Sunday, November 19, 2006

சமையல் ( பற்றிய) குறிப்பு

சமைக்கத் தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்த காலத்துலே 'சமைத்துப்பார்'ன்னு நம்பிக்கையைக் கொடுத்தது நம்ம மீனாட்சி அம்மாள் அவர்களின் புத்தகம்தான்.


மொத்தம் மூணு தொகுதிகள்.


முதல் தொகுதியில் வழக்கமான சமையல்கள். தினமும் நாலுதடவை(ஏன்? அப்புறம் சொல்றேன்) புரட்டியே இப்ப இதுதாள் தாளாகிடக்கு.

குழம்பு, ரசம், அவியல் கூட்டு , கறின்னு....... ஒரே 'போர்' தான்.ஆனாலும் தினப்படிக்கு இது வேண்டித்தான் இருக்கு.


சுவாரசியம் ரொம்ப இல்லை. இதுலேயே அடுத்த பகுதி கொஞ்சம் பரவாயில்லை.சிற்றுண்டி வகைகள்.எனக்குச் சின்னவயசுலே இருந்தே சாப்பாட்டை ( சோற்றை)விட பிடிச்சது இந்த பலகார வகைகள்தான்.சோறு & குழம்பு பிசைஞ்சு சாப்புட அப்படி ஒரு சோம்பல்! ராத்திரியிலே பாடம் படிச்சுக்கிட்டே தூங்கி விழுவேன்.அப்ப அக்கா சாப்பிடக்கூப்புட்டா...... தட்டைக் கழுவி எடுத்துக்கிட்டுப் போணுமேன்னு, சோறே வேணாமுன்னுதூங்குவேன். அக்காவே தட்டைக் கழுவி வச்சு, சாப்பாடு பறிமாறிட்டேன்னு சொல்லி இழுத்துக்கிட்டு போவாங்க.உடனே தூக்கம் கலைஞ்சுரும்:-))))


அப்ப எல்லாம் எங்க வீட்டுலெ 'எச்சித் தட்டு'ன்னு ஆளுக்கு ஒண்ணு இருக்கும். அவுங்கவுங்க தட்டுலெதான் அவுங்கவுங்க சாப்புடணும்.தட்டு மாறாம இருக்க அடையாளம் எல்லாம் போட்டு வச்சுருப்போம்:-) நம்ம தட்டை நாமே கழுவி வைக்கணும். வீட்டுலே மத்த பாத்திரங்களோட இதுகளை சேர்த்து வச்சுறக்கூடாது.தெரியாம வச்சுட்டோம், தொலைஞ்சோம். மிலிட்டரி ரேஞ்சுலேதான் அப்ப வீட்டு நடவடிக்கைகள். ( இப்ப அதுக்குப் பழி வாங்கறாப்பலே எல்லாப் பாத்திரமும் 'டிஷ் வாஷரு'க்குள்ளே ஒண்ணாப் போகுது) சொல்ல மறந்துட்டேனே,அடுக்களைப் பக்கம் இருக்கும் வெராண்டா சுவத்துலே ஆணிகள் அடிச்சு வச்சுருக்கும், இந்தத் தட்டுகளை மாட்டறதுக்குன்னு!


எங்க பாட்டி வீட்டுக்குப்போனா மஜாதான். முக்காவாசி நேரம் ராத்திரியிலே முற்றத்துலே தான் சாப்பாடு. பெரிய பேஸின்லே பிசைஞ்சு கையிலே உருட்டித் தருவாங்க. மாமா, சித்தி பசங்கன்னு பெரிய கூட்டம் இருக்கும். நெருக்கியடிச்சுக்கிட்டு உக்காந்து தின்னே தீர்த்துருவோம். பெரியவுங்களும் சில சமயம் இதுலே சேர்ந்துக்குவாங்க. முக்கியமா மறுநாள் எதாவது விசேஷமுன்னா, (பழசை எடுத்து வைக்க முடியாதாம்) மொத்தத்தையும் தின்னு முடிக்கணும்.இதுதான் ஒரே வழி! கொண்டா கொண்டான்னு எல்லாரும் நாலு உருண்டை அதிகமாவே தின்னுருவோம்.


பாருங்க, வழக்கம் போலவே என்னவோ சொல்ல வந்து எங்கியோ போய்க்கிட்டு இருக்கேன். சிற்றுண்டி வகைகள்ன்னு இட்டிலி, தோசை, பொங்கல்ன்னு ஆரம்பிச்சு லட்டு , ஸோமாசி போளி வரை போகுது. அப்புறம் சில விசேஷ தினபட்சணங்கள்ன்னு அரிசி கர்ச்சிக்காய்லே ஆரம்பிச்சு கார்த்திகைப் பொரி உருண்டை, திருவாதிரைக்களி வரை இருக்கு.


கடைசியா, அனுபந்தம். ஆஹா.... அடுப்பு ( குமுட்டி, விறகு)பற்றவைக்கும் முறைகள், காஃபி தயாரிக்கும் விதம்,சாதம் வடிக்கிறது, குக்கரில் சோறாக்குறதுன்னு இன்னும் சில. கட்டக் கடைசியா, 'ஆஸ்தராலிய கோதுமை ரவை, மாவு அரைக்கிற விதம் இருக்கு.அப்போ, அந்தக் காலத்துலெயெ ஆஸ்த்ராலியக் கோதுமை நம்ம நாட்டுக்குள்ளே பூந்துருச்சு.இந்தப் புத்தகம் முதல் பதிப்பு 1951லே வந்துருக்கு. அப்பவே மீனாட்சி அம்மாவுக்கு நிறைய வயசாகி இருக்கணும். அவுங்க வீட்டுப் பெண்களுக்குன்னு அப்பப்ப எழுதுன குறிப்புகள் ( பதிவுகள்?) எல்லாம் இன்னிக்கு உலகம் பூராவும் போய் இருக்கு.
நான் இந்தப் புத்தகங்கள் வாங்குனப்ப இதோட விலை 7 ரூபாய்(தான்) ஒவ்வொண்ணுக்கும்.


ரெண்டாம் தொகுதியிலும் ரெண்டு பகுதியா சிற்றுண்டி வகைகள், இதர சமையல்கள்ன்னு சுண்டல், வத்தல் வறுவல், ஊறுகாய், பொடி வகைகள்ன்னு இருக்கு. ஆனா இந்தப் புத்தகத்துலே நாலு பேர் அடங்கிய ஒரு சிறு குடும்பத்துக்கு ஒரு மாசத்துக்குத் தேவையான சாமான்கள்ன்னு ஒரு பட்டியல் இருக்குங்க. இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. நாமோ ரெண்டே பேர். எல்லாத்தையும் ரெண்டாலெ வகுத்துட்டு வாங்கிக்கலாம். ஈஸி பீஸி!


அதே போல சாமான்கள் வாங்கியாச்சு. ஆனா அதெல்லாம் நமக்கு ரெண்டு மாசத்துக்கு வந்துச்சு. அப்பத்தான் தெரிஞ்சது 'அம்மாவுக்கு' கை கொஞ்சம் பெருசுன்னு. அதுலேயும் அப்ப ஜனங்கள் கொஞ்சம் நல்லாவே சாப்புட்ருக்காங்க. உடல் உழைப்பு கூடுதலா இருந்த காலம். அதுனாலே நிறைய சாப்பாடும் உள்ளெ தள்ளப்பட்டிருக்கும்.


மூணாவது தொகுதியில் இன்னும் சில விசேஷங்கள் இருக்கு. குழம்பு ரசமுன்னு கொஞ்சமே கொஞ்சம்.அடுத்து இன்னும் சிலவகை சிற்றுண்டி. போயிட்டுப் போட்டும். இதுலே பகுதிகள் மூணாவதும் நாலாவதும்தான் முக்கியம். கல்யாண சாப்பாட்டு மெனு, ஆயிரம் பேர் வர்ற மூணுநாள் கல்யாணத்துலே என்னென்ன எப்பெப்பன்னு ........அதுக்குத் தேவையான சாமான்கள் பட்டியல். இந்தக் காலத்துலே எல்லாத்துக்கும் ஒப்பந்தக்காரர்கள் கிடைச்சுடறாங்க.எதோ இன்னொருத்தர் வீட்டு விசேஷத்துக்குப் போறது மாதிரியே நம்ம வீட்டு விசேஷங்களுக்கும் போனாப் போச்சு!


கடைசியா... பண்டிகைகள் கொண்டாடும் விதம். இதுவும் குடும்பவழக்கம், நமக்குப் பழகுன முறைகள்ன்னு இருந்தாலும்,ஒரு 'கைடு' மாதிரி அப்பப்பப் பார்த்துக்கறதுக்கு உத்தமம்.


எல்லா அளவுகளும் படி, ஆழாக்கு, வீசை, பலம்னு இருந்ததைக் காலத்துக்கேற்ற மாதிரி கிராம், கிலோ, லிட்டர்ன்னு (அடைப்புக்குள்ளே மாத்தித்தான்) கொடுத்துருக்காங்க. ஆனாலும் இப்பத்து மக்களுக்கு இது கொஞ்சம் குழப்பமா இருக்குன்னும் சொல்லக் கேட்டுருக்கேன். வேடிக்கை என்னன்னா, நம்ம மக்கள்ஸ்( இளைய தலைமுறை) நிறையப்பேர் அமெரிக்காவுலே இருக்காங்க. இந்தியாவுலே மெட்ரிக் அளவுகளில் படிச்சுட்டு, இப்ப அங்கே இம்பீரியல் அளவுகளில் வாழ்க்கை! ஆனாலும் நம்மூர் பழைய அளவுகள் புரிஞ்சுக்கக் கஷ்டமுன்னு சொல்றாங்க. இதுக்கெல்லாம் கவலைப்படாம,செய்முறையைப் படிச்சுட்டு, தோராயமா நமக்குத் தெரிஞ்ச 'அளவை'யிலே செஞ்சு பாருங்க. சுமாராவாவது வரும்.கொஞ்சநாள் ஆனா இந்த 'சுமாருக்கே ' நாக்கு பழகிரும். உப்பு, காரம் மட்டும் கொஞ்சம் கவனிச்சாப் போதும்.உலகத்துலேயே அதிகமா விக்கறது சமையல் புத்தகங்கள்தானாம்.


சிவசங்கரியோட கதைகள் படிச்சவங்களுக்கு 'உழக்கு'ன்ற வார்த்தை பரிச்சயமாகி இருக்கும். வாய்ப்பாட்டுப்புத்தகங்களிலே இந்த பழைய நிறுத்தல் அளவு எல்லாம் இருக்குன்னாலும் இப்ப யாரு அதைத் தேடிக்கிட்டு ஓடறது?
நினைவிலே இருக்கற அளவுகள் தரேன். எதாச்சும் புரியுதா பாருங்க. இதுலே எதாவது கேள்வி 'கோன் பனேகா குரோர்பதி'யிலே வந்தாலும் வரும்.


நிறுத்தல் அளவு

வீசை
சேர்
பலம்
ரூபா எடை.( இது 10 கிராமாம். வெள்ளியிலே செஞ்ச அந்தக் காலத்து ரூபாய்க் காசு)


கொள் அளவுகள்

மரக்கால்
படி ( இதுலே பக்காப்படி, பட்டணம்படின்னு வேற இருக்கு)ஆழாக்கு
வீசம்படி
மாகாணிப்படி.


'படியிலே மாத்து, பலத்துலே மாத்து'ன்னு அந்தக் காலக் கணக்குங்க எல்லாம் ஒரே லொள்ளு. இதுலே தூரத்தை அளக்க நீட்டல் அளவைகள்ன்னு

மைல்,
பர்லாங்,
கஜம்,
அடி,
அங்குலம்னு போகும்.


முப்பத்தி ரெண்டு வருஷங்களுக்கு முந்தி சமையலில் தேர்ச்சி(!!!) பெற இந்தப் புத்தகம்தான் கை கொடுத்துச்சு. தினம் மத்தியானம், இந்தப் புத்தகத்தை எடுத்துவச்சுக்கிட்டு வாசிப்பேன்( வாசிப்பு அனுபவம்?)எல்லா இனிப்பு ஐட்டங்களையும் செய்முறை 'படிச்சுப் பார்த்தவுடனே' செஞ்சு சாப்புட்ட திருப்தி. இந்தக் கணக்குலே தினம் நாலைஞ்சு ஸ்வீட்.ஒரு சில நாட்களிலே மட்டும் கையும் மனமும் ரொம்பப் பரபரத்தால் ( மட்டுமே) அளவுகளையெல்லாம் டீஸ்பூனா மாத்தி எதாவது செஞ்சு பார்க்கறது உண்டு.


ஒரு டீஸ்பூன் கடலைமாவு, 3 டீஸ்பூன் சக்கரை, 4 டீஸ்பூன் நெய்ன்னு செஞ்சால் ச்சின்னதா தேசலா ஒருமைசூர்பாகு! ( புத்தகம் கிழிஞ்சது இப்படித்தான்)


நவீன கால மக்களுக்காக இப்ப இந்தப் புத்தகங்கள் ஆங்கிலத்திலும் வருது. முந்தியே Cook & See ( சமைத்துப்பார்)முதல் ரெண்டு தொகுதி வந்ததாம். இப்ப இன்னும் என்னென்னவோ இடைச்செருகல்கள் எல்லாம் சேர்த்து அஞ்சு புத்தகமா வந்துக்கிட்டு இருக்கு. தமிழிலும்தான். ஆனா பழைய புத்தகத்துலே நம்ம மீனாட்சியம்மாவோட கைப்பட எழுதிய கைப்பக்குவம் மிஸ்ஸிங்(-:


விற்பனையில் இவ்வளவு புகழ்பெற்ற புத்தகம் எழுதுனவுங்களுக்கு எவ்வளவு காசு வந்துருக்கணும்? அதுதான் இல்லை(-:பிரசுரம் செஞ்சவங்களுக்கு இன்னும் நல்ல வருமானம்தான். ஆனால்........... மூணு/மூணரை வருஷம் முந்திஒருசமயம் சில புத்தகங்களை வாங்கிக்க அவுங்க வீட்டுக்கே நேராப் போனேன். மீனாட்சியம்மாவின் வாரிசுகள் இருக்கும் வீடு. அங்கேயே ஒரு வெராந்தாவுலே புத்தகங்களை விற்பனைக்கு வச்சுருக்காங்க. 'பழக்க தோஷத்துலே'நிறைய புத்தகங்கள் வாங்கறோமே, எதாவது டிஸ்கவுண்ட் இருக்கான்னு கேட்டுட்டேன்.. கேட்டுட்டு எனக்கே 'ச்சீ'ன்னுபோச்சு.


" நீங்களே எதாவது கழிச்சுக்கிட்டு பாக்கி தாங்களேன்"


வீடு வளமா இல்லை(-:


என்னதான் வெவ்வெற நாடுகளிலே போய், மத்த வகைச் சாப்பாட்டுகளை ருசி பார்த்தாலும், நம்மூரு சாம்பார், ரசத்துக்கு ஈடு உண்டா?


இப்ப நான் சமையலில் பயங்கர 'எக்ஸ்பர்ட்'. சந்தேகமா? படத்தைப் பார்க்கவும்:-))))


எல்லாம் மீனாட்சி 'அம்மா' தயவுதான்.

32 comments:

said...

துளசி மேடம்! விருந்து ஜோரா இருந்தது! மிக்க நன்றி!.
ஏவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........

நான்தான் முதல் ஆளுன்னு நினைக்கறேன்!

said...

கல்யாண வீட்டுக்குள்ள போன மாதிரி இருக்கே. பாத்திரத்துல இருக்குற மேட்டர பாத்தவுடனே சாப்பிடணும் போல இருக்கு!

said...

சாவித்திரி அம்மாளின் புத்தகம்
அப்போது பிரபலம்-இப்போதும்தான்!

மணங்கு,வீசை,சேர்,தோலா,பலம், வராகன்,குன்றிமணி........நன்றாக ஞாபகப்படுத்தினீர்கள்!

said...

சமைக்கத் தெரிந்த மனமே உனக்கு
சுவைக்கத் தெரியாதா?

சுவைக்கத் தெரிந்த மனமே உனக்கு
சமைக்கத் தெரியாதா?

said...

வாங்க நாமக்கல்லாரே,

ஆமாங்க நீங்கதான் முதல்.
பந்திக்கு முந்துனதுக்கு நன்றி:-)

said...

வாங்க தம்பி.

கல்யாண வீட்டுச் சமையலா?

அம்மாடியோவ்:-))))

said...

சிஜி,

வாங்க. விடிய விடிய ராமாயணம் கேட்டு... சீதைக்கு ராமன்...... கதைதான்.
அது சாவித்திரியம்மாள் இல்லீங்க.
விட்டா துளசியம்மான்னு சொல்லிருவீங்க :-))))))

ஆமாங்க இந்த தோலா மறந்தே போச்சு(-:
அது ஒன்னரைப் பலம்தானே?

said...

பித்தானந்தரே,

வாங்க , வாங்க.

ஞானிகளும் சமையலில் இருந்து தப்ப முடியாதுல்லெ?

"ஒரு சாண் வயிறே இல்லாட்டா இந்த
உலகத்தில் ஏது கலாட்டா? " :-))))

Anonymous said...

அக்கா சுவைத்தேன் உங்கள் சமையல்
கொண்டேன் அதன் மீது மையல்
எனெனில் நான் ஒரு தின்னிப் பையல்.

அக்கா சுவைக்கு சுவை கூட்டியது உங்கள் பதிவு. சும்மா சொல்லக் கூடாது. Superb presentation.

said...

//ஞானிகளும் சமையலில் இருந்து தப்ப முடியாதுல்லெ?//

எதுக்குத் தப்பிக்கணும்? நாமொன்றும் முற்றும் துறக்கச் சொல்லும் சாமி(ஞானி)யல்லவே! சிரித்து, மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஆசாமி.

இன்னொன்றும் உண்டு! மோசமான சமையலின் காரணமாக ஞானியாகியவர்களும் உண்டு!
:)

said...

கடந்த ஒரு வாரமா வகுப்பு பக்கம் வராததுக்கு முதல்ல லீவு லெட்டர்
"Dear Madam,
Since I am in vaccation and I am staying in India where I could not get ‘net’ facilities at all time as of in Nigeria I am not attending the class recularly. Grand me leave till 5th Dec.2006.
Yours regular reader
Mathi
இந்த ஒரு வாரமும் ஸ்பெஷல் கிளாசா நடத்தினதுல கலந்துக்க முடியலன்னு வருத்தமா இருந்தாலும் கடசிநேரத்துல அதும் சாப்பாட்டு நேரமாவந்துட்டதுல சந்தோஷம்.

said...

துள்சி,
இந்த கமெண்ட் நான் "என் கணவர் டயட் செய்கிறார்" என்ற பதில் நான் எழுதியது.

//லதா எனக்கு கல்யாணம் ஆகும்பொழுது எனக்கு சமைக்கவே தெரியாது. என் கணவர் எனக்கு முதன் முதலாய் தந்த பரிசு என்ன தெரியுமா? சமைத்துப்பார்- மீனாட்சி அம்மாளின் மூன்று புத்தகங்கள்''

said...

3 பலம் = 1 தோலா ல்லே?

வயசாயிட்டதால நீங்கதான் குழம்பிட்டிருந்தீங்க.......
இப்ப நானும்...

said...

வாங்க பித்தானந்தரே.
//இன்னொன்றும் உண்டு! மோசமான
சமையலின் காரணமாக ஞானியாகியவர்களும்
உண்டு!
:) //

"சாப்பிடத்தான் தெரியும் எனக்கு
சமைக்கத் தெரியலையே"

said...

அகத்தீ,

இதென்ன ஹைக்கூதானே?
ச்சும்மா பின்னுறீங்க? :-)))

said...

மதி வாங்க.

நம்மூர்லெ சத்துணவு ஆரம்பிச்ச புதுசுலே,
மத்தியானம் ( சாப்பாட்டுக்கப்புறம்) இருக்கும் வகுப்புகளுக்குப்
பிள்ளைங்க வர்றதில்லைன்னு ஒரு புகார் இருந்துச்சு.

சரி. லீவு முடிஞ்சு வந்ததும் 'அரியர்ஸ்' முடிச்சுறணும், ஆமா:-)))

said...

உஷா,

//என் கணவர் எனக்கு முதன் முதலாய் தந்த பரிசு
என்ன தெரியுமா? சமைத்துப்பார்- மீனாட்சி
அம்மாளின் மூன்று புத்தகங்கள்'' //

நான் அவ்வளவு பாக்கியம் செய்யலை (-:

என் காசுலெ நானே வாங்கிக்கும்படி ஆச்சு -))))

எத்தனை வீட்டுலே பத்த வச்சுருக்காங்க
பார்த்தீங்களா நம்ம மீனாட்சி அம்மாள். ரியலி கிரேட்!

நான் சொன்னது அடுப்பை:-)

said...

சிஜி,

மூணா அதுலே பாதியா? வாய்ப்பாடு புத்தகத்தைத் தேடிக்கிட்டு இருக்கேன்:-)))

//வயசாயிட்டதால //

நறநற.............

சந்துலே சிந்து பாடணுமா? :-))))

Anonymous said...

//இதென்ன ஹைக்கூதானே?
ச்சும்மா பின்னுறீங்க? :-)))//

நானும் ஒரு கவியா? பிறந்த பேறு பெற்றேன் அக்கா.

ஆனா, தமிழ்மணத்துக்குள்ள தான் நுழைய முடியவில்லை. I tried the method given in the site, but not working. Help me please.

said...

சமையலோட கூட அழகான மலரும் நினைவுகள் !
//அப்ப எல்லாம் எங்க வீட்டுலெ 'எச்சித் தட்டு'ன்னு ஆளுக்கு ஒண்ணு இருக்கும். அவுங்கவுங்க தட்டுலெதான் அவுங்கவுங்க சாப்புடணும்.தட்டு மாறாம இருக்க அடையாளம் எல்லாம் போட்டு வச்சுருப்போம்:-) நம்ம தட்டை நாமே கழுவி வைக்கணும். வீட்டுலே மத்த பாத்திரங்களோட இதுகளை சேர்த்து வச்சுறக்கூடாது.தெரியாம வச்சுட்டோம், தொலைஞ்சோம். மிலிட்டரி ரேஞ்சுலேதான் அப்ப வீட்டு நடவடிக்கைகள். ( இப்ப அதுக்குப் பழி வாங்கறாப்பலே எல்லாப் பாத்திரமும் 'டிஷ் வாஷரு'க்குள்ளே ஒண்ணாப் போகுது) சொல்ல மறந்துட்டேனே,அடுக்களைப் பக்கம் இருக்கும் வெராண்டா சுவத்துலே ஆணிகள் அடிச்சு வச்சுருக்கும், இந்தத் தட்டுகளை மாட்டறதுக்குன்னு!


எங்க பாட்டி வீட்டுக்குப்போனா மஜாதான். முக்காவாசி நேரம் ராத்திரியிலே முற்றத்துலே தான் சாப்பாடு. பெரிய பேஸின்லே பிசைஞ்சு கையிலே உருட்டித் தருவாங்க. மாமா, சித்தி பசங்கன்னு பெரிய கூட்டம் இருக்கும். நெருக்கியடிச்சுக்கிட்டு உக்காந்து தின்னே தீர்த்துருவோம்.
//
எங்க வீட்டிலேயும் சின்னப்ப இதே மாதிரி தான் :))) அது ஒரு காலம், அசை போட்டால் சுகம் !

படமும் சூப்பர் ;-)

said...

சரி, சாப்பாடெல்லாம் செஞ்சு வெச்சாச்சு. எப்போ பந்தி? ஐயாம் தி வெயிட்டிங். ஆனாலும் ரெண்டு பேருக்கு ஒரு வேளைக்கு இது கொஞ்சம் ஓவராத் தெரியல? அதனாலதான் நானே பந்தி உண்டுன்னு முடிவு பண்ணிட்டேன். :)

said...

துளசி மேடம், ஒரு கல்யாண விருந்து சாப்பிட்ட மாதிரி இருந்தது..

நான் முதன் முதலில் சமைக்க பழகிய ஞாபகங்கள் நெஞ்சில் சப்பணம் போட்டு உட்கார்ந்து விட்டது, பதிவை படித்த பிறகு!!

Anonymous said...

துளசியக்கா!!
சமையல் சாப்பாட்டைப் பற்றி நல்லா,சொல்லியுள்ளீர்கள்;
இந்த குழையல் சாப்பாடு;எங்கள் வீடுகளிலும் இருந்தது.இதைக் "கவளம்" என்பார்கள்;இது பற்றி வசந்தன் ஓர் பதிவு போட்டுள்ளார்.
அடுத்து;உங்கள் சமையல் எல்லாம் சைவச் சாப்பாடு. நம்ம வீட்டில் குழம்பு; பாற்கறி;சுண்டல்;சொதி.
மீன்;மரக்கறி,இறைச்சி இதில் அடங்கும்.
உங்கள் கூட்டைதான் நாங்கள் பாற்கறி என்கிறோம். இலைக்கறி வகைகளை சுண்டுவோம்.(முருங்கை;முல்லை;முசுட்டை;அகத்தி;குறிஞ்சா....இப்படிப்பல அதில் அடக்கம்....
விரத நாட்களில் முழுச்சைவச் சாப்பாடுதான்.
சிற்றுண்டி வகையில் பிட்டு;இடியப்பம் பெரும் பங்கு வகுக்கும் ;இதன் பின்னே ....தோசை ,இட்லி....
படத்தில் உள்ள சாப்பாடு என்ன????விசேசத்திற்கு!!
யோகன் பாரிஸ்

said...

சாரி டீச்சர்!
வர கொஞ்சம் லேட் ஆகிவிட்டது!
யப்பா ஒரே பசி டீச்சர்!
அந்த ப்ளேட்டை கொஞ்சம் எனுக்காத் தள்ளறீங்களா?
பரிமாறுங்க டீச்சர்!
ஒரு வடைக்கு நாலு வடையா வையுங்க!
சிறு வடை கொடுத்தோர்
பெருங் கொடை கொடுத்தோரே அப்படின்னு பாட்டே இருக்கு டீச்சர்! :-)

நட்சத்திர வாரம்!
நட்சத்திர விருந்து!!

said...

நீங்க சமைச்ச போட்டோவை போட்டு..., இன்னொருவாட்டி நியூசிலாந்து உங்க வீட்ல சாப்டவே வந்து ஒரு எட்டு வரணும், நாக்லே எச்சி,..சீ.. ஜலம் ஊறுது, நான் வரேன், அங்கே மத்தியான ப்ரியாணி வாசனை தூக்குது, ஞாயித்துக் கிழமை, போகணும், ஒரு புடி பிடிக்க, வர்ட்டா!

said...

அகத்தீ,

நீங்க இங்கே ( தமிழ் ப்ளொக்)லே புதுசுன்றதாலே ஒரு ரகசியம் இன்னும்
தெரியலை. அக்கா ஒரு க.கை.நா. இது தெரியாம என்கிட்டே கேட்டுட்டீங்களே(-:
நிறைய தம்பிகள் இருக்காங்க இந்த அக்காவுக்கு. அந்த தைரியம்தான் இன்னும்
எழுதிக்கிட்டு இருக்கேன்:-)))

தமிழ்மணம் முகப்புலெயே இடதுபக்கத்தில் விவரம் இருக்கேப்பா. அந்த
நிரல் துண்டை உங்க டெம்ப்ளேட்லே ஒட்டுனாப் போதுமே!

இருங்க, நம்ம நண்பர்கள்/தம்பிகள்/தங்கைகள் யாராவது உதவிக்கு
வர்றாங்களான்னு பார்க்கலாம். எதுக்கும் கூவிக்கிறேன்........

ஹெல்ப் ப்ளீஸ் ஹெல்ப் ப்ளீஸ் ஹெல்ப் ப்ளீஸ்

said...

வாங்க பாலா.

அநேகமா அந்தக் காலக்கட்டத்துலே எல்லார் வீட்டுலேயும் வாழ்க்கைமுறைகள்
இப்படித்தான் இருந்துருக்கும். காலம் மாற மாற இப்ப டிவி முன்னாலே
சோறுன்னு ஆயிருச்சு(-: அநேகமா இதுவும் எல்லார் வீட்டுலேயும்??????

said...

கொத்ஸ், வாங்க.

ரெண்டு பேருக்கு நிஜமாவே ஓவர்தான். பந்திக்கு வந்துட்டீங்க. இப்படி முதல்லே
வலது கைப்பக்கமா உக்காருங்க.( எனக்கு இடது கைப் பழக்கமா? )

said...

வாங்க கார்த்திக்.

கல்யாண விருந்தா? உங்க கல்யாணத்துக்குக் கூப்புடுங்களேன். நாங்கெல்லாம்
விருந்துக்கு வந்துருவொம்:-)))

said...

வாங்க யோகன்.

கூட்டுக் குடும்ப காலத்துலே வளர்ந்த எல்லாருக்கும் இதுபோல நினைவுகள்
கட்டாயம் இருக்கும். கையிலே 'கவளம்' வாங்குனா, தேய்க்கவேண்டிய
பாத்திரம் குறைவு:-)

இது ஒரு விருந்துக்குத் தயாரிச்சது. அன்னிக்கு வீட்டுலே பூஜை இருந்துச்சு.
யாருக்கா? ....:-)))

said...

வாங்க KRS,

தட்டைத் தள்ளுறது என்ன? எல்லாம் செல்ஃப் சர்வீஸ்தான்:-)))

நாலு வடையை தாராளமா எடுத்துக்கலாம்.ஆனா அது வடை
இல்லை, போண்டா:-)))

said...

வாங்க உதயகுமார்.

உங்களையெல்லாம் நியூஸிக்கு வரவழைக்கத்தான் எங்க டூரிஸம் போர்டு
இப்படி 'போர்டு' வச்சுருக்கு:-))))