Friday, June 29, 2012

ரோமாபுரியில் காணாமல் போகாதே!!!!

ராத்திரி பத்துமணி இருக்கும். பத்து வயசு சித்தார்த் காணாமப் போயிட்டான். அதுவும் பாஷை தெரியாத ரோமாபுரியிலே! நாங்கெல்லாம் நின்னு பார்த்துக்கிட்டு இருக்கும் போதே! இத்தனைக்கும் அவனோட அம்மாவும் தங்கையும்கூட அங்கெ தான் எங்களோட இருக்காங்க.

அதெப்படி?

இன்னிக்குச் சாப்பாட்டுக்கு ஒரு ரெஸ்டாரண்டுலே ஏற்பாடு செஞ்சாச்சு. 35 பேரைச் சுமந்துக்கிட்டுப் போகுது பஸ். எல்லாரும் பலநாடுகளில் இருந்து வந்து இந்த சுற்றுலா பஸ்ஸில் சங்கமிச்சாச்சு. 19 நாள், 7 நாடுன்னு ஒரு கணக்கு. ஆச்சரியமான விஷயம் என்னன்னா, இதுலே 21 பேர் இந்தியர்கள். எல்லாம் வெவ்வேற மாநில மக்கள். அப்ப, பாக்கி ஆளுங்க? பலநாட்டு வெள்ளைக்காரங்க.

நாலரை மணி போல ஆச்சு, இங்கே இந்த ஊருக்கு வந்து சேர்ந்தப்ப. ஆறுமணிக்குக் கிளம்பிப் போகணுமுன்னு  Bபென்னி,நம்ம டூர் கைடு சொல்லிட்டார். போற போக்குலே ஊரையும் ஒரு வலம்வந்து, ட்ரெவி நீரூற்று(Fontana di Trevi) பார்த்துட்டுச் சாப்பிடப் போனோம். அந்த நீரூற்றுலே எதாவது மனசுலே வேண்டிக்கிட்டு முதுகுவழியாக் காசைச் சுண்டி எறிஞ்சா நினைச்சது நடக்குமாம்.

சாப்பிடப்போன இடத்துலே நம்ம அதிர்ஷடம் பாருங்க, அங்கே ஒரு இந்தியர் (மாணவராம்), பரிமாற வந்தார். எங்களுக்கோ அவரைப் பார்த்ததும் ஒரு ஒட்டுதல். அவருக்கும் வாயெல்லாம் சிரிப்பு. சாப்பாடு நடக்கும்போதே, மூன்று மெக்ஸிகன் பாடகர்கள் எங்க மேஜையைச் சுத்தி நின்னு கிடார் வாசிக்கறதும், பாடறதுமா தூள் கிளப்பிக்கிட்டு இருந்தாங்க. ஒருவேளை சாப்பாட்டு ருசியை மறக்கடிக்கவோ? இருக்கும்!

வெளியே வந்தப்பவே ஒம்போதரைக்கு மேலே ஆச்சு. பஸ் வரட்டுமுன்னு கூட்டமா நின்னுக்கிட்டு இருக்கோம். அப்ப அங்கே ரெண்டு மூணு 'குடி'மகன்கள் தள்ளாட்டம் போடறாங்க. சின்னச் சண்டையா நடக்குது. ஒருவர் என்னமோ பினாத்திக்கிட்டே கீழே மயக்கமா விழுந்துட்டார். ஆர்வக்கோளாறிலே நாங்க வேடிக்கை பாக்கறொம். திடீர்னு சித்தார்த்தின் அப்பா ஹிந்தியிலே கூச்சல் போடறார். அவரோட 'பேக் பாக்' யாரோ அறுத்து எடுத்துக்கிட்டு ஓடறாங்கன்னு. அடுத்த நொடி இவர் அவனைத் துரத்திக்கிட்டே ஓடறார். வெய்யல் காலமா இருந்தாலும், இருட்டத்துடங்கி ரொம்ப நேரமாச்சு.

என்ன ஆச்சுன்னு புரியறதுக்குள்ளேயே அப்பா ஓடுன திசையிலே ஓடத் துவங்கின சித்தார்த்தைக் காணொம். இதுக்குள்ளே ரெஸ்டாரண்ட்டுலே பில் செட்டில் செஞ்சுக்கிட்டு இருந்த பென்னி வெளியே வந்தார். திருடன், அப்பா, மகன் எல்லாம் ஒவ்வொருத்தரா ஓடுன விஷயம் கேட்டு திகைச்சுட்டார். சித்தார்த்தின் அம்மாவும் தங்கையும் பயந்து அழத் தொடங்கிட்டாங்க.
எனக்கு வலது பக்கத்தில் சித்தார்தின் தங்கை மேஹா. தொட்டடுத்து சித்தார்த்.


ரைன் நதியில் படகில் போகும்போது எடுத்தது.

பையன் போன திசையையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டு இருக்கோம். அந்தப் பக்கம் கொஞ்ச தூரம் போய்ப் பார்க்கலாம்னு கிளம்புன எங்களை 'கைடு' தடுத்துட்டார். நாங்களும் காணாமப் போனா? ஓடுன பையன் திரும்பி வந்துருவான்னு வேற எங்கேயும் போகாம அதே இடத்துலெயெ நின்னு ஒரு முக்காமணி நேரம் போச்சு.

இனியும் இருந்து பலன் இல்லை. முதல்லெ உங்களையெல்லாம் ஹோட்டலுக்கு அனுப்பிடறேன். நான் போய் விசாரிக்கறேன்'னு சொல்லி கைடு எங்களை எங்க பஸ்லே ஏத்தி விட்டுட்டார். அழறவங்களுக்கு ஆறுதல் சொல்லிக்கிட்டு வர்றோம். திருட்டுப் போன பையிலேதான் பாஸ்போர்ட்டு, டிக்கெட்டு எல்லாம் இருக்காம். இப்ப அதுவேற கவலையாச்சு.

ஒரு இடத்துலே எங்க பஸ்ஸை சிக்னல் கொடுத்துக்கிட்டே ஓவர்டேக் செஞ்சது இதே ட்ராவல் கம்பெனியின் பஸ் ஒண்ணு. அது நின்னவுடனே எங்க பஸ்ஸையும் நிப்பாட்டினாரு எங்க ட்ரைவர் மொரீட்ஷியோ. என்ன ஏதுன்னு விவரம் கேட்கலாமுன்னு கதவைத் திறந்தவுடன், உள்ளெ ஏறி வர்றது யாருங்கறீங்க?

சித்தார்த்! எங்க வண்டிக்குள்ளே ஏகப் பரபரப்பு, கூச்சல், அமளி. நாந்தான் இருக்கேனே நாட்டாமை. என்ன ஏதுன்னு விசாரிச்சேன். எப்படி இந்த வண்டியைக் கண்டுபிடிச்சான்?

அவன் ஹிந்தியிலே சொன்னதையெல்லாம் , பாஷை தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்த வெள்ளைக்காரங்களுக்கும், மொரீட்ஷியோவுக்கும் இதையெல்லாம் ஆங்கிலத்துலெ மொழி பெயர்த்துச் சொன்னதும் வண்டி பூரா ஒரு குலுங்கு குலுங்குச்சு, எங்க கைதட்டல் ஓசையாலே! லிட்டில் ஹீரோ சித்தார்த். தட்டு கையை!!!

எப்படி வந்தானாம்?

அப்பா போனதிசையிலேயே இவனும் ஓடியிருக்கான். ஒரு சந்துலே திருடனும் அப்பாவும் திரும்புறதைப் பார்த்துட்டு இவனும் அங்கெ திரும்புனப்ப திருட்டுக்கூட்டத்தைச் சேர்ந்த இன்னொரு ஆள் குறுக்கே இவன்மேலே பாய்ந்திருக்கான். சித்தார்த், (டெல்லியிலே கராத்தே படிக்கச் சேர்ந்திருக்கானாம்) ஒரு உதை விட்டானாம். திருடன் இதை எதிர்பார்க்காததாலே இவனைப் பிடிச்ச பிடியை விட்டதும் இவன் கண்ணுமண்ணு தெரியாம ஏதேதோ சந்துலே புகுந்து ஓடி எப்படியோ ஒரு மெயின் ரோடைப் பிடிச்சுட்டான். நம்ம அதிர்ஷ்டம் அந்தப் பக்கம் நம்ம ட்ராவல் கம்பெனி பஸ் வந்துக்கிட்டு இருந்துச்சு. நம்ம வண்டின்னு அதை நிறுத்திஇருக்கான். அப்புறம் மொரீட்ஷியோ பேரையும் அந்த வண்டியிலே டூர் வந்த விவரமும் சொல்லி இருக்கான். நல்லகாலம், அந்த ட்ரைவருக்கும் மொரீட்ஷியோவைத் தெரிஞ்சிருக்கு. நண்பனாம். இந்த ட்ராவல் கம்பெனி டூர்லே வர்றவங்க இங்கே வழக்கமாத் தங்கற ஓட்டலுக்கு கொண்டுவந்து விடலாமுன்னு நினைச்சு அங்கே போறவழியிலேதான் எங்க பஸ்ஸைப் பார்த்துட்டு நிறுத்தி இருக்கார் அந்த டிரைவர்.

சித்தார்த்தைப் பார்த்ததும் அவனோட அம்மாவுக்கும், தங்கைக்கும் சிரிப்பும் அழுகையுமா வர்றது. அப்பாவைத்தான் காணோம்.

இரவு, ஓட்டலுக்குப் போனதும் அவுங்க குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லிட்டுக் கவலையோட தூங்கப்போனோம். மனசே சரியில்லை. பொழுது விடிஞ்சதும் அவுங்க அறைக்கு ஓடுனோம். காலையிலே அஞ்சுமணிக்கு அப்பா வந்துட்டாராம். அப்பாடா........... 


என்ன ஆச்சு? 


ஓடிக்கிட்டு இருக்கும் அப்பாவைப் போலீஸ் பிடிச்சுக்கிச்சு. பாஸ்போர்ட் கையில் இல்லாததாலே ஸ்டேஷனுக்குக் கொண்டு போயிட்டாங்க. அங்கே இவரை விசாரிச்சப்ப இவர் எல்லாம் சொல்லி இருக்கார். ஹோட்டல் பேரைக் கேட்டப்ப இவருக்குத் தெரியலை. சந்தேகக்கேஸ்னு தீர்மானிச்சுட்டாங்களாம். திருடனைப் பிடிக்காம திருட்டுக் கொடுத்தவரைப் பிடிச்சு வச்சிருக்காங்க. இதுலே பாஷைத் தகராறு வேற. 


இதுக்குள்ளே நம்ம டூர் கைடு பென்னி, போலீஸ் தலைமையகத்துக்குப் போன் செய்து குற்றம் நடந்ததையும், துரத்திக்கிட்டு ஓடுன டூரிஸ்ட்டையும் பத்திச் சொல்லி இருக்கார். அங்கே இருந்து எல்லா போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் செய்தி போய் இருக்கு. அப்பா இருக்கற ஸ்டேஷன் விவரம் தெரியவந்துச்சு. இதுக்கே மணி நாலு ஆயிருச்சாம். ஹோட்டல் பேரைக் கேட்டுக்கிட்டு, அவுங்களே அனுப்பி வைக்கறென்னு சொல்லிட்டாங்களாம். பென்னி இங்கே ஹோட்டலுக்கு வந்து சித்தார்த் குடும்பத்துக்கு செய்தி சொல்லிட்டுத் தூங்கப் போனாராம்.


அப்பா'வைக் கூட்டிக்கிட்டு ஒரு போலீஸ்காரர் டாக்ஸியிலே வந்துருக்கார். இங்கே வந்து சேர்ந்ததும் டாக்ஸிச் சார்ஜ் போகவரக் கொடுக்கணுமுன்னு அதையும் வாங்கிக்கிட்டே போனாராம். இப்ப பாஸ்போர்ட்டுக்கு என்ன செய்யறதுன்னு கேட்டப்ப, அம்மா சொல்றாங்க'பாஸ்போர்ட் இன்னும் மத்ததெல்லாம் என் பெட்டியிலேயே இருக்கு. பதற்றத்துலே அந்தப் பையிலே இருக்கறதா நினைச்சுக்கிட்டோம்'னு. 


அப்பாடா................. 


திருட்டுப்போனப் பையிலே கேமெராவும், கொஞ்சம் காசும்தான் இருந்ததாம். போனாப் போகட்டும். ஆனா பாருங்க, எவ்வளவு ஆபத்து! அப்பாவுக்கு வேற ஏதும் நடந்திருக்கலாம்தானே? திருடன் கையிலெ ஆயுதம் இருந்திருந்தா? சித்தார்த் வழி தெரியாம ஓடுனப்ப ட்ராவல் பஸ்ஸை பார்க்காம இருந்திருந்தா? 


அர்த்தராத்திரியிலே, பாஷை தெரியாத புது ஊருலே ஒரு ச்சின்னப்பையன் காணாமப் போய்க் கிடைச்சது அதிசயம்தான்!


எல்லாவிவரமும் கேட்டப்பத்தான் 'நம்மளில் எத்தனை பேருக்கு நம்மோட ஹோட்டல் பேரும், விலாசமும் தெரிஞ்சிருக்கு?'ன்னு ஒரு சந்தேகம். அநேகமா எல்லோருமெ இந்தக் கவலை இல்லாம இதுவரை இருந்துருக்கோம், கூட்டமா பஸ்லெ போறது,வர்றதுன்னு! 


அதுலே இருந்து புதுசாக் கத்துக்கிட்டது, எந்த ஊருக்குப் போனாலும் ஹொட்டலுக்குப் போனதும் அங்கே இருந்து விவரம் அடங்கின கார்டை எடுத்துக் கைப்பையிலே வச்சுக்கணும். 


திருடனைத் துரத்திக்கிட்டு ஓடவேக்கூடாது. 


எல்லாத்தையும் விட ரொம்பவே முக்கியம், 'காணாமப் போகக்கூடாது'


நாங்க உலகை இடம் வந்தபோது நடந்த சம்பவங்களில் இது(வும்) ஒன்னு.
ஆமாம்............ இப்ப எதுக்கு இதைச் சொல்றேன்? ரோம் என்றவுடன் கொலோஸியம் நினைவுக்கு வந்துருச்சுல்லே!

Wednesday, June 27, 2012

பயில்வான் வாயிலே ஒரே ஒரு பொரியை ஊட்டிவிட்டோம் .....(ப்ரிஸ்பேன் பயணம் 8)

சஃபாரி ஷட்டில் ஓடிக்கிட்டு இருக்கே... அதுலே முதல்லே ஏறிப்போய் ஒரு சுத்து சுத்தி வந்தோமுன்னா எதெது எங்கெங்கேன்னு புரிஞ்சுரும். அப்புறமா ஒவ்வொன்னாப் பார்க்கலாமுன்னு முடிவு செஞ்சேன். இதோ இன்னும் ரெண்டு நிமிட்லே வண்டி வந்துருமுன்னு சொன்னதில் அதுக்கான ஸ்டாப்பிங் போகும் கேட்டுக்குப் பக்கத்துலே ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுக்கிட்டு இருந்துச்சு ஒரு Iguana (Rhinoceros) உடும்பு. அந்த குடும்பத்து மக்கள் ரெண்டு பேர் வெய்யில் காய்ஞ்சுக்கிட்டு ஹாயா இருந்தாங்க.அதுக்குள்ளே ஷட்டில் வந்துருச்சு. இது ஒட்டச்சிவிங்கி.அதுலே ஏறி ஊர்ந்து போனோம். இன்னொன்னு வரிக்குதிரை. நிறைய மரங்கள் அடர்ந்த சாலை. இங்கே அது இருக்கு இங்கே இது இருக்குன்னு ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்துக்கிட்டே வண்டியை ஓட்டுனாங்க ட்ரைவரம்மா. மொத்தமே அஞ்சு ஸ்டாப்பிங்ஸ்தான். எங்கே வேணுமுன்னாலும் இறங்கிக்கிட்டு மறுபடி வேற ஷட்டிலில் ஏறிப்போய் பார்க்கலாம்.

ஒரு பெரிய மாந்தோப்பைக் கடந்து போனோம். நீர்நிலை இருக்கும் பகுதிக்கு அப்பால் ரெண்டு மூணு ஒட்டைச்சிவிங்கி தலைதூக்கிப் பார்த்ததுகள். எங்களைத்தவிர மற்ற எல்லோரும் இறங்கி ஆஃப்ரிக்க வனங்களுக்குள் போனாங்க. இதுதான் கடைசி நிறுத்தம். திரும்பி புறப்பட்ட மெயின் வாசலுக்கே வந்தோம். மொத்த சவாரியும் ஒரு 20 நிமிடங்கள்தான்.

இங்கே விலங்கு ஷோக்கள் மொத்தம் ஒரு நாளைக்கு 12. அதுலே நாளுக்கு மூணு முறை, ரெண்டு முறைன்னு இருப்பதைப் பார்த்து வச்சுக்கிட்டால் ஒருவழியா எல்லாத்தையும் கவர் செஞ்சுடலாம். காலை 10 மணி முதல் மாலை 3.30 வரைதான் ஷோ டைம்.

வயசான முத்தச்சன் முத்தச்சி ரெண்டு பேரை முதலில் போய்ப் பார்த்து வணக்கம் போட்டுக்கலாம் 150 வயசுன்னு DNA Test சொல்லுது. இப்போ. சாப்பாட்டு நேரம். ( GIANT GALAPAGOS TORTOISEஏ) ஹெர்ரியட் Harriet என்ற பெயர். இந்த வகை ஆமைகளுக்கு உலகம் முழுசுமே ஒரே பெயர்தான் போல! ஒரு ஆறுவருசத்துக்கு முந்தி இதே பெயரில் இருந்த ஒரு முத்தச்சி 175 வயசுலே ஹார்ட் அட்டாக்லே போயிருச்சு:(ரெண்டு பேர் இருக்காங்க இப்போ. சின்னக்கால்களை வளைச்சு நகர்ந்துவந்து ஒரு தட்டில் காய்கறித்துண்டுகள், இலைதழையால் நிரப்பி இருக்கும் உணவை ரசிச்சு(!!) சாப்பிட்டாங்க. செம்பருத்திப்பூ தின்ன ரொம்ப ஆசையாம்!

கொமொடோ ட்ராகன்ஸ் நாக்கை நீட்டிக்கிட்டே நடைபோட்டு கிட்டு இருந்துச்சு இன்னொரு பக்கம்

கெமெரோன் என்ற முதலையைப் பார்த்து எனக்கு பயமே வரலை! எனக்குப் பிடிச்ச இன்னொரு விஷயம் இங்கே எல்லோருக்கும் பெயர் வச்சுருக்காங்க. நிறைய இளவயசு ஆட்கள் வேலை செய்யறாங்க. அங்கங்கே சில குழந்தைகளைக் கையில் வச்சுக்கிட்டு நமக்கும் தொட்டுப்பார்க்க அனுமதிக்கிறாங்க. குழந்தைகளைத் தொடக் கசக்குதா என்ன?

பறவைகளுக்கான இடத்துக்குள்ளே நுழைஞ்சோம். நல்ல ட்ராப்பிக்கல் ரெயின் ஃபாரஸ்ட் மாதிரி இருக்கு. வகைவகையான கிளிகள். ஒன்னு வெள்ளை மூக்குள்ள கருப்புக்கிளி! இன்னொருக்கா வரலாமுன்னு நடையைப்போட்டோம்.

கேட்டைத் திறந்தால்..... கங்காரு இனங்கள் உள்ள பகுதிக்கு வந்துருந்தோம். மனுசப்பயல்களைப் பார்த்துப்பழகி இருக்குதுங்க. நம்மைச் சட்டையே செய்யாமல் அதுகள் பாட்டுக்கு ஆற அமர ஓய்வெடுக்குதுங்க. முதுகைச் சொறிஞ்சு விட்டால் சுகமா இருக்குபோல! கிறக்கத்தோடு கண்ணை மூடிக்கிட்டு அனுபவிக்குதுங்க. இதா.... போயிட்டுத் திரும்ப வர்றேன்னேன்.

 மரத்துலே நான் இருக்கேன் கண்டுபிடி பார்க்கலாம் என்ற அறிவிப்போடு சில மரங்கள். தலையைத் தூக்கிப் பார்த்தால் மரத்துக்கொன்னா ஒரு சின்ன மூட்டை! நமக்குப் பின்பக்கம் காமிச்சுக்கிட்டு...... ஹாஹா

சியாம், சாபூ, பிம்போ என்ற கேர்ள்ஸ் நமக்காக இன்னொரு இடத்தில் காத்திருக்காங்க. பத்தரைக்கு அவுங்களுக்கு நாம் ஊட்டிவிடலாம்! பெரிய கூட்டம் அங்கேதான். நாம்போய்ச்சேரும்போது டூஸ் அண்ட் டோண்ட்ஸ் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

உள்ளங்கையிலே பழத்தை வச்சுக்குங்க. தானே எடுத்துக்குவார். பழம் கைதவறி கீழே விழுந்தால் அப்படியே வீட்டுருங்க.குனிஞ்சு எடுக்க வேண்டாம். அவரே எடுத்துக்குவார்........

மூணு பேருக்கும் பெயர் போட்டத் தனித்தனி இடம் பென்ஸ் கட்டைக்குப்பின்னால் வந்து நின்னாங்க. ஒவ்வொருத்தருக்கும் முன்னால் ஒரு ஆறடி இடம்விட்டு டோர் மேட் போல ஒரு துண்டு கால்மிதியடி. சனம் மூணு வரிசையில் நிக்குது. சின்னப்பிள்ளைகள் கூட்டம்தான் அதிகம்.பழவகைகளைத் துண்டம் போட்டு வாளிகளில் வச்சுருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும் ஒரு துண்டு விநியோகம் செஞ்சதும் ஆவல், பயம் என்ற உணர்ச்சிக் கலவைகள் நிறைஞ்ச முகங்கள் கண்கொள்ளாக் காட்சி. வரிசையாப்போய் அந்த டோர்மேட்லே நின்னு உள்ளங்கையை நீட்டணும்.

பெரிய பயில்வானுக்கு ஒரு பொரி ! பாவம் பெண்கள். பொறுமையா ஒவ்வொன்னா எடுத்து வாயில் போட்டுக்கறாங்க. 

மொத்தம் பனிரெண்டு ஏக்கர் இடம் இவுங்களுக்கு ஒதுக்கி இருக்காங்க. நீர்வீழ்ச்சியோடு ஒரு செயற்கைக்குளம். அதன் கரையில் புள்ளையார்! நல்ல பிரமாண்ட சைஸ்!

' கணேஷ் 'க்கு குட் டே சொல்லுங்கன்னு போட்டு அவருடைய மகிமையை எழுதி வச்சுருக்காங்க. யானைப்பகுதியில் அங்கங்கே யானைகளின் குணங்கள், தோல் கால் வால் அமைப்பு இப்படி சின்னச்சின்னத் தகவல்கள்.. பிள்ளைகளுக்கு நாம் ஒன்னையும் விளக்க வேண்டாம்.


இந்தப்பகுதிக்குப் போட்டுருந்த கேட் எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு:-) என்ன குறைன்னா.... கன்னிமாடமால்லே இருக்கு! ஒரு பையன் இருக்கப்டாதோ? 

அப்படியே யானைப்பொருட்கள் கடைக்குள்ளே நுழைஞ்சோம். ஒவ்வொரு முக்கிய பகுதிக்குள்ளூம் ஒரு நினைவுப்பொருட்கள் கடை வச்சுருக்காங்க. வியாபார நோக்கும் சைடு பை சைடா நடக்கட்டுமே! இதுலே பாருங்க நாம் அப்பதான் ஒரு சமாச்சாரத்தை நல்லா ரசிச்சு மனம் குழைஞ்சு போயிருப்போம். அப்பப் பார்த்து இந்தக் கடைக்குள்ளே நுழையும்படியான பாதை! இளகிய மனசு எதாவது வாங்கச் சொல்லும்! ஆசையை ஒழிக்கணுமுன்னு நான் ஒரு புத்தர் வாங்கினேன்:-)))))

எதுத்தாப்லே ஒரு பகுதியில் ரெட் பேண்டா நாலைஞ்சு. மரத்தில் ஏறி கிளைகளில் அங்கே இங்கேன்னு நடந்துக்கிட்டே இருக்குதுங்க. நின்னு ஒரு போஸ் கொடுத்துட்டாலும்.............. கடைசியில் தூக்கம் வந்துருச்சுன்னு ஒன்னு கிளையிலேயே படுத்துருச்சு:-)))) நம்ம ஜிகேயைவிடக் கொஞ்சம் பெருசு! ஆயுட்காலம் எட்டுவருசம்தானாம்:( இதுக்குக் கையிலே ஆறு விரல்கள்! ரெண்டு கட்டை விரல் இருப்பதால் மூங்கில் புதரில் நல்ல பிடிமானம் இருக்குமாம்!

இதுக்குப் பக்கத்துலே கொஞ்சதூரத்தில் இருந்த டைகர் டெம்பிளுக்குப் போனோம். நுழைவாசலில் ரெண்டு சிங்க பொம்மைகள் இருக்கு. நம்ம கம்போடியா அங்கோர்வாட் டிஸைன்லே செஞ்சுருக்காங்களாம். மொத்தம் பத்து புலிகள் . கண்ணில் பட்ட ஒருத்தர் மட்டும் நல்ல உறக்கத்தில். பகல் ரெண்டு மணிக்கு இங்கே ஷோ இருக்குன்னு அறிவிப்பு போட்டுருக்கு. அப்புறமா வரணும்.

தொடரும்................:-))))

Monday, June 25, 2012

அஸ்ட்ராலியாவில் ஆரம்பிச்சு அமெரிக்கா போயிட்டேனே.....(ப்ரிஸ்பேன் பயணம் 7)

திருக்கை மீன் செஞ்ச அக்கிரமத்தாலே போன உயிர், மீண்டும் வரவா போகுது? வழியெல்லாம் இதே நினைப்புதான். ப்ரிஸ்பேன் நகரில் இருந்து வடக்கே இருக்கும் சன்ஷன் கோஸ்ட்க்குப் போகும் வழியில் போறோம்.

போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வடக்கே போகும் வழியில் உள்ள 24 ட்ராஃபிக் லைட்ஸ் உள்ள சிக்னலில் நின்னு நின்னு போகாம ஜிர்ன்னு பாய்ஞ்சு போகவும் ப்ரிஸ்பேன் ஆறைக்கடந்து போக வச்சுருக்கும் 18 பாலங்களை ஒரேடியா ஜம்ப் பண்ணிக்கவும் தோதா ஒரு சுரங்கப்பாதை அமைச்சாங்க. இதுக்கு க்லென் ஜோன்ஸ் டன்னல் Clem Jones Tunnel என்று பெயர். 2006 செப்டம்பர் ஆரம்பிச்ச வேலையைச் சரியா மூணரை வருசங்களில் முடிச்சாங்க. 4.8 கிலோமீட்டர் நீளச் சுரங்கம். ப்ரிஸ்பேன் நதிக்கு 200 அடிக்குக் கீழே தோண்டி எடுத்துப்போட்டச் சுரங்கப்பாதை. முன்பக்கம் ஒரு கிலோ மீட்டர் பின்பக்கம் ஒரு கிலோமீட்டர்ன்னு உள்ளே போய் வெளியே வந்து சேரன்னு மொத்தம் 6.8 கிலோமீட்டர் தூரம். இதுலே போனால் பயண நேரம் 15 நிமிசம் லாபம்.

போக ரெண்டு வர ரெண்டுன்னு நாலு லேன். நடுவிலே மேற்கூரை வரை தடுப்புச்சுவர். 80 கிலோமீட்டர் வேகம் மட்டுமே அனுமதி. போற வேகத்துலே இடதுபக்கம் இருந்து ஒரு லேன் வந்து வந்துசேருதேன்னு முதலில் கொஞ்சம் பயந்துட்டேன். ஒவ்வொரு 120 மீட்டருக்கும் அவசரம் ஆபத்துக்குன்னு ஒதுங்க 41 க்ராஸ் பேஸேஜ் வச்சுக் கட்டி இருக்காங்க. 


உள்ளே காற்றோட்டத்துக்காக ஜெட் ஃபேன் 100. எமெர்ஜன்ஸிக்கான ஃபோன்கள் 165. ஓவர்ஸ்பீடு போகும் ஆட்களைப்பிடிக்க ஸ்பீட் கேமெரா எட்டு. டன்னல் முழுசையும் கண்காணிக்க 250 கேமெராக்கள், இடைவிடாமல் கண்காணிப்பு செய்யும் கண்ட்ரோல் செண்டரில் 50 பணியாட்கள் இப்படி எல்லாமே பெரிய அளவில்! அட்டகாசமா இருக்கு!

இது டோல் ரோடு. ஆனால் எங்கே போய்க் கட்டணுமுன்னு தெரியலை. உள்ளே நுழையறதுக்கு முன்னேயே மூணுநாள் இருக்கு டோல் கட்டன்னு மின்சாரவிளக்கு அறிக்கை விட்டுக்கிட்டு இருக்கு. ஒருவேளை கடந்து போகும் வண்டிகளின் கார் நம்பர்களை வச்சு மொத்தமா வசூலிப்பாங்களோ என்னவோ!

சுரங்கப்பாதை முடிஞ்சு வெளியே வந்தோம். எந்தப்பேட்டைன்னு தெரியலை. ஆனா..... ஒரு டிப்பிக்கல் க்வீன்ஸ்லேண்ட் வீடு கண்ணில் பட்டது. எல்லாம் மரம் வச்சுக் கட்டுனக் கட்டிடம். சாலை ப்ரூஸ் ஹைவேயில் வந்து சேர்ந்துச்சு. இங்கே மோட்டர்வே முழுசுக்கும் இடப்புறம் நல்ல மறைப்பு போல ஃபென்ஸ் போட்டு வச்சுருக்காங்க. எங்க ஊர்ப்பக்கங்களில் ஒரு கம்பிவேலி கூட இருக்காது!


இடையில் ஒரு இடத்தில் எதிர்ப்புறம் வரும் போக்குவரத்து அப்படியே நின்னு போய் வண்டிகள் வரிசையா ஒரு நாலைஞ்சு கிலோமீட்டர்வரை நின்னுக்கிட்டு இருக்கு. ஏதோ விபத்து நடந்திருக்கு. கோபாலுக்கு. என்ன ஏதுன்னு தலையைத் திருப்பிப் பார்க்க முடியாது நம்ம வண்டிக்குப்பின்னால் சீறிவரும் மற்ற வண்டிகளின் வேகம் பார்த்தால் பயமாத்தானே இருக்கு! நாம் எதுக்கு இருக்கோம்? ரன்னிங் காமெண்டரி கொடுத்துக்கிட்டே க்ளிக்கி வச்சேன் அவருக்காக:-)

நகர் மையத்தில் இருந்து ஒரு அம்பத்தியிரண்டு கிலோமீட்டர் வந்திருந்தோம். ஹைவேயில் இடது பக்கம் பிரியும் சாலைக்குள் போகணும். இது ஒரு முப்பது, முப்பத்தியஞ்சு கிலோமீட்டர் தூரம் போய் மீண்டும் இதே ப்ரூஸ் ஹைவே (சன்ஷன் கோஸ்ட் போகும் ரோடு) யில் சேர்ந்துருது. இந்த சாலைக்கு ஸ்டீவ் இர்வின் வே ன்னு பெயர் வச்சுருக்காங்க.

இவர் யாருன்னு சாலை முகப்பில் வரும் அடையாளம் சொல்லிரும். முதலை வேட்டைக்காரர். உண்மையில் பார்த்தால் இவர் முதலை வேட்டையாடுபவரே இல்லை. முதலைக்காதலர் என்றுதான் சொல்லணும். முதலைகளைப்பிடித்து வளர்க்கிறவர். இயற்கையும் விலங்குகளையும் நேசிப்பவர்.

இவருடைய பெற்றோர் முதலைப்ரேமிகள். 1970 ஆம் ஆண்டு சில விலங்குகளை வச்சுப் பராமரிக்க ஏற்படுத்தினதுதான் பீர்வா ரெப்டைல் பார்க். வெறும் நாலு ஏக்கர் நிலம். அப்பா Bob Irwin ஒரு ப்ளம்பர். கொஞ்சம் வீடு கட்டும் திறமையும் இருந்துச்சு. தானாய் டிஸைன் செஞ்சு இந்த பார்க்கை அமைத்தார். ஸ்டீவுக்கு அப்போ வயசு எட்டு எங்க அம்மா லின் ஊர்வனவைகளுக்கும் வனவிலங்குகளுக்கும் ஒரு மதர் திரேஸான்னு சொல்லிக்கிட்டு இருப்பார் '. அவருடைய ஆறாவது பொறந்த நாளுக்கு அப்பா அம்மா Bob Irwin & Lyn Irwin கொடுத்த பரிசு என்னன்னு கேட்டா மலைச்சுப் போவீங்க. 12 அடி நீளமான மலைப்பாம்பு..

அடிபட்ட பறவைகள், விலங்குகள், தாயை இழந்து அநாதையா நிற்கும் குழந்தைகள் குறிப்பா கங்காரு, கோஆலா இதுகளை வீட்டுக்குள்ளே வச்சுக் காப்பாத்தும் லின் உண்மையில் ஒரு பிள்ளைப்பேற்றில் உதவும் மருத்துவத் தாதி. மனுசனுக்குள்ள சிகிச்சை மிருகங்களுக்கும் கொடுத்தால் போச்சு. வீடு முழுசும் ஆஸ்பத்திரி வார்டு போலவே இருந்துருக்கு


ஒன்பது வயசு ஸ்டீவ், முதல்முறையா தன் தகப்பனோட மேற்பார்வையில் முதலைகளை எப்படிக் கையாளுவதுன்னு தெரிஞ்சுக்க ஆரம்பிச்சார். விலங்குப்பராமரிப்பில் கில்லாடியா ஆனதும் ஸ்டீவின் 21 வது வயசில் ரெப்டைல் பார்க் நிர்வாகம் கைக்கு வந்துச்சு. அஸ்ட்ராலியா ஜூ என்ற பெயர் வச்சு ( என்ன ஒரு கஷ்டம் பாருங்க... இந்த Zoo என்ற சொல்லை எழுதும்போது ஜூன்னு சொல்ல வேண்டி இருக்கு. விஜயகாந்த் ஜூம் பண்ணுன்னு சொல்வது போல) கொஞ்சம் கொஞ்சமா விரிவு செய்து இப்போ 100 ஏக்கர் பரப்பளவில் இயங்குது.

ஆறுவருசத்துக்கு முன் கடலுக்குள் ஒரு படப்பிடிப்பில் இருந்தப்ப திருக்கை மீன் ஸ்டீவின் மார்பில் தன் வாலால் குத்திருச்சு. நேரடியா இதயத்துக்குள் செருகுன அரம்/கத்தி போல இருக்கும் முள் வால். உடனடி மரணம். அப்போ ஸ்டீவுக்கு வயசு 44. அஸ்ட்ராலியாவையே உலுக்கிப்போட்ட சம்பவம்.

இவர் மனைவி டெர்ரியும் குழந்தைகள் பிண்டி, பாப் ( தகப்பன் இறந்த சமயம் வெறும் 3 வயசுக்குழந்தை) தொடர்ந்து இந்த நிறுவனத்தை நடத்திக்கிட்டு இருக்காங்க. இது தனியார் நிர்வகிக்கும் நிறுவனம். நுழைவுக்கட்டணம் கொஞ்சம் அதிகமுன்னு முதலில் தோணினாலும்..... இத்தனை அழகாவும் பொறுப்பாவும் செய்ஞ்சுக்கிட்டு இருப்பதைக் கவனிச்சபிறகு நியாயமானதேன்னு பட்டுச்சு. மகளிடம் இருந்த டிஸ்கவுண்ட் கூப்பான் மூலம் எங்களுக்கு 15 சதம் கழிவும் கிடைச்சது.வனவிலங்குகளுக்கான மருத்துவமனை தனியா இருக்கு. அதைப்பார்க்க 2$ கட்டணம். அதுக்கும் சீட்டு வாங்கிக்கிட்டோம்.


பொதுவா இங்கே உள்ளே நுழைஞ்சதும் எல்லாச் சமாச்சாரங்களையும் வரைபட விளக்கத்துடன் கொடுத்துடறாங்க. அதில் முக்கியமா நாம் கவனிக்க வேண்டியது ஸ்பெஷல் ஷோ நடக்கும் நேரங்கள். அரைமணி, கால்மணி நேரம் இருக்கும் காட்சிகள். ஒரே நேரத்துலே வெவ்வேற ஷோக்கள் நடக்கும்போது எதைப் பார்ப்பது எதை விடறதுன்னு நமக்குக் குழப்பமே வரும். சிலது ஒரு நாளைக்கு ரெண்டு முறைன்னு இருப்பதைக் கவனிச்சு வச்சுக்கிட்டு நேரத்தை அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்.

இப்படித்தான் ஒரு முறை ஸான் டியாகோ போயிருந்தபோது. அங்கே (San Diego Sea World) ஸீ வொர்ல்டில் ஏகப்பட்ட ஷோக்கள் ஒரே நேரத்துலே. அது ஒவ்வொன்னும் ஒரு மூலையில் என்பதால் கையில் வரை படத்தோட ஓடி ஓடி கால்கள் களைச்சுப்போச்சு. முக்கியமா நாம் பார்க்கப்போனது ஷாமு ஷோ. ஷாமு ஒரு திமிங்கிலம். நாம் போன நேரம் இன்னொரு திமிங்கிலத்துக்குப் பிரசவம் நடக்குது. ஹைய்யோ ......... அபூர்வமாக் காணக்கிடைச்சதை இப்படி ஒருக்கா எழுதி இருந்தேன்.
திமிங்கிலத் தாய். 


மகளும் நானுமா, டிஸ்னி லேண்ட் பார்க்கறதுக்குன்னு லாஸ் ஏஞ்சலீஸ்க்குப் போய்க்கிட்டு இருக்கோம். போனோம் வந்தோமுன்னு ஒரே ஒரு வாரம். எனக்கு ஒரு அறுவை சிகிச்சை முடிஞ்சு அஞ்சுவாரம்தான் ஆகி இருந்துச்சு. கோபால் இங்கிலாந்துக்குப் போயிருந்தார். அங்கே இருந்து கிளம்பி வந்து எங்களை எல்.ஏ. ஏர்போர்ட்லே சந்திக்கிறதா ஒரு ஏற்பாடு. எல்லாரையும் போல எல்.ஏ. சுத்துனது இருக்கட்டும். இப்பச் சொல்லவந்தது, அங்கிருந்து San Diego வுக்கு ஒரு நாள்போய் வந்தது. 


திமிங்கிலத்தைப் பார்க்கப்போறோமுன்னு குஷியில் இருக்கேன். 'ஸீ வொர்ல்ட்' உள்ளே பலவிதமான ஷோ நடக்கறதாலே,சரியாத் திட்டம் போட்டோமுன்னா ஏறக்குறைய எல்லாத்தையுமே பார்த்துறலாம். ஒவ்வொண்ணுக்கும் இடைவெளி ஒரு 10 நிமிஷம், கூடிப்போனா 15 நிமிஷமுன்னு இருக்கு. ஒரு கோடியில் ஒண்ணைப் பார்த்துட்டு, அதுக்குள்ளே மறு கோடியில் நடக்கும் நிகழ்ச்சிக்கு ஓடணும். கையில் அட்டவணையும், மேப்பும் கொடுத்துடறாங்க.


திமிங்கிலக் குளத்தைத் தாண்டும்போது, என்னமோ ப்ளாஸ்டிக்லே செஞ்ச ராட்சஸ பொம்மை மாதிரி வழுவழுன்னு ஒரு மினுங்கலோடு, ஒரு திமிங்கிலம் நிக்காம படபடன்னு சுத்திச் சுத்தி வந்து தண்ணீரை வாலாலே அடிச்சுக்கிட்டு இருக்கு.ஒரு அஞ்சாறு பேரைத்தவிர அங்கே அப்ப யாரும் இல்லை. அந்தக் குளத்தோட பக்கச்சுவர் எல்லாமே கண்ணாடிச்சுவர் .தண்ணீர் ஒரு கலங்குன அழுக்காத் தெரியுதேன்னு கவனிச்சா............. அந்தத் திமிங்கிலம் குட்டி ஈனப்போகுது. 


அதோட அடிவயித்துப் பகுதியிலே இருந்து ரெண்டு/ மூணடி நீளத்துலே குட்டியின் உடல் பகுதி வெளியே வந்து அப்படியே நீட்டிக்கிட்டு இருக்கு. பிரசவ வேதனையில் துடிக்குதுபோல அந்த அம்மா. வலி பொறுக்கமாட்டாமத்தான் வலைத் தூக்கித்தூக்கி அடிச்சுக்கிட்டு இருக்கு. பார்க்கவே பரிதாபமா இருந்துச்சு. நேரமாக ஆக குளத்துத் தண்ணீர் முழுசும் ரத்தச்சிகப்பா ஆயிருச்சு. அதுக்குள்ளே நிகழ்ச்சிக்கு நேரமாச்சு இவுங்க அவசரப்படுத்துனதுலே,மனசில்லா மனசோடு அங்கிருந்து ஓட வேண்டியதாப் போச்சு. 


ரெண்டு மணி நேரத்துக்குப்பிறகு 'ஷாமு' வின் ஷோ பார்க்க அதே இடத்துக்கு வந்தோம். அதுக்குள்ளே, அங்கே எதுவுமே நடக்காதது போல பளிச்சுன்னு சுத்தம் செஞ்சு,புதுத் தண்ணீர நிரப்பி வச்சுருக்காங்க. வெள்ளையும் கருநீலமும் 'பேட்ச்' போட்டமாதிரி Blue whale ரெண்டு நீந்தி விளையாடிக்கிட்டு இருந்துச்சுங்க. விசாரிச்சதுலே தெரிஞ்சுக்கிட்டது, அம்மாவையும் குழந்தையையும் வேற குளத்துக்கு மாத்திட்டாங்களாம். இருவரும் நலமாம். அப்பாடான்னு இருந்துச்சு. 


(இன்னும் கூட எனக்கு ஒரு சந்தேகம்தான். இந்த திமிங்கிலங்கள் ப்ளாஸ்டிக் பொம்மைகளோன்னு) தொடரும்...............:-)

Friday, June 22, 2012

காரணம் வேணும் கடைக்குள் போக ((ப்ரிஸ்பேன் பயணம் 6)

நாங்க ஒரு பெஞ்சுலே உக்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கோம். இது குவீன் தெருவின் கடைசி. பக்கத்துலே ஒரு தெரு குறுக்காப் போகுது. ஜியார்ஜ் தெரு, இதைக் கடந்தால் பெரிய முற்றப்பகுதி முழுக்கக் கல் பாவியது. இதுக்கு ப்ரிஸ்பேன் சதுக்கம் என்று பெயர். நமக்கிடது பக்கம் கருவூலம் (இருந்த ) பழையகாலக் கட்டிடம். 1883 லே திட்டம் போட்டுக் கட்டி முடிச்சது 1889லே. அப்போ ரெண்டு மாடிகள் தான். எல்லா அரசு அலுவலகமும் இதுக்குள்ளே இருக்கும்படி அமைச்சது. சட்டசபை கூட இதுக்குள்ளேதானாக்கும். ரொம்பவே பெருசு. கட்டிடத்தின் நாலு பக்கமும் நாலு தெருக்கள். ஒரு முழு ப்ளாக்! இதுக்கு ஒரு தோழி போல இன்னொரு பழங்காலக் கட்டிடம் இந்தப்பக்கம் இருக்கு. பேங்க் ஆஃப் நியூ சௌத் வேல்ஸ்! ரெண்டுக்கும் இடையில் ஜியார்ஜ் தெரு ஓடுது. அப்போ எல்லாம் பார்த்துப் பார்த்துதான் கட்டி இருக்காங்க. இல்லே?

இதுக்குள்ளேதான் ப்ரிஸ்பேனின் சூதாட்ட விடுதி கஸீனோ 1995 முதல் இயங்குது. வலப்பக்கம் கஸீனோ ஹொட்டேல். அங்கேயே தங்கிக்கிட்டு மனம் போல் ஆடலாம். அதிகபட்ச அறை வாடகை ஆயிரத்துக்குப் பத்து குறைச்சல். உள்ளே ஆறு ரெஸ்டாரண்டுகளும் அஞ்சு பார்களும் இருக்கு. யதேஷ்டம் இல்லையோ?

தொட்டடுத்துப்போகும் ப்ரிஸ்பேன் ஆறு. அதைக் கடந்து போக விக்டோரியா பாலம். குளுகுளு காத்து கேரண்டீ! அஞ்சு நிமிச நடையில் ஆற்றின் தென்கரைக்குப் போயிடலாம்.

சூட்கேஸ்களை உருட்டிக்கிட்டு சனம் இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் போய்க்கிட்டே இருக்கு. பார்த்தால் கஸீனோ ஹொட்டேலில் தங்குபவர்களாத் தெரியலை. இதுக்குள்ளே மாலை மயங்கி இருள் சூழத் தொடங்கிக் கஸீனோக் கட்டிடம் கலர் கலரா ஜொலிக்க ஆரம்பிச்சது. ஆரவாரமில்லாத அழகான மிதமான ஒளி.


கோபாலுக்குத் துணையா அவருடைய ப்ளாக்பெர்ரி இருக்கேன்னு நான் சாலையைக் கடந்து என்ன ஏதுன்னு பார்க்கப்போனேன். பழம்பொருள் அங்காடி! சூட்கேஸைத் திறந்து தேவைப்படாத பழைய உடைகள், நகைகள்(??) காலணிகள், காதலர் கொடுத்த அன்பளிப்புகள்(!!) இப்படிச் சாமான்களைப் பரத்தி வச்சு வித்துக்கிட்டு இருக்காங்க. 95 சதமானம் பெண்களே! ஆம்பிளைக்கு ஏது இவ்வளோ உடைகளும் பொருட்களும்?


விலைபோகலைன்னாவோ இல்லே போரடிச்சாவோ பொட்டியிலே எல்லாத்தையும் அடைச்சுக்கிட்டு உருட்டிக்கிட்டே கிளம்பிப் போயிடறாங்க. அந்தக் கூட்டத்தில் ஹரே க்ருஷ்ணா பக்தர்கள் ஒரு கடை விரிச்சு எல்லோருக்கும் மோட்சத்துக்கு வழிகாட்டிக்கிட்டு இருந்தாங்க. ரெண்டு பேரும் இந்தியர்கள்தான். அவுங்ககிட்டேயும் ரெண்டு சூட்கேஸ்கள்:-)

என்ன ஏதுன்னு கொஞ்சம் விசாரிச்சேன். ஹரே க்ருஷ்ணா கோவில் இப்போ வேற இடமுன்னு வலையில் பார்த்தேனே..... ன்னு விசாரிச்சதில் பழைய இடம் குடி இருப்புப்பகுதி. இங்கே இனிமேல்பட்டுக் கோவில் நடத்த அனுமதி இல்லைன்னு கவுன்ஸில் சொல்லிருச்சாம்.

1972 லே இந்த இயக்கத்தினர் ஒரு வாடகைவீட்டில் ஆரம்பிச்ச கோவில். அப்புறம் 1985 வது ஆண்டு சொந்தமா ஒரு வீட்டை க்ரேஸ்வில் என்ற இடத்தில் (95 Bank Road, Graceville) வாங்கி கொஞ்சம் உள்பகுதியில் மாற்றங்கள் செஞ்சு ஒரு பெரிய ஹால் அமைச்சு அதுலே சாமி சிலைகளை வச்சு கோவிலாக்கிட்டாங்க. பார்க்க ஒரு தோட்டமுள்ள வீடுதான். கோவிலின் அடையாளங்கள் ஒன்னும் இருக்காது. தோட்டத்தின் ஒரு பக்கத்தில் ஓடும் ப்ரிஸ்பேன் நதி. யமுனைக்கரையில் கண்ணன் இருப்பதுபோல ஒரு தோற்றம் தரும்.

அப்போ கோவில் நடத்திக்க அனுமதி கொடுத்த கவுன்ஸிலுக்கு இப்போ என்ன ஆச்சாம்? ஒருவேளை அக்கம்பக்கத்தார் புகார் கொடுத்து நெருக்கி இருக்கலாம். ஞாயிறு ஆனால் ஏகப்பட்ட வண்டிகள் தெருமுழுசையும் அடைச்சு நிற்பது பிடிக்கலை போல:(

செவன்ட்டீன் மைல் ராக்ஸ் என்ற இடத்தில் 37 ஜென்னிஃபர் தெரு என்ற இடத்தில் இப்போ கோவில் நடத்தறாங்களாம். நகர மையத்தில் இருந்து முந்தி கோவில் இருந்த இடத்துக்கு ஒரு பதினொரு கிலோமீட்டர் தூரம். இப்போ இன்னும் ஒரு அஞ்சு கிலோமீட்டர் அதிகமாப் பயணிக்கணும். ஞாயிறு. மாலை விருந்து இப்போ சனிக்கிழமையா மாறி இருக்குன்னாங்க..

இங்கே எலிஸபெத் தெருவில் கோவிந்தாஸ் ரெஸ்ட்டாரண்ட் இன்னும் நடக்குதான்னு கேட்டேன். அது நல்லாவே நடக்குது. ஞாயிறுகளில் மாலை அங்கே விருந்து வைக்கிறோம். இன்னிக்கு ஞாயிறுதானே? முடிஞ்சால் வாங்களேன்னு சொல்லி விவரம் கொடுத்தார். நம்மைப்பற்றி விசாரிச்சதில் நான் கிறைஸ்ட்சர்ச்காரின்னு தெரிஞ்சதும் ஐயோ என்ற பாவம் அவர் முகத்தில்.. கோவில் இடிஞ்சு போன விவரம் தெரிஞ்சுருக்கு. உள்ளே வேலை நடக்குது. தாற்காலிகமா ஒரு கம்யூனிட்டி ஹாலில் ஞாயிறு பூசை நடத்தறோமுன்னு சொன்னேன்.

மாசத்தின் முதல் ஞாயிறு இங்கே பழம்பொருள் விற்க கடை விரிச்சுக்கலாமுன்னு சிட்டிக்கவுன்ஸில் அனுமதி கொடுத்துருக்காம். இலவசம்தான். வாடகை ஒன்னும் இல்லை. அடடா.... ப்ரிஸ்பேன்வாசியா இல்லாமப் போயிட்டோமேன்னு நினைச்சேன். நம்மகிட்டே சூட்கேஸ்களே எக்கச்சக்கமா இருக்கே!

ஒவ்வொருத்தருக்கும் ஒரு வீக்னெஸ் இருக்கும். எனக்கு ஃப்ரையிங் பேன். கோபாலுக்கு பை அண்ட் சூட்கேஸ். ஒரு நாள் பயணம் முதல் 365 நாள் பயணம்வரை விதவிதமா அடுக்கடுக்கா வச்சுருக்கார். அஞ்சு நாள் பயணமுன்னா அதுக்கு நாலுநாள் பயணத்துக்கானதோ இல்லை ஆறுநாள் பயணத்துக்கானதோ கூடாதாம். கொண்டுபோகும் துணிகளின் கொள்ளளவுக்கேத்தமாதிரி கச்சிதமா இருக்கணுமாம்!

எங்கே பொட்டி விக்கும் கடையைப் பார்த்தாலும் உள்ளே நுழையாமல் திரும்பமாட்டார். நானும் அந்த சமயம் ஹோம் அண்ட் கிச்சன் பகுதிக்கு போயிருவேன்:-) கிச்சன் காட்ஜெட்ஸ் எனக்கு இன்னொரு வீக்னெஸ் கேட்டோ:-)

இங்கே இருந்தவரை நம்ம தூயாவின்ட சமையல்கட்டில் இருக்கும் விரல்காப்பாளனைத் தேடிக்கிட்டே இருந்தேன். சூப்பர்மார்கெட்டில்கூடக் கிடைக்குமுன்னு சொல்லி இருந்தாங்களே.... கண்ணில்பட்ட ஒரு சூப்பர்மார்கெட்டையும் விட்டுவைக்கலை. காரணம் ஒன்னு வேணும் கடைக்குள் போக:-)))))கடைசியில் டேவிட் ஜோன்ஸ் என்ற கடையில் ஜெய்மீஆலிவரின் கண்டுபிடிப்புன்னு ஒன்னு பார்த்தேன். ப்ளாஸ்டிக்:( அதுக்கே 9 டாலராம்! கோபால் விரலை வெட்டிண்டால் பரவாயில்லைன்னு வாங்கிக்கலை:-) 25 வருசம் காரண்ட்டீன்னு வேற போட்டுருக்கு. தொலையட்டுமுன்னு வாங்கி இருக்கலாம் இல்லே? நம்மூர்லே கிடைக்குதான்னு பார்க்கணும்மணி ஆறாச்சு, கடைகளும் மூடியாச்சு. மகள் ஒருவழியாக எங்களைத்தேடி வந்தாள். எல்லோருமாப்போய் ஈவ்னிங் பஸார் பார்த்தோம். அப்படியே விக்டோரியாப் பாலத்தில் ஒரு சிறுநடை! ராச்சாப்பாட்டுக்கான ஏற்பாடு என்னன்னு சொன்னது மகளுக்குப்பிடிக்கலை. அவள் ஒரு அக்னோஸ்டிக். நியூஸியில் இளவயது ஆட்கள் இப்படிச் சொல்லிக்குவாங்க. இது கூட ஒரு ஃபேஷன் போல! இளவயதுன்னு இல்லே...... ஒரு ரெண்டுமூணு தலைமுறைன்னு சொல்லிக்கலாம். போன பிரதமரும் இதேதான். ஆனால் கம்யூனிச சிந்தனை உள்ள தொழிற்கட்சியாச்சே அவுங்களோடது.


சர்ச்சுகளில் கிறிஸ்மஸ் நாளுக்குக் கூட கூட்டமே இருக்காது. நாங்கதான் மனசு கேக்காம கிறிஸ்மஸ் ஈவுக்கு சர்ச்சுக்குப் போய் வருவோம். புது வருசமோ கேக்கவே வேணாம். எல்லாம் காவோ பீவோ மஜா கரோ தான்.

நிலநடுக்கம் வந்தபிறகு , போன கிறிஸ்மஸ் அன்னிக்கு நாங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு சர்ச்சுக்குப்போனால் எள் போட்டா எண்ணெயாகும் அளவுக்குக் கூட்டம். ஒருவேளை ஜட்ஜ்மெண்ட் டே வந்துருச்சுன்னு நினைச்சுக்கிட்டாங்களோ என்னவோ? தெய்வபயம் கூடி இருக்கலாம்.

நம்பிக்கை இல்லைன்னா போகுது. அட்லீஸ்ட் சாப்பாடு நல்லா இருக்கும் வான்னு கூப்பிட்டால் மாட்டேன்னுட்டாள். அறைக்குப்போய் கொஞ்சம் வலை மேய்ஞ்சுட்டு அங்கே ரூம் சர்வீஸ் எதாச்சும் வாங்கிக்கறேன்னுட்டு போயிட்டாள்.


நாங்க ரெண்டு பேரும் கோவிந்தாஸ் தேடிப்போனோம். மாலுக்கு அடுத்த தெருதான். மாடி ஏறிப்போனால் சத்சங்கம் நடந்துக்கிட்டு இருக்கு. நல்லவேளை நாற்காலிகள் போட்டு வச்சுருந்தாங்க. Food Yoga என்னும் புத்தகத்தைப்பற்றி விளக்கி ஸ்லைட் ஷோ காமிச்சுக்கிட்டு இருந்தார் ஒருத்தர். உணவே மருந்துன்னு நாம் நினைச்சால் அதுவே யோகான்னுட்டாங்க. நமக்குத்தான் யோகா செய்ய நல்லா வருதே:-)

நாம சங்கீர்த்தனம் ஆரம்பிச்சு மகாமந்த்ர பஜனை நடந்துச்சு ஒரு கால் மணி நேரம். அப்புறம் இருக்கைகளை எல்லாம் ஓரமா ஒதுக்கிட்டு பந்தி போட ஆரம்பிச்சாங்க. ஓரத்தில் சரிகை பார்டர் வச்சுத் தைச்ச குட்டி மெத்தைகள், முடிஞ்சவரை எல்லோரும் தரையில் உக்கார்ந்தபிறகு தட்டு, டம்ப்ளர், ஸ்பூன் தொடங்கி சாப்பாடு வர ஆரம்பிச்சது.

ஃப்ரைடு ரைஸ், பனீர் கீரைக் கறி, காலிஃப்ளவர் கறி, பருப்புக் கறி, வடாம், க்ரோக்கேன்னு சொல்லும் பனீர் வெஜிடபிள் உள்ளே வச்ச போண்டா மாதிரி ஒன்னு, பஜ்ஜியா, ஸாலட் இப்படி ஏகப்பட்ட வகைகள். பால்பாயஸம், கேசரி, பால்ரவா லட்டுன்னு நாலு இனிப்பு வகைகள் எல்லாம் படு பிரமாதம்!இது பக்கா ரெஸ்ட்டாரண்ட் என்பதால் இத்தனையையும் சமைக்க அருமையான கிச்சன் இருக்கு. சாப்பிடும்போதே ஒருத்தர் சின்ன ட்ரே எடுத்துவந்து மக்கள் கொடுக்கும் அஞ்சு டாலர்களை வாங்கிக்கிட்டே நகர்ந்தார். நுழைவுக் கட்டணம் அஞ்சு டாலருன்னு விளம்பர நோட்டீஸ்லே போட்டுருந்தாலும் நிர்பந்தமில்லை.


அப்புறமா நான் அந்த நோட்டீஸைச் சரியாக் கவனிச்சப்ப...... அந்த ஃப்ளையர் கொண்டு வர்றவங்க இன்னொரு நண்பரையும் கூட்டிவந்தால் ரெண்டு பேருக்கும் சேர்த்தே அஞ்சு டாலர்ன்னு போட்டுருக்கு. பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ:-)உண்ட மயக்கம் தீர மெது நடையாக் கிளம்புனோம். டர்போ தெரு வந்தவுடன்.... படிகளில் ஏறிப்போகலாமான்னு கேட்ட கோபாலை..... ஒன்னும் சொல்லாம படியேற ஆரம்பிச்சேன். சரியா 97 படிகள்! திருப்பதி மலை நடைபாதைன்னு நினைச்சுக்க வேண்டியதுதான். கோவிந்தா கோவிந்தா......

அறைக்குப் போனால்.... மகள் பீட்ஸா ஆர்டர் செஞ்சுருக்காளாம். ரெடி ஆனதும் கீழே ரெஸ்ட்டாரண்டில் இருந்து கூப்பிட்டு நீங்க வந்து எடுத்துக்கிட்டுப் போறீங்களா இல்லே நாங்க கொண்டு வரணுமான்னு கேக்கறாங்க. இது என்னடா ரூம் சர்வீஸ்? என்ன விவரமுன்னால்.... அவுங்க லிஃப்ட் ஏறி வந்து கொடுத்தால் அதுக்கு சர்வீஸ் சார்ஜ் ஆறு டாலராம். அடப்பாவிகளா?

நாம் ஆறாவது மாடி என்றதால் ஆறு டாலரோ? அப்ப எட்டாவது மாடின்னா?

அங்கேயே வை இதோ வர்றேன்னு கோபால் அதே லிஃப்டில் போய் எடுத்துக்கிட்டு வந்தார்:-)

ம்ம்ம்ம் சொல்ல மறந்துட்டேனே..... கடைசியிலே மாலுக்குப்போகும் வழியில் ஒரு குடை  வாங்கிக்கிட்டோம். மழையை நிறுத்த வேற வழி தெரியலை:-)))))


சரி சரி எல்லோரும் பொழுதோட தூங்குங்க. நாளைக்கு நிறைய நடக்கணும். தொடரும்..................:-)