Wednesday, January 04, 2012

வாங்க..... ஒரு நடை தோட்டத்துக்குப் போய் வரலாம்.

அடிக்கடி இல்லைன்னாலும் ஆறு மாசத்துக்கொரு முறையாவது நம்மூர் தோட்டத்துக்குப் போய் வாறது ஒரு பழக்கம்தான். நாடுவிட்டு நாடு மாறித் திரும்பி வந்தது முதல் அந்தப் பக்கம் போகும்போதெல்லாம் ஒருநாளு இங்கே உள்ளே போகணுமுன்னு நினைக்கறதோடு சரி.

இதுவேற ஊருக்கு நடுவில் உக்காந்துருக்கு, 74 ஏக்கர் பரப்பளவில். எங்கே போகணுமுன்னாலும் இதையொட்டிய எதாவது ஒரு சாலையில் போய்த்தான் ஆகணும். பொது மருத்துவமனைகூட இந்தத் தோட்டத்தை ஒட்டியே இருக்கு. அங்கே(யும்) நிலநடுக்கம் தொடர்ந்த கட்டிட வேலைகள் நடப்பதால் தோட்டத்துக் கார் பார்க்கை நைஸா அவுங்க எடுத்துக்கிட்டாங்க. ஆசுபத்திரியின் அடுக்குமாடி பார்க்கிங் கட்டிடம் உள்ளே பழுதாகிக்கிடக்காம். நில ஆட்டம் எதைவிட்டு வச்சது:(

சரியா மூணு வருசத்துக்கு முந்தி நம்மூர் தோட்டம் பற்றி ரெண்டு பதிவு போட்டு வச்சுருக்கேன். நேரம் கிடைச்சால் க்ளிக்கவும்.

ஹேக்ளி பார்க் 1

ஹேக்ளி பார்க் 2இங்கே இப்போ கோடை & கிறிஸ்மஸ் விடுமுறை காலம் என்பதால் ஒரு பத்துநாளைக்கு நமக்கு லீவு. கிடைச்ச நாட்களை வீணாக்கலாமோ? 'மால் வாக்' செய்வது போதாதுன்னு ஒரு நாள் தோட்டத்துக்கும் போனோம்.

நம்ம பக்கங்களில் கிறிஸ்மஸ் முடிஞ்ச மறுநாள் பாக்ஸிங் டே(Boxing Day) புதுவிதமாக் கொண்டாடுவோம். ஒரிஜனல் 'பாக்ஸிங் டே' ஆரம்பிச்சது இங்கிலாந்து நாட்டுலே. மொத நாள் பண்டிகைக்கு விருந்து வச்சு, ஆக்கித் தின்ன மிச்சம் மீதிகளை பெரிய அட்டைப்பொட்டிகளில்(box) போட்டு அனாதை இல்லங்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் பிரபுக்கள் அனுப்பி வைப்பாங்களாம். இதைப் பேக் பண்ணி அனுப்பவே ஒரு நாள் லீவுன்னால் விருந்துக்காக மலைமலையா சமைச்சுருப்பாங்களோ!

இதெல்லாம் இங்கே வந்த புதுசுலே தெரியாம 'மொதக் கிறிஸ்மஸ்' சமயம் வீட்டுலே 'பாக்ஸிங்' செஞ்சு ஸோ அண்ட் ஸோ முகத்தில் குத்துவிட கைக்கு லெதர் க்ளவுஸ் இல்லையேன்னு அல்லாடிக்கிட்டு இருந்தேன்னா பாருங்களேன்:-)

இங்கிலாந்துலே இருந்து இங்கே குடியேறிய முதல் மக்கள் அனைவரும் விவசாயத்தொழிலில் ஈடுபட்டிருந்தவுங்கதான். பிரபுக்கள் யாரும் நாட்டைவிட்டு அவ்ளோ சுலபமா வந்துருவாங்களா என்ன? ஆனாலும் பாக்ஸிங் டே விடுமுறை நாளாகவே இங்கேயும் நீடிச்சுக்கிட்டே இருக்கு என்பது உண்மை. அந்த நாளை, பண்டிகை கொண்டாட்டத்தின் பின் வரும் களைப்பை(!!!)போக்கிக்கப் பயன்படுத்திக்கிட்டு இருந்துருக்கலாம். இப்பெல்லாம் நவயுகத்தில் களைப்பைப்போக்கும் மருந்தே ஷாப்பிங்தான். டிசம்பர் 24 வரை யானை விலை இருந்த பண்டிகை சம்பந்தப்பட்ட ஐட்டங்கள் எல்லாம் டிசம்பர் 26க்கு குதிரை விலையில் கிடைக்கும். அலங்காரங்கள் எல்லாம் கெட்டாப் போகப்போகுது? வாங்கிவச்சா அடுத்த வருசத்துப் பண்டிகைக்கு ஆச்சு.

இது இல்லாம மற்ற கடைகண்ணிகளிலும் 'Bபாக்ஸிங் Dடே ஸேல்' என்ற பெயரில் ஒரு முப்பது நாப்பது சதமானம் கழிவுன்னு அம்மா அப்பாவைத் தவிர எல்லாப் பொருட்களுமே (ஏற்கெனவே 300 சதம் விலை வச்சு வித்து முதலெடுத்தபின் ) நமக்குச் சகாயமா கிடைக்க வைப்பாங்க. இந்த ஸேலும் கூட ஒரு நாளில் முடியாது. மூணு நாலுநாள் ஸேலா இருக்கும். கழிச்சுக் கட்டணுமுன்னா நாட்கணக்குப் பார்த்தால் ஆகுமா?
ஏவொன் நதி

கிறிஸ்மஸ் அலங்காரம் எல்லாம் அம்பது, அறுபது சதம் தள்ளுபடின்னு இருந்துட்டு, ஸேல் முடிஞ்ச மறுநாள் (டிசம்பர்30) தடாலடியா 75 சதம் கழிவுன்னு போர்டு தொங்கும். கிடக்கட்டும் 100 சதம் கழிவுன்னா எதாவது வாங்கணுமுன்னு இருப்பேன்.

ஆங்.....என்ன சொல்லிக்கிட்டு இருந்தேன்னு..... கிறிஸ்மஸ் பண்டிகையன்னிக்கு ஊர் முச்சூடும் கடைகண்ணி எல்லாம் மூடிருவாங்க. அன்னிக்கு டிவியில் கமர்ஸியல் கூட கிடையாதுன்னா பாருங்க. நம்ம ஜனங்களுக்கு அந்த ஒரு நாள் ஊரே ஜிலோன்னு கிடக்கறது மனசை என்னவோ பண்ணிரும்போல. மக்கள்ஸ் நாடி புடிச்சுப் பார்த்தாப்பலே மறுநாள் ஸேல் திருவிழாவேற ஆரம்பிக்குதா..... ஊர் சனம் முழுசும் ஓடி ஓடி 'வாங்க'க் கிளம்பிருவாங்க. இந்த வருசம் எங்கூர்லே(நிலநடுக்கம் புகழ் கிறைஸ்ட்சர்ச்) மட்டும் 30 மில்லியன் ஸேல் ஆச்சாம்.(நாம் ஒன்னும் வாங்கலை)

இப்படி....இருக்கற கொஞ்ச நஞ்சக்கூட்டமும் மால்களில் திரியும்போது நாம் ஜாலியா தோட்டத்துலே நிம்மதியா உலாத்தலாமுன்னு போனோம்.(ஊர் ஜனத்தொகையில் சுமார் 75 ஆயிரம்பேர் நிலநடுக்கம் காரணம் ஊரைவிட்டுப் போயிட்டாங்க. enough is இனஃப்)

தோட்டத்து மெயின் நுழைவாசல் பக்கமே ஒரு அரைவட்டக் கூடாரம். இதுதான் இப்போ எங்க ஊருக்கு கதீட்ரல் சதுக்கம் இல்லாத குறையைத் தீர்த்து வைக்குது. ஊருக்கே எண்டர்டெய்ன்மெண்ட் செண்டர் இதுதான் இன்னும் சில வருசங்களுக்கு. அதிலும் மூணு மாசத்துக்கு முன் ரக்பி உலகக்கோப்பைப் போட்டிகள் வேற நம்ம நாட்டுலே நடந்துச்சே. (ஹூம்.... எங்கூர்லே நடக்க வேண்டியது. ஆட்டத்தால் இடம் மாறி இந்த 'ஆட்டம்' ஆக்லாந்துக்குப் போயிருச்சு) உள்ளே பெரிய ஸ்க்ரீன் வச்சு ஊர்மக்களைக் குஷிப்படுத்த செஞ்ச ஏற்பாடு இது. வாசலில் உலகக்கோப்பை டிஸைன் ஒன்னு நின்னுக்கிட்டு இருக்கு. அலங்கார வளைவுகளில் அப்போ வண்ணவிளக்குகள் போட்டு வச்சுருந்தாங்களாம். சென்னையில் ஒரு வளைவு விடாம அரசியல் பெருச்சாளிகளின் கட் அவுட்ஸ் பார்த்த கண்களுக்கு இது வெறுமையாக் காட்சி அளித்தது என்பதே உண்மை:-)
அரைவட்டக் கூடாரத்தின் பின்னே கொஞ்ச தூரத்தில் தெரிவது சர்க்கஸ் கூடாரம். இருக்கற ஆட்டம் போதாதுன்னு சர்க்கஸ் ஆட்டம் வேற வந்துருக்கு, ஒரு மாசத்துக்கு.


பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திட்டுத் தோட்டத்தின் ஊடே போகும் ஏவொன் நதியை(!) ஒட்டிய பாதையில் நடந்தோம். மறு கரையில் ரொட்டித்துண்டுகளைப் பிய்ச்சுத் தண்ணீரில் போட்டுக்கிட்டு இருந்துச்சு ஒரு குடும்பம். ஏகப்பட்ட வாத்துகள் அடிச்சுப்புடிச்சுப் பாய்ஞ்சு பாய்ஞ்சு லபக்கிக்கிட்டு இருந்ததுகள். (அடடா..... நாமும் ஒரு ப்ரெட் பாக்கெட் வாங்கி வந்துருக்கலாம்! மாத்தி யோசிச்சால்.... பேசாம இங்கே நாம் உள்ளேயே ஒரு ப்ரெட் கடை போட்டோமுன்னா...நம்மை மாதிரி வரும் மறதி மாஸ்டர்களுக்கு உதவியா இருக்காது? )
நடக்க வேணாமுன்னா இதுலே ஏறிச் சுத்திப்பார்க்கலாம். அஞ்சே டாலர்ஸ் தான்.


பாலம் தாண்டி தோட்டத்துக்குள் பிரவேசித்தோம். தகவல் நிலையத்தைத் தொட்டடுத்த குளத்தில் ஏகப்பட்ட மரங்கள். நல்லவேளை இதுகள் இன்னும் விழலை. இந்த மரங்களில் ஷாக் (Shag)பறவைகள் ஏராளமாக் கூடு கட்டி வசிக்குதுங்க. தண்ணீரில் ஒரு பத்துப்பனிரெண்டு வாத்துகள். 'நிலநடுக்கம் வந்தப்ப நீங்க என்ன செஞ்சீங்க'ன்னு விசாரிச்சால், 'பயந்துக்கிட்டு தலையைத் தண்ணிக்குள் இப்படி வச்சுக்கிட்டேன்'னு செஞ்சு காமிக்குது ஒன்னு:-)
இந்தக் குளத்தைச் சுற்றி அங்கங்கே பெஞ்சுகள் போட்டு வச்சுருப்பாங்க. 'எங்கும் தேடி, அமைதியை இங்கு கண்டேன்'னு ஒரு போர்டு கூட முந்தி இருக்கும். அதையெல்லாம் ஒன்னும் காணோம். பெஞ்சுங்க கூட புதுசா சமீபத்துலே செஞ்சதுபோல இருக்கு. அப்ப..பழசெல்லாம்...... அழிவில் போயிருச்சோ என்னவோ?
ஃபெர்ன் ஹவுஸ்


இதுக்கு அடுத்த பக்கம் ஒரு ஃபெர்ன் ஹவுஸ். உள்ளே சுவர்கள் எல்லாமே ஃபெர்ன்மரத் தடிகள்.இது சேதம் ஒன்னும் இல்லாம அப்ப இருந்தது போலவே இப்பவும். இதுக்கு வெளியில் ஒரு புதுவிதமான மலர்களுடன் ஃப்ளாக்ஸ் போல ஒரு வகைச்செடி. சட்னு பார்த்தால் ப்ளாஸ்டிக் பூக்களோன்னு தோணுது! இப்படி ஒரு நிறத்தில் பூக்களை நான் இதுவரை பார்த்ததே இல்லை!
அடுத்து இருந்த பத்துப்பனிரெண்டு மீட்டர் சுற்றளவுள்ள ஒரு பெரிய மரம் வெட்டப்பட்டிருக்கு. அடிமரத்தை ஒரு மேடையா மாத்தி, அதுலே மரத்தால் ஆன மூணு சின்ன இருக்கைகளை அடிச்சு வச்சுருக்காங்க.
சீஸன்களுக்குத் தகுந்தாப்போல பூக்கும் வகைகளைக் கொண்டுவந்து அழகா அடுக்கடுக்கா அடுக்கி வைக்கும் கன்ஸர்வேட்டரிக்குள் விஸிட்டர்ஸ்
போக முடியாதபடி பூட்டி வச்சுருக்கு. கண்ணாடிக் கதவில் அபாய அறிவிப்பு ஒட்டி வச்சுருக்கு, சிவில் டிஃபென்ஸ் எமர்ஜென்ஸி மேனேஜ்மெண்ட். ஜூன் 23க்கு வந்த நிலநடுக்கத்தில் பழுதாகிப்போச்சாம் இது. ( முதலாம் பானிப்பெட் போர், ரெண்டாம் பானிப்பெட் போர்ன்னு சரித்திரத்தில் வகைப்படுத்துவதைப்போல நாங்களும் 2010 செப் 4, டிசம்பர் 26, 2011 ஃபிப்ரவரி 22, ஜூன் 23, அக்டோபர் 9 , டிசம்பர் 23 ன்னு வகைவகையாச் சொல்லுவோம்)

'ஆடி' முடிச்சதும், வந்தது எந்த அளவில் இருந்துருக்குமுன்னு ஒரு யூகம். இதுக்காகவே இருக்கும் ஒரு வெப்ஸைட்டில் அடுத்த அஞ்சு நிமிசத்தில் ரிக்டர் ஸ்கேலில் என்ன அளவுன்னு தகவல் வந்துரும். அதைப் பார்த்து நாம் யூகிச்ச அளவாவே அது இருந்தால் அதுக்குக்கூட ஒரு (அற்ப) மகிழ்ச்சி அடைவோமுன்னா பாருங்க. கணினி பயன்படுத்தும் சமயம் இந்த நடுக்க ஸைட்டுக்காகவே ஒரு ஜன்னலைத் திறந்து வச்சுக்குவோமுன்னா பாருங்களேன்:-))))) அப்பவே சொல்லலை இது 4.5 இருக்குமுன்னு!!!! மனுச மனசைப்போல ஒரு விசித்திரமான வஸ்து ஏதும் உண்டோ? வரவர எதுக்குத்தான் மகிழ்ச்சி அடைவது என்ற விவஸ்தை இல்லாமப் போயிருக்கே!


வந்தது நிலநடுக்கமா இல்லை ஆஃப்டர் ஷாக்கான்னு எர்த் க்வேக் கமிஷன் கொஞ்ச நேரத்துலே அறிவிப்பு செய்யும். நிலநடுக்கமுன்னு சொன்னாங்கன்னா நாங்க உடனே வீட்டுக்குள்ளும் வீட்டைச்சுத்தியும் போய் பார்த்து புதுசா(?!) எதாவது விரிசலோ உடைசலோ உண்டாகி இருக்கான்னு கவனிச்சுட்டு அப்படி ஏதேனும் இருந்தால் க்ளெய்ம் போடுவோம். அவுங்க வந்து பரிசோதிச்சுப் பார்த்து அதைப் பழுதுபார்க்கத் தேவையான நடவடிக்கை எடுப்பாங்க.

பழையபடி ஆஃப் ட்ராக் போயிட்டேன்னு நினைக்காதீங்க. இனி எங்கள் வாழ்க்கையே இதைச் சுற்றிதான்னு ஆகிப்போச்சு. என்ன பேச ஆரம்பித்தாலும் கடைசியில் பேச்சு வந்து சேருவது இந்த டாபிக்லேதான்:(

இந்த கன்ஸர்வேட்டரிக்குள்ளே நுழைஞ்சு போனால் அடுத்த பக்கம் ஒரு பிரமாண்டமான Gக்ளாஸ் ஹவுஸ் இருக்கு. அதன் ஒரு பகுதியா காக்டெஸ் கார்டன். எனக்கு இந்தத் தோட்டத்துலேயே ரொம்ம்பப்பிடிச்ச பகுதிகள் இவை இரண்டும்தான். கண்ணாடி வீட்டுக்குள்ளே வாழை, காஃபின்னு அருமையான செடிகளும், எப்பவும் சலசலன்னு சத்தத்தோடு வழியும் நீர்வீழ்ச்சிகளுமா அந்த மொத்த இடமும் வெதுவெதுன்னு நல்லா இருக்கும். கூடவே உஷ்ணப்பிரதேசக் காடுகளுக்கான ஒரு மணமுமா.... ஹைய்யோ....
அந்த கள்ளிச்செடிப் பகுதியில் அட்டகாசமான கள்ளி வகைகள் அப்படியே அள்ளிக்கிட்டுப்போகும். பாறைமேல் பாம்பு போல் நெளிஞ்சு வளைஞ்சு வளர்ந்து போகும் கள்ளி பார்க்கவே சூப்பரா இருக்கும். இந்தக் கண்ணாடிக்கட்டிடமும்(கன்னிங்ஹாம் ஹவுஸ்) ரொம்பவே பழுதாகி உள்ளே இடிஞ்சு விழுந்துருச்சாம். அதனால் நமக்கு நோ எண்ட்ரி:(


இந்தப் பழுதடைஞ்ச கட்டிடத்தின் எதிரில் நம்ம ரோசாப்பூத் தோட்டம். வட்டவடிவில் அமைஞ்சுருக்கு. நாலு கால் வட்டங்கள் நாலு வாசல் இப்படி எல்லாம் நாலுநாலு. உள்ளே வளைவுகள் எல்லாம் அமைச்சு கொடி ரோஸ்களும் கால்வட்டங்களில் நிலரோஸ்களுமா பல நிறங்களில் பூத்துக்குலுங்குது. மொத்தம் 104 வகைகள். இப்போ 'சீஸன் காலம்':-)


ரோஸ் தோட்டம் நடுவில் ஒரு சூரிய கடிகாரம்


இதையெல்லாம் ஒரு பார்வை பார்த்துக்கிட்டே ஹெர்பல் கார்டன் பகுதிக்குப் போனோம். ஒரே சோகம். 'என்னைக் காணோம்':(
இடப்பெயர்ச்சியில் இருக்கு இந்தப் பகுதி.

மீதியை இன்னொரு நாள் பார்த்துக்கலாமுன்னு கார் பார்க்கிங் வந்து வண்டிக்குள் ஏறி உட்கார்ந்தோம். அடுத்த விநாடி ஒரு 4.1. வண்டி குலுங்கியதை வச்சு , நான் நாலுன்னு சொன்னேன். ஒரு பாய்ண்ட் கூடிப்போச்சு:(

30 comments:

said...

அப்படிப்பட்ட பூங்காவுக்குள் நுழைந்துவிட்டு வெளியில் வர எப்படி மனம் வருகிறது என்பதையும் சொன்னீர்களென்றால் நன்றாக இருக்கும். தங்கள் அனுபவத்தின் ஊடே படிக்கிறவனையும் இழுத்துக்கொண்டுபோகும் தங்களின் ரசனை அழகு.

said...

மிகவும் அருமையான பகிர்வு நன்றி

said...

உங்கள் ஆதங்கம் புரிகிறது டீச்சர். அடிக்கடி ரோஜா தோட்டம் சென்று வாருங்கள்....மலர்கள் மனதைத் தெளிவாக்கும் என்பார்கள் :)

said...

மீ பர்ஶ்ட்.!
கிளி கொஞ்சும் பார்க். மூணு பதிவுகளை ஒரேடியா படிச்சு சந்தோஷப்பட்டேன்.
பொறுமையா எங்களுக்காக எழுதியதற்கு நன்றி.

said...

அசத்தலா ஆளையே அள்ளிட்டுப் போகுது பூக்களின் அழகு..

அங்கேயிருந்த மாமியார் ஸ்டூல்களையும் காணோம்.. நடுங்குனதுல உடைஞ்சுடுச்சா??

said...

இத்தனை ஆட்டங்களுக்கு நடுவில் இப்படி ஒரு சோலைவனம். வெகு அழகு .துளசி.மகாப் பொறுமை உங்களுக்கு. அந்த க்வேக் மீட்டரைப் படிக்கும் போதே கைகள் நடுங்குகிறது.
ஒரு நிலைக்கு ஊர் திரும்ப பிரார்த்திக்கிறேன்.

said...

அருமை.படங்கள் அற்புதமாக இருக்கு.

said...

பழையபடி ஆஃப் ட்ராக் போயிட்டேன்னு நினைக்காதீங்க. இனி எங்கள் வாழ்க்கையே இதைச் சுற்றிதான்னு ஆகிப்போச்சு. என்ன பேச ஆரம்பித்தாலும் கடைசியில் பேச்சு வந்து சேருவது இந்த டாபிக்லேதான்:(

romba kastama irukku teacher. photos are very nice.

said...

அப்பா.... என்ன ஒரு அழகு பூக்களெல்லாம்....

நடுநடுவே வரும் பூகம்ப விஷயமெல்லாம் பயமுறுத்தினாலும் ரசிக்க முடிந்தது தோட்டத்தினை....

said...

மனுச மனசைப்போல ஒரு விசித்திரமான வஸ்து ஏதும் உண்டோ? வரவர எதுக்குத்தான் மகிழ்ச்சி அடைவது என்ற விவஸ்தை இல்லாமப் போயிருக்கே!/

நாங்கள் நம் பதிவுலக் சொந்தம் நிலநடுக்கத்தில் சிரமப்படுமே என்று
வருத்தப்பட்டுக்கொண்டிருக்கிறோம்..

வருத்தத்தைபோக்கும் வகையில் பார்க்குக்கு அழைத்துப்போய் உற்சாகம் வரவழைத்துவிட்டீர்கள்..

said...

புதுவிதமான மலர்களுடன் ஃப்ளாக்ஸ் போல ஒரு வகைச்செடி. சட்னு பார்த்தால் ப்ளாஸ்டிக் பூக்களோன்னு தோணுது! இப்படி ஒரு நிறத்தில் பூக்களை நான் இதுவரை பார்த்ததே இல்லை!


அழகாக இருக்கிறது..

said...

நிலநடுக்கம் வந்தப்ப நீங்க என்ன செஞ்சீங்க'ன்னு விசாரிச்சால், 'பயந்துக்கிட்டு தலையைத் தண்ணிக்குள் இப்படி வச்சுக்கிட்டேன்'னு செஞ்சு காமிக்குது ஒன்னு:-)

வாத்துன்னா வாத்துதான்..

said...

வாங்க அமுதவன்.

நம்ம பதிவில் நட்சத்திர ஒளி வீசுதே!!!!!

உள்ளூரிலே எங்கே சுத்தினாலும் அடுத்தவேளை சோறுக்கு வீட்டுக்கு ஓடிவந்துதானே ஆகணும்:-)))))

ரசிப்புக்கு என் நன்றி.

said...

வாங்க சசிகலா.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க மதுரையம்பதி.

ஊரே தோட்ட நகரம் என்பதால் எங்கெங்கு காணினும் பூக்களே பூக்கள்தான் நம்வீடு உட்பட.

ஜன்னலின் ஊடாக பார்த்துக்கிட்டேதான் வீட்டு வேலையும் பதிவு எழுதுவதும்:-)))))

said...

வாங்க வெற்றிமகள்.

யூ த ஃபோர்த்!!!!!!!

பொறுமையா வாசிச்சதுக்கு நன்றிப்பா.

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஸ்டூல் இருந்தா ஒன்னு எடுத்துக்கிட்டு வரலாமுன்னு பார்த்தால் அங்கே போகவே அக்ஸெஸ் இல்லையேப்பா.
கட்டிடம் உறைப்பில்லை,டேஞ்சர்ன்னு கதவில் ஒட்டிவச்சுட்டாங்க. உண்மைதான். அதுலே உக்கார்ந்தால் நிஜ டேஞ்சர்தான்:-)))))

said...

வாங்க வல்லி.

ஆனாலும் எங்க மக்கள்ஸ்க்கு நெஞ்சுறுதி அதிகம். என்னன்னு நாளைக்கு பதிவுலே சொல்றேன்.

said...

வாங்க ராம்வி.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றிகள்.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

வாழ்க்கைன்னா கஷ்டமும், அதைவிடப் பெரிய கஷ்டமும் மாறிமாறித்தானே வரும்:-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அழகான ஊர் தான் இப்போ அலங்கோலப்பட்டு நிக்குது. ஆனாலும் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கோம்.

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

இப்படி உற்சாகத்தை வலிய வரவழைச்சுக்கலைன்னா..... மன அழுத்தம் கூடிரும். அதான் கொஞ்சம் லகுவா எடுத்துக்கறோம்.

வருத்தப்படாதீங்க. ஒரு நாள் இல்லைன்னா ஒரு நாள் சரியாகித்தான் ஆகணும்.

said...

மலரே மலரே.... கொள்ளை அழகு மனத்தை இழுக்குதே....

அடங்காத ஆட்டம் தான் திணறவைக்குது.

said...

வாங்க மாதேவி.

திணறல் வரும்போது விளையாடலாம். விவரம் இன்று வெளியிடப்போகும் பதிவில்:-)))))

said...

அழகான தோட்டத்தை படங்களோடு சுத்திக் காண்பிச்சதுக்கு நன்றி. தோட்டங்களும் பூக்களும் நமக்குப் புத்துணர்ச்சி தருபவை. கடைசி ரோஜா கண்ணுக்குள்ளே நின்னுட்டு.

said...

இன்னுமா ஆட்டம் நிக்கலை? After Shock இவ்வளவு நாள் தொடருதா?

said...

வாங்க ராமலக்ஷ்மி.

தோட்டநகரத்தில் இருந்து இன்னொரு தோட்ட நகரத்துக்கு வந்து பாராட்டி இருக்கீங்க. ஒன்னுக்கொன்னு உறவு ஆயிட்டோம் இப்ப:-)))))
பொதுவா 'க((ம)லரே கண்ணுக்கு விருந்து'தான். புத்துணர்ச்சிக்குக் கேட்பானேன்!!!!

said...

வாங்க குமார்.

இன்னிக்குக் காலையில் 7.27 வரை 9456 வந்தாச்சு. பத்தாயிரம் தொட்டவுடன் திருவிழாக் கொண்டாடத்தான் வேணும்:-)))))

said...

நீங்கள் இணைத்த பூங்காவின் படங்கள் அழகாக இருக்கின்றது. சிட்னியில் இருந்து 4 மணித்தியாலம் உள்ள மொகோ என்ற இடத்தில் உள்ள தாவரவியல் பூங்காவுக்கு சென்ற நத்தார் விடுமுறைக்கு சென்றிருந்தேன். 2 பாம்புகளைக் கண்டதும் பூங்காவும் வேண்டாம் என்று திரும்பி ஒடி வந்தது ஞாபகம் வருகிறது.

said...

வாங்க அரவிந்தன்.

நியூஸியைப் பொறுத்தவரை இந்த பாம்பு, தேள் போன்ற சமாச்சாரங்கள் ஒன்னும் கிடையாது என்பது பெரிய ஆறுதல்.

தோட்டம் நிலநடுக்கத்துக்கு முன்பான காலங்களில் இன்னும் அருமையாக இருந்தது. மீண்டும் அந்த அழகு திரும்புமா என்பது சந்தேகம்தான்:(