Thursday, October 06, 2005

நியூஸிலாந்து. பகுதி 11

கிறைஸ்ட்சர்ச் நகரம் : நியூஸிலாந்தின் தோட்ட நகரம்!!!!

'கார்டன் சிடி' என்று வர்ணிக்கப்படும் இந்த நகரெங்குமே தோட்டங்கள்தான்! ' த மோஸ்ட் இங்கிலீஷ் ஸிடி ஆ·ப் நியூஸிலாண்ட்' என்ற
பெத்த பெயர் பெற்றது!


முதல் முதலில் 'பிரிட்டிஷ்'காரர்கள் வந்து இறங்கியது இங்கேதான்! கப்பலில் பல மாதங்கள் பயணம் செய்து வந்தார்களாம். வரும்போதே
நோய் வாய்ப்பட்டு பலரும் இறந்துவிட்டனராம்! குடும்பமாகவே எல்லோரும் வந்துள்ளனர்! இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்த விவசாயிகளே
இவர்கள்.


கப்பலில் வந்தவர்களின் பெயர், குடும்ப விவரம், அந்தக் குடும்பத்தில் வரும்போதே இறந்தவர்கள், அவர்கள் வந்தக் கப்பலின் பெயர்
போன்ற எல்லா விவரங்களும், நகரின் மையத்தில் உள்ள சதுக்கத்தில், கற்களில் பொறிக்கப்பட்டுத் தரையில் பதித்து வைக்கப்பட்டுள்ளது!


அவர்கள் வந்தவுடன், இங்கே ஒரு தேவாலயத்தைக் கட்டி இருக்கின்றனர். அதைச்சுற்றி எழுப்பப்பட்ட நகரம்தான் 'கிறஸ்ட்சர்ச்'
என்ன ஒரு பெயர்ப் பொருத்தம் பாருங்கள்!


அவர்களுக்குத் தெரிந்த முறையிலேயே எல்லாக் கட்டிடங்களும் கட்டப்பட்டதால், இங்கிலாந்துக்கு வெளியே உள்ள இன்னொரு இங்கிலாந்து
என்று தோன்றும் வகையிலே இங்கே நகர அமைப்பு உருவாகிவிட்டது!


வீட்டுக்கு வீடு தோட்டங்கள்தான்! இங்கேயுள்ளவர்கள் வளர்ப்பு மிருகங்களுக்குச் செலவிடுவது மிக அதிகம்! அதற்கு அடுத்த செலவு இந்த
தோட்டங்களுக்குத்தான்!


எங்கே பார்த்தாலும், 'கார்டன் சென்டர்' என்று அழைக்கப்படும் 'நர்ஸரிகள்' வகைவகையான வண்ண மலர்கள் கொண்ட செடிகளை
விற்பனை செய்கின்றன! வஸந்த கால மலர்கள், இலை உதிர் கால மலர்கள், கோடைக்கால மலர்கள், இன்னும் குளிர்கால மலர்கள்
என்று எல்லாக் காலங்களுக்கும் மலர்கள். 'மலர்களே மலர்களே' என்று பாடத் தோன்றும்!


அரசாங்க விடுமுறைகளுக்கு வியாபார நிலையங்களும் உட்பட்டது. அதை மீறி,கடைகளை திறந்து வைப்பவர்கள், அபராதம் கட்டவேண்டும்!
அபராதம் கட்டிவிடலாம் என்ற எண்ணத்தில் இந்த நர்ஸரிகள் வருடம் 365 நாட்களும் திறந்து இருக்கும். அன்றுதான் வியாபாரம் அதிகமாம்.
அதனால் அபராதம் பரவாயில்லையாம்!


வீடுகட்ட மனைகள் வாங்கினாலும், அவற்றில் 60% சதவீதம் இடத்தைத் தோட்டம் அமைக்க விட்டுவிடவேண்டும்! வெறும் 40% மட்டுமே
கட்டிடம்!


எந்த வீட்டுத் தோட்டம் சிறந்தது என்று போட்டியும் உண்டு! அதற்கானப் பரிசைப் பெறவேண்டுமென்று, பலர் எப்போதும் அவர்களுடைய
வீட்டுத் தோட்டமே கதியாக இருப்பார்கள். முதல் பத்து இடங்களைப் பெற்றவர்களுக்கு பரம ஆனந்தம்!


இந்தப் பத்து வீடுகளைச் சுற்றிக் காண்பிப்பதற்கு, ஒரு 'பஸ் டூர்'கூட உண்டு. அதற்கும் கட்டணம் கட்டி, வீடுவீடாகப் போய்ப் பார்த்து
மகிழ்வார்கள்! இந்த வீடுகளில் ஏதாவது ஒன்று விற்பனைக்கு வந்துவிட்டால் அவ்வளவுதான்! 'ப்ரைஸ் வின்னிங் கார்டன்' என்றச் சொல்
மட்டுமே அதன் மதிப்பை எங்கேயோ கொண்டு போய்விடும்! இதற்காகவே இவர்கள் இந்தப் பாடு படுகிறார்களோ என்று தோன்றும்!


நகரம் எங்கும், நகராட்சியால் பராமரிக்கப்படும் பூந்தோட்டங்களும் எப்போதும் புதுப் பொலிவோடு இருக்கும்! மூன்று மீட்டர் அகலம் உள்ள
நடைபாதையில் ஒரு மீட்டர் அகலம் புல்தரையாகவே இருக்கும்! பொதுவாக, அவரவர் வீட்டுக்கு முன் உள்ள நடைபாதைப் புற்களை
தங்களுடைய புல்வெளியில் புல் வெட்டும்போது கூடவே சேர்த்து வெட்டிப் பராமரிக்கும் பழக்கம் உள்ளது. கோடையில் புற்கள் வாடாமல்
இருக்க, இரவு நேரத்தில்,நகராட்சியின் 'தண்ணீர் லாரி' மூலம் நீர் தெளிக்கப்படும்!


நகரசபை வசூலிக்கும் வரிகளில் பெரும்பங்கு இந்த தோட்டப் பராமரிப்புக்கு போய்விடும்!


நகருக்கு உள்ளேயே 74 ஏக்கரில் ஒரு பெரிய தோட்டம் உண்டு. இதன் பெயர் 'ஹேக்ளி பார்க்'. இதன் நடுவிலே ஒரு ரோடு கிழக்கு
மேற்காகப் போகிறது! நகரின் மேற்கே இருக்கும் பேட்டைவாசிகள் இதைக் கடந்தோ, அல்லது சுற்றிக்கொண்டோதான்
போகவும் வரவும் முடியும்!


இதில் ஒரு பகுதி முழுவதும் விளையாட்டுக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கோல்·ப், ரக்பி, கிரிக்கெட் என்று சீஸனுக்குத் தகுந்தபடி.
ஒரு டென்னிஸ் கோர்ட்டும், நெட் பால் கோர்ட்டும் நிரந்தரமாகவே உள்ளன.


இங்கு விக்டோரியா லேக் என்ற சின்ன ஏரியும் உண்டு. அதைச் சுற்றி ஏராளமான வாத்துக்கள் குடியிருக்கின்றன. இங்கே 'டக் ·பீடிங்'
விசேஷம். தோட்டத்துக்குப் போகும்போது கொஞ்சம் (பிரெட்) ரொட்டித்துண்டுகளை கொண்டுபோனால் போதும். அந்த வாத்துக்களுக்கு
எப்படிதான் தெரியுமோ! பறந்து வந்து நம்மைச் சுற்றிக்கொள்ளும்.


குஞ்சு பொரிக்கும் சீஸன்களில், தாய் வாத்து தன் குஞ்சுகளுடன் மெயின் ரோடைக் கடந்து செல்லும் காட்சி சர்வ சாதாரணம்! எல்லா
மோட்டார் வாகனங்களும், அந்தக் குடும்பம் மறுபக்கம் போய்ச் சேரும்வரை பொறுமையோடு காத்திருக்கும்! இதெல்லாம் கூட இங்கே
சுற்றுலாப்பயணிக்களுக்கு added attraction!


இந்த நகரிலே உள்ள ஒரே நதியான 'ஏவொன் ரிவர்' நகரின் பல பாகங்களின் வழியாகப் போகிறது. அங்கங்கே நதியைக் கடக்க
பாலங்கள், போக்குவரத்திற்காகக் கட்டப்பட்டுள்ளன.


கிறைஸ்ட்சர்ச்சும் இதனைச் சுற்றியுள்ள இடங்களும் ( பதினெட்டுப் பட்டிகளும்) 'கேண்டர்பரி ' என்று அழைக்கப்படுகிறது. இங்கிலாந்திலும்
ஒரு 'கேண்டர்பரி' இருப்பது ஞாபகம் வருகிறதா? வழக்கம்போல 'பெயர் பஞ்சம்'தான்! இந்த ஊரிலும்,இதைச் சுற்றியும் ஒரே சமதளமாக நிலப்பரப்பு
இருப்பதால் 'கேண்டர்பரி ப்ளெயின்ஸ்'என்று சொல்கிறார்கள். ஆகவே 'சைக்கிள்'நிறைய உபயோகமாகிறது. மெயின் ரோடுகளிலும்
'சைக்கிள் பாத்'என்று சைக்கிளுக்காக தனிப்பகுதி இருக்கிறது. தார் ரோடுகளில் இதை வேறுபடுத்திக் காண்பிக்க செம்மண் கலரில் இந்தப்
பாதை இருக்கும். அங்கங்கெ 'சைக்கிள் சின்னமும்' இருக்கும்!


தெற்குத் தீவிற்கான பன்னாட்டு விமானத் தளமும் இங்கேதான் உள்ளது. அதன் அருகிலேயெ, தென் துருவத்தில் தங்கி ஆராய்ச்சி செய்து
வரும் விஞ்ஞானிகளுக்கு உணவு, மற்ற பொருட்கள், தபால் ஆகியவைகளைக் கொண்டுபோகும் சிறப்பு விமான தளமும் உண்டு! இங்கே
கோடைகாலமானால், பலமுறையும், குளிர் காலமானால் ஒரு சில முறையும் இந்தச் சேவை நடக்கும்! அதைப்பற்றிய அறிவிப்புகளை தொலைக்
காட்சியில் சொல்வார்கள்!


இந்த நகரிலே, 'அண்டார்டிக் சென்டர்' என்று ஒரு கட்டிடம் உண்டு. இங்கே தென் துருவத்தைப் பற்றிய விளக்கங்களும், அங்கே உள்ள
கடல்வாழ் உயிரினங்களும் இருக்கின்றன. நாளில் பலமுறை இவற்றைப் பற்றிய திரைப்படங்கள் காண்பிக்கப்படும். மேலும் தென் துருவத்தின்
பருவ நிலையையும் பனிப்புயலையும் செயற்கை முறையில் உருவாக்குகின்றனர். அந்தப் பனிக்குகைகளில் ஒரு முறை போய்வந்தால், கிட்டத்தட்ட
தென் துருவம் போன உணர்வு வந்துவிடும்! இது போன்ற அமைப்பு உள்ள இடம் உலகிலேயே இது ஒன்றுதான். சுற்றுலாவாசிகளுக்கு
இது சொர்க்கபூமி!எல்லா ஐரோப்பிய நகரங்களுக்கும் பொதுவான ஒன்று என்னவென்றால், ஊருக்கு ஒரு பொதுச் சதுக்கம் இருக்கும். அந்த ஊரில்
முக்கிய நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கும் இடம்! இங்கேயும் 150 ஆண்டு பழக்கமான ஒரு தேவாலயம் இருக்கின்றது என்று கூறினேன்
அல்லவா? அதன் முன்புதான் இந்த ஊரின் முக்கிய சதுக்கம் இருக்கிறது! எப்போதும் சுற்றூலாப் பயணிகளை அங்கே பார்க்கலாம்.


இந்த ஊரின் 'டவுன் க்ரையர்' என்பவர் பழங்கால உடைகள் அணிந்து, கையில் ஒரு பித்தளை மணி ( நம் பூஜை மணிபோல இருப்பது)
அடித்துக் கொண்டே,பகல் 12 மணிக்கு, கையிலுள்ள சுருளை எடுத்துப் பிரித்து, அன்று நடக்க இருக்கும் முக்கிய நிகழ்வுகளைப் படிப்பார்!


உங்கள் கற்பனைக் குதிரையில் ஏறி ஒரு பழைய காலத்து, முடியாட்சி நடந்துகொண்டிருக்கும் தேசத் தலைநகருக்குப் போய்விடுங்கள்!
அங்கே தெருவில் மத்தியிலோ, கோட்டை வாசலிலோ ஒரு அரசாங்க வீரன் சுருட்டிய ஓலைகலைப் பிரித்துப் படித்து
அனைவருக்கும் அரச கட்டளையைத் தெரிவிப்பான் அல்லவா?


அதே, அதே, அதேதான்! இது இங்கே, இந்தச் சதுக்கத்தில் தினமும் நடக்கும் நிகழ்வு. இன்னொரு முக்கிய நிகழ்வு. இந்த நகருக்கு ஒரு
'விஸர்டு' மந்திரவாதி இருக்கிறார். அவர் தினமும் பகல் 12 மணிக்கு, 'டென் கமாண்ட்மெண்ட்ஸ்' படத்தில் 'மோசஸ்' கையில்
வைத்திருந்தது போன்ற ஒரு தடியுடன் வந்து, ஒரு சிறிய ஏணிமேல் ஏறி நின்றுகொண்டு அவ்வப்போது நடக்கும் உலக நிகழ்ச்சிகளைப்
பற்றிப் பேசுவார். அவர் வைத்திருக்கும் உலகப் படத்தில் இந்த நாடு தலைகீழாகக் காட்டப்பட்டிருக்கும். இந்த நாட்டின் அரசாங்கத்தின்
நடவடிக்கைகளும் இவர் நாவில் இருந்து தப்ப முடியாது! வீராவேசமாகப் பேசுவார்! இந்த நகரின் 'லேண்ட் மார்க்'குகளில் இவரும் ஒருவர்.
பார்ப்பதற்கு 'மனநோயாளி' போல இருக்கும் இவர் மிகவும் சிறந்த அறிவாளி. தத்துவத்தில் டாக்டர் பட்டம் பெற்று சில வருடங்களுக்கு
முன்புவரை, நம் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக வேலை செய்தவர். உலக விசாரம் மேலிட்டு வேலையை விட்டுவிட்டு, இப்படிப்
பிரசங்கம் செய்துகொண்டு இருக்கிறார்.


இன்று காலை வந்த தொலைக்காட்சிச் செய்தியின்படி, எங்கள் மந்திரவாதி, 'ஓமரு' என்னும் ஊருக்குப் போய்விட முடிவு செய்துவிட்டாராம்!


இங்கே உள்ள மிருகக் காட்சி சாலையும் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டியவைகலில் ஒன்று. எல்லா மிருகங்களும் திறந்தவெளியில்
ஏறக்குறைய அதன் இயற்கை அமைப்பிலான சூழலில் இருக்கும். இங்கே உள்ளூர்காரர்கள் அவர்களுக்குப் பிடித்த மிருகத்தை,'தத்து'
எடுத்துக் கொள்ளலாம்!


இந்த மிருகக் காட்சி சாலையின் பெயர் 'ஒரானா பார்க்' இங்கே வருடம் 50 டாலர் கட்டினால், 'ஒரானாவின் நண்பர்கள்' ஆகிவிடலாம்!
அந்த வருடம் முழுவதும் எத்தனை முறைகள் வேண்டுமானாலுமங்கெ போய்வரலாம்.


இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், எங்கே போனாலும் கட்டணம் மிகவும் அதிகம். அதிலும் அதை ரூபாயாக
மாற்றிக் கணக்குப் போட்டுப் பார்க்குபோது( நம்மை அறியாமலேயெ இது வந்துவிடும்!) 'கொள்ளை அடிப்பது'போல இருக்கும்! ஆகவே
உள்ளூர்காரர்கள் புதிதாக ஏதாவது விசேஷமாக வரும்போது ஒருமுறை செல்வதோடு சரி! ஆனால் உள்ளூர் ஆட்கள் அவர்களுக்கு ஆதரவு
தருவதில்லை என்று 'மூக்கால் அழுவார்கள்'! குறைந்த பட்சம் ஏதாவது தள்ளுபடி தரலாம் அல்லவா?
இன்னும் வரும்

நன்றி: சங்கமம் 2004

23 comments:

said...

துளசி அக்கா,

நீங்கள் உங்கள் ஊரைப்பற்றி நிறைய நல்ல விடயங்கள் எழுதுகிறீர்கள் கூடவே நல்ல படங்களையும் போட்டீர்கள் என்றால் நல்லா இருக்கும்.

இவருடைய படங்களைப் பார்க்கும்போதுதான் உங்கள் ஊரின் அழகு வெகுவாக கவர்கிறது.

said...

குமரேஸ்,

படத்தைப் போட்டேனே. ப்ளொக்கர் ரெண்டுதடவையும் 'அப்லோடு' செஞ்சுட்டதாப் 'பொய்' சொல்லுதேப்பா(-:

said...

ப்ளொகருக்கு பாரதி பாட்டு தெரியாது துளசி.. அதான் பொய் சொல்லுது! :O)

மந்திரவாதியைப் பாக்கணும் என்பதற்காகவே அங்கே வர முடிவெடுக்க யோசிக்கையிலே அவர் அடுத்தூருக்குப் போறதா சொல்லிட்டீங்களே!! அவரை "போமாணாம்" சொல்லுங்க!!!! :O)

இங்கேயும் கன்டபரி உண்டு. என் கருத்து இதுதான்: இங்கிலாந்துக்காரனுக்கு 1) தேசப்பற்று/ஊர்ப்பற்று அதிகம் அல்லது 2)கற்பனை வளம் குறைவு. ;O)

said...

ஷ்ரேயா,
மொதல்லே நீங்க வாங்க. அடுத்த ஊருக்குப் போய் அவரைப் பாத்துரலாம். அங்கேயும் இப்படி எதாவது செஞ்சுக்கிட்டுதானே இருப்பார்?

said...

//மொதல்லே நீங்க வாங்க//
நான் எப்ப வருவேன் என்று எனக்கே தெரியாது!! ஹஹ்ஹஹ்ஹா!!!

(எப்ப வருவேன் எப்பிடி வருவேன் என்று எனக்கே தெரியாது என்று போடத்தான் நினைச்சேன்.. ஆனா வரப்போறது ப்ளேன்லும் carல்/பஸ்லயும்தான் என்று முதலே தெரியும் என்பதால போடல! :O)

said...

ஷரேயா பாப்பமே.. நீங்களோ நானோ முதல்ல நியூசி போறதெண்டு..

said...

இந்த போட்டிக்கதையளை விட்டிட்டு கெதியில பதிவைப்போடும் பாப்பம்!!

said...

ஷ்ரேயா & சயந்தன்,

'சபாஷ்! சரியான போட்டி!'

said...

என்னம்மா மூட்டி விடுறீங்களா? ஊர் ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பாங்க! யார் முதல் வந்தா என்னா.. சந்திக்கப்போற உங்களுக்கு சந்தோசம்தானே!! :O)

(ஆனா ஒன்று, சயந்தனுடான சந்திப்பு பத்தின பதிவு நீங்க போட்டிடுவீங்க.. அவர் தரப்பிலேருந்து ஒண்ணுமே வராது!!) :OD

said...

ஊர் ரெண்டுபட்டா வலை பதியுறவங்களுக்குக் கொண்டாட்டமுன்னு திருத்தி வாசிக்கவும்.

said...

:OD
இப்ப உங்கட ஊர்லே என்ன நேரம்?

said...

ஏன்? எனக்கு நேரம் சரியில்லையோ?

மாலை 7.21

said...

நேரம் மாத்திட்டாங்க் என்று சொன்னீங்கதானே அதான் கொஞ்சம் குழப்பிட்டுது

உங்க நேரமெல்லாம் நல்லாதான் இருக்கு - வலைப்பதிவர் மாநாடும். நியுஸி வர போட்டி போடுற ஆட்களுமா!!!

said...

துளசி,
பழம் விட்டாச்சு. நியூஸி கதை படிச்சுட்டு என் பொண்ணுக்கும் சொல்லப் போய், அவ உங்க ரசிகையாயிட்டா. உங்க டைம் பற்றிய பதிவிலிருந்து கொஞ்சம் சுட்டு அவங்க மாகசீனுக்குத் தரப் போறாளாம். இன்னைக்குப் போய் உங்க விஸார்ட் பத்தி சொன்னா என் பையனும் உங்க விசிறியாயிடுவான்!!!
முகம் காட்டாமலே எல்லாத்தையும் அசத்துறீங்கப்பா!!

said...

தாணு,

'முகம்' தெரிஞ்சுடுச்சு சுரேஷோட ப்ளொக்லே.

ஆமாம். அந்த 'டைம்' புரியுறமாதிரி இருக்கா?

said...

என்னாது ஒங்கூருல மந்திரவாதி இருக்காரா.......நம்மூருலயும் இருங்காங்க...ஏமாத்தி பணம் பிடுங்க.....நல்லவேள ஒங்க ஊரு மந்திரவாதி ஊர விட்டுப் போயிட்டாரு. நிறைய தகவல் சொல்றீங்க. புதுமையா இருக்கு.

நம்ம ராமநாதன் கிட்ட சொல்லி, ரஷ்யாவைப் பத்தியும் எழுதச் சொல்லனும்.

said...

என்னமோ ஆயிருச்சு இந்த தளத்துக்கு(-:

ரெண்டு நாளா நண்பர்கள் எல்லாம் என்னைத் தேடிதேடிக் களைச்சுப் போயிட்டாங்களாம்.

என்ன நடக்குது இங்கே?

said...

சோதனை இல்லீங்க இது ஒரு பரிசோதனை

said...

இன்னொண்ணு போட்டுக்கறேன்.
வருதான்னு பாக்கத்தான்.

ச்சும்மா.....

said...

ராகவன்,
ச்சூ மந்திரக்காளி!

இருக்காருங்க இங்கத்து அஃபீஷியல் விஸர்ட்!

said...

"உங்கள் கற்பனைக் குதிரையில் ஏறி ....."அப்டி வாங்க வழிக்கு..

said...

தருமி,

இந்தப் பகுதிகள் எல்லாம் 'சங்கமம்' இதழுக்காக எழுதியது. அவுங்களுக்கும், அவுங்க வாசகர்களுக்கும் கொசுவத்தி தெரியாது. அப்புறம் பேச்சுவழக்கில்லாம நடையைக் கொஞ்சம் மாத்தி எழுதவேண்டியிருந்தது. அதுனாலேதான் குதிரை அங்கே வந்துச்சு.

இனிமே எந்தப் பிராணிகளையும் புதுசா வளர்க்க முடியாதுன்ற முடிவுலே இருக்கறதாலே இந்த க.கு. வுக்குக்கு 'நோ'

said...

nalla irukku !

namma valai pakkam varardhu, neram irundha :)