சினிமா என்னும் மாயவலையில் அகப்பட்டுக்கிட்டு மீள முடியாமல்
தவிக்கும் ஜென்மங்களை( அதாவது என்னைப்போல இருக்கறவங்களை) அபயகரம்
நீட்டி ரட்சிக்கறதுக்காக அப்பப்ப சில படங்கள் வந்துரும்!
ரட்சிக்கறதுக்கு எதுக்குப் படம்? ஏன்? முள்ளை முள்ளாலேதான் எடுக்கணுமுன்னு
உங்களுக்குச் சொல்லித்தரணுமாக்கும்?
இவன் யாரோ? செந்தாழம்பூவே! திரு திரு, குருதேவா இப்படின்னு சில படங்கள்!!!!
இதுலே நடிச்சவங்க, இதுங்களோட கதை, பாட்டுன்னு சொல்லி உங்களை இம்சைப்
படுத்தமாட்டேன்!
ஆமாம், எனக்கொரு சந்தேகம். இந்தப் படங்களை எந்த குண்டு தைரியத்துலே
எடுக்கறாங்க?
தியேட்டர்களிலே மெய்யாலுமா ரிலீஸ் ஆகுது?
ஒருவேளை எனக்குன்னே எடுக்கறாங்களோ?
இருக்கலாமோ?
ஹாங்.....
ச்சீச்சீ.... இருக்காதுதானே?
போகட்டும், அட்லீஸ்ட் நான் சொன்னாத்தானெ
இந்தப் பேருகளிலே படங்க வந்த விவரமே உங்களுக்குத்தெரியப்போகுது!!!!!!
Monday, May 30, 2005
மாயவலையில் மாட்டிக்கொண்ட மனிதர்களே!!!!
Posted by துளசி கோபால் at 5/30/2005 02:51:00 PM 15 comments
Saturday, May 28, 2005
சூப்பர் 12!!!!
என்னடா, ஏதோ திமுக மகாநாட்டுக்கு வந்துட்டமான்னு 'சன்'தேகம் வர்ற அளவுக்கு இன்னைக்கு
ஊரு முழுக்க ஒரே கறுப்பும் சிகப்பும் கொடிங்களாவும், பலூன்களாவும் பறந்துக்கிட்டு இருக்கு!
கடைகண்ணி, மாலுங்க, ரோடுங்கன்னு ஒண்ணு விடலை!!!!
சின்னப்புள்ளைங்க கூட முகமெல்லாம் கறுப்பும், சிகப்புமா வரைஞ்சுகிட்டுத் திரியுதுங்க!!! ஊர்லே இருக்கற
எல்லா மோட்டலுங்களும் ஃபுல்!!!! 'இடம் காலி இல்லை'ன்ற போர்டை மாட்டிக்கிட்டு இருக்கு!!!
சுத்துப்பட்டு இருக்கற பதினெட்டுப் பட்டி ஆளுங்களும் வந்து இப்படிக் குவிஞ்சா எப்படி இடம் இருக்கும்?
எல்லாம் இந்த 'ரக்பி'பண்ற அட்டூழியம்தான்!!!!
ஒரு பத்து வருசமா( இதுதான் பத்தாவது வருசம்!) இந்த சூப்பர் 12 நடக்குது! இங்கே பேட்டைக்குப் பேட்டை
இருக்கற 'ரக்பி க்ளப்'ங்க மத்த ஆஸ்தராலியா, தென் ஆப்பிரிக்காவுலே இருக்கற பேட்டைக் 'க்ளப்'ங்களோட
போட்டிக்கு ஆடறது இது!
இதுலே பாருங்க இதுவரை தென் ஆப்பிரிக்கா ஒருதபா கூட ஜெயிக்கலே! நம்ம பக்கத்து நாடான ஆஸ்தராலியா
ரெண்டு தபா ஜெயிச்சிருக்கு! அது 'ப்ரம்பீஸ்'ன்ற பேருலே அங்கே ஒரு பேட்டையில் இருக்கற
க்ளப்( ஐய்யோ, இதுக்குத் தமிழிலே என்னான்னு சொல்றது? யாராவது தார் வாளியைக் கொண்டாந்துறப்
போறாங்க!)
இங்கே நம்ம நியூஸிலாந்துலே, ஆக்லாந்து 'ப்ளூஸ்' மூணு தபா ஜெயிச்சுருச்சு! அத்தை விடுங்க அது வேற
பேட்டை. இன்னைக்கு நடக்குறதைக் கொஞ்சம் விலாவரியாச் சொல்றேன்!
நம்ம ரீஜன் பேரு கேன்டர்பரி. இதுலேதான் நாங்க இருக்கற ஊர் 'கிறைஸ்ட்சர்ச்' இருக்கு! இந்தப் பேட்டையிலே
இருக்கற ரக்பி க்ளப்க்கு பேரு 'க்ரூசேடர்ஸ்'! நம்ம கேன்டர்பரி கலருதான் இந்தக் கறுப்பும் சிகப்பும். ஆச்சா?
இன்னைக்கு ஃபைனல்ஸ்! யாரு கூட? எல்லாம் நம்ம பக்கத்து நாடான ஆஸ்தராலியா கூடத்தான்! அங்கெயிருக்கற
'வாரட்டா க்ளப்' தான் இறுதிப் போட்டியிலே நம்ம கூட(!) மோதுது!!!!
அவுங்கவுங்க இதுவரை எடுத்திருக்கற பாயிண்டைப் பொறுத்துதான் எந்த ஊர்லே இறுதிப் போட்டி நடக்குமுன்னு தீர்மானிக்கறது!
நம்ம 'க்ரூசேடர்ஸ்'தான் இந்தப் பத்துவருசத்திலே நாலு தபா ஜெயிச்சவுங்க!!! இவுங்கதான் இந்த வருசம் நிறைய
பாயிண்ட்ம் எடுத்தவங்க, அதாலே எங்க ஊர்லேதான் இது நடக்குது! இங்கே இருக்கற 'ஜேடு ஸ்டேடியம்' நீங்கெல்லாம்
கிரிக்கெட்டுப் போட்டி நடக்கறப்ப பார்த்திருப்பீங்கதானே!
இன்னைக்குச் சனிக்கிழமையாச்சே! வழக்கமாப் போறமாதிரி சாயந்திரம் கோயிலுக்குப் போனோம். வழியெல்லாம்
வண்டி நடமாட்டம் ஒண்ணுமேயில்லே. என்னவோ ஊரே 'ஜிலோ'ன்னு கிடக்கு! கூட்டமெல்லாம் ஏழரைக்கு
ஆரம்பிக்கப் போற 'கேம்' பாக்கப் போயிருக்கு போல!
ரெண்டு வாரத்துக்கு முன்னேயே டிக்கெட்டு எல்லாம் வித்துப் போச்சு! 'ஸ்கை சானல்' வச்சிருக்கறவங்க நேரடியா
ஒளிபரப்பைப் பாக்கலாம்! எங்களை மாதிரி இருக்க ஏழை பாழைங்களுக்காக தேசிய ஒலிபரப்புலேயும் காட்டுவாங்க.
ஆனா அங்கே 'கேம்' முடிஞ்சாவுட்டுத்தான்! அதுக்கு ராத்திரி ஒம்போது மணி ஆயிரும்! சாப்ட்டுக்கீப்ட்டு நிதானமா
உக்காந்து பாக்கறதுக்கு தோதான நேரம்தான்!
மொதல்லே போற ஜனங்களுக்கு 'ஃபோம் கத்தி'ஒண்ணு தந்துருவாங்கல்லெ. இவுங்கதான் 'க்ரூசேடர்ஸ்'ஆச்சே!
அதை வச்சுக்கிட்டு பசங்க கூட்டத்துலெ கத்திக்கிட்டு, கும்மாளம் போட்டுக்கிட்டு ஆட்டம் காமிக்கும் பாருங்க!
நல்லவேளை , 90 நிமிசத்துலே ஆட்டம் குளோஸ்!!!!
இந்தவாட்டியும் நாங்க ஜெயிச்சுடுவொம்லெ! ஜெயிச்சா அஞ்சு தபா ஆச்சு!!!!
சொல்லி வாய்மூடலே, 'கேம்'பாக்கப்போன மக வாயெல்லாம் வரா!! தெரிஞ்சுபோச்சு, நாங்க ஜெயிச்சுட்டோம்லெ!!!!
ஒருதபா நீங்களும் வந்து பாத்துட்டுச் சொல்லுங்க, இந்த 'ரக்பி' என்ன பாடு படுத்துதுன்னு!!!!
Posted by துளசி கோபால் at 5/28/2005 10:28:00 PM 7 comments
Wednesday, May 25, 2005
டென்ஷன் ஒரே டென்ஷன்!!!
படிப்பும் பழக்கமும்!!! பகுதி 5
இந்த வார்த்தையைச் சொல்லாத ஜனமே உலகத்தில் இருக்காது போல!!! ஒட்டுமொத்தமா எல்லோருமே
ஏதாவது ஒரு வகையான டென்ஷனில் மாட்டிக்கிட்டு முழிக்கிறோமோ? பொழுது விடிஞ்சதும், ஏன் சில சமயம்
கனவுலேகூட ஓயாம ஓடிக்கிட்டு இருக்கமே, அது எல்லாம் எங்கெ கொண்டு விடுது?
இப்பத்தான் எதுக்கெடுத்தாலும் ஒரு 'தெரபி'ன்னு வைத்தியமுறை வந்துருச்சுல்லே! அந்தப் பாதையிலே போய்
நான் ஒரு வழி கண்டு வச்சிருக்கறேன் மனசை கொஞ்சம் ரிலாக்ஸ் செஞ்சுக்கறதுக்கு.( வந்துட்டாடா...வந்துட்டா...)
புத்தகம் பாக்கறது!!!!
(ஐய்யே, இது தெரியாதாங்காட்டியும்? இன்னாத்தான் சொல்ல வர்றே?)
சரி சரி கோவிச்சுக்காதீங்க! நான் சொல்றது புத்தகம் படிக்க இல்லை! ச்சும்மாப் பாக்கறதுக்கு!!!!
நம்ம வீட்டுலே இருக்கற ச்சின்னப்புள்ளிங்களுக்கு எவ்வளவு புத்தகம், வாங்கியோ இல்லை லைப்ரரிலே இருந்து
எடுத்தோக் கொடுத்திருக்கறோம். ஒரு நாளு, அதைப் படிச்சோ இல்லே ஜஸ்ட் புரட்டியோப் பார்த்திருக்கோமா?
அதுலே படங்களுக்கு எவ்வளோ முக்கியத்வம் கொடுத்திருக்காங்கோன்னு பாருங்க! 'இல்லஸ்ட்ரேஷன்'ன்றது
ரொம்பவே பெரிய விஷயம். நல்லா கூர்ந்து கவனிச்சாத்தான் ச்சின்ன சின்ன விஷயத்துக்குக்கூட எவ்வளோ
மெனக்கெட்டுருக்காங்கன்னு புரியும்!
சம்மர் ஸ்டோரி, வின்டர் ஸ்டோரின்னு நாலு காலத்துக்கும் நாலு புத்தகம் 'ஜில் பார்க்ளெம்' எழுதுனது கிடைச்சாப்
பாருங்க. ரொம்பவே பழைய புத்தகம்தான், இல்லேங்கலே. ச்சும்மா ஒரு நாலுவரிதான் கதை! ஆனா அந்தப் படங்க!!!!
ரொம்ப 'டீ டைல்'லா இருக்கும். நாயகன் நாயகிங்க சுண்டெலிங்கதான். ஆனா அதுங்க போட்டிருக்கற உடுப்பும், வீட்டை
வச்சிருக்கற நேர்த்தியும் அப்பப்பா...... ஒரே ஜோர் தான், போங்க!!!!
இப்பக் கொஞ்ச நாளைக்கு முன்னாலே 'வேர் ஈஸ் த வாலி நெள' பார்த்திருப்பீங்கதானே? அது ஒண்ணு கிடைச்சா, எடுத்து
வச்சிக்கிட்டு, உங்க வீட்டுலே இருக்கற பொடிசுங்க கூட உக்காந்து படங்களைப் பாருங்க. கடைசிப் பக்கத்துலே
கேட்டுருக்கற கேள்விங்களுக்கு விடையை கண்டு பிடிங்க. இப்பப் பாருங்க எப்படி நம்ம மனசு லேசாகிப் போகுதுன்னு!!!!
ச்சீச்சீ, இதெல்லாம் சிறுபிள்ளைத்தனம்! நாங்க ரொம்பப் பெரிய விஷயங்கள் இருக்கறதைத்தான் படிப்போம்னு சொல்றிங்களா?
அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இதுன்னு ஒரே ஒருதடவை செஞ்சுதான் பாருங்களேன்!
இப்படித்தான் சில வருஷங்களுக்கு முன்னாலே 3D படங்கள் போட்ட புத்தகம், போஸ்ட் கார்டு, க்ரீட்டிங் கார்டுன்னு
வந்துக்கிட்டு இருந்துச்சுல்லே, அதையும் மூக்குக்கு முன்னாலே வச்சுக்கிட்டுக் கொஞ்சம் கொஞ்சமா தூரக் கொண்டுக்கிட்டுப்
போய் பார்த்திருக்கீங்களா? என்ன படமுன்னு கண்டுபிடிச்சிட்டீங்கன்னா ஒரு சந்தோஷம் வரும்!!!
எல்லாமே ஒரு ரிலாக்ஸேஷந்தான்! இதுலேகூடப் பாருங்க, பொம்பளைங்களுக்குத்தான் 'சட்'ன்னு படம் புரிபட்டுடுது!
ஆண்பிள்ளைங்களுக்குக் கொஞ்சம் கஷ்டம்தானாம்! நம்ம வீட்டுலே எல்லா ஆம்புளைங்களும் சொன்னது இது!
மனசுக்கு கொஞ்சம் புத்துணர்ச்சி கிடைக்க புத்தகம் எவ்வளவு உதவுது பாருங்க!
மறுபடியும் எங்கியோ போயிட்டேன்! முறுக்கு 'தின்னணுமு'ன்னு சொல்லிக்கிட்டிருந்தேன்,இல்லே?
'எழுத்தாளர்கள்' ன்னு சொன்னாலே மனசுக்குள்ளே ரொம்ப மரியாதை! எப்படி இப்படியெல்லாம் எழுதறாங்கன்னு
நினைச்சு மாஞ்சு போவேன். இப்பவும் அப்படித்தான்னு வச்சுக்குங்க! ஒவ்வொருத்தர் எழுதனதைப் படிக்கறப்ப
பிரமிப்புத்தான் கூடிக்கிட்டே போகும்! மாமாவோட நண்பர் ஒரு எழுத்தாளர்ன்னு சொல்லியிருந்தேனே,
அவரோட வீட்டுக்கு அடிக்கடி போய்வருவேன்.அப்ப அவர் அந்த வாரப்பத்திரிக்கையிலே வேலை செஞ்சுக்கிட்டு இருந்தார்.
மாமா மெட்ராஸ் வரும்போது அவர்கூடவே ஒட்டிக்கிட்டுப் போயிருவேன். ஒவ்வொருமுறையும் மாமாவும் நண்பனைப்
பார்க்காமத் திரும்பிப்போகமாட்டார்! கொஞ்ச நாளைக்கு முன்னாலே அவருடைய மரணச் செய்தியை 'நெட்'லேதான்
படிச்சேன்.வருத்தமா இருந்துச்சு! அவர்தான் சண்முக சுந்தரம். 'புனிதன்'ன்ற புனைப்பெயரில் எழுதுனவர்!!!!
பிரபு ராஜதுரையும் அவருடைய தூத்துக்குடி வாழ்க்கையைப் பத்தியெல்லாம் நினைவலைகள் எழுதியிருந்தார்!
படிக்கப் படிக்க ஒரே ஆனந்தமா இருந்தது! அப்புறம் சட்ட நுணுக்கங்கள் பத்தியெல்லாம் அவரோட பதிவுலே
போட்டுக்கிட்டு இருந்தார். ஏனோ, இப்பெல்லாம் அவர் எழுதறதே இல்லை!!!
'டாண்'னு அவருகிட்டே இருந்து பதில் வந்துடுச்சு! முறுக்கைத் தேடிக்கிட்டு இருக்கறதாயும், கிடைச்சவுடனே
அனுப்பறதாயும்!!!! அதே போல தேடிக்கண்டுபிடிச்சு அனுப்பவும் செஞ்சார்! அப்புறம் மெதுவா மரத்தடிக் குழுமத்துலே
சேர்ந்துக்கிட்டேன். கொஞ்சம் கலாய்ச்சாலும் வரவேற்பு இதமா இருந்தது! பெரும்பாலும் நல்ல நட்பான ஆட்களா
இருந்தாங்க. எல்லோரும் எழுதறதைப் படிக்கவும், அது தொடர்பா நம்ம எண்ணத்தைச் சொல்லவும் வாய்ப்பு கிடைச்சது!
வலையிலேயே, தமிழிலே படிக்க இவ்வளோ இருக்குன்றதும் அப்பத்தான் தெரிஞ்சது! 'பொன்னியின் செல்வன்'கூட
இருக்குன்னு தெரிஞ்சதும் பிரமிச்சுப் போயிட்டேன்!
நானும் சிறுபிள்ளைத்தனமா ஏதோ எழுதப் போக, அதை 'மரத்தடி.காம்'லேயும் போட்டு படைப்பாளிகள் லிஸ்ட்லே
பேரும் போட்டுட்டாங்க! சரி, மக்களுக்கெல்லாம் நேரம் சரியில்லேன்னு நினைச்சுக்கிட்டு அப்பப்ப ஏதாவது எழுதிக்கிட்டு
இருந்தேன். ஆனாலும் ரொம்பப் பிடிச்சது 'படிக்கறது'தான்!!! அப்ப மட்டுறுத்தினரா இருந்த நம்ம 'மதி' எழுத ஊக்கம்
கொடுத்ததோட, இந்த ப்ளாக் விஷயத்திலும் தொழில்நுட்ப உதவியெல்லாம் செஞ்சாங்க( செஞ்சுக்கிட்டும் இருக்காங்க!)
வலைப்பூ வந்துக்கிட்டு இருந்த காலம்!! அப்புறம் அதுவே நம்ம காசியின் முயற்சியால் தமிழ்மணமா ஆனதும், வாசிப்பு
அனுபவம்ன்றது தாராளமாக் கிடைக்க ஆரம்பிச்சது!!!!! வலைப்பதிவர்கள், அவுங்க பதிவைப் போட்டவுடனே, தமிழ்மணத்துலே
வந்துர்றதாலே, தேடித்தேடி அலையாம ஒரே இடத்துலே 'ஹாயா' இருந்துக்கிட்டே கஷ்டமில்லாம(!)படிக்க ஏதுவாயிடுச்சு!
அப்படியே 'திண்ணை'யிலே போய் உக்காந்தா, ஏராளமான கதைகள் கொட்டிக்கிடக்குது!!!!! அநேகமா எல்லாத்தையும்
படிச்சுட்டேன்.
ஆனாலும், அச்சுலே இருக்கற புத்தகத்தைப் படிக்க முடியலையேன்ற ஏக்கமும் இருந்துக்கிட்டேதான் இருக்கு. அப்புறம்
'புத்தகவாசம்' ஆரம்பிச்சாங்க! அதுலேயெல்லாம் கலந்துக்க ஆசை இருந்தாலும், புத்தகத்துக்கு எங்கே போறது?
படிச்சுப்பாத்து, அதை விரிவா ஆராய்ஞ்சு எழுதறதைப் படிக்கறதோட திருப்திப் பட்டுக்கலாமுன்னு மனசைத் தேத்திக்கிட்டேன்.
இதுக்கிடையில்தான் சிங்கப்பூர் போறதுக்கும், அங்கே இருக்கற வலைப்பதிவு நண்பர்களைச் சந்திக்கறதுக்கும் ஒரு வாய்ப்பு
கிடைச்சது. அந்த சந்திப்புலேதான், தம்பி ஈழநாதன் ஒரு விவரம் சொன்னார்,அங்கே தமிழ்ப்புத்தகங்கள் (நியாயவிலையில்)
கிடைக்கற இடத்தையும், புத்தகம் வாங்கிக்க எனக்கு உதவி செய்யும்படி நம்ம மதி அவருகிட்டே சொன்னாங்கன்னும்!!!!
சந்தியா பதிப்பகம் நல்ல முறையிலே புத்தகங்களை அச்சிட்டு வெளியிடறாங்கன்னும் தெரிஞ்சுக்கிட்டேன்.
மனசுக்கு ரொம்பவே இதமாபோச்சு! (மதி, உங்களுக்கு நன்றியை எப்படிச் சொல்றது?) அவர் சொன்ன ஏரியா எனக்குப்
பழக்கம்ன்றதாலே நானே போனேன். அங்கே பார்த்தா நிறைய இருக்கு! ஆனா கவிதை புத்தகங்கள்தான் கூடுதல்.
அநேகமா அங்கெ இருக்கறதெல்லாம் சந்தியாப் பதிப்பகம் போட்டதுதான்! நான் இதுவரைக்கும் பார்க்காத அளவில்
இருக்கு. இதுவரை எனக்குப் பழக்கமான புத்தகங்கள் 'வானதிப் பதிப்பகம்' போடறதுதான். ச்சென்னைக்குப் போகும்
சமயங்களிலே 'வானதி'க்குப் போய் பெரியவரையும் பார்த்துட்டு அப்படியே கொஞ்சம் புத்தகங்களையும் வாங்கிக்கிட்டு
வர்றதுன்னு ஒரு பழக்கம் 20 வருசமா இருக்கு! போறகாலத்துக்குப் புண்ணியம் கிடைக்கட்டுமுன்னு கொஞ்சம் ஆன்மீக
சம்பந்தமானதுதான் வாங்கறது( வயசானதுக்கு அறிகுறியோ?)
எனக்கும், தமிழ்நாட்டுக்கும் இடைவெளி அதிகமாகிப் போன இந்தக் காலக் கட்டத்திலே வளர்ச்சி அடைஞ்ச ஏராளமான
விஷயங்களிலே இந்தப் புத்தகப் பதிப்பகங்களும் ஒண்ணு! நாந்தான் கவனிக்கத் தவறி இருக்கேன். கைக்கு இதமா,
வழுவழுப்போட, தரமான காகிதங்களில், நேர்த்தியா அச்சாகி இருக்கு இந்தப் புத்தகங்கள் எல்லாம்!!!!
கொஞ்சநேரம் அந்தக் குவியலிலே தேடுனப்பக் கிடைச்சது 'ரதிப் பெண்கள் திரியும் அங்காடித் தெரு'!!!! இந்தப் பேரே.
பிடுங்கித் தின்றமாதிரி என்னைச் 'சட்'டுன்னு இழுத்துருச்சு! எழுதுனவர் எழில்வரதன்!!!மெதுவாப் பின் அட்டையிலே
பார்த்தா, 'ஆதவன் தீட்சண்யா'ன்றவர் ஒரு மதிப்புரை எழுதியிருக்கார். இவரையுமே நான் படிச்சதில்லை, ஆனா
இந்தப் பேருங்க எல்லாமே கொஞ்சம் புதுமையா இருந்துச்சு! ( இதுவரை புதுமையைக் கண்டுக்காத பழம்பெருச்சாளியா
இருந்திருக்கேன் பாருங்க!!)
இதையும் இன்னும் சில புத்தகங்களையும் வாங்கிக்கிட்டு வந்தவுடனே,'எழில்வரதனை'ப்படிக்க ஆரம்பிச்சேன். இந்தச்
சிறுகதைத் தொகுதியிலே 15 கதைகள் இருக்கு! திறந்தவுடனே வந்தது,'தொலைந்து போன பையனின் புத்த்கப்பை'!!!
இவரோட 'ஸ்டைல்' எனக்குச் சட்டுன்னு பிடிச்சுப் போச்சு! ஒவ்வொண்ணா எல்லாக் கதைகளையும் படிச்சேன்.
நிறைவா இருந்தது!
இப்பக் கொஞ்சநாளா இவரோட கதைகள் ஆ.வி.யிலே வந்துக்கிட்டு இருக்கு. இந்த வாரம்கூட ஒண்ணு வந்துருக்கு. ஆனா
'ரதிப்பெண்கள்.......'லே இருந்த நடையைக் காணொம். வணிகப் பத்திரிக்கையிலே இருக்கணுமுன்னா ஏதாவது சில
விஷயங்களிலே ஒத்துப் போகணுமுன்ற எழுதப்படாத விதி( கண்ணுக்குப் புலப்படாத கைவிலங்கு?) காரணமோ?
இருக்கலாம் ஒருவேளை! ஆனா இந்த வாரம் ஆ.வி.யிலே உமா கல்யாணி எழுதியிருக்கற ஒரு கதை...... கடைசியிலே
மனசைப் பிழிஞ்சுடுச்சு!!!!!
இப்படியாக இன்னும் கிடைக்கறதையெல்லாம் படிச்சுக்கிட்டே இருக்கேன், பலவகையிலும்!!!!!! நீங்களும்
இப்படித்தான்'னு 'பட்சி' சொல்லுது:-)))))
நிறைவு பெற்றது இந்தத் தொடர்!!!!
பொறுமையாகப் படித்து அவ்வப்போது பின்னூட்டங்களாலும், தனிமடல்களாலும் நண்பர்கள் கொடுத்த ஊக்கத்துக்கு
மனமார்ந்த நன்றி!!!!!
Posted by துளசி கோபால் at 5/25/2005 05:18:00 PM 8 comments
Monday, May 23, 2005
ஜனவரி ஒரு ஓர்ம!!!!
சனிக்கிழமையன்னிக்கு ஒரு மலையாளப்படம் கிடைச்சது. மோஹன்லால் நடிச்சதுன்னு சொல்லிக் குடுத்தாங்க.
எப்ப வந்த படம், என்னன்னு ரிவ்யூ இருக்குன்னு பாத்துறலாமுன்னு வலையிலே தேடிக்கிட்டு இருந்தேன்.
அப்பத்தான் தற்செயலா கவனிச்சேன், மோஹன்லாலுக்கு அன்னைக்குப் பிறந்தநாள்ன்றதை!! சரியா 45 வயசாகுது!
நல்லா இருக்கட்டுமுன்னு மனசுலே வாழ்த்திட்டு, இந்தப் படம் வெளிவந்த வருசத்தைப் பார்த்தேன். 1987ன்னு
சொல்லுச்சு! படத்தைப் பார்த்து முடிச்சேன்.
நல்ல படம்தான்! மோஹன்லாலோட நடிப்பு ரொம்ப நல்லா இருந்துச்சு! நடிப்புன்னா, இப்ப வர்றது போல இல்லே!
ரொம்ப சீதா சாதா( ஹிந்தி)! இயல்பான நடிப்பு! போலீஸுக்குப் பயந்த சாதாரண மனிதன். கொடைக்கனலிலே
அனாதரைஸ்டு கைடு!!! வயித்துப் பிழைப்புக்காக கைடு வேலை, கைரேகை பார்க்கற( உண்மையா, ரேகை பார்க்கத்
தெரியாதுன்றது வேற விஷயம்!)மனுஷன்னு இருக்கற அனாதை வாலிபன்.
ச்சின்ன வயசு, ஒல்லியான உருவம், போலீஸ் இன்ஸ்பெக்டரைப் பார்த்துட்டு ஓடி ஒளியற விதம் எல்லாம் நல்லா
இருந்துச்சு! இந்தப் படத்துலே சுரேஷ் கோபி, ஜகதி ஸ்ரீகுமார், ரோஹிணி, கார்த்திகா, லாலு அலெக்ஸ், ஜயபாரதி,
சோமன்னு நிறைய பேர் இருக்காங்க.
'மங்கலஸ்ஸேரி நீலகண்டன்'னு வா தோராம பறயுன்ன டயலாக் எல்லாம் கிடையாது! அவுங்கவுங்க ரோலை
அவுங்கவுங்க சரியாப் பண்ணியிருந்தாங்க!!!! நல்ல படம் பார்த்த திருப்தி!!!!
இதெப்பத்தி ஒரு பதிவு போடலாமான்னு நினைச்சுக்கிட்டு இருந்தப்பத்தான், இன்னைக்குக் காலையிலே நம்ம
முத்துவோட நவீன பாமரர்களைப் பத்தின பதிவும், நம்ம உஷாவோட தோழியர் பதிவுலே நடிக, நடிகையரின்
தலைக்குப் பின்னாலே சுத்தற ஒளிவட்டத்தைப் பத்தியும் படிச்சேன்.
இவுங்க ரெண்டு பேரும் சொன்னது ரொம்பச் சரி!!!! ஒரு நடிகனை, இயல்பா நடிக்க விடாம 'பஞ்ச் டயலாகும்,
கொஞ்சம்கூட உண்மைக்குப் பக்கம் வந்துராத சண்டைகளுமா (கிராஃபிக் உபயத்தோடு நடக்கற) இருக்கற
'சதிக் குழி'க்குள்ளே தள்ளிவிடறது ஜனங்களா? எதுக்கெடுத்தாலும் மக்கள் விரும்பறாங்கன்னு சொல்றாங்களே,
நிஜமாவே மக்கள் நடிகனைப் பார்த்து, 'நீங்க இந்தமாதிரி யதார்த்தமே இல்லாத சண்டைக் காட்சிகளிலே பறந்து
பறந்து அடிக்கணும், எல்லோருக்கும் அடி விழணுமே தவிர உங்கமேலே ஒரு துரும்பு விழுந்த அடையாளமே
இருக்கக்கூடாது'ன்னு சொல்றாங்களா? அப்படிச் சொல்ற மக்களை இதுவரை யாராவது பார்த்திருக்கீங்களா?
'காதல்'ன்னு ஒரு படம் நல்ல படம்னு பலரும் பாராட்டி எழுதுனாங்களே, எதனாலே? யதார்த்தமான கதை,
நடிப்புன்றதாலேதானே?
போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு 'பாடல் ஆசிரியர்கள்(!) கூட்டம்' ஒண்ணு கதைக்குச் சம்பந்தமே இல்லாம
இந்திரன், சந்திரன்னு புகழ்ந்து தள்ளி எழுதற பாட்டுங்க வேற! 'தனி மனுஷத் துதி'ங்கதான் பல பாடல்களும்!
நல்லா நடிக்கிற நடிகர்களை, இப்படித் தேவையில்லாம ஒரு 'பந்தா'க்குள்ளே நுழைச்சுப் படுகுழியிலே தள்ளிவிடற
வசன கர்த்தாக்கள்(!), கொஞ்சம்கூட இந்த சதி வேலைகளைப் பத்தித் தெரிஞ்சுக்காமல் இதுலேயே மூழ்கிப் போய்,
நிஜமாவே தனக்கு இந்த அபூர்வ சக்திகள்(!) இருக்கறதாகக் கற்பனை செஞ்சுக்கற நடிகர்கள்ன்னு ஒண்ணு மாத்தி
ஒண்ணுன்னு போய்கிட்டே இருக்கே, இதுக்கெல்லாம் என்னதான் முடிவு?
இந்த அழகுலே சக நடிகர்களை எதிரியா நினைச்சுக்கிட்டு, அவுங்களுக்கு படத்தோட டயலாக்லேயே வெல்லு விளி
வேற! போதுண்டா சாமி!!!!!
Posted by துளசி கோபால் at 5/23/2005 03:03:00 PM 3 comments
Friday, May 20, 2005
விதி!!!
எல்லாம் விதின்னு சொல்றதைத்தவிர வேற என்ன சொல்றது?
ரெண்டு மூணு நாளுக்கு முன்னாலே இங்கே ஒரு 'ரோடு ஆக்ஸிடெண்ட்' நடந்துடுச்சுன்னும்,
அதுலே சில இந்தியர்கள் இறந்துட்டாங்கன்னும் டி.வி.யிலே சொன்னாங்க. அப்பவே மனசுக்கு
வருத்தமா இருந்துச்சு.
இன்னைக்குப் பேப்பரிலேதான் முழுவிவரமும் கிடைச்சது.
பெங்களூரிலிருந்து சுற்றுலா வந்த ஒரு குடும்பம்தான் இந்த விபத்திலே இறந்தவுங்க.
குடும்பத்தலைவர் பெயர் திருமூர்த்தி வயது 50
அவருடைய மனைவி சுசித்ரா வயது 42
மகள் ஊர்மிளா வயது 20
ரெண்டாவது மகள் அஹல்யா வயது 18
இவுங்களிலே அஹல்யா மட்டும் தீவிர சிகிச்சைப் பிரிவுலே அனுமதிக்கப் பட்டிருக்காங்கன்னும்
மிகவும் கவலைகிடமான நிலை என்றும் உள்ளது. மற்றவர்கள் விபத்து நடந்தவுடனேயே மரணம்
அடைந்தனராம். மொத்தம் 7 பேர் மரணம்.
ஆக்லாந்திலிருந்து ரோதரூவா என்னும் இடத்திற்கு 'வெந்நீர் ஊற்று சுற்றுலா' போகும்போது
இந்த விபத்து நடந்ததாம்! 'இது ஜஸ்ட் ஒரு டே ட்ரிப்'
பாவம். விதி எவ்வளவு கொடுமையா இருக்கு பாருங்க!!!
இறந்தவர்களின் ஆத்ம சாந்திக்கும், அஹல்யா பூரண குணம் பெறவும் பிரார்த்திக்கின்றோம்.
Posted by துளசி கோபால் at 5/20/2005 10:24:00 AM 5 comments
Thursday, May 19, 2005
நீங்க நல்லா இருக்கோணும், நாடு முன்னேற!!!!
இன்னைக்குப் பேப்பர் முழுசும் ப்ளஸ் 2 தேர்வில் ஜயிச்சவங்களைப்பத்திதான்!!!
வழக்கம்போல மாணவிகள் அதிகமாக வெற்றி அடைஞ்சிருக்காங்க. நிஜமாவே மனசுக்கு
சந்தோஷமா இருக்கு!!!!
ஆனா, ஒரே ஒரு சந்தேகம் இந்தப் பாழாப் போன மனசுக்கு!
முதலிடத்துலே வந்தவுங்களைப் பேட்டி எடுக்கறப்ப அவுங்க எல்லோருமே 'வழக்கமா'
சொல்றது, 'டாக்டராகி மக்களுக்குச் சேவை செய்ய விருப்பம்'!!!!!
நல்லது!!! தப்பேயில்லை!!!
ஆனா நிஜமாவே எத்தனைபேர் இதைச் செய்யறாங்க?
ஒருவேளை, அழகிப் போட்டியிலே நம்ம இந்திய அழகிங்க சொல்றாங்களே, 'மதர் தெரேஸா'
மாதிரி சேவை செய்ய விருப்பம்னு அந்த மாதிரியோ?
சரி,எதா இருந்தாலும் வெற்றிபெற்ற நம்ம மாணவ,மாணவிகளுக்கு வாழ்த்துக்கள்!!!!!
Posted by துளசி கோபால் at 5/19/2005 02:27:00 PM 6 comments
ச்சின்னப்பசங்க !!!!!!
படிப்பும் பழக்கமும்!!!! பகுதி 4
காரியமும் ஆகணும், காசும் ரொம்பச் செலவாகக்கூடாது!!!! இதைத்தான்
'கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை'ன்னு சொல்றதோ? எல்லாம் இல்லாத குறைதான்!
மத்த செலவெல்லாம் கூடிப்போனதாலே எப்படிடா 'சுஷ்கம்' பண்ணலாமுன்னு யோசனை!
தேவைன்னு வந்துட்டாலே மனுஷ மனசு உபாயங்களைத் தேடுது பார்த்தீங்களா? எங்க இவர்
வேலை செய்யற இடத்துலே மூணு தமிழ்க்காரங்க இருக்காங்க. அவங்களோட 'கலந்தாலோசனை(!)'
செஞ்சுட்டு, தமிழ்ப் புத்தகங்களை வாங்கற செலவை மூணாப் பங்கு போடறதுன்னு முடிவாச்சு!
பழம் நழுவிப் பாலிலே விழுந்தாச்சுன்னு சொல்றமாதிரி, அந்த மூணுலே ஒருத்தர் வீடு, நம்ம 'ராஸ்தாப்பெட்'லே!
அதனாலே அவரே வாங்கிட்டுவர்ற பொறுப்பையும் ஏத்துக்கிட்டார்!!! ஒவ்வொரு நாளும் ஒவ்வொண்ணுன்னு
படிக்கக் கிடைச்சது!!!! இப்படியே ஏறக்குறைய அஞ்சு வருசம் ஓடுச்சு!
பொழுது போக்கா அப்பப்ப வீடு மாறிக்கிட்டு இருந்தோம்:-) ஒரு தடவை எங்க பக்கத்து போர்ஷன்காரர் ஒரு
பிரபல ஹோட்டலே வேலை செய்யறவரா இருந்தார். அங்கெ வந்து தங்கறவங்கெல்லாம் வெளிநாட்டுக்காரங்க!
அவுங்க பிள்ளைங்களுக்காக இங்கிலீஷ்லே காமிக்ஸ் அங்கெ இருக்கற புத்தகக்கடைக்கு வரும். அவர் 'டின் டின்'
காமிக்ஸ் வீட்டுக்குக் கொண்டு வருவார். அந்த ஒசியிலே எனக்கும் ஒரு நாள் முறை! 'பிச்சையெடுக்குதாம் பெருமாளு,
அத்தைப் பிடுங்குதாம் அனுமாரு!!!!!! ஆமாம், அது ஏன் நிறைய வெளிநாட்டுக்காரங்க பூனாவுக்கு வர்றாங்கன்னு சொல்லவா?
அங்கேதானெ 'ரஜ்னீஷ் ஆஷ்ரம்' இருக்கு!!!!!
அப்புறம் நாங்க ஒரு வெளிநாட்டுக்குப் போற வாய்ப்பு வந்தது, போகவும் செஞ்சோம். இந்தியா போலவே
இருக்கற இந்தியா இல்லாத நாடு!!! 'ஃபிஜித் தீவு'ன்னு பேரு!!! அங்கே இருக்கற இந்தியர்களுக்கும், இந்தியாவுக்கும்
இருக்கற முக்கியத் தொடர்பே சினிமாதான்!!! அதனாலே சினிமாப் பத்திரிக்கைகள் 'ஸ்டார் டஸ்ட்,ஸ்டார் & ஸ்டைல்'
இப்படித்தான் அங்கே கிடைக்கும்.
தபால் மூலமா ஆ.வியையும், குமுதத்தையும் வாங்க ஆரம்பிச்சோம். இது ஒரு பக்கம் இருக்க, பக்கத்து வீட்டுப்
பொண்ணு கையிலே இருந்த புத்தகம் என்னவா இருக்குமுன்னு பார்க்கப் போய் எனக்கு ஒரு புது அனுபவம்
கிடைச்சது!
நான் ச்சின்னப் புள்ளையா இருந்தப்ப, 'குழந்தைகளுக்கான கதைப்புத்தகங்கள் இங்கிலீஷ்'லேயும் இருக்குமுன்ற
விவரம் கூட இல்லை!!!!! இருந்த ஊருங்களும், வளர்ந்த காலக்கட்டங்களும் அப்படி!!!! மெட்ராஸ்லெ வந்து
இருக்கத் தொடங்கியதும் கொஞ்சம் 'விவரம்' வந்து, அண்ணன் கொண்டு வர்ற, 'சேஸ்' புத்தகங்கள் அப்பப்பப்
படிக்கறதுதான்! மத்தபடி ரொம்பப் படிச்சதில்லை! அதிலும் 'காதல் கதைகள்' எல்லாம் கண்ணுலேகூடப்
பார்த்ததில்லை! ரொம்பக் கட்டுப்பாடாத்தான் இருந்திருக்காங்க!(ஆனா என்னோடது காதல் கல்யாணம்!!!!)
இப்பப் பக்கத்து வீட்டுப் பொண்ணு( ஏழாவது படிக்கற பொண்ணுங்க!!!)கூடவே போய் அந்த ஊர் 'டவுன் கவுன்சில் லைப்ரரி'லே
சேர்ந்துக்கிட்டேன். அந்த ஊர்லே மொத்த ஜனமே ஒரு அஞ்சாயிரம் இருந்தா அதிகம்!!!! அதுவும் லைப்ரரியிலே
ஸ்கூல் பசங்க கொஞ்சம்பேர் மாத்திரமே இதுவரைக்கும் மெம்பருங்களாம்! பெரியவுங்க யாருமே மறந்துங்கூட அங்கே போயிர
மாட்டாங்களாம்!!!! அதனாலே அங்கே பேருக்குன்னு ஒரு லைப்ரேரியன் இருந்துக்கிட்டு, அவரே மத்த கவுன்சில்
க்ளார்க் வேலையும் பார்த்துக்கிட்டு இருந்தார். எனக்கு அங்கே ஏகப்பட்ட வரவேற்பு!!!!
பெருசா செலக்ஷன் ஒண்ணும் இல்லை, ஆனாலும் பரவாயில்லாம இருந்துச்சு! 'மில்ஸ் & பூன்ஸ்' கதைகள் எக்கச்
சக்கம். ச்சும்மா ஒண்ணு ரெண்டு எடுத்துப் படிச்சுப் பார்த்தேன். சரிப்பட்டு வரலை! அதென்னமோ 'காதல் கதைகள்,
ஒருதருக்காக ஒருத்தர் உருகறது இத்யாதிகள் எல்லாம் சுவாரசியமாப் படலை. ஆனா, பசங்க புத்தகங்கள் ரொம்பவே
பிடிச்சுப் போச்சு! 'எனிட் ப்ளைடன்' கதைகளைத் தேடித்தேடிப் படிச்சேன்!!!! ஃபேமஸ் ஃபைவ், ஃபார் அவே ட்ரீ, மாலரி
டவர்ஸ் எல்லாம் மனசுலே இடம் பிடிச்சுக்கிச்சு!!!! ஆஸ்தராலியா விமன்ஸ் வீக்லி மேகஸின் எல்லாம் வேற அப்பப்ப வாங்கிக்கறதுதான்!
நல்ல கனமான பத்திரிக்கை! தரமான காகிதம், நல்ல ப்ரிண்ட்! அவ்வளவுதான் சொல்ல முடியும்! உள்ளே, பாதிக்குமேலே
'மேக்கப்' சமாச்சார விளம்பரங்கள், கால் வாசி சமையல் குறிப்புகள், கொஞ்சமே கொஞ்சம் மத்த லோகல் ஆளுங்களைப்
பத்தி, பாக்கியெல்லாம் ஹாலிவுட் சினிமா ஆளுங்களைப் பத்தினவிவரங்கள்(!)
ஒரு ஆறு வருஷம் அங்கே குப்பை கொட்டிட்டு, இங்கே நியூஸிலாந்து வந்து சேர்ந்தோம்!!!! ஒவ்வொரு ஷாப்பிங்
மால்களிலும் குறைஞ்சது மூணு புத்தகக் கடைகள்!!!!! சிட்டிக் கவுன்சில் லைப்ரரியிலே ஃப்ரீ மெம்பர்ஷிப்!!!!
அப்பெல்லாம் அன் லிமிட்டெட் வேற!!!! எவ்வளவு வேணுமுன்னாலும் வாரிக்கிட்டு வரலாம்!!!! என்ன ஒண்ணு, எல்லாமே
இங்கிலீஷ்தான்!!!! தமிழுக்காக அதே ஆ.வியையும், குமுதத்தையும் விடாம தபாலிலெ வாங்கிக்கிட்டு இருந்தோம்.
நாட்டு நடப்பைக் கொஞ்சமாவது தெரிஞ்சுக்கணும், இல்லையா?
அஞ்சாறு வருஷம் ஆச்சு. குழந்தைகள் லைப்ரரி ஒண்ணுலே வேலை செய்ய ஆரம்பிச்சேன். கொஞ்ச நாளிலேயே
அதுக்குப் புத்தகம் வாங்கற பொறுப்பும் வந்துச்சு! கண்டதையும் வாங்காம, நல்ல தரமானதா அந்தந்த வயசுக்கு
ஏத்ததா வாங்க ஆரம்பிச்சேன். எப்பவும் படிக்கறதுக்கு ஏராளமான சப்ளை!!!!!! பன்னெண்டு வருஷம் முடிஞ்சு
இப்பப் பதிமூணு நடக்குது. ஆனா இந்த வருஷம் நவம்பர்லே இருந்து இந்த வேலை இருக்காது! எங்க லைப்ரரியை
மூடப்போறோம்(-: நினைச்சா வருத்தமா இருக்குல்லே! என்ன செய்யறது? எங்க கட்டிடத்துக்குப் பக்கத்திலேயே
நம்ம சிட்டிக் கவுன்சிலோட லைப்ரரி ஒண்ணு வரப்போகுது! அது ஒரு பெரிய ஆலமரம்! அதுக்குக்கீழே ச்சின்னச்செடி
உயிர் வாழமுடியுமா?
ஒரு பத்து வருசத்துக்கு முன்னாலேதான் நம்ம வீட்டுக்குன்னு தனியா கணி( இப்படித்தான் சொல்லணுமாமே! சரியா?)
வந்து சேர்ந்துச்சு! கனியைக் கண்ட குரங்கு போல ஆனேன்! அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தினப் பத்திரிக்கையை
தமிழிலேயே படிக்க முடிஞ்சது! 'மயிலைஃபாண்ட்' திரு. கல்யாணசுந்தரம் அவர்கள் மூலம் கிடைச்சது! தட்டுத்தடுமாறி
தமிழ் தட்டச்சு செய்து, ஊருக்குக் கடிதம் அனுப்ப ஆரம்பிச்சேன்.
வாங்கிகிட்டு இருந்த ஆ.வியையும் நிறுத்திட்டோம். ஆனா குமுதம் மட்டும் வந்துக்கிட்டு இருந்துச்சு! இதுக்கிடையிலே
இங்கே ஒரு தமிழ்ச்சங்கம் ஆரம்பிச்சாச்சு! குமுதமும் நம்ம சங்கத்துக்காகன்னு ஆகிப் போச்சு! திடீர்னு அந்த வருசம்
சந்தாத் தொகை கிட்டத்தட்ட ரெண்டு மடங்காயிடுச்சு! ஏன்னா எங்க $ ரொம்பவே பலஹீனமாயிடுச்சுல்லே! குமுதமும்
கொஞ்சம் கொஞ்சமா மாறிக்கிட்டே வந்து இப்ப முழுக்க முழுக்க சினிமாவும் அரசியலும்னு ஆகிப் போனதாலே
இவ்வளவு காசு, அதுவும் தமிழ்ச் சங்கத்தோட காசை வீண்செலவு செய்யணுமான்னு இருந்துச்சு. நிறுத்திட்டோம்!!!
வலையிலேயே குமுதம், விகடன் பார்க்க/படிக்க முடிஞ்சது! எல்லாம் கிளைவிட்டு பரவியிருந்துச்சு!! ஆனா உஷா
சொன்னதுபோல ரெண்டு பத்திரிக்கைக்கும் வித்தியாசம் ரொம்ப இல்லை. ஒரே வித்தியாசம் வேற வேற எடிட்டர்!!!!
( அப்படித்தானே அதுலே போட்டிருக்கு?)
ஒண்ணுலே பக்தின்னா ஒண்ணுலே சக்தி!
இதுலே அவள் அதுலே சிநேகிதி!
ரிப்போர்ட்டர் இதுலே ஜூனியர் விகடன் அதுலே!
இதுக்கு ஒரு டாட் காம் அதுக்கும் ஒண்ணு!
ஜோஸியம், வாஸ்து, பரிகாரம்ன்னு ஒவ்வொண்ணும் ஜனங்களை ஒரு வட்டத்துக்குள்ளேயே வச்சிருக்குது!!!!
எங்க இவர் சிங்கப்பூர் வழியா வர்றப்பல்லாம் சில தமிழ், மலையாளப் பத்திரிக்கைகளை வாங்கிக்கிட்டு வருவார்.
ஒரு நாளு ஏதோ ஒரு விஷயத்தைத் தேடுனப்ப அப்படி இப்படி சுத்தி,'மரத்தடி'க்குப் போய்ச் சேர்ந்தேன். அங்கெ
அப்ப பிரபு ராஜதுரை என்றவர் 'முறுக்கு' ன்றதை ரொம்பவெ சிலாகிச்சு எழுதியிருந்தாரா, அதைப் படிச்சவுடனே
அந்த முறுக்கை அப்பவே 'தின்னணும்'னு தோணிப்போச்சு! தேடிப் பாத்தேன். கிடைக்கலை! சரி, 'முறுக்கு நல்லா
இருக்குன்னு சொன்னீங்கல்லே, நீங்களே வாங்கித்தாங்க'ன்னு அவருக்கே ஒரு மெயிலைத் தட்டிவிட்டேன்!
இன்னும் வரும்!!!
Posted by துளசி கோபால் at 5/19/2005 01:45:00 PM 1 comments
Wednesday, May 18, 2005
கத்திக்குத் தப்பிச்சேன்!!!!!
போனவாரம் ஒரு எம்.ஆர்.ஐ. போய்வந்ததை எழுதுனவுடனே நிறைய நண்பர்கள் பின்னூட்டத்திலும், தனிமடலிலும்
எழுதுனது மனசுக்குத் திருப்தியா இருந்துச்சு, 'அட, நமக்குக்கூட கரிசனம் காட்ட ஆள் இருக்கே'ன்னு!!!!!
உள்ளூர் நண்பர்கள் இதைப் படிச்சிட்டு நேரிலும் வந்து விசாரித்தார்கள்!!! இது நல்லா இருந்துச்சு!!!!
ரெண்டு நாளுக்கு முன்னே அது சம்பந்தமான விசேஷ மருத்துவரைப் போய்ப் பார்த்தோம். ரிஸல்ட் வந்துருச்சாம்.
'டி12 லே கொஞ்சம் எலும்பு சதஞ்சு'போய் இருக்கு! மத்தபடி டிஸ்க் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. உங்களுக்கு
ஆபரெஷன் தேவைப்படாது'ன்னு சொல்லிட்டார். 'ஆனா வலி இருக்கும். அது கொஞ்சம் கொஞ்சமாத்தான் போகும்.
அதுவரை வலிநிவாரணி எடுத்துக்கணுமு'ன்னும் சொன்னார்.
கொஞ்ச நாளைக்கு என் பதிவுத் தொல்லைகள் இல்லாம இருக்கலாமுன்னு யாராவது நினைச்சுக்கிட்டு இருந்திருந்தால்
அதுக்கு ச்சான்ஸேயில்லை!!!!! விடாது கருப்பு!!!!
எங்க இவருக்குத்தான் ரொம்ப பயமா இருந்திருக்கும் போலிருக்கு. 'வீல்சேர்'லே என்னை வச்சுத் தள்ளிக்கிட்டுப்
போறமாதிரி கனவெல்லாம் வந்துச்சாம்!!!!( கேக்க மறந்துட்டேன், சும்மாத் தள்ளிட்டுப் போனாரா இல்லை
'சுமைதாங்கி சாய்ந்தால்......'ன்னு பாட்டெல்லாம் பாடிக்கிட்டே போனாரான்னு!!)
அன்போடு விசாரித்த நல்ல உள்ளங்களுக்கு மீண்டும் நன்றி!!!!!!
அடுத்த பதிவு போட இதோ வந்துக்கிட்டே இருக்கேன்!!!
என்றும் அன்புடன்,
துளசி.
Posted by துளசி கோபால் at 5/18/2005 12:18:00 PM 3 comments
Friday, May 13, 2005
மலையாளக் கரையோரம் தமிழ் படிக்கும் குருவி!!!!
படிப்பும் பழக்கமும்!!! பகுதி 3
தோட்ட கூராக்கும், தொண்டகாயும், கோங்கூராவும் சாப்புட்டது போதுமுன்னு திரும்ப
மெட்ராஸுக்கே வந்துட்டோம். அப்புறம் கொஞ்ச காலம் பெங்களுருன்னு போச்சு.
நம்ம வாசிப்புக்கு பங்கம் ஏதும் வரலை. அதுபாட்டுக்கு அதுன்னு போய்க்கிட்டே இருந்துச்சு.
மறுபடி ஒரு இடம் மாறவேண்டியதாப் போச்சு. மலையாளக் கரையோரம் ஒதுங்கினோம்!
அங்கே நமக்குப் பேப்பர், அதாங்க 'த ஹிண்டு' போடறவர் பாலக்காட்டைச் சேர்ந்தவர்.
அவர் மூலமா குமுதம், விகடனுக்கு ஏற்பாடு செஞ்சுக்கிட்டோம்.
'த ஹிண்டு'வை மட்டும் எங்கெ போனாலும் விடறதில்லை! இப்ப வேலை செஞ்சுக்கிட்டு
இருந்தாலுமே வேலை தேடும் படலத்தை விடாம இருந்தோம்!
நானு அப்படி இப்படின்னு மலையாளம் படிக்கக் கத்துக்கிட்டேன்! தினமும் காலையிலே
'மாத்ருபூமி' பத்திரிக்கை படிக்கற லெவலுக்கு வந்துட்டேன். கீழே வீட்டு ஓனர் வாங்குவாங்க!
சில தமிழ் எழுத்துக்களுக்கும் மலையாள எழுத்துக்களுக்கும் ஒற்றுமை இருக்குதுல்லே! அதனாலே
கொஞ்சம் மெனக்கெட்டாக் கத்துக்கலாம்! ஆனா இந்தப் பத்திரிக்கையிலே முக்காலே மூணுவீசம்
அரசியல்தான்! சரி எதோ ஒண்ணு! நமக்கு அதா முக்கியம்? வாசிப்புதானே நம்ம கோல்!
வேற வீடு மாத்தி, பக்கத்து ஊருக்குப் போனோம். அங்கே பேப்பர் போடற பையன் நமக்கு 'நண்பன்'
ஆயிட்டான்.ரொம்பச் சின்னபையன்! ஒரு பன்னெண்டுவயசிருந்தா அதிகம்!!
குழந்தைகள் பத்திரிக்கைஒண்ணு 'பால ரெமா'ன்னு வரும். அதை அவன்கிட்டே 'ஓசி'
அடிக்க ஆரம்பிச்சேன். படிச்சுட்டு அலுங்காமக் குலுங்காம மறுநாள் கொடுத்துருவேன்! 'தமிழ்க்காரி'
மலையாளம் வாசிக்கறதைப் பார்த்து அவனுக்கு 'வளரே இஷ்டம் தோணிப்போயி'
அப்புறம் அந்தப் பையனே லைப்ரரியிலே இருந்து எடுத்தேன்னு சொல்லி கொஞ்சம் சின்ன சைஸுலே
இருக்கற நாவல்களைக் கொண்டுவந்து தந்தான்! அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா பெரிய பெரிய
புத்தகங்களாச்சு! ஆனா பாருங்க, அந்த 'லைப்ரரி' எங்கே இருக்குன்னுகூட நான் கேட்டுத் தெரிஞ்சுக்கலை!
ஏனோ, கேக்கணுமுன்னு தோணலை! அப்பம் தின்னாப் போதும். குழி எத்தனைன்னு எண்ணற வேலை
என்னாத்துக்கு? புத்தகம் கிடைச்சாச் சரின்னு இருந்துருக்கேன், பாருங்க!!!
பொழுது போக்குக்கு புத்தகமும் ரேடியொவும்தான் அப்ப! விஞ்ஞான முன்னேற்றமுல்லாம் ரொம்ப இல்லை!
அப்படி ஏதாவது வந்தாலும் நமக்கும் அதுக்கும் தொலைதூஊஊஊஊஊஊஊஊஊஊரம்!!!!
காலச்சக்கரம் நம்மைச் சுழட்டி அடிச்சுச்சு வேற இடத்துக்கு! பூனாவுக்கு வந்து சேர்ந்தோம். நல்லவேளை,
அங்கே தமிழ் ஆட்கள் நிறைய இருந்தாங்க. 'ராஸ்தாப்பெட்'ன்ற இடத்துலே தமிழ் வாரப்பத்திரிக்கை கிடச்சுக்கிட்டு
இருந்துச்சு! ஆனாலும் அந்த ஊருக்குப் போனப்ப வாங்குன மொதப் புத்தகமே '30 நாளிலே ஹிந்தி கற்றுக்கொள்வது
எப்படி?"'ன்றதுதான். ஆனா ஹிந்தி-இங்கிலிஷ்! சரி அதுவும் வேணுமுல்லெ. பாஷை தெரிஞ்சுக்கறது முக்கியமாச்சே!
ஆனாப் பாருங்க பேசமட்டும் தெரிஞ்சுக்கிட்டேனே தவிர ஹிந்தியைப் படிக்கத்தெரிஞ்சுக்கறது அவ்வளவு முக்கியமாத்
தோணலை! அதுக்குன்னு நான் ' ஹிந்தியிலே கைநாட்டு'ன்னு நினைச்சுக்காதீங்க! நான் பள்ளிகூடத்துலேயெ ஹிந்தி
பாடம் படிச்ச ஆளு!! அந்த ஹிந்தியெல்லாம் ஒரு காசுக்கும் ஒதவாதுன்னு இங்கெ வந்தப்பத்தான் தெரிஞ்சது.
ஏதோ எழுத்துக்கூட்டித் தப்பும் தவறுமாப் படிச்சுருவேன்.
இப்படித்தான், ஹைஸ்கூல் கடைசிவருசப் பரிட்சையிலே 'துமாரே அத்யந்த் கே பாரே மே பிதாஜி கோ ச்சிட்டி லிகோ'ன்னு
ஒரு கேள்வி வந்துச்சு! இதென்ன பிரமாதம்? எழுதுனாப் போச்சு!
மொதல்லே ஃப்ரம் அட்ரஸ் எழுதியாச்சு. அப்பாவோட அட்ரஸ் 'டு' வும் எழுதியாச்சு! எல்லா அட்ரஸும் எதாவது
நம்பர் போட்டுட்டு, 'மெயின் ரோடு'ன்னு எழுதறதுதான் வழக்கம். எல்லா ஊர்லேயும் ஒரு மெயின் ரோடு இருக்கும்லெ!
இப்பத்தான் வருது ஒரு கண்டம்! அதான் அந்த வார்த்தை 'அத்யந்த்' ! அப்படின்னா என்னன்னே தெரியலை! க்ளாஸ்லே
அவ்வளவு அழகாக் கவனிச்சுப் படிச்சிருக்கேன்! ஹிந்திதானேன்னு ஒரு துச்சம்! அதுவும் ஆப்ஷனல் சப்ஜெக்ட் ஆச்சே!
யாரையாவது கேக்கலாமுன்னா உக்காந்திருக்கர இடம் எங்கே? பரிட்சைஹால்! மூச்சு விட முடியுமா?
கடவுள் மேலே பாரத்தைப் போட்டுட்டு( பாட்டி சொல்ற மாதிரி கிருஷ்ணார்ப்பணம்!) சரசரன்னு எழுத ஆரம்பிச்சேன்,
' பிதாஜி, அத்யந்த் கே பாரே மே முஜே குச் நஹி மாலும்'!!!! எப்படியோ நாப்பது மார்க் வாங்கிப் ஃபெயிலாகாமத்
தப்பிச்சேன். சரி, அதை விடுங்க.
ஆமாம், உங்களுக்கு அந்த 'அத்யந்த்'க்கு அர்த்தம் தெரியுமா? நானே ஹாலைவிட்டு வெளியெ வந்தாவுட்டு, அங்கே
எங்களுக்காகக் காத்துக்கிட்டிருந்த ஹிந்தி டீச்சர் கிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டேன்.
'அத்யந்த்' ன்னா படிப்பு, கல்வியாம்! இப்ப நினைச்சுப் பாருங்க 'அப்பாவுக்கு என்னன்னு எழுதியிருக்கேன்?'
Posted by துளசி கோபால் at 5/13/2005 02:15:00 PM 7 comments
Wednesday, May 11, 2005
பெங்குவின் ஃப்ரம் ஓமரு!!!!!!
நம்ம செல்வராஜ் மெல்போர்ன் பெங்குவின் பத்தி எழுதியிருந்தாரா, அதுகூட ஒரு சின்னக் கொசுவத்திச் சுருளை ஏத்திடுச்சு:-)
இங்கே நியூஸியிலே தெற்குத்தீவிலே ஹைவே # 1 ல் போனா வருவது ஓமரு என்ணும் ஊர். இப்ப இங்கே போட்டுருக்கறது
இ-சங்கமத்தில் வந்த 'நியூஸிலாந்திலிருந்து ஒரு நியூஸ்' என்னும் பகுதியிலிருந்து!
இந்த நாட்டைப் பத்தி எனக்குத்தெரிஞ்ச அளவில் எழுதியிருந்தேன்.
அடுத்து வருவது 'ஓமரு' என்னும் ஊர். இங்கே 'பெங்குவின்' பறவைகளைப் பார்க்கலாம், அதன் இயற்கைச் சூழலில்! காலையில் இரை தேடி,
இவை கடலுக்குள் சென்றுவிடுமாம். பிறகு அங்கேயே பகல் முழுதும் இருந்துவிட்டு, மாலையில் கொஞ்சம் இருட்டின பிறகுதான் இவைகள்
கரைக்குத் திரும்பி வருமாம். இந்த 'பெங்குவின் பறவை காலனி' யில் செடி, புதர்களுக்கு நடுவேயெல்லாம், கூடு ( வீடு) செய்து
வைத்துள்ளனர்.
கான்சர்வேஷன்( இதற்குத் தமிழில் என்ன?) துறையினர் இந்தப்பகுதியை, அதன் இயற்கைத் தன்மை மாறாமல் பாதுகாத்து வருகின்றனர்.
மாலை, இருட்டுவதற்கு முன், நாம் அங்கே போய், இவர்கள் கட்டிவைத்துள்ள பார்வையாளர் பகுதியில் உட்கார்ந்துவிட வேண்டும். அங்கிருந்து
நாம் கடல் தண்ணீரைப் பார்க்கமுடியும். முதலிலேயே சொல்லிவிடுவார்கள் நாம் என்னென்ன செய்யக்கூடாது என்று!
பேசக் கூடாது( இதுதான் ரொம்பக் கஷ்டம்..) டார்ச் லைட்டோ, ஃப்ளாஷ் உள்ள கேமெராவோ உபயோகிக்கக்கூடாது. எழுந்து நடக்கக்கூடாது.
அசையாமல் ஓரிடத்தில் அமர்ந்து இருக்க வேண்டும்.
நாமெல்லாம், தண்ணீரையே பார்த்துக் கொண்டிருப்போம். நமக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், பாதுகாவலருக்கு எப்படியோ தெரிந்துவிடும்.
நமக்கு எச்சரிக்கை விடுவிப்பார். அதன்பின் ஒரே அமைதிதான்.
நாமெல்லாம், அண்டார்டிக்காவில் உள்ள 'எம்பரர் பெங்குவின்' போல'மெகா சைஸில்' ஒன்றை எதிர்பார்த்துக்கொண்டிருப்போம். ஆனால் இங்குள்ளவை
மஞ்சள் கண் பெங்குவின்கள். கோழியைவிடச் சின்ன சைஸில் இருக்கும்! சுமார் ஒரு அடி உயரம் இருக்கும்!
முதலில் ரெண்டு மூன்று பறவைகள் கடற்கரையில் தோன்றும். தண்ணீரிலே வந்து கரை ஏறியவைதான். அப்படியே அங்கேயே நின்றுகொண்டிருக்கும்.
நேரம் போகப் போக நூற்றுக் கணக்கில் வந்து சேரும். மணலிருந்து ஏறி நாம் உட்கார்ந்திருக்கும் இடத்திற்குமுன் 'பாதையைக் கடக்க' எல்லாம்
வரிசையில் நின்று கொண்டிருக்கும். அவர்கள் கூட்டத் தலைவன் வந்து, போகலாம் என்று சொன்னால்தான் போகவேண்டுமாம்!
ஆரம்பப் பள்ளிகளில், முதலாம் வகுப்புப் பிள்ளைகளை நினைவூட்டும் விதத்தில், அந்த வரிசையில் பேச்சும், ஒன்றை ஒன்று தள்ளுவதும்,
இடிப்பதும், வரிசையில் இருந்து தள்ளிவிடுவதுமாக ஒரே கலகலப்பாக இருக்கும். அல்லது இப்படி நினைத்துக் கொள்ளுங்கள். அபிமான
நடிகரின் படம் முதல் நாள் முதல் ஷோவுக்கு ரசிகர் கூட்டம் அலைமோதுவதைப்போல! ஒரே 'கல பிலா' சத்தம்தான்.
ஆஹா, இதோ வந்துவிட்டார், தலைவர்! தலைவர் முதலில் பாதையை இரண்டுபக்கமும் பார்த்துவிட்டு, ஏதோ கட்டளை இட்டவுடன், எல்லாம்
வரிசையாகப் பாதையைக் கடந்து தங்கள் வீடுகளுக்குச் செல்லும். அந்த மெல்லிய இருட்டிலும் எப்படியோ தங்கள் வீடுகளை அடையாளம்
கண்டு கொள்ளுமாம்!
இவ்வளவு நேர்த்தியான ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் இவை உண்மையிலேயே அதிசயப்பறவைகள்தான்! இவைகளை இந்த இடத்தில் மட்டுமே
நாம் காணமுடியும் என்பதால், சுற்றுலா வரும் கூட்டத்தினர் தவறாமல் இங்கு வருவார்கள்.
நன்றி இ-சங்கமம்
Posted by துளசி கோபால் at 5/11/2005 01:34:00 PM 10 comments
MRI
நேத்து ராத்திரி எம்.ஆர்.ஐ.ஸ்கேன் செஞ்சுக்கப் போயிருந்தேன். அங்கே மெஷின்லே
ஏதோ கோளாறு ஆயிருச்சாம் காலையிலே, அதனாலே எல்லா அப்பாய்ண்ட்மெண்ட்டும் அரைமணி
லேட்டா ஆயிருச்சுன்னு சொன்னாங்க.
சரி, உக்காந்து இருக்கற நேரத்துக்கு ஏதாவது படிக்கலாமுன்னு அங்கே இருந்த பத்திரிக்கைகளைப்
பார்த்தேன். 'யு.கே. எடிஷன் நியூ ஐடியா' நிறைய இருந்துச்சு. இங்கெ எங்க லோகல்
எடிஷன் இருக்கு. அப்புறம் எதுக்கு இது?
உள்ளெ பார்த்தா, ஒரே சினிமா & டி.வி. ஆளுங்களைப் பத்திதான் நியூஸ்! அப்புறம்
எக்கச்சக்கமா மேக்கப் சாமானுங்க விளம்பரம்! நம்ம தமிழ்ப் பத்திரிக்கைகளுக்குக்
கொஞ்சமும் சளைக்கலை !!!
'நியூஸிலாண்ட் ஹோம் & கார்டன்' நிறைய!!!! இதுலே சாப்பாட்டுச் சமாச்சாரமும்
நிறைய! ஒரு பக்கம் 'டயட்'ன்னு சொல்லிக்கிட்டே நாக்குலே எச்சி ஊறர மாதிரி
சாப்பாட்டு வகைகளின் கலர் ஃபோட்டோஸ்!!!!!
அப்புறம் உள்ளெ கொண்டு போனாங்க. இதுக்கு முந்தி இந்த மாதிரி எம்.ஆர்.ஐ.ஸ்கேன்
செஞ்சிருக்கீங்களான்னு கேட்டப்பச் சொன்னேன், சில வருஷத்துக்கு முன்னாலே
தலைவலின்னு( தலையிலே ஏதாவது இருக்கான்னு பார்க்க!) ஒருக்கா எடுத்தாங்கன்னு!
காதுக்கு வச்சுக்க 'இயர்ப்ளக்' கொடுத்துக்கிட்டே, குறுகிய பாகத்தைக் காதுக்குள்ளே
வச்சுக்குங்கன்னு சொன்னப்ப, 'எனக்கு இது வச்சுக்கிட்டுப் பழக்கம்தான்,புருஷன்
குறட்டையிலிருந்து தப்பிக்க'ன்னு சொன்னேன்.
இந்த முறை சத்தம் ரொம்பவே இருந்துச்சு! 25 நிமிஷம் ஆச்சு! இதுலே என் மனசுக்குத்
தோணியது என்னன்னா,
'சவப்பெட்டியிலே' படுத்தா எப்படி இருக்குமுன்ற அனுபவம் கிடைச்சுருச்சு!
ஆனா சத்தம்தான் ஜாஸ்தி!!!!
Posted by துளசி கோபால் at 5/11/2005 09:59:00 AM 12 comments
Tuesday, May 10, 2005
மாயா மாளவ.....
புத்தகமும் பழக்கமும்!!!! பகுதி 2
கதையிலே மனசு அப்படியே ஒன்றிப்போய் படிச்சுக்கிட்டே, தற்செயலாத் தலையைத்
திருப்பி ஜன்னல் வழியாப் பாக்கறேன். எதிரே ஓடற(!) காட்சிகளில் ஏதோ வித்தியாசம்
தெரியுது!
ஆஹா, இறங்க வேண்டிய ஸ்டேஷனைக் கோட்டை விட்டுட்டோம். அடுத்து வர்றதுலே
இறங்கிடணும்! அக்கம்பக்கத்துலே ரொம்ப மிதப்பா உக்காந்து வர்றவங்களுக்கு என் பதைபதைப்பைத்
தெரியாம மறைக்கறதுலேயே இப்ப என் கவனமெல்லாம் போயிருச்சு! குய்யோ முறையோன்னு
கத்த முடியுமா? முதல் வகுப்பாச்சே! ஆண்கள் எக்கச்சக்கமா இருக்காங்க. எப்பவுமே சில
பெண்கள்தான் இருப்போம்!
அது ஒண்ணுமில்லை, லேடீஸ் கம்பார்ட்மெண்ட்லே எப்பவும் ஒரே கூட்டம். இந்த வியாபாரிகளும்,
கொத்தவால்சாவடி ( அப்ப ஃபோர்ட் ஸ்டேஷன்லே இறங்கிப் போகணும்) போற வர்ற கூடைக்காரப்
பெண்களும், சாப்பாட்டுக்கூடை கொண்டு போற பெண்களுமா ஜகஜகன்னு இருக்கும். அதுலேயும்
தப்பித்தவறி யாராவது அவுங்க காலை, வண்டி ஆடற ஆட்டத்துலே மிதிச்சிட்டாங்கன்னா போச்சு!
சரமாரியான திட்டு. 'செருப்பு போட்டுட்டுவந்தது'க்கும் திட்டு! அப்பெல்லாம் நான் நினைச்சுக்குவேன்
'நல்லவேளை மனுஷனுக்கு வால் இல்லே. அப்படி இருந்திருந்தா வாலை மிதிச்சதுக்கும் சேர்த்துப்
பாட்டுக் கேக்கவேண்டியிருக்கும்'னு!!! கூட்டத்துலே நீந்தி வெளியே இறங்கிப் பார்த்தா, ஒருமணிநேரம்
பாத்துப் பாத்து ப்ளீட்ஸ் வச்சுக் கட்டின கஞ்சி போட்ட காட்டன் புடவை கேவலமாக் கசங்கிக் கிடக்கும்!
இதனாலேதான் கொஞ்சம் காசு கூடன்னாலும், பீடை ஒழிஞ்சது போன்னு இந்த ஃபர்ஸ்ட் க்ளாஸ் வாங்கிக்கறது!
வண்டி நின்னதும் ரொம்பக் கேஷுவலா, என்னமோ அதுதான் நான் இறங்கவேண்டிய இடம்ன்ற
பாவனையோட இறங்கி, எதிர்வரிசைக்குப் போனேன். சீஸன் டிக்கெட்டுதான், ஆனாலும் இந்த ஸ்டேஷன்
வரைக்கும் இல்லை! மூணு ஸ்டேஷனை தாண்டியிருக்கேன்! மனசு 'திக்திக்'னு அடிச்சுக்குது. இப்ப நினைச்சுப் பாத்தா,
போய் ஒரு சிங்கிள் டிக்கெட் வாங்கியிருக்கலாம் இல்லே? அப்பத் தோணலையே!!!
படிச்சுக்கிட்டு இருந்தது 'ஜாவர் சீதாராமன் எழுதுன மின்னல்,மழை, மோஹினி' மல்லிகைபூ வாசமும், பேயை
ஓட்டப் பூண்டு எடுத்து வச்சிக்கறதுமா இருந்த கதை! ஆ.வி, குமுதம், கல்கி, கலைமகள் எப்பவாவது மஞ்சரி
இந்த ரேஞ்சுலதான் வாசிப்பு இருந்துச்சு! அப்ப வேற தமிழ்ப் பத்திரிக்கைகள் வந்ததா நினைவில்லே.ஆங்...
கல்கண்டுன்னு ஒண்ணு வந்துக்கிட்டிருந்தது!
சினிமாவுக்குன்னுத் தனியா சிலது வந்துக்கிட்டு இருந்தது. இப்பப் பாருங்க, எல்லா தமிழ் வாரப் பத்திரிக்கைகளும்
சினிமாச் செய்திக்கு நடுவிலே கொஞ்சூஊஊஊஊண்டு கதைகள் போடுது! இதுலே அரசியல் செய்திகள் வேற!
அந்தக் காலக்கட்டத்துலேதான் மவுண்ட் ரோடுலே ஒரு லைப்ரரி ஆரம்பிச்சாங்க, (இல்லே ஏற்கெனவே ஆரம்பிச்சிருந்தாங்களா?)
அப்ப யாரோ ஒருத்தர், 'அதுலே மெம்பரா சேர்ந்துக்கறதுக்கு, கார்டுக்கு 10 ரூபாய்'ன்னு சொன்னார். அந்தக் கார்டுலே ஒரு
புத்தகம் எடுத்துக்கலாம்! நானு ரெண்டு கார்டு வாங்கிகிட்டேன்.
புத்தகம் எடுக்கறதுக்கு அங்கே போனா, அதுவே ஒரு அனுபவமா ஆயிரும்! சரியான வெளிச்சமே இருக்காது. தூசும்
தும்புமா அழுக்கா இருக்கும். இந்த அழகுலே சிலபேரு உக்காந்தவாக்குலேயே தூங்கிக்கிட்டு இருப்பாங்க! 'சைலன்ஸ்
ப்ளீஸ்'ன்னு போட்டுருக்கற போர்டு கூட அவுங்களுக்காகத்தான் இருக்கும்! சத்தமாப் பேசுனா எழுந்துக்குவாங்கல்லே!
தூங்கறவங்களை எழுப்பறது பாவமாச்சே!
அபிமான எழுத்தாளர்ன்னு யாருமில்லை. அப்படியே பாத்து எடுக்கறதுதான். ஆனா, 'சாண்டில்யன்' பிடிக்காது! பத்து
பக்கத்துக்கு வர்ணனை நாலுவரிக் கதைன்னு நகர்றதுக்குப் பொறுமை கிடையாது! மாலைச் சூரியன் வானத்தை
மஞ்சளடிக்கறதை எத்தனைதடவைதான் படிக்கறது? ஆனா, இதையே நேர்லே எத்தனைமுறை வேணுமுன்னாலும்
பாக்கலாம்ன்றது வேற விஷயம்!
பெருசா இலக்கிய ஆர்வமெல்லாம் கிடையாது. ஜஸ்ட் கதை படிக்கணும். அவ்வளவுதான்!
ஆச்சு கல்யாணம்! விசாகப்பட்டினத்துலே ஜாகை! 'ஐய்யோ, இனிமே படிக்கப் புஸ்தகம் கிடைக்காதே'ன்றதுதான்
மனசுலே தோணுச்சு! வீட்டுலே தெலுங்கு பேசறதாலே சமாளிச்சுக்கலாம். ஆனா தெலுங்கு படிக்க வராதே! அந்த
எழுத்துங்கெல்லாம் 'ஜாங்கிரி ஜாங்கிரி'யா இருக்கறதா அண்ணன் சொல்வாரு! பாட்டிக்காகத் தெலுங்குப்படம்
பார்க்கப் போவோம். அப்ப மவுண்ட்ரோடுலே சத்தியம் தியேட்டருலேதான், (சுந்தரம்?) எப்பவாவது போய்ப்பாக்கறது.
படத்தோட 'டைட்டில்' போட்டவுடனே அண்ணன் அடிக்கற கமெண்ட்தான் இது!
நம்ம அதிர்ஷ்டம் பாருங்க, மணின்ற ரூபத்துலே வந்தது! எங்க இவர் வேலை செய்யற இடத்துலே இருக்கற
'லீஷர் க்ளப்'க்கு எல்லா மொழிப் பத்திரிக்கைகளும் வாங்குவாங்களாம். அதுங்களை வாங்கற பொறுப்பு நம்ம
மணியோடது! இவர் அங்கே கடைநிலை ஊழியர். தமிழ்ப் பேசத்தெரிந்த, தமிழ்ப் படிக்கத்தெரியாத மூணாந்தலைமுறைத்
தமிழர்! தமிழனுக்குத் தமிழன் உதவி செய்யதாவலை? அந்த உதவியை இப்ப எங்களுக்குச் செஞ்சுக்கிட்டு இருந்தார்!
வாரம் ஒரு நாள் சாயந்திரமாக் கடைவீதிக்குப் போய் ஏற்கெனவே சொல்லிவச்சிருக்கற பத்திரிக்கைகளை ஏஜண்ட்
கிட்டே இருந்து வாங்கிட்டு வந்துருவாராம். மறுநாள் காலையிலே அதை ஆஃபீஸ்க்குக் கொண்டுபோய் சேர்த்துடுவாராம்.
ராத்திரி முழுசும் அவுங்க வீட்டுலே ச்சும்மாத்தானே கிடக்கு. அதையெல்லாம் அங்கே வச்சுக்கறதுக்குப் பதிலா
நம்ம வீட்டுலே வச்சுக்கலாமுன்னு ஐடியாக் கொடுத்தேன்! தமிழனுக்குத் தமிழன் உதவி செய்யதாவலை? சரின்னுட்டார்.
புதன்கிழமைன்னு நினைவு. ஏதோ எக்ஸாமுக்குப் படிக்கறமாதிரி, நாங்க வேகவேகமாப் படிச்சுக்கிட்டு இருப்போம்.
நானு, இவர், இவரோடு வேலை செய்யற இன்னொரு தமிழ்க்காரர். எங்ககூடத்தான் தங்கியிருந்தார். அவரும் இவரும்
இன்டர்வ்யூக்கு ஒண்ணா வந்தாங்களாம். ஒரே நாளுலே வேலையிலே சேர்ந்து, வீடு வேட்டை நடத்தி இந்த வீட்டைப்
பிடிச்சாங்களாம். மொதல்லே தொடர்கதைங்க, எல்லாப் புத்தகத்துலேயும் !!! இதை முடிச்ச பிறகு மத்த பகுதிகள்
சிறுகதை, ஜோக்ஸ்ன்னு படிப்படியா. மாத்தி மாத்திப் படிச்சு முடிக்க சில நாளு பன்னெண்டு, ஒண்ணு ஆயிரும்.
'பட் ஹூ கேர்ஸ்?'
ஒரே ஒரு கண்டிஷன்தான், புத்தகங்களைக் கசக்காமப் புது மெருகு குலையாமப் படிக்கணும்! கிளப்புலே இருந்து
நமக்கும் ஒரு நாளைக்கு வீட்டுக்குக் கொண்டுவருவார்தான். ஆனா, ச்சுடச்சுடப் படிக்கறதுக்கு ஈடாகுமா?
Posted by துளசி கோபால் at 5/10/2005 05:27:00 PM 6 comments
Monday, May 09, 2005
புத்தகமும், பழக்கமும்!!!!
சாப்பாட்டுத்தட்டை ஒருகையிலும் ஏதாவது ஒரு புத்தகத்தை ஒருகையிலுமாத்தான் டைனிங் ஹாலுக்குப் போற
பழக்கம். எதுக்கா? தொட்டுக்கத்தான்!!!!இது ஒரு வழக்கமா மாறுனதே எங்க ஹாஸ்டல் சாப்பாட்டு 'ருசி'யாலேதான்!
இதுவரை படிக்காத புத்தகமா இருந்தா விசேஷம். ஏற்கெனவே படிச்சதுதான் கையிலே இருக்கா? பரவாயில்லை,
இப்ப என்ன பாழாப் போச்சு! நேத்து ரசம் ஊத்திச் சாப்பிட்டாலும், இன்னைக்கும் ரசம் ஊத்திக்கறதில்லையா?
சாப்பாட்டோட ருசி நாக்குக்கு(மனசுக்குத்) தெரியக்கூடாது. ஆனாலும் சாப்பிட்டே
ஆகணும்( எல்லாம் உயிர் வாழத்தான்!)
இந்தப் பழக்கம் அப்படியே வாழ்க்கையிலே தொத்திக்கிச்சு! வீட்டுலேயும் சில நாளு இப்படித்தான்! ஆனா
பாட்டி இருக்கறப்ப 'மூச்!'
'கோட்டி வித்தலு கூட்டுக்குறக்கு'ன்னு சொல்வாங்க. தெலுங்குங்க!!! அதாவது மனுஷன் எத்தனையோ
சாகசங்கள் செய்து சம்பாரிக்கறது எல்லாம் சாப்பிடத்தானாம்!!!! அன்னம் லட்சுமியாம்! அதான் அன்னலட்சுமின்னு
பேருகூட இருக்கே!!! சாப்பாட்டுக்கு மரியாதை செய்யணுமாம்! அதான் பழைய காலங்களிலே ராஜாக்கள் கூட,
சாப்பாட்டை ஒரு ச்சின்ன பீடத்துமேலே வச்சு, அவுங்களும் மணையிலே உக்காந்து சாப்புடறது.
இதெல்லாம் எனக்கெப்படித் தெரிஞ்சுதா? ஏன்? நீங்க அம்புலி மாமா வெல்லாம் படிச்சதில்லையா? அதுலேகூட
எனக்குக் கதைங்களைவிட அதுலே போட்டுருக்கற படங்கள் ரொம்பப் பிடிக்கும்.
நல்ல அழகான தூணுங்க, விசாலமான கூடம், வெளிப்புறம் ரெண்டுபக்கமும் திண்ணைங்க வச்சுக் கட்டின வீடுங்க,
வரிசை வரிசையா அடுக்குன ஓட்டுக் கூரைன்னு பலதையும் சொல்லிக்கிட்டே போகலாம்!!!
பாட்டிகிட்டே இன்னோரு விஷயம். ' நீ சோத்தைப் போடு. இதோ வந்துக்கிட்டே இருக்கேன்'ன்னு இப்பெல்லாம்
சாதாரணமாச் சொல்றமே, அது நடக்காது! நாம போய் தட்டு முன்னாலே உக்காந்தபிறகுதான் பரிமாறுவாங்க.
அன்னம் நமக்காகக் காத்திருக்கக்கூடாதாம்! நாமதான் அதுக்காகக் காத்திருந்து, உரிய மரியாதை செஞ்சு
சாப்பிடணுமாம்! இப்ப வயசான பிறகு நினைச்சுப் பாக்கறப்பத்தான் இது எவ்வளவு நியாயமான விஷயம்னு
புரியுது!
இங்கே கடைகளிலே 'ஃபுட் ஆன் த ரன்' போர்டைப் பாக்கறப்பெல்லாம் பாட்டி ஞாபகம்தான்! இப்படி ஓடிக்கிட்டே
சாப்பிடறதைப் பாட்டி பார்க்கணும்! அவ்வளொதான், தொலைஞ்சேன் !!!!
திங்கறதுக்கு மட்டுமில்லே, தூங்கறதுக்கும் புத்தகம் வேணும்:-)
பெரியக்காவுக்கு கதைப் புத்தகமுன்னா உயிரு! அவுங்க வீட்டுக்காரர் ஆசிரியரா இருந்தாரா, அவர் ஸ்கூல் லைப்ரரியிலே
இருந்து புத்தகங்களாக் கொண்டுவந்து போடுவாரு. அப்ப அவுங்க இருந்த வீட்டுக்கு மின்சாரம் வரலை. அதனாலே
மண்ணெண்ணெய் விளக்குதான்!
இந்த மண்ணெண்ணெய் விளக்கு வச்சிருக்கற வீடுங்களிலே நித்தியப்படிக்கு ஒரு சாங்கியம் இருக்கு! சாயந்திரம்,
பட்டாட்டம் இருக்கற அடுப்புச் சாம்பலை எடுத்து, எல்லாக் கண்ணாடிச் சிம்னியையும் தேய்க்கணும். அப்புறம் ஒரு
மிருதுவான துணி( எல்லாம் கிழிஞ்ச சீலைத்துணிதான்) வச்சு, கண்ணாடி உடையாம அழுத்தமாத் துடைக்கணும்.
அப்புறம் கண்ணுக்கு நேரா வச்சுப் பார்த்தா, கரி, தூசி இல்லாம பளபளப்பா இருக்கணும்! இதுவரைக்கும் சரி.
அடுத்ததுதான் ஒரு கண்டம்! விளக்கை ஒரு ஆட்டு ஆட்டிப்பாத்து, மண்ணெண்ணெய் அளவு தெரிஞ்சுக்கிட்டு,
போதலைன்னா பாட்டில்லே இருக்கறதை விளக்குலே ஊத்தணும்! அதுவும் பொட்டுக் கீழெ சிந்தாம! என்னதான்
கவனமா ஊத்துனாலும், கொஞ்சம் கீழே சிந்திரும்தான். அதுக்குத்தான் ஒரு வரட்டியை கீழே வச்சுக்கறது!
அக்கா வீட்டுக்கு விஸிட் போறப்ப இது என்னோட 'ட்யூட்டி'தான்! துன்பத்துலேயும் ஒரு இன்பம்ன்றது போல
அவுங்க வீட்டுலே தரையும் சாணி போட்டு மெழுகுன மண் தரைதான். அதனாலெ கீழே ஊத்துன மண்ணெண்ணெயை
மறைக்கறது சுலபம். 'டக்'குனு தரையிலே இஞ்சிரும். துளி சாணி எடுத்து அதும்மேலே 'எச்சில் இடறது போல'
பூசிடுவேன்! பாத்தா வித்தியாசமெ தெரியாது. ஆனாலும், அக்கா கண்டுபிடிச்சுடுவாங்க, 'எமகாதகி'க்கு மூக்கு நீளம்!
ஒரு நாள், இப்படித்தான் தலை மாட்டுலே ச்சின்ன ச்சிம்னி விளக்கை வச்சுக்கிட்டுப் படுத்துக்கிட்டே படிச்சிருக்காங்க.
வழக்கமா வச்சுக்கற 'அரிக்கேன் விளக்கு' அன்னைக்கு இல்லை. எல்லாம் நேரம்!!! அப்படியெ கொஞ்சம் கண்ணமந்து
போயிருக்கு போல. புத்தகம் விளக்கு மேலெ விழுந்து பத்திக்கிச்சு! எல்லாம் ஒரு ரெண்டு நொடிதான்னு அக்கா
அடிச்சுச் சொல்லியும் மாமா அதை நம்பத்தயாரா இல்லே! புத்தகம் ஒரு சைடுலே கரிஞ்சு போச்சு!
பாவம் அக்கா! அதோடு போச்சு, லைப்ரரியிலே இருந்து புத்தகம் வர்றது! ஆனாலும் பொட்டலம் கட்டிவர்ற காகிதங்களைக்
கூட விடாமப் படிப்பாங்க. கொஞ்சம் பெரிய காகிதமுன்னா அதை எடுத்துக் கூரையிலே சொருகிவச்சுட்டு, அதையெ
'தூங்கறதுக்கும்' வச்சுக்குவாங்க! ஏழு புள்ளைகுட்டிங்களோட நாள் பூராவும் வேலை வேலைன்னு செத்துக்கிட்டு
இருந்தாலும் இந்தப் படிக்கற பழக்கம் மட்டும் போகவேயில்லை!
அக்காங்களுக்குக் கல்யாணம் ஆவறதுக்கு முன்னாலே, 'எங்க வீட்டுலே' ஆனந்த விகடனும், கல்கியும் வாங்குவாங்க.
'குமுதம்' வாங்க மாட்டாங்க. அது ஏதோ 'அடல்ட்ஸ் ஒன்லி ரேஞ்சு'லே இருக்குதுன்னு ஒரு எண்ணம்!
பேப்பர் பையன் கொண்டுவந்து போட்டவுடனே, நான் படிக்க(!) எடுத்துக்குவேன். எழுத்துக்கூட்டி 'ஜோக்'கையெல்லாம்
படிச்சு முடிக்கவே நேரமாயிரும். அக்காங்க கெஞ்சுவாங்க, 'தொடர்கதை' மட்டும் படிச்சுட்டுக் கொடுத்துடறேன்னு!
நான் இதுக்கெல்லாம் மசியுற ஆளா? ஒண்ணுவிடாமப் படமெல்லாம் பார்த்துட்டுத்தான் தருவேன்!
மூணாவது வீட்டுலே ஒரு அக்கா இருந்தாங்க. அவுங்களுக்குக் கல்யாணம் நிச்சயமாயிருந்துச்சு. மாப்பிள்ளை
சொந்தத்துலேதான். அவரு மதுரையிலே இருந்து வர்றப்பெல்லாம் 'பேசும் படம்'ன்னு ஒண்ணு வாங்கிக்கிட்டு
வருவார். அதுலே சினிமா நடிகைகள் 'ஆடையும் அலங்காரமும்' ( அப்படின்னுதான் நினைவு)ன்னு விதவிதமான
புடவை, நகை நட்டு, ஹேர்ஸ்டைல்னு நல்ல வழவழப்பான காகிதத்துலே ஃபோட்டோஸ் வரும். நாந்தான் அதை
அங்கிருந்து 'கடன்' வாங்கிக்கிட்டு வந்து நம்ம அக்காங்களுக்குத் தருவேன்.
எங்க வீட்டுலே ஒரு கண்டிப்பான வழக்கம் இருந்துச்சு! சாயந்திரம் விளக்கு வச்சவுடனெ, கைகாலெல்லாம் கழுவிட்டு
சாமி கும்பிடணும். அதுக்கு முன்னால் பெரியக்கா சாமி விளக்கேத்திருவாங்க. நாந்தான் காக்கா போல, ஸ்கூல்விட்டு
வந்ததிலெ இருந்து விளையாடிக்கிட்டு இருப்பேன். அதுக்கப்புறம் ஒரு ஏழுலே இருந்து எட்டுவரைக்கும் எல்லோரும்
உக்காந்து படிக்கணும்! ஸ்கூல் படிக்கிறவங்க பாடம் படிக்கணும். மத்தவங்களுக்கு அது கதைப் புத்தகமா இருந்தாலும்
பரவாயில்லை. அம்மா ஏதாவது ஆஸ்பத்திரி விஷயமா 'பேப்பர் வொர்க்' செய்வாங்க. சிலோன் ரேடியோதான் ஏழு
மணிக்கு முடிஞ்சுருமே. அதுலே கேட்டு மனப்பாடம் பண்ண பாட்டுங்களையெல்லாம் எழுதிவச்சுக்கிட்டும், சினிமாப்
பாட்டுப் புத்தகத்தைவச்சு 'கம்பேர்'பண்ணிக்கிட்டும் இருப்பாங்க இந்த அக்காங்க!!!
இப்பப் பாருங்க, பெரியக்காவுக்குப் படிக்கறதுக்கு ஒண்ணுமே கிடைக்கறதில்லை!!! இந்த விஷயத்துலே ச்சின்ன அக்கா
ரொம்ப லக்கி! அவுங்க கல்யாணம் கட்டிக்கிட்டுப் போனவுடனே கல்கியும், ஆ.வியும் தானே வாங்க ஆரம்பிச்சுட்டாங்க.
அவுங்க கிட்டே ஒரு நல்ல பழக்கம் இருந்துச்சு! எல்லாத் தொடர்கதைகளையும் தனியா எடுத்து பைண்ட் செஞ்சு
வச்சுக்குவாங்க. அப்ப 'லதா'ன்னு ஒருத்தர் படம் போடுவாரு. அழகா இருக்கும். தொடர்கதைகளை அதோட ஒரிஜனல்
படங்களோட படிக்கறது ரொம்பவே நல்லா இருக்கும். சின்ன அக்கா ரொம்பவே ஸ்மார்ட்டு! அவுங்களைப் பத்தியே
ஒரு தனிப் பதிவு போடலாம், அது அப்புறம் ஒரு நாளக்கு!
இப்ப, டி.வி. பொட்டி முன்னாலெ உக்காந்துக்கிட்டு, பேரன் பேத்திகளொட பொழுதைப் போக்கறாங்க பெரியக்கா!!
தங்கச்சி நானு டிவி ரொம்பப் பாக்கறதில்லே! செய்தியும், 'ஃபேர் கோ'ன்னு ஒண்ணு வருது, இந்த நாட்டுலே இருக்கற
'420'ங்களைப் பத்தி! அதையும் பார்ப்பேன்.
அக்காவைப் படிக்கவிடாமச் செஞ்ச மாமாவோட நண்பர் ஒரு பிரபல(!) எழுத்தாளர்!!
இன்னும் வரும்!
Posted by துளசி கோபால் at 5/09/2005 06:14:00 PM 17 comments
Sunday, May 08, 2005
அண்ணன் Vs அக்கா நடுவிலே 'நான்'
( இ.பொ.வே.முன்னிட்டு!!!)
எங்களுக்கு இடமாற்றம் வழக்கம்போல வந்தது. இந்தமுறை மேலூர். அதாங்க நம்ம 'பசுநேசன்'
ஊரு. மாற்றம் எப்பவும் கல்வி ஆண்டு முடிவிலதான் வரும் . நாங்களும் அப்படியே அந்த ஊர் பள்ளிக்
கூடங்களுக்குப் போய் சேர்ந்துடுவோம்.'அட்மிஷன்' கஷ்டமெல்லாம் இல்லை. எல்லாம் 'போர்டு ஸ்கூல்'
தானே.
அங்கே, ஆஸ்பத்திரி இருந்த இடம் 'அக்ரஹாரம்'னு சொன்னா நம்பமுடியுதா? ஆனால் அதுதான் உண்மை.
வழக்கம்போல ஆஸ்பத்திக்கு நேரெதிரே ஆரம்பப்பள்ளி. மத்த ஊருகளிலே ஒரு 5 நிமிஷம் நடையிலே
இருக்கறது, இங்கே அநியாயத்துக்குப் பக்கம். ரொம்ப அகலம் இல்லாத தெரு. ஒரு பத்து எட்டு( சின்னக்
காலு ஆச்சுங்களே)லே ஸ்கூல் கேட். கேட் ன்னு சொன்னாலும் அது ஒரு சாதாரண வீட்டுக் கதவு மாதிரிதான்
இருக்கும். அதை மூடவே மாட்டாங்க. கட்டடமும் ஒரு வீடு மாதிரிதான் இருக்கும். ஸ்கூல் நடத்துவதற்காக
சில வீடுகளையே ஸ்கூலா மாத்திட்டாங்க. மாடி ஏறிப் போனா, தெருவைப் பாத்துருக்கும் சாய்வான கூரை
இருக்கற இடம்தான் என் வகுப்பு. அங்கேயிருந்து பார்த்தா, நேரா, நம்ம வீடும், ஆஸ்பத்தியும், பின்னாலே
இருக்கற புழக்கடையும்கூடத் தெரியும். மாடியாச்சுங்களே.
வீடுங்க எப்படி ஸ்கூல் ஆச்சோ, அதேபோல ஒரேமாதிரி ரெண்டு வீடுங்க சேர்ந்ததுதான் ஆஸ்பத்திரி.
பாருங்க! அந்தக்காலத்துலேயே 'ட்யூப்ளெக்ஸ்' கட்டடம்!. அதுலே ஒண்ணு நமக்கு வீடு, இன்னொண்ணு
ஆஸ்பத்திரி.ரெண்டு கட்டடத்துக்கும் சேர்ந்து முன்னாலே கம்பி அழி போட்ட ஒரு நீஈஈஈஈஈஈஈஈள வெராந்தா.
ஏன்னா அங்கே குரங்குங்க தொந்திரவு ஜாஸ்தி. புழக்கடைக் கதவை எப்பவும் சாத்திவைக்கணும்.சிலசமயம்
குரங்கு வீட்டுக்குள்ளே வந்திரும். நாங்கெல்லாம் கூச்சல்போட்டு விரட்டுவோம். ஒருதடவை, குரங்கு சுடு
சோத்துக்குள்ளே கையை விட்டுடுச்சு. ரொம்ப கத்துச்சு. தோட்டக்காரன், தூரமா நின்னுகிட்டு, ஒரு கம்பாலே
கையை வெளியே தள்ளி எடுத்துவிட்டான்.பாவம், கத்திகிட்டே ஓடுச்சு.
தெருவிலே, நம்ம பக்கம் மட்டும், பூவரச மரங்கள். அதுவே காம்பெளண்ட் சுவர்மாதிரி
வரிசையா நிறைய இருந்துச்சு. அந்த பூவரச மொட்டுங்களை, பம்பரமாட்டம் தரையிலே சுத்தி விளையாடுவோம்.
அந்த மரங்கள் பூக்கற சமயம், என்னோட வகுப்பிலே இருந்து பாத்தா ரொம்ப நல்லா இருக்கும். நல்ல இள மஞ்சள்
நிறம்! அக்ரஹாரத்துலேயே இருந்ததாலே 'அவாளை'ப் போல பேசவும் தன்னாலே வந்துடுத்து! க்ளாஸ் நடக்கறச்சே
தூத்தம்( தீர்த்தம்) குடிக்கறதுக்குக்கூட நம்மாத்துக்குதான் போவேன்.'எதிராம்'இல்லையோ!
இப்படியே நாள் போயிண்டிருந்தால் வாழ்க்கையிலே ஏதாவது சுவாரஸ்யம் இருக்குமா?
திடீரென்று, அம்மாவுக்கு மாற்றல் வந்தது.அப்போ 'பிப்ரவரி'மாசம். ஏப்ரல் மாதம்வரை அங்கேயே இருப்பதற்கு, தலைமை
அலுவலகத்தில் எவ்வளவோ கேட்டுக்கொண்டாலும் அனுமதி கிடைக்கவில்லை. அவர்களுக்கு என்ன நிர்பந்தமோ? ஒரே
ஆறுதல் என்னன்னா, நாங்கள் மீண்டும் 'வத்தலகுண்டு'க்கே போறோம்.
எங்கள் வீட்டில் எப்போதும் யாராவது தூரத்து உறவினர்கள், வீட்டு நிர்வாகத்துக்கு உதவியாக இருப்பாங்க. ஆனால்
அந்த சமயம் யாருமே இல்லை.அப்போது பெரியக்காவுக்குக் கல்யாணம் ஆகி, முதல் குழந்தையும் பிறந்திருந்தது. ஒரு
மாசத்துக்கு முன்புதான், மாமா வந்து பிரசவத்துக்கு என்று வந்திருந்த அக்காவையும்,மூன்று மாதமேயான குழந்தையையும்
கூட்டிட்டுப் போனார். நாங்க இப்ப நாலேபேருதான் வீட்டுலே. நானு, அம்மா, சின்னக்கா அப்புறம் அண்ணன்.
சின்ன அக்காவுக்கும், அண்ணனுக்கும் ஒண்ணரை வயசுதான் வித்தியாசம். அக்காதான் பெரியவுங்க. ஆனா படிப்புலே
அக்கா, அண்ணனை விடவும் ஒரு 'ஸ்டேண்டர்ட்' கம்மி. அது ஏன்னா, அக்கா, எங்க சித்தப்பா வீட்டுலேயே வளர்க்கப்
பட்டாங்களாம். அப்ப ஆரம்பப் பள்ளியிலே அவுங்க படிச்சது தெலுங்கு மொழியிலே. அப்பல்லாம் 'சிங்காரச் சென்னைக்கு
மெட்ராஸ், பட்டணம் என்ற பேருங்க இருந்ததாம். ஆந்திரா, தமிழ்நாடு என்ற வேற்றுமையெல்லாம் இல்லாமலிருந்ததாம்.
நாங்களும் வீட்டுலே தெலுங்குதான் பேசிகிட்டிருந்தோம். அம்மாவுக்கு, மதுரை ஜில்லாவிலே வேலை கிடைத்ததும், புது
இடமா இருந்ததாலே, பிள்ளைங்களைக் கொஞ்சநாள் சொந்தக்காரங்ககூட விட்டுட்டுப் போனாங்களாம். நல்ல வேளை!
நான் அப்ப பிறக்கலே!
அப்புறமா, அம்மா வேலையிலே நல்லபடியா 'செட்டில்' ஆனபிறகு, பிள்ளைங்களைக் கூட்டிகிட்டாங்களாம். தெலுங்கு
படிச்ச பொண்ணை, திடீருன்னு தமிழ் படிக்க சேர்த்ததாலே கொஞ்சம் கஷ்டமாய் போச்சு. அதனாலே சின்ன வகுப்புலே
சேரும்படியாச்சு.
ஒரு முக்கியமான விஷயத்தை விட்டுட்டேன் பாருங்க. அக்காவும் அண்ணனும் பேசிக்க மாட்டாங்க! அண்ணனுக்கு
விவரம் தெரியாத வயசுலே அக்கா, சித்தப்பா வீட்டுலே இருந்தாங்களா, அப்புறம் அம்மா கிட்ட திரும்பி வந்தப்ப,
அண்ணன் நினைச்சாராம், அது யாரோ, எங்கிருந்தோ வந்ததுன்னு. அதுவுமில்லாம, சித்தப்பா வீட்டுலே
அக்காவை,ரொம்பச் செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருந்தாங்களாம். பிடிவாதம் கூடுதலாம். (நாங்க மட்டும்
குறைச்சலா என்ன?)அண்ணனும் அக்காவும் எப்பப்பாத்தாலும், எல்லாத்துக்கும் சண்டை போட்டுட்டே இருப்பாங்களாம்.
ஒரு நாள் அம்மாவுக்குத்தாங்க முடியாமப் போய், கோவத்துலே இப்படி சொல்லிட்டாங்களாம்," மானம் ரோஷம் இருந்தால்
ஒருத்தருக்கொருத்தர் பேசக் கூடாது".
பேச்சு வார்த்தையில்லாததாலே சண்டை நின்னுபோச்சு. வீட்டுலே சத்தம் இல்லை! ஆனா, ஒரே வீட்டுலே இருந்துகிட்டே
விரோதிங்கமாதிரி இருந்தாங்க! மழை வந்துச்சுன்னு வையுங்க, வெளியிலே காயற துணிங்களை எடுக்கணும்னா ,
மறந்துங்கூட, ஒருத்தர் மத்தவுங்க துணிங்களை எடுக்க மாட்டாங்க! கவனமா அங்கேயே விட்டுட்டு வந்துடுவாங்க!வருஷம்
போய்கிட்டிருந்திச்சு. இதுக்குள்ளே, நானும் பிறந்து, வளர்ந்து, ஸ்கூல் போய்கிட்டிருந்தேன்.
அம்மா, கட்டாயமா வத்தலகுண்டு போயே தீரணும். எங்க படிப்பு அந்த வருஷம் பாக்கி இருக்கு. "ரெண்டே ரெண்டு
மாசம்தானே. நாங்க பாத்துக்குறோம்" னு அங்கேயிருந்த, கம்பெளண்டரும், நர்சம்மாவும் சொன்னதாலே, அம்மா எங்க
மூணு பேருக்கும் ஒரு வீடு பாத்து, குடித்தனத்துக்கு ஏற்பாடு செஞ்சிட்டு, வத்தலகுண்டு போயிட்டாங்க. எல்லாம் என்
நேரம்!!!
அந்த வீடு,ரெண்டுதெரு தள்ளி இருந்துச்சு. அக்ரஹாரம் தெரு கிழக்கு மேற்கா இருந்துச்சு. மேற்காலே போனா, கொஞ்ச
தூரத்துலெ கடைவீதி வந்துரும். கிழக்காலே போனா, அது போய் ஒரு குறுக்காபோற தெருவுலே சேரும்.அந்தத் தெருவுக்கு
அந்தப்பக்கம் ஆறு ஓடும்.இந்த ஆத்துலேதான், காலையிலே எல்லா மாமி, மாமாங்களும் குளிச்சிட்டு, அங்கே ஒரு அரச
மரத்தடி மேடையிலே இருக்கற புள்ளையாருக்கும் ஒரு குடம் தண்ணி ஊத்திக் கும்பிட்டுட்டு போவாங்க. நாங்க தினமும்
அந்த மேடையில ஏறி விளையாடுவோம். அங்கிருந்து சோத்துக்கைப் பக்கம் நடந்தா குறுக்கே இன்னொரு பெரிய ரோடு.
இந்தப்பக்கம் ஆத்துக்குமேலே ஒரு பாலம். அடுத்தபக்கம் வரிசையா கடைங்க. அதுலே ஒரு ஹோட்டல் கூட இருக்கு.
நாம எந்தப்பக்கமும் திரும்பாம நேரா அந்த ரோடுக்கு குறுக்காலே நடக்கணும். இது ஆத்தை ஒட்டியே போற தெருவாச்சே.
அங்க மூணு வீடு தள்ளி, ஒரு 'கேட்'டு வரும். அதுக்குள்ளே ஒரு அஞ்சாறு வீடுங்க இருந்துச்சு. அங்கதான், நர்சம்மா வீடு.
அவுங்க வீட்டுக்கு எதிர்லே, ஒரு வீடு தள்ளி இருந்துச்சு எங்களுக்குப் பார்த்த வீடு. எங்கவீட்டுக்கும், நான் சொன்ன
ஹோட்டலுக்கும் இடையிலே ஒரே சுவர்தான்.எப்பவும் ஒரே சத்தமா இருந்துச்சு. இந்தபக்கம் நாங்க. அடுத்த பக்கம்
ஹோட்டலோட அடுக்களை.அங்கே யாராவது, தோசை சாப்புட வந்தாங்கன்னா, ' ஒரு ஸ்பெஷல்'னு உரக்க ஒரு குரல் வரும்.
அதுக்கு ஐஞ்சு வினாடிக்குள்ளே 'சொய்ங்'னு ஒரு சத்தம். தோசை ஊத்தறதுதான். எங்களுக்கு இது ரொம்ப தமாசா இருந்துச்சு.
அங்க ஒரு தோசைன்னா, நாங்க இங்க 'சொய்ங்னு கத்துவோம். அம்மாவுக்கு அந்த இடம், சத்தம் எல்லாம் பிடிக்கலே, ஆனா
எங்க பாதுகாப்புக்கு பிரச்சனையில்லைன்னு இருந்தாங்க.
எங்களுக்கு நிறைய காசும் குடுத்துட்டு போனாங்க.எங்களுக்கெல்லாம் ராத்திரி சாப்பாட்டுக்கு நர்சம்மா வீட்டுலே ஏற்பாடு
செஞ்சிருந்தாங்க. அங்கேயே போய் சாப்பிட்டுக்குவோம். காலையிலேயும், அந்த ஹோட்டல்லே, இட்லி, தோசைன்னு
வாங்கிடுவோம். மத்தியான சாப்பாடுதான் தகறாரா இருந்திச்சு. நர்சம்மா வீட்டுலே, மத்தியானதுக்கு ஆக்க மாட்டாங்க.
பழய சோறுதான் சாப்புடுவாங்க. எனக்குப் பரவாயில்லே, ஸ்கூல்லுக்கு கிட்டே என்கிறதாலே, பகலுக்கு ஹோட்டலிலேயே
ஏதாவது வாங்கலாம்.கையிலேயும் காசு நடமாட்டம் இருந்துச்சு. தனியா விட்டுட்டுப் போறோமேன்னு அம்மா, என்கிட்டே
நிறைய காசு தந்திருந்தாங்க! அக்கா, அண்ணன் ரெண்டுபேரு படிக்கிறது மேல்நிலைப்பள்ளியாச்சா, அது கொஞ்ச தூரத்துலே
இருந்தது.அங்கே அக்கம் பக்கத்துலே கடைகள், ஹோட்டல் ஏதும் கிடையாது. அதனாலே அக்கா ஒரு வழி கண்டு
பிடிச்சாங்க. அவுங்களே ஏதாவது வீட்டுலேயிருந்து எடுத்துட்டு போனா நல்லதுன்னு. அக்கம் பக்கத்துலே கேட்டு,
'உப்புமா' செய்யறதுக்கு கத்துகிட்டாங்க. தினம் காலையில் உப்புமா செய்வாங்க. எங்க ரெண்டுபேருக்கு மட்டும்.
அண்ணன் இது நல்ல ' ஐடியா' ஆச்சேன்னு 'காப்பி'அடிச்சுட்டார். அவரும் தினமும் காலையில் உப்புமா செய்வாரு.
எங்க ரெண்டுபேருக்கு மட்டும். அதுக்கு வேண்டிய சாமான்களை நர்சம்மா வாங்கிட்டு வந்தாங்க.பாத்திரம்னு ஒரு இரும்பு
வாணலியும் கரண்டியும் அவுங்க வீட்டிலிருந்தே குடுத்தாங்க. ஆரம்பிச்சிடுச்சு போட்டி!
யார் மொதல்லே எழுந்திருக்காங்களோ அவுங்க அடுப்பைப் பிடிச்சிக்குவாங்க! அவுங்க வேலை முடியறவரைக்கும்
அடுத்த ஆள் காத்திருக்கணும்! இதுனாலே காலையில் சீக்கிரம் எழுந்துப்பாங்க. ரெண்டுபேரும் தூங்க மாட்டாங்க போல!
அக்கா பொதுவாவே சீக்கிரம் எழற ஆளு. அவுங்க உப்புமா செஞ்சிட்டு, வாணலியைக் கழுவி வச்சிருவாங்க. அப்புறம்
அண்ணன். அண்ணன் மொதல்ல அடுப்பைப் பிடிச்சிட்டார்னா,அவ்வளதான். உப்புமா செஞ்சிட்டு,'டிபன் பாக்ஸ்'லே எடுத்து
வச்சிட்டு, வாணலியைக் கழுவாமலேயே போட்டுடுவாரு. அப்புறம் அடுப்பையும் நல்லாத் தண்ணி தெளிச்சு, ஒரு
நெருப்புக் கங்கில்லாமல் அணைச்சிருவாரு. நாந்தான், பக்கத்து வீட்டுலேபோய் காஞ்ச சாம்பலும், நெருப்பும் வாங்கிட்டு
வரணும், வற வறன்னு இருக்கற வாணலியையும் தேய்க்கணும் அக்காவுக்காக. எனக்காக ரெண்டுபேரு வச்சிருக்
கறதையும் தின்னணும். அக்காது நல்லா இருக்கும். அண்ணன் செஞ்சது ரொம்ப சுமார். ஆனா சொல்ல முடியாது.
சமையல் முடிஞ்சதும் இன்னொரு கொடுமை ஆரம்பிக்கும். முதல்ல சமையலை முடிச்சவுங்க 'ஃப்ரீ'யா இருப்பாங்கல்ல!
அவுங்க எனக்கு தலைவாரி பின்னிவிடுவாங்க! அண்ணனுக்கு பின்னவே வராது. அக்கா நல்லா பின்னுவாங்க.அக்கா நல்லாப்
பின்னுனதை அண்ணன் அவுத்துட்டு, அவரு பின்னிவிடுவாரு.கண்ணாடிலே பாக்கறப்ப அசிங்கமா இருக்கும். அண்ணன்
அசிங்கமா பின்னுனதை அக்கா அவுத்துட்டு அழகாப் பின்னுவாங்க. ஸ்கூல் போற நேரம் வர்ற வரைக்கும், இவுங்ககிட்டே
மாட்டிகிட்டு அழுதுகிட்டிருப்பேன். அப்புறம் ஸ்கூலுக்குப் போறப்ப அப்படியே ஆஸ்பத்திரிக்குப் போய், அங்க இருக்கற
ஆயா கிட்டே தலை பின்னிகிட்டுப் போவேன்
அந்த வாரக்கடைசிலே ஒரு நாள் அம்மா வந்தாங்க. நான், ஆரம்பிச்ச அழுகையை நிறுத்தவேயில்லை. அவுங்க
ரெண்டுபேருக்கும் நல்லா திட்டு கிடைச்சது. அப்புறம் கூட அவுங்க இந்தக் கொடுமையை விடலே. ஆச்சு ஒரு
அஞ்சு வாரம். அண்ணனுக்கு எல்லா பரிட்சையும் முடிஞ்சது. அம்மாவோட உத்தரவுப்படி, மறுநாளே அவரு
'வத்தலகுண்டு'க்கு கிளம்பிட்டார். அப்பாடான்னு இருந்தது எனக்கு. அடுத்த ஒரு வாரத்திலே அக்காவுக்கும்
பரிட்சை முடிஞ்சது. சின்ன ஸ்கூல்தான் எப்பவுமே கடைசியா மூடுவாங்க. எனக்காக அக்கா இங்கேயே
இருந்தாங்க. என்னோட பரிட்சையும் முடிஞ்சு, லீவு விட்டுட்டாங்க.மறுநாள் அம்மா வந்தாங்க எங்களைக்
கூட்டிட்டுப் போகறதுக்கு. வீட்டைக் காலி செய்யறப்ப என் ஃப்ரெண்டு லலிதா வந்து, அவளோட விலாசம்
எழுதுன காகிதத்தைக் குடுத்தா. அதைக் கையிலேயே வச்சிருந்தேன். அப்புறம் கிளம்பற அவசரத்துலே
மூட்டையிலிருந்த ஒரு டப்பாவிலே போட்டுட்டேன்.
வத்தலகுண்டு வந்து சேர்ந்த பிறகு, அஞ்சாருநாளைக்குப் பிறகு, 'அட்ரஸை'தேடிக்கிட்டிருந்தேன்.
எந்த 'டின்'னுன்னு தெரியலே. அப்புறம், வெல்லம் போட்டுவச்சிருந்த டப்பாவிலிருந்து, ஒரு காகிதம்
கிடைச்சது. அதுதான்......ஆனா, எழுத்தெல்லாம் ஈரவெல்லத்துலே காணாமப் போயிருந்துச்சு.
அம்மா, ஏதோ கோவத்துலே ரெண்டுபேரையும் பேசக்கூடாதுன்னுசொல்லிட்டாலும், அவுங்களுக்கு இதே ஒரு
கவலையாவும் ஆகிப்போச்சு. ரெண்டு பேருக்கும் என்ன இப்படி ஒரு பிடிவாதம் ? இந்தப் பிடிவாதம் மறையவே
யில்லை. சின்ன அக்காவுக்கு, பிரசவத்துலே ஏற்பட்ட சிக்கல்லே
அவுங்க உயிரை இழக்கும்படி நேரிட்டது.கடைசிவரை அவுங்க பேசிக்கவேயில்லை!
நன்றி!! மரத்தடி
ஜூலை 2004
Posted by துளசி கோபால் at 5/08/2005 08:29:00 AM 2 comments
Friday, May 06, 2005
முதல் எழுத்து!!!!!!
ஜனங்க வாழ்வுலே இந்த 'சினிமா'ன்றது எவ்வளவு தூரம் கலந்துருச்சுன்னு நினைக்கறப்ப ஒரே ஆச்சரியமா இருக்கு.
இனிமே சினிமாவையும், மனுஷங்களையும் பிரிச்சே பார்க்க முடியாது போல. போதாக்'குரை'க்குப் பொன்னி வந்தாளாம்னு
சொல்றதுபோல, இப்பப் புதுசா என்னவொ சொல்றாங்க நாய், பூனைங்கெல்லாம் டி.வி. போட்டாப் பாக்குதாம்!!!!!
இதைப் பத்திக் கொஞ்சநேரம் யோசிச்சப்ப இது நிஜமோன்னு ஒரு 'டவுட்டு' வருது! நம்ம வீட்டுலே தமிழ்ப் படம்
பாக்கறப்ப 'க்ரூப் டான்ஸ்' வர்றபோது, நம்ம பூனை டி.வி.யை முறைச்சுப் பார்க்கும்! கூட்டமா ஆளுங்க கலர்கலரா
ஆடறதும், டக்டக்குன்னு காட்சி மாறரதும்கண்ணை இழுக்குதோ? ஒண்ணும் புரியலையேப்பா!!!!
இந்தப் பதிவுலே போட்டிருக்கரது, நான் முதல்முதலா எழுதுனது.( நம்ம தமிழ்ச் சங்க மலருங்களிலே ஏற்கெனவே எழுதுனதை
எல்லாம் கணக்குலே சேத்துக்கலே!) மரத்தடி மக்கள் இதைப் படிச்சிருப்பாங்க. இது ஏற்கெனவே 'படிக்காத' வங்களுக்காக
( இதைத்தான் பொதுமக்களின் வேண்டுகோளை முன்னிட்டு.....னு சொல்றதோ)
என்னுடைய மலரும் நினைவுகளிலே 'வத்தலகுண்டு'ன்ற ஊர் பதிஞ்சு போனதாலே 'கதைக் களன்' அநேகமா அதைச்
சுத்திதான் இருக்கும். அதையே 'வத்தலகுண்டு விஷயங்கள்'ன்னு ஒண்ணொண்ணா எடுத்து இங்கெ போடலாமுன்னு
இருக்கேன். ( இதுவும் பொ.வே.மு)
********************************************************************
மக்களே,
இப்படி தியேட்டரைப் பத்தி எழுதினத படிச்சு, எனக்கு மறந்திருந்தது எல்லாம் ஞாபகம் வந்திருச்சு.
' ஹா, நான் எங்கே இருக்கேன்? நீங்கெல்லாம் யாரு?'
" நாங்க சினிமாவுக்குப் போறோம்."
நினைவுலே முதல்ல வருது, 'வத்தலகுண்டு'ல் இருந்த(?) சந்திரா டாக்கீஸ். ஓனர் இஸ்லாமியர்.
இராவுத்தர் குடும்பம். எங்களுக்கு நல்ல நண்பர்களாக இருந்தவர்கள்.
சாயந்திரம் முதல்பாட்டு 'வாராய், நீ வாராய்' போட்டவுடனே சினிமாவுக்குப் போற திட்டம் இருக்கற
நாளா இருந்தா, ஒரு வேகம் வரும் பாருங்க, என்னுடைய 'டீன் ஏஜ்'( கல்யாணத்துக்குப் பாத்துகிட்டிருந்தாங்க)
அக்காங்களுக்கு !
சினிமாத் திட்டத்தை முதல் நாளே அம்மா சொல்லிடுவாங்க. அப்பத்தான், மறுநாள் பொழுது விடிஞ்சதிலிருந்து
என்ன உடுத்தறது,சுலபமான, ராத்ரி சமையல் (சினிமா விட்டுவந்து, நான் தூங்கிகிட்டே சாப்பிடுறதுக்கு)
எது தோதுப்படும் அப்படி, இப்படின்னு பல விதமான ஆலோசனைகள் நடக்கும்.
ஒரு மூணு, மூணரை மணி ஆச்சுன்னா, போச்சு. பூக்களை, வேகம் வேகமா பறிக்கறதும், கட்டறதும்,
சலவையிலிருந்து வந்திருக்கும் புடவைகளில், கஞ்சி போட்ட நல்ல மொற மொறப்பான சேலைகளையும்,
அதுக்கு 'மேச்சிங் ப்ளவுஸ்' தேடறதும் நடக்கும். அதுக்குள்ளே, நான் ஸ்கூல்ல இருந்து வந்துருவேன்.
முதலில், என்னை ரெடி பண்ணிடுவாங்க. நான் ரொம்ப தொல்லையாம். கவுனை அழுக்குப் பண்ணாம
இருக்கணும்னு உத்தரவு வேற. சரின்னு உக்காந்திருப்பேன். அப்பல்லாம் டி.வி.வரலை. நீங்கல்லாம்
பிறந்துகூட இருக்கமாட்டீங்க.
ரெண்டு அக்காங்களும் ட்ரெஸ் மாத்தப் போவாங்க. அவ்வளவுதான்.டெய்லர், சரியான அளவுலே 'ப்ளவுஸ்'
தைக்காததும், புடவைக்குக் கஞ்சி சரியாகப் போடாததும், அப்படிப் போட்டிருந்தாலும், சரியாக 'இஸ்திரி'
போடாததும் கண்டுபிடிக்கப்படும். பீரோவுலே, இருக்கற அத்தனை புடவைகளும் வெளியே வந்துவிழும்.
அது சரியில்லே, இது சரியில்லே...அப்பாடா...ஒருவழியா புடவை மாத்தியாச்சுன்னா, அடுத்து இருக்கு
இன்னொரு கண்டம். பவுடர் பூசி, பொட்டு வைக்கிறது. பவுடர் O.K. பொட்டுதான் தகராறு. இப்ப மாதிரி
ஸ்டிக்கர் பொட்டு அப்ப கிடையாது. தரம் நல்லா இருக்காதுன்னு குப்பில வர்ற சாந்து வாங்கறது இல்ல.
வீட்டிலேயே கரும் சாந்து செய்து, ஒரு கிண்ணத்திலே இருக்கும். நல்லா காஞ்சு, கெட்டியா இருக்கும்.
அதுலே, இரண்டுதுளி தண்ணீர்விட்டு, குழைக்கணும்.( இப்ப அதுமாதிரி எங்கேயாவது செய்றாங்களான்னு
தெரியாது) நாசுக்காய் குழைக்க முடியாது. அதை ஒரு விளக்குமாத்துக்குச்சிலே எடுத்து, திலகமா வைச்சுக்
கணும். அண்ணைக்கின்னுப் பாத்து,கோண கோணயா வரும்.அதை அழிக்கறதுக்காக, இன்னொரு தடவை
முகம் கழுவி, பவுடர், பொட்டு இத்தியாதி. திரும்ப கோணப் பொட்டு, திரும்ப முகம் கழுவல்....
இப்படியே 3 அல்லது 4 தடவ ஆகும்.
இப்ப அம்மா ஹாஸ்பிடல் ரவுண்ட்ஸ் முடிச்சு வருவாங்க. நமக்கு எப்பவும் ஹாஸ்பிடல் காம்பெளண்ட்-லதான்
வீடு இருக்கும். எவ்வளவு நேரம்தான் நான் சும்மா உக்காந்திருக்க முடியும்? கொஞ்ச நேரம் விளையாடலாம்னு
தெருவுக்குப் போயிருப்பேன். அம்மாவப் பாத்தவுடன் ஓடி வருவேன். அம்மா உள்ளேபோய், அக்காங்களைக்
கேப்பாங்க," துளசிக்கு ஒரு நல்ல கவுனாப் போட்டு, தலைசீவி விடக்கூடாதா? " அவ்வளவுதான். எனக்கு மண்டகப்படி
ஆரம்பிக்கும்.
இதுக்குள்ளே, நல்லா இருட்டிடும். 'வாராயோ வெண்ணிலாவே'ன்னு ஒரு பாட்டுக் கேக்கும். படம் போடப்
போறான். சீக்கிரம் நடங்கன்னு சொல்லி, எல்லோரும் ஓட்டமும், நடையுமா ( அப்ப ஏது ஆட்டோவும்
டாக்ஸியும் ? அதுவும் வத்தலகுண்டுலே ?)போய் சேரும்போது, வழக்கம்போல படம் ஆரம்பிச்சு, ஒரு
20 நிமிஷமாவது ஆகியிருக்கும்.வேர்வை வழிஞ்சு பொட்டெல்லாம் கரைய ஆரம்பிச்சிருக்கும்.
இதுலே எங்களுக்குன்னு தனியா பெஞ்சுங்களுக்குப் பின்னாலே 'சேர்'போட்டு வச்சிருப்பாங்க
தியேட்டருலே.
படம் முடியற வரைக்கும், அக்காங்களுக்கு, மனசு 'திக் திக்'னு இருக்கும். ஏன்னா, ஆசுபத்திரியிலே
அர்ஜெண்டா கேஸ், கத்திகுத்து, ஆக்ஸிடெண்ட்னு வந்திடுச்சுன்னு வச்சிக்குங்க. உடனே தியேட்டருக்கு
ஆளு வந்துரும் டாக்டரைத்தேடி. உடனே எல்லாரும் கிளம்பி வீட்டுக்கு வந்துடணும். கால்வாசி, அரைவாசின்னு
நிறைய படம் பாத்திருக்கோம். சொல்ல மறந்துட்டனே, இடைவேளையிலே, நான் போய் பாட்டுப் புஸ்தகம்
வேற வாங்கிட்டு வரணும்.10 காசுன்னு ஞாபகம்.
அப்பா, வேலைகாரணம் வேறு ஊரில் இருந்தார். தனியாக ஒரு பெண்பிள்ளை (அம்மாதான்) வளர்ப்பு
என்பதால், ஏதாவது பேச்சு வந்துவிடுமோன்னு,கவனமா இருப்பாங்க எப்போதும்.
படத்துக்குப் போய்வந்த மறுநாள்தான் அக்காங்களுக்கு நிறைய வேலை இருக்கும். வெளியே வாரிப்
போட்ட துணிங்களையெல்லாம், மடிச்சு, பீரோவுலே அடுக்கவேண்டாமா?
நன்றி: மரத்தடி
23 ஜூன் 2004
************************************************************************
Posted by துளசி கோபால் at 5/06/2005 01:31:00 PM 8 comments
Thursday, May 05, 2005
சினிமா டே! !!!!!!
நேத்திருந்து ஒரே ஜலதோஷம்! மழையிலே நனைஞ்சுட்டேன்! அதுவும் பாராட்டு மழையிலே !!
குமிழி, பெயரிலி, முத்து, ஷ்ரேயா, தாரா, நரேன், டோண்டு, வசந்தன், விஜய், கிறிஸ், அன்பு எல்லோருக்கும் நன்றி!!!!
நேத்து மூவி டே! அதாவது மூணு படத்தை ஒரே நாளுலே பாக்கறதுன்னு ஒரு விரதம்!!!!
எல்லோரும் லேட்டஸ்டான படத்தை லேட்டாப் பாக்கறப்ப, நான் ..........
வசந்த மாளிகை, தில்லானா மோகனாம்பாள் அப்புறம் சிவந்த மண் இதுதான் நேத்தைய அஜெண்டா!
( இது மூணும்தான் ஒரே டி.வி.டி.யிலே இருந்தது!)
இந்தப் படங்களைப் பாக்கறப்ப கவனிச்சது என்னென்னா.....
தொழில்நுட்பத்துலே தமிழ் சினிமா ரொம்ப தூரம் கடந்து வந்துடுச்சு! நல்ல விஷயம்தானே?
'மேக்கப்' விஷயத்துலேயும் இப்ப நல்ல முன்னேற்றம் இருக்கு. அப்பத்து படங்களிலே வெள்ளை வெள்ளையா
திட்டுத்திட்டா முகம் ஒரு கலருலேயும், கை கால் வேற கலருலேயும் இருக்கு. லேடீஸ்ங்களுக்குப் புருவம்
எழுதுறோமுன்னு பட்டை பட்டையா கம்பளிப் பூச்சியை வளைச்சு வச்சிருக்கறது மாதிரி இருந்துச்சு!
சண்டைக் காட்சிங்க ரொம்ப சிம்பிளா, கொஞ்சத்துக்குக் கொஞ்சம் நம்புறமாதிரி இருந்துச்சு. இப்ப மாதிரி
க்ராஃபிக்ஸ் உபயத்தோட பறந்து பறந்து அடிக்கறது இல்லை!
பாடல் காட்சிகளிலும் ஒரே உடுப்புதான். ஒரு பாட்டுலே முப்பது 'ட்ரெஸ் ச்சேஞ்' இல்லை!
மாறாதது என்னன்னா, க்ளப் டான்ஸ்களும், கவர்ச்சி நடனங்களும்!!!! ஆனா ஒரு வித்தியாசம் உண்டு!
இப்பத்துப் படங்களிலே கதாநாயகியே இதைச் செஞ்சுடறாங்கல்லே. பழசுலே இதுக்குன்னே சி.ஐ.டி சகுந்தலா,
ஹிந்தி நடிகை ஆலம் இன்னும் சிலர்! இப்ப இதுக்குப் பேரு என்ன? ஒரு பாட்டுக்கு ஆடறதா?
இப்ப ஒவ்வொண்ணாச் சொல்றேன்.
வசந்த மாளிகை...
சிவாஜியோட விக் கொஞ்சம் வேடிக்கையா இருந்துச்சு! வாணிஸ்ரீ அழகா இருந்தாங்க. பெரிய்ய்ய்ய்ய கொண்டை!!!
பாலாஜியை பார்த்து ரொம்ப நாளாச்சு! அவரோட குழந்தை நம்ம ஸ்ரீதேவி. ஆறேழு வயசிருந்தா அதிகம்!
நாகேஷ், ரமாப்ரபா,வி.கே.ராமசாமி நகைச்சுவைக்கு! அப்படி ஒண்ணும் சிரிப்பு வரலை!
டாக்டர் வழக்கமாச் சொல்ற டயலாக் சொன்னார்,'நல்ல வேளை சரியான நேரத்துலே கொண்டு வந்தீங்க. இன்னு அஞ்சு
நிமிஷம் லேட்டாயிருந்தா அவ்வளவுதான்!
தில்லானா மோகனாம்பாள்.
அருமையான கதை, நடிப்பு, பாத்திரங்கள் தேர்வு எல்லாம் அட்டகாசம். அதிலும் டி.எஸ்.பாலையா இன்னும் ஜோர்!
ஜில்ஜில் ரமாமணி தூள் கிளப்பறாங்க. ஏஏஏஏஏஏஏஏஏஏன்? னு இழுத்துக் கேக்கறாங்க. வெகுளியான ஏஏஏஏஏஏன்?
இதுலே நாகேஷ் அல்டாப் வைத்தி! 'ஈவினிங் சிக்ஸ் ஓ க்ளாக்' னு இங்கிலீஷ் பேசறார்.'இந்த மாதிரி ஆளுங்க
உண்மைக்குமே நம்ம சமுதாயத்துலே நிறைய இருக்காங்கல்லே?'ன்னு நினைக்க வச்சாரு!
'நாட்டியப் பேரொளி' முதல் சீன்லே தொடங்கி, கடைசி வரைக்கும் 'மோகனா'வாவே வாழ்ந்துட்டாங்க!!!!!
நாகஸ்வரமும், தவிலும் தூள் கிளப்பிடுச்சு!
ஒருத்தரும் சோடை போகலை. எல்லோருமே அருமையாப் பண்ணியிருந்தாங்க!
சிவந்த மண்
புரட்சிக்காரர்களுக்கும், வசந்தபுரி நாட்டின்(!) திவானுக்கும் இடையிலே நடக்கற கதை! திவான் 'போர்த்துக்கீசியர்'
களுக்கு நாட்டை அடமானம் வைக்கறாரு!
காஞ்சனா, நாயகி! ஃபாரீன்லே படிக்கறாங்க. நாயகனும் அங்கெயே படிக்கறாரு. இயல்பாவே யூரோப் சுத்திப் பாக்கறது
கதைக்குப் பொருத்தமா இருக்கு.( நல்லவேளை, கனவு சீனுக்கு 'ஷாப்பிங் மால்'லேயும், ரோடுலே 'ஃப்ளாட்ஃபார்ம்'லேயும்
நின்னு ஆடலே!)
வெளிநாட்டுப் படப்பிடிப்பு நிஜமாவெ நல்லா இருக்கு! நிறைய செலவு செஞ்சு எடுத்திருக்காங்க அந்தக் காலத்துலேயே!
இதுலேயும் நாகேஷ்தான்! நல்லா சிறப்பா நடிச்சிருந்தாரு. நல்ல சிரிப்பு!!!!! இவருக்கு ஜோடி 'சச்சு'
நம்பியார்( திவான்) கூடவே ஒரு புலி வருது! நல்லா இருந்துச்சு!!!!!
நம்ம 'டோண்டு'கிட்டே ஒரு சந்தேகம் கேக்கணும். இதுலே பேசற 'போர்த்துக்கீசிய மொழி' நிஜமானதா? எனெக்கென்னவோ
ஹிந்தி, மராத்தியெல்லாம் கலந்து பேசறாங்களோன்னு இருந்துச்சு! இல்லே உண்மைக்குமே அப்படித்தான் இருக்குமா?
( நம்ம ஜனங்களுக்கு இது போதுமுன்னு நினைச்சுட்டாங்களோ?)
இந்த மூணு படத்துலெயும் மன நிறைவைத் தந்தது 'தில்லானா மோகனாம்பாள்'தான்!
எனக்கு இந்த பழைய படங்கள் பாக்கறது ரொம்பவெ பிடிச்ச விஷயம். பழசுன்னா அறுதப் பழசா இருக்கணும்!
ஒரு முப்பத்திஅஞ்சு வருசத்துக்கு முன்னாலே, மேற்கு மாம்பலம் நேஷனல் தியேட்டர்லே போட்ட எல்லாப் பழைய
படங்களையும் விடாம பார்த்திருக்கேன். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, வேதாள உலகம், பூலோக ரம்பை,
ஹாதீம்தாய், சிவகவி, ஜகதலப்பிரதாபன்,சக்ரதாரி, சம்சாரம், ரத்னகுமார், பாதாள பைரவி, மாயக்குதிரை ன்னு பலபடங்கள்.
இந்தத் தியேட்டருக்கு,'மேட்னி ஷோ'தான் போறது. இங்கெ படம் மட்டும் இல்லை, இந்தத்தியேட்டரே அறுதப் பழசுதான்!
எப்ப இடிஞ்சு தலை மேலெ விழுமோன்னு பயமா இருக்கும். அதாலெ வெளியே ஓடறதுக்குத் தோதா கதவுக்குப்
பக்கத்துலே இருக்கற சீட்டுலே உக்காந்துக்குவோம்!
சில சமயம் சிந்தாதிரிப்பேட்டை சித்ரா டாக்கீஸுலேயும் பழைய படங்கள் போடுவாங்க. புதுமைப் பித்தன், குலேபகாவலி,
மலைக்கள்ளன், கணவனே கண் கண்ட தெய்வம், சந்திரஹாரம், கற்புக்கரசின்னு அங்கெயும் பார்த்திருக்கோம்.
அப்புறம் இன்னோரு படம், பெயர் ஞாபகமில்லை. அஞ்சலிதேவியும் கிரிஜான்னு ஒரு நடிகையும் வீணை வாசிச்சுக்கிட்டே
பாடுவாங்க. 'சொன்ன சொல்லை மறந்திடலாமோ வா வா வா, உன் சுந்தர ரூபம் மறந்திடப் போமோ வா வா வா'
அப்படின்னு ஒரு பாட்டு இருந்ததா நினைவு! ( இல்லே இது வேற படமா?)
நாங்க எங்க பாட்டி வீட்டுலே இருந்த காலக்கட்டத்துலே, 'சினிமா'ன்றது கொஞ்சம் எட்டாக்கனி! பாட்டி டீச்சரா
வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. கூட வேலை செய்யற மத்த டீச்சருங்கெல்லாம் 'ரெகமெண்ட்' செஞ்ச படமா
இருந்தாத்தான் எங்களுக்கு ச்சான்ஸ்! அவுங்க கூட சினிமாவுக்குப் போறதுலே சுகமும் துக்கமும் சரிபாதியாக்
கலந்திருக்கும். சினிமாப் பாக்கறது மட்டும்தான் சுகம். ஆனா வீட்டுலே இருந்து கிளம்பித் திரும்ப வீடு வர்றவரை
அவுங்க போடற கண்டிஷனுங்க இருக்கே, அப்பப்பா!!!!!
முதலாவது தாவணியோட தலைப்பை விசிறிப் போட்டுட்டு வரக்கூடாது. முந்தாணியை இழுத்து முதுகை மறைச்சுத்
தோள்பட்டை வழியா போர்த்தியபடி வரணும். இதுகூட பரவாயில்லை. அப்புறம் அங்கே இங்கென்னு
பராக்குப் பார்க்காம தலையைக் குனிஞ்சபடி நடக்கணும். சளசளன்னு பேசிக்கிட்டே வரக்கூடாது. ம்ம்ம்ம்
அடுத்தது இருக்கே, அதுதான் இன்னும் மோசம். சிரிப்புக் காட்சி வரும்போது, சத்தம் போட்டுச் சிரிக்கக்கூடாது!
பொதுவா நான் சிரிச்சா ஏழூருக்குக் கேக்கும். அப்படிப்பட்டவளுக்கு எப்படி இருக்கும்?
ஒரே 'மிலிட்டரி'தான் போங்க! ( தாயில்லாப் பசங்களைக் கண்ணும் கருத்துமாப் பாத்துக்குறாங்களாம்!) வருசத்துக்கு
மூணு படம் பார்த்தா அதிசயம்!
அப்புறம் படிப்பு, வேலைன்னு 'ஹாஸ்டல் வாசம்' செஞ்சப்பத்தான், இத்தனை நாள் விட்டதைப் பிடிக்கறமாதிரி
இந்தப் பழைய பட வேட்டையை ஆரம்பிச்சது! அதுகாரணமோ என்னமோ, எனக்கு 'ஆன்ட்டீக்' பொருள்ன்னாப் போதும்
ஒரே ஆசைதான்!
இப்ப நானே வீடியோ லைப்ரரி நடத்தறேன். 'எல்லாப்'படங்களும் வந்துருது. வீடு முழுக்கப் படங்களா இறைஞ்சு கிடக்கு!
பாட்டி, 'மேலோகத்து'லே இருந்து பாத்தா அவுங்களுக்கு எப்படி இருக்கும்?
Posted by துளசி கோபால் at 5/05/2005 08:25:00 AM 8 comments
Tuesday, May 03, 2005
எண்ணி எண்ணிப் பார்க்க மனம்....
இப்படி ஆரம்பிக்கற சினிமாப் பாட்டு ஒண்ணு இருக்கு! யாருக்காவது தெரியுமா? ரொம்பப் பழைய படம்!
'எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம் கொண்டாடுதே
என்னை அறியாமல் உள்ளம் துள்ளி விளையாடுதே'
இப்படிப் போகும் அந்தப் பாட்டு...
ச்சின்ன வயசுலே இருந்தே இப்படி ஒரு பழக்கம். எங்கே போனாலும் ஜன்னல் கம்பி முதல், அங்கே எண்ணக்கூடிய
வஸ்து எதா இருந்தாலும் ஒண்ணு ரெண்டு மூணுன்னு ஆரம்பிச்சுடுவேன். எல்லாம் மனசுக்குள்ளேதான்!
அதுவும், ட்ரெயின் அதுலேயும் கூட்ஸ் ட்ரெயின்னா சந்தோஷம் கூடுதல், நிறையநேரம் எண்ணலாமேன்னு!
ஆனா இந்த எண்ணிக்கைகள் எப்பவுமே நினைவு இருக்காது. ச்சும்மா அப்பப்ப எண்ணறதுதான்!
இப்படிப்பட்ட நான் இதுவரைக்கும் இங்கெ போட்ட பதிவுகளை இன்னைக்கு எண்ணினேன்.
எதுக்கு எண்ணனும் ? அதான் 'டாஷ் போர்டு'லே சொல்லுதேன்னு பார்த்தா அது என்னவோ 22 ன்னு
காமிக்குது! நிதானமா எண்ணிக்கிட்டே வந்தப்பதான் தெரியுது இது 100வது பதிவுன்னு!( இதுலே 'சாமி'யைச் சேர்த்துக்கலே!)
ஆஹா..... சினிமா ஆளுங்க கணக்கா நாமும் 100வது....... கொண்டாடிடலாமுன்னு இந்தப் பதிவைப்
போட்டிருக்கேன்.
என்னுடைய 'அறுவை'யை ( சரியா?) இதுவரை சகிச்சுக்கிட்டிருந்த அனைவருக்கும் நன்றியைத்
தெரிவிச்சுக்கறேன்.
என்னையும் ஒரு படைப்பாளியா ஏத்துக்கிட்டு அங்கீகரிச்ச நம்ம 'மரத்தடி'க்கும், என்னை எழுதத் தூண்டிய
இ.சங்கமம் ஆசிரியர் விஜய்க்கும் என் மனமார்ந்த நன்றி!
இனிமேதான் இருக்கு உங்களுக்கு:-)
என்றும் அன்புடன்,
துளசி.
Posted by துளசி கோபால் at 5/03/2005 07:59:00 AM 14 comments
Sunday, May 01, 2005
முதியோரும் இளையோரும்!!!! தொடர்ச்சி
நாங்க கொஞ்ச நேரம் டீச்சரோட பேசிக்கிட்டே இருந்தோம். இப்ப எங்கே போய் பியானோ படிக்கிறான்னு கேட்டாங்க.
இது இன்னொரு பாட்டி டீச்சர்கிட்டேன்னு சொன்னேன்! அவுங்களுக்கு ஒரே சிரிப்பு! சந்தோஷமா இருந்துச்சு.
நாங்க வெளியே வந்தப்ப, அவுங்களும் எங்க கூடவே வெளி வாசல் வரைக்கும் வந்தாங்க. அப்ப அங்கே தோட்டத்துலே
இருந்த மத்த தாத்தா, பாட்டிங்கெல்லாம் ரொம்ப ஆவலா எங்களைப் பார்த்தமாதிரி இருந்துச்சு! என்ன சொன்னாலும்
நாம் வேற நாடு இல்லையா? நம்ம உருவமே நம்மை இனங்காட்டிடுமே!
'என்னோட மாணவி'ன்னு மகளை அறிமுகப்படுத்துனாங்க நம்ம டீச்சர். மரியாதைக்கு ரெண்டு வார்த்தை பேசிட்டு
நாங்க வந்துட்டோம்.
நானும் நினைச்சேன், 'இப்ப நம்ம டீச்சருக்கு நல்லாப் பொழுது போகும். வீட்டுலே ஒண்டிக்கட்டையா உக்காந்துக்கிட்டுப்
பேச்சுத்துணைகூட இல்லாம விக்விக்குன்னு இருந்ததுக்கு இப்போ விடிவு வந்துச்சு'ன்னு!
நான் இந்த ஊருக்கு வந்தப்ப என் மனசுலே பளிச்சுன்னு பட்டது என்னன்னா, இந்த பாட்டிங்க தான்! தாத்தாங்களை
யாரு கவனிச்சா? மகளுக்கு அப்ப அஞ்சு வயசு. ஸ்கூல் போக ஆரம்பிச்சிருந்தா. அவளைக் கொண்டு போய் ஸ்கூல்லே
விட்டுட்டு, அங்கேயே 'பேரண்ட் ஹெல்ப்'ன்ற பேருலே கொஞ்ச நேரம் ( ஒரு பத்துமணிவரை) இருப்பேன். எல்லாம்
மனசுக்குள்ளெ இருக்கற பயத்தாலேதான். அப்ப மொத்த ஸ்கூலிலும் இந்திய மாணவர்கள் ரெண்டே பேருதான்.
அதுலே ஒருத்தன் பையன். ஏதாவது இன சம்பந்தமா நடந்துடுமோன்ற பயத்துலே முக்காவாசி நேரம் நான் அங்கேயே
இருப்பேன். அதுக்குத்தோதா அங்கே இருக்கற லைப்ரரியில், வாலண்டியரா வேலை செஞ்சேன். அது ஒரு தனிக் கதை!
அதுக்கப்புறம் அப்படியே ஷாப்பிங் மாலுக்குப் போயிட்டு, வாங்கறதை வாங்கிக்கிட்டு, வீட்டுக்கு வருவேன். அந்த
நேரங்களிலே, நிறைய பாட்டிமாரை மால்களிலே பாக்கறதுதான். ரொம்ப நல்லா உடை உடுத்திக்கிட்டு வருவாங்க.
அளவான மேக்கப், குளிருக்கு நல்ல பேண்டிஹோஸ், ட்ரெஸ்ஸுக்கு மேட்ச்சா கழுத்துலே மணிமாலைங்க, காதுலே
கம்மல்! அதுவும் ஆட்டுக் கம்மல்( ட்ராப்ஸ்)இதெல்லாம் வெறும் காஸ்ட்யூம் நகைங்கதான். ஆனா கை விரலிலே
மட்டும், மின்னுற வைர மோதிரங்கள்!!! தலைமுடியெல்லாம் அளவா வெட்டி, பெர்ம் செஞ்சுக்கிட்டு, நீட்டா இருப்பாங்க.
நல்ல நிதானமா நேரம் எடுத்துக்கிட்டு, அலங்கரிச்சுக்கிட்டு வர்றாங்க போல! ஆனா, நானு? காலையிலே எழுந்ததுலே
இருந்து ஓடிக்கிட்டு இருக்கறதுலே, தலைமுடியெல்லாம் கலைஞ்சு, 'பரக்காவெட்டி'யாட்டம் இருப்பேன்!
நம்ம ஊர்ப் பாட்டிங்களை மனசு தானா நினைச்சுக்கும். நம்ம கலாச்சாரத்துலே அலங்காரமே வயசுக்குத் தகுந்தாப்பலதானே?
அதுவும், பொண்ணு வளர்ந்துட்டா, அந்தத் தாய்கூட தன்னை அலங்கரிச்சுக்கறதிலே ரொம்பக் கவனமா இருக்கணும்.
இல்லேன்னா 'நாலுபேர்' வாயிலே விழுந்து வைக்கும்படி ஆகிடும்! எங்க பெரியக்காவுக்குக் கல்யாணம் ஆனதிலிருந்து
எங்க அம்மா தலைமுடியை பின்னிக்காம, அப்படியே முறுக்கிக் கொண்டை போட்டுக்கிட்டது இன்னும் நல்லாவே
நினைவிலிருக்கு!
அதுமட்டுமில்லை. நம்ம ஊர்லே சில வீடுகளிலே வயது போன ஆட்களை நடத்தற விதம் இருக்கே, அப்பப்பா......
எனக்குத் தெரிஞ்சே,பக்கத்து வீட்டுப் பாட்டி சதா திண்ணையிலே உக்காந்துக்கிட்டு வெத்தலை பாக்கை ச்சின்ன உரல்லே
இடிச்சுக்கிட்டு கண்ணைச் சுருக்கிப் பார்த்துக்கிட்டு இருப்பாங்க. வீட்டுக்குள்ளே என்ன நடந்தாலும், இவுங்களுக்கு அங்கே
அனுமதி இல்லையாம். சாப்பாட்டையும் கும்பாவுலே போட்டுக் கொண்டுவந்து தர்றவரைக்கும் இந்த வெத்தலை பாக்குதான்
துணை! நான் சிலசமயம் அவுங்க வீட்டுத் திண்ணையிலே ஏறிப் போய் வெத்தலை இடிச்சுக் கொடுத்திருக்கேன். எப்பவாவது
சில நேரம் நம்ம வீட்டுக்கு வந்து அம்மாகிட்டே என்னவோ சொல்லி அழுதுகிட்டு இருப்பாங்க. அப்ப நான் ரொம்பச் சின்னவ.
என்ன நடந்திருக்குமுன்னு புரிஞ்சுக்கமுடியாத வயசு.
'வயசாச்சுல்லே. குடுக்கறதைத் தின்னுட்டு கிருஷ்ணா ராமான்னு இருக்கணும்' இந்த டயலாக்கை அடிக்கடி கேட்டிருக்கேன்.
ஆனா, இந்த நாட்டுலே பாருங்க,யாரு தயவும் இல்லாம சுதந்திரமா இருக்காங்க,வயது போனவுங்க! பொருளாதார
சுதந்திரம் இருக்கு! உண்மையைச் சொன்னா அதுதான் நிஜமான சுதந்திரம். யாரு கையையும் எதிர் பார்க்காம வாழறது.
இங்கே அரசாங்கம், வயது போன ஜனங்களுக்கு வாழ்க்கை உதவி பணம் கொடுக்குது. அதனாலே அவுங்க, பணத்துக்காக
புள்ளைங்களைச் சார்ந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை. ஒரு குறிப்பிட்ட வயசு ( இப்போ அது 65) ஆனவுடன்,
இது கிடைக்குது. முந்தியெல்லாம் அவுங்க கிட்டே ஏற்கெனவே எவ்வளவு சொத்து இருக்கு என்ற கணக்கெல்லாம்
இல்லாம இருக்கறவனுக்கும், இல்லாதவனுக்கும் ஒண்ணுபோல 60 வயசானவுடனே கொடுத்துக்கிட்டு இருந்தது.
ஆனா, இப்ப முதியோர்கள் எண்ணிக்கைகூடிவர்றதாலே, வயது வரம்பையும் 65 ஆக்கிட்டங்க. இப்ப சொத்து விவரமெல்லாம்
கேட்டு, அதுக்கேத்தாமாதிரி உதவித் தொகை கொடுக்க ஆரம்பிச்சிருக்காங்க. அது மட்டுமில்லாம, இப்ப அரசாங்கம்
சொல்லுது, 'சேமியுங்க உங்க ஓய்வு காலத்துக்கு'ன்னு! நமக்கு ஓய்வு வரும்போதுதான் தெரியும் அப்பத்து நிலமை என்னன்னு!
ஜனத்தொகை கொஞ்சம் கொஞ்சமாக் கூடிக்கிட்டே வருதில்லையா?
பாட்டிங்களைப் பத்திச் சொல்லிக்கிட்டு இருந்தேனே, இதெல்லாம் வயசானாலும், ஆரோக்கியமா இருக்கறவங்களைத்தான்.
இப்ப இவுங்களுக்கே முடியாமப் போச்சுன்னா, சமையல் வேலை, மத்த உதவிங்க செஞ்சு கொடுக்கன்னு 'ஹோம் ஹெல்ப்'
கிடைக்குது. 'மீல்ஸ் ஆன் வீல்ஸ் சர்வீஸ்' கூட இருக்கு. இதை முழுக்க முழுக்க வாலண்டியர்களைக் கொண்டே நடத்தறாங்க.
இந்த வகையிலே இல்லாம அதாவது எல்லாத்துக்கும் உதவி எதிர்பாக்கறவங்களா இருந்தா முதியோர்கள் இல்லத்துக்குத்தான்
போகணும்.
இங்கே குடும்பம் என்ற அமைப்புலே புள்ளைங்க பதினெட்டு வயசு வரைக்கும்தான் வளர்றாங்க. அப்புறம் அதுங்க
படிக்கறதுக்கு, வேலை செய்யறதுக்குன்னு போயிடுதுங்க. அதைத்தான் பெற்றோரும் எதிர்பார்க்கறாங்க. மிஞ்சிமிஞ்சிப்
போனா இருவது வயசு. அதுக்கப்புறமும் பிள்ளைங்க தாய் தகப்பன் கூட இருக்கற குடும்பத்தை விரல் விட்டு எண்ணிரலாம்.
அவுங்கவுங்க தன்னுடைய வாழ்க்கையைப் பாத்துக்கிட்டு இருந்துடறாங்க. இதுலே வயசான பெற்றோரை யார்
பாத்துக்கறாங்க?
அன்னையர்கள் தினம், தந்தையர்கள் தினம், கிறிஸ்மஸ் இந்த நாட்களிலேதான் முதியோர்கள் இல்லத்திலே ஆட்கள் குறைவாம்.
அன்னைக்கு மட்டும் அவுங்கவுங்க புள்ளைங்களோட வீடுங்களுக்கு போயிட்டு வராங்க! உள்ளூருலே புள்ளைங்க
இல்லைன்னா அதுவும் இல்லை!
நானும் மகளும் டீச்சரை ரெண்டு வாரத்து ஒருதபான்னு போய்ப் பார்த்துக்கிட்டு இருந்தோம். அப்படி பாத்துக்கிட்டு
இருக்கறப்பவே, அவுங்க நிலமை மோசமாக ஆரம்பிச்சிருச்சு. அறையை விட்டு வெளியே வர்றதேயில்லை!
சுத்தமும், சுகாதாரமும் குறைஞ்சது போல இருந்துச்சு! படுக்கை விரிப்புங்க மாத்தாம இருந்ததையும் ஒருக்கா கவனிச்சேன்.
இதைப் பத்தி நான் கேக்கமுடியுமான்னு தெரியலை. மனசுக்குள்ளே ஒரு பாரம் வந்தமாதிரி இருந்துச்சு! டீச்சரும்
ஏதோ வலியிலே இருக்கறது போல முகத்துலே சந்தோஷமே இல்லாம இருந்தாங்க. கேட்டதுக்கு ஒண்ணும் இல்லைன்னு
சொன்னாங்க.
அங்கே போயிட்டு வர்ற, ஒவ்வொரு முறையும் எனக்கு மன அழுத்தம் கூடிக்கிட்டே வருது. காலும் கையும்
நல்லா இருக்கற வரைக்கும்தான் வாழ்க்கைன்னு தோணிப் போச்சு. என்னுடைய நிலையையும் புலம்பலையும்
பார்த்துட்டு, எங்க இவர் கொஞ்ச நாள் சமாதானமா என்னமோ சொல்லிக்கிட்டு இருந்தார்.
ஒருமுறை, நானும் இவருமாப் போனோம். அன்னைக்கு அங்கே இருந்த நிலமை... ஐய்யோன்னு ஆயிருச்சு.
ரொம்ப அழுக்கான அறை. உடுப்பு கூட மாத்திவிடலை. மடிச்சுப் போட்டமாதிரி கட்டிலிலே அலங்கோலமா
விழுந்து கிடந்தாங்க. (என்னை அங்கே எல்லாருக்கும் பார்த்துப் பழக்கமானதாலே முந்தி மாதிரி யாரும் டீச்சர்
அறைக்குக் கொண்டு போறதில்லை) கூப்பிட்டுப் பாத்தும் கண்ணைத் திறந்து எங்களைப் பார்த்தாங்களே தவிர,
எங்களைத் தெரிஞ்சுக்கிட்ட அடையாளம் முகத்திலே வரலை!
நான் உடனே அங்கிருந்த 'பட்டனை' அமுக்கி உதவியாளரைக் கூப்பிட்டேன். அவுங்க ரொம்ப நேரம் கழிச்சுதான்
வந்தாங்க. என்ன இப்படி இருக்கேன்னு கேட்டதுக்கும் சரியாப் பதில் சொல்லலை. ஏனோதானோன்னு பாத்துக்கற
மாதிரி உணர்ந்தேன். போச்சு, என் மன நிம்மதி! எங்க இவருக்கும் அன்னைக்குதான் முதல் முதலா நிலைமையோட
விவரம் புரிபட்டிருக்கு.
நான் படற மனக்கஷ்டத்தைப் பார்த்துட்டு என்னை இனிமே அங்கே போகவேணாமுன்னு இவரு கேட்டுக்கிட்டார்.
என்னென்னவோ முயற்சி செஞ்சும் அங்கே டீச்சர் இருந்த நிலமையை என்னாலே மறக்க முடியலை! ஒரு மாசம்
போயிருச்சு.
பேப்பர் வாங்கறப்பெல்லாம்,( நாங்க சனிக்கிழமை மட்டுமே பேப்பர் வாங்கறது வழக்கம்) 'ஃப்யூனரல் நோட்டீஸ்'
பக்கத்தை என்னையறியாமலெயே பாக்கற வழக்கம் வந்துருச்சு. 'என்னத்தைத் தேடறென்'னு நினைச்சப்ப நான்
க்ரூரமா இருக்கறதுபோல இருந்துச்சு!
ஒரு நாள் மனசைத் திடப்படுத்திக்கிட்டுப் 'ஃபோன்லேயாவது விசாரிக்கலாம், டீச்சர் எப்படி இருக்காங்கன்னு' ஃபோன்
போட்டேன். இங்கே 'ப்ரைவஸி ஆக்ட்' இருக்கறதாலே அவ்வளவு சட்டுன்னு விவரம் கொடுக்க மாட்டாங்க. விவரம் சொன்னப்ப
எனக்கு வந்த பதில் 'அந்தப் பேருலே இப்ப அங்க யாரும் இல்லை'
இப்ப யாரும் இல்லைன்னா என்ன அர்த்தம்? வேற இடத்துக்குப் போயாச்சா? இல்லை, இந்த உலகை விட்டே
போயாச்சா? ஒண்ணும் புரியாமலேயே இப்ப மூணு வருசம் ஓடிப்போச்சு!
இது எனக்கு ஏற்பட்ட அனுபவம். ஆனா இப்படித்தான் எல்லா இடமும் இருக்குமுன்னு சொல்ல முடியாதில்லையா?
முதியோர் இல்லத்துலே இருக்கறவங்க 100 வது பிறந்த நாள் கொண்டாடினாங்கன்னு அப்பப்ப டி.விலே நியூஸ்
வர்றதுண்டு. இவுங்களுக்கு 'இங்கிலாந்து அரசியோட கையொப்பமிட்ட பிறந்த நாள் வாழ்த்து' அதிகாரபூர்வமா
'பக்கிங்ஹாம் அரண்மனையிலே இருந்து வந்துருது!
சில முதியவர்கள் அங்கேயே சந்திச்சு, காதலிச்சுக் கல்யாணமும் செஞ்சுக்கறாங்க. ரெண்டு பேருடைய கொள்ளு,
எள்ளுப் பேரன் பேத்திங்களொட 'மணமக்கள்' படங்களும் பேப்பருலே வந்துக்கிட்டுத்தான் இருக்கு! அதுக்கப்புறமும்
அங்கேயேதான் வசிக்கறாங்க. தினமும் 'டீ' முடிஞ்சபிறகு, அநேகமா எல்லோரும் ஒண்ணாக்கூடி கொஞ்ச நேரம்
பேசிக்கிட்டு இருப்பாங்களாம். சில நாட்களிலே நேத்துவரைக்கும் வந்தவுங்களிலே ஒருத்தர் 'காணாம' போயிடுவாங்க.
அன்னைக்கு மத்தவங்க அதைப் புரிஞ்சுக்கிட்டு, கொஞ்சம் அமைதியா, மெதுவாப் பேசிக்கிட்டு இருப்பாங்களாம். எல்லாம்
ஒரு ரெண்டு நாளைக்குத்தானாம். அப்புறம் பழையபடி பேச்சு, சிரிப்புன்னு இருப்பாங்களாம்.
'கடவுளுக்காகக் காத்திருப்பது' ன்னு சொல்றது இதைத்தானோ?
Posted by துளசி கோபால் at 5/01/2005 07:02:00 PM 5 comments