Friday, October 21, 2005

கர்வா ச்சவுத்.






ஹிந்தி சினிமாக்களிலே 'நல்ல குடும்பப் படமு'ன்னா கட்டாயமா ஒரு 'ஸீன்' இருக்கும் இப்படி. நல்ல ஆடைஅலங்காரத்தோட
ஒரு தட்டுலே பூஜைசாமான்கள் குறிப்பா ஒரு அகல்விளக்கு எரிஞ்சுக்கிட்டு இருக்கும், அதைவச்சுக்கிட்டு ஆடிப்பாடி
ஒரு சல்லடையாலே நிலாவைப் பாப்பாங்க. அதுக்கப்புறம் அந்தச் சல்லடையை அப்படியே திருப்பி அவுங்கவுங்க
கணவனைப் பாக்கறமாதிரி 'சீன்' வருமுல்லே.

அது ஒரு விரதம். அதுக்குப் பேர் 'கர்வா ச்சவுத்'ன்றவரைக்கும்தான் எனக்குத் தெரியும். நாலுநாளைக்கு முந்தி,வட இந்தியத்தோழி
ஒருத்தர், 'இங்கே நம்ம ஊர்லே முதல்முறையா இந்த விரதத்துக்குள்ள பூஜையை நம்ம ஹரே கிருஷ்ணா கோயிலிலே
செய்யப்போறோம். நீங்க கட்டாயம் வரணுமு'ன்னு சொன்னாங்க. 'எங்களுக்கு இந்த விரதம் இல்லையே'ன்னு சொன்னேன்.
'ஆனா இதைப் பத்தித் தெரியும்தானே?'ன்னு கேட்டப்ப 'ஆங்... சினிமாவுலே பார்த்திருக்கேன்'னும் சொன்னேன். இப்ப
நேரிலே பார்க்க ஒரு ச்சான்ஸ். விடமுடியுமா? ச்சலோன்னுட்டு நேத்துச் சாயங்காலம் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தேன்.

அங்கே சுமார் ஒரு நாப்பதுபேர் வட்டமா உக்காந்திருந்தாங்க. எல்லார் முன்னாலேயும் ஒரு தட்டு. அதுலே ஒரு
விளக்கு எரியுது. பழம், வளையல், சில்க் கைகுட்டை இப்படி என்னவோ இருக்கு.கூடவே தட்டு பக்கத்துலே
ஒரு ச்சின்னச் சொம்பு( லோட்டா). வட்டத்துக்கு நடுவிலே கொஞ்சம் பழக்குவியல்.

கூட்டத்துலே இருந்த வயதுலே மூத்தவங்களான ஒருத்தர், பூஜைய ஆரம்பிக்கலாமுன்னு சொல்லி, கதையச்
சொன்னாங்க. ( கதை பின்னாலே வருது, பொறுங்க)

சொல்லிக்கிட்டு இருக்கப்பவே அப்பப்ப நிறுத்தி ஒரு பாட்டுப் பாடுனாங்க.அப்ப அவுங்கவுங்க முன்னாலே இருந்த தட்டை உயர்த்திக்
கும்பிட்டுட்டு அதை வலப்பக்கமா அடுத்தவங்களுக்குக் கொடுத்தாங்க. இப்படி எல்லாத்தட்டும் வலம் வருது. அவுங்கவுங்க தட்டு
அவுங்கவுங்களுக்கு வந்து சேர்றவரை அந்தப் பாட்டு ரிப்பீட்டு. ஒரு சுத்து முடிஞ்சதும் கதையைத்
தொடர்ந்து சொன்னாங்க. அப்புறம் தட்டுவலம் + பாட்டு. இப்படியே ஏழுமுறை ஆச்சு. சிலர் பாதியிலே வந்து சேர்ந்துக்கிட்டாங்க.
எல்லாருக்கும் ஏழு முடிஞ்சப்ப இவுங்களுக்கு ரெண்டு மூணுமட்டும் முடிஞ்சிருந்ததாலே அவுங்க தட்டைமட்டும் பாடிக்கிட்டே
வலம்வரச்செய்து அவுங்களுக்கும் ஏழு முடிச்சாங்க.

நமக்குத்தான் தட்டு இல்லையே. அதனாலே என்னைக்கடந்துபோற தட்டுங்களை ஒவ்வொண்ணாக் கவனிச்சுக்கிட்டு இருந்தேன்.
ஒவ்வொன்னும் ஒரு வகை. மண்அகல்விளக்கு, மாவுலே செஞ்ச விளக்கு, பித்தளை விளக்கு, சிலது ஆயில் பர்னருக்கு வைக்கிற
டீ லைட் கேண்டில் இப்படி.
பழமும் வாழை, ஆப்பிள், ஆரஞ்சு இப்படி ரகம்ரகம்.
சிலதட்டுலே என்ன இருக்குன்னே தெரியாம துணியாலே மூடி இருந்துச்சு.
ரெண்டு மூணு தட்டுலே ச்சின்னதா பூரி ஒண்ணு.

லேடீஸ் எல்லாம் நல்ல அலங்காரமா வந்திருந்தாங்க, நகையும் நட்டுமா! சிலருக்கு மூக்குத்தி வேற( எல்லாம் ஒட்டு மூக்குத்திதான்!).
ஆனா எல்லாருக்கும் கலர்கலரா கைநிறைய வளையல்கள்.

பூஜை ஆறுமணிக்கு முடிஞ்சது. இப்ப இங்கெ 'டே லைட் சேவிங்' இருப்பதாலே உண்மையான நேரம் அப்ப அஞ்சு
மணிதான். இவுங்கல்லாம் காலையிலே சூரியன் வரமுந்தியே குளிச்சுச் சாப்பிடணுமாம். அதுக்கப்புறம் தண்ணிக்கூடக்
குடிக்காம விரதம் இருந்து சாயங்காலமா நிலா வந்தபிறகுதான் அதைப் பார்த்துட்டுச் சாப்புடணுமாம். சிலர் சல்லடையாலே
பார்ப்பாங்களாம். சிலர் தட்டுலே தண்ணீர் நிறைச்சு அதுலே பிரதிபலிக்கிற சந்திரனைப் பார்ப்பாங்களாம்.

நம்ம நவராத்திரி பண்டிகை முடிஞ்சு பவுர்ணமி வருதுல்லே. அது கழிஞ்ச தேய்பிறை நாலாம்நாள் சதுர்த்திதான்
இந்த விரதம். கர்வான்னா ஒரு (மண்) சொம்பு. ச்சவுத் நாலாம்நாள்.

கோயிலிலே எடுத்த ஒரு படம் இதோடு போடறேன். வருமான்னு தெரியலை. ப்ளொக்கர் மனசு வைக்கணும்.



இதோ கதை.



ஏழு அண்ணன்மாருக்கு ஒரே ஒரு தங்கச்சி இருந்தாங்களாம். தங்கச்சியைக் கல்யாணம் செஞ்சு
கொடுத்தப்பிறகு, ஒரு விரதநாள் வந்துச்சாம். இது கல்யாணமான பொண்ணுங்க கடைப்பிடிக்கவேண்டிய விரதமாம்.
இந்த விரதம் எடுக்கறதுக்காக தங்கச்சி, தாய் வூட்டுக்கு வந்திருக்கு.

காலையிலிருந்து ஒண்ணும் சாப்புடாம தங்கை விரதம் இருக்காங்களாம். ராத்திரிக்கு நிலா வந்தபிறகு அதைப் பார்த்துட்டுத்தான்
விரதம் முடிக்கணுமாம். அருமைத்தங்கச்சி இப்படிப் பட்டினி கிடக்கறதைப் பார்த்துப் பொறுக்கமுடியாமப் போச்சாம் இந்த
அண்ணனுங்களுக்கு. என்னடா செய்யலாமுன்னு யோசிச்சுப் பார்த்துட்டு, பக்கத்துலே இருந்த மலை உச்சியிலே போய் கொஞ்சம் தீ கொளுத்துனாங்களாம்.
அந்த வெளிச்சம் தெரிஞ்சப்ப, தங்கச்சிக்கிட்டே நிலா வந்துருச்சு பாரு, அந்த வெளிச்சம்தான் தூரத்துலே தெரியுதுன்னு காமிச்சாங்களாம்.

தங்கச்சியும் சரி, இது நிலாவெளிச்சமுன்னு நம்பி, விரதத்தை முடிச்சுக்கிட்டுச் சாப்பாடு சாப்புட்டுட்டாங்களாம்.
அங்கே ஊர்லே தங்கச்சி புருஷனுக்கு திடீர்னு உடம்பு சரியில்லாம செத்துடறார். காரணம்?விரதத்தைச் சரியா முடிக்காம பாதியிலே விட்டது.
இந்த விவரம் தெரியாத தங்கச்சி புருஷனுடைய ஊருக்குஓடறாங்க. அப்ப வழியிலே நம்ம பார்வதி பரமேஸ்வரனைப்
பாக்கறாங்க. அழுதுகிட்டே இந்த நிலைவந்ததுக்குக் காரணம் கேட்டப்ப, பார்வதி சொல்லிட்டாங்க, நீ இந்த விரதத்தைச் சரியாச்
செய்யலேன்னு. அப்பத்தான் தங்கச்சிக்கு விளங்குது இந்த அண்ணன்மாருங்க செஞ்ச சதி.

பார்வதி & பரமேஸ்வரங்கிட்டே மன்றாடுறாங்க, இது அவுங்க( தங்கச்சி) செஞ்ச பிழையில்லேன்னு. மனம் இரங்குன
சாமிங்க, 'உன்புருஷனுக்கு திரும்ப உயிர் தரோம். ஆனா சீக்காளியா இருப்பான்'னு சொல்லிட்டாங்க.

ஆமாம், தங்கச்சி தங்கச்சின்னே சொல்லிக்கிட்டு வரேன்லெ. பொண்ணு பேரு வீராவதி. அதோட புருஷந்தான்
பக்கத்தூரு ராஜா. வீராவதி அங்கே போய்ச் சேர்ந்தப்ப, ராஜா மயக்கமா கிடக்குறாரு. உடம்பெல்லாம் ஒவ்வொரு
மயிர்க்காலிலும் முள்ளுமாதிரி ஒண்ணு குத்தியிருக்கு. வீராவதி அழுதுக்கிட்டே ஒவ்வொருமுள்ளா எடுத்துப் போட்டுக்கிட்டுப் பக்கத்துலேயே
உக்காந்திருக்காங்க. நாளு ஒண்ணொண்ணாக் கடந்துபோகுது. அப்ப அடுத்த வருசம் விரதம் இருக்கற நாளு வந்துருது. இந்தவருசம் கட்டாயம்
நியமப்படி விரதம் இருந்து புருஷன் நல்ல சுகமாவறதுக்காக சாமி கும்புடணுமுன்னு தீர்மானிச்ச வீராவதி, தாதியைக் கூப்பிட்டுப் புருஷனைப்
பார்த்துக்கச் சொல்லிட்டு பூசைக்கு வேண்டிய 'கரவா'ன்னு சொல்ற மண்சொம்பு வாங்கக் கடைக்குப் போனாங்க.

ராஜா உடம்புலே அப்பப்ப எடுத்த எல்லா முள்ளும் போக ஒரே ஒரு முள் பாக்கி இருக்கு. தாதி அதைப் பிடுங்கிப்
போட்டுருது. ராஜா மயக்கத்துலே இருந்து கண் முழிச்சுடறார். பக்கத்துலே இருந்த தாதியைத் தன் மனைவின்னு(!) நினைச்சுகிடறார்.
இந்தத் தாதியும் ஒண்ணும் சொல்லாம நைஸா இருந்துருது. வீராவதி விரதம் முடிச்சுட்டு வந்து பார்த்தா, ராஜாவும்
தாதியும் சந்தோஷமா இருக்காங்க. வீராவதிக்குத் துக்கம் தாங்கலை. அந்த வீட்டுலே இது இப்பத் தாதியா இருக்கு.

இப்படியே ரொம்பநாளாயிருச்சு. ஒருசமயம் ராஜா, ஊருக்குப் போறார். எதாவது வேணுமான்னு மனைவியை( பழைய தாதி)
கேக்கறாரு. அந்தம்மா பெரிய லிஸ்ட்டா கொடுக்குது. சரி, இந்த வேலைக்காரம்மாவுக்கு( ஒரிஜனல் மனைவி,வீராவதி) எதாவது
வேணுமுன்னா வாங்கியாரலாம்னு பெரிய மனசுபண்ணி அந்தம்மாகிட்டே கேக்கறார்.ஒரேமாதிரி ரெண்டு பொம்மை வாங்கித்தாங்கனு
சொன்னாங்க. அதெமாதிரி வாங்கியாந்தார்.

அந்தப் பொம்மைங்களைவச்சுக்கிட்டு 'ரோலி கி கோலி ஹோகயி,கோலி கி ரோலி ஹோகயி'ன்னு பாடிக்கிட்டே இருக்கு அந்த
வீராவதி. ராஜா இதைக் கவனிச்சுக்கிட்டே இருக்கார். ஒருநாள் வீராவதிகிட்டே கேக்கறார், என்ன பாட்டு அதுன்னு.
'ராணியா இருந்தவ வேலைக்காரி ஆயிட்டா, வேலைக்காரியா இருந்தவ ராணியா ஆயிட்டா'னு பாடறேன்னு சொன்னாங்க.
' அதுக்கு என்னா அர்த்தமு'ன்னு சொல்லுன்றார் ராஜா. வீராவதி இதுவரை நடந்ததையெல்லாம் சொன்னவுடனே ராஜாவுக்கு
உண்மை என்னன்னு புரிஞ்சுடுது(!)

ராணியா இதுவரை இருந்த தாதியை விலக்கிட்டு, வீராவதியை ராணி ஸ்தானத்துலே வச்சுக்கிட்டு சந்தோஷமா வாழ்றார்.

இந்த விரதத்தை முறைப்படிச் செய்யாட்டா இப்படிப்பட்ட கஷ்டமெல்லாம் வரும். அதனாலே எல்லாரும் கவனமா
முறைப்படி இந்த விரதம் அனுஷ்டிக்கணுமுன்னு அர்த்தம்.

பின் குறிப்பு:

வீட்டுக்குத் திரும்பி வர்றப்ப எங்க இவர்கிட்டே இந்தக் கதையைச் சொன்னேன். 'நீ விரதம் இருந்திருக்கியா?'ன்னு
கேட்டார். 'என்னாலே விரதமெல்லாம் இருக்கவே முடியாது. அன்னிக்குப் பார்த்துதான் அகோரப் பசி எடுக்குமு'ன்னு
சொன்னேன்.
'நான் இருந்திருக்கேன்'னு சொன்னார்.
'அதான் உங்களுக்கு நல்ல பொண்டாட்டி கிடைச்சிருக்கேன்'னு சொன்னேன்:-)


வீட்டுக்கு வந்து 'நெட்டுலே' இதைப் பத்திக் கொஞ்சம் தேடி இன்னும் சிலவிஷயம் படிச்சேன். அதைப் பத்தி இன்னொருநாள்
சொல்றேன். சத்தியவான் சாவித்திரி, ஃப்ரெண்ட்ஷிப் டே ன்னு கொஞ்சம் போட்டிருக்கு.

(சொந்த மனைவிக்கும் வேலைக்காரிக்கும் வித்தியாசம் தெரியாத புருஷனுக்காக விரதம் வேறயா? இந்த ஊருலேதான்
வேலைக்கு உதவியாளரும் இல்லையே)

அட தேவுடா!!!!!

17 comments:

said...

முக்கியமானது சொல்ல விட்டுப்போச்சு.

ஃபோட்டோ உபயம் -- கோபால்

said...

தில்வாலா துலஹனியா லேஜாயங்கே என்ற படத்திலும், மற்ற பிற படங்களிலும், இந்த பண்டிகையானது காதலர்களை ஒரு தெய்வீக காதலர்களாக காண்பிக்க, ஒருவர் ஒருவர் தங்கள் அன்பு நெஞ்சங்களின் மீது அதீத காதலை வெளிப்படுத்த இந்த காட்சியினை திரைக்கதையில் தொகுப்புதுண்டு. ஆனால், இது பெண்களால், பெண்களுக்காகவே கொண்டாடப் படுவது. பஞ்சாபிக் குடும்பங்களில் இதன் மூல காரணம் அல்லது கதை கணவனின் சுகத்திற்காக அல்ல, தங்களின் குடும்ப சுபிட்சைக்காக. நம்ம ஊரில் பெண்கள் செவ்வாய் பிள்ளையார் கும்பிடுவது போல.

said...

உதயகுமார்,
பின்னூட்டத்துக்கு நன்றி. இன்னும் சில விஷயங்களும் கிடைச்சது. அப்புறம் ஒருநாள் எழுதணும்.

said...

இப்ப என்னாங்கறீங்க? நான் சினிமா விமரிசனம் எழுதலாமா கூடாதா?
இன்னும் திரைக்கே போகாத பலபடங்கள் எனக்குன்னே எடுத்து வந்திருக்கு. அதையெல்லாம் பார்த்துட்டு 'ச்சுப்'ன்னு இருக்கறதா இல்லே எழுதறதா?

ஒண்ணூம் புரியலை(-:


நீங்க எழுதுங்க. உங்களை வேண்டாம் என்று யாரும் சொல்ல முடியாது. தீக்குளிப்போம் !

said...

//'நான் இருந்திருக்கேன்'னு சொன்னார்.
'அதான் உங்களுக்கு நல்ல பொண்டாட்டி கிடைச்சிருக்கேன்'னு சொன்னேன்:-)//

அவர் சொல்லணும் இல்லீங்களா? :-)

//சொந்த மனைவிக்கும் வேலைக்காரிக்கும் வித்தியாசம் தெரியாத புருஷனுக்காக விரதம் வேறயா//

//ராஜா மயக்கத்துலே இருந்து கண் முழிச்சுடறார். பக்கத்துலே இருந்த தாதியைத் தன் மனைவின்னு(!) நினைச்சுகிடறார்.
இந்தத் தாதியும் ஒண்ணும் சொல்லாம நைஸா இருந்துருது//

:-)

said...

என்னங்க ராம்கி,

நீங்க நம்பலையா, நான் நல்ல மனைவியா இருப்பேன்னு?:-)))

அன்னிக்கு இவர் இருமல் காரணம் டாக்டரைப் பார்க்கப்போனார். கூட நானும் போனேன்.

எப்பப்ப இருமல் வருதுன்னு டாக்டரம்மா கேட்டப்ப இவர் சொல்றார் சிரிக்கிறப்ப வருது. இவுங்க எப்பப்பார்த்தாலும் எதாவது சொல்லி சிரிக்கவச்சுடறாங்கன்னு!

'இரு உன்னை சிரிக்க வச்சே கொல்றேன்னு சொன்னேனா?

said...

துளசி
கர்வாசொத்- K3G யில் ஒரு நல்ல பாட்டுடன் வரும். கஜோல், ஷாருக்க்கான் ஆட்டத்தோடு. எனக்கென்னவோ இதுவும் காரடையான் நோன்பும் ஒன்றாய் தோன்றும். பேசாம கர்வாசொத்தும் கார்டையான் நோம்பும் அப்படின்னு ஒரு பதிவு எழுதாலாமா?

said...

பத்மா,

நம்ம காரடையான் நோம்புக்கும்
சத்தியவான் சாவித்ரி கதை இருக்குல்லீயா அதுவும் கூட
இவுங்க கர்வாசோத்லே வருது. இன்னொரு இடத்துலே படிச்சேன்.

நீங்க போடுங்கபத்மா, கர்வாசொத் அண்ட் காரடையான்.

said...

//சொந்த மனைவிக்கும் வேலைக்காரிக்கும் வித்தியாசம் தெரியாத புருஷனுக்காக விரதம் வேறயா//

//ராஜா மயக்கத்துலே இருந்து கண் முழிச்சுடறார். பக்கத்துலே இருந்த தாதியைத் தன் மனைவின்னு(!) நினைச்சுகிடறார்.
இந்தத் தாதியும் ஒண்ணும் சொல்லாம நைஸா இருந்துருது//


:))))

said...

நன்றி தங்கமணி.
அடுத்த பதிவு பாருங்க. விஜயதசமி.
ஒரே பக்திதான் இப்ப:-)))

said...

என்னவோ திட்ட வர்ரீங்க நெனச்சு பயந்துகிட்டே வந்தேன். வந்து பாத்தா இப்படி ஒரு பதிவு. நல்ல கதைதான். ஆனா இப்படி பயமுறுத்தியா சாமி கும்பிட வைக்கனும்? நல்லவிதமாகச் சொல்லி கும்பிட வைக்கலாமே.

said...

ராகவன்,

இந்த 'திட்டு' வடக்கத்தி சமாச்சாரம்:-)

said...

படம் சுமாராக இருந்தா "“உபயம்” என்று போட்டுவிடுவதா? :-)

said...

ஹாஹா.... அப்போ நான் கேமெரா கொண்டு போகலை. இது கோபால் தன் செல்லில் எடுத்தது.

இன்றைக்கு கேமெராக் கொண்டுபோய் 186 படம் எடுத்தேன். ஃபேஸ் புக் ஆல்பத்தில் போட்டு வைக்கிறேன், இன்னும் கொஞ்ச நேரத்தில். இப்போ அங்கே எடுத்த ஒரு நாலு நிமிச வீடியோ ஃபேஸ்புக்கில் லோட் ஆகிக்கிட்டு இருக்கு.

said...

கதை தெரிந்து கொண்டேன். படங்களை பேஸ்புக்கில் பார்த்தேன் , நன்றாக இருந்தது.

said...

வாங்க கோமதி அரசு.


நன்றீஸ்!

said...

வீடியோ கதை எல்லாம் பார்த்தேன்

வழக்கமான உங்க கடைசி பஞ்ச் அருமை. நெட்டி முறிக்கத் தோணுச்சு துள்ஸ் டார்லிங்க்ஸ் :) ஹாஹா