Friday, May 29, 2015

மொத்த சொத்தும் அம்மா பெயரில்தானாம்! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 54)

அஞ்சு மணிக்குத்தான் கோவில் திறப்பாங்க. இப்பவே என்னத்துக்கு ஆடறேன்னு இழுத்தார் கோபால்.  எனக்கு அஞ்சு மணிக்குக் கோவிலில் இருக்கணும். சாமி தரிசனம் முடிச்சுட்டுப் பொழுதோடு ரங்கனைப் பார்க்கப்போகணும்னு மந்திரிச்சுவிட்ட கோழிமாதிரி சொல்லிக்கிட்டே இருந்தேன்.  சரியா அஞ்சு அஞ்சுக்குக் கோவில் வாசலில்போய்  இறங்கியாச்சு:-)  எங்கியோ இருக்குன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேனா....  கடைசியில் பார்த்தால் நம்ம சங்கம் ஹொட்டேலில் இருந்து வெறும் மூணே கிமீ தூரம்தான்!

அஞ்சு நிலை கோபுரத்தோடு  முன்வாசலில் பளிச்சுன்னு  'அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோவில், உறையூர்- திருச்சி' னு எழுதி இருக்கு.  ஓக்கே.  தாயார் வீடு!

இந்த உறையூரின் புராணப்பெயர் திருக்கோழி!  ஆதித்த கரிகாலன் புது தலைநகரம் நிர்மாணிக்கும் யோசனையுடன் தன் நாட்டின்  ஒவ்வொரு பகுதியாகப்போய்க்கிட்டு இருக்கான். அப்போ இங்கே  வரும்போது,   மேய்ஞ்சுக்கிட்டு இருந்த ஒரு கோழி  அவனுடைய பட்டத்து யானையுடன்  சண்டை போடுது!  கோழியின் வீரத்தைப் பார்த்த மன்னன், இது வீரம் விளையும் பூமின்னு  அங்கேயே தலைநகரத்தை உருவாக்கிக்கிட்டானாம்.
 திருக்கோழி என்ற பெயருடன்!  குக்கிடபுரி, கோழியூர், வாரணபுரி, திருமுக்கீசுரம், நிசுளாபுரி ன்னு  பலபெயர்களும் கிடைச்சிருக்கு.

ஆனால் உறையூர் என்ற பெயர் எப்போ எப்படி ஏற்பட்டதுன்னு  தெரியலையே:(  மஹாலக்ஷ்மியான கமலவல்லி இங்கே நித்ய வாஸம் செய்து இங்கேயே உறைந்துவிட்டதால்  உறையூர் என்று பெயர் வந்திருக்கலாமோ என்னவோ!

சர்ச்சிலுக்கு உறையூர் சுருட்டு பிடிக்குமுன்னும் இங்கே இருந்து சுருட்டு தயார் பண்ணி அனுப்புவாங்கன்னும்  கேள்விப்பட்டுருக்கேன்.  ஆங்கிலேயர் நாட்டை மட்டும் சுருட்டலைன்னு  இதிலிருந்து தெரியுது பாருங்களேன்! 

நந்த சோழன் என்ற மன்னன் இந்தப்பகுதியை ஆட்சி செய்துக்கிட்டு இருந்த காலக்கட்டம்.  மன்னன்,  ரங்கனின்  பரமபக்தன்.  இவனுக்கு ஒரு பெரிய மனக்குறை, குழந்தை இல்லை என்பதுதான்.  ரங்கனிடம்  வேண்டிக்கேட்க,  ரங்கனே மஹாலக்ஷ்மியை மன்னனுக்கு மகளாக் கொடுக்க நினைச்சுட்டான்.  ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடப்போன இடத்தில் ஒரு  தடாகத்தில் மலர்ந்திருந்த தாமரையில் ஒரு பெண்குழந்தை கிடந்துருக்கு!

(தடாகக்கரையில் இருந்திருக்கப்டாதோ? குழந்தையின் கனத்தை மலர் தாங்கி இருக்குமோ? அதென்ன பெண்குழந்தைகளாகவே எப்போதும் கிடைக்குது... உஷ்....  மனசே.... அடங்கிக்கிட! )


கமலத்தில் கிடந்த குழந்தையை எடுத்துவந்து கமலவல்லி என்ற பெயர்வச்சு  வளர்த்து ஆளாக்கினான் மன்னன். ஒருநாள்  குதிரையில்  போன ரங்கனைக்கண்ட கமலவல்லி காதலில் விழுந்தாள். மன்னன் கனவில் வந்த ரங்கன்,  உன் மகளை  நானே கல்யாணம் கட்டப்போறேன் என்றதும்,  மகளைக் கூட்டிக்கிட்டு ஸ்ரீரங்கம்  போயிருக்கான்  மன்னன்.

கருவறைக்குள் நுழைந்து அவனோடு ஐக்கியமாகிட்டாள்னு கோவில் புராணம் சொல்லுது!  இது ரங்கனுக்கு ரொம்பவே வழக்கமான செய்கைதான்.  ஆண்டாளையும் இப்படித்தானே  செஞ்சான் இல்லையோ?

உறையூர் திரும்பிய மன்னன், மகளுக்காக ஒரு கோவிலைக் கட்டினான்.  அதுதான் இது!  ஸ்ரீதனம்!

இங்கே கமலவல்லியின் மணாளனாக இருக்கும் பெருமாளுக்கு   அழகிய மணவாளர் என்று பெயர்.  மாப்பிள்ளையும் பொண்ணுமாக் கல்யாணக்கோலத்தில் நின்றபடி ஸேவை சாதிக்கிறார்கள், வடக்கு நோக்கி!  ஏனாம்?  ரங்கன் முகம் பார்த்துக்கிட்டே இருக்கணுமாம். ரங்கன் தெற்கே பார்ப்பதால்  இவுங்க ரெண்டு பேரும் வடக்கு பார்க்கும்படியா ஆகி இருக்கு.

கோபுரவாசல் கடந்து பிரகாரத்தில்காலடி வைத்ததும் கண்ணுக்குப் புலப்படும் வகையில் கோவிலின் விவரங்கள், ஸேவை  நேரங்கள் எல்லாம் பளிச்ன்னு எழுதிப்போட்டு வச்சுருக்காங்க.  108 திவ்ய தேசக் கோவில்களின் வரிசையில் இதுக்கு  ரெண்டாம் இடம்!  (முதலிடம் பூலோக வைகுண்டமான ஸ்ரீரங்கம்தான்!)  வலது பக்கம் திரும்பி  பிரகார மூலை கடந்தால்  வலது பக்கத்தில் மூலவர் சந்நிதிக்குப்போகும் வழி.


கோவில் திறந்திருக்கும் நேரம்  காலை  6 முதல் 12,  மாலை 5 முதல் 8.. விசேஷ பூஜை இருக்கும் நாட்களில்  இரவு 9 வரையும்கூட திறந்துருக்குமாம்.



சந்நிதி திறந்ததும்  போய் ஸேவித்துக்கொண்டோம்.  பெயருக்கேத்தமாதிரி ரொம்பவே அழகா  இருக்கார்  அழகியமணவாளர்! பிரகாரத்தை வலம் வந்தோம்.  நல்ல அகலமானவையா இருக்கு!


சேர்த்தி மண்டபம்!

திருமங்கை , குலசேகரன்  என்ற ரெண்டு ஆழ்வார்கள்  ஆளுக்கொன்னுன்னு பாசுரங்கள் பாடி மங்களசாஸனம் செஞ்சு வச்சுருக்காங்க.  திருமங்கை ஆழ்வார்,

  கோழியும்  கூடலும் கோயில் கொண்ட  கோவலரேயுப்பர் கொன்றமன்ன
பாழியும் தோளுமோர் நான்குடையர் பண்டிவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோவிவர் வண்ணமெண்ணில் மாகடல் போன்றுளர் கையில் வெய்ய 
ஆழியொன்றேந்தியோர் சங்கு பற்றி அச்சோவொருவரழகியவா  என்றும்,

குலசேகராழ்வார்  இப்படியுமாப்   பாடி  இருக்காங்க.

அல்லிமாமலர் மங்கை நாதன் அரங்கன் மெய்யடியார்கள் தம்
எல்லையிலடிமைத் திறத்தினில் என்றும் மேவு மனத்தனாம்
கொல்லிக் காவலன் கூடல் நாயகன் கோழிக்கோன் குலசேகரன்
சொல்லினின் தமிழ்மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்களாவாரே

இருவருமே கோழி என்றே இந்தத்  தலத்தைக் குறிப்பிட்டுள்ளதை பாருங்க!
திருப்பாணாழ்வாரின் அவதார ஸ்தலம் இது. அவருக்குத் தனிச்சந்நிதியும் இருக்கு.





இப்படி இருந்தாலும் நம்ம கமலவல்லிக்குத் தனிச்சந்நிதி கிடையாது!  முழுக்கோவிலும் இருக்கே. அப்புறம் தனியா எதுக்குன்னு விட்டுட்டாங்க போல!




பிரகாரங்களின்  மூலைகள் சேருமிடங்களில் அழகான மண்டபங்கள்.  வலக்கோடி மண்டபம் திருவாய்மொழி மண்டபமாம்.  இன்றைக்குத் தாயாரின் சேவை  அங்கே நடக்குமுன்னு  கோலம் போட்டுக்கிட்டு இருந்தவங்க சொன்னாங்க. 6 மணிக்காம்.  இன்னும் அரைமணிதானே இருந்து பார்த்துட்டே போகலாமுன்னு தோணுச்சு.

ஒரு காஃபி குடிச்சால் தேவலை. பொடிநடையில் ரெண்டு நிமிசத்தில்  மெயின்ரோடுக்கு வந்தோம். இது நாச்சியார் ரோடு!  கண்ணுக்கு நேரா இருந்த நளாவுக்குப் போனோம்.  வெறும் காபிதான் மூவருக்கும்.  சின்னதா ஒரு அஞ்சடுக்கும் நாலடுக்குமா டிஃபன் கேரியர் என் இடுப்புயரத்துக்கு!  பார்ஸல் அனுப்புவாங்களாம்!  பத்துப்பதினைஞ்சு பேர் சாப்பிடலாம்.  விலை ஒன்னுமப்படி அதிகமில்லை.  40, 45 ரூபாய்க்கே கிடைக்குது.  சென்னை சரவணாவில் ஒரு வடை 25 ரூ என்பது  நினைவுக்கு வந்துபோச்சு.







திரும்பி ரெண்டே நிமிஷத்தில்  மீண்டும் கோவில்.  மண்டபங்களில் இருந்த சிற்பங்களைக் கிளிக்கிட்டு இருந்தேன். பராமரிப்பு போதாது.  இன்னும் கொஞ்சம் நல்லா வச்சுருக்கலாம்....





 சரியா ஆறுமணிக்குத் தாயார் திருவாய்மொழி மண்டபத்துக்கு  எழுந்தருளினார். திரை போட்டு அவருக்கான  சடங்குகள் நடக்கும்போது . கொஞ்சம் கொஞ்சமாக் கூட்டம் சேர்ந்துச்சு.  திரை விலகினதும்  பார்த்தால்.....  அம்மாடி.... என்ன ஒரு அழகு!  ரொம்பக்கிட்டக்க நின்னு  பார்க்க முடிஞ்சது.


இந்தக் கோவிலில் ஒரு விசேஷம் என்னன்னா....  எல்லா முக்கிய பூஜைகளும் அம்மாவுக்கே!  ஸ்ரீரங்கத்தில்  நம்பெருமாளுக்கு நடக்கும்  அனைத்துமே இங்கே தாயாருக்குத்தான்.  இன்னும் சொல்லப்போனால் இங்கே  பெருமாளுக்கு  உற்சவமூர்த்தியே கிடையாது.   ஸ்ரீரங்கத்து நம்பெருமாள்தான் இங்கேயும் வந்துபோறார்!

பங்குனி  உத்திரத்துக்கு ரங்கநாயகியுடன் சேர்த்தி  ஸேவை அங்கே நடக்குது பாருங்க, அதுக்கு முதல் நாள் நம்பெருமாள் இங்கே வந்து  நம்ம கமலவல்லியுடன் சேர்த்தி ஸேவை சாதிச்சுட்டு11 மணி இரவில் கிளம்பி அங்கே போயிடறார்  ரொம்ப சமர்த்தாக:-)

இங்கே  வைகுண்ட வாசல் இருந்தாலும், வைகுண்ட ஏகாதசி கொண்டாட்டம், பரமபதவாசல்  திறப்பு எல்லாம் கிடையாதாக்கும். அதுக்கு பதிலா மாசி  மாசம் தேய்பிறை ஏகாதசிக்கு வைகுண்ட வாசல் திறந்து  வெளியே வருவது நம்ம கமலவல்லிதான்!  அதிகாரம் யார் கையில்னு புரிஞ்சதோ:-)

 எட்டுவரை  தாயார் இங்கே தானாம்!  கொடுத்து வச்ச உள்ளுர் மக்கள். ஊஞ்சல் சேவைகள் முடிஞ்சாட்டு பிரசாத  விநியோகம் உண்டு போல!  பாத்திரங்கள்  அங்கே வரிசையா மூடி வச்சுருந்துச்சுதான். அதுவரை பொறுமை காக்க என்னால் முடியாது.  ரங்கன் இங்கிருந்து ஒரு ஆறே கிமீ தூரத்தில்தான்  இருக்கான்.  போகலாம்  போகலாமுன்னு கிளம்பிட்டேன். அப்படியும்  போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கிட்டுப் போய்ச் சேர ஏழேகால் ஆனது.

கமலவல்லி நாச்சியார் மேலதிகத் தகவல்கள்  இருந்தால் உள்ளூர் மக்கள் சொல்லுங்க. நானும் தெரிஞ்சுக்கறேன்.

கேமெரா டிக்கெட் வாங்குமிடத்தில் யாரையும் காணோம்.  இருட்டி வேற போச்சு. நாளைக்கு பகல் வெளிச்சத்தில் வரலாமுன்னு மனசை சமாதானப்படுத்திக்கிட்டேன். முதலில்  பெரிய திருவடியை  தரிசனம் செஞ்சுட்டுக் கோவிலைச் சும்மாச் சுத்தி வரலாமுன்னு இருந்தவளிடம்,'ஏம்மா... பெருமாளைப் பார்க்க வேணமா?'ன்னார் கோபால். வேணாம்.  ஐந்நூறு தண்டம் என்றேன். 'ரங்கன் ரங்கன்னு  புலம்பிட்டு, இப்ப  என்ன இப்படிக் கஞ்சத்தனம் பண்ணுறே' ன்னவர்   விடுவிடுன்னு போய்  அம்பது ரூ டிக்கெட் ரெண்டு வாங்கியாந்தார். காசு கொடுத்துப் பார்க்கணுமோ!  ரொம்பத்தான் ஆகிக்கிடக்குன்னு முணுமுணுத்துக்கிட்டே போனேன். போனமுறைக் கசப்புக் கொஞ்சூண்டு மனசில் மிச்சம் இருந்துச்சு.


அரை நிமிஷம் தரிசனம் கிடைச்சது. வெளியே வந்தவுடன்,  அச்சச்சோ.... திருவடி தரிசனம் செய்யாமல் முகம் பார்த்துக்கிட்டே  முப்பது வினாடியும் நின்னுருந்தேனேன்னு இன்னும் கொஞ்சூண்டு புலம்பல்.


'போறான் போ'ன்னு  கொடிமரம்தாண்டி வரும் சமயம்,  புதுமண்பானையில்  கைவிட்டு தச்சுமம்மு உருட்டிக்கொடுத்துக்கிட்டு இருந்தாங்க பாமா!  இன்னிக்குக் கல்யாண நாளாம். பதினெட்டு வருசம் ஆகுது. அதுதான்  சொல்லி வச்சுருந்தோம் என்று சொன்னாங்க. கணவர் பாலாஜியும், மகளும் பக்கத்துலே நின்னுக்கிட்டு இருந்தாங்க.



ஆஹா.... பதினெட்டை வாழ்த்த நாப்பத்தியொன்னுக்குக் கசக்குமா?  நல்லா இருங்கன்னு மனமார வாழ்த்திட்டுக் கையை  நீட்டினேன்.  இளஞ்சூடான தச்சுமம்மு! க்ருஷ்ணார்ப்பணம்!   திருப்பதியில் கிடைச்ச வெந்நீர்பழையதைபோல் இல்லாமல் புளிக்காத கெட்டித்தயிர் போட்டு, தாளிச்சுக் கொட்டி.....   அடடா..... அமோக ருசி!

எத்தனையோ வகைவகையா மடப்பள்ளியில் செஞ்சாலும் பெருமாளுக்கு என்னவோ  சிம்பிள் தயிர்சாதம்தான்  நைவேத்யம். தினமும் ஒரு புது மண்பானையில்  சமையல்.  முதல்முறையா  நமக்கும்  கிடைச்சது   மனசுக்கு மகிழ்ச்சி!

சீனிவாசனுக்குச் சொல்லலாமேன்னு கண்ணை ஓட்டினால்  தூணுக்குப் பக்கத்தில் நின்னு  தச்சுமம்முவை வாயில் போட்டுக்கிட்டு இருந்தார்!

மற்ற சந்நிதிகளை ஒரு சுத்து வந்துட்டு  அகலங்கன் திருவீதியில்  அகஸ்மாத்தாக் கண்ணில் பட்ட  கதவுக்குள்   சிலர் போறதும் வாரதுமா இருந்தாங்களேன்னு  எட்டிப் பார்த்தா அங்கே  பெரிய வட்டிலில்  ப்ரசாத விற்பனை!  அக்கரவடிசில், புளியோதரை கிடைச்சது.  பப்பத்து  ரூ தான். ஆனது ஆகட்டுமுன்னு  வாங்கி  விழுங்கியாச்சு.  க்ருஷ்ணார்ப்பணம்!

வெளிப்பக்கம்   மண்டபத்தில் பிரசாதஸ்டாலில் கூட்டமான கூட்டம்.
மணி  கிட்டத்தட்ட ஒன்பது!  பேசாம  ஹொட்டேலுக்குப் போயிடலாம்.
 நாளைக் கதை நாளைக்கு !

தொடரும்........:-)

Wednesday, May 27, 2015

பதிவர் குடும்பத்துடன் ஒரு மணி நேரம் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 53)


திருப்பூர் என்றதும் உங்களுக்கெல்லாம் சட்னு என்ன நினைவுக்கு வருது?  எனக்கு ஒரு காலத்தில் பனியன் என்றுதான் வரும். கடந்த அஞ்சாறு  ஆண்டுகளா நம்ம ஜோதிஜி  வர்றார்!  பெயர் வச்சுக்கறதிலேயே   ஒரு திறமை இருக்கு பாருங்க!  'ஜி' என்பதை  பற்றி ஒரு சினிமாவில் (ஹிந்திப்படம். Bollywood Calling என்று நினைவு) வசனம் ஒன்னு வரும்.  அந்த 'ஜி'யை நாம் சம்பாரிக்கணும் என்பார்  ஹீரோ!  அவ்ளோ மரியாதை கொடுக்கக்கூடிய கனம் வாய்ந்த  சொல்லாம்  'Ji' !  ஹாஞ்ஜி ஹாஞ்ஜி!

நம்ம ஜோதிகணேசனுக்கு  இயல்பாகவே அது அமைஞ்சு போச்சு.  அந்த மரியாதையைத் தக்க வைத்துக்கொள்ளும் பண்பும் இயல்பாகவே வாய்த்திருக்கு அவருக்கு! பதிவுலகில் அவர் கால் வச்சது  மே மாசம் 2009 இல்.  சரியா இப்போ ஆறு வருசம்(தான்) ஆகி இருக்கு!  எடுத்து வச்ச கால் இப்ப பதிஞ்சு தடம் ஆகிப்போய்   டாலர் நகரம் என்ற புத்தகத்தின் மூலம் உலகெங்கும் அறியப்பட்ட எழுத்தாளராக இருக்கார்!  இது தவிர ஏழு மின்னூல்கள்!



கோபாலின்  கல்யாணத்துக்கு(!) 2012 செப்டம்பர்  நேரில் வந்து வாழ்த்தியபோதுதான் அவரை நேரில் முதல்முதலாக சந்திச்சோமே தவிர  அவருடைய எழுத்துகளாலும், தனிமடல்களாலும் பலவருசப் பழக்கம் எனக்குண்டு.  வலை உலக டீச்சர் மாணவர் என்றதைக் கடந்து  பதிவர் குடும்ப உறவில் அக்கா, தம்பி என்ற  ஒன்றும் உருவாகி இருந்தது என் மனதில். நம்ம   உ பி ச:-)

தம்பி வீட்டுக்குப்போகும் குஷியை விட பிள்ளைகளையும்  தம்பியின் தங்க்ஸையும் பார்க்கும் ஆர்வமே அதிகமா இருந்துச்சுன்னு  சொன்னா.... நீங்க நம்பணும். அன்றைக்கு சனிக்கிழமையா வேற  இருந்ததால்.... நிதானமா சந்திச்சுப் பேசலாமேன்னு எண்ணம்.

மரத்தடியில் நின்னவர்கள் பக்கத்தில்  ஒரு கார் வந்து  நின்னதும்  இறங்கி ஓடி வந்த  ஜோதிஜியின் முகத்தில்  மகிழ்ச்சி . அவர் முன்னால் போக அவருடைய காரை நாங்கள் பின் தொடர்ந்தோம். இப்ப கேட்டீங்கன்னா... என்னால் வழி சொல்லமுடியாது:-)

வீட்டு வாசலில்  இறங்கி உள்ளே போனதும்  என் தம்பிமனைவி  ஓடிவந்து வரவேற்றார்கள். என் கண்கள் பிள்ளைகளைத் தேடுச்சு.  பள்ளிக்கூடம் போயிருக்காங்களாம்.  சனிக்கிழமை கூடவா?  கொஞ்சம் ஏமாத்தமாத்தான் இருந்துச்சு. பிள்ளைங்க படத்தை  க்ளிக்கிக்கிட்டேன்.

ஒருமணி நேரம் போனதே தெரியலை.  இடையில் பலமுறை என்ன சாப்பிடறீங்கன்னு கேட்டுக்கிட்டே இருக்கார். தங்க்ஸ் உள்ளே போய்  பகோடா செய்யறேன்னு ஆரம்பிச்சாங்க. எனக்கு  மனம் நிறைஞ்சு இருந்ததால் பசி ஒன்னும் இல்லை.  இப்பெல்லாம் அதிகமா டீ, காபி குடிப்பதையும் நிறுத்தியாச்சு. பயணங்களில்  காலை  ப்ரேக்ஃபாஸ்ட்டில்  ஒரு காஃபி/டீ மட்டுமே  என்றாலும்  தம்பியின் தங்ஸ் மனம் நோகவேண்டாமேன்னு  அவர்கள் அன்போடு கொடுத்த  ஏலக்காய் டீயைக் குடிச்சுட்டுக் கிளம்பினோம். பகல் இருந்து சாப்பிட்டுவிட்டுப்போகணும் என்று உபசரிச்சாலும்,  எனக்கு ஏற்கெனவே ரங்கனின்  அழைப்பு இருக்கே....

வாசல்வரை தம்பதிகள் வந்து  வழி அனுப்பினாங்க. கேட்ட கேள்விக்கு  பதில் என்றதைத் தவிர  தம்பி மனைவி அதிகமா ஒரு வார்த்தை பேசலை.  டீச்சரென்ற பயமோ:-)))))   ஊஹூம்... இருக்காது.  முகம் முழுக்க மலர்ச்சி இருந்துச்சே!

திரும்பி வரும்போதுதான்  நொய்யல் ஆற்றின் அவல நிலை கண்ணில் பட்டது.  தமிழ் தினசரிகளில் பலமுறை  செய்திகளைப் பார்த்திருந்தாலும்.....  இவ்ளோஅழுக்கா ஒரு ஆறு இருக்குமுன்னே என்னால்  நினைச்சும் பார்க்கமுடியலை:(  வெள்ளியங்கரி மலையில் உற்பத்தியாகிப் பெருகிவரும் இந்த நொய்யலை முழுக்கமுழுக்க அசிங்கப்படுத்தியது இந்த திருப்பூர்தான்:(


ஏகப்பட்ட சாயப்பட்டறைகள்,  பின்னலாடை உற்பத்தியில் முதலிடம் எல்லாம் சேர்ந்து  வந்தோரை வாழவைக்கும் நகரம், உள்ளூர் ஆற்றை நரகமா  ஆக்கி வச்சுருக்கே:-(  நோய்களின் பிறப்பிடமா இருக்கும்தானே?  இல்லை... மக்களெல்லாம்  இம்யூன்   ஆகி  பலமா இருக்காங்களா?



நொய்யல் மனசை நோக வச்சது உண்மை! கூவத்துக்குத் தங்கை!  விடிவு காலம் எப்போ?

எல்லா அநியாயத்துக்கும் இந்த ஓணானே சாட்சி!

சர்ச் இருக்குமிடம் சுத்தம் கொஞ்சம் பரவாயில்லை.  இப்படியே ஊர் முழுக்க இருக்கப்டாதா?


கங்கயம் வழி கரூர் வந்து சேர்ந்தோம்.  அவதார ஸ்தலம்.  பகல் ஒன்னரை ஆகி இருந்துச்சு.  வெறும் 90 கிமீ தூரத்தைக் கடக்க ரெண்டு மணி நேரம். மாரியம்மன்  கோவில் இந்நேரம் மூடித்தான் கிடக்கும் என்பதால்  ஊருக்குள் போகலை.  ஒரு காலத்துலே ஆட்டம் போட்டுருக்கேன் இங்கே!

அதுவும் சித்திரை மாசத் திருவிழா சமயங்களில்....... கூட்டம்கூட்டமாத்  தீச்சட்டி எடுக்கும்  பக்தர்களை இங்கெ பார்க்கமுடியும். என்னதான் வேப்பிலைக்கொத்தை  சட்டிக்கு அடியில் வச்சாலும் கை பொள்ளாமலா இருக்கும்!

கொட்டு மேளத்தோட அக்கினிச் சட்டி ஊர்வலம் வரும்போது, அவுங்க காலுக்கு ஊத்தறதுக்காக அரைச்ச மஞ்சள் கலக்கின தண்ணி அண்டா அண்டாவா வச்சிருப்போம்!

கோயிலுக்கு உள்ளே நிறைய புது மண் சட்டிங்களை அடுக்கி வச்சிருப்பாங்க. அந்தச் சட்டிங்களிலே, வாய்க்குக் கொஞ்சம் கீழே சின்னச் சின்னதா முக்கோண வடிவுலே ஓட்டைங்க . குட்டிக் குட்டி ஜன்னல்போல இருக்கும் .அதன் மேலும் கீழும் காவியாலும், சுண்ணாம்பாலும் கோலம் போட்டிருக்கும். பார்க்க ரொம்பவெ அழகாக இருக்கும்.அந்த ஓட்டைங்க வழியாகப் போற காத்து, அதில் உள்ள தீ அணைஞ்சிராமல் எரிய உதவுமாம்! ஒரு சின்ன விஷயத்தையும் விடாமல் வடிவமைச்சிருக்காங்க பாத்தீங்களா?

கோயிலுக்கு உள்ளே இந்தச் சட்டிகளுக்கு அருகிலெ, இன்னொரு சுவாரசியமான பொருள் குவிச்சு வச்சிருப்பாங்க! அது மண்ணால் செஞ்ச பொம்மைங்க! பலவிதமான உருவத்துலே பொம்மைங்க இருக்கும். தலையிலிருந்து,தொடைவரை உள்ள ரூபம்தான்.தலையில் மேலெ மண் மூடாம சின்னதா திறந்திருக்கும். அடிப்பக்கமும் திறந்தே இருக்கும். போலீஸ், கள்ளன், பொண்ணு, பையன், சாமியார், கிழவன், கிழவின்னு பல தினுசா இருக்கும். இதெல்லாம் என்ன?

பொங்கப் பானைக்கு பக்கத்திலே, மாவிளக்குத் தட்டுலே, அம்மனுக்குப் படையல் வைக்கற இடத்துலென்னு பல இடங்களில் இதைவச்சு, தலைமேலெ இருக்கற ஓட்டையிலெ வேப்பிலையை சொருகி வைக்கற 'ஸ்டாண்டு!' 

திருவிழா சமயத்துலெ எல்லா வேப்பமரமும் மொட்டையா நிக்கும். ஆளுங்கதான் எல்லாக் கொப்புங்களையும் உடைச்சு, கோயில் உள்ளெ போட்டு வச்சிருவாங்கல்லே!

என் கொசுவத்தி பத்திக்கிட்டுப் புகைய ஆரம்பிச்சது.  


ஆமாம்... உங்களுக்குத் தெரியுமோ....   ஒரு குழுமத்தில் இப்படிப்போட்டுருந்ததை வாசிச்சதும் மனசு ஜிவ்ன்னு பறந்தது உண்மை!  சங்க இலக்கியமும், சங்ககாலக் கல்வெட்டுகளும், தொல்லியலும் இன்றைய கொங்குக் கரூர் தான் சங்க காலச் சேரர் தலைநகர் வஞ்சி என நிரூபித்துவிட்டன.



பார்க்கக் கொஞ்சம் நீட்டா இருந்த ஹொட்டேல் என் டி எஸ் பேலஸில் இருக்கும் பச்சைமிளகாய் ரெஸ்ட்டாரண்டில் பகல் உணவு.  சோறு, பருப்பு, லஸ்ஸி.  கோபாலுக்கு மட்டும் ஒரு கறி வாங்குனதா நினைவு. நாட் பேட்!


கூடுமான வரையில்  நம்ம சீனிவாசன் மட்டும் தப்பிச்சுக்கறார்! 

ரெண்டு மணிக்குக் கிளம்பி மூணே காலுக்கு  திருச்சி மாநகருக்குள் நுழைஞ்சு  வழக்கமாத் தங்கும் சங்கம் போய்ச் சேர்ந்தோம். வழியில் காவேரி!  நடந்தாய் வாழி காவேரி என்று பாடியதை மெய்ப்பிக்கும் வகையில்  நதி நடந்து  போய்க்கிட்டு இருக்கு.  நாமும்  தாராளமா நடந்தே குறுக்கே போகலாம்.  முழங்கால் தண்ணீர் இருந்தால்  உங்க நல் ஊழ்!  வரிசையா மணற்கொள்ளையர்களின்  வண்டிகள்  கண்போகும் பாதையில் எல்லாம்....



மாடியில்  இருக்கும் அறைக்குப் போறோம். அங்கே வெள்ளையும் சள்ளையுமா உடுத்திக்கிட்டுப் பெருங்கூட்டம். அதுக்குள் நீந்தித்தான் போகணும். நம்ம பக்கத்து அறையில் ஒரு அரசியல் வியாதி  தங்கி இருக்கார். அவரோட  காலாட்படைதான் வெளியில் குமிஞ்சிருக்குன்னு அப்புறம் தெரிஞ்சுக்கிட்டேன்.  உள்ளூர் கல்யாணத்துக்கு வந்துருக்காராம்.  ஊர் முழுக்க  வரவை முரசு கொட்டி அறிவிச்சு இருக்காங்க  ஃப்ளெக்ஸ் மூலம்!

கொஞ்சநேர ஓய்வுக்குப்பின்  இதோ  ரங்கனைப் பார்க்கக் கிளம்பியாச்சு.  அது பாருங்க எப்ப இங்கே வந்தாலும்  ரங்கனைச்சுற்றி இருக்கும் மற்ற திவ்யதேசங்களைப் பற்றிக் கவலைப்படாமல் ரங்கனே கதின்னு  இருந்துடறேன்.  இந்தமுறையாவது  திருச்சியைச் சுற்றி இருக்கும் மற்ற ஆறையும்  தரிசித்தே ஆகணுமுன்னு ஒரு தீர்மானம்  எடுத்தாச்சு.   இரண்டு நாட்கள் இங்கே தங்கப்போறோம் என்பதால்  ரங்கனுக்குப் பிற்பகலையும்,  மற்றவர்களுக்கு  முற்பகல்களையும்  கொடுக்கலாம்.

போற வழியில் இருக்கும் கோழியூருக்கு  முன்னுரிமை கொடுத்தேன்.

தொடரும்............:-)