Wednesday, October 12, 2005

நியூஸிலாந்து. பகுதி 14

போடுங்கம்மா ஓட்டு.
************************


பொம்பிளைக்கு ஓட்டுரிமை கொடுத்தா, ஆம்பிளைங்க ஒண்ணுக்கும் உதவாதவங்கன்னு ஆயிராதா?

போச்சு போச்சு, ஆம்பிளைத்தனமே இல்லாமப் போகப்போகுது.

ஓ பொம்பிளைங்க சம்பாரிச்சுக்கிட்டு வரப்போறாங்களா? அப்ப நாம ஆம்பிளைங்கெல்லாம்
'ஏப்ரன்' கட்டிக்கிட்டு வீட்டு வேலை செய்யணுமாக்கும்?

சமூகத்துக்கு இயற்கையா இருக்கற ஒழுங்குமுறை போயிரும். இனி அவ்வளவொதான்.

'பப்'லே இனி மதுவே விக்கமாட்டாங்க, சந்தோஷமே போயிரும்.

ஒழுக்கக்கேடு நடந்துரும். பெண்மையே போயிரும்.

பொம்பிளைங்க இனிமே குடும்பத்தைக் கவனிக்க மாட்டாங்க.

லண்டன்லே இருக்கறவங்க மத்தியிலே நியூஸியோட மதிப்பே வுழுந்துரும்.

பொம்பிளைங்க ரொம்ப எளிதா உணர்ச்சிவசப்படுவாங்க. அவுங்க அரசியலுக்கு வந்தா
சமாளிக்கமுடியாமத் திணறப்போறாங்க.

இது எல்லாத்துக்கும் மேலே இன்னொருத்தர் சொன்னது
அய்யய்யோ, பொம்பிளைங்க பார்லிமெண்டுக்குள்ளே வந்துட்டாங்கன்னா ஆம்புளைங்க
கவனம் சிதறிடுமே. கவர்ச்சியாவுல்லே இருப்பாங்க.

நீங்க ஏன் இப்படிக் கவலைப்படறீங்க? எப்படியும் அவுங்க பார்லிமெண்டு அங்கத்தினரா
வர்றப்பவே அம்பது வயசாயிரும். அப்புறம் கவர்ச்சியாவது, மண்ணாவது!

ஒண்ணுவேணா செய்யலாம். ச்சும்மா சாதாரணமா. 'ப்ளெயின் லுக்'இருக்கறவங்கதான்
அரசியலுக்கு வரணும். அழகா இருக்கறவங்க வந்தா, வயசான கனவான்கள் நெஞ்சு
அப்படியே கவுந்துருமில்லெ.

அட்ராக்டிவா இருக்கற பொம்பிளைங்க வந்துட்டாங்கன்னா, என்னையே இங்கே வரவிடமாட்டா
என் பெண்டாட்டி.அப்புறம் பார்லிமெண்ட் அங்கத்தினரா இருந்து என்ன பிரயோஜனம்?

இப்படியெல்லாம் பேச்சுக்கள் நடந்துக்கிட்டு இருந்திருக்கு. எப்பவா?
1891 -1893 லே. எதுக்குன்னு புரியுதுல்லெ?


1891லே ஒம்போதாயிரம் பெண்கள் கையெழுத்துப் போட்டு கோரிக்கையை வச்சிருக்காங்க.
அதுக்கு அடுத்தவருஷம் பத்தொம்பதாயிரம் பேர் கையெழுத்துப் போட்டு அனுப்பினாங்க.
அப்பவும் ஒண்ணும் நடக்கலை. 1893லே 32000பேர் கையெழுத்து. அப்ப இங்கே இருந்த
ஓட்டுரிமை வயசுவந்த பெண்கள் தொகையிலே மூணுலே ஒரு பங்கு. அப்பத்து பார்லிமெண்ட்லே
இதுதான் பெரிய 'பெட்டிஷன்'

பொம்பிளைங்களுக்கு ஓட்டுரிமை கொடுத்தா 'குடிக்கறதுக்குத் தடை' வந்துருமுன்னு அப்ப
ஆம்பிளைங்க பயந்துட்டாங்களாம். ஹென்றி ஃபிஷ் ன்றவர் இதுக்கு எதிர்ப்பா ஒரு பெடிஷன்
கொடுக்கலாமுன்னு 5000 கையெழுத்து வாங்குனாராம். இதுலே பலபெண்களும் கையெழுத்துப்
போட்டுருக்காங்க. கடைசியிலே பார்த்தா அதுலே பலதும் கள்ளக் கையெழுத்தாம். பெண்களும்
அது ஓட்டுரிமை கேக்கற பெடிஷன்னு நினைச்சுக்கிட்டுத்தான் கையெழுத்துப் போட்டாங்களாம்.
ஒருவழியா இது பிசுபிசுத்துப் போச்சு ( கள்ள வாக்காளர் அட்டைகள் ஞாபகம் வருதா?)

இந்த உலகத்திலே பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுத்த முதல் நாடு நியூஸிதான்!
அப்ப இங்கேயும் மேல்சபை கீழ் சபைன்னு ரெண்டு இருந்துச்சு இங்கத்துப் பார்லிமெண்ட்டுலே.
1893 செப்டம்பர் 19க்கு இந்த சட்டம் பாஸ் ஆச்சு. மொத்தம் 20 ஓட்டுலே 18 கிடைச்சது.
அதுலேகூடப் பாருங்க ரெண்டுபேரு பொம்பிளைங்களை அமுக்கப் பாத்திருக்காங்க:-)


இதுக்குக் காரணகர்த்தாவே 'கேட் ஷெப்பர்ட்'என்ற அம்மணிதான்.
ஸ்காட்டிஷ் பெற்றோர்களைக் கொண்ட கேத்தரீன் பிறந்தது 1847லே. அதுக்கப்புறம்
அப்பா இறந்துபோய் ஆறு வருஷமானபிறகு.அவுங்களுக்கு 21 வயசானப்ப 1868லே
இங்கே நியூஸிக்கு அவுங்க அம்மா, சகோதர சகோதரிங்களோட வந்துடறாங்க.
இங்கே வந்து செட்டில் ஆனது கிறைஸ்ட்சர்ச் என்ற ஊருலே.( ஹை, இதுதான் நாங்க
இருக்கற இடமும்!)

இங்கே ஒரு வியாபரியான ஆலன் ஷெப்பர்ட் என்றவரைக் கல்யாணம் செஞ்சது 1871லே.
ஒருமகன் பிறந்தது 1880லே. மகன் டக்ளஸ் அவருடைய முப்பதாவது வயசுலே இறந்துட்டார்.
அதுக்கு அஞ்சு வருசம் கழிச்சு 1915லே கணவரும் இறந்துட்டார்.

1925லே இவுங்களோட 78வது வயசிலே இவுங்க ரெண்டாவது கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க.
அவரும் நாலுவருஷம் கழிச்சு இறந்துட்டார். 1934லே இவுங்களோட 87வது வயசிலே இவுங்களும்
இந்த உலகத்தை விட்டுப் போயிட்டாங்க. அவுங்க சேவையைப் பாராட்டி இப்ப புழக்கத்திலே இருக்கற
பத்து டாலர் கரன்ஸியிலே இவுங்க படத்தைப் போட்டு கவுரவம் செஞ்சிருக்கு நியூஸி அரசாங்கம்.


இவுங்களுடைய விடாமுயற்சியாலேதான் பெண்ணுரிமை நிலைநாட்டப்பட்டிருக்குன்னு இங்கே
இவுங்களுக்கு ஏகப்பட்ட மரியாதை பெண்கள் உலகத்திலே.

*****************************************************************

7 comments:

said...

துளசியக்கா,
நேரமின்மையாலும் ,உங்கள் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாததாலும் உங்கள் தொடரை உடனுக்குடம் படிக்க முடியாவிட்டாலும் ,நேற்று அனைத்தையும் மொத்தமாக தரவிறக்கம் செய்து கொண்டு இரவில் படித்தேன் .ரொம்ப நல்லாயிருக்கு.

சதி லீலாவதி பட டயலாக் தான் ஞாபகம் வருது --" நீ போற ஸ்பீடுல போ ஆத்தா,நான் பின்னால வந்து சேந்துக்குறேன்"

said...

என்ன ஜோ தம்பி,

இதெல்லாம்( பகுதி 11வரை) ஏற்கெனவே சங்கமம் மின்னிதழில் வெளிவந்தது. அது ரெடியா இருந்ததாலே அதிரடியா தினம் ஒண்ணுபோட்டு ஜமாய்ச்சாச்சு. இனிமேத்தான் இருக்கு நம்ம ஸ்பீடு(-:

இனிமே அப்பப்ப எழுதித்தான் பதியணும்.

எதாவது உபயோகமா பதிவா இருக்கா இல்லையான்னு தெரியலை.

said...

//எதாவது உபயோகமா பதிவா இருக்கா இல்லையான்னு தெரியலை.//

என்னக்கா இப்படி சொல்லிட்டீங்க ? நீயூசிலாந்து பத்தி நிறைய தெரிஞ்சுகிட்டேன் .நல்ல ,உபயோகமான தொடர்.

said...

துளசி,
அடுத்து பழங்குடிகள் பற்றி எழுதப் போறதா சொல்லிட்டு பழங்குடிமகன்களின் லொல்லு பத்தி எழுதி முடிச்சுட்டீங்க. ஆனாலும்பெண்களுக்கு கெளரவம் தந்த நாட்டிலிருப்பதற்கு வாழ்த்துக்கள்.

said...

சொல்ல வந்ததை நகைச்சுவையோடு சொல்லியிருக்கின்றீர்கள். நன்றாக ரசித்தேன்.

said...

ராகவன்,
இப்ப இங்கே என்ன நிலமை தெரியுமா?

பெரும்பாலான ஊர்களில் மேயரே பெண்கள்தான்.

ச்சின்னச்சின்ன ஊர்களுக்கும்
மேயர் உண்டு! ( பஞ்சாயத்துத் தலைவர்?)

said...

தாணு, நன்றி.

ச்சின்ன ஊருன்னாலும் எல்லாவிவரத்தையும் பதிஞ்சுவச்சுக்கரதாலே எழுத நிறையத்தான் இருக்கு.
கொஞ்சம் கொஞ்சமா எழுதிக் காலத்தை ஓட்டிரலாமுன்னு......