Sunday, February 28, 2010

அகத்தியருக்கு வயித்துவலி!

காதில் விழுந்ததும், வெல்லம் தின்னாப்போல இருந்துச்சு. கோபாலின் முகமோ, கவலையில். 'கதை எனக்குத் தெரியுமே'ன்னு என் மனசு கிடந்து துள்ளுது. 'ஒரு ராட்சஸனை முழுசா முழுங்குனா வயித்துவலி வராதா?' ன்னு கொக்கி போட்டேன். என்ன ஏதுன்னு அவர் கேட்கணும், 'இதுகூட உங்களுக்குத் தெரியலையா?'ன்னு ஒரு சின்ன அலட்டலோடக் கதையை நாம சொல்லணும்! :-)

மருந்தீஸ்வரர் கோவிலுக்குப் போயிருந்தோம். கருவறைமுன்னே நிக்கும்போது, எனக்காக 'மேட்டர் தேத்தும்' மும்முரத்தில், குருக்களிடம் 'ஸ்வாமிக்கு ஏன் மருந்தீஸ்வரர்ன்னு பெயர்?' கோபால் கேட்டார்.

"அதுவா? அகத்தியருக்கு வயித்துவலி வந்ததுன்னு மருந்து தந்தார்"

தேன்வந்து என் காதில் பாய்ஞ்சது அப்போதான். வெளிப் பிரகாரத்துலே ஒரு மேடையில் உக்கார்ந்து கதை சொல்ல ஆரம்பிச்சேன்(கோபாலுக்குத்தான்)

இல்வலன், வாதாபின்னு ரெண்டு ராட்சஸ அண்ணன்தம்பிகள். இவுங்களுக்கு என்ன காரணத்தாலோ பிராமணர்கள் மேல் தீராத வன்மம். அவுங்க காலத்துலே 'பெரியவர்' யாராவது இதுக்குக் காரணமான்னு தெரியலையே! இந்தக் குலத்தை ஒழிச்சுக் கட்டணுமுன்னு நினைச்சாலும் முடியலை. பேசாம முடிஞ்சவரைக்கும் இவுங்களைத் தின்னே தீர்க்கலாமுன்னு முடிவு செஞ்சுக்கிட்டாங்க.

எங்கியாவது பிராமணர்களைப் பார்த்தால் ரொம்ப வணக்கமாக, எங்க வீட்டுக்கு விருந்து சாப்பிடவரணுமுன்னு விநயமா வேண்டிக்குவாங்க. விருந்தாளி வந்ததும், அண்ணன்காரன் தனக்கிருந்த மாயசக்தியால் தன் தம்பி வாதாபியை ஆட்டுக்கிடாவா மாத்தி அதைக் கொன்னு, மட்டன் சுக்கா, மட்டன் குருமான்னு குழம்பு வச்சுருவான். விருந்தாளியும் வயிறு நிறைய இறைச்சிக் குழம்புன்னு வெட்டி விழுங்குவார். அந்தக் காலத்துலே பிராமணர்கள் நான் வெஜ் சாப்புடுவாங்களாம்.

சாப்பாடு ஆனதும் நிம்மதியா ஏப்பம் விட்டு ஓய்வெடுக்கும்போது,

" என் உடன்பிறப்பே.... தம்பி வாதாபி, அண்ணனிடம் ஓடி வா "

அருமையாக் கூப்பிடும் இல்வலனுக்கு ஒரு அபூர்வ வரம் கிடைச்சுருந்துச்சாம். இவன் யாரைக் கொன்னாலும், அவுங்க உயிரை மறுபடி யமலோகத்துலே இருந்து திரும்ப வரவழைக்க முடியுமாம்.

அருமை அண்ணன் கூப்பிட்டவுடன், விருந்தாளி வயித்தைக் கிழிச்சுக்கிட்டு,'இதோ வந்தேன் அண்ணா' ன்னு தம்பி வெளிவந்திருவார். வயிறு கிழிந்த விருந்தாளியின் கதை முடிஞ்சுரும். இப்படியே பலகாலமாக நடந்துக்கிட்டு இருந்துச்சு. ஒரு சமயம் அகத்திய முனிவர் இவுங்களைச் சந்திச்சார். இவுங்களும் வழக்கம்போல அவரை விருந்துக்குக் கூப்பிட்டாங்க. இவரும் போனார். அமர்க்களமா சாப்பாடு ஆச்சு. இவர் எல்லாம் தெரிஞ்ச முனிவராச்சே. ஏப்பம் விட்டுத் தொப்பையைத் தடவிக்கிட்டே 'வாதாபி ஜீரணோ பவ' ன்னு சொன்னார்.

இதைக் கவனிச்ச அண்ணனுக்குப் பயம் வந்துருச்சு. 'தம்பி, உடன்பிறப்பே, வாதாபி சீக்கிரம் வா' ன்னு கூப்பிட்டான். ஒன்னும் நடக்கலை. அகத்தியர் சொல்றார், 'வாதாவி ஜீரணமாகிட்டான்'

இப்படி ஒரு ஆட்டை முழுசா முழுங்குனா வயித்துவலி வராம இருக்குமான்னேன்!

அப்புறம் இன்னும் கொஞ்சம் விசாரிச்சதுலே வேற ஒரு கதை கிடைச்சது. பாரதப்போரில் அடிபட்டி வீழ்ந்த வீரர்களுக்கு மருத்து தேவைப்பட்டது. எந்தெந்த மூலிகை, பச்சிலை எல்லாம் சீக்கிரம் காயத்தைக் குணப்படுத்துமுன்னு அகத்தியமுனிவருக்கு சிவபெருமான் உபதேசிச்சாராம். அதனால் இங்கே சிவனுக்கு மருந்தீஸ்வரர்ன்னு பெயர் வந்திருக்கு. அகத்தியர்தான் இங்கே 'அவசர உதவி ' மருத்துவத்துக்கு இன்சார்ஜா இருந்துருக்கார் அப்போ.

பொதுவா உயிரினங்களுக்கு இருக்கும் நோய்வகைகள் 4448. இதுலே எந்தெந்த நோய்க்கு எது மருந்து, மூலிகைகள் எதை எதை எப்படிக் கலக்கணும், எப்படி அவைகளை உபயோகிக்கணுமுன்னு ஈசன், அகத்தியருக்கு விளக்கினாராம். அதனால் இவருக்கு மருந்தீசர்ன்னு பெயர் வந்துருக்கு. வடமொழியில் இவர் ஔஷதீசர்.

பொதுவா தலபுராணமுன்னு கோவிலுக்கும், அங்கே இருக்கும் இறைவனுக்கும் ஒரு கதை இருக்கும். இங்கே என்னடான்னால்.... ஊருக்கே ஒரு கதை இருக்கு! தலத்துக்கே ஒரு தலப்புராணம்.

முன்னொரு காலத்தில் வான்மீகர் என்று ஒருவர் இருந்தார். இவரோட அப்பா, பிரம்ம வம்சத்தில் வந்த பிரசேதச முனிவர். வான்மீகருக்குச் சின்னவயசுலேயே சிலபல வேடுவர்களின் நட்பு கிடைச்சு அவுங்களோட ஒண்னாமண்ணாக் கிடந்து அலைஞ்சுருக்கார். எல்லா நண்பர்களும் நல்லவங்களாவா இருப்பாங்க? சில கூடா நட்பு, கெட்ட மனசுள்ளவர்களோடு சேர்ந்து இவரும் கெட்டலைஞ்சுக்கிட்டு இருந்துருக்கார். உயிர்க்கொலை, வழிப்பறின்னு எல்லாம் 'தண்ணி' பட்ட பாடு. தன் குலத்துக்கு உரிய செய்கைகள் மேல் ஒரு அலட்சியம். அப்பாவுக்கு ஒரே கவலை.

திடீர்னு ஒரு நாள் இவருக்கு அறிவுக் கண் திறந்தது. எந்த மரத்தின் கீழ் இருந்தாரோ? போகட்டும். எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரணுமுல்லே? மனசாட்சி முழிச்சுக்கிச்சு. தன்னுடைய செய்கைகளுக்குத் தானே மனம் வருந்தி இருக்கார். தவறை உணர்ந்தவர்களுக்கு பாப விமோசனம் கிடைக்குமே! அந்த வகையில் நாரதர், இவரை ஒரு நாள் சந்திச்சு(?) ஸ்ரீ ராமனுடைய கதையை( ! ? ) உபதேசிச்சார். உடனே இவர் தவம் செஞ்சு புனிதராகி, ராமாயணம் என்ற காவியத்தை எழுதுனார். இவரைத்தான் வால்மீகின்னும் சொல்வாங்க.

இப்படியே (கதை)போய்க்கொண்டிருக்கும்போது மார்க்கண்டேய மகரிஷி இவரை ஒரு நாள் சந்திச்சார்! 'அடடா....... இத்தனை ஆயிரம் ஸ்லோகம் எழுதி ராமாயணம் எழுதி புண்ணியம் கிடைச்சது சந்தோஷம். ஆனா.... இவ்வளவு கஷ்டப்படாமலேயே புண்ணியம் கிடைக்க ஒரு ச்சான்ஸ் இருக்கே. அதை வுட்டுட்டீங்களே'ன்னார். 'அப்படியா சேதி? விளக்கமாச் சொல்லுங்கோ. செஞ்சுறலாம் நோ ஒர்ரீஸ். புண்ணியம் டபுளாகட்டுமே'ன்னார்.

"சிவபெருமானை வணங்கினால் ஆச்சு. நீங்க அப்படியே தென்னாட்டுப்பக்கம் நடையைக் கட்டுங்கோ. தென்னாடுடைய சிவன் என்பது இதனால்தானோ? சுயம்புவா அங்கே இருக்கார். எங்கே இருக்காருன்னு கண்டுபிடிக்க ஒரு சிரமமும் இல்லை. அந்த இடம் போகும்போது அவரே சொல்வார், சட்டுப்புட்டுன்னு கிளம்புங்கோ"

நடந்து நடந்து கிழக்குக் கடற்கரையோரம் போய்க்கிட்டே இருக்கும்போது, ' (அப்போல்லாம் கூட்டமே இல்லாத நாடா இருந்ததால் சுத்தமான இடங்களாத்தான் இருந்துருக்கும். மணலில் தைரியமா நடந்து போயிருப்பார்!) நான் இங்கே இருக்கேன்'ன்னு ஒரு அசரீரி கேட்டுச்சு. இடத்தைத் துழாவிப் பார்த்தபோது ஒரு சிவலிங்கம் இருந்துச்சு. தான் தோன்றி. சுயம்பு. மனம் உருக வழிபட்டு இருக்கார். சிவன், மனம் மகிழ்ந்து இவர்முன் தோன்றி ஆசீர்வதிச்சு, என்ன வரம் வேணுமுன்னு கேட்க, பாவ மன்னிப்பு எல்லாம் கேட்டுக்கிட்டுக் கூடவே 'தன் பெயர் உலகில் நிலைச்சு இருக்கணுமுன்னு ( ஆஹா.... பெயர் ஆசை யாரை விட்டது?) இந்த ஊருக்கு வான்மியூர்ன்னு பெயர் வைக்கணுமுன்னும் அப்பீல் செஞ்சார். அன்று முதல் இது வான்மியூர். மரியாதைக்குரிய 'திரு' சேர்ந்ததால் திருவான்மியூர் ஆச்சு!
நல்ல அருமையான கோவில். கோவிலோட வயசைக் கேட்டால் ஆளாளுக்கு ரெண்டாயிரம், மூவாயிரமுன்னு சொல்றாங்க. திருநாவுக்கரசரும், திரு ஞானசம்பந்தரும் வந்து வழிபட்டுப் பதிகங்கள் பாடி இருக்கும் பாடல் பெற்ற ஸ்தலம். கல்வெட்டுகள் கணக்குப் படி ஏழாம் நூற்றாண்டுன்னு சொல்லுது. கோவில் எழுப்பியது அந்தக் காலக்கட்டமா இருக்கணும். ரொம்ப விஸ்தாரமான இடம். கோபுரவாசலுக்கு முன் பெரிய திருக்குளம். சுத்தமா இருக்கு!!!!! நடுவில் மண்டபம் தங்கப்பெயிண்ட் அடிச்சுத் தகதகன்னு ஜொலிக்குது.
பிரதான கோபுரவாசலில் இருந்து கோவிலின் வெளிப்ரகாரம் வரை அருமையான மண்டப அமைப்பு. (சிங்கை சீனுவின் கோவிலை நினைவுபடுத்துச்சு). நுழைஞ்சு போனால் முதலில் புள்ளையார். விஜயகணபதி! இந்தப் பக்கம் பிரகாரத்தின் இன்னொரு மூலையில் மூணு விநாயகர்கள் இருக்காங்க.
அடுத்து தியாகராஜர் மண்டபம். இந்தக் கோவில் மூலவருக்கு ஔஷதீஸ்வரர், தியாகராஜர், வான்மீகநாதர், பால்வண்ண நாதர்ன்னு பல பெயர்கள் இருக்கு. இந்தக் கருங்கல் மண்டபத்துத் தூண்களிலே கண்ணப்பர்,(சிவலிங்கத்துலே ஒரு காலை வச்சுக்கிட்டு அம்பால் தன் கண்ணை நோண்டி எடுக்கறார்) ஆஞ்சநேயர், முருகன், விநாயகர், பழனி ஆண்டவர்னு இருக்காங்க. நம்ம ஜனங்கள், சந்தனம், குங்குமம், விபூதி, வெண்ணைன்னு பலவிதப் பொருட்களால் பூசி மெழுகி வச்சுருக்காங்க. நல்லா உத்துப் பார்க்கவேணும்.

கருவறை நோக்கிப்போனால் அங்குள்ள பிரகாரத்தில் அறுபத்துமூவரில் தொடங்கி அனைவரும். வள்ளி தெய்வானையுடன் முத்துக்குமரர், 108 சிவலிங்கங்கள், காலபைரவர், சிவகாமசுந்தரியுடன் நடராசர், கஜலக்ஷ்மி, வீரபாகுன்னு எல்லாரும் ஜே ஜே!

மூலவர் மேற்குப் பார்த்து இருக்காராம். (சிவலிங்கம் எந்த திசை பார்க்குதுன்னு எப்படி கண்டு பிடிப்பது?) கருவறை வாசல் மேற்கு பார்த்து இருக்கு. இதுக்கும் ஒரு கதை வச்சுருக்காங்க. அபய தீக்ஷிதர் என்னும் பக்தர் சாமியை தரிசிக்க வந்துருக்கார். அடைமழை, வெள்ளப்பெருக்கு. கடந்துவரமுடியலை. அவர் நிக்கும் இடத்தில் இருந்து பார்த்தால் சாமியின் முதுகு(??) தெரியுது. அபயக்குரலால் ஈசனை வழிபடறார். சிவலிங்கம் உடனே திரும்பி இந்தப்பக்கம் காமிச்சு, தரிசனம் கொடுத்ததாம். லிங்கத்தின் மேல் மாட்டுக்குளம்பு அடையாளம் ஒன்னு இருக்காம். இதுக்கான கதை, காமதேனு சாபத்தால், காட்டுப்பசுவா அலையும்போது லிங்கத்தில் காலிடறி இருக்கு. இந்தக் கோவிலுக்கு மட்டும் எப்படி ஏகப்பட்ட கதைகள் இருக்கு என்பது ஒரு ஆச்சரியம்தான். அதையெல்லாம் இன்னொருநாள் பேசலாம். (இப்பவே பதிவு நீண்டு போச்சு) ஒன்னே ஒன்னுமட்டும் சொல்லிக்கறேன்.

பாரத யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் மடிஞ்சது ஒரு பெரிய துன்பியல் நிகழ்ச்சி. இந்தப் போருக்கு கண்ணனும் ஒருவிதத்தில் காரணகர்த்தாவா இருந்ததால் அவனுக்கும் பாவம் வந்து சேர்ந்துருச்சு. சாமியா இருந்தாலும் செஞ்ச பாவம் விட்டுப்போயிருமா? அதுக்குப் பரிகாரமா, பார்த்தசாரதி, இங்கே வந்து தீர்த்தக்குளங்களில் மூழ்கி எழுந்து வான்மீகநாதரை வழிபட்டார். சிவனின் தலையில் இருக்கும் கங்கையில் இருந்து அஞ்சு துளி கீழே சிந்தி, இங்கே அஞ்சு தீர்த்தமா ஆகி இருந்துச்சாம். ஜென்மநாசினி, பாவநாசினி, காமநாசினி, மோட்சதாயினி, ஞானதாயினின்னு அஞ்சு. (இப்ப இதெல்லாம் எங்கே போச்சுன்னு தெரியலை!)

அம்மன் பெயர் திரிபுரசுந்தரி.(அட! நம்ம திருப்பூ!) இந்தச் சந்நிதி முன்மண்டபத்தில் அட்டகாசமான அபூர்வ சிலைகள் பல இருக்கு! குதிரை வீரர்கள் சிலை ரொம்ப நுணுக்கமான ஆடைஅணியுடன் இருக்கு. நரசிம்மர், சரபேஸ்வரர்ன்னு கவனிச்சுப் பார்க்கணும். மேல் விதானத்தில் திருப்பாற்கடல் கடையும் ஸீன். இன்னும் அப்சரஸ்கள், அசுரர்கள், நாட்டியமங்கைகள்னு அழகனான சிற்பங்கள் அதிகம். தலையை உசத்திப் பார்த்துக் கொஞ்சம் கழுத்துவலி!

முக்கியமாச் சொல்லவேண்டியது என்னன்னா வருசம் 365 நாளும் இங்கே சமயச்சொற்பொழிவுகள் நடக்குது. இதுக்குன்னே தனியா ஒரு பெரிய ஹால் கட்டிவச்சுருக்காங்க. வெளிப்பிரகாரத்தின் ஒரு மூலையில் தலவிருட்சமா வன்னிமரம். அந்த மேடையச்சுத்தி நந்திகள். பார்க்கப் படு அம்சம்.

சந்தர்ப்பம் கிடைச்சால் தவறவிடாமல் இங்கே ஒரு நடைபோய் பார்த்துட்டு வாங்க.
ஒருநாள் மத்தியான வேளையில் கோவில் கோபுரத்தைப் படம் எடுக்கலாமுன்னு போனால் குளக்கரையில் நின்னுக்கிட்டு இருந்த வண்டிகள் ஒன்னில் சின்னதா சிறு தீ எரிஞ்சது. ஆஹா..... காரில் மர்மமான முறையில் தீப்பிடித்ததுன்னு பத்திரிகையில் அப்பப்போ வரும் செய்திகள் உண்மைதான் போல. நம்ம டிரைவரிடம் சொல்லி, அபாயச்சங்கு ஊதவச்சேன். அக்கம்பக்கம் வந்து மண்ணள்ளிப்போட்டு அணைச்சது.

Friday, February 26, 2010

கஜ்ராரே கஜ்ராரே தேரே காரே காரே நய்னா (குஜராத் பயணத்தொடர் 29)

என்னப்பா இந்த ஆட்டம் ஆடுறா? ஹைய்யோ..... சிரிச்சுச்சிரிச்சு வயிறெல்லாம் புண். ஆமடாவாடை விட்டுப்போகுமுன் பார்க்கவேண்டிய இடம் இதுன்னு பப்பன் நிர்ப்பந்திச்சுச் சொன்னதால் வந்துருக்கோம்.

லோதலைவிட்டுக் கிளம்புன நாப்பதே நிமிஷத்தில் ஆமடாவாட் எல்லைக்குள்ளே வந்துருந்தோம். அடையாளமா முன்னே நின்னது கோபுரத்தில் பறந்த கொடி, ஸ்ரீ ஸ்வாமிநாராயண் மந்திர். இந்த ஊரிலேயே ஏழெட்டு கோவில்கள் இவுங்களோடதுதான். பேட்டைக்கு ஒன்னு! எல்லாப் பெரிய நகரங்களைப்போலவே இங்கே மாலை நேரத்துக்கான ட்ராஃபிக் ஜாம் ஆரம்பமாயிருச்சு.

ஒரு நாற்சந்தியில் சிக்னலுக்கு நின்னப்பக் கண்னை ஓட்டுனா..... தேங்காயாத் தொங்குது ஒரு மரத்தில்! இது தேங்காய் மரமா? ச்சேச்சே..... இப்படியா ? தேங்காய், மட்டை உரிச்சே காய்க்குமா என்ன?
ஹனுமான் தாதா மந்திர். சாமிக்கு வேண்டிக்கிட்டுத் தேங்காய்களை அப்படியே கட்டித் தொங்கவிடும் வழக்கம். நியாயமாப் பார்த்தா இதுதான் வேண்டுதல். இல்லேன்னா நம்மைப்போலக் கோவிலுக்குத் தேங்காய் உடைச்சு அர்ச்சனை செஞ்சுட்டு, அது மறுநாள் சட்னிக்கு ஆச்சுன்னு வச்சுக்கறதா?

'பட்டம்' விட 'நூல்' ' ரெடி!

ஹொட்டேல் போய்ச்சேரச் சரியா ஒன்னரைமணி நேரம் ! நாளை விடியக்காலை விமானத்தைப் பிடிக்கணுமேன் னு ஏர்ப்போர்ட்க்குப் பக்கத்துலே (வெறும் அரைக்கிலோ மீட்டர் தூரம்) ரூம் போட்டுருந்தோம். ஒருமணி நேர ஓய்வு. விஷால்லாவுக்குப் போறோம். இங்கே போகாமத் திரும்புனா ஆமடாவாட் வந்ததுக்கு அர்த்தமே இல்லைன்னார் பப்பன்.

ஒருமணி நேர ஓய்வுக்குப்பிறகு விஷாலாவை நோக்கிப்போறோம். ஒரு இடத்துலே இப்படி ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். கண்காணாத் தேசத்துலே தேனும் பாலுமா ஓடுதுன்னு வியாபாரிகளின் மார்கெட்டிங் யுக்தி. எதோ ஒரு சாக்குலே போய்ச்சேர்ந்துட்டால் போதுமுன்னு 'மாணவர் வேசத்துலே' வந்து குமியும் மக்கள். உண்மையாகவே கல்விக்காக வருபவர்கள் எண்ணிக்கை ரொம்பவே குறைவு. அவுங்க வந்து ஒழுங்காப் படிச்சுட்டு திரும்பிப் போயிடறாங்க. இல்லைன்னா நல்ல வேலை கிடைச்சு இங்கேயே தங்கிடறாங்க. மாணவர் விஸா கிடைச்சு இங்கே வந்ததும் அவுங்க வாரம் 20 மணி நேரம் வேலை செஞ்சுக்கலாமுன்னு ஒரு ஒர்க் பர்மிட்டும் கிடைச்சுரும். அதையே வச்சு வேலைதேடிக்கிட்டு, கொஞ்சம் கொஞ்சமா வகுப்புக்கே போகாம எந்த வேலை கிடைச்சாலும் சரின்னு.... இப்படி ஒரு கூட்டம் இருக்கு. அதைப் பற்றி இன்னொருநாள் பேசலாம்.
1978 மார்ச் மாசம் இந்த ரெஸ்ட்டாரண்டை ஆரம்பிச்சு இருக்காங்க. ஹிமயமலையில் 'பத்ரி விஷாலா' ன்னு இருக்கும் ரிஷிமுனிவர்கள் வாழும் முக்கிய கேந்திரத்தை நினைவுகூறும் விதமா அமைதியா சாந்தி நிறைஞ்சு இருக்குமுன்னு ஒரு எண்ணம். அங்கே இருப்பதைப்போலவே நொடியில் யோக நிலைக்குப் போகவும் மனம் அலைபாயாமல் இருக்கவும் ஏற்ற இடமுன்னு 'நினைச்சு' இங்கே இதை ஆரம்பிச்சுவச்சவர் ஒரு படேல்!
எப்படி நிம்மதி உடனே கிடைக்குமுன்னு அப்புறம் தெரிஞ்சது:-)

பழையகால கிராமத்தை அப்படியே கண் முன் கொண்டுவந்து நிறுத்திவச்சுட்டாங்க. 'சச்சின் வந்திருக்காஹ. அமிதாப் வந்துருக்காஹ. இந்திரா காந்தி வந்துருக்காஹ' இப்படி இங்கே வராத விஐபிகளே இல்லைன்னு சொல்லும் அளவுக்கு அவுங்க கெஸ்ட் லிஸ்ட் இருக்கு. அதுலே நியூஸி துளசியும் கோபாலும் வந்துருக்காஹன்னு சேர்த்தாச்சுன்னு வையுங்க:-)
முக்கால் இருட்டு வழியில் ரெண்டு பக்கமும் 'அசல்' லாந்தர் விளக்குகள். அங்கங்கே மரங்களிலும் தொங்குது இவை. ரெண்டு நிமிஷம் திகைச்சு நின்னு, இருட்டுக்குக் கண்கள் பழக்கப்பட்டதும் நகர்ந்தோம். 'பூனையாய் இருப்பது சுகம்' கூடையில் பூக்களை வச்சுக்கிட்டுவந்த பூக்காரர் ஒரு முழம் மல்லிச்சரத்தை எனக்கும் ஒரு ரோஸாவை கோபாலுக்கும் நீட்டினார். சின்னதா நாட்டு ஓடு வேய்ந்த ஒரு முன்வாசல். வரவேற்பு அங்கேதான். பெயர் விவரம் கேட்டு எழுதிக்கிட்டாங்க. கட்டணம் கட்டிட்டு உள்ளே போனோம். இதுதான் பாய்ண்ட். பில் எவ்வளோ வருமோன்னு மனசுலே கவலை இல்லாமல் 'நிம்மதி'யாக இருக்கணுமுன்னா முதலிலேயே காசைக் கட்டிட்டுப் போயிரு. அதுக்கப்புறம் எல்லாமே தானாய் வரும். கிடைச்சதை அனுபவிச்சுக்கிட்டுக் கவலையே இல்லாமல் நிம்மதியா இருக்கலாம்.

ஒத்தையடிப்பாதையில் நடந்து உள்ளே போனால் கிராமச்சதுக்கம். பஞ்சாயத்து வேணுமுன்னாலும் பண்ணிக்கலாம். ஆனால் மரத்தடி மேடையும் சொம்பும் மிஸ்ஸிங்! நாலு கயித்துக்கட்டில் போட்டு நடுவிலே சின்னதா தீக்கங்கு. கட்டிலில் உக்காந்து கணப்பிலே கைகளைச் சூடு பண்ணிக்கிட்டு அப்படியே 'கப்பா மாறாலாம்'. எந்த இடத்திலும் மின்சாரவிளக்கே கிடையாது. மண்ணெண்ணெய் ஊத்தி எரியவிடும் ஹரிகேன் விளக்கு மட்டுமே! 'கோபால் ஸாப்'ன்னுக்கிட்டே நம்மைத் தேடிவந்து பெரிய கண்ணாடித் தம்ளர் நிறைய பழரஸம் கொடுத்தாங்க. இன்னும் குடி(ங்க) குடி(ங்க)ன்னு நை நை........ போதுமப்பான்னு சொன்னாக் கேட்டால்தானே! 'அபி நை, அபி நை'ன்னு தலையை ஆட்டி ஆட்டியே...கைகளால் அபிநயம் பிடிக்கவேண்டியதாப் போச்சு.
கொஞ்சதூரத்துலே ஒரு கொட்டகையும் மேடையுமா அமைப்பு. கலைஞர்கள் பாட்டு பாடறாங்க. ஹார்மோனியத்தோடு வாய்ப்பாட்டு, தப்லா, ஷெனாய் மாதிரி ஒர் பீப்பி! மொத்தம் மூணுபேர். நேயர் விருப்பம் சொல்லுங்கன்னு கேட்டுக்கிட்டே இருக்காங்க. சட்னு ஒரு பாட்டு கூட நினைவுக்கு வரலை:(
எதாவது பாடுங்கன்னதும் 'ஷ்யாமு பியா மோரி ரங் தே சுனரியா.......' இனிமையான பாட்டு. கொஞ்சம்கூட பொருத்தம் இல்லாத ஸ்வரத்தில் பீய்ங்ன்னு பீப்பி. தமிழ்நாடுன்னு தெரிஞ்சதும் கண்களில் ஒரு சந்தோஷம். கன்னியாகுமரியில் ஒரு விழாவுக்கு வந்து வாசிச்சாங்களாம்.
அதுக்குள்ளே சாப்பாடு ஆறிப்போகும். முதலில் சாப்பிட்டுட்டு நிதானமா ஆட்டம் பாருங்கன்னு ஆள் மேலே ஆள் வந்து கூப்புடுது. எல்லோருக்கும் தலையில் முண்டாசு. 'கிராம மக்கள் உடை'ன்னு ஒரு ஜிப்பா, தார்பாய்ச்சுக் கட்டுன வேட்டி. உயரம் குறைவான நீண்ட மேசை/பெஞ்சு. நீளப்பலகையை நாலைஞ்சு செங்கல் அடுக்கி அதுக்கு மேலே வச்சுருக்காங்க. பந்திப்பாய் மாதிரி நீளமான ஜமக்காளம். ஆனா சம்மணம் போட்டு உக்காரலாம். நமக்கு உக்காரச் சின்னதா மோடா கொண்டுவந்து போட்டாங்க. (என் முழி அப்படி இருந்துருக்கு!)உக்கார்ந்தாச்சு. ஆனால்..... எந்திரிக்க முடியுமோன்னு கவலை! அதைப் பிறகு பார்த்துக்கலாம்.
ஸாலட் வகைகள்ன்னு சின்னச்சின்ன தொன்னைகளில் ஒரு இருவதுவகைகள் கொண்டுவந்து அடுக்குனாங்க. தையல் இலையில் அடுத்து ரொட்டி வகைகள். மக்காச்சோளம், சோளம், மெத்தி(வெந்தயம்) கோதுமை ன்னு விதவிதமான தானியங்களில் செஞ்சது. நாலைஞ்சு கறி வகைகள், பஜ்ஜியா, டோக்ளா, சுட்ட அப்பளம், ஜிலேபி, ரவாலாடுன்னு இன்னொரு கூட்டம். மண் குவளைகளில் மோர், கெட்டித்தயிர், தண்ணீர்ன்னு ஒரு பக்கம். குஜராத்துக்கே உரிய கிச்சடி, கொஞ்சம் வாயைத்திறந்தா ஊட்டியே விட்டுருவாங்க! இன்னும் போட்டுக்கோ இன்னும் போட்டுக்கோன்னு அப்படி ஒரு உபச்சாரம். ஒரு நாலைஞ்சு வயிறை வைக்காதது கடவுள் செய்த குற்றம்.

நினைச்சதுபோலவே ஆச்சு. காலை மடக்கி ரொம்ப நேரம் ஆனதால் எழுந்திரிக்க முடியலை. என்ன ஒரு கஷ்டமப்பா:( கைகழுவும் இடத்தில் கைக்குத் தண்ணீர் வார்க்க ஒருத்தர். டவல் வச்சுக்கிட்டு இன்னொருத்தர். திரும்பி நம்ம மேசைக்கு வந்தவுடன் பழவகைகள் துண்டுகள் போட்டுக் கொண்டுவந்து நீட்டினார் ஒருத்தர்.
அடிமேலடி வச்சு மெள்ள நடந்தோம். பூஜையறைன்னு ஒரு குடிசை. குடிசை குடிசைன்னு சொல்றதுகூடச் சரியில்லே. எங்கேயும் சுவர்களோ கதவுகளோ இல்லை. கொட்டாய் (கொட்டகை)ன்னே சொல்லிக்கலாம். சுவத்துலே சில கிராமதேவதைகளின் படங்களை வரைஞ்சு வச்சுருக்காங்க. தரையில் பாய். உக்காந்து சாமி கும்பிடவாம்.

நல்ல பெரிய இடம்தான். மெழுகிய மண்தரைகள். அங்கங்கே கயித்துக் கட்டில்கள். ஓய்வெடுத்துக்கணுமுன்னா கால் நீட்டிப் படுத்துக்கலாம். கடைவீதிகள் போல ஒரு இடம். ஏழெட்டு ஸ்டால்களில் கைவினைப்பொருட்கள். ஒரு ஓவியர், ஒருத்தரை வரைஞ்சுக்கிட்டு இருந்தார். இன்னொரு பக்கம் பழையகாலப் பாத்திரங்களை வச்சு ஒரு அருங்காட்சியகம். இனிமே பழஞ்சாமான்களை இப்படிப் பார்த்தால்தான் உண்டு.

ஒரு திண்ணையில் பீடாக் கடை. நம் தேவைக்குச் செஞ்சு கொடுக்கறாங்க.

தெரியாத்தனமா ஒருமுறை ஜர்தா வச்ச பீடாவைத் தின்னுட்டு மயங்கி விழப்போய் ரோடோரத்தில் உக்காந்தேன். அப்பெல்லாம் செரங்கூன் ரோடில் ஓப்பன் சாக்கடை ஓடிய காலம். போலீஸ் பிடிச்சாலும் பரவாயில்லைன்னு சாக்கடையில் வாயில் இருந்த பீடாவைத் துப்பிட்டு..............ஐயோ! அதுலே இருந்து பீடான்னாலே பயம்தான்.

குல்ஃபி ஐஸ்கூட இருக்கு. ஆனா விஷாலாவுக்கு வரணுமுன்னா விசாலமான வயிறு இருந்தால்தான் கொடுத்த காசை நியாயப்படுத்த முடியும்!

பொம்மலாட்டக் கொட்டாய்க்குப் போனோம். அனார்கலி, ஜஹாங்கீர், வீர சிவாஜி(மராட்டியர்) ஔரங்கசீப், சில ராஜபுத் அரசர்கள்ன்னு அருமையா வரிசை கட்டி நின்னுருந்தாங்க. அரண்மனை விதூஷகன் கூட உண்டு. இளைஞர் அஷோக், பாட்டுப் பாடிக்கிட்டே டோலக் வாசிக்க, பெரியவர் தர்மேஷ்பாய் கண்பத்பாய் பட் ஆட்டுவிக்கிறார். 'ஆத்தாடி பாவாடை காத்தாட' என்ன ஒரு வேகம், நளினம், குலுக்கல்! இடைக்கிடையில் விதூஷகன் வந்து சிரிக்க வைக்கிறான். பாம்பு ஒன்னு சீறிப் பாய்ஞ்சு பொத்ன்னு நம்ம காலடியில் விழுந்துச்சு! போதுமான வெளிச்சம் இல்லாததால் படங்கள் எடுக்க முடியலை. ப்ளாஷ் போட்டுப்போட்டு ஆடும் வேகத்தைப் பாழாக்கவேணாம்தானே? எங்கேயும் மின்சாரம் பயன்படுத்தாததால் மைக் இல்லாத பாடல்கள்தான். வீட்டுலே விழா, இல்லை குழந்தைகள் பார்ட்டின்னா சொல்லுங்க. நான் வந்து ஆட்டுவிக்கறேன்னு கார்டு கொடுத்தார். தலையை ஆட்டி வச்சேன். எள்ளுப் பேரக்குழந்தைகள் வரும் நாளில் கூப்புடலாம்.
தனித்தனியா பொம்மைகளை படம் எடுத்தோம். கண்பத்பாய் ஒவ்வொன்னையும் விளக்கிச்சொல்லி எப்படி ஆட்டுவிக்கிறாருன்னு காமிச்சார். ஆனா கெமெராவில் இருந்து படங்களை கணினியில் போடும்போது மாயாஜாலம் போல எப்படியோ 98 படங்களைக் காக்கா கொண்டுபோயிருக்கு:( .

விஷாலா கிராமம் ஒரு புதுமையான அனுபவமாத்தான் இருந்துச்சு. சில நாட்களில் கூடுதல் விசேஷ நிகழ்ச்சிகளா இன்னும் பல கிராமீய நடனங்களும் நடக்குமாம். நம்ம வீட்டு விசேஷம் கல்யாணம், பிறந்தநாள் போன்றவைகளைக்கூட இங்கே கொண்டாடிக்க வசதி இருக்காம். மொத்த கிராமத்தையும் நமக்கே நமக்குன்னு வச்சுக்கலாம் ஒரு நாளைக்கு. செலவு ஒன்னும் அதிகமில்லை. அம்பானி குடும்பம் வந்து போன இடம்.அவ்ளோதான் சொல்வேன்:-)

பத்துமணிக்கு முன்னால் அறைக்குப் போகலாமேன்னு கிளம்பி வந்தோம். பப்பனுக்குக் கணக்குப் பார்த்து காசைக் கொடுத்துட்டு, அவர் மகளோட கல்யாணத்துக்குப் பரிசா இருக்கட்டுமுன்னு கொஞ்சம் தனியா பணம் கொடுத்தவுடன், சட் னு அவர் கண்கள் கலங்கிருச்சு. நல்ல மனுசர். பத்திரமாக் கொண்டுவந்து சேர்த்தாரே. (படம்: கோபால் பப்பனுடன்)

அப்புறம்?

இன்னொருக்கா சொல்லணுமா?



பயணத்தில் கூடவே வந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. துவாரகை 'தீர்த்த' யாத்திரைப் பயனை உங்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கிறேன்.

நன்றி கலந்த வணக்கம்.


பயணம் நிறைவு..................:-)

Wednesday, February 24, 2010

லக்ஷ்மியின் கொலுசு.

என்னவோ தோணுச்சு, சட்னு கிளம்பிப் போனோம். போகும்வழியில் கடல் மல்லையில் ஒரு சுத்து. அங்கிருந்து கல்பாக்கம், மரக்காணம் வழி பாண்டிச்சேரி.

திருவான்மியூரில் இருந்து வழிநெடுக போஸ்டரும் பேனரும் கொடிகளுமா அப்படி ஒரு வரவேற்பு. எனக்கில்லைப்பா...... துணை முதல்வர், நல்ல தண்ணி மிஷனுக்கு அடிக்கல் நாட்டப் போறாராம். மகாபலிபுரத்துக்குக் கொஞ்சம் முன்னால்வரை இந்தப் பரபரப்பு இருந்துச்சு. என்னென்ன வாசகங்கள். கற்பனை ஊற்றுக்குப் பஞ்சமே இல்லை. நமக்கு இனிமே மெயில் ஐடி கூட இவர்தானாம்! 'எங்கள் முகவரியே, வருக வருக'ன்னு ஒன்னு பார்த்தேன். இவரும் பலவித சிரிப்புகளில் அயராமப் போஸ் கொடுத்துருந்துருக்கார்.


ஊருக்குள்ளே வண்டி போகணுமுன்னா ஒரு வாகனவரி அடைக்கணும் என்பது சரி. ஆனால்...... அதை பாண்டிச்சேரியில் அடைச்சோமுன்னா 350. அதையே திண்டிவனம் வழிவந்து அடைச்சால் 230. சரி தொலையுதுன்னு பார்த்தாலும் ஊருக்குள் நுழையும் போதே கட்டணம் வசூலிக்க ஒரு ஏற்பாடு செய்யக்கூடாதா? தலையைச் சுத்தித்தான் மூக்கைத் தொடணும். அங்கே 'பக்கா'வாக் கட்டடம், ஆஃபீஸ் இருக்கோன்னு நினைச்சால் வெறும் ஓலைக்குடிசை. அதை ரெண்டு நுழைவுகளில் வச்சால் என்ன? என்னவோ போங்க.
பகல் சாப்பாடு ஹொட்டேல் ப்ரொம்னேட். கடற்கரை காந்தி சிலைக்கு எதிர்வரிசையில் இருக்கு இது. ஓய்வறை வசதிகள் நல்லா இருக்கு.

அண்ணா சாலை, அண்ணா திடலில் கைவினைப்பொருட்கள் கண்காட்சி. முதல்நாள் முதல் ஆளா நாம். ஏழெட்டுக்கடைகள் மட்டுமே விற்கும் பொருட்களை ஒழுங்கு படுத்தி இருக்கு. மீதி? அரையும் குறையுமா திறக்கப்படாத பெட்டிகளில்........
ஃப்ரெஞ்சு ஸ்டைலில் பழையகால வீடுகள் அமைஞ்ச சிலதெருக்களில் சுற்றினோம். எல்லாத் தெருக்களுக்கும் பெயர்ப்பலகை பளிச்சுன்னு சுவரில் இருக்கு. யாரும் இதன்மீது நோட்டீஸ், போஸ்ட்டர் இதெல்லாம் (இன்னும்) ஒட்டலை. சுவர்களிலும் கலர்கலரான கட்சி அடையாளங்களும், இல்லாத பட்டங்களையெல்லாம் போட்டு இந்திரனே சந்திரனே ன்னு கூவலை. ப்ளாட்ஃபார டாய்லெட்ஸ் மிஸ்ஸிங். எல்லாரும் வீட்டுக்குப்போய் போறாங்க!

இதேபோல வீடுகள் அமைஞ்ச சில தெருக்கள் நம்ம நியூஸியில் எங்கூருக்குப் பக்கத்திலேயே அக்கரோவா என்னும் டவுனில் இருக்கு. ஃப்ரெஞ்சுக்காரர்கள் காலனி அமைக்கப் பார்த்த இடம் அது!

அரவிந்தரின் ஆஸ்ரமம் போகலையான்னு தொளைச்சு எடுத்துட்டார் ட்ரைவர். எனக்கோ மணக்குள விநாயகனைப் பார்க்கணும். ரெண்டுமே அடுத்தடுத்த தெருவிலாம். வாகனப் போக்குவரத்தை அங்கே ரெண்டு இடத்துக்கு முன்னாலும் நிறுத்திவச்சுருக்காங்க. ரெண்டு இடத்திலும் மணல்மூட்டைச்சுவரின் பின்னே மறைஞ்சு இருக்கும் காவல்துறையினர்!

ரெண்டு இடத்திலுமே 'உள்ளே' படம் எடுக்க அனுமதி இல்லை. வாசலில் எடுத்துக்கலாம். வெடிகுண்டு இல்லைன்னு ரெண்டு இடத்திலும் கைப்பையைத் திறந்து காமிச்சுட்டுப்போகணும் ஆஸ்ரமத்தில் உள்ளே நுழைஞ்சதும் கள்ளிச்செடிவகைகள் உள்ள தோட்டம். பிரமாதம். தொட்டிகளில் செவ்வந்திப் பூக்களுடன் இருக்கும் அலங்காரம் ஏகப்பட்டது. ஒரு பெரிய மரத்தடியில் செவ்வகமா ஒரு பளிங்கு மேடை. மலர் அலங்காரத்துடன் பளிச்ன்னு இருக்கு. சமாதியாம். அதைச் சுற்றி உள்நாட்டோரும் வெளிநாட்டோருமா அமைதியாக் கண்களை மூடி உக்காந்துருக்காங்க.

அடுத்த ஒரு அறையில் ஆஸ்ரமத்தின் வெளியீடுகள் காட்சிக்கும் விற்பனைக்கும். மதர் & அர்விந்தரின் படங்கள் அங்கங்கே. அம்மா சொன்ன பூனைக்கதைகள்னு ஒன்னு இருந்துச்சு. 15 ரூபாய்தான். வாங்கினேன். இன்னும் வாசிக்கலை.

இந்தவகை ஆஸ்ரமங்கள் எல்லாம் எனக்குப் புதுசு. அங்கே இருந்த உதவியாளர் ஒருவரிடம், மதர் எப்போ இறந்தாங்க?'ன்னு கேட்டேன். அப்படியே 'திடுக்'ஆகிட்டாங்க. 'மதர் இறக்கலை'யாம். பின்னே? உடம்பை விட்டுட்டாங்களாம். ஓ அப்படியா? எப்போ? 1973 இல்.

அங்கே ஒரு சமாதிதானே இருக்கு. ரெண்டாவது எங்கேன்னு இன்னொரு மண்டைக் குடைச்சல். விசாரிச்சால் ஆச்சு........

இருவருக்கும் ஒரே சமாதியாம். அர்விந்தர் 1950 லே 'உடம்பை விட்டார்' அப்போ எழுப்புன சமாதி இது. அதுக்கப்புறம் 23 வருசம் கழிச்சு 'அன்னை' உடம்பை விட்டுட்டாங்க. அதே சமாதியில் இவருக்கும் இடம் ஆச்சாம். என்னவோ புரிஞ்சாப்புலே தலையை ஆட்டிட்டு வந்தேன். இங்கே ஆஸ்ரமத்தில் மூன்றுவயதுக்குட்பட்டப் பிள்ளைகளுக்கு அனுமதி இல்லை.

அடுத்த தெருவே மணக்குள விநாயகர் தெருதான். கோவில் நுழைவாசலில் பெயர் போட்ட அலங்கார வளைவு. பாரதி அடிக்கடி வந்து வணங்கிய விநாயகன். உள்ளே சுவர் முழுக்க விதவிதமான பிள்ளையார்கள். இந்தோனேஷியா, போர்னியா ன்னு உலகம் முழுசும் உள்ளவரை இங்கே ஓவியங்களாவும், படங்களாவும் கொண்டுவந்துட்டாங்க.
மூலவர் முன்பு ரெண்டு வரிசை. இடப்பக்கம் இலவசம். வலப்பக்கம் 10 ரூபாய். இலவசத்தில் போய் சேவிச்சோம். உள்ளே போகும்போது இல்லாத லக்ஷ்மி வெளிவரும்போது வந்துருந்தாள். நெஞ்சிலே பெயர் போட்ட பதக்கம். காலிலே அழகான கொலுசு. முன்னிரெண்டுக்கு மட்டும். காசு வாங்கி ஆசி வழங்கறாள். இப்போ கூட்டம் முழுசும் லக்ஷ்மியைச் சுத்தியே!

ஊர்முழுக்க வெளிநாட்டவரின் நடமாட்டம் அதிகமா இருக்கு. ரெண்டு சக்கரவாகனங்களில் ஹாய்யா எல்லா இடங்களிலும் புகுந்து புறப்படறாங்க. உடுப்புகளுக்கு மேலே நம் 'பாரம்பரியத்தை' அனுசரிச்சு ஒரு துப்பட்டா!

சைக்கிள் ரிக்ஷாக்கள் இன்னும் இருக்கு!

பஞ்சவடி கோவிலுக்குப் போனோம்.மறுபடியும் திண்டிவனம் போகும் சாலையில்,வாகனவரி கட்டப்போன இடத்தைத் தாண்டிக் கொஞ்ச தூரத்தில் இருக்கு. சமீபகாலக்கோவில். க்ரீம்கலர் கோபுரங்கள்.
நம்ம நங்கநல்லூர் ஆஞ்சநேயர்போல நிக்கிறார். அவரைவிட இவர் உயரம் குறைவு. அவர் ரொம்பவே ஆஜானுபாகுவா உசரமா இருக்காரேன்னு தோணல். கடைசியில் பார்த்தால் ரெண்டே அடிதான் வித்தியாசம்! அவர் 32 அடி. இவர் 30 அடி! இவருக்கு ஆனால் ஐந்து முகங்கள் இருக்கு. கருவறையில் வெளிச்சம் போதலை. என் அரைப்பார்வைக்கு எல்லாம் மசமச. விசாரிச்சேன். ஹயக்ரீவர், நரசிம்மன், வராஹர், கருடர்ன்னு நேயடுவுக்கு அஞ்சு முகங்கள். பத்துக் கைகள். கருடர் தலைக்குப் பின்புறம். பிரகாரத்தின் பின்னாலே போய் பார்க்கலாம். ஜன்னல் இருக்குன்னார். அதுக்குள்ளே மூலவருக்குத் திரை போட்டாச்சு. பின்புறம் போனால் சதுரவடிவ திறப்பு உயரத்துலே இருக்கு. அங்கேயும் நீலத்திரை. நல்லவேளை சரியான நேரத்துலே வந்து மூலவரைப் பார்க்க முடிஞ்சது.

கார் பார்க்கிங் வசதி இருக்கு. நாங்கள் கீழே இறங்கிக் கோவில் வாசலுக்குப் போனப்ப, செருப்பை வண்டியிலே விட்டுட்டுப்போங்க'ன்னு கோவில் ஊழியர் சொன்னார். ரொம்பச்சரி. ஆனால் கார் இல்லாம நடந்து வர்றவங்க.......................???????
திரும்பிப்போக திண்டிவனம் வழியா இல்லே ஈ ஸி ஆர் வழியான்னு யோசிச்சால்..... தாம்பரத்துலே நெரிசலில் மாட்டிக்குவோமேன்னு வந்தவழியாவே திரும்பினோம். போகும்போது விட்டுப்போன அய்யனார், சயனகாளி, பெருமாளின் நீராழிமண்டபம், மரக்காணம் உப்பளங்கள் எல்லாம் க்ளிக்கிட்டு வீடுவர எட்டேகால் ஆச்சு. போனஸா ஒரு இடத்தில் மயிலார் கண்ணுக்குக் காட்சி அளித்தார்.






படங்கள் இங்கே.

Tuesday, February 23, 2010

காலயந்திரத்தில் பின்னோக்கி.....(குஜராத் பயணத்தொடர் 28)

முக்கால்மணி நேரத்துலே 4000 வருசங்களுக்குப் பின்னே போனது ஒரு அதிசயம்தான். ஏசு கிறிஸ்துகூட அப்போப் பிறக்கலைன்னா பாருங்க.
இந்த இடத்தைக் கண்டுபிடிச்சதே 1954 வருசம்தான். பண்டைய நாகரிகத்தின் அடையாளமா இருந்த ஹரப்பா மொஹஞ்ஜோதாரா பகுதி, இந்திய சுதந்திரம் அடைஞ்சபிறகு பாகிஸ்தானுக்குச் சொந்தமாயிருச்சு. அதே நாகரிகம் அங்கே மட்டுமில்லாம இன்னும் தென்பகுதியில் பரவி இருக்குமோன்னு ஒரு சந்தேகம். நதிக்கரையில் பிறந்ததுதானே நாகரிகம்ன்னு தொல்பொருள் இலாகாவின் வல்லுநர்கள் ஆராய்ச்சி செஞ்சு சபர்மதி ஆற்றுப் ப்ள்ளத்தாக்குப் பகுதிகளில் தோண்டிப்பார்த்துருக்காங்க. அடையாளங்கள் தட்டுப்பட்டு இருக்கு. விஞ்ஞானம் அவ்வளவா வளர்ச்சி அடையாத சமயத்தில் எப்படித்தான் பூமிக்கடியில் இருக்குன்னு தெரிஞ்சதோ!!!!
சௌராஷ்ட்ரா, கட்ச் பகுதிகளில் தேடுனப்பக் கிட்டதட்ட அம்பது இடங்களில் சிந்துசமவெளி நாகரிகம் பரவி இருந்தது தெரியவந்துருக்கு. அன்ரைய நாகரிகத்தின்படி சமுத்திரத்தைக் கடவுளாக் கும்பிட்டு இருக்காங்க. லோதல் என்ற இடத்தில் இருக்கும் வானுவதி சிக்கோடாரி மாதா கோவில் கடல்தேவதைக்கானதாம். இங்கே கடல்வழிக்கான பழங்காலத் துறைமுகம் ஒன்னு இருந்துருக்கத்தான் வேணும். 1850 வரை அங்கே படகுப்போக்குவரத்து நடந்த அடையாளங்கள் இருக்காம். பிப்ரவரி மாசம் 1955 லே தோண்ட ஆரம்பிச்சு மே மாசம் 1960 வரை வேலை நடந்துருக்கு.
சிந்துசமவெளி நாகரிகம் 2450 வருசங்கள் ஏசு பிறப்புக்கு முன் ஆரம்பிச்சது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமா இடம் பெயர்ந்து இங்கே லோதல் வந்ததுக்கு அநேகமாக 1150 வருசங்களாகி இருக்குமாம். இங்கே கிடைச்ச சுட்ட மண் பாத்திரங்களை வச்சு வருசம் கண்டுபிடிச்சு இருக்காங்க. படகு வந்து நிக்க, சாமான்கள் இறக்கன்னு நாலு ஒலிம்பிக் ஸ்விம்மிங் பூல் சைஸுக்கு மேலே இருக்கும் ஒரு பிரமாண்டமான இடத்தை, சரியாச் சொன்னால் 214 மீட்டர் நீளம் செங்கல் பதிச்சுக்கட்டி அதில் ஆத்துத் தண்ணீர் வந்து நிரம்பும் வகையில் கால்வாய் எல்லாம் வெட்டிவிட்டுருக்காங்க. செங்கல்கள் ஒவ்வொன்னும் அருமையா காத்திரமா பெரிய அளவில் இருக்கு. கோணல் மாணல் இல்லாம கட்டிடங்கள் சுவர்கள் எல்லாம் நூல் பிடிச்ச மாதிரி. ஆஹா.... ஒருவேளை உண்மையாவே நூல் கட்டி அளந்து இருப்பாங்களோ என்னவோ!!!
சாமான்கள் சேகரிச்சு வைக்கத் தனி இடம், கடைவீதிகள், கழிவு நீர் போகும் வழி, நல்ல தண்ணீர் வீட்டுக்குள் வரும்படியான அமைப்பு, கிணறு, பெரிய அடுப்படி, சுற்றுச்சுவர்கள், தானியங்களை அரைச்செடுக்கும் கல் இப்படி ஒவ்வொன்னும் பிரமிப்பா இருக்கு. சின்னதா ஒரு பைப்லைன் கூட டெர்ரகோட்டாவில் செஞ்சு புதைச்சு இருக்காங்க. சாக்கடைக்குழாய்??
இன்னொரு பக்கம் இறந்தவர்களைப் புதைக்கும் புதைகுழிகளும் சமாதிகளும் இருக்கு. ஒரு ஜோடியை ஒன்னாவே புதைச்சுருந்துருக்காங்க. அந்தக் காலத்து கோபாலும் துளசியாவும் இருக்கலாம். இந்த எலும்புக்கூடுகள் அங்கே தொல்பொருள் இலாகாவின் அருங்காட்சியகத்தில் இருக்கு. அனுமதிச் சீட்டு அஞ்சே ரூபாய்தான். (நம்ம பதிவுகளில் ஏற்கெனவே சில இடங்களில் குறிப்பிட்டதுதான் இது, இந்தியாவில் மத்திய அரசாங்க தொல்பொருள் இலாகா சம்பந்தமுள்ள எல்லா இடங்களிலும் அஞ்சு ரூபாய்தான் வசூலிக்கறாங்க).

அப்ப எப்படி இருந்துருக்குமுன்னு ஒரு ஓவியம் வரைஞ்சு வச்சுருக்காங்க இங்கே. அட! ரெண்டு யானைகூட இருந்துருக்கு!! அருங்காட்சியகத்தினுள்ளே படம் எடுக்கத்தடா ன்னு நாம் நாலைஞ்சு படங்கள் எடுத்தபிறகுதான் ஒருத்தர் வந்து சொன்னார். அச்சச்சோ.......

யானைத்தந்தம், தங்கம், செம்பு எல்லாம் உபயோகத்துக்கு வந்துருக்கு அப்பவே. நகைநட்டு, மீன்பிடிக்கும் கொக்கி, வேலைச்செய்யப் பயனாகும் கருவிகள் இப்படி பலதும் அங்கே காட்சிக்கு இருக்கு. சுடுமண்ணில் செஞ்ச பூச்சாடிகள், சின்னச்சின்னத் துளை உள்ள ஜாடிகள் இருக்கு. அந்தக் கால வடிகட்டி! சோறு ஆக்கிட்டு இதுக்குள்ளே ஊத்திட்டாக் கஞ்சி எல்லாம் வடிஞ்சுருக்குமோ?
டெர்ரகோட்டா பாத்திரங்களில் அழகான வேலைப்பாடுகள். நாய், மாடுன்னு மிருகங்கள், குழந்தைகள் விளையாட பொம்மைகள், சின்னசின்ன சக்கரங்களோடு வண்டிகள். வீட்டுச்சாமான்கள்ன்னு நாகரிகம் உச்சத்தில் இருந்துருக்கு. படம்புடிச்சு உங்களுக்குக் காட்டமுடியலையேன்னு மனசு நொந்து இருந்த சமயம், அங்கே விற்பனைக்கு இருந்த புத்தகங்கள் பார்வையில் பட்டுச்சு. வெறும் முப்பதே ரூபாய்க்கு படங்கள் நிறைஞ்ச ஒன்னை தொல்பொருள் இலாகாவே வெளியிடு இருக்கு. இங்கே ஆராய்ச்சிக்குழுவுக்குத் தலையா இருந்த எஸ் ஏ. ராவ் எழுதுனது. ஒன்னு வாங்கிக்கிட்டேன். இதுக்கு ஒரு 10 சதம் கழிவும் கிடைச்சது!

இதைப் படிக்கப் படிக்க ஏற்பட்ட வியப்பை விவரிக்க வார்த்தைகளே இல்லை. எப்படிங்க பழையகால மனிதர்கள் இவ்வளவு சிந்திச்சுச் சிறப்பா வாழ்க்கை நடத்தி இருக்காங்க!!!

ஊருக்குப் பொதுவான இடத்தை கபளீகரம் செஞ்சுக்கும் புத்தி அறவே இல்லை! (ஏரிகளையும், பொது இடங்களையும் ஆக்ரமிச்சு அதை ப்ளாட் போட்டு வித்துப் பணம்பார்க்கும் உயர்ந்த பண்புகள் எல்லாம் எப்போ வந்து சேர்ந்துச்சுன்னு தெரியலையே.....)

படகுலே கொண்டுவந்த பொருட்களைச் சேதப்படுத்தாமல் பாதுகாத்து வைக்க அருமையான ஒரு அமைப்பு. வரிசைவரிசையான தெருக்கள், அவைகளுக்கான கழிவு நீர் வாய்க்காலை இணைச்சு அழுக்கை எல்லாம் கடலில் கலக்கும்படியான ஏற்பாடு.
செமி ப்ரஷ்யஸ் ஸ்டோன்னு சொல்றாங்க பாருங்க, அதுகளையும் தோண்டி எடுத்துருக்காங்க. பாசிமணிகளுக்கான ஒரு தொழிற்சாலையே இருந்துருக்காம்!

ஜோடிச்சமாதிகூட யோசிச்சுப் பார்த்தால்..... விவகாரம்தான் போல! ஆணும் பொண்ணுமாய் ஒரே சமயம் ' மேலே போய்ச்சேர்ந்திருப்பாங்களா? இல்லே யாராவது ஒருத்தர் போனதும் குழிச்சு மூடுன இடத்துலேயே பின்னாலே போனவங்களைக் கொண்டுபோய் வச்சுருப்பாங்களா? இல்லே இன்னொரு 'சதி'யாக இவன் போனதும் அவளையும் போட்டுத்தள்ளிப் புதைச்சு இருப்பாங்களா? ஒருவேளை ராஜஸ்தான் பாணியில் தீயில் இறக்கிவிடுவதைப்போல இவளைத்தானே குழியில் இறங்கச்சொல்லி மண்ணைப் போட்டுருப்பாங்களா? இல்லை....இவள் போன துக்கம் தாங்காமல் அவன் ஹார்ட் அட்டாக்கில் போயிட்டானோ?

இங்கே வந்தவுடன் முதலில் இந்தக் காட்சியகம் போயிருக்கணும். நாந்தான் இடும்பியாச்சே! எனக்கு வேற வழின்னுட்டு தோண்டிவச்ச இடங்களைப் பார்க்கப்போனோம். நீள நீளச் சுவர்கள் செங்கற்கள்ன்னு அதெல்லாம் என்னன்னே முதலில் புரியலை. தொட்டி கட்டிவச்சமாதிரிதான் பலதும். பல இடங்களில் மண்மேடுகள் நிக்குது. அதுக்கடியிலும் கட்டிடம் இருக்கும் என்பதுகூட முதலில் புரியலை. காட்சியகம் போனபின்புதான் 'இப்படி இப்படி இருந்துருக்குமுன்னு' வரைஞ்சுவச்சதைப் பார்த்ததும்...அட! அப்படியா!!!! ன்னு இருக்கு.

இந்த நகரம் இருந்த காலக்கட்டத்துலே மூணு முறை வெள்ளம் வந்து செங்கல்கட்டிடங்கள் இடிஞ்சு விழுந்து, மீண்டும் நகரைக் கட்டும்போது நிலத்தைக் கொஞ்சம் உயர்த்திக் கட்டுன அடையாளங்கள் இருக்காம். acropolis ன்னு குறிப்பிட்டு இருக்காங்க.
வணிக விஷயங்களுக்கான முத்திரைகள் பலவகையா செஞ்சுருக்காங்க. யூனிகார்ன்னு சொல்லும் ஒற்றைக்கொம்புக் குதிரை படம்கூட இதுலே இருக்கு. அந்தக் கணக்கில் பார்த்தால் ஒருவேளை நெஜமாவே அப்போ இந்தவகைக் குதிரை இருந்துருக்குமோ? கண்ணுலே பார்த்தவைகளைத்தானே பொம்மைகளாச் செஞ்சுருக்காங்க......இல்லே கற்பனை மிருகம்தானா......

இந்த இடத்தைப் பாதுகாத்துச் சுற்றுச்சுவர் எழுப்ப இப்பத்தான், இப்போதைய செங்கற்கள் வந்து இறங்கி இருக்கு. அதுக்குள்ளே நம்ம மக்கள் ஆட்டையைப் போடாம இருந்துருப்பாங்களா?? வெறும் அம்பதுவருசம் தானே ஆகி இருக்கு. இவ்வளவு சீக்கிரத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப அரசு யந்திரம் முடிவு செஞ்சதே ஆச்சரியமான விஷயம்தான்! உடனே....ஆஹான்னு மகிழவேணாம். வந்த கல்லை வச்சுக் கட்ட இன்னும் அம்பதுவருசம்(கூட) ஆகலாம்.

வாங்கிய புத்தகத்துலே இருந்த படங்கள் சிலவற்றை ஸ்கேன் செஞ்சு போட்டுருக்கேன். மற்றபடி வழக்கம்போல் ஃபோட்டோ ஆல்பம் பார்த்துக்குங்க.

கொசுறுத்தகவல்: 'ஆயிரத்தில் ஒருவன் செட் ' இங்கேதான் போட்டாங்கன்னு நம்ம பதிவர் ஒருவர் எழுதுனதைப் படிச்ச ஞாபகம். என்னங்க எல்.கே... இம்முறையாவது தகவல் சரியாச் சொன்னேனா?


பயணம் தொடரும்..................:-)

Monday, February 22, 2010

க்ருஷ்ண ம்ருகம் (குஜராத் பயணத்தொடர் 27)

ஸ்வாமிநாராயண் கோவிலில் இதைப் பத்தி விசாரிச்சப்ப....அங்கே ஒன்னும் இல்லைன்னு சொன்னதே ஒரு ஆவலைக் கிளப்பி இருந்துச்சு.வெலவாதார் தேசியப் பூங்கா, பவ்நகரில் இருந்து 72 கிலோமீட்டர் தூரத்தில். நெடுஞ்சாலையில் அம்புக்குறி பார்த்து லெஃப்ட் எடுத்தார் பப்பன். போறோம், போறோம், போய்க்கிட்டே இருக்கோம். கண்ணுக்குத் தெரியும்வரை பொட்டல் காடு. 'இருக்கா, இல்லையா'ன்னு தெரிஞ்சா, 'போகலாமா, வேணாமா'ன்னு முடிவு எடுக்கலாம். பத்துகிலோமீட்டர்வரை உள்ளுக்கு வந்துருக்கோம். ஒன்னும் இல்லை போல இருக்கு. எதுக்கும் அங்கே எதோ போர்டு தெரியுது அதுவரை போயிட்டுத் திரும்பிடலாம்.

கிட்டே போனதும் பளிச்சுன்னு ஒரு கேட்.' ப்ளாக்பக் நேஷனல் பார்க். வெலவாதார்'னு பெயர் போட்ட வெள்ளைக் கட்டடம் ஒன்னு. 'ஃபோர்வீல் ட்ரைவ் வண்டி வேணும். ஜீப்'ன்னு இழுத்தார் அங்கே இருந்த பணியாளர். நம்மகிட்டே நாலுசக்கர வண்டி இருக்குன்னதும் அதுக்கும் ஒரு தொகை வாங்கிக்கிட்டுச் சீட்டு கொடுத்தார். 'கைடு இருந்தால் தேவலை. ஆனா ஹிந்தி பேசத்தெரியணுமு'ன்னு சொன்னதுக்குத் தலையாட்டிக்கிட்டே ஒரு மாதிரி சிரிச்சார். அந்தச் சிரிப்புக்குப் பொருள் அப்புறமாத்தெரிஞ்சது. (ஆளுக்கு 20, காருக்கு 200, கைடுக்கு 50ன்னு ஒரு கணக்கு)

கைடு ஒருத்தர் வந்து உள்ளே இருக்கும் இன்னொரு கேட்டைத் திறந்துவிட்டு வண்டியின் முன்ஸீட்டில் உக்கார்ந்ததும் கிளம்பினோம்.
கண்ணுக்கெட்டிய தூரம்வரை காஞ்சபுல் வளர்ந்து நிக்கும் காட்டுவெளி. கொஞ்ச தூரத்தில் நிற்கும் ஒருசில பழைய கட்டடங்கள் (ட்ரெயினிங் செண்டராம்). வழிகாட்டி வாயைத் திறக்காம உக்கார்ந்துருக்கார். பெயரென்னன்னு கேட்டேன். ஹரிஷ். வண்டி போகும் ஓசைதவிர நிசப்தம். நம்ம ஆளே 'மேன் ஆஃப் ஃப்யூ வேர்ட்ஸ்'. அவருக்கே சகிக்கலை.


"எவ்வளவு பெரிய காடு?"

"ம்ம்ம் பெருசுதான்."

"மிருகங்கள் இருக்கா?

இருக்கணும்."

"அதோ அங்கே தெரியுதே ஒன்னு. அது என்ன வகை?"

"காலா ஹிரண்"

"குட்டிபோடும் சீஸன் எது?"

"ம்ம்ம்ம்ம்ம் " (ஒரு தலையாட்டல்)

"ஒன்னையும் காணாம்? இப்படியே வண்டியை திருப்பிடலாமா?"

"ஊஹூம்"

"அட! அங்கே தூரத்துலே பெருசா ஒன்னு இருக்கே...அது என்ன?"

"நீல்கை"

வண்டி நேராப் போய்க்கிட்டே இருக்கு. பப்பனுக்குப் பொறுக்கலை.

"என்ன கைடு நீ? ஒன்னுமே விளக்கம் சொல்லாம வர்றே? "

"என்ன இருக்கு சொல்ல. ரெண்டு மிருகம் இருக்கு. சொல்லியாச்சு அவ்ளோதான்."

"ஏம்ப்பா...எவ்ளோநாளா கைடு வேலை பார்க்கிறே? கைடுன்னா மளமளன்னு விவரங்களை அள்ளிவீச வேணாமோ?" (இதுநான்)

"நேத்துதான் வேலைக்கு வந்துருக்கேன்."

"போச்சுரா.... நேத்து எத்தனை பேரு வந்துருந்தாங்க? என்னன்னு சொல்லி விளக்குனே?"

"யாரும் வரலை"

"போச்சுரா.... அப்ப நாம்தான் ஹரீஷின் முதல் பயணிகள்!!"

"அட ராமா!! சரி. சொல்றேன் கேட்டுக்கோ. இது இந்தியாவில் விசேஷமா இருக்கும் ப்ளாக் பக்ன்னு சொல்லும் ஆண்ட்டிலோப் மான்களுக்கான சரணாலயம். பழங்காலத்துலே இதோட தோலைத்தான் ஆசிரமத்துலே இருந்து கல்வி பயிலும் ப்ரம்மச்சாரிகள் தோளில் போட்டுக்குவாங்களாம். இதுக்கு க்ருஷ்ணம்ருகம் னு பெயர் இருக்கு. இதன் தோலை க்ருஷ்ணாஜினம்னு சொல்வாங்க. "

மகாபாரதத்தில்கூட ஒரு இடத்தில் அர்ஜுனன், வில்லால் யந்திரத்தை அறுத்துத்தள்ளி வெற்றியடைஞ்சதும் த்ரௌபதி வந்து அர்ஜுனன் கழுத்தில் மாலையைப் போடறாள். அப்ப அவளுக்கு இவன் அர்ஜுனன் என்றே தெரியாது. போட்டிக்கு வந்த ஒரு இளைஞன் என்ற அளவில்தான் அறியப்பட்டவன். க்ஷத்ரியர்கள் மட்டுமே கலந்துக்க வேண்டிய சுயம்வரத்தில் பேர் தெரியாத ஒருத்தன் வந்ததுமில்லாம, ஜெயிச்சு அந்தப் பொண்ணையும் கட்டிக்கிட்டான்னதும் மற்ற ராஜகுமாரர்கள் எல்லாம் சேர்ந்து கலவரம் செய்யறாங்க. அப்போ அர்ஜுனன் போர்த்தியிருந்த க்ருஷ்ணாஜினத்தைப் பிடிச்சுக்கிட்டுக் கொஞ்சம்கூட பயமில்லாமல் த்ரௌபதி அவன்கூடவே போனாள். (நன்றி. வியாசர் விருந்து நூலில் இருந்து)
3408 ஹெக்டேர் இடத்தை வளைச்சுப்போட்டு இந்த தேசியப்பூங்காவை உருவாக்கி இருக்காங்க. இந்த இடத்துலே அவைகளுக்குத் தேவையான ஒருவகைப்புல் ரொம்பவும் அடர்த்தியா வளர்ந்து காடா நிக்குது. பரப்பளவை கிலோமீட்டரில் சொன்னால் 34.08 சதுரகிலோமீட்டர்கள். பூங்காவைத் தொடங்குன வருசம் 1976.
ஆம்பளைங்க எல்லாம் நெளிநெளியான நீளக் கொம்புவச்சுக்கிட்டுக் கருப்பா இருப்பாங்க. gogo glass போட்ட மாதிரி கண்ணுக்கு வட்டக் கண்ணாடி! (பொதுவா ஆம்புளைகளுக்கு இருக்கும் கலர் ப்ளைண்ட்னஸ் உங்களுக்குமா? அச்சச்சோ!!!)பெரிய ராஜா மாதிரிதான் எப்பவும் குறைஞ்சது 20 அந்தப்புர அழகிகளோட சுத்துவானுங்க. பொண்ணுங்க கொம்பில்லாத தலையுடன் இளம் ப்ரவுன் நிறத்தில் இருக்கும். சின்னக்குட்டிகள் பார்க்கவே ரொம்ப அழகு. துள்ளித்துள்ளிக் குதிச்சு ஓடுவது பார்க்கவே ப்ரமாதமா இருக்கும். சிலதுகள் ஆறேழு அடி உயரம்கூட துள்ளிப்பாயும்.
யாரும் வேட்டையாடாம விட்டா சராசரியா ஒரு பதினைஞ்சு வருசம் உயிர்வாழும் இந்த ஜீவன்கள். இதை 'காலியார்'னு சொல்றாங்க இங்கே.
நீல்கைன்னு சொல்றதுக்கு ஏத்தமாதிரி இந்த இனம் நீலநிறத்தோலுடந்தான் இருக்கு. பெரிய உருவம். நின்னால் ஒரு ஒன்னரை மீட்டர் உயரம். இதுவும் ஆண்டிலோப் இனம்தான். பெரிய தலையில் சின்னக் கொம்புகள். ஆம்புளைக்குத்தான் இந்த நீலக் கலர். அதுவும் வயசான ஆண்களுக்கு மட்டும் எக்ஸ்க்ளூசிவ். . பெண்கள் எப்பவுமே இள ப்ரவுண்தான். மாநிறம்! களையான முகம். கொம்பில்லை.
வலையிலேயும், சுற்றுலாப்பயணிகள் கையேட்டிலேயும் படிச்சு வச்சுக்கிட்ட விஷயத்தை ஹிந்தியில் எடுத்துவிட்டேன். தலையைத்தலையை ஆட்டிக் கேட்டுக்கிட்டே வந்த ஹரீஷுக்கு ஹிந்தி அவ்வளவாப் புரியாதுன்ற விஷயம் கடைசியில்தான் நமக்குத் தெரியவந்துச்சு:-)))))
பசங்க தண்ணீர் குடிக்கும் இடங்களா, சின்ன ஆழமில்லா குளங்கள் வெட்டித் தண்ணீர் நிரப்பி வச்சுருக்காங்க. தினமும் மாலையில் டாங்கர்லே தண்ணி வந்துருமாம். வண்டியைவிட்டு இறங்கிப் பார்க்க ஒரு இடத்தில் 'லுக் அவுட்' கட்டி இருக்கு. சதுரமான பாதையிலே திரும்பி புறப்பட்ட இடத்துக்கு வரும்போது கொஞ்சம் நிறைய கூட்டத்தை அங்கே இங்கேன்னு பார்த்தோம்.

சரணாலயத்தைவிட்டுக் கிளம்பும் சமயம், 'கைடுக்கு டிப்ஸ் கொடுங்க'ன்னு சொன்னார் பணியாளர். அது நியாயமா எனக்கில்லே கொடுக்கணும்?
'வாயைத் திறக்காம வந்ததுக்கு டிப்ஸ் எதுக்கு?'ன்னார் பப்பன்.

பத்துகிலோமீட்டர் பயணிச்சு மீண்டும் நெடுஞ்சாலையில் வந்து சேர்ந்தோம். பகல் சாப்பாட்டு நேரம். நல்ல இடம் ஒன்னு இருக்கு ஆனா முக்கால்மணியாகும் போய்ச்சேரன்னார் பப்பன். இந்தப்பக்கம் நெடுஞ்சாலைகளில் அங்கங்கே ரெஸ்ட்டாரண்டு, ஹொட்டேல்ன்னு சாப்பிடும் இடங்கள் அமைச்சுருக்காங்க. விலையும் அதிகமில்லை. சுத்தமாவும் இருக்கு. பரவாயில்லை. நம்ம பக்கங்களில் ஏன் இதைப்போல இல்லைன்னு மனக்குறையா இருந்துச்சு.

தொலேரா என்ற சின்ன ஊர். ஹொட்டேல் க்ருஷ்ணாவிலே ஏர்கண்டிஷன் ரூமைத் திறந்துவிட்டார் உரிமையாளர். நாங்க கொஞ்சம்கூட எதிர்பார்க்காத அள்வில் நல்ல சுத்தமான இடம். ஜன்னலுக்குப் பின்னால் பெரிய ஏரி. குஜராத்தி தாலி மீல்ஸ் கிடைச்சது. சிம்பிளாவும் நல்லாவும் இருந்துச்சு.

வெலவாதார் படங்கள் இங்கே ஆல்பத்தில்.


பயணம் தொடரும்..............:-)))))

Friday, February 19, 2010

ஆமை வேகத்தில் ஓ(ட்)டி வருவேன் (குஜராத் பயணத்தொடர் 26)

தக்தேஷ்வர், ஊருக்கு நடுவிலே உயரமான குன்று ஒன்றில் உக்கார்ந்துருக்கார். 1893 லே கட்டி இருக்காங்க. முழுக்கமுழுக்கப் பளிங்குக் கற்கள். அப்படியே ஜொலிக்குது. அருமையான வேலைப்பாடுகள். முக்கியமாச் சொல்லவேண்டியது கோவிலின் வெளி முற்றத்தில் ரெண்டடி உயரச் சுத்துச்சுவரைச்சுத்தி இருக்கைகள் போட்டுவச்சுருக்காங்க. எல்லாமே கோவிலுக்கு முதுகைக் காமிச்சுக்கிட்டு ஊரைப் பார்க்கும் விதமா! குன்றுக்கு முக்கால் உயரம்வரை வண்டியிலே போயிடலாம். மேலே அருமையான பார்க்கிங் வசதி. அங்கிருந்து படியேறணும். எல்லாமே படு சுத்தமாப் பராமரிக்கப்படுது.



இங்கேயும் லிங்க ரூப சிவனும் சேஷனும் கருவறையில். பின்சுவரில் பார்வதி சிவனைப் பார்த்தபடி. ஒரு கண் வச்சுக்கிட்டே இருக்காள். வெளியே நந்தியும் ஆமையும். இந்த ஆமை எதுக்குன்னு எப்பவும் வரும் எண்ணம் இப்பவும் வந்துச்சு. கோவில் பண்டிட் பூசைகளை முடிச்சுட்டு, என்னை 'வா'ன்னு கையால் கூப்பிட்டு வெள்ளைமலர்களைக் கொடுத்தார். ஆமையைப் பற்றிக் கேட்டேன்.
ஒருகாலைத் தூக்கி .......தவம் செய்யும் .........என்ன ப்ரார்த்தனையோ?

அது பார்வதியின் வாகனமாம். வீட்டுக்கு முன்னால் போர்ட்டிகோவில் (பார்க்கிங் ஏரியா?) சிவனின் நந்தி. அதுக்கு முன்னால் தன் வண்டியை நிறுத்தி வச்சுருக்காளாம். பக்தர்கள் குறை தீர்க்க ஆமையில் ஏறி 'ஓடி'வந்தால் ஆச்சு!!!! "என்னம்மா, இன்னும் அருள் பாலிக்கலையா'ன்னா, 'அதான் வந்துக்கிட்டே இருக்கொம்லெ....என்ன அவசரம்?'

ஊருக்குள்ளெ ஒரு ரவுண்டு வந்தோம். ஸ்வாமி நாராயணன் கோவில் கண்ணைப் பறிக்குது. இது அக்ஷர்த்வார். டெல்லியில் இருப்பதுபோலவே அட்டகாசமான தோட்டங்கள் உள்ள பெரிய வளாகம். அடுக்கி நிக்கவச்ச அலங்காரத்தூண்கள். உள்புறக் கூரைகளைக் கழுத்துவலியைப் பொருட்படுத்தாமல் பார்த்துக்கிட்டே இருக்கலாம். ஹப்பா..... எத்தனையெத்தனை டிஸைன்கள். ஒவ்வொன்னும் ஒரு விதம். சந்நிதிகளின் வெலிப்புறச் சுவர்களில் எல்லாம் சிற்பவேலைப்பாடு. கண்ணுலே ஒத்திக்கலாம்போல இருக்கு. புலித்தோல் உடுத்திய சிவனும், 'நீங்க வெறும் புலித்தோல், ஆனா நான் வெள்ளைப் புலித்தோல் இடுப்பிலே அழகுக்காகக் கட்டி இருக்கேன் பாருங்கன்னு சொல்லும் பார்வதியும், புள்ளையாருமா ஒரு குடும்பம் சந்நிதியில் இருக்கு. கார்த்திக் மிஸ்ஸிங். அங்கேயும் நாமிருவர், நமக்கெதுக்கு இருவர்ன்னு இருக்காங்க போல! வெல்டன். சாமிவந்து சொல்லியும் கூட்டம் குறையக்காணோம்:(

கருவறை மூடி இருக்கு. பூஜை நேரத்துக்கு இன்னும் அரைமணியாகுமாம்.
முழுக்க முழுக்கத் தன்னார்வலர்களைக் கொண்டே கோவில் கட்டுவதும், பராமரிப்பும் நடக்குதாம். இப்போதிருக்கும் தலைமை சன்னியாசி இதுவரை 55 கோவில்களை உலகெங்கும் கட்டி இருக்காராம். பொதுவா இப்படிப்பட்ட வேலைப்பாடுகளைக் கொண்ட கோவில்களைக் கட்ட முந்தி ஒரு காலத்தில் முப்பது வருசமாகுமாம். இப்போ அஞ்சே வருசத்தில் கட்டி முடிச்சுடறாங்களாம்.

நான் போகணுமுன்னு நினைச்ச ஸ்வாமி நாராயணன் கோவில் இது இல்லை. அது இங்கேதான் இந்தப் பக்கத்துலே இருக்குன்னு வலையில் பார்த்து வச்சுருந்தேன். அதைப் பற்றி விசாரிக்கத்தான் இங்கே நுழைஞ்சோம். கதடா(Gadhada) ன்னு ஒரு சின்ன ஊர். ஸ்வாமிநாராயண் இயக்கத்தை ஆரம்பிச்சுவச்ச நீல்கண்ட் என்னும் சகஜானந்த் ஸ்வாமி இந்த ஊரில் 27 வருசம் தங்கி இருந்துருக்கார். இங்கேதான் இவருடைய இறப்பும் நடந்துருக்கு. அவருடைய பூர்வாசிரமப்பெயர் கன்ஷ்யாம் பாண்டே. உ.பி.காரர். சன்னியாசம் வாங்குனதும் நீல்கண்ட் ஆனார். பிறந்த வருசம் 1781. தன்னுடைய 49வது வயசுலே(1830) வைகுண்டம் ஏகிட்டார். இவர்தான் ஏழுவயசு சிறுவனா இருந்த சமயம், ஒரு இரவில் கொட்டும் மழையில் வீட்டைத் துறந்து வெளியேறுன சம்பவத்தையெல்லாம் டெல்லி அக்ஷர்தாம் கோவிலில் ஒரு குறும்படம் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன். இதைப்பற்றி சில வருசங்களுக்கு முன்பே எழுதுன நினைவு.

முடிஞ்சாப் பாருங்களேன்.


இவர் மறைவுக்கு ஒரு வருசம் இருக்கும்போது, 1829 லே கட்டப்பட்ட கோவில்தான் இங்கே கதடாவிலே இருக்கு. ஸ்வாமிநாராயண் இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் புண்ணிய பூமி. இங்கே பவ்நகரில் இருந்து நம்ம திட்டத்தின்படிப் போகவேண்டியது வடக்கு நோக்கி. இந்தக் கோவிலுக்குப் போகலாமுன்னா....ஒன்னரை மணிநேரம் மேற்கே போகணும். 90 கிலோமீட்டர் தூரம். போகவர, கோவில் பார்க்கன்னு ஒரு 4 மணி நேரமாவது ஒதுக்குனால்தான் முடியும் என்ற நிலமை. பரவாயில்லை இன்னொருமுறை ஆகட்டும்(??!!)னு இங்கேயே ஒரு கால்மணி நேரம் 'தியானம்' செஞ்சுட்டுக் கிளம்பினோம். பூஜை பார்த்துட்டுப் போகலாமான்னதுக்கு , 'எதுக்கு? இந்தப் பக்கம் தனியா உக்காரவா?'ன்னார் கோபால்.

இந்தக் கோவில்களில் பிடிக்காத ஒரே விஷயம், பெண்களுக்கு இரண்டாமிடம் தருவது. முன்வரிசை, முன்பகுதியில் ஆண்கள் மட்டுமே போகலாம். தடுப்பு ஒன்னு போட்டு அதுக்கு இந்தப் பக்கம்வரைதான் பெண்கள் போகலாம். மாய்ஞ்சுமாய்ஞ்சு பூஜைக்கான பிரசாதங்கள் வேலைகள்ன்னு செய்யும் பெண்களுக்கு உண்மையாப் பார்த்தா முதலிடம் கொடுக்கணும். அட்லீஸ்ட் சம உரிமையாவது கொடுக்கனும். பேசாம நான் ஒரு இயக்கம் ஆரம்பிச்சு நம்ம ஆசிரமத்துலே ஆண்களுக்குச் சம உரிமை கொடுக்கலாமுன்னு இருக்கேன். பூஜைக்கான ஏற்பாடுகள், விளக்குகளைப் பாலீஷ் போடுவது,பிரசாதம் தயாரிப்பது, பூமாலை கட்டுவதுன்னு எல்லாத்துக்கும் ஆண்களுக்கே முன்னுரிமை. ச்சும்மா உக்கார்ந்து சாமி கும்பிடும் கஷ்டமான வேலையைப் பெண்களுக்குக் கொடுத்துடப் போறேன், ஆமா!

கடைவீதி வழியாப்போகும்போது கரும்பு விற்பனையும், பட்டங்களுக்கான நூல் விற்பனையும் ஜரூரா நடக்குது. சீஸனல் ஸேல்! கரும்பெல்லாம் வெளிறிய இளம்பச்சை நிறத்தில். வேற வகை போல இருக்கு. நகரைவிட்டு வெளிவந்து நெடுஞ்சாலையில் கலந்தோம். ரெண்டுபக்கமும் பருத்தி. அறுவடைக்குத் தயாரா வெடிச்சுக்கிடக்கு. ஒரு இருவது நிமிஷம் வந்துருப்போம். எங்கே பார்த்தாலும் வெள்ளை நிலம். இது என்னடா நியூஸிக்கு வந்துட்டோமோ? பயங்கர பனிமழை பெய்ஞ்சுருக்கே!!! அப்படி இருக்கச் சான்ஸ் இல்லையே...... நமக்கு அங்கே இப்போ சம்மராச்சே.......
ஒரு பக்கம் சின்னதா வெள்ளைக்குன்றுகள். வண்டியை அங்கே ஓரங்கட்டி, மலையில் இருந்து ஒரு கல் எடுத்துத் துடைச்சுட்டு லேசா வாயில் வச்சுப் பார்த்த கோபால், உப்புக் கல்லு'ன்னார். அட! தூத்துக்குடிக்குப் போனப்ப மிஸ் பண்ணிட்ட இடம்! எந்த மாதிரி அமைப்புன்னு தெரியலை. பாத்தி கட்டிவிடுவாங்கன்னு கேள்விப்பட்டுருக்கேன். இங்கே என்னடான்னா...... அதுபாட்டுக்கு 'விளைஞ்சு' கிடக்கு. தெருவோரம் தேங்கி நிற்கும் சின்னக் குழியில்கூடப் பூத்துக்கிடக்கு உப்போ உப்பூ. ஒரு இடத்துலே உப்பு மலையைக் குளிப்பாட்டிக்கிட்டு இருந்தார் ஒருத்தர். அச்சச்சோ..... குளிச்சால் கரைஞ்சுடாதா? சிலபல மலைகள் எல்லாம் 'டாடா' க்ரூப்பைச் சேர்ந்ததாம். (அரைமணிநேரப் பயணம் முழுசும் உப்பூ. படங்கள் வேண்டுமென்றால் உப்போ உப்பூவில் பார்க்கலாம்.)

ஸ்வாமிநாராயண் கோவில் படங்கள் இங்கே ஆல்பத்தில் இருக்கு.

பயணம் தொடரும்....:-)