வீட்டு வேலை தொடங்கி 2 மாசம் முடிஞ்சிடுச்சு! மத்தியானம் போனேன். கூரையெல்லாம் ஃப்ரேம் போட்டாச்சு. நாளைக்கு ஃபேஷியா fascia போடறவங்க வர்றாங்களாம். வீட்டுச்சுவரும் கூரையும் இணையும் இடத்துலே 'சட்'ன்னு கூரை நின்னுடாதில்லை? சரிஞ்சு இறங்கி வரும்போது சுவருக்கும், வெளிப்புறம் நீட்டிக்கிட்டு இருக்கும் கூரையின் ஓரத்துக்கும் ஒரு அரை மீட்டர் இடைவெளி இருக்கு. இந்த அரை மீட்டர் அகலத்துக்கு 'ஸ்டீல் தகடு' போல வர்ற போர்டு, வெளிப்புற 'ஸீலிங்'மாதிரி வீட்டைச் சுத்திப் போடறாங்க. இதுக்கு (soffit)சாஃபிட்ன்னு பேராம். இந்த சாஃபிட் ஓரத்தை மூடறதுதான் ஃபேஷியாவாம். அதுக்கு மேலேதான் மழைத்தண்ணி வழிஞ்சு ஓடறதுக்கு(guttering) 'கட்டரிங்' உக்காருது.
கூரையின் கலர்லேயே ஃபேஷியாவும், மழைத்தண்ணீ வழிஞ்சோடும் கட்டரிங் தெரிவு செஞ்சிருந்தோம். நியூ டெனிம் ப்ளூ. சிலர், வெளிப்புற சுவரின் நிறத்திலும் போட்டுக்கறாங்க.
கூரை, சுவர், கட்டரிங்ன்னு இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஒரு தனி கம்பெனி. எல்லார்கிட்டேயும் ஒப்பந்தம் போட்டுவச்சிருக்கோம். இவுங்க எல்லோரையும் ஒருங்கிணைச்சு வேலை வாங்கறதுக்குள்ளே................... இதுலே பில்டரோட ஒத்துழைப்பும் வேணும். பெரிய தலைவலின்னுதான் பில்டிங் கம்பெனிகளுக்கு மொத்தம் காண்ட்ராக்ட் விட்டுடறாங்க மக்கள். நம்ம அப்படியெல்லாம் அடங்குற ஆட்களா? வேலியில் போற ஓணானை.................
நுழைவாசல் கதவுக்கு முன்னால் வரவேண்டிய தூணுக்கு அடி இன்று போட்டாச்சு. காங்க்ரீட் மேடைமாதிரி போட்டு , தூண் அதுக்குள்ளே இருந்து வர்ற மாதிரி இருக்கும். அந்தத் தூண் கனத்தை தாங்கணும்னு உள்ளே சிமெண்ட்லே ஒரு இரும்பு 'க்ளாம்ப்' வச்சு அதுலே ஒரு நல்ல மரத்தண்டு இணைக்கணுமாம்..அதைச் சுத்தி 'ஃப்ளூட்டட் காலம்' வரும். ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ்லே வார்த்து எடுப்பாங்களாம்.
இன்னைக்கு முதல் 'வஸந்தகாலம்' வந்தாச்சு. செப்டம்பர் ஒன்னுன்னு தேதியைப் பார்த்ததும் குளிர் கொஞ்சமே கொஞ்சம் குறைஞ்சிருக்குன்னு ஒரு தோணல்! மனுஷ மனசு இருக்கே..............
ஃபேஷியாவுக்கு சாமான்கள் வந்து இறங்கியிருக்கு. 'பில்டிங் பேப்பர்' போட ஆரம்பிச்சிருக்காங்க. நேத்து போட்ட சிமெண்ட் நல்லாக் காஞ்சு போச்சு. அந்த 'க்ளாம்ப்'லே மரத்தூணை வச்சு இணச்சாச்சு. இந்த தூண்கள் மொத்தம் நாலு. ரெண்டு நுழைவாசலுக்கும்,மற்ற ரெண்டும் 'காரேஜ்' கதவை ஒட்டியும் வருது!
நான் முந்தியே சொன்ன மாதிரி இங்கே வீடு கட்டறதுக்கு ரொம்ப 'நக்ரா'தான். ஏகப்பட்ட மரம் செலவாயிருக்கு. இன்னத் தேதிக்குப் பார்த்தா, மரச்சட்டங்களா கூட்டமா ஒரு காடு மாதிரி இருக்கு. இனி அதை மூடறமாதிரி, ஒரு பில்டிங் பேப்பர், செங்கல், அதுக்குமேலே சிமெண்ட் ப்ளாஸ்டர். இதெல்லாம் வெளிப்புறம். உள்ளே வேற வைத்தியம்! பிங்க் பேட், ஜிப் போர்டு, ப்ளாஸ்டர்ன்னு கூடிக்கிட்டேபோகும். சரி எப்படியோ குளிராம இருந்தாச் சரின்னு இருக்கேன்.
'ஃபேஷியா' போட ஆரம்பிச்சாச்சு! 'கராஜ்'க்கு முகப்பு 'பாலிஸ்டைரீன்' என்கிறதாலே அங்கே '·ப்ரேம் கார்ட்' பேப்பர் போட்டு இருக்கு. கோபால் மத்தியானம் போனாராம். அங்கெ நாம் தேர்ந்தெடுத்த 'பாத் டப்' க்கு இடமில்லையாம். சின்னதா இருக்குதாம் இடம். ஒதுக்குன இடம் இப்ப எங்கே போச்சு? அதனாலே நாளைக்கு முதல்லே 'பாத்ரூம் ·பிட்டிங்கு ·பைனலைஸ்' செய்யணும்னு சொன்னார்.
4/9
இன்னைக்கு மகளுக்கு பிறந்தநாள். ஆச்சு வயசு 21. இந்த வீடு நமக்குப் பிறகு அவளுக்குத்தானே போய்ச் சேரும்! இதுவரை மகள் ஒருநாள்கூட இங்கே வந்து பார்க்கலை! கட்டி முடிச்சபிறகு வரேன்னு சொல்லி இருக்காள். நாங்கெல்லாம் அந்தக் காலத்துலே அப்பா அம்மாகூடப் போக ஆலாப் பறப்போம். இப்பத்துப் பசங்களுக்கு ஆர்வம் வேற விஷயங்களில் இருக்கு. இந்தப் பிறந்தநாளை இங்கே கொண்டாடுறது ரொம்ப முக்கியமாம். 21 வயசுன்றது அவுங்களை, 'அடல்ட் சமுதாயத்துக்குள்ளே கொண்டுவரும் வயசாம். அதுக்கு அடையாளமா பெரிய சாவியைப் பரிசாத் தருவாங்க. உலகத்தைத் திறக்கும் திறவுகோல்!!!!
பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் எல்லாம் பிள்ளைங்களே பண்ணிக்கறதாலே, நமக்கு அந்த அலைச்சல் கிடையாது. நம்மைக் கூப்புட்டாங்கன்னா நாமும் போய் கலந்துக்கிட்டு, மறக்காம அங்கத்துச் செலவுகளுக்கான பில்லை செட்டில் செஞ்சுட்டு வரணும். கூப்புடலைன்னா? பில் வந்தபிறகு செட்டில் செஞ்சாப் போதும்:-)
மறுநாள் காலையிலெ கோயிலுக்குப் போறதுக்கு முன்னாலெ ''அங்கே' போனோம். (அங்கேன்னா இதுக்குள்ளே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணும். தெரிலென்னா நீங்க பதிவுகளைச் சரியாப் படிக்கலேன்னு அர்த்தம்:-)
'க்ரேக்' வேலை செஞ்சுகிட்டு இருந்தார். எல்லா அறைகளிலும் மூலைகள் சேருமிடத்தில் எல்லாம் ஒரு 'ப்ளை போர்டு' அடிச்சுகிட்டு இருந்தார். ஊஞ்சல் வர்ற இடம் எதுன்னு சொன்னார். அங்கே ஏற்கெனவே போட்ட மரச்சட்டத்துக்கு சப்போர்ட்டா இன்னொரு கனமான மரம் போடணும். அதுக்குள்ள 'க்ளாம்ப்' க்கு ஏற்பாடு செய்யணும்.
நாங்க ஏற்கெனவே எந்த மாதிரி பாத் டப்'ன்னு தீர்மானிச்சு அதுக்குத் தகுந்த மாதிரிதான் 'ப்ளான்' வரையச் சொன்னோம். இப்பப் பாத்தா இடம் சின்னதா ஆயிருக்கு! நமக்கு 1850 மில்லிமீட்டர் வேணும். ஆனா இருக்கற இடம் 1800க்கும் கொஞ்சம் துளியூண்டு கம்மி. அதனாலே அதே மாதிரி பாத் டப் சின்ன சைஸ் வாங்கணும். அதே மாதிரி விருந்தினருக்குள்ள 'டாய்லெட்'டில் கைகழுவும் பேசின் வைக்கற இடமும் சின்னதா ஆயிருச்சு. அதுக்கும் சின்ன சைஸ்தான் தேர்ந்தெடுத்தோம். மரச்சட்டம் அடிக்கும்போது, அகலம் கூடுனதை,ரொம்ப திக்கா இருக்கறதை அடிச்சு வச்சுட்டதாலே 20,30ன்னு மில்லி( மீட்டர்)கள் காணாமப் போயிருக்கு. இப்ப இன்னும் ச்சின்னதாத் தேடணும்(-: 500 மிமி இப்ப 450 மிமி. அம்பது போயே போயிந்தி!
குளிக்கறதுக்கு ஷவர் ஹெட், தண்ணி மிக்ஸர் ( சுடு தண்ணீ, பச்சைத்தண்ணீ கலக்கறதுக்கு) இதுக்கெல்லாம் நாம 'க்வோட்' வாங்குனது ரொம்ப நல்ல தரமானது. இப்ப பட்ஜட் கையைக் கடிக்கறதாலெ சுமாரா வாங்குனா போதும்னு என் எண்ணம். ஆனா கோபால்தான் 'ஒரேடியா இப்படி சொல்லறயே, கொஞ்சம் நல்லதாவே வாங்கலாம்' னு சொல்லி, மறுபடி எல்லா குழாய், ஷவர் சாமான்கள் எல்லாம் தேர்ந்தெடுக்கும்படி ஆகிருச்சு! இதுலேயே நிறைய நேரம் போயிடுச்சு.
இதுவரைக்கும் நூறு தடவை ( சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன், ஆனாலும் ஒரு 30 தடவை இருக்கும்) இந்தக் கடைங்களைப் பாத்து கொஞ்சம் அலுப்பாவே ஆயிடுச்சு!
தினம் இதே வேலைன்னு இன்னைக்கும் போய் அளந்தோம். லாண்டரிக்குப் பக்கத்துலெ வர்ற கப்போர்டுக்கு 'பை ·போல்டு' கதவு போட்டா அங்கே அடியிலெ 'வெட் க்ரைண்டர்' வைக்க இடம் கிடைக்கும்னு கோபால் ஐடியா கொடுத்தார். வெரிகுட்! இப்படித்தான், எதிர்ப்பார்க்காத நேரங்களில் சில சூப்பர் ஐடியாக்களை வெளியிடுவார்!
இப்பல்லாம் வீடு இருக்கற இடத்துக்குப் போனா, இங்கே என்ன சாமான் வைக்கணும்,அங்கெ என்ன வருது அப்படின்னு கவனமா இருக்கறதாலெ நேரம் இழுத்துகிட்டுப் போயிடுது.
ஆனாலும் 'சாமி ரூம்'தான் மனசுக்குத் திருப்தியா இல்லை. சின்னதா இருக்கறதுபோல இருக்கு! ரொம்பச் சின்னது இல்லை, ஆனாலும்சின்னதுதான். இனி ஒண்ணும் செய்ய முடியாது. 'அடுத்த வீடு' கட்டறப்ப கவனமா இருக்கணும்னு நினைச்சுகிட்டேன்!
'ஃபேஷியா( fascia)' போட்டு முடிச்சாச்சு. அப்படியே 'கட்டரிங்' போடுவாங்க நாளைக்குன்னு நினைக்கிறோம். இருட்டின பிறகுதான் போனோம்! அங்கெ தெரு விளக்கு பிரகாசமா இருக்கறதாலெ எல்லாம் நல்லாவே பாக்கமுடியுது!
சாயந்திரமா கோயிலுக்குப் போகணும்னு கிளம்பினோம். இன்னைக்கு ஸ்ரீகிருஷ்ணஜெயந்தியாச்சே! அதுக்கு முன்னலெ 'வழக்கமா போற' இடத்துக்கும் போனோம்! மேற்கூரை போடறதுக்கு ஏற்பாடு நடந்துகிட்டு இருக்கு. ஒரு ஆள் நிறைய ஆணிங்களை நல்ல இடைவெளி (ஒண்ணுபோல இருந்தது) விட்டு அடிச்சுகிட்டு இருந்தார். 'பில்டிங் பேப்பர்' வந்து இறங்கி இருந்தது. இருட்டும்வரை வேலை செய்வாராம்.
இதுக்கிடையில் நம்ம நண்பர் ஒருத்தர் உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில் இருக்காங்களேன்னு அவுங்களைப் பாக்கப் போனோம். அப்படியே வீட்டுவேலை எவ்வளவு நடந்திருக்குன்னும் பார்க்கணுமில்லே, கூரை மேலே black colour 'பில்டிங் பேப்பர்' போட ஆரம்பிச்சு ரெண்டு அறைகளுக்குப் போட்டுருக்காங்க! அந்த பேப்பருக்குமேலே ஆணியிலே சப்போர்ட் கொடுத்து மரச்சட்டங்கள் உக்காந்து இருக்கு. Therma craftன்னு சொல்ற பேப்பர் அது. இந்தப் பேப்பரைப் போட்டபிறகு, அதுக்குமேலே 'ஸ்டீல் ஓடு'ங்க வருமாம். பேப்பரு போட ஆரம்பிச்ச 7 நாளுக்குள்ளே ஓடு போட்டுரணுமாம். இதே பேப்பரைத்தான் வீட்டைச் சுத்தியும் செங்கல் வைக்கறதுக்கு முன்னாலே போடணும். அது வெள்ளை நிறம். இது வீட்டுக்குள்ளே இருக்கற சூட்டைத் தக்க வைக்கறதுக்குத்தான்!
அந்தப் பேப்பரைக் கொஞ்சம் கிழிச்சுப் பார்த்தோம். நல்ல 'திக்' ஆகத்தான் இருக்கு. கொஞ்சம் 'தோல்' மாதிரி இருந்தது. 7 நாளைக்குள்ளே ஓடு வரணும். அதுக்குள்ளெ மழை வந்துச்சுன்னா, பேப்பர் கெடுமோ, தண்ணீ ஊறிடுமோன்னு கவலையா இருந்தது. கொஞ்சம் பேப்பரைக் கிழிச்சுக் கொண்டுவந்து தண்ணீலே போட்டுப் பார்த்தோம். தாமரை இலை போல, தண்ணி நிக்காம ஓடுச்சு. எதா இருந்தாலும், மழை வரக்கூடாதேன்னு சாமியை வேண்டிகிட்டு இருக்கேன்!
ஆணிஅடிச்சாங்க பாருங்க, அதுக்குமேலெ 'பில்டிங்' பேப்பரு போட்டு, அதை ஒட்டி சின்ன மரச்சட்டங்களை வச்சு அடிச்சிருக்காங்க. இப்ப வீடு இருட்டா இருக்கு. ஒருநாளைக்கு வெயில் இருக்கறப்ப வந்து பாக்கணும், எங்கெங்கே எவ்வளவு வெயில் வீட்டுக்குள்ளெ வரும்னு தெரிஞ்சிக்கலாம்!
'மார்னிங் கோர்ட்'க்கு 'போய்ட்' சரியா டிஸைன் போடாததாலே அதுக்குண்டான மரம், டிம்பர்காரங்க அனுப்பலையாம்! நம்ம 'பில்டர்' மரச் சட்டங்களை அறுத்து, ஒரு ஃப்ரேம் பண்ணி போட்டார். இதாலெ ஃபேஷியா வேலை கொஞ்சம் தாமதமாயிருச்சு!
தொடரும்......................