Monday, January 29, 2024

சரஸ்வதி பூஜை. நவராத்ரியின் ஒன்பதாம் நாள் !

நாம்  இன்னும் நவராத்ரியில்தான் இருக்கோம் என்று சொல்லிக்கொண்டு............ மறக்காமல் பொரிகடலையும் லட்டுமாய் ப்ரசாதம் ஆச்சு!   சட்னு காலைப்பூஜையை முடிச்சுக்கிட்டு,  ஒரு பொறந்தநாள் பார்ட்டிக்குப் போறோம். 
சீனியர் மக்கள் நாம் என்பதால்  நம்மாட்களின் வீட்டுக் கொண்டாட்டங்களுக்கு  அழைப்பு வந்துக்கிட்டே இருக்கும்.  நாமும் பெரியமனுஷங்களாப்போய் ஆசிகளை வழங்கிட்டு வர்றோம்.  குளிர்காலம் முடிஞ்சு ரெண்டுமாசம் ஆனாலும்  இன்னும் குளிர்விட்டபாட்டைக் காணோம்....
நண்பர் செந்தில்தான் அங்கேயும் கேட்டரிங். அருமையான  சுவை என்பதால் அவர் இனி எங்கே கேட்டரிங் செய்தாலும், தெரியாத இடமா இருந்தாலும்கூடப்  போகலாமேன்னு தோணுச்சு :-)நான் லேபர் டேன்னு சொல்லிக்கிட்டு இருந்தது  இன்றைக்குத்தான் . அக்டோபர் நாலாம் திங்கள். அரசு விடுமுறை என்பதால் எல்லோருக்கும் வசதிப்படுமேன்னு நம்ம யோகா குழு  என்ற  யோகாகுடும்பத்தை, நம்ம கொலுவுக்குக் கூப்பிட்டுருந்தோம்.  மதியம் ரெண்டு மணிமுதல் நாலுவரை என்ற ஏற்பாடு.  


நாலரைக்கு  எல்லோருமாச் சேர்ந்து இப்படியே கிளம்பிப்போய் இக்குடும்பத்தின் இன்னொரு அங்கத்தின் வீட்டில் கூடிக்களிக்கணும்.  கர்பா,  பொறந்தநாள் விழா, டின்னர்னு அங்கேயும் ஒரு ஏற்பாடு.  
அங்கே டின்னர் என்பதால், நம்ம வீட்டில் ஸ்நாக்ஸ் வகைகள் மட்டும்  போதுமுன்னு முடிவு. 

எல்லோரும் வந்ததும் ஆரத்தி எடுத்து, பஜனைப்பாடல்கள் பாடி, ஃபோட்டோ ஷூட் நடத்தி,  நொறுக்குத்தீனி தின்னுன்னு சம்ப்ரதாயப்படி எல்லாம் ஒன்னுவிடாமல் ஆச்சு:-)

நாலரைக்குக்கிளம்பினோம், நம்ம புதினா காட்டிலிருந்து கொஞ்சம் புதினாவுடன்.  பக்கத்துப்பேட்டைதான். பத்தே நிமிடப்பயணம்.  

இந்த இடம் விமானப்படையின் விமானதளமா (Air Base ) ஒரு காலத்தில் இருந்தது.  சரியா நூறு வருஷ சரித்திரம்.  மொத்தம் 1210 ஏக்கர் பரப்பு. 1923  முதல் 1940 வரை செயல்பட்டுக்கிட்டு இருந்த  இடம். 1935 லே   ஊருக்கான விமானநிலையம் கட்டிக்கும் எண்ணம் வந்த சிட்டிக்கவுன்ஸில் திட்டம்போட ஆரம்பிச்சு 1940 இல் புது இடத்துக்கு திறப்புவிழா நடத்திட்டாங்க.  அப்புறம் இந்த இடம் ஃப்ளையிங் ஸ்கூலுக்குப் பயன்பட்டது.  நம்மவர் கூட வேலைசெய்த  நண்பர் ஒருவரின் பயிற்சி வகுப்பில்,   வானத்தில் போய்  வட்டமடிச்சு வர்றதுக்கு  மகள் ஆசைப்பட்டாள் என்று அனுப்பினோம்.  அது ஆச்சு ஒரு 25 வருஷத்துக்கு முன் !

இப்போ  அங்கே ஏர்ஃபோர்ஸ் ம்யூஸியத்துக்குக் கொஞ்சம் இடம் ஒதுக்கிட்டு,  பிஸினஸ்  ஏரியான்னு கொஞ்சமும்  குடியிருப்புப் பகுதியா  சுத்திவரவுமா  ஆக்கிட்டாங்க. இங்கே உள்ள தெருக்கள், இடங்களுக்கெல்லாம்  த ரன்வே, லேண்டிங், Kittyhawk Road,  Skyhawk Road, Propeller Swim  School விமானம் சம்பந்தப்பட்ட பெயர்கள் சூட்டியிருக்காங்க.!  எனக்கு ரொம்பப்பிடிச்சுருக்கு, இந்த பெயர்கள் மட்டும்!    வளாகத்தின் வாசலில் இருக்கும் Harv, ard Aircraftதான் இது என்னவா இருந்ததுன்னு அடையாளப்படுத்துது.  அம்பதாவது வருஷ விழாவில்தான்  (1973)இந்த விமானத்தை வாசலில் வச்சாங்களாம் ! 
நம்மூர்லே ஒரு பேட்டையில்  Byron, Wordsworth, Shekespeare, Tennyson  இப்படி இங்கிலாந்து எழுத்தாளர்கள், கவிஞர்கள் பெயர்களையே சூட்டி இருக்காங்க அந்தக் காலத்தில் !   

வாங்க,  வீடு வந்தாச்சு.   புதினா டீயும், சில நொறுக்ஸும் ஆனதும்  கேக் வெட்டிப் பொறந்தநாளையும்  கொண்டாடிட்டு வாசலுக்குப் போனோம்.  

இந்த நண்பர்/ யோகா குடும்ப அங்கம் பற்றியும் ரெண்டு வரி சொல்லிக்கறேன்.  ரொம்பவே ஜாலியா மனிதர். வீட்டில் டும்டும் எல்லாம் வச்சுருக்கார்.  நாலைஞ்சு பகடிகள் வேற !  முக்கியமாச் சொல்ல வேண்டியது, அவர் பிறந்து வளர்ந்த கிராமத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்காக ஒரு பள்ளிக்கூடம் நடத்தறார்.   எட்டாம் வகுப்புவரை இருக்காம். அடுத்த வருஷம் ஒன்பது, அதற்கடுத்த வருஷம் பத்துன்னு வகுப்புகளைக் கூட்டணுமாம். புத்தகம், சீருடைன்னு  எல்லாமே இலவசம்தான்.  கல்விக்கட்டணமும் கிடையாது. 

வருடம் சில மாதங்கள் போய் தங்கி இருந்து பள்ளி நிர்வாகத்தையும்  கவனித்து வர்றார்.  கல்விக்கண்களைத் திறப்பதுதான் உண்மையான  தர்மமும் மகிழ்ச்சியும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

வாசலில் கர்பா ஆடினோம். எதுத்த வீட்டுக்காரங்க வியப்போடு பார்த்தாங்க. வீட்டம்மா அங்கே போய் அவுங்களுக்கு விளக்கம் சொல்லி, அவர்களுக்கும் அழைப்பு கொடுத்துட்டு வந்தாங்க.

ஆடி முடிச்ச களைப்பில் டின்னரை ஒரு கை பார்த்தோமுன்னு தனியாச் சொல்லவேணாம்தானே !


எல்லாம் முடிச்சுக் கிளம்ப மணி எட்டரை ஆச்சு.       

வேறொரு விசேஷப் பூஜையில் கலந்துகொள்ளப் போயிருந்த  சிலர் மதியம் நம்ம வீட்டுக்கொலுவுக்கு வரமுடியலை என்பதால் கொலு தரிசனத்தை விடக்கூடாதுன்னு நம்மோடு வீட்டுக்கு வந்துட்டுப் போனாங்க.குறையொன்னுமில்லை கோபாலான்னு நவராத்ரி நல்லபடியா முடிஞ்சது. 

மறுநாள் காலையில்............................


Saturday, January 20, 2024

இன்று எட்டாம் நாள் !

நவராத்ரி அஷ்டமி இன்றுதான். துர்காஷ்டமி !  ஞாயிறாக அமைஞ்சு போனதால் நாமும்   ஒரு நண்பர் வீட்டுக்கொலுவுக்குப் போகணும்.  இன்னும் சில  முக்கியமானவைகளையும் கவனிக்கணும். 
நம்ம வீட்டுப்பூஜையை சிம்பிள் & 'ஸ்வீட்டாக '  முடிச்சுக்கிட்டு  நண்பர் வீட்டுக்குப் போனோம். ஊரிலிருந்து அம்மா அப்பா வந்துருக்காங்க. இதோ அடுத்தவாரம் கிளம்பிப்போறாங்களாம். அதுக்குள்ளே மூணுமாசம் ஓடிப்போச்சுன்னு சொன்னாங்க.  நண்பர் இங்கே நம்மூரில்தான் இருந்தார். அப்புறம்  நம்ம தீவிலேயே இன்னொரு ஊருக்குப் போயிட்டு (அங்கே தம்பி குடும்பம் இருக்கு ) ஒரு வருசம் கழிச்சு இப்ப மறுபடி நம்மூருக்கே திரும்பிட்டார்.  

நண்பர் வீட்டுலே  கண்ணைக்கட்டி இழுத்தது கொலுப்படிகளே !   கிரியில் வாங்கியதாம்.  மச்சினர் அனுப்பிவைத்தார்னு சொன்னார். கொஞ்சம் 'விவரம்' வாங்கிக்கிட்டேன். 

அங்கிருந்து கிளம்பி நேரா நம்ம ஹரேக்ருஷ்ணா கோவிலுக்குப் போனோம்,  நேத்து  சனிக்கிழமை தரிசனம் கிடைக்கலையேன்னு....  காலையில் கோவிலை மதியம் ஒரு மணிவரை திறந்து வைப்பதால் நமக்கு சௌகரியமாத்தான் இருக்கு !  ஞாயிறு மாலை சத்சங்கத்துக்காக  கோவிலை ரெடிபண்ணி வச்சுருக்காங்க.   நாங்க  ஏகாந்த தரிசனம் செஞ்சுக்கிட்டு வீட்டுக்கு வந்தாச்சு.இன்னொரு தோழியின் குடும்பம் பகல் மூணு மணிக்கு வர்றதாச் சொல்லியிருந்தாங்க.  எல்லா வருஷமும் நம்ம வீட்டு கொலுவுக்கு முதல்நாள் முதல் ஆளா வர்றவங்க  FDFS இவுங்கதான்.  இந்த வருஷம் வேற ஊருக்கு மாறிப்போனதால் வர முடியலைன்னு  வருத்தப்பட்டவங்க,   லாங் வீக்கெண்ட் என்பதால் நேத்துக் கிளம்பி வந்துருக்காங்க. நாலரை மணி நேர ட்ரைவ்தான் !!!!   நாத்தனார் வீடு இங்கே நம்மூரில்தான்.  நம்ம ஜன்னுவின் விசிறி இவுங்க என்பது கூடுதல் தகவல் :-)

எல்லோருமா வந்துட்டுக் கிளம்பிப்போன கொஞ்ச நேரத்துலே இன்னொரு தோழியும் நண்பரும் வந்தாங்க. நம்ம புள்ளையார் கோவில் ட்யூட்டியில் இன்றைக்கு இவுங்க முறை.  அதனால் கோவிலுக்குப்போகுமுன் வந்துட்டுப்போறதா ஏற்பாடு.

அந்தக் காலத்துலே   தினமுமே  சாயங்காலமாக் கொலுவுக்குக் கிளம்பிப்போய் ஒரு அஞ்சாறு வீடுகளுக்கு விஸிட் பண்ணிட்டு  எட்டுமணிபோல வீடு திரும்புவோமே.... அதெல்லாம் இந்தக் காலத்துலே நடக்காது.  அநேகமா எல்லோரும் உத்யோகஸ்தராக  இருக்காங்க இல்லையோ ! அதனால்  ஒரு வீட்டுக்குப்போய் வர்றதுக்கே  நேரமில்லாமப் போயிருது.நம்மூரில்  கொலு வைக்கும் குடும்பங்கள்  ஒரு ரெண்டுமூணு இருக்கும். அதுக்கே இந்தப் பாடு. நாமும் வர்றவங்களுக்கு எந்தநாள், நேரம் தோதுப்படுமுன்னு கேட்டுக்கிட்டுக் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்தானே ? 

அவுங்க வந்துட்டுப்போனதும் நாங்களும் கிளம்பிட்டோம். தோழியின் நடனப்பள்ளியில் சலங்கைப் பூஜை.  இவுங்களை நம்ம கொலுவில் நிறைய முறை நடனமாடிப் பார்த்துருப்பீங்க.  இவுங்களும் நம்மூர் வழக்கப்படி நவராத்ரியில் வரும்  சனி ஞாயிறில்தான்  இதை வச்சுக்கணும்.  நேத்து ஊர் தீபாவளியாப் போனதால் இன்றைக்கு இவுங்க நிகழ்ச்சி.
பாட்டும் நடனங்களுமா  அமைஞ்ச நிகழ்ச்சியை ரசித்துப் பார்த்துட்டு, அங்கேயே  டின்னரையும் முடிச்சுட்டு வீடு வந்தோம். நண்பர்தான் கேட்டரிங் . நடன வகுப்பு  மாணவிகளின் பெற்றோர்களும், ஆளுக்கொன்னு பல வகை  சாப்பாடு  ஐட்டங்களைக் கொண்டு வந்துருந்தாங்க.

இப்படியாக  அன்றைய நாள் முடிந்தது !