Monday, January 31, 2005

ரெடிமேட் !!!(பகுதி 1)

நான் சின்னப்புள்ளையா இருந்த காலத்துலே இந்த 'ரெடிமேட்' சமாச்சாரமெல்லாம் கிடையாது! துணி
எடுத்துத் தைக்கக் கொடுக்கணும்! எனக்கு நினைவு தெரிஞ்ச, முதல் தையல்காரர் வத்தலகுண்டு மெயின்
ரோடிலே கடை வச்சிருந்த அப்துல் காதர்தான்!வீட்டுலே புதுத்துணி எடுத்தவுடனே, அந்த சேதியைச் சொல்ல நாந்தான் கடைக்கு ஓடுவேன்.கையோட
கூடவே அவரும் நம்ம வீட்டுக்கு வந்துருவார்.

அக்காங்க அவுங்க அளவு ப்ளவுஸ் கொடுத்துட்டு, அதுலே என்னென்னெ மாறுதல் செய்யணும், கை எவ்வளவு
நீளம், கழுத்து என்ன ஸ்டைல் எல்லாம் சொல்வாங்க. அந்தப் புதுத்துணியிலேயே ஒரு ஓரத்துலே பென்சிலாலே
எழுதிக்குவார். எட்டிப் பார்த்தால் அரை, காலுன்னு ஒரே பின்னமா இருக்கும் நம்பருங்க எல்லாம்!

அப்புறம் எனக்கு மட்டும் அளவு எடுப்பாங்க.வளர்ற புள்ளை பாருங்க! இன்னும் ரெண்டு மூணு 'டக்ஸ்' வைக்கச்
சொல்வாங்க. வளர வளர பிரிச்சு விடறதுக்காம்! அதுவரை அந்தத்துணி கிழியாம இருக்கணுமே! ( நான் குரங்கு
மாதிரி மரமெல்லாம் ஏறுவேன். பயமே கிடையாது! எத்தனை கவுனுங்களை இப்படி மரமேறியே கிழிச்சிருக்கேன்!
ஆனா அதையெல்லாம் இப்பக் கண்டுக்கக்கூடாது!)

அண்ணனுக்கு மட்டும் துணிங்க மதுரையிலே இருந்து தைச்சு வரும்! அங்கேயே துணி எடுத்துத் தைக்கக் கொடுத்துடுவாரு!
ரெண்டு வாரம் கழிச்சு அதுக்கு ஒருதடவை மதுரைக்குப் போய் வாங்கிக்கிட்டு வந்துருவாரு. அங்கே பொம்பிளைங்களுக்குத்
தைக்க மாட்டாங்களாம்! 'ஜெண்ட்ஸ் டெய்லர் கடை'யாம்!

மறுநாளிலே இருந்து ஆரம்பிச்சுருவேன்! எதுக்கா? எல்லாம் நம்ம டெய்லர் கடையிலே 'தவம்' இருக்கத்தான்!
மொதல்லெ என் துணியைத் தச்சுரணும்! எனக்கு போட்டுக்க வேற எதுவுமே இல்லாத மாதிரி, அந்தப்பக்கம் போறப்ப,
வாரப்ப இதே ஜோலிதான்! அந்தப் பக்கம் போற வேலை இல்லேன்னாலும் ச்சும்மானாச்சுக்கும் அந்தப் பக்கம் போய்
'என்னங்க பாய், தச்சாச்சா?'ன்னு பெரிய மனுஷியாட்டம் ஒரு குரல் கொடுத்துட்டுப் போவேன். எங்க ஊர்ப்பக்கம்
இஸ்லாமியர்களை 'பாய்'ன்னுதான் எல்லோரும் கூப்புடுவாங்க.

எந்த ஊருன்னு கேக்கறீங்களா? இதுக்குள்ளே தெரிஞ்சிருக்கணுமே! எல்லாம் நம்ம 'வத்தலகுண்டு'தான்!

ரெண்டு மூணுநாள்தான் இந்த குரல் கொடுக்கற வேலை! அப்புறம் அங்கெயே 'டேரா' போட்டுருவேன். அங்கே
ஒரு ச்சின்னப்பையன் 'காஜா'எடுத்துக்கிட்டு உக்காந்திருப்பான். அவனோட வேலை காஜா எடுக்கறது மட்டுமில்லை.
பகலுக்கு, பாய் வூட்டுலெ போய் சோறு கொண்டுட்டு வர்றது, நூல், பட்டன்,ஊசி இதெல்லாம் தேவைப்படறப்போ
'ஜெனரல் ஸ்டோர்ஸ்'லே இருந்து வாங்கியாறதுன்னு இப்படி எல்லா எடுபிடி வேலைக்கும் அவந்தான் ஆளு!

'பாப்பா, மத்தியானமா வூட்டுக்கு கொடுத்துவிட்டுர்றேன்'இது என் தலையைப் பார்த்ததும்'பாய்' சொல்றது!
நானும் 'சரி'ன்னு தலையை ஆட்டிட்டு, அங்கெயே அந்தப் பாய்லே( இது தரையிலெ விரிச்சிருக்கற பாய்ங்க!)
உக்காந்து, மெஷினுக்குக் கீழே கலர்க்கலரா விழுந்துகிடக்குற துண்டுத்துணிங்களை எல்லாம் பொறுக்கி வச்சுக்கிட்டு
விளையாடிக்கிட்டே இருப்பேன். என்னாலே ஒரு வம்பும் இல்லே. நாம்பாட்டுக்கு இருப்பேன்! என்னை ஒண்ணும்
சொல்லமுடியாதுன்றதாலெ, பாய் அந்தக் காஜாப் பையன் செய்யற ச்சின்னத் தப்புங்களைக்கூட எதோ பிரமாதமான
குற்றம் செஞ்சுட்டாப்போல நினைச்சுக்கிட்டு கத்துவார். தப்பே செய்யாம இருந்தாலும்கூட ஒரு கத்து கத்துவார்!
ஒரு துணியை முடிச்சிட்டு அங்கிட்டு அம்பாரமாப் போட்டு வச்சிருக்கற துணிகளிலெ ஏதாவதைத் தைக்கறதுக்கு எடுக்கும்போது
மட்டும் நான் ஒரு பார்வை பார்ப்பேன். ச்சும்மாத்தான்! இப்படியே ரெண்டு மூணு துணிங்களை தைக்கறதும், அதுக்குப்
பட்டன் தைக்கறதுக்கு, காஜாப் பையன்கிட்டே விசிறிப் போடறதுமா இருப்பார்.நானும் அப்பப்ப ச்சும்மா ஒரு பார்வை மட்டும்
பார்த்துட்டு நாம்பாட்டுக்கு விளையாடிக்கிட்டே இருப்பேன்.


'பாய்'க்கும் ஒருமாதிரி இருக்கும் போல! அதிலும் அந்தத் துணிங்களை தைக்கறதுக்கு எடுக்கறப்ப என்னை அடிக்கண்ணாலே
பாத்துக்கிட்டே எடுப்பார். அப்புறம் அவராலெ தாங்க முடியாம, பாப்பா, இப்ப உன் சட்டைதான்! எடு அந்தத் துணியம்பார்!
கால் படபடன்னு அமுக்க ஒரு ஸ்பீடுலே மெஷினை ஓட்டுவார். இப்படி ஒரு வெட்டு, அப்படி ஒரு வெட்டுன்னு படபடன்னு
வெட்டி, கிடுகிடுன்னு தைச்சு முடிச்சுருவார். நான் அதை வாங்கிக்கிட்டு 'ஹை ஸ்பீட்'லே வீட்டுக்கு ஓடுவேன். போட்டுப்
பாக்கறதுன்னு ஒண்ணு இருக்குல்லே! வளர்ற புள்ளைக்குத் தைக்கறதாலே கொஞ்சம் 'லூஸ்'ஸாத்தான் இருக்கும்! நமக்கு
அதெல்லாம் ஒண்ணும் கஷ்டம் இல்லை! போட்டாப் போட்டதுதான்! உடனே கழட்டிவைக்கற பாபத்து கிடையாது!

வீட்டுலே எல்லோருக்கும் காமிச்சிட்டு, ஃப்ரெண்ட்ஸ்க்கும் காமிச்சிட்டு, அம்மாவுக்கு காமிக்கறதுக்காக அப்படியே போட்டுக்கிட்டே
இருப்பேன்.பண்டிகைக்கு எடுத்த துணிங்களா இருந்தா, 'அதை பண்டிகையன்னைக்குப் போடறதுக்காகக் கழட்டி வை, அழுக்காக்கிடாதே'ன்னு
அக்காங்க கத்திக்கிட்டே இருப்பாங்க!

சொன்ன பேச்சுக் கேக்காம, அழுக்கு செஞ்சிட்டு, மறுபடி வேற துணி எடுத்து, அதை தைக்கக் கொடுக்கறதுன்னு பலசமயங்கள்ள
நடந்திருக்கு! நான் வீட்டுலே கடைசிக் கட்டிக்கரும்பாச்சா( அப்படித்தான் அக்கம்பக்கத்து ஆயாங்க சொல்றது!)அதனாலே செல்லம் ஜாஸ்தி!
அக்காங்கதான், சிலசமயம் கோவத்துலே கத்துவாங்க, 'இவளுக்கு மட்டும் கணக்கேயில்லாம எடுங்க. எங்களுக்குன்னாத்தான் மனசு
வராது!'

ச்சும்மா சொல்லக்கூடாது, நம்ம பாய்,துணி தைக்கறதிலே கெட்டிக்காரர்! இல்லாட்டா, எங்க அக்காங்களுக்கு பதில் சொல்லி
மாளுமா? அப்படியும், வெளியே போற சமயத்துலேதான், டெய்லர் பாய் சரியாத் தைக்காதது அவுங்களுக்குத் தெரியும்!
அதெல்லாம் ச்சும்மா.... நல்லாத்தான் தைச்சிருப்பாரு. புதுசு போட்டுப் பாக்கறப்பச் சரியாத்தானே இருந்துச்சு! இப்ப வெளியே கிளம்பற
அவசரம். அவதி அவதின்னு கிளம்பறப்ப எல்லாம் கோக்குமாக்காப் போயிருதுல்லே!

ஊர்லே எங்க பாட்டிக்கும் இதே கதைதான்! பாட்டி, கொஞ்சம் குண்டா(!) இருப்பாங்க.மெட்ராஸ் வெயில்லே, குளிச்சிட்டு பாத்ரூமை
விட்டு வெளியே வர்றப்பவே வேர்த்து ஊத்தும்! அதுலே, அவுங்களுக்கு பாத்ரூமுக்குள்ளேயே ஜாக்கெட் போட்டுக்கிட்டுப் புடவையைச்
சுத்திக்கிட்டு வர்ற பழக்கம்! அந்த வேர்வையிலே ஜாக்கெட் ஒட்டிப் பிடிச்சுக்கும்! கை ஏறவும் ஏறாது, அவுத்து எடுக்கவும் வராது!
அவுங்க பாடு ரொம்பக் கஷ்டம்! அப்பவும் திட்டு வாங்கறது அந்த ஜாக்கெட்டைத் தைச்ச டெய்லர்தான்! பாவம்!

'ஒருத்தனாவது சரியாத் தைக்கறானா? எனக்கொரு நல்ல ஜாக்கெட் தைக்கற டெய்லர் தேவலோகத்துலே இருந்துதான் வரணும்'ன்னு
புலம்புவாங்க! எனக்குச் சிரிப்பா வரும். 'ஆமாம் அம்மம்மா. எப்பவாவது, யாராவது ஒரு டெய்லர் உங்களுக்கு நல்ல ஜாக்கெட்
தைச்சிருப்பாருல்லே! அவர் இப்ப மேலே போயிருப்பாரு. அங்கிருந்து வந்தாத்தான் உண்டு'ன்னு சொல்லி, என் 'பட்டத்தை' உறுதி
செஞ்சுக்குவேன்! என்ன பட்டமா? 'வாயாடி!'


இன்னும் வரும்!Sunday, January 30, 2005

யார், யார், யார், அவர் யாரோ?

பின்னூட்டம் போடறதாலே என்னென்ன பயன் இருக்குன்னு உங்களுக்கெல்லாம் தெரியும்தானே?
ஆனா, இன்னோரு புதுப் பயனும் இப்ப கிடைச்சிருக்கு!


நான் போனவாரம் நம்ம மதியோட பதிவுக்கு ஒரு பின்னூட்டம் போட்டேன். அதைப் படிச்சிட்டு ஒருத்தர்
'ஆஹா.. நீங்க நியூஸிலாந்துலேயா இருக்கீங்க?'ன்னு ஒரு மெயில் போட்டார்.

இணய நண்பர்கள் சந்திப்பு, கலந்துரையாடல்ன்னு பெத்த பேர்களிலே அப்பப்ப ஏதாவது படிக்கும்போது
நமக்கு இதெல்லாம் வாய்க்கலையே மனசு நொந்து போய் இருப்பேன்!

சரி, ஆனது ஆகட்டும். தனிநபர் மகாநாடு நடத்திட்டாப் போச்சுன்னும் மனசைத் தேத்திக்குவேன். இந்த
நிலையில்தான் அந்த 'மெயில்' வந்துச்சு!

உடனே மறுபடி போட்டுட்டேன், நியூஸியிலே அவர் எந்த ஊர்லே இருக்காருன்னு தெரிஞ்சுக்கலேன்னா
தலை வெடிச்சுடதா?

என்ன ஆச்சர்யம்! அவர் நான் இருக்கர அதே ஊர்லேதான் இருக்கறாராம். அடிச் சக்கை! கட்டாயம்
இணைய நண்பர்கள் சந்திப்பு நடத்திப்புடணும்!

அவருக்கு என்னோட தொலைபேசி எண்ணையும் தெரிவிச்சேன். அதுக்கு பதில் போடறார், அவர்கிட்டே
ஏற்கெனவே இந்த நம்பர் இருக்காம். இங்கெ 'மால்'லே சந்திச்ச ஒரு நபர் கொடுத்தாங்களாம்!
(புகழ்பெற்ற ஆளொட நம்பர் எல்லோருக்கும் தெரிஞ்சிருக்கறதுலே என்ன ஆச்சரியம்? ச்சும்மா....)

நேற்றைக்கு ஃபோன் செஞ்சிட்டு, வீட்டுக்கு வந்தார். சொந்த ஊர் 'மேட்டூர் அணை'யாம்! இந்த ஊருக்கு
வந்து 4 மாசமாச்சாம்.

தமிழ்மணம், மரத்தடி இங்கெல்லாம் போய் படிக்கறாராம். ஆனா பின்னூட்டம்ன்னு ஒண்ணு போட்டதே இல்லையாம்!

ச்சும்மா இருப்பேனா? பின்னூட்டத்துக்கு என்ன சக்தி, ஏன் பின்னூட்டம் கொடுக்கறது அவசியம், பிடிச்சிருக்கறதைப்
பிடிச்சிருக்குன்னு சொல்ல என் தயங்கணும் என்றெல்லாம் ஒரு லெக்சர் கொடுத்தேன்.( பாவம், மாட்டிக்கிட்டார்!)

ஆனா, இன்னைக்கு ஒரு நியூஸ்! நிஜமாகவே நம்ம வலைப்பதிவாளர்களில் ஒருவர் நியூஸி வராராம்! வேற ஊர்தான்,
இருந்தாலும் இணய நண்பர்கள் மாநாடுக் கனவு நிறைவேற ஒரு ச்சான்ஸ் இருக்குல்லே!

அவர் யாருன்னு மட்டும் கேட்டுறாதீங்க. அவரோட அனுமதி கிடைச்சா அவர் பேரைப் போடறேன். சரியா?

Saturday, January 29, 2005

தனியே தன்னந்தனியே!!

எந்த வித விளம்பரமோ ஆர்ப்பாட்டமோ, பெரிய நடிகர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களோ இல்லாமல்
ஒரு நல்ல திரைப்படம் தனியா, தன்னந்தனியா வந்திருக்கு! சினிமாவோட பேரே இதாங்க, தனியே தன்னந்தனியே!
தமிழ் சினிமா விமர்சனம் வரும் தளங்களில்கூட இந்தப் படம் வந்ததுக்கான அடையாளம், பேர், பேச்சு மூச்சு?
ஊஹூம். ஒண்ணுமில்லே! 'கப் சுப்!'டைரக்டர் பேர் முனீர் அஹமது. திரைக்கதையும் இவர்தான்!

கதை என்னன்னா, ஆமா இப்ப வர்ற படங்களிலே கதை எங்கேன்னுதானே தேடிப்பாக்க வேண்டியிருக்கு!
பெரிய நடிகர்கள்ன்னு சொல்லிக்கிறவங்களும், அவுங்கவுங்க ஒரு தனி 'தீம்' வச்சிக்கிட்டு அதுலெயே
இப்படியும் அப்படியுமா மாத்தி மாத்தி படம் பண்ணிக்கிட்டு இருக்காங்க!

சரி, இந்தப்படத்துக்கு வருவோம். கதை ஒரு எளிமையான கிராமத்துக் காதல்(!) கதை. டிஷ்யூம் டிஷ்யூம்
சண்டையெல்லாம் கிடையாது.

கதாநாயகி நம்ம விஜயலட்சுமி. படம்பூரா அழகான அருமையான உடைகளிலே வராங்க! பாட்டு சீன்களிலே
மட்டும் மாடர்ன்(!)ட்ரெஸ். அதுவுமே நல்ல டீஸெண்ட்டாத்தான் இருக்கு! நல்ல அழகான பொண்ணு!

பசுமையான கிராமத்துக் காட்சிகள் எல்லாம் நல்லாவே இருக்கு!

வடிவேலு, வெடிவேலுவா தனியெ காமெடி ட்ராக் செய்றார். அதுவுமே பரவாயில்லை!
( நான் இப்படிச் சொல்லாம நல்ல வெடிச்சிரிப்புன்னு சொல்லியிருக்கணுமோ?)

கதாநாயகன் அஜய்குமார் அப்படின்னு போட்டாங்க. ஆரம்பத்துலேயே டைட்டில் ஒண்ணுமே இல்லாமப் போச்சா,
நான் கதாநாயகன் எண்ட்ரியானவுடனே இவர்தான் முனீர் அஹமதுன்னு நினைச்சுட்டேன்!

வளவளன்னு இழுக்காமக் கச்சிதமா ஒண்ணேமுக்கால் மணிநேரத்துலெ படம் முடிஞ்சிடுது! 'சிக்'குன்னு இருக்கு!

ஆனா வீணை கம்பெனிதான் அநியாயத்துக்கு 'ட்ரைய்லர்'களாப் போட்டு வச்சிடறாங்க.....

ரொம்ப நாளுக்குப் பிறகு அமைதியான ஒரு படம் பார்த்த உணர்வு.

Thursday, January 27, 2005

ராசாவூட்டுக் கல்யாணம்!!!!!

தம்பிக்குக் கல்யாணம்!!!

இன்னைக்கு நம்ம தம்பி ராஜாவுக்குக் கல்யாணம்.இந்த ரெண்டுவாரமா இதே நினைப்புத்தான்! கல்யாண
வீட்டு 'சாங்கியங்கள்' என்னென்ன நடந்திருக்கும் என்று நினைச்சுப் பாக்கறதுலேகூட ஒரு சுகம் இருக்கு!கல்யாணப்பொண்ணு வீட்டுலேயும், அவுங்க வீட்டு வழக்கப்படி நலுங்கு, கணபதி பூஜைன்னு பலதும்
நடந்துக்கிட்டு இருக்கும். எல்லாம் ஆச்சு. இன்னைக்குத் தாலி கட்டு!

இந்திய நேரம் 7.30 முதல் 9 மணிவரை முகூர்த்த நேரம்! அப்ப இங்கே எங்களுக்கு மத்தியானம் 3 மணி!
கல்யாணத்துக்கு நேர்லே போக முடியலைதான். ஆனா இங்கிருந்தே வாழ்த்தலாமே! அதைத்தான் நான்
செஞ்சுக்கிட்டு இருக்கேன். அதுவும் எப்படி?

நம்ம வீட்டுலே இன்னைக்குச் சமையல் வடை, பாயாசத்தோட! ( கல்யாண விருந்தை 'மிஸ்'
செய்யறோமேன்னு இருக்கற தவிப்புக்கு ஒரு ஆறுதல்)

ராஜாவுக்கும், கோமதிக்கும் எங்கள் அன்பான திருமண வாழ்த்துக்கள்!!!

'இல்லறம் நல்லறமா அமையணும்'ன்னு ஆண்டவனை முழுமனசோடு வேண்டுகின்றோம்!

நல்லா இருங்க!!!!!Sunday, January 23, 2005

ராத்து பாக்கி.... பாத்து பாக்கி....

எண்பதுகளின் ஆரம்பத்தில் சில( பல)ஆண்களின் கனவுக்கன்னியாக இருந்த பர்வீன் பாபி இறந்துவிட்டதாக
இன்றையச் செய்தி! அதுவும் எப்படி? யாருக்குமே தெரியாமல்!மூன்று நாட்களாக வாசலில் கதவருகேக் கிடந்த தினசரிகளும், பால் பாக்கெட்டும் எப்படியோ
பிறரின்( குறைந்த பட்சம் ஒருவரின்)கவனத்தைக் கவர்ந்ததால், அவர் போலிஸுக்குத் தெரிவித்ததின்
பேரில், அவர் வீட்டில் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது!

அன்றைய இளவயது ஆண்களின் கனவு (ஜொள்ளு) நாயகிக்கு முடிவு நேர்ந்தவிதம் ஏனோ மனசுக்குக்
கஷ்டமாக இருக்கிறது!


அவர் பல படங்களில் நடித்திருந்தாலும், அவரது மறைவு பற்றி அறிந்தவுடன் நினைவுக்கு வந்தது
'ராத்து பாக்கி.....பாத்து பாக்கி... என்ற பாடல்தான்!'நமக்ஹலால்' என்னும் திரைப்படத்தில்
அமீதாப், சசி கபூர் இவர்களுடன் பர்வீன் பாபி நடித்தது.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு ஏதோ ஒரு சினிமாப் பத்திரிக்கையில் பர்வீன் பாபியின் புகைப் படத்தைக்
காண நேர்ந்தது! எப்படி இருந்த ஆள் எப்படி ஆயாச்சு என்று எண்ணியதும் நினைவுக்கு வந்து தொலைத்தது!

அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்!

Wednesday, January 19, 2005

தமிழ்ச் சங்கத்திலே!

போன சனிக்கிழமை எங்கள் தமிழ்ச் சங்கத்திலே ஒரு ஒன்று கூடல் நிகழ்ச்சி!
இந்த நாள் ஏற்கெனவே பொங்கல் பண்டிகைக்காக தெரிவு செய்யப்பட்டு, அதற்கான இடம் எல்லாம்
ஏற்பாடு செய்தாகிவிட்டது. கலை நிகழ்ச்சிகளுக்காக ஆடலும், பாடலும்கூட படு ஜோராக ஒத்திகை
பார்த்துக் கொண்டிருந்தோம். இந்த முறை சில நாடாளுமன்ற உறுப்பினரும் கலந்து கொள்வதால்
எல்லாம் அமர்க்களமாக இருக்க ஏகப்பட்ட ஏற்பாடுகள்!


இதெல்லாம் இப்படி இருக்க, வந்தது சுநாமி! நினைச்சுப் பார்க்கவே முடியாத அளவிலே ஒரு பேரழிவு!
நமக்கு என்ன கொண்டாட்டம் கேக்குதுன்னு அந்த கலை நிகழ்ச்சிகளையெல்லாம் ரத்து செஞ்சோம்.
கடவுள் வணக்கத்தோடு ஆரம்பிச்சு, இந்த பேரழிவிலே உயிர்நீத்த மக்களுக்காக ஒரு நினைவு
அஞ்சலியாக இந்தக் கூட்டத்தை நடத்தினோம்.

வழக்கமாக இருக்கும் இரவு விருந்தையும் வேண்டாம்ன்னு ஒதுக்கிட்டோம். ஆண்டு விடுமுறைக்காக
இலங்கைக்குப் போன நண்பரும் அவர் குடும்பமும் அதிர்ஷ்டவசமாக இந்த அழிவிலிருந்து தப்பிச்சுட்டாங்க!
திருகோணமலை துறைமுகத்துக்குப் பக்கத்துலே வீடாம்! சுநாமி அலை அடிக்கவில்லையாம், ஆனால்
தண்ணீர் மட்டம் உயர்ந்து வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டதாம்! மார்பளவு தண்ணீரில் ரெண்டு பிள்ளைகளையும்
கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, மெதுமெதுவாக நடந்து, கொஞ்சம் மேடான இடத்துக்குப் போய்விட்டார்களாம்.
அந்த இடம் ஒரு சின்னக் குன்றுபோல இருந்ததால் சரிவில் இருந்த வீடுகளில் மட்டும் தண்ணீர் வந்துவிட்டதாம்!

எல்லாம் ஒரு பத்து நிமிடம்தானாம்! அதன்பின் வெள்ளம் வடிந்தபோது அப்படியே தண்ணீர் உள்வாங்கிவிட்டதாம்!
துறைமுகத்தில் அந்த சமயம் நின்றிருந்த கப்பல்கள் எல்லாம், அடிப்பாகம் தெரிய தரையில் நின்றிருந்தனவாம்!
எப்படியோ பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டார்கள்.முகமறியாத எத்தனையோபேர் மறைந்துவிட்டது மிகவும் மனவருத்தம்
தந்தாலும், நமக்குத்தெரிந்த ஒருவர் தப்பி வந்தது மனசுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது!

இந்த இரங்கல் கூட்டத்திலே ஒரு கவிதை வாசிக்கப்பட்டது. பொதுவா நான் கவிதையைக் கொண்டாடுகிற ஆள் இல்லை.
ஆனா இந்தக் கவிதையைக் கேட்டப்ப கண்ணீர் வந்துவிட்டது. கவிதைக்குரிய இலக்கண வரம்புக்குள் இது இருக்கிறதா
என்றெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா பிடிச்சிருந்தது! அதனாலெ இதை உங்ககூட பகிர்ந்துக்கலாம்ன்னு இதை இங்கே
போட்டிருக்கிறேன். இதை எழுதியது இங்கெ இருக்கும் ஒரு நண்பர். பெயர் மேகலா.


வஞ்சனை செய்த கடல் கண்டால்
விளையாடப் போகமாட்டேன் பாப்பா
நெஞ்சு வலிக்கிறது பாப்பா
எங்கள் நேச உறவுகளை நினைத்தால்

உண்ண உணவுமில்லை அவர்க்கு
உறைய இடமும் இல்லை பாப்பா
கண்கள் பனிக்கிறது பாப்பா
அந்த சின்னஞ்சிறுவர்களை நினைத்தால்

என்ன தரமுடியும் எம்மால்
அவர் துயரம் துடைப்பதற்குப் பாப்பா
எந்தன் உடைகளிலே பாதி
இருக்கும் உணவுகளில் பாதி
சின்ன உண்டியல் காசு
இவை அனைத்தும் அனுப்புகிறோம் பாப்பா!


Monday, January 10, 2005

போலீஸ் அடி! தொடர்ச்சி....

நலம் விசாரித்துப் பின்னூட்டங்களிலும், தனி மடல்களிலும் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றி.
போன பதிவின் தொடர்ச்சி......


போலீஸ்காரர் வந்து, விபத்து எப்படி ஆச்சு, என்னன்னு விவரம் எல்லாம் விசாரிச்சிட்டு, இவரோட லைசன்ஸை
வாங்கிக்( பிடுங்கிக்)கிட்டாராம். அப்ப ஆம்புலன்ஸும் வந்துருச்சு! எனக்கு நினைவு இருந்துச்சு. அதே சமயம் லேசா
மயக்கம் வர்றமாதிரியும் இருந்துச்சு. சுத்தி நின்னவங்களிலே யாரோ தண்ணி பாட்டிலைக் குடுத்தாங்க. என் முகத்துலே
தண்ணி தெளிச்சுக்கிட்டே இருந்தாங்க. இவரு என்கிட்டே என்னென்னமோ பினாத்திக்கிட்டு ( தமிழ்லெதான்) இருக்கார்.
மகளையும் கைத்தொலைப் பேசியிலே கூப்பிட்டு, அம்மாவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிப்போச்சுன்னு சொல்றார்.

ஆம்புலன்ஸிலே ரெண்டு பெண்கள் இருந்தாங்கபோல, என்னாலெதான் தலையைத் திருப்ப முடியலையே! அவுங்களிலே
ஒருத்தர் நான் விழுந்ததிலே இருந்து அப்படியெ நகராம இருக்கேனான்னு உறுதிப் படுத்திக்கிட்டு, என் கிட்டே என் பிறந்த
தேதி என்னன்னு கேட்டாங்க. எனக்கு நினைவு பூரணமா இருக்கான்னு தெரிஞ்சுக்கிறதுக்காம்! பதில் சரியான்னு இவர்கிட்டே
கேட்டுக்கிட்டாங்க. அப்புறம் கழுத்துக்கு ஒரு ஸ்டிஃப் காலர் போடப்போறோம். அது ரொம்ப 'அன்கம்ஃபர்ட்டபிளா' இருக்கும்
கொஞ்சம் பொறுத்துக்குங்கன்னு ஒரு காலர் மாட்டிட்டாங்க. தொண்டைக் குழியை அடைக்கிறமாதிரி அது அழுத்துது!

இப்ப, வலிக்கு நம்பர் கேட்டாங்க. இது உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச விஷயம்தான். நம்பர் சொல்லுன்னா என்னான்னு
சொல்றது? ஸீரோன்னா வலியே இல்லையாம். பத்துன்னா பயங்கர வலியாம்! ஆனா, வலியிலே இருக்கறவங்களுக்கு
அவுங்க வலி பிரதானமாத்தானே தெரியும்? எனக்கோ உயிர் போறமாதிரி வலிக்குது.( ஆமா இந்த 'உயிர்போற வலி'ன்னு
சொல்லுறமே, 'அப்ப' அந்த வலி எப்படியிருக்கும்ன்னு நிஜமாவெ நமக்குத் தெரியாதுதானே? அது எப்படி இருக்கும்ன்னு நமக்கு
முன்னாலே இறந்துபோனவுங்க யாராவது வந்து சொன்னாத்தான் தெரியும். இல்லையா?) ரொம்ப வலியா? கொஞ்சமா? தாங்கறமாதிரி இருக்கா?
இப்படிக் கேக்காம வலிக்கு 'மார்க்'போடச் சொல்றாங்க. நானு பத்துன்னு சொன்னேன். அவ்வளோதான்! அதுக்குள்ளே என்னை
ஆம்புலன்ஸுலே ஏத்தியாச்சு. வலி நிவாரணி தரோம்ன்னு சொன்னாங்க. என்ன மருந்துன்னு நான் வாய்குழறிக்கிட்டே கேக்கறேன்.
அதுதான் தொண்டையை அடைச்சிக்கிட்டு காலர் மாட்டியிருக்கே!

இந்த இடத்துலே ஒண்ணு சொல்லணும். இங்கே ஆஸ்பத்திரிகளிலே வலி நிவாரணின்னு சொன்னா அது மார்ஃபின் தான்! எனக்கோ
அது அலர்ஜி! வலியை நிவாரணம் பண்ணாம, வாந்தி வாந்தியாவந்து இன்னும் மோசமான வலியைக் கொண்டு வந்துரும். எல்லாம்
அனுபவப் படிப்பினைதான்! நான் நினைச்ச மாதிரியே அவுங்க மார்ஃபின் தான் தரப்போறாங்களாம். ஐய்யோ அது வேணாம்ன்னு
கை ஜாடை காட்டினேன். அதுக்குள்ளெ 'வெய்ன்' தேடுறாங்க. இவர் கேக்கறாரு, என்னத்துக்குன்னு. சர்ஜரி பண்ணனும்ன்னா
வேண்டியிருக்கும்னுட்டு, ரெண்டு கையிலேயும் மாறி மாறிக் ஊசியாலெ குத்திக்கிட்டு இருக்காங்க. கத்தக்கூடத் தெம்பில்லாம இருக்கு.
அஞ்சாறு இடத்துலே குத்திப் பார்த்துட்டுப் புறங்கையிலே நரம்பைக் கண்டுபிடிச்சு ஊசியைக் குத்திவச்சிட்டாங்க.சர்ஜரின்னு கேட்டதும்
இவரோட பயம் கூடிப்போச்சு போல, என் தலைமாட்டுலெ உக்கார்ந்துக்கிட்டு இன்னும் புலம்பிக்கிட்டே எல்லாக் கடவுளுங்களையும்
கூப்பிட்டுக்கிட்டே இருக்கார்!

வண்டி கிளம்பி ஆஸ்பத்திரிக்குப் போய்க்கிட்டு இருக்கு. படுத்துக்கிட்டு போறது வாந்தி வர்றமாதிரியும் மயக்கமாவும் இருக்கு! பதினேழு
வருசப் பழக்கமுள்ள தெருவுங்கதான். ஆனாலும் எங்கேயோ போறமாதிரி இருக்கு. நிறையதடவை ஆம்புலன்ஸ் சவாரி செஞ்சுருக்கேன்.
அதெல்லாம் பேஷிண்ட் கூடப் போனது! இந்த நாட்டுக்கு வந்த நாளிலே இருந்து ( இங்கேதான் எல்லாம் டூ இட் யுவர்செல்ஃப் ஆச்சே)
வீட்டுக்கு மெயிண்டனன்ஸ் பண்றேன் பேர்வழின்னு ஏதாவது செஞ்சிட்டு ஆம்புலன்ஸிலே போற பழக்கம்! சுருக்கமாச் சொன்னா
நம்ம வீட்டுலே இவர் ஒரு 'டிம் த டூல்மேன் டெய்லர்'. ஒருவழியா வண்டி நின்னுச்சு. கதவைத் திறந்த்வுடனே என் மகள் உள்ளே
ஏறிவந்து அம்மா அம்மான்னு கூப்பிடறாள்.அவளுக்கும் இந்த மாதிரி எமர்ஜென்ஸிக்கு ஓடி வர்றது இது எத்தனாவது தடவையோ! எல்லாம்
அப்பாவைப் பார்க்க ஓடிவர்றதுதான்! எல்லா ப்ரொசிஜரும் அத்துப்படி!

ரொம்ப நீட்டிவலிக்காம சுருக்கமாச் சொல்ல முயற்சிக்கட்டுமா?

ஏழெட்டு எக்ஸ்ரே, ரெண்டு டாக்டருங்கன்னு வந்து பார்த்துட்டு கழுத்துலே எலும்பு முறிவு இல்லேன்னு சொல்லி ஒருவழியா அந்தக் காலரைக்
கழட்டினாங்க! இடுப்பு பிரதேசத்துலே தாங்கமுடியாத வலி இருந்தாலும், இந்தப் பட்டையைக் கழட்டுனதே ரொம்ப ஆசுவாசமா இருந்துச்சு!
இன்னும் ரெண்டு டாக்டருங்க வந்து 'ஏன் வலி நிவாரணி வேண்டாம்ன்னு சொல்றீங்க? வாந்தி தான் காரணம்ன்னா அதுக்கு ஒரு ஊசி போடறோம்.
கட்டாயம் வலி நிவாரணி எடுக்கணும்'ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. 'தேர் இஸ் நோ நீட் டுபி இன் பெயின்'என்றதுதான் திருப்பித்
திருப்பிச் சொல்லப்பட்டது!

நானும் வேணாம் வேணாம்ன்னு மறுத்துக்கிட்டே இருந்தேனா, அப்ப இன்னோரு டாக்டர் ஒரு மாத்திரையைக் கொண்டுவந்து இதையாவது
எடுங்க. இதுக்கு வாந்தி வராது. இது மார்பின் இல்லை. ஆனாலும் ஒரு ஊசி போட்டுடறோம். வாந்தியே வராதுன்னு சொன்னாங்களா, உடனே
மகளும், இவரும் என்னை வற்புறுத்தி அந்த மருந்தை எடுத்துக்க வச்சிட்டாங்க. நல்ல வேலை செஞ்சாங்க! வாந்தி வராததோட, வலியும்
கொஞ்சம் குறைஞ்சமாதிரி இருந்துச்சு!

இவ்வளவு நேரமும், நம்ம அறைவாசலிலேயே இருந்தது யாருன்னு நினைக்கறீங்க? நம்ம போலீஸ்காரர்தான்! டாக்டருங்ககிட்டேயும் விசாரிச்சிட்டு,
உள்ளெவந்து என்னையும் விசாரிச்சிட்டு போனார். அப்புறம் இவரோட லைசன்ஸைத் திருப்பிக் கொடுத்துட்டாராம்.ஆனா, மறுபடி ஒரு செக்கப்
செஞ்சு ரிப்போர்ட் அனுப்பணும்ன்னு சொல்லிட்டுப் போனாராம்.

இவ்வளவு நேரமும், நான் மனசுக்குள்ளே பெருமாளைக் கும்பிட்டுக்கிட்டே இருக்கேன், 'பெருமாளே, உயிர் வேணும்னா சட்டுன்னு
எடுத்துக்க. முதுகு அடிபட்டு வீல்சேர்லே உக்கார வச்சுடாதே'ன்னு!

இங்கெல்லாம் 'வீல்சேர் ஆக்செஸ்' இல்லாத இடமே இல்லை! அதுலேயும் இப்பல்லாம் பேட்டரியிலே ஓடுற 'மொபில் ஸ்கூட்டர்' சர்வ
சாதாரணமா இருக்கு. அதுலே போகணும். அது ரொம்ப ஜோரா இருக்கும்ன்னு எனக்கு ஒரு பைத்தியக்காரத்தனமான ஆசை! அதை
என் மகள் கிட்டே அப்பப்ப சொல்லவும் சொல்வேன், 'அம்மாவுக்கு வயசாச்சுன்னா இப்படி ஒரு ஸ்கூட்டர் வாங்கிக் கொடுத்துடு. என்னாலெ
பார்க்கிங் தேடி அலைய முடியாது'ன்னு! இப்பத்தான் அப்படி இருக்கறவங்களோட கஷ்டம் புரியுது! அவுங்க மனசெல்லாம் எவ்வளவு துக்கப்படும்னு
நினைச்சுப் பார்க்கறேன். தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தாத்தானே தெரியும்?

இதுக்கு நடுவிலெ நம்ம நண்பர்கள் சிலர் ஆஸ்பத்திரிக்கு வந்துட்டாங்க. எமர்ஜென்ஸி ரூம்லே கழுத்துப் பட்டையோடப் படுத்திருந்ததைப்
பார்த்துட்டு ரொம்பவே பயந்துட்டாங்க!

அப்புறமும் பலவிதமான பரிசோதனைகள் எல்லாம் செஞ்சுட்டு, ராத்திரி ஒரு மணிக்கு வீட்டுக்குப் போகலாம்ன்னு சொன்னாங்க. அந்த
ஏழரைமணி நேரமும் இவர் புலம்பிக்கிட்டேதான் இருந்தார். எனக்கே ஐய்யோன்னு ஆகிப் போச்சு! என் ரெண்டு புறங்கையிலேயும்
பத்து காசு அளவுலே ஏழு ப்ளாஸ்டர் இருந்தது. நல்லாத்தான் குத்திப் பார்த்திருக்காங்க!

எனக்கு உக்கார முடியுது. நின்னுகிட்டே இருந்தாலும் பரவாயில்லெ! ஆனா படுத்தாத்தான் ஒரே வலி! நாலுமணி நேரத்துக்கு ஒருதடவைன்னு
வலிநிவாரணியா பனடாலை முழுங்கிக்கிட்டு இருக்கேன்! இங்கே இப்ப விடுமுறை சீஸன். இன்னைக்குத்தான் சில இடங்களிலே வேலை
ஆரம்பிச்சிருக்கு! நாளைக்குத்தான் ஃபிசியோதெரபிக்குப் போகப்போறேன்.

என்னைப் பார்க்க ஆஸ்பத்திரிக்கு வந்திருந்த நண்பர் ஒருவர், நேத்து வீட்டுக்கு வந்திருந்தார். ச்சும்மாப் பேசிக்கிட்டு இருக்கறப்ப, எங்க இவர்
சொன்னார், 'முதுகுலே, கறுப்பா ரத்தம் கட்டுன அடையாளம் எல்லாம் இல்லெ. ஆனாலும் பயங்கர வலியா இருக்குதுன்னு சொல்றாங்க!
குனிய முடியாது, படுக்கையிலே இருந்து எழும்போது இன்னும் ரொம்ப வலி!'

அதுக்கு நம்ம நண்பர் ( திருப்பூர்காரர்) சொன்னார், 'போலீஸ் அடி மாதிரியா? பின்னிடுவாங்க. ஆனா உடம்புலே ஒரு அடையாளமும் இருக்காது!'

நேத்து நம்ம போலீஸ்காரர் ஃபோன் செய்து, என்னிடம் நலம் விசாரித்துவிட்டு, இவர்கிட்டே பேசணும்னு சொன்னார். 'கேர்லெஸ் ட்ரைவிங்'
என்ற பிரிவுலே இவருக்கு ஒரு நோட்டீஸ் கொடுப்பாங்களாம்!

நம்ம சுந்தர் சொன்னதுபோல 'ஊமைஅடி என்றான் முருகன் சத்தமாய்!'

அன்பு உள்ளங்களுக்கு நன்றி!


Sunday, January 09, 2005

போலீஸ் அடி!

நம்ம ஊர்லே 'இதெல்லாம் ரொம்ப சகஜமப்பா'ன்னு சொல்வாங்க! போலீஸ் எதுக்காவது ஸ்டேஷனுக்குக்
கூட்டிக்கிட்டுப் போனா, ஆளுக்கு, பார்க்க ஒரு சேதாரமும் இல்லாம ச்சும்மா தட்டி அனுப்பிருவாங்களாமே!
இன்னும் இங்கே கிறிஸ்மஸ் லீவு முடியலை! பல இடங்களிலே ஜனவரி 10க்குத்தான் வேலை மறுபடி
ஆரம்பிக்குது.ஒரு நாலு நாளைக்கு முன்னாலே இங்கே அபூர்வமா நல்ல வெய்யில்! மத்தியானமாப்
போய்க் கொஞ்சம் காய்கறிகளை வாங்கிக்கிட்டு வந்துகிட்டு இருந்தோம். மரியாதையா வீட்டுக்கு வந்திருக்கலாம்.
ஆனா நம்ம நேரம்? சும்மா இருக்குமா? அப்படியே பீச்சுக்குப் போயிட்டு வரலாம்ன்னு வண்டியை கடற்கரைப்
பக்கம் திருப்பியாச்சு.

கடல் பண்ண அட்டகாசம் மனசுலே அப்படியே பதிஞ்சு போனாலும், கடலுக்குன்னு ஒரு வசீகரம் இருக்கறதை மறுக்க
முடியாதில்லையா? அதுவும் நான் ஒரு கடல் பைத்தியம்! ( 'போட்'லே போனாலும் வேடிக்கை ஒண்ணுமே
பார்க்காம முழுநேரமும் டாய்லெட்லே போய் வாந்தி எடுக்கற ஆளு நானுன்றது வேற விஷயம்!)

நம்மூர் மாதிரி சாயந்திரம் காத்து வாங்கன்னு இங்கே யாரும் போறதில்லையே. நல்லா வெய்யில் காயத்தான் கூட்டம்
வருது இங்கெல்லாம்! சரி. போனோம். போனப்ப அங்கெ ஒரு கப்பல் வேற நின்னுகிட்டு இருக்கு. எனக்குக்
கப்பல் பைத்தியம் வேற இருக்கே! ( இதுமாதிரி பல விஷயங்களிலே ஞான் ப்ராந்தாணு!)

பார்க்கிங் இடம் எல்லாம் ஃபுல்! கிடைச்ச இடத்துலே பார்க் செஞ்சாச்சு. எதிரே ஒரு மரம்! ஒரு முழுக் கப்பலையே
மறைக்குது! இன்னைக்கு நமக்கு அதிருஷ்டம் இல்லேன்னு இருந்திருக்கலாம்தான்! கொஞ்சநேரம் வண்டியிலெயே
உக்கார்ந்து இவர் ஊருக்குப் போய் வந்த கதைகளைக் கேட்டுக்கிட்டு இருந்தேன்.நம்ம ஜாதக விசேஷம் ச்சும்மா
இருக்க விடாது! இந்த இடம் சரியில்லே! கப்பல் தெரியுற மாதிரி வேற எங்கேயாவது இடம் இருக்கான்னு பார்த்துட்டு
வரேன்னுட்டு நான் போனேன். நாக்குலே 'சனியன்' நல்லா 'ஸீட்' போட்டு உக்கார்ந்துகிட்டு இருந்ததைக் கவனிக்கலே!
ஹைய்யா! ஒரு இடம் இருக்கு! இவர்கிட்டே அதைச் சொல்லிட்டு, நான் அந்த இடத்துக்கு நடந்து போய்கிட்டு இருக்கேன்.

கோபால் வண்டியை ரிவர்ஸ் எடுத்து வந்துக்கிட்டு இருக்கார். நேரா வந்து ச்சும்மா நச்சுன்னு ஒரு இடி! ஐய்யோன்னு
கத்திக்கிட்டே நான் கீழே விழுந்தேன்! எழுந்திரிக்கலாம்ன்னு நினைச்சாலும் உடம்பை அசைக்க முடியலை! வலின்னா
அப்படி ஒரு வலி!

இவரு வண்டியை நிறுத்திட்டுக் கத்திக்கிட்டே ஓடி வரார். அதுக்குள்ளெ அக்கம்பக்கத்துலே கூட்டம் சேர்ந்துடுச்சு!
அவுங்களிலே ஒரு நர்ஸ் இருந்தாங்களா அல்லது முதலுதவி தெரிஞ்சவுங்களான்னு தெரியலை, ஆனா அவுங்க
என்ன செய்யணுமுன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. உடனே இவர் ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் போட்டார்.
நடுங்கற குரலோடு விபத்தைச் சொன்னார். சொல்லி அஞ்சு நிமிஷத்துக்குள்ளே சைரனோட வந்து நின்னது
போலீஸ் கார்!

மீதி அடுத்த பதிவில்....( பிழைச்சுக்கிட்டேன்)Wednesday, January 05, 2005

பேரழிவில் சிக்கிய 'கிவி'க்கள்!

இங்கிருந்து தாய்லாந்து, இந்தோனேஷியா, இலங்கை, இந்தியா இன்னும் மற்ற சுநாமி பாதித்த இடங்களுக்கு
விடுமுறையில் சென்றவர்கள் அநேகமாக அனைவரும் தப்பித்துவிட்டனர் என்று தெரியவந்துள்ளது.
இன்னும் 23 பேரைப் பற்றிய விவரங்கள் கிடைக்கவில்லை.


உயிரிழந்தவர்கள் மிகச் சிலரே என்பதில் ஒரு நிம்மதி இருந்தாலும் பாதிப்பால் இறக்க நேரிட்ட மற்ற நாடுகளைச்
சேர்ந்தவர்களுக்காக வருத்தம் தெரிவித்ததோடு, மீட்பு நடவடிக்கைகளுக்கும், நிவாரணப் பணிகளுக்கும்
அரசாங்கம் முழுமூச்சோடு உதவிகள் செய்தும் வருகிறது.

இங்கேயுள்ள இலங்கை மக்களும், இந்தோனேஷிய, தாய்லாந்து மக்களும் நிதி திரட்டி, அவற்றைப் பாதிக்கப்பட்ட
தம் நாட்டுமக்களுக்கு அனுப்புகின்றனர்.

நியூஸிலாந்து நாட்டுப் பொதுமக்களும் தாராளமாகவே பொருளுதவி செய்தனர்.

பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து திரும்பிவந்த மக்களுடைய கணக்கெடுப்பு விமான நிலையத்திலேயே எடுக்கப்பட்டு
விடுகிறது. அவர்களுக்கு ஏற்பட்ட/ ஏற்படும் மன அழுத்தம் தீர இலவச உதவி, கவுன்சிலிங் போன்றவைகள்
அரசாங்கத்தாலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(இந்த விவரங்கள் எல்லாம் கோபால், சென்னையிலிருந்து திரும்பி வந்தபோது இங்கே ஏர்ப்போர்ட்டில் அவரிடம்
விசாரித்ததாகச் சொன்னார். மன அழுத்தத்திற்கு கவுன்சிலிங் உடனே எடுத்துக் கொள்ளும்படி அறிவுரைத்தார்களாம்.)

இதையெல்லாம் அறிந்தபோது, நம் நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் நிலையை எண்ணிப் பெருமூச்சுதான் விடமுடிகிறது.


திரும்பிப் பார்!!!!!

( போன வருசக் கடைசியிலே எழுதினது)


இந்த வருஷம் முடியப்போகுது. நல்லதும் கெட்டதுமா பலதும் நடந்திருக்கு. வருச முடிவுக்குக் கணக்கு
எடுக்கறது உலகத்துலே எல்லா இடத்துலெயும் வழக்கமா நடக்கறதுதானே?


நம்ம கணக்குக்கு என்ன வருதுன்னு பாக்கணுமில்லே. இப்படிச் சொல்லிகிட்டே இருந்தா எப்படி?
வேலையைக் கவனிக்கலாம்.

நல்லதா? கெட்டதா? எது மொதல்லே வரும்?

நல்லதையே மொதல்லே பார்க்கலாம்!

போன வருச வைகுண்ட ஏகாதசிக்கு இங்கே இருக்கற கோயிலுக்கு ( இந்த ஊர்லே ஒரு 'ஹரே க்ருஷ்ணா'
கோயில்தான் இருக்கு. மத்தபடி முக்குக்கு முக்கு சர்ச்சுங்கதான். சொல்ல மறந்துட்டேனே, ஒரு 'பள்ளிவாசல்'
கூட இருக்கு!)போயிருந்தோம். இந்தக் கோயிலிலே ஞாயிற்றுக் கிழமைதான் கூட்டம் நிறைய இருக்கும்.
அன்னைக்கு அங்கெ பூஜை முடிஞ்சவுடன் சாப்பாடும் தருவாங்க! நாங்களும் எப்பவாவது ஞாயிற்றுக் கிழமை
போவோம். சில சமயம் ஞாயிறு மத்தியானம் போய், சமையலறையிலே உதவியும் செய்வோம்.

அந்த வைகுண்ட ஏகாதசியன்னைக்கு ஒரு சனிக்கிழமையா இருந்துச்சு. அங்கே சாயந்திரம் போனா,
அட்டகாசமான அலங்காரத்துடன் 'சாமி' இருக்கார்! இங்கே ஒரு விஷயத்தைக் கண்டிப்பாச் சொல்லணும்.
இந்தச் சாமி சிலைகளுக்கு எப்படித்தான் அலங்காரம் செய்யறாங்களோ? ஒவ்வொரு நாளும் வித விதமா உடை!
அதுமட்டுமா வேற வேற நகை அலங்காரம்! எல்லாம் படு 'மேட்ச்சிங்'கா இருக்கும். அந்த அலங்காரத்தைப்
பாக்கறப்பவே, அந்த 'டெடிகேஷன்' அப்பட்டமாத் தெரியும்! அதுமட்டுமா... நாங்கெல்லாம் இந்தக் குளிருக்குப்
பயந்து ஷர்ட்டும் பேண்ட்ஸ்சும் கோட்டும் போட்டுக்கிட்டு இருக்கறப்ப, அவுங்கெல்லாம் பஞ்சக் கச்சம் வச்ச வேஷ்டி,
புடவைன்னு இருப்பாங்க! அதுவும் அந்தப் புடவைங்களைப் பார்த்தா அழுகையே வந்துரும். அரதப் பழசாவும்,ஐய்யோன்னும்
இருக்கும்! உண்மையைச் சொன்னா, நம்ம ஊர்லே வீட்டுவேலைகளிலே உதவி செய்யறவங்ககூட இதைக் கொடுத்தா
நம்ம மூஞ்சியிலேயே விசிறியடிச்சிருவாங்க! ஆனா அவுங்க முகங்களிலெ ஆரத்தி சமயத்துலே ஒரு மகிழ்ச்சி தெரியும் பாருங்க!
அதை விவரிச்சுச் சொல்லத் தெரியலெ. நேர்லே பார்த்தாத்தான் விளங்கும்!

இன்னொண்ணும் சொல்லணும், அவுங்க பிள்ளைங்க எல்லாரும் அழகா நெற்றியிலே கோபிச் சந்தனம் வச்சுக்கிட்டு, நம்ம
இந்தியவகை ஆடை அலங்காரங்களோட பவனி வர்றதைப் பார்க்கணுமே! இதுலே ஆம்புளைப் பசங்க ச்சின்ன குடுமி வேற
வச்சிக்கிட்டு இருக்கும்!

சரியா 7 மணிக்குப் பூஜை ஆரம்பிச்சுடுவாங்க எப்போதும்! அன்னைக்கு நாங்க மட்டும்தான் அங்கே இருக்கோம்!
யாருமே வரலை! நாங்களும், பூஜை பண்ணின பெண்ணும்! ஏகாந்த சேவை! எனக்குத் த்ருப்திலே
மனசு நிறைவா இருந்தது! பூஜை முடிஞ்சதும், அந்தப் பொண்ணும், இன்னோரு பொண்ணும் கொஞ்ச
நேரம் எங்ககிட்டே பேசிக்கிட்டு இருந்தாங்க.

அவுங்க ரெண்டு பெரும் ஃபிஜித்தீவு ஆளுங்களாம்! இவுங்களுக்கு சனிக்கிழமை 'ட்யூட்டி'யாம்! ஞாயித்துக்கிழமை
சாயந்திரம் வாங்க. பூஜை முடிஞ்சப்புறம் சாப்பாடும் இருக்குன்னு சொன்னாங்க. நான் சொன்னேன்,
சில நாட்கள் தான் ஞாயிற்றுக்கிழமை வரமுடியுது. முடிஞ்சா வர்றோம்ன்னு சொன்னோம்.மறுநாள் வேற
வேலை வந்துருச்சு! என்ன பெரிய வேலை? என் மகள் இங்கே 'ஃப்ளாட்டிங்' செய்யறாளே. அங்கே என்ன
சமைக்கிறாங்களோ? என்னத்தைச் சாப்பிடறாளோன்னு எங்களுக்கு ஒரே கவலை! அதனாலே நாங்க
கேட்டுகிட்டதுக்காக, மகள் வாரத்துலே ரெண்டு நாளு சாயந்திரமா வீட்டுக்கு சாப்பிடறதுக்குன்னே வருவா. அது
புதனும் ஞாயிறும்!

ஆனா, இந்த சனிக்கிழமை பூஜைக்குப் போறது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு! ஞாயிறு தவிர மற்ற நாளெல்லாம்
பூஜை சமயம் பெரும்பாலும் யாருமே இருக்கமாட்டாங்களாம்! அங்கே கோயிலிலேயே கொஞ்சம் 'ப்ரம்மச்சாரி'ங்க
தங்கியிருக்காங்க. ஆனா அவுங்களும் அந்த நேரத்துலே வர்றதில்லே! வேலை நாளுலே நமக்கோ பல வேலைங்க.
சனிக் கிழமை ஓக்கே! அப்படியும் சில சனிக்கிழமைகளிலே சாயந்திரம் வேற ஏதாவது அத்தியாவசியமா(!) போற விழாங்க
வந்துட்டா, அன்னைக்குக் காலையிலேயே கோயில் விஸிட் ஆயிரும். எப்படியோ வாரத்துலெ ஒரு நாளு கோயில்ன்னு
வச்சிருக்கோம். இந்த வைகுண்ட ஏகாதசியோட வெற்றிகரமா ஒரு வருஷம் முடிஞ்சிடுச்சு!

இந்த வருசம் ஒரு வீடு கட்ட ஆரம்பிச்சோம். முழுசா வேலை இன்னும் முடியலே. இன்னும் கொஞ்சம் போல பாக்கி இருக்கு.
தைமாசம் பிறந்தவுடனே அங்கெ குடிபோயிறலாம்ன்னு நினைச்சுக்கிட்டு இருக்கோம். எல்லாம் நம்ம சொந்த டிஸைன்.ஆறு மாசமா
இந்த வேலையிலே நாள் ஓடிக்கிட்டு இருக்கு!

மகள் இப்போ முழுநேர வேலைக்குப் போறாள். ஒரு ஆஃபீஸ் நிர்வாகம் செய்யறதுக்குத் தெரிஞ்சுக்கிட்டாள். ரொம்பத்
தன்னம்பிக்கையாவும் இருக்காள். கொஞ்சம் பொறுப்பும் வந்திருக்கு! இந்தியச் சமையல்வேற செய்யறாளாம்!

நம்ம வீட்டுப் பூனைங்க ( இதுங்கதான் இந்த வீட்டின் உண்மையான எஜமானர்கள்!) பொதுவா நலமா இருக்காங்க.
பாவம் அதுங்க. வயசும் ஆயிருச்சே! 16 வயசும் 11 வயசுமா இருக்காங்க!

இந்த வருசம்தான் நான்'மரத்தடி'யிலே சேர்ந்தேன். தமிழிலே படிக்கறதுக்கு, இணையத்துலே ஆனந்தவிகடன், குமுதம்
மட்டும்தான் இருக்குன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஒருநாளு தற்செயலா, என்னமோ படிக்கப்போய், எப்படியோ
மரத்தடி.காம்லே நுழைஞ்சிட்டேன். அங்கே பார்த்தா, தமிழிலே கதையும், கட்டுரைகளுமாக் கொட்டிக் கிடக்குது!
ஹைய்யோடா...ன்னு ஆயிருச்சு! அதுலே 'முறுக்கு'ன்னு ஒரு கதையை பிரபு என்றவர் ரொம்ப சிலாகித்து எழுதியிருந்தார்.
உடனே அந்த முறுக்கைத் 'தின்னு'பார்க்கணும்ன்னு தோணிப்போச்சு. அந்தப் பிரபுகிட்டவே கேக்கலாம்ன்னு அவருக்கு ஒரு
மெயிலைத் தட்டிவிட்டேன்.

என்ன ஆச்சரியம்! உடனே அவருகிட்டேயிருந்து பதில் வந்தது,அதைத் தேடி அனுப்பறதா! அதேமாதிரி அந்த முறுக்கை
அனுப்பியும் வச்சார். அப்புறம் நானும் அந்த மரத்தடியிலெ ஐக்கியமாயிட்டேன். ச்சும்மாப் படிக்கமட்டுமே தெரிஞ்சிருந்த எனக்கு,
என்னாலேயும் ஏதோ எழுதமுடியும்ன்ற நம்பிக்கையும் வந்தது மரத்தடியிலேதான்! புத்தருக்கும் ஞானம் வந்தது மரத்தடியிலே
தானாமே! அப்ப மரத்தடிக்குன்னு ஏதோ ஒரு விசேஷ சக்தி இருக்கு!

மெதுமெதுவா எதையோ கிறுக்கி, இப்ப உங்ககிட்டே இந்த கதைகளையெல்லாம் சொல்ற அளவுக்கு வந்துட்டேன்.
அதுமட்டுமா, இந்த வலைப்பதிவுங்களும், மரத்தடியும் எனக்கு நிறைய நண்பர்களையும், தம்பி, தங்கச்சிங்களையும்
கொடுத்திருக்கு! 'துளசியக்கா'ன்னு கூப்பிட்டு வர்ற கடிதங்களைப் பாக்கறப்ப சிலசமயம் என் கண்ணுலே தண்ணி
வந்துரும்! எத்தனை எத்தனை சொந்தங்கள்!

இனி கெட்டது என்னன்னு பார்த்தா..... என்னன்னு சொல்றது? கடல் செஞ்ச அநியாயம்தான் கண்ணுலே நிக்குது.
கெட்டது எனக்குன்னு நடக்கணுமா? நாட்டுகாரங்களுக்கு ஆனது நமக்கு நடந்த மாதிரிதானே? சின்னச் சின்னதா சில
கெட்டதுங்க நடந்திருக்கலாம். ஆனா அது எல்லாத்தையும் தூக்கிச் சாப்பிடறமாதிரி இப்படி ஒரு அழிவு நடந்துருச்சே!