Monday, February 29, 2016

பயணங்கள் முடிவதில்லை (பயணத்தொடர். பகுதி 1)

முழி பெயர்க்கலாம் வாங்க :-)

 விடுமுறை எடுத்துக்கிட்டுப் பயணம் போய் வரலாமுன்னு  நினைக்கும்போதே  மனசில் வந்து நிக்குது இந்தியா! உலகத்துலே இன்னும் நாம் பார்க்காத நாடுகள் எத்தனையோ இருக்க, அது ஏன் எப்பப் பார்த்தாலும் இந்தியா?  அடடா.... அப்படியா?  இந்தியாவையே இன்னும் முழுசாப் பார்த்து முடிக்கலையே....   இதை முதலில் முடிச்சுக்கிட்டு வேற நாடுகளுக்குப் போனால் ஆச்சு, இல்லையோ?


சரியாப் போச்சு. விடாம வருசாவருசம் போனாலும் இந்தியாவை முழுசுமாப் பார்க்க இந்த ஜன்மம் போதுமா என்ன? இருக்கட்டும். ஏற்கெனவே 108 திவ்யதேசங்களைத் தரிசிக்கணுமுன்னு  ஆரம்பிச்சு வச்சுருப்பதையாவது  முடிச்சுட்டோமுன்னா  ஓரளவு  பாரதநாட்டைப் பார்த்த பயன் கிடைக்காதா என்ன?


இதுவரை எத்தனை பார்த்துருக்கோமுன்னு  கணக்குப் போட்டுப் பார்த்தால் 73.  அதுலே சரியாப் பார்க்காத  ரெண்டு கோவில்களைப் பற்றி எழுதலை. அவைகளையும்  இன்னொருக்காப் பார்த்துட்டு வரணும். இந்தப் பயணத்தில் இன்னும் கொஞ்சம் போய்வரலாம்னு திட்டம். வழக்கம்போல் திட்டமிடல் பொறுப்பைக் கோபாலிடம் கொடுத்தேன். ஆஃபீஸில் செய்யும் அதே வேலையை வீட்டிலும் கொஞ்சம் செஞ்சால் என்ன?  ஆனால் ஒரே ஒரு கண்டிஷன். கூடியவரை ஒரு ஊரில்  இரண்டுநாட்கள் தங்கவேணும்.

எத்தனை நாள் லீவு எடுக்கமுடியும் என்ற கணக்கெல்லாம் போட்டு, வழக்கம்போல் நம்ம ராஜலக்ஷ்மிக்கு  இடம் கிடைக்குமான்னு பார்த்துட்டு, ஏர்லைன்ஸ் டிக்கெட் புக் பண்ணி, 59 கிலோ பொட்டிகளுடன்  ஜனவரி 17 க்கு  வண்டி கிளம்பிருச்சு :-)முதலில், சிங்கை வரை உள்ள பயணம்....போரடிக்கும் பத்தரை மணி நேரம். முதல் அரை மணி நேரத்தில் நிலம் தாண்டிக் கடல்  வந்துரும்.  அண்டை நாட்டைத் தாண்டவே அஞ்சு மணி நேரம்  இப்படி.....  இரவு நேரமுன்னாக் கொஞ்சம் தூங்கித் தொலைக்கலாம். ஆனால் இது பகல் நேரப் பயணம். எதாவது க்ளிக்கலாமுன்னா....   மேகக்கூட்டங்களைத்தவிர  வேறொன்னும் காணோம். தேவர்கள் நடமாட்டம் Nil.

சினிமாப்ரேமிகளுக்கு  சிலபல படங்கள். முந்திபோல இல்லாமல் தமிழ், மலையாளம், தெலுகு கன்னடா ன்னு  வகைக்கு ஒன்னு. ஹிந்திப்படம் மட்டும்  ஒரு மூணு. சினிமா பார்க்கும் ஆர்வம் இப்போ அறவே அற்றுப் போனதால்....வாசிக்க எதாவது ஆப்டுமான்னு துழாவினால் எங்கூர் தினசரியைத்தவிர ஒன்னும் இல்லை.  கொஞ்சநேரம் பிரிச்சு மேய்ஞ்சுட்டு நடைப்பயிற்சிக்குக் கிளம்பினேன். அதுக்குள்ளே லஞ்சு விளம்பிட்டாங்க. ஸ்பெஷல் மீல் என்பதால் ஊருக்கு முன்னாடி வந்துரும்.

அரைச் சப்பாத்தி இருக்கு. அப்ப மீதி? நம்ம கோபாலுக்கு!  சுமாரான ருசி.  ரெண்டு குலோப்ஜான் கொஞ்சம் மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால்... இதுவும்  ஹல்திராம் டின் வகைன்னு தோணுச்சு.
 விமானம் கிளம்புனது முதல்  அங்கங்கே சின்னக்குழந்தைகளின் அழுகுரல் என்றாலும் கூட  இன்னொரு பக்கத்தில் ஒரு குழந்தை இடைவிடாமல் கத்தலும் கதறலுமா.....  தாங்க முடியாமல்  கண்ணைத் திருப்பினால்...  நம்மூர்ப் பாப்பா.  ஒன்னும் சொல்றதுக்கில்லை. வயசு ஒன்னரை இருக்கும்.

அடுத்த நடைப்பயிற்சியில்  கேரளத்துக்காரர் ஒருவர் பரிச்சயமானார்.  என்னைத் தெரியுமாம்! நம்ம கேரளா அசோஸியேஷனில்  பார்த்திருக்காராம். கொஞ்ச நேரம் சம்ஸாரிச்சுப் பொழுதை போக்கிட்டு  இருப்பிடம் வந்தேன். கொஞ்ச நேரத்தில் அவர் திரும்ப வந்து 'சேட்டனை' நலம் விசாரிச்சுப் போனார்
ஒவ்வொரு  நாலு மணிக்கும் ஒரு முறை சாப்பாடுன்னு ஒரு சிஸ்டம் எதுக்கு?  இன்னொருமுறை  வந்த சாப்பாடும் மஹா போரிங்:-( அட்டையைப்போல இன்னொரு அரைச்சப்பாத்தி. வெறும் ச்சனாவைப் பொறுக்கித் தின்னு வச்சேன். எல்லாம் இது போதும், போ.பத்தரை மணி பறந்தபின் சிங்கை வந்து சேர்ந்தோம். டெர்மினல் 3. சென்னைக்கு விமானம் டெர்மினல் இரண்டில் இருந்து போவதால் ரயில் பிடிச்சு  அங்கே போனோம்.  இப்போ சில வருசங்களா ட்ரான்ஸிட் பயணிகளுக்கு  நாப்பது  சிங்கப்பூர்  டாலர்களைச் சாங்கி  கொடுக்குது. ஆண்டுக்கு ஒருமுறை என்ற கணக்கு. ஏற்கெனவே போன பயணத்தில்  கிடைச்ச நாப்பதைக் கோபால்  செலவு செய்யாமல் வச்சுருந்தார்.  இப்போ நாங்க ரெண்டு பேர், எண்பது கிடைக்கும். வாங்கி வச்சுக்கிட்டால் திரும்பி வரும்போது  நிதானமா செலவு செஞ்சுக்கலாமேன்னு அதுக்கான வரிசையில் கோபால் போய் நின்னார்.

நான் சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு நின்னப்ப, திடுக்கிடவைக்கும்  பரிச்சயமான கதறல்.  ஐயோன்னு  கண்ணை ஓடவிட்டால்.....   பாப்பாவும் அம்மாவும் இருக்காங்க. சென்னைக்கு  வர்றாங்க போல!  திகிலோடு அருகில் போய்  எந்த ஊருக்குப் போறீங்கன்னு  பேச்சுக் கொடுத்தேன். காலிக்கட்!  இப்பத்தான் நிம்மதியா ஒரு பெருமூச்சு  விட்டேன்.  சென்னைன்னு மட்டும் சொல்லி இருந்தாங்கன்னா....   என்ன ஆகி இருப்பேன்னு தெரியாது.  இன்னொரு நாலரை மணி நேரம் தாங்க காதுகளுக்கு சக்தி இல்லை.


சாங்கி விமான நிலையம் வழக்கமான பரபரப்போடும் அழகோடும் இருக்கு! குரங்கைத் தேடினேன். காணோம் :-(  சீனப் புத்தாண்டுக்கான அலங்காரங்கள்  செய்ய இன்னும் நாள் இருக்கு. திரும்பி வர்றபோது பார்க்கலாம்.நமக்கு இன்னும்  ரெண்டுமணி நேரம் போகணும்,  சென்னை விமானம் ஏற.  கோபாலின் புண்ணியத்தால் SIA லவுஞ்சுப்போய் கொஞ்சநேரம் வலை மேய்ஞ்சு, மெயில் செக்செஞ்சுன்னு ஓய்வு.  சின்னதா  கொஞ்சம் ஸ்நாக்ஸ்னு  நேரம் போயிருச்சு. சென்னை விமானத்தில் ஏறி உக்கார்ந்தாச்.  நம்மவர் தூங்க ஆரம்பிச்சார்.
விமானப்பணிப்பெண்களின் சேவை ஆரம்பிச்சுப் பரபரப்பான நேரம், மெனுகார்ட் (சின்னப் புத்தகம் ஒரு பத்து பக்கத்துக்கு) கிடைச்சது. நமக்கு வேற தனிச் சாப்பாடுதான் என்றாலும் என்ன இருக்குன்னு புத்தகத்தைப் புரட்டினால்....   தமிழெழுத்துக்கள். ரொம்ப சந்தோஷம்தான்.  ஆமாம்....   தமிழை இப்படி முழி பெயர்த்து வச்சுருக்காங்களேன்னு.....   ரொட்டிகளை மற்றும் பரவல்....  ஙே.......   என்னத்தை பரவலாக்கறாங்க?    ப்ரெட் அண்ட் ஸ்ப்ரெட் என்பதின் தமிழாக்கம்.

 நீங்களே பாருங்க....  இங்லீஷ் & தமிழ் பக்கங்களை :-)  இது என்ன மாதிரி டிஸைன்னு புரியலை.

சாபா புலுசு  (தெலுகு) = மீன் குழம்பு (தமிழ்)

தமிழ் எழுத்துருக்களைப் பார்க்கும் திருப்தி மட்டும்தான், போங்க. தெரியாமத்தான் கேக்கறேன்  சரியானபடி மொழி பெயர்க்கும் ஒரு நபர்கூடவா அவுங்களுக்குக் கிடைக்கலை? இந்த அழகில் தட்டச்சுப்பிழை வேற....  'வருந்துறோம்' !!!!
இதிலும் ராச்சாப்பாடு ஒன்னு  ஊருக்கு முன்னாடி வந்துருச்சு. ரொம்பவே சுமார். விக்கல் போண்டா ஒன்னு !


ஒருவழியா  இந்திய நேரம் இரவு பத்துமணிக்குச் சென்னையில் இறங்கி,  சடங்குகள் முடிச்சு வெளியில் வந்து ப்ரீபெய்ட் டாக்ஸி எடுக்கப்போனால்....   சொல்லிவச்ச மாதிரி அதற்கான கவுன்ட்டர்கள் எல்லாம்  காலி.  எதோ தகராறு போல.  ஜனம் அலைபாயுது.  கேட்டால் 'வண்டி இல்லை ஸார்'!  பேசாம நம்ம ட்ராவல்ஸ் வண்டியையே வரச்சொல்லி இருக்கலாம். ஜஸ்ட் அறைக்குப்போய்ச் சேர வேண்டியதுதான் என்பதால்  வழக்கம் போல மறுநாள் முதல் வண்டியை சீனிவாசனுடன் அனுப்புங்கன்னு  சொல்லி  வச்சுருந்தோம்.
வெளியே வந்ததும் தனியார்  வண்டிகளின் ட்ரைவர்கள் நம்மைச் சூழ்ந்துக்கிட்டாங்க.  அதில் ஒரு வண்டியை ஏற்பாடு செஞ்சுக்கிட்டு  லோட்டஸ் வந்து சேர்ந்தோம். நம்ம வழக்கமான அறையே நமக்காகக் காத்திருந்தது. என்னமோ வீட்டுக்கு வந்து சேர்ந்தாப்போல ஒரு உணர்வு!
நியூஸி வீட்டை விட்டுக் கிளம்பி சரியா 21 மணி நேரமாகியிருக்கு. நல்லாத் தூங்கி  எழுந்து நாளை வேலைகளைப் பார்க்கணும். நம்ம சீனிவாசனை  ஒன்பது மணிக்குத்தான் வரச்சொல்லி இருக்கோம்.   நிதானமா ஊர்சுற்றலை ஆரம்பிக்கலாம்:-)

குட்நைட்.

தொடரும்.........:-)