Wednesday, December 06, 2006

நற்செய்தி!


டிசம்பர் மாசம் எட்டாம் தேதி இப்படி ஒரு நற்செய்தியோடு தேவ தூதன் கேப்ரியேல், மரியத்துக்கு முன்னாலே தோன்றினாராம். அதென்ன நற்செய்தி?


"இந்தப் பூவுலகில் தேவ குமாரன் பிறக்கப் போறார். நீங்க(நம்ம மரியம்/ மேரியம்மா)தான்அந்தக் குழந்தையைப் பெத்தெடுக்கப் போறீங்க"


அதுக்கப்புறம் அந்தக் குழந்தை பிறந்ததும், மத்த விவரங்களும், புது மதம் தோன்றியதும் எல்லாம் ஊர் உலகத்துக்கே தெரியும்.


டிசம்பர் மாசம் ரொம்ப நல்ல மாசம். கிறிஸ்மஸ் வர்றதாலே மட்டுமில்லை,நமக்கும் இது மார்கழியாப் போயிருது. பெருமாளுக்கே உகந்த மாசம்.ஸ்ரீ கிருஷ்ண பகவானே மாதங்களில் 'அவர் மார்கழி' ன்னு சொல்லிட்டார்.எங்கே பார்த்தாலும் பண்டிகைக்காலக் கொண்டாட்டங்கள்! ஊரே களைகட்டிக் கிடக்கு.இந்த மாசம் மூணாம்தேதி ஞாயித்துக்கிழமை எங்கூருக்கு 'சேண்ட்டா' வந்துட்டுப் போனார்.


இத்தனை வருசம், நம்மளைக் கடந்து போக ஒரு மணி நேரம் எடுக்கும் கிறிஸ்மஸ் சேண்ட்டா பரேடு இந்த வருஷம் 33% கூடுதல் நேரம் எடுத்துக்குச்சு. (ஹா...அங்கேயும் 33% ஆஆஆஆஆ)இந்தோனேசியர்கள், சோமாலிகள், சீனர்கள், தாய்வான்காரர்கள், கொரியர்கள், ஜப்பான்காரர்கள்னு பல 'எத்னிக்' குழுக்களும் இப்பெல்லாம் ஊர்வலத்தில் பங்கெடுக்கறாங்க. சீன தேசத்தில் தடை செஞ்சிருக்கும் Falun Dafa ன்னு சொல்ற ஒரு ஆன்மீக(?)இயக்கம் சேர்ந்த ஒரு பெரியகூட்டம்( 'நாலு பேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்று கொள்க' ன்னு நான் எப்பவும் சொல்றது இங்கே கணக்கில் வராது) சுமார் 100 பேருக்கு மேலே இருக்கும், ஒரே மாதிரி உடைகள் ஒரே நிறத்தில் அணிஞ்சு வந்தாங்க.


சீனர்கள் ஸ்பெஷாலிட்டியான 'லயன் டான்ஸ்' சிங்கம் 'எட்டி எட்டிப் பார்த்துச்சு. அந்த டும் சத்தமே ஒரு அழகான லயத்தோட வருது பாருங்க. கொஞ்சம் விட்டா நானும் ஆடியிருப்பேன்:-))) தூள் கிளப்பிட்டாங்க.


பாலே, அக்ரோபாடிக், பால் டான்ஸ்,டாப் டான்ஸ்ன்னு சொல்லிக்கொடுக்கற பள்ளிக்கூடங்களும், பாட்டு, இசைக்கருவிகள்ன்னு சொல்லித் தர்ற பள்ளிக்கூடங்களும் அவுங்கவுங்க மாணவ மணிகளை ஆட, பாடவிட்டுக் கூட்டிட்டுப் போனாங்க.நாய்ஸ் க்ளப்( கென்னல் க்ளப்) அழகா நடை போட்டுப் போச்சு. பின்னாலெயே குட்டிக்குதிரைகள் வந்துச்சு.ஐய்யோ... எல்லாம் ச்செல்லம்போல....... பார்க்கவே ஆசையா பொம்மைங்க போல இருக்கே!


எங்க நாடுதான் ஆட்டுக்குப் பேர் போனதாச்சே. ஆளாளுக்கு 14 ஆடு இருக்கு. அதுலெ ஒரு நாலு இன்னிக்கு நகருக்கு விஸிட் அடிச்சது. இடைக்கிடைக்கு மார்ச்சிங் கேள்ஸ், பேண்ட் வாத்திய கோஷ்டி, ஹை லேண்ட் ம்யூஸிக் பேக் பைப் குழுன்னு போகும்போது, ச்சின்னப் பசங்களுக்காக சிம்சன் குடும்பம், சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், மிஸ் பிக்கி & கெர்மிட்.


குழந்தைகள் கதைப் புத்தகத்திலே இருந்து நம்ம ஆலீஸ், ஹேன்ஸல் & க்ரேட்டல், மதர் கூஸ், ஹாண்டட் ஹவுஸ்னு ஒரு 80 நிமிஷம் போனதே தெரியலை.


பிக் பாய்ஸ்க்காக 'ஹார்லி டேவிட்ஸன்' பைக்! 'உர் உர்'ன்னு சத்தம் போட்டுக்கிட்டு, வெள்ளி போல மின்னும் மோட்டர் சைக்கிள்கள். கன கம்பீரமா 'உலகமே எனக்குப் புல்'ன்னு 'லுக்' கோடு, எஞ்சினை உறுமவிட்டுக்கிட்டு இருக்கும் லெதர் ஜாக்கெட் மனுஷனை அப்படியே பசை போட்டு ஒட்டுனாப்போல புடிச்சுக்கிட்டுப் பின்னாலே உக்காந்துருக்கும் லெதர் ஜாக்கெட் மனுஷிங்கன்னு அட்டகாசம் போங்க.


இங்கே இருக்கும் 'சின்மயா மிஷன்' மக்களும், நம்ம ஹரே கிருஷ்ணா இயக்கத்தைச் சேர்ந்த மக்களும் நம்ம நாட்டுப் பாரம்பரிய உடையான புடவைகளை( ஏங்க இன்னும் பாரம்பரிய இந்திய உடை புடவைதானே? இல்லே சல்வார்கமீஸா மாறிப்போச்சா? ) அணிஞ்சு ஒரே கலர் ஃபுல்லா ( நமக்கு யூனிஃபார்ம் எல்லாம் சரிப்பட்டு வராது. அதானே பக்கத்து வீட்டு அம்மா/அக்கா வாங்குனது போல நாம் வாங்கிருவோமா என்ன? )வந்தாங்க.இங்கே ஹரே கிருஷ்ணா இயக்கத்துக்கு ஒரு ரதம்கூட இருக்கு. அதனாலே இது 'ரத யாத்திரை'(அட, நம்மூர் தேர்த் திருவிழாதாங்க)யாகவும் அமைஞ்சு போச்சு.


யானை இல்லாத திருவிழா உண்டோ? அதனாலே எங்கூருலே இருக்குற 'ஒரே யானை' அம்பாரியோடு 'அழகி'களைச் சுமந்து கன கம்பீரமா ஊர்வலத்துலே உருண்டு வந்துச்சு!

இன்னும் 19 நாள்தானே இருக்கு பண்டிகைக்கு. கடை கண்ணிகள் எல்லாம் ஜேஜே. நட்பும் பரிவும் காட்டவேண்டிய இந்த விழாக்காலத்தில் வண்டி நிறுத்த இடமில்லாம, கிடைக்கிற பார்க்கிங் ஸ்பேஸுக்கு போட்டா போட்டி. 'பரிவையெல்லாம் நான் ஷாப்பிங் முடிச்சுட்டுக் காட்டுறேன்'னு மனசுக்குள்ளே சொல்லிக்குவாங்களோ?


நம்ம பங்கு 'குட்வில்' என்னன்னா சேண்ட்டா ஊர்வலத்தில் இலவசமா என்னென்னவோ கொடுத்துக்கிட்டுப் போவாங்க பாருங்க, டிஸ்கவுண்டு கூப்பன், இலவச ஐஸ்க்ரீம், லாலி பாப் ன்னு இன்னபிற வகைகள். அதையெல்லாம் கையை நீட்டி நீட்டி வாங்கி( சிலசமயம், 'எக்ச்சூஸ்மீ'( வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)ன்னுகூப்புட்டுக் கேட்டு வாங்கி, என் பக்கத்துலே நின்னுக்கிட்டு இருந்த சில ச்சின்னப்புள்ளைங்களுக்குக் கொடுத்ததுதான்.


இங்கே எங்களுக்கு பெரிய லீவு இந்த சமயம்தான் வருது.கோடைகால விடுமுறைக்கு பள்ளிக்கூடங்கள் எல்லாம் 6 வாரத்துக்கு லீவு. இங்கெல்லாம் எல்லாமே வாரக் கணக்குத்தான்! வீட்டுவாடகை, பல பேருக்குச் சம்பளம் இதெல்லாம் கூட வாரக் கணக்குத்தான்.


பள்ளிக்கூடம் லீவு வுட்டா......... டீச்சருங்களுக்கும் லீவு தானே? அதான் நானும் லீவுலே போறேன்.எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாம ஒரு நீண்ட விடுமுறை. தமிழ்மணம் படிக்கக் கிடைக்குமா, ப்ரவுஸிங் செண்டர்களிலே தமிழில் தட்டச்சு செய்ய முடியுமான்னு கூட தெரியலை. போனமுறை ஒண்ணும் சரிவரலை. மடிக்கணினி இருந்தாலும் நெட் தொடர்பு கிடைக்குமான்னு தெரியலை. அதான் சொன்னேனே எதிர்பார்ப்புகள் இல்லாத ஒரு விடுமுறைன்னு:-))))


நற்செய்தி எங்கேன்னு கேட்க்கும் 'வலைக் கண்மணி' களுக்கு........... இன்னுமா புரியலை?பள்ளிக்கூடம் லீவு வுட்டாச்சு கண்ணுங்களா:-)
மீண்டும் அடுத்த வருசம் வகுப்பு நடக்கும். கட்டாயம் எல்லோரும் வந்துருங்க.


எல்லோருக்கும் இனிய கிறிஸ்மஸ், புது வருஷம் & பொங்கல் வாழ்த்து(க்)கள்.

Monday, December 04, 2006

எவ்ரிடே மனிதர்கள் -25 நாகரத்தினம்

40 வயசு ஸ்ரீநிவாசனைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு அந்தவீட்டில் வலதுகாலை எடுத்து வச்ச 15 வயசு நாகரத்தினத்துக்குக் கிடைச்சது ரெடிமேடா மூணு பசங்கள். பன்னெண்டும், பத்தும், எட்டுமா. நாகரத்தினத்தின் புடவை முந்தாணியை ஏற்கெனவே பிடிச்சுக்கிட்டு நின்னுருந்த பத்துவயசுச் சிவராமனுக்கு முதல்லே ஒண்ணும் சரியாப் புரியலைன்னாலும்,அக்கா வீட்டுலே கூட விளையாட இன்னும் மூணுபேர் இருக்காங்கன்ற சந்தோஷம்.'ரொம்பச் சின்னபொண்ணா இருக்காளே? அதெல்லாம் கல்யாண வளர்த்தியிலே வளர்ந்துருவா'. இது அம்மா தனத்தோட நினைப்பு.தனத்துக்குக் கொஞ்சம் கஷ்ட ஜீவனம்தான். சிவராமனுக்கு நாலு வயசு அவனோட அப்பா செத்தப்ப. இந்த ஆறு வருஷமாப் படாத கஷ்டம் இல்லை. இதுலே நாகரத்தினம் மூத்தாள் பொண்ணு.இதென்ன, இந்தக் குடும்பத்துக்கு மட்டும் 'ரெண்டாந்தாரம்' சாபமா? தனத்துக்குக் கல்யாணம் ஆனதும் இப்படித்தான். நாகரத்தினத்துக்கு அப்போ மூணு வயசாம். ஆறே வருசத்துலே புருஷன் போனப்ப ரெண்டு குழந்தைகளோட நின்ன தனத்துக்குச் சாப்பாடு போட்டதே 'சாப்பாட்டுக்கடை'தானாம்.


இந்த ஊர் ஒரு சின்ன டவுன். அக்கம்பக்கத்துலே ச்சின்னச்சின்ன பட்டிதொட்டிகளிலே இருந்து வியாபார விஷயமா டவுனுக்கு வந்து போற ஆளுகளுக்காக தெருவுக்கு நாலு 'சாப்பாடு தயார்'ன்ற போர்டுதான் பிரதானம். ஓட்டல் சோறுமாதிரி இல்லாம வீட்டுச் சமையல். வியாபாரம் பகல் பொழுது மட்டும்தான்.ஒரு சோறு, குழம்பு,ரசம், மோர், பொரியல்,அப்பளம், ஊறுகாய்தான். வீட்டுக்கு ஆக்கற அதெ மாதிரி, கொஞ்சம் நிறைய சமைச்சாப் போதுமாம். ஒரே நேரச் சமையல்.பகல் சாப்பாட்டுலே மிஞ்சுனது ராத்திரி வீட்டாளுங்களுக்கு ஆச்சு. சந்தை கூடுற நாள் மட்டும் இன்னும் கொஞ்சம் கூடுதலா சமைக்கணும்.


ஜனங்களுக்கும் ருசி பிடிச்சுப்போய், ஒவ்வொரு கடைக்கும்(??) வழக்கமா வந்து சாப்புடறவங்க கணக்கு ஒரு மாதிரி தெரிஞ்சிருக்கும். மேஜை, நாற்காலி எல்லாம் இல்லை. கூடத்துலெ தரையிலே இலை போட்டுத்தான் சாப்புடறது. பல வீடுகளிலே இது ஒரு சைடு பிஸினெஸ். நம்ம தனத்துக்கும் இப்ப வேற வழி இல்லாம இதுதான் பிழைப்பாப் போச்சு.


அம்மா கூடவே தினமும் சமையல் வேலையெல்லாம் செஞ்சு, சமைக்கறதுலே கில்லாடியாயிட்டா நாகரத்தினம்.
இப்பக் கல்யாணம் முடிச்சுப்போற வீட்டுலே 'சோத்துக்கடை' இல்லேன்றதே பெரிய ஆறுதலா இருந்துச்சாம். ஆனா தலைவலி போய் திருகுவலி வந்தாப்புலே, ஸ்ரீநிவாசனுக்கு மிட்டாய் வண்டி வியாபாரம். தினம் வெங்காயம் பச்சமிளகாய்மட்டும் கூடைகூடையா வெட்டணும். வாழ்க்கையை நினைச்சு அழுவறதா, இல்லே வெங்காயத்தை உரிச்சு அழுவறதா?மூணு புள்ளைங்களும் கூடவே இருந்து வேலை செய்யுமாம். புருஷனும் உழைக்கப் பயந்தவர் இல்லை. காலையிலேபத்து மணி போல வேலையை ஆரம்பிச்சா, சாயந்திரம் அஞ்சு மணிக்கு பக்கோடா, மிச்சர், ஓமப்பொடின்னு பலகாரவண்டிக்குத் தேவையான அத்தனை சமாச்சாரமும் ரெடி.
அதுக்கப்புறம் குளிச்சு முடிச்சு, நல்ல சலவைச் சட்டையோட மிடுக்கா நடந்து வண்டியைத் தள்ளிக்கிட்டு சினிமாத் தியேட்டர் பக்கம் போயிருவார். ஆளும் நல்ல உயரமா, லட்சணமான மனுஷர். சிரிச்ச முகம். சினிமாலே முதல்காட்சித் தொடங்குனதுக்கப்புறம் அப்படியே வண்டியைத் தள்ளிக்கிட்டு ஊருக்குள்ளெ போறதுதான். 'உஸ் உஸ்'ன்னு பெட்ரோமாக்ஸ் வெளிச்சத்தோட மினுங்கலா வர்ற வண்டிக்குன்னு அங்கங்கே வாடிக்கையாளர். பக்கோடா மட்டும் நிமிசத்துலே காலி ஆயிருதாம். பாதிப்பேர் வீட்டுலே தொட்டுக்க அதுதானே!


ஒரு சுத்து சுத்தி, திரும்ப சினிமாக் கொட்டாய்க்கிட்டே வர்றதுக்கும், ஆட்டம் விடறதுக்கும் சரியா இருக்குமாம். சரசரன்னு வியாபாரம், ராத்திரி ரெண்டாவது ஆட்டம் தொடங்குறதுவரை. வீடு வந்து சேர எப்படியும் ராத்திரி பதினோரு மணியாகும். புள்ளைங்க அதுக்குள்ளெ சாப்புட்டுத் தூங்கி இருக்கும். இவரும், பொண்டாட்டியுமாச் சாப்புட்டுட்டு, அன்னிக்கு கல்லாவை எண்ணுவாங்களாம். ஒரு கும்பா நிறைய, எல்லாம் சில்லரைங்களாத்தான் இருக்கும். எண்ணி முடிக்கவே நடுராத்திரியாயிருமாம்.இப்படியே வருசங்கள் ஓடிப்போச்சு. தம்பி சிவராமன் மட்டும் கொஞ்சம் நல்லாவே படிச்சு, வாத்தியார் வேலைக்குப் போயிட்டார். நாகரத்தினத்துக்குன்னு குழந்தைங்க இல்லை. அதான் மூணு பையனுங்க இருக்காங்களே. அவுங்களும் இப்ப பெரியவங்களா வளர்ந்தாச்சு. வியாபாரம் இன்னும் அதேதான். ஆனா நாலு பலகார வண்டிங்களா ஆயிருச்சு.பலகாரம் செய்ய உதவிக்குன்னு ரெண்டு மூணுபேர் வேலைக்கும் இருக்காங்க.
நல்ல வருமானம். இப்பெல்லாம் ராத்திரி காசை எண்ணி முடிக்க நேரஞ் செல்லுது. சிலசமயம், கும்பாங்களை அப்படியே எடுத்துப் பீரோவுலே வச்சுட்டு, மறுநாள் காலையில் உக்காந்து எண்ணிக்கிட்டு இருப்பாங்க நாகரத்தினம். ஸ்ரீநிவாஸனுக்குகொஞ்சம் ஓய்வுதான் இப்பெல்லாம். வீட்டு வாசலிலேயே ஒரு கடை போட்டுக்கிட்டார். உக்காந்த இடத்துலே வியாபாரம்.பசங்க வண்டிகளை எடுத்துக்கிட்டுப் போறாங்க.அறியாத வயசுலே கட்டிக்கிட்டு வீட்டுக்கு வந்த 'குழந்தைப் பொண்டாட்டி'க்கு அன்பையும் ஆதரவையும் தாராளமாவே கொடுத்த ஸ்ரீநிவாசன், தன் தம்பிக்கு எப்பவும் உதவி செஞ்சுக்கிட்டு இருந்த மனைவியை ஒரு நாளும் கடிஞ்சு ஒண்ணும் சொன்னதே இல்லையாம். அவர் கணக்குலே மச்சினனும் இன்னொரு குழந்தை.


நல்ல வசதி வந்தபிறகு, மனைவியைக் கூட்டிக்கிட்டு வட இந்தியாவுக்கு யாத்திரை போயிட்டு வந்தார். அது ஒரு அம்பது வருசத்துக்கு முன்னாலே. அந்தக் காலக் கட்டத்துலே, அவுங்க ஊர்லே இருந்து அமர்நாத், பத்ரிநாத், காசி, கயா, டில்லி, ஆக்ரான்னு போய் வந்தவுங்களை விரல்விட்டு எண்ணிறலாம். ஒவ்வொரு இடத்தைப் பத்தியும்சுவாரசியமாக் கதை போலச் சொல்லுவாங்க. தாஜ்மஹாலைப் பத்திக் கனா மட்டுமே கண்டுக்கிட்டு இருந்த நாங்க நாகரத்தினம் சித்தியையே ( நாங்கெல்லாம் அப்படித்தான் கூப்புட்டுக்கிட்டு இருந்தோம்) அதிசயமாப் பாப்போம்.என்னதான் வேலைகளுக்கு ஆளுங்கன்னு வந்துட்டாலும் பலகாரங்களை செய்யும்போது கவனமாப் பக்கத்துலே இருந்து பார்ப்பாங்க. முக்கியமானதுகளுக்குப் பதம் சொல்றதும், தேவைப்பட்டா, சுணங்காம அடுப்புக்குப் பக்கத்துலேபோய் உக்காந்து வேலையைச் செய்யறதும் பார்க்கவே அருமையா இருக்கும். நான் சின்னப்பொண்ணா இருக்கும்போது கூடவே இருந்து எல்லாத்தையும் கவனிச்சிருக்கேன். எனக்கு பலகாரம் செய்யவும், திங்கவும் ஆர்வம் வந்ததுக்கு நாகரத்தினம் சித்திக்கூட ஒரு காரணம்.அடுப்பு வேலையெல்லாம் முடிச்சு, குளிச்சு ஒரு நல்ல சேலை எடுத்துக் கட்டிக்கிட்டு, மிதமான அலங்காரத்தோடு கோவிலுக்குக் கிளம்பிருவாங்க. கதைன்னா எனக்கு உசிரு. கதை பேசிக்கிட்டே போய்வருவோம். லீவு விட்டுட்டா எனக்குக் கொண்டாட்டம்தான்.


அந்த ஊர்லே இன்னொரு பழக்கம்கூட இருந்துச்சு. பட்டிதொட்டிலே இருந்து காய்கறி, மோர், கீரைன்னு வியாபாரம் பண்ணவரும் பெண்கள், காலையிலே சுமையோடு நடந்து வரும்போதே வழியிலே இருக்கற மரங்களிலே எது இருக்கோ அந்தந்த சீஸனுக்குத் தகுந்தாப்புலே புளியம்பழம், எலந்தைப் பழம், மாங்காய், மல்லாக்கொட்டைனு எதையாவது கொஞ்சம் பறிச்சு மடியிலே கட்டிக்கிட்டு வருவாங்க. சரக்கை வித்துட்டு வீட்டுக்குப்போற வழியிலே நாகரத்தினம்மா வீட்டாண்டை வந்து,அதைக் கொடுத்துட்டு, ஒரு பொட்டலம் காராசேவு, ஓமப்பொடின்னு ஒரு பண்டமாற்றல். நடைக்கஷ்டம் தெரியாம அதைத் தின்னுக்கிட்டே ஊர் போய்ச் சேர்ந்துருவாங்களாம்.இப்படிச் சேரும் புளி, கடலை வகைகளை வெய்யிலிலே காய வச்சு நல்லா சுத்தம் செஞ்சு வீட்டுச் சமையலுக்குப்போக பாக்கியை அம்மா தனத்துக்கும், தம்பி வீட்டுக்கும் அனுப்புவாங்க.


சிவராமனுக்கும் கல்யாணம் ஆச்சு. புள்ளைங்களும் பொறந்தாங்க. அந்தப் புள்ளைங்களுக்கு வேண்டிய எல்லாத் துணிமணி நகை நட்டு எல்லாம் இவுங்க வாங்கித் தந்ததுதான். தம்பி பொண்டாட்டி மேலே அவ்வளோ பிரியம்.இல்லேன்னா மட்டும் வாத்தியார் சம்பளத்துலே ஏழு புள்ளைங்களை வளர்த்துட்டாலும்........ இதுலே சிவராமனுக்கு நாடகப் பைத்தியம் வேற. அதுக்கேத்த மாதிரி நண்பர்கள். தானே கதை, வசனம், டைரக்ஷன், நடிப்புன்னு சதா அமர்க்களம்தான். இவரைப் பத்திக்கூட ஒரு நாள் எழுதலாம்:-)))நாகரத்தினத்துக்கு நிறைவேறாத ஆசை ஒண்னு இருந்துச்சுன்னா, அவுங்களை 'அம்மா'ன்னு வாய் நிறைய யாரும் கூப்புடலைங்கிறது. ஸ்ரீநிவாசனோட மூணு புள்ளைங்களும் அம்மான்னு கூப்புடாம எல்லாம் சிவராமனைப் பார்த்துக் 'காப்பி அடிச்சு' அக்கான்னு கூப்புட்டுக்கிட்டு இருந்துச்சுங்க. பேரப் புள்ளைங்களையாவது பார்க்கலாமுன்னா இன்னும் பசங்க யாரும் கல்யாணம் கட்டலை. கல்யாணப் பேச்சை எடுத்தாலே கத்தறாங்களாம்.


அதுக்கப்புறம் நாங்களும் ஊரைவிட்டு வந்துட்டு அவுங்களோட தொடர்பே இல்லாமப்போச்சு. ஸ்ரீநிவாசன் இறந்துட்டாருன்னும்,பசங்க சொத்தையெல்லாம் பாகம் பிரிச்சுக்கிட்டாங்கன்னும், நாகரத்தினம் 'சித்தி', சிவராமன் வீட்டோடையே வந்துட்டாங்கன்னும் சில வருசங்களுக்கு முன்னே கேள்விப்பட்டதுதான்.

-------------
முடிவுரை:


இது இந்த 'எவ்ரிடே மனிதர்கள் தலைப்புலே 25 வது பதிவு.


இனியும் வேணுமா? வாழ்க்கையிலே நான் இதுவரை எத்தனையோ பேரைச் சந்திச்சிருக்கேன்.அவுங்க ஒவ்வொருத்தரையும் பத்தி எழுதணுமுன்னா ஒரு ஆயுட்காலம் போதாது. மனசுலே அப்பப்ப யாராவது வந்து போய்க்கிட்டுத்தான் இருக்காங்க. ஒவ்வொருத்தர்கிட்டே இருந்தும் ஒவ்வொரு நல்ல குணங்களைப் படிச்சிருக்கேன்.சிலர்கிட்டே இருந்து எப்படியெல்லாம் இருக்கக்கூடாதுன்னும் படிச்சிருக்கேன். வாழ்க்கை முழுசுமே ஒரு படிப்பினைதான்.


இப்ப யோசிச்சுப் பார்க்கறப்ப, நல்லா மனசுக்குள்ளெ அனுபவிச்சு எழுதுன தொடர் இதுதான். ஒவ்வொண்ணும் எழுதறப்ப அந்தந்தக் காலங்களுக்கே போயிருவேன். அப்ப அனுபவிச்ச ஒவ்வொரு உணர்வும் அப்படியே மனசுக்குள்ளெ வந்து உக்காந்துக்கும். பல நாள் எழுதமுடியாம அந்த நினைவிலேயே ஆழ்ந்து போயிருக்கேன். முதல் வாரமே அடுத்தவாரம் யாரைப் பத்தி எழுதப் போறேன்னு தீர்மானிச்சு அவுங்கப் பேரைப்போட்டு அனுப்பிர்றதாலே, அவுங்க நினைவாவே அந்த வார முழுசும் இருந்துருக்கேன். எனக்கே இது ஒரு புது அனுபவம்தான்.


உள்மனசுலே இருந்தவங்க சிலரையாவது உங்களுக்குக் காமிக்க ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த நம் தமிழோவியம் ஆசிரியருக்கு என் உளமார்ந்த நன்றி. மீண்டும் எப்பவாவது சந்திப்போம்தானே?
உங்கள் அனைவரிடம் இருந்தும் அன்போடு விடை பெறும்,
துளசி கோபால்.


நன்றி: தமிழோவியம்
-------------


நமக்குள்ளே இருக்கட்டும்: மேலே சொன்ன முடிவுரை தமிழோவியத்துக்கு மட்டும்தான். உங்களுக்கு இல்லை(-:

தப்பிக்க முடியாது. இன்னும் எத்தனை பேர் இருக்காங்க. அப்படியெல்லாம் வுட்டுற முடியுமா? பின்னே பதிவுஎதுக்கு வச்சுருக்கோம்?

கொஞ்ச நாள் கழிச்சு மீண்டும் இதே தொடரில் உங்களை ( கொடுமைப்) படுத்துவேன்,ஆமா:-)))))

Thursday, November 30, 2006

எவ்ரிடே மனிதர்கள் -24 சகுந்தலா

சகுந்தலா ஒரு இளம் விதவை. ஊருலே எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க. பாவம், மூணே மாசம் ஆன கைக் குழந்தை இருக்கு. தகப்பனைத் தின்னுட்டானாம் அந்தக் குழந்தை! இதையும் அந்த ஊரேதான் சொல்லுது.ஆனா சகுந்தலாவுக்கு இன்னும் ஒரு சந்தேகம் இருக்கு. அது........?


நல்ல ஒல்லியான உடல்வாகு. கறுப்பும் இல்லாம ரொம்ப வெளுப்பாவும் இல்லாத ஒரு பொது நிறம். அலைஅலையாஅடர்த்தியாக் கூந்தல். ரொம்ப நீளம். பின்னி விட்டால் ச்சாட்டை போல இருக்கும். கண்ணுலே எப்பவும் ஒரு மெல்லிசானசோகம். டீச்சர் வேலை.நல்ல வசதியான குடும்பம். கூடப்பிறந்தவுங்க 11 பேர். நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, ஜாதகம் பார்த்துத்தான் கல்யாணம் நடந்துச்சு. புருஷன் வீட்டுலேயும் நல்ல வசதிதான். ரெண்டு அண்ணனுங்களாம் வீட்டுக்காரருக்கு. இவர்தான் கடைசிப்பிள்ளை. நல்ல படிப்பு. அந்தக் காலத்து பி.ஏ. சகுந்தலா அப்பத்தான் ஸ்கூல் ஃபைனல் முடிச்சிருந்தாங்க. வயசும் பதினேழுதான். நல்ல இடம் கிடைச்சுருக்கேன்னு மேலெ படிக்க விடாமக் கல்யாணம் முடிஞ்சுபோச்சு.


ஜெயகுமாருக்கு சொந்த பிஸினெஸ். ஒயிட் காலர் வேலைங்கச் சுலபமாக் கிடைக்கிற காலமா இருந்தும் இவருக்கு வியாபாரத்துலேதான் கண்ணு. என்னென்னவோ வியாபாரம் செஞ்சுக்கிட்டு இருந்தாராம். பூக்கடை பக்கத்துலே ராட்டன்(ரத்தன்) பஜார்லே பெரிய கடை. எப்பவும் கோட்டும் சூட்டுமாத்தான் பளிச்சுன்னு இருப்பாராம்.தனிக்குடித்தனம். சொர்கத்தில் இருக்கற நினைப்பு. வீடு பூரா அட்டகாசமான வசதிகள். வீட்டு வேலைக்கு, சமையலுக்குன்னு ஆள். கதைப் புத்தகம், உள்ளூர் சொந்தங்கள் வந்து போறதுன்னு பொழுது போயிருக்கு.'வெளியே போகலாமுன்னு சொன்னவுடன், அந்த க்ஷணமே செருப்பைக் காலிலே நுழைச்சுக்கிட்டுப் போய்க்கிட்டே இருக்கணுமாம். 'இருங்க, துணி மாத்திக்கிட்டு வந்துடறேனு' சொல்லிறக் கூடாதாம். சதா சர்வ காலமும் ஆடை ஆபரணங்களோடநீட்டா இருக்கணுமாம்' இது ஜெயகுமாரின் எதிர்பார்ப்பு.


ஆஹா.......... அப்படியே இருந்துட்டாப்போச்சு. அதான் எல்லா வேலைக்கும் ஆள் இருக்கே. நாளொரு அலங்காரம், பொழுதொரு புடவைன்னு காலம் போகுது. ரெண்டு வருஷம் ஜாலியோ ஜாலி. சகுந்தலா கர்ப்பமானாங்க. ஏழாம் மாசம் தாய் வீட்டுக்கு வந்தாச்சு.அப்ப ரெண்டாவது உலக யுத்தம் நடந்துக்கிட்டு இருந்த காலக் கட்டம். இந்தியாவும் பிரிட்டனுக்கு சப்போர்ட். எங்கே பார்த்தாலும் ராணுவக் கெடுபிடிகள். ரேஷன் அது இதுன்னு இருந்துருக்கு. ஜெயகுமாரும் மிலிட்டரிக்கு சாமான்கள் சப்ளை செஞ்சுக்கிட்டு இருந்துருக்கார்.எல்லாம் பீங்கான் கண்ணாடிச் சாமான்கள். கூட்ஸ் வண்டியிலே சரக்குகள் ஏத்தி மூணு கேரேஜுகள் போயிருக்கு. பையன் பிறந்த யோகம் நல்ல காண்ட்ராக்ட் கிடைச்சிருக்கு.


குழந்தைக்கு அஞ்சு மாசம் ஆனதும் கணவர் வீட்டுக்குக் கொண்டு போய் விட்டுருவாங்க. இவனை அப்படி வளர்க்கணும் இப்படி வளர்க்கணுமுன்னு கலர்க்கலராய் கனவுகள் சகுந்தலாவுக்கு. இடி விழுந்தது போல ஒரு செய்தி வருது ஒரு நாள் பொழுது விடியும் நேரத்துலே . ஜெயகுமார் தற்கொலை செஞ்சுக்கிட்டாராம்.


அய்யோ............ அடிச்சுக்கிட்டு அழத்தான் முடிஞ்சது.


ஏன்? எதுக்கு? எப்படி? ஒரே கேள்விகள் மண்டையைக் குடையுது.
சரக்கு ஏத்திப்போன வண்டி விபத்துலே சிக்கி, சாமான்கள் எல்லாம் நொறுங்கிப் போச்சாம். இதுலே வரப்போற பெருத்த லாபத்தை நம்பி, பாங்குலே வாங்குன கடனை எப்படி அடைக்கப்போறோமுன்ற பயம், விரக்தியிலே அவசரமுடிவு எடுத்துட்டார் ஜெயகுமார். வெளியே தெரிஞ்சா அவமானம், போலீஸ் கேஸ்ன்ற 'தேவை இல்லாத' பயத்தாலே'அண்ணன் வீட்டுலே தூக்குலே தொங்குன ஜெயக்குமாரை' ராவோடு ராவா மயானத்துக்குக் கொண்டு போய் எரிச்சாச்சாம்.


கிடைச்ச விவரம் இவ்வளவுதான். அந்தக் காலத்துலே இன்ஷூரன்ஸ் எல்லாம் அவ்வளவா இல்லை போல இருக்கு.பூச்சூடலுக்கு வந்து திரும்பியே போகலை. குடும்ப வழக்கபடி எதோ சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் எல்லாம் முடிஞ்சு கைக்குழந்தையோடு கண் கலங்கி நின்ன சகுந்தலாவுக்கு வயசு வெறும் இருவது. என்ன கொடுமை பாருங்க.


ஜெயகுமார் வீட்டுலே இருந்து ஒண்ணும் பெருசாக் கிடைக்கலை. சகுந்தலா கொண்டு போன சீர்செனத்திகள்தான் கொஞ்சம் போலத் திரும்ப வந்தது. புருஷன் வீட்டுச் சொந்தங்கள் உறவை அப்படியே மு(றி)டிச்சுக்கிட்டாங்க.
குழந்தைக்கு ஒரு வயசானபிறகு, சகுந்தலா மீண்டும் படிக்கப் போனாங்க. எல்லாம் டீச்சர் வேலைக்குத்தான். காஞ்சீபுரத்துலேஒரு டீச்சர் ட்ரெயினிங் ஸ்கூலிலே சேர்ந்துருக்காங்க. ஹாஸ்டல் வாசம். மாசம் ஒருதடவை மகனைப் பார்க்க வந்துட்டுப் போவாங்களாம். ரெண்டு வருசப் படிப்பு. ஆதாரக் கல்வித்திட்டம். இங்கே குழந்தை பாட்டி வீட்டுலே வளர்ந்தான். ஒரு சமயம் குழந்தைக்கு உடம்பு பூரா சிரங்கு வந்து மோசமாயிட்டானாம்.
என்னென்னவோ வைத்தியம் செஞ்சுருக்காங்க.அங்கங்கே சில தழும்புகளோடு நல்லா ஆனானாம்.


படிப்பு முடிச்சுட்டு வந்ததும் உள்ளூர்லேயே ஒரு ஆதாரக் கல்விப் பள்ளிக்கூடத்துலே வேலை கிடைச்சிருக்கு. வருஷம் ஓடிப்போச்சு. பையனுக்கு இப்ப 14 வயசு. பக்கத்து ஊர்லே இருக்கற ஹைஸ்கூலுக்குப் போய்க்கிட்டு இருக்கான்.ரயிலில் போய்வரணும். ரெண்டே ரெண்டு ஸ்டேஷந்தான். கெட்ட சகவாசம் ஆயிருச்சு. பள்ளிக்கூடம் போகாம ச்சீட்டு,கோலின்னு விளையாடிட்டு சாயந்திரம் சரியான நேரத்துக்கு வீட்டுக்கு வந்துருவான். அஞ்சாறு மாசம் இப்படிப் போயிருக்கு.பள்ளிக்கூடமும் ஒரு தகவலும் அனுப்பலை. குறைஞ்சபட்சம் ஏன் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பலைன்னு கடிதம் போட்டுருக்கலாம்.சகுந்தலாவோட சின்ன அண்ணன் ஒரு நாள் வேற எதோ வேலையாப் போனவர், பையன் ரயில்வே ஸ்டேஷன் மரத்தடியிலே ஜமா சேர்த்துக்கிட்டு சீட்டு விளையாடறதைப் பார்த்துட்டார். வீட்டுக்கு வந்து விஷயத்தைச் சொன்னதும் மண்டகப்படி எல்லாம் ஆச்சு. தெலுங்கு மீடியத்துலே இருந்து தமிழ் மீடியத்துலே உள்ளூர்லேயே சேர்த்தாங்க. ஒரு வழியாஇப்படி அப்படின்னு படிப்பு முடிச்சு, (எல்லாம் ஹைஸ்கூல்தான்) வெளியே வரும்போது வயசு 20.


இதுக்கிடையிலெ எப்பவும் பஞ்சு அடிக்கிறது, பட்டை போடறது, ராட்டையில் நூக்கறதுன்னு பள்ளிக்கூடத்துலே வகுப்புகள் எடுத்ததுலே பஞ்சுத் துகள்கள் எல்லாம் மூக்குவழியாப் போய், ஆஸ்த்மா, க்ஷயரோகமுன்னு வந்துருச்சு சகுந்தலாவுக்கு. தினமும் ஊசி, பால் முட்டைன்னு செலவான செலவு. கையிருப்பெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக் கரைஞ்சுபோச்சு. போனாப் போட்டும், அந்தவரைக்கும் உடல்நிலை குணமாச்சே, அதைச் சொல்லுங்க. அப்புறம் கொஞ்சம் சிபாரிசு புடிச்சு,அரசாங்கப் பள்ளிக்கூடத்துலே வேலையை மாத்திக்கிட்டாங்க. உள்ளூர்தான்.


பையனுக்கு மேலே படிக்க நாட்டம் இல்லை. எதாவது வியாபாரமுன்னு துடிச்சுக்கிட்டே இருந்தான். அப்பனைக் கொண்டு இருக்குன்னு எல்லாரும் சொல்வாங்க. உருவமும் அப்படியேதான். போட்டாவுலே இருக்கற ஜெயகுமாருக்கும், அவர் பையனுக்கும் அப்படி ஒரு ஒத்துமை. இரும்பு நாற்காலி, மேஜை, சாய்வு நாற்காலின்னு ஒரு தொழில் தொடங்கி இப்ப நல்லாஇருக்கானா(ரா)ம். ஆச்சே வயசு இப்ப அறுவதுக்கும் மேலே.


சகுந்தலா வேலையில் இருந்து ஓய்வு வாங்கிக்கிட்டாங்களாம். இப்ப பரவாயில்லாம இருக்காங்கதான். ஆனாலும் மனசுலே இன்னும் ஒரு நெருடல். நிஜமாவே தான் ஒரு விதவையா? ஒரு வேளை சினிமாவில் வர்றதுபோல கணவரைச் சொந்தக்காரங்க ஒளிச்சு வச்சுட்டு செத்துட்டாருன்னு நாடகம் ஆடி இருப்பாங்களோ? இல்லாட்டி அவர் அவமானத்துக்குப் பயந்து ஓடி ஒளிஞ்சுக்கிட்டாரோ? ஏன் அவர் பொணத்தைக்கூடக் கண்ணுலே காட்டாமஎரிச்சாங்க? உண்மையிலெயே செத்துட்டாரா? திடீர்னு ஒரு நாள் திரும்பி வந்தாருன்னா எப்படி இருக்கும்?

இப்படி ஆயிரம் கேள்விகள். விடையே தெரியாத கேள்விகள்.


அடுத்தவாரம்: நாகரத்தினம்


நன்றி: தமிழோவியம்

Wednesday, November 29, 2006

வாத்தியாரின் வீட்டுப்பாடம்

இந்த ஹோம் வொர்க்கைத்தாங்க இப்படிச் சொன்னேன். அக்கா பொண்ணுச் சின்னக்குழந்தையா இருந்த சமயம். (என்ன? ஒரு ஏழு வயசு இருக்கும் அப்ப)
மாமாவோ தீவிர தமிழ் அன்பர், தமிழ்ப் பித்தர். தமிழரசுக் கழகமுன்னு ஒண்ணு அப்ப இருந்துச்சுங்க.(இப்பவும் இருக்கான்னு விவரம் தெரியாது) ம.பொ. சிவஞானகிராமணியார்தான் அதோட தலைவர். அவரை எல்லாரும் ம.பொ.சின்னு குறிப்பிடுவாங்க. நம்ம தமிழ்ப் பித்தர் தன்னையும்மா.து.சின்னே சொல்லிக்கிட்டு இருந்தார். எல்லாத்துலேயும் தமிழே தமிழ்தான் அவருக்கு.பொண்ணு வீட்டுப்பாடம் சரியாச் செய்யலைன்னு இவர், பொண்ணோட டீச்சருக்கு ஒரு குறிப்பு எழுதிக் கொடுத்தனுப்புனார், பொண்ணுகிட்டே.

"சிலம்பரசி( பொண்ணோட பேர்) வீட்டு வேலைகள் ( ஹோம் ஒர்க்) சரியாகச் செய்வதில்லை. கொஞ்சம் கண்டித்து வையுங்கள்."


டீச்சர், உடனே சிலம்பரசி கிட்டே என்ன சொன்னாங்க?


" இதோ பாரும்மா. உங்க அப்பா இப்படிச் சொல்லி யிருக்கார். நாளையிலே இருந்து பள்ளிக்கூடத்துக்குவர்றதுக்கு முன்னாலேயும், பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்குப் போன பிறகும் அம்மாவுக்கு உதவியாவீட்டு வேலைகள் எல்லாம் செஞ்சு தரணும். சரியா? "


" என்ன வேலை டீச்சர்?"


" வீட்டுலே எவ்வளோ வேலை இருக்கும்? மாவு ஆட்டறது, தண்ணி பிடிச்சு வைக்கிறது, கடைக்குப் போறது,தம்பி தங்கச்சிங்களைத் தூக்கி வச்சுக்கறதுன்னு. எல்லாத்துலேயும் உதவி செய் ஆமாம்"


ஏழு வயசுக்குழந்தை என்னங்க வீட்டு வேலை செய்யும்? அதுவும் வீட்டு வேலைக்குன்னெ பெரியவுங்க நாலு பேர் இருக்கற வீடு, கூட்டுக்குடும்பம்.


பொண்ணு வீட்டுக்கு வந்து சொன்னதும், அப்பா முகத்தைப் பார்க்கணுமே:-))))))))))))


சரி. அதுபோகட்டும். நம்ம 'சுப்பையா வாத்தியார்' சுற்றுலா விஷயமா உங்களுக்கெல்லாம் ஒரு லிஸ்ட் போட்டுக் கொடுத்துருக்கார். அவர் அனுப்புனதை இங்கே அப்படியே போடப்போறேன்.


எல்லாத்தையும் கவனமாப் பார்த்துட்டு, உங்களுக்கு விருப்பம் இருக்கற இடங்களையும் குறிப்பிட்டுச் சொல்லுங்க. போற போக்கைப் பார்த்தா, ஒரு நாலைஞ்சு பஸ் ஏற்பாடு செஞ்சுக்கிட்டு, ' தமிழ்மணம் சுற்றுலா'ன்னு'பேனர்' கட்டிக்கிட்டு நாமெல்லாம் போற மாதிரி ஒரு கனவு கண்முன்னால் விரியுது!


***** ***** *****


சகோதரி துளசி கோபால் அவர்களுக்கு,நீங்கள் கேட்டுக்கொண்டபடி தமிழ்நாட்டிலுள்ள முக்கியமான, பார்க்க வேண்டிய இடங்களைக் கீழே குறிப்பிட்டுள்ளேன்.


நீங்கள்தான் துவங்கி வைத்தீர்கள் - ஆகவே அவற்றை நீங்களே பதிவாக்கிவிடுங்கள்.


குறிப்பிட்டுள்ள 33 இடங்களில் 19 இடங்கள் கோவில்களாகும்.இறை நம்பிக்கையுள்ளவர்களும், இறைநம்பிக்கையில்லாதவர்களும் கூட பார்க்கவேண்டிய இடங்களாகும் அவைகள். தொன்மைக்காகவும், சிற்பக்கலைக்காகவும், பிரம்மாண்டத்திற்காகவும், கற்திருப்பணிகளுக்காகவும் பார்த்து ரசிக்கப் பட வேண்டியவை அவை. அது போன்று நூற்றுக் கணக்கான கோவில்கள் தமிழ் நாட்டில் இருந்தாலும் நான் பத்தொன்பது கோவில்களைத்தான் குறிப்பிட்டுள்ளேன்


தேக்கு மரத்தாலான, பிரம்மாண்டமான கட்டிடக் கலைக்கான வீடுகள் செட்டி நாட்டில் நிறைய உள்ளன. எல்லாம் நூறு வருடங்களுக்குமேல் தொன்மையாவை. அவற்றில் இரண்டை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அவைகள் காட்டப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


உங்களுக்குத்தெரிந்த இடங்கள், பிடித்த இடங்கள் இருந்தால் அவற்றையும் சேர்த்துக்கொள்ளும்படி வேண்டுகிறேன்.


1. மெரினா கடற்கரை, சென்னை

2. குடவரைக் கோவில்கள், மகாபலிபுரம்

3. காமாட்சியம்மன் கோவில், காஞ்சிபுரம்

4. நடராஜர் கோவில், சிதம்பரம்

5. பிட்சாவரம், சிதம்பரம் அருகில் உள்ளது

6. அண்ணாமலையார் கோவில், திருவண்ணாமலை

7. பட்டீஸ்வரர் கோவில், பேருர் - கோயமுத்தூர்

8. இயற்கைச் சூழலில் உள்ள சிறுவாணி அணை

9. உதகமண்டலம்

10. பழநி தண்டாயுதபாணி கோவில் ( அதன் தொன்மைக்காக - போகர் ஸ்தாபித்தது)

11. ஸ்ரீரெங்கநாதர் கோவில், ஸ்ரீரங்கம்

12. திருவானைக் கோவில், திருச்சி

13. பிரஹதீஸ்வரர் ஆலயம், தஞ்சாவூர்

14. தியாகராஜர் கோவில் - கமலாலயம் , திருவாரூர்

15. ராஜகோபாலசுவாமி கோவில், மன்னார்குடி

16. இளையாற்றங்குடி கைலசநாதர் கோவில்

17. செட்டிநாடு பேலஸ், கானாடுகாத்தான்

18. ராவ் பகதூர் வீடு, கொத்தமங்கலம்

19. மீனாட்சியம்மன் கோவில், மதுரை.

20. நாயக்கர் மகால், மதுரை

21. காளீஸ்வரர் கோவில், காளையார் கோவில்

22. கோமதியம்மன் கோவில், சங்கரன் கோவில்

23, நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி

24, சண்முகர் கோவில், திருச்செந்தூர்

25. குற்றாலம் அருவி

26. கன்னியாகுமரி

27. முட்டம் கடற்கரை

28. தாணுமாலயன் கோவில், சுசீந்திரம்

29, கொட்டாரம் கிராமம், நாகர்கோவில் அருகில்

30. ராமநாதசுவாமி கோவில்,ராமேஸ்வரம்

31. கொடைக்கானல்

32. தேக்கடி

33. திருவீசர் - சிவகாமவல்லி, கற்பகவிநாயகர் கோவில், பிள்ளையார்பட்டி - குடவரைக் கருவரையில் உள்ள பிள்ளையார்.


நன்றி, வணக்கத்துடன்,SP.VR. சுப்பையா


***** ******* ******


இதுலே நான் வாங்குன மார்க் 20 தான். ( பாஸ்? )

நீங்க?எனக்கும் இப்படி ஒரு சுப்பையா வாத்தியார் இருந்தார். அவரைப் பத்தி இங்கே:-)))))

Monday, November 27, 2006

அம்பது..........

நாமெல்லாம் 'கண்ணை மூடறதுக்குள்ளே' கட்டாயமாப் பார்க்க வேண்டிய அம்பது இடங்களைப் பத்தி, பிபிசிக்காரங்க ஒரு லிஸ்டு போட்டுருக்காங்களாம்.

சரி, அப்படி என்னதான் சொல்றாங்கன்னு போய்ப் பார்த்தேன்.

1.கிராண்ட் கேன்யன்

2.கிரேட் பேரியர் ரீஃப் ஆஸ்தராலியா

3.டிஸ்னி வொர்ல்ட் ( ப்ளோரிடா)

4.சவுத் ஐலண்ட் ( நியூஸி)

5.கேப் டவுன் சவுத் ஆஃப்ரிக்கா

6.பொற்கோயில் அம்ரித்ஸர் இந்தியா

7.லாஸ் வேகாஸ் யு.எஸ்.ஏ.

8.சிட்னி ஆஸ்தராலியா

9.நியூயார்க் யு.எஸ்.ஏ.

10.தாஜ்மஹால் இந்தியா

11.லேக் லூயீஸ் த ராக்கீஸ் கனடா

12. உலூரு அயர்ஸ் ராக் நார்தர்ன் ஆஸ்தராலியா ( உலூருன்றது அபாரிஜன் பெயர்)

13.Chichen Itz, Mexico மாயன் நாகரிகம் மெக்ஸிகோ

14.Machu Picchu, Peru மச்சு பிச்சு (இன்காஸ்) பெரு

15.நயாகரா நீர்வீழ்ச்சி

16.பெட்ரா ஜோர்தான்

17. பிரமிடுகள் எகிப்துPyramids, Egypt

18. வெனிஸ் நகரம் இத்தாலி Venice, Italy

19. மாலத்தீவுகள் Maldives

20. சீனா நெடு(பெரு)ஞ்சுவர் Great Wall, China

21.விக்டோரியா நீர் வீழ்ச்சி Victoria Falls, Zambia/Zimbabwe border

22. ஹாங்காங் Hong Kong

23.Yosemite National Park, USA

24. ஹவாயி தீவுகள் Hawaii

25.வடக்குத்தீவு நியூஸி North Island, New Zealand

26. Iguacu Falls, Argentina/Brazil border

27. பாரீஸ் மாநகர் ஃப்ரான்ஸ் Paris, France

28.அலாஸ்க்கா யு.எஸ்.ஏ. Alaska, USA

29.அங்கோர்வாட் கோயில். கம்போடியா Angkor Wat, Cambodia

30.எவரெஸ்ட் சிகரம். இமயமலை. Mount Everest, Himalayas

31. ரியோ டி ஜெனிரோ ப்ரேஸில் Rio de Janeiro, Brazil

32. வனவிலங்கு சஃபாரி, தேசீய பூங்கா. கென்யா Masai Mara, Kenya

33.கெலபேகோஸ் தீவுகள் Galapagos Islands, Ecuador

34. லக்ஸர் எகிப்து Luxor, Egypt

35. ரோமா நகர் இத்தாலி Rome, Italy

36.சான் ஃப்ரான்ஸிஸ்கோ யூ எஸ்.ஏ San Francisco, USA

37.பார்ஸிலோனா ஸ்பெயின் Barcelona, Spain

38.துபாய் Dubai, UAE

39. சிங்கப்பூர் Singapore

40. La Digue, Seychelles கறுப்புக் கிளிகள் (நிஜக்கிளிகள்) பார்க்கலாம்.

41. ஸ்ரீலங்கா

42.பாங்காக், தாய்லாந்து

43.பார்பேடோஸ் வெஸ்ட் இண்டீஸ் Barbados, West Indies

44. ஐஸ்லாந்து . Iceland

45. சுடுமண் படைவீரர்கள். ச்சீனா The Terracotta Army, China


46.Matterhorn, Switzerland

47. Angel Falls, Venezuela

48.அபு சிம்பெல் எகிப்து Abu Simbel, Egypt

49.பாலித்தீவு, இந்தோனேஷியா

50. Bora Bora, French Polynesia

இதெல்லாம் அவுங்க ச்சாய்ஸ்.

எனக்கு? இன்னும் இந்தியாவையே முழுக்கப் பார்க்கலை.(-:

போட்டும், உங்க சொந்தப் பட்டியல்களைச் சொல்லுங்க. எது எதெல்லாம் நிஜமாவே பார்க்க ஆசையா இருக்கு?


பட்டியல் தயாரானதும் ,(மேற்படிப் பட்டியலில் 4 & 25 விட்டுறணும்:-) ஆமா)
அங்கே இருக்கற நம்ம வலைஞர்கள் கிட்டே சொல்லி ஏற்பாடு செஞ்சுக்கலாம். பிரச்சனை இல்லை:-))))

Friday, November 24, 2006

ஐஸ் உள்ளபோதே...........முதல் சூரியனில் பார்த்தால்... தகதகன்னு பொன் மஞ்சள். அஞ்சே நிமிஷத்துலே மின்னும் வெள்ளி!


மாசு மருவில்லாத பளிச். தண்ணியிலே அன்னப்பறவை போல மிதந்து வரும் ஒய்யாரம். அலட்டல் இல்லாத பயணம்.


நீளம் முதலிலே ரெண்டு கிலோ மீட்டர்ன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. அதுவே மூணு வாரத்துக்கு முன்னாலே. இப்போ கொஞ்சம் கொஞ்சமா நீளம் குறைஞ்சு போச்சாம். இப்பத்துக் கணக்கு ஒரு கிலோ மீட்டர்.அகலம்?


காற்றுள்ளபோதே தூற்றத் தெரிந்த மனுஷனுக்கு ஐஸ் உள்ள போதே என்னென்ன செஞ்சுக்கணுமுன்னு தெரியாதா என்ன?யார் யாருக்குப் பார்க்கணுமுன்னு ஆசை இருக்கு? கை தூக்குங்க............


ஹெலிக்காப்டர்லே போகணுமா இல்லே விமானத்துலே போக ஆசையா?
காசு எவ்வளோ வச்சுருக்கீங்க?


விமானம்ன்னா, உள்ளே 40 பேர் இருப்பீங்க. ஆளுக்கு 395$ ரெண்டரைமணி நேரம் போகவர. இதுலே ஒரு அரைமணி நேரம் இந்த 'ஐஸ்' ஸைச் சுத்திக்கிட்டு. எல்லாரும் நல்லாப் பார்க்கணுங்கறதுக்காக, 1000 அடி உயரத்துலே தாழ்வா பறக்குமாம் ப்ளேன். விமானத்துலே முன்னாலே இருக்கும் இருக்கைகளை எடுத்துருவாங்களாம். அப்ப ஜனங்கக் கூடி நின்னு பார்க்க முடியுமாம். ஷாம்பெய்ன் வேற ஊத்திக் கொடுப்பாங்களாம்.


ஹெலிக்காப்டர்ன்னா 500$ ஆவும்.


1931லே இதே மாதிரி ஒண்ணு வந்துச்சாம். பொழைக்கத் தெரியாத ஆளுங்க, அப்பப் பேசாம இருந்துருக்கு. அது ஆச்சுல்லே 75 வருசம். இப்ப இதைவிட்டா உங்க வாழ்க்கையிலே இதுபோல ஒரு சான்ஸ் கிடைக்காது. என்னா சொல்றிங்க?


'டிமரு'ன்னு ஒரு ஊர் இருக்கு, இந்த தெற்குத்தீவு( நியூஸி)யிலே. அங்கே இருந்து கிழக்குலே 60 கிலோ மீட்டர் தூரத்துலே 'அம்மா' மிதந்துக்கிட்டு இருக்காங்க.


நவம்பர் 25 சனிக்கிழமைதான் ( நாளைக்குத்தாங்க ) முதல் பயணம் ஆரம்பிக்கப்போறாங்க. ஒரு நாளைக்கு6 ட்ரிப் அடிப்பாங்களாம். இப்பவே சனம் டிக்கெட்டுக்கு முண்டியடிக்குதுன்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க.


இதுலெ ஒரு ஜோடி, அங்கே போய் அதுமேலே நின்னு கல்யாணம் முடிக்கப்போறேன்னு சொல்லுது
ஒரு ஹெலிக்காப்டர்லே பொண்ணு மாப்பிளையும், கல்யாணத்தை நடத்தி வைக்கும் ரெஜிஸ்ட்ராரும் ஐஸ்லே இறங்கி 'I do' சொல்லப் போறாங்களாம். சாட்சி? அதான் ஐஸ் இருக்கே! ஆனா பிற்காலத்துலே எதுனா வம்பு வழக்குவந்தா 'சாட்சி' அம்பேல்:-)


கரையிலே இருந்து 12 நாட்டிகல் மைல் தள்ளி நடக்கற கல்யாணம் சட்டப்படி செல்லாதுன்னு அரசாங்க உள்துறை அறிவிப்புப் போட்டுருக்கு.


எதா இருந்தாலும் இன்னும் ஒரு நாலு வாரத்துக்கு எங்களுக்கு 'ஐஸ்' திருவிழாதான்.


வரணுமுன்னு நினைக்கிறவங்க சீக்கிரம் வந்து பார்த்துப்போங்க.
நேத்து என்னன்னா 'இங்கத்து எதிர்கட்சித்தலைவர் ராஜினாமா பண்ணிட்டார்'னு நியூஸ்.


இவ்வளவு கலாட்டாவுலே இதையாரும் சட்டையே பண்ணலை.


நீங்களே சொல்லுங்க, 'ஐஸ்' முக்கியமா 'அரசியல்வாதி' முக்கியமா?

Thursday, November 23, 2006

ச்சும்மா இருப்பது எப்படி?

எனக்கும் தெரியாததால் , தெரிந்தவர்கள் யாராவது சொல்லிக் கொடுத்தால் நல்லது.

Wednesday, November 22, 2006

எவ்ரிடே மனிதர்கள் -23 ரகுநாதன்

நம்ம ரகுநாதனோட ஒரு பொண்ணொட பேர் துளசியாம். இதுவும்கூட ஒரு காரணமா இருக்குமோ அவர் அடிக்கடி நம்ம வீட்டுப் பக்கம் வந்துட்டுப் போறதுக்கு? போதாக்குறைக்கு அவரும் பூனைப் பிரியராம். செல்லப்பூனைகளை ஒரு சமயம் வளர்த்துக்கிட்டு இருந்தாராம்.


நல்ல உயரம். ஒல்லியான உடம்பு. தொப்பையே கிடையாது. யாருங்க அது, 40 வயசாச்சுன்னாவே மனுஷங்களுக்குத் தொப்பை வந்துருமுன்னு சால்ஜாப்பு சொல்றது? தலையில் முக்கால்வாசி வழுக்கை,பின் மண்டையில் கொஞ்சம் முடி. நல்ல தீர்க்கமான கண்கள். சக்கரை வியாதிக்காரர்னு அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும். எப்பவும் நடைதான். இந்த நியூஸிக் குளிரிலும் அதிகாலை அஞ்சு மணிக்கு எந்திரிச்சு 4 கிலோ மீட்டர் ஓட்டம்( அதானே, அப்ப எப்படித் தொப்பை வரும்? நோ ச்சான்ஸ் )


இங்கே மகன் வீட்டில் வந்து கொஞ்ச நாள் தங்கி இருந்தார். இலங்கைவாசி. ஆனால் தமிழ்நாட்டின் மேலே அப்படி ஒரு பற்றுதல். தமிழ்நாட்டிலேயே பல வருஷங்கள் திருச்சி, சேலம்னு வாழ்ந்து வந்துருக்கார். வாத்தியார்தொழில். மொதல்லே ஜாம்பியா நாட்டுலே ஆசிரியரா பல வருஷங்கள் வேலை செஞ்சாராம். மனைவியும், மக்களும்ஊரில். தனியாப் பொங்கிச் சாப்பிட்டு ஒரு வாழ்க்கை.


இவருக்கு மனைவி மேலே ஒரு ஆழ்ந்த மரியாதை & காதல். ஆமா... இது எனக்கு எப்படித் தெரியும்? இங்கே நம்ம தமிழ்ச்சங்க மலருக்கு சில கதைகள், கட்டுரைகள் எழுதிக் கொடுத்தார். நாந்தான் அதைக் கணினியிலே தட்டச்சு செஞ்சு கொடுத்தேன். அளவுக்கு மீறாத வர்ணனைகள், விவரங்களொடு அருமையா எழுதி இருந்தார். அவருடைய கதைகளில் எல்லாம் நாயகன், நாயகியின் பெயர் ரகு & சாந்தா:-))))) அதுலேயும் 'பாண்'( இலங்கையில் ரொட்டியை இப்படித்தான் சொல்வாங்களாம்)னு ஒரு கதை எழுதி இருக்கார் பாருங்க.அடடா...... அவரைக் கேட்டுக்கிட்டு அந்தக் கதையை ஒரு நாள் இங்கே போடறேன்.


ஆன்மீக நாட்டம் இருக்கறவர். நிறையக் கோயில் குளமுன்னு வலம் வந்துருக்கார். நாமும்தான் போறொம். இல்லேங்கலே.ஆனா இவர் போய் வந்த ஒவ்வொரு கோயில்களைப் பத்தியும், அதன் தலப்புராணங்கள், அங்கே போய் வந்த விவரம்,எந்த ஊர்தியிலே என்னிக்குப் போனார்ன்ற வரையிலே விவரமா எழுதி வச்சுருக்காருன்னா பாருங்களேன். இதைப் பத்திப்பேச்சு வந்தப்ப, அவர் எழுதுன பல பகுதிகளைக் கொண்டுவந்து கொடுத்துப் படிச்சு,எதாவது பிழைகள் இருந்தால் திருத்தித் தரணுமுன்னு என்னைக்(????) கேட்டுக்கிட்டார். நானும் வாத்தியாருக்கே, வாத்தியாராம்மாவா இருக்கோமேன்னு கண்ணை உருட்டி விழிச்சுப் படிச்சேன். மனிதர் எதாவது தப்புன்னு செஞ்சுருக்கணுமே!!!


ஆனா சும்மாச் சொல்லக்கூடாது, காசி முதல் ராமேஸ்வரம் போய் வந்த விவரத்தை ஒரு கதை போலவே எழுதி இருக்கார்.எனக்கும் காசி போய்வந்த மாதிரியே இருந்துச்சுங்க.ஷாப்பிங் விவரத்தைக்கூட விட்டு வைக்கலை:-)
அந்தக் கையெழுத்துப் பிரதிகளைப் பார்த்ததும் எனக்கு நம்ம எஸ்.ராமகிருஷ்ணனின் நினைவு 'டக்'ன்னு வந்துச்சு.எஸ்.ராவின் கதை/கட்டுரைகளில் அடிக்கடி 'எறும்பு ஊர்வது போன்ற எழுத்து'ன்னு வர்றதைக் கவனிச்சிருக்கேன்.வெள்ளைத் தாளில் தேனைத் தடவி விட்டா, எப்படி எறும்புகள் வந்து மொய்ச்சுக்குமோ அதெ போல ச்சின்னச்சின்ன எழுத்துக்களில் ஒரேசீராக எழுதி இருப்பார். ஆரம்பம் முதல் கடைசி வரை எழுத்துக்கள் ஒரே ரகம். எதுக்குச் சொல்றேன்னா.....


நான் பேப்பரில் எழுத ஆரம்பிச்சால், முதல் வரி ரொம்ப நல்லா அழகாத் தெளிவா இருக்கும். ரெண்டாவது வரியிலேயேஅழகு கொஞ்சம் பிசுபிசுத்துப்போயிரும். மூணாவது வரியிலே அழகு மிஸ்ஸிங். நாலாவது வரியிலே தெளிவும் மிஸ்ஸிங்.நாலாவது வரியே இந்த லக்ஷ்ணமுன்னா அடுத்து வர்ற வரிகள்? கோவிந்தாதான். ஆனா அதைப் படிக்கிறவங்கதானே கவலைப்படணும்:-))) ( இப்படித்தான் நம்ம விடைத்தாளைப் படிச்சு மார்க் போட்ட எந்தரோ மகானுபவர்கள், அந்தரிக்கும் நன்றிகள்)


'பேசாம ஒரு வலைப்பதிவு ஆரம்பிச்சுருங்க'ன்னு பலமுறை சொல்லிட்டேன். அவரோட எழுத்துகளில் இருந்து பல இடங்களைப் பத்தி பல அரிய விஷயங்கள் தெரிய வாய்ப்பிருக்கு. அவுங்க குடும்பத்துக்கு உரிமையான ஒரு கோயில்அங்கே யாழ்ப்பாணத்துலே இருக்காம். நீராவி விநாயகர் ஆலயம். அதுக்கு பூஜை புனஸ்காரங்கள்ன்னு எப்பவும் நடத்தணும் இல்லையா அதனாலெ நம்ம ரகுவும், சாந்தாவும் அநேகமா ஒண்ணாப் பயணம் செய்யறது இல்லையாம்.ஆனா கோயில் வழிபாடுகளைத் தொடர்ந்து நடத்த வேறு உறவினரை ஏற்பாடு செய்ய முடிஞ்சால் ரகுவும் சாந்தாவும் கோயில் யாத்திரை கிளம்பி விடுவாங்களாம். இப்ப சமீபத்துலே ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே கோயிலுக்குக் குடமுழக்கு செஞ்சுருக்காங்க. நமக்கும் பத்திரிக்கை அனுப்பி இருந்தார். கவருக்குள்ளே நல்லாத் தேடிப் பார்த்தேன்,டிக்கெட் இருக்கான்னு. ஊஹூம்........... காணலை! மறந்துட்டார் போல:-))


குரலை உயர்த்தாம எப்பவும் மிருதுவாப் பேசுவார். இங்கே வந்திருந்த சமயத்தில் அவரையும் பிடிச்சு நம்ம தமிழ்ச்சங்கத்துலே போட்டுட்டோம். ஒரு வருஷம் காரியதரிசியாவும், நம்ம தமிழ்ச்சங்கம் நடத்துற தமிழ்ப் பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியராவும் இருந்தார். பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளுக்குத்தான் இவரைப் பார்த்தான் பயமாப் போச்சாம். நிறைய வீட்டுப் பாடங்கள் கொடுத்துருவாரே:-))))) இங்கே தமிழ்ச்சங்க கலை நிகழ்ச்சிகளிலும் இந்த மாணவர்கள் பங்களிப்பு இருக்கணுமுன்னு நல்லா தயாரிச்சுருவார். பசங்க மேடைப்பேச்சுகளிலே கில்லாடி ஆயிட்டாங்க அவரோட 'ஆட்சி'யிலே!


அவருக்கும் எனக்கும் வயது வித்தியாசம் நிறையன்னாலும், கொஞ்சமும் மரியாதை குறையாமல் அன்பாப் பேசுவார்.மணிக்கணக்காக பல விஷயங்களைப் பற்றியும் பேசி இருக்கோம். இப்பவும் அவர் இங்கே வந்தாருன்னா உடனே தொலைபேசுவார். நல்ல மனிதர்கள்கூட பழக்கம் கிடைக்கறதுக்கும் போன ஜென்மத்தொடர்பும், புண்ணியமும் செஞ்சிருக்கணுமுன்னு அடிக்கடி சொல்வார்.


எப்பவும் உற்சாகத்தோட சிரிச்ச முகமா இருப்பார். இங்கே அவருக்குச் சமமான வயதுடைய சில தமிழ் நண்பர்கள் இருந்த சமயம், அவர்களையும் நடைப்பயிற்சிக்குக் கொண்டு போவார். அவர் ஊருக்குப் போனதும் அவரோட நண்பர்களுக்குத்தான் வெறுமையாப் போச்சாம்.


'ரகு வரப்போறார்'ன்னு அவரோட மகன் செய்தி சொன்னார். நல்ல அருமையான நண்பர். பிள்ளையாரோட பக்தர் ஆச்சே. அதனாலேயே எனக்கு அவரை ரொம்பவே பிடிச்சுப்போச்சு. யானை பக்தரை, யானையின் தோழிக்குப் பிடிக்காதா என்ன?


இங்கே என்னுடைய வெள்ளைக்கார நண்பர்களும், 'வாட் அ நைஸ் ஜெண்டில்மேன்'ன்னு சொல்லுவாங்க. அதான் எங்க லைப்ரரிக்குப் பேரனைக் கூட்டிக்கிட்டு அடிக்கடி வருவாரே. வயசும் ரொம்ப அதிகமில்லை. சில வருஷங்களில் எழுபதுதான் ஆகப்போகுது.


அடுத்தவாரம்: சகுந்தலா


நன்றி: தமிழோவியம்

Monday, November 20, 2006

வர்ட்டா மக்களே:-)))

ஒரு வாரம் ஓடிருச்சு. உங்களையெல்லாம் நல்ல பாடகர்களா ஆக்கியிருப்பேனே? அதுக்கு நியாயமா நீங்கதான் எனக்கு நன்றி சொல்லி இருக்கணும்:-)))


சரி, இப்ப எல்லாருமா சேர்ந்து, கோரஸா அந்தப் பாட்டைப் பாடுங்க,
பார்க்கலாம்... ரெடி, ஒன், டூ, த்ரீ


" சோதனை மேல் சோதனை...போதுமடா சாமி......."


சபாஷ்! நல்லா தேறிட்டீங்க. பேஷ் பேஷ்.


நம்ம 'ங்' கேட்ட தேதிகள் சரியா இருக்குமுன்னு தோணியதாலெ மறுவார்த்தை பேசாமச் சரின்னுட்டேன்.


'வலை பதிவர்களுக்கு அவர்களின் மறுபாதி செய்வது உதவியா இல்லை உபத்திரவமா?'


என்ன ஒரு அழகான, அர்த்தமான, ஆழமான தலைப்பு இல்லை? பட்டிமன்றம் ஒண்ணு கட்டாயமா நடத்திறணும்.


இதை எடுத்துக்கொடுத்தவர்கூட உங்களுக்கெல்லாம் நல்லா அறிமுகமானவர்தான்.ஒரு வலைப்பதிவாளரின் மறுபாதி. அப்பப்ப அவரை இழுக்கலைன்னா எனக்குத் தூக்கம் அம்பேல்:-)))))


யோசிச்சுப் பார்த்தா நம்ம 'கேஸ்'லே உதவிதான் ரொம்பச் செஞ்சுருக்கார். நட்சத்திரவாரம் பார்த்து ஊரைவிட்டே ஓடிட்டார். நானும் இந்த உதவிக்குஎன்ன கைமாறுன்னு கலங்கிப்போய் கணினியே கதின்னு கிடந்தேன்.முதல் பதிவு போட்டதும் நம்ம பொன்ஸ் ஓடோடி வந்து தன்னோட பொன் கையாலே பின்னூட்டத்தைப் போணி பண்ணாங்க. தங்கக் கைங்க! ச்சும்மா சொல்லக்கூடாது. கடையில் யாவாரம் அமோகம்.


வழக்கமா வர்றவங்களோட, புது வாசகர்களும் வந்துபோக ஆரம்பிச்சுருக்காங்க.ரொம்ப மகிழ்ச்சியான விஷயம்.


இதுலே நம்ம ப்ளொக்கர் ஒருத்தர் இங்கிலிபீஸுலே எழுதிக்கிட்டு இருந்தவரைப் படுத்துனதுலே அவரே தமிழுக்கு வந்துட்டார். புது விவசாயி (இ)கலப்பையாலே உழ ஆரம்பிச்சுட்டார். உள்ளுக்குள்ளே தீயா கனன்று நின்னவரை 'அகத்தீ' ' ன்னு ஆக்கியாச்சு. (அவருக்கு உதவி தேவையாம். கொஞ்சம் பாருங்களேன்.)


மொத்தம் இதோட சேர்த்து பத்துப்பதிவுகள். ரொம்ப ஓஹோன்னு இல்லைன்னாலும்,ஓரளவு சுமாரா வந்துருக்குன்னு நினைக்கிறேன்.


அந்த இத்தாலிய மொழி சினிமாவைப் பத்தின மேல் விவரம் கிடைச்சிருக்கு.படத்தோட பேரு 'டிக்கெட்ஸ்' . மூன்று பகுதிகளாக மூன்று இயக்குனர்கள் இயக்குனது, ஒரு இங்கிலீஷ்காரர், ஒரு இத்தாலியர், ஒரு இரானியர்னு.


மடிக்கணினி தாத்தா- ஆங்கிலேயர்

குண்டு அம்மா - இத்தாலியர்

அல்பேனியக் குடும்பம்- இரானியர்


ஒரு ப்ளைட்லெ பார்க்க விட்டுப்போன விவரத்தை, இன்னொரு ஃப்ளைட்டுலே போய்ப் பார்த்துக்கிட்டு வந்துட்டார்:-))))) 'அதெல்லாம் விட்டதைப் புடிச்சுருவொம்லே!'


சினிமா & சமையல் பதிவுகளிலே ஆர்வமா பலரும் கலந்துக்கிட்டீங்க. அதுபோலத்தான் புதிர்விடை கண்டுபிடிப்புகளிலும். இன்னும் நம்ம மனசுலே குழந்தைத்தனத்தின் மிச்சம் இருக்குதானே? இது வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம். விருப்பு வெறுப்புன்னு ரொம்ப ஒண்ணும் குழப்பாத குழந்தைமனசு, எல்லாத்தையும் தெரிஞ்சுக்க இஷடப்படும் குழந்தை மனசோட பரபரப்பு, ஆர்வம் இதுதான் வாழ்க்கையை இன்னும் சுவையா ஆக்குது.


விருப்பு வெறுப்புன்னதும் இன்னொண்ணும் சொல்றேன். மகிழ்ச்சி வருத்தம். இந்த வாரம் மகிழ்ச்சியிலே ஆழ்த்துனது ரெண்டு பதிவுகள், அதே போல வருத்தம்( கொஞ்சம்தான்) பட வச்சதும் இன்னும் ரெண்டு பதிவுகள்.


நம்ம மலைநாடான் பாட்டாப் போட்டுட்டார்.


நம்ம மா.சிவகுமார் மகுடமே சூட்டிட்டார்.


இது மனமகிழ்ச்சியைத் தந்துச்சு.


அப்ப வருத்தம் தந்தது? வேணாம். அது இருந்துட்டுப் போட்டும்.

எழுதுனவங்களுக்கு அது ஓரளவு மகிழ்ச்சியைத் தந்துருக்கலாம்தானே?
ரெண்டு இப்படின்னா ரெண்டு அப்படி. பேலன்ஸ் சரியாப்போச்சு:-)))


இதுபோல உங்களோடு மனம்விட்டுப் பேச ஒரு சந்தர்ப்பம் உண்டாக்கித் தந்த நம்ம 'ங்' காருக்கு நன்றி.


வீட்டுக்கு வந்தவங்களுக்கு ஒரு காப்பித்தண்ணி கூடக் கொடுக்கலைன்னா எப்படி? இருந்து சாப்புடறவங்களுக்கு ஒரு ச்சின்ன விருந்தாவது வைக்காட்டா எப்படி? (அதான் விர்ச்சுவல் விருந்து வச்சுட்டொம்லே?)


தலைக்கனம் இல்லாம இருக்கணும் என்றதுதான் என்னோட விருப்பம்னு சொல்லிக்கிட்டாலும் உங்க அன்பையும் நட்புணர்வுகளையும் அனுபவிச்சதுலே உண்மையாவே நெஞ்சும் தலையும் கனத்துத்தான் போச்சு.மொத்தத்துலே கூட்டிக்கழிச்சுப் பார்த்தா நிறைவுகள்தான் அதிகம்.


அடுத்தவாரம் மின்னப்போகும் நட்சத்திரத்துக்கு வரவேற்பும் வாழ்த்து(க்)களும் சொல்லிக்கறேன்.


அனைவருக்கும் என் அன்பும் ஆசிகளும்.


நல்லா இருங்க. வர்ட்டா மக்களே:-)))

Sunday, November 19, 2006

சமையல் ( பற்றிய) குறிப்பு

சமைக்கத் தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்த காலத்துலே 'சமைத்துப்பார்'ன்னு நம்பிக்கையைக் கொடுத்தது நம்ம மீனாட்சி அம்மாள் அவர்களின் புத்தகம்தான்.


மொத்தம் மூணு தொகுதிகள்.


முதல் தொகுதியில் வழக்கமான சமையல்கள். தினமும் நாலுதடவை(ஏன்? அப்புறம் சொல்றேன்) புரட்டியே இப்ப இதுதாள் தாளாகிடக்கு.

குழம்பு, ரசம், அவியல் கூட்டு , கறின்னு....... ஒரே 'போர்' தான்.ஆனாலும் தினப்படிக்கு இது வேண்டித்தான் இருக்கு.


சுவாரசியம் ரொம்ப இல்லை. இதுலேயே அடுத்த பகுதி கொஞ்சம் பரவாயில்லை.சிற்றுண்டி வகைகள்.எனக்குச் சின்னவயசுலே இருந்தே சாப்பாட்டை ( சோற்றை)விட பிடிச்சது இந்த பலகார வகைகள்தான்.சோறு & குழம்பு பிசைஞ்சு சாப்புட அப்படி ஒரு சோம்பல்! ராத்திரியிலே பாடம் படிச்சுக்கிட்டே தூங்கி விழுவேன்.அப்ப அக்கா சாப்பிடக்கூப்புட்டா...... தட்டைக் கழுவி எடுத்துக்கிட்டுப் போணுமேன்னு, சோறே வேணாமுன்னுதூங்குவேன். அக்காவே தட்டைக் கழுவி வச்சு, சாப்பாடு பறிமாறிட்டேன்னு சொல்லி இழுத்துக்கிட்டு போவாங்க.உடனே தூக்கம் கலைஞ்சுரும்:-))))


அப்ப எல்லாம் எங்க வீட்டுலெ 'எச்சித் தட்டு'ன்னு ஆளுக்கு ஒண்ணு இருக்கும். அவுங்கவுங்க தட்டுலெதான் அவுங்கவுங்க சாப்புடணும்.தட்டு மாறாம இருக்க அடையாளம் எல்லாம் போட்டு வச்சுருப்போம்:-) நம்ம தட்டை நாமே கழுவி வைக்கணும். வீட்டுலே மத்த பாத்திரங்களோட இதுகளை சேர்த்து வச்சுறக்கூடாது.தெரியாம வச்சுட்டோம், தொலைஞ்சோம். மிலிட்டரி ரேஞ்சுலேதான் அப்ப வீட்டு நடவடிக்கைகள். ( இப்ப அதுக்குப் பழி வாங்கறாப்பலே எல்லாப் பாத்திரமும் 'டிஷ் வாஷரு'க்குள்ளே ஒண்ணாப் போகுது) சொல்ல மறந்துட்டேனே,அடுக்களைப் பக்கம் இருக்கும் வெராண்டா சுவத்துலே ஆணிகள் அடிச்சு வச்சுருக்கும், இந்தத் தட்டுகளை மாட்டறதுக்குன்னு!


எங்க பாட்டி வீட்டுக்குப்போனா மஜாதான். முக்காவாசி நேரம் ராத்திரியிலே முற்றத்துலே தான் சாப்பாடு. பெரிய பேஸின்லே பிசைஞ்சு கையிலே உருட்டித் தருவாங்க. மாமா, சித்தி பசங்கன்னு பெரிய கூட்டம் இருக்கும். நெருக்கியடிச்சுக்கிட்டு உக்காந்து தின்னே தீர்த்துருவோம். பெரியவுங்களும் சில சமயம் இதுலே சேர்ந்துக்குவாங்க. முக்கியமா மறுநாள் எதாவது விசேஷமுன்னா, (பழசை எடுத்து வைக்க முடியாதாம்) மொத்தத்தையும் தின்னு முடிக்கணும்.இதுதான் ஒரே வழி! கொண்டா கொண்டான்னு எல்லாரும் நாலு உருண்டை அதிகமாவே தின்னுருவோம்.


பாருங்க, வழக்கம் போலவே என்னவோ சொல்ல வந்து எங்கியோ போய்க்கிட்டு இருக்கேன். சிற்றுண்டி வகைகள்ன்னு இட்டிலி, தோசை, பொங்கல்ன்னு ஆரம்பிச்சு லட்டு , ஸோமாசி போளி வரை போகுது. அப்புறம் சில விசேஷ தினபட்சணங்கள்ன்னு அரிசி கர்ச்சிக்காய்லே ஆரம்பிச்சு கார்த்திகைப் பொரி உருண்டை, திருவாதிரைக்களி வரை இருக்கு.


கடைசியா, அனுபந்தம். ஆஹா.... அடுப்பு ( குமுட்டி, விறகு)பற்றவைக்கும் முறைகள், காஃபி தயாரிக்கும் விதம்,சாதம் வடிக்கிறது, குக்கரில் சோறாக்குறதுன்னு இன்னும் சில. கட்டக் கடைசியா, 'ஆஸ்தராலிய கோதுமை ரவை, மாவு அரைக்கிற விதம் இருக்கு.அப்போ, அந்தக் காலத்துலெயெ ஆஸ்த்ராலியக் கோதுமை நம்ம நாட்டுக்குள்ளே பூந்துருச்சு.இந்தப் புத்தகம் முதல் பதிப்பு 1951லே வந்துருக்கு. அப்பவே மீனாட்சி அம்மாவுக்கு நிறைய வயசாகி இருக்கணும். அவுங்க வீட்டுப் பெண்களுக்குன்னு அப்பப்ப எழுதுன குறிப்புகள் ( பதிவுகள்?) எல்லாம் இன்னிக்கு உலகம் பூராவும் போய் இருக்கு.
நான் இந்தப் புத்தகங்கள் வாங்குனப்ப இதோட விலை 7 ரூபாய்(தான்) ஒவ்வொண்ணுக்கும்.


ரெண்டாம் தொகுதியிலும் ரெண்டு பகுதியா சிற்றுண்டி வகைகள், இதர சமையல்கள்ன்னு சுண்டல், வத்தல் வறுவல், ஊறுகாய், பொடி வகைகள்ன்னு இருக்கு. ஆனா இந்தப் புத்தகத்துலே நாலு பேர் அடங்கிய ஒரு சிறு குடும்பத்துக்கு ஒரு மாசத்துக்குத் தேவையான சாமான்கள்ன்னு ஒரு பட்டியல் இருக்குங்க. இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. நாமோ ரெண்டே பேர். எல்லாத்தையும் ரெண்டாலெ வகுத்துட்டு வாங்கிக்கலாம். ஈஸி பீஸி!


அதே போல சாமான்கள் வாங்கியாச்சு. ஆனா அதெல்லாம் நமக்கு ரெண்டு மாசத்துக்கு வந்துச்சு. அப்பத்தான் தெரிஞ்சது 'அம்மாவுக்கு' கை கொஞ்சம் பெருசுன்னு. அதுலேயும் அப்ப ஜனங்கள் கொஞ்சம் நல்லாவே சாப்புட்ருக்காங்க. உடல் உழைப்பு கூடுதலா இருந்த காலம். அதுனாலே நிறைய சாப்பாடும் உள்ளெ தள்ளப்பட்டிருக்கும்.


மூணாவது தொகுதியில் இன்னும் சில விசேஷங்கள் இருக்கு. குழம்பு ரசமுன்னு கொஞ்சமே கொஞ்சம்.அடுத்து இன்னும் சிலவகை சிற்றுண்டி. போயிட்டுப் போட்டும். இதுலே பகுதிகள் மூணாவதும் நாலாவதும்தான் முக்கியம். கல்யாண சாப்பாட்டு மெனு, ஆயிரம் பேர் வர்ற மூணுநாள் கல்யாணத்துலே என்னென்ன எப்பெப்பன்னு ........அதுக்குத் தேவையான சாமான்கள் பட்டியல். இந்தக் காலத்துலே எல்லாத்துக்கும் ஒப்பந்தக்காரர்கள் கிடைச்சுடறாங்க.எதோ இன்னொருத்தர் வீட்டு விசேஷத்துக்குப் போறது மாதிரியே நம்ம வீட்டு விசேஷங்களுக்கும் போனாப் போச்சு!


கடைசியா... பண்டிகைகள் கொண்டாடும் விதம். இதுவும் குடும்பவழக்கம், நமக்குப் பழகுன முறைகள்ன்னு இருந்தாலும்,ஒரு 'கைடு' மாதிரி அப்பப்பப் பார்த்துக்கறதுக்கு உத்தமம்.


எல்லா அளவுகளும் படி, ஆழாக்கு, வீசை, பலம்னு இருந்ததைக் காலத்துக்கேற்ற மாதிரி கிராம், கிலோ, லிட்டர்ன்னு (அடைப்புக்குள்ளே மாத்தித்தான்) கொடுத்துருக்காங்க. ஆனாலும் இப்பத்து மக்களுக்கு இது கொஞ்சம் குழப்பமா இருக்குன்னும் சொல்லக் கேட்டுருக்கேன். வேடிக்கை என்னன்னா, நம்ம மக்கள்ஸ்( இளைய தலைமுறை) நிறையப்பேர் அமெரிக்காவுலே இருக்காங்க. இந்தியாவுலே மெட்ரிக் அளவுகளில் படிச்சுட்டு, இப்ப அங்கே இம்பீரியல் அளவுகளில் வாழ்க்கை! ஆனாலும் நம்மூர் பழைய அளவுகள் புரிஞ்சுக்கக் கஷ்டமுன்னு சொல்றாங்க. இதுக்கெல்லாம் கவலைப்படாம,செய்முறையைப் படிச்சுட்டு, தோராயமா நமக்குத் தெரிஞ்ச 'அளவை'யிலே செஞ்சு பாருங்க. சுமாராவாவது வரும்.கொஞ்சநாள் ஆனா இந்த 'சுமாருக்கே ' நாக்கு பழகிரும். உப்பு, காரம் மட்டும் கொஞ்சம் கவனிச்சாப் போதும்.உலகத்துலேயே அதிகமா விக்கறது சமையல் புத்தகங்கள்தானாம்.


சிவசங்கரியோட கதைகள் படிச்சவங்களுக்கு 'உழக்கு'ன்ற வார்த்தை பரிச்சயமாகி இருக்கும். வாய்ப்பாட்டுப்புத்தகங்களிலே இந்த பழைய நிறுத்தல் அளவு எல்லாம் இருக்குன்னாலும் இப்ப யாரு அதைத் தேடிக்கிட்டு ஓடறது?
நினைவிலே இருக்கற அளவுகள் தரேன். எதாச்சும் புரியுதா பாருங்க. இதுலே எதாவது கேள்வி 'கோன் பனேகா குரோர்பதி'யிலே வந்தாலும் வரும்.


நிறுத்தல் அளவு

வீசை
சேர்
பலம்
ரூபா எடை.( இது 10 கிராமாம். வெள்ளியிலே செஞ்ச அந்தக் காலத்து ரூபாய்க் காசு)


கொள் அளவுகள்

மரக்கால்
படி ( இதுலே பக்காப்படி, பட்டணம்படின்னு வேற இருக்கு)ஆழாக்கு
வீசம்படி
மாகாணிப்படி.


'படியிலே மாத்து, பலத்துலே மாத்து'ன்னு அந்தக் காலக் கணக்குங்க எல்லாம் ஒரே லொள்ளு. இதுலே தூரத்தை அளக்க நீட்டல் அளவைகள்ன்னு

மைல்,
பர்லாங்,
கஜம்,
அடி,
அங்குலம்னு போகும்.


முப்பத்தி ரெண்டு வருஷங்களுக்கு முந்தி சமையலில் தேர்ச்சி(!!!) பெற இந்தப் புத்தகம்தான் கை கொடுத்துச்சு. தினம் மத்தியானம், இந்தப் புத்தகத்தை எடுத்துவச்சுக்கிட்டு வாசிப்பேன்( வாசிப்பு அனுபவம்?)எல்லா இனிப்பு ஐட்டங்களையும் செய்முறை 'படிச்சுப் பார்த்தவுடனே' செஞ்சு சாப்புட்ட திருப்தி. இந்தக் கணக்குலே தினம் நாலைஞ்சு ஸ்வீட்.ஒரு சில நாட்களிலே மட்டும் கையும் மனமும் ரொம்பப் பரபரத்தால் ( மட்டுமே) அளவுகளையெல்லாம் டீஸ்பூனா மாத்தி எதாவது செஞ்சு பார்க்கறது உண்டு.


ஒரு டீஸ்பூன் கடலைமாவு, 3 டீஸ்பூன் சக்கரை, 4 டீஸ்பூன் நெய்ன்னு செஞ்சால் ச்சின்னதா தேசலா ஒருமைசூர்பாகு! ( புத்தகம் கிழிஞ்சது இப்படித்தான்)


நவீன கால மக்களுக்காக இப்ப இந்தப் புத்தகங்கள் ஆங்கிலத்திலும் வருது. முந்தியே Cook & See ( சமைத்துப்பார்)முதல் ரெண்டு தொகுதி வந்ததாம். இப்ப இன்னும் என்னென்னவோ இடைச்செருகல்கள் எல்லாம் சேர்த்து அஞ்சு புத்தகமா வந்துக்கிட்டு இருக்கு. தமிழிலும்தான். ஆனா பழைய புத்தகத்துலே நம்ம மீனாட்சியம்மாவோட கைப்பட எழுதிய கைப்பக்குவம் மிஸ்ஸிங்(-:


விற்பனையில் இவ்வளவு புகழ்பெற்ற புத்தகம் எழுதுனவுங்களுக்கு எவ்வளவு காசு வந்துருக்கணும்? அதுதான் இல்லை(-:பிரசுரம் செஞ்சவங்களுக்கு இன்னும் நல்ல வருமானம்தான். ஆனால்........... மூணு/மூணரை வருஷம் முந்திஒருசமயம் சில புத்தகங்களை வாங்கிக்க அவுங்க வீட்டுக்கே நேராப் போனேன். மீனாட்சியம்மாவின் வாரிசுகள் இருக்கும் வீடு. அங்கேயே ஒரு வெராந்தாவுலே புத்தகங்களை விற்பனைக்கு வச்சுருக்காங்க. 'பழக்க தோஷத்துலே'நிறைய புத்தகங்கள் வாங்கறோமே, எதாவது டிஸ்கவுண்ட் இருக்கான்னு கேட்டுட்டேன்.. கேட்டுட்டு எனக்கே 'ச்சீ'ன்னுபோச்சு.


" நீங்களே எதாவது கழிச்சுக்கிட்டு பாக்கி தாங்களேன்"


வீடு வளமா இல்லை(-:


என்னதான் வெவ்வெற நாடுகளிலே போய், மத்த வகைச் சாப்பாட்டுகளை ருசி பார்த்தாலும், நம்மூரு சாம்பார், ரசத்துக்கு ஈடு உண்டா?


இப்ப நான் சமையலில் பயங்கர 'எக்ஸ்பர்ட்'. சந்தேகமா? படத்தைப் பார்க்கவும்:-))))


எல்லாம் மீனாட்சி 'அம்மா' தயவுதான்.

Saturday, November 18, 2006

ஹரிதாஸ் அல்லது பக்த விஜயம்

படம் ஓடோ ஓடுன்னு 110 வாரம் ஓடியிருக்குங்க. ஒரு தீபாவளீக்கு ரிலீஸ் ஆகிமூணு தீபாவளி தாண்டியும் ஓடுச்சுன்னா( ஓட்டியிருக்காங்க?) பாருங்களேன்.


1944வது வருஷத்து ரிலீஸ். பழைய படங்களைத் தேடித்தேடிப் பாத்த நான் எப்படி இதை மட்டும் (62 வருசப் பழசு!) விட்டு வச்சேன்றதே தெரியலை.
சரி.... அப்ப நம்ம வெஸ்ட் மாம்பலம் நேஷனல்லே போட்டுருக்க மாட்டாங்க. இல்லேன்னா என் கண்ணுலே இருந்து தப்புமா?


எப்படியோ போனமுறை ஊருக்குப் போனப்ப கிடைச்சது.அதுதான் இந்த 'கிடைக்கணுங்கறது கிடைக்காமப் போகாது' இல்லே? வாங்கியாந்தேன்..


அப்பெல்லாம் திரைப்படங்களுக்கு ரெண்டு தலைப்பு வைக்கிற வழக்கம். இப்பவும்தான் வரிவிலக்கு கிடைக்குதேன்னு அவசரம் அவசரமா ரெண்டு தலைப்புகள் வருது:-)))


இந்தப் படம் வந்தப்ப நம்ம வலைஞர்களில் முக்காலெ மூணேமுக்கால் வீசம் பேர் பிறந்தே இருந்துருக்கமாட்டோம். அவுங்களுக்காகத்தான் ரொம்பவே விஸ்தாரமான இந்தப் பதிவு. இது வழக்கமான 'துளசி ஸ்டைல்' விமரிசனம் இல்லை.


ஹரிதாஸ் அல்லது பக்த விஜயம்.


திரைக்கதை & இயக்கம்: சுந்தர்ராவ் நாட்கர்னி


வசனம்: இளங்கோவன்


இசை: ஜி.ராமநாதன்


பாடல்கள்: பாபநாசம் சிவன்.

போதும் போதுமுன்னு சொல்ற அளவுக்கு 18 பாட்டுங்க. (சண்டைக்காட்சிகள் நிறைந்த, பாடல்கள் நிறைந்த'ன்னெல்லாம் விளம்பரங்கள் வந்துக்கிட்டு இருந்த காலக்கட்டம்) நல்ல வேளை! எல்லாம் ச்சின்னச் சின்ன பாட்டுகள்தான். அதிகப்பட்சம் ரெண்டு நிமிஷங்கள். ( இப்பக் கவனிச்சீங்கன்னா, ஏழெட்டு நிமிஷப் பாட்டுகள் கூட சர்வசாதா'ரணம்')


வாழ்வில் ஓர் திருநாள்

ஆடணும்

மன்மத லீலையை வென்றார் உண்டோ? ( புகழ் பெற்றது)

தொட்டதற்கெல்லாம்

கதிரவன் உதயம்

எனது மனம்

எந்நாளும் உங்களை

அன்னையும் தந்தையும்தானே ( புகழ் பெற்றது)

மாமுனி நாதா


என் கண்ணிலொரு

அன்னையும் தந்தையும்

கவலையைத்தீர்ப்பது

காதகி கிராதகி

என்னுடல்தனில் ஈ மொய்த்தபோது (அம்மையப்பா உந்தன் அன்பை)

எனதுயிர்

கிருஷ்ணா முகுந்தா ( புகழ் பெற்றது)

நிஜமா


அடடா...பாட்டைப் பத்திச் சொல்றதுக்கு முந்தி நடிகர் நடிகைகளைப் பத்திச் சொல்லி இருக்கணுமுல்லெ?


எம்.கே.தியாகராஜ பாகவதர்

டி.ஆர். ராஜகுமாரி ( பலரின் தூக்கத்தைக் கெடுத்த அந்தக்காலக் கனவுக்கன்னி)

வசந்த கோகிலம்

ரங்காச்சாரி

என்.எஸ். கிருஷ்ணன்

டி.ஏ. மதுரம்.

மற்றும் பலர்


கதைன்னு பார்த்தீங்கன்னா ரொம்ப சிம்பிள். 'மனுஷன் எப்படியெல்லாம் இருக்கக்கூடாதுன்றதை விஸ்தாரமாக் காமிச்சு, எப்படி இருக்கணுமுன்னு கடைசியில் சுருக்கமாச் சொல்றாங்க.'

மது & மாது கூடாது

தாய் தந்தையை பேணல்.


ப்ளேபாய் கதாநாயகன். (எம்.கே.தியாகராஜ பாகவதர்)

அடங்காத மருமகள் (வசந்த கோகிலம்)

ஆன்மீக நாட்டம் இருக்குற பெற்றோர்.

ஆடல்கலையில் சிறந்த விலைமகள் ரம்பா (டி.ஆர். ராஜகுமாரி)


அப்பா அம்மாவை மதிக்காத, கல்யாணமான (!!!!!!) கதாநாயகன் ஹரி என்கிற ஹரிதாஸ்.முதல் காட்சியிலேயே 'வாழ்விலோர் திருநாள்'னு சொந்தக்குரலில் பாடிக்கிட்டே வெள்ளைக்குதிரையில் அலங்கார பூஷிதனாய் 'ஆட்டுக் கம்மலோட' வர்றார். ஊர்ப் பெண்கள் எல்லாம் மதி மயங்கி/மறந்து நிக்கறாங்க.( அந்தக் காலத்துலே நிஜமாவே பலரோட 'கனவுக்கன்னனா' இருந்தாராமே!) பார்க்கிற பெண்களையெல்லாம் கண்ணடிச்சுக்கிட்டே பாட்டு வேற. ஹைய்யோ.........


ஒரு ச்சின்னப்பெண்ணைத் துரத்திக்கிட்டு போறார். அந்தப் பொண்ணும் தொடை தெரியறமாதிரி ஓடுது(கவர்ச்சி?)கைக்கெட்டும் தூரத்தில் அந்தப் பெண் இருக்கும்போது நண்பன் வந்து, இதையாத் துரத்திக்கிட்டு வந்தே? இன்னொருஅழகான பெண் நகரத்துக்கு வந்துருக்காள்ன்னு சொன்னதும் இவளை விட்டுட்டு உடனே திரும்பி வேகமாப் போறார்.அந்த அவசரத்திலும் துரத்திய பெண்ணுக்குப் பரிசு கொடுக்காமப் போகலை. மோதிரத்தைக் கழட்டி அவள் காலடியில் வீசிட்டுப் போறார். நன்றியோடு அந்த மோதிரத்தை எடுக்கும் அந்தப் பெண், அட! நம்ம பண்டரிபாய்.


கிருஷ்ணன் கோயிலில் ஆடும் ரம்பாவைப் பார்க்க ஓடோடி வந்து சேரும்போது நடனம் முடிஞ்சுருது. ரம்பாவை மனைவி லக்ஷ்மிக்குத் தெரியாமல் வீட்டுக்கு வந்து ஆடவைக்கிறான் தோழன் கண்ணன். ஆட்டம் முடிவடையும் நிமிஷம், மனைவிக்கு உண்மை தெரிஞ்சுபோய் எல்லாருக்கும் குச்சியாலே செம அடி. புருஷனுக்கும் மனைவிக்கும் சண்டை. பாட்டாலேயே மனைவியை மன்னிக்கும்படி செஞ்சுடறார் நாயகன். 'வசனம் இருக்கு பாருங்க, ரொம்ப ஷார்ப்.' நாகரிகம் கருதி நாம் என்ன வார்த்தையெல்லாம் சொல்லமாட்டோமோ, அதையெல்லாம் சரளமாப் பேசறாங்க.ரம்பாவுக்கு ரோஷம் வந்துருது. லக்ஷ்மி தனியா இருக்கும்போது ஆட்களை அனுப்புக் கட்டித் தூக்கிட்டு வரச் சொல்றாங்க. மாமனார், மாமியார் அந்த சமயம் வந்து காப்பாத்தறாங்க. அடியாட்களை மன்னிச்சு விட்டா, உடனே அவுங்க, மாமனார் மாமியார் மேலேயே பழியைத் திருப்பிப் போட்டுடறாங்க.மனைவியை இப்படிச் செஞ்சது தன்னோட பெற்றோர்கள்தான்னு நம்புன ( ஏற்கெனவே அவுங்களைக் கொஞ்சமும் மதிக்காத )ஹரி அவுங்களை வீட்டை விட்டுத் துரத்திடறார்.அம்மா அப்பா மனம் கலங்கி வீட்டைவிட்டுப் போயிடறாங்க.( தேசாந்திரம்)


லக்ஷ்மியோட அன்பா இருக்கறதுபோல 'நடிச்சுக்கிட்டே' ரம்பா வீட்டுக்கு போய் வந்துக்கிட்டு இருக்கும் ஹரிக்குக் குடிப்பழக்கம் பண்ணி வச்சுட்டாங்க ரம்பா. குடிக்கு அப்புறம் சூதாட்டம். தருமர் மாதிரி இந்த ஆட்டத்துலே தன் வீட்டைக்கூட வச்சு ஆடித் தோத்துட்டார் ஹரி. குடிச்சுட்டு வந்த புருஷனைக் கண்டிக்கும் மனைவியை, அலட்சியம் செஞ்சு தள்ளிவிட்டதுலெ நெத்தியிலே ரத்தகாயம் லக்ஷ்மிக்கு(-:


ரம்பா, ஹரியின் வீட்டுக்கு வந்து வீட்டைச் சொந்தக் கொண்டாடிக்கிட்டு ஹரியையும் லக்ஷ்மியையும் வெளியேபோகச் சொன்னதும், கிராம அதிகாரி வந்து பார்த்துட்டு, குடி போதையில் இருக்கும்போது எழுதிக்கொடுத்த பத்திரம் செல்லாதுன்றார். அடிச் சக்கை! ரொம்பச் சரி. ஆனால்....ரம்பாதான் விலைமகளாச்சே.அதிகாரியையும் மயக்குனதும், அவரும் ரம்பா பக்கம் தீர்ப்பு சொல்லிடரார்.ரம்பாவின் சுயரூபம் இப்பத்தான் ஹரிக்குத் தெரியவருது.


வீடுவாசலைத் துறந்து ஹரியும் லக்ஷ்மியும் காட்டுவழியே நடந்து காசிக்குப் போறாங்க. ஒரு இரவில் காட்டுலே தூங்கும்போது அங்கே ஒரு முனிவரோட ஆசிரமத்துலே மூணு அழகிய பெண்கள் வந்து போறதை ஹரி பார்த்துடறார். கங்கை, யமுனை, சரஸ்வதியாகிய நதிப்பெண்கள். அந்த முனிவரையும் ஏளனமாகப்பேசி எட்டி உதைக்கும் ஹரிக்கு ரெண்டு காலும் முழங்காலுக்குக் கீழே துண்டாப்போயிருது. ( க்ராஃபிக்ஸ், கணினி எல்லாம் இல்லாத காலம். ஆனாலும் ரத்தக்காயத்தோடு தரையில் இழைஞ்சு இழைஞ்சு ஹரி போறார்) முனிவரின் மகிமையும், தான் தன்னுடைய பெற்றொருக்குச் செய்த அவமரியாதைக்கும் இது தண்டனை என்று உணர்ந்த ஹரி பாடிக்கிட்டே ச்சின்னக் குன்றுமேலே இழைஞ்சு ஏறுகிறார்(!!!)


அங்கே இருந்து கீழே பார்க்கும் போது போகும் பஜனை கோஷ்டியில் ஹரியின் அப்பா அம்மா போய்க்கிட்டு இருக்காங்க. அவுங்களை இதுவரை அவமரியாதை செஞ்ச குற்றத்துக்காக, தற்கொலை செஞ்சுக்கலாமுன்னு அங்கே இருந்து உருண்டு விழறார். முனிவர் காப்பாத்தி அவரை வைக்கப்போரில் விழவைக்கவும், பஜனைகோஷ்டி ஓடிவந்து பார்க்கவும், முனிவர் அருளால் வெட்டுண்ட கால்கள் பறந்துவந்து ஒட்டிக்கவும் சரியா இருக்கு.


அன்னையும் தந்தையுமே கண்கண்டதெய்வமுன்னு மனம் திருந்தி அவுங்களுக்கு 'சேவை' செஞ்சுக்கிட்டு காட்டுலே இருக்கார்.ஒரு நாள் காட்டுலே நடந்துபோகும்போது, லக்ஷ்மியைப் பாக்கறார். 'எப்படி என்னை விட்டுப் போகப்போச்சுன்னு அவுங்க கேக்க, பெற்றோர்களுடன் இப்படி இருப்பதே ஆனந்தமுன்னு இவர் சொல்ல, அவுங்க கோச்சுக்கிட்டு தன்னுடைய அப்பா வீட்டுக்குப் போறாங்க. அங்கே ரெண்டு நாளா சாப்பாடு இல்லாம நடந்துவந்த மகளுக்கு, 'கல் & புல்' வியாக்கியானம் சொல்லி, 'புருஷனோடு வந்தாத்தான் இங்கே சோறு'ன்னு அவுங்க அப்பா விரட்டிடுறார்.


கிராம அதிகாரியப் பத்தி, ரம்பாவின் கூட்டத்துலே ஒருத்தர் அரசனிடம் போட்டுக்கொடுக்க, ரம்பாவிடமிருந்து எல்லா சொத்துக்களையும் பிடுங்கித் திரும்ப ஹரிக்கே கொடுக்கச் சொல்லி தீர்ப்பு சொல்றார் அரசர்.திருந்தி வாழ ஒரு வாய்ப்புன்னு ரம்பாவை ஜெயிலில் போடாம( கிராம அதிகாரிக்குச் சிறை) விட்டுடறாங்க. அவுங்களும் பாட்டுப் பாடிக்கிட்டே திருந்தி,அப்பா அம்மாவுக்கு சேவை செய்யும் ஹரியின் காலில் 'முகத்தை மறைச்சுக்கிட்டு' விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கறாங்க.


'மனம் திருந்தி' காட்டுலே ஹரியைத் தேடிவந்த லக்ஷ்மி, குடிலில் அப்பா காலை அமுக்கிக்கிட்டே பாட்டுப்பாடும் ஹரியைக் கண்டுபிடிச்சுடறார்( அதான் ஏழரைகட்டையிலே காடே அதிரும்படி பாடறாரே. ஆனா நல்ல பாட்டு.கிருஷ்ணா முகுந்தா முராரே)மருமகளைப் பார்த்து மாமியாருக்கு சந்தோஷம். ஹரி & குடும்பத்துக்கு ஸ்ரீ கிருஷ்ணர் தரிசனம்( அவர்தான் முனிவரா வந்து ஹரியை சோதிச்சாராம்).கிருஷ்ணருடன், கடவுளைவிடப் பெற்றோரே முக்கியமுன்னு ஹரிவாதம் செய்யறார்.


முடிவு: மஹாவிஷ்ணு ப்ரத்யக்ஷம்.

டி.ஏ. மதுரம் இளமையா, அழகா இருக்காங்க. என்.எஸ். கிருஷ்ணன் நகைச்சுவை. ரெண்டு பேருக்கும் சில பாட்டுக்கள் சொந்தக்குரலில். ரம்பாவா வந்த டி.ஆர். ராஜகுமாரி ( எனக்கு என்னவோ நம்ம நடிகை சிநேகாவைப் பார்த்தவுடன் இவுங்க ஞாபகம் வந்துருது. எதோ ஒரு உருவ ஒற்றுமை இருக்கறது போலவே எப்போதும் ஒரு தோணல்) அலட்டல் இல்லாத நடிப்பு. பழி வாங்குவதையும் ஒரு ரசனையுடனே செய்யராங்க. பொதுவா, கோபம் வந்தால் புருவம் நெரிஞ்சு முகம் விகாரமாகும் இல்லையா? அப்படியில்லாம அலட்சியமா, உதட்டோரம் ஒரு சிரிப்புலேயே கோபம், அலட்சியம் எல்லாம் கோடி காட்டிடுறாங்க. 'ம்' ன்னு சொல்லித் தலையை ஆட்டுறதே ஒரு அழகு. 110 வாரம் படம் ஓ(ட்)டுனதே ஒரு வேளை இவுங்களுக்காத்தானோ? 'நின் மதிவதனமும் நீள் விழியும் கண்டு..'

ரம்பா..........

ஸ்வாமி.......

மன்மத லீலையை வென்றார் உண்டோ?

லக்ஷ்மியா வந்த வசந்த கோகிலம், வெடுக் வெடுக்குன்னு பேச்சு. யதார்த்தமான நடிப்பு. அந்தக் காலப் பெண்களுக்கு எப்படி வீட்டுலே வேலை நெட்டி முறியுதுன்னு பார்த்துத் தெரிஞ்சுக்கலாம்.


ப்ளவுஸ் பேஷன் அப்ப 'பஃப் வச்ச ஸ்லீவ்.' :-)))))))))


சுபம்.

Friday, November 17, 2006

பயணம் போறிங்களா?

போயிட்டுவந்து 'அளக்கறது' அவுங்கவுங்க இஷ்டம். நான் சொல்லவந்தது என்னன்னா....? முன்னேற்பாடு. அது தெரியாதாங்காட்டியும்? எந்த ஊருக்கு/நாட்டுக்குன்னு முடிவுசெய்யணும், அந்த ஊர் நிலவரம் தெரிஞ்சுக்க எதாவது புத்தகம் கிடைச்சா( லைப்ரரிபின்னே என்னாத்துக்கு இருக்கு?) ரெண்டு மாசத்துக்கு அதைக் காவிக்கிட்டு வந்துரணும்.ஒரு மாசம்தான் வச்சுக்க முடியுமா? கவலை இல்லை. வீட்டுலே இருக்க மத்தவங்க பேருலேதிரும்பக் கொண்டு வந்துருங்க. முக்கியமா அந்த இடங்களிலே யாராவது வலைப்பதிவர்கள்இருக்காங்களான்னு பார்த்துக்குங்க. இவ்வளவு தூரம் போறது போறீங்க, அப்படியே ஒருமாநாட்டை நடத்திறலாமுல்லே?:-)அதுக்கப்புறம் ட்ராவல் ஏஜண்டைப் பார்த்தமா, பட்ஜெட் போட்டமா, கிளம்புனமான்னு இருப்பீங்க.பாஸ்போர்ட், டிக்கெட், க்ரெடிட் கார்டு, ட்ரவலர்ஸ் செக், கொஞ்சம் காசு. எல்லாம் எடுத்து வச்சாச்சு.வீட்டுலே கூட்டுக்குடும்பம்( இந்தக் காலத்துலேயா? அட!) இருந்தாக் கவலையே இல்லை. கால்லேசெருப்பை மாட்டுனமா, பொட்டியைத் தூக்குனமான்னு போய்க்கிட்டே இருக்கலாம். அப்படி இல்லாம..தனிக்குடித்தனமா? ப்ளேன்லே ஏறி உக்காந்தபிறகு 'அடடா... கேஸ் சிலிண்டரை மூடுனமா? அடுக்களைப் பக்கம் ஜன்னல் திறந்தேனே, திருப்பி மூடுனேனா? .............' இப்படி எதாவது ஒண்ணு மண்டையைக் குடைஞ்சுரும்.இப்படித்தான் ஒரு சமயம் 44 மைலுக்கு அந்தப்பக்கம் இருக்கற ஒரு இடத்துக்கு அவசரமாப் போகவேண்டியதாப் போச்சு.கடையை மூடுறதுக்குள்ளே போய் ,'தமிழ்ப்படம் கேஸட்' வாங்கிக்கிட்டு வரணும்.பாலைக் காய்ச்சிவச்சுட்டுப் போயிரலாம்னு மில்க் குக்கரை அடுப்புலே ஏத்திட்டு, குழந்தையை ரெடிசெஞ்சு வண்டியிலே உக்காரவச்சுட்டு, அப்படியே கிளம்பியாச்சு. படத்தைக் கையிலே வாங்கிக்கிட்டு,மறுபடி வண்டியிலே ஏறும்போதுதான் ஞாபகம் வருது 'ஸ்டவ்வை அணைச்சேனா'ன்னு! அதுவரைக்கும்'சினிமா மோகம்' புடிச்சு ஆட்டிக்கிட்டு இருந்துருக்கு. இவர்கிட்டே சொன்னதும், அடிச்சுவிரட்டிக்கிட்டு வண்டியை ஓட்டுனார்.'வீடு பத்தி எரிஞ்சுக்கிட்டு இருக்குமோ? வாடகை வீடாச்சே.... ஓனர் என்ன சொல்வார்? எல்லா சாமானும் எரிஞ்சுபோயிருக்குமே(-: நம்ம பாஸ்போர்ட் போயிருச்சுன்னா என்னா செய்யறது? எல்லா சாமான்களிலேடிவியும் அடக்கமாச்சே? அதுவும் போயிருந்தா?பின்ன எதுலே படம் பார்க்கறது? பால் குக்கர் புதுசாச்சே? 'கடவுளே, ஆபத்து இல்லாமக் காப்பாத்திரு. பால்குக்கர் காசை உனக்குத் தரேன்'னு நடுவிலே பேரம் வேற.வீடு இருக்கும் தெருவுக்குள் திரும்பும்போது மனசு 'திக்திக்'ன்னு இருக்கு. கூட்டமா ஜனங்கள் இருக்குமோ?


அப்படி ஒண்ணும் இல்லையே! எல்லாம் வழக்கம் போல இருக்கு. வண்டியைப் பார்த்ததும் நம்ம நாய்கள் மட்டும் தூக்கத்துலே இருந்து எழுந்து ஓடிவருதுங்க.ஒரு பயத்தோட கதவைத் திறக்குறோம். லைட் சுவிச்சைப் போடாதீங்கன்னு சொல்(கத்த)றேன். எங்கெங்கோ எப்பெப்பவோ படிச்ச 'விபத்தைத் தவிர்க்க' குறிப்புகள் எல்லாம் கரெக்ட்டா ஞாபகம் வருது. முதல்லே எல்லா கதவு, ஜன்னல்களையும் திறந்து வச்சாச்சு. 'மோப்பம்' புடிச்சா 'கேஸ்' வாசனையைக் காணோம். டார்ச் அடிச்சுப் பார்த்தா, அடுப்புலே பர்னர்நாப் ஆன்லேதான் இருக்கு. பால்குக்கர் மூடியைத் திறந்தா உள்ளெ அசங்காம இருக்கு பால்.
கடவுளின் கருணையே கருணைன்னு நினைச்சுக்கிட்டு, இன்னும் அரைமணி நேரம் போனதும் தமிழ்ப்படம் பார்க்க ஆரம்பிச்சுட்டோம்.( அப்படி ஒரு வெறி! அதான் தமிழ்ப் படங்கள் கிடைக்காம காய்ஞ்சு இருந்தமே!)ஒரு மூணு மணிநேரப் பயணத்துலேயே இந்தக் கூத்து!எல்லாம் ஒரு கவனக்குறைவுன்னாலும் இந்த ஞாபகமறதி வந்து 'கப்'னு ஆளைக் கவுத்துருதே.


அதுக்கப்புறமாவது தேறினோமான்னு பார்த்தா..... ஊஹூம்.இல்லையே, எல்லாம் தேறாத கேஸ்(-:


பார்த்துப்பார்த்துச் செஞ்சாலும், 'வீட்டுலே போடற செருப்பை எடுத்துக்கலை. சீப்பை ட்ரெஸ்ஸிங் டேபிளில் வச்சுட்டு எடுக்க மறந்துட்டேன், கம்மலைக் கைப்பையிலே வச்சுக்கலாமுன்னு எடுத்துத் தனியா வச்சுட்டு...இப்ப..?
வெளிநாடுன்னு இல்லே, உள்நாட்டுலேயே ஒரு நாலுநாள் எங்கியாவது போய்வரணுமுன்னாலும் இப்படிஎடுக்க மறந்து போனது, செய்ய மறந்து போனதுன்னு ஏராளம். பயணத்துக்கு மூணு( மறதி) நிச்சயம்!என்ன செய்யலாமுன்னு யோசிச்சுப் பார்த்தப்ப 'ஒரு செக் லிஸ்ட்' போட்டுக்கலாமுன்னு தோணுச்சு.என்னோட லிஸ்ட்டைப் பாருங்க. பயணத்தோட நீளத்தை அனுசரிச்சு இதுலே ஒண்ணுரெண்டு மாற்றம் வரலாம்.


கிளம்பறதுக்கு சிலநாட்கள் இருக்கும்போதே செய்ய வேண்டியது.
வீட்டுத் தோட்டத்துக்கு, வாரத்துலே சிலநாளாவது தண்ணீர் ஊத்த ஏற்பாடு செஞ்சுரணும். புல்வெளி காய்ஞ்சு போச்சுன்னா,அப்புறம் ரொம்ப பேஜார். நெருங்கிய நண்பரை உதவி கேக்கலாம். அவர் ஊருக்குப் போகும்போது, இதே கைமாறு நாமும் செஞ்சுறணும் ஆமா.


வீட்டுக்குள்ளே இருக்கற செடிகளுக்கும் தண்ணீர் வேணுமே. அதே நண்பரைக் கேட்டுக்கலாம் உதவிக்கு. ஆனா அவர்மறக்காம வீட்டுக்குள்ளே வந்து அலாரம் ஆஃப் செஞ்சு, திரும்பப்போகும் போது மறக்காம ஆன் செஞ்சுட்டுப் போகணும்.'கோட் எண்' எல்லாம் கொடுத்தாப் பரவாயில்லை. வந்து வேற 'கோட்' மாத்திக்கலாம். ஆனா இதெல்லாம் 'த்ரீ மச்'ன்னுதோணுச்சுன்னா, வெளியே கொஞ்சம் நிழல் & காத்து ரொம்ப வீசாத பாகமாப் பார்த்து எல்லா இண்டோர் செடிகளையும்(கிருஷ்ணார்ப்பணம்னு)வச்சுட்டு, வெளியே தோட்டத்துக்குத் தண்ணீர் விடும்போது இதுகளுக்கும் கொஞ்சம் ஊத்தச் சொல்லலாம்.அப்புறம் மெயில் பாக்ஸ். முதல்லே 'NO Junk Mails/ No Circulars ஸ்டிக்கர் வாங்கி மெயில் பாக்ஸ்லே ஒட்டிறணும்.( அதுலேதான் எல்லா விளம்பரமும் சேலும் வருது. வாங்கலேன்னாலும் நாட்டு நடப்பு தெரியணுமே)

இப்ப நம்ம தபால்பெட்டியிலே வர்ற உண்மையான கடிதங்கள் ( முக்காவாசி பில்லுங்கதான்) கொஞ்சமா இருக்கும்.அக்கம்பக்க வீட்டுக்காரங்க நண்பர்களா இருந்தா அவுங்ககிட்டே சொல்லி எடுத்து வைக்கச் சொல்லலாம். இல்லையா தோட்டத்துக்குத் தண்ணீர் ஊத்தவரும் நண்பர்கிட்டே சொல்லலாம். ஆனா கட்டாயமா யாராவது 'க்ளியர் செய்யணும்' இது ரொம்ப முக்கியம். ஓவர்ஃப்ளோ ஆற மெயில் பாக்ஸ், திருடர்களை விருந்து வச்சு அழைக்குமாம்.


அலாரம் கம்பெனிக்கு நாம இருக்கமாட்டோமுன்ற விஷயத்தைச் சொல்லணும். அவசரமா தொடர்பு கொள்ள நம்பிக்கையான நண்பர் தொலைபேசி எண் தரணும். மேற்படி நண்பருக்கும் சொல்லிரணும்.
நாம இல்லாத நேரத்துலே வரப்போற மின்சாரம், போன் பில்களுக்கு முன்னாடியே ஒரு தோராயமான தொகையை செக் அனுப்பிரலாம். பாங்க் மூலம் ஆட்டோமாடிக் பேமெண்ட்ன்னு இருந்தாத் தொல்லை இல்லை.( இங்கே எங்களுக்குக் குறிப்பிட்ட கடைசிநாளுக்கு முன்னாலே மின்சார பில் அனுப்புனா 10% கழிவு உண்டு)


அங்கங்கே வெவ்வேற அறைகளில் வெவ்வேற நேரத்துலே விளக்கு எரிஞ்சு அணையும்படி டைமர் பொருத்தணும்.( அது சரியான நேரத்துலே வருதான்னு முதல்நாளே பரிசோதிக்கணும்.இல்லேன்னா போட்டு என்ன பயன்?)இது திருடரை ஏமாத்தவாம்:-))))பயணம் நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்டதுன்னா ஃப்ரிஜ்ஜைக் காலி செஞ்சு துடைச்சுட்டு, கதவை கொஞ்சம் இடைவெளிவிட்டு மூடி வைக்கணும். ஃப்ரீஸர் கதவு நல்லா அழுத்தி மூடி இருக்கான்னு பார்த்துக்குங்க.
வீட்டுலே இருக்கும் ச்செல்லப் பிராணிகளுக்கு என்ன ஏற்பாடு செஞ்சு இருக்கீங்களோ அதை இன்னிக்கு முடிச்சுறணும். அதுங்க ஹாஸ்டல் போறதா இருந்தா, முதல் நாளே கொண்டுபோய் விடணும்.


போற இடத்துக்குத் தகுந்தாப்புலே ப்ளக் அடாப்டர், கேமெரா சார்ஜர், செல்போன் சார்ஜர் எல்லாம் எடுத்து மறக்காமப் பையிலே வச்சுக்குங்க. கண்ணாடி போடுற ஆளுங்கன்னா ஒரு ஸ்பேர் கண்ணாடி இருக்கணும்.கிளம்புற நாள் செய்யவேண்டியது:


டாய்லெட்ரி எல்லாம் இருக்கான்னு பாருங்க.பல் விளக்கற ப்ரஷ்& பேஸ்ட் முக்கியமா வேணும்.மத்த அலங்காரப்பொருள் அவுங்கவுங்க தேவைக்கு.

கதவு ஜன்னல் எல்லாம் சரியா மூடி இருக்கான்னு பார்க்கணும்.

வேண்டாத மின்சார உபகரணம், மைக்ரோவேவ் & டிவி சுவிட்சுகளை அணைக்கணும். கம்ப்யூட்டரை மறந்துறாதீங்க:-)

கேஸ் அடுப்பு & சிலிண்டர் கனெக்ஷனை மூடணும்.

வீட்டுக்குள்ளே இருக்கும் வாட்டர் ஃபவுண்டனை நிறுத்திறணும்.

எல்லா லைட்களும் அணைச்சாச்சான்னு பார்க்கணும். குறிப்பாப் பூஜை அறை எண்ணெய் விளக்குகளை அமர்த்தணும். மறந்துபோய் மெயின் சுவிட்சை அணைச்சுறாதீங்க. அப்புறம் அலாரம் வேலை செய்யாது(-:


வீட்டுக்குள்ளே எல்லாக் குழாய்களும் சரியாப் பூட்டி இருக்கான்னு பார்த்துக்குங்க. சிங்குகளில் அடைப்பு( ப்ளக்) போடவேணாம். தண்ணீர் சொட்ட ஆரம்பிச்சா அப்புறம் வெளியே வழிஞ்சு.......


கதவைப் பூட்டறதுக்கு முன்னாலெ,


செக் லிஸ்ட்டை எடுத்து ஒரு பார்வை பாருங்க. எல்லாத்துக்கும் செஞ்சு முடிச்ச கையோட ஒரு 'டிக்' பண்ணிக்கிட்டே வந்துருப்பீங்கதானே? எது டிக் இல்லாம இருக்கோ அதை இன்னொருதடவை சோதிச்சுப் பாருங்க.
ரொம்ப முக்கியமான குறிப்பு. செக் லிஸ்டை எழுதுன கையோடு அது தொலைஞ்சுராமப் பார்த்துக்கணும். இப்ப எல்லாம் யாரு கையாலே உக்காந்து எழுதிக்க்ட்டு இருக்காங்க.?இதுலே சொல்லி இருக்கும் பல விஷயங்கள் எப்ப ஊருக்குப் போனாலும் நிரந்தரமாக் கவனிக்க வேண்டியதுதானே?பேசாம கம்ப்யூட்டர்லே சேமிச்சு வச்சுட்டு ஒரு ப்ரிண்ட் எடுத்துக்கிட்டாப் போச்சு.ஃப்ரிஜ் கதவுலே ஒட்டீ வச்சுருங்க.


எதாவது விட்டுப்போயிருந்தா அனுபவஸ்த்தர்கள் சொல்லுங்க. துணிமணிகளைப் பத்தி இங்கே சொல்லலை.இது கட்டாயம் எடுத்து வச்சுக்குவோம் தானே? தேவைக்கு மேலே சில உள்ளாடைகள் மட்டும் எக்ஸ்ட்ராவா எடுத்துக்குங்களேன், இருந்தா ஊசிப்போகாது.


ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா....... களைப்பா வருதே.இவ்வளவு வேலை இருக்கா, எங்கியாவது போகணுமுன்னா? பேசாம காசு மிச்சம்னு எங்கியும் போகாம இருந்துறலாமான்னு இருக்குல்லே?


இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா? கதவை நல்லா இழுத்துப் பூட்டியாச்சான்னு ஒருதடவைப்பூட்டை இழுத்துப் பார்த்துட்டுக் கிளம்புங்க.


எஞ்சாய் யுவர் ஹாலிடேஸ்!!!!


( ஆமாம், கைத்தொலை பேசி எடுத்துக்கிட்டீங்களா? )


பயணக்கட்டுரை எழுதும் 'ஸ்பெஷலிஸ்ட்' பயணக்குறிப்பு எழுதுனது நியாயம்தானே?

Thursday, November 16, 2006

வோ பந்த்ரா யா பீஸ் மினிட்ஸ்


'நான் சம்பளத்தை அப்படியே கொண்டு வந்து உன் கையிலே கொடுத்துடறேன். எனக்குவேண்டியது ரெண்டு நேரக் காப்பி, ரெண்டு வேளை சோறு. அப்புறம் ராத்திரி தூங்கறதுக்குமுன்னாலே ஒரு அரைமணி நேரம் என் கூடப் பேசிக்கிட்டு இருக்கணும். இதுதாம்மா என் தேவை'ன்னு சொல்வார்.


ரொம்பப் பழைய படம். விசுவோடது. ( டெளரி கல்யாணம்?) மனைவியா நம்ம ஸ்ரீவித்யா வருவாங்க.(என்ன அழகான கண்ணு அவுங்களுக்கு. பாவம்... இவ்வளோ சீக்கிரமா அவுங்களுக்கு முடிவு வந்துருச்சு பாருங்க. ஹூம்...)


திடீர்னு எனக்கு இந்த விஷயம் ஞாபகம் வந்தது ஒரு பூஜைக்கு நடுவிலே!
ஒரு 'அன்னக்கூட்' விழா நடந்துச்சு. நம்மையும் கூப்புட்டு இருந்தாங்க.இது தீபாவளிக்குமறுநாள். வடக்கத்திக்காரங்களுக்கு இது புதுவருஷ ஆரம்பம். குஜராத்திகளுக்கும் வருசப்பிறப்புதான்.


நமக்கு முடிஞ்ச எதாவது ஒரு பலகாரத்தைச் செஞ்சு கொண்டு போகலாம். அங்கே ஸ்வாமி நாராயண் விக்கிரகம் வச்சு பூஜை நடக்கும். எல்லாரும் கொண்டு வரும் பிரசாதங்கள் கடைசியில் விநியோகம்செஞ்சுருவாங்கன்னு சொன்னாங்க.


நாலைஞ்சு அடுக்களா பிரசாதங்கள் வச்சிருந்தாங்க. நண்பர் ஒருத்தர் பக்தியோட பஜனைப்பாடல்கள்பாடிக்கிட்டு இருந்தார். அதுக்கப்புறம் இந்த விழாவை ஏற்பாடு செஞ்ச ஆன்மீக சங்கத்தின் தலைவர் எல்லாரையும் வரவேற்று நன்றி சொல்லி, புதுவருஷ வாழ்த்துகளையும் சொன்னார். விசேஷ விருந்தினரா வந்த ஒருத்தரின் அருமையா ஒரு சொற்பொழிவுதான் எனக்கு விசுவை ஞாபகப்படுத்திருச்சு. முழுக்க முழுக்ககுஜராத்தி மொழியிலேதான் பேசுனார். (ஆனாலும் ஒரு வார்த்தை விடாம எல்லாமெ புரிஞ்சுருச்சேங்க). இவர்'நாஸா'லே சயிண்டிஸ்ட் வேலை செஞ்சு இப்ப வேலையில் இருந்து ஓய்வு பெற்றவர். வயசும் ஒரு 65 இருக்கும்.இந்த ஸ்வாமி நாராயண் குழுவிலே சேர்ந்து, அவுங்க வெவ்வேற நாடுகளிலே நடத்துற வகுப்புகள்/சேவைகளுக்கு உதவி செஞ்சுக்கிட்டு இருக்காராம்."தீபாவளி சமயம், ( நரக சதுர்த்திக்கு முந்தினநாள்) 'தந்தேரஸ்' அன்னிக்கு எல்லாரும் மகாலக்ஷ்மியைப்பூஜிக்கிறோம். தன் தேரஸ்( Dhan- தனம்- செல்வம்)ன்னு வேண்டறோம். உண்மையிலே இது தனம் வேண்டிச் செய்யும் பூஜை இல்லை. நம்ம கிட்டே இருக்கும் காசு பணத்தில் கொஞ்சத்தை எடுத்து, நம்மைவிட ஏழ்மையில் இருக்கும் மக்களுக்கு 'தானம்' செய்யவேண்டியது நம்ம ஒவ்வொருவருடைய கடமை. இந்த 'தான்' எப்படியோ இப்ப 'தன்'னாகிப் போச்சு. மக்களும் விடாம சாமிகிட்டே எனக்கு இதைக்கொடு, அதைக்கொடுன்னு பேரம் பேசிக்கிட்டே இருக்கோம்."( ஒரு வேளை சாமிக்கு மட்டுமே இது 'தான்' , நமக்குக் கொடுக்கற நாளோ?)தீபாராதனை முடிஞ்சதும் சாப்பாடு. எனக்குத் தெரிஞ்சவரை பொதுவா குஜராத்திகள் விசேஷங்களிலே சாப்பாட்டுக்குமுன்னுரிமை குழந்தைகளுக்கும் பெண்களுக்கும்தான். ஆம்புளைங்க எல்லாம் 'தண்ணி'யிலே லேசா நீச்சல் போடும் வழக்கம் இருக்கே. அந்தக் கச்சேரி முடிஞ்சுதான் இதுக்கு வருவாங்க. இங்கே (மேற்படி விஷயம் இல்லாததாலேயோ?)ஆண்களுக்கு முன்னுரிமையாம். ஸ்வாமிநாரயண் சத்சங்க மண்டலியில் இதுதான் 'நியமம்'."எல்லாத்தையும் படைச்சுட்டு, அதை ஏழைபாழைகளுக்குத் தானே கொடுக்கணும். இங்கெ என்ன நம்ம மக்களே சாப்புட்டுடறோம்?"இது எங்க இவரோட விசாரம். " இங்கெல்லாம் நாம்தான் ஏழைங்க லிஸ்ட்டுலே இருக்கோம்" -நான்.45 நாடுகளிலே ( அதானே... குஜராத்திகள் இல்லாத நாடும் உண்டோ? ஒரு விதத்தில் இவுங்க நம்ம கேரள அன்பர்கள்போலத்தான். இல்லையா? )இந்த சத்சங்கம் நடக்குதாம். குறைஞ்சபட்சம் இந்தியாவுலே படையல்களை அன்னதானம் செய்வாங்கன்னு நினைக்கிறேன்.லண்டனில் ஒரு பெரிய பிரமாண்டமான கோவிலைக் கட்டி, அது 2000 வருஷ கின்னஸ் புத்தகத்துலேயும் வந்துருக்கு.இந்தியாவுலே அக்ஷர்தாம் கோவில்கூட இவுங்க கட்டுனதுதானாம். இங்கெ நியூஸி, ஆக்லாந்து நகரிலேயும் ஒரு அழகான கோயிலைக் கட்டி இருக்காங்க. தூண் முதக்கொண்டு இந்தியாவுலெயே செஞ்சு கொண்டு வந்து இங்கெ பொருத்தி இருக்காங்க. உள்ளே எல்லா குஜராத் கோயில்களைப் போலவே பளிங்குச்சிலைகள். (கற்சிலைகளிலெ கடவுள் நம்ம தென்னிந்தியாலே மட்டுமோ? இல்லேன்னா, நவநாகரிக காலமாச்சேன்னு மார்பிள் சிலைகளா? ) ராதாகிருஷ்ணா சிலைகளில் நம்ம ராதாவுக்கு ஒரு சம்கி வேலைப்பாடுகள் நிறைஞ்ச ஷிபான்புடவை கட்டி, கையிலெ ஒரு 'ஹேண்ட் பேக்'கும் கொடுத்துருந்தாங்க. சில வருசங்களுக்கு முன்னே ஒரு தடவை'கோயில் சிக்' ஆகி, ஒரு நாள் காலையிலே முதல் ப்ளைட் புடிச்சு ஆக்லாந்து போய், அங்கே 7 கோயில்களுக்குப் போயிட்டுக் கடைசி ப்ளைட்லே திரும்புனோம். இன்னும் ரெண்டு கோயில்கள் விட்டுப்போச்சு. இன்னொரு 'சிக்' வரும்போது போகலாம்."இந்த அவசர உலகத்துலே உண்மையான தேவை என்னன்னா, ஒருத்தரோடு ஒருத்தருக்குள்ள கம்யூனிகேஷன்.இதுலேயும் நண்பர்கள், கூட வேலை செய்யும் ஆட்கள்ன்னு மத்தவங்களோடு பேச நேரம் இருக்கும்.ஆனா குடும்பத்துலே இருக்கறவங்களோட பேச மட்டும் பலருக்கு நேரமே கிடைக்காது.


வீட்டுலே இருக்கறவங்களோடு தினம் ஒரு 15 இல்லே 20 நிமிஷம் பேசுங்க.
A small change in the attitude will make a big difference"


அவர் சொன்னதை யோசிச்சுக்கிட்டெ இருந்தேன்.


குடும்பத்துலே சந்தோஷம் நிம்மதி இருந்தாத்தான் இப்படி தானம் கொடுக்க மனசு வரும். தானம்னு சொல்றதே மனம் கோணாம, 'அய்யோ இப்படிக் காசெல்லாம் கரையுதே'ன்ற புலம்பல் இல்லாம சந்தோஷமாக் கொடுக்கறதுதான்.இந்த குடும்ப நிம்மதி எப்படி வரும்? குடும்பத்துலே பெண்களுக்கு சம அந்தஸ்த்தும், உரிமையும் கொடுக்கறதாலே வரும்.இரண்டு மாடுகளைப் பூட்டிய வண்டி எப்படிக் கஷ்டம் இல்லாம சுமைகளை இழுத்துட்டுப் போகுதோ அதே போல கணவன் மனைவி இருவரும் குடும்ப பாரத்தை சரிசமமாப் பகிர்ந்து இல்லறத்தை நடத்தணுமுன்னு ச்சும்மாச் சும்மா கல்யாண வீட்டு மேடைகளில் மட்டும் முழங்குனா ஆச்சா?நம்மளில் எத்தனைபேர் பிள்ளைகுட்டிகள், பெற்றோர்கள், தாத்தாபாட்டிகள், நம்முடைய மறுபாதின்னு கூடவே இருக்கும் சொந்தங்களோடு தினம் கொஞ்சநேரம் உக்காந்து பேசி இருக்கோம்? இதுக்குக் காசும்பணமா செலவு?( பேச ஆரம்பிச்சாலே, சிலர் அதுவேணும், இதுவேணுமுன்னு கேட்டு செலவு வச்சுருவாங்களோ)பேசணுமுன்னு உக்காந்ததும், அறிவுரை சொல்ல ஆரம்பிச்சுராதீங்க.( புள்ளைங்க ஒட்டாது). பொதுப்படையாப் பேசுங்க.


வயசான முதியோர் வீட்டுலே இருந்தாங்கன்னா, இந்த பதினைஞ்சு நிமிஷப்பேச்சு எவ்வளவு அன்பை வளர்க்குமுன்னு சோதனை செஞ்சு பார்க்கலாமே. இவுங்ககிட்டே பேச என்ன இருக்குன்னு தப்புக் கணக்குப் போட்டுறாதீங்க. நிறையப் பெற்றோருக்கு, இந்த மாதிரிப் புள்ளைங்க வந்து பேசறதுலே கிடைக்கற ஆனந்தம் சொல்லி மாளாதாம்.துணையோடு பேசும்போதும் அன்னிக்கு நடந்த நிகழ்வுகள், நாள் எப்படின்னு, ச்சின்னச்சின்ன பாராட்டுகள்னு( ஆனாஇது உண்மையானதா இருக்கணும். ச்சும்மா ஆஊன்னு அளக்கக்கூடாது) பேசிப்பாருங்க. நம்ம உண்மையா முயன்றால் நாம் எடுக்கும் ஒரு சின்ன முயற்சியே எவ்வளவோ மாற்றத்தைக் கொண்டு வரும்.இதைத்தானேங்க, 'முயன்றால் முடியாதது இல்லை'ன்னு சொல்லி வச்சுருக்கு?ச்சலோ, ஆஜ்ஸே பந்த்ரா யா பீஸ் மினிட், மன் கோல்கி பாத் கரூங்கா:-)))
---------------


எனக்குப் பேசலேன்னா 'பைத்தியமே' புடிச்சுரும். நல்லவேளையா இப்ப ப்ளொக் இருக்கு பேச:-))))


இந்தப் படம் அன்னிக்குப் பூஜையிலே எடுத்தது. முதல் படம் அழைப்பிதழ்

Wednesday, November 15, 2006

Plane-ல் வந்த Train

ஒரு ஊர்லெ ஒரு மருந்துகளை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர் இருக்கார்.அவர் வேற ஊர்லே ஒரு கான்ஃப்ரன்ஸ்லே கலந்துக்கிட்டு தன்னுடைய ஊர் (Rome)ரோமுக்கு திரும்பும்போது லேட்டா வந்து ப்ளேனைக் கோட்டை விட்டுட்டார். வேற வழி இல்லாம ரயிலில் போகும்படியாஆச்சு. நிறைய நேரம் போகணுமே, மனுஷ மனசு ஒண்ணையும் நினைக்காம ச்சும்மா இருக்குமோ?


என்னென்னவோ நினைப்பு. அவரோட பசங்க, பேரன் பேத்தி, இறந்துபோன மனைவி எல்லாம் வந்துபோறாங்க. கூடவே இப்ப அவரோடு வேலை செய்யும் ஒரு பெண்மணியும். அந்தம்மா மேலெ இவருக்கு ஒரு ஈர்ப்பு. அதை அவுங்ககிட்டே சொல்ல ஒரு தயக்கம். எப்படியாவது சொல்லணும்? ஆனா நேரில் சொல்ல திராணி இல்லை. பேசாமக் கடிதம் மூலம் சொல்லிறலாமுன்னு இருக்கு. இதுதான் சரியான சமயம். ஒரு மின்னஞ்சல் தட்டி விட்டுறலாம். மடிக்கணினியை எடுத்து மடல் தட்ட ஆரம்பிக்கிறார்.

மேடம்...... (ச்சீ.. இது என்ன அஃபிஷியல் கடிதமா? )

அன்புள்ள..... (ரொம்ப சாதாரணமா இருக்கே....)

என் பிரியமுள்ள...... (இதுவும் சுமார்தான் . ஒரே வார்த்தையிலே என் மனசைச் சொல்றமாதிரி வேணுமே...)

என் உயிரே......., ( இது ஜோர். இப்படியே இருக்கட்டும்)ஒருவழியா எதையோ போட்டு எழுத ஆரம்பிச்சாச்சு. முடிச்சப்பிறகு அதை படிச்சுப் பார்த்தா நல்லாவே இல்லை. ஒரே சொதப்பல். டிலீட் செஞ்சுட்டு இன்னொரு தடவை, இன்னொரு தடவைன்னு தட்டித்தட்டிவெளியே கொட்டிக்கிட்டு இருக்கார். ஆயாசமா இருக்கு. லேசாக் கண்ணயரலாமுன்னு தூங்குனா அதுலேயும் கனவு போல ஒண்ணு. ஒரு மெல்லிய இருட்டான அறைக்குள்ளெ ஒரு ச்சின்னப்பொண்ணு பியானோவாசிக்குது. அதோட முகம் சரியாத் தெரியலை. ஆனாலும் எங்கியோ பார்த்த உருவமா இருக்கு. இது கனவா, இல்லே நினைவான்னு தெரியாத மயக்கம்............குண்டு அம்மா ஒருத்தர். எக்ஸ் ஆர்மி ஜெனரலின் மனைவி. அவுங்களும் எதோ ராணுவ விழா நிமித்தம் ரோமுக்குப் போறாங்க அதெ ரயிலில். குண்டுன்னா குண்டு பயங்கர குண்டு. நடக்க, குனிய, கோட்மாட்டிவிடன்னு எல்லாத்துக்கும் உதவி இல்லாம முடியாதுன்ற நிலை. கூட மாட உதவியா இருக்க ஒரு 23 வயசுப்பையன் கூடவே வரான். சின்னச்சின்னக் குற்றங்கள் செஞ்சு மாட்டிக்கிட்டு, இப்ப அவனுக்கு இத்தனை மணி நேரம் கம்யூனிட்டி சர்வீஸ் செய்யணுமுன்னு தண்டனை கிடைச்சிருக்கு. அந்த வகையிலெதான் இவன் இந்த குண்டம்மா கிட்டே வந்து சேர்ந்துருக்கான். அம்மாவோ ஒரு நிமிஷம் அவனை உக்கார விடாது.தண்ணி கொண்டு வா, காபி வாங்கிட்டுவா,அந்தப் பெட்டியை திறந்து இதைக் கொடு, அதைக்கொடுன்னு ஓயாததொணத் தொணப்பு.அம்மா கொஞ்சம் அடாவடிதான். வேற யாருக்கோ ரிஸர்வ் செஞ்ச பெட்டியிலே முதல் வகுப்புலெ வந்து உக்கந்துக்கிட்டு அதிகாரம் செய்யறாங்க. அந்த இடம் பதிவு செஞ்சவங்க வந்து சொன்னாலும் கேக்கற ஆள் இல்லை அம்மா. எல்லாரையும் ஒரே விரட்டு. டிக்கெட்டுப் பரிசோதகர் வந்து பார்த்துக் கெஞ்சிக்கேட்டும் அம்மா மசியலை. கடைசியில் ஆள் இல்லாம இருக்கற ஒரு கூப்பெ-லே அம்மாவுக்கு இடம் போட்டுக் கொடுத்து சமாளிக்கிறார்.


அங்கே போயும் அம்மா, அந்தப் பையனை விரட்டிக்கிட்டு இருக்கு. அம்மா அசந்த ஒரு நேரம் பையன் வெளியே வந்து ரயிலுக்குள்ளே நடக்கறான். அப்ப அவனைச் சில பசங்க அடையாளம் கண்டுக்கறாங்க. எல்லாரும் இவனைவிடச் சின்ன வயசு. 'ஏண்ணே, இங்கே என்னா செய்யறே? ரோமுக்குத்தானெ வர்றே? ஊர்லெ உன் சிநேகிதி இன்னும் உன்னையே நினைச்சு உருகிக்கிட்டு இருக்கு'ன்னு விவரம் சொன்னாங்க. இவனுக்கு நம்பவெ முடியலை. 'இது என்னாடா....... ஊரைவிட்டு வந்து நாலைஞ்சு வருசம் ஆச்சு. இன்னுமா அந்தப் பொண்ணு நம்மையே நினைச்சுக்கிட்டு இருக்கு? இவனுங்க கதை விடுறானுங்களொ?'


"ரீல் விடாதிங்கடா.... உங்களுக்கு எப்படித் தெரியும்? அதைச் சொல்லுங்க."

"ஆமாண்ணே. இப்ப அவுங்க பல் வைத்தியரா வேலை செய்யறாங்க. நாங்க அங்கெதான் போய் 'பல்லைக் காட்டிக்கினு' இருக்கோம். நீ, நம்ம தெரு ஆளாச்சே.... எதாவது விவரம் இருக்கா உன்னப்பத்தின்னு எப்பவும் எங்களாண்டை கேக்கறதுதான்."


"மெய்யாலுமாடா மெய்யாலுமா...." அடடா.... ஏந்தான் நான் அவளை விட்டுட்டு இங்கே வந்துட்டெனோ? இப்பவேப் போய்ப் பார்க்கணுமுன்னு நெஞ்சு துடிக்குதே............. ஆஹா,, ஐடியா வந்தாச்சு. பேசாம ரோமுலே இறங்குனதும் குண்டம்மா கூடப்போகாம சைலண்ட்டா கம்பி நீட்டிறலாம்.


இன்னொரு ரயிலு பொட்டியிலே அல்பேனியாவுலே இருந்து வந்துக்கிட்டு இருக்கற ஒரு ஏழைக் குடும்பம். கைக்குழந்தையோட ஒரு அம்மா, இன்னும் மூணு பெரிய பசங்க. அதுலே ஒரு பையனுக்கு டிக்கெட் இல்லை. வித்தவுட்லெ வரான். உள்ளுக்குள்ளெ திக்திக்.அவுங்க எதுத்த வரிசையிலே மூணு இளவட்ட ஆளுங்க, எல்லாரும் ஸ்காட்லாந்துக்காரங்க. ஒரு கால்பந்து விளையாட்டைப் பார்க்க ரோமுக்குப் போய்க்கிட்டு இருக்காங்க.


உற்சாகபானத்தை ஒரேடியா ஊத்திக்கிட்டு 'கெக்கெபிக்கே'ன்னுஒருத்தரோடு ஒருத்தர் கலாட்டா செஞ்சுக்கிட்டு வராங்க. அதுலே ஒருத்தர், நம்ம வித்தவுட்டைக் கவனிக்கிறார்.சின்னவனாச்சேன்னு பேச்சுக் கொடுத்துக்கிட்டே தன்னோட, விளையாட்டைப் பார்க்கப் போற அனுமதிச்சீட்டை எடுத்துக்காமிச்சு கொஞ்சம் பெருமை அடிச்சுக்கிட்டு இருக்கார். அப்பப் பார்த்து அவரோட ரயில் டிக்கெட் கீழே வுழுந்துருது. வித்தவுட் அதைப் பார்த்துட்டு நைஸா அமுக்கிடறான்.


இன்னொரு இந்தியத் தம்பதிகள் அந்தப் பொட்டியிலே பயணம். அதெப்படி இந்தியர்கள்ன்னு தெரியும்? அதெல்லாம் ரொம்பவே சுலபம். கோட்டு ஒண்ணைப் போட்டுவுட்டு ஒரு தலைப்பாகையை வச்சாப்போச்சு. இந்தியன் ஆக்ஸெண்ட்டுன்னு ஒன்னை இவுங்களா ஏற்படுத்திருவாங்க. அவுங்களோட ஒரு பொண் குழந்தை, பத்து வயசு இருக்கும்.டிக்கெட் பரிசோதகர் ஒவ்வொரு பொட்டியாப் பார்த்துக்கிட்டு வர்றார். எல்லோரும் முன் ஜாக்கிரதையா அவுங்கவுங்க டிக்கெட்டை வெளியே எடுத்து வச்சுக்கறாங்க. அப்பத்தான் தன்னோட டிக்கெட்டைக் காணொமுன்னு தெரிஞ்சுக்கறார் கேம் பார்க்கப்போற இளைஞர். நல்லா யோசனை செஞ்சுபார்த்தப்பச் சின்னப் பையன்கிட்டே ஃபுட்பால் மேட்ச் டிக்கெட்டைக் காமிக்கிறப்ப ரயில் டிக்கெட்டும் கூடவே இருந்த நினைவு. மெதுவாப் போய் அந்தப் பையன்கிட்டே கேட்டதும், அவன்'ஆமாம், கீழே இருந்துச்சு. நான் எடுத்துக்கிட்டேன்'ன்னு உண்மையைச் சொல்லிடறான்.மூணு இளைஞர்களில் ஒரு ஆள் கொஞ்சம் முரட்டுத்தனமானவர். அவர் அந்தப் பையன்கிட்டே இருந்து டிக்கெட்டைப் பறிச்சுக்கரார். பையனோட அம்மாவுக்கு அழுகை. துக்கத்தோட கையிலே காசில்லாத நிலமையைச் சொல்றாங்க. 'இவனோடஅப்பா எவ்வளோ கஷ்டப்பட்டு, போஸ்னியாலெ இருந்து ரோமுக்கு வந்துட்டார். நாங்களும் அவரை அங்கெ சந்திக்கத்தான் போய்க்கிட்டு இருக்கோம். இப்ப மட்டும் பரிசோதகர் இவனைப் புடிச்சுட்டா , எங்களாலே பயணத்தைத் தொடர முடியாது.இறக்கி விட்டுருவாங்க. தயவு செஞ்சு அந்த டிக்கெட்டை இவனுக்குக் கொடுங்க'ன்னு கெஞ்சி அழுவறாங்க. ஒத்து ஊதறாப்பலே கைக்குழந்தையும் பசி தாங்காம ஒரே அழுகை.

தட்டுத்தடுமாறி பையைக் குடைஞ்சு பால்பாட்டிலை வெளியே எடுக்கறான் பையன்.


முரட்டு இளைஞர் மட்டும் முடியவே முடியாதுன்னு தாம்தூம்னு குதிக்கிறார். மத்தவங்க ரெண்டு பேரும் போனாப் போகுதுன்னு சொன்னாலும் இவர் மட்டும் கேக்கற வழியா இல்லை. கடைசியில் மனசு மாறி தன்னுடைய டிக்கெட்டையே அந்தப் பொடியனுக்குத் தந்துடறார்.இவ்வளவு கலாட்டாவுலே 'பேண்ட்ரி கார்'லே இருந்து வந்த ஒரு பணக்காரர் அசைஞ்சு அசைஞ்சு நடந்து போறப்ப அவரோட கை, பையன் மேலே தட்டுனதுலே பாலெல்லாம் கொட்டிருது. குழந்தைக்கோ அழுதுஅழுது மயக்கமே வந்துருச்சு. மருந்து ஆராய்ச்சியாளர் இதையெல்லாம் டைனிங் கார்லே இருந்து பார்த்துக்கிட்டே இருக்கார். கடைசியில் அவர் ஒரு க்ளாஸ் பால் அங்கே இருந்து வாங்கிவந்து குழந்தையின் அம்மாகிட்டே கொடுக்கறார்.


இதுக்குள்ளெ பரிசோதகர் வந்துட்டார். முரட்டு இளைஞரைப் போலீஸில் ஒப்படைக்கப்போறேன்னு சொல்லிடறார்.( ஃபைன் கட்டி இருக்கலாமுல்லே?அதெப்படி? இருந்த காசெல்லாம்தான் 'சரக்கு'லே போயிருச்சே) ரோம் ரெயில்வே ஸ்டேஷன் வந்து எல்லாரும் கீழே இறங்குனாங்க. குண்டுப் பெண்மணியைக் கொஞ்சமும் கண்டுக்காம, கூடவந்த 23 வயசு (இளைஞர்) பையன், தன்னுடைய பழைய தோழியைப் பார்க்க ஒரே ஓட்டமா ஓடிடறான்.


அல்பேனியாக் குடும்பத்தைக் கூட்டிக்கிட்டுப் போக உண்மையாவே அவுங்க அப்பா வந்து காத்துக்கிட்டு இருக்கார். குடும்பம் ஒண்ணு சேர்ந்துருது.


கேம் பார்க்க வந்த மூணு இளைஞர்கள் மட்டும் அங்கேயே திருதிருன்னு நின்னுக்கிட்டு இருக்காங்க. டிக்கெட் பரிசோதகர் அந்தமூணுபேரில் ஒருவரான முரட்டு இளைஞரை போலீஸில் ஒப்படைக்கறதுக்காக, அவரோட செல் ஃபோனில் போலீஸுக்கு ஃபோன் செஞ்சுக்கிட்டு இருக்கார்.அதே சமயம், இன்னொரு ரயில் பெட்டியிலிருந்து திமுதிமுன்னு ஒரு பெரிய கூட்டம், எல்லாரும் இந்த ஃபுட்பால் கேம் பார்க்கவந்த விசிறிகள். பேனர் எல்லாம் பிடிச்சுக்கிட்டு கோஷங்கள் போட்டுக்கிட்டுக் கும்பலா வெளியே போறாங்க. இதைவிட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்காதுன்னு நைஸா இந்த மூணுபேரும் கூட்டத்துலே கலந்துக்கிட்டு நழுவிடறாங்க."கதை முடிஞ்சது கத்தரிக்காய் காய்ச்சது."


"இது என்ன கதை? என்ன சொல்ல வர்றாங்க? "


'முரடனா இருக்கறவங்களுக்கும் இரக்க குணம் இருக்கு'ன்னா?


"இருக்கலாம். ஆனா இதுலே வெவ்வேறு வழியிலே அன்பைப் பத்திச் சொல்லி இருக்குன்னு நினைக்கிறேன்."


"எப்படி? எப்படி?"


"முதல்லே அந்தப் பெரியவர் கூட வேலை செய்யும் பெண்ணிடம் காதல் கொள்கிறார்."


"அப்ப காதலுக்குக் கண்ணு இல்லைன்றதுபோல வயசு வரம்பும் இல்லை. அப்படித்தானே?"


"ச்சீச்சீ.... காதலை முதல் முதல் சம்பந்தப்பட்டவங்ககிட்டே சொல்லும்போது ஒரு தயக்கம் எல்லாருக்குமே இருக்குன்ற உண்மையைச் சொல்றாங்க "


"எதுக்குத் தயங்கணும்?"


"நிராகரிப்பு பயம்தான் காரணமா இருக்கும். வேற என்ன?"


"ம்.அப்புறம்?""கம்யூனிட்டி சர்வீஸ் செய்யும் இளம் குற்றவாளி. சின்னவயசுக் காதல். அதான் பப்பி லவ்னு சொல்றோமேஅது சிலருக்கு உண்மையான காதலாவே அமைஞ்சுருது. அதைக் கண்டுக்கறதுலேதான் காலதாமதம் ஆயிருது!"


"ஓ... அதான் அந்தப் பையன் தன்னையே நினைச்சுக்கிட்டு இருக்கற தோழியைத் தேடி ஓடறான். முழு தண்டனையையும் அனுபவிக்காமப் போறான். அதுக்காக ஒருசமயம் மாட்டிக்கிட்டான்னா? பாவம், அந்தப் பொண்ணு.""கடைசியா, உலகமே தூசுன்னு கொட்டமடிச்சுக்கிட்டு வந்த 'கேம்' பார்க்கவந்த இளைஞர்கள். அக்கம்பக்கம் கவனமில்லாம மத்தவங்களை முகம் சுழிக்க வைக்கிற அளவு திமிரா நடந்துக்கிட்டு வந்த அந்த முரட்டு இளைஞனுக்கும் மனசின் ஓரத்துலே இரக்கம் ஒளிஞ்சிருக்குன்றது.""இந்தக் கணக்குலே பார்த்தா இளைய சமுதாயம் அவ்வளவு மோசமில்லை. லூட்டி எல்லாம் வயசுக்கோளாறு மட்டுமே. எதிர்காலத்துலே நல்ல மனுஷங்களாத்தான் முக்காவாசிப்பேரும் இருப்பாங்கன்ற நம்பிக்கை ஏற்படுது.அதானே சொல்ல வர்றீங்க?""கரெக்ட். சரியாச் சொன்னே."

* * * *எங்க இவர் பயணங்களில், ஒருமுறை உலக சினிமாக்கள் பகுதியிலே ஒரு இத்தாலிய மொழிப்படம்(சப் டைட்டிலோடத்தான்)பார்த்துட்டு வந்து எனக்குச் சொன்ன கதை இது. படத்தோட பேர்தான் சரியா நினைவில்லையாம்( பார்றா) ட்ரெயின் டிக்கெட்டோ என்னவோ (வாம்)?
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்லே தமிழ்ப்படமுன்னு சொன்னா, ஸ்ரீகாந்தும், விஜய்யும் நடிச்சதுதான். செலக்ஷன் கமிட்டி மேற்படி நடிகர்களின் விசிறியோ?

புதிரின் விடை

மக்களே, இந்தப் புதிருக்கு விடை கண்டு பிடிக்கறதுலே உங்க ஆர்வம் தெரிஞ்சு போச்சு. நேத்து,குழந்தைகள் தினமாச்சா? எல்லாரும் எப்படி இருக்கீங்கன்னு பார்த்தேன். இன்னும் நம்ம மனசுலெ ஒரு மூலையில் கொஞ்சம் குழந்தைத்தனம் ஒட்டிக்கிட்டு இருக்குன்னு தெரிஞ்சு போச்சு. இது உண்மைக்குமே சந்தோஷமான ஒரு விஷயம். குழந்தைப் பருவம்ன்னு சொல்றமே அது கோடி கொடுத்தாலும் நமக்குத் திரும்ப வருமா?


நன்மனம் ஆரம்பிச்சு வச்சதை சந்தனமுல்லை முடிச்சு வச்சுருக்காங்க( இந்த நிமிஷம் வரை)


உஷா சொன்னாங்க பாருங்க,' இலையைக் கிள்ளுனா பால் வருமு'ன்னு அப்ப, 'அட! இது ஒருநல்ல ஐடியாவா இருக்கே. வசதியாப்போச்சு'ன்னு நினைச்சேன்.


கண்ணபிரான் 'க்ளூ' கொடுக்கலை, ஆப்ஷன்ஸ் வேணுமுன்னு சொன்னாருல்லே? பதிவுலேயே ஒரு சின்ன 'க்ளூ' கொடுத்துருந்தேன். யாரும் கவனிக்கலை(-:


நந்தியார்வெட்டை, நார்த்தங்காய்,எலுமிச்சை, ஆரஞ்சு, பப்ளிமாஸ், மாங்காய், வாதுமைக் கன்று, குரோட்டன்ஸ் வகை, ஆலங்கன்னு, தேயிலை, முல்லை, முடக்கத்தான் கீரை, மாதுளை, நித்யகல்யாணி,கனகாம்பரம், ஆப்பிள், வால்நட், ஆலிவ். இன்சுலின் ப்ளாண்ட், அவகாடோ, பலா, ஆலமரம், தேக்கு,பாக்கு, சீதாபழம், சப்போட்டா,காபி, செண்பகம், மிளகு, இருவாட்சி/கருவாட்சி, மல்லிகைன்னு பதில் சொல்லி இருக்கீங்க.


நல்லவேளை தென்னைன்னு சொன்னவுங்க யாரும் வாழைன்னு சொல்லலை:-))))


நம்ம ஹரிஹரன் கொஞ்சம் போல பக்கத்துலே வந்த மாதிரி இருந்துச்சு. அவர் கட்டாயம் கண்டு புடிச்சுருவாருன்னு நம்புனேன். ஊஹூம்.....


சந்தனமுல்லை, அவுங்க பாட்டுக்கு சகட்டுமேனிக்கு அதையும் இதையும் சொல்லப்போய்,அதுலெ ஒரு சரியான விடை வந்து பொருந்திக்கிச்சு!


நம்ம யோகனும், 'ஒரு வேளை சந்தனமுல்லை சொன்னதுபோல .....அதா இருக்கலாமோ'ன்னு வேற கேட்டுட்டார்.இந்த 'சந்தனமுல்லை சொன்னதுபோல'ன்ற வார்த்தைகளைச் சேர்க்காம இருந்துருந்தா, அவருக்கும் பரிசுலே பங்கு கிடைச்சிருக்கும்.( பாவம் பொழைக்கத் தெரியாத மனுஷர்):-))))


'கெஸ் ஒர்க்'தான்னு சொன்னாலும் சரியான விடையைச் சொன்ன சந்தனமுல்லைக்கு ஒரு சபாஷ்!


அவுங்கதான் எத்தனையோ விடை சொன்னாங்களே, அதுலே எது கரெக்ட்ன்னு உங்களையே கேக்கவா?


ச்சும்மா............. அடிக்கவந்துராதீங்கப்பா:-)))

சரியான விடை: காப்பிச் செடி.


நம்ம டிபிஆர் ஜோவுக்கு வேற மாதிரி சந்தேகம். சரியான விடையைச் சொன்னாலும் நான் , இங்கே இருந்து அனுப்புவேனான்னு? இப்படி எல்லாம் இருந்தா எப்படிங்க ஜோ? நான் ஊருக்கு வராமயாப் போயிருவேன்? :-)))


ஆங்.............. பரிசு என்னன்னு சொல்லலை இல்லை?


அந்தக் காப்பிச் செடியில் முளைச்சு வரப்போற முதல் (அறுவடை!!!!) செட் காப்பிக்கொட்டையில் தயாரிச்ச முதல் காப்பியையே பரிசுன்னு கொடுக்கலாமுன்னுதான். அதுக்கு ரொம்ப வருஷம் காத்துருக்கணும்(-:


அப்ப பரிசு? அருமையான காஃபி ஷாப்புக்கு வின்னரைக் கூட்டிட்டுப் போகணும். இதுலே செலக்ஷன், அவுங்க இஷ்டம்.


நம்ம சந்தனமுல்லை, சென்னைவாசி என்றதாலெ இன்னும் வசதியாப் போச்சு.


ஆர்வமாக் கலந்துக்கிட்ட நண்பர்கள் அனைவருக்கும்( 34 பேர். அதெல்லாம் எண்ணிட்டமுல்லெ) நன்றி.


மத்தியானம் எல்லாரும் இன்னிக்கு ஒரு சினிமாவுக்குப் போறோம். ரெடியா இருங்க. உலக சினிமாக்களில் ஒண்ணு.


தமிழ், ஆங்கிலம் இல்லை. வேற எதுன்னு கேக்கவா?............வுடு ஜூட்................

Tuesday, November 14, 2006

எடுத்தவுடனே ஒரு புதிர்.எப்பவும் போலவே ஒரு இலை, தழை,பூவைக்காட்டி இது என்னன்னு கேட்டுட்டுப் போயிருவேன்னு நினைச்சீங்கன்னா.........


அடடா....


இந்த முறை இது என்ன செடின்னு கண்டு பிடிச்சுக் கரெக்ட்டாச் சொன்னா ஒரு பரிசும் உண்டு.


பரிசு என்னமோ ஏதோன்னு கன்னாபின்னான்னு குளம்ப வேணாம்.

நீங்க கொஞ்சமும் எதிர்பார்க்காத பரிசுன்னு சொல்லிக்கறேன்.

ஆலாபனை

அண்டவெளியிலே இருக்கும் நட்சத்திரங்களைப் பத்திச் சொல்லலாமுன்னு,விஷய சேகரிப்புக்குப்போனா.......... 'படா' பெரிய செய்திகளா இருக்கு. உள்ளே மூழ்கிப்போனா வெளியே வரமுடியாம மாட்டிக்குவேன். அப்புறம் இந்த வாரம்அமோகமா இருந்துச்சுன்னு உங்ககிட்டெ இருந்து பாராட்டு மழையாப் பெய்யும்.:-))) இதெல்லாம் தேவைதானா....? (அங்கெ போனா உண்மைக்குமே ஒண்ணும் புரியலைன்றதைத்தான் இப்படிக் கெத்தாச் சொல்லிக்கறது!)'ஈரப் பெயிண்ட்'ன்னா நம்பாமத் தொட்டுப் பார்க்கிற மக்கள்ஸ் மட்டும், வானவெளியிலே 98765432112345678903 ட்ரில்லியன் ஸ்டார்ஸ் இருக்குன்னா, மறுப்பே இல்லாம ஒத்துக்குவாங்க.சந்தேகம் இருந்தா நீங்களும் எண்ணிப் பார்த்துக்கலாம். இந்த வாரம் மட்டும் இந்தக் கணக்குலே ஒண்ணு எக்ஸ்ட்ரா.


போனவருசம் டிசம்பர் 19 லெ இப்படித்தான் வந்து உங்களையெல்லாம் போட்டுத் தள்ளிட்டுப் போனேன்.வருசம் முடியலை. அதுக்குள்ளே இன்னொருக்கா உங்களைப் பதம் பார்க்க என்னை அனுப்பி இருக்கு 'ங்'தமிழ்மணம். யாரும் தப்பிப் பிழைக்கலாமுன்னு கனவு மட்டும் காணாதீங்க. ஆமாம்:-))))


இதுவரை கிடைச்ச ஆதாயங்களைப் பார்க்கணுமுன்னா....


நட்புதான். உலகம் பூராவும் எந்த மூலையக் கணக்கெடுத்தாலும் யாராவது வலைஞர்கள் இருக்காங்க.போரடிக்குதுன்னு சொல்லிக்கிட்டு இருந்த வாழ்க்கை, இப்ப நேரமே இல்லாம பிச்சுக்கிட்டு ஓடுது.ஆற அமர நின்னு ஒரு வார்த்தை பேச( பின்னூட்டம் போட) முடியலைன்னா பாருங்களேன் நம்ம 'ஸ்பீடை'.


இந்த வாரம் என்னென்ன எழுதலாமுன்னு பட்டியல் எல்லாம் போட்டு வச்சுக்கலை. ஒலி, ஒளி காட்டுறதுக்கெல்லாம் கணினி அறிவு போதாது. தெரிஞ்சவரைக்கும் முடிஞ்சவரைக்கும் தினம்ஒரு பதிவு போட முயற்சிப்பேன்.


நிறை குறைகளோட என்னை 'நட்சத்திரமா ஏத்துக்கிட்டே ஆக வேண்டிய கட்டாயம் 'உங்களுக்கு.(விதியாகப்பட்டது வலியது. அதை யாரும் வெல்ல முடியாது)


அன்பும் ஆதரவும் எப்பவும்போல இருக்கும் என்ற நம்பிக்கையிலே இதோ எழுத ஆரம்பிச்சுட்டேன்.

நன்றி & வணக்கம்.


( உற்சாகமான வரவேற்பைப் பார்த்ததும் உண்மையிலேயே 'கலங்கி' நின்னுட்டேன்ம்ப்பா...டச்சிங் டச்சிங் ....சீக்கிரம், ஒரு சோடா ப்ளீஸ்)

Monday, November 13, 2006

அரை (???) முகம்

அறிமுகம்:

ஏங்க என்னாத்தைன்னு சொல்றது? ம்ம்......

பெயர்: துளசி

என் மறுபாதி: கோபால்.

நான் ஒரு நாடோடிங்க. காலுலே சக்கரமுன்னு சொல்வாங்க பாருங்க அது.

வயசு, என்ன ஒரு ரெண்டு வயசு எட்டுமாசம். எழுத்து வயசைத்தானே சொல்லணும்:-))


எழுதவரலேன்னா என்ன ஆகியிருப்பீங்கன்னு யாராவது கேட்டா....? என்ன, இன்னும்யாரும் கேக்கலையா? அட, பரவாயில்லை கேளுங்க. ம்ம்ம்ம்ம் கேட்டாச்சு(தானே?)டாக்டராகி இருப்பேன். ( இப்படித்தானேங்க சொல்லணும்) நல்லவேளையா நோயாளிகளுக்கு ஆயுசு நூறா இருக்கணும்.


புனைப்பெயர் ஒண்ணும் பொருத்தமாக் கிடைக்காத காரணத்தால் 'சொந்தப்பெயரில்' எழுதறேன்.


பிடிக்காததுன்னு அவ்வளவா ஒண்ணும் இல்லாததாலே, பிடிச்சது எல்லாமும்.


என்னுடைய பலம் & பலவீனம் ரெண்டுமே ஒண்ணுதான்.
'நினைவுகள்'


மன்னிக்கும் குணம் இருக்கு,ஆனா முயன்றாலும் மறக்க முடியாது.


அநேகமா நம்ம தமிழ்மண நண்பர்களுக்கு என்னைத் தெரிஞ்சிருக்கும்( ஆ.... என்ன ஆணவம்?)


தெரியாதவங்க, தெரிஞ்சுக்க விருப்பம் இருந்தா பழைய பதிவுகளை ஒரு நோட்டம் விடுங்க.தெள்ளத் தெளிவா எல்லாமே அங்கே இருக்கு.

வணக்கம்.

இன்னிக்கு என்னவோ ஒரு குழப்பம் நடந்துருச்சு போல. அறிமுகத்துக்கு எழுதுனதும் அரை முகமாப்போயி, அரைவாசிதான் வந்துருக்கு:-)அதனாலே அதையே இங்கே ஒரு பதிவாப் போட்டுறவேண்டியதுதான் ,இல்லையா?

எவ்ரிடே மனிதர்கள் -22 பச்சையம்மாக்கா

பச்சையம்மாக்கா லட்டு செய்யறதுலே எக்ஸ்பர்ட். அம்மாவோட 'காரியத்துக்கு' அவுங்கதான் வந்துலட்டு செஞ்சு கொடுத்தாங்க. செத்தது எங்கம்மாவாச்சே....... அப்ப நான் பாவம்தானே? எனக்கு ரெண்டு,மூணு லட்டு கூடுதலாக் கிடைச்சது.


பச்சையம்மா அக்கா இந்த ஊருக்கு வந்தப்பத் தமிழ் சுத்தமாத் தெரியாது. எங்க பாட்டி வீட்டுலே, மளிகைச் சாமான் வாங்க எப்பவும் தங்கராசு (அண்ணன்) கடைக்குத்தான் போவாங்க. சரக்கு சுத்தமா இருக்குமாம். கடைக்காரர் ரொம்பக் கட் & ரைட். நியாயமாப் பேசுவார். ஏமாத்து பிசினெஸ் ஒண்ணும் இல்லை.மத்த மளிகை மாதிரி கடனுக்கும் வியாபாரம் இல்லை. கையிலே காசு & வாயிலே தோசை.


லிஸ்ட் எழுதிக் கொடுத்துட்டாப் போதும், சரக்கை ஒழுங்கா நிறுத்து வீட்டுக்கு வந்துரும். பில் பார்த்துக் காசு கொடுத்தனுப்பிறணும். ஒரு நாள் தங்கராசு அண்ணே, எங்களுக்குத்தான் அண்ணெ. எங்க பாட்டி எப்பவும்வாப்பா தங்கராசுன்னுதான் கூப்புடுவாங்க. அண்ணெ எங்க பாட்டிகிட்டேத்தான் ஒண்ணாப்பு படிச்சாராம். அந்த ஊர்லே முக்காவாசிப்பேர் பாட்டிகிட்டேதான் படிச்சிருக்கணும். எப்பப் பார்த்தாலும் யாராவது கல்யாணப் பத்திரிக்கை வைக்கறதுக்கு வந்துக்கிட்டே இருப்பாங்க.ஒரு சமயம் பாட்டியோட மாணவர் ஒருத்தர் வேலை கிடைச்சுருச்சுன்னு சொல்லி ஆசீர்வாதம் வாங்கிக்கிட்டுச் சொல்லிட்டுப்போக வந்தார். வேலை எங்கேன்னு கேட்டப்ப 'மெர்க்காரா'ன்னு சொன்னார். நான் அந்த ஊர் ஃபாரீன்லேயா இருக்குன்னு கேட்டேன். அவ்வளோ விவரம் அப்பெல்லாம்:-))))


ஆங்.....எங்கே விட்டேன்? தங்கராசண்ணே வந்து பாட்டிகிட்டே கொஞ்ச நேரம் ரகசியமா வாசத் திண்ணையிலே உக்கார்ந்து பேசுனாராம். சித்தி மட்டும் லேசா 'ஒட்டு'க் கேட்டுருக்காங்க. 'அடடா .... அப்படியா?நீ கவலைப்படாதே... ஆனது ஆச்சு. இங்கே கூட்டிட்டு வா' ன்னு துண்டுதுண்டாப் பேச்சு காதுலெ விழுந்ததாம்.


அதோட முழுவிவரமும் அன்னிக்குச் சாயந்திரம் தெரிஞ்சு போச்சாம். அண்ணெ ஒரு பொண்ணைக் கூட்டிட்டுவந்து வீட்டுலே வச்சுருக்கார். அவுங்கதான் பச்சையம்மா. இளம் விதவை. ஊர் ஆந்திரா தமிழ்நாடு பார்டர்.
கடைக்குச் சரக்கு கொள்முதல் செய்ய அண்ணன் அப்பப்ப ட்ரக்லே போய் வருவாராம். அப்ப அங்கே ஒரு இடத்துலே 'இட்டிலிக்கடை' வச்சு நடத்திக்கிட்டு இருந்த ஒரு அம்மாவை பழக்கமாயிருக்கு. அவுங்க பொண்ணுதான் அக்கா. ' கண்ணும் கண்ணும் நோக்கியா' ஆகிப்போச்சு. ஒரு பயணத்துலே அண்ணன்கூட கிளம்பி வந்துட்டாங்க. வந்தபிறகு ரொம்ப பயந்து போயிட்டாங்களாம். மொழிப் பிரச்சனை. தாய் என்ன ஆனாங்களோன்னு கவலை. பள்ளிக்கூடத்துலே படிக்கிற தம்பி நினைவு இப்படி குழப்பத்துலெ அழுதுக்கிட்டே இருந்துருக்காங்க.


அண்ணன் திராவிடக்கழக உறுப்பினர். அதனாலே ஒரு இளம்விதவைக்கு வாழ்வு கொடுக்கலாமுன்னு இப்படி ஆயிருச்சுன்னு சொன்னாராம். பாட்டிக்கு மனசு ரொம்பக் கருணை. அந்தப் பொண்ணையும் நம்ம வீட்டுப்பொண்ணாவே நினைச்சு ஆதரவா அன்பாப் பேசி இருக்காங்க. அதுவும் 'தெலுங்குலே மாட்லாடு'னதும் பச்சம்மாவோட பயம் தணிஞ்சிருக்கு. அப்ப நம்ம வீட்டிலும் சித்தியோட கணவர் இறந்துபோய் அவுங்க அம்மா வீட்டோடயே இருந்தாங்க. சித்திக்கு ஒரு பையன் இருக்கான்.என் வயசுதான். ஒரு மாசம் பெரியவன். அப்ப அவன் குழந்தையாம். தினம் அக்கா வந்து குழந்தையோட கொஞ்ச நேரம்விளையாடிட்டு, வீட்டுலே எல்லார்கிட்டேயும் பேசிக்கிட்டு இருந்துட்டுப் போவாங்களாம். வீடு ரொம்பப் பக்கம்தான்.


அதுக்கப்புறம் பாட்டி சொன்னாங்களாம், கல்யாணம்னு கோவிலில் வச்சாவது ஒரு தாலி கட்டிருப்பான்னு. அவர்தான் கட்சிக்காரராச்சே. என்னவோ சீர்த்திருத்தக் கல்யாணம் செஞ்சுக்கறேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாராம். கடைசியில் ரிஜிஸ்ட்டர் கல்யாணம் நடந்துருக்கு. பாட்டியும் ஒரு சாட்சிக் கையெழுத்து போட்டாங்களாம். இதெல்லாம் அப்புறமா நான் தெரிஞ்சுக்கிட்டதுதான்.பச்சையம்மாக்கா அதுக்கப்புறம் கொஞ்சம் கொஞ்சமாத் தமிழ்ப் பேசக் கத்துக்கிட்டாங்க. படிக்கத் தெரியாது. அண்ணனும் பேருக்கேத்த மாதிரி தங்கமானவர். நல்லா நகைநட்டுன்னு செஞ்சு போட்டார். ஊருலே இருக்கற அம்மா, தம்பிக்கு ஆள் விட்டனுப்பி சமாதானம் பேசி, அவுங்களுக்கும் தம்பி படிக்க, வீட்டுச் செலவுக்குன்னெல்லாம் உதவி செஞ்சுருக்கார்.


இவுங்களுக்குன்னு குழந்தைகள் பிறக்கலை. அந்தத் தம்பியையே இவரும் புள்ளையா நினைச்சாராம். நல்லாப் படிக்க வச்சிருக்கார். அவரும் படிச்சு முடிச்சுக் கல்யாணமெல்லாம் முடிச்சார். அவுங்களுக்குப் பொறந்த குழந்தைக்கு அக்கா வீட்டுலேதான் பிறந்தநாள் வைபவம் எல்லாம் செஞ்சாங்க.


அக்கா எப்பவும் சிரிச்ச முகமாத்தான் இருப்பாங்க. நெத்தியிலே பெரிய பொட்டு. எப்பவும் பளிச்ன்னு உடுத்தி இருப்பாங்க.வீட்டையும் ரொம்ப அழகா வச்சிருப்பாங்க. வீட்டைச் சுத்தி நிறைய பூச்செடிகள். ரொம்ப உடலுழைப்பு இல்லாததாலே கொஞ்சம் குண்டாப் போயிட்டாங்களாம். ஆனா சமைக்கிறதுலே பெரிய ஆள். உக்காந்த இடத்துலேயே அம்பதுஅறுபதுபேருக்கு அருமையா ஆக்கிருவாங்க. நம்ம வீட்டுலேயோ பெரிய பட்டாளம். கூட்டம் ஜாஸ்த்தி. இதுலே எந்தச் சின்ன விசேஷமுன்னாலும் பச்சையம்மா அக்கா இல்லாம நான் பார்த்த ஞாபகமே இல்லை. அவுங்களைச் சுத்தி எங்க சித்திங்க உக்காந்துக்கிட்டுக் கதை பேசிக்கிட்டு காய்கறி நறுக்கிக் கொடுத்துக்கிட்டு, தேங்காய் துருவிக்கிட்டுன்னு ரொம்பவே மஜாவாத்தான் வேலை நடக்கும்.


அப்பல்லாம் புடவைக்காரர்னு ஒருத்தர் ரெண்டு மூணு மாசத்துக்கொரு தடவை புடவை மூட்டையோடு வருவார்.நாந்தான் ஓடிப்போய் அக்காகிட்டே விவரம் சொல்லிட்டு வருவேன். நம்ம வீட்டுலே எல்லாருக்கும் புடவை எடுக்கும்போது அக்காவுக்கும் ஒரு புடவை கண்டிப்பா உண்டு. அதான் வீட்டுப்பொண்ணாவே ஆயிட்டாங்கன்னு சொன்னேன் இல்லியா?


தங்கராசண்ணேதான் அதெல்லாம் வேணாமுன்னு கொஞ்சம் ஜோர் காட்டுச்சு மொதல்லே. ஆள்தான் கட் அண்ட் ரைட் ஆச்சே! பாட்டி கொஞ்சம் கோபமாத் திட்டுனதும் அடங்கிருச்சு. நாங்க பதின்மவயசா இருந்தப்பெல்லாம் அக்கா வீட்டுக்குப்போக மட்டும் எப்பவும் பர்மிஷன் கிராண்டட். இங்கே வீட்டுலே எதாவது வேலை இருக்கும்போலத் தெரிஞ்சா நான் எஸ்கேப். அக்கா வீட்டுக்குப் போயிருவேன். உக்காரவச்சு நல்லா தலை எல்லாம் சீவிப் பின்னி விடுவாங்க. தோட்டத்துலே இருக்கற பூவையெல்லாம் பறிக்கச் சொல்லி,அழகாக் கட்டி தலை கொள்ளாம வச்சுவிடுவாங்க. அண்ணன் எதோ ஒரு பேப்பர் வாங்குவார். கட்சிப் பத்திரிக்கையாம். அதையெல்லாம்படிக்க எனக்கு அங்கேதான் ச்சான்ஸ் கிடைச்சது. அந்தக் கட்சிகளைப் பத்தியெல்லாம் பாட்டி வீட்டுலே நல்ல அபிப்பிராயம் எல்லாம் கிடையாது. கட்சின்னா காங்கிரஸ்தான்னு இருந்த வீடு.


அண்ணனும் கட்சி வேலை அது இதுன்னு என்னவோ செய்வார். ஆனா எதா இருந்தாலும் வீட்டுவரைக்கும் வராது.கடையோடு நின்னுரும். அக்காவுக்கு ஒண்ணும் கட்டு திட்டமுன்னு போடலைன்னாலும், கட்சியைப் புரிஞ்சுக்கிட்டு அக்கா வீட்டுலே சாமிப் படம் எல்லாம் வச்சுக்கலை. நம்ம வீட்டுக்கு வந்தா மட்டும் எல்லாரும் பூஜையிலே உக்கார்றதுபோல உக்கார்ந்துக்கும்.
எப்பவாவது அக்காவைப் போய்ப் பார்க்கணுமுன்னு நினைச்சுக்கிட்டு இருக்கேன். கிழவியா ஆகி இருப்பாங்க இல்லே?லட்டு செய்யறதை எப்பப் பார்த்தாலும் அக்கா ஞாபகம் 'டக்'ன்னு வந்துரும்.


அடுத்தவாரம்: ரகுநாதன்


நன்றி: தமிழோவியம்

Friday, November 10, 2006

வல்லிக்கண்ணன்

பிரபல எழுத்தாளர் திரு. வல்லிக்கண்ணன் அவர்கள் மறைந்துவிட்டார் ன்னு
இப்பத்தான் தினமலரில் படிச்சேன்.

சாகித்திய அகடமி விருது பெற்றவர்.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
வயது 86.

சிலநாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து, அதன்பின் மரணம்.

அன்னாரின் குடும்பத்தினருக்கும், அபிமான வாசகர்களுக்கும்
எங்கள் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

( அவரோட புத்தகங்கள் ஒண்ணும் இதுவரை வாசிச்சதில்லை)