Tuesday, October 04, 2005

மாரியம்மா காளியம்மா திரிசூலியம்மா

புதுசு புதுசாப் 'பட்ட'ப்பேருங்க வந்துக்கிட்டு இருக்குங்க.
மொதல்ல பின்னூட்ட நாயகின்னாங்க.
அப்புறம் அம்மன் வேஷம்னாங்க
இப்ப என்னடான்னா 'சாமி செடி அக்கா'வாம்.

சரி, இவ்வளவு தூரம் நமக்கு ஒரு எஃபெக்ட் இருக்குன்னதும்
ச்சும்மா இருக்கமுடியுதுங்களா?

இன்னையிலே இருந்து நவராத்திரி வேற ஆரம்பம். பேருக்குத் தகுந்தாப்புலே இருக்க வோணாமா?

அதுதான் நவராத்திரியை முன்னிட்டு இந்தப் பதிவு. எல்லாரும் கன்னத்துலே போட்டுக்குங்க.
பதிவு நிஜமாவே சாமியைப் பத்திதான்!

***************************************************




கரூர் மாரியம்மன் கோவில்
************



எத்தனையோ ஊர் இருக்க, அதென்ன 'கரூர்'ன்னு கறாரா சொல்றாளேன்னு பாக்கறீங்களா?
என்ன இருந்தாலும் 'பிறந்த ஊர்' பாசம் இருக்காதா?



அக்கம்பக்கம் சுத்தி வர பதினெட்டுப் பட்டியிலெயும் ரொம்ப 'பேர் போன சாமி'தான் நம்ம கரூர் மாரியம்மன்.

யார் வீட்டுலே என்ன வியாதி வருதோ, எல்லாரும் நேந்துக்கறது இந்த அம்மன் கிட்டேதான். தாய்க்குத் தாயா
கருணை காட்டற தயாபரி!

வருசம் பூரா, எதாவது சின்னதோ, பெரியதோ நோய் நொடி வராம இருக்குமா மனுச சென்மத்துக்கு? எதுன்னாலும்
சரி, இருக்கவே இருக்கா நம்ம மகமாயி! அதனாலே வருசம் பூரா, இந்தக் கோயிலுலே நேர்த்திக்கடன் கழிக்கற
கூட்டமும் இருந்துகிட்டே இருக்கும்!



அதுலேயும் சித்திரை மாசம் வர்ற திருவிழா இருக்கே, இது இன்னும் விசேஷம்! ரெண்டு கையிலேயும் அக்கினிச் சட்டி
எடுத்துகிட்டு ஆடிகிட்டு வருவாங்க பாருங்க, ஒரே அமக்களமா இருக்கும். அந்தக் கொட்டு கேக்கறப்பவே நமக்கும்
கூடவே ஆடணும்னு ஒரு வேகம் வரும். கொஞ்சம் அசைஞ்சாப் போதும், 'சாமி வந்துருச்சு'னு நம்ம மேலெ மஞ்சத்
தண்ணி யாராவது ஊத்திருவாங்களேன்னு பொட்டைப் பசங்க எல்லாம் கவனமாக் காலை அசையாம வச்சிகிட்டு நிப்பாங்க!
அதையும் மீறி சிலபேரு ஆடறதும் உண்டு! அடி வேப்பிலையை! கொண்டா துண்ணூரை!


சித்திரை வெயிலுக்கு கேக்கணுமா? அந்த சூட்டோட, கையிலே இருக்கற மண்சட்டிச் சூடுவேற!


என்னதான், பச்சை வேப்பிலையை உள்ளங்கையிலே வச்சு, அதுக்கு மேலே தீச்சட்டி வச்சிருந்தாலும்,
'கன கன'ன்னு தீக்கங்கு கனன்று கிட்டே இருக்குமே!


கொட்டு மேளத்தோட அக்கினிச் சட்டி ஊர்வலம் வரும்போது, அவுங்க காலுக்கு ஊத்தறதுக்காக அரைச்ச மஞ்சள்
கலக்கின தண்ணி அண்டா அண்டாவா வச்சிருப்போம்!


கருவேப்பிலை, உப்பு எல்லாம் போட்டு அருமையான நீர் மோரு இன்னொரு பெரிய புது மண்குடத்துலே!
மண்குடம் ஏன்னா, அப்பத்தானே மோரு நல்லா ச்சில்லுன்னு இருக்கும்!


யாருக்காவது, நம்ம 'கே.பி. சுந்தராம்பாள் ஞாபகம்' இருக்கா? அவுங்களும், அவுங்க தம்பியும் வருசாவருசம்
இந்தக் கோயிலுக்கு வந்து, 'அக்கினிச் சட்டி' தூக்குவாங்க! மஞ்சள் நனைச்ச சீலை கட்டிகிட்டு, நெத்தி நிறைய
துண்ணூறு பூசிகிட்டு, தலையை அள்ளீ முடிஞ்சுகிட்டு, சாமி ஆடிகிட்டே வருவாங்க! நாங்க சின்னப் பசங்க எல்லாம்
ஓடிப் போய் காலுக்குத் தண்ணீ ஊத்துவோம்!


ஊர் முழுக்கத் திருவிழாக் கூட்டம். எங்கே பாத்தாலும் சின்னச் சின்ன கொட்டாய் போட்ட கடைங்க! கோயிலுக்கு வாரவுங்க,
அப்படியே வீட்டுக்குச் சாமான்கள வாங்குவாங்கல்ல! பொம்புளைங்க வாரதே, பாத்திரம் வாங்கறதுக்காகன்னு தோணும்!


எங்கே பாத்தாலும் தீனிக்கடைங்க முளைச்சிரும்! எல்லா வீட்டுத் திண்ணைங்களிலேயும் திருவிழாவுக்கு வந்த ஆளுங்க
இடம் பிடிச்சிருவாங்க! வூட்டு ஆளுங்க யாரும் ஒண்ணும் சொல்லமாட்டாங்க.போயிட்டுப் போட்டும்னு பெரிய மனசு
பண்ணுறதுதான். கல்மிஷம் இல்லாத கிராமத்து ஜனங்க! மத்தபடி குளிக்கக் கொள்ள, இருக்கவே இருக்கு 'அமராவதி ஆறு!'

திருவிழாவுக்கு ஒரு மாசம் இருக்க சொல்லவே, கோபுரத்துக்கு, மத்த இடங்களுக்கு புதுசா வர்ணம் அடிக்க ஆரம்பிச்சிருவாங்க!
கோயில் கோபுரம் ரொம்ப உயரமா, பெருசா இருக்கும். நுழைவாசல் கதவுங்களும் பெருசா இருக்கும். உள்ளே போனவுடனே
ஒரு கொடிமரம். அப்புறம் பலிபீடம். ஆனா, உயிர்ப்பலி கிடையாது. சும்மா ஆடுங்க, கோழிங்களைச் சுத்தி விடுவாங்க!


சாமியச் சுத்திவர, பெரிய பிரகாரம் இருக்கு. அங்கெயும் குட்டிக் குட்டியா நிறைய சாமிங்களுக்கு சந்நிதிங்க இருக்கு.


கோயிலுக்கு உள்ளே நிறைய புது மண் சட்டிங்களை அடுக்கி வச்சிருப்பாங்க. அந்தச் சட்டிங்கள்லே, வாய்க்குக் கொஞ்சம் கீழே
சின்னச் சின்னதா முக்கோண வடிவுலே ஓட்டைங்க இருக்கும். குட்டிக் குட்டி ஜன்னல்போல இருக்கும் அதன் மேலும் கீழும்
காவியாலும், சுண்ணாம்பாலும் கோலம் போட்டிருக்கும். பார்க்க ரொம்பவெ அழகாக இருக்கும்.


அந்த ஓட்டைங்க வழியாகப் போற காத்து, அதில் உள்ள தீ அணைஞ்சிராமல் எரிய உதவுமாம்! ஒரு சின்ன விஷயத்தையும்
விடாமல் வடிவமைச்சிருக்காங்க பாத்தீங்களா?


கோயிலுக்கு உள்ளே இந்தச் சட்டிகளுக்கு அருகிலெ, இன்னொரு சுவாரசியமான பொருள் குவிச்சு வச்சிருப்பாங்க! அது
மண்ணால் செஞ்ச பொம்மைங்க! பலவிதமான உருவத்துலே பொம்மைங்க இருக்கும்.தலையிலிருந்து,தொடைவரை உள்ள
ரூபம்தான்.தலையில் மேலெ மண் மூடாம சின்னதா திறந்திருக்கும். அடிப்பக்கமும் திறந்தே இருக்கும். போலீஸ், கள்ளன்,
பொண்ணு, பையன், சாமியார், கிழவன், கிழவின்னு பல தினுசா இருக்கும். இதெல்லாம் என்ன?


பொங்கப் பானைக்கு பக்கத்திலே, மாவிளக்குத் தட்டுலே, அம்மனுக்குப் படையல் வைக்கற இடத்துலென்னு பல இடங்களில்
இதைவச்சு, தலைமேலெ இருக்கற ஓட்டையிலெ வேப்பிலையை சொருகி வைக்கற 'ஸ்டாண்டு!' திருவிழா சமயத்துலெ எல்லா
வேப்பமரமும் மொட்டையா நிக்கும். ஆளுங்கதான் எல்லாக் கொப்புங்களையும் உடைச்சு, கோயில் உள்ளெ போட்டு
வச்சிருவாங்கல்லே!


சாமிக்கு பின்னாலெ நேரா வந்தா, கோயில் மதிள் சுவத்துலெ ஒரு சின்னக் கதவு, திட்டி வாசல் இருக்கும். அதைத் திறந்துகிட்டு,
அந்தப்பக்கம் போனா,அஞ்சாறு வீடுங்களும் அதைச் சுத்தி ஒரு பெரிய காம்பவுண்டு சுவரும் சுத்திவர இருக்கும். அந்த வீடுங்க எல்லாம்
கோயிலைச் சேர்ந்ததுதான். ஆனா, கோயில் அதை வாடகைக்கு விட்டிருந்தது! அதுலெ ஒரு வீடு யாருதுன்னு நினைக்கறீங்க?


சரியாத்தான் சொல்லிட்டீங்க. அது எங்க வீடுதான். ஆனா, நான் அங்கே இருக்கறது லீவு விடறப்பதான். தாத்தாவும்
பாட்டியும்தான் அங்கே இருந்தாங்க.அங்கெ எங்க பக்கத்து வீட்டுலெ என் வயசுலெயே ஒரு பையன் இருக்கான். அவன் பேரு
சுப்பிரமணி. பாட்டி இவனைப் பத்தி ஒரு சேதி சொன்னாங்க. இவன் ஒண்ணாங்கிளாஸ் முடிச்சுட்டு, திருப்பி ஒண்ணாங்கிளாஸ்லேயே
இருக்கானாம். ஏன்னா, அவன் சினேகிதன் ·பெயில் ஆயிட்டானாம். அதனாலெ இவன் அவனுக்குத் துணையா ஒண்ணாப்புலேயே
இருக்கானாம்! இந்த மாதிரி சினேகிதத்துக்கு மரியாதைக் கொடுத்தவன் நம்ம சுப்பிரமணி ! என் சினேகிதன்!


அப்ப எங்களுக்கு ஒரு ஏழு வயசிருக்கும். நான் அங்கே போயிட்டா எப்பவும் கோயிலுக்குள்ளெதான் விளையாடிகிட்டு
இருப்போம். கோயிலுக்குள்ளே எப்பப் பாத்தாலும் ஆளுங்க இருந்துகிட்டே இருப்பாங்க
தென்னம்பாளையை ரெண்டா வகுந்து, கீத்து முடைஞ்சுகிட்டு இருப்பாங்க நிறையப் பொம்பிளைங்க. பந்தல் போடறதுக்கு வேணுமே.
வாய் பேசப் பேச, கையுங்க மட்டும் பரபரன்னு முடைஞ்சுகிட்டே போகும். பாக்கறதுக்கு ரொம்ப நல்லாவே இருக்கும்!

கேக்கறதுக்கும்தான்! நான் அப்பவே ஊர்க்கதை கேக்கறதுலே கில்லாடியாச்சே!

அம்மன் சன்னிதிக்குப் போனா, நாங்க சின்னப் பசங்கன்னு நினைக்காம, பூசாரித்தாத்தா உடனே ஒரு பெரிய வில்லைக் கற்பூரத்தைக்
கொளுத்தி ஆராதனை காட்டிட்டு, எங்களுக்குத் துண்ணூறு கொடுப்பார். அப்படியெ எரியுற கற்பூரத்தோட அந்த விபூதித் தட்டை அங்கெ
இருக்கற மேடை மேலே வச்சிட்டுப் போயிருவார்!


சுப்பிரமணிக்கு, பூசாரியா இருக்கணும்ன்னு ஒரே ஆசை! 'பெரியவனா ஆனபிறகு என்ன வேலைக்குப் போவே?' ன்னு கேட்டா,
அவன் சொல்றது, 'கோயிலு பூசாரி வேலை'ன்னு!


அவனும் நானுமா, வேப்பிலைக் கொத்து வைக்கற 'ஸ்டாண்டு' பொம்மைங்களை, 'நைசா' ஒண்ணொண்ணா தூக்கிட்டு வந்துருவோம்!
அங்கேதான் குவிஞ்சு கிடக்கே! அதனாலே எடுத்தா தப்பு இல்லேன்னு எங்க நினைப்பு!


வீட்டுத் திண்ணையிலே எல்லாப் பொம்மைங்களையும் வரிசையா அடுக்கி வச்சிருவோம். இப்ப ஆராதனை செய்ய கற்பூரத்துக்கு எங்கே
போறது?


கரெக்ட். கோயிலுக்குத்தான்! நாங்க போனவுடனெ, பூசாரித்தாத்தா கற்பூரம் கொளுத்துவாரு! அவரு தட்டை வச்சிட்டுப் போனவுடனே,
'·பூ'ன்னு ஒரே ஊதா ஊதி அணைச்சிட்டு, கற்பூரத்தை எடுத்துகிட்டு ஓடிருவோம்! அப்புறம்?


அப்புறம் என்ன? எங்க சாமிங்களுக்கு ஒரே கற்பூர ஆரத்திதான்!

நன்றி: மரத்தடி
நவராத்திரி ஸ்பெஷல் 2004

*************************************************************************************

22 comments:

said...

கற்பூரத்தட்டுப்பாடு ஏற்படுத்திட்டிங்க போல! ;O)

இங்கெ சிட்னி கோயிலிலே இப்போ கற்பூரத்துக்குப் பதிலா நெய்தான் பாவிக்கிறாங்க. சுற்றுப்புறம் மாசடையுதாம். எனக்குத்தான் கொஞ்சமா விரல்லே தேய்ச்சு எடுத்து முகர்ந்து கொண்டே சாமி கும்பிட கற்பூரம் இல்லை!! :O(

said...

வாங்க ஷ்ரேயா. மூணூநாள் மஜாவா?

கற்பூரம் இப்ப தமிழ்நாட்டுலே கூட ஏத்தறதில்லையாம். மாசுக்கட்டுப்பாடு. முக்கியமா சாமி சிலைகளிலே புகை படிஞ்சிருதாம். நல்லதுதான். தீவட்டி போல எரியரதை சாமி மூஞ்சுக்குநேர காமிக்காம, ச்சின்னதா எரியுற விளக்குத்திரியிலே சாமி முகம் பாக்கறதும் நல்லாத்தானே இருக்கு.

said...

சாமியப்பாக்க நல்லாதான் இருக்கும். சுற்றுச்சூழல் எல்லாம் முக்கியம் தான்.. மாசுபடக் கூடாதுதான்... அதுக்காக எனக்கு முகர கற்பூரம் இல்லாமலாக்குவது என்ன நியாயம்???? :O(

மஜா என்டா என்ன? நீண்ட வார இறுதி.. நல்ல காலநிலை. நேத்துத்தான் சுட்டெரிச்சிட்டுது (literally).. 32 பாகை செல்சியஸ்!! சராசரிக்கு 13 பாகை கூடுதல்!இன்றைக்கு 20லே மழை பெய்யவா வேணாமா என்று யோசிக்குது!

said...

மஜான்னா குஷின்னு அர்த்தம். குஜால்

வீட்டுலே இருந்தே கொஞ்சம் கற்பூரத்தை கைகுட்டையிலே முடிஞ்சுக் கொண்டு போங்க.

வெள்ளைக்காரங்க அந்தக் காலத்துலே குழந்தைகளுக்கு 'சளி'ப்பிடிச்சா கொஞ்சம் கற்பூரத்தை இப்படி முடிஞ்சு, கழுத்திலே கட்டிருவாங்களாம். அந்த வாசம் படப்பட சுவாசிக்கிரதுக்கு எளிதா இருக்குமாம், மூக்கடைப்பு இல்லாம!

இங்கே 16 டிகிரி. நாளைக்கு 'ஸ்நோ'வாம். வார்னிங்வந்திருக்கு.

said...

"சாமி செடி அக்கா" நல்ல இருக்கே :-)
சாமிக்கு கற்பூரம் எதுக்கு ஏத்துறோம்னு ஒரு பதிவு போடுங்களேன்.

said...

கணேசா,

கற்பூர வியாபாரி பிழைக்கணுமா இல்லையா?

ஆன்மீகப் பதிவு போடறவங்ககிட்டே கேக்கலாம். இல்லேன்னா

வெகுஜனப்பத்திரிக்கையிலே ஆன்மீகப்பக்கத்துலே கேள்வி கேட்டாப் போச்சு.

இப்பத்தான் எல்லாத்துக்கும் கேள்விபதில் வந்துருச்சேப்பா.

said...

இதென்ன கேள்வி கணேசா,.. சாமிக்கு சளி பிடிக்காமே இருக்கத்தான்!!!

உங்கள் சந்தேகங்களைத் தீர்க்க அணுகுங்கள்: சகோதரி ஷ்ரேயானந்தமயி!! (மாதான்னா கொஞ்சம் வயசு போன மாதிரி இருக்கும், அதான் சகோதரி.. ஹி..ஹி);O)

said...

//இதென்ன கேள்வி கணேசா,.. சாமிக்கு சளி பிடிக்காமே இருக்கத்தான்!!!//
நல்ல வேளை சளி பிடிச்சதுக்கப்புறம் சாரிடான் குடுக்காம இருந்தாங்க :-))

இதென்னங்க வருமுன் காப்போமா? சாமி கூட கொஞ்சம் முன் ஜாக்கிரதையாத்தான் இருக்க வேண்டியிருக்கு கலியுகத்தில

//கொஞ்சம் வயசு போன மாதிரி இருக்கும், அதான் சகோதரி.. ஹி..ஹி);O)//
அதான் "மழை" ஷ்ரேயான்னு போட்டு எப்பவுமே ஒரு இளவட்ட இமேஜ் கிரியேட் பண்ணிட்டீங்களே :-(

said...

//அந்த சூட்டோட, கையிலே இருக்கற மண்சட்டிச் சூடுவேற!//

எடுத்த அனுபவம் பேசுது..?

said...

சாமி செடி அக்கா புதுசு இல்லீங்கோ...
ரொம்ப நாளைக்கு முன்னாடி குழலி ஒரு பதிவு போட்டாரே , எல்லோருக்கு பேரு மாத்தி .. புனை பெயர்... அப்போவே உங்களுக்கு சொன்ன புனைப்பெயர் தான் அது.. ரொம்ப நாளா உபயோகத்துல இல்லை.. அதான் ஞாபகப்படுத்தப்பட்டது... :)

நல்லா கன்னத்துல போட்டுக்கிட்டேன் .. என்னைய சாமி கண்ணை குத்தாது.. இப்படி சாமி பதிவு போட்டதால... இந்த வருஷ முடிவுக்குள்ள உங்களுக்கு ஒரு ஒட்டியானம் கிடைத்திட சாமி அருள் புரியும்..

இந்த தீசட்டிக்குள்ள மஞ்சள் போட்டு அதுக்கு மேல தீ மூட்டுவாங்களாம் அதனால சூடு தெரியாதாம்.. அவரு கிட்ட இப்படி கொடுத்தா ஒரு நாள் முழுக்க பிடிப்பாராம்.. இதுல பக்தி இல்லை.. மஞ்சளின் scientific nature தான் மேட்டராம்... - நன்றி : சத்யராஜ் (ஒரு பேட்டியில் சொன்னது)


அப்புறம் அரட்டை அரங்கத்துல, அக்காங்க கருத்து கேட்டு ஒரு பதிவு இருக்கு.. ஷ்ரேயா அக்கா, ரம்யா அக்கா வந்து சொல்லிட்டு போயிட்டாங்க.. நீங்க எப்ப வறீங்க????

said...

ஆஹா.. நீங்க கரூரா!

நான்கூட கரூருக்குத்தான் வாழ்க்கைப்பட்டிருக்கேன்!(எத்தனைகாலம் தான் பொம்பளைங்களே வாழ்க்கைப்படுவீங்க.. காலம் மாறுதுல்ல!! :) )

என் ஊட்டுகாரம்மாகூட அடிக்கடி வீட்டுல மாரியம்மன் வேசம்போட்டு கரூரை ஞாபகப்படுத்துவாங்க.. ஆனா இங்க பூசை என்னவோ எனக்குத்தான்.. ஹிஹி..

said...

தருமி,

இதென்ன நட்சத்திர விஜயமா ?அக்னி பகவானை சந்திக்க வந்தீங்களா?:-)

வீ. எம்.
இதோ வந்துக்கிட்டே இருக்கேன் உங்க வீட்டுக்கு.

இளவஞ்சி,

நீங்க சம்பந்தம் முடிச்சது கரூரா? அமராவதி ஆத்துலே தண்ணி ஓடுதா இல்லையா?

உங்க எல்லோருக்கும் நவராத்திரி நாயகியரினருள் கிட்டட்டும்( எல்லாம் ஒரு ஆசீர்வாதம்தான்!)

said...

தீச்சட்டி பத்தி பேசினாலே கார்த்திக் படம் ஒண்ணுலே கவுண்டமணிகூட சேர்ந்து அடிக்கிற லூட்டிதான் ஞாபகம் வருது.எங்க ஊர்லேல்லாம் கும்பம்(கரகம்) எடுத்து வர்றவங்களுக்குத்தான் காலில் மஞ்சத்தண்ணீர் ஊற்றுவோம். எங்க ஊர் ஆசாமிங்க ஜாக்கிரதைப் புலிங்க! தீயோடெல்லாம் பரிசோதனை பண்றதில்லை.
நியூஸியில் கொலு வைப்பீங்களா துளசி?

said...

துளசியம்மா.....நீங்க கரூரா! நானும் கரூருல மூனு வருசம் இருந்திருக்கேன். அப்போ விவேகாநந்தா பள்ளிக்கூடத்துல படிச்சேன். எங்க வீடு ஈஸ்வரங் கோயில் பக்கத்துல இருக்குற PWD காம்பவுண்டுக்குள்ள இருந்தது. கவர்மெண்ட்டு ஆஸ்பித்திரிக்கு அடுத்து இருக்குமே அந்த வளாகந்தான்.

கோடையில சொம்புல தண்ணி எடுத்து மஞ்சளக் கரச்சி வேப்பில சொருகி கோயிலுக்குக் கொண்டு போய் ஊத்துவோம். அந்த சின்ன வயசுல என்னவோ ரொம்ப ஆர்வமா செய்வோம். ஜவகர் பஜார் முழுக்கத் தாண்டிப் போனா மாரியம்மங்கோயில் வரும்.

அந்த வழியிலதான பள்ளிக்கூடத்துக்குப் போவேன். பசுபதிபாளயம் போற வழி அதான. பழைய பாலத்துல போனா பசுபதிபாளையம். அங்கதான விவேகானந்தா பள்ளிக்கூடம்.

அப்பெல்லாம் அம்மா கூட மார்க்கெட்டுக்குப் போனா நீங்க தெக்குப் பக்கமான்னு கேப்பாங்க. ஏன்னா தூத்துக்குடிப் பக்கம் இருக்குறவங்கதான் பட்டர்பீன்சு நெறைய வாங்குவாங்களாம். (இது உண்மையான்னு எனக்கு இன்னைக்கு வரைக்கும் தெரியலை. ஆனா சின்ன வயசுல தூத்துக்குடில நெறைய பட்டர்பீன்சு சாப்பிட்டது நெனவு இருக்கு.)

அப்புறம் எங்க தமிழ் உச்சரிப்பு. சகரத்தை cha என்று உச்சரிப்போம். அதுவும் அங்க இருக்குறவங்களுக்கு வேடிக்கையா இருக்கும்.

said...

தாணு,

உங்க பக்கம் எல்லாரும் 'முன் ஜாக்கிரதை முத்தண்ணி'களா?

இங்கேயும் சிலவீடுகளிலே கொலு இருக்கு. நம்ம வீடும் அதுலே ஒண்ணு.

நம்மது ச்சும்ம ஒரு அஞ்சுபடி கொலுதான்.

சின்னப்படிங்க.

படத்தை எடுத்துப் போடறேன்.

said...

ராகவன்,

எனக்குக் 'கரூர்' அவ்வளவா ஞாபகம் இல்லே. ஆனா கோயிலும்,
நம்ம வீடும் மட்டும் அப்படியே மனசுலே 'பச்சக்'

said...

கரூர் அமராவதியிலே இப்ப சாயப்பட்டறை தண்ணிதான் ஓடுது. முந்தாநாள்கூட போய் வந்தேன். ஏதோ ஒரு மேம்பாலம் (over bridge) கட்டியிருக்காங்க. கோவிலும் சுற்றுப்புறங்களும் மாறலை.
மனதில் உள்ள தீய எண்ணங்களைச் சுட்டு எரித்துவிட்டால் புகை போன்ற இலேசான மனம்தான் மிஞ்சும். அதை உனக்கு அர்ப்பணிக்கிறேன் என்பதைக் காட்டவே கற்பூரம் கொளுத்துவது.
இதுக்குப் போய் எதுக்கு ஆன்மீகப் பதிவு போடறவங்ககிட்டே கேக்கணும்.
வெகுஜனப்பத்திரிக்கையிலே ஆன்மீகப்பக்கத்துலே கேள்வி கேட்கணும்.
அன்பு,
ஞானவெட்டியான்

said...

கற்பூரத்துக்கு விளக்கம் கொடுத்ததற்கு நன்றிங்க.
ஆமாம், முந்தாநாள் கரூர்லே என்ன விசேஷம்?

நாங்களுமே அப்ப வத்தலகுண்டுலே இருந்து திண்டுக்கல் வந்து 'பஸ் ஸ்டாண்டுலே இருக்கிற/இருந்த
மாணிக்கவாசகர் கஃபேலே ஒரு காஃபி குடிச்சுட்டுத்தான் கரூர் பஸ் புடிக்கறது.

said...

கரூரிலிருந்து 12 கல் தொலைவில் திரு சதாசிவ பிரும்மேந்திர சுவாமிகளின் ஆலயம்(சமாதி) இருக்கிறது. அதன் பக்கத்தில் சிற்றாறு ஒன்று ஓடுகின்றது. கிரகண நேரத்தில் வாங்கிய தீட்சா மந்திரங்களை renewal பண்ணவேண்டுமே? அதற்காக அங்கு போய் பூஜை புனஸ்காரங்களை முடித்து வந்தேன்.
அன்பு,
ஞானவெட்டியான்

said...

ஞானவெட்டியாரே,
சதாசிவ பிரமேந்திரர் சமாதி அங்கேயா இருக்கு.
சென்னையிலே நம்ம கணேச மாமா ஒருதரம்
இவரைப் பற்றிச் சொல்லியிருந்தார்.
அங்கே அன்னதானமெல்லாம் நடத்துகிறார்கள் என்றும் சொன்னார்.
அவரைப் பற்றி 'சித்தத்தில் ' எழுதுங்களேன்.

said...

ரெண்டு கேள்வீங்க: 1. எப்படி இம்மாம் பெரிய குத்துவிளக்கோட அங்கே போனீங்க.2. எப்படி இப்பட்டி பள பளன்னு வச்ச்சிருக்கீங்க????

said...

ஆமா தருமி, உங்களுக்கு எப்படி இப்படியெல்லாம் 'குண்டக்க மண்டக்க'ன்னு கேள்விங்க வருது?

எம்மாம்பெரிய குத்துவிளக்குன்னாலும் அதைத் தனிதனியாக் கழட்டி 'பேக்' செய்யலாமே.
ஒவ்வொண்ணும் 10 கிலோ கனம்தானே. கப்பல்லே போட்டா அப்படியே வந்து சேர்ந்துராதா?

வீடுகளிலே 'ஆம்பிளை' என்றொரு ஜீவராசி இருக்கும்போது குத்துவிளக்கு என்ன, எல்லா பாத்திரபண்டமெல்லாமே 'பளபளப்பா' இருக்காதா?:-))))

( இங்கே காத்துலே ஈரப்பதம் கிடையாது. அதனாலே சீக்கிரம் பித்தளை/வெங்கலம்' எல்லாம் கருக்காதுங்க. ஆனா மாவு, தயிர் எல்லாம் புளிக்கறதும் கஷ்டம்தான்)