Sunday, August 05, 2007

எங்கூரு 'சங்கமம்'

ரெண்டு வருசத்துக்கு ஒருமுறை நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. வருசாவருசம் நடத்துறாங்கன்னு சொன்னாலும், ஒரு வருசம் இங்கே 'கிறைஸ்ட்சர்ச்' லேன்னா இன்னொரு வருஷம் வெல்லிங்டன்.


ஊர் உலகத்துலெ இருந்தெல்லாம் கலைஞர்கள் இதுலே கலை நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கவும்,இல்லேன்னா ச்சும்மா வேடிக்கை பார்க்கவுமுன்னு கூடறதுதான். பெரிய புகழ்பெற்றவர் முதல் சாதாரண பஸ்கர்கள் வரை கலந்துகட்டி ஜாம் ஜாமுன்னு இருக்கும். இந்த வருசம் நம்ம சார்லி சாப்ளினோட பேத்தி வந்துருக்காஹ.

கலைவிழான்னா ஒரு 'தீம்' வச்சுக்கணுமுல்லே? இந்த விழாவுக்கு 'ஸ்நோ ஆர்கிட்'. துணியிலே செஞ்சு அதுக்குள்ளே காத்தை ரொப்பி, ஒம்போது மீட்டர் உயரத்துக்கு ஒரு மரமா நிறுத்தி வச்சுருக்காங்க. காத்தூதும் மிசினுக்கு

ஆ(ஃப்)பு வைக்கும் நாள் ஆகஸ்ட் 12 நடு இரவு. இந்த வருசம் விழா (நேத்து ) ஜூலை 26 ஆரம்பம். 18 நாள் கொண்டாட்டம். ஆட்டம், பாட்டம்,நாடகம், நடனமுனு அங்கங்கே வெவ்வேற இடத்துலே என்னென்னவோ நடக்குது.எங்க ஊர் கதீட்ரல் வாசலில் இருக்கும் நகரச் சதுக்கத்தில் மல்டிமீடியா ஏற்பாடு செஞ்சு,ஒரு ஷோ நடந்துக்கிட்டு இருக்கு. காப்டன் குக் வந்தது முதல் என்னென்னா ஆச்சுன்னு ஒலியுமொளியுமா விளக்குறாங்க. 'விளக்கு'ன்னதும் ஞாபகம் வருது, நம்ம தேவாலயமுகப்பில் சிகப்பு வட்டத்துலே ஒளிக் 'கோலம்' போட்டுக்கிட்டு இருக்கு. ஒரு 25 மீட்டர் தூரத்துலே இருந்து ஒளிக்கதிர்கள் பாய்ஞ்சு வருது. இதுக்குப்பேர் 'விண்ட்டர் ரோஸ்'

'குக்' காட்சி காமிக்கும் விநோத மேடையைச் சுத்திக் குடைகளால் ஒரு அலங்காரம்.

சதுக்கத்துலே இன்னொரு பக்கம் டெல்ஸ்ட்ரா கம்பெனி ஸ்பான்ஸார் செஞ்ச 'டேலண்ட் ஷோ'கூடாரம். முப்பத்தி அஞ்சு வெள்ளி டிக்கெட். கூடாரத்தை ரெண்டு பகுதியாப் பிரிச்சு வச்சுருக்காங்க, மேடைஉள்ள பகுதி சின்னதாவும், மக்கள்ஸ் 'தாகம்'தீர்க்கும் பகுதி பெருசாவும்! கலைஞர்களுக்கு மட்டுமில்லை,கலையை ரசிக்கிறவங்களுக்கும் ஒரு மயக்கம் வேண்டித்தான் இருக்கோ?


சதுக்கத்தின் ஒரு பக்கம் UFO டிஸைன்னு ஒரு நீளவட்டமா செஞ்சு கம்பியிலே நிறுத்திவச்சுருக்கு.எனக்கென்னவோ இதைப் பார்த்தா இங்கத்து 'ரக்பி' பந்துதான் ஞாபகம் வருது. ஆனா இந்த டிஸைன் & ஷேப்லே இதுவரை உலகம் முழுக்க 96 மட்டும்தான் கட்டி இருக்காங்களாம். அப்ப இது தொன்னுத்தாறுலே ஒண்ணு! பின்லாந்துக்காரர் Matti Suuronen 1968லே முதல்முதலா இதை வடிவமைச்சாராம்.இன்னொரு பக்கம் நியூஸிகளின் கனவான 'கால் ஏக்கர்', இப்ப எப்படி கனவாவே போய்க்கிட்டு இருக்குன்னு சொல்லுது. இங்கிலாந்தில் இருந்து இங்கே வந்திறங்கிய மக்கள் அந்தக் காலத்துலே கால் ஏக்கர் நிலம், அதுலே ஒரு வீடு என்னும் கனவோடு வந்தவங்களாம். காணி நிலம் வேணுமுன்னு பாரதி அவுங்களுக்கும் சேர்த்துத்தான் சொல்லி இருக்கார்! ஆமாம், கால் ஏக்கர்ன்னா எத்தனை சதுர மீட்டர்?நம்ம தேவாலயத்தைத் தொட்டுக்கிட்டுப் புல்வெளியில் ஒரு பெரிய திரை. நீரும் நெருப்பும் படம் காமிக்கப் போறாங்களாம்,( Fire,water and film) அடுத்தவாரம். இப்ப அங்கே மாலை 6 முதல் மணிக்கு ஒரு தடவை நாளைக்கு மூணு முறை, மவொரிகளின் தயாரிப்பான இயற்கைக் காட்சி அனிமேஷன் ஷோ நடக்குது. எல்லாம் இலவசம்தான். நின்னு பார்க்கத்தான் ஆள் வேணும்.ஜப்பான் உணவுகள் விற்கும் கடையில், வாடிக்கையாளர்களைக் கவரும்விதம் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த (ப்ளாஸ்டிக்) உணவுகளை உங்களுக்காக சுட்டுக்கிட்டோம்:-)


இதையெல்லாம் ஒரு சுத்து வேடிக்கை பார்த்துக்கிட்டே நாங்க போய்ச் சேர்ந்தது 'ராயல் ஐஸக் தியேட்டர்'க்கு. க்யூபா நாட்டு நடனம் பார்க்க வந்துருக்கோம். பதினேழு பெண்கள், பாடகர், கீபோர்டு, கிட்டார் , ட்ரம்ன்னுஆறு ஆண்கள்னு மொத்தம் 23 பேர் கொண்ட கலைக்குழு.


இந்த தியேட்டருக்கு இப்பத்தான் முதல்முறையா வர்றோம். இப்படின்னு ஒண்ணு இங்கே இருக்குன்றதுகூட இதுவரை தெரியாது(-: டிக்கெட்டு கிடைச்ச(???)பிறகுதான் எங்கே, என்னன்னு தேடினேன். 20 நிமிஷத்துக்கு முன்னே அங்கே இருக்கணுமாம். அட......... இந்த இடம்தானா? எத்தனை முறை இதைக் கடந்து நடந்து போயிருக்கேன்.ஒரு தடவையாவது மேலே நிமிர்ந்து முழுக் கட்டடத்தையும் பார்த்தேனா? இல்லையே.(-:ரொம்ப அடக்கமானவள்ன்னு நான் சொன்னா நம்புவீங்கதானே?
இன்னும் சில மாசத்துலே 100 வயசாகப் போகுது இதுக்கு. ரெண்டு வருசத்துக்கு முன்னேதான் பழமை கொஞ்சம்கூட மா(ற்)றாமல் புதுப்பிச்சு இருக்காங்க. 1266 இருக்கைகள். அம்மாடியோவ்........... கூட்டமே இல்லாத அந்தக் காலத்துலே யாருக்காக இப்படிக் கட்டி வச்சாங்களாம்? இங்கே படங்கள் எடுக்கத் தடா. ஆனா முழு விவரமும் படங்களாவும், ஒரு 'வர்ச்சுவல் டூரோடும்' அவுங்களெ இங்கே போட்டு வச்சுருக்காங்க.நம்ம இருக்கைக்காக மாடிக்குப்போனோம். அங்கே ஒரு ஃபோயர்லே bar சுறுசுறுப்பா இயங்குது. கலையும் குடியும் கைகோர்த்து நடக்கணும் என்பது எழுதப்படாத ஒரு விதி. அந்த ஹாலின் அடுத்த பகுதியிலே இதுவரை இங்கே நடந்த காட்சிகளின் போஸ்ட்டர்கள் சுவர் முழுக்க. நிக்கலஸ் நிக்கல்பி முதல் நட் க்ராக்கர் வரை பலவிதங்கள். நிறைய Ballet, guitar,Jazzன்னு பிரபலமானவங்க வந்து போயிருக்காங்க. அப்படியே பார்த்துக்கிட்டு வந்தப்பச் 'சட்'னு கண்ணு ஒரு இடத்துலே நின்னுச்சு. 'ஆனந்த சங்கர் பரத நாட்டியம்'. அட!!! எப்ப நடந்துச்சு? 1992. ம்ம்ம்ம்ம்ம்... அப்ப நாம்இங்கேதானே இதே ஊருலே இருந்தோம். எப்படி இதை மிஸ் செஞ்சோம்? என்னவா இருந்தோம்?
என்ற எல்லாக்கேள்விக்கும் கோபால் 'டான்'ன்னு ஒரே வரியில் பதில் சொல்லிட்டார்.

" நாறிக்கிட்டு இருந்தோம்"
இன்னும் போஸ்ட்டரைக் கவனிச்சுப் பார்த்ததுலே டிக்கெட் 30 டாலர்னு போட்டுருக்கு. அதான்.................... அதேதான்.நமக்கு அப்ப இருந்த 'ப்ரயாரிட்டி' வேற, இல்லையா? 15 வருசத்துலே மாற்றங்கள் வந்துருக்குதானே? இனிமே வாழ்க்கையைக் கொஞ்சம் அனுபவிக்கலாமுன்னு ஒருமனதா ஒரு முடிவு:-))))வாசலில் நம்ம டிக்கெட்டைக் கிழிச்சுக்கொடுத்து, ரொம்ப மரியாதையோடு கூட்டிட்டுப்போய் உக்காரவச்சாங்க. மேடையின் நட்டநடுப்பகுதிக்கு நேரா இருக்கு என்னோட இருக்கை. அடடா........ ஒரு தியேட்டர் பைனாக்குலர்ஸ் இருந்தா எவ்வளோ நல்லா இருக்கும். அதுவும் அந்த ஓல்ட் விக்டோரியன் ஸ்டைல்............. அதான், பட்டாம்பூச்சியை ஒரு தங்கக் குச்சியில் ஒட்டவச்ச மாதிரி இருக்குமேங்க. ஓபெரா கண்ணாடி. பழைய 'பீட்டர் ஃப்லிம்ஸ்'லே பார்த்துருப்பீங்கதானே? அதேதான். ஹூம்.......... மக்கள்ஸ் வந்துக்கிட்டு இருந்தாங்க. கையிலே ஒரு லிஸ்ட்டை வச்சுக்கிட்டு, ஒவ்வொருத்தர் பேரையும் செக் பண்ணிக்கிட்டு, கை குலுக்கிக்கிட்டு வந்துக்கிட்டு இருக்காங்க ரெண்டுபேர். நம்ம முறை வந்ததும், குலுக்கின கைக்குள்ளெ வந்துச்சு ஒரு ச்சீட்டு. இடைவேளைக்கு அந்த பார்லே இருந்து ஒரு காம்ப்ளிமெண்ட் ட்ரிங்! குடிச்சுட்டாப் போச்சு:-)

எக்கச்சக்கமா ப்ளாஸ்டிக் முத்து, வெள்ளை நிறக் கண்ணாடி மணிகள் வச்சு அலங்கரிச்சிருந்த ஒரு மேல்ச்சட்டைபோட்டுக்கிட்டு ஒரு வயதான(??) பாட்டி வந்திருந்தாங்க. முகத்தில் ஒரு சுருக்கமும் இல்லை. எல்லாம் கழுத்திலேதான். காலையில் இருந்து தலை அலங்காரத்தைக் கவனிச்சிருப்பாங்க போல. ரோலர்ஸ் வச்சு அழகா செட் செஞ்ச,ஒரே ஒரு இழைகூட இப்படி அப்படிக் கலைஞ்சு போகாத பஞ்சுக் கூந்தல், எனக்கென்னவோ 'நீதிபதிகள் போடும் விக்'கை ஞாபகப்படுத்துச்சு. அவுங்க பார்ட்னருக்கு நேரெதிரான தலை அலங்காரம். பளபளவென டாலடிக்கும் வழுக்கைத்தலை.விளக்கு எப்போ அணைப்பாங்களொன்னு என் கவலை. கண்ணெல்லாம் ஒரேதாக் கூசுது. (ச்சும்மாக்கிட. உனக்கும் காலம் வரும்னு
மனசாட்சி கூவுது)மக்கள்ஸ் வரவர, கடலலை பொங்கி வர்றதுபோல ஒரு ஓசை. எல்லாரும் ஒருவரோடொருவர் குசலபிரசனம். எல்லாரும் எல்லாரையும் பல வருசங்கள் பார்க்கலை போல. ஆனா விளக்கு அணைய ஆரம்பிச்சதும், எதோ சுவிட்ச் போட்டாப்போல ' கப்சுப்.'சொல்லிவச்சமாதிரி எல்லாரையும் ஒரே அச்சுலே போட்டு வார்த்தெடுத்த நடன மணிகள். ஒல்லிக்குச்சி உடம்புக்காரின்னு பாடலாம். அவுங்க நாலைஞ்சு பேர் சேர்ந்தா நாங்க ஒருத்தர்:-)))) பயங்கர ஸ்பீடுலே நடன அசைவுகள். சிகப்புத் திரையும்,கறுப்புப் பாவாடைகளும், சிகப்பு ப்ளவுஸ்களுமா கம்யூனிசத்தை ஞாபகப்படுத்துச்சு. அதுக்கப்புறம் வந்த நடனங்களில் நீலம், வெள்ளை, பிங்ன்னு ப்ளவுஸ் கலர்கள் மட்டுமே மாறிக்கிட்டு இருந்துச்சு. பாவாடைகளும், கால் சராய்களும் கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு.Danza Cuba, all female dance company. Spanish, Afro-Cuban folkloric dances, Flamenco meets Ballet இப்படித்தான் விளக்கம் கொடுத்துருந்தாங்க. இதெல்லாம் என்னா புரியுது நமக்கு? castanets கையிலே ஒளிச்சு வச்சுக்கிட்டு, இசைக்குத் தகுந்தாப்புலே அதுலே இருந்து வந்த 'டுக்டுக்' நல்லாத்தான் இருக்கு. கொஞ்சம்கூட தொய்வே இல்லாத ஒன்னரை மணி நேர நடனம். நடுவிலே வந்த இடைவெளியிலே ச்சீட்டுக்குப் பண்டமாற்றா 'நான்' வெறும் பழரசம் குடிச்சேன். பாதத்தைத் தாண்டி ஒரு மீட்டர்வரைக்கும் நீட்டி இருந்த ஃப்ரில் பாவாடை, தரையோடு உரசிவந்த நடனம் முழுசும்,எனக்கு ஒரே டென்ஷன். விழுந்துவச்சா என்னா கதின்னுதான்.


நடனம் முடிஞ்சு வெளியே வந்ததும், சதுக்கத்தின் பக்கத்தில் இருந்த மில்லினியம் ஹொட்டலில் ஒரு supperக்கும் அழைப்பிதழ் இருக்கு. ஆனா........... போகலை. குடிமகன்களுடன் பொய்முகம் காட்டிப் பேசணுமா? அதுக்குப் பதிலா 'கிறைஸ்ட்சர்ச் பை நைட்' ன்னு கலைவிழாவை வேடிக்கைப் பார்த்துட்டுப் போகலாம். மீண்டும் ஒரு மனது, ஒரு முடிவு:-)

"அருமையா நல்லாத்தான் ஆடுனாங்க. ஆனா மனசுலே பதியலை. அந்த நிமிஷம் பார்த்து அனுபவிச்சதோடு சரி"" நமக்குத் தெரிஞ்ச இசை இல்லாததும் ஒரு காரணமா இருக்கலாம்"


" இதுக்கு 65 டாலர் டிக்கெட், கொஞ்சம் கூடுதல் இல்லையா?"

" ஆமாம். இத்தனை பேர் வந்து போற ஏற்பாட்டுக்கெல்லாம் செலவு ஆகி இருக்குமுல்லே? "" அதுவும் சரிதான். ஆனா காசு கொடுத்து டிக்கெட் வாங்கி இருக்கணுமுன்னா நான் வந்தே இருக்கமாட்டேன். கூபா டான்ஸா......... எப்படி இருக்குமோ.............இதே காசுக்கு வேற ஷோ போயிருப்பேன்"" பிபிஎஸ் க்ளப் மெம்பர்களுக்கு எதாச்சும் பரிசு
கொடுக்க(ணு)லாமேன்னுதான்.............. "

" இதுக்குப் பதிலா ஊருக்குப் போற டிக்கெட்டுலே, நல்ல டிஸ்கவுண்டு கொடுக்கலாமுல்லே?"" சரியாப்போச்சு,போ. 65 லே வேலையை முடிக்கலாமுன்னா 650க்கு வேட்டு வைக்கிற?"


" போட்டும். ஒரு புது அனுபவம்தான். அங்கே ஃபோயர்லே பெரிய விளம்பரம் வச்சுருந்தாங்களே, கவனிச்சீங்களா? இந்த டான்ஸ் ஸ்பான்ஸார் செஞ்சது 'சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்'ன்னு.
------------------

8 comments:

said...

ஆஹா!

துளசியக்கா, இப்பத்தான் நான் இங்க இருக்கற ஊரு கலைவிழாவ பத்தி ஒரு பதிவு போட்டுட்டு வந்தேன்! :)

ஒலகமே கலைத்தாகத்துல பத்திக்கிட்டு எரியுதா?! :)

said...

வாங்க இளவஞ்சி.

//ஒலகமே கலைத்தாகத்துல பத்திக்கிட்டு எரியுதா?! :) //

சரியாப் பாயிண்டைப் புடிச்சீங்க பாருங்க, அங்கதான் நீங்க நிக்குறீங்க.

கலைத் 'தாகம்' :-))))))

Anonymous said...

டீச்சர் கலைத்தாகமா,
//நடுவிலே வந்த இடைவெளியிலே ச்சீட்டுக்குப் பண்டமாற்றா 'நான்' வெறும் பழரசம் குடிச்சேன்.//
எனக்குத்தெரியுமே, திராட்சைப்பழரசம் தானே

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

அதான் 'வெறும் பழரசம்'னு சொன்னதைப் பார்க்கலையா?
just Juice தாங்க.

இந்த 25 வருச வெளிநாட்டு வாழ்க்கையிலே 'ரசம்' பருகக்கூடக் கத்துக்கலைன்றது
என் மகத்தான சோகம்.

மதுவிலக்கு இருந்த சமயம் பொறந்து தொலைச்சுட்டேனே!
எங்க தலைமுறை தான் அநேகமாக் கடைசியா இருக்கும்.

said...

சரி,முதலில் தொழில் தர்மமாக ..
ஒரு ஏக்கர் = 4046.856 மீட்டர் ஸ்கொயர்.
கால் ஏக்கருக்கு = 1011.714
ஹூம்,இதுவே கடல் கணேசனாக இருந்தா ஏதாவது வீட்டுக்கு வந்திருக்கும். :-))
கலை என்றாலே ஒரு மயக்கம் தானே, அதான் மக்கள் அனுபவிக்கிறாங்க.
நீங்களும் மதுவிலக்கில் இருந்தப்பத்தான் பிறந்து வளர்தீங்களா? நானுந்தாங்க.

said...

வாங்க குமார்.

1011 சதுர மீட்டரா? அப்படீன்னா கால் ஏக்கரில் முக்கால் ஆயிருக்கு:-)

இங்கே சராசரி செக்ஷன்ஸ் 750 ச.மீ.தான். இப்பத்தான் புதுசா
வந்துக்கிட்டு இருக்கும் சப் டிவிஷன்களில் 600, 550ன்னு
இருக்கு.

ரொம்பப் பழைய ஏரியான்னா, (நம்ம தெருவுலே) எல்லா வீடும் 809 ச.மீ.

மது மட்டுமில்லை. சீட்டு விளையாட்டு கூட எதோ கெட்ட நடவடிக்கைன்னு நினைச்சுகிட்டு இருந்த வீட்டுச்சூழலில் வளர்ந்தவ நான்:-)

said...

ஆகா...கலைக்கு எல்லையே இல்லைங்குறது உண்மைதான. இங்கயும் மக்கள் கலைக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுக்குறாங்க. பாரீஸ் இருக்கு பாருங்க பாரீஸ். அங்கதாங்க...அடேங்கப்பா....அழுக்குத்தண்ணி ஓடுற குழாய்ல கலை. காக்காய் உக்காராம விட ஜன்னல்ல கம்பீல கலை. தட்டுல கலை. ரோட்டுல கலை. டேபிள்ள கலை. i felt the entire city including every nonliving objects thinking as if my mind thinks...அவ்ளோ கலை. ஒங்கூர்லயும் கலை நல்லா விலை போகுதுன்னு தெரிஞ்சு மகிழ்ச்சி.

said...

வாங்க ராகவன்.

அடுத்த வேளைக்கு சோத்துக்கு என்ன செய்யலாம் என்ற கவலை இல்லேன்னா,
கலை பரிமளிக்கக் கேப்பானேன்?

நம்மூர்லே ரயிலில் பாட்டுப்பாடிக் காசு வாங்குறது பிச்சை, கேவலம். ஆனா இங்கே
அதே காரியத்தை மால், சதுக்கம் இங்கே செஞ்சு( பள்ளிக்கூடப்பிள்ளைகள் கூட சிலசமயம்
வயலின், ப்ளூட் ன்னு வாசிக்கும்) முன்னாலே வச்சுருக்கற கிண்ணத்தில் காசு சேர்த்தா அதுக்குப்
பேரு பஸ்கிங். எங்கே போய் முட்டிக்க?