Tuesday, August 14, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 8


கோபால் வேலையிலிருந்து வந்ததும் சொன்னது," சர்வே" செய்ய ஆளு வந்துட்டுப் போயாச்சு. சரியாத்தான் இருக்கு. ஆனா, முன்புறம் தெருவுக்கும், வீட்டுக்கும் நடுவிலே நாலரை மீட்டர் இடம் விடணும்னு சட்டம் இருக்குல்லே. அங்கே அளந்து பாத்தப்ப 4.46 மீ.தான் விட்டிருக்காங்களாம். ஆனா அதை 'ரவுண்ட்' செஞ்சுடலாம். பிரச்சனையில்லைன்னு சொன்னாராம். கடவுளே காப்பாத்துனே!


இன்னொண்ணும் சொன்னாராம். 'காங்க்ரீட் பேஸ்'லே போடற கம்பிங்க 12 நம்பரா இருக்கணுமாம்.

நம்ம 'பில்டர்' 10 நம்பரே வாங்கி போட்டுட்டார். ஏன்னா நம்ம ப்ளான்லே 10 நம்பர்னு' பொய்ட்' எழுதியிருந்தாராம்.

அது ஒண்ணும் 'பெரிய' பிரச்சனை இல்லையாம். அதை கவுன்சில் ஆளுங்க 'சரியாக் கவனிக்காம பாஸ்' செஞ்சுட்டாங்களாம். அதுனாலே இப்ப மேலெ ஆகற வேலையைப் பாக்க தடை ஏதுமில்லைன்னு சொன்னாராம். பாருங்க! இதையெல்லாம் ஏன் கவனிக்கலை? இதுக்குத்தானே நாம கிட்டத்தட்ட 5000 டாலர் கட்டுனோம் கவுன்சிலுக்கு. இன்னைக்கு கணக்குக்கு ஒன்னரை லட்சம் ரூபாயில்ல அது! ஹூம்!

ஏற்பாடு செஞ்சமாதிரி, நாளைக்கு 'காங்க்ரீட்' போடுவாங்களாம்.
காலையிலே எழுந்து பாத்தா மழை பெஞ்சுகிட்டிருக்கு. இன்னைக்கு 'காங்க்ரீட்' வேலை இருக்கே! கொஞ்ச நேரத்துலே நின்னுரும்னு டி.வி யிலே சொல்றாங்க. ஆனாலும் வேலை காலை ஏழுமணிக்கே ஆரம்பிச்சுருவாங்கன்னு சொன்னதாலே, இவரு வேலைக்குப் போற வழிலே ஒரு எட்டிப் பாத்துட்டு போறென்னாரா, நானும் சரி. பாத்துட்டு எனக்கு ·போன்லே சொல்லுங்கோன்னேன். கொஞ்ச நேரத்துலெ கூப்பிட்டார். காங்க்ரீட் வேலை முடிச்சுட்டாங்களாம். மழை ஒண்ணும் பண்ணாதாம்.
ஆனா, நமக்கு மனசு கேக்குதா? ஐயோ, இன்னும் மழை நிக்கலையே! சிமெண்டு கரைஞ்சு போயிடுமோன்னு கவலையா இருக்கு.மழை நின்னா, ஒரு பார்வை பாத்துட்டு வரலாம்னா, எங்கெ நிக்குது? இன்னிக்கு இவரு வேலையிலேயே சாப்புடறதாலே வீட்டுக்கும் மதியம் வரமாட்டாரு. பன்னிரெண்டரைக்கு கூப்பீட்டு கேக்கறாரு நான்போய்ப் பாத்தனான்னு. மழையோ நிக்கறமாதிரி இல்லே. சரின்னு போய்ப் பாத்தேன்.

ஒரேதா காலு உள்ளெ போறமாதிரி சகதியா இருக்கு. மெல்லப் போய், கிட்ட நின்னு தொட்டுப் பாத்தேன். கெட்டியாதான் இருக்கு.கைக்கு அமுங்கலை. ஆனா மேலே தண்ணி கட்டி நிக்குது. சிமெண்ட்டு கரையவுமில்லை. அப்பாடான்னு இருந்துச்சு.அப்புறம் தெரிஞ்சது அது 'க்விக்' சிமெண்டாம்.

அடுக்களை பண்ணற 'ஹாங்காக் கிங்' வீட்டுக்கு ராத்திரி போய்ப் பார்த்து, அடுக்களை டிஸைனை முடிவு செஞ்சு, அதுக்கான காசையும் பேரம் பேசி முடிச்சாச்சு. அதுலே 'கிங்'தரையிலே 'டைல்ஸ்' பதிக்கறதும் அடக்கம்.
'ரேச்சல்' வாங்கி கொடுத்த 'quote'ன்படி, மூணு கம்பெனிங்க மூணு விதமா சொல்லியிருக்காங்க! $39345, $33140, $29255.28.இதுலே அடுப்பு, மத்த சாமானுங்க செலவு சேர்த்தியில்லே. அதுக்குக் குறைஞ்சது $10000 வைக்கணும்.பேசாம, ஒரு மேடையைப் போட்டமா, 'காஸ்' அடுப்பை வச்சமா,ரெண்டு அலமாரிலெ பாத்திரம் பண்டங்களை அடுக்கினமான்னு இல்லாம, என்னா ஒரு நோணாவட்டம் பாருங்க இங்க! இதே கதைதான் 'பாத்ரூமு'க்கும்! குழாயும், வாளியும் இருந்தா ஆகாதா?

இப்பவே இன்னொண்ணும் சொல்லிடறேன்! வீடுங்களுக்கு, ஜன்னல், கதவுங்களுக்கு 'திரைச்சீலை'ன்ற பெயர்லே ஒரு அநியாயம் நடக்குது பாருங்க! எங்கேபோயிச் சொல்ல? மீட்டரு மீட்டராத் துணிங்களை தீத்திருவாங்க! அதைத் தைக்கணும். அதை மாட்டறதுக்கு இன்னொரு அழும்பு பண்ணுவாங்க! 'கர்ட்டன் ராட்' கொக்கி, 'டை பேக்', அது இதுன்னு இல்லாத நக்கடா! ஒண்ணொண்ணும் யானை வெலே! குஞ்சலம் மாதிரி ஒண்ணு, கர்ட்டனைச் சுத்திக் கட்டறதுக்கு இருக்கு. அது 20 டாலர்லெ இருந்து இருக்கு!என்னை மாதிரி ஒரு ஏழைநாட்டுலே(!!!!????) இருந்து வந்தவளுக்கு இதையெல்லாம் பாக்கப் பாக்க வயிறு எரியும்!

இவர்வேற சொல்லிகிட்டிருக்கார் "கர்ட்டன் போட நம்மகிட்டே காசு இருக்குமான்னு தெரிலே" ....பீடை போச்சுன்னு நினைச்சுகிட்டேன்! வீடெல்லாம் வெயிலு வரணும்னு கண்ணாடி ஜன்னலு, கண்ணாடிக் கதவுன்னு வெப்பாங்களாம். அப்புறம் அதை மூடறதுக்கு 'கர்ட்டன்' போடணுமாம்! சின்ன ஜன்னலுங்க வச்சா ஆகாதாமா?

புலம்பிகிட்டே இருந்தாலும், நாங்களும் இதெ வழில தானே போகணும்! ஊருக்கேத்த மாதிரிதானே இருக்கவேண்டியிருக்கு! அதுவுமில்லாம இந்த வீட்டை விக்கறப்ப விலை போக வேண்டாமா? நம்ம இஷ்டத்துக்கு கட்டுனா, யாரு வாங்குவா? நம்ம சேமிப்பே இதுதானே?

மழை நிக்கவேயில்லை. ராத்திரியெல்லாம் 'நச நச'ன்னு பேய்ஞ்சுகிட்டே இருந்துச்சு. காலையிலே போனோம். அங்க நம்ம பில்டரோட உதவியாளர் பேரு 'டீன்' அங்க ரெண்டு பலகைக்கு நடுவிலே போட்டிருந்த கருப்பு ப்ளாஸ்டிக் ஷீட்டுங்களையெல்லாம் எடுத்துகிட்டு இருந்தார். கேக் சமைக்கும் டின்னுக்கு லைனிங் போடுறமாதிரிதான் இருக்கு இந்த ப்ளாஸ்டிக் ஷீட்டுகள். கண்ணுலே விழறது எதுன்னாலும் திங்கற சாமானோடு பொருத்திப் பார்த்துக்கறதுதான். எது வருதோ, எது மனசுலே பதியுதோ அப்படித்தானேச் சொல்லத் தெரியுது.இல்லீங்களா? 'எப்படி வந்திருக்கு'ன்னு கேட்டா, 'ப்ராப்ளம் ஒண்ணும் இல்லை. நல்லாதான் வந்திருக்கு'ன்னார். 'ரீ இன்·போர்ஸ்'க்கு கம்பிங்க, ஸ்டீல் ராட் எல்லாம் இருந்துச்சு. நாளைக்கு ஞாயிறு லீவு. திங்கக்கிழமை என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்னு இருக்கமுடியுதா?

பாழும் மனசு கேக்காம ஞாயிறும் போய்ப் பார்த்தோம். வெயிலு வேற வந்துகிட்டு இருந்தது. 'காங்க்ரீட்' கொஞ்சம் காய ஆரம்பிச்சிருக்குது.பரவாயில்லேன்னு வீட்டுக்கு வந்துட்டோம். இப்ப மறுபடி மழை ஆரம்பிக்குது. எப்ப நிக்கப் போதோ?
திங்களுக்கு இவருதான் போய்ப் பாத்தாரு. நல்லாக் காஞ்சுபோச்சு. இப்ப 'ஷிங்கிள்ஸ்' போடறதுக்குக்காக நிலத்தை சமப்படுத்தறாங்கன்னார். கல்லுங்க கனமா இருக்கும்லே. உள்ளெ எப்படி வரும் வண்டி? ஏன்னா இங்கத்து வீடு கட்டற முறை .............

முதல்லே நிலத்தை அளந்துட்டு, வீட்டோட வெளிப்புற 'அவுட் லைன் ' வரைஞ்ச மாதிரி கயிறு கட்டிட்டு, சரியா அதுக்குள்ளெ 23 செ.மீ அகலத்துலே சுத்திவர அகழி மாதிரி ஒரு ஒன்னரை அடிக்குப் பள்ளம் தோண்டுனாங்களா? அப்புறம் பள்ளத்துக்கு மேலே ரெண்டு பக்கமும் பலகை அடிச்சுட்டு,கருப்பு ப்ளாஸ்டிக் ஷீட்டுகளை உள்ளே ரெண்டு பக்கமும் விரிச்சு, ஸ்டீல் கம்பிகளை நட்டுட்டு பள்ளம் முழுக்க காங்க்ரீட் நிரப்புனாங்க! அப்புறம் காஞ்சபிறகு, எல்லாப் பலகைகளையும் பிரிச்சு எடுத்துட்டாங்க. இப்பப் பாத்தா தரைக்கு மேலே ஒரு அடிக்கு சுவராட்டம் சுத்திவர நிக்குது. மண்ணுக்குள்ளே ஒன்னரை அடி காங்க்ரீட்டும் இருக்காம்!

இப்ப கல்லு வண்டி வரணும்னா சுத்துச் சுவரை உடைக்குமான்னு தெரியலே.
இன்னைக்கு மாலை 7 மணிக்கு நம்ம அடுக்களையை செய்யற 'கிங்' வந்திருந்தார். நாம செலெக்ட் செய்த கலரோட ஒரு சாம்பிள் பலகை கொண்டுவந்து கொடுத்திருக்கார். 'ஸிங்க், குழாய் இரண்டையும் இந்த மாசக் கடைசிக்குள்ளெ தரச் சொன்னார்.

நானே, என்னுடைய லைப்ரரி வேலையை முடிச்சுட்டு, போய்ப் பார்த்தேன். இன்னிக்கு யாரும் வேலை செஞ்சமாதிரி இல்லே. கல்லுவந்து இறங்கியிருக்கு. பொடிக்கல்லு இல்லே. நல்ல கூழாங்கல்லு சைஸ் இருக்கு, உருளைக்கிழங்கு போல. ஒரு இடத்துலே சுத்துச் சுவருக்கு ரெண்டுபக்கமும் மண்ணை அடிச்சு சாரம் மாதிரி வச்சிருக்காங்க. அதும்மேலெ 'கேட்டர்பில்லர்' தடம் தெரியுது. மாஸ்டர் பெட்ரூம் வர இடத்துலே கல்லை நிரப்பிட்டாங்க. சுத்து சுவரோட உசரத்துக்குப் போட்டிருக்கங்க. 'ட்ரையின் லேயர்' வந்துபைப் லைன் போட்டுட்டு, கம்பம் மாதிரி பைப் நட்டுட்டு போயிருக்கார்.

இவருதான் பகல் சாப்பாட்டுக்கு வரப்போ போய் பார்த்தாராம். வேலை நடக்குதாம். கல்லை எல்லா இடத்துக்கும் நிரவியாச்சாம். தண்ணிக்குழாய் வர இடத்துக்கு, (அடுக்களை, பாத் ரூம்கள், லாண்டரி இங்கெல்லாம்) பைப் லைன் போட 'ப்ளம்பர்' வந்திருக்காராம். இன்னும்கொஞ்ச நேரத்துலே நான் போறேன் பாக்க.

நடந்துதான் போனேன். சும்மா எவ்வளவு நேரம் ஆகுதுன்னு பாக்க! சரியா 30 நிமிஷம் ஆச்சு போறதுக்கு. கூழாங்கற்களையெல்லாம் நிரவிட்டாங்க! இன்னும் ரெண்டு பேரு அதுக்குள்ளெ தண்ணீர் பைப் 'ப்ளாஸ்டிக்' உள்ளெ புதைச்சி கிட்டிருந்தாங்க! வெளியே 'ஹெவி ட்யூடி கறுப்புப் பாலித்லீன்' ஷீட்டுங்க ரோல் ரோலாய் இருக்கு. கட்டங்கட்டமாய் கம்பிங்க வேற இருக்கு. கல்லுக்கு மேல மணலும் சிமெண்டும் கலந்த தூள் பரத்தி,அதைக் கெட்டிப்படுத்த ரோலர் போடறாங்க.( காஃபி பில்டர்லே பொடியை அடைச்சுக் 'குடை'யால் அமுக்குறது மாதிரியா?)

.தொடரும்..................

12 comments:

Anonymous said...

இந்தக்கர்ட்டனுக்கு செலவு பண்ணற காசு உண்மையிலயே அநியாயம்தான். பல இடத்துல உடுக்கத்துணியில்லாதப்ப ஜன்னலுக்குப்பார் எத்தன விதமான கர்ட்டன் அப்படின்னு தோனும். அடுப்பு இப்படீ இருக்கணும் அப்படி இருக்கணும்பாங்க. பாதிப்பேர் சமைக்கறதேயில்ல இங்க.

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். நேத்து ப்ளாக்குள்ள போகமுடியல. அதனால பின்னூட்டம் போட முடியல.

said...

வீடு கட்டுவர்களின் கவலை 23 cm கான்கிரிட் மழையில் கரையுமோ என்ற கவலையை படுவது என்னைப்போன்றவர்களுக்கு கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கு.
சாரமடித்திருப்பதில் இருந்து புரிந்துகொள்ள முடிகிறது இது எந்த மாதிரி வேலை என்று.
ஆமாம் உங்கூரில் அஸ்திவாரமே கிடையாதா?அந்தளவுக்கு மண் இருக்கமாகவா உள்ளது?புகைப்படத்தில் உள்ள மண்ணை பார்க்கும் போது அப்படி தெரியவில்லை.
இதே மாதிரி பல சந்தேகங்கள்,எழுதினால் பதிவை தாண்டிவிடும்.. கூடவே ஓடி வருகிறேன்.
சுவர் அதிக உயரம் இல்லாத பட்சத்தில் அந்த சுற்றுச்சுவருக்கு 10mm கம்பி போதும் என்று நினைக்கிறேன்.
அருமையான தொடர்...atleast எனக்காவது.
பல விஷயங்களை தெரிந்துகொள்கிறேன்.

said...

//ஆனா, முன்புறம் தெருவுக்கும், வீட்டுக்கும் நடுவிலே நாலரை மீட்டர் இடம் விடணும்னு சட்டம் இருக்குல்லே. அங்கே அளந்து பாத்தப்ப 4.46 மீ.தான் விட்டிருக்காங்களாம். ஆனா அதை 'ரவுண்ட்' செஞ்சுடலாம.//

0.04மீ கம்மி அத ரவுண்ட் பண்றாங்களா அடேயப்பா!!!! நகைக்கடை சேட் கணக்கா இருக்கே.

வலையிலேயே வீட்டை கட்டி காண்பிக்கிறீங்க.. கலக்குங்க, வாழ்த்துக்கள்..எல்லாம் இனிதாக நிறைவேர..

said...

அஸ்திவாரம் இல்லைன்னு சொல்றது எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருக்குது. இங்கே, அமெரிக்காவில், அஸ்திவாரமெல்லாம் போட்டு தான் மர வீடு எழுப்புவர்.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

வெள்ளைக்காரங்க சமையல்ன்னு சொன்னா எல்லாம் 'அவன்'லே வைக்கிறமாதிரிதான்
நிறைய ஐட்டம் இருக்கு. ஒரு பெரிய BBQ வெளியிலே வெராண்டாவுலே வச்சு மொத்தக்
குடும்பமும் அதுலே சமைச்சுச் சாப்புடறாங்க நம்ம பக்கத்து வீட்டுலே! பக்கத்தூட்டுப் பத்துவயசுப்
பையன்( எல்லாருக்கும் மூத்தது) அதுலே ப்ரெட் டோஸ்ட் செய்யப்போட்டுட்டு, அப்பப்ப விளையாடப்
போயிருவான். கரிஞ்ச ப்ரெட் வாசனை தெருவெல்லாம் மணக்குது.

said...

வாங்க குமார்.

இந்தத் தொடரை வெளியிட ஆரம்பிச்சபோதே உங்க ஞாபகம்தான் வந்துச்சு. உங்க சம்பந்தம் உள்ள
துறை என்றதாலே ஆர்வமாப் படிப்பீங்கன்னு நினைச்சேன். உங்க பதிவுகளிலே பிரமாண்டமான
மெஷீன் எல்லாம் வச்சு அஸ்திவாரம் போடறதைப் பார்த்தேன். இங்கே பூமிக்கடியில் இருக்கும்
ஒன்னரை அடியும், மேலே தெரியும் ஒரு அடியுமா மொத்தம் ரெண்டரை அடிதான் அஸ்திவாரம்.

இதுகூட சமீபத்துலே வந்தது. இங்கே நம்ம பழைய வீடெல்லாம் மரத்தூண்கள் மேலேதான் நிக்குது.
ஒருநாள் அந்த மேன்ஹோலில் போய் பார்த்துட்டுவந்த கோபால் சொன்னார். அந்த வீட்டுக்கு கேஸ் அடுப்புக்குப்
பைப் லைன் போட உள்ளெ போன ஆட்களொடு இவரும் போய்ப் பார்த்துட்டு வந்தார். நிலவறை மாதிரி இருக்காம்.

//வீடு கட்டுவர்களின் கவலை 23 cm கான்கிரிட் மழையில் கரையுமோ
என்ற கவலையை படுவது என்னைப்போன்றவர்களுக்கு கொஞ்சம்
ஆச்சரியமாக இருக்கு.//

எனக்குப் புரியலை! 23cmன்னா கரையாதா?

said...

வாங்க சுரேஷ்.

வலையிலேயே 'நாலு வீடு' கட்டிறலாமுன்னு கோதாவுலே இறங்கியாச்சு:-))))

வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

வாங்க காட்டாறு.

அந்த ரெண்டரை அடிதான் அஸ்தின்னு நினைக்கிறேன்.

said...

எனக்குப் புரியலை! 23cmன்னா கரையாதா?
கரையும் ஆனால் மேலுள்ள சில மில்லி மீட்டர் மட்டும்,அதனால் அவ்வளவு பிரச்சனையில்லை.அதோடில்லாமல் கான்கிரீட்்கிரீட் முடிந்த சில நிமிடங்களிலேயே கெமிகல் ரியாக்ஸன் ஆரம்பித்து வெப்பம் வெளியேற ஆரம்பித்துவிடும்,அதை எந்த அளவுக்கு மட்டுப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு கான்கிரீட் நன்றாக கெட்டிப்படும்.அதனால் சிறிய அளவு தண்ணீர் நிற்பதால் அவ்வளவு பிரச்சனையில்லை.
கான்கிரீட் போடும் போது மட்டும் தண்ணீர் கலக்கக்கூடாது,அதனால் கான்கிரீட் போட்டவுடன் ஏதாவது பிளாஸ்டிக்கை வைத்து மூடிவிடுவார்கள்.
பெரிய அளவில் கான்கிரீட் போடும் போது மாத்திரம் நிறைய கவனம் எடுக்கவேண்டும் ஏனென்றால் கான்கிரீட் மழையில் கரைந்து போக நிறைய வாய்ப்புகள் உள்ளது.
உங்க வீட்டு மேலே எவ்வளவு கவனம் வைத்துள்ளீர்கள் என்பதை இந்த சின்ன விஷயங்களை கூட கண்காணிக்கிறீர்கள் எனபதை காட்டுது.
நீங்கள் சொல்லியதை படித்த பிறகு படத்தை கொஞ்ச நேரம் ஆராய்வேன்,அவ்வூரில் எப்படி செய்கிறார்கள்,ஏன்,எதற்கு & எப்படி என்று போய்கொண்டிருக்கும்.
எனக்கென்னவோ அந்த அஸ்திவாரத்தின் மேல் உள்ள சந்தேகம் தீரவில்லை.
வேறு ஏதாவது புகைப்படத்தின் மூலம் தீர்ந்தாலும் தீரும்.

said...

குமார்,

//எனக்கென்னவோ அந்த அஸ்திவாரத்தின் மேல் உள்ள சந்தேகம் தீரவில்லை.
வேறு ஏதாவது புகைப்படத்தின் மூலம் தீர்ந்தாலும் தீரும். //

ஒருவேளை அடுத்தபகுதியில் வரப்போகறதுதான் அஸ்திவாரமோ? இப்ப எது அஸ்தின்னு
எனக்கும் குழப்பம் வந்துருச்சு:-)))))

said...

சும்மா பொறாமையைக்கிளறுறீங்க துளசி கர்ட்டன் குஞ்சலம் எல்லாம் வச்சு... ம்...இங்க கரெக்டா இந்த பக்கம் இழுத்தா அந்த பக்கம் தெரியும் அந்த பக்கம் இழுத்தா இந்த பக்கம் தெரியும்..ஒரு மடிப்பு இல்லாம தைச்சு
கொண்டாந்தாங்க பெரியவங்க...எனக்கு தான் ஆசை என்னிக்கு நிறைவேறுமோ?

said...

வாங்க முத்துலெட்சுமி.


குஞ்சலம் அவ்வளவு பிடிக்குதா?

நல்ல சாட்டின்ஸில்க் நூலில் செஞ்சுவருது.
விலைதான் அப்பப்பா.................. ஒன்னு 10$ அதுவும் சேலில் இருந்தால்(-:

முந்தி வாங்குனதை இந்த வீட்டுக்குப் பயன்படுத்தலாமுன்னு கொண்டு வந்து வச்சுருக்கேன்.
சுவரில் அதுக்கு ஒரு அலங்காரக் கொக்கி அடிக்கணும். அதுக்கு நேரம் வரலை:-)