மவோரி கதைகள் # 2
வானவில்
லேசா மழை தூறிக்கிட்டு இருக்கு. சூரியனும் இன்னும் வீட்டுக்குப் போகலை. நேரமோ சாயந்திரம்.
அட என்ன அது தொலைதூரத்துலே மினுங்கறது?
அதுவா , அதுதான் வானவில். நம்ம சாமி ஸ்ரீ ராமர் இருக்காரே, அவரோட கையிலே இருக்கற வில்.
இது ச்சின்னப் புள்ளையா இருந்தப்ப என் பாட்டி சொல்லிக் கேட்டது.
கொஞ்சம் விவரம் தெரிஞ்சு பள்ளியிலே படிக்கிறப்ப 'கதை' வேற மாதிரிப் போச்சுல்லே. ஆனா....
அதேதான் ராமன்ஸ் எஃபெக்ட்.( அட! இதிலும் அவர் பேரு ராமன் தான் பார்த்தீங்களா?)
போ, பாட்டி. சூரிய வெளிச்சத்துலே ஏழு கலர் இருக்கு. அதுதான் தண்ணியூடாப் பிரதிபலிச்சு இப்ப
வானவில் தெரியுது. நட்டநடுப் பகல் இப்படி வெய்யிலும் மழையும் ஒண்ணாவந்தாலும் வானவில் தெரியாது. ஆமாம்.
பாட்டிக்கு ஒரே பூரிப்பு. உன்னைப்போல படிச்சவளா நானு? எதோ என்னோட பாட்டி சொல்லித்தந்தது இப்படி. நீ உன் பேரப்
பசங்களுக்கு புதுசாச் சொல்வே,இல்லே?
ஒவ்வொரு நாட்டுலேயும் பாட்டிங்க வேறவேற கதை சொல்லிக்கிட்டு இருந்திருப்பாங்கல்லே? சரி. இங்கே பாட்டிங்க
என்ன சொன்னாங்களாம்?
அந்தக் காலத்துலே யூனுகு( Uenuku )ன்னு ஒருத்தர் இருந்தார். அவர் இங்கே எல்லாருக்கும் தலைவரா இருந்தார். அவருக்கும்
ஒரு தேவதைக்கும் காதல் ஏற்பட்டது. அந்த தேவதையின் பேரு ஹீனேபுகோஹூராங்கி( Hinepukohurangi ).ஒவ்வொரு
தேவதைக்கும் எதாவது ஒரு உத்தியோகம் இருக்குமாமே. அதையொட்டி, ஹீனே( ச்செல்லமா நான் சுருக்கிட்டேன்) மூடுபனி
(மிஸ்ட் )க்குரிய தேவதை.' இந்தக் காதல் விஷயம் வெளியே யாருக்கும் தெரியக்கூடாது. நமக்கு முதல் குழந்தை பிறந்தபிறகுதான்
சொல்லணுமு'ன்னு கண்டிப்பா யூனுகுகிட்டே சொல்லிட்டாங்க ஹீனே.
தினமும் இரவானதும் நம்ம ஹீனே பூமியிலே யூனுகுவோட ஃபாரெனூயி( தூங்கற இடம், sleeping house)க்கு
வந்து தங்கிட்டு, மறுநாள் காலையிலே திரும்ப அவுங்க வீடான ஆகாயத்துக்குப் போயிருவாங்க. பொழுது விடிஞ்சதான்னு
தெரியாம தூங்கிட்டா வம்பாச்சேன்னு ஹீனே ஒரு ஏற்பாடு செஞ்சாச்சு. தினமும் காலையிலே இருள் பிரியாத நேரத்துலேயே
ஹீனேவோட அக்கா ஹீனேவாய் வந்து வெளியே நின்னு குரல் கொடுக்கணும். அதைக் கேட்டதும் தங்கை எழுந்து
போயிடணும். இப்படியே ஒவ்வொருநாளும் நடந்துக்கிட்டே இருந்துச்சு.
தன்னுடைய அழகான துணையை ஊர்ஜனங்களுக்குக் காட்டமுடியாதது ரொம்ப வருத்தமா இருந்தது யூனுகுவுக்கு.
இது பொதுவான மனுஷ குணம்தானே? நம்ம கிட்டே இருக்கற நல்ல பொருளையோ, நம்ம குழந்தைகளையோ
ஊர் மெச்சுனாத்தானே ஒரு திருப்தி. ஆனா காதலியோட அன்புக் கட்டளையை மீற முடியலை. பொறுமையோ
எல்லை கடந்து போய்க்கிட்டு இருக்கு. இனியும் காத்துக்கிட்டு இருக்கமுடியாத நிலை வந்துருச்சு.
ஆனது ஆகட்டுமுன்னு ஒரு முடிவுக்கு வந்தாச்சு யூனுகு.
ஒரு நாள் ராத்திரி ஹீனே அசந்து தூங்குறப்ப, ஓசைபடாம எழுந்து, அந்த தூங்கும் விடுதியோட சுவர்களிலே
இருந்த எல்லா ஓட்டைகளையும் மேலே கூரையிலே பிரிஞ்சிருந்த ஓலைகளையும் களிமண்ணும் புல்லும் சேர்ந்த
கலவையாலே நல்லாப் பூசி மெழுகிட்டார். உள்ளே ஒரு வெளிச்சக் கீத்துகூட வரமுடியாம இருட்டா ஆயிருச்சு.
அதிகாலையிலே வழக்கம்போல ஹீனேவுக்கு விழிப்பு வந்துருச்சு.கண்ணைத்திறந்து பார்த்தா ஒரே கும்மிருட்டு.
சரி இன்னும் பொழுது புலரலை.இன்னும் கொஞ்சம் தூங்கலாமுன்னு தூங்கினாங்க.( உண்மையாச் சொன்னா
இந்தக் குட்டித்தூக்கம்தான் இனிமையா இருக்கும்.) அவுங்க அக்கா ஹீனேவாய், வழக்கம்போலக் காலையிலே
வந்து கூப்பிட்டாங்க. சுவருலே ஒரு எதுவுமே இடைவெளி இல்லாம பூசினதாலே சத்தம் உள்ளே கேக்கலை.
கூப்புட்டுக் கூப்புட்டுப் பார்த்துட்டு அவுங்க போயிட்டாங்க.
சூரியன் உச்சிக்கு வந்தாச்சு. யூனுகுவைத் தேடி அவுங்க ஜனங்கள் எல்லாம் வந்து, இன்னும் கதவு சாத்தியிருக்கறதைப்
பார்த்துட்டுக் கதவைத் திறந்தாங்க. உள்ளே பார்த்தாஅழகான ஹீனே! தூக்கத்துலே இருந்து திடுக்குன்னு எழுந்த ஹீனேக்கு
விஷயம் புரிஞ்சுடுச்சு. எவ்வளவு தந்திரமா நம்மளை இந்த யூனுகு ஏமாத்திட்டாருன்னு பயங்கரக் கோபம். எழுந்து
அப்படியே வானத்துக்குப் போயிட்டாங்க. அவ்வளவுதான்,திரும்ப வரவேயில்லை.
ஹீனேவோட பிரிவை யூனுகுவாலே தாங்க முடியலை. 'என்னடா இப்படி செஞ்சுட்டோம்'ன்னு நினைச்சு நினைச்சு
வருத்தப்பட்டு, எப்படியாவது தேடிக் கண்டுபிடிக்கணுமுன்னு எல்லா இடத்துலேயும் அலையறார். கண்டு பிடிக்க
முடியாமயே ஒரு நாள் இறந்துடறார். அப்ப சாமிங்கெல்லாம் இரக்கப்பட்டு, அவரை ஒரு வானவில்லா மாத்திடறாங்க.
வானவில் இருக்கறப்ப சிறு தூறலாயும் மூடுபனியாயும் இருக்குல்லே. அப்படி அவர் ஹீனே கூட சேர்ந்துடறார்.
இப்பக்கூட நீங்க கவனிச்சீங்கன்னா, வானவில்லையொட்டி ஒருவிதமான மிஸ்ட் இருக்குமே!
*************************************************************************************
Monday, October 17, 2005
நியூஸிலாந்து பகுதி 17
Posted by துளசி கோபால் at 10/17/2005 01:04:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
நல்லா இருக்கு பாட்டி, கதை.
மன்னிக்கணும் மேற்படி sentence-ல் comma மாத்தி விழுந்திருச்சி! அத, இப்படி படிக்கவும்:
நல்லா இருக்கு, பாட்டி கதை!!
இன்னும் கதை இருக்கு தாத்தா,கதை . சொல்லட்டுமா?
அடடா, எனக்கும் கமா மாத்தி வுழுந்துருச்சே:-)
இப்படிப் படிங்க.
இன்னும் கதை இருக்கு, தாத்தா கதை!!!
கத நல்லாத்தான் இருக்கு. ஆனா, நல்லதா முருகன், இராமு அப்படின்னு கூப்பிடறதுக்கு ஈஸியா வைக்காம காரெக்டர் பேரெல்லாம் என்ன கஷ்காமுஷ்கான்னு வெச்சுருக்காங்க?
//காரெக்டர் பேரெல்லாம் என்ன கஷ்காமுஷ்கான்னு வெச்சுருக்காங்க? //
ராமநாதன் தம்பி,
என்னான்னு சொல்றது. எனக்கும் இதேதாந்தோணிச்சு.
இதுக்கே பயந்துட்டா எப்படி? இனிமேத்தானே இன்னும் கஷ்டமான பேருங்க வரப்போகுது(-:
எதுக்கு வம்பு? கமா இல்லாம எழுதப்போறேன்...
வாங்க பாட்டி தாத்தா கதைக்கு.
தோ....வந்துட்டேன்:-)
அடடே வானவில் இப்படித்தான் வந்ததா?.நல்லா இருக்கு கதை.
உங்க தளம் பத்தி தினமலரில் வந்ததல்லவா? அதன் சுட்டி தற்செயலாய்க் கிடைத்தது.
http://www.dinamalar.com/2005oct01/flash.asp
முத்துத்தம்பி,
கதை பி(ப)டிச்சதுக்கு சந்தோஷம்.
சுட்டிக்கு நன்றி.
இதோ அடுத்தகதை போடப்போறென்.
Post a Comment