Thursday, May 26, 2011

37

திரும்பிப் பார்த்தால் த்ரில்லா இருக்கு! எத்தனை ஊர்? எத்தனை வீடு? எத்தனை அடுப்பு? 'முனி' போல பிடிச்ச பிடியை விடலை நான். கழுத்து மேலே ஏறி உக்கார்ந்த மாதிரிதான்! என்ன............. மத்தவங்க கண்களுக்குத் தெரியாது? பல சமயம் நானுமே உணர்ந்ததில்லை.

வாழ்க்கை நாணயத்துக்கும் ரெண்டு பக்கம். சரி... நாணயத்தை விடுங்க. எப்பவுமே காசேதான் எல்லாமுன்னு இருப்பதா? வாழ்க்கையின் வெற்றிப் பதக்கமுன்னு வச்சுக்கலாம்.

நான் பாட்டுக்கு ஒரு பக்கம் காளி போல திம் திம்முன்னு ஆட
அவர் பாட்டுக்கு இன்னொரு பக்கம் சாந்தமா பசுமேலே சாய்ஞ்சுக்கிட்டு குழல் 'ஊதி' வேணு கானம் இசைக்க
இப்படியே முப்பத்தி ஏழு வருசங்கள் கடந்து போயிருக்கு!!!!!

மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

என்றும் அன்புடன்
துளசி.

அவ்வண்ணமே கோரும்
கோபால். ( ஆமாங்க அப்படித்தாங்க.நீங்க சொல்றது நூத்துக்கு நூறு சரிங்க!!!!!.....)


மாலையும் இரவும் சந்திச்ச வேளை ....((ராஜஸ்தான் பயணத்தொடர் 18)

பிரம்மாவின் தரிசனம் முடிச்சுட்டுக் கோவிலைச் சுற்றிப் பார்க்கப்போனோம். வேற சந்நிதிகள் ஒன்னும் இல்லை. மண்டபங்களா நீண்டு கிடக்கு. கோவில் படித்துறைக்குப் போகலாமுன்னு இருந்தப்ப எனக்கு தலை சுத்தல் கொஞ்சம் அதிகமாச்சு. விழுந்துகிழுந்து வச்சால் தொல்லையாச்சேன்னு அப்புறம் பார்த்துக்கலாம். அறைக்குப் போகலாமுன்னு சொன்னேன். திரும்பி வந்து நம்ம பொருட்களை லாக்கரில் இருந்து எடுத்துக்கிட்டு எதிர்க் கடையில் ரெண்டு பாட்டில் தண்ணீர் வாங்கிக்கிட்டு ஆட்டோ எதாவது கிடைக்குமான்னு பார்த்தால்..... கீழே கடைத்தெருவில்தான் கிடைக்குமாம்.

என்னடா வம்பாப் போச்சுன்னு மெள்ள கடைவீதியில், நாம் வந்த வழியாகவே கொஞ்சதூரம் திரும்பிப்போனபோது ஒரு சைக்கிள் ரிக்ஷா கிடைச்சது. அதுலே ஏறி அறைக்கு வந்துட்டோம்.

தலைவலி, மயக்கமுன்னு கலந்துகட்டியடிச்சு வயித்தைப் பிறட்டுது. குளியலறைக்குப் பாய்ஞ்சேன். குபுக்......... வாந்தி....யக்:( காஷ்மீரி புலவ் வெளியே வந்து விழுந்தது. பித்த உடம்புக்கு வெய்யில் ஆகலை. அப்படியே தூக்கிருச்சு. இந்த நிலையிலும் தில்லானா மோகனாம்பாளில் நடிகர் பாலையா வசனம் நினைவுக்கு வருதே! தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாதா?

'கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கிட்டுத் தூங்கிரு'ன்னார் கோபால். சொன்ன பேச்சைக் கேட்டேன்:-) பயணத்தைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கப் போறேனோன்னும் ஒரு கவலை! இவரும் ஓசைப்படாம ஆஃபீஸ் வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்தாராம்.
மாலை ஆறுமணி இருக்கும். தூங்கி எழுந்தது கொஞ்சம் நல்லாவே இருக்கு. ஹொட்டேலுக்குத் தொட்டடுத்து ஒரு படித்துறை இருக்கு. அங்கே போகலாமான்னு கேட்டதும் கொஞ்சம் ஃப்ரெஷப் செஞ்சுக்கிட்டுக் கிளம்பினேன். ஒரு பெரிய அரசமரத்தின் சுவட்டில் ப்ராச்சீன் மந்திர்ன்னு ஒரு சிவன் சந்நிதி.. அங்கே இருந்து இறங்கும் நல்ல பெரிய படித்துறையில் அங்கே இங்கேன்னு கொஞ்சம் கூட்டம். முக்கால்வாசி வெளிநாட்டினர். எதிரே தெரியும் பிரம்மன் கோவிலுக்குப் பின் சூரிய அஸ்தமனம் ஆகப்போகுது.
டுமுக் டுமுக்குன்னு சீரா டோலக் வாசிச்சுக்கிட்டு இருக்கார் ஒருத்தர். படிகளின் கீழே தண்ணீருக்குள் இறங்கும் படியில் ஒரு வெளிநாட்டுப் பெண், ரெண்டு கைகளிலும் கயிறுகளை வச்சுக்கிட்டுச் சுத்திச்சுத்தி ஆடறார். கயிறுகளின் முனையில் கனம் வேண்டிக் கட்டி இருக்கும் சின்ன மூட்டைகள் தாளம் பிசகாமல் ஆடின! ஒருவேளை வெள்ளைக்கார ஜிப்ஸியாக இருக்கலாம். இந்திய நாட்டில் சுற்றுப்பயணம் செய்ய அங்கத்து ஜிப்ஸிகள் ஏராளமா வர்றாங்க. உடைகளில் ஒன்னும் நமக்கு வித்தியாசம் தெரியாது. போதாததுக்கு வெள்ளைத்தோல் வேற! இங்கே புஷ்கரில் போதை மருந்து தாராளமாக் கிடைப்பதாகவும் இதற்காகவே வெள்ளையர் கூட்டம் வருதுன்னும் ஒரு இடத்தில் வாசிச்சேன்னு கோபால் சொன்னார்.
கட்டம் கட்டமா இங்கேயும் ரெண்டு குளம் பெரிய குளத்துலேயே இருக்கு. ஒரு இரும்புக்குழாயில் இருந்து தண்ணீர் வந்து குளத்தில் ரொம்புது. பெருசுலே இருந்து வருதோ? குழாய்க்குப் பக்கத்தில் ஒரு சிவலிங்கம் தண்ணீரில் இருக்கும் ஒரு படியில். இந்தப் பக்கம் உடைஞ்சு போன ஒரு நந்தி.பாபம் போக்கும் புண்ணிய நீரில் முங்கத்தான் முடியலைன்னாலும் தலையிலாவது ஒரு கை தண்ணீரை அள்ளித் தெளிச்சுக்கலாமுன்னு கோபால் தண்ணீரில் கைகால் நனைச்சுட்டு வந்தார். அவருக்குப் பாவம் போச்சு! அப்ப என் பாவம்? நானும் தண்ணீருக்குப் போனேன். சிவலிங்கத்தின் பக்கத்தில் அமர்ந்து கொஞ்சம் தண்ணீரை அள்ளி அபிஷேகம் செஞ்சேன். குளத்தில் ஒரு செண்டி மீட்டர் சைஸில் ஏராளமான மீன் குஞ்சுகள். ஆடாமல் அசையாமல் காலை நீட்டிக்கிட்டு இருந்தால் பிலுபிலுன்னு வந்து மொய்க்குதுங்க.

இந்த ஊரில் தெருநாய்கள் ஏராளமா இருக்கு. எல்லோரிடமும் ரொம்ப ஃப்ரெண்ட்லியா வேற பழகுதுங்க. அதிலும் வெள்ளைக்காரர்களிடம் இத்திரி ப்ரேமம் கூடுதல், கேட்டோ! தெருநாய்களின் பசியை உணர்ந்து எதாவது வாங்கித் தருவார்களா இருக்கும். நிறைய நாட்கள் வேற அவுங்க தங்குவதால் ஒரு குழுவுக்கு ஒரு நாய்ன்னு கூடவே சுத்துதுங்க. இப்பவும் படிக்கட்டில் உக்கார்ந்திருக்கும் ஒரு பெண்ணிடம் ஒட்டிப்பிடிச்சு உக்கார்ந்துருச்சு ஒன்னு:-)
இருள் மயங்கும் வேளையில் ஒரு பெரிய குடும்பம் வந்து அகல்விளக்குகளை கீழ்ப்படியில் ஒரு டிஸைனா வச்சுக்கிட்டு இருந்தாங்க. பார்க்க இந்தியாவின் உருவப்படம் போல இருந்துச்சு. கிட்டேப் போய்ப் பார்த்தேன். நினைச்சது ரொம்பச் சரி.

குடும்பத் தலைவர் போல இருந்தவரிடம்...என்ன விசேஷமுன்னு கேட்டதுக்கு இன்னிக்கு 'இந்திய நாட்டுக்குப் புது வருசம்' என்றார். கொஞ்சம் முழிச்ச என்னிடம், 'ஜனவரி ஒன்னு அங்க்ரேஜிகளின் புது வருசம். நம்முடைய பாரத தேசத்துக்கான புது வருசம் இன்னிக்குத்தான்' என்றார். யுகாதிப் பண்டிகை தெலுங்கருக்கும் கன்னடர்களுக்கும் மட்டும் வருசப்பிறப்பு இல்லை போல! எந்த ஊருன்னு என்னை விசாரிச்சப்ப..... அந்த இந்திய மேப்பிலே தமிழ்நாட்டைச் சுட்டிக்காமிச்சேன்:-)Loch Ness Monster ஆக இருக்குமோ?
தகதகன்னு ஆரஞ்சுப்பழம் கொஞ்சம் கொஞ்சமா வானத்தில் இருந்து மறைஞ்சது. அந்த சமயம் மேற்குக்கரையில் இருந்த கோவில்களும் கட்டிடங்களும் பார்க்கவே மனமயக்கத்தைத் தந்துச்சு. இதுக்குள்ளே நிறைய ஆட்கள் குறுக்கும் நெடுக்குமா குளக்கரையை ஒட்டிப்போய்க்கிட்டே இருக்காங்களேன்னு கவனிச்சால்..... வரிசையா அகல் விளக்குகளை வச்சு எண்ணெய் ஊத்திக்கிட்டே போறாங்க. இன்னொருத்தர் விளக்குகளை ஏத்திக்கிட்டே போறார். கொஞ்ச நேரத்தில் அமைதியான மினுக் மினுக் ஜொலிப்பு குளக்கரையைச் சுற்றிலும்!இந்தப் பக்கம் குளக்கரையில் கொஞ்சம் சாமிச் சிலைகளை வச்சுருந்தாங்க புள்ளையார், அனுமன், சிவலிங்கம், தேவி, நந்தி இப்படி.
மணி ஏழாச்சு. உடம்பு தேவலையான்னு கேட்ட கோபாலுக்கு 'இப்ப தலை சுத்தல் நின்னுருச்சு'ன்னு பதில் சொன்னதும், 'மெள்ள நடந்து அந்த ரங்காஜி கோவிலுக்குப் போலாமா'ன்னு கேட்டார். பக்கத்து தெருதான். மிஞ்சிப் போனால் அஞ்சு நிமிச நடை.. போகும் வழியில் அப்படியே ஆளைத் தூக்கிப்போகும் ஒரு நல்ல நறுமணம். மதில் சுவரை எட்டிப் பார்த்தால் பூந்தோட்டம். செவ்வரளிச் செடிகள் பூத்துக்குலுங்குது. இதே நறுமணத்தை ஒரு சமயம் சென்னை அண்ணா சாலையில் இருந்து ஜிஎன் செட்டி சாலைக்குள் நுழைஞ்சு கொஞ்ச தூரத்தில் அனுபவிச்சு இருக்கேன். மியூஸிக் அகெடமியில் ஒரு கச்சேரிக்குப் போய் திரும்பிவந்த இரவு நேரம். அப்போ அது என்ன வாசனைன்னு கண்டுபிடிக்க முடியலை.
அட.... அரளியின் மணமான்னு அதிசயிக்கும்போது கடூரமா உரத்த ஒலியில் மயில் அகவும் சப்தம். தலைக்கு மேலே அண்ணாந்து பார்த்தால் அரை இருட்டில் மரத்தின் உச்சியில் நீளத்தோகையுடன் மயிலார் உக்கார்ந்துருக்கார்!

பிரம்ம தேவன்....((ராஜஸ்தான் பயணத்தொடர் 17)

பிரம்ம தேவர் தன் கையில் ஒரு தாமரைப்பூவை ஏந்திக்கிட்டு அன்னப்பட்சி வாகனத்தில் அமர்ந்து ஹாய்யா பூவுலகைச் சுற்றிப் பார்த்துக்கிட்டு பயணம் போறார். அவர் கையில் இருக்கும் தாமரையில் இருந்து ஒரு இதழ் புட்டுக்கிச்சு! காற்றிலே மெல்லப் பறந்து தவழ்ந்து பூமியிலே வந்து விழுந்த இடத்தில்தான் ஒரு குளம் தோன்றுச்சு. அதுதான் இந்த புஷ்கர் (புஷ்பம் உண்டாக்கிய ) தீர்த்ராஜ் ஸரோவர் என்னும் குளம்.

இன்னொரு கதையும் இருக்கு. அசுர குல அரசன் வஜ்ரநாபனோடு ப்ரம்மா போரிடும்போது, அசுரனைத் தன் கையில் உள்ள தாமரை மலரால் 'அடி'ச்சாராம்! அடியின் வேகத்தில் தாமரையில் ஒரு இதழ் புட்டுக்கிச்சு. அது விழுந்த இடம்தான் இந்த குளம். எப்படியோ கதையின் பின்பகுதி ஸேம் ஸேம்:-) இருந்துட்டுப் போகட்டும். புனைவுகள் பல வகை!


இதன் கரையில் பிரம்மதேவனுக்கு ஒரு கோவில் எழுப்பியது விஸ்வாமித்திர மகரிஷி. இந்த புஷ்கர் குளத்தாண்டை இருந்துதான் தவம் செஞ்சார். உக்கிரமான தவம். அதைக் கண்டு மனம் மகிழ்ந்து பிரம்மன் தோன்றி இவருக்கு ராஜரிஷி என்னும் பட்டத்தைக் கொடுத்தாராம். விஸ்வாமித்திரர் பிறப்பில் க்ஷத்திரியர். ஒரு சமயம் வசிஷ்டர் ஆஸ்ரமத்தாண்டை தன் பரிவாரங்களுடன் வரநேரிட்டது. வசிஷ்ட முனிவரைக் கண்டதும் பணிவோடு வணங்கினார் அரசர்
விஸ்வாமித்திரர். அவருக்கு ஆசி வழங்கி, இன்னிக்கு இங்கே ஆஸ்ரமத்தில் விருந்து சாப்பிட்டுப் போகணுமுன்னு அரசரைக் கேட்டுக்கிட்டார் வசிஷ்டர்.

எளிய ஆஸ்ரமக்குடிலில் இத்தனை பெரிய பரிவாரத்துக்கு சமைப்பது கஷ்டமுன்னு அரசருக்குப்பட்டது. அதெல்லாம் வேணாம். உங்க ஆசீர்வாதமே போதுமுன்னார். அத்தோடு விட்டிருக்கலாம். ஆனால்..... விதி யாரை விட்டது?

அதெல்லாம் ஒரு சிரமமும் இல்லை. நிமிசத்துலே சாப்பாடு தயாராகிருமுன்னு சொன்னவர்.......தன்னிடம் இருந்த நந்தினி என்னும் பசுவைக் கூப்பிட்டு( நந்தினியின் மற்றொரு பெயர் சபலை) இத்தனை பேருக்கு இன்னின்ன பதார்த்தங்கள் வேணுமுன்னு ஆர்டர் கொடுத்த அடுத்த விநாடி மேஜிக் போல எல்லாம் ரெடியா வந்துருச்சு. சபலை காமதேனுவின் அம்சம்.

அரசர் விஸ்வாமித்திரரும் பரிவாரங்களும் நல்லா சாப்பிட்டுத் திருப்தி அடைஞ்சாங்க. நல்லா இருந்துச்சு விருந்துன்னு சொல்லிட்டுப் போகாம, அந்த பசு எனக்கு வேணுமுன்னு கேட்டார். அரசன் கேட்டால் கொடுத்துடணுமாமே? (ஐயோ..... தற்கால அரசியல்வாதிகள் ஞாபகம் வந்து தொலைக்குதே! நல்லதெல்லாம் தனக்கே வேணுமுன்னு அடியாட்கள் வச்சுக்கிட்டு அட்டகாசம் செய்யறாங்களே)
'இல்லை அரசரே. என்னுடைய பூஜை புனஸ்காரங்களுக்கு இந்தப் பசு ரொம்ப முக்கியமு'ன்னு பணிவா மறுத்துருக்கார் வசிஷ்டர். முனிவரை அடக்கத் தன் புதல்வர்களை ஏவினார் அரசர். முனிவரின் கோபப் பார்வை பட்டதும் அவர்கள் எரிஞ்சு சாம்பல் ஆனாங்க. அரசனுக்குக் கோபம் வந்துருச்சு. படைவீரர்களிடம் பசுவைக்கட்டி இழுத்துக்கிட்டு வாங்கன்னு கட்டளையிட்டார். பாவம் பசு!

" நந்தினி , தேவையான போர் வீரர்களையும் போர்க்கருவிகளையும் தா" ன்னதும் அடுத்தவிநாடி பெரும்படை தோன்றி அரசனையும் அவனது படையையும் ஓட ஓட விரட்டுச்சு. அரசனுக்கு ரொம்ப ஷேம் ஷேம் ஆகிப்போச்சு. நம்முடைய அரச அதிகாரத்தைவிட சக்தி வாய்ந்தது முனிவர்களின் வலிமை. நாம் எப்படியாவது முனிவர் ஆகிடணுமுன்னுதான் இங்கே புஷ்கரில் வந்து தவம் செஞ்சார். ராஜரிஷி பதவியையும் அடைஞ்சார்.

அப்புறமும் திருப்தி இல்லாம, இன்னும் கொடுந்தவம் செஞ்சு பிரம்மரிஷி பட்டமும் கிடைச்சது. அந்தப் பட்டம் கொடுக்கவந்த பிரம்மனிடம், நான் பிரம்மரிஷி பட்டத்தை வசிஷ்டர் கையால்(வாயால்) வாங்கணுமுன்னு விண்ணப்பிக்க வசிஷ்டர் அங்கே வந்து, நீர் பிரம்மரிஷின்னு சொன்னாராம். ஆக....'வசிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி' கிடைச்சது:-)

இன்னும் பவர் வேணுமுன்னு பயங்கர தவம் செஞ்சப்ப.... இதென்னடா வம்பாப் போச்சு. பவர் கூடிட்டா நமக்கெல்லாம் ஆபத்தாச்சேன்னு தேவர்கள் கூடிப்பேசி நைஸா தேவலோக அப்ஸரஸ் மேனகாவை இந்தப் புஷ்கர் குளத்தாண்டை அசைன்மெண்ட் கொடுத்து அனுப்பினாங்க. அவளும் குளிக்க வந்ததுபோல வந்து விஸ்வாமித்திரரை மயக்கி அவர் தவத்தைக் கலைச்சு அதன் பயனாக சகுந்தலை பிறந்து....... இப்படி கதைக்குள் கதையாப் போய்க்கிட்டே இருக்கு.உலகத்தில் வேறு எங்கும் பிரம்மனுக்குன்னு தனியாக் கோவில் இல்லை. அப்படி கோவில் இல்லாத காரணமாச் சொல்றதுக்கு ஒரு கதையும் இருக்கு. ஒன் லைன் ஸ்டோரி என்னன்னா பொய் சொன்ன வாய்க்குக் கோவில் இல்லை!

பூமிக்கும் வானத்துக்குமாய் நின்ற சிவனின் அடி முடியைக் காணும் போட்டி வந்துச்சு. மஹாவிஷ்ணு அடியைக் கண்டுவர வராஹ ரூபத்தில் பூமியைத் தோண்டிக்கிட்டே போயிண்டுருக்கார். பிரம்மா தன் அன்னபட்சி வாஹனத்தில் ஏறி முடி காண மேலே மேலே போறார். ரெண்டு பேருக்கும் வெற்றி கிடைக்கலை.

அப்போ ஒரு தாழம்பூ இதழ் மேலே இருந்து கீழே வந்துக்கிட்டே இருக்கு. ப்ரம்மா அதை யார் என்னன்னு விவரம் கேட்க, அது சொல்லுது ' நான் சிவனின் முடியில் இருந்து தவறி விழுந்துட்டேன். அதான் கீழே பூமிக்குப் போய்க்கிட்டே இருக்கேன். எப்போ லேண்ட் ஆவேன்னு தெரியலை'ன்னது. ' எப்போ விழுந்தே? 'ன்னு பிரம்மன் கேட்க, அது பல வருசங்களாச்சுன்னதும் அம்மாந்தூரம் இன்னும் போகணுமான்னு பிரம்மா பயந்துட்டார்.

குறுக்கு வழியில் வெற்றியைத் தேடலாமேன்ற அல்ப ஆசையால், தாழம்பூவிடம் எனக்கு நீயே சாட்சியா இருக்கணும். என்றார். எதுக்கு சாட்சின்னு தாழம்பூ முழிக்க...... நான் சிவனின் முடியைக் கண்டேன். அப்போ அங்கிருந்து திரும்பும்போதுதான் நீயும் என் கூடவே வந்தேன்னு சொல்லப்போறேன்.; நீ ஆமாம்னு சொல்லணும் என்றார். தாழம்பூவுக்கு ஒரே பயம். பொய் சொல்ல எனக்குத் தெரியாதுன்னு தயங்குது. நோ ஒர்ரீஸ். நீ வாயையே திறக்க வேண்டியதைல்லை. ஆமாம்ன்னு தலையை மட்டும் ஆட்டினால் போதும் என்கிறார்.

அன்னப்பட்சியில் டபுள்ஸ் ஏறி பூமிக்கு வந்து சேர்ந்தாங்க ரெண்டு பேரும்.
அடியைக் கண்டுபிடிக்கமுடியலை என்ற தோல்வியை ஒப்புக்கொண்டு மூச்சு இறைக்க விஷ்ணுவும் வந்து சேர்ந்தார்.

அசட்டுத் தாழம்பூ அதே போல் தலையை ஆட்டினாலும் அதன் பேய் முழியைப் பார்த்து உண்மையைக் கண்டு பிடிச்சுடறார். உடனே சாபம் கிடைச்சது ரெண்டு பேருக்கும். ப்ரம்மாவுக்குத் தனியாக் கோவில் கிடையாது. தாழம்பூ பூஜைக்கு ஆகும் மலர்களில் இனி இருக்க லாயக்கில்லை. கூடாதுன்னு ஆனதும் அப்போதிருந்துதான். இது நம்ம தென்னிந்தியாவில் பரவலா இருக்கும் கதையும் காரணமும்.

அப்போ வடக்குக்கு? இருங்க சொல்றேன்.

பளிங்குப் படிகட்டுகளில் ஏறி கோவில் வாசலுக்குள் நுழைஞ்சோம். சின்னதா முற்றம் போல இருந்துச்சு. அதைத் தாண்டினதும் மூலவர் இருக்கும் கருவறைதான். வெள்ளி மாடத்தில் முழிச்சுப் பார்க்கும் கண்களுடன் நான்முகன் இருக்கார். ப்ராச்சீன் மந்திர். (அப்படின்னா கோவில் கட்டிய விவரம் ஒன்னும் இல்லை. ஆதிகாலம் முதலே இருக்குன்னு பொருள்!) சந்நிதிக்கு வெளியில் வெள்ளியில் செஞ்ச ஆமை உருவம் ஒன்னு தரையிலே பதிச்சுருக்கு. அங்கங்கே சுவரிலும் தரையிலும்ம் வெள்ளி நாணயங்களை பதிச்சு வச்சுருக்காங்க. ஒரு வகையான வேண்டுதல்களாம்.
மூலவருக்கு அருகில் சின்னதா ஒரு சிலை. காயத்ரி மாதாவாம். அரக்கர்கள் தொல்லையில் இருந்து தப்பிக்க மூணு பக்கமும் ரத்னகிரி, சூர்யகிரி, நீல்கிரின்னு மலைகளை சிருஷ்டிச்ச பிரம்மன் இங்கே குளக்கரையில் யாகம் செஞ்சுக்கிட்டு இருந்தாராம். கடைசியில் யாகத்தில் ஆஹுதிகளைச் சமர்ப்பிக்கும்போது அருகில் இருந்த தர்மபத்னியைக் காணோம். தம்பதி சமேதராத்தான் இந்த சமர்ப்பணம் செய்யணுமுன்னு சாஸ்த்திரங்கள் சொல்வதால்... அங்கிருந்த குஜ்ஜர் குலப்பெண்ணான காயத்ரியைப் பரிசுத்தம் செஞ்சு பிரம்மா கல்யாணம் செஞ்சுக்கிட்டாராம். ஏதோ வேலையாப் போயிருந்த சரஸ்வதி திரும்பி வந்து பார்த்தால்.......

'அடப்பாவி..... பொண்டாட்டி கொஞ்சம் இங்கே அங்கேன்னு அவசர வேலையா சிலருக்குக் கல்விக் கண்ணைத் திறந்துட்டு வர்றதுக்குள்ளே ........ பொறுமை காக்காமல் உடனே வேற அஃபீஸியல் சின்ன வீடு வச்சுக்கறதா? உனக்கு பூவுலகில் கோவிலே இல்லாமப் போகட்டும். சாபம் விட்டேன்! இனி உன்கூட இருக்க மாட்டேன்' னு கோச்சுக்கிட்டு ரத்னகிரி மலையில் போய் உக்கார்ந்துக்கிட்டாங்க. அதைத்தான் சாவித்ரி கோவிலுன்னு சொல்றாங்க. அப்புறம் கெஞ்சிக்கூத்தாடுனதும் கொடுத்த சாபம் கொஞ்சம் நீர்த்துப்போக , '....போகட்டும். இங்கே புஷ்கரில் மட்டும்தான் உனக்குக் கோவில். வேற இடங்களில் கிடையாது. நானும் மலைமேல் இந்தக் கோவிலைப் பார்த்தபடியே இருப்பேன். நீ பாட்டுக்கு காயத்ரியையும் ஏமாத்திட்டு...... வேற வீடு செட் அப் பண்ணிட்டால்...... தொலைஞ்சே....ஆமாம்.'


சரி..... இந்தக் கதைகளில் இருந்து கிடைக்கும் நீதி என்ன?

பொய்(யும்) சொல்லக்கூடாது. பொண்டாட்டிக்குக் கோபம் வர்றமாதிரி நடந்துக்க(வும்) கூடாது.


மலைமேல் ஏறி இறங்க நேரமும் சக்தியும் இல்லாததால் கண்களை அனுப்பிச் சேவிச்சுக்கிட்டோம்.

இப்பவும் குஜ்ஜர் இனத்தைச் சேர்ந்த பூஜாரிகளுக்குத்தான் பிரம்மன் கோவிலில் பூஜை செய்யும் உரிமை!

தீர்த்தங்களின் ராசா ....((ராஜஸ்தான் பயணத்தொடர் 16)

ஒரு பதினாறு கிலோ மீட்டர் மலைப்பாதையில் வந்து அடுத்த பக்கம் இறங்கினால் புஷ்கர் வந்துருது. அரைமணி நேரப் பயணம்தான். ஊருக்குள் நுழையும்போதே அலங்கார தோரண வாசலுக்கப்பால் ஆஞ்சநேயர் கோவில் ஒன்னு க்ளாக் டவர் போல ஒற்றைக் கோபுரத்துடன் அஞ்சடுக்கு மாடங்களாக! அதைக் கடந்து போனால். அழுக்குத்தண்ணீர் தேங்கின சாலையில் வழிமறிச்ச காவலர் வண்டி இதுக்கு மேலே போகக்கூடாது. இங்கேயே பார்க் பண்ணிக்கணுமுன்றார். 'யக்' இல்லை நாங்கள் ஹொட்டேலுக்கு போகணும் புக்கிங் இருக்குன்னதும் (தொலைஞ்சு போ) தலையை ஆட்டி வழி விட்டார்.
நறநறன்னு மண்ணு .... சின்னத்தெருவுக்குள் நுழையும்போது ரங்ஜி மந்திர்ன்னு சின்னதா ஒரு போர்டு. அதைத்தாண்டி இடப்பக்கம் திரும்பணுமுன்னு ஹொட்டேல்காரர்களின் தகவல் பலகை சொல்லுது. கடந்து போய் மாளிகை முகப்பில் வண்டியை நிறுத்தினோம். அட! உண்மைதாங்க., இது அரசகுடும்பத்தினருக்கான மாளிகையேதான். இப்போ ஹொட்டேலா மாத்தி இருக்காங்க.
முண்டாசு கட்டிய காவல்காரரைக் கடந்து சின்ன வரவேற்பு. முற்றம் நிறைய தளதளன்னு வாழைமரங்கள்! அறை ஒதுக்கியபோது (என்)வழக்கப்படி வ்யூ உண்டான்னு கேட்டேன். இருக்குன்னார் வரவேற்பாளர். ரெண்டாவது மாடி. லிஃப்ட் கிடையாது. மொத்தமே மூணு மாடிகள் உள்ள கட்டிடம்தான். படிகளேறி வெராந்தாவில் கால் வச்சதும் அனுமனின் வம்சாவளியினரில் ஒரு அம்மா குழந்தையோடு காட்சி கொடுத்தாங்க. பேஷ் பேஷ்ன்னு ரசிச்சுக் கண்ணைத் திருப்பினால்................ ஹைய்யோ!!!!!
மட்ட மத்தியான வெயிலில் உருக்கிவிட்ட வெள்ளிபோல தகதகன்னு ஜொலிக்கும் தண்ணீர். ப்ரமாண்டமான குளம். குளமா அது? கடலுன்னு சொல்லலாம். நேர் எதிர்க்கரையில் கூட்டமான கோவில்கள்! ஒரு கணம் மூச்சடைஞ்சு நின்னது நிஜம்!
சும்மாச் சொல்லக்கூடாது...... அரச மாளிகைன்னா அரச மாளிகைதான். எல்லா அறைகளுமே குளத்தைப் பார்த்தபடியே கட்டிவிட்டுருக்காங்க. நீள வெராந்தா. நெடுக அலங்காரத்தூண்களும் வளைவுகளுமா இருக்கும் கட்டைச்சுவர், ஒவ்வொரு அறைக்கு வெளியிலும் உக்கார்ந்து காட்சி பார்த்து ரசிக்க ஆசனங்கள். சுவர்களில் சின்ன மாடங்கள். . நிலைக்கண்ணாடிகள். அரசர் காலத்துப் புகைப்படங்கள். கண்ணனின் லீலா விநோத ஓவியங்கள் இப்படி. அப்பழுக்கு இல்லாத மின்னும் தரை!
அறைக்குள்ளே 'அந்தக் காலத்து' மரச்சாமான்கள். கட்டில், மர பீரோ, ரைட்டிங் டெஸ்க், நாற்காலிகள், ட்ரெஸ்ஸிங் டேபிள், ஓவியங்கள், தொங்கும் சரவிளக்குகள் எல்லாம் நம்மை அப்படியே சொக்க வைக்குது. கதவுகளுக்கான நிலை வாசலைச் சுத்தி பார்டர் போட்டதுபோல் கோலம்! சிம்பிள் அண்ட் ஸ்வீட்! குளியலறைக்குள் நுழையவும் அலங்கார வளைவு!!
உள்ப்புற முற்றத்தில் நெடுகத் தென்னைகள். மரத்தைச் சுற்றிப் படர்ந்து நிற்கும் மணி ப்ளாண்ட் கொடிகள். அழகான புல்தரை. அதன் நடுவில் ஒரு செயற்கை நீரூற்று. புல்தரைக்கு மறு கரையில் டைனிங் ஹால் என்று அருமையான இடமா இருக்கு! (அப்பவே க்ரீடம் ஒன்னு வாங்கியாந்துருந்தா ஒரு நாள், ஒரே ஒரு நாளாவது ராஜவாழ்க்கையை வாழ்ந்துருக்கலாம்)

நம்ம அறையில் கீதை உபதேசிக்கும்போது அர்ஜுனனுக்குக் காட்டிய விஸ்வரூபம். பழங்காலச்சித்திரம். அட்டகாசம் போங்க! தொலைபேசியை எடுத்து, 'யாரங்கே? ஒரு காஷ்மீரி புலாவ் கொண்டுவா(ங்க)'
ஸில்வர் சர்வீஸ்! அன்னாசி, ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு இப்படிப் பழங்கள் சேர்த்து சமைச்ச புலாவ் வந்துச்சு! தலைப்பாகை அணிஞ்ச பணியாட்கள் தேவைக்கும் அதிகமான பணிவுடன் பரிமாறினாங்க. சாப்பாடு ஆனதும் கொஞ்சநேர ஓய்வுக்குப்பிறகு சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம்.
இந்த பேலஸில் கார் ஓட்டுனர்களுக்குத் தங்க இடம் ஏதும் ஒதுக்கலை. கொஞ்ச தூரத்தில் ஒரு பத்து நிமிச ட்ரைவில் இவுங்களோட இன்னொரு கேம்ப் ஹொட்டேல் இருக்கு. அங்கு ட்ரைவர்களுக்கு அறைகள் ஏற்பாடாகி இருக்குன்னதும் ப்ரதீப்பைப் போய் சாப்பிட்டு ஓய்வெடுக்கச் சொல்லி இருந்தோம்.

கோவில் எவ்வளோ தூரமுன்னு வரவேற்பில் கேட்டால் ரொம்பப் பக்கம்தான். பக்கத்துத் தெருவழியா நடந்தே போகலாமுன்னு சொன்னாங்க. சரின்னு வெளியே கால் வச்சால் நம்ம வண்டி அங்கே நிக்குது. ப்ரதீப் நல்ல தூக்கம். எழுப்ப வேணாமுன்னு நடந்தே போனோம். சின்ன ஏத்தமா இருக்கும் தெரு. ரெண்டு பக்கமும் ஜே ஜேன்னு கடைகள். அடிக்கும் மொட்டைவெயிலில் இருந்து நம்மைக் காப்பாத்த கடைகளின் முன்னால் துணிப் பந்தல்கள் போட்டுருந்தாலும் வெய்யிலும் சூடும் நம்மை விடுவதா இல்லை.
வெய்யிலில் நடப்பதோ என்னமோ ஒரு மாதிரி மயக்கமாவும் வயித்தைப் பிரட்டுவது போலவும் இருக்கு. சமாளிச்சுக்கிட்டு மெல்ல நடந்தேன்.
வயித்தைக் குளிர்விக்கக் குடும்பங்கள் கூட்டமா மோடாவில் உக்கார்ந்து மண் கோப்பையில் லஸ்ஸி குடிக்கிறாங்க. நமக்கு எதையும் வெளியில் கண்ட இடத்தில் சாப்பிட பயம். பந்தா காமிக்கலை. வயித்துக்கு அசுகம் வந்தால் பயணம் கெட்டுருமே:(
இனிப்பு விற்கும் கடைகளும் நிறைய இருக்கு. கரண்டியில் ஏதோ ஒரு மாவை மொண்டுக் கொதிக்கும் எண்ணெயில் ஊத்துனதும் அது பரவி பூரி சைஸில் ஆகுது. அதைக் கோரி எடுத்து சீனிப்பாகில் போட்டு ஊற வைக்குறாங்க. புதுமாதிரி இனிப்பா இருக்கேன்னு ஆசையா இருந்தாலும் வாய்க்குத் தடா போட்டேன்.
வெள்ளைக்காரர் நடமாட்டம் எக்கச்சக்கம். பல கடைகள் அவுங்க தேவைக்கு ஏத்தாப்போலவே வெள்ளி மோதிரம், ப்ரேஸ்லெட், ஸ்கார்ஃப் துணிமணிகள் இப்படி. வெள்ளையர் ஒருத்தர் வாழைப்பழங்கள் வாங்கி ஒன்னைத் தின்னுட்டுத் தோலை அங்கே திரிஞ்சுக்கிட்டு இருந்த மாட்டுக்குக் கொடுத்தார். அறிவு பூர்வமா சிந்திச்ச மாடு..... தோலை வாங்கிக்காமல் அடுத்த கையில் இருந்த வாழைப்பழம் தான் வேணுமுன்னுச்சு:-)
நம்ம மயிலை கபாலி குளத்தின் கரை ஓரமாவே தண்ணீரைப் பார்த்துக்கிட்டே கோவிலுக்குப் போவது போல இங்கேயும் குளக்கரை ஓரமாவே போகலாமுன்னு நினைச்சிருந்தேன். ஆனால்..... இந்தக் கடைத்தெரு குளத்தைச் சுத்தமா மறைச்சுருது. கடைகளுக்கு நடுவில் அங்கங்கே வரஹா காட், ஹோல்கர் காட், நர்சிங் காட், பத்ரி காட் இப்படி படித்துறைகள் குளத்துக்கு இறங்குது. படிகளில் இறங்கிப்போனால் சின்னதா சந்நிதிகளுடன் கோவில்கள்.
ரொம்ப முக்கியமானதாக இருக்கும் கஹூ (பசு)காட் அனுமன் கோவில் இது. ஆதரவில்லாத(?) பசுக்களின் நலன் வேண்டி அனிமல் சொஸைட்டி ஒன்னு இயங்குது. கோ மாதாவைப் புறக்கணிக்கலாமா?
இந்தக் குளத்தைச் சுத்தி மொத்தம் அம்பத்திரெண்டு படித்துறைகளும் ஐநூறு கோவில்களுமா இருக்கு. இங்கேயும் நிறைய கோவில்களை முகலாயமன்னர் ஔரங்கஸேப் அழிச்சுட்டார். தப்பிப்பிழைச்ச கோவில்களும் மீண்டும் கட்டி எழுப்பப்பட்ட கோவில்களுமா உள்ளவைகள்தான் இப்போது அங்கே! கார்த்திகை மாசப் பவுர்ணமியில் இந்தக் குளத்தில் முங்கி எழுந்தால் செஞ்ச பாவங்கள் எல்லாம் விலகி, 'போகும் நேரம் வந்து போனால்' நேரா சொர்க்கவாசம் கிட்டு(மா)ம். பெரிய குளத்தில் ஓரத்தில் அங்கங்கே சின்னதாத் தடுப்புகள் கட்டி சதுரமான தனித்தனிக் குளங்களாவும் செஞ்சு வச்சுருக்காங்க. குளத்தைப் பார்க்கும்படி பெரிய பெரிய கட்டிடங்கள் நிறைய இருக்கு. எல்லாமே ராஜகுடும்பத்தினரும் செல்வந்தர்களும் கட்டிவிட்டவைகளாம்.
அநேகமா ஒரு கிலோ மீட்டர் நடந்துருப்போம். இன்னும் கோவில் வரலையேன்னு விசாரிச்சால் இதோ ரொம்பப் பக்கம்தான். நேராப்போய் இடப்பக்கம் திரும்புங்கன்னாங்க. திரும்பினோம். நிறைய படிகளுடன் இருக்கு கோவில். படியில் பக்கவாட்டில் நாலைஞ்சு நாற்காலிகளில் காவல்துறையினர் உக்காந்து கதை பேசிக்கிட்டு இருக்காங்க. இந்தப் பக்கம் ஒரு எலக்ட்ரானிக் கேட். கைப்பை உள்ளே கொண்டு போகக்கூடாதுன்னு என்னிடம் காவலர் சொன்னார். அட ராமா........... ஒரு அறிவிப்பு போட்டுருக்கலாமேன்னால்.... தோ இருக்கேன்னு ஒரு போர்டைக் காமிக்கிறார். அதன்மேல் கண்டதையும் மாட்டி வச்சுருக்காங்க. எல்லாத்தையும் எடுத்துட்டுப் பார்த்தால் ஹிந்தியில் 'கூடாதுகள்' இருக்கு.


கூடாதுகள்

இப்பக் கையில் இருப்பதை என்ன செய்வது? கெமெராவுக்கும் செல்பேசிக்கும் தடாவாமே! நானிருக்க பயமேன்னு படிக்கட்டு ஆரம்பிக்கும் இடத்துக்கு இடதுபுறம் சின்னதா இருந்த அறையை செருப்பு விடும் இடத்துலே இருந்த பையர் காமிச்சார். லாக்கர் ரூம்! ஒரு பத்து லாக்கர்கள். சாவி அதுலேயே மாட்டி இருக்கு. உள்ளே வச்சுப் பூட்டிட்டு சாவியை நாம் எடுத்துக்கிட்டுப் போயிடலாம். இருவது ரூ கட்டணம். பையில் இருக்கும் முக்கிய பொருட்களை எல்லாம் எடுத்து கோபாலின் பேண்ட் பாக்கெட்டுகளை ரொப்பிட்டு செல்ஃபோன்களையும் கேமெராக்களையும் காலிப் பையையும் லாக்கரில் வச்சுப் பூட்டினோம்.

தொடரும்.....................:-)

Tuesday, May 24, 2011

தர்கா ஷெரீஃப் ....((ராஜஸ்தான் பயணத்தொடர் 15)

எலக்ட்ரானிக் கேட் கடந்து உள்ளே போறோம். இடப்பக்கம் உசரமான இடத்தில் பெரிய டேக்ஸாவில் சமையல். உம்மா சொன்ன பாத்திரம்! இதுக்குள்ளே இன்னொரு இளைஞர் வந்து சேர்ந்துக்கிட்டார். சத்தர் ((Chaddar) போடறீங்களா? (ஏற்கெனவே நாங்க தீர்மானம் செய்தபடியால்) இல்லைன்னோம். சத்தர் போடுவதால் உள்ள நன்மைகளையும் இவ்வளவு தூரம் பயணம் செஞ்சு வந்து சத்தர் போடாமல் இருக்கும் கஞ்சத்தனம் நல்லாவா இருக்கு என்பதை மறைமுகமாகவும் சொன்னார். 'பரவாயில்லை. நாங்க சலீம் சிஷ்டி தர்காவில் வழிபாடு நடத்திட்டோம். அது போதும்' என்றதும் அது வேற இது வேறன்னு ஆரம்பிச்ச புது இளைஞர் 'சொல்வது எங்க கடமை. உங்களுக்கு விவரம் தெரியட்டுமேன்னுதான் சொன்னோம். பூ வாங்கிப்போடுவீங்களா'ன்னார். ஆஹா... அதுக்கென்ன போடலாமே! உடனே நூறு இருநூறுன்னு பல தொகைகள் சொன்னார். நூறே போதுமுன்னதும் அங்கே டேக்ஸா பக்கத்துலே இருந்த சின்ன முற்றத்தில் பூத்தட்டு ஒன்னு அவரே வாங்கி வந்தார். சின்னத் தாம்பாளம் சைஸுலே மூங்கில் தட்டு. அது நிறைய சிகப்பு ரோஜாக்கள். ஊதுபத்தி பாக்கெட், வெள்ளைச்சீனி மிட்டாய் பாக்கெட் எல்லாம் இருந்துச்சு. இந்த அளவு ரோஜாக்கள் வெறும் நூறுன்னால் ரொம்பவே சல்லீசு.
சந்நிதிக்கு நுழையும் வாசலில் ரெண்டு பக்கமும் சிலர் உக்காந்து பக்தர்கள் கொண்டுவரும் பூக்கள் தட்டை ஆசீர்வதிச்சு மந்திரம் ஓதி, கையில் உள்ள ரசீது புத்தகத்தைப் பிரிக்கிறாங்க. நிறைய 'நலத்' திட்டங்கள். சேவைகள். ஒவ்வொன்னுக்கும் ஆகும் செலவு இப்படிப் பட்டியல் வாயால் ஒப்பிக்கப்படுது. 'அதெல்லாம் இருக்கட்டும். நாங்க பொதுவாக் கொஞ்சம் டொனேஷந்தான் தருவோம்' என்றதும் வாங்கிக்கிட்டு ரசீது கொடுத்தாங்க.
பூத்தட்டைத் தலையில் சுமந்து கொண்டு போகணும். போனார். உள்ளே மேடையில் இருக்கும் சமாதிக்கு மேல் பல சத்தர்கள் போடுவதும் எடுப்பதுமாய் பயங்கர பிஸி. மேடைக்கருகில் நாம் போய்விடாமல் இருக்க இடுப்பளவு உயரக் கம்பித்தடுப்பு. நம்ம பூத்தட்டை வாங்கி மேடையின் ஒரு பக்கத்தி வச்சுட்டு அதுலே இருக்கும் சீனிமிட்டாய் பாக்கெட்டை மட்டும் எடுத்து நமக்குக் கொடுத்துடறாங்க. கூடவே மயிலிறகில் நம் தலையில் ஒரு தொடல். அஞ்சே நிமிசத்தில் ஆச்சு தரிசனம். இடப்பக்க வாசல் வழியே வெளியேறணும். சத்தர் போடும் மக்களைக் கம்பித்தடுப்புக்கு அப்புறம் கொண்டுப்போய் சத்தர் போர்த்தினவுடன் வலப்பக்க வாசலில் அனுப்பிடறாங்க.
வலம் வந்தோம். அங்கங்கே கொத்துக்கொத்தாக கூட்டம். குடும்பங்கள். சிலர் ஜெபமாலை உருட்டியபடி வழிபாட்டிலும், பலர் பேசியபடியும் உக்கார்ந்துருக்காங்க. ஒரு இடத்தில் சின்னக்குன்று போல அமைப்பு. ரெண்டு பக்கமும் படிகள். ஏறிப்போனால் குன்றின் நடுவில் பெரிய குழிக்குள் பிரமாண்டமான கடாய் ஒன்னு உக்கார்ந்துருக்கு! அது கஞ்சி வைக்கக் காணிக்கை போடும் இடம். மாவு, கோதுமை, சோளம்,. அரிசி, காசு இப்படி பலதரப்பட்ட பொருட்கள் குழியின் உள்ளே!

இந்த தர்காவையும் சிஷ்டி பாபாவையும் கொஞ்சம் பார்க்கலாம். இந்த சிஷ்டி பாரம்பரியம் ஆரம்பிச்சது ஆஃப்கானிஸ்தானத்துலே ஹேராட் ( Herat) என்ற நகருக்குப் பக்கத்தில் இருக்கும் 'சிஷ்டி' என்னும் கிராமத்தில்தான். இது கிபி 930 வது ஆண்டு. அன்பு பொறுமை, சகிப்புத்தன்மை, ஒளிவு மறைவு இல்லாத வெளிப்படையான திறந்த மனம் இப்படிப்பட்ட நல்ல குணங்களை சகமனிதர்களுக்குள் பரப்பி ஒரு முகமாக ஆண்டவனை வழிபட உண்டாக்கின அமைப்பு. அபு இஷாக் ஷாமி என்பவர் ஆரம்பிச்சுவச்சது.

இந்துமத அமைப்பில் நாயன்மார்கள் ஆழ்வார்கள். கிறித்துவத்தில் புனிதர்கள் போல இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் ஞானிகள் வகையில் இவர்கள் இருக்கணுமுன்னு நினைக்கிறேன்.

மூத்தோர்களை மதிச்சு நடப்பது, பூவுலக இன்பங்களைப் புறக்கணிப்பது முக்கியமாக 'காசே தான் கடவுளடா'வை விட்டுடணும். அதிகாரங்களைக் கைப்பற்றும் ஆர்வத்தை விட்டொழிப்பது, ஏழைகளிடம் கருணை, மனிதத்தில் ஆர்வம் மக்கள் சேவையே மகேசன் சேவை என்று இருப்பது, முன்னோர்கள் சொன்ன சாஸ்த்திர விதிகளின் படி இறைவனை வழி படுவது, படைச்சவனை மட்டும் நம்புவது, அற்புதங்களைச் செய்துகாட்டி மக்களை வசீகரிக்காமல் இருப்பது என்று இவையெல்லாம் முக்கிய கொள்கைகளாக ஆக்கி வச்சுருந்தாங்க. (ஆனால் இதெல்லாம் வேணாமுன்னு சொன்ன இவுங்களை வழிபட்ட மக்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் பல நடந்துச்சுன்னு சொல்றாங்க)

இப்படியான சிஷ்டி பரம்பரையில் வந்தவர்தான் மொய்னுத்தீன் அவர்கள். ஏழைகளின் மீது அளவில்லா கருணை காட்டியவர் என்பதால் இவரை கரீப் நவாஸ் Gharīb Nawāz ன்னு சொல்றாங்க. கிபி 1141 இல் பாரசீகத்தில் பிறந்தவர். சின்ன வயசுலேயே தாய்தகப்பனை இழந்துட்டார். குடும்ப சொத்தா ஒரு பழத்தோட்டமும், காற்றாலையும் கிடைச்சது. அதை வச்சுத் தன் பிழைப்பைப் பார்த்துக்கிட்டு இருந்துருக்கார். அப்போ ஒரு நாள் சூஃபி ஞானி ஷெய்க் இப்ராஹீம் குந்தூஸி (Shaikh Ibrāhim Qundūzī ) இவரோட தோட்டத்துப்பக்கம் வந்துருக்கார். பெரியவரை வணங்கி தன் தோட்டத்துப் பழங்களை இவர் காணிக்கையா கொடுத்தார். அவைகளை சாப்பிட்டுவிட்டு, மொய்னுதீனை ஆசீர்வதிச்சுத் தன் கையில் இருந்த ரொட்டித் துண்டை 'இந்தா நீ சாப்பிடு'ன்னு கொடுக்க இவரும் அதை பிரசாதமா நினைச்சுச் சாப்பிட்டிருக்கார்.

உள்மனசில் ஒரு ஒளி. ஞானம் தேடும் வேட்கை. இருந்த சொத்து பத்துக்களையெல்லாம் வித்துட்டு அந்தப் பணத்தை ஏழைகளுக்குத் தானம் செஞ்சுட்டு சந்நியாச வாழ்க்கையைத் தேடிக்கிட்டார். க்வாஜா என்னும் பெயர் வந்துருச்சு. தலைவருன்னு பொருளாம்.

தலயாத்திரை செஞ்சுக்கிட்டே வந்து ஒரு சமயம் பாரதத்தில் சுத்தும்போது அஜ்மெர் வந்ததும் அங்கேயே தங்கிட்டார். முஸ்லீம்களுக்கு மட்டுமில்லாம மற்றவர்களுக்கும் இவரையும் இவர் சொன்ன தத்துவங்களையும் பிடிச்சுப்போச்சு. 1230வது ஆண்டு தன் 89 வது வயசில் உலகவாழ்வை நீத்தார். இவரிடம் அன்பு கொண்ட மக்கள் சமாதி எழுப்பி வழிபட ஆரம்பிச்சாங்க. அப்போ இருந்துதான் இவரைப் பின்பற்றுபவர்களால் இங்கே பாரதத்திலும் சிஷ்டி பாரம்பரியம் ஒன்னு உண்டாச்சு. குத்புதீன் பக்தியார் காகி என்ற பக்தர், தலைவர் விட்டுப்போன சேவைகளைச் செய்ய ஆரம்பிச்சார். சின்னதா ஒரு தர்காவும் கட்டினார் தன் தலைவருக்கு.
அப்புறம் பல நிலைகளில் வெவ்வேற முகலாய மன்னர்களால் விரிவுபடுத்திக் கட்டப்பட்டிருக்கு இந்த தர்கா ஷெரீஃப். கதவுகள் எல்லாம் வெள்ளியில் செஞ்சு பொருத்தி இருக்காங்க. முதல்முதலா இந்த தர்காவுக்கு வந்து வழிபட்ட அரசர் முகமது பின் துக்ளக்தானாம். 1332 லே!

சில நூற்றாண்டுகளுக்குப் பின்னே பேரரசர் அக்பர் சக்ரவர்த்தி காலத்துலே ராஜாவே பாத யாத்திரையா ஆக்ராவில் இருந்து அஜ்மெர் வர ஆரம்பிச்சதும் இந்த தர்காவின் புகழ் படுவேகமாப் பரவ ஆரம்பிச்சது. அக்பர் சக்ரவர்த்திக்கு இந்த சிஷ்டி பாபாக்களின் மேல் தணியாத நம்பிக்கை. நாம் கொஞ்ச நாள் முன்னால் ஃபடேபூர் ஸிக்ரி கோட்டையில் ஸலீம் சிஷ்டி தர்கா போய்ப் பார்த்தமே நினைவிருக்கா? அவரை வழிபட்டுத்தான் அக்பருக்கே பிள்ளைச்செல்வம் கிடைச்சது. மகனுக்கு ஸலீம் என்று தான் பெயரும் வச்சார். பட்டத்துக்கு வரும்போதுதான் ஸலீமின் பெயர் ஜஹாங்கீர் என்று மாற்றப்பட்டது. இன்னும் கொஞ்சம் விலாவரியாப் பார்க்கணுமுன்னா இங்கே போய் பார்த்துருங்களேன்.

ஜ்யோதா அக்பர் சினிமாவில்கூட ஒரு கவாலி பாட்டு வருதே 'க்வாஜா மேரி க்வாஜா'ன்னு அதுகூட இந்த அஜ்மெர் மொய்னுதீன் சிஷ்டி பாபாவைப் பற்றித்தானாம்.
கடவுள் என்பதே நம்பிக்கைதான். நம்புனாதான் கடவுளே! நம்பிக்கையோடு இங்கே வந்து தங்கள் குறைகளைச் சொல்லி வழிபடும் மக்களுக்கு எதாவது நல்லது நடந்து அவுங்க துயரம் ஓரளவாவது குறைஞ்சால் அதைவிட மனித சேவை வேற என்ன இருக்க முடியும்? இன்ன மதக்காரர்கள் என்றில்லாம அனைத்து மதத்தினரும் வந்து வழிபட்டுப் போறாங்க. மத நல்லிணக்கம் என்பதைக் கண்ணால் கண்ட மகிழ்ச்சிதான் நமக்கும்.

வெளியே வந்து கோபால் தன் செல்லில் சில படங்களை எடுத்தார். அவ்வளவு நல்லா வரலை. அதான் சுட்டுப்போடவேண்டியதாப் போச்சு. தர்கா ஷெரீஃப், அவுங்க வலைப்பக்கத்துலே அருமையான படங்களையும் விவரங்களையும் கொடுத்துருக்காங்க. நேரம் இருந்தால் இங்கே பாருங்களேன். காலணிகளைப் போட்டுக்கிட்டுக் கிளம்பினோம். கூட்ட நெரிசலில் பிச்சைக்காரர்கள் (தொல்லை) அதிகம்தான். சொல்லி வச்சாமாதிரி எல்லோரும் கைக்குழந்தைகளோடு இருக்காங்க!

மறுபடி அதே ஆட்டோ சவாரி. வண்டி நிறுத்திய முற்றத்துக்குக் கொண்டு விட்டார். அதுக்குள்ளே அந்த இளைஞரும் பிரதீபும் வந்து சேர்ந்துட்டாங்க. இப்பத்தான் பெயரை விசாரிச்சேன். ஸையது அக்பர் அலி. மாணவர் பிபிஏ படிக்கிறார். இவர் மட்டும் இன்னிக்கு இங்கே நமக்கு உதவலைன்னா....... தரிசனம் ரொம்பக் கஷ்டப்பட்டு நடந்திருக்கும். நம்ம வேலையைச் சுளுவாக்க அந்த சாமிதான் இவரை அனுப்பிச்சாருன்னு இருந்துச்சு எனக்கு.

ஒரு தொகையை அன்பளிப்பாக் கொடுத்தப்ப மகிழ்ச்சியா வாங்கிக்கிட்டார். அப்போதான் ஞாபகத்துக்கு வருது பூத்தட்டு வாங்கினதுக்குக் காசு கொடுக்கலைன்னு.! அதையும் சேர்த்துக் கொடுத்துட்டு ஸையது அக்பர் அலியோடு ஒரு படம் எடுத்துக்கிட்டேன். 'உங்க ஃப்ரெண்ட்ஸ் யாராவது வர்றதா இருந்தால் தகவல் சொல்லுங்க ஆண்ட்டி. நான் அவுங்களுக்கு உதவி செஞ்சு தரிசனம் பண்ணி வைக்கிறேன்'னார். நல்லதுப்பான்னு செல் நம்பர் வாங்கி வச்சுக்கிட்டேன்.

இந்த ஊருலே இன்னும் பார்க்க என்ன இடம் இருக்குன்னு மெள்ள விசாரிச்சார் கோபால். அஜ்மெர் கோட்டை இருக்குன்னதும் கண்களில் சின்ன ஒளி. என் சின்ன உறுமலில் செய்தி கிடைச்சுருச்சு அவருக்கு:-)

ஆமாம். அஜ்மெர் நகரை நிறுவி கோட்டை கொத்தளமெல்லாம் கட்டுனது ராஜா அஜெய் பால் சௌஹான். அது ஏழாம் நூற்றாண்டு. அப்போ முதல் பனிரெண்டாம் நூற்றாண்டின் இறுதிவரை சௌஹான் அரச பரம்பரை மட்டுமே ஆண்ட தேசம். அதுக்குப்பிறகு முகமதியர் படையெடுப்பில் அது முகம்மது கோரியின் வசமாச்சு. அதன் தொடர்ச்சியா தில்லி சுல்தான்கள் ஆட்சிக்குக் கீழேயே சில நூற்றாண்டுகள் இருந்துருக்கு. மேவார், மார்வார் பகுதிகளைச் சேர்ந்த ராஜ்புத் ராஜாக்கள் மீண்டும் படையெடுத்து அவர்கள் வசமாக்கி ஆண்டார்கள். மறுபடி மொகலாயர்களுடன் போர். இப்படி ரொம்ப ரத்தம் சிந்துன பூமி இது. ஆனால் இந்த காலக்கட்டங்களில் ஏகப்பட்ட இந்துக்களை மதம் மாற்றிட்டாங்க. இப்ப இஸ்லாமியரும் இந்துக்களுமாச் சேர்ந்து வாழும் ஊராத்தான் இருக்கு. மதங்களைக் கடந்து தர்கா ஷெரீஃபுக்குப்போய் வழிபடும் மக்களைக் கொண்ட ஊருன்னு சொல்லலாம் அந்த வாழைப்பழ வண்டிக்காரரைத் தவிர!

நம்ம வண்டிக்குள்ளே பார்த்தால் எல்லாம் சரியாகப் பத்திரமா இருந்துச்சு. பார்க்கிங் சார்ஜா அம்பது ரூபாயும் ஆட்டோவுக்கு 200ம் கொடுத்துட்டுக் கிளம்பினோம். உம்மா & உப்பாவின் நினைவு மனசில் வந்துக்கிட்டே இருந்துச்சு. அநேகமா இப்ப அவுங்க உயிரோடு இருக்க வாய்ப்பே இல்லை. கடைசியாப் பார்த்தது இந்தியாவை விட்டு வந்தபோது..... அது ஆச்சு 30 வருசம்.

தொடரும்.........:-)