Friday, December 30, 2016

பொட்டிக்குள்ளே பெருமாள் ! (இந்தியப் பயணத்தொடர். பகுதி 112)

"உங்களுக்கு ஒரு செக் கொடுக்கணும்"  இன்பத்தேன் வந்து பாய்ஞ்சது காதினிலே!  உள்ளூர்க்கணக்குக்கு அக்கவுண்ட் இல்லை.  காசாக் கண்ணுலே காட்டினால் நல்லது. ம்ம்ம்ம்ம்....   நாளைக்கு உங்க அறைக்கு அனுப்பிடறேன்னார் பப்ளிஷர்.


வெளிவந்த, வரப்போகும் புத்தகங்கள் பற்றிக் கொஞ்சம் பேச்சு, கொஞ்சம் புத்தகங்கள் வாங்குவது, கொஞ்சம் க்ளிக்ஸ் எல்லாம் ஆச்சு.  அறைக்குத் திரும்பினோம்.
ரங்கனை எப்படிக் கொண்டு போவது.........   ஒரு கஷ்டமும் இல்லை. பேசாம நான் கேபின் பேகில் வச்சுக்கறேன். சேஷன் மட்டும் சரியா அடங்கமாட்டான். எட்டிப் பார்த்தால்  பயமா இருக்குமோ?
சரி. இந்த வேலையை இன்றைக்கே முடிச்சாகணும். கிளம்புன்னு  தோழி வீட்டுக்குப் போனோம். அங்கேதான்  பாக்கிங் பிரச்சனையே இல்லை.  ஒரு இடம் இருக்குன்னு சொல்லி இருந்தாங்க. ஊறுகாய் எல்லாம் அட்டகாசமா பேக் பண்ணிக் கொடுத்துடறாங்களாம்!  ஹங்...........  அப்படியா?  ஆனா  இவன்.....  ஊறாத காய் இல்லையோ :-)

முதல் கேள்வி 'சாப்டாச்சா' ?   சாப்பாடுன்னு உக்காரலை. ஆனால்  விஸிட்டுகளால் பசி அவ்வளவா இல்லைன்னு தள்ளிப்போட்டுருக்கு.
இட்லி மொளகாய்ப்பொடி இருக்கும் இடமும், சம்புடமும் இந்த வீட்டில் மாறித்தான் போயிருக்கு!  இப்ப இந்தமாதிரி!!!  சூப்பர் :-)

கூடவே காஃபி. முடிச்சுக்கிட்டு  கையோடு கொண்டுபோயிருந்த  கேபின்பேகில் ரங்கனை  வச்சால்....   பாம்பு எட்டித்தான் பார்க்குது :-)

கொஞ்ச தூரத்தில் இருக்கும் பேக்கிங் கடைக்குப் போய்ச் சேர்ந்தோம். நீள அகலத்துக்குத் தகுந்த அட்டைப்பொட்டி கிடைக்கலை. பெட்டி மட்டும் கிடைச்சுட்டால்....  நீட்டாப் பேக் பண்ணிடலாமாம்.  ஹாஹாஹாஹா...

பெட்டி வாங்கிக்கலாம். பிரச்சனை இல்லை. ஆனால் எங்கே கிடைக்கும்? ஆர்.கே. மட் ரோடில் ஒரு இடத்தில் கிடைக்குமாம். சரி கிளம்பு.   போற வழியில் அடையாறில் ஒரு ஸ்டேஷனரிக் கடை கண்ணில் பட்டதும் விசாரிச்சோம். பபிள் ராப் வச்சுருக்காங்களாம்.  அஞ்சு மீட்டர் கொடுங்க.



ராமகிருஷ்ணாமடம் சாலை.  போய்க்கிட்டே இருக்கோம். அடையாளம் வோடஃபோன் கடையாம்:-)  அதுக்குப்பக்கம் நின்னு  கண்ணால் மேய்ஞ்சப்ப,  ஒரு இடம் ஆப்ட்டது. மாடிக்குக்  கூட்டிப்போனாங்க. பெரிய சாமான்களின் ஒரிஜினல் பேக்குகளாக வந்த அட்டைப்பொட்டிகளின் அடுக்குகள்.  நீள அகலம் பார்த்து ஒரு வாஷிங் மெஷீன் அட்டைப்பொட்டி வாங்கிக்கிட்டு மறுபடியும் பேக்கிங் கடைக்குப்போனோம்.  பபுள்ராப்பைச் சுத்தோ சுத்துன்னு சுத்திப் பாம்பையும் பெருமாளையும் பொதிஞ்சு  பொட்டிக்குள் வச்சாச்சு. காலி இடம் நிறைய இருக்கு. அதுலே  துணிகளை அடைச்சுடலாமுன்னு திட்டம்.

மறுநாள் பொழுது விடியும்போதே ரெண்டுபேருக்கும் ஒரே எண்ணம்.  கோவிலுக்குப்போய் வந்து ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடலாம்!  சீனிவாசனைக் கொஞ்சம் லேட்டாத்தான் வரச் சொல்லி இருக்கு. உள்ளூர் என்பதால் ஒரு நாளைக்குப் பனிரெண்டு மணி நேரம் கார் எடுத்துருக்கோம். பனிரெண்டு மணி நேரமும் கார் ஓட்ட வேணாம். ஆனால் வாசலில் வண்டி ரெடியா இருந்தால்.... சட்னு எங்கியாவது போய் வர வசதியாத்தான் இருக்கு. இன்றைய நேரம் பத்து மணி.  அண்ணன் வீட்டுக்குப் போறோம். சமையல் செய்ய வேணாமுன்னு சொல்லி வச்சுட்டேன்:-)

காலை ஏழே காலுக்கு ரெடியாகி  வெங்கடநாராயணா ரோடுக்கு  ஆட்டோ. நாப்பது, அம்பது என்ற கணக்கில்  எல்லோரும் ஒத்துமையா இருக்காங்க.  கெஸ்ட்ஹவுஸ் வாசலில் ஏறினால்  அதுக்கு தண்டனையாக கூட ஒரு பத்து கொடுக்கணுமுன்னு எழுதப்படாத ஒரு விதி ! பாண்டிபஸார், வெங்கடநாராயணா ரோடு,  சென்னை ஸில்க் போதீஸ் ஏரியா, பனகல் பார்க்னு  திநகர் உள்வட்டத்துக்கு  இதுதான் ரேட்டு. மீட்டர் போட்டா ஒரு இருவதுதான் வரும். ஆனா...............

ஆட்டோவை விட்டு இறங்கும்போதே.... யம்மா.... எப்பம்மா வந்தீங்கன்னு  ஒரு உற்சாகமான குரல்.  தலையைத் திருப்பிப் பார்த்தால்.... அட! நம்ம சாமுண்டி!
பார்த்தே சில வருசங்களாச்சு.  கோவிலில் துளசியைக் கடாசிக் கொண்டிருந்த காலத்தில்  முடிவு செஞ்சதுதான்.... பெரும் ஆளைப் பார்க்க வெறுங்கையால்தான் போகணுமுன்னு!  அப்புறம் கோவிலே போர்டு எழுதிப்போட்டு வச்சுருச்சு.... 'துளசியைக்  கொண்டுவர வேணாம்'........  சுத்தம்...........
அதனால் கோவில் வாசலில் இருக்கும் பூக்கடைகளை ஏறெடுத்துப் பார்ப்பதும் பொதுவாக இல்லை.  இப்பதான் கவனிக்கிறேன்.....  திருப்பதி தேவஸ்தான கோவிலின் ரெண்டு கேட்டுக்கும் நடுவில் இருந்த கடைகளை   கோவிலின் வலதுபக்கமா ஒதுக்கிட்டாங்கன்னு!
சாமுண்டி , முன்னைக்கு இப்போ  இன்னும் கம்பீரமா இருக்காங்க. வியாபாரம் நல்லா இருக்காம். பசங்க வளர்ந்துட்டாங்க. பள்ளிக்கூடம் போறாங்கன்னு ஒரு பெருமிதம்!  நல்லா இருக்கணும். முரளி, (சாமுண்டியின் கணவர்) அப்போ பார்த்த அதே மாதிரி. வயசாகுதுல்லே எல்லோருக்கும்.  கொஞ்சம் மெலிஞ்சாப்லெ.....
"சாமிக்குப் பூ  அஞ்சு மொழம் தரவா?"
 
"  வேணாம்.  சாமிக்கு ஒன்னும் வேணாம். எனக்குதான் வேணும். வர்றப்ப வாங்கிக்கறேன்"
தரிசனம் முடிக்குமுன் மண்டபத்தில் கொஞ்ச நேரம் உக்கார்ந்துருந்தோம். பெருமாள் தன்னைத்தான் முதலில் கவனிச்சு அருள் செய்ய வேணுமுன்னு கூட்டமில்லாத அந்த நிமிசத்தில்கூட முன்னே நிற்கும் மக்களை இடிச்சுத் தள்ளி  தன் உடம்பை நெருக்கி முன்னால் கொண்டு போகும் சனத்தைப் பார்க்கும்போது....  பெருமாளுக்குக் கிட்டப் பார்வையோன்னு சம்ஸயம்  :-)
தரிசனம் முடிச்சு, சாமுண்டியிடம்  ரெண்டு முழம் மல்லிகை வாங்கினேன். ஒரு முழம்போல் வரும் ரோஜாச் சரத்தைக் கிள்ளி கூடவே  அன்பளிப்பாய்க் கொடுத்த நல்ல மனசு!

அறைக்கு வந்துட்டுக் கீழே ரெஸ்ட்டாரண்ட் போய் ப்ரேக்ஃபாஸ்ட் ஆனதும்  கொஞ்சநேரம் வலை மேய்ச்சல். போகும்போதும் வரும்போதும் பெருமாள் பொட்டி கண்ணுலே படுது.  செக்கின் பண்ணப்போகும் பெட்டி பூதாகாரமா இருக்கே!  அதுலே துணிகளை அடைச்சால்....  கனம் தாங்குமோ....   பொட்டியைச் சின்னது பண்ணால் ஆச்சு.  கைவசம் இருந்த  கத்தியும், பேக்கிங் டேப்பும் கைகொடுத்துச்சு:-)

 அண்ணன் வீட்டுக்குப்போய் அரட்டை ஆரம்பிச்சது.  காஃபி ஒன்னு ஆச்சு!  கிளம்பி எக்ஸ்ப்ரெஸ் மாலுக்கு வந்தோம்.   போன பயணங்களில் பார்த்த  ஆன்ட்டிக் கடை  காணாமப் போயிருந்துச்சு. தேடும்போது  கண்ணில்பட்ட    ஒரு  கலைப்பொருட்கள் கடையில்    கோபால் ஒரு ராதாக்ருஷ்ணா வாங்கினார்.  நான் ஆசைப்பட்ட நான்முகத்துக்குத் தடா போட்டார் :-( கனம் கூடுதலாம்..........


 க்ரீம்செண்டருக்குப்போய் பகல் சாப்பாடு. ப்ரியாணி ஸ்பெஷலாம்.  பனீர் டிக்கா,  பாப்டிசாட், ஃப்ரைய்ட்  ஐஸ்க்ரீம்.....  கூடவே ச்சனா பட்டூரா!


கிளம்பி அறைக்கு வந்து மிச்சம் மீதி இருந்த அரட்டையைத் தொடரும்போது,  வரவேற்பில் இருந்து ஒரு கவர். ஆஹா......    வந்தே வந்துருச்சு சந்தியாவில் இருந்து :-)
ட்ராஃபிக் ஆரம்பிக்குமுன்  வீட்டுக்குக் கிளம்பிப்போனால் நல்லதுன்னு அண்ணன் சொன்னார். அப்படியே ஆகட்டும்.

 தொடரும்..........  :-)




Wednesday, December 28, 2016

உள்ளே இளைஞன், வெளியே கிழவன் !!!! எல்லாம் வேஷம்................ :-) (இந்தியப் பயணத்தொடர். பகுதி 111)

கோல்டன்நெஸ்டைத் தேடி தெருவின் ரெண்டு பக்கமும் கண்ணை நட்டுக்கிட்டுப்போயிருக்கோம்..... கண்ணுலே அகப்படலை....  ஆனால் தெருமுழுக்க இவர் புகழ் பரவி இருப்பது கடைசி விநாடியில் தெருமுடியும் இடத்தில் இருந்த பெட்டிக்கடையில் தெரிஞ்சது....  பெயரைச் சொன்னவுடன்,  'அடடா.... தெரு ஆரம்பத்துலேயே   ரைட் எடுத்துருக்கணும்'    என்றதோடு விடாமல்....  'போங்க. மாடியில் உக்கார்ந்துருப்பார்'னும் சொன்னார்,  கடைக்கு எதோ வாங்க வந்த நபர்:-)

அதே மாதிரிப்போறோம். வாசலில் புள்ளையார்!  மாடியில்  தகப்பனார்!
வயசாச்சுன்னு சொல்றதெல்லாம் ச்சும்மா.....  ஒரு பாவ்லா!  இளைஞருக்குரிய.... இன்னும் சொல்லப்போனால் சின்னப் பையனுக்குரிய ஒரு லாகவத்தோடு சட்னு  நாற்காலியில்  உக்கார்ந்து காலை  மடிச்சுச் சம்மணம் போட்டுக்கறதைப் பார்த்து, இந்த மூட்டு வலிக்காரிக்கு மூச்சு நிக்காதது, உங்க பாக்கியம்!
சினிமாவிலும் நாடகத்திலும் வேஷம் போட்டுப்போட்டு.... இப்படிக் கிழவர் வேஷம் பழக்கமாகிருச்சு போல!!
ஒன் புக் ஒன்டர்ன்னு சொல்லிக்கிட்டு இருப்பவர் இப்ப டு புக் ஒன்டரா ஆகி இருக்கார். புள்ளிகள், கோடுகள், கோலங்கள்! நானும்  புத்தகத்தை வாங்கி வச்சுருந்து, அதைத் தூக்கிக்கிட்டுப் போயிருந்தேன்.... கையெழுத்து வாங்கிக்க:-)புத்தகம் வாங்குன கையோடு ஃபோன் செஞ்சு 'வரட்டா'ன்னு கேட்டதுக்கு,  'நான் இப்போ பெண்களூரில் இருக்கேன்.  அடுத்த வாரம் சென்னைக்கு வந்துருவேன். ஆனால்.... என்னப் பார்க்காம நீ ஊருக்குப் போயிடக்கூடாது'ன்னு ஒரு மிரட்டல் வேற :-)

விசுவாசம் என்ற மணிபாரதியின் குறும்படம் ஒன்றைத் தேடி எடுத்து நமக்காகப் போட்டுட்டு, அடுக்களைக்குப் போனார்.  அடுத்த பத்து நிமிசத்தில் சுடச்சுட அருமையான காஃபியுடன்,  கேஸரியும், மொறுமொறுன்னு வடாமும்!  சமையலில் மன்னனாக்கும்!  உங்களுக்குத் தெரியாததையா நான் சொல்லப்போறேன் :-)
அந்தக் குறும்படத்தில் கூட இவர் சமையல்காரர்தான்!  எஜமான விசுவாசம்  சொல்லி மாளாது....  உடலைச் சாய்ச்சுக் காலைத்தாங்கி மகனோடு  கிராமத்துப் பாதையில் நடந்துபோகும்போது ஐயோன்னு இருந்துச்சு எனக்கு..........

இந்தக் குறும்படம், போட்டியில் முதலிடம் வந்து பதினைஞ்சாயிரம் ரூபாய் ரொக்கப்  பரிசைத் தட்டிக்கிட்டுப் போயிருக்கு என்பது  கூடுதல் தகவல்! அந்தக் குறுந்தகட்டைத் தேடி எடுக்க சட்னு தரையில் காலை மடிச்சுப்போட்டு அதே ஆஸனத்தில் (பத்மாஸனமோ?  இல்லை.....  இது ஸ்வஸ்திக் ஆஸனம் !!!)உக்காருவதைப் பாருங்க!   அதே மாதிரிதான் தரையில் இருந்து எழுந்துருக்கறதும்..... !!!

 நாந்தான் பக்கவாட்டில் உருண்டு புரண்டு,  ராமனை எல்லாம் துணைக்குக் கூப்பிட்டபடி எழுந்துருப்பேன் :-)

இன்றைக்கு இவ்ளோ மழையில் நனைஞ்சும்  எனக்கு ஒரு தோஷமும் பிடிக்கலை!  என்ன தவம், எந்த ஜென்மத்துலே செஞ்சேனோ.............
மாடிப்படிகள் இறங்கி ஏறக் கொஞ்சம் கஷ்டமோன்னு எனக்கொரு தோணல்.... ஹேய்.... அதெல்லாம் ஒன்னுமில்லையாக்கும்......... கேட்டோ!  
 நான்  ஆசைப் பட்டுக்  கேட்டதும் சட்னு ஊஞ்சலில் தாவி உக்கார்ந்து ஒரு போஸ்.....  அச்சனு கொள்ளாம்!  இதொக்க ஜூஜுபி...... யா :-)
எனக்கு  ஒரு அன்பளிப்பும் கிடைச்சது.......  ஈராக்.....
எல்லாம் அன்பே அன்புன்னு இருக்கும்போது........

கொஞ்சம் ஓரவஞ்சனை காட்டுனதுதான் எனக்குப் பிடிக்கலை. மகள் நான் குத்துக்கல்லு போல முன்னாடி நிக்கிறேன்..... மருமகனிடம் அப்படிப் பாசம் இழையோடிக்கிட்டு இருக்கு!!  இத்தைப் பார்றா..............

பேச உக்கார்ந்தோம்............. போச்சு....   நேரம் ஓடியே போச்சு!

சுவாரஸியமான சம்பவங்களின் சுரங்கம் ! பேச்சு வாக்கில் பல சமாச்சாரங்கள் வந்து விழுந்துக்கிட்டே இருக்கே!  பலதும் ஆஃப் த ரெக்கார்ட் என்பதால் நான் மனப்பெட்டகத்தில் போட்டுப் பூட்டி வச்சேன்.


மனசில்லா மனசோடு அங்கிருந்து கிளம்பி, வர்ற வழியில் ............. இன்னொரு இன்ப அதிர்ச்சி !!!!

தொடரும்............... :-)



Monday, December 26, 2016

அன்பெனும் மழையிலே....... (இந்தியப் பயணத்தொடர். பகுதி 110)

I never like mixing  business with pleasure என்றாலும் கூட,  ஒரு நாள், ஒரே ஒருநாள்  மிக்ஸ் பண்ணிக்கிட்டால் தப்பான்னு  கேட்டால்.....    சரி போயிட்டுப் போகுதுன்னு  விட்டுரும்படி ஆகிருது.  அதுக்காக மூலையில் உக்கார்ந்து பிலாக்கணம் வைக்கணுமா?  நோ நோ....    நமக்கான வேற ஒரு முக்கியமான சமாச்சாரத்தை  இன்று வச்சுக்கிட்டால் ஆச்சு.  இன்று அவரவருக்குத் தனிவழி!
நெருங்கிய தோழி வீட்டில் கெட் டுகெதர்.  'பேசாமக்கிளம்பி வாங்க எல்லோரும். சமையல்  நான் செஞ்சுருவேன்'னு  சொல்லிட்டாங்க. அது  சரி இல்லைன்னு வாதாடி,  எதாவது கொண்டு வரோமுன்னு மற்ற தோழிகள்  அடிச்சுச் சொல்லி  அருமையான ஐட்டங்களைக்  கொண்டு வந்துருந்தாங்க. நமக்கேது அடுப்பு? இருக்கவே இருக்கு சுஸ்வாத்:-)
காலையில் இவரை  தொழிலதிபநண்பர் வந்து கூட்டிட்டுப் போயிட்டார். எனக்கு ஒரு ஓலா டாக்ஸி புக் பண்ணி இருந்தோம்.  சரியான நேரத்துக்கு  வந்துருச்சு வண்டி.  ஓட்டுனர் 'நல்ல முகம்'  காட்டினார்.  போற இடத்துக்கு எனக்கு வழி சரியாத் தெரியாதுன்னு முதலிலேயே சொல்லிட்டேன்.  கடைசியில் ஒரு சிக்னலில் நிக்கும்போது  வலமா இடமான்னு கேட்டதுக்கு, யாருக்குத் தெரியும்? வலமே போய்ப் பார்க்கலாமுன்னு சொன்னேன்.  வலம் திரும்பும்போதுதான் நான் போக வேண்டிய கட்டிடம்   நேரெதிரா இருக்குன்னு கண்டுபிடிச்சேன்:-)  அதுக்குள்ளே ஒரு  இருவது முப்பது மீட்டர் வண்டி ஓடிருச்சு.  அப்புறம்  ரிவர்ஸ் எடுத்தே சரியான கட்டிடத்துக்குள்ளே கொண்டு வந்துட்டார். பிரச்சனை இல்லைன்னு  அவரே சொல்லிட்டு மீட்டருக்கான வாடகையையும் வாங்கிக்கிட்டு, சர்வீஸ் நல்லா இருந்தா ஒரு  மெஸேஜ் அனுப்பறீங்களான்னு கேட்டார்.  அதுக்கென்ன?  பின்னூட்டம் அனுப்ப நமக்குத் தெரியாதா என்ன?  அதே போல் ஆச்சு :-)இப்ப எதுக்கு விஸ்தரிச்சுச் சொல்றேன்னா.....  நேத்து  வந்த முறைப்பாளர் மாதிரி இல்லை என்பதற்கு!  மனிதரில் எத்தனை வகை!!!
தோழிகள் வந்து சேர்ந்து, அரட்டைக் கச்சேரி, அப்பப்ப தீனி, சாப்பாடுன்னு நேரம் ஓடியே போச்சு. மெட்ரோவில்  போயிட்டு வரலாமுன்னு நினைச்சது  நடக்கலை.  ஒரு இளம்தோழியின் குழந்தை  பள்ளியில் இருந்து திரும்பிவரும்  நேரமாச்சுன்னதும் அடிச்சுப்பிடிச்சுக் கிளம்பினாங்க. அப்புறம் தொடர்ந்த  அரட்டை அடுத்த  ரெண்டு மணி நேரத்துக்குள்ளே முடிஞ்சுருச்சு. எனக்கும் தோழியே ஒரு  ஓலா கேப் புக் பண்ணிக் கொடுத்தாங்க.

கோபால் வந்து சேரும்போது மணி எட்டு.  ராச்சாப்பாட்டுக்கு வெளியே  போகவேணாமுன்னு  இருந்துச்சு. பகல் சாப்பாடு ரெண்டுவித வடைகளுடன் பாயஸம், இன்னபிற வகைகளுமா அமர்க்களமா இருந்ததுன்னு சொல்லி, படங்களை இவருக்குக் காமிச்சு கொஞ்சம் தீ வளர்த்தேன்:-)

ஏற்கெனவே அறையில் இருக்கும் ஃப்ரிட்ஜில்  தயிர் வாங்கி வச்சுருக்கோம். பழங்களும் பாக்கி இருக்கு. போதாதா என்ன?

மறுநாள் பிறந்ததும் காலில் கொஞ்சம் கஞ்சியைக் கொட்டிக்கிட்டாப்லெ ஒரு வேகம் வந்துருச்சு. இன்னும் மூணே நாட்கள்தான் சென்னையில்.  அதுக்குள்ளே  சந்திக்க வேண்டியவர்களைச் சந்திச்சே ஆகணும்!
கவிதாயினிக்குச் சேரவேண்டிய புத்தகங்களைக் கொண்டுபோய்க் கொடுக்கணும். அவுங்க ஊரில் இல்லை. அதனால் பக்கத்து ஃப்ளாட் தோழி வீட்டில் கொடுத்தால் ஆச்சு. ஏற்கெனவே நமக்குப் பரிச்சயமானவங்கதான்!  அங்கே போனால்....   ஹைய்யோ ஹைய்யோ அச்சச்சோ....   தத்தைக் குட்டி!  கொஞ்சநேரம்  கொஞ்சிட்டுத்தான்  கிளம்பினேன்:-)
ரொம்பநாளாக நண்பர்/வாசகர் வரச்சொல்லிக் கேட்டுக்கிட்டே இருக்கார்.  அடுத்தபயணத்தில்னு சொல்லியே ஆறேழு பயணங்களைத் தள்ளிப் போயிருக்கு. இன்றைக்கு ரெண்டாவது வேலையா அங்கேதான்!

 நண்பருக்குப் பகல் 1 மணி  ஷிஃப்ட் என்பதால் காலை நேரம் ஓக்கே!
தகவல் தெரிவிச்சதும்.....  எப்படி வழி,  எங்கே வண்டியை நிறுத்தணும்,  அவர் இருக்கும் தெருவின் அகலம் உட்பட சகலமும்.  கூடவே ஒரு குறிப்பிட்ட இடத்தின் பெயரைச் சொல்லி அங்கே நமக்காகக் காத்திருப்பதாகவும் சொன்னார்.  இது  போதாதுன்னு  நம்ம சீனிவாசனிடமும் வழியெல்லாம் விஸ்தரிச்சும் ஆச்சு.
எல்லாம் சொன்னது சொன்னபடியெ!   அனந்து வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தோம்!
ஹைய்யோ.....  என்ன ஒரு அன்பான வரவேற்பு! அவர் மடலில் சொன்னதைப்போல குடும்பமே ஆர்வமாக் காத்துக்கிட்டு இருக்கு!!   அனந்துவின் அம்மா....
சொந்தப் பொண்ணை வரவேற்பதுபோல்  காட்டிய  புன்முறுவலை ஆயுசுக்கும் மறக்க முடியாது! எல்லாத்தையும்விட அடுத்தமுறை வரும்போது நாலைஞ்சுநாள் கூடவே தங்கி, அக்கம்பக்கத்திலுள்ள கோவில்களுக்குப் போய்வரலாமுன்னு சொன்னது ரொம்பவே பிடிச்சுருந்தது! உடன்பிறந்தான் வீடு கிடைச்சுருச்சு!


மகன் விவேக் படிப்பில் கெட்டி!  பெண் சின்னவள். பள்ளிக்கூடம் போயிருந்தாள்.  மகன் இப்போ ஸி ஏ படிப்புக்குச் சேர்ந்துருக்கார்!
அன்றைக்குத் தை வெள்ளிக்கிழமை!  அதுவும்  தை மாசக் கடைசி வெள்ளி என்பதால் விசேஷ பூஜை எல்லாம் ஸ்பெஷல் நைவேத்தியங்களோடு நடந்து, நமக்கு இனிப்போ இனிப்புதான்:-) கூடவே மஞ்சள்குங்குமம் தேங்காய் பழம் வெற்றிலைபாக்கோடு வச்சுக்கொடுக்கும் சம்ப்ரதாயத்தின்படி  ஜாக்கெட் பீஸ்.

நம்முடைய பூனா எபிஸோடில் நமக்கு வாய்த்த நண்பர் குருசாமியை நினைவுபடுத்தும் நண்பரும் குடும்பமும்.....  இந்த அன்பை எழுத்தில் சொல்ல முடியாது.... உணரத்தான் முடியும்!
பக்கத்துத் தெருவில் நிறுத்தியிருந்த வண்டிவரை கொண்டுவிட்ட  தம்பித் தம்பதிகளுக்கு நன்றி சொல்லி அங்கிருந்து கிளம்பி தங்கக்கூட்டில் இருக்கும் தகப்பனைப் பார்க்கப் போனோம்!

தொடரும்..........  :-)