வெய்யில் காலத்துக்கு இதமாக இருப்பது எது?
வீட்டு முன்னாலே ஒரு தென்னோலைப் பந்தலும், கயித்துக்கட்டிலும்.
தரையெல்லாம் ஆத்துமணல் தூவித் தண்ணி தெளிச்சுவிட்டுட்டா அப்படியே 'சில்'ன்னு ஆளைத்தூக்கிட்டுப் போயிறாதா?
நாகரிக உலகமுன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் காலக்கட்டத்தில் இதுக்கெல்லாம் நான் எங்கே போவேன்?
கவலைப்படாதே சகோத(ரா)ரின்னு நம்ம ஏக்கத்தைப் புரிஞ்சுக்கிட்ட ச்சீனர்கள் உதவிக்கு ஓடோடி வந்துட்டாங்க.
நூத்திஎழுபத்தியொம்போது தானாமே! இப்பத்தான் வீட்டுக்கு வந்த 'ஜங்க் மெயிலில் பார்த்தேன். ரொம்பநாளா ஒரு கண்ணு இதுமேலே இருந்துச்சுதான். ஆனா வேணுமா வேணாமான்னு முடிவெடுக்கத்தான் நாளாச்சு. 229ன்னு போட்டுருந்தான். இப்போ அம்பதைக் குறைச்சிருக்கான்:-) ஸ்டோர்வொய்டு ஸேல்னு, எதையெடுத்தாலும் 15% அல்லது 20% கழிவுன்னு வர்றதும் வழக்கம்தான். நமக்கு 'உண்மையாவே' வேணுங்கற பொருட்கள் மட்டும் ஸேலில் இல்லைன்றதைப் பொடிப்'பிரிண்டுலே போட்டுருவாங்க. (-: எலெக்ட்ரானிக்ஸ் & எலெக்ட்ரிகல் ஐட்டம்ஸ் எக்ஸ்க்ளூடட்.
ஆனாலும் இங்கே என்னமோத்தான் ஆகிக்கிடக்கு. அவுட் டோர் ஃபர்னிச்சர் சரி. தொலையட்டும் இந்த கேம்பிங் ஆக்ஸஸரீஸ்ன்னு இருக்கறதைப் பார்க்கணுமே....
நாலு தட்டு அலமாரியாம், ஸ்டோரேஜ் வச்சுக்கற மேசையாம். பாத்திரம் கழுவும் கேம்ப் ஸிங்க், கேம்ப் கிச்சன்,சோலார் ஷவர், ரெண்டு அறையுள்ள டெண்ட், நாற்காலிகள் (இதுலே ட்ரிங் கேன் வச்சுக்கற ஹோல்டர்ஸ் வேற), கட்டில்கள், கேம்ஸ் விளையாடிக்கன்னு தனியா ஒரு சதுர மேசை இப்படி அட்டகாசம். இவ்வளவும் வேணுமுன்னா பேசாம வீட்டுலேயே இருக்கலாம்தானே?
கஸீபோ வாங்க ஓடினோம். 'நோ ரெயின் செக்' காலையில் போயிருக்கலாம். வசதிப்படலை. இதுக்குள்ளெ வித்துப்போயிருக்குமோ என்னவோ? 'நமக்கு விதிச்சிருந்தாக் கட்டாயம் கிடைக்கும்' இது ஆத்ம விசாரம். கிடைக்கணுங்கறது கிடைக்காமல் போகாது:-)
கிடைச்சது. கூடவே ஃப்ரீ போனஸ் நெட். ஈக்கள் வராம இருக்கும் வலைச்சுவர்.
வீட்டுக்குக் கொண்டுவந்து இறக்குனதும் முதல் காரியம் நம்ம கிங்குக்குச் சேதி சொல்லணும். அவர் வந்து போட்டுத் தரட்டும். எனக்கு 'பல்'வேலை இருந்துச்சு. போயிட்டுத் திரும்பும்போது, நம் வீட்டு வாசலில் ஒரு கும்பல் நிக்குது. (நாலு பேர் இருந்தால் கூட்டம் என்று கொள்க)
கிங் & கோ வந்து பேக்கைத் திறந்து பார்த்துப் பாராட்டிக்கிட்டு இருக்காங்க. அவரோட தம்பிக்கு ஒண்ணு வாங்கிக்கணுமாம். தரையோடு சேர்த்துப் பிடிப்பிக்க பலமான ஒரு பொருள் வேணும். 'பேக்'கில் வந்த கம்பிக்குப் பலம் போதாது. அடிக்குற காத்துலே பிச்சுக்கும். இன்னிக்கு வியாழந்தான். இன்னும் ரெண்டு நாள் வீக் எண்ட்லே வேலையை வச்சுக்கலாம்.
வெள்ளிக்கிழமை வந்த ஜங்க் மெயிலில் இன்னொரு கடையில் கயித்துக்கட்டில் இருக்கு. 25% கழிவு. ஊரே கோடைக்கு தயார் ஆகுது. ச்சீனர்களுக்குத்தான் மக்கள் மேல் எவ்வளோ பரிவு!!!!! அடடா......
ஒவ்வொண்ணுக்கும் சரியான குறிப்புகள். படத்தோடு விளக்கங்கள். 'ஏ'வை, 'பி' யோடு இணைக்கவும். 'எஃப்' யைக்கொண்டு முடுக்கவும்( இது ஸ்க்ரூ) இப்படி......
பரபரன்னு இணைச்சு கட்டிலை உருவக்கி முடிச்சதும், எதோ தனக்குத்தான் எல்லாம் தயாராகுதுன்ற நினைப்பு இங்கே ஒருத்தருக்கு:-))))
ஆமா....நம்மூர்களிலே இன்னும் கயித்துக்கட்டில் இருக்கா இல்ல அதுவும் கால வெள்ளத்தில் அடிச்சுக்கிட்டுப் போயிருச்சா?
இனி கொட்டாய் வேலை பாக்கி. மூணு மீட்டர் பை மூணு மீட்டர். போட நினைச்சிருக்கும் இடத்தில் சரி வருமான்னு தெரியலை. இடத்தை அளந்தா
2.97 மீட்டர்தான் இருக்கு . வுட்டுற முடியுதா?
எடுத்துப் பிரிச்சுப்போட்டு வேலையை ஆரம்பிச்சோம். 1,2,3ன்னு வகைகளைப் பிரிச்சாச்சு. செல்லம்போல எல்லாத்தையும் யோசிச்சு வச்சுருக்கான் ச்சீனாக்காரன்!!!!
சொன்னபடி செஞ்சோம். இடம் பத்தாதுன்னு நினைச்சுக்கிட்டு கொஞ்சதூரம் தள்ளி அசெம்பிள் பண்ணியாச்சு. இப்ப எப்படி இதை நகர்த்தணும்? நாலுபேர் இருந்தா ஆளுக்கு ஒரு பக்கம் பிடிக்கலாம். இருப்பதோ நாலு கைகள்.
அரையடி அரையடியா நகர்த்துவோமுன்னு சாதிச்சுப்புட்டொம்லெ:-)))
ஒரே ஒரு சோகம் என்னென்னா மரக்கிளைகள் தடுக்குமுன்னு நினைச்சுப் பரபரன்னு கிளைகளைத் தரிச்சதுதான். ஒரே ஒரு கிளையை வெட்டியிருந்தாப்போதும். ஆனா நம்மாளு சிவன், அழிக்கறதில்.
அப்புறம்?
அப்புறமென்ன...? என்கிட்டே கொஞ்சம் வாங்கிக்கட்டிக்கிட்டார்(வழக்கம்போல)
சிலபேருக்கு அப்படி ஒரு ராசி. என்னதான் மாஞ்சுமாஞ்சு செஞ்சுகொடுத்தாலும் கடைசியில் ஒரு (அவப்)பேரு.
அதெல்லாம் முளைச்சு வந்துருமாம், கொஞ்சநாளில்.
பார்க்கலாம், பக்கத்துவீட்டு மரம் முளைக்குதான்னு!!!!
பந்தல் போட்டாச்சு.