Sunday, August 12, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 7

24/7சனிக்கிழமை. பகல் பன்னிரெண்டு மணி! 'வீட்டை'ப் போய் பார்த்தோம். 'பிங்க் கலரு ஸ்ப்ரே' மண்ணில் பாந்தமாப் பதிஞ்சு அப்படியே இருக்கு. '·ப்ரூஸ்' வரலை. தோண்டற வேலை ஒண்ணும் நடக்கலை. நாளைக் காலையில் இவர், ச்சீன தேசத்துக்குப் போறாரு.எப்படியும் நாளைக்கு ஞாயிறு என்றபடியால், ஒரு வேலையும் நடக்காது. 'பில்டர்' சொன்னது 26, திங்கள்தானே! பாக்கலாம்!
இன்னைக்கு தேதி, ஜூலை 26. திங்கள் கிழமை! வீடு கட்டறது இன்று முதல் தொடங்கும்! பகல் பன்னெண்டு மணிக்குப் போய்ப் பார்த்தேன். என்ன ஆச்சரியம்! எல்லாம் அப்படி அப்படியே இருக்கு. ஒரு அனக்கமும் இல்லை. யாரும் வேலைக்கு வந்த அடையாளமே இல்லை. வண்டியை விட்டு இறங்காமலேயே பார்த்துட்டு வந்தேன்.
அப்புறம், கோபால் ஃபோனில் கூப்பிட்டப்ப, விஷயத்தை சொன்னேன். அவர் அன்று மாலை மறுபடிக் கூப்பிட்டப்போ, புதன்கிழமைதான் ஆரம்பிக்கப் போறேன்னு 'பில்டர்' சொன்னதாகச் சொன்னார்.சரி, புதன் கிழமை நல்லதுதானே. பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காதுல்லே ( ஏன், வாரா வாரம் வராதா?)அப்படின்னு சமாதானப்படுத்திகிட்டேன்.
புதன் கிழமை வந்துடுச்சு! வழக்கமா போற பகல் பன்னிரெண்டு! ஈ, காக்கா இல்லை! இந்த ஊருலே ஏது காக்கா? சும்மா ஒரு பேச்சுக்குதான் சொன்னேன். இங்கதான் காக்காவும் புறாவும் சேர்ந்தா மாதிரி ஒரு கடல் காக்கா இருக்கே! 'ஈ'ன்னு சொல்றப்ப ஒண்ணு நினைவுக்கு வருது.இங்கே 'ஈ' இருக்கு பாருங்க, ரொம்ப பெரிய 'சைஸ்'. நம்ம இந்தியா ஈ மாதிரி ஒரு அஞ்சாரு சேர்ந்தா எவ்வளவு பெருசோ அப்படி இருக்கும்.ஆளுங்க மாதிரிதான். நாமதான் குள்ளம் குள்ளமா இருக்கறமா? சரி, நாளைக்குப் பாக்கலாம்னு வந்துட்டேன். வேற வழி?

கோபால் 'ச்சீனா' விலிருந்து ஃபோன் செய்து, வீட்டைப் போய்ப் பார்த்தியான்னு கேட்டார். பார்த்தேன்னு சொன்னேன். என்ன ஆச்சுன்னு கேட்டார். 'கட்டி முடிச்சாச்சு' அப்படின்னேன்.
இப்பல்லாம் இது ஒரு 'எக்ஸ்ட்ரா ஆக்டிவிடி' ஆயிடுச்சு. தினமும் ஒருதடவை போய், நம்ம வீடு எப்படி, எதுவரைக்கும் வந்திருக்குன்னு பாக்கறது:-)))))வியாழக்கிழமை! அதே நேரம்! போனேன் & வந்தேன்.முதல்ல அடிச்ச 'பிங்க் கலரு'க்கு பக்கத்துலே ஒரு பச்சைக் கலரு' ஸ்ப்ரே அடிச்சு வச்சிருக்கு. அப்புறம் ஒரு சின்ன நூலு போல ஒரு கயிறு நீளவாக்குலே கிழக்கு மேற்கா கட்டி வச்சிருந்தது. ஒரு ஆளும் இல்லே. நானும் ஒரு ரெண்டு நிமிஷம் வேடிக்கை(!) பார்த்துட்டு, " பச்சைக் கலரு ஜிங்குச்சா, பிங்க் கலரு ஜிங்குச்சா'ன்னு பாடிகிட்டே வந்துட்டேன்.
வெள்ளி வந்தது.அடப் போப்பா.........வேற வேலை இல்லே......... நான் இன்னைக்கு லீவு. நாளைக்கு கோபால் வந்துருவாரு. அப்ப வந்து பார்த்துக்கட்டும். சனிக்கிழமை! சாயந்திரம் நாலு மணிக்கு கோபால் வந்தார். 24 மணி நேரமாச்சு, ச்சீனாவிலிருந்து கிளம்பின்னார். ஒரு அரைமணி நேரம் ஓய்வு,( பெட்டியைக் காலி செய்யறதுக்கு) எடுத்தபிறகு, போனோம் நம் 'அரண்மனை'க்கு!
இன்னைக்குப் போய்ப் பார்த்தா, என்ன ஒரு இன்ப அதிர்ச்சி! பலகையெல்லாம் போட்டு, கடக்காலு மாதிரி கொஞ்சம் தோண்டி வச்சிருக்காங்க!எது எந்த ரூம்னு கண்டுபிடிக்க முடிஞ்சது. ஆனால் எல்லாமே ரொம்பக் குட்டியா, சின்ன இடமா தெரிஞ்சது.
கோபால் சொல்றார் " இப்ப அப்படித்தான் தெரியும். சுவர் வந்தபிறகுதான் பெருசா தெரியும்"


அதுதான் எப்படின்னு தெரியல்லே! சுவர் வந்தா அது இடத்தை அடைச்சுடாதா? பொறுத்திருந்து பார்க்கலாம்னு பார்க்கிறேன்! சனிக்கிழமையில் ஆரம்பிச்சுருக்கே. நாமே ஒரு பெரிய சனியன் என்றதாலே சனி நம்ம கூட நட்பாத்தான் இருக்கும். திங்கள் மதியம் சாப்பிடறதுக்கு வந்தப்ப, கோபால் கொடுத்த 'நியூஸ்' அங்க வேலை நடக்குது.
நானும் இப்பத்தான் போய்ப் பார்த்துட்டு வர்றேன். 'பாக்ஸ் பாக்ஸ்' ஸா அடிச்சுகிட்டு இருக்காங்க. ஃப்ரூஸ் ஆளும் ஒரு 'டிக்கர் (digger)' வச்சு இங்க இருக்கற மண்ணை அங்கும், அங்க இருக்கறதை இங்குமா தள்ளிகிட்டு இருக்காரு.இப்ப நம்ம 'ட்ரைவ் வே' வரப்போற இடத்துலே நிலத்தோட வலது பக்கம் ஒரு 'பிட்' இருக்குதாம். நமக்கு யாரோ குழி தோண்டிட்டாங்கப்பா............. அந்த இடத்திலே வெறும் புல்த்தரையைத்தான் பார்த்த நினைவு. அதைக் கண்டு பிடிச்சு நிரப்பிக் கெட்டிப்படுத்தணுமுன்னு கவுன்ஸில் சொல்லி இருக்கு. வண்டி போகும் வழின்றதாலே கவனமா இருக்கணுமாம். இதுக்கு முன்னே இருந்த பழைய வீட்டுக்காக நிலப்பத்திரம் உருவாக்குனப்ப இதையெல்லாம் ஆவணப்படுத்தி வச்சுருக்கு. இன்னிக்கு அதைக் கண்டுபிடிச்சு கொஞ்சமா மண்ணைத் தோண்டி வச்சிருந்தாங்க! 'ஜர்னல்'க்காக சில ·போட்டோக்கள் எடுத்தேன்!
ரெண்டு நாளா 'பாக்ஸ்' அடிச்சுகிட்டே இருக்காங்க. தெருப்பக்கம் 'பிட்' நல்லாத்தெரியுது. சின்னதுதான். 2அடிக்கு 4 அடி இருக்கும். நாளைக்குக் 'கவுன்சில் இன்ஸ்பெக்ஷன்' இருக்கு. அப்போ அதை திறந்து பாத்து, உள்ளே சின்னசின்னக் கல்லு(ஜல்லி, க்ராவல்) போட்டு மூடணுமாம். இப்ப வீட்டோட முழு சுத்துச் சுவரும் வர்ற இடம் நல்லாத் தெரியுது. நாலரை மீட்டர் இடைவெளிதான் இருக்கு வீட்டுக்கும், முன்புற ·ஃபென்ஸ்க்கும். பாத்தா, வீட்டுலே இருந்து கை நீட்டுனா 'ரோடை'த் தொடலாம் போல இருக்கு. கொஞ்சம் கூடுதல் இடம் விட்டிருக்கணுமோ? இதுதான் கவுன்சில் அனுமதிக்கற இடைவெளியாம். 311( இப்ப நாம இருக்கற வீடு)லே வீட்டுக்கும், ஃபென்ஸுக்கும் 10 மீட்டருக்கும் மேலேயெ இடம் இருக்கறதாலே, புதுவீட்டுலே சின்னதாத் தெரியுதோ?இன்னைக்குக் 'கவுன்சில்' ஆளு வந்து பாத்துட்டு, நிலத்தை 'சர்வே' செய்யணும்னு சொன்னாராம். 'பில்டர்' கோபாலுக்குப் ·போன் போட்டுருக்கார். இதை 'கவுன்சில்'லே இருந்து முன்பு வந்த கடிதத்திலே குறிப்பிட்டிருந்தாலும், இதைக் கட்டாயமாகச் செய்யவேண்டும் என்று அவசியப்படாததாலும், 'பில்டரும்' தேவைப்படாது என்றதாலும் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்துட்டோம்.
'நாளைக்கு 'காங்கிரீட்' போடுவதற்கு முன் இதைப் பெறவேண்டுமே! இல்லாவிடில், காங்க்ரீட் போட்டபிறகு நில அளவு சரியில்லையெனில் போட்டதை இடிக்க வேண்டாமா? '
இந்த வெள்ளி அப்புறம் அடுத்த வெள்ளின்னு ரெண்டுதடவை 'காங்க்ரீட்' போடணும்னு இருக்கு. இதைவிட்டா அப்புறம் எல்லா வேலையும் தள்ளிப் போகுமில்லே! ஒண்ணுகொண்ணு தொடர்பாத்தானே வேலைங்க நடக்குது!
முன்பே செய்திருந்தால் ஒரு 200 டாலரோடு முடிந்திருக்கும். இப்போ அவசரமா செய்யணும்றதாலே 800 முதல் 1000 வரை ஆகுமாம்! பில்டரே ஒரு ஆளை ஏற்பாடு செய்யறேன்னாரு. என்ன ஆச்சோ தெரியலை!
நமக்கும் வேணும்.... . புத்தி கொள்முதல். பாடம் நம்பர் எத்தனை இது?தொடரும்.......................

8 comments:

Anonymous said...

//இப்போ அவசரமா செய்யணும்றதாலே 800 முதல் 1000 வரை ஆகுமாம்! பில்டரே ஒரு ஆளை ஏற்பாடு செய்யறேன்னாரு. என்ன ஆச்சோ தெரியலை!//

அத்தன கஷ்டமெதுக்குன்னுதான் நாங்க கட்டின வீடாவே வாங்கீட்டம். ஆனாலும் ஒரு வீடு கட்டற ஆசை இன்னும் மனசுல இருக்கு.

said...

சும்மாவா சொல்லி இருக்காங்க. வீட்டைக் கட்டிப் பார் அப்படின்னு. அப்புறம் மெயிண்டெயின் பண்ணணுமே அது வேற. என்ன கல்யாணத்துக்கும் சேர்த்து சொல்லிட்டாங்க. விஷயம் தெரிஞ்சவங்க.

said...

உங்க ஊரிலே அஸ்திவாரமே கிடையாதா? இல்லை இன்னும் அந்த பாடம் வரவில்லையா?
எதுக்கு இந்த மாதிரி சுத்தி கழியூனிருக்காங்க?
இந்த கவுன்சில் ஆளையே வேலைக்கு எடுத்திருக்கலாம்,கூப்பிடும் போது வந்து பார்க்க!!
அந்த digger பார்த்தீர்களா,ஒரு பக்கம் தோண்ட,மறு பக்கம் நிரப்ப. 2 in 1.
சின்ன சின்ன வேலைகளுக்கு இது ரொம்ப அவசியம்.
ஊரில் நிறைய வேலையை கையில் வைத்திருப்பவர்களுக்கு,உபயோகமான ஒன்று.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

கட்டுன வீடு வாங்கறதுதான் மண்டைக்குடைச்சல் இல்லாத வேலை. ஆனா நம்ம 'டச்' இருக்காதுன்னுதான்
இப்பத் தலைவலியில் கிடந்து உருளுறது:-)))))

said...

வாங்க கொத்ஸ்.

//அப்புறம் மெயிண்டெயின் பண்ணணுமே அது வேற.
என்ன கல்யாணத்துக்கும் சேர்த்து சொல்லிட்டாங்க.//

உண்மையோ உண்மை. ரொம்ப காஸ்ட்லி மெயிண்டனன்ஸ் ரெண்டுமே:-))))))

என்ன...... வீடு வாயைத் திறந்து பேசாது:-)

said...

வாங்க குமார்.

அஸ்திவாரம் இல்லாம என்ன? கழிகள் எல்லாம் அஸ்திக்கு அஸ்தி :-))))

அடுத்த பகுதி கடக்கால்தான்.

said...

\\கோபால் 'ச்சீனா' விலிருந்து ஃபோன் செய்து, வீட்டைப் போய்ப் பார்த்தியான்னு கேட்டார். பார்த்தேன்னு சொன்னேன். என்ன ஆச்சுன்னு கேட்டார். 'கட்டி முடிச்சாச்சு' அப்படின்னேன்//

;) அதுக்கு அவங்க என்ன சொன்னாங்க சொல்லலையே...

said...

வாங்க முத்துலெட்சுமி.

'அவுங்க' என்ன சொல்றதுக்கு இருக்கு?

அப்படியெல்லாம் பேச விட்டுருவனா? :-))))