கிறைஸ்ட்சர்ச் நகரம் : சென்ற பகுதியின் தொடர்ச்சி!
*****************************************
தினம் செய்திதாள் காசு கொடுத்து வாங்கணுமா? வேண்டாமா?
வேண்டாம். வாரம் நான்கு முறை செய்தித்தாள் நம் வீட்டுக்கே இலவசமாக வந்துவிடும்! இங்கே 'த ப்ரெஸ்' என்ற நாளிதழ் ஒன்றும்
தினமும் விற்பனைக்கு வருகிறது.வாரம் ஆறுநாட்கள். ஏழாவது நாளான ஞாயிறு அன்று விடுமுறை!அநேக வீடுகளில் வாரம் ஒருநாள்
சனியன்று மட்டுமே 'த ப்ரெஸ்' செய்தித்தாள் காசு கொடுத்து வாங்கப்படுகின்றது! ( நம்ம வீட்டிலும்தான்!)
ஆனால், நமக்கு அதைக் கட்டாயம் வாங்கவேண்டும் என்ற அவசியம் இல்லாததால், இலவசப் பத்திரிக்கையே போதும்! 'கிறைஸ்ட்சர்ச் ஸ்டார்'
என்ற நாளிதழ் முன்பு மாலைப் பதிப்பாக வந்துகொண்டிருந்தது. விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் அதை இலவசமாகவே விநியோகிக்க
முடிவு செய்துவிட்டனர். இப்போது, வாரம் இருமுறை மட்டும் வெளிவரும் செய்திப் பத்திரிக்கையாக உள்ள இது, இந்த நகரிலுள்ள ஒவ்வொரு
வீட்டுக்கும் இலவசமாகவே வந்துவிடுகிறது. இதைத் தவிர 'கம்யூனிட்டி நியூஸ் பேப்பர்' வகையில் இன்னும் இரண்டு செய்தித்தாள்கள் வாரம்
இருமுறை வேறு நாட்களில் வந்துவிடும். இதையெல்லாம் இலவசமாகக் கொடுக்க நிதி எங்கிருந்து வருகிறது? கவலையே வேண்டாம்! அதில்
வரும் விளம்பரங்கள் மூலமாகவே தேவையானது கிடைத்துவிடுகிறதாம்!
'கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்ற பழமொழிக்கு இங்கே அவசியமே இல்லை. முக்குக்கு முக்கு நம் ஊரில் பிள்ளையார்
கோவில்கள் இருப்பதைப் போலவே எங்கே பார்த்தாலும் 'சர்ச்'சுகள். இங்கே ஒரு மசூதி கூட இருக்கின்றது! ஆனால் ஹிந்துக்களுக்கென்று
சம்பிரதாயமான கோயில் இல்லையென்றாலும் 'ஹரே க்ருஷ்ணா' இயக்கத்தைச் சேர்ந்த ஒரு கோவில் உள்ளது! இங்கே ஞாயிறன்று சிறப்பு
வழிபாடு நடக்கும். அதைத் தொடர்ந்து அனைவருக்கும் இரவு உணவும் வழங்குகின்றனர்.
இந்த இலவச சமாச்சாரம் இதோடு போகவில்லை. இலவச பஸ் சேவையும் உண்டு. நகரத்தில் வண்டிகளை நிறுத்தப் போதுமான இடங்கள்
இல்லையென்ற குறையைப் போக்கவும்( ஒரு மணிக்கு நம் ஊர்க்காசில் ரூ.60 ஆகிவிடுமே!) நடு நகரில் உள்ள வியாபார நிறுவனங்களை
மக்கள் எளிதாக அடையவும் இங்கே இலவச பேருந்து சேவை ஒன்று உண்டு. பெட்ரோலினால் இயங்கினால் சுற்றுப்புறச் சூழலுக்கு மாசு
வருமே என்று மின்சாரத்தால் இயங்கும் இந்தப் பேருந்து 'மஞ்சள் நிற வண்ணம்' கொண்டது! அங்கங்கே நிறுத்தங்கள் இதற்காகவே உண்டு.
ச்சும்மா சுத்தி சுத்தி வந்துகொண்டிருக்கும்!
இதுமட்டுமின்றி, பேருந்து சேவையை மேம்படுத்தவும், மக்களை இந்த சேவையைப் பயன்படுத்தத் தூண்டும் வகையிலும் ஒரு புதுவழி
கண்டுபிடித்துள்ளனர். இது 'மெட்ரோ கார்டு' சேவை. முதலில் ஒரு 10 டாலர் கொடுத்து ஒரு அட்டையை வாங்கிவிடவேண்டும். ஒவ்வொரு
முறை 'பஸ்' ஏறும்போது அதை அங்கேயுள்ள ஒரு பெட்டிபோன்ற அமைப்பில் வைத்தால் போதும். அது ஒன்னரை டாலரை அதிலிருந்து
எடுத்துக்கொள்ளும். மறுபடி இரண்டு மணி நேரத்திற்குள் நீங்கள் பஸ் ஏற நேரிட்டால் அது இலவசம். அதற்கு மேல் நேரமாகியிருந்தால்
மறுபடி ஒரு ஒன்னரை டாலர் அந்த அட்டையிலிருந்து கழிக்கப்படும். அதன்பின் எத்தனை முறை நீங்கள் பஸ்ஸில் ஏறினாலும் அது நாள் முழுக்க
இலவசமே! அட்டையில் காசு தீர்ந்துவிட்டால், ஓட்டுனரிடம் 10 டாலர்கள் கொடுத்தால் அவர் அதை உங்கள் அட்டையில் ஏற்றி விடுவார்!
மூன்று வருடங்களாக இன்னொரு சேவை அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இது 'ஆர்பிட்டர்' என்னும் பச்சை
வண்ண பேருந்து! எல்லா முக்கிய ஷாப்பிங் மால்கள், பல்கலைக் கழகம், முக்கிய பள்ளிகள் இவைகளை சென்றடையும்படி ஒரு வட்டப்பாதையில்
இது போகும்! ஆர்பிட்டர் பெயர்க் காரணம் புரிந்ததா? பதினைந்து நிமிட இடைவெளியில் சுற்றிக் கொண்டே யிருக்கும். 'மெட்ரோ கார்டு'
இதிலும் செல்லுபடியாகும்.
மற்ற இடங்களுக்குப் போகும் பேருந்துகள் எல்லாம் சிகப்பு நிறமுடையவையே! இந்த பஸ் கம்பெனியின் பெயரே 'ரெட்பஸ் கம்பெனி!'
இந்த டிசம்பர் 3 முதல் இன்னொரு புதிய பேருந்து சேவை ஆரம்பித்துள்ளது. 'மெட்ரோ ஸ்டார்' ஆரஞ்சு வர்ண பேருந்து! நாங்களும்
கலர் கலரான பஸ்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்!
இந்த நாட்டில் எந்தவிதமான பரிசோதனைகள், சோதனை ஓட்டம் என்று வந்தாலும் அதை முதலில் நம் 'கிறைஸ்ட்சர்ச்'நகரில்தான் வெள்ளோட்டம்
விடுவார்கள். அதனால் எல்லா வசதிகளும் எங்களுக்கே முதலில் கிடைக்கும்!
கரைவேட்டி ஆளுங்களுக்கு இந்த ஊர் ரொம்பவே பிடித்துவிடும். எங்கள் 'கேன்ட்டர்பரி'யின் கலரும் கறுப்பும் சிகப்பும்தான்! ரக்பி போட்டிகள்
நடக்கும் சமயம், போட்டியில் நம் கேண்டர்பரி அணி விளையாடுகிறதென்றால் அவ்வளவுதான்! அநேகமாக போட்டியைப் பார்க்கச் செல்லும்
அனைவரும் இந்தக் கறுப்பு சிகப்பைத் தங்கள் முகங்களில் வரைந்துகொண்டு போவார்கள். 'புலி வேஷம்'தான் ஞாபகம் வரும். ஆனால் இது
கறுப்பு, சிகப்புப் புலி! எங்கே பார்த்தாலும் கறுப்பு, சிகப்பு பலூன்கள் பறக்கும்!
கால நிலையைப் பொறுத்தவரை, இங்கே குளிர் கொஞ்சம்(!) அதிகமே! சில சமயம் ஒரே நாளில் நான்கு பருவ நிலைகளும் ஏற்படும்!
வெளியே போகும்போது ஒரு ஜாக்கெட்டோ, ஸ்வெட்டரோ கட்டாயமாக எடுத்துக் கொண்டே போகவேண்டும்.
இங்கே காற்றில் ஈரப்பதமே இல்லாததால், நமக்கு வேர்க்கவே வேர்க்காது! நல்லதாப் போச்சு! துணி அழுக்கு ஆகாது என்று இருந்தாலும்,
வியர்வை வராமல் இருப்பது உடல் நலத்துக்கு ஊறு அல்லவா? காலநேரம் பார்க்காது, எல்லா நேரமும் தெருவில் ஆட்கள் ஓடிக் கொண்டும்,
ஜாக்கிங் செய்துகொண்டுமிருப்பார்கள்! அப்படியாவது வியர்வை சிந்தலாமே என்றுதான்!
அருமையான நூலகங்கள் இங்கே இருக்கின்றன. மிகவும் வசதியாக அமர்ந்துகொண்டு ஒரு நாளையே அங்கே கழித்து விடலாம்!
ஷாப்பிங் செய்வதற்கு அருமையான இடம் இந்த ஊர். ஒரே கூரையின் கீழ் உள்ள பலவிதமான கடைகள். உள்ளேயே '·புட் கோர்ட்'
எனப்படும் உணவுக்கான இடங்கள். பல்வேறு நாட்டு உணவுகள் கிடைக்கும். எல்லா ·புட் கோர்ட்டுகளிலும் ஒரு இந்திய உணவகம்
கண்டிப்பாக உள்ளது! இங்கே இப்போது இந்திய உணவு உண்பதுதான் ·பேஷன்! 'ஷாப்பிங் மால்'என்று அழைக்கபடும் இவ்விடங்களில்
சினிமா திரை அரங்கங்களும் உள்ளன. சினிமா பார்த்துவிட்டு, சாப்பிட்டுவிட்டு அப்படியே ஷாப்பிங் செய்துகொண்டு வரலாம்!
இங்கே உள்ள ஜனத்தொகைக்கு ஏற்றபடி இல்லாமல் இப்போதெல்லாம் இந்த மால்களின் அளவுகள் விரிந்துகொண்டே
போகின்றன! ஏராளமாகச் செலவு செய்து அவைகளை மேம்படுத்திக் கொண்டே இருப்பதில் இந்த ஷாப்பிங் மால்களுக்குள்
பெரிய போட்டியே நடக்கிறது! மக்களுக்கு வாங்கும்/செலவு செய்யும் 'பவர்' கூடிவிட்டதாம்! கடனட்டையை வைத்துக்
கொண்டு கண்மண் தெரியாமல் செலவு செய்துவிட்டு பிறகு 'திட்டமிட்ட செலவு செய்யக் கற்றுக்கொடுக்கவென்றே
அரசாங்கம் ஏற்பாடு செய்கின்ற கவுன்சிலிங்குக்கு போய்வருகிறார்கள்.
Monday, October 10, 2005
நியூஸிலாந்து. பகுதி 12
Posted by துளசி கோபால் at 10/10/2005 02:34:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
15 comments:
ஹை.. மழை இன்னும் வரலையா? ஓகே ஓகே.. முதல் பிரஸெண்ட் டீச்சர் இன்னிக்கு என்னோடது..
//மக்களுக்கு வாங்கும்/செலவு செய்யும் 'பவர்' கூடிவிட்டதாம்! கடனட்டையை வைத்துக்
கொண்டு கண்மண் தெரியாமல் செலவு செய்துவிட்டு பிறகு 'திட்டமிட்ட செலவு செய்யக் கற்றுக்கொடுக்கவென்றே
அரசாங்கம் ஏற்பாடு செய்கின்ற கவுன்சிலிங்குக்கு போய்வருகிறார்கள்//
:)) ஆஸ்திரேலியா இந்த விஷ்யத்தில ரொம்ப மோசம்னு கேள்விப்பட்டேன். அங்கேயாவது கவுன்சிலிங் இருக்கு.நம்மூர்ல பணம் கட்டாட்டி சிட்டிபாங்குன்னாலும் அடியாள் அனுப்பிச்சுடுவாங்க..
கிரெடிட் கார்டுங்கறத கடனட்டைன்னே மொழி பெயர்த்திருக்கீங்க? இதான் நிஜமாவே சரியான பெயர்ப்பா?
----
அப்படியே அக்கா எவ்வழியோ, தம்பி அவ்வழின்னு புதுத் தொடர் ஆரம்பிச்சுட்டேன்.. இன்னும் பாக்கலியா??
ஒருநாள் முதல்லே வந்தாப் போதுமா? மழை இப்பத்தான் சாப்பிடப் போயிருக்(கு)காங்க.
தமிழ் சரியாத் தெரியாதுன்னு எத்தனைமுறை சொல்லியிருக்கேன், இப்ப கிரெடிட் கார்டுக்கு மொழிபெயர்ப்பு கடனட்டையான்னா என்ன அர்த்தம்?
ஏதோ தெர்ஞ்சவரைக்கும் தான் 'முழி'பெயர்ப்பு.
அப்டிஅப்டி புரிஞ்சுக்கணும்.
இரும்புத்திரையைப் போய் பார்த்துட்டு வந்துட்டேன்.
//ஹை.. மழை இன்னும் வரலையா?//
:oP
//பேருந்துகள் எல்லாம் சிகப்பு நிறமுடையவையே! இந்த பஸ் கம்பெனியின் பெயரே 'ரெட்பஸ் கம்பெனி!'//
அடடா!! கற்பனை வளம்!!
டி ராஜ்,
நல்லவேளை சமயத்துலே வந்து காப்பாத்திட்டீங்க. நன்றி.
மனுஷனுக்கு என்னெல்லாம் சந்தேகம் வருது பாருங்க:-)
ஷ்ரேயா,
கற்பனை வரண்டுதான் போயிருக்கு. கொஞ்சம் 'ஆஸி'ங்ககிட்டே இருந்து வாங்கிக்கணும்.
ஆனாலும் டீச்சர் நீங்க ரொம்பதான் partiality! "ஒருநாள் முதல்லே வந்தாப் போதுமா? மழை இப்பத்தான் சாப்பிடப் போயிருக்(கு)காங்க."
ராமனாதன் முதல்ல வந்து அட்டெண்டன்ஸ் கொடுத்தாகூட இப்படியா?
ராமனாதனும் நானும் mass-cut பண்ணிடுவோம்...ராம்ஸ் கேக்குதா?
அஸ்கு புஸ்கு.. Mass cut - நீங்க? :O)
அப்பிடியே செஞ்சாலும் நட்டம் யாருக்காம்???
துளசி - இங்கே மட்டும் கற்பனை வெள்ளம் காட்டாறு மாதிரிப் பாயுற மாதிரி சொல்றீங்க! மேற்கு நகரங்களுக்கிடையிலே பஸ் விடுகிற கமபனிக்குப் பேரு: Westbus!!
ராஜ்,
அந்த JJ SERVICE-களை மறந்திட்டீங்க!
டி ராஜ்,
//transport corp-களின் பேர்கள்ல நம்ம ஆளுக கற்பனைய மிஞ்ச முடியாது ..//
இது என்னமோ 100% உண்மை.
இங்கே ரெட்பஸ், வெஸ்ட் பஸ் இப்படி வைக்கறதாலே புரிஞ்சுக்க எளிமை.
தீரன்ன்னு சொன்னா எத்தனைபேருக்குப் புரியும்?
தருமி,
கிளாஸ்லெ எதுக்குக் கலகம்? அதுவும் கூட்டு சேக்கறீங்க.
பாவம் ராம்ஸ். ஏழுவருஷ நினைவுகளைக் கிளறிக்கிட்டு இருக்கறப்ப இது நல்லாலே.
ஆமாம்:-)
இன்னும் என்னென்ன ட்ரான்ஸ்போர்ட் இருக்குன்னு யோசிச்சு எழுதிக்கிட்டு வாங்க.
///ராமனாதன் முதல்ல வந்து அட்டெண்டன்ஸ் கொடுத்தாகூட இப்படியா?
ராமனாதனும் நானும் mass-cut பண்ணிடுவோம்...ராம்ஸ் கேக்குதா? //
அதானே! இப்பத்தான் பாத்தேன்.. என்ன அக்கிரமம் இது! இனி பகிரங்க மன்னிப்பு கடிதம் பிரசுரிக்கறவரை காட் காட் பாய்காட் தான்!
//இன்னும் என்னென்ன ட்ரான்ஸ்போர்ட் இருக்குன்னு யோசிச்சு எழுதிக்கிட்டு வாங்க.
//
மருதுபாண்டியர்?
இந்த தருமி இப்படிக் குடும்பத்துலே குழப்பம் உண்டுபண்ணுவாருன்னு நான் கனவுலே கூட நினைக்கலே.ஹூம்....
ராம்ஸ், நான் டீச்சருன்னாலும் உங்க அக்கா இல்லையா?
ஆஹா அக்கா,
செண்டிமெண்ட்டில நான் பிளாட்! எனக்கு புத்தி தெளிஞ்சிடுச்சி!
இதுக்கு நல்லதா ஒரு சிச்சுவேசன் சாங் சொல்லுங்களேன் :)
இனி பழிவாங்கும் படலம்.. குடும்பத்துக்குள் குழப்பம் விளைவித்த தருமிக்கு என்ன செய்யலாம்? சொல்லுங்க.. தட்டிடலாம்!!!
//இதுக்கு நல்லதா ஒரு சிச்சுவேசன் சாங் சொல்லுங்களேன் :)//
மொதல்லே 'குடும்பப் பாட்டு' ஒண்ணு தேடணும். :-)
எதாவது நினைவுக்கு வருதா?
Post a Comment