மறுநாள் ஜெயராமனும் சரவணனுமா வீட்டுக்கு 'சொல்லிக்கிட்டுப் போக' வந்தாங்க. அப்ப ஒரு ஃப்ளவர் வாஸ் (ரெண்டடி உசரம்) எனக்குப் பரிசாக் கொண்டு வந்துதந்தார் ஜெயராமன். வியட்நாமுலே வாங்குனதாம். ப்ளேனில் கொண்டு போக வசதி இல்லை. உடைஞ்சு போயிரும். உங்க வீட்டுலே எங்க நினைவா இருக்கட்டுமுன்னார். அதான் டிவி இருக்கே நினைவுக்குன்னா.,..... கேட்டால்தானே?
அங்கங்கே சேகரிச்ச நல்ல பொருட்களைக் கொண்டு போக முடியாதுன்ற நிலையில் மற்றவர்களும் ஏதோ வந்த விலைக்குக் கொடுத்துட்டாங்கன்னு சொல்லி வருத்தப்பட்டார். செலவுக்குக் காசு வேண்டி பொருட்களை விற்கவருபவர்களிடம் இந்த அடகுக் கடைக்காரர்கள் அடாவடி பேரம் பேசுவதும் இப்படித்தான்., எங்கூர் சூதாட்ட விடுதிக்குப் பக்கத்திலும் இந்த அடகுக்கடைகள் உண்டு. ஆடுபவர்கள் அவசரக் காசு பார்க்க சரியான இடம் அதுதான். சுற்றுலா வருபவர்கள் கூட நகைகளை இப்படி அடமானம் வச்சுட்டுத் திருப்பாமல் போயிடுவாங்க. அதெல்லாம் அப்புறம் ஒரு ஏழெட்டு மாசம் கழிச்சு ஏலத்துக்கு வரும். இப்படி அவசரக் காசுக்காக அலையும் இடங்களில் துறைமுகம் இருக்கும் பேட்டையும் ஒன்னு.
துறைமுக நகரங்களில் 'பலான' தொழில்களுக்கு எப்பவுமே கொஞ்சம் கூடுதலான கிராக்கி. தண்ணீரிலேயே பலமாதங்கள் பயணப்பட்டுவரும் கடலோடிகளில் பலர் பலவிதமான பசிகளில் வாடி இருப்பதும், கரை சேர்ந்தவுடன் சிலபல வழிகளில் தாற்காலிக விருந்துக்குப் போவதும் உண்டுதான். கப்பல்வரவைக் காத்து நிற்கும் பாலியல் தொழிலாளர்களும் காசு பார்க்க நேருவது அப்போதுதானே.
ஒரு சமயம் பாலியல் தொழிலாளி ஒருவருக்கு, கொரியன் மாலுமி 'சர்வீஸ் சார்ஜா' அம்பதாயிரம் கொரியன் வொன் கொடுத்துட்டுப் போயிருக்கார். அம்பதாயிரமுன்னதும் அந்தப் பெண்ணுக்கு உடம்பெல்லாம் ஆடிப்போச்சு. இவ்ளோ பெரிய தொகை இதுவரை கிடைச்சதில்லை என்ற பரவசத்தில் தூக்கம் பிடிக்கலை. அந்தக் காசை மறுநாள் பேங்குலே கொண்டு மாத்தறதுக்குள்ளே அது உள்ளுர்க்காசு எவ்வளவா இருக்குமுன்னு தெரிஞ்சுக்காட்டா தலையே வெடிச்சுடும் போல இருந்துருக்கு. கையில் காசு வந்தவுடன் என்னென்னெ செய்யணுமுன்னு மனக்கணக்குப்போட்டுப் பார்த்துருக்காங்க. தாங்க முடியலை. அர்த்த ராத்திரியில் பேங்கின் அவசரச்சேவை எண்ணைக் கூப்பிட்டு 'அம்மாம் பெரிய தொகை'க்கு நியூஸி டாலர் எவ்ளோ வருமுன்னு ஆசையா விசாரிச்சு இருக்காங்க. கணக்குப் போட்டுப் பார்த்துட்டு சொன்னாங்களாம் முப்பது டாலரும் சொச்சமும்! பல வருசங்களுக்கு முன் ஒரு சமயம் உள்ளூர் பத்திரிகையில் வந்த சேதி இது.
அடுத்தநாள் காலையிலே கிளம்பிருவோம். முகம் கோணாமல் இத்தனை மாசம் உபசரிச்சீங்கன்னார். இதென்னங்க பெரிய விஷயமுன்னு சொன்னாலும் எங்களுக்கும் ஏதோ சொந்தம் வீட்டுட்டுப் போறதுபோல் மனம் கலங்கி இருந்துச்சு. கண்காணாத தேசத்தில் இருக்கோம். நம்ம மக்களைப் பார்த்தால் சொந்தமுன்னுதானே தோணுது, இல்லீங்களா?
கிறைஸ்ட்சர்ச்சுக்கு என்னைக்கு விமானம் ஏற வர்றீங்கன்ற விவரத்தை டிமருவில் இருந்து புறப்படுமுன் ஃபோனில் சொல்லுங்கன்னோம். நாங்க மெட்ராஸ் வந்தா கட்டாயம் சந்திக்கணுமுன்னு விலாசம் எல்லாம் எழுதிக் கொடுத்துட்டுப் போனாங்க.
நம்ம ஊரில் இருந்து தெற்கே பயணப்பட்டால் ஒரு 160 கிமீ தூரத்தில் கிழக்குக் கடற்கரையில் இருக்கு இந்த டிமரு என்னும் ஊர். துறைமுகம் இருக்கும் நகர். இதை சரக்குகள் ஏத்தி இறக்க மட்டுமே பயன்படுத்திக்கிட்டு இருக்காங்க. முன்னொரு காலத்தில் திமிங்கில வேட்டைக்கான whale Stationகளில் இதுவும் ஒன்னு. சமீபகாலமாக திமிங்கில வேட்டை கூடாதுன்னு நாங்க தடை கோரிக்கிட்டு இருக்கோம். ஆனாலும் இந்த ஜப்பான் நாட்டுக்காரர்கள் கேக்கமாட்டேங்கறாங்க:( இப்போ டிமரின் ஜனத்தொகை 27 ஆயிரம். இந்தத் துறைமுகம் கட்டறதுக்கு முன்னே.... அந்த வழியாப்போன நிறையக் கப்பல்கள் தரை தட்டி உடைஞ்சுக்கு. அப்படி கடற்பாறைகள் தண்ணீருக்கடியில் ஓசைப்படாமல் உக்கார்ந்திருக்கும் இடம்.
குளிர்ந்து போன ஒரு எரிமலையின் Mt Horrible volcano குழம்பு சிந்துன இடம்தான் இப்போ ஊர். எங்கூர் போல எங்கெங்கு காணினும் சமதரையா இல்லாம ஏத்தமும் இறக்கமுமா இருக்கும். சரித்திர முக்கியத்துவம் உள்ள ஊர். வெள்ளையர் இங்கு குடியேறுமுன்பே மண்ணின் மைந்தர்களான மாவொரிகள் (கிபி1400) அங்கே இருந்துருக்காங்க. இந்த ஊர் டி ம ரு என்பதே மாவொரிகள் வச்ச பெயர்தான். Te Tihi-o-Maru என்று இருந்தது வெள்ளையரின் நாக்குலே விழுந்து இப்போ டிமருன்னு மருவியிருக்கு.
நியூஸியின் தெற்குத்தீவைச் சுத்திப் பார்க்கவரும் பயணிகள் எங்க ஊரில்(கிறைஸ்ட்சர்ச்) இருந்து (சினிமாப் புகழ்) க்வீன்ஸ்டவுனுக்குப் போகணுமுன்னாலும் இல்லே உலகின் தென்கோடி நிலம்வரை போய்ப் பார்க்கணுமுன்னாலும் இந்த ஊரைக் கடந்துதான் போகணும். இந்த ஊரில் இருக்கும் ரோஸ் கார்டனும், ம்யூஸியமும் தெற்குத்தீவில் மூணாம் இடத்தைப் பிடிச்சு வச்சுருக்கு! குட்டியூண்டு ஏர்ப்போர்ட் கூட இங்கே இருக்கு.
ஒரு நாலு நாளில் அங்கிருந்து தொலைபேசி, ஊரைவிட்டுப் புறப்படப் போறோம். ஒரு பெரிய வேன் ஏற்பாடு செஞ்சுருக்காங்க. பத்தரைக்கு உங்கூர் விமான நிலையத்துக்கு வந்துருவோம்ன்னு சரவணன் சொன்னார். கோபாலுக்கு ஆஃபீஸில் முக்கிய வேலை இருந்ததால் நான் மட்டும் விமான நிலையம் போய் அவுங்களைப் பார்த்துப் பேசிட்டு வழி அனுப்பிட்டு வந்தேன். நியூஸி அனுபவங்கள் அவுங்க வாழ்க்கையில் முக்கியமானதாகக் கூட இருக்கலாம். கப்பலை வி(த்து)ட்டுப் போறதுன்னா சும்மாவா?
இனிமே கப்பல் வாழ்க்கை வேணாம். வேற வேலை பார்த்துக்கப் போறோமுன்னு எல்லோரும் கோரஸாச் சொன்னாங்க. ஆனால்...இதுகூட ஒரு பிரசவ வைராக்கியம்தான்:-)
சில வருசங்களுக்குப் பிறகு நம்ம துறைமுகத்துலே ஓப்பன் டே வச்சு ஊர்மக்களை வாவான்னு கூப்பிட்டு, அங்கே வேலைகள் எப்படி நடக்குது என்னென்ன வசதி இருக்கு என்றெல்லாம் காமிச்சாங்க. கப்பல் ஆசையில் அதையும் போய்ப் பார்த்து வந்தோம். கண்டெயினர் டெர்மினலில் இருக்கும் ஆயிரக்கணக்கான கண்டெய்னர்களை கணினி எப்படிக் கண்டுபிடிச்சு அந்தந்தக் கப்பலில் ஏத்துதுன்னு பார்த்து அம்பரந்து போயிட்டேன். பெரிய பெரிய க்ரேன்கள் நிமிசத்துலே அம்மாம் பெரிய இரும்புப்பெட்டியை அலேக்காத் துக்கிக் கப்பலில் அடுக்கி விட்டுருது
அப்போ நம்ம வீட்டுச் சாமான்கள் ஒருநாள் இப்படி இங்கே வந்து நிக்கப்போதுன்னு கனவுகூடக் காணலை. ரெண்டரை வருசம் முந்தி ஒரு இடமாற்றம் வந்துச்சுன்னு சாமான்செட்டுகளைக் கண்டெய்னரில் ஏத்தி அனுப்புனோம். ரெண்டரை மாசத்துலே சென்னைத் துறைமுகத்துக்கு வந்துருச்சு. நம்ம ஏஜண்டு எங்க ரெண்டு பேருக்கும் ஒரு நாள் பாஸ் ஒன்னு வாங்கித்தந்து ஏகப்பட்ட முன்னறிவிப்புகள் எல்லாம் சொல்லித் துறைமுகத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போனார். அதுலே ரொம்ப முக்கியமானது கேமெரா கொண்டுவரக் கூடாது:(
கெடுபிடிகள் எல்லாம் கடந்து உள்ளே போனோம்.நம்ம கண் முன்னால் கண்டெயினர் பூட்டை வெட்டித் திறந்தாங்க. ஒரு பரிசோதகர் லிஸ்ட்டை ஒரு பார்வையிட்டு, அதிகாரியைக் கூப்பிட்டு வந்தார். டிவி, ஃப்ரிட்ஜ் மட்டும் பெரிய அளவுலே இருப்பதால் அதுக்கு ட்யூட்டி கட்டிடுங்கன்னு சொன்னதும் அதை அலுவலகத்தில் கட்டினோம். அவ்ளோதான். கண்டெயினர் நம்ம தெருவுக்குள் வர அனுமதி இல்லைன்னு ஏஜண்டு, அவுங்க குடோனுக்குக் கொண்டுபோய் சாமான்களை வேற ரெண்டு ட்ரக்கில் ஏத்திக் கொண்டுவந்து வீட்டில் அடுக்கி வச்சுட்டுப் போனாங்க.
வனவாசம் முடிஞ்சு இங்கே திரும்பி வந்தபோது அதே ஏஜண்டுகள் மூலம் கண்டெயினர் மும்பையில் இருந்து கிளம்புச்சு. ட்ராக்கிங் செஞ்சு பார்த்துக்கிட்டே இருந்தோம். கொரியாவரை ஒழுங்கா வந்த கப்பலை அப்புறம் ட்ராக் பண்ண முடியாப்போய் என்ன ஆச்சோ ஏதாச்சொன்னு கவலை. ஒரு வழியா மூணரை மாசம் கழிச்சு லிட்டில்டன் போர்ட்டுக்கு வந்து சேர்ந்துச்சு.
நவராத்ரி சமயம். போதுமான பொம்மைகள் இல்லாம ஒரு வழியா ஒப்பேத்தினேன். ( இல்லாட்டா...கிழிச்சேன்!) விஜயதசமியன்னிக்கு கண்டெயினரை வீட்டு வாசலில் கொண்டுவந்து இறக்கி வச்சார். ட்ரக்கை ஓட்டிவந்தவர்.... 'அட! இங்கே இருந்து கண்டெயினரை எடுத்துப்போக நாந்தான் வந்துருந்தேன். இப்ப நானே திரும்பக் கொண்டுவந்துட்டேன்னு சந்தோஷத்தோடு சொல்லிக்கிட்டே தனி ஆளா இயந்திரத்தை இயக்கினார். உள்ளூர் ஏஜண்டு நம்ம கண் முன்னால் கண்டெயினரைத் திறந்தார். லிஸ்ட்டைப் பார்த்து ஒரு அஞ்சு பொதிகளை பரிசோதிக்கணுமுன்னு நியூஸி MAF பிரிவு (Ministry of Agriculture and Forestry சொல்லி இருந்தாங்கன்னு அந்தக் குறிப்பிட்ட பொதிகளை அப்படியே வச்சுட்டு, மற்ற சாமான்களைப் பிரிச்சு வீட்டில் அடுக்கி வச்சுக்கிட்டு இருந்தாங்க. சொன்ன நேரத்துக்கு MAF பிரிவு பரிசோதகர் வந்தார்.
தொடரும்.............:-)
Monday, January 30, 2012
கப்பலும் கண்டெய்னர்களும் (கப்பல் மினித்தொடர் 4)
Posted by துளசி கோபால் at 1/30/2012 03:25:00 PM 17 comments
Labels: அனுபவம்
Friday, January 27, 2012
கப்பலுக்கொரு (கட்ட) பஞ்சாயத்து! ( கப்பல் மினித்தொடர் 3)
அடப்பாவமேன்னு ஆகிருச்சு. எட்டுமாசமா சம்பளம் கொடுக்கலையாம்! வேலைக்குப் போகமாட்டோமுன்னு 'வீட்டுலே' இருக்கமுடியாது. நடுக்கடலில் குதிச்சு நீந்தவா முடியும்? இதோ அதோன்னு இழுத்தடிச்சுக்கிட்டு இருக்கார், க்ரீஸ் நாட்டு மொதலாளி. கப்பலைச்சுத்திக் கடன் வச்சுக்கிட்டுக் கலக்கமில்லாம எப்படித்தான் தூங்கறாரோ?
அவசரத்தேவைக்கு கைவசம் வச்சுருந்த காசை அங்கங்கே துறைமுகங்களில் நிக்கும்போது கொஞ்சம் கொஞ்சமாச் செலவழிச்சுக்கிட்டே வந்து இப்போ..... சுத்தம்:( நல்லவேளையா வெவ்வேற துறைமுகங்களில் கப்பலுக்குன்னு இருக்கும் ஏஜண்ட் புண்ணியத்தில் மளிகைச் சாமான்கள் மட்டும் முடங்காம 'இதுவரை' கிடைச்சு வந்துருக்கு. இனிமேப்பட்டு என்ன செய்யறதுன்னு புரியலையாம். இது எல்லாத்துக்கும் கேப்டந்தான் பொறுப்புன்னாலும் ரிஸர்வு காசு தீர்ந்துட்டா அவரும்தான் என்ன செய்வார்? அவருக்கும்தானே சம்பள பாக்கி நிலுவையில் கிடக்கு.
இது ஒரு பக்கமுன்னா.... கப்பலில் வர்ற சரக்குக்கு ஏற்கெனவே பணம் கட்டி வாங்குனவங்களுக்கு பொருட்கள் போய்ச்சேரத் தாமதம் ஆகுதுன்னு அவுங்க ஏஜண்டும் கப்பலுக்கான ஏஜண்டும் முட்டிமோதிக்கிட்டு இருக்காங்க.
இந்தக் கப்பல் ஒரு பல்க் கேரியர் . இப்ப அதுலே இருப்பது முழுசும் நிலக்கரி. அதை எதிர்பார்த்து உள்ளூர் கம்பெனி காத்துக்கிடக்கு. கடைசியில் கோர்ட்டுக்குப் போச்சு இந்தக் கேஸ். தரைச்சட்டம் எல்லாம் தண்ணியிலே செல்லுபடியாகாது. அதுவேற இதுவேற இல்லையா? (Maritime law)
கட்டப்பஞ்சாயத்து நடந்துச்சு. மொதலாளிகிட்டே இருந்து காசு ஒன்னும் பெயராதுன்னு தெரிஞ்சு போச்சு. பேசாமக் கப்பலை காயலான் கடையில் எடைக்குப் போட்டுட்டு அதுலே வர்ற காசை தொழிலாளர் சம்பளம், துறைமுக வாடகை, ஏற்கெனவே கப்பலுக்கு டீஸல் ரொப்பின கம்பெனி பாக்கி, கேஸ் நடந்ததுக்கு வக்கீல்களுக்கான கூலி, நீதிமன்ற செலவு, கப்பல் தரகர்களுக்கான கூலின்னு ஏகப்பட்ட செலவுக்கு எடுத்துக்கணுமுன்னு தீர்ப்பு. கப்பல் வேற 25 வருசப்பழசு. மெயிண்டனன்ஸ் செலவு இழுத்துக்கிட்டுப் போயிருமுன்னு ஓனர் ஓசைப்படாமல் இருந்துட்டார்.
சரக்கை வெளியே எடுக்கணுமேன்னு துறைமுகத்துக்குள்ளே கொண்டுவந்து கப்பலை நிறுத்துனாங்க. ஒரு பத்து நாள் போல அங்கே நின்னுச்சு.
நாங்களும் ஒரு நாள் 'கப்பல் பார்க்க'ன்னே போனோம். உள்ளே போய்ப் பார்த்தால்..... ஏதோ கால்பந்தாட்ட மைதானத்துலே நிக்கறமாதிரி 'ஹோ'ன்னு பரந்து விரிஞ்சு கிடக்கு. நிலக்கரி எல்லாம் வெளியே எடுத்தாலும் தரையெல்லாம் கரகரன்னு கரித்தூள். பெரிய எலிகள் நாலைஞ்சு சாவகாசமா நடந்து போய்க்கிட்டு இருக்குதுங்க.
' இப்பக் கொஞ்சம் மெலிஞ்சு போச்சுங்க. முந்தி கோதுமை ஏத்திக்கிட்டு வந்தப்ப நல்லாத்தின்னு கொழுத்துக்கிடந்துச்சுங்க'ன்னார் சரவணன். இரும்புக்கம்பி ஏணி வழியா கீழே எஞ்சின் ரூமைப்போய்ப் பார்த்தோம். ஒரே சத்தம். பயங்கர சூடு வேற! நம்ம திரு, முகமெல்லாம் கரி பூசிக்கிட்டு கருப்பு அப்பின உடுப்போடு வந்து நலம் விசாரிச்சார். முதல்லே யாருன்னு அடையாளமே தெரியலை! தமிழ் கேட்டதும்தான் மனசிலாச்சு:-) இவர் மதுரைக்காரர்,
அப்புறம் மேல்தளத்துக்குப்போய், கப்பல் ட்ரைவர்(!!) இருக்கும் ப்ரிட்ஜ் ரூம் எல்லாம் வேடிக்கை பார்த்துட்டு, நாமே கப்பலை ஓட்டுவதாய் கற்பனை செஞ்சுக்கிட்டேன். பாவம்.... கப்பல். அடிமாடாப் போகுதேன்னு ஒரு வருத்தம்தான்.
எனக்குக் கப்பலுன்னா ஒரு தனி ஆசை. படகுப்பயணம் உடம்புக்கு ஒத்துக்கறதைல்லையே தவிர ச்சும்மா வேடிக்கை பார்க்கக் கசக்குதா? நம்மூர் கடற்கரைக்குப்போனாலும் கப்பல் எதாவது தெரியுதான்னே கண்ணை நட்டுக்கிட்டு இருப்பேன். இந்த ஆசையில்தான் ஒரு முறை கார் விபத்து ஒன்னுகூட எனக்கு ஏற்பட்டுருச்சு:( ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்தர் சொன்னது நெசம்தான்!
ஒரு நாள் 'கப்பல்காரவுஹ' வந்தப்ப பகல் சாப்பாட்டுக்குப் பிறகு உள்ளூர் ஹேக்ளி பார்க்கைச் சுத்திக் காமிக்கக் கூட்டிட்டுப் போனோம். அங்கே என் ஃபேவரிட் இடமான கள்ளிச்செடிகளைப் பார்த்து ரசிச்சுக்கிட்டு இருந்தப்ப...... பக்கத்துலே வந்து நின்ன ஒரு இளம்பெண்....சிநேகமாப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டே 'நீங்க தமிழா'ன்னு தமிழில் கேட்டதும்.................. 'ஆமாம்....எப்படித்தெரியுமு'ன்னு அசட்டுத்தனமாக் கேட்டு வச்சேன். தொணதொணன்னு ஓயாம கள்ளிகளை விளக்கோ விளக்குன்னு விளக்குனது காதில்'விழுந்துருக்கு'!!!!
பொண்ணு சிங்கப்பூர். இங்கே படிக்க வந்துருக்கு. ரொம்ப சந்தோசமுன்னு தொலைபேசி எண்ணைக் கொடுத்துட்டுக் கப்பல்காரவுஹளை பஸ் ஏத்தி விட்டுட்டு வீட்டுக்கு வந்தோம். அஞ்சே நிமிசம். தொலை பேசி அடிக்குது. கூப்ட்டது சிங்கைப் பொண்ணுதான். பேச்சுக்கிடையில் என்ன சமையல் செஞ்சீங்கன்னு கேட்டதுக்கு, வெஜிடபிள் பிரியாணியும் மசால் தோசையுமுன்னு அப்பாவியாச் சொன்னேன்.
மசால் தோசையான்னு கேக்கும்போதே அந்தப் பக்கம் நாக்கில் எச்சில் ஊறுவது இங்கேயே எனக்குப் புரிஞ்சு போச்சு. வீட்டுக்கு வர்றியான்னு (ஒரு பேச்சுக்குக்) கேட்டதும், 'வர்றேன். வழி சொல்லுங்க'ன்னுது பொண்ணு. ஒரு பத்துத் தெருதள்ளி வசிக்குதாம். நானே வந்து கூட்டிட்டுப்போறேன்னு சொல்லிட்டுப்போய்க் கூட்டியாந்தேன்.
அதுக்குப்பிறகு நிறைய தடவை வந்து போச்சுன்னு வையுங்க.அடுத்த மூணு வருசங்களில் ஒரு தொடருக்கான சம்பவங்கள் (கிளைக்கதை ஒன்னு இப்போ இங்கே கிளைக்குது) .இருக்கு. இந்தக் கச்சேரியை இன்னொருநாள் வச்சுக்கலாம். இப்போ 'நம்ம' கப்பலைக் கவனிக்கணும்.
ஒரு நாள் சரவணன் ஃபோனில் கூப்பிட்டு அவருடைய டிவிக்கு 150 விலை வந்துருக்கு. கொடுத்துறவான்னார். லிட்டில்டன் (துறைமுக ஊர்) அடகுக்கடையில் ' டிவி இருக்கு விலைக்கு வேணுமா'ன்னு கேட்டுருக்கார். என்ன டிவி, எவ்ளோ பழசுன்னு விசாரிச்சால்..... இங்கே வர்றதுக்கு முன்னால் போன ஜப்பான் துறைமுகத்தில் வாங்குனதாம். JVC 22" ஊருக்குக் கொண்டு போக வாங்கி இருக்கார். புத்தம் புதுசு. இன்னும் பொட்டியில் இருந்து வெளியில் எடுக்கலை.
அப்போ இங்கே நம்மூரில் டிவி எல்லாம் பயங்கர விலை. அறுநூறுக்குக் கொறைஞ்சு ஒன்னும் இல்லை. நம்ம வீட்டில் ஒரு 26 இஞ்ச் GE இருக்கு. அதனால் நமக்கு வேணாம். ஆனாலும் 150 அநியாயம். வேற யாருக்காவது வேணுமுன்னா கேட்டுப்பார்க்கலாமுன்னு நினைச்சு டிவி உங்ககிட்டேயே இருக்கட்டும். ரெண்டொருநாளில் சொல்றேன்னு கோபால் பதில் சொன்னார்.
"இல்லீங்க, நாளான்னிக்குக் கப்பலை டிமரு என்ற ஊருக்கு ஓட்டிட்டிப்போய் விடணும். ரெண்டொரு நாளில் அங்கே நமக்கு பணம் செட்டில் செஞ்சுருவாங்க. அதை வாங்கிக்கிட்டு உங்கூருக்கு வந்து, ஊருக்குப்போக விமானம் பிடிக்கணும். ப்ளேனில் போறதாலே கூடுதலா லக்கேஜ் ஒன்னும் கொண்டு போக முடியாது. அதுக்குக் கட்டுற கட்டணம் கூடுதல். அதான் வந்த விலைக்குப் போட்டுடலாமுன்னு......"
கோபாலுக்கு மனசு கேக்கலை. 'சாயந்திரம் வந்து பார்க்கறேன். அந்த அடகுக்கடையில் இன்னும் ஒரு அம்பது கூடுதலாக் கேட்டு வையுங்க'ன்னார். சாயங்காலம் கப்பலாண்டை போனபோது Pawn shop காரர் 150 மேல் தரமுடியாதுன்னாட்டாராம். சரவணனோட அறைக்குப்போய் டிவியைப் பார்த்தோம். இதுக்கு நூத்தியம்பதுதானா? கோபாலுக்கு மனசே ஆறலை. 'ஏம்மா...பேசாம நாமே வாங்கிக்கலாம். புது மாடலா இருக்கு. பெட் ரூமுக்கு ஆச்சுன்னு 250 எடுத்து சரவணன் கையில் வச்சார்.
(இந்த டிவி இன்னும் நம்மூட்டுலே இருக்கு. நல்லவே வேலை செய்யுது. ஆனா இந்த வருசம்தான் கடைசியாம். நம்ம நாட்டுலே டிவி காமிக்க டிஜிட்டல் ட்ரான்ஸ்மிஷன் மாத்தறாங்களாம். இனிமேல் இந்த டிவி எல்லாம் பயன்படாதுன்னு அரசாங்கம் சொல்லுது. இருந்துட்டுப் போகட்டும். தமிழ்சினிமா பார்க்க வச்சுக்கிட்டால் ஆகாதா? இப்பவே நம்ம ஜிம் அறையில் அதை வச்சுத்தான் தமிழ்ப்பாட்டு டிவிடி போட்டுட்டு நடைப்பயிற்சி செய்யறோம்.)
தொடரும்...................:-)
Posted by துளசி கோபால் at 1/27/2012 12:02:00 PM 24 comments
Labels: அனுபவம்
Tuesday, January 24, 2012
ஒரு முகம்தேட ....த்ரீ முகம் கிடைச்சது! (கப்பல் மினித் தொடர் 2)
நம்ம பக்கங்களில் துறைமுகத்துக்குள்ளே போய் வர ஏதொரு நிபந்தனைகளும் கெடுபிடிகளும் 'அப்போ' இல்லை. மீன்பிடிக்கறேன்னு ஒரு நூலைக் கையில் பிடிச்சுக்கிட்டுப் போய் வார்ஃப் ஓரத்தில் உக்காந்துக்கலாம். ஒரு சமயம் எனக்கு 9 கேட் ஃபிஷ் கிடைச்சது. ஆறு இஞ்சுக்கு மேல் நீளமுன்னா எடுத்துக்கலாம். சின்ன சைஸுன்னா திரும்பத் தண்ணீரில் விட்டுடணும். நம்ம 'கேட்ஸ்'க்குப் பிடிக்குமுன்னு ஆசைஆசையாக் கொண்டுவந்தேன். மோந்து பார்த்துட்டு ச்சீன்னு (என் முகத்தில்) துப்பிட்டுப்போனது நம்ம கப்பு:-)
படம் இடது பக்கம்: டன்னல் கண்ட்ரோல் பில்டிங். நிலநடுக்கம் காரணம் கட்டிடத்தின் முகப்பும் கற்பாறை விழுந்து பழுதாகிக்கிடக்கு. டன்னலுக்குள்ளும் கற்பாறைகள் விழுந்ததால் மூணுநாட்கள் மூடி வச்சுருந்து பழுது பார்த்தாங்க. மின்சார சப்ளை நின்னு போயிருச்சு. அவசர நடவடிக்கையா உள்ளே மின்சாரம், எக்ஸாஸ்ட் ஃபேன் எல்லாமும் பேக் அப் பவர் ஜெனெரேட்டர் உபயத்தால் நடந்துச்சு. இந்தப் படம் எடுத்த சமயம் எல்லாம் நார்மல்(டச் வுட்)
ஏறக்கொறைய ஒரு கூட்டமா இந்திய முகங்களைப் பார்த்ததும் திகைச்சுப்போயிட்டேன். நாலு பேர் இருந்தால் கூட்டம் என்று கொள்க என்பது எங்கூர் நியதி. சரவணன், திரு, ஜெயராமன் என்ற மூவரணிக்கு எங்க மூணு பேரையும் பார்த்ததும் பூவாய் மலர்ந்தன முகங்கள். மூணும் மூணும் ஆறுன்னு சிரிச்ச ஆறுமுகங்கள்
படம்:: துறைமுகத்துக்குள்ளே
'இந்தத் தமிழ்ப் படங்கள் எல்லாம் ஏற்கெனவே பார்த்ததா' ன்னு என் முதல் கேள்வி. 'அட! புதுசுங்க. நாங்க யாரும் பார்க்கவே இல்லை. ஊரைவிட்டு வந்து ஒன்னரை வருசமாகுது'ன்னாங்க. இங்கிருந்து திரும்பிப் போகும்போது இன்னும் சில நாட்டுக்குப்போய் சரக்கை இறக்கி ஏத்திக்கிட்டு சிங்கப்பூர் வழி சென்னைதானாம். அப்புறம் ஆறு மாசம் லீவு. பேசும்போதே வரப்போகும் ஜாலியை எதிர்நோக்கும் பரவசம் கண்ணில் தெரிஞ்சது.
கப்பலின் கேப்டன், இன்னும் ரெண்டு அதிகாரிகள் தவிர ஒரு பிலிப்பைன் சமையல்காரர். அப்புறம் இந்த ஒரு ஏழுபேர் ஆஹா.... அப்ப பாக்கி நாலு பேர் எங்கே? கப்பல் நங்கூரமடிச்சு நின்னாலும் எஞ்சின் ஓடிக்கிட்டே இருக்கணுமாம். அப்பதான் மின்சாரம் கிடைக்குமாம். ரெண்டு பேர் அந்த ட்யூட்டியில் இருக்காங்க. இன்னும் ரெண்டு பேர் தூக்கம். நைட் ட்யூட்டி பார்க்கணுமாம்.
இந்த ஏழு பேரில் ஒருவர் வடக்கிந்தியர். பாக்கி ஆறு பேரும் தமிழர். நாலு தமிழ்நாடு, ரெண்டு இலங்கை.
'பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருக்கு. அநேகமா இன்னும் ரெண்டொரு வாரத்துலே துறைமுகத்துக்குள்ளே விட்டுருவாங்க'ன்னு ஜெயராமன் சொன்னார். இவர் ஒரு அதிகாரி. chief Officerன்னு சொன்னாங்க. சரவணன் ரேடியோ ஆபீஸராம். இந்த ரேங்க் எல்லாம் என்னத்தைக் கண்டேன்? அப்போ நாம் பதிவர் ஜாதி இல்லை பாருங்க. அதனால் முழுசா விவரம் ஒன்னும் கேட்டுக்கலை:( மொதநாளே தொணதொணக்க வேணாமுன்னு கொஞ்சம் அடக்கிப்பேசிட்டு, படங்களைக் கொடுத்துட்டு, நம்ம வீட்டுக்கு வாங்கன்னு அழைப்பும், எந்த பஸ், எந்த ஸ்டாப்புன்னு விவரம் எல்லாம் விளக்கிட்டு நாங்க திரும்பிட்டோம்.
தொடர்ந்துவந்த சனிக்கிழமை, 'உங்க வீட்டுக்கு வந்துக்கிட்டு இருக்கோமுன்னு ஃபோன் பண்ணிச் சொன்னாங்க.' மணி ஒரு பத்து இருக்கும். பகல் சாப்பாடு நம்மோடு இருக்கட்டுமேன்னு கொஞ்சம் கூடுதலா சமைக்க ஆரம்பிச்சேன். பகல் மணி மூணாகுது...இதுவரை இவுங்க வந்து சேரலை:( என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு மனசுலே பதற்றம். அப்ப இந்த செல்ஃபோன் எல்லாம் நம்ம வீட்டில் புழக்கத்தில் வரலை. கோபால் ஆஃபீஸ்லேகூட எல்லாருக்கும் பேஜர் கொடுத்தாங்களே தவிர நோ செல்:(
வாசலுக்கும் உள்ளுக்குமா நடந்துபோய்ப் பார்த்துக்கிட்டு இருக்கோம். எங்கேன்னு போய்த் தேட? நாலுமணி போல வந்து சேர்ந்தாங்க மூவர். நம்ம சரவணனும், ஜெயராமனும், இன்னொரு புது முகமும். லிட்டில்டன்னில் இருந்து டவுனுக்கு வந்தவரைக்கும் எல்லாம் சரி. ஆனால் டவுனில் நம்ம வீட்டுக்கு பஸ் எடுக்காம கொஞ்சம் சுத்திப்பார்க்கலாமுன்னு போனதில் வழி தவறி, நேரம் ஓடி இருக்கு!
பெரிய பிஸ்கெட் பாக்கெட் ஒன்னு கொண்டுவந்து மகளுக்குத் தந்தாங்க. 'எதுக்கு இதெல்லாம்? அனாவசிய செலவு'ன்னு கடிந்தேன். கப்பலில் சாப்பாட்டுக் குறைவு ஒன்னும் இல்லையாம். 'அதான் உங்க ஊர் ஜனங்க பொட்டிபொட்டியா தின்பண்டங்கள் அனுப்புனீங்களே' என்றார் ஜெயராமன்.
எப்போ சாப்பிட்டாங்களோ என்னவோன்னு உடனே சாப்பாடு பறிமாறினேன். வத்தக்குழம்பு பார்த்ததும் நம்ம ஜெயராமனுக்குக் கண்ணுலே கரகரன்னு தண்ணீர். சரவணனுக்கு சாம்பார் ரொம்பப்பிடிச்சுப் போச்சு. இலங்கைக்காரர் நகுலன் ஒன்னும் கதைக்காமல் சாப்பிட்டார்.
நம்ம வீடியோ ஷெல்ஃபைப் பார்த்ததும் நகுலனுக்கு ரொம்ப மகிழ்ச்சியாப் போயிருச்சு. நம்ம படக் கேஸட்டுகளைக் கொடுத்துட்டு இன்னும் நாலைஞ்சு எடுத்து வச்சுக்கிட்டார். பார்க்காத படங்கள் நிறைய இருக்குன்னும் சொன்னார்.
கப்பலை எப்போ உள்ளே விடுவாங்கன்னதுக்கு, இன்னும் சரிவரத் தெரியலையாம். கப்பலை கைது செஞ்சு வச்சுருக்காங்களாம். அடராமா?
கப்பலைக் கூடவா? ஏன்? எதுக்கு?
போன ரெண்டு முறை இங்கே வந்துட்டுப்போன கப்பல்தான் இது. அப்போ வேற க்ரூ இருந்துருக்காங்க. பொதுவா சாமான்களை இறக்க, ஏத்தன்னு சர்வீஸ் செய்யும் துறைமுகத்துக்கு ஒரு கட்டணம் கட்டணும் அதைக் கடந்த ரெண்டு முறையும் கட்டாம நைஸாக் கம்பி நீட்டிருச்சு கப்பல். இந்த முறை வாகா வந்து மாட்டிக்கிச்சு.
கப்பல் உரிமையாளருடன் பேச்சு வார்த்தை நடக்குது. அவர் அதுக்கெல்லாம் ஏற்கெனவே பணம் கொடுத்துட்டேன் அப்போ இருந்த கப்பல் அதிகாரிகளிடம். இன்னொரு தடவை கொடுக்க முடியாதுன்றாராம். அடப்பாவமே! யாரு நடுவிலே ஆட்டையைப் போட்டா?
ஏழு மணிக்கு முன் துறைமுகத்துக்குத் திரும்பணுமாம். இவுங்களைக் கூட்டிப்போய் கப்பலில் விடும் துறைமுக நிர்வாகத்தின் சின்னப்படகு அதுக்குப்பிறகு வேலை செய்யாதாம். மணி ஆகுதேன்ற பதைபதைப்பில் ' பஸ் பிடிச்சுப்போனால் ரொம்ப நேரமாகும். நான் போய் விட்டுட்டு வர்றேன்'னு கோபால் நம்ம வண்டியை எடுத்தார். அஞ்சு ஸீட் டொயோடா. இங்கெல்லாம் அஞ்சுன்னா அஞ்சு. அதுக்குமேல் அடைச்சுக்கிட்டுப் போகமுடியாது. கப்பலில் இருக்கும் மற்ற நண்பர்களுக்கு இருக்கட்டுமுன்னு குழம்பு, பொரியல், கூட்டுன்னு பார்ஸல் செஞ்சு கொடுத்தேன். ரைஸ் குக்கரில் சோறு ஆக்கிக்குவோம் என்றார் சரவணன்.
எப்பப்ப முடியுமோ அப்பெல்லாம் வந்து போங்க. வர்றதுக்கு முன்னால் ஒரு ஃபோன் அடிங்கன்னு சொன்னேன்.
அஞ்சாறு நாளைக்கொருமுறைன்னு யாராவது ரெண்டு பேர் வந்து போய்க்கிட்டு இருந்தாங்க. உங்களுக்கு எதுக்கு சிரமம். சாப்பாடெல்லாம் வேணாமுன்னும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நமக்கு மனசு கேக்குதா? கொஞ்சம் கூடுதலாச் சமைச்சால் ஆச்சுன்னு குழம்பு, ரசம். கறின்னு கொடுத்து அனுப்புறதுதான். மூணு வாரம் ஆச்சு. இன்னும் கப்பலை உள்ளே விடலை. நல்லவேளையா இது சரக்குக் கப்பல் என்றதால் ஜெயிலில் போட்டாலும் பரவாயில்லைதான். (ஆமாம். இந்தக் காலத்துலே யார் கப்பலில் பயணம் போறாங்க? மாசக்கணக்கா பயணம் பண்ண காலம் மாறிப்போச்சுல்லே!)
இதோ விட்டுருவாங்கன்னு இருந்த 'சரவணன் அண்ட் கம்பெனி'க்கும் ஆரம்ப கால உற்சாகம் படிப்படியாக் குறைய ஆரம்பிச்சது. இவுங்களுக்கு இப்படி நடப்பது முதல் அனுபவமாம். முதலாளி எதுக்கும் ஒத்துவரலையாம். என்னடா இப்படி வந்து கண்காணாத தேசத்தில் மாட்டிக்கிட்டமேன்னு இருக்கு போல!
கவலைப்படாதீங்க. எல்லாம் சரியாகுமுன்னு ஆறுதலாப் பேச்சுக் கொடுத்த ஒரு நாள், அதிர்ச்சியா இன்னொரு தகவல் சொன்னார் சரவணன்!
தொடரும்.............:-)
சின்ன ஊர்தான். ஆனாலும் நிலநடுக்கத்தால் ரொம்பவே பாதிக்கப்பட்டு இருக்கு. கண்டெயினர்களை வச்சே இங்கேயும் பிஸினஸ் ஏரியாக்களை சுமாராச் சரிபண்ணி இருக்காங்க.
PIN குறிப்பு: நிறைய படங்கள் எடுத்தாலும் இப்ப நம்ம தேவைக்கு எதுவும் கண்ணுலே ஆப்டலை. ஏகப்பட்ட ஃபோட்டோ ஆல்பத்துலே, இது எங்கே ஒளிஞ்சுருக்கோ? என்ன ஆனாலும் இந்த டிஜிட்டல் ஃபோட்டோ சௌகரியம் வராது கேட்டோ!
முந்தாநாள் போய் சில படங்கள் உங்களுக்காக எடுத்து வந்தேன். அவை பதிவில் இடம் பெறும்.
படம்: துறைமுகத்துக்குள்ளே
Posted by துளசி கோபால் at 1/24/2012 02:53:00 PM 19 comments
Labels: அனுபவம்
Friday, January 20, 2012
கப்பல்களுக்கு கால(ம்)ன் வந்தால்......
ஒரே பாட்டுலே பணக்காரன் ஆறதுபோல் நம்ம சினிமாவிலே காமிக்கிறாங்க இல்லே! அதேபோல் ஒரே நிமிசத்துலே ஏழை ஆகறதை எப்படிக் காமிப்பாங்க? ரொம்பப் பழைய காலப்படமுன்னா 'சார்..தந்தி' இடைப்பட்ட காலமுன்னா.... ட்ர்ர்ரிங் ட்ர்ர்ரிங்.... டெலிஃபோன் மணி. விஷயம் என்னவோ ஒன்னுதான்..... 'ஐயோ! சாமான்கள் ஏத்தி வந்த நம்ம கப்பல் கவுந்து போச்சு!' அச்சச்சோ..... கவுந்தா போச்சு? கை எடு. கன்னத்துலே வை!
வீட்டுத்தலைவர் மாரடைப்புலே பட்ன்னு போய்ச்சேர, பட்டுப்புடவையும் நகைநட்டுமா அதுவரை வீட்டுக்குள்ளே உலவிவந்த வீட்டம்மா கருப்பு நிற நூல்புடவையுடன் கண்ணீரும் கம்பலையுமா குடிசைக்குள் குடிபுக, ரெட்டைப்பின்னலுடன் நைலான் தாவணியில் கல்லூரிக்குப்போகும் மகள், ஒட்டுப்போட்ட பாவாடை, சட்டையும் கிழிஞ்ச தாவணியுமா ஒரு வீட்டுலே பத்துப்பாத்திரம் தேய்க்கன்னு......ன்னு ஏழ்மை ஸீன் நம்மை உருக்கிரும்!!!!
ஆமா...அதுநாள்வரை போட்டுருந்த துணிமணிகள் எங்கே போச்சாம்???????
இன்னிக்குக் கணக்குலே சரியா 19 வருசத்துக்கு முந்தி நடந்த ஒரு சம்பவம் இப்போ கொசுவத்தி ஏத்திக்கிச்சே! சொல்லாமவிட முடியுதா?
ட்ர்ர்ரிங் ட்ர்ர்ரிங்...நம்மவீட்டு ஃபோன் அடிக்குது. கோபால் ஸார் வீடா'?ன்னு ஆங்கிலத்துலே ஒரு கேள்வி. இந்திய உச்சரிப்பு நமக்கு சட்னு புலப்படாதா? ''ஆமாம். நீங்க யார் பேசறது? இந்தியரா?ன்னு நான் ஒரு எதிர்க்கேள்வி கேட்டேன்.
"ஆமாம். கப்பலில் இருந்து பேசறோம். இந்தியர்தான்."
'கோபால் ஆஃபீஸ் போயிருக்கார். உங்க பெயர் என்னன்னு சொல்லுங்கன்னதும் 'சரவணன்'னு சொன்னார். ஆஹா..... தமிழ் நாடா? இன்னும் கொஞ்சம் போட்டு வாங்குனதுலே முக்காவாசி விஷயம் கிடைச்சுருச்சு.
படம்: துறைமுகத்துக்கு வரும் இயற்கை வழி. மலைகளுக்கு நடுவே கடல் வழிவிட்டுருக்கு:-)
அவுங்க கப்பலை துறைமுகத்துக்கு வெளியே கொஞ்ச தூரத்தில் நிறுத்தி வச்சுட்டாங்க. உள்ளே வர அனுமதி இல்லை(யாம்) இன்னிக்குத்தான் சிலர் மட்டும் சின்னப் படகுலே கரைக்கு வந்துபோக அனுமதி கிடைச்சுருக்கு. உள்ளூர்லே கோவில் எதாச்சும் இருக்குமுன்னு டெலிஃபோன் டைரக்டரியில் தேடிப் பார்த்துருக்காங்க. ஸ்ரீ வெங்கடேஸ்வரா, கிருஷ்ணா, கோபாலான்னு கண்ணை ஓடவிட்டா கோபால் ஆப்ட்டார்.
அப்ப இந்த மாநகரில் இருந்த வெறும் மூணு லக்ஷம் நபர்களில் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு நம்ம கோபால் இருந்துருக்கார்!
அப்பதான் எனக்கு ஞாபகம் வருது ரெண்டு மூணு நாளைக்கு முன்னே ஒரு கப்பலைக் கைது பண்ணி ஊருக்கு வெளியில் நிப்பாட்டுனதை டிவியில் ஒரு (கடைசி) அரைவிநாடி பார்த்தது. அப்ப அதைப் பெருசா எடுத்துக்கலை. ஆனா எங்கூரு மக்கள்ஸ்க்கு இளகுனமனம் ஜாஸ்தி. ஐயோ உணவில்லாமக் கஷ்டப்படப் போறாங்களேன்னு நிறைய பிஸ்கெட்ஸ், கேக்ஸ், பழங்கள் இப்படி சாப்பாடு அயிட்டங்களைத் துறைமுகத்தில் கொடுத்து அந்தக் கப்பலுக்கு அனுப்பச்சொல்லி இருக்காங்க. அதிகாரிகளும் ஆட்டையைப்போடாம அதை 'அப்படியே' கொண்டு போய் கப்பலில் ஒப்படைச்சுருக்காங்க.
சரவணன் சொன்னார்.... 'ரொம்ப போரடியாக் கிடக்கோம். எதாவது தமிழ்ப்படம் வச்சுருந்தா தர்றீங்களா?' ஆஹா.... நிறைய இருக்கு. கோபால் வேலை முடிஞ்சு வந்ததும் துறைமுகத்துக்கு வர்றோம். நீங்க அப்போ எங்கே இருப்பீங்கன்னதுக்கு ஒரு ஏழரை வரை அங்கே இருப்போம். அதுக்குப்பிறகு எங்களைக் கப்பலில் கொண்டு விட்டுருவாங்கன்னார்.
மதியம் சாப்பாட்டுக்கு வந்த கோபாலிடம் 'விவரம்' சொல்லி சாயந்திரம் கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வந்துருங்கன்னதும் அப்படியே செஞ்சார். மகளையும் பள்ளிக்கூடத்தில் இருந்து கூட்டிவந்து ரெடியாக்கி நாலைஞ்சு வீடியோ காஸெட்களை எடுத்து வச்சேன்.
படம்::லிட்டில்டன் ஊரும், துறைமுகப்பகுதியும். ஃப்ரைட்டனர்ஸ் படத்தில் இந்த ஊர் வந்துருக்கு
நம்ம வீட்டில் இருந்து உள்ளூர் துறைமுகம் (லிட்டில்டன் ஹார்பர்) ஒரு 35 நிமிசப் பயண தூரம். கிழக்கே போய் ஒரு Port Hills என்ற மலையைக் கடந்தால் அடுத்தபக்கம் கடல். இந்த மலைக்கு அடியில் ஒரு சுரங்கப்பாதை குடைஞ்சு விட்டுருக்காங்க.
1970 மீட்டர் நீளம். போக வரன்னு ரெண்டு லேன் உள்ளே யாரும் ஓவர்டேக் பண்ணக்கூடாது. ஒரு நாளைக்கு ஏறக்கொறைய பத்தாயிரத்துக்கும் மேலே, சரியாச்சொன்னால் 10755 வண்டிகள் இதுக்குள்ளே ஓடுதுன்னு சமீபத்திய புள்ளிவிவரம் சொல்லுது. சைக்கிள்க்காரர்களுக்கு உள்ளே ஓட்டிப்போக அனுமதி இல்லை. ஆனால் இதுக்குள்ளே போய் வரும் பஸ்ஸில் சைக்கிளை எடுத்துக்கிட்டுப்போய் அந்தாண்டை சுரங்கத்துக்கு வெளியில் விட சரியான ஏற்பாடுகள்(bicycle carriers) எல்லாம் இருக்கு. நடராஜா சர்வீஸ் ஆல்ஸோ நாட் அலௌடு.
படம்:: டன்னலின் நுழைவு
கடந்த சிலவருசங்களா நியூஸி தென் தீவின், மேற்குக்கடற்கரையில் ஆரம்பிச்சுக் கிழக்குக் கடற்கரையில் முடியும் 'கோஸ்ட் டு கோஸ்ட்' ( coast to coast) பந்தயத்துக்காக வருசத்தில் ஒரு நாள் பந்தய வீரர்கள் கிறைஸ்ட்சர்ச் நகரத்துக்குள்ளே நுழைஞ்சு டன்னல் கிட்டே போகும் சமயம் ஒரு சில மணி நேரங்களுக்கு மட்டும் மற்ற வண்டிகள் போக்குவரத்து நிறுத்தி வச்சுட்டு பந்தய மக்களை மட்டும் போக அனுமதிக்கிறாங்க. மொத்தம் 243 கிலோமீட்டர் தூரம். ஓட்டம், சைக்கிள், kayak என்னும் சின்னப்படகு என்ற மூன்றுவகைகள் பயன்படுத்தணும்.
படம்:: டன்னல் கட்டிக்கொண்டிருந்தபோது
டன்னலை 1964 வது ஆண்டு ஃபிப்ரவரி மாசம் 27 க்கு பொதுமக்கள் பயனுக்குத் திறந்துவிட்டுருக்காங்க. அப்போதைய கவர்னர் ஜெனெரல் ப்ரிகேடியர் ஸர், பெர்னார்ட் ஃபெர்கூஸன் திறந்து வச்சுருக்கார். ரெண்டு வருசம் ஆச்சு இதைக் கட்டி முடிக்க. இதுக்கான செலவைச் சரிக்கட்ட ஒரு டோல் கேட் போட்டு டன்னலுக்குள்ளே போக வர இருவது சதம் (20 Cents) வசூலிச்சாங்களாம். பதினைஞ்சு வருசத்துலே செலவான தொகை கிடைச்சுருச்சு. 1979 முதல் உள்ளே போக கட்டணம் ஏதுமில்லை. இலவசம்தான். (நல்லவேளை! நாம் 1988லேதான் நியூஸிக்கு வந்தோம். நம்மூட்டுக்கு வரும் வெளிநாட்டு விருந்தினர்களை இந்த டன்னல்வழி கூட்டிப்போய் காமிக்கலைன்னா கோபாலுக்குத் தூக்கம் பிடிக்காது)
படம்:: ரயில்பாதைக்காக வெட்டிய சுரங்கப்பாதை
இந்த சுரங்கப்பாதை மட்டும் இல்லைன்னா போர்ட் ஹில்ஸ் மலைப்பாதை சாலையில் வண்டிகள் ஏறி அடுத்த பக்கம் இறங்கி சிட்டிக்குள்ளே வர தாவு தீர்ந்துடும். இங்கே முதன்முதலில் குடியேறி வசிக்க ப்ரிட்டனில் இருந்து (செட்டிலர்ஸ்) மக்கள் வந்த சில வருசங்களில் ரயில் வண்டி போக்குவரத்துக்காக ஒரு சுரங்கப்பாதை மலையைக் குடைஞ்சு போட்டுருந்தாங்க. அது 1859 இல். ஆரம்பிச்சு 1867 இல் முடிஞ்சது. 2.7 கிலோமீட்டர் நீளம். நியூஸியின் முதல் ரயில்பாதை அதுதான். அதுவும் ஒரு எரிமலைக்கு ரொம்ப சமீபமாப்போகும் பாதை. (நல்லவேளையா எரிமலை அணைஞ்சு கனகாலமாகி இருந்துச்சு. மலையைக் குடைஞ்சுக்கிட்டே வரும்போது அங்கே எரிமலை சமீபிக்குதுன்னு அப்ப யாருக்கும் தெரியாது! இதைப்பற்றி ஒரு தொடரே எழுதலாம். அத்தனை சுவாரசியமான தகவல்கள் கிடைச்சுருக்கு ) இப்பவும் இந்த ரயில் பாதையும் சுரங்கமும் பயன்பாட்டிலேதான் இருக்கு. மனுசர் பயணிக்கும் ரயில் இல்லை. வெறும் கூட்ஸ் வண்டி.
ஒரு ஆறுமணி போல துறைமுகத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். சின்னத்துறைமுகம்தான். சரவணனைக் கண்டு பிடிப்பது கஷ்டமா என்ன?
தொடரும்...................:-)
PIN குறிப்பு: மினித்தொடர்தான் யாரும் பயப்படவேண்டாம்:-)))))))))))
படங்கள்: கூகுளாண்டவர் அருளிச்செய்தவை. நன்றி.
Posted by துளசி கோபால் at 1/20/2012 02:27:00 PM 35 comments
Labels: அனுபவம்
Monday, January 16, 2012
உண்மையான **** கலைஞருக்கு அழகு?
ஒரு முக்கிய அறிவிப்பு: சமையல் வாரத்தை வெற்றிகரமா 'ஆக்கிய' பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டு இந்த ஈஸி பீஸி சக்கப்ரதமனை சமர்ப்பிக்கின்றேன்.
தேவையான பொருட்கள்:
ஒரு டின் பலாப்பழம்
வெல்லப்பாகு முக்கால் கப்
பால் 2 கப் ( விருப்பம் என்றால் தேங்காய்ப்பால் சேர்க்கலாம்)
ஏலக்காய் 4
முந்திரி 15
திராட்சை ஒரு மேசைக்கரண்டி.
நெய் 2 மேசைக்கரண்டி
செய்முறை:
டின்னில் வரும் பலாப்பழத்தை எடுத்து மிக்ஸியில் போட்டுக் கொஞ்சம் பால் சேர்த்து அரைத்துக்கொள்ளவேணும். (ஃப்ரெஷ் பழம் கிடைச்சது என்றால் கொஞ்சம் வேகவச்சு எடுத்துக்கணும்)
ஒரு நான் ஸ்டிக் வாணலியில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊத்தி சூடாக்கு முந்திதி திராட்சையைப் பொன்வறுவலா வறுத்த்யுத் தனியே எடுத்து வச்சுக்கணும்.
அதே வாணலியில் அரைச்ச பலாப்பழ விழுதைப்போட்டு 'கோல்டன் சிரப்' என்ற வெல்லப்பாகு ஒரு முக்கால் கப் ( இனிப்பு கூடுதலா வேணுமுன்னா உங்க ருசிக்கு) சேர்த்து அஞ்சு நிமிசம் சிறுதீயில் இளக்கிட்டு, பாயஸம் என்ன 'திக்' கில் இருக்கணுமோ, அவ்ளோ பாலையும் ( காய்ச்சின பால்) சேர்த்துக் கலக்கிட்டு ஏலக்காய்த்தூள் தூவி, எடுத்துவச்ச முந்திரி திராட்சையையும் போட்டு ஒரு கலக்குக் கலக்கினால்......... பலாப்பழப் பாயஸம் ரெடி..
அடுத்து..........
எப்படி? எப்படி? சமைச்சது எப்படி?ன்னு சமையலையும் சமைச்சதையும் சொல்லிக்கொடுக்கும்போதே அப்பப்ப நேரம் சேமிக்கவோ, வீட்டு வேலைகளைச் சுலபமா (!!) ஆக்கிக்கவோ கொஞ்சம் டிப்ஸ்களையும் சொல்லித்தந்தால்தான் முழுமையான சமையல் புத்தகம் 'ஆக்கும்' வேலை முடியும் என்ற 'நியதி'யின்படி.......................
இந்த இருபத்தினாலு வருஷக் குளிர் தேச வாழ்விலே, நேரம் சேமிக்க நான் செய்த வித்தைகள் உங்களுக்கும் உபயோகமா இருக்கும்னு நினைத்து இதை எழுதுகிறேன்.
இன்னொண்ணு, அடிக்கடி ஊருக்குப் (வீட்டுலே மத்தவங்களை விட்டுட்டு)போற ஆளுங்களா இருந்தா, அவுங்க, சாப்பாட்டுக்கு அவ்வளவாக் கஷ்டப்பட வேண்டாம்.
சாம்பார், ரசத்துக்குப் பருப்பு வேகவைக்கும்போது எப்பவுமே, 'குக்கரில்' நிறைய ( ஒரு 3 கப்) வேகவைத்து, சூடாக இருக்கும்போதே கரண்டியால் நன்கு மசித்துவிட்டு, அன்றைக்குத் தேவையானது போக, பாக்கியை சிறு 'பிளாஸ்டிக் கன்டெயினர்' சிலவற்றில் நிரப்பி, 'ஃப்ரீஸரில்' வைத்தால், இன்னொரு நாள் ரசம்,
கூட்டு போன்றவை செய்துகொள்வது எளிது.
வெள்ளைக் கடலை ( காபூலிச் சனா), காராமணி இவைகளையும் கொஞ்சம் கூடுதலாக முதல் நாள் இரவே ஊறப் போட்டுவிட்டு, மறுநாள் அடுப்பின் மீதே வைத்து வேகவிடலாம். சீக்கிரமே வெந்துவிடும். அவைகளையும் சின்னச்
சின்ன ஃப்ரீஸர் பைகளில் நிரப்பி ஃப்ரீஸ்ஸரில் வைத்து, காய்கள் பொரியல் செய்யும்போது சேர்க்கலாம்.
வெள்ளைகடலைக்கு இன்னொரு உபயோகம் இருக்கு. அரிசி உப்புமா செய்யும்போது சேர்க்கலாம். ருசி அட்டகாசமா இருக்கும்.
'மஹாராஷ்ட்ரா'வில் பச்சையாகச் செடியுடன் இந்தக் கடலை 'ஸீசன்'லே கிடைக்கும். அப்போது எங்க மாமி இதை அரிசி உப்புமாவிலே போடுவாங்க. இங்கே, அப்படிச் செடியோட பச்சையாக் கிடைக்காததுக்கு, இப்படி
வேகவச்சதைப் போட்டாலும் ஏறக்குறைய அதே ருசி கிடைச்சிடும்!
கீரை வகைகள், கொத்துமல்லிக் கட்டு போன்றவைகளை, கிடைக்கும் சமயம் கொஞ்சம் நிறைய வாங்கி, அவைகளை ஆய்ந்து,கழுவி சுத்தம் செய்து, நம் குடும்பத்துக்கு ஒரு வேளைக்கு வேண்டிய அளவுகளாகப் பிரித்து,ஃப்ரீஸர்
பைகளில் நிரப்பி ஃப்ரீஸ்ஸரில் வைத்துக்கொண்டால்,எப்போது வேண்டுமானலும் கீரைப் பொரியல் ஒரு ஐந்தே நிமிஷத்தில் செய்யலாம்.
தண்ணீரிலே அலசிய கீரைகளிலிருந்து, தண்ணீரை வடிக்க 'ஸாலட் ஸ்பின்னர்' இருந்தால் அதில் போட்டு ரெண்டு சுற்று சுற்றினால் ஈரம் இல்லாமல் இருக்கும். 'ஃப்ரீஸ்' செய்தாலும் உதிரி உதிரியாக வரும்!
கருவேப்பிலைக்கும் இதே சிகிச்சைதான்.
இப்பல்லாம்,இந்திய மாம்பழக்கூழ் 'டின்'லே கிடைக்கிறதல்லவா? அதை 'ஐஸ்க்யூப் ட்ரே'யில் ஊற்றி உறைந்ததும் எடுத்து
ஃப்ரீஸர் பையில் வைத்துக்கொண்டால், மில்க்ஷேக் தேவையான போது, ஒரு தம்ப்ளர் பாலுடன், மூன்று ஐஸ்க்யூப், 2 டீஸ்பூன்
சக்கரையுடன் சேர்த்து 'மிக்ஸி'யில் ஒரு 10 வினாடி சுற்றினால் சுவையான மாம்பழ மில்க் ஷேக் ரெடி!
இதற்குத் தனியாக 'ஐஸ்' சேர்க்கவும் தேவையில்லை!
உரித்த பூண்டு, பச்சைமிளகாய் வகைகளை, ·ப்ரீஸர் பைகளில் போட்டு, ஃப்ரீஸ் செய்துகொண்டால் வேணும்போது அப்படியே
எடுத்து உபயோகிக்கலாம். இதெல்லாம் தன்னாலேயே 'ஃப்ரீ ஃப்ளோ'வாக ஆகிவிடும்.
இஞ்சி மலிவாகக் கிடைக்கும் சமயம் வாங்கி, சுத்தம் செய்து, 'ஃபுட் ப்ராஸசர்'லே போட்டு, சின்னத்துண்டுகளாக வெட்டி ஃப்ரீஸ் செய்யலாம்.
சமைக்கறப்போ மிகவும் தேவையான இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மசாலாவையும் (எல்லாம் சம அளவு) அரைத்து
'ஐஸ்க்யூப் ட்ரே'யில் நிரப்பி, மறுநாள் 'ப்ளாக் ப்ளாக்'காக எடுத்து, ஃப்ரீஸர் பையில் வைத்துக்கொண்டால், சமைக்கும்போது,
தேவைக்கு ஏற்ப ஒன்றோ, இரண்டோ 'க்யூப்' எடுத்துக் கொள்ளலாம். அசைவச் சமையலுக்கு இன்றியமையாத ஐட்டம் இந்த இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய். க்ரீன் மஸாலான்னு இதுக்கு பெயர்!
புளி கரைக்கணுமுன்னா முதலில் மிக்ஸி எங்கேன்னு பார்த்து எடுத்து வச்சுக்குவேன். பருப்பை மட்டும் குக்கரில் வைக்கும் தினமானால் கூடுதலா இருக்கும் குக்கர் ஸ்பேஸில் ஒரு கிண்ணத்தில் ஒரு கால் கிலோ புளி வச்சு, கால் கப் தண்ணீரும் ஊத்தி பருப்புக்கு மேலா வச்சுடலாம். இல்லை கைவசம் நேரம் இருந்தால் புளிக்காகவே குக்கரை வச்சுக்கலாம். ரெண்டே விஸில் போதும்.
கொஞ்சம் ஆறினதும் மிக்ஸியில் பாதி அளவு சேர்த்து கொஞ்சம் தண்ணீரையும் விட்டு நாலு சுத்து. அரைச்செடுத்ததை ஒரு காய்வடிகட்டியில் ஊத்துங்க. நல்ல திக்கான pulp கீழே இறங்கும். இதே போல் பாக்கி உள்ள புளியையும் அரைச்சு பல்ப்P எடுத்துக்குங்க. இப்ப வடிகட்டியில் இருக்கும் புளியை இன்னொரு முறை மிக்ஸியில் சேர்த்து ஒரு டம்ப்ளர் தண்ணீர் சேர்த்து மீண்டும் ஒரு நாலு சுத்து. வடிகட்டியில் சேர்த்துருங்க. இங்கே புளி விக்கிற விலையில் ஒட்டப் பிழிஞ்சுக்கிட்டாக் கொடுத்த காசுக்குக் கேடில்லை..
இந்தப் புளிக்கரைசலை 'ஐஸ் க்யூப் ட்ரே'யில் ஊற்றிவச்சுட்டு மறுநாள் ஒரு ஃப்ரீஸர் பையில் ஐஸ் கட்டிகளா எடுத்து வச்சுக்குங்க. குழம்பு ரசத்துக்கு மூணோ நாலோ கட்டிகளை எடுத்துப் போட்டால் ஆச்சு. கொதிக்கும்போது தானே கரைந்துவிடும். ஏற்கெனவே குக்கரில் வெந்த புளியானதால்...புளி வாசனை போகும்வரை கொதிக்கவைக்கணும் என்ற அவசியமும் இல்லை கேட்டோ! சட்னி அரைக்கும்போது ரெண்டு கட்டிகளை எடுத்துக்கலாம்.
அடைக்கு அரைக்கும்போது, கொஞ்சம் அதிகமான அளவில் அரைத்துக் கொண்டு அந்த மாவையுமே 'ஃப்ரீஸ்' செய்யலாம். மாலை டிஃபனுக்கு வேண்டுமானால், காலையிலேயே எடுத்து வெளியில் வைத்துவிட்டால், மாலையில் மாவு ரெடி. தோசைமாவையும் இப்படி எடுத்து வைக்கலாம். இட்லி மாவு மட்டும் இந்த முறையில் சரியாக வருவதில்லை. ( இதெல்லாம் குளிர்
ஊருக்கு மட்டும்) ஆனால் இட்லிகளாக தயாரித்து பின்பு ஃப்ரீஸரில் வைத்துக் கொண்டு தேவையானபோது மைக்ரோ வேவ் அவனில்
சூடு செய்யலாம்.
நாலோ அஞ்சோ (தேவையான எண்ணிக்கை) ·ப்ரீஸர் பைகளில் போட்டுவைத்து கொண்டால் இன்னும் எளிது.
நிறைய சாதம் மீந்துபோனால் அதைக்கூட ·ப்ரீஸ் செய்யலாம். வேண்டும்போது, ·ப்ரீஸரில் இருந்து வெளியி
ல் எடுத்து வைத்துவிட்டு,
(சாப்பிட ஒரு மணிநேரம் முன்பு) மைக்ரோ அவனில் சூடு செய்யலாம். அப்போதுதான் சமைத்த மாதிரி
இருக்கும். அல்லது 'வடாம்'
செய்யலாம். அதன் செய்முறை இங்கே:-)))
தேங்காயைத் துருவி ஃப்ரீஸரில் வைக்கலாம். அதைவிட இன்னும் சுலபமானது, 'டெஸிகேட்டட் கோகனட்'. வேணும்போது
கொஞ்சம் சுடுதண்ணீரில் பிசறி வைத்துவிட்டால். 15 நிமிஷம் கழித்து 'அப்போதுதான் துருவிய ஃப்ரெஷ்' தேங்காய் ரெடி!
இந்த மாதிரியெல்லாம் செய்வதால்தான், இங்கே நம் வீட்டில் எல்லா சமையலுக்கும்சேர்க்கவேண்டிய அனைத்தையும் முறைப்படிச் சேர்த்துக்
'குறையொன்றுமில்லை கண்ணா' என்று இருக்கமுடிகிறது!
என்ன ஒன்று, 'ஃப்ரீஸர்'அளவு பெரியதாக இருக்க வேண்டும். தனியாக உள்ள 'ஃப்ரீஸர்' என்றால் உத்தமம்.
மறுபடியும் சொல்றேன். இதெல்லாம் எங்களைப் போல குளிர் நாட்டில் இருப்பவர்களுக்கும், அதிகமாக நாள், கிழமை பார்க்காமல்
இருப்பவர்களுக்கும்தான்.
கொசுறு டிப்ஸ்:
சப்பாத்திகளையும் ·ப்ரீஸ் செய்து உபயோகிக்கலாம். சுவையில் வித்தியாசம் இருக்காது.
·ப்ரீஸ் செய்து உபயோகிக்க முடியாதது ( ருசி மாறுபடுவது)
மோர்க் குழம்பு
இன்னும் ஏதாவது இருக்கும், ஞாபகம் வரும்போது எழுதுவேன்!
உண்மையான சமையல் கலைஞருக்கு அழகு = டிப்ஸ்(??) கொடுப்பது:-))))
PIN குறிப்பு: நன்றி மரத்தடி. அங்கே 'பெண்ணே உன் சமர்த்து' என்று எழுதி வச்ச பதிவைக் கொஞ்சம் தட்டிக்கொட்டி இங்கே போட்டுருக்கேன்.
அனைவருக்கும் இன்றைய 'நம்' பொங்கல் பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள். ஜல் ஜல் ஜல்..... என்னும் சலங்கை ஒலி ம்ம்ம்ம்மா......வ்
Posted by துளசி கோபால் at 1/16/2012 03:55:00 PM 40 comments
Labels: அனுபவம்
Friday, January 13, 2012
இன்று பஃப்பாமல் செய்த பஃப்.:-)
சமையல் வாரத்தில் துளஸிவிலாஸில் இன்னிக்கு ஒரு வெஜிடபிள் பஃப் செஞ்சு பார்க்கப்போறோம்.
'மண்ணுக்குக் கூட காசா'ன்னு மலைச்சு நிக்கவேண்டியதில்லை. ஒரு 20 சதம் விலை குறைச்சே போட்டு வச்சுருக்காங்க. புதுசா இன்னிக்குத் தோண்டி எடுத்த உருளைக்கிழங்காம். மண்ணோடு மங்கலாக் கிடக்கு. பக்கத்துலேயே நல்லாக் கழுவி வச்சதும் குமிஞ்சுருக்கு.இதுக்கு ரெண்டரை டாலர்ன்னா மண் உள்ளதுக்கு ரெண்டு. இதெல்லாம் கிலோக் கணக்கில் வாங்குபவர்களுக்கான தனிவிலை. பத்து கிலோ உள்ள மூட்டையை எடுத்தால் $8.95தான். பெரிய குடும்பத்துக்கு ஓக்கே. நமக்கு? வருசத்துக்கு 'வச்சு'த் தின்ன முடியாதே:(
நேத்து சூப்பர்மார்கெட் விஸிட்டுலே குளுகுளுப் பகுதிக்குப்போய் ஒரு நோட்டம் விட்டதில் ஒரு ரெடி ரோல்டு பேஸ்ட்ரி ஷீட் ஆப்ட்டது. பரத்தி வைக்காமல் கட்டியா உள்ளதும் வச்சுருக்கு. ரெண்டும் ஒரே விலைன்னாலும் பரத்துன சமாச்சாரத்துக்கு 50 கிராம் எடை கம்மி. போயிட்டுப்போகட்டும். இருக்குற 'தோள் வலி'யில் யாராலே ஒரே அளவுலே நீளமா பரத்த முடியுது?
அப்பவே முடிவு பண்ணிட்டேன் சமையல் வாரத்துக்கான மெனுவை:-)))) இன்னும் வேறென்ன வேணுமுன்னு பார்த்தால் பாக்கி அயிட்டங்கள் எல்லாம் ஏற்கெனவே நம்மூட்டு ஃப்ரீஸரில் இருந்தாகணும்.
சூப்பர்மார்கெட் ஃப்ரீஸர் செக்ஷனிலும் வகைவகையா பேஸ்ட்ரி ஷீட்ஸ் வெவ்வெற அளவில் வெட்டியதும், இனிப்பு செய்ய தனி வகை, காரத்துக்குத் தனி வகைன்னு இருக்கும். எல்லாம் பெரிய பொதிகள். நம்ம சின்னக் குடும்பத்துக்கு ஏன் இவ்ளோ? அப்புறம் அதை வாங்கினாலும் உறைஞ்சுருக்கும் அதை வெளியே வச்சு, அது இளகும் வரை காத்திருந்துன்னு நேரம் வீணாகுதில்லே? அதுக்குள்ளே நம்ப ப்ளான் மாறிப்போச்சுன்னா?
சரி. இப்ப வேலையைப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
ரெடி ரோல்டு பேஸ்ட்ரி ஷீட் ஒன்னு (350 கிராம்)
உருளைக்கிழங்கு - பெருசா 2 ( ஒரு 250 கிராம் வரும்)
மிக்ஸட் வெஜிடபிள் - 100 கிராம்
வெங்காயம் - 1 பெருசு ( சிகப்பு வெங்காயமுன்னா உத்தமம்)
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பற்கள்
இஞ்சி - ஒரு ரெண்டங்குலத்துண்டு (தோல் சீவித் துருவிக்கணும்)
மஞ்சள் தூள் - அரைத்தேக்கரண்டி
கறிப்பவுடர் - ஒரு தேக்கரண்டி
(கறிப்பவுடர் இல்லைன்னா கவலைப்படேல்)
மிளகாய்த்தூள் அரைத்தேக்கரண்டி,
மல்லித்தூள் அரைத்தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - நாலு மேசைக்கரண்டி
சீரகம்- முக்கால் தேக்கரண்டி
பெருங்காயத்தூள் = ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
கொத்தமல்லித்தழை- கொஞ்சம்
கரம் மசாலா (விருப்பமானால் மட்டும்)- அரைத்தேக்கரண்டி.
செய்முறை :
உருளைக்கிழங்கு ரெண்டு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு மண் போகக் கழுவிக்கணும். மண் தண்ணியை தயவு செய்து சிங்க்கில் ஊத்திடாதீங்க. அதுவேற அடைச்சுக்கப்போகுது. தோட்டத்தில் புல்லுக்கு ஊத்துனால் ஆச்சு.
புது உருளைக்கிழங்கா இருப்பதால் நகத்துலே சுரண்டினாலே தோல் வந்துரும். ஆனால் விஷப்பரிட்சை வேணாம். அதுவேற நகக்கண்ணுலே நுழைஞ்சுக்கிட்டால் வலி உயிர் போயிரும்:( ஒரு கத்தியாலே லேசாச் சுரண்டி தோலை நீக்கிக் கழுவிட்டுச் சின்னத்துண்டுகளா நறுக்கி ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் போட்டு கால் கப் தண்ணீர் சேர்த்து அஞ்சு நிமிட் 100% பவரில் வேகவச்சுக்கணும். பூவா வெந்துரும். இப்போ கூடுதலா இருக்கும் தண்ணீரை வடிச்செடுத்துடலாம். கொஞ்சம் சூடா இருக்கும்போதே கரண்டியால் லேசா மசிச்சு விட்டுருங்க. நம்மூட்டு கேட்ஜெட் ட்ராவில் ஒரு பொட்டேடோ மாஷர் இருக்கு. அதுக்கும் ஒரு வேலை வேணுமுல்லே? :-)
அடுப்பில் வாணலியை ஏத்தி நாலு மேசைக்கரண்டி எண்ணெயை ஊத்திச் சூடாக்கணும். அதுலே சீரகத்தைப்போட்டு வெடிக்கவிடுங்க. (சண்டிகர் போனபிறகு நம்மூட்டுலே ஒரே பஞ்சாபி தடுக்கா தான் கேட்டோ:-) சீர் அகம் உடம்புக்கு நல்லது.
பொடியா நறுக்கி வச்ச வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை எல்லாத்தையும் வாணலியில் சேர்த்து துருவின இஞ்சியையும் தூவி நல்லா வதக்குங்க. இஞ்சியையும் பொடியா நறுக்கிப்போடலாம். ஆனால் நறுக்குன்னு வாயிலே கடிபட்டால் பசங்க துப்பிருதுப்பா:( அதான் துருவிட்டால் கண்ணில் நாக்கில்,பல்லில் படாம ஒரேதா கலந்து போயிரும். பூண்டு வாசனை பிடிக்கலைன்னா போட்டுக்க வேணாம். எல்லாம் ஒரே வாயு சமாச்சாரமாச்சேன்னு.............
வெங்காயம் நிறம் மாறிப் பாதி வெந்து வாசனை வரும்போது பெருங்காயம், மஞ்சள் தூள், கறிப்பவுடர் இல்லை மிளகாய் தனியாத்தூள்களைச்சேர்த்து அரை நிமிட் வதக்கிட்டு மிக்ஸட் வெஜிடபிளை அப்படியே வாணலியில் சேர்த்துருங்க. தண்ணீர் சேர்க்க அவசியம் இருக்காது. இதுவே கொஞ்சம் தண்ணி விட்டுக்கும். உப்பைப்போட்டு, வேகவச்ச உருளைக்கிழங்கையும் சேர்த்து நல்லா வதக்கி எடுங்க. கரம் மசாலா வேணுமுன்னா இப்ப அதையும் தூவிக்கலாம். தண்ணீரின் சுவடே இல்லாமல் Dட்ரையா இருக்கா? பேஷ் பேஷ் சரியான பதம். அப்படித்தான் இருக்கணும். அதுலே கொஞ்சூண்டு கொத்தமல்லி இலைகளை அரிஞ்சு தூவிக் கலக்கி எடுத்துக் கொஞ்சம் ஆறவிடுங்க.
கப்போர்டைத் திறந்து பேஸ்ட்ரி மேக்கர் இருந்தால் எடுத்து வச்சுக்குங்க:-)
இதுலே பெருசும் சின்னதுமா நாலு சைஸ்களில் அச்சு இருக்கு. நாம் கொஞ்சம் மீடியமா எடுத்து வச்சுக்கலாம். பார்ட்டிக்குச் செய்வதா இருந்தால் குட்டியூண்டு அளவில் செஞ்சால் அப்படியே எடுத்து 'லபக்'க வசதியா இருக்கும். ஃபிங்கர் ஃபுட்:-)
இப்ப பேஸ்ட்ரி ஷீட்டின் ஒரு ஓரத்தைப் பிடிச்சு அச்சில் வச்சு ஒரு அமுக். வட்டமா கத்தரிச்சுக்கும். ஒரு பாதியில் உருளை காய்கறி கலவையைக் கொஞ்சம் வச்சுட்டு அச்சின் மறுபாதியை மடிச்சுக்கொண்டுவந்து இன்னொரு அமுக். திறந்து பாருங்க.
டடா..... ஓரங்கள் அலங்காரமா ஃப்ரில் வச்சு மடிச்சு, அழகான ஏழாம்நாள் நிலவின் வடிவில் உள்ளே உக்கார்ந்துருக்கும்! அதை அப்படியே நோகாமல் எடுத்து ஹாட் ஏர் அவனில் உள்ளே ஓரமா வையுங்க. இப்படியே இன்னும் ஒரு மூணு செஞ்சு நாலையும் அடுக்கி மூடியைப்போட்டு ஒரு 180 C டிகிரியில் 14 நிமிட் செட் செஞ்சுருங்க.
பார்க்க சூப்பரா இருக்குமே!!!!!!!!!!!1
நிற்க............
PIN குறிப்பு:
பேஸ்ட்ரி மேக்கர் இல்லை என்றால்....... நோ ஒர்ரீஸ். மாவு மேலே ஒரு கிண்ணத்தைக் கவுத்து வச்சு வட்டமா வெட்டி எடுத்து அதில் ஒரு பாதியில் கிழங்கு & காய் கலவையை வச்சு மடிச்சு அரைவட்டமா ஆக்கிருங்க. ஓரத்துலே மடிச்சு விடலாம். இல்லை சமோஸா கட்டரில் (இதுவும் இல்லையா போச்சுடா) ஒரு கத்தியால் வளைவுவளைவா வெட்டி விடலாம்.
ஓரம் கட் செஞ்பிறகு பாக்கி இருக்கும் மாவை என்ன செய்ய? அமுக்காமல் லேசா உருட்டி நாலைஞ்சு உருண்டைகளானதும் மைக்ரோ வேவில் 1 நிமிட் & 40 விநாடி வச்சு எடுங்க. மகாராஷ்ட்ரா பக்கங்களில் 'காரி பிஸ்கட்'ன்னு ஒன்னு கிடைக்கும். ஏறக்கொறைய அந்த சுவையில் நொறுக்ஸ் கிடைக்கும்.
'அவன்' இல்லைன்னா? ஐயோ.... எவன் இல்லைன்னா என்ன? பயந்துறலாமா? அடுப்புகூடவே அவன் இருக்குமேங்க. அதுலே வச்சுடலாமே. நாந்தான் நாலேநாலுக்கு எதுக்கு அம்மாம்பெரிய அவனுன்னு ஹாட் ஏர் அவனில் செஞ்சேன்.
மைக்ரோவில் கன்வென்ஷன் மாடல் இருந்தால் அதுலே செஞ்சுறலாம். நிஜமாவே ஒன்னுமே இல்லைன்னா..... யோசிக்கணும். பாட்டி காலத்தில் மணல் சூடாக்கி அதுலே தட்டு வச்சு அதுலே பிஸ்கெட் செய்வாங்களாம். இப்ப இதை நினைச்சாலே ஃபோர்மச்சா இருக்கு:(
சரி. இப்போ மீந்து போன காய் மசாலாவை என்ன செய்யலாம்?
அட! இது ஒரு பிரச்சனையா? இதுக்கு ஆயிரம் பயன்கள் உண்டு.
சிம்பிளா ஒன்னு செய்யலாம். அன்றைய சாப்பாட்டுக்கு இது ஒரு சைட் டிஷ். உருளைக்கிழங்கு மசாலாக்கறி.
சின்னச் சின்னதா உருட்டி எடுத்துக்கிட்டு பஜ்ஜி போண்டா மாவில் முக்கி மசாலா போண்டா செய்யலாம். பதிவர் சந்திப்புக்கு உகந்தது:-)
சப்பாத்தி , பூரிக்கு ஸைட் டிஷ். கொஞ்சம் தண்ணீர் தெளிச்சு அடுப்பில் வச்சுக் கலந்துக்குங்க. ட்ரையா இருந்தால் நல்லா இருக்காது.
கொஞ்சம் பெரிய உருண்டைகளா எடுத்து வடை போல கையில் வச்சு அமுக்கி ப்ரெட் தூளில் ரெண்டு பக்கமும்புரட்டி எடுத்து சூடான தவ்வாவில் போட்டு லேசா எண்ணெய் மந்திரிச்சுக் கட்லெட் செய்யலாம்.
தோசை செஞ்சு உள்ளே நிரப்பி மிக்ஸ்வெஜி மசாலா தோசைன்னு பெயர் வைக்கலாம்.
கோதுமை & மைதா கலந்து கொஞ்சம் தாரளமா வெண்ணையோ நெய்யோ சேர்த்துச் சப்பாத்தி மாவு மாதிரி பிசைஞ்சு பெரிய சப்பாத்தி செஞ்சு ரெண்டா அரைவட்டம் வெட்டிக்குங்க. அதுலே காய்கலவையை வச்சு மடிச்சு சமோஸா கூட செஞ்சுக்கலாம்.
எல்லாம் உங்க சாமர்த்தியம். பெயர் மட்டும் புதுசு புதுசா வச்சுருங்க.
ஆமா.......... நீ என்ன செய்யப்போறேன்னு ....என்னைக் கேட்டால்..... கேட்டால்.....
இதெல்லாத்தையும்விட புதுமையா ஒன்னு செய்ய உக்காந்து யோசிக்கப் போறேன்:-)))))
Posted by துளசி கோபால் at 1/13/2012 05:40:00 PM 25 comments
Labels: அனுபவம்
Thursday, January 12, 2012
துளசி விலாஸில் இன்று (ஈஸிபீஸி ) உசிலி
உசிலின்னு நீட்டி முழக்காமல் 'சுருக்கமா'ப் பருப்பு அரைத்த கறின்னு சொல்லும் வஸ்துவை இன்னிக்குத் துளசிவிலாஸில் நோகாமல் செய்யப்போறோம்.
பண்டொரு காலத்தில் கல்லுரலில் வடைக்கு அரைப்பதுபோல் அரைச்சு அதைக் கைவிடாமல் வாணலியில் கிளறோ கிளறுன்னு கிளறி நம்ம மனசும் வயிறும் நிறைய ஆக்கிப்போட்ட அம்மாக்களையும் அத்தைகளையும் பாட்டிகளையும் இப்ப நினைச்சாலும் 'ஐயோ'ன்னு இருக்கு. அடுப்பூதும் பெண்கள்ன்னு ஒரு டைட்டிலைக் கொடுத்துட்டதால், நாள் முச்சூடும் அடுப்படியே கதின்னு கிடந்துருந்தாங்க இல்லே!!!!
நாகரீக வாழ்க்கைக்கு இப்போ நாம் பழக்கப்பட்டுட்டாலும் நாக்கு என்னமோ பழைய ருசிக்கு அலையத்தான் அலையுது. பீட்ஸா, பர்கர், பாஸ்தா, அது இதுன்னு வெட்டி விழுங்கினாலும் மூணு நாளைக்கு மேலே தாக்குப்பிடிக்க முடியறதில்லைப்பா:(
சட்னு ஒரு ரசம், குழம்பு கூட்டு, கறின்னு எதாவது ஒன்னு இடைக்கிடைக்கு செஞ்சு தின்னால்தான் மனசும் கொஞ்சம் ஆறும். ஆனால்..... பழங்காலம் போல் உடல் வருத்தி உழைக்க முடியுதா?
அதான்....இன்னிக்கு இப்படி:-)
'அசல் வகை' தெரியாதவங்களுக்காக ஒரு சின்ன விளக்கம். துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, கொஞ்சூண்டு அரிசி சேர்த்து ஊறவச்சு, கல்லுரலில் கரகரன்னு ஆட்டி எடுத்துக்கணும். அரைக்கும்போதே நாலு வரமிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்துக்கணும்.
'தோள்வலி; உள்ளவர்கள் ஒரு வாணலியில் எண்ணெய் ஊத்திக் கடுகு கருவேப்பிலை, தாளிச்சு அரைச்ச மொத்தையைப் போட்டுக் கைவிடாமக் கிளறணும், அது வெந்து தூள் தூளாப்பிரியும்வரை. அதுக்குப்பிறகு எந்தக் காயை உசிலியாப் பண்ணப்போறோமோ அதை சின்னத்துண்டுகளா நறுக்கி உப்புத்தண்ணீரில் வேகவச்சுட்டு காயை வடிகட்டி மேற்படி வாணலியில் பருப்புத் துகளோடு சேர்த்து நல்லா வதக்கி எடுக்கணும்.
தோள் 'வலி' உடையவர் இந்த அரைச்ச மொத்தையை ஒரு இட்டிலித்தட்டில் வச்சு அவிச்சு எடுத்து ஆறுனதும் கையால் உதிர்த்து எடுத்துக்கணும். காய்த்துண்டுகளை உப்பு சேர்த்து வேகவைச்சு எடுத்துக்கிட்டு, வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு வெடிக்கவச்சு கருவேப்பிலை போட்டு இந்தக் காயையும் உதிர்த்து வச்ச சமாச்சாரத்தையும் சேர்த்து அஞ்சு நிமிட் கிளறி இறக்குனால் ஆச்சு.
என்னால் முடியவே முடியாது. ஆனால் உசிலி வேணுமுன்னு என்னைப்போல அடம் பிடிச்சால்.....
பருப்புவகைகளை ஊறவச்சு மிளகாய் உப்பு பெருங்காயம் சேர்த்து மிக்ஸியில் அரைச்சு அதை சின்ன உருண்டைகளா உருட்டி ஒரு பீங்கான்/கண்ணாடித்தட்டில் வச்சு மூணு நிமிட் மைக்ரோவேவினால் பருப்பு பார்ட் ரெடி. காய்களை சின்னதா வெட்டுவது, உப்புப்போட்டு வேகவச்சு ஒட்ட வடிச்செடுப்பதையெல்லாம் சின்ன முணுமுணுப்போடு செஞ்சுக்கலாமுன்னு வையுங்க. (உருண்டைகளை உதிர்த்து எடுத்துக்கணுமுன்னு தனியாச் சொல்லணுமா?)
இப்படித்தான் வாழ்வில் மிக்ஸி காலம், மைக்ரோவேவ் வந்த காலங்களில் செஞ்சுக்கிட்டு இருந்தேன். அப்படியே எத்தனை வருசங்களாச் செய்வது? போரடிக்காதா? அதுவும் ஈஸிபீஸி இண்டியன் குக்கிங் புத்தகத்துக்காக(வும்) உக்கார்ந்து யோசனை செய்ய வேண்டி இருக்குல்லே?
பரிசோதனை 'எலி' இருக்கும்போது நமக்கென்ன கவலை?
புதுவிதம் இனி ரெடி. பீன்ஸ் பருப்பரைச்ச கறி.
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 2 குழிக்கரண்டி
அரிசிமாவு - 2 மேஜைக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 2 (பொடியா நறுக்கியது)
பச்சை மிளகாய் - 4 (பொடியா நறுக்கியது)
இஞ்சி - 1 செமீ நீளத்துண்டு. (தோல்சீவித் துருவியது)
பெருங்காயத்தூள் - அரைத்தேக்கரண்டி
பீன்ஸ் - 250 கிராம் (நல்லாக் கழுவிட்டு, தலையும் வாலும் எடுத்துட்டு 0.3 செ.மீ அளவில்(ச்சும்மா ஒரு கெத்து) பொடியா நறுக்கி எடுத்துக்கணும்.
தாளிக்க - நாலு மேசைக்கரண்டி எண்ணெய்
கடுகு - முக்கால் தேக்கரண்டி
கருவேப்பிலை - ஒரு இணுக்கு.
செய்முறை பார்ப்போமா?
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு அரிசிமாவு, அரைத்தேக்கரண்டி உப்பு போட்டு வச்சுட்டு பொடியா நறுக்கின வெங்காயம் ப.மிளகாய், துருவின இஞ்சி, ஒரு தேக்கரண்டி எண்ணெய் கலந்து கொஞ்சமாத் தண்ணீர் தெளிச்சுப் பிசைஞ்சுக்கணும். சப்பாத்தி மாவைவிடக் கொஞ்சம் தளர இருக்கணும். இதை ஒம்போது உருண்டைகளா உருட்டி ஒரு பீங்கான்/கண்ணாடித்தட்டில் வச்சு 3 நிமிட் மைக்ரோவேவணும். தெறிக்காமல் இருக்க எதுக்கும் ஒரு மைக்ரோவேவ் சேஃப் மூடி போடுவது உத்தமம்.
ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் கொதிக்கவிட்டு அதில் நறுக்கிய பீன்ஸை பாக்கி இருக்கும் அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து வேகவிட்டு தண்ணியை வடிச்சுக் காயை மட்டும் எடுத்து வச்சுக்கணும்.
இதுக்குள்ளே மைக்ரோவேவின வெந்த மாவு உருண்டைகள் ஆறி இருக்கும் அதை கத்தியால் சின்னத் துண்டங்களா நறுக்கிக்கலாம். உடைச்சு உதிர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுத்து சுத்தவிட்டாலும் ஆச்சு. (அப்புறம் ஜாரைக் கழுவணும். அது எதுக்கு கூடுதல் வேலைன்னு கத்தியைக் கையில் எடுத்தேன்)
ஒரு 'நான் ஸ்டிக்' வாணலியில் நாலு மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு அது சூடானதும் கடுகு, கறிவேப்பிலை வெடிக்க விட்டு தூளாக்கிவச்ச பருப்பு சமாச்சாரத்தைப் போட்டுக் கிளறினால் நல்ல வடை வாசனை வரும்(!) இதன் கூடவே வேகவச்ச பீன்ஸையும் சேர்த்து ஒரு அஞ்சு நிமிட் அடிப்பிடிக்காமல் அடிக்கடி கிளறிவிட்டு எடுத்தால் ஆச்சு.
நான் இன்னிக்குக் கறிவேப்பிலை சேர்க்கலை. செடிக்கு 'மீல்பக் ஒழிப்பு' மருந்து அடிச்சுருக்கேன். ஒரு வாரம் போகட்டும்.
உசிலிக்கு ருசியில் ஒரு வேறுபாடும் தெரியலை.நல்லாவே இருக்கு.
கூடுதல் குறிப்புகள் சில:
உதிர்த்த வெந்த மாவு உருண்டைகள் அளவு அதிகமா இருக்கு. 250 கிராம் பீன்ஸுக்கு இது ரொம்பவே அதிகம். அதனால் அதுலே ஒரு பாதி எடுத்து ஸிப்லாக் பையில் போட்டு ஃப்ரீஸருக்குள் தள்ளியாச்சு.
இது முன்னாலேயே தெரிஞ்சுருந்தால் ஒரு குழிக்கரண்டி மாவு மட்டும் பயன்படுத்தி இருக்கலாம். போகட்டும்.
தளரப்பிசைஞ்ச மாவில் பாதியை மைக்ரோவேவிட்டு, மீதிப்பாதியில் இன்னும் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொஞ்சமா இளக்கிட்டு, சூடான எண்ணெயில் பஜ்ஜியாவாப் பொரிச்செடுத்து மோர்க்குழம்பில் போட்டால் தானுக்குத் 'தான்' ஆச்சு:-))))
இனி உங்க சமர்த்து. என்ன செய்யணுமோ எப்படிச் செய்யணுமோ அப்படிச் செஞ்சு பார்த்துட்டுச் சொல்லுங்க.
PIN குறிப்பு: சொல்ல மறந்துட்டேனே. சூடான பாத்திரத்தைப் பிடிக்க இனி கைப்பிடித் துணி/டவல் எதுவும் வேணாம். அது ஈரமாகி, பிசுக்குப்பிடிச்சு அதைவேற தினமும் தனியாத் துவைச்சுன்னு....... சல்லியம். இப்பெல்லாம் 'Pபாட் ஹோல்டர்'ன்னு சிலிகன்னில் கிடைக்குது. கைக்கொன்னுன்னு ரெண்டு நிறத்தில் வாங்கிவச்சேன். வாத்து மூக்கு போல.....க்வாக் க்வாக்:-)
Posted by துளசி கோபால் at 1/12/2012 02:52:00 PM 33 comments
Labels: அனுபவம்
Wednesday, January 11, 2012
ட்ராஃபிக் லைட் பாஸ்தா!
இன்றும் வண்ண வண்ணச் சமையல்தான் நம்ம துளசி விலாஸில். குடமிளகாய்கள் பச்சை, மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு, வெளிர் மஞ்சள், பர்ப்பிள்ன்னு ஏழெட்டு நிறங்களில் கிடைக்குது. இதுக்கு ஏழெட்டு வெவ்வேற பெயர்களும் இருக்கு. சில்லி பெப்பர், கேப்ஸிகம், பெல் பெப்பர், குடமிளகாய், சிம்லா மிர்ச்சி, ஸ்வீட் பெப்பர் இப்படி. மிளகாய் மிளகாய்ன்னு இருந்தாலும் மிளகாய்க்கான காரம் உறைப்பு இதுக்கு இல்லை.
பொதுவாப் பார்த்தால் பச்சை, சிகப்பு & மஞ்சள் பரவலா எப்பவுமே இங்கே சூப்பர்மார்கெட்டில் உக்கார்ந்துருக்கும். திடீர்ன்னு இதுக்கு ஒரு வாழ்வு வந்து உச்சாணிக்கொம்பில் ஏறி உக்காருவதும் உண்டு. 3$ eachன்னு போர்டு பார்த்தவுடன், 'நல்லா இரு'ன்னு சொல்லிட்டு நகர்ந்துருவேன்.
ஒரு நியாயம் வேணாம்?
பர்ப்பிள் காலி பார்த்த கடையில் முக்கலர் பொதி ஒன்னு, 2 $க்குக் கிடைச்சது. $1.99 ன்னு போட்டு வச்சுருப்பாங்க பாட்டா ஷூ கடை போல! (இப்ப எங்க நாட்டில் அஞ்சு செண்ட் காசைக்கூடக் கழிச்சுக்கட்டியாச்சு. பத்து சதம்தான் ஆரம்பம்.)
கொஞ்சம் லைட்டான லஞ்சா இருக்கட்டுமேன்னு இன்னிக்கு பாஸ்தா. இந்த பாஸ்தா கோதுமை மாவு சமாச்சாரம். பொதுவாப் பார்த்தால் இந்த பாஸ்தாவும் புள்ளையாரும் ஒன்னுதான். எத்தனையெத்தனை வகைகளில் புள்ளையார் பண்ணி விக்கிறாங்களோ அத்தனை வகை பாஸ்தாக்களும் இருக்கு:-) நீள நீளமா ஸ்பகாட்டி, நூடுல்லே ஆரம்பிச்சு சேமியான்னு பலதையும் கடந்து சின்ன வடிவங்களா Fusilli, Perciatelli, Sagnarelli, scilatielli, Penne, Spirali, Conchiglie, Gomito இப்படி வெவ்வேற ஷேப்புலே வெவ்வேற பெயரிலே கொட்டிக்கிடக்கு உலகம் எங்கிலும். லுங்கி (Fusilli lunghi)ன்னு கூட ஒன்னு இருக்குன்னா பாருங்க. இதுலேயும் காய்கறிச் சாறுகளைச் சேர்த்து பல நிறங்களிலும் கிடைக்க ஆரம்பிச்சுருக்கு. நடுவிலே துளை உள்ளதுகளை, (சின்னக்குழாய், முழங்கை மடிப்பு போன்ற வடிவங்கள்) உள்ளுர் பாலர்பள்ளிகளில் பசங்களுக்கு நகைநட்டு, செயின், நெக்லேஸ் எல்லாம் செய்யப் பயன்படுத்துவோம். நடுநடுவில் கொஞ்சம் கலரும் அடிச்சுக்கிட்டா சூப்பர் நகை! நூலை வச்சுச் சரசரன்னு சரம் கோர்த்துரும் நம்ம பசங்க!
பாஸ்தா வகைகளில் சில
சரி, இன்னிக்குச் சமையலைப் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: முக்கலர் குடமிளகாய்கள்.
பாஸ்தா: 2 cup (எந்த ஷேப்பா இருந்தாலும் பரவாயில்லை)
வெங்காயம் : 1 (சிகப்பு வெங்காயமுன்னா உத்தமம்)
இஞ்சி : ஒரு செ,மீ நீளமுள்ள துண்டு ( தோல் சீவிக்கணும்)
பூண்டு : 3 பற்கள்:-)
பச்சை மிளகாய் : 2
தக்காளி : பெருசா ஒன்னு
உப்பு : 1 தேக்கரண்டி
வெண்ணெய் அல்லது மார்ஜெரீன்: 2 மேசைக்கரண்டி
என்னை மாதிரி உள்ள 'காம்சோர்'களுக்கு மேற்படி பொருட்களில் சின்ன மாற்றம். வெங்காயத்துக்குப் பதிலா ஒரு ஆனியன் ஸூப் பாக்கெட், இஞ்சிப்பூண்டு மிளகாய் சேர்த்து அரைச்ச விழுது ஃப்ரீஸரில் இருந்தால் அதுலே ஒரு டீஸ்பூன். ஆனியன் ஸூப் பாக்கெட்டில் வெஜிடபிள் ஃபேட் இருக்கான்னு மட்டும் பார்த்துக்குவேன்.
செய்முறை:
நம்ம வீட்டில் இன்னிக்கு Fusilli என்ற வடிவம் சமைக்கிறோம். ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்னரை லிட்டர் தண்ணீரைக் கொதிக்கவிடுங்க. அதுலே ரெண்டு கப் பாஸ்தாவைப்போட்டு அரை டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து வேகவிடுங்க.ஒன்னோடொன்னு ஒட்டாம இருக்க இந்த எண்ணெய் வைத்தியம். அரைவேக்காடானதும் அரைத் தேக்கரண்டி உப்பையும் போட்டுக்கலாம்.
பாஸ்தா வேகும்வரை சும்மா இருக்காம பச்சை, மஞ்சள் சிகப்பு நிறங்களில் உள்ள குடமிளகாய்களைக் கழுவி, முதலில் ரெண்டாக வெட்டி நடுவில் இருக்கும் விதைகளை எடுத்து அடுக்களைக் குப்பையில் போட்டுருங்க. இப்ப அரைக் குடமிளகாய்களை அடுக்கி வச்சு சின்னத்துண்டுகளாய் நறுக்கி வச்சுக்கணும். நாம் சமைக்கப்போற இந்த ரெண்டு கப் பாஸ்தாவுக்கு மூணு குடைமிளகாய் தேவையில்லை. ஒன்னரையே போதும். இப்ப இதுலே சரிபாதி எடுத்து ஒரு ஸிப்லாக் பையில் போட்டு ஃப்ரீஸரில் போட்டு வையுங்க. இன்னொரு நாள் வேற சமையலுக்கு ஆச்சு.
இஞ்சி பூண்டு மிளகாயை சின்னக் கை உரலில் நசுக்கியோ இல்லை மிக்ஸியில் சின்ன ஜார் வச்சு அரைச்சோ எடுத்துக்குங்க. இதுக்கு க்ரீன் மசாலான்னு பெயர் வச்சுருங்க.
வெங்காயத்தைப் பொடியா அரிஞ்சு வச்சுக்குங்க.
பாஸ்தா வெந்ததும், வடி தட்டு இருந்தால் அதுலே போட்டு நீரை வடிச்சு எடுத்துருங்க. சின்னத்துளை உள்ள வடிகட்டிப் பாத்திரமே இப்பெல்லாம் கிடைக்குதே!
ஒரு பெரிய வாணலியை அடுப்பில் ஏத்தி, அதுலே ரெண்டு மேசைக்கரண்டி வெண்ணெய் அல்லது மார்ஜெரீன் சேர்த்துச் சூடாக்கவும். வெறும் எண்ணெய் சேர்த்தால் நல்லா இருக்காது. வீட்டில் ஆலிவ் ஆயில் இருந்தால் அதை சேர்த்துக்கலாம். அட்லீஸ்ட் அத்தெண்ட்டிக் சமையல்ன்னு சொல்லிக்கலாம்:-)
வாணலியில் உள்ள சமாச்சாரம் சூடானதும் அதுலே க்ரீன் மசாலாவைச் சேர்த்து வதக்கணும். வதங்கி வாசனை வந்தவுடன் நறுக்கி வச்ச குடமிளகாய்களைச் சேர்த்து அரை தேக்கரண்டி உப்பும் போட்டு வதக்குங்க.காயில் உப்பு பிடிக்கட்டும்.
முக்கால்வாசி வெந்ததும் ஆனியன் ஸூப் பொடியில் அரைக்கப் தண்ணீர் சேர்த்துக் கலக்கி அதையும் குடமிளகாயின் தலையில் போடுங்க. கரண்டியால் கிளறிவிடுங்க. ஒரு நிமிசம் ஆனதும் வெந்த பாஸ்தாவைப் போட்டு நல்லாக் கிளறிவிடுங்க. அடுப்பு சிறுதீயா இருக்கட்டும்.ரெண்டு மூணு நிமிசம் வேகட்டும். நான் ஸ்டிக் வாணலின்னா ஒட்டாம, அடிப்பிடிக்காம வந்துரும். அடுப்பை அணைச்சுட்டு கொஞ்சம் கொத்துமல்லித் தழையை வாணலியில் உள்ள பாஸ்தாவில் தூவி அலங்கரிச்சால் ஆச்சு. ஒரு ஹாட் கேஸில் எடுத்து வச்சேன்.
இப்ப ஒரு பாஸ்தாத்துண்டை எடுத்து ருசி பார்க்கவும். ஐயோ...... கொஞ்சம் உப்பு தூக்கலா இருக்குமே! யூ ஆர் ரைட். ஏற்கெனவே ஆனியன் ஸூப்பில் உப்பு சேர்த்திருப்பாங்களே. அதை எப்படி மறந்தோம்?
இங்கே நியூஸியில் எதுக்கெடுத்தாலும் சொல்வாங்க... 'திஸ் இஸ் நாட் எண்ட் ஆஃப் த வொர்ல்ட்'ன்னு . அதே அதே. உப்பு கூடிட்டா உலகமா முடிஞ்சுரும்? வாங்க ரிப்பேர் பண்ணிடலாம்.
பேண்ட்ரி திறந்து பார்த்தேன். கொஞ்சம் முந்திரி திராட்சை சேர்க்கலாமா...... ஆஹா....கண்ணில் பட்டது அக்ரூட். பயந்துட்டீங்களா? இது வேறொன்னுமில்லை நம்ம வால்நட்ஸ்தான். அதுலே ஒரு கைப்பிடி, அப்படியே அதுக்குப் பக்கத்துலே இருந்த பூசணி விதையில் அரைப்பிடி எடுத்து அரை டீஸ்பூன் நெய்யில் லேசா வறுத்து பாஸ்தாவின் மேல் தூவினேன். உப்பு சமன் பட்டிருக்குமோ?
இப்போ பார்வையில் விழுந்தது எடுத்து வச்சுருந்த தக்காளி. பாஸ்தா கலர்ஃபுல்லா இருக்காமல் சிகப்பாயிருமேன்னு தக்காளியை சமையலில் சேர்க்காமல் விட்டு வச்சுருந்தேன். நம்ம கேட்ஜட்ஸ் ட்ராவைத் திறந்தால் டொமாட்டோ ஸ்லைஸர் சிரிக்குது. அதை எடுத்து அந்தத் தக்காளியை அழகா ஒன்னுபோல அரிஞ்சு பாஸ்தாவின் மேல் அலங்கரிச்சு ஹாட் கேஸை மூடிவச்சேன்.
கோபால் லஞ்சுக்கு வந்தார், சமையல் வாரமான்னு கேட்டுக்கிட்டே.......
டடா....... மேலே வச்ச தக்காளித்துண்டுகள் பாஸ்தா சூட்டில் அரை வேக்காடா வெந்து அட்டகாசமா இருக்கு! சத்துகள் நிறைஞ்ச 'ரிச்' பாஸ்தா!
செஞ்சுதான் பாருங்களேன்!
Posted by துளசி கோபால் at 1/11/2012 03:29:00 PM 28 comments
Labels: அனுபவம்