது'ன்னு எல்லோரும் சேர்ந்த மாதிரி கத்திக் கூப்பிடுவாங்க! ஆனா எனக்குத்தான் தெரியுமே நாம எந்தக் கடையிலே வழக்கமா வாங்கறதுன்னு! ஆங்.. சொல்ல மறந்துட்டேனே இந்த மாதிரி முக்கிய(!) வேலைக்கெல்லாம் போறது நான் தான்! வீட்டுலே அதுக்குன்னே ஒரு பை வேற தனியா இருக்கும். சமைக்கிற பாத்திரம், அருவாமணையெல்லாமே தனியா இருக்கும்! ஏன் அடுப்புக்கூடத் தனியா வெளியில் இருக்கும்.

என்கிட்டே அப்பல்லாம் ஒரு குதிரை இருந்துச்சு! தனியா, எங்கே போறதா இருந்தாலும் அதுலேதான் போவேன். குதிரை ஓடறமாதிரி பாஞ்சு ஓடிகிட்டே நாக்கை மடக்கி 'ட்ளோக், ட்ளோக்'ன்னு சத்தம் எழுப்பிகிட்டே போகணும். சாதாரணமா நடந்து போறதைவிட, ரொம்பச் சீக்கிரமாப் போயிடலாம்!

நம்ம வீட்டுலேயும் அவுங்களுக்கு வேலை ஆகணும்ன்னா, 'உன் குதிரைலே போய் இந்த.... சாமான் வாங்கிட்டு வந்துடா செல்லம்'ன்னு அன்பாச் சொல்வாங்களா, நானும் அதை உண்மையின்னு நம்பி, உடனே கட்டி வச்சிருக்கற குதிரையை அவுத்துக்கிட்டு கிளம்பிடுவேன்.

தீபாவளிக்கு மாத்திரம் 'கறி' எடுக்க நான் தனியாப் போக மாட்டேன். நிறைய வாங்கணும். அப்புறம் கூட்டம் வேற அதிகமா இருக்குமே, சின்னப் பிள்ளைன்னு ஏமாத்திடுவாங்களாம்! வீட்டுலே வேலை செய்யற முனியம்மா கூடத்தான்
போவேன். நிஜத்தைச் சொல்லணும்ன்னா, முனியம்மாவைத்தான் ஏமாத்திருவாங்க! என்னையில்லே!

முனியம்மா கதை சொல்றதில்லே கில்லாடி! எப்பவும் 'கதை சொல்லு கதை சொல்லு'ன்னு கேட்டு நச்சரிப்பேன். முனியம்மா சொல்ற கதையிலே எப்பவும் ராஜா, ராணிங்க வருவாங்க. அந்த ராணிக்கு அநேகமா ஒரு 'கள்ளப் புருஷன்' இருப்பான். இப்ப அதையெல்லாம் நினைச்சுக்கும்போது சிரிப்பு வர்றது மட்டுமில்லே, ஏன் எப்பவும் அப்படிச்
சொல்லணும்ன்னும் தோணும்! அப்ப அதெல்லாம் ஏன்னு கேக்கற விவரம் இல்லே. ஒருவேளை கதைக்கு சுவாரசியம் கூட்டறதுக்காகவா?

ராத்திரி சாப்பாடெல்லாம் முடிஞ்சவுடனே, வெளி அடுப்பைப் பத்தவச்சுக் கறிப் பாத்திரத்தை அடுப்பிலெ ஏத்திருவாங்க! அப்பல்லாம் 'ப்ரெஷர் குக்கர்'ங்கற நாமதேயம் கூட கேள்விப்பட்டதில்லே!

இட்டிலிக்கு மாவரைச்சு ஒரு பெரிய பாத்திரத்துலே வச்சிருப்பாங்க. அக்காங்கதான் ராத்திரியிலெ ரெண்டுதடவை எந்திரிச்சு அடுப்புத் தீயைத் தள்ளிவிட்டு வருவாங்களாம்! அடுப்புமே விறகடுப்புதான்!

அண்ணன்தான் 'பட்டாஸ் டிபார்ட்மெண்ட்' லச்சுமி வெடி, அணுகுண்டுன்னு ஏகப்பட்டது வாங்கிவச்சிருப்பார்.எனக்கு எல்லாம் கம்பி மத்தாப்பு, கலர் கலரா, (என்ன பெரிய கலர், பச்சையும் சிகப்பும்தான்) எரியுற மத்தாப்புப் பெட்டி. தீப்பெட்டி மாதிரிதான்
இருக்கும். கேப், அது வெடிக்கறதுக்கு ஒரு நட்டு. மண்டையா ஒரு பெரிய ஆணி மாதிரி இருக்கும். அதுலெ ரெண்டு உலோக வாஷர். அதுக்கப்புறம் ஒரு நட்டு. கேப், பாக்கறதுக்கு இப்ப இருக்கற 'ஸ்டிக்கர் பொட்டு' போல சிகப்புக் கலருலே வட்டமா
இருக்கும்.அதுலே கறுப்பா ஒரு புள்ளிமாதிரி 'வெடி'மருந்து! குட்டியா ஒரு டப்பாலே சுமார் 30 பொட்டுங்க(!) இருக்கும். அதுலே ஒண்ணை எடுத்து, 'நட்டை லூஸ்' செஞ்சு, ரெண்டு வாஷர்ங்களுக்கு நடுவிலே ஒரு 'கேப்'பை வச்சு, 'நட்டைத் திருகி டைட்'
செஞ்சுட்டு, அதை அப்படியே வீசித் தரையிலே எறியணும். 'பட்' ன்னு சத்தத்தோட வெடிக்கும்! இப்படி ஒவ்வொண்ணா 'பட் பட்' நாளெல்லாம் வெடிச்சுக்கிட்டே இருப்பேன். அக்காங்கல்லாம் திட்டுவாங்க, ஒரே தலைவலின்னு! ஒரு நாளுன்னா பரவாயில்லே. ஆனா
கடையிலே பட்டாஸ் வந்த நாள்முதல் இதே வேலைன்னா யாருக்குத்தான் தலைவலி வராது?

சில சமயம் வெடிக்காமலும் போயிரும். அதையெல்லாம் சேர்த்துவச்சு, அந்த நாளோட கையிருப்பு தீர்ந்ததும், சிமெண்ட்டுத் தரையிலே பரப்பி வச்சு, ஒரு கல்லாலே அதும் தலையிலே தட்டித்தட்டி வெடிக்க வச்சுருவேன்.

மறுநாளு காலையிலே இருட்டா இருக்கறப்பவே( மணியெல்லாம் யாரு பார்த்தா?) அக்காங்க எழுப்பிக் குளிக்க வச்சிருவாங்க. சீயக்காப் பொடி போட்டுத் தலையை பரபரன்னு தேய்ப்பாங்க! எங்கவீட்டுலே சீயக்காய்ப்பொடி கடையிலே வாங்கற வழக்கம் இல்லே. பட்டணத்துலே இருக்கற பாட்டி வீட்டுலே இருந்து கொண்டுவர்றதுதான்! சீயக்காய், வெந்தியம், பச்சைப்பயறு,இன்னும் என்னென்னவோ சேர்த்து, மாவு மில்லுக்குக் கொண்டுபோய், அதுக்குன்னே இருக்கற ஒரு மெஷீன்லே அரைச்சு வாங்கிருவாங்க பாட்டி!

வருஷா வருஷம், இந்தச் சீயக்காய்ப்பொடி, ரங்கோன் மொச்சைகொட்டை, சிகப்பான புட்டரிசி,திருப்பதி குங்குமம் இன்னும் சில சாமான்கள் எல்லாம் 'மெட்ராஸ்'லேயிருந்து வந்துரும்!

குளிச்சு முடிச்சு, புதுச் சொக்காயெல்லாம் போட்டுகிட்டு, பட்டாஸ் கொஞ்சம்போல வெடிச்சிட்டு, சாமிகும்பிடணும். அப்புறம் காலைப் பலகாரம். இனிப்பெல்லாம் ரொம்ப இருக்காது.மொதநாளே செஞ்சுவச்ச மைசூர்பாக்தான் அநேகமா. அப்புறம் கேசரியும் கிளறியிருப்பாங்க, சாமி நைவேத்தியத்துக்கு!
இதையெல்லாம் சாமி அறையிலேயே உக்காந்து சாப்பிடுவோம். அதுக்கப்புறம் அடுப்பங்கரைக்கு வெளியே இருக்கும் வெராந்தாவுலே உக்காந்து, இட்டிலி, தோசை, கறிக்குழம்புன்னு ஒரு வெட்டு வெட்டுவோம். தீபாவளியைத் தவிர எப்ப இட்டிலி,தோசை செஞ்சாலும் அதுக்குத் தொட்டுக்க சட்டினிதான். மிஞ்சிப் போனா மிளகாய்ப் பொடி.காலையிலே கறிக்குழம்புன்றது தீபாவளிக்கு மட்டுமேயான 'ஸ்பெஷல்!' ஒருவருசம் மட்டும் வெல்லப்பாகு இருந்துச்சு. நான் அதைத் தேன் பாகுன்னு சொல்லிக்கிட்டு இருந்தேன்.

இதெல்லாம் முடியறப்ப பொழுது விடிஞ்சிடும்! இப்ப நமக்காக வேலை செய்யற துப்புரவுத் தொழிலாளிங்க, தபால் ஊழியர்ங்க, சலவைத் தொழிலாளின்னு வருவாங்க. அவுங்களுக்காக இட்டிலிங்களை அவிச்சு வச்சிக்கிட்டே இருப்பங்க. அப்பல்லாம் இந்த 'இட்லி ஸ்டேண்டு' இல்லையே. பெரிய இட்டிலிக் குண்டான்லேதான் இட்டிலி அவிக்கணும். ரெண்டு ரெண்டுத் தட்டாத்தானே ஒரு ஈடு வரும். அதுக்கே பாதிநாளு போயிரும்!

நம்மத் துப்புரவுத் தொழிலாளி பேரு, ராமம்மா. அவுங்க வூட்டுக்காரரு பேரு ராமைய்யா! அவுங்க தெலுங்கு பேசுவாங்க! நாங்களும் வீட்டுலே தெலுங்கு பேசற ஆளுங்கதான்! எனக்கு ராமம்மான்னா ரொம்பப் பிடிக்கும்! அவுங்களைப் பார்த்தவுடனே நானே அவுங்களுக்கான
பலகாரங்களைக் கொடுக்கணும்ன்னு ஓடுவேன். அப்ப அக்காங்களோ, இல்ல அம்மாவோ சொல்வாங்க,' தொடாமக் கொடுக்கணும். இலையோடதிண்ணையிலே வச்சிரு. அவுங்க எடுத்துப்பாங்க'

இதுதான் எனக்கு ஏன்னு புரியாது! 'அவுங்க நம்ம ஜாதி தானே? எதுக்காக தொடாமக் கொடுக்கணும்?' அக்காங்ககிட்டே கேட்டா சிரிப்பாங்க.

"உனக்கு எப்படித் தெரியும் அவுங்க நம்ம ஜாதின்னு?"

" நம்மளை மாதிரி தெலுங்கு பேசறாங்களே!"

" தெலுங்கு பேசுனா?" மறுபடியும் சிரிப்பு!

எதுக்குத்தான் இப்படி சிரிக்கிறாங்களோ? அன்னைக்குக்கூட நான், 'எம்.என்.ராஜமும், எம்.என். நம்பியாரும்' ப்ரதர் அண்ட் சிஸ்டர்ன்னு சொன்னதுக்கு சிரியோ சிரின்னு சிரிச்சாங்க!

ஒரே இனிஷியல் வந்தா ஒரே குடும்பம் இல்லையாம்! ஒரே பாஷை பேசுனா ஒரே ஜாதி இல்லையாம்! அது என்ன ஜாதியோ?

பெரியவுங்களை ஒண்ணும் புரிஞ்சிக்க முடியதில்லே!

இப்படியெல்லாம் யோசனைகள் ஓடும் என் மனசுலே!

அன்னைக்கு ராத்திரி எல்லோரும் சாப்பிட்டவுடனே ( என்னத்தை சாப்பாடு, அதான் கண்டதையும் தின்னுட்டு சோறு தின்ன முடியாம இருப்பமே!) வீட்டை நல்லாக் கழுவி விட்டுருவாங்க. நாங்கெல்லாம் மொட்டை மாடிக்குப் போயிருவோம் தூங்கறதுக்கு!

மறுநாள், நோம்பு! எனக்கும் அண்ணனுக்கும் ஏதாவது சமைச்சு முன்பக்க அறையிலே வச்சிருவாங்க. நாங்களெ எடுத்துப் போட்டுச் சாப்பிட்டுட்டு அப்படியே வெளையாடப் போயிரலாம். வீட்டுக்குள்ளே போகக் கூடாது! அப்படியே போனாலும் எதையும் தொடக் கூடாது! யார்மேலேயும் வுழுந்துரக்கூடாது! இப்படி ஏகப்பட்டக் கூடாதுகள்!

அக்காங்க, அம்மாவெல்லாம் விரதம்! ஒண்ணுமே சாப்பிடமாட்டாங்க, ஆனா காஃபி மட்டும் குடிப்பாங்க! அது என்ன விரதமோ?

உள்ளேயிருந்து ஒரே நெய் வாசனையும், ஏலக்காய், பச்சைக் கற்பூரவாசனையும் மூக்கைத் துளைக்கும். வெல்லப்பாகு முறுகற வாசனை ஆஹா, ஆஹான்னு இருக்கும். அக்கா மட்டும் வெளியிலே வந்து, 'என் செல்லம், குதிரையிலே ஓடிப் போய் ஒரு தேங்காய் வாங்கிகிட்டு ஓடிவாடா'ன்னு தூர இருந்தே கொஞ்சும்! நானும் ஓடுவேன்.

அதிரசத்துக்குப் பாகு காச்சறப்ப ரொம்ப முறுகிடுச்சாம். அதை வீணாக்காம 'கமர்கட்டு' செஞ்சுடுவாங்களாம்!

அது எப்படி எல்லா நோம்புக்கும் 'பாகு முத்திப்போச்சுன்னு சொல்றாங்க'ன்னு பாத்தா, ஒரு நாளு ஏதோ சுவாரசியமான பேச்சுலே உண்மை வெளிவந்திருச்சு!

கமர்கட்டுக்காகவேப் பாகை முறுக வச்சுருமாம் பெரியக்கா!

மத்தியானம் நாங்கெல்லாம் சாப்பிட்டபிறகு, அண்ணனை இன்னோருதரம் குளிக்கச் சொல்வாங்க. ஏதுக்குத் தெரியுமா? கலசத்துலே அரைச்ச மஞ்சளாலே முகம், மூக்கு எல்லாம் வரைஞ்சு அலங்கரிக்கறதுக்கு! அண்ணன் ரொம்ப நல்லா இதையெல்லாம் செய்வாரு!
நானும் இன்னொருக்க குளிச்சிட்டு வந்து, பக்கத்துலே உக்காந்து, கலசத்துக்குப் போடற நகைகளையெல்லாம் எடுத்துப் பார்த்துக்கிட்டு இருப்பேன்.

அன்னைக்குச் சாயந்திரம் கலசம் வச்சு, அதுக்கு முன்னாலே பாத்திரம் பாத்திரமா வகை வகையான பலகாரங்கள் இருக்கும். அதிரசம், லட்டு, முறுக்கு, அப்பம், சக்கரைப் பொங்கல்,வெண் பொங்கல், பாயாசம், கலர்க்கலரா சாதவகைகள் இன்னும் என்னென்னவோ
இருக்கும்.

நோம்புக்குன்னு இருக்கற சின்னப் புஸ்தகம் ஒண்ணு படிப்பாங்க! படிச்சுகிட்டே இருப்பாங்க! எப்படா முடிப்பாங்கன்னு ஆயிரும்! கடைசியா நோம்புக்கயிறு கட்டிவிடுவாங்க. சிகப்புக் கலருலே இருக்கும். ஆம்பிளைக்கு தனி டிஸைன், பொம்பிளைக்குத் தனி டிஸைன்!
இதுவும் நோம்புக்கு ஒரு மாசம் முந்தியே 'மெட்ராஸ்'லேயிருந்து தபால்லே வந்திருக்கும்!

கயிறு கட்டிக்கிட்டு, விழுந்து கும்பிட்டுட்டு, ப்ரசாதம் வாங்கிக்கணும்!

அதுவரைக்கும் எல்லாப் பலகாரத்தையும் கண்ணாலேயே சாப்பிட்டு முடிச்சிருப்போமா, இப்பக் கையிலே கொடுத்துச் சாப்பிடுன்னு சொல்றப்ப, திங்கற ஆசையே போய், சும்மா வெறிச்சின்னு இருக்கும்.

அக்காங்களும், 'இப்போ சாப்பிட முடியாது, பசியே இல்லை'ன்னு சொல்லிட்டு கொஞ்சமே கொஞ்சம் பிரசாதம் வாயிலே போட்டுகிட்டு எல்லாத்தையும் பெரிய பெரிய அலுமினிய டப்பாக்களிலேயும், தூக்கு, சம்புடம் எல்லாத்துலெயும் நிரப்பி வச்சுட்டு, ரெஸ்ட் எடுக்கப்
போயிருவாங்க!

இவ்வளவு கஷ்டப்பட்டு, காலையிலிருந்து விழுந்து விழுந்து செஞ்சது எல்லாம் அப்படியெ இருக்கும்!

இதே கூத்துதான் அடுத்த வருஷமும்!!!!!!

நன்றி: மரத்தடி Nov 14 2004
***********************************************************************************************************

அன்று அப்படின்னா இன்று இப்படி!!!!



போன சனிக்கிழமை இங்கே ஆக்லாந்து நகரில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் நடந்துச்சு. மகள் அங்கே வசிப்பதால் கொண்டாட்டங்களுக்குப் போய் வந்து அனுப்பிய படங்கள் இவை.

கீழே உள்ளவை நம்மூட்டுலே இருப்பவை.


வெளியே.....................

உள்ளே............

பட்டாஸை எப்படிப் பாதுகாப்பாக் கொளுத்தணுமுன்னு சொல்றாங்க.
இவைகள் எல்லாம் போனவருச 'கை ஃபாக்ஸ்' தினத்துக்காக விற்பனை செஞ்சப்ப நம்ம தீபாவளிக்காக வாங்கி வச்சுக்கிட்டது.

ஒளியும் ஒளியும் மட்டும்:-) ஒலிக்குத் தடா:-)

இன்று மாலை முதல் தீவுளித் திருவிழாவில் முழுமூச்சோட இறங்கறோம். 4 நாள் அஞ்சு இடத்தில். இது திங்கள் வரை:-)

மேற்கொண்டு......நவம்பர் முதல் தேதி கேரள சங்கத்தில் தீபாவளி.

நவம்பர் 15க்கு நம்ம ஊர் தமிழ்ச்சங்கத்தில் கொண்டாட்டம்.

எங்கூர் இந்தியன் க்ளப் தீபாவளி விழா நவம்பர் 22 தேதிக்கு நகரச் சதுக்கத்தில் வச்சுருக்கோம். ரெண்டு மாசம் இழுத்து நீட்டிக் கொண்டாடப்போறோம்:-))))





நட்புகளுக்காகக் கொஞ்சம் இனிப்பு. எல்லாம் இன்று செஞ்சது. (புதுக் கடை. அதனால் இன்று செஞ்சதுன்னு நம்பறேன்)

பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!



என்றும் அன்புடன்,
துளசி & கோபால்

Wednesday, October 22, 2008

புரோகிதர் சொன்ன 'குட்டி'க் கதை

போனவாரம் ஒரு பூஜைக்குப் போயிருந்தோம். தோழி புதுவீடு வாங்கியிருந்தாங்க. இது நம்ம இந்தியன் ஸ்டைல் கிரகப்பிரவேசமும் இல்லை, வெள்ளைக்கார ஸ்டைல் ஹவுஸ் வார்மிங்கும் இல்லை. ச்சும்மா ஒரு பூஜைதான்னு சொன்னாங்க.

புதுசா வந்துக்கிட்டு இருந்தப் பேட்டை. தெருவின் பெயரை எப்பவோ கேட்ட ஞாபகம். இருந்துட்டுப் போகுதுன்னு விட்டுத்தொலைக்க முடியுதா? மூளையைக் குடைஞ்சதுலே, இதே தெருவில் சில வருசங்களுக்கு முன்னே ஒரு கிரகப்பிரவேசத்துக்கு வந்துருக்கோம். அதுக்கப்புறம் அந்தத் தோழி வீட்டை வித்துட்டு வேற ஊருக்குப் போயிட்டாங்க. ஒருவேளை அதே வீட்டைத்தான் இவுங்க வாங்கிட்டாங்களோ? அப்படி இருந்தால் ஒரே வீட்டின் ரெண்டாவது கிரகப்பிரவேசத்துக்குப் போறோமோ?

வீட்டைக் கண்டுபிடிச்சதுமே தெரிஞ்சது இது, அது இல்லை. அப்ப அது எது? மீண்டும் மண்டைக் குடைச்சல். (கடைசியில் அந்தத் தோழிக்கே ஒரு மின்மடல் கொடுத்தேன். வீட்டு எண்ணைத் தெரிஞ்சுக்கலேன்னா என் தலை வெடிச்சுருமுன்னு:-) தொலையட்டும் அப்படியாவதுன்னு விடாம அவுங்க உடனே எண்ணைத் தெரிவிச்சுப் பதில் மடல் போட்டாங்க) அது, இது இல்லை!

நல்லவீடு. முன்புறத் தோட்டத்தில் சிலைகளுடன்கூடியச் செயற்கை நீர் ஊற்று. வாசல் கதவுக்கு வெளியே ரெண்டு யானைகள். உள்ளே நுழைஞ்சப்ப ஒரு இருபதுபேர்கள் இருந்தாங்க. தோழியின் அக்காவும், அப்பாவும் பக்கத்து நாடு ஆஸியில் இருந்து வந்துருந்தாங்க. பண்டிட் ஒருத்தர் ஆண்கள் இருந்த வெளிவெராந்தாவில் பேசிக்கொண்டிருந்தார். கூடத்தில் மணை போட்டுப் பட்டுத்துணி விரித்து அதுலே ஒரு ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படம். அதற்கு முன்னால் ஒரு சின்ன எவர்சில்வர் குடத்தில் மஞ்சள்பூசிய தேங்காயுடன் ஒரு கலசம். கீழே சுத்தியும் பூஜைக்கான சாமான்களை அழகாக அடுக்கி வச்சுருந்தாங்க. இதையெல்லாம் ஒட்டி, இரும்பில் செஞ்ச ஒரு ஹோமகுண்டம் உட்கார்ந்திருந்தது.

டோலக், ஹார்மோனியம், ஜால்ரான்னு இசைக்கருவிகளுடன் அதை வாசிக்கும் ஆட்களும் வந்து சேர்ந்தாங்க. ராமாயணப் புத்தகம் ஒன்னு குறுக்குப் பலகை உள்ள பீடத்தில் பட்டுத்துணி போர்த்தியபடி இருந்தது. பண்டிட் பூஜையை ஆரம்பிச்சார். விஷ்ணு சகஸ்ரநாமத்தில் சில சுலோகங்களுடன் இன்னும் சில மந்திரங்களையும் சொன்னதும் தோழியை ஹோமகுண்டத்தில் மாங்கட்டைகளைப் போட்டு ஹோமம் ஆரம்பிக்கச் சொன்னார். அவர் இருந்த இடத்தில் இருந்தே மந்திரங்கள் (எல்லாம் ஸ்வாஹா ஸ்வாஹா தான்)சொல்லச் சொல்லத் தோழி ஹோமத்தில் போடச்சொன்னவைகளை ஒவ்வொன்னாப் போட்டாங்க. தோழியின் மகள்கள் இருவரும் தாயின் வஸ்திரத்தின் ஓரங்களைத் தொட்டுக்கிட்டுத் தாயின் ரெண்டுபக்கத்திலும் உக்கார்ந்து இருந்தாங்க. எல்லாம் கனெக்டட்:-)

தீ படபடவென கொழுந்துவிட்டு எரியுது. வீட்டின் உள்புறக் கூரையைத் தொட்டுருமோன்னு எனக்குக் கவலை. குளிருக்காகச் சாத்தியிருந்தக் கதவு, ஜன்னல்களால் புகை வெளியேறமுடியாமல் உள்ளேயே மண்டுது. ஆஹா.... இப்ப ஸ்மோக் அலாரம் கத்துமுன்னு காதைத் தீட்டிவச்சுக்கிட்டு இருக்கேன். ஊஹூம்.....புகையால் எரியும் கண்களைத் திறந்து சீலிங் மேல் நட்டேன்.
ஸ்மோக் அலாரம் இல்லவே இல்லை. அது எப்படி சிட்டிக் கவுன்ஸில் இந்த வீட்டை விட்டுச்சுன்னு தெரியலையே...... இது இப்பக் கட்டிய வீடு இல்லை. மூணுநாலு வருசத்துக்கு முந்தி கட்டுனதுதான். வீடு இப்பக் கைமாறி இருக்குன்னு மாத்திரம். அப்படியும் ஏன் அலாரம் வைக்கலை? ஒருவேளை முழுசையும் கழட்டி எடுத்துருக்காங்களா? (எதா இருந்தாலும் இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். தோழிக்குத் தொலைபேசிச் சொல்லணும்)

ஒருகட்டத்தில் தாங்க முடியாமல் பின் கதவைக் கொஞ்சம் திறந்ததும் புகையெல்லாம் வெளியேறுச்சு. ஹோமகுண்டத்தையும் அலாக்காத் தூக்கித் தோட்டத்தில் வச்சுட்டார் ம்யூஸிக் பார்ட்டியில் இருந்த ஒரு இளைஞர்.

பண்டிட் ராமாயணக் கதையைச் சொல்ல ஆரம்பிச்சார். ஸ்ரீ ராமர் காட்டுக்குப் போனபிறகு பரதன் அவரைத் தேடிவந்த பகுதி. தந்தை சொற்படி பரதனே நாட்டை ஆளணுமுன்னு சொல்லி நீதி வழுவாமல் ஆட்சி செய்வது பற்றி விளக்கம் சொல்றார். மனுசன் செய்யக்கூடாதவைகளைச் சொல்றார். அதுலே ஒன்னு புறம் பேசுதல். அடுத்தவங்களைச் சொற்களால் அடிக்கக்கூடாது. பொரணிபேசும் மனுசர்கள் சகவாசம் கூடாது. யாராவது அடுத்தவங்களைப் பத்தி இல்லாததும் பொல்லாததுமாச் சொல்லும்போது, ஜூஸியா இருக்கேன்னு அதையெல்லாம் காது கொடுத்துக் கேக்கறதும் பாவத்தில் ஒன்னு. மனுசர்களுக்கு உள்ளும் புறமும், எண்ணம் நடத்தை எல்லாம் ஒன்னா இருக்கணும். இந்த இடத்தில்தான் அந்தக் குட்டிக் கதை வந்துச்சு.

ஒரு ஆட்டுக்குட்டி இருந்துச்சு. ஒருநாள் பார்க்கவே பயங்கரமா இருக்கும் கொடியமிருகம் ஒன்னு அதை எப்படியோ வளைச்சுப்பிடிச்சு அடிச்சுத் தின்னப் பார்த்துச்சு. அப்ப அந்தவழியா வந்த ஒரு மனுசன் ஆட்டுக்குட்டியை அந்த மிருகத்துக்கிட்டே இருந்துக் காப்பாத்தி, தன்னோட வீட்டுக்குக் கொண்டுபோய் வளர்க்கிறார். தினம் நல்ல இலை தழை எல்லாம் கொடுத்து அன்பாக் கவனிச்சுக்கிட்டார். ஆட்டுக்குட்டிக்கு ரொம்ப மகிழ்ச்சியான வாழ்க்கை. அப்படியே வளர்ந்து பெருசாச்சு.


ஒருநாள் அந்த ஆட்டைவெட்டிச் சமைக்கலாமுன்னு அந்த மனுசன், பெரிய கத்தியைத் தீட்டி எடுத்துக்கிட்டு வந்து ஆட்டின் முன்னால் நிக்கறார். அந்த ஆடு இதைப் பார்த்ததும் கரகரன்ன்னு கண்ணீர்விட்டு அழுதுச்சு. அப்புறம் இருந்தாப்போல இருந்து 'இடி இடி'ன்னு ஒரே சிரிப்பாச் சிரிச்சது. இப்ப மனுசனுக்கு ஒரே திகைப்பு.

'உன் அழுகைக்குக் காரணம் தெரியும், சாகப்போறோமேன்னு அழுதே. இப்ப எதுக்காக இப்படிச் சிரிக்கிறே'?ன்னு கேட்டதுக்கு ஆடு சொல்லுச்சாம், ஒருநாள் என்னை அந்தப் பயங்கரமான கொடிய மிருகத்துக்கிட்டே இருந்து காப்பாத்துனீங்க. அந்த மிருகத்தோட உருவமும் செய்கையும் கொடியதா இருந்து கண்ணுக்குத் தெரிஞ்சது. ஆனா என்னை அன்போடு வளர்த்துட்டு, இப்பக் கொல்ல வந்துருக்கீங்க. என்னை ஒருநாள் கொன்னு தின்னணும் என்ற எண்ணத்தோடு உள்ளுக்குள்ளே கொடுமைக்காரனா இருந்துக்கிட்டே அன்பா இருக்கறதுபோல் இவ்வளோ நாளா நடிச்சீங்களே. உள்ளே வேற வெளியே வேற ன்னு இனம் காணமுடியாம நீங்க நடந்துக்கிட்டதை நினைச்சுத்தான் சிரிப்பு வந்துருச்சு'ன்னு.

கொஞ்சம் யோசனை செஞ்சு பார்த்தால்........... இது எவ்வளோ உண்மை. பொய் முகங்கள் ஏராளம். இல்லை? மனிதரில் இனங்காண முடியலையே (-:

தீப ஆராதனையோடு பூஜை முடிஞ்சது. தோழி வந்திருந்த அனைவரையும் வணங்கி, வீடு நாலு மாசத்துக்கு முன்னால் வாங்கினதைச் சொல்லி உடனே கிரகப்பிரவேசம் செய்யமுடியாமல் போச்சு. அதுதான் இப்போ ஒரு பூஜை நடத்தறோம். என் அப்பா அம்மா வந்து இங்கே இந்த வீட்டில் என்னோடு இருப்பாங்கன்னு ஆசையா இருந்தேன். இப்ப அப்பா பெரிய அண்ணன் வீட்டுக்குப் போய் ஒரு மாசம் இருந்துட்டு, இங்கே என்னுடன் வந்து இருக்கப்போறார்ன்னு சொன்னாங்க. சொல்லும்போதே தொண்டை அடைச்சமாதிரி குரல் கம்மிக் கண்ணில் தண்ணீர் வந்துருச்சு. காரணம்?

வீடு வாங்கி, ( நாலு மாசம் முன்பு) குடியேறும் விசேஷத்துக்காக அப்பா அம்மா ஆஸியில் இருந்து இங்கே வந்துருந்தாங்க. வந்த இடத்தில் அம்மாவுக்குத் திடீன்னு உடல்நிலை சரியில்லாமல் போய் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனாங்க. வீட்டுச் சாவி கிடைச்ச அன்னிக்கு அம்மா இறந்துட்டாங்க. ஆசையா வாங்குன வீட்டை அம்மா இருந்து பார்க்கலையேன்ற துக்கம் தோழிக்கு(-:

ப்ரசாதம் எல்லோருக்கும் பரிமாறினதும் சுடச்சுட ஏலக்காய் டீ. இதை முடிச்சதும் பஜனை பாட ஆரம்பிச்சாங்க. அமர்ன்னு ஒருத்தர் ரொம்ப அழகா ஒரு பாட்டுப் பாடுனார். இவர் பாடுவாருன்னே எனக்குத் தெரியாது. அவர் ஹார்மோனியத்தை எடுத்து, ஸ்வரக்கட்டைகளை அமுக்கிப் பார்த்ததும், ச்சும்மா ( என்னைப்போல) பாவனை காட்டுறாருன்னு இருந்தேன்! இத்தனைக்கும் அவுங்க கிறிஸ்துவர்கள். ராமரைப் பற்றிய பஜன் சூப்பர். யாரோட பாட்டுன்னு கேட்டேன். ஜக்ஜீத்தோடதாம். அதுக்குப்பிறகு இன்னும் சில பாட்டுக்கள் பாடுனாங்க. அதுக்குள்ளே டின்னர் தயாரா மேசைக்கு வந்துருச்சு.

ஃபிஜி இந்தியர்களின் ராமாயண மண்டலிக்கு நாங்கள் ஒரு 20 வருசமாப் போய்க்கிட்டுத்தான் இருக்கோம். மக்கள் அதிகமாச் சேரச்சேர கருத்துவேறுபாடுகளும் வர்றது சகஜம்தானே? இப்ப அதுவே நாலு மண்டலியாப் பிரிஞ்சு கிடக்கு. நாங்கள் இன்னும் தாய் மண்டலிக்குத்தான் போறோம். மற்ற இடங்களில் இருந்து அழைப்பு வந்தாலும் ஒரே நாளில் எல்லா இடத்திலும் விழா வைக்கறதாலே போக முடிவதில்லை. எதுக்கு இதை இங்கே சொல்றேன்னா..... நாங்க போகும் தாய் மண்டலியில் பாட்டுக்கள், பஜன்கள் எல்லாம் பாரம்பரிய இசை, 128 வருசத்துக்குமுன்னே முதல் இந்தியர்கள் ஃபிஜிக்குக் கொண்டுவரப்பட்டாங்க பாருங்க பீஹார், ஒரிஸ்ஸாவில் இருந்து, அப்ப அவுங்க பாடிக்கிட்டு இருந்த அதே ஸ்டைல். கொஞ்சம் 'கச்சாவா' இருக்கும். பாடுறவங்களும் அப்படியே இருப்பாங்க!!!!

ஆனா இங்கே பாட்டுகள் எல்லாம் லைட் ம்யூஸிக் ரகமா, ஜனரஞ்சகமா இருக்கு. பாடுபவர்களும் கல்யாணவீட்டுக் கச்சேரிகளில் நாம் பார்ப்போமே அந்த ரகம். இவுங்களுக்குன்னு இருக்கும் பண்டிட், கதையெல்லாம் சொல்லிப் பிரசங்கம் செய்யறார். காலமாற்றம் நல்லாவே புரியுது!

தோழியின் நாய்க்கு, வீட்டுக்குள்ளே இத்தனை பேர் கூடி இருக்கும்போது, தன்னையும் உள்ளே கூப்புடலையேன்னு ஒரே குறை. கண்ணாடிக் கதவில் எட்டிப் பார்த்துப் பிறாண்டிக்கிட்டே இருந்துச்சு. விரலுக்குப் பிடித்தம் இல்லாமல் கண்ணாடியில் வழுக்கிவழுக்கிப் போய்க்கிட்டு இருந்துச்சு. பாவம்.

தோழியும் நம்மைப்போல ஒரு யானைப்ரேமி. வீட்டில் அழகழகான யானைகள். ஆனாலும் இப்போ புதுவரவா அங்கே இருக்கும் ஒரு யானை எனக்கு வருத்தத்தையே தந்துச்சு. நீண்ட தந்தங்களோடுப் பெரிய யானை ஒன்னு முழங்கால்போட்டு குனிஞ்சு உக்கார்ந்துருக்கு. அதன் முதுகின்மேல் பெரிய கண்ணாடி வச்ச காஃபி டேபிள். பாவம். யானை..... எவ்வளவு பெரிய உருவம். கஷ்டப்பட்டு இப்படி முட்டிபோட்டுருக்கேன்னு எனக்குப் பாவமா ஆயிருச்சு.



நம்ம வீட்டிலும் ஒரு சின்ன யானை உக்கார்ந்த நிலையில் இருக்குதான். எனெக்கென்னமோ, நம்மது, விளக்குக் கம்பத்தில் சாய்ஞ்சு, ஓய்வா உக்கார்ந்து, சந்தோஷமா சிரிக்கிறாப்போலயும். தோழி வீட்டு யானை கஷ்டப்பட்டு குனிஞ்சு சுமைகளைத் தாங்கிச் சிரமப்படுவது போலவும் ஒரு தோணல். இந்த மனசு இருக்கு பாருங்க இல்லாத கற்பனையெல்லாம் செஞ்சுக்கிட்டு அல்லாடுறதுலே கெட்டி!

Tuesday, October 21, 2008

ஈழம்- தூயாவின் அழைப்பை ஏற்று.

1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும்? அனுபவங்கள்?

உண்மையைச் சொன்னால் அதிகம் ஒன்னும் தெரியாது. சிலோன் ரேடியோ மட்டுமே ரொம்பப் பரிச்சயமா இருந்தது என் சின்னவயசு நாட்களில். ஒருமுறை அண்ணன்(அப்பெல்லாம் ஸ்ரீலங்கா என்ற பெயர் இல்லை) சிலோனுக்குச் சுற்றுலா போய்வந்தப்ப ஒரு ஜார்ஜெட் புடவை வாங்கிவந்தார். அழகான ஊர்ன்னு அவர் சொல்லக் கேள்விதான். வெளிநாட்டுச் சாமான்கள் எல்லாம் மலிவாக் கிடைக்குது. ஃப்ரீ போர்ட்ன்னு சொன்னார்.

நான் தமிழ்நாட்டை விட்டு 35 வருசமாகப்போகுது.அதுக்குப்பிறகு இருந்த மாநிலங்களில் தமிழ்நாட்டுச் செய்திகள் ஒன்னும் அதிகமா வந்ததில்லை. நாட்டை விட்ட பிறகு ரொம்பச் சுத்தம்...... 1987-இல் நாங்கள் ஃபிஜித்தீவுகளில் இருந்தப்ப, வேறெந்த நாட்டுக்கோ (கனடான்னு நினைக்கிறேன்)கொண்டுபோறோமுன்னு சொல்லி, விஸா ஒன்னுமில்லாமல் எப்படியோ ஃபிஜிவந்து சேர்ந்துட்ட அகதிகளைப் பற்றிச் செய்தி வந்துச்சு. அதுலே சில பெண்களை உள்ளூர் வாலிபர்கள் திருமணம் செஞ்சுக்க முன்வந்தாங்க. மற்றவர்களை அரசு திருப்பி அனுப்பிட்டாங்க. சேதி வந்து நாங்க போய்ப் பார்க்குமுன்னே எல்லாம் நடந்து முடிஞ்சுருச்சு.

ஒரு இலங்கைக் குடும்பம், எங்கள் நண்பர்களுக்கு நண்பர்களா இருந்தாங்க. அவுங்களும் பிரச்சனையைப் பற்றி ஒன்னும் சொன்னதில்லை.
ஒர்க் பர்மிட்டில் வந்தவங்க அவுங்க. சில வருசங்களில் இங்கிலாந்துக்குப் போயிட்டாங்க.

இங்கே நியூஸியில் இப்ப ஒரு பத்துப்பதினைஞ்சு வருசமா இலங்கை மக்கள் அதிகம் வரத்தொடங்கி இருக்காங்க. தமிழ்ச்சங்கம் ஆரம்பிச்சமுதல் அவுங்களில் பலரோடு நல்ல தொடர்பு இருக்கு. போராட்டம்,தகவல்கள் எல்லாம் அவுங்ககிட்டே இருந்து கேட்டறிஞ்சதுதான்.

சுநாமி வந்தப்ப இங்கே நிதி திரட்டி இலங்கைக்கு TRO வுக்கு அனுப்புனோம்.
அதுலேயும் ஊழல் நடந்ததாக இங்குள்ள சிலர் நினைக்கிறாங்க. அது என்னன்னு எனக்குப் புரியலை. இவுங்களுக்குள்ளேயே பலவிதக் கருத்துவேறுபாடுகள் இருக்கு. (மேலும் இப்போதைக்கு தமிழ்ச்சங்கத்துலே இருக்கும் தமிழ்நாட்டுத் தமிழ்க் குடும்பம் எங்கது மட்டும்தான்)


2. தமிழீழத்திற்கு உங்கள் ஆதரவு எந்த அளவிற்கு உண்டு?

எனக்கு இதுக்குப் பதில் சொல்லத் தெரியலை. தனிநாடா ஆகணுமா? தமிழ்நாட்டைத் தனிநாடா ஆக்குவோமுன்னு சொன்ன கட்சிகள் நினைவுக்கு வருது. ஒரு நாட்டைத் துண்டு போடுவது லேசுப்பட்டக் காரியமா எனக்குத் தோணலை. தெரியாத விஷயத்தில் வாயை மூடிக்கிட்டு இருப்பதுதான் உத்தமம். அப்படியும் மீறி.... சொல்ல விரும்புவது என்னன்னா.... இந்தியாவில் தமிழகம் ஒரு மாநிலமா இருப்பது போல இலங்கையிலும் தமிழர்கள் உள்ள பகுதி ஒரு மாநிலமா ஆகி, அங்கே தனி மந்திரிசபை அமைத்து ஆட்சி நடத்தலாம். அதே சமயம் அது மத்திய ஆட்சிக்கும் உட்பட்டுச் செயல் படணும் என்று நினைக்கிறேன்.



3. ஈழத்து செய்திகளை ஆர்வத்துடன் படிப்பீர்களா? எங்கு படிப்பீர்கள்?

ரொம்ப ஆர்வமுன்னு சொல்லிக்கமுடியாது. வலையில் சிலவற்றையும், தமிழ்மணத்தில் சகபதிவர்கள் எழுதுவதில் சிவற்றையும் படிக்கிறேன்.





4. அண்மையில் தமிழ்நாட்டிலிருந்து ஈழத்தமிழர்களுக்காக ஒலிக்கும் குரல்களை பற்றிய உங்கள் கருத்து என்ன?

இதைச் செய்ய இவுங்களுக்கு 30 வருசமாச்சான்னு இருக்கு. முளையில் கிள்ளி எறிந்திருக்கவேணாமோ? வளரவிட்டுட்டாங்களேன்னு இருக்கு.



5. ஈழத்தில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் எம் உறவுகளுக்கு சொல்ல விரும்புவது?

ரெண்டு வலிமையுள்ளவர்களுக்கிடையில் எளியவர்கள் மாட்டிக்கிட்டு அவதிப் படுவதை நினைத்தால் மனசுக்குக் கஷ்டமா இருக்கு.இங்கே மட்டுமில்லை, உலகில் எங்கெங்கே சண்டை நடக்குதோ அங்கெல்லாமும் நடுவில் அகப்பட்டுக்கிட்டுக் கஷ்டப்படுவது சாதாரண மக்கள்தான். இந்தியாவில்கூடப் பாருங்க ரெண்டு மதச்சண்டையில் குண்டு வெடிக்கும்போதெல்லாம் இழப்புப் பொதுமக்களுக்குத்தானே?


தூயா கேட்டதும் என்ன சொல்றதுன்னு கொஞ்சம் முழிச்சேன். தெரிஞ்சவரை உண்மைகளை மட்டும் சொல்லி இருக்கேன். புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

இந்தத் தொடருக்கு எழுதும் விருப்பம் உள்ளவர்கள் இதையே ஒரு அழைப்பாக எடுத்துக் கொண்டு எழுதுங்க.

புதிரான புதிரின் விடை.

நேத்துக் கேட்டக் கேள்விக்கு இதுதான் விடை. தொட்டுக்க ஆலிவ் ஆயில் வச்சுக்கும் டிஷ். நடுவுலே கொஞ்சம் ஊத்திக்கனும். ரொட்டித் துண்டை அதில் தொட்டுக்கிட்டு அந்த வரிவரியா இருக்கும் அடுக்குகளில் தேய்ச்சுக்கிட்டே இழுத்தால் கூடுதலா ஒட்டி இருக்கும் எண்ணெயை வழிச்சே எடுத்துறலாமாம்.

போதுண்டா சாமி. ஒவ்வொன்னுத்துக்கும் என்னாமாதிரி கண்டுபிடிப்புகள்!!!!
பத்தில் இருந்து அஞ்சுக்கு வந்துருக்கு. இன்னும் சில வாரங்களில் ரெண்டு இல்லேன்னா ஒன்னுன்னு வரும். அப்போ பார்த்துக்கலாமுன்னு இருக்கேன்.

இட்லிமொளகாய்ப்பொடி & எண்ணெய்க்கு சரிவருமா?


யாரும் அடிக்கவரலைன்னா தமிழ்பிரியனுக்காக இந்தப் படம்.

அஞ்சற்க:-))))கேள்வியெல்லாம் கிடையாது.

இதுக்குப் பெயர் ஸால்ட் பாத்( Saltbath) பழையகாலப் பாத்திரம். கல் உப்பு போட்டுவச்சுக்குவாங்களாம். (அந்தக் காலத்துலே டேபிள் ஸால்ட் இல்லை போல)அடுப்புக்குப் பக்கத்தில் வச்சுக்கிட்டுச் சமைக்கும் சமயம் தேவைப்படும்போது கையாலே எடுத்துப் போட்டுக்க ஏதுவா இருக்குமாம்.

இப்போ நமக்கும் பயன் இல்லைன்னாலும் பார்க்க அழகா இருக்கேன்னு மார்கெட்லே புடிச்சாந்தேன்:-)


Sunday, October 19, 2008

பச்சை + வெள்ளை = ?

ப்ரொக்கலிக்கும் காலி ஃப்ளவருக்கும் கல்யாணம்

'வாளைமீனுக்கும்....' ராகத்தில் பாடிப்பாருங்க. சரியா வருதா?

ஆச்சு கல்யாணம். அப்புறம் குழந்தை குட்டிங்கதானே? அப்படிப் பொறந்ததுதான் இந்த ப்ரொக்கோ ஃப்ளவர்.(Brocco flower) அப்படியே காலியை உரிச்சுவச்சமாதிரி வடிவம். ப்ரொக்கி ஜாடையில்(வண்ணத்தில்) அழுத்தமா இல்லாம, வெள்ளையுடன் ஒரு தீற்றல் கலந்த பச்சையா ஒரு பொ(பு)து நிறம். சிநேகாக் கலர்ன்னு இப்ப வலம்வருதே அந்த நிறமா இது இருக்கோ? ( புடவை ஒன்னு வாங்கி வச்சுருக்கு. வெளியே எடுத்துப் பார்த்துட்டுச் சொல்லவா?














ப்ரொக்கொ பூ ( மேலே 2 படங்கள்)

புதுக் காய்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் பொறுப்புணர்ச்சியோடு இருந்த என் கண்ணுக்கு இது மட்டுமில்லாம இன்னொண்ணும் அகப்பட்டது. இதுக்குப் பெயர் விட்லோஃப். (whitlof) தாமரை மொட்டுப்போல இருந்துச்சு. விலை கொஞ்சம் அதிகம்தான். கிலோ 15 டாலர். நாமென்ன ஒரு கிலோவா வாங்கப்போறோம்? சின்னதா ஒரு பூ போதும். தின்னு பார்த்துட்டு ஆவன செய்வோமே......


100 கிராம் கூட இல்லாத அந்த பூவுக்கு தப்பான எண்ணில் தட்டிக் கடைக்காரம்மா 2.85 வாங்கிருச்சுன்னு நாலைஞ்சு நாளைக்குப் பிறகுதான் கண்டுபிடிச்சேன். (கார்லே அந்த ரசீது விழுந்து கிடந்துச்சு) சரியான மண்டகப்படி கிடைச்சது கோபாலுக்கு. எத்தனை முறை சொல்லி இருக்கேன், ஸ்கேன் செஞ்சு விலை மானிட்டரில் தெரியும்போது ஒரு கண்ணு வைக்கணுமுன்னு! ப்ரோக்கோப் பூவைப் பத்தி அந்தம்மாக்கிட்டேச் சின்னப்பேச்சுக் கொடுத்துக்கிட்டே நம்ம புத்திமதியைக் கோட்டை விட்டுருக்கார்(-:

சூப்பர்மார்கெட்டுலேயும் கவனமா இல்லாட்டி , தேவையில்லாமக் காசை வீணாக்கணும். வேலை செய்யும் பசங்க எல்லாம் ஹைஸ்கூல் மாணாக்கர்கள். பகுதி நேர வேலை இங்கேதான் சுலபமாக் கிடைக்கும். ஏனோ தானோன்னு பில் போடறதுதான். பல காய்கறி & பழங்ககளின் பெயர் தெரியாம சூப்பர்வைசரைக் கூப்பிட்டுக் கேப்பாங்க சிலர்(-: தப்பான பில்லைக் காட்டிக் கேட்டோமுன்னா இருக்கவே இருக்கு oops...sorry!

இந்த விட்லோஃப் மனுசனை விட்டியாக்கிருச்சு. சாலட்லே அப்படியே சேர்க்கும் லெட்டூஸ் வகைதான். சேர்த்தேன். நறுக்கினதும் உள்ளே பார்த்தால் சவாய் கேபேஜ் போல் சில இதழ்களில் அலையாய் ஒரு நெளிவு.. சுவை?
நல்லாவே இல்லை. லேசான கசப்பு. இதுக்கும் சேர்த்து கருவிக்கிட்டு இருக்கேன் மனுசனை இப்ப.



அந்தப் ப்ரொக்கோ பூவும் அப்படி ஒன்னும் நல்ல ருசியா இல்லை. அதே காலியின் சுவைதான். அதுவும் நம்ம ஸ்டைலில் மிளகாய், மஞ்சள், மல்லின்னு சேர்த்ததும் நிறம் மாறி ஒரு அழுக்குப் பச்சையா இருந்துச்சு.

ஆகக்கூடி இன்றைய சமையல் தண்ட வகையில் வந்தது(-:

சரி. ஒருநாள் அப்படின்னா ஒரு நாள் இப்படித்தான். அதுதான் வாழ்க்கை( அடடா என்னா தத்துவம். என்னா தத்துவம்)

அது இருக்கட்டும் ....வந்துட்டுப்போறவுங்க வெறுங்கையாப் போகாம, இதோ இது என்னன்னு கண்டுபிடிச்சுச் சொல்லிட்டுப் போங்க.



Friday, October 17, 2008

அண்ணனின் நண்பர்!

அண்ணனுக்கு 'திக் ·ப்ரெண்ட்ஸ்' கிடைச்சுட்டாங்க!. அவுங்க மூணு பேரும் எப்பவும் ஒண்ணாவே இருப்பாங்க!


பழனிச்சாமி அண்ணன், நாராயணன் அண்ணன் இவுங்கதான் அவுங்க! இதுலே பழனிச்சாமி அண்ணன் அந்த ஊரு பண்ணையார் வீட்டுலே ஒரே மகன். அவுங்க குடும்பத்துலேயே பெரிய படிப்பு(!) படிக்கற ஒரே ஆள்.
அவருக்கு ஒரு மொறைப்பொண்ணுகூட ரெடியா இருக்கு. ஆனா, அந்த அண்ணன் சொல்லிருச்சாம், படிப்பு முடிஞ்சாவுட்டுத்தான் கல்யாணம்னு!

அவுங்களுக்கு நிறைய நிலபுலன்கள் இருக்குல்லே, அங்கெல்லாம் நாங்க போய் விளையாடிக்கிட்டு இருப்போம். ஞாயித்துக் கிழமைங்களிலே வண்டிகட்டிகிட்டு வந்துட்டாருன்னா, நாங்க தென்னந்தோப்புக்குப் போறோம்னு
அர்த்தம்! வாடகை சைக்கிள் எடுத்துகிட்டுப் போணும்னு எங்க அண்ணன் நினைக்கும். ஆனா நாராயணன் அண்ணனுக்குச் சைக்கிள் ஓட்டத் தெரியாது!

மொதல்லே அவுங்க கூட்டத்துலே என்னச் சேத்துக்கலே. நானு சும்மா இருக்கற ஆளா? அழுது, ஆகாத்தியம் பண்ணி, அம்மாவோட சிபாரிசுக்கு வழிசெஞ்சு, காரியத்தைச் சாதிச்சுகிட்டேன். அந்த அண்ணனே என் கண்ணீரை(!)பாத்துட்டு, 'சும்மா இருப்பா, தங்கச்சி வரட்டும்.நம்ம வீட்டுலேயும் அங்கே எவ்வளவு சின்னப்
புள்ளீங்க இருக்காங்க, அவங்களோட விளையாடட்டும். எங்க வீட்டுக்கெல்லாம் அனுப்ப மாட்டீங்களாம்மா'ன்னு அம்மாகிட்டே கேட்டார்.

அப்புறம் ரொம்ப நாள் கழிச்சு,பழனிச்சாமி அண்ணனோட அப்பா சிபாரிசு செஞ்சதாலெயும், நாங்கெல்லாம் கெஞ்சிக் கூத்தாடுனதாலேயும்,
ஒரு வருஷம், சின்ன கரும்புக் காடு குத்தகைக்கு அம்மா எடுத்ததும், நானும் அண்ணனும் எங்க 'க்ளாஸ்' பசங்களை எல்லாம் கூட்டிகிட்டுப் போய் ,(அப்ப வெல்லம் காச்சற சமயம் வேற!) எல்லாத்தையும் தின்னே தீர்த்ததும் தனிக் கதை!
அந்த வெல்லப் பாகுதான்,தினம் இட்டிலி, தோசைக்குத் தொட்டுக்கறது. நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லா இருக்கும்!


நம்ம நாராயணன் அண்ணனை மொத மொதல்லே பார்த்தப்ப, யாரோ பெரியவரு, அண்ணன்கிட்டே ஏதோ பேசிக்கிட்டு இருக்காருன்னு நினைச்சேன். அந்த அண்ணனுக்கு தலைமுடிலெ நிறைய நரை இருந்துச்சு. கால்லேயும்
செருப்பெல்லாம் இல்லே. அவரு போட்டுகிட்டுருந்த சட்டையும், வேட்டியுமே பழசா, நிறம் மங்கி இருந்துச்சு. ஆங்.. சொல்ல மறந்துட்டேனே, அந்த ஊர்லெ ஹைஸ்கூல்லே பெரிய க்ளாஸ் படிக்கிற அண்ணனுங்க
எல்லோரும் வேட்டிதான் கட்டிக்கிட்டு இருந்தாங்க.அதனாலே நம்ம அண்ணன்கூட வேட்டிதான் கட்ட ஆரம்பிச்சிருந்தார். ரொம்ப 'ஸ்டைலா' தரையக் கூட்டற மாதிரி கட்டிக்கிட்டு இருப்பாரா, அம்மா பார்த்தா திட்டுவாங்க!

நாராயணன் அண்ணனுக்குக் கோயில் இருக்குன்னு அண்ணன் சொன்னாரு! ஒரு நாளு அம்மாகிட்டே அண்ணன் சொல்லிகிட்டு இருந்தப்ப நான் அங்கெதான் இருந்தேன். 'அந்த அண்ணனுக்கு அப்பா இறந்துட்டாராம். அவுங்க வீட்டுலே மொத்தம் ஆறு பசங்களாம். நாராயணன் அண்ணந்தான் எல்லாத்துக்கும் மூத்ததாம். அப்புறம் நாலு பொண்ணுங்களாம். கடைசியா ஒரு தம்பி இருக்கானாம். இன்னும் அஞ்சு வயசு ஆகலையாம். இந்த அண்ணன் படிச்சுமுடிச்சுத்தான் வீட்டைக் காப்பாத்தணுமாம்.

அவுங்க அப்பாதான் நம்ம பெருமாள் கோயில்லே பட்டராம். இன்னும் மூணு பட்டருங்க இருக்காங்களாம். இவுங்கல்லாம் முறை போட்டுகிட்டு
கோயில் பூஜை செய்வாங்களாம். இப்ப அப்பா இல்லாததாலே நாராயணன் அண்ணன் அவுங்க முறைக்கு கோயில் பாத்துக்கணுமாம்.' அந்த அண்ணன் நல்லாப் படிக்குமாம். அவுங்க வீடு அக்ரஹாரத்துலே இருக்காம்.

'அக்ரஹாரத்துலே எங்கண்ணே அவுங்க வீடு'ன்னு நான் கேட்டதுக்கு, நம்ம வைத்தி வீட்டுக்கு நாலாவது வீடுன்னு அண்ணன் சொன்னாரு.

நாலாவது வீடா...ம்ம்ம்ம்ம்ம்ம்

"ஒரு தாத்தா, திண்ணையிலே ஈஸிச்சேர்லே உக்காந்து, எப்பப்பாத்தாலும் பேப்பர் படிச்சுகிட்டு இருப்பாரே அந்த வீடா?"

" அது இல்லெ. 'நரசுஸ் காபி'க்கு எதிர் வீடு"

"ஓ, அப்ப அது வைத்தி வீட்டுக்கு இந்தப்பக்கம் நாலாவது வீடா?"

ஆனா, அந்த வீடு எப்பப் பாத்தாலும் மூடியே இருக்குமே! அக்ரஹாரத்துக்குள்ளே நேராப் போனாக் கடைசியிலே ஒரு கோயில் வரும்.
அது சிவன் கோயில். நாங்கெல்லாம் கோயிலுக்குப் போறபோது, ரெண்டுபக்கமும் இருக்கற வீடுங்களைப் பாத்துகிட்டே போவோம்.
அக்ரஹாரத்துலே எல்லா வீடுங்களும் ஒரேமாதிரி இருக்கும்.ரெண்டுபக்கமும் திண்ணை! வாசக்கதவுலே நின்னு பாத்தா, நேஏஏஏஏஏரா
பின்னாலெ இருக்கற கிணறு வரைக்கும் தெரியும்.

'நரசுஸ் காபி இங்கே கிடைக்கும்'னு போர்டு மாட்டியிருப்பாங்க! கொஞ்சநாளாதான் இந்த போர்டு இருக்கு. இதுக்கு முன்னாலெ,
நாங்க பச்சைக் காபிக்கொட்டை மதுரையிலே இருந்து வாங்கறது வழக்கம். வீட்டுலேயே அதை வறுத்து, ஆட்டுக்கல்லுலே இடிச்சுத்
தூளாக்கி காபி போடுவாங்க. அம்மாக்கு காபி நல்லா இருக்கணும். சில சமயம் சாப்பிட நேரம் இல்லைன்னு, வீட்டுக்குவந்து ஒரு காபி குடிச்சுட்டு அவசரமா ஓடுவாங்க!

'நரசுஸ் காபி' வந்த பிறகு, நாங்க அங்கேயே வாங்க ஆரம்பிச்சுட்டோம். அஞ்சாறு நாளைக்கு ஒருதடவை நான் போய்,ஒரு பவுண்டு காப்பித்தூள் வாங்கிகிட்டு வருவேன். எத்தனை நாளு போயிருக்கேன், திண்ணை மேலே ஏறிக் குதிச்சு விளையாடியிருக்கேன்? ஒரு நாளு கூட எதுத்த வீட்டுலே யாரையும் பாத்த ஞாபகம் இல்லையே!

அடுத்த தடவை, காப்பித்தூள் வாங்கப் போனப்ப, எதுத்த வீட்டுக் கதவை தட்டுனேன். யாரும் இல்லை! ஒருநாளு, நாராயணன் அண்ணன்
அவரோட தம்பியைக் கூட்டிகிட்டு வந்திருந்தார். அவன் பேரு கிச்சா. கிருஷ்ணனைதான் அவன் கிச்சான்னு சொன்னானாம்.

அப்பப்ப மூணு அண்ணனுங்களும் எங்க வீட்டுலேயே படிச்சுகிட்டு இருப்பாங்க. எங்க வீட்டுக்குள்ளே நுழைஞ்சதும், ஒரு ஹால் இருக்கு.அங்கெ இருக்கற அலமாரியிலேதான் என் புஸ்தகமெல்லாம் வச்சுருக்கேன். அதுக்கு இடது பக்கமா ஒரு பெரிய ரூம் இருக்கு. அதுதான் அண்ணனோடது. இவுங்கெல்லாம் அந்த ரூமோடு சரி. உள்ளேயெல்லாம் வரமாட்டாங்க.

இவ்வளோ நாளா இவுங்களையெல்லாம் பாத்து பாத்து எங்க வீட்டுலே எல்லாருக்கும் பழகிடுச்சு. அம்மா அவுங்களைப் பாத்தா எப்பவும்
ரெண்டு வார்த்தை பேசாம இருக்கமாட்டாங்க. என்ன படிக்கிறிங்களா? சாப்பாடு ஆச்சான்னு ஏதாவது கேப்பாங்க! நாந்தான், என்ன
சாப்டீங்க? என்ன குழம்புன்னு பெரிய மனுஷியாட்டம் கேட்டுக்கிட்டு இருப்பேன்.

பழனிச்சாமி அண்ணன், கோழிக்குழம்பு, மீன் குழம்புன்னு ஏதாவது சொல்லும். அப்ப நாராயணன் அண்ணன் மூஞ்சைப் பாக்கணும். கண்ணை ஒருமாதிரி மூடிகிட்டு, ரெண்டு கையாலேயும் காதை பொத்திக்கும். எங்களுக்கெல்லாம் சிரிப்பா வரும்! எங்க அண்ணன் 'ஆமாண்டா, நீ அதெல்லாம் சாப்புடமாட்டேல்ல.சரி. நீ என்னடா இன்னைக்கு சாப்பிட்டே'ன்னு கேக்கும். அதுக்கு நாராயணன் அண்ணன் 'பொரிச்ச கூட்டு, வெண்டைக்கா கறி'ன்னு ஏதாவது சொல்லுமா, இவுங்க இன்னும் சத்தம் போட்டுச் சிரிப்பாங்க! 'ஏண்டா, நீ 'கறி'யெல்லாம் திங்கறியா?'ன்னு கேப்பாங்க. ஐய்யய்யோ.. இது வேற கறி. நீங்க நினைக்கற கறி இல்லே'ன்னுவாரு. கறின்னா ஆட்டுக்கறி இல்லேயாம்!

நாராயணன் அண்ணனுக்கு கோயில் 'டூட்டி' இருக்கறப்ப, சாயந்திரமா மத்த ரெண்டுபேரும் போய் அங்கே வெளி மண்டபத்துலே உக்காந்துகிட்டு ஏதாவது பேசிகிட்டோ,படிச்சுக்கிட்டோ இருப்பாங்களாம்.

கோயிலை ஒட்டி ஆறு ஓடுதுல்லே, அதனாலே காத்து ஜிலு ஜிலுன்னு வரும்னு அண்ணன் சொல்வார்.கோயிலுக்கு அப்படி யாரும் ரொம்ப வர்றது இல்லேன்னும் சொன்னாரு. ரெண்டு மூணு பேருவந்தாலே ஜாஸ்தியாம்! நான்கூட எப்பவாவது அண்ணன்கூடப் போவேன்.

பெரிய பரிட்சை வருதுன்னு சொன்னாங்க. மூணுபேரும் ராத்திரி ரொம்ப நேரம் இருந்து படிச்சாங்க. சிலநாளு, ஸ்கூல்லேருந்து அப்படியே வீட்டுக்கு வந்துட்டு, படிச்சுகிட்டு இருப்பாங்க. ஒருநா, கிச்சா, அவனோட அண்ணனைக் கூப்பிட வந்தான். நான் அவனை உள்ளே கூட்டிட்டுப் போய் அக்காங்ககிட்டேக் காமிச்சேன்.

அவன் என்னை மாதிரி! புது ஆளுங்கன்ற பயமில்லாம நல்லாப் பேசுனான். 'நாணாவைக் கூப்புட வந்தேன்'னு சொன்னான்.நாராயணன்
அண்ணனுக்கு வீட்டுலே நாணான்னு பேராம்! கொஞ்சநேரம் அவன்கிட்டே நாங்கெல்லாம், அவுங்க அக்காங்க பேரெல்லாம் கேட்டுக்கிட்டு இருந்தோம்.

"ஏண்டா உங்க வீடு எப்பப் பாத்தாலும் மூடியிருக்கு?"

" ஆத்துள்ளே காரியமா இருப்போம்"

" உங்க அக்காங்க எத்தனாவது படிக்கிறாங்க?"

" அவா, படிக்கலே. ஒத்தாசை செய்யறா. அம்மாவும் ஒத்தாசை செய்யறா."

அக்கா என்னைப் பாத்து, உதட்டுக்குமேலே விரலை வச்சு, 'ஒண்ணும் கேக்காதெ'ன்னு ஜாடை காமிச்சாங்க. நானு அதையெல்லாம் கண்டுக்கற ஆளா?

" சாப்பாடு ஆச்சா? என்ன சாப்பிட்டே?"

அக்காங்களுக்கு 'கறி' ஜோக்கைக் காட்டலாம்னு கேட்டேன்.

" மோருஞ்சா,கொள்ளுத்தொகையல்"

" அதில்லைடா, என்ன குழம்பு, என்ன கறி?" எனக்கு சிரிப்பு வந்துகிட்டே இருக்கு.

" குழம்பு கறியெல்லாம் கிடையாது. எங்காத்துலே எப்பவும் மோருஞ்சா, கொள்ளுத்தொகையல்தான்"

" போடா, தினம் இதுதானா? நேத்து என்னடா குழம்பு?"

" நேத்தைக்கும் இதான்."

பெரியக்கா, அவனைக் கையைப் பிடிச்சு, அண்ணன் ரூமுக்குக் கொண்டுபோய் விட்டுட்டாங்க.

"நாணா, நம்மாத்துலே நேத்தைக்கும் மோருஞ்சாம், கொள்ளுத்தொகையல்தானெடா"

நாராயணன் அண்ணன் தலையை மட்டும் ஆட்டிட்டு, கிச்சாவோட போயிட்டார்.

எனக்கு ஒரே திட்டு. அம்மா வந்ததும், அழுதுகிட்டே சொன்னேன். அக்காங்களும் நடந்ததையெல்லாம் சொன்னாங்களா, அம்மாவும் என்னைத் திட்டுனாங்க! 'ரொம்ப வாய்க்கொழுப்பு'ன்னாங்க!

மறுநாளு ஏதோ விசேஷம்னு எங்க வீட்டுலே வடை, பாயசம்ன்னு செஞ்சாங்க. அம்மா, எல்லா அண்ணன்களையும் நம்ம வீட்டுலேயே சாப்பிடச் சொன்னாங்க. பழனிச்சாமி அண்ணன் ஒண்ணும் சொல்லாம சாப்பிடவந்து உக்காந்துட்டார்.
நாராயணன் அண்ணன் மட்டும் வேணாம், வேணாம்னு சொல்லிகிட்டே இருந்தாரு.

அம்மா ' இன்னிக்கு நல்ல நாளுப்பா. நாங்க சுத்தமாதான் சமைச்சிருக்கோம். வாப்பா சாப்பிட'ன்னு சொன்னாங்க.

தயங்கித் தயங்கி உள்ளே வந்தாரு. உள் ஹாலைத் தாண்டி வரப்போ அங்கே மாட்டியிருந்த எங்க தாத்தாவோட ·போட்டோவைப் பாத்ததும், 'நீங்க பாதம் வச்சா நாமம் போடுவேள்'ன்னு கேட்டாரு.

'ஆமாம்'ன்னு அம்மா சொன்னதுக்கு, அவுங்க 'பாதம் வைக்காம நாமம்' போடுவாங்களாம். 'நியாயமா உங்காத்துலே நாங்க சாப்பிடக் கூடாது'ன்னார்.

அதுக்கு அண்ணன்,'ஒய் நாமம், யு நாமம் எல்லாம் நாமம்தாண்டா. அது பரவாயில்லே'ன்னு சொன்னதும் நாங்க எல்லாம் சிரிச்சோம்.

ரொம்பக் கூச்சத்தோட, தயங்கித் தயங்கி சாப்பிட்டார். 'இதை உங்க வீடா நினைச்சுகோப்பா'ன்னு அம்மா சொன்னாங்க.

மறுநாளு, அம்மா அண்ணன் கிட்டே,' இனிமே நம்ம வீட்டுக்கு வந்தவுடனே ஏதாவது சாப்பிடக் குடுப்பா. பரிட்சை வேற வருது. படிக்கறதுக்கு பலம் வேணாமா?'ன்னு சொன்னாங்க.

பரிட்சை நெருங்க நெருங்க, ராத்திரியெல்லாம் படிச்சாங்க. எங்க வீட்டு மொட்டை மாடியிலேயே படுத்துக்குட்டாங்க.

ஒருவழியாப் பரிட்சை முடிஞ்சது. அந்தப் பரிட்சை நடந்தப்ப, சின்ன க்ளாஸுங்களுக்கெல்லாம் ஒரு வாரம் லீவு. ஜாலியா இருந்தோம்.
வீட்டுலெதான், 'உங்களுக்கும் முழுப்பரீட்சை வருது. மரியாதையா உக்காந்து படிங்க'ன்னு கத்திக்கிட்டு இருந்தாங்க!

எங்க பரிட்சையும் வந்து போச்சு! லீவும் விட்டாச்சு!

ஒருநாளு, அண்ணனுங்க 'ரிஸல்ட்' பேப்பருலே வருதுன்னு ஒரே பேச்சா இருந்துச்சு. பேப்பர் வீட்டுக்கு தினம் காலையிலெ வரும்லெ.
அதுக்குக்கூடக் காத்திருக்காம நம்ம அண்ணன் காலையிலே அஞ்சு மணிக்கெல்லாம் எந்திருச்சு, 'பஸ் ஸ்டாண்டு' கடைக்குப் போனார்.
வர்றப்ப அவரு மூஞ்சு ஒரு மாதிரியா இருந்துச்சுன்னு அக்கா, அப்புறம் சொல்லுச்சு. கொஞ்ச நேரத்துலே பழனிச்சாமி அண்ணன் சைக்கிள்
எடுத்துகிட்டு, நம்ம வீட்டுக்கு வந்துச்சு. எல்லாம் அம்மாகிட்டே ரொம்பக் கவலையாப் பேசிகிட்டு இருந்தாங்க.

நம்ம அண்ணனும், பழனிச்சாமி அண்ணனும் 'பாஸ்' ஆயிட்டாங்க. ஆனா நம்ம நாராயணன் அண்ணன் ஃபெயிலாம்!

உடனே, ரெண்டு அண்ணனுங்களும் அதே சைக்கிள்ளே நாராயணன் அண்ணன் வீட்டுக்கு, முதல்தடவையாப் போனாங்க.

அப்புறம் அவரை, நம்ம வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்தாங்க. அம்மா, பக்கத்துலே உக்காந்து, நல்ல வார்த்தைங்கல்லாம் சொன்னாங்க. 'செப்டம்பர்லே எழுதிரலாம்'ன்னு சொல்லிகிட்டு இருந்தாங்க. அந்த அண்ணன் ரொம்ப அழுதுச்சு. அதைப் பாத்து எனக்குக்கூட அழுகையா வந்துச்சு.

அண்ணனுக்காக, மொதநா செஞ்சு வச்சிருந்த மைசூர்பாக்கைக் கூட யாரும் வெளியே கொண்டுவரலே.

மறுநாளு, காலேல, நம்ம வைத்தி ஓடிவந்தான் நம்ம வீட்டுக்கு,'நாராயணன் அண்ணன் தூக்கு போட்டுக்கிட்டாராம்'

அம்மாவும் அண்ணனும் அலறி அடிச்சுகிட்டு ஓடுனாங்க. அதுக்குள்ளெ எல்லாம் அடங்கிடுச்சாம்.

அம்மாதான்'போஸ்ட் மார்ட்டம்' செய்ய முடியாதுன்னு சொல்லிட்டாங்க. தாசில்தாருகிட்டே பேசுனாங்க. அக்ரஹாரம்ன்றபடியாலே
கொஞ்ச நேரத்துலேயே சாவு எடுத்துட்டாங்க. பழனிச்சாமி அண்ணன் கத்திக் கத்தி அழுதாரு.

ஒரு வாரம் கழிச்சு, 'எஸ்.எஸ்.எல்.சி புக்' வாங்கறதுக்கு ரெண்டு அண்ணன்களும் போனாங்க. நம்ம அண்ணன் முகமெல்லாம் சிவந்து போய், ஓடிவந்தாரு. நாராயணன் அண்ணனோட 'புக்'கைப் பாத்தாராம். அவருதான் 'ஸ்கூல் செகண்ட் மார்க்காம்!'

அவரோட நம்பர் 'ப்ரிண்ட்லே' விட்டுப் போச்சாம். மறுநாளு பேப்பர்லெ 'பிழை திருத்தம்'னு போட்டிருந்தாங்களாம்!

நன்றி: திண்ணை. 30/9/2004 இது 'பிழை திருத்தம்' என்றபெயரில் வெளிவந்தது. தலைப்பு உதவி ஜெயந்தி சங்கர்.

என் குறிப்பு:

காலவெள்ளத்தில் அடிச்சுக்கிட்டுப் போன நாங்க மதராஸில் ( அப்ப அதுதான் சென்னையின் பெயர்) கரை ஒதுங்கினோம். அண்ணன் ஒரு தொழிற்சாலையில் மேலாளராகப் பணியில் அமர்ந்தார். அம்மாவும் இறந்துட்டாங்க. நான் ஹாஸ்டலில் தங்கிப் படிச்சுக்கிட்டு இருந்தேன்.சம்பவம் நடந்த சமயம் பெரிய லீவுக்கு வந்துருந்தேன். பல வருடங்களுக்குப் பின், வேலை சம்பந்தப்பட்ட கடிதம் ஒன்னை ஒரு ஊரில் இருந்த வாடிக்கையாளருக்கு அனுப்புனாராம் அண்ணன். முகவரியில் கையால் எழுதி இருந்த (அண்ணன் கையெழுத்து ரொம்ப அழகா இருக்கும்) எழுத்துக்களைக் கவனித்த அந்த ஊரில் தபால் அலுவலகத்தில் இருந்த ஒருவர், அதில் இருந்த அனுப்புனர் முகவரியில் அண்ணனின் பெயரைச் சேர்த்து ஒரு கடிதம் அனுப்பினார்.

' இந்தக் கடிதம் அனுப்பியவர் பெயர் ***** இதுதான் என்றால், உடனே பதில் கடிதம் ஒரு வரி அனுப்ப வேண்டுகின்றேன். நான் அவருடையப் பள்ளித் தோழன் பழனிச்சாமி.'

அன்னிக்கு வேலையில் இருந்து வந்தப்ப, அண்ணனின் முகத்தில் கோடிச் சூரியனின் ஒளி. உடனே அது நாந்தான் நாந்தான்னு கடிதம் அனுப்பிட்டாராம். இப்படியாக மறுபடி அந்த நட்புக்கு உயிர்வந்துருச்சு.
நம்ம பழனிச்சாமி அண்ணனேதான். அவருக்கு ரெண்டு பசங்களாம். மூத்தவனுக்கு அண்ணன் பெயரையும், இளையவனுக்கு நாராயணன் அண்ணன் பெயரையும் வச்சுருக்காராம்.

Thursday, October 16, 2008

பொழுதன்னிக்கும் சினிமா, என்ன சினிமா?

சரியான ஆளாப் பார்த்துத்தான் பாபா தொடர் பதிவுக்கு அழைச்சுருக்கார். தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதுன்னு சொல்லிக்கிட்டு இருப்பேன். ஆனாத் தமிழ்நாட்டைவிட்டு வெளியே வந்தபிறகுதான் அது தமிழனைன்னு தப்பாச் சொல்லிட்டோம்! மனுசன்னு இருக்கணுமுன்னு தோணிச்சு. ஆனா ஒன்னு தமிழ்சினிமா நடிகனையும் அரசியலையும் பிரிக்க(வே)முடியாதுன்றதுதான் இப்போதைய உண்மை. அது இருக்கட்டும் ஒரு பக்கம். இப்பக் கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லிட்டுப் போறேன்:-)

நம்ம கயல்விழி முத்துலெட்சுமியும் வெள்ளாட்டுக்குக் கூப்புட்டாஹ.


1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?

சரியா நினைவில்லை. வீட்டுலே எப்பச் சினிமாவுக்குக் கிளம்பறாங்களோ அப்ப எல்லாம் கூடவே போறதுதான்.

சினிமாவோடு உள்ள தொடர்பு( ச்சும்மாப் பார்ப்பதில் மட்டும்) விட்டுவிட்டு இருந்துச்சு. முதல் 10 வயதுவரை ஓரளவு மாசம் ஒரு முறைன்னு இருக்கும். அப்புறம் சில வருசம் படமே பார்க்கலை. ஹாஸ்டல் வாசத்தில் மாசம் ரெண்டு மூணு. கல்யாணத்துக்குப் பிறகு தமிழ்நாட்டை விட்டாச்சு. நாட்டை விட்டுப் போன இடத்தில் முதல் 6 வருசம் சில தமிழ்ப் படங்களை ஹாங்காங்கில் இருந்து வரவழைச்சுப் பார்த்தோம். நியூஸி வந்த பிறகு ஒரு 10 வருசம் 'நோ டமில்' படம். ஊர்போய் வரும் வழியில் சிங்கையில் இருந்து நாலைஞ்சு வாங்குவோம். இப்ப 9 வருசமா தமிழ்ப்படங்கள் பார்க்க ஆரம்பிச்சாச்சு.



1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?

அரையும் முக்காலுமா நிறையப்படம் பார்த்துருக்கேன். பாதியிலே தூங்கி, சினிமா விட்டும் எழுந்திரிக்காமத் தூங்கிக்கிட்டே அக்கா இடுப்பிலே சவாரி செஞ்சு வர்றதும் உண்டு. முதல் சினிமா............கீலு குர்ரம் (தெலுகு)

1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?

கடலை முட்டாயைக் கையில் வச்சுருந்தோமே...அது எங்கியோ விழுந்துருச்சு போல இருக்கேன்னுதான் பலமுறையும்.



2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

வெய்யில்னு ஒரு தமிழ்ப்படம் 2007 வது வருசம் ஜனவரி முதல் தேதி. புரசைவாக்கம் அபிராமி தியேட்டரில். அதுக்கு முன்னே அரங்கில் பார்த்த்து மகளிர்மட்டும். தேவி பாலாவில் 1994 ஜூன் மாசம்.

நியூஸியில் கடைசியாக அரங்கில் பார்த்தப் படம் ஹிந்தி. ஜ்யோதா அக்பர்.
(பயமா இருந்துச்சு. அரங்கில் கோபாலும் நானுமா நாங்கள் இருவர்மட்டும்)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

புதுசுன்னா.................சத்யம். நம்ம வீட்டுலேதான். வேற எங்கே? உணர அதுலே என்ன இருக்கு? ஆங்.............

கதாநாயகன் நெஞ்சுலே சுடப்பட்டு இறந்துபோறது அதிசயமா இருந்துச்சு. ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய், ஆப்பரேஷன் செஞ்சு குண்டுகளை எடுத்து,'டொங்'ன்னு அந்த கிட்னி ட்ரேயில் போட்டுருவாங்க. ஆஸ்பத்திரி வெளியில் கோடிக்கணக்கான மக்கள்ஸ் வந்து குய்யோ முறையோன்னு கத்துவாங்க. கதை நாயகி, கோவிலில் தொங்கும் மணிகளை எல்லாம் ஆவேசமா அடிச்சுக்கிட்டேப் பாட்டுப்பாடிக் கையில் கற்பூரம் ஏத்திக்கிட்டு சாமிகிட்டே சபதம் போடுவாங்கன்னு நினைச்சேன். ஏமாத்திட்டாங்க:-)))))

முந்தாநாள் கடைசியாப் பார்த்த ஹிந்திப்படம் Shaurya. காஷ்மீர் அட்டகாசமா இருக்கு.


4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா.

துலாபாரம். சாரதா நடிச்சது. சினிமாப் பார்க்கும்போது எதுக்கும் அழுவாதக் கல்மனசுக்காரி அப்படித் தேம்பித் தேம்பி அழுதேன். இந்தப் படம் மட்டும்தான்.

சென்னையில் வாழ்ந்த காலத்தில் மேற்குமாம்பலம் நேஷனலில் வரும் பழைய படங்களை ஒன்னுவிடாமல் பார்த்துருவேன். இப்பக்கூட பழைய சினிமா ஒன்னு 'எம் ஜி.ஆர் நடிச்ச அபிமன்யூ' வாங்கிவந்தேன். எம் ஜி ஆர் எப்ப வருவாரோன்னு கண்ணைத் திறந்துவச்சுக்கிட்டே இருந்தேன். படம் முடிய ஒரு நிமிசம் இருக்கும்போது வந்தார்:-)

இப்ப ஒரு 9 வருசமா நான் தமிழ்ப் படங்களுக்கான வீfடியோ லைப்ரெரி நடத்திக்கிட்டு இருக்கேன். எல்லாக் குப்பைகளும் வந்துருது. அதனால் தாக்கம் கீக்கமுன்னு ஒன்னுமே வர்றதில்லை.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?

அப்படி ஒன்னும் இல்லை.


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

தொழில்நுட்பமுன்னு சொன்னால்...இந்த க்ராஃபிக்ஸ் வச்சுக்கிட்டுப்பூந்து வெள்ளாடுறாங்க. இது மட்டும் இல்லைன்னா எல்லாம் ஊத்திக்கும்.


6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

விகடன், குமுதத்தை வேற என்னன்னு சொல்றது? அந்தக் காலத்தில் பேசும்படம்னு ஒரு பத்திரிக்கையில் சினிமாச் சமாச்சாரம் வரும். இப்ப எல்லாப் பத்திரிக்கைகளும் சினிமாவையே முன்னிறுத்தி வியாபாரம் செய்வதால் ச்சீன்னு போச்சு. ஆனா ஒன்னு, சினிமா விமரிசனம் மட்டும் நான் படம் பார்க்குமுன் படிக்கவே மாட்டேன். எந்த முன்முடிவும் இல்லாமப் படம் பார்க்கத்தான் பிடிக்கும்.


7. தமிழ்ச்சினிமா இசை?

கர்நாடக இசையில் மட்டுமே ஆரம்பிச்ச சினிமா இசை, அதுக்குப்பிறகு பலகட்டங்களைத் தாண்டி இப்ப இரைச்சலில் வந்து நின்னுருக்கு. (60,70,80 களில் பாடல்கள் நல்லா இருந்துச்சு) என்னாலே இப்போதுவரும் எதையும் ரசிக்க முடியலை. எப்பவாவதுத் தப்பித்தவறி ஒன்னோரெண்டோ கொஞ்சம் மெலோடியா வருவதைமட்டும் விரும்பிக் கேக்கறேன். ஆனா எங்க வீட்டிலே கோபாலுக்கு எல்லாப் பாட்டுமே பிடிக்கும் என்பதுதான் என் வாழ்வின் மிகப்பெரிய சோகம்! காதுக்கு மூடி இருந்தாத் தேவலைன்னு நினைச்சுக்கிட்டே 'இயர்ப்ளக்' வச்சுக்குவேன்.

உண்மையைச் சொன்னால் பாடல் காட்சிகள், குழு நடனங்கள் எல்லாத்தையும் நம்ம படங்களில் இருந்து தூக்கணும். படத்தை, ரசிகர்மனதில் கொண்டுபோக பின்னணி இசை மட்டுமே போதும்.


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

மலையாளம், ஹிந்திப் படங்கள் பார்ப்பேன். உலகமொழின்னா ஆங்கிலப்படங்கள் எப்பவாவது பார்ப்பேன். உள்ளூர் தொலைக்காட்சியில் வாரம் 4 சினிமா வருதுதான். ஆனா நான் பார்க்க விரும்பலை.

கூடுதல் செய்தி: எங்க வீட்டுலே கேபிள் டிவி, சன் டிவி, ஸ்டார் ப்ளஸ் இப்படி எதுவும் போட்டுக்கலை.

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

ஐயோ நல்லாக் கேட்டீங்க. இங்கே படப்பிடிப்புக்கு வரும் குழுவினருடன் நல்ல தொடர்பு இருந்துச்சு. அவுங்களுக்கெல்லாம் உள்நாட்டுலே, ஒர்க் பர்மிட் முதக்கொண்டு எல்லா வசதிகளும் செஞ்சு கொடுப்பவர் நம்ம நெருங்கிய நண்பர். அவர் ஃபிஜி இந்தியர் என்பதால் தென்னிந்தியக் குழுவரும்போது மொழிக்குழப்பம். அங்கேதான் என் 'பணி' இருந்துச்சு.

பல பிரபலங்களையும் சந்திச்சோம், போட்டோ எடுத்திக்கிட்டோம், அவுங்களுக்கு நம்ம சாப்பாடு எல்லாம் செஞ்சு கொடுத்தோமுன்னு இருந்தோம்.
சிலர் வந்தவுடன் நமக்கு தொலைபேசுவாங்க. (நம்ம வீட்டுக் குழம்பு ருசி லேசுலே விட்டுருமா என்ன?)
உள்ளூர் வசதி செய்யும் நண்பர்ன்னு சொன்னேன் பாருங்க, அவர் ஒரு படப்பிடிப்பு நடந்துக்கிட்டு இருக்கும்போது மாரடைப்பில் காலமாகிட்டார். அப்போ முதல் எனக்கும் சினிமாக்காரங்களைச் சந்திக்கும் சுவாரசியம் விட்டுப்போச்சு.

வெளிநாட்டுலே நாலு பாட்டு எடுத்துட்டா தமிழ் சினிமா மேம்பட்டுருமா என்ன?

நியூஸின்னா
ஆளில்லாத ரோட்டிலே
டூயட்:-)



10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

புதுசுபுதுசா படங்கள் வந்துக்கிட்டுத்தான் இருக்கும். பட உலகக் கனவோடு மக்கள் நகரத்துக்கு வந்துக்கிட்டுதான் இருக்கப்போறாங்க. நாட்டோட மக்கள் தொகை இந்த அளவில் பெருகிக்கிட்டே இருக்கும்வரை எல்லாம் வந்துதானே ஆகணும். தரமான படங்கள் வருமான்னுதான் தெரியாது. நாட்டை வழிநடத்தும் தலைவன் சினிமா மூலம்தான் வரணுமுன்னு 'விதி' இருக்கு(-:


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

விட்டது சனியன்னு இருக்கும். இதைப்போல இன்னும் சில விஷயங்களுக்கும் ஒரு பத்துவருசம் தடா போடணும். அது இங்கே இப்போ வேணாம். பின்னாளில் ஒருசமயம் சொல்வேன்.

தமிழர்களுக்கு என்ன ஆகுமுன்னா......... முதல்லே கொஞ்சநாள் கதறிட்டு, அப்புறம் உருப்படியா நேரத்தை செலவு செய்வாங்க.

ஏண்டா இவகிட்டேக் கேட்டோமுன்னு தவிக்காதீங்கப்பா. மனசுலே உள்ளதை உள்ளபடிச் சொல்லணும்தானே? நானென்ன நடிக்கவா முடியும்?

இந்தத் தொடர் பதிவுக்கு நான் அழைக்கவிரும்பும் நண்பர்கள் எல்லோரையும் ஏற்கெனவே பலர் அழைச்சுட்டதால் கொஞ்சம் தேடிப்பார்க்கணும் விட்டுப்போனவங்க இருக்காங்களான்னு.

1. நானானி (தமிழ்நாடு இந்தியா)

2 ராமநாதன் ( ரஷியாப் புகழ்)

3. உதயகுமார் (வெளிகண்ட நாதர்)

4 சின்ன அம்மிணி (ஆஸ்தராலியா)

5 கிவியன் ( ஸ்காட்லாந்து)

மேலே சொன்ன பஞ்ச ரத்தினங்கள் எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரணுமுன்னு அன்புடன் அழைக்கின்றேன்.

என்றும் அன்புடன்,
துளசி.

Tuesday, October 14, 2008

அம்மாவின் பேச்சுக்கு ஆடிய ஆண் ' மாடல்'!!!

ஹைய்யோ...என்ன ருசி என்ன ருசி!


சின்னப் பயலே , சொல்றதைக் கேட்டுக்கோ.
Chef க்கு மிஞ்சி உலகில் ஒன்னுமே இல்லை,ஆமாம்.



பெரியவங்க சொல்றது உன் நல்லதுக்குத்தான்


இவ்வளோ உயரமா வளருவேனா? நெசமாவாச் சொல்றீங்க?


அப்பப்ப 'டைம் பாஸ்'க்கு இதுவும் வேண்டித்தானே இருக்கு!


(Bill)Cats always prefer Chef !!! Meow.........



எப்படியெல்லாம் போஸ் கொடுக்கறேன் பாருங்க!



பெரியவங்க சொன்னாப் பெருமாள் சொன்னமாதிரி!!



ஜொலிக்கும் இளமையும் (உடல் நரைச்ச)முதுமையும்



என்னைப்போல் 'ஷக்தி மியாவ்' ஆகணுமுன்னா 'CHEF' ப்ராண்ட்டை விடாதே.


அம்மாவின் 'பின்' குறிப்புகள்:

இது விளம்பர யுகமாப் போயிருச்சே......

ப்ராடக்ட் ரெடி, மாடலும் ரெடி. ஆனா மாடலுக்கு மூடு வரணுமே. காத்திருந்து காத்திருந்து, PITக்காகப் புடிச்சதில் சில உங்கள் பார்வைக்கு. நல்லவேளை இப்ப டிஜிட்டல் வந்துருச்சு. படபடன்னு 94 படம் எடுத்துத் தள்ளிட்டேன். பழைய நாட்களா இருந்தால்..................... ஃபில்ம் ரோல் வாங்கியே போண்டியாகி இருப்பார் ஒருத்தர்:-)))))

முதல் படத்துலே காதை வெட்டுனதாலே அதை போட்டிக்கு அனுப்ப முடியலை (-: