Friday, October 29, 2010

அட! எவ்வளோ நாளாச்சு.......... கண்ணிலே பார்த்து.....

புதனுக்குப் புதன் 'சிங்ளா' கடைக்கு ஓடும் வழக்கம் கோபாலுக்கு இருக்கு. கூடவே ஒட்டிக்கிட்டு நானும் போவேன், வேண்டாததை எடுக்கும்போது கையை வெட்டத்தான்.....

இந்திய வாசத்துலே, பழைய பழக்கத்தைப் புதுப்பிச்சுக்கிட்டார். சென்னையில் இருக்கும்போது குமு(த்)தம் மாத்திரம் வாங்கிப்பார். இங்கே தமிழ்நாட்டை விட்டு வந்ததும் பிரிவாற்றாமையோ என்னவோ கண்ணில் பட்டதையெல்லாம் வாங்கும் குணம் வந்துருக்கு. குமுதம், ஆவி, குங்குமம், மங்கையர் மலர், கல்கி இப்படி....வாரிக்கிட்டு வந்துடறார். அதுவும் ரெண்டு வாரப் 'புதுசு':(

சி.செ.வில் இருந்து நடந்து வருதோ!!!!!


கல்கி ஆஃபீஸில் வேலை செய்யும் ஒருத்தர், நமக்குத் தெரிஞ்சவர். (கொசுவத்தி சமாச்சாரம். அம்மம்மா வீட்டு காலம்) அங்கே வேலை செய்யும் ஊழியர்களுக்கு கல்கி தீபாவளி மலர் இனாமாக் கிடைக்கும். அதை நேராக் கொண்டுவந்து நம்ம வீட்டுலே கொடுத்துருவார், அம்பது சதம் டிஸ்கவுண்டு ப்ரைஸ்லிலே! ஆ.வி.யில் வேலை செய்யும் நபர் யாரும் நமக்குத் தெரியாததால் அதை முழுக்காசு கொடுத்து வாங்குவோம். கல்கியும் சரி ஆ,வி.யும் சரி சின்னத் தலைகாணி சைஸுலே குண்டா இருக்கும். அட்டையில் கல்கியில் எப்பவும் சாமிப் படம். ஆ.வி.யில் அட்டையிலேயே ஒரு ஜோக் இருக்கும் என்ற நினைவு. குமுதம் தீபாவளிக்குன்னு தனியா ஸ்பெஷல்ஸ் போடுவதில்லை. தீபாவளி வாரத்துலே வரும் குமுதம், குனேகா வாசனையோடு வழக்கத்தைவிட தடிமனா, மொத்தமா இருக்கும்.

எப்படியோ இடைப்பட்ட காலத்தில் தீபாவளி மலர்கள் வாங்கும் வழக்கம் காணாமப் போயிருந்துச்சு நம்ம வீட்டில். போனவருசம் சென்னையில் இருந்தும்கூட இதெல்லாம் கண்ணில் படவே இல்லை. மறந்தும் போச்சு.

முந்தாநாள் ஆ.வி. தீ.ம. கண்ணில் பட்டுருச்சு. கோபாலின் கண்களில்தான்.
வேணாம் விடுங்கன்னா.....கேக்கலை. 'எவ்வளோ நாளாச்சு...... பரவாயில்லை ஒன்னு வாங்கிக்கோ'ன்னார். நகைக்கடையில், புடவைக்கடையில் மட்டும் இந்த டயலாக் வரவே வராது:(

பழைய தடிமன் இல்லை. அதுலே பாதியா இளைச்ச தோற்றம். அட்டையில் ஜோக் இல்லை. சூர்யாதான் இப்பத்து ஜோக்கா என்ன? வெளிப்புறம் மடிச்ச அட்டைக்குள்ளே போத்தீஸின் சாமுத்ரிகா பட்டு உடுத்துன ட்ரிஷா.
விளம்பரதாரருக்கு மேலட்டையிலேயே இருக்கணுமுன்னு என்ன ஒரு ஒரு பிடிவாதம்! இனிவரும் காலத்தில் பல 'மடிப்பு'கள் வருமுன்னு எதிர்பார்க்கலாம்.

திறந்தால்(புத்தகத்தை) அட்டவணையெல்லாம் போட்டு ஜமாய்ச்சுருக்காங்க. ரெண்டு பக்கம் பூராவும் சங்கதிகள். ஒரு பக்கம் பூராவும் விளம்பரங்கள். பாதிக்குப்பாதி! அதிலும் முன்னுரிமை விளம்பரதாரர்களுக்கே!

புள்ளையார் சுழிக்காக ஒரு 'ஹேரம்ப' கணபதி. ஆன்மீகத்துக்கு ஸ்ருங்கேரி சாரதா மடம். வம்பு வேணாமுன்னு காமகோடியை விட்டுட்டாங்க போல!

மஞ்சள் இடிச்சால் மணமாலையாம். துணைவனோ, துணைவியோ வேணும் என்று 'தவம்' செய்பவர்கள் 'ஹிரே மகளூர்' கோவிலில் போய் இடிச்சுட்டு வாங்க.

சங்கதிகளுக்குத் தலைப்புகள் போட்டு அழகா வகைப்படுத்தி வச்சுருக்காங்க.

ஆன்மீகம் என்ற தலைப்பில் ஏழு கட்டுரைகள். அதுலே ரெண்டு துளசிதளத்தில் வந்த ரெண்டு இடங்கள்

சுற்றுலா ஏழில் ரெண்டு, நம்ம து.தவில் அனுபவிச்சது! நமக்காக ஒரு யானைக்கூட்டத்தின் படம் கூட இருக்கு:-)

சந்திப்பு நாலில் நமக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்ச பாலகுமாரன்

கலையில் நாலு, கவிதையில் அஞ்சு, ஷாப்பிங் மூணு, சிறுகதைகளில் ஆறு, கலைஞர்கள் அஞ்சு, அனுபவம் நாலு, இதில் நம்ம எஸ்.ரா, இருக்கார். (அறு)சுவையில் ஏழு, வாழ்க்கையில் நாலு, கலாட்டாவில் மூணு, மற்றவையில் அஞ்சுமா இருப்பதைச் சும்மாப் புரட்டிப் பார்த்தேன்.


இங்கே இந்தியாவில் நான் கவனிச்சது வகைவகையான விளம்பரங்கள்தான். மார்கெட்டிங்கில் அதிவேக வளர்ச்சி. அது தொ(ல்)லைக் காட்சிக்கானாலும் சரி, அச்சு ஊடகமானாலும் சரி. சக்கைப்போடு போடுது. இதுகளை மட்டும் கவனிச்சால்......வறுமை, ஏழ்மை என்ற சொற்கள்கூட நாட்டைவிட்டு ஒழிஞ்சுபோய் எங்கும் எதிலும் வளமை மட்டுமே விரவி இருக்குன்ற எண்ணம் தோணிரும்.

எட்டு துணிக்கடை விளம்பரங்கள், அதுலே நைட்டிக்கும் ஒன்னு! நகைநட்டுக்குன்னு பார்த்தால் நாலே நாலுதான். அத்தனையும் வைரமோ வைரம். மக்களின் வாழ்க்கைத்தரம் ரொம்பவே உயர்ந்து வாங்கும் திறம் கூடிப்போயிருக்கு!

எட்டு வங்கிகள், வா வான்னு கூப்புடறாங்க. வங்கிகளைப் பத்தித் தனியா ஒரு நாள் புலம்பலை வச்சுக்கணும். நம்ம காசையும் கொடுத்துட்டு அதுக்கு அக்கவுண்டுஃபீஸ் ன்னு ஒன்னு மாசாமாசம் அழணும். நண்பர் ஒருவரின் சோகக் கதையை 'அப்புறம் ' வச்சுக்கலாம்.

அஞ்சு ஆஸ்பத்திரிகள், மூணு மருந்துக்கம்பெனி. 'ஸைபால்' விளம்பரம் ஒன்னு பார்த்து ஆச்சரியமாப்போச்சு. இன்னும் இருக்கா?

பெருங்காயம், பல்கலைகழகம், நம்மகிட்டே இருக்கும் ஒன்னுரெண்டு காசைக் குறிபார்த்து அடிக்கும் மணி மேனேஜர்கள், (இன்வெஸ்ட்மெண்ட் செஞ்சு பெருக்கிருவாங்களாம்) வீட்டுச்சாமான் விற்கும் வஸந்த் அண்ட் கோன்னு இன்னும் சில.

99 ரூபாய்க்கு பரவாயில்லையா இல்லை விலை அதிகமான்னு தெரியலை.

தீபாவளி மலர் பார்த்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துக்கிட்டே எல்லோருக்கும் தீபாவளி வாழ்த்து(க்)களை ஆறு நாளுக்கு முன்னேயே 'தமிழில்' சொல்லிக்கறேன்.

ஹேப்பி தீபாவளி!!!!!



Wednesday, October 27, 2010

கூலி மிகக் கேட்பார்.........

நேத்து கர்வா ச்சவுத் பண்டிகையாம். நம்ம வீட்டுக்கு வேலைக்கு வரும் சரோஜ், முந்தாநாள், பண்டிகை எப்ப? ன்னு கேட்டதும் நான் நம்ம தமிழ் நாள்காட்டி பார்த்து சதுர்த்தி புதன்கிழமைன்னு சொன்னேன். ஆனா பாருங்க நேத்து (செவ்வாய்)தான் அதுக்கான நாளுன்னு திங்கள் மாலை கடைக்குப் போனப்பத் தெரிஞ்சது.

ஒரு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸை ஒட்டி இருந்த இடத்தில் தாற்காலிகமா ரெண்டு கூடாரங்கள் முளைச்சுருக்கு. 'சௌபாக்கியச் சின்னங்களா' வளையல், பொட்டு, மருதாணின்னு அலங்காரச்சாதனங்கள் விற்பனை ஜரூரா நடக்குது. லேடீஸ் ப்யூட்டி பார்லர் மெஹந்தி போட்டு விட்டுக்கிட்டு இருக்காங்க. ரெண்டு கைகளும் நீட்டி உக்கார்ந்திருக்கும் மங்கையர். மருதாணி நிறைச்ச கூம்புகளை கொஞ்சமாக் கத்தரிச்சு, நூல்போல வரும் பசையைப் பரபரன்னு கைகளில் கோலமா வரைஞ்சுகிட்டு இருக்காங்க. கொஞ்சநேரம் நின்னு பார்த்தேன். என்ன ஒரு வேகம்! என்ன ஒரு டிஸைன்!!!! சூப்பர்! அம்பதே ரூபாய்தானாம்! போட்டுக்கயேன்னார் கோபால். ஆக்கிப்போட்டாப் போட்டுக்கறேன்னேன். ஆக்குனா மட்டும் போதாது. ஊட்டியும் விடணும் ஆமாம்:-)))




நாலைஞ்சு வீடுகளில் வேலை செய்யும் சரோஜுக்கு அஞ்சு குழந்தைகள். புருஷனுக்கு வேலை வெட்டி ஒன்னும் கிடையாது. வீட்டிலே 'சும்மா'தானாம். இதுலே வேலைக்கு வரும்போது அப்பப்ப மூத்த பொண்ணைக் கூட்டிக்கிட்டு வரும் வழக்கம்வேற. 'பள்ளிக்கூடத்துக்கு அனுப்பு. சின்னக் குழந்தையை வீட்டு வேலைக்கு வச்சுக்கறது சட்டப்படி குற்றம்'னு மிரட்டி வச்சேன்.

'வேற எங்கேயும் கூட்டிப்போக மாட்டேன். உங்க வீடுன்றதால் கூட்டிக்கிட்டு வந்தேன்.எனக்கு உதவியா இருக்குமே' ன்னு பதில். ட்ரெய்னிங் கொடுக்கறமாதிரி இருக்கே! தரை நோகாம துடைப்பத்தைப் பிடிச்சுப் பெருக்குனதுலே தெரிஞ்சது. இங்கெல்லாம் உக்கார்ந்துக்கிட்டே, நகர்ந்து நகர்ந்து பெருக்கறாங்க.
வேலை செய்யறதில் படு உஷார் நம்ம சரோஜ். வீடு பார்க்க வந்தப்பவே முன்னே இருந்த மிஸஸ். பானர்ஜியிடம் வேலை செஞ்சுக்கிட்டு இருந்த சரோஜ், நாம்தான் இந்த வீட்டுக்கு வரப்போறோமுன்னதும் 'நானே உங்களுக்கு வேலை செய்யறேன்' னு கேட்டுக்கிட்டதும் ஓக்கேன்னுட்டேன். புது இடத்திலே யாராலே உதவியாளர்களைத் தேடிக்கிட்டு ஓட முடியும்? எனக்கோ நியூஸி வாழ்க்கையில் உதவியாளர் இல்லாமலேயே எல்லா வேலைகளும் பழகிப்போச்சு. இங்கேயும் பெருக்கித் துடைக்க மட்டுமே உதவி தேவை. எங்கூர் மாதிரி வாரம் ஒரு முறை வீடு முழுக்கச் சுத்தம் செஞ்சாப் போதாது. மார்பிள் தரையெல்லாம் ஒரே தூசியும் அழுக்கும். எங்கெ இருந்துதான் வருதோ!

வேலையில் உஷார்னு சொன்னது நாம் பார்த்தா ஒரு மாதிரி பார்க்காமல் விட்டால் ஒரு மாதிரி. வேறு ஏதோ செய்யும் பாவனையில் வேலை நடக்கும் இடத்துக்கு அருகிலேயே நாம் நின்னோமுன்னால் கை கொஞ்சம் அழுத்தித் துடைக்கும். குனிஞ்சிருக்கும் தலையைத் தூக்காமலேயே அப்பப்ப ஓரக் கண்ணால் நம் இருத்தலை உறுதி செஞ்சுக்கும் ஒரு நோட்டம்! முதலில் சில மாசங்கள் நான் கவனிக்காம விட்டுட்டேன். வேலையைச் செஞ்சுட்டுப் போனால் சரின்னு. அப்புறம் பார்த்தா....... கை தொட்ட இடங்களில் எல்லாம் ஒரே அழுக்கு!

இங்கே பெருக்கித் துடைக்க, வீட்டில் ஜன்னல் கதவு எல்லாம் டஸ்ட் பண்ண, துவைக்க, பாத்திரம் தேய்க்க, காய்கறிகள் நறுக்கிக் கொடுக்க, சமையல் செஞ்சு வைக்க இப்படி ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியாச் சம்பளம். அடிஷனல் சர்வீஸா...... எண்ணெய் மாலீஷ் வேற இருக்காம்!!!!!

நாம் வந்த புதுசுலே ரெண்டு பேரா வேலைக்கு வருவாங்க. ஒருத்தர் வீட்டை டஸ்ட் பண்ண. மற்றவர் பெருக்கித் துடைக்க. வேற ஒரு வேலைக்கும் உதவி வேணாம். நான் செஞ்சுக்குவேன். எல்லா மாசமும் நல்லா வேலை செய்தால் கூடுதலாக ஒரு சின்ன ஊக்கத்தொகையும் கொடுத்துக்கிட்டு இருக்கேன். ஒரு மாசத்துலே டஸ்ட் பண்ணும் பொண்ணு கலியாணமுன்னு வேலையை விட்டு நின்னதும், அந்த வேலையையும் தானே செய்வதாக சரோஜ் சொன்னதும் கவலை விட்டதுன்னு இருந்தேன். காசு வாங்குவதில் உள்ள கவனம் வேலை செய்யறதில் இல்லை என்பதுதான் .......

அந்தக் காலத்தில் இருந்தே இப்படித்தான் இருக்குன்னு முண்டாசே சொல்லிவச்சுப் போயிருக்காரே! 'கூலி மிகக் கேட்பார்.........'

ஒன்னும் சொல்லாம திடுக் திடுக்குன்னு வேலைக்கு மட்டம் போடும் பழக்கம் வேற! காரணம்? வேலைக்கு வரச் சோம்பலா இருந்துச்சாம்!!!!! இது வேலைக்காகாதுன்னு ....... லீவு வேணுமுன்னா முன் அனுமதி வாங்கிக்கணும். சொல்லாமல் மட்டம் போட்டால் சம்பளம் அந்த நாளைக்குக் கட்! இது இப்ப நல்லா ஒர்க்கவுட் ஆகுது.

எப்பப் பார்த்தாலும் கணினியில் தட்டிக்கிட்டே உக்கார்ந்துருக்கறதைப் பார்த்து சரோஜுக்கு ஆச்சரியம். என்ன செய்யறேன்னு தெரிஞ்சுக்கணுமாம். இது என்னோட 'தொழில்'ன்னு சொன்னதும் 'காலி பைட்கி பட்டன் தபானா. இத்னாயிஹி!!!' பொட்டி தட்டறோமுன்னு தெரியுது பாருங்களேன்:-))))

இப்ப என்ன திடீர்னு வேலைக்காரர்கள் புராணம்? கர்வா ச்சவுத் கதை ஏத்திவச்சக் கொசுவத்தி:-)

நியூஸியில் ஒரு சமயம் இந்தப் பூஜைக்குப் போனது இங்கே இருக்கு பாருங்க. அஞ்சு வருசம் கழிச்சும் அதே கதைதான்:-)))))
ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் தீனிக்கடைகளில் கூட்டமான கூட்டம். சுடச்சுட 'ஆலு டிக்கி' தயாராகுது! பாத்திரக்கடையை எட்டிப்பார்த்தால் ஒரு ஜோடி, ஜல்லடை வாங்கிக்கிட்டு இருக்காங்க. புதுக்கல்யாணமா இருக்கும்! முதல் பண்டிகை.

'உனக்கும் ஒன்னு வேணுமா, விரதம் இருக்க'ன்னார் கோபால்.

'நகைக்கடைக்குப் போய் தங்கத்துலே இருக்கான்னு பாருங்க. விரதம் இருக்கறேன்'னேன்!



Monday, October 25, 2010

நாலுக்கும் மூணுக்கும் பழுதில்லை!

மழையான மழை அடிச்சுப் பேய்ஞ்சு ஒரே வெள்ளக்காடா இருக்கு. பார்க்கவந்த பெரிய ஆளைப் பார்க்க முடியலை. பொறுத்துருந்து தண்ணீர் வற்றினதும் போய்ப் பார்க்கணும். அதுவரை எதிரில் இருக்கும் மந்திரகிரி மலையில் தங்கி இருந்தாகணும். வேற வழி இல்லே. காத்திருக்கலாம்...........

மனசில் உறுதியோடு காத்திருந்தார் கலியன் என்ற திருமங்கை ஆழ்வார். பலநாட்களுப்பின் வெள்ளம் வடிஞ்சது. இதுக்கே ஆறுமாசம் ஆகி இருந்துச்சுன்னா பாருங்க! இந்த மலையில் இருந்து அந்த மலைக்குப்போகணுமே! மலையில் இருந்து இறங்கி ஒரு ரெட்டைமாட்டுவண்டியில் ஏறி அந்த மலையடிவாரத்துக்குப்போய்ச் சேர்ந்தார்னு வச்சுக்கணும். அந்த மாட்டுவண்டி இதுதான்னு நான் சாதிப்பேன் ஆமாம்;-))))
ஓடோடிப்போய் சந்நிதி வாசலில் நின்ற திருமங்கை ஆழ்வாருக்குத் தரிசனம் கொடுத்தான் அந்தப் பெரிய ஆள்! எப்படி? 'நின்ற, இருந்த, கிடந்த, நடந்த'ன்னு நாலு வகை! காத்திருந்தது வீண் போகலை.

நான் சென்னைவாசியா இருந்த காலங்களில் பலமுறை பஸ் பிடிச்சுப்போய் வந்த இடம்தான். கோபால் பார்க்கலைன்றதால் போகலாமேன்னு கிளம்பினோம். ஜிஎஸ்டி ரோடில் பல்லாவரம் தாண்டி கொஞ்சதூரம் போய் வலதுபக்கம் திரும்பணும் என்றது மட்டும் நினைவிருந்தது.


இப்ப என்னடான்னா....சென்னையே மாறிப்போச்சு. வழியெங்கும் மேம்பால வேலைக்காகத் தூண்கள் துண்டுதுண்டா நிக்க களேபரமா இருக்கு சாலை. நம்ம ட்ரைவரோ, வழி தெரியாதுன்னு முழிச்சார். வலதுபக்கம் திரும்பும் இடத்தை ஏற்கெனவே கோட்டைவிட்டாச்சு. க்ரோம்பேட்டையைச் சமீபிக்கிறோம். வாய் எதுக்கு இருக்கு? கேட்டுப்பார்ன்னு ஒரு இடத்தில் கேட்டு வந்தவழியில் திரும்பி லெஃப்ட் எடுத்து திருநீர்மலை ரோடைப் பிடிச்சோம். வழி நெடுக சென்னையின் விரிவாக்கம். ஒரு காலத்துலே ஆள் அரவமே இல்லாத சாலை இது!

தூரத்திலே இருந்தே மலைக்கோவில் தெரிஞ்சது. 42 அடி உசரமுள்ள மூடி வச்சத் தேரைக் கடந்து வலப்புறம் திரும்பினால் டபுள் லாட்டரி அடிச்சதுபோல கீழே ஒரு கோவில் மலை மேலே ஒரு கோவில். கீழிருக்கும் கோவிலில் ஐய்யப்பப் பக்தர்களின் கூட்டம். சபரிமலைக்குப் போகுமுன் நடத்தும் பூஜை. முதல்லே மலைக்குப்போய் வந்துடலாம். அதுக்குள்ளே கீழே கூட்டம் குறைஞ்சுருமுன்னு மலை ஏற ஆரம்பிச்சோம். நாலுமணிக்குக் கோவில் திறந்துருவாங்க. இப்போ மதியம் மூணரை. வெய்யில் கொஞ்சம் கடுமையைக் குறைச்சு நமக்குப் பேருதவி செஞ்சது.
பாரதப்போர் முடிஞ்சு ஏகப்பட்ட உயிர்களை 'மேலே' அனுப்பிய பாவம் போக்க , அர்ஜுனன் தவம் செய்ய வந்த இடம் இது. வரும்போதும் காண்டீபத்தைத் தூக்கி வந்துருப்பான் போல! காண்டீபன் வந்த அடையாளமா இதுக்கு காண்டீப வனம் என்ற பெயர் வந்துருக்கு. இங்கே இருக்கும் மலைதான் தோதாத்ரி. தோதா + அத்ரி. இந்த தோதா என்பது தோயா என்பதன் மரூவு. தோயா என்றால் தண்ணீர். அத்ரி என்றால் மலை. தண்ணீர் சூழ்ந்த மலை(ப்பகுதி). நீர்மலை!!

இப்போது நடக்கும் இந்த யுகங்களுக்கு முன்னால் இருந்த மூன்று யுகங்களில் தேவர்களும் ரிஷிகளும் எக்கச்சக்கமா யாகங்கள் நடத்தி அக்னிபகவானுக்கு ஆஹுதி கூடிப்போய் வயிறு மந்தமாப்போச்சு. ஒரே புளியேப்பம். நிறுத்தாம மேலேமேலே உள்ளே தள்ளுனா இந்த கதிதான். ஹாஜ்மூலா மார்க்கெட்டுக்கு வராத காலம். பெருமாளிடம் போய் முறையிட்டார். காண்டீபவனத்தில் போய் பச்சிலை மூலிகைகள் எல்லாம் எடுத்துத் தின்னு. வயிறு சரியாகுமுன்னு அனுப்புனார். சீக்கிரம் உடம்பு குணமாகணுமேன்னு ஒரு இலைவிடாமப் பிடுங்கித்தின்னு இடம் பொட்டல் காடாச்சு. வெப்பாலை மரங்கள் மட்டுமே பாக்கியா அங்கங்கே நிக்குதாம். இதுதான் இங்கே ஸ்தல விருட்சமும் கூட. சளி காய்ச்சலுக்கு நல்ல மருந்தாம் இது! வனத்தில் உஷ்ணம் தகிக்க ஆரம்பிச்சு அங்கே தவத்தில் இருக்கும் ரிஷி முனிவர்களுக்கு நிலை கொள்ளலை. நரகத்தில் வறுத்து எடுப்பதுபோல ............. அவுங்களும் அந்த நாராயணனிடத்தில் முறையீடு செஞ்சதும், கூப்பிட்டார் வருணனை. ஆர்டர் கிடைச்சதும் பொழிஞ்சு தள்ளினான். மலையே மூழ்கும் அளவுக்கு மழை!

காண்டவ வனத்தில் தோயாத்ரி மலைவாசல்னு அலங்கார நுழைவு வாசல். நல்ல அகலமான படிக்கட்டுகள் . ஒரே சீரான உயரத்தில் ஏற்றம். 200 படிகள். பாதி தூரத்தில் வலப்பக்கம் பிரியும் இடத்தில் நாலுபடி இறங்கி எட்டிப்பார்த்தால் சின்னதா ஆஞ்சநேயர் சந்நிதி ஒன்னு தனியா! ஒரு நமஸ்காரம் செஞ்சுட்டு திரும்பி மேலே ஏற ஏறக் கண்ணைச் சுழட்டுனா சுத்துப்புறம் எல்லாம் பச்சைப்பசேலுன்னு இருக்கு. அங்கங்கே புதுசா முளைச்சுருக்கும் கட்டிடங்கள். தொலைவிலே ஒரு பெரிய ஏரி. படம் பாருங்க. ஆடூ'ஸ் ஐ வியூ!
கோவில் முகப்புக்குப்போய்ச் சேர்ந்தோம். மூணுநிலைக் கோபுரமும் முன்மண்டபமுமா கச்சிதமான சைஸ். நாலு தூண்களிலும் இருக்கும் குதிரைவீரன்களின் சிலைக்கு வெள்ளையடிச்சு வச்சுருக்காங்க:( இது கல்கி மண்டபம். நம்ம கல்கி சதாசிவம் & எம் எஸ் சுப்புலக்ஷ்மி அம்மா தம்பதியர் கைங்கர்யம். அவுங்க கல்யாணம் இந்தக் கோவிலில்தான் நடந்துச்சு.
உள்ளே நுழைஞ்சால் வெளிப்பிரகாரம். இடப்பக்கம் ஆதிசேஷனுக்குத் தனிச்சந்நிதி. வலப்பக்கம் கொடிமரம் கடந்து ஒரு பத்துப்படிக்கட்டுகள். ஏறிப்போனால் படியின் முடிவில் நடுவாந்திரமா, பெரியதிருவடி சின்னதா நிக்கும் சந்நிதி. அவருக்கு நேரெதிரா கருவறையில் ரங்கநாதர் தாய்ச்சுண்டு இருக்கார். முகம் தெற்கு நோக்கி இருக்கு. முன்மண்டபம் கடந்து ரங்கனைத் தரிசிக்க ஓடறோம். கருவறைப்படிக்கட்டின் ரெண்டு பக்கமும் பாவை விளக்கேந்தும் பழங்காலப்பெண்டிர்! புடவை கட்டி இருக்கும் நேர்த்தியும் கழுத்து, கால் அணிகள் எல்லாம் 'புதுவிதமா'ப் பழயகால ஸ்டைலா இருக்கு. என்னமாதிரி நெக்லெஸ்!!!! ஆண்ட்டீக்...........

முன்மண்டபத்துலே நிறையக் கற்றூண்கள். சிற்ப வேலைப்பாடுகளுடன் இருக்கே.......ஜொலிக்க வேண்டாமோ? ஊஹூம்.....இஷ்டத்துக்குப் பெயிண்ட் அடிச்சு வச்சு மூக்கும்முழியும் தெரியாம இதைவிட மொண்ணையா வச்சுருக்க முடியவே முடியாது யாராலேயும்:( என்ன ஒரு கோராமை.........

பெருமாள் இங்கே ஸ்வயம்பு(வாம்). இது எட்டு ஸ்வயம் வ்யக்த க்ஷேத்ரங்களில் ஒன்னு. மற்ற ஏழும் எங்கே? ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, ஸாளக்ராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், பத்ரி. திருநீர்மலை சேர்த்தால் எட்டு.
அதனால் இங்கே மூலவருக்கு அபிஷேகம் இல்லையாம். தீண்டாத்திருமேனி. பாருங்களேன்...... தண்ணிக்கு நடுவிலே இருந்துக்கிட்டுத் தண்ணி ஆகாதுன்னா எப்படி!!!

கார்த்திகை மாசம் பௌர்ணமி தினத்தில் தைலக்காப்பு உண்டு. சாம்பிராணித் தைலம் மட்டும் பூசிக்குவார்.

பெருமாளின் பலவித சயனக்கோலங்களில் இங்கே மாணிக்க சயனம். மற்றதெல்லாம் என்னென்னன்னு மண்டையை உடைச்சுக்காதீங்க. கிடைச்ச விவரத்தை நானே சொல்லிடவா?

1. ஜல சயனம் - திருப்பாற்கடல்
2. தல சயனம் - மல்லை
3. புஜங்க சயனம் (சேஷசயனம்) திருவரங்கம்
4. உத்தியோக/ உத்தான சயனம் - திருக்குடந்தை
5. வீர சயனம் --திருஎவ்வுள்ளூர்
6. போக சயனம் -திருச்சித்ரகூடம்(சிதம்பரம்)
7. தர்ப்ப சயனம் - திருப்புல்லாணி
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை)- ஸ்ரீவில்லிபுத்தூர்
9. மாணிக்க சயனம் - திருநீர்மலை

அப்புறம் அனந்தசயனம், சேஷசயனம், பாலசயனம் ப்ரதான சயனம், விட்டேத்தியா ஆகாசத்தைப் பார்த்துக்கிடக்கும் சயனம் (அடையார் அனந்தபத்மநாபன்) இப்படி 'கிடக்கும்' ஸ்டைல்களே ஏராளம்.

சயனங்களைப்பற்றி இன்னும் விவரம் தெரிஞ்சவுங்க உங்க விளக்கங்களைச் சொன்னால் நானும் தெரிஞ்சுக்குவேன்.

தாயார் ரங்கநாயகி தனிச்சந்நிதியில். சேவிச்சுக்கிட்டு உட்ப்ரகாரம் சுத்துனால் பால நரசிம்மர். இவரைச் 'சாந்த நரசிம்மர்'ன்னும் சொல்றாங்க. ஹிரண்யவதம் முடிச்சதும் கோபம் அடங்காம சிலிர்த்த உடலோடு நின்ன சிம்ஹத்தைக்கண்டு ப்ரஹலாதனுக்கு உள்ளூர நடுக்கம். பாலகன் முகத்தில் பயத்தைப் பார்த்ததும்...'ஐயோ! குழந்தையைப் பயப்பட வச்சுட்டேனே'ன்னு இரக்கம் தோணி, அவனுக்குச் சமமா, அவனுக்கேத்த சைஸில் தானும் குழந்தையா மாறி 'இருக்கார்'. கைகள்கூட ரெண்டே ரெண்டு. நல்ல சைக்காலஜி. குழந்தைகளுக்கு இன்னொரு குழந்தையுடன் விளையாடத்தானே விருப்பம் கூடுதல். அதனால்தானே ப்ளே ஸ்கூல்கள் எல்லாம் சக்கைப்போடு போடுது;-)


சுத்திக்கிட்டே அடுத்து கிழக்கே வந்தால் 'நடந்தானாக' உலகளந்தப் பெருமாள் சந்நிதி. கருவறையின் வெளிப்புறச் சுவரையொட்டியே இருக்கார் த்ரிவிக்ரமன். மகாபலியின் தலையில் மூணாவது அடி வச்சவர். வைகாசி மாசத் திருவோண நக்ஷத்திரத் தினத்தில் இவருக்குத் தனி உற்சவம்.

உற்சவமுன்னதும் நினைவுக்கு வருது. பள்ளிகொண்ட பரந்தாமனின் உற்சவமூர்த்தி, கீழே இருக்கும் கோவிலில் தனியறையில் இடம்பிடிச்சு இருக்கார்.. ஸ்வயம்புவுக்கு அபிஷேகம் இல்லாததால் அபிஷேகம், திருமஞ்சனமெல்லாம் உற்சவர் செஞ்சுக்கறார். கூடவே ஸ்ரீதேவி, பூதேவியர். ஆண்டாளம்மாவும் கூடவே இருப்பது விசேஷம். ஒரே ஜாலிதான் போங்க:-) சித்திரை மாசம் நடக்கும் திருவிழாவின்போது இவர் மலைக்குப்போய் மூலவருக்கு ஒரு 'ஹை' போட்டுட்டு வருவாராம்.

வெளிப்பிரகாரத்தில் ஒரு சுற்றுப்போய் சுத்துப்புறக் காட்சிகளையெல்லாம் கவனிச்சோம். இந்த மலை இருக்குமிடம் 15 ஏக்கராம்.
ஒருமணி நேரத்தில் தரிசனம் முடிச்சுக்கிட்டுக் கீழே வந்தோம். மலைமேலே மனிதர்களைவிட ஆடுகள் அதிகமா இருக்கு. கீழே உள்ள கோவில் நிற்கும் நீர்வண்ணப் பெருமாளுக்கு. அழகான அஞ்சுநிலைக் கோபுரத்துடன் முன்வாசல். கோபுரத்தில் அங்கங்கே செடிகள் முளைச்சுருக்கு. மறக்காம சீக்கிரம் அதைப்பிடுங்கிப் போடலைன்னா....கொஞ்சநாளில் மரம்தான்:(
வால்மீகி முனிவர் காலத்துக் கோவிலாம். அவர் ராமாயணம் எழுதி முடிச்சதும் இங்கே வந்து ராமனை மனம் உருகப் பிரார்த்திச்சு 'ராமா.... உன் கல்யாணக்கோலத்தைக் காட்டு' ன்னு வழிபட்டதும் ராமர் அப்படியே சேவை சாதிச்சாராம். ராமர் சீதை, லக்ஷ்மண, பரத சத்ருக்கனர் மட்டுமே உள்ள சந்நிதி. கல்யாண ஸீனில் அனுமன் கிடையாதே! அதனால் அனுமனுக்கு தனியா மண்டபத்தில் ஒரு சிலை வச்சுருக்காங்க. பெரிய உருவம். எட்டடி இருக்கலாம். கழுத்துநிறைய ஸ்ரீராமஜெயம் எழுதுன (காகித)பிட்ஸ் மாலையோடு கைகூப்பியபடி நிக்கறார்.
உள்ளே நுழைஞ்சதும் ப்ரகாரத்தின் வலதுபக்கம் நீர்வண்ணனின் சந்நிதி. திருமங்கைஆழ்வார் மங்களசாஸனம் செஞ்சுருக்கார். பத்தொன்பது பாசுரங்கள். சுவற்றில் பொறிச்சுவச்சுருக்காங்க. பூதத்தாழ்வாரும் பாடி மங்களசாஸனம் பண்ணி இருக்கார்.
ரங்கநாதர் சந்நிதி ஒன்னும் இங்கே இருக்கு. அப்புறம் பெருமாள் கோவில்களில் வழக்கமாக இருக்கும் சந்நிதிகள், தாயார் பெயர் அணிமாமலர் மங்கை! ஆழ்வார்கள், சொர்க்கவாசல் இப்படித் தரிசனம் செஞ்சுக்கிட்டே வரும்போது அந்தப்பக்கமா ஒரு விஸ்தாரமான மண்டபத்தில் ஆண்டாள் சந்நிதி. கதவைக் கெட்டியா மூடிவச்சுருக்காங்க. மண்டபத்தில் ஐயப்பப் பக்தர்களின் கூட்டம். வழக்கமாப் பாடும் தூமணி மாடத்து பாடமுடியாமல் போச்சு:(
கோபுரவாசலுக்கு நேரா இல்லாமக் கொடிமரம் ஓரமா இருக்கு பாருங்கோ!

கோவிலின் உள்ளே 'படம் எடுக்க' அனுமதி இல்லை. ( சேஷனா இருந்தாலுமா? ) போயிட்டுப் போகட்டும். படங்கள் இருக்கேன்னு தலபுராணம் ஒன்னு வாங்கினோம். படங்களின் தரம் ஒன்னும் சரி இல்லை. 'நேரில் வா. பார்த்துக்கோ'ன்னு சொல்றானாயிருக்கும்.

பங்குனி மாசமும் சித்திரை மாசமுமா வருசத்துக்கு ரெண்டு தேர்த்திருவிழா நடக்குது இங்கே. ரெண்டு கோவிலுக்கு ரெண்டு முறை. கணக்குச் சரியாப்போச்சு.


வெளியே வரும்போது கவனிச்சேன்.......இங்கே(யும்) பௌர்ணமிக்குக் கிரிவலம் நடக்குதாம்.

இந்தக்கோவில் 'அந்த நூற்றியெட்டில் ஒன்னு'.

கோவில் சிறப்புன்னா.....நாலு கோலம், மூணு அவதாரம்!



ஓம் நமோ நாராயணா.


நன்றி: திருக்கோவிலின் தலவரலாறு

PIN குறிப்பு: சண்டிகர் போரடிக்குதேன்னு நேற்று சென்னைக்கு வந்தேன், என் கனவில்:-) உண்மையில் கோவிலுக்குப்போனது போன நவம்பர் மாசம்.


Friday, October 22, 2010

சந்த்ராக்காவின் லட்டுக் கம்மல் ( அ.க.ஆ.ஐ. 2)

மற்ற கிழமைகள் எப்படியோ......ஆனால் பொழுது விடிஞ்சதும், அன்னிக்கு வெள்ளிக்கிழமை என்பது மட்டும் பின்பக்கத்து ஜன்னல்கிட்டே போனவுடன் தெரிஞ்சுரும். வீட்டுக்குப் பின்னாலே இருக்கும் நெல்லிமரத்தடியில் எல்லாச்சாமானும் வந்து விழுந்துருக்கும். எல்லாச் சாமானுமுன்னா....எல்லாச் சாமானும்தான். வெளியே இருக்கும் சார்ப்பில் ட்ரங்கு பொட்டி ஒன்னும், ஒரு கள்ளிப்பெட்டியும், அதுமேலே அடுக்கிவச்ச பாயும் தலைகாணியும்.

வீடு என்னங்க பெரிய வீடு..... நம்ம வீட்டு ஓனர் பின்னாலே இருக்கும் காலி இடத்துலே ஒத்தைக்கல்லை வச்சு கோமணமாட்டம் நீளமா ஒரு அமைப்பைக் கட்டி மேலே கூரை போட்டு வச்சுருக்கார். அதை நாலாத் தடுத்து நாலுவூடு கட்டுனதுதான். பாகம்பிரிக்க நடுவுலே மண் சுவர். செங்கல் சுவருக்கும் வெறும் களிமண் பூச்சுதான். சிமெண்ட் பூச்செல்லாம் ஒன்னும் இல்லை.

மொத வூட்டுலே ஒரு இட்டிலிக்கார ஆயா. ரெண்டாவது வூட்டிலே டவுன் நாதெள்ளா சம்பத்து நகைக்கடையிலே வெள்ளி வேலை செய்யறவரும் அவர் குடும்பமும். புதுக்கலியாணம் கட்டுனவர். மூணாவது வூடுதான் நம்ம சந்த்ராக்காவுது. நாலாவது வூட்டிலே மரவேலை செய்யற ஒரு வயசானவர், அவருடைய மனைவி ரொம்ப நல்லா தன்மையா இருப்பாங்க. வரிசையா அடுக்கு மாதிரி நிறையக் குழந்தைகள். குழிக்குள்ளே போனதெல்லாம் கணக்குலே இல்லே! மூத்த பொண்ணைக் கட்டிக்கொடுத்தாச்சு. அந்தப்பொண்ணு புள்ளைத்தாய்ச்சியா இருக்கும்போது அம்மாவுக்கும் கர்ப்பம். வீட்டைவிட்டு வெளியில் தலை காமிக்காம உள்ளேயே இருந்தாங்க.....பாவம். ஒரு நாள் இடுப்புவலின்னு ஆஸ்பத்திரிக்குபோய்.....பையன் செத்தே பிறந்தான். ரெண்டு காதுலேயும் குண்டலம் மாதிரி இருந்துச்சுன்னு மக வந்து சொன்னதும் கர்ண மகாராஜாவை நினைச்சுக்கிட்டு நாங்களும் புள்ளையைப் பார்க்க ஓடுனோம். கிடங்குலே ரெண்டு ரூபா கொடுத்தபிறகுதான் துணிமூட்டையைக் கொண்டுவந்து பிரிச்சுக் காட்டுனாங்க. நல்லா பழுத்த இலந்தைபோல ரெண்டு காதுலேயும் லோலாக்கு.....பாவம்......

சரி. சந்த்ராக்காவைப் பார்க்கலாம். கை ரொம்ப கெட்டி. புளிபோட்டு தேய்ச்சப் பித்தளைப் பாத்திரங்கள் அப்படி ஜொலிக்கும். தேய்ச்சுக் கழுவுனதைப் பாயை விரிச்சுப்போட்டுக் காயவச்சுட்டு, வீட்டைப் பரபரன்னு மெழுகி முடிக்கும். அதுக்குள்ளே நல்லாக் காய்ஞ்சுபோன பாத்திரங்களை எல்லாம் உள்ளே எடுத்துப்போய் அடுக்கி வச்சுட்டுக் குளிக்கப்போகும். கால்வீசை மஞ்சளைப்போட்டுத் தேய்க்குமோ....... ஏற்கெனவே லேசான மஞ்சள் நிற உடம்பு இப்போ தகதகன்னு மின்னும். வெளியே வரும்போது புடவையைச் சுத்திக்கிட்டு ஒரு துண்டைத் தலையிலே கட்டி இருக்கும் பாருங்க....... ரெண்டாவதா ஒரு தலை முளைச்சதைப்போல..... இதுதான் எங்களுக்கு அப்போ ஆர்வத்தைக் கிளறும்.... நம்புங்க.... நாங்க சொல்றது அந்த ரெண்டாவது தலையை....துண்டை அவுத்துத் துவட்ட ஆரம்பிச்சா...... கண் கொட்டாமப் பார்ப்போம்.

எம்மாம் நீள முடி........... ஒரு வளைவும் நெளிவும் இல்லாம நேரா ஏதோ நீர்விழ்ச்சியில் இருந்து விழும் செங்குத்துத் தாரைபோல! சந்த்ரா அக்காவுக்கு ஒரு பர்மீஸ் கலப்பு இருக்கு. அந்த மஞ்சள் நிறம், கீறிவிட்ட கண்கள், நீளமுடி, கோணல்மாணல் இல்லாத குட்டிக்குட்டியானப் பல் வரிசை, கொஞ்சம் உசரம் குறைவான உடல் இப்படி எல்லாம் பார்த்தவுடன் 'சட்'னு தெரிஞ்சுரும். வாயைத் திறந்தா மட்டும் பக்கா லோக்கல் மெட்ராஸ் 'தமிள்'தான்.

சந்த்ராக்காவுக்கு ஒரு பையன். பெயர் பளனி. வயசு அப்போ ஒன்னரை, ரெண்டு இருக்கலாம். கண்ணுமட்டும் பளிச்ன்னு துருதுருன்னு இருக்கும்.
அக்காவுக்குச் சம்பந்தமே இல்லாத நேர்மாறான கச்சலான உடல்வாகு. அதானே அக்காவுக்கு சம்பந்தம் எப்படி இருக்க முடியும்? அக்கா வீட்டுக்காரர் இவன் ஒரு மூணுமாசக் குழந்தையா இருக்கும்போது 'எங்கிருந்தோ' கொண்டுவந்து கொடுத்தாராம். சந்த்ராக்காவுக்கு ரொம்ப வருசமாக் குழந்தைங்க இல்லையேன்ற ஏக்கம் தீர்த்தவன் பளனி. அக்காவோட சந்தோஷம், துக்கம், கோபம் எல்லாத்துக்கும் இவந்தான் ஒரு வடிகால். பளனியைப் பார்த்தாலே அக்காவோட மூடு எப்படின்னு கண்டுபிடிச்சறலாம்.

பகுடர் அடிச்சுத் தலைசீவி, நல்ல துணி போட்டுப் பளிச்சுன்னு இருந்தான்னா........ குஷி கூத்தாடுது.
ஙொய் ஙொய்ன்னு சிணுங்கிக்கிட்டு இருந்தால் அக்கா மனவருத்தமா இருக்கு. கத்தலும் கதறலுமா இருந்தா பளனி பழம் தின்னுருக்கார். ஒதைப்பழம். இதுலே வேடிக்கை என்னன்னா...கண்ணுமண்ணு தெரியாமக் குழந்தையை பின்னிட்டு, அக்கா தன் தலையிலேயே டம்டம்ன்னு அடிச்சுக்கிட்டு அழும். அந்தச் சின்னக் கண்ணுலே அப்படி ஒரு ஆறு எங்கே இருந்து வருதுன்னு தோணிப்போகும் நமக்கு.

ஆனா...ஒன்னு, இந்த அழுவாச்சி கிளுவாச்சி எல்லாம் வெள்ளிக்கிழமை தவிர்த்த மத்த நாட்களில்தான். வெள்ளிக்கிழமை மணி பன்னெண்டு ஆகும்போது அம்மாவும் மகனும் குளிச்சு முடிச்சு நல்ல துணி மாத்திப் பளிச்சுன்னு இருப்பாங்க. அன்னிக்கு மட்டும் இட்லிக்கார ஆயாகிட்டே வாங்கும் இட்லிதான் பகல் சாப்பாடு. அப்பவே அக்கா ப்ரஞ்சு பழக்கம் வச்சுருந்துச்சு:-)))))

சரியா ஒரு மணிக்குக் கிளம்புனாதான் டிக்கெட்டுக் கிடைக்குமாம். வெள்ளி வெள்ளிக்குப் புதுப்படம் போடுவாங்கல்லே. எந்தப்படம் என்றது பிரச்சனை இல்லை. வெள்ளிக்கிழமை பகல் ஆட்டம் பார்த்துறணும். முதல்நாள் முதல் ஷோ. அப்பெல்லாம் இந்தக் காலைக் காட்சிகள் புழக்கத்துக்கு வரலை.

சந்த்ராக்கா வீட்டுக்காரர் லாரி ஓட்டுறார். வாரத்துலே ஒரு நாளோ ரெண்டு நாளோதான் வீட்டுலே இருப்பார். சினிமாவுக்குக் கிளம்பும்போது அக்காவைப் பார்த்தால் அவரு வந்துட்டாரா இல்லையான்னு தெரிஞ்சுரும். காது மூளியாக் கிடந்தா அவர் வரலை. வியாழன் சாயந்திரம் அஞ்சுவரை காத்துக்கிட்டு இருக்கும் அக்கா, (அஞ்சடிச்சுருச்சா அடிச்சுருச்சான்னு நாலுதபா வந்து கேட்டுக்கிட்டுப் போகுமே) சட்னு நம்ம தெருவிலேயே இருக்கும் மார்வாடி கடைக்குப் பாயும். லட்டுக்கம்மலைக் கழட்டிக்கொடுத்து பத்து ரூபா வாங்கிக்கும். சினிமாச் செலவுக்குக் காசு வேணுமுல்லே? அஞ்சு பத்துன்னு யாருகிட்டேயும் கடனுக்குக் கை நீட்டாது. இருக்கும் ஒரே நகை மார்வாடி கடைக்குப் போறதும் வாறதுமாத்தான்.
நிறைய வெள்ளைக்கல்லை வட்டமா அடுக்கிவச்சத் தோடுதான் லட்டுக்கம்மல். இதுகூட சந்த்ராக்கா வச்ச பெயர்தான். சினிமாவுக்குப்போய் வந்ததும் தண்ணி பிடிக்கற சாக்குலே நம்ம வீட்டு முற்றத்துக்குக் குடத்தைத் தூக்கிட்டு (அடிப்பம்பு அங்கேதான் இருக்கு) வந்ததும் சினிமாக் கதையையும் அதுலே வந்த பாட்டுகளையும் விஸ்தாரமாச் சொல்றதைக் கேக்கவே நாங்கக் காத்துக்கிடப்போம். பாடல்வரிகள் எல்லாம் நினைவுருக்காதுன்னாலும் பொருள் மட்டும் நல்லாவே நினைவிருக்கும். பட்டப்'பகல்லே உன்னை பாக்க வந்தா.... நீ நைட்டுத்தான் வருவேன்னு அவ திருப்பிவுட்டுட்டா......பாடிகினே அழுவா.' (பகலிலே சந்திரனைப் பார்க்கப்போனேன். அவன் இரவிலே வருவதாக ஒருத்தி சொன்னாள்) எந்த விதமான பையாஸும் இல்லாம மனசுலே இருந்து வரும் உண்மையான விமரிசனம் அது.
குடும்பக் கதை பார்த்துட்டு வந்துச்சுன்னா .....கதை சொல்லும்போதே கண்ணுலே குளம் கட்டிக்கும். நாயகனோ நாயகியோ கஷ்டப்பட்டா...... சந்த்ராக்காவுக்கு கண்ணீர் பொத்துக்கிட்டு ஊத்தும். அடுத்த வெள்ளி வரும்வரை சினிமாப் பேச்சு வந்தா துக்கம் தொண்டையை அடைக்கத்தான் பேச்சே.

நாங்க அந்த வீட்டைக் காலி செஞ்சுபோய் ஒரு நாலைஞ்சு வருசம் இருக்கும். சந்த்ராக்காவை வேற பேட்டை மார்கெட்டில் பார்த்தேன். அக்காவுக்கு முடி எல்லாம் கொட்டி எப்படியோ இருந்தாங்க. அந்த வட்ட முகமும் சின்னக்கண்ணும் இன்னும் வத்திப்போய்க் கிடந்துச்சு. காதுலே மட்டும் லட்டுக்கம்மலின் மின்னல். அதை வச்சுத்தான் நானும் அடையாளம் கண்டுக்கிட்டேன்னு வையுங்க. ஒரு வருசமா உடம்பு ரொம்ப முடியலையாம். இந்தப் பேட்டையிலே புருசனுக்குத் தூரத்துச் சொந்தக்காரர் வீட்டுக்கு வந்துட்டாங்க. பளனி இஸ்கோலுக்குப் போறானாம். தர்மாஸ்பத்திரியிலே தினம் ஊசி மாத்திரைன்னு போய்க்கிட்டு இருக்குது.

பளனி அப்பா என்ன செய்யறாருன்னு கேட்டேன். லாரிதான் ஓட்டறாராம். அவருக்கும் இப்பெல்லாம் அவ்வளவா சுகமில்லைன்னு சொன்னாங்க.

அன்னிக்கு வெள்ளிக்கிழமைன்றது சட்னு ஞாபகம் வந்துச்சு. ஏங்க்கா.... சினிமாவுக்குப் போலையான்னு கேட்டால்.....ஊஹூம் னு தலை ஆட்டி, 'சினிமாவுக்குப் போறதில்லை இப்பெல்லாம்'னு சொன்னப்ப எனக்கு மனசுக்குச் சங்கடமாப்போச்சு.


PIN குறிப்பு: நம்ம ரிஷானுக்காக லட்டு + கம்மல் படம் போட்டுருக்கேன்:-)




Wednesday, October 20, 2010

பத்தவச்சுட்டாங்கப்பா............

பேச்சு, பேச்சா இருக்கணும். இன்னும் போர் ஆரம்பிக்கவே இல்லை. அதுக்குள்ளே மைதானத்தில் கால்கள் துண்டுதுண்டாகக் கிடந்தன. கேமெரா கையில் இல்லையேன்னு நொந்து போயிட்டேன். இவனால் நம்ம ப்ளான் எல்லாம் அப்செட் ஆகி இருக்கு.

நம்ம வீட்டில் நடக்கும் விஜயதசமி பூஜைக்கு மாலை அஞ்சு மணிக்கு வாங்கன்னு அழைப்பு அனுப்பி இருந்தோம். பிரசாதங்கள் எப்பவும்போல வீட்டுலே செஞ்சுக்கிட்டு கூடுதல் வகைக்காக இட்லி வடை வச்சுக்கலாமுன்னு நம்ம கார்த்திக் ரெஸ்ட்டாரண்ட் குணாவைக் கேட்டால்..... 'ஐயோ....ஞாயித்துக்கிழமையா!!!!! அன்னிக்கு கடை அப்படியே ராம்லீலா ராவணதகனம் நடக்கும் மைதானத்துக்கு இடம் பெயர்ந்துரும். எல்லோருக்கும் சுடச்சுட தோசை சுட்டுப்போடவே ஆள் இல்லை'ன்றார்.

சரி.... அதுக்காக பூஜையை நிறுத்த முடியுமா? கோபால்ஸ் எதுக்கு இருக்கு? அங்கே படை எடுத்தோம். ரெண்டு இனிப்பு வகைகளும் ரெண்டு உப்புவகைகளும் அம்பது பேர்களுக்கு. மறுநாள் பகல் ஒரு மணிக்கு வந்து எடுத்துக்கணும். டோக்ளா வாங்கிக்கலாமுன்னா அதுலே புதுவகை ஒன்னு வந்துருக்கு. ஸாலட் ஃபில்லிங், சட்னி எல்லாம் உள்ளே வச்சுச் சுருட்டிய சுருள் டோக்ளா. அதேகடலை மாவுதான். கூடக் கொஞ்சம் மைதா சேர்த்துருப்பாங்க போல! மெலிசாத் திரட்டி ஸ்டீம் பண்ணி நீளமா வெட்டி சுருட்டி இருக்காங்க. இனிப்புக்கு சம்சம், கேஸர் பேடா.

ராம்லீலாவின் கடைசிநாள் ராமராவண யுத்தம் நடந்து ராமன் ராவணனைக் கொல்லும் ஸீன். தினமும் ராம்லீலா நாடகம் பத்து மணிக்கு ஆரம்பமுன்னா சண்டை மட்டும் பொழுதோடயே நடந்து முடிஞ்சுருமாம். 'மாலை நாலுமணிக்கே சனம் போய் இடம்பிடிக்கும். அப்படி ஒரு கூட்டம் எல்லா மைதானங்களிலும் நெரியும். ஆறுமணிக்கு ராவணனைக் கொளுத்திருவாங்க. நீங்க அஞ்சு மணிக்கு பூஜை வச்சுருக்கீங்களே'ன்னார் நம்ம ராஜசேகர்.

ராவணனால் இப்படி ஒரு குழப்பம் வருமுன்னு யார் கண்டா? அழைப்பை மூணு மணியாக்குனோம். அஞ்சுமணிக்குள்ளே நம்ம வீட்டு விசேஷத்தை முடிச்சுட்டு நாமும் ஓடலாம் வேடிக்கை பார்க்க!
'அவ்வ காவல புவ்வ காவல' ன்னால் சின்னதா நாமும் சிலமாற்றங்கள் செய்யத்தானே வேணும்? காலையில் கொஞ்சம் சீக்கிரமா எழுந்து கடமைகளை ஆரம்பிச்சேன். முந்திரிப்பருப்பை ஒடிச்சு வைக்கும் பெரிய வேலைகளை கோபால் மனம் உவந்து ஏத்துக்கிட்டார். கேஸரியையும் கிளறிக்கிட்டே(!) இருந்ததையும் சொல்லிக்கறேன். வீடும் டைடி ஆச்சு.
சக்கரைப்பொங்கல், வெண் பொங்கல், கேஸரி, புளியோதரை, தயிர்சாதம், பட்டாணி சுண்டல், பழங்கள் நிவேத்தியத்துக்கு. பத்தரை மணிக்கு எல்லாம் ரெடி. நாங்க ரெண்டு பேருமா உக்கார்ந்து பூஜையை ஆரம்பிச்சு விஷ்ணுசகஸ்ரநாமம் படிச்சு முடிச்சோம். பனிரெண்டு. கொஞ்சம் பிரசாதங்களைச் சாப்பிட்டுட்டு (உப்புப் பார்க்கணுமே!) கொஞ்சம் ஓய்வுக்குப் பிறகு ஒருமணிக்குக் கிளம்பி நேரே மைதானத்துக்குப் போனோம்.

நடுவில் கருப்புச்சட்டையில் ராவணன், ஒரு பக்கம் 'மஞ்சச் சட்டை'யில் கும்பகர்ணன், இன்னொரு பக்கம் ஆரஞ்சு உடுப்பில் மேகநாதன் நெடுநெடுன்னு உசரமா நிக்கறாங்க. அம்பதடி உசரம் இருக்கலாம். மகாராஜா என்றதால் தலைக்குமேல் குடை எல்லாம் இருக்கு ராவணேஸ்வரனுக்கு. ரெண்டு காதுகளையும் ஒட்டி சின்னச்சின்னதா மாங்காய் போல இருக்கேன்னு பார்த்தால்..... அட! அதெல்லாம் அந்த எக்ஸ்ட்ராத் தலைகள்:-) நிறைய பட்டாஸ்களை உள்ளே வச்சுருக்காங்களாம். பத்தவச்சதும் பத்திக்குமாம்! கொஞ்சம் க்ளிக்கிட்டு அங்கிருந்து கோபால்'ஸ்.
வெளியே வெராந்தாவில் ஜிலேபி சுடச்சுடத் தயாராகுது. இன்னொரு வகையா தடிமனா முறுக்கு ரூபத்தில் ஒன்னு. ஜிலேபிதானாம். ஆனால் பனீர் ஜிலேபியாம். ராவண தகனத்துக்கு ஜிலேபி கட்டாயம் தின்னணுமாம். அதான் அடுப்பு வெளியே வந்துருச்சு.
பனீர் ஜிலேபி

உள்ளே ஓனர் கல்லா அருகில் இருக்கார். பெயர் ரபீந்தர். பாட்டியாலா ஊர்க்காரர். முதலில் அங்கேதான் இனிப்புக்கடை ஆரம்பிச்சுருக்கார். அம்பது வருசமா அது நடக்குது. இங்கே ஒன்பது வருசங்களுக்கு முன்னே ஒரு கிளை ஆரம்பிச்சாராம். அதுதான் இது. அதுக்குப்பிறகு இங்கே சண்டிகரில் இன்னும் ரெண்டும், பஞ்ச்குலாவில் ஒன்னுமா வெற்றிகரமான வியாபாரம். அடுத்தவருசம் கனடாவில் கடை போடறாங்களாம். அவரிடம் கொஞ்சநேரம் விவரம் கேட்டுக்கிட்டு நம்ம ஆர்டர் ரெடியான்னு பார்த்துக்கிட்டு இருந்த கோபாலிடம் போனால்........ 'ஏன் கோபால்ஸ்ன்னு பெயர் வச்சாருன்னு கேட்டியா'ன்றார். குட் கொஸ்சின்!!! பாராட்டிட்டு ரபீந்தரிடம் கேட்டதுக்கு, 'அப்பா பெயர் ஹர்கோபால். அதனால் கோபால்ஸ்ன்னு வச்சுட்டார்'
தீபாவளிக்கு இன்னும் இருபதே நாட்கள் தானாம். விளக்கு அலங்காரங்கள், பரிசுப்பொருளாக் கொடுக்க வடக்கத்துச் சம்பிரதாயமான பொருட்கள் இப்படி இன்னொரு பக்கம் குவிச்சுவைக்க ஆரம்பிச்சுட்டாங்க.

இது ஏறக்கொறைய நம்ம சரவணபவன் மாதிரின்னு வச்சுக்கலாம். தோசை, இட்லி வடை எல்லாம் செய்யறாங்க. ஆனால் இனிப்பு வகைகள்தான் கூடுதலா ரகம்ரகமா இருக்கு. எதுக்கும் இருக்கட்டுமுன்னு ரெண்டு சுகர்ஃப்ரீ ரஸ்மலாய் வாங்கிக்கிட்டோம். கொஞ்சம் வயசான பெரியவங்க ரெண்டு பேர் வர்றாங்க. நமக்குக் கொஞ்சம் பனீர் ஜிலேபி.
மூணுமணிக்கு விருந்தினர் வரத்தொடங்கி கலகலப்பா நேரம் போய்க்கிட்டு இருந்துச்சு. முக்கால்வாசிப்பேர் நார்த்தீஸ். நம்ம கோபால்கூட வேலை செய்யறவங்க. இந்தக் கொலுவைப் பார்த்தே(!) பிரமிச்சுப்போயிட்டாங்கன்னா பாருங்களேன். சென்னை வழக்கத்தைச் சண்டிகருக்கு அறிமுகம் செஞ்சு வச்சேன். அதான் ப்ளவுஸ் பீஸ் வச்சுக் கொடுப்பது. இந்த டூ பை டூ வாங்க செக்டர் செக்டரா அலைஞ்சுக் கடைசியில் 22D யில் கடையைக் கண்டு பிடிச்சோம். ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு செக்டர்ன்னு உசுரை வாங்கிடறாங்கப்பா இங்கே.

கோவிலில் பரிச்சயப்பட்ட ஒரு கேரளா தோழியும்( பஜன் ஸ்பெஷலிஸ்ட்.ஐயப்ப சமாஜம்) வந்துருந்தாங்க. கோபால் ஆஃபீஸ் வகையில் ரெண்டு கேரளக் குடும்பங்கள். விருந்தினர்கள் வந்து போகும் இடைவெளியில் சட்னு ஒரு சமயம் எல்லாருமே மலையாளிகளாவே இருக்கும்படியா அமைஞ்சது. இன்னும் அஞ்சு நிமிசம் ஆகி இருந்தால் கேரளசமாஜம் ஒன்னு தொடங்கி இருப்போம்:-)

அதுக்குள்ளே தமிழர்கள் வந்துட்டாங்க! சென்னையில் இருந்து மூத்த ஜோடி வந்துருந்தாங்க. மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு. நம்ம ஆல் இன் ஆல் ராஜசேகர் (கோவில் செக்ரட்டரி) ஒரு ப்ளானோடதான் வந்துருக்கார். அவருடைய மகள்கள் அருமையாப் பாடுவாங்க. நம்ம ஈஸ்வரன் (பேங்க் ஆஃபீஸர்) கையில் பை. உள்ளே தப்லா. நம்ம கோவில் நண்பர் சாஸ்திரி (விஷ்ணுசகஸ்ரநாமம் ஸ்பெஷலிஸ்ட்) குடும்பமும் ஆஜர். அவுங்க மகள் பாட்டு எப்பவும் தேன். ஜமா சேர்ந்தாச்சு!
நம்ம பெருமாள் புன்சிரிப்போடு கச்சேரி கேக்க ஆரம்பிச்சுட்டார். தெலுங்கு, தமிழ், மலையாளம், சமஸ்கிரதமுன்னு பாட்டுகள். கொடுத்து வச்சவர். இங்கே ஜமாய்க்கிறார். நல்லா இருக்கட்டும். அவர் நம் வீட்டுக்கு வந்த இந்த 11 வருசங்களில் இதுபோல இது முதல்முறை! 'லக்ஸோ' புதுப் பட்டுப்பாவாடை மினுப்பில் உல்லாசமா நிக்கறாள். போன வருசம் சென்னையில் உற்றார் உறவினர், பதிவுலகத்தோழிகள் என்ற வகையில் பிரமாதமா இருந்தது, நம் சங்கீதா, கிராண் ஸ்வீட்ஸ்' புண்ணியத்தில்.
கச்சேரி முடிஞ்சு எல்லோரும் பிரசாதம் சாப்பிட்டுக் கிளம்ப மணி ஆறுக்குப் பக்கம். ராவணன் பார்க்கும் அவசரத்தில் எல்லோரும் இருக்க நாங்களும் அவசர அவசரமா வீட்டைப்பூட்டிக்கிட்டு ஓடுனோம். பரேடு க்ரவுண்டைச் சமீபிக்க முடியாமல் அப்படி ஒரு ட்ராஃபிக் ஜாம். எரிச்சுட்டுத் திரும்பி வரும் கூட்டம். ராமன் தீ அம்பு போட்டானாம்! போறதுக்குள்ளேப் பத்தவச்சுட்டாங்கப்பா...........
நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டோமேன்னு இருந்துச்சுதான். மறுநாள் செய்தித்தாளில் வந்த படம் இதோ நமக்காக.

ராம்லீலா பல இடங்களில் நாடகம் நடந்தாலும், பாதுகாப்புக் கருதி
ராவணதகனம் மட்டும் பெரிய மைதானங்களில் மட்டுமே அனுமதிக்கிறாங்க. நெருக்கமான குடி இருப்புப் பகுதிகளில் பட்டாஸ் சிதறி தீ விபத்து ஏற்பட்டால் கஷ்டம்தானே? நல்ல பாய்ண்ட்ன்னு பாராட்டத்தான் வேணும்.

அடுத்தவருசம் பொழைச்சுக் கிடந்தால், எங்கே இருப்போமோ அங்கே கொலு.

அனைவருக்கும் தீவாவளிப் பண்டிகைக்கான அட்வான்ஸ் வாழ்த்து(க்)கள்.

Monday, October 18, 2010

புல்புல்தாரா

எப்படிங்க இதுக்கு இப்படிப் பெயர் வச்சாங்க!!! வடக்கர்கள் வச்சதா இருக்குமோ? எட்டாவது நாள் நிகழ்ச்சியா 'சுப்ரவீணா'ன்னு இருக்கேன்னு போனவ, அங்கே இதை வாசிக்கப்போகும் நபரைக்கண்டு அதிசயிச்சுத்தான் போனேன். கோவிந்தராஜன் அவர்களை ஒரு மூணு மாசத்துக்கு முன்னே இதே கோவிலில்தான் சந்திச்சேன். கணினி வேலை. சொந்த பிஸினெஸ். வெப்சைட் கூட பண்ணித் தர்றார் என்ற அளவில்தான் தெரியும். இன்னிக்குத்தான் பூனைக்குட்டி வெளியில் வந்தது!


வாதாபி கணபதே,

பண்டுரீத்தி கோலு

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே

அலைபாயுதே

ஆயர்பாடி மாளிகையில்

செத்தி மந்தாரம் துளசி

என்ன தவம் செய்தனை

ஹரிவராசனம்
இப்படி எல்லாமே தெரிஞ்ச பாட்டு என்றதால் அப்படியே ஒன்றிப்போக முடிஞ்சது. கோவிலின் ஆஸ்தான தப்லா வித்வான் ஈஸ்வரன் வழக்கம்போல் ஜமாய்க்க, சண்டிகர் நகரின் ஒரே மிருதங்கக் கலைஞர் கார்த்திக் இன்னொரு பக்க வாத்தியமா வாசிக்கக் கச்சேரி களை கட்டக் கேட்பானேன்!!!

அருமையான வாசிப்பு. அப்படியே கொசுவத்தியைப் பத்தவச்சுருச்சு. எங்க அப்பா புல்புல்தாரா வாசிப்பார். வயலினும் ஹார்மோனியமும் கூட வாசிப்பார். ஆனால் எதையுமே எனக்குத்தான் கத்துக்க வாய்க்கலை:(

இடைக்கிடையில் வளரும் கலைஞர்களா, கோவிந்தராஜன் அவர்களின் மகன்( பெயர் நினைவில்லை) 'கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும்' பாட்டையும். சகோதரிகள் ரம்யா & ராதா ராஜசேகர், 'ஸ்ரீமன் நாராயணா, மாணிக்க வீணை ஏந்தும் பாடல்களையும் ஷ்ரத்தா என்ற சின்னப்பொண் ஒரு ஹிந்தி பாட்டையும் பாடுனாங்க.

நம்ம கோவிந்தராஜன் ஜி, நாஸாவுக்காக ஒரு சங்கதியை வடிவமைக்கும் ப்ரோக்ராம் அனுப்பிக்கொடுக்க, அதை அவுங்க தெரிவு செஞ்சு அங்கே அழைச்சுருக்காங்க. அநேகமா அடுத்த மாசம் அவர் அமெரிக்கா போய்வருவார். என்ன ஏதுன்னு விளக்கம் இன்னொருநாள் கேட்டுச் சொல்றேன் உங்களுக்கு. கோயில்விழாவில் அதுக்கான சந்தர்ப்பம் வாய்க்கலை.

சனிக்கிழமை, சரஸ்வதி பூஜையை சாயந்திரம் செஞ்சுக்கலாமுன்னு காலையில் கிளம்பி PVR தியேட்டருக்குப்போனோம். இதுமாதிரி ஒன்பது மணிக் காலைக் காட்சிக்குப்போய் வருசம் 30 ஆகுது. வட இந்தியாவில் தமிழ்ப்படம் தியேட்டரில் வருதுன்னா.... போனாப் போகட்டுமுன்னு , ஞாயிறுகளில் காலைக் காட்சியா ஒரே ஒரு ஷோ போடுவாங்க அப்பெல்லாம். பூனா வாழ்க்கையில் அடிச்சுப்பிடிச்சு எட்டரை மணி ஆட்டத்துக்கு ஓடுவோம்.

சண்டிகர் தமிழ் மன்றத்துக்கு ஸோலார் பேனல்ஸ் போட்ட வகையில் ஆன செலவைச்சரிக்கட்ட 'எந்திரன்' (தமிழ்) ஏற்பாடாகி இருந்துச்சு. வெள்ளிக்கிழமை இங்கே அரசு விடுமுறை என்றபடியால் வெள்ளி, சனி, ஞாயிறுன்னு மூணு நாட்கள் மூணு ஷோக்கள். கோபாலோட வேலை வேற மாநிலம் என்றதால் வெள்ளிக்கிழமை வேலைக்குப் போயிட்டார்.

நல்ல கூட்டம்தான். அப்பப்ப விஸிலடிச்ச அம்பதாயிரம் தமிழர்களில் ஒரு பகுதியினரைக் கண்டேன். ஏற்கெனவே ஹிந்தி ரோபோ ஓடிக்கிட்டு இருக்கு இங்கே. ஒருவழியா நானும் எந்திரன் பார்த்துட்டேன். ஒலி அமைப்பு நல்லாவே இருந்துச்சு. சென்னையில் காதைப்பிளக்கும் வால்யூமில் வைக்கிறது மாதிரி இல்லை. ஆனால் பாட்டு ஸீன்களில் கூடுதல் சத்தம். காதை அடைச்சுக்கிட்டு உக்கார்ந்ததுலே லேசாக் கண்ணயர்ந்துட்டேன் போல!

படம் பார்த்தபிறகு நம்மாட்களின் விமரிசனங்களைப் படிச்சப்பத்தான் அரிமான்னு ஒரு பாட்டு வந்துச்சுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். படத்தின் பிற்பாதிதான் பிடிச்சது. வில்லன் ரஜினி நல்லாச் செஞ்சுருந்தார்.

மாலையில் கோவிலில் இன்னிக்கு ஒரு ஸ்பெஷல் விசேஷம்! சென்னைவாசிகளுக்கு நினைவிருக்குமோ என்னவோ...... ரெண்டு வருசத்துக்கு முந்தி, ஹனுமன் ரதத்தை இழுத்துக்கொண்டு பட்டதாரி வாலிபர் ஒருவர் உலக சமாதானத்துக்காகப் பாதயாத்திரை செய்கிறார்ன்னு செய்திகளில் வெளிவந்துருக்கு. தமிழ் மலையாளம்,. தெலுங்கு நாளிதழ்களின் பேப்பர் கட்டிங் எல்லாம் அழகா ஒரு ஃபோல்டரில் போட்டு வச்சுருப்பதைப் பார்த்தேன்.

'ஜெய் சீதாராம்' என்ற கோஷத்துடன் நம்மை வரவேற்ற ரமேஷ் அவர்களுக்கு நாப்பது வயசு. ஒடிசலான தேகம். ( இருக்காதா பின்னே...தினம் நாப்பது கிலோமீட்டர் நடையாச்சே. அதுவும் 800 கிலோ எடை உள்ள ரதத்தைக் கையால் இழுத்துக்கிட்டுப்போறார்.)

போனவருசம் ஃபிப்ரவரி 7 ஆம்தேதி திருப்பதியில் இருந்து கிளம்பி ஜம்மு-காஷ்மீர் போய், அங்கிருந்து கிளம்பி வைஷ்ணவோதேவியின் தரிசனம் முடிச்சுக்கிட்டு இங்கே சண்டிகர் வந்துருக்கார். நவராத்ரி ஆரம்பதினத்துக்கு முதல்நாள் நம்ம கோவிலுக்குப் போனப்ப, கோவிலின் உள் வளாகத்தில் (ஏர்போர்ஸ் டெம்பிள் காம்ப்ளெக்ஸ்) ஒரு தேர் நிற்குதே....ன்னு கிட்டப்போய்ப் பார்த்தால்..... தங்கமா ஜொலிக்கும் ஹனுமன் தாமரை பீடத்தில் அமர்ந்துருந்தார். என்ன விவரமுன்னு விசாரிச்சதில் இப்பத்தான் பத்து நிமிஷமாச்சு. இழுத்துவந்தவர் குளிக்கப் போயிருக்காருன்னு சொன்னாங்க. அநேகமா மறுநாள் கிளம்பிருவாராம். நமக்கு இன்னிக்குக் கோவிலுக்கு வரத்தோணுச்சேன்னும் அட்லீஸ்ட் நேயுடுவின் தரிசனம் கிடைச்சதேன்னும் திருப்தியா இருந்துச்சு.

மறுநாள் மாலையில் ரதம் அங்கேயே இருக்கேன்னு விசாரிச்சதில், நவராத்ரி நாட்களில் இங்கே இருந்துட்டுப் போங்கன்னு விண்ணப்பிச்சதில் சரின்னுட்டாராம். தினம்தினம் நமக்குத் தரிசனம் ஆகிக்கிட்டு இருந்துச்சு. நிறைய பக்தர்கள் இல்லாத தருணங்களில் சீதாராம் ரமேஷ் அவர்களிடம் பேச்சுக்கொடுத்து விவரங்கள் சேகரிச்சுக்கிட்டு இருந்தேன். (உங்களுக்குச் சொல்லும் கடமை உணர்ச்சி இருக்கே!)
108 கிலோ எடையில் 108 உலோகங்களின் கலவைகள் கொண்டு தயாரிச்ச விக்கிரகம். ரெண்டரை அடி உசரம். கண்ணாடிப் பெட்டிக்குள் இருக்கார். அப்போ எழுபதாயிரம் ரூ செலவாச்சாம். எப்போ? ஒரு நாலைஞ்சு வருசம் முன்பு. ரமேஷ் பி.டெக் படிப்பை முடிச்சுட்டு துபாயில் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தவர். இவருடைய தந்தை திருமலைதிருப்பதி கோவிலில் பட்டர். ரமேஷுக்கு திருமலைக்கு அருகே ஜாபாலி கோவில் பக்கம் ஒரு காட்டில் சின்னதா ஹனுமன் சிலை ஒன்னு கிடைச்சுருக்கு. அதைக் கண்டெடுத்ததில் இருந்து ஏதோ சக்தி இவரை ஆட்கொண்டதுபோல் ஹனுமன் பக்தரா மாறிட்டார். ஏற்கெனவே கோவில் ஆன்மீகமுன்னு பின்புலம் இருந்ததில் வெறும் பக்தி, அதீத பக்தியா வளர்ந்து விஸ்வரூம் அடைஞ்சுருக்கு. திடீர்னு துபாய் வேலையை விட்டுட்டு ஹனுமனுக்கே தன்னைக் கொடுத்துட்டார். கண்ணாடிப்பெட்டிக்கு முன்புறம் இன்னும் சில சின்ன அளவு விக்கிரகங்கள். இதுலே இடக்கோடியில் இருப்பவர்தான் கிடைச்சவராம்.
அனுமனை எல்லோரும் தரிசிக்க ஏதுவாக் கொண்டுபோய்க் காட்டலாமுன்னு ஒரு எண்ணம் தோணியிருக்கு. ஒரு ரதம் செஞ்சுருக்கார். முதல்முறையா 2007 அக்டோபர் 21 கிளம்புனவர் தமிழ்நாடு முழுக்க ஊரூராப்போய், பின்னே கேரளா, ஆந்திரா, கர்நாடகான்னு முடிச்சு வடக்கே கிளம்பி எல்லா மாநிலங்களும் போயாச்சு. ரதம் அப்போ 600 கிலோ எடையா இருந்துருக்கு. யாரிடமும் கைநீட்டிக் காசு வாங்கறதைல்லை. உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கையை ரதத்தில் வச்சுருக்கும் ஜெனெரேட்டருக்கு எரிபொருள் வாங்கப் பயன்படுத்திக்கிறார். பிரசாதவகைகள் பழங்கள் முதலியவைகளை தினமும் வாங்கிவச்சு பக்தர்களுக்குப் பிரசாதமாக் கொடுத்துக்கிட்டே போறார். இதுவரை 8500 கிலோமீட்டர் நடை. காலில் பாதணிகள் போட்டுக்கறதில்லை. சூடான இடங்களில் வெறும்துணிகளைக் காலுக்குச் சுற்றிக்குவாராம். காலை அஞ்சு மணிக்கு எழுந்து பூஜையை முடிச்சு ஏழு மணிக்குக் கிளம்பிப் போய்க்கிட்டே இருப்பாராம். போகும் வழியில் ஊர்களில் கிடைச்ச இடத்தில் தங்குவார். சிலசமயம் ஹைவேயில் தாபாக்களில்கூட தங்கி இருக்காராம்.
இப்போ ரதத்தின் எடை 200 கிலோ கூடி இருக்கு. மேடுகளில் ஏறும்போது இழுக்கவே முடியாத சிரமத்துக்கிடையில் பிடி விட்டுப்போச்சுன்னா பின்னார் சரிஞ்சு விழும் அபாயமும், கீழே சரிவான பாதையில் இறங்கும்போது கனம் தாங்காமல் ஆளையே இழுத்துத்தள்ளும் விதம் வேகம் இருப்பதாலும் ஒரு மோட்டார்சைக்கிள் இஞ்சின் பொருத்தி ப்ரேக் வச்சுருக்கார். ஆகமொத்தம் இப்போ ரதம் 800 கிலோ! சின்னதா கார்களில் இருக்கும் ஸிடி ப்ளேயர் ஒன்னு பொருத்தி பஜனைப்பாடல்கள் மெல்லிய குரலில் ஓடிக்கிட்டே இருக்கு.

ஒருநாள் சீதாராம் ஜெய் சீதாராமுன்னு ஒரு பாட்டுப்போய்க்கிட்டு இருக்கு. ஒரு பெண் அங்கே நின்னு அது எந்த சினிமாப் பாட்டுன்னு ஸ்வாமிஜி ரமேஷைக் கேட்டுப் பிச்சுப்பிடுங்கறாங்க. எதுன்னு தெரியாதுன்றார் அவர். ஸிடியை வெளியே எடுத்துப்பார்த்துச் சொல்லுங்கறாங்க. அது எம்பி3 யில் யாரோ ரெக்கார்டு செஞ்சு யாத்திரையில் ஏதோ ஒரு ஊரில் பக்தர் ஒருவர் கொடுத்ததுன்னா கேட்டால்தானே?

கடைசியில் உங்க செல்ஃபோனைக் கொண்டு வாங்க. அதிலே ப்ளூடூத் இருந்தா ரெக்கார்டு செஞ்சு தரேன்னதும்தான் இடத்தைக் காலி பண்ணுனாங்க. மனிதரில் பலவகை!

நவராத்திரி கடைசி நாள் சனிக்கிழமையாவும் இருந்ததில் இன்னிக்கு நம்ம சண்டிகர் கார்த்திக் ஸ்வாமி கோவிலில் ஹனுமனுக்கு அபிஷேக ஆராதனைகள் செஞ்சு வால்மீகி ராமாயணத்தில் சுந்தரகாண்டம் படிக்க முடிவாகி இருந்துச்சு. பொதுவா வடக்கே அநேக இடங்களில் துளசிதாஸர் ராமாயணம்தான் புழக்கத்தில் இருக்காம். சண்டிகரில் முதல்முறையா வால்மீகி!

காலையில் அஞ்சு மணிக்கு பூஜைகள் தொடங்கும். ப்ரேக்ஃபாஸ்ட், லஞ்ச், டின்னர் எல்லாமே கோவிலில் பக்தர்களுக்காக ஏற்பாடாகி இருக்கு. அஞ்சு மணின்னதும் நாம் முழிச்ச முழியே சரி இல்லை. அஞ்சு முதல் ஆரம்பம் எப்ப வேணுமுன்னாலும் வாங்கன்னு ரிலாக்ஸ் செஞ்சார் நம்ம ராஜசேகர். மாலை மலர்களால் அபிஷேகம் நடக்கப்போகுது. 500 கிலோ பூக்கள் வேணுமுன்னு சொன்னாராம் சீதாராம் ரமேஷ்.
மாலை ஆறுமணிபோலக் கோவிலுக்குப் போனோம். அரங்க மேடையில் ஊஞ்சலில் கண்ணாடிப் பெட்டிக்குள்ளே இருந்து
சேவை சாதிக்கிறார் நேயுடு. அலங்காரம் பிரமாதமா இருக்கு. முன்னே தரையில் அந்த சின்ன விக்கிரகங்களின் வரிசை. ஒரு பெரிய சாளக்ராம். ஹனுமன் சாளக்ராமாம். முதல்முறையாப் பார்க்கிறேன்.
தட்டுத்தட்டா சீர் வரிசை வச்சதுபோல சாக்லேட் வகைகள் ஒரு பக்கம். அபிஷேகம்தான் பார்க்கக் கிடைக்கலை நமக்குன்ற ஆதங்கத்தில் காலையில் கண்ணாடிப்பெட்டிக்குள் இருந்து வெளியே எடுத்து அபிஷேகம் ஆச்சான்னு ஆவலா விசாரிச்சேன். ஊஹூம்.... பொட்டியைத் திறப்பதில்லையாம். அபிஷேகம் எல்லாம் கண்டெடுத்தவருக்குத்தானாம். அப்பதான் அந்தக் கதையும் கிடைச்சது. சொல்ல மறந்துட்டேனே....பெரிய 'கதை' ஒன்னும் வச்சுருக்கார் ரதவண்டி முகப்பில்.
காலையில் 7 மணிக்கு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் முடிச்சு வால்மீகி ராமாயணம் படிக்க ஆரம்பிச்சு மூணரை மணிக்கு முடிச்சுருக்காங்க. கோவிலில் கொலு முன்னாடி ஒரு விரிப்பில் சாமந்திப்பூக்களாக் கொட்டிக்கிடக்கு. அதுலே இருந்து பக்கெட் பக்கெட்டா வாரி எடுத்து ஒரு பெரிய எவர்ஸில்வர் தொட்டியில் இதழ்களாப் பிச்சுப்போடும் வேலை ஆரம்பிச்சது. சின்னக்கைகள் ஏராளமா உதவிக்கு வந்தன. நம்ம கோபாலும் சாஸ்திரி என்ற அன்பரும் ( இவர்தான் நம்ம கோவிலில் விஷ்ணு சகஸ்ரநாமம் ஸ்பெஷலிஸ்ட்) பிள்ளைகளிடம் வேலை வாங்கிக்கிட்டு இருந்தாங்க. இன்றைய பூஜையின் முடிவில் பக்தர்கள் கைநிறைய வாரிவாரி மலராபிஷேகம் செய்யப்போறாங்களாம் குட்டி ஹனுமனுக்கு!
ஏழேகாலுக்குப் பஜனை ஆரம்பிச்சது. 'ராம் ராம் 'என்று உச்சத்தில் ஒலிக்க ஆரம்பிச்சதும் சாக்லேட்டுகளை வாரி கூட்டத்தில் இறைத்துக்கொண்டே ஆடறார் ரமேஷ்ஜி. பாட்டுகளின் நடுவே அந்த 'கதை'யைக் கையில் எடுத்துக்கொண்டு மேடைக்கும் தரைக்குமாகத் தாவிக்குதிச்சு அப்படி ஒரு ஆட்டம்.

எட்டுவரை இருந்து நிகழ்சிகளைப் பார்த்துட்டுக் கிளம்பிட்டோம் நாங்க.

பக்தியே ஒரு போதையா ஆகி இருக்கு! அதுலே மூழ்குனா வெளிவரமுடியாதபடி ஆகிரும் போல!
நவராத்திரி இன்றுடன் முடிஞ்சது. நாளைக்கு நம்ம வீட்டில் விஜயதசமி கொண்டாட்டம் இருக்கு. மறந்துடாதீங்க.......