அட! வாங்க உள்ளே. உடம்பு எப்படி இருக்கு? நலமா?
முதலில் நம்மை வரவேற்பவர் கண்ட்ரி டாக்குட்டர். இவர்தான் தாய்க்கு மருந்து மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை செய்த 'தாய் தன்வந்திரி'! மருந்து அரைக்க எவ்வளோ பெரிய குழவியும் அம்மிக்கல்லும் வச்சுருக்காரு பாருங்களேன்!
சொகம்தானுங்கன்னு சொல்லிக்கிட்டுத் திரும்புனா...............வானத்துக்கும் பூமிக்குமா(ச்சும்மா ஒரு பேச்சுக்கு) நின்னு மிரட்டும் தோரணையில் த்வாரபாலகர்கள் வாசலுக்கு உட்புறம். வெவ்வேற இடங்களிலும் ரெவ்வெண்டு பேரா பக்கத்துக்கொன்னா நிக்கறாங்க. அச்சுலே வார்த்த மாதிரி ஒன்னுபோல இருந்தாலும் வண்ணங்கள் மட்டும் ஜோடிக்கொன்னுன்னு இருக்கு. இன்னும் கொஞ்சம் கவனிச்சுப்பார்த்தால் தலையில் கமுத்தி வச்சுருக்கும் ஹெல்மெட் டிசைன்கூட வெவ்வேறதான். க்ரீடமுன்னு சொல்லலாமுன்னா ராஜா முதல் காவலாளிவரை கிரீடம் வச்சுருப்பாங்களா என்ன? இல்லே.... எல்லோரும் இந்நாட்டு மன்னர் வகையோ?
இந்த வர்ணம் பற்றியும் ஒன்னு சொல்லிக்கணும்.இங்கே இதுக்கு முன்னே இருந்த அரசர்கள் எல்லாம் கலர்கோட் ( colour code) போல ஆளுக்கொன்னு நிறமுன்னு பிரிச்சு வச்சுருந்தாங்க. அவுங்க சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் ச்செடிகளும் கூட அந்தந்த நிறத்தில்தான்.
முதலாம் ராமா ----பச்சை
ரெண்டாம் ராமா --வெள்ளை
மூன்றாம் ராமா-- மஞ்சள்
நான்காம் ராமா --- நீலம்
அஞ்சாம் ராமாவுக்கு இந்த ஐடியா பிடிக்கலையோ என்னவோ.....நிறங்களைப்பற்றி ஒன்னும் காணோம். ஆனா இவரோட திட்டம் வேற ஒன்னு. பெரிய குடும்பஸ்த்தர். 77 பிள்ளைகள். 44 பொண்ணு 33 பையன். இவர் கலைப்பொருட்களில் ஆர்வமுள்ள கலைஞர். பலநாடுகளில் இருந்து அலங்காரப்பொருட்களைக் கொண்டுவந்து கோவிலில் அடுக்கி வச்சுருக்கார்.
தமிழ்நாட்டு அரசர் ஒரு கலர் கோட் வச்சுருப்பது யாருக்காவது நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல
சரி சரி இது இருக்கட்டும். கொஞ்சூண்டு சரித்திரம் பார்க்கலாம். இந்த அரண்மனையைக் கட்டுனவர் அரசர் முதலாம் ராமா அவர்கள். வருசம் 1782. இங்கே வருமுன் தலைநகரம் தொன்புரி என்ற இடத்தில் இருந்துச்சு.
இது சாவ் பராயா ஆற்றின் அக்கரை. அதுக்கும் முன்னால் அயுத்தியாதான் தலைநகரம். (அடடா..... என்ன ஒரு பொருத்தம் பாருங்க. ராமன் இருந்த இடம் அயோத்தியா இல்லையோ!) பர்மாகூட நடந்த போரினால் அப்ப இருந்த அரசர் டாக்சின் அயுத்தியாவை விட்டு வெளியேறும்படியா ஆச்சு. இவர்தான் தொன்புரி வம்சத்தின் கடைசி அரசர். சக்ரி வம்சம் அதுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்துச்சு. அவுங்கதான் பட்டம் சூட்டிக்கிட்டதும், ராமா ன்னு பெயர் வச்சுக்கிட்டவங்க. (இப்போது இருக்கும் அரசர் ஒன்பதாம் ராமா)
அரண்மனை வளாகம் மொத்தம் 60 ஏக்கர். இங்கே ராஜகுடும்பத்துக்குன்னு வசிக்கும் மாளிகைகள் கட்டுனாங்க. அரசாங்க அலுவல்கள் பார்க்கத் தனி இடங்கள். அரசவை இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா கட்டிடங்கள் வளர்ந்துகிட்டே போச்சு. சாமி கும்பிட ஒரு கோவில் கட்டி அதுலேதான் மரகத புத்தரைப் பிரதிஷ்டை செஞ்சாங்க. இந்தக் கோவிலுக்கு WAT PHRA KAEW ன்னு பெயர். வாயிலே நுழையலைன்னா பரவாயில்லை. எமரால்ட் புத்தர்ன்னு சொன்னால் ஆச்சு.
மூணு வாசல் உள்ள முகப்பு. சுத்துச்சுவர்கள் எல்லாம் கண்ணாடிச்சில்லுகள் பதிச்சு அழகான வர்ணங்களால் டிஸைன் செஞ்சுருக்காங்க. சுத்திவர அடிப்பாகம் முழுக்க தங்க கருடன்கள் கையில் ரெவ்வெண்டு சர்ப்பம் பிடிச்சுக்கிட்டு ஒன்னோட ஒன்னு கை கோத்தமாதிரி நிக்குதுங்க.
முகப்பில் நடுவாசலுக்கு வெளியே ஒரு பெரிய வெண்கலக் கும்பாவில் புனித நீர் வச்சுருக்காங்க. பக்கத்தில் தாமரை மொட்டுகள் இரு தட்டுகளில் அந்த பூவின் காம்பைப்பிடிச்சு அந்த புனித நீரில் தொட்டு அந்த நீரைத்தலைக்குத் தெளிச்சுக்கணும். கோவிலுக்கு வந்த புண்ணீயம் நம்ம கணக்கில் ஏறும் அதே சமயம் செஞ்ச பாவங்கள் எல்லாம் போச்!
கம்போடியாவில் இருந்து கொண்டுவந்த வாலில்லா சிங்கங்களில் ஒன்னு.
இடப்பக்கம் உள்ள வாசலில் நுழைஞ்சு அவரை தரிசனம் செஞ்சுக்கிட்டு வலது பக்க வாசலில் வெளி வரணும். உடைக்கட்டுப்பாடுகள் இருக்கு. அதெல்லாம் நாம் கவலைப்படவேண்டியதில்லை. வெள்ளைக்காரர்கள் தான் கவனிக்கணும். உடலை மூடும் உடை சரியாக இல்லாதபட்சத்தில்
கோட்டை வாசலிலேயே விஷயத்தை விளக்கிச் சொல்லிடறாங்க. அங்கே கிடைக்கும் சராங்கை வாங்கி இடுப்பில் கட்டிக்கொண்டும் உடலில் போர்த்திக்கொண்டும் வரலாம். உங்க பாஸ்போர்ட்டையோ இல்லை க்ரெடிட் கார்டையோ அங்கே கொடுத்துட்டு துணிகளை வாங்கிக்கலாம்.
மரகதமுன்னு சொல்றாங்களே தவிர இவர் அசல் மரகதக் கல்லில் செய்யப்படவில்லை. பச்சை நிறமுள்ள ஜேட் கல்லில் செதுக்கி இருக்காங்க. 66 செ.மீ உயரம். அகலம் (அவர் ரெண்டு முழங்கால்களுக்கிடையில்) 48.3 செமீ. புத்தர் மறைவுக்குப்பின் ஐநூறு ஆண்டுகள் கழிச்சு இவரை உருவாக்கினாங்களாம். இந்தியாவில் செதுக்கப்பட்டதோன்னு கூட ஒரு ஐயம் இருக்கு. ஒரு சமயம் நடந்த உள்நாட்டுப் போரில் இருந்து இவரைக் காப்பாத்தனுமுன்னு சிலோனுக்கு அனுப்பிட்டாங்களாம். அதுக்குப்பிறகு 457 வது வருசம் பர்மா அரசர் அனுருத் சிலோனுக்கு அவரது ஆட்களை அனுப்பி, எங்க நாட்டுலே புத்தமதத்தைத் தழைக்க வைக்கப்போறோம். சிலையை எங்களுக்குத் தாங்கன்னு வேண்டுனதும் அவுங்க எடுத்துக் கொடுத்துருக்காங்க. பர்மாவுக்குப் புறப்பட்ட கப்பல் நடுவழியில் புயலில் சிக்கி, சிலை எப்படியோ கம்போடியா ( காம்போஜம்) போயிருச்சு. தாய்கள் கம்போடியா அங்கோர் வாட்டைக் கைப்பற்றியதும் சிலை வந்து சேர்ந்துச்சு தாய்லாந்துக்கு. இந்த கலாட்டாவில் இவரை யாரோ சுண்ணாம்பும் மண்ணும் கலந்த கலவையில் மறைச்சுவச்சு அது இறுகி ஒரு பாறையா ஆகி இருக்கு.
1454வது வருசம் அந்த பெரிய காரைப்பாறையில் மின்னல்தாக்கி அது பிளந்துருக்கு. அதுக்குள்ளே இவர் இருந்தததைக் கண்டுபிடிச்சாங்களாம் புத்த பிக்குகள். பூமியில் புதைச்சு பசுவின் காலிடறி, இல்லே அரசனின் ரதம் இடறி, அதுவும் இல்லேன்னா கனவில் இன்ன இடத்தில் புதையுண்டு இருக்கேன்னு சேதி அனுப்பி இப்படியெல்லாம் நாம் கேள்விப்பட்ட 'கதைகளா' இல்லாம இங்கெல்லாம் மின்னல் தாக்கியோ இடி இறங்கியோ வெளிப்பாடுகள் நடக்குது. முந்திகூட அஞ்சரை டன் தங்க புத்தரும் இப்படித்தானே வெளிப்பட்டார் இல்லையா?
அரசர் தலைநகரை மாற்றும்போதெல்லாம் இவரும் கூடவே அயூத்தியா, தொன்புரி, ரத்னகோஸின்னு மாறிக் கூடவே வந்துருக்கார். ரத்னகோஸின் என்பது பாங்காக்கின் பழைய பெயர்.
வருசத்து மூணு முறை இவருக்கு வெவ்வேற உடுப்புகள் போட்டு அலங்கரிக்கறாங்க. நினைச்சபோது உடுப்பை மாற்றிட முடியாது. அரண்மனை ஜோசியர்கள்/ பண்டிதர்கள் நல்ல நாள், முகூர்த்தம் எல்லாம் பார்த்துக் கொடுக்கணும்.
கோடைக்கு கூம்பு க்ரீடம், கழுத்திலிருந்து கால்வரை தங்க நகைகள்
குளிர்காலத்துக்குத் தங்கக்கம்பிகளாலும் தங்க மணிகளாலும் பின்னிய மெல்லிய வலைபோன்ற கம்பி உடை
மழைகாலத்துக்கு சஃபையர் கற்கள் பதிச்சு எனாமல் வேலைப்பாடுகளுமா உள்ள தங்கத்தொப்பி, இடதுதோளை மூடி இருக்கும் தங்க உடுப்பு பாதங்களில் தங்க ஆபரணம் இப்படி. வலதுதோள் மட்டுமே பச்சை நிறத்தைக் காமிக்குமாம்.
கடிகாரச்சுற்றில்: கோடைகால உடை, எமரால்ட் புத்தர் அபிஷேகத்துக்கு முன், குளிர்கால உடை, மழைக்கால உடை.
இந்தக் கோவிலைப் பற்றிய ரெண்டுவருசத்துக்கு முந்தி எழுதுன இடுகைகளின் சுட்டிகள் இதோ
அரண்மனையில் ஒரு மரகதம்
மரகத புத்தர்
கருவறைக்குள் படம் எடுக்க அனுமதி இல்லை. ஆனால் வெளிவராந்தாவில் இருந்து zoom செய்து எடுத்த படம் இது.
இங்கே எழுதியுள்ள விவரங்கள் கோவில் வராந்தாவில் விற்கும் தலபுராணம் ( 20 பத்) புத்தகத்தில் இருந்து பெறப்பட்டவை. மேலும் முக்கால உடை அலங்காரங்கள் படங்கள் தனியாக ஒரு செட் ( 4 படம்) 80 பத்துக்கு கிடைக்குது. விற்கும் தொகை முழுசும் கோவிலைப் புதுப்பிக்கவாம். நம்மாலான கைங்கர்யம்!
அரண்மனையில் இன்னும் ஏராளமாப் பார்க்கணும். ஒவ்வொன்னாப் பார்த்துக்கிட்டே போகலாம், வாங்க.
தொடரும்............................:-)
Friday, July 30, 2010
அரண்மனை ........................(தாய்லாந்து பயணம் பகுதி 10)
Posted by துளசி கோபால் at 7/30/2010 02:46:00 PM 34 comments
Thursday, July 29, 2010
இப்படிக் கூடவா??? அட ராமா!!!!........................(தாய்லாந்து பயணம் பகுதி 9)
அறைக்குள் வந்தால்....குளிச்சு முடிச்சு ஜம்முன்னு ரெடியாகி இருக்கார் கோபால். இண்டியன் செட்டில்மெண்ட்ன்னு ஒரு இடம் இருக்கு. அங்கே போகலாமுன்னு அவருக்கு ஒரு எண்ணம். போகட்டும் அவர் 'ஆசை'யை ஏன் கெடுப்பானேன்னு அடுத்த ஷிஃப்ட் ஊர்சுத்தலுக்குத் தயாரானேன். (கால்லே சக்கரம்தான் போங்க)
டாக்ஸியில் போயிறலாம். ரொம்பப் பக்கத்துலேதான் இருக்கு. மிஞ்சிமிஞ்சிப்போனா ஒரு நாப்பது பத் ஆகுமாம். போக்குவரத்து வரிசையில் மாட்டி, நின்னு நின்னு போனதும் டபுளா எம்பது. அதுவும் ஒரு சிக்னல்கிட்டே நின்னப்பவே நாம் இறங்க வேண்டியதா ஆனது. இதைக் கடந்தால் ஊர்ந்துதான் போகணுமாம். வேணாம்...நடந்தே போகலாமுன்னு இறங்கிக்கிட்டோம்.
எங்கே பார்த்தாலும் நடைபாதைக் கடைகள். மனுசர் நடக்க பாதையே இல்லை. தள்ளும் முள்ளுமாப் போறோம். அரேபியக் கடைகள், பர்தா போட்ட பெண்கள், ஹூக்கா பிடிக்கும் ஆட்கள் இப்படி ஜேஜேன்னு............ கூட்டம். பாண்டி பஸாருக்கு வந்துட்டேனோன்னு ஒரு மயக்கம். யானை பொம்மைகளையும் படங்களையும் சுவரில் தொங்கவிடும் சித்திரத்துணிகளையும் (எல்லாம் யானையோ யானை) பார்த்தால்தான் இது வேற ஊருன்னு தெளியும். ரெஸின்லே செஞ்ச கருடனையும், ஒரு பச்சைப் புள்ளையாரையும் கொலுவுக்காக வாங்கிக்கிட்டு நடையைக் கட்டுனா..... பழவண்டிகள். சுத்தமா நறுக்கி அழகா அடுக்கி வச்ச மாம்பழத்துண்டுகள், பலாச்சுளைகள் மற்றும் ரம்புதான், மங்குஸ்தான், பேரீச்சைன்னு இருக்கு. மாவும் பலாவும் நம்ம ச்சாய்ஸ். அடுத்து ஒரு இளநீரை வாங்கிக் குடிச்சேன். தேங்காய் வழுக்கலை அறையில் போய்த்தான் தின்னணும். இன்னும் கொஞ்சம் வேடிக்கை பார்த்து நடந்தப்ப தோஸா கிங் கண்ணுலே பட்டுச்சு. ராச்சாப்பாடு அங்கே முடிஞ்சது. அளவுக்கு மீறிய பணிவுடன் பரிமாறினாங்க.
டாட்டு போட்டுவிடும் கடைகள், கலைப்பொருட்கள். பஞ்சடைச்ச விலங்குகள் இப்படி ஏராளம். நடந்து நடந்து 'நானா' ரயில்நிலையத்துக்கு வந்துருந்தோம். பேசாம பறக்கும் ரயிலில் பறக்கலாமுன்னு படியேறி ரயில் நிலையம் போனோம்.
தானியங்கி இயந்திரத்தில் பயணச்சீட்டு ரெண்டு, நாற்பதே பத். நானாவில் இருந்து ரெண்டாவது நிலையம் சிட் லோம்( Chit lom). தானியங்கிப் படியேறி நடைமேடைக்குப் போனால் படுசுத்தமான நிலையம். மூணே நிமிசத்தில் நம்ம சிட்லோமுக்கு வந்தாச்சு. நம்ம ஹொட்டேல் முற்றத்தில் முடியும் மேம்பாலம் வழியா இறங்கி அறைக்குப்போனோம்.
இன்னிக்கு ஏகப்பட்ட நடை. கால்கள் கெஞ்சுது. நாளைக்கும் நீண்டநாள் என்ற நினைப்போடு உறங்கி மறுநாள் காலை ஒரு ஒன்பதே முக்காலுக்கு ஆற அமரக் கிளம்பினேன். மூணு நாளில் ரெகுலர் கஸ்டமரா ஆகி இருக்கேன் பிரம்மனுக்கு. நின்னு பார்த்து சேவிச்சுட்டு கொஞ்ச தூரத்தில் நிற்கும் டுக் டுக் ஓட்டுனரிடம், 'க்ராண்ட் பேலஸ்' க்கு என்ன சார்ஜ்ன்னா..... முப்பது பத். நெசமாவா? ஆமாம். வாங்கன்னார். வண்டியில் போகும்போது..............
"இங்கே பக்கத்துலே ஒரு நகைக்கடை இருக்கு. ஒரு பத்து நிமிஷம் அங்கே நிறுத்தறேன். நீங்க நகை வாங்கணுமுன்னா வாங்கிக்கலாம். நல்ல கடை விலையும் நல்ல மலிவு"
" எனக்கு நகை ஒன்னும் வாங்க வேண்டாம். நேரா க்ராண்ட் பேலஸ் போயிருங்க"
சடார்ன்னு கைகூப்பி வணங்கி 'ஒரு பத்து நிமிசம் நின்னுட்டுப் போயிடலாம். எனக்கு இலவசமா அஞ்சு லிட்டர் பெட்ரோல் கிடைக்கும்' னு சொல்லி ஒரு கூப்பானை/ வவுச்சர் காமிச்சார்.
போயிட்டுப்போகுது. நகையைப் பார்க்கக் கசக்குதான்னு நினைச்சு சரின்னேன்:(
நகைக்கடை வாசலில் பாரம்பரிய உடையில் அழகான இளம்பெண்கள்,சரவணா ஸ்டோர்ஸில் வாசலில் நின்னு வரவேற்பதைப்போல! கையில் கல்கண்டு தட்டு மட்டும் மிஸ்ஸிங்
கடைக்குள் காலடி வச்சதும் 'நளினி' என்ற விற்பனையாளர் நவரத்திங்கள் பாலீஷ் பண்ணுவதையும், நகைகளில் கல் பதிப்பதையும் காமிச்சு விளக்கிட்டு ஷோரூம் கொண்டு போனாங்க. 'வேடிக்கை மட்டும்' பார்த்துட்டு வெளியே வந்துட்டேன். ஒரு சஃபையர் நெக்லேஸ் ரொம்ப நல்லா இருந்துச்சு. கோபாலைக் கூட்டிட்டுவந்து காமிக்கணும். மகளுக்கு வாங்கலாம், பிறந்தநாள் பரிசாக. கடை 'அஞ்சு மணி' வரை திறந்திருக்குமாம்.
பெட்ரோல் கூப்பான் கிடைச்சதான்னா..... கிடைச்சுருச்சுன்னு காமிச்சார். எங்கெங்கோ சுத்தி வளைச்சு க்ராண்ட் பேலஸை நோக்கிப்போகும் வழியில் ஒரு வாய்க்காலையொட்டின தெருவில் திரும்பினோம். ஓட்டுனருக்கு செல்லில் ஒரு அழைப்பு. பேசிக்கிட்டே ஓட்டறார். ரெண்டு பக்கமும் கடைகள் உள்ள அகலமான வீதி. 'டுக்டுக் இருக்கைகளை மாத்திக்கணும் இப்பத்தான் கொண்டுவரச்சொல்லி இருக்காங்க. இது என்னோட கூட்டாளி. இவர் வண்டியில் ஏறிக்குங்க. க்ராண்ட் பேலஸில் கொண்டு விட்டுருவார். உள்ளே பார்த்து முடிச்சதும் உங்களை ஹொட்டேலில் கொண்டு விட்டுருவார்னு இன்னொரு வண்டிக்கு மாறவேண்டியதாப் போயிருச்சு.
டுக்டுக்....கொஞ்சம் உஷாரா ரெண்டு பேரையும் ஒரு க்ளிக் பண்ணி வச்சுக்கிட்டேன்.
அரண்மனையை நெருங்கறோமுன்னு அரசர் அரசியின் படங்கள் கட்டியம் கூறுது. எங்கே பார்த்தாலும் விதவிதமான போஸ்களில் காட்சி கொடுக்கறாங்க. கோட்டை வாசலுக்குப் போய்ச் சேர்ந்தாச்சு. மணி 11.10. ரெண்டு மணிக்கு வந்து பிக்கப் பண்ணறேன்னு சொன்ன காங்( ஓட்டுனர் பெயர்)கிடம் மூணரைக்கு வந்தால் போதுமுன்னு சொல்லி திருப்பி அனுப்பிட்டேன்.
அடடா.... இன்னும் முக்காமணி நேரம்தானே இருக்கு. பனிரெண்டுக்கு பூஜை நேரம். பிக்குகள் எல்லாம் பூஜைக்கு வந்துருவாங்க. ஆனா ஒரு மணிக்குத் திறந்துவாங்க. அதுவரை நீங்க வெய்யில் நிக்கவேணாமேன்னு 'அன்போடு' சொன்ன கோட்டைவாசல் பணியாளர் ஒருவர், எனக்கு ஒன்னே முக்கால் மணி நேரம் போக்க ஒரு ஐடியாவை எடுத்துவிட்டார்.
ஓரமா நின்னுருந்த டுக்டுக்காரரைக் கூப்பிட்டு, பக்கத்துலே இருக்கும் ரெண்டு மூணு புத்தர் கோவில்களுக்குக் கொண்டுபோய்க் காமிச்சுட்டு சரியா ஒரு மணிக்கு இங்கே கொண்டுவந்துறணுமுன்னு 'ஆர்டர்' போட்டுட்டு என்னிடம் திரும்பி, வெறும் 20 பத் மட்டுமே கொடுங்க. கூடுதலாக் கொடுக்கவேணாமுன்னு 'பரிவோடு' சொன்னவர் 'இந்தக் கோவில்களுக்குப் போகும் வழியில் லீலான்னு ஒரு நகைக்கடை இருக்கு. பாங்காக் நகரிலே சிறந்ததும் விலை மலிவானதும் இது மட்டும்தான். அதையும் ஒரு பார்வை பார்த்துட்டு வாங்க'ன்னார்.
அட! சுற்றுலாப்பயணிகளுக்கு இவ்வளவு பரிவும் பாசமுமான்னு புல்லரிச்சுப் போயிட்டேன்.
இந்தக்கோவிலை ஏற்கெனவே பார்த்திருக்கோமேன்னு நினைக்கும்போதே, 'ஆமாம். வா வா' ன்னு அமைதியாக் கூப்பிடறார் அந்த நிற்கும் புத்தர். வேற ஒரு வாசல்வழியா இப்போ நுழைஞ்சுருக்கேன். வாழை இலைபோட்ட சாப்பாடு ஒருத்தருக்கு!!!!
நின்னு நிதானமா இன்னொருக்கப் பார்த்துக்கிட்டே மெல்ல வேறொரு வழிக்கு போயிருக்கேன் போல!. அங்கே ராணுவ உடை மாதிரி ஒன்னு போட்ட உருவச்சிலை. ஒரு கையில் உருவிய வாள். மற்றொன்னில் கூஜாக்குடுவை. காலருகே சேவல்கள்.ஸ்ட்ரா வச்ச இளநீர்கள். சிலைக்குப்பின்னால் இருக்கும் இன்னொரு சந்நிதி. த்வார பாலகராய் துப்பாக்கி ஏந்தி அமர்ந்திருக்கும் வீரர், தூணில் சுத்துன பாம்பு, ஊதுபத்தி ஏற்றி வழிபடும் பக்தர்கள், பக்கத்து அரசமர மேடையில் அமர்ந்து கதைபேசும் ஆட்கள் இப்படி...............
யார் என்ன ஏதுன்ற விவரத்தை அந்த மரத்தடி ஆட்களிடம் கேட்டால்.......'பர்மாவுடன் நடந்த யுத்தத்தில் நாட்டைக் காப்பாத்துன அரசர்' என்றதைத்தவிர வேறொரு தகவலும் கிடைக்கலை.
லீலாவை எட்டிப் பார்த்துட்டு நகரின் பல்வேறு இடங்களுக்கு 'உலா' போய்க்கிட்டே இருக்கேன். அடிக்கும் வெயிலுக்கு டுக்டுக் பயணத்தில் வரும் காத்து இதமா இருக்கு. திடீர்னு மணி பார்த்தால் ஒன்னு ஆகப்போகுது. இன்னொரு ஒரே ஒரு இடம் மட்டும் கூட்டிப்போய்க் காமிக்கிறேன்னு சொல்லிக் கெஞ்ச ஆரம்பிச்ச டுக்டுக்வாலாவிடம் 'இந்த நிமிசமே அரண்மனை போகணும்'னு கொஞ்சம் கடுமையாச் சொன்னவுடன்.............. அடுத்த பதினைஞ்சாவது நிமிசம் அரண்மனை வாசலில் நுழைய முடிஞ்சது.
நுழைவுக் கட்டணம் 350 பத். வாசலில் நிற்கும் கைடு சுற்றிக்காட்ட 300 கேட்டார். வேணாமுன்னு மறுத்துட்டு உள்ளே போனால் 'எங்கே பார்த்தாலும்' ஏகப்பட்டக் கூட்டம்.
அடக் கூட்டுக் களவாணிகளா!!!! நாம் நகை வாங்கினால் கிடைக்கும் கமிஷனுக்கும், பார்வையிட்டால் வரும் அஞ்சு லிட்டர் பெட்ரோலுக்கும் நமக்கு பல்பு கொடுத்துருக்குதுங்க பாருங்க:(
முக்கிய PIN குறிப்பு: பார்வையாளர் நேரம் காலை 8.30 முதல் பகல் 3.30 வரை. வாசலில் கிடைக்கும் போலித் தகவல்களைக் கண்டு ஏமாற வேண்டாம்.
தொடரும்..........................:-))))
Posted by துளசி கோபால் at 7/29/2010 06:04:00 PM 23 comments
Labels: Bangkok | அனுபவம்
Wednesday, July 28, 2010
தாய்லாந்து முழுசும் ஒரே நாளில் பார்க்க........................(தாய்லாந்து பயணம் பகுதி 8)
'புன்னகை'யுடன் இன்னிக்குப் பூராவும் சுத்தப்போறேன். நேத்தே இதுக்கான அடிக்கல் நாட்டியாச்சு. பதினொரு மணிக்கு வந்துடறேன்னு சொன்னாங்க. டேனி ரொம்ப உற்சாகமா வரவேற்றார். முதலில் டேனியின் அண்ணன் படிக்கும் பள்ளிக்கூடத்தை எட்டிப் பார்த்துட்டு போகலாமுன்னு அவுங்க அம்மா
சொன்னதும் மகிழ்ச்சி ரெட்டிப்பா ஆயிருக்கு அவருக்கு. பள்ளிக்கூடத்துக் கோடை விடுமுறைக் காலம் அங்கே.
'உங்க சம்மர் ஸ்கூலுக்கு இன்னிக்கு லீவா'ன்னா.... பதிவர் வருகையை முன்னிட்டுப் பள்ளிக்கூடம் லீவு:-)))))
சீக்கியர்கள் நடத்தும் பள்ளி இது. தாய் சிக் இண்டர்நேஷனல் ஸ்கூல். பெரிய வளாகம். செக்யூரிட்டியிடம் சொல்லிட்டு உள்ளே போகணும். நல்ல பாதுகாப்பு. விடுமுறை காலமுன்னாலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விசேஷ வகுப்புகள் நடக்குதாம். இடைவேளை நேரமுன்னு பசங்கள் விளையாடிக்கிட்டு இருந்தாங்க. அதுலே அண்ணனைப் பார்த்ததும் எங்ககூட வராம அங்கேயே வேடிக்கை பார்க்க நின்னுட்டார் டேனி.
அலுவலகம் வரை போனோம். ப்ரின்ஸியிடம் ஏதோ கேட்க சாந்தி உள்ளெ போனாங்க. நான் அக்கம்பக்கம் சுத்திப் பார்த்தேன். அருமையான கட்டிடங்கள். மொட்டைவெயிலில் பசங்க விளையாடவேணாமேன்னு வலைத்துணியில் கூரை போட்டு வச்சுருக்காங்க. நல்ல ஐடியா!!!!
ஆசிரியர்கள் யார் யார் என்னென்ன பிரிவுன்னு அவுங்க போட்டோக்களுடன் ஒரு தகவல் பலகை. 'தாய்' சொல்லித்தரும் ஆசிரியரைத்தவிர பாக்கி எல்லோருமே இந்தியர்கள். முக்கால்வாசிப்பேர் வட இந்தியர்களாவும் காவாசி தென்னிந்தியர்களுமா இருக்காங்க. ரெண்டு பேர் கேரளர்கள்!!!!
கட்டிடமும் சூழ்நிலையும் அமைப்புமே சொல்லுது கல்வித்தரம் குறைவில்லைன்னு. கேம்ப்ரிட்ஜ் பாடத்திட்டமாம்.
ஆசிரியர் குடி இருப்பு
பள்ளிக்கூட வகுப்பறைக் கட்டிடங்கள். ஹால் இதையெல்லாம் விட என் கண்ணைக் கவர்ந்தது அங்கிருந்த அழகான அடுக்ககம். ஆசிரியர்களுக்கான இருப்பிடங்களாம்!!!!! இதுக்குள்ளே சாந்தி வந்துடாங்கன்னு கார் நிறுத்தம் வரும்போதே கண்களில் கண்ணீர் பொங்க விம்மும் உதடுகளோடு டேனி எதிரே ஒரு காலை விந்தி நடையும் ஓட்டமுமா வர்றார். கீழே விழுந்துட்டாராம். அச்சச்சோ..........வீரன் டேனிக்கு வலிக்குமா என்ன? அம்மா 'ப்ரேவ் பாய்'ன்னதும் நொடியில் கண்ணுக்குள்ளே போயிருச்சு அங்கிருந்த வந்த கண்ணீர்!!!! அண்ணனைத்தான் பார்க்க முடியலை. விளையாட்டு நேரம் முடிஞ்சு வகுப்புக்குப் போயிட்டாராம்.
கிளம்பி எரவான் ம்யூஸியம் வழியா வந்து 'ச்சாவ் ப்ராயா' நதிப் பாலத்தைக் கடந்து 13297 சுகும்விட் ரோடில் போய்க்கிட்டே இருக்கோம். ம்யூஸியத்துக்குள்ளே போய்ப் பார்க்கவேண்டிய அவசியத்தை எனக்கு வைக்காமத் தேவையான விஷயத்தை வெளியிலேயே வச்சுருக்காங்க புண்ணியவான்கள்.
சரியா 33 கிமீ தூரத்தில் 'ஏன்ஷியண்ட் சயாம்' நுழைவுப் பாலம் வந்துருது. பெரிய இடமாத்தான் இருக்கணும். யானைக்கொடி பறக்கும் வளாகத்தில் நுழைஞ்சோம். கார் பார்க்கில் வண்டியைப் போட்டுட்டு உள்ளே போனோம். கட்டணம் உள்ளுர்க்காரர்களுக்கும் வெளியூர்க்காரகளுக்கும் வெவ்வேறு. ( இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. எங்க நியூஸியில் இப்படி இல்லை . எல்லாருக்கும் ஒரே ரேட்தான். கொள்ளை அடிச்சுருவாங்கன்னு பொருமுவேன் எப்போதும்)
வரிசையா கோல்ஃப் கார்ட் நிக்குது. 2, 4, 6 ன்னு பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மணிக்கு இவ்வளொன்னு கட்டணம். ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு வடகை கட்டினோம். நம்ம டிரைவிங் லைசன்ஸை வாங்கி வச்சுக்கறாங்க . உள்ளே போலீஸ் பிடிக்காது:-)))) பேட்டரியால் ஓடும் வண்டி. எது 'ஆன், ஆஃப், ரிவர்ஸ், ப்ரேக்'ன்னு ஒரு நிமிஷம் விளக்கினார் அங்கிருந்த உதவியாளர். சாந்திதான் நமக்கு ஓட்டுனர். டேனிதான் 'ரைட் ரைட் போலாம்' சொல்லும் நடத்துனர். நான் வெறும் பயணி. ச்சீச்சீ..... ஃபோட்டோகிராஃபர் னு கௌரவமாச் சொல்லிக்கலாம்.
ட்ராம் மாதிரி ஒன்னு இருக்கு. அதுக்கு ஒரு கட்டணம் கட்டி அதுலேயே போய் சுற்றிப் பார்க்கலாம். இதுலே போனால் நம் விருப்பத்துக்கு நேரம் செலவிட முடியாது. க்ரூப் டூர் போறது போல:( சைக்கிள் ஓட்டத் தெரிஞ்சா சைக்கிளை வாடகைக்கு எடுத்துக்கலாம்.
320 ஹெக்டேர் நிலத்தை வளைச்சு எழுப்புன பழங்கால நகரம் இது. இப்போதைக்கு 200 ஏக்கரில், தாய்லாந்தில் இருக்கும் 116 முக்கிய இடம்/ கோவில்களைக் கட்டி வச்சுருக்காங்க. வெறும் மாடல்னு சொல்ல முடியாது. அசலுக்கும் நகலுக்கும் வித்தியாசம் கொஞ்சம்கூட இல்லை. கொஞ்சமே கொஞ்சம் அளவு சின்னது. ஆட்கள் நுழைஞ்சு பார்க்கலாம்.
மூணுவிதமான நிர்மாணம். அச்சு அசலா செஞ்சு வச்சுருக்கும் வகை, பழைய இடங்களில் இருந்து அப்படியே கல்கல்லாகப்பெயர்த்து எடுத்துவந்து முன்னே இருந்த அதேமாதிரி மீண்டும் அந்தக் கற்களைக்கொண்டே கட்டிவச்சுருக்கும் வகை, க்ரியேடிவ் டிஸைனாக கலைஞர்களைக் கொண்டு கட்டிவச்சவை சிலதுன்னு இருக்கு.
ராமாயணத் தோட்டமுன்னு ஒன்னு ஒரு நீர்நிலைக்குள் இருப்பது அற்புதம். எல்லாமே வெள்ளை நிறமான சிலைகள். ராம ராவண யுத்தம், ஹனுமன் கடலைத் தாண்டிப் போகும்போது நிழல்பிடி பூதத்தோடு சண்டையிட்டது, சீதா தீக்குளித்தல், அஸ்வமேத யாகத்துக்கான குதிரையுடன் லவனும் குசனும் இப்படி முக்கிய காட்சிகள் எல்லாம் பலே ஜோர்.
ரெண்டு பக்கமும் அழகான மரங்கள் அடர்ந்த தார் ரோடு போட்டு வச்சுருக்காங்க. அங்கங்கே வழிகாட்டும் தகவல்கள். காட்சிக்குண்டான விவரங்கள் இப்படி எல்லாமே அருமை. பழைய அயூத்தியா நகரத்திலிருந்து கொண்டுவரப்பட்டவை பிரமாதம். 1767 வது ஆண்டு பர்மாவின் தாக்குதலுக்கு உட்பட்டு அழிஞ்சுபோன அயூத்தியாவைக் கண்முன்னே பார்க்கும்போது மனசுக்குக் கொஞ்சம் சங்கடம்தான். இப்போதும் வழிபாடும் நடக்கும் கோவில்களும், இடிபாடுகளுமா வேற ஏதோ உலகத்தில் இருப்பது போல அருமை.
மொத்த வளாகமே தாய்லாந்து நாட்டை முழுசா வரைபடத்தில் பார்க்கும் விதத்தில் அமைஞ்சு இருக்கு. கட்டிடங்கள் காட்சிகள் எல்லாம் ஏறக்கொறைய ஒரிஜனலா தாய்லாந்து நாட்டில் எந்த பகுதியில் இருக்குமோ அதே போல இங்கேயும்!!!! பருந்துப் பார்வையில் பார்க்க முடிஞ்சா அட்டகாசமா இருக்கும்.
தரையில் பாம்பு, மலையில் பாம்பு நதியில் பாம்புன்னு பாம்புன்னா அப்படி ஒரு ப்ரேமைன்னு தான் நினைச்சுக்கணும். கைப்பிடிச் சுவர்களில் எல்லாம் அஞ்சுதலைப்பாம்பு இருக்க அஞ்சாமல் படியேறி விறுவிறுன்னு போறார் டேனி. பாவம் குழந்தை. அஞ்சுவயசுப் பாலனை நம் ஆட்டத்துக்கு அலைக்கழிக்கும்படியா ஆச்சேன்னு எனக்கு அப்பப்ப வரும் எண்ணம், ' ஐயோ.... அருமையா இருக்கு'ன்னு அவர் அப்பப்பச் சொல்வதைக் கேட்டால் காணாமப்போயிருது. எனக்கேத்த ஜோடி:-))))) கள்ளம் புகாத உள்ளத்தில் எல்லாத்தையும் ரசிக்கும் சுபாவம் ரொம்பவே பிடிச்சுப்போச்சு எனக்கு.
இந்த இடத்துக்கு மட்டுமேன்னு ஒரு நாள் பூராவும் செலவு செய்யலாம். பதிவும் ஒரு ஆறேழு போடலாம். அவ்வளோ இருக்கு. ஆனா கொளுத்தும் வெய்யிலில் சுற்றுவது கொஞ்சம் அசதிதான். எழுத்திலோ சொல்லியோ முழு அனுபவத்தையும் விளக்க முடியாதுன்னு படங்களா ஒரு ஐந்நூற்றிச் சில்லறை எடுத்துவச்சேன். 'கண்டவர் விண்டிலர்' இங்கேயும் செல்லும்.
மிதக்கும் கடைவீதிக்குள்ளே நுழைஞ்சு கடைகளைப் பார்த்துக்கிட்டே நடந்தும் வரலாம். இன்னொரு பக்கம் நதியில் நிற்கும் ஓடங்களை ரசிக்கலாம். பத்துமலை முருகன்போல அசப்பில் ஒரு இந்துச் சாமிச்சிலை.
புத்தர். த்வாரவதி (Dvaravati )ஸ்டைல்
சில இடங்களில் புதுசா சில காட்சிகளைக் கட்டிக்கிட்டு இருக்காங்க. சிலதில் பராமரிப்பு வேலை நடக்குது. அங்கங்கே சில புத்தர் உருவங்கள். சின்னக்குன்றின் மேல் இருக்கும் கோவில்கள், ஓய்வறைகள் இப்படி கவனமாப் பார்த்துப் பார்த்துச் செஞ்சு வச்சுருக்காங்க. வருங்காலச் சந்ததிகளுக்கும் சமூகத்துக்கும் செய்யும் சேவையா இதை நடத்தி வருது ஒரு ட்ரஸ்ட். 47 வருசப் புதுசுன்னுதான் சொல்லணும். 1963 இல் ஆரம்பிச்சதாம்.
யோகா செய்யும் நிலையில் சிற்பங்கள். 80 போஸ்களில்
தினமும் காலை எட்டு மணி முதல் மாலை அஞ்சு வரை திறந்து வைக்கிறாங்க. என்னதான் ஓட்டமா ஓடினாலும் நாங்கள் வெளியே வந்து வண்டியை ஒப்படைக்க ரெண்டரை மணி நேரம் ஆகிருச்சு. ஒன்னும் சொல்லாம அரைமணிக்கான 50 பத் வாங்கிக்கிட்டு சாந்தியின் ஓட்டுனர் உரிமத்தைத் திரும்பக் கொடுத்தாங்க.
கிளம்பி போனவழியே திரும்பிப் பயணிச்சு ஒரு ஷாப்பிங் மாலில் இருக்கும் உணவுக்கடைகளில் பகலுணவை மாலை 4 மணிக்கு முடிச்சுக்கிட்டு டேனியின் வீட்டை ச்சும்மா எட்டி ஒரு பார்வை பார்த்துட்டு அறைக்குத் திரும்பினோம். மாலை மணி ஆறாகப் போகுது. இனி அவுங்க வீட்டுக்குத் திரும்பிப்போக ஒரு மணி நேரமாவது ஆகும். அது அப்படி ஒரு பிஸியான போக்குவரத்துக்கான நேரம்.
களைச்சுப்போன டேனி காருக்குள்ளே தூங்க ஆரம்பிச்சுட்டார். பாவம் குழந்தை.
தொடரும்...............:-)
Posted by துளசி கோபால் at 7/28/2010 06:20:00 PM 14 comments
Tuesday, July 27, 2010
ஆத்தாடி மாரியம்மா........................(தாய்லாந்து பயணம் பகுதி 7)
சாந்தி எட்டரைக்குத்தானே வருவாங்க அதுக்குள்ளே வெளியே போய் வரலாமுன்னு கிளம்புனோம். இன்னிக்கு சிலோம் ரோடு மாரியாத்தாவைக் கண்டுக்கிடலாமுன்னு திடீர்த் திட்டம். டாக்ஸி கூப்பிடறேன்னு சொன்னவரிடம், இங்கே இருக்கும் டுக்டுக்லே போய்ப் பார்க்கலாமுன்னேன். நாற்சந்தியில் தெருமுக்கு திரும்புனதும் கூடையில் பூக்கள் வச்சு வித்துக்கிட்டு இருக்காங்க. மூணு வாங்கினால் அம்பது பத்.
இங்கே பாங்காக்கிலே கோவிலுக்குன்னு ஒரு விதமான பூச்சரம் விக்கறாங்க. ஒன்னு 20 பத். மல்லிகையைச் சின்ன வட்டமாக் கோர்த்து அதிலிருந்து குஞ்சலம்போல் தொங்கும் டிஸைனில் ஒருவித வெள்ளைப்பூவும் ரோஜா, சிலசமயம் சாமந்தின்னு கோர்ர்த்துவிடறாங்க. அந்த வெள்ளைப்பூ பார்க்கறதுக்கு அசப்பில் எருக்கம்பூ போல இருக்கு.
மல்லி இருக்கே, வாங்கித் தலையில் வச்சுக்கலாமேன்னு ஒன்னு வாங்கினா.....கோபாலுக்குப் பதற்றம் வந்துருச்சு. வட்டமா இருக்கும் மல்லிகை மட்டும் வெட்டி எடுத்துக்கலாம். கீழே உள்ள குஞ்சலம் சாமிக்கு மட்டும்தான் போலன்னு (மனுஷனுக்கு மஹா கற்பனை) குறுக்கே பாயறார். சண்டை வேணாமுன்னு நானும் தலையை ஆட்டினேன். பார்த்தவரை யாரும் தலையில் பூச் சூடிக்கலை. யாருக்கும் நீளமுடியும் இல்லை.
தாய் எழுத்துக்களில் எண்களுக்கான குறிகளோடு மணிக்கூடு ஒன்னு இருக்கு. ஒன்னு முதல் பனிரெண்டுவரை 'தாய் மொழி'யில் எண்கள் தெரியும் எனக்கு. கடிகாரத்தை எப்போ வேணுமுன்னாலும் காமிங்க. சரியான நேரத்தை மிகச்சரியாச் சொல்வேன்:-))))
எதிர்வரிசையில் கண்ணைக்கவரும் விதத்தில் சராங் வச்சு வித்துக்கிட்டு இருக்காங்க. யானைகள் போட்ட ஒன்னை பேரம் பேசி வாங்கினேன்.
குலோப்ஜாமூன்களைக் கோர்த்துவிட்டமாதிரி ஒரு ஐட்டம். எதோ நான்வெஜ் சமாச்சாரம். சாஸேஜ்? இருக்கலாம்.
மேம்பாலத்தில் நடந்து ZEN செண்டர் பக்கம் இறங்கி, அங்கே ஸ்டேண்டில் நிற்கும் டுக்டுக் பேரம் பேசினால் 200 பத் ஆகுமாம். அப்புறம் பேரம் 150க்குப் படிஞ்சது. நம்மூர் ஆட்டோ போலத்தான். ஆனால்....ஏறி....உக்காரக் கொஞ்சம் உசரமா இருக்கு. எஞ்சின் போடும் சத்தத்தையே இதுக்குப்பேரா வச்சுருக்காங்க:-) ( சண்டிகரில் இதுக்கு ஃபட் ஃபடி ன்னு பெயர்) மீட்டர் எல்லாம் இருக்கு. ஆனால் அது பயன்பாட்டில் இல்லை. டாக்ஸிகளில் 1 மீட்டர் இருக்கு. போடவும் செய்யறாங்க. டாக்ஸி தலையில் டாக்ஸி மீட்டர்ன்னு ஒரு சைன்போர்டு உக்கார்ந்துருக்கு.
Tuk Tuk சார்ஜ் அதிகமுன்னு புலம்பினதுக்கு , நேரம் பாருங்க அஞ்சு மணி ஆகிருச்சுன்னு சொன்னதின் சூக்ஷுமம் அப்போ எனக்குப் புரியலை. கோபாலும் ட்ராஃபிக் அதிகம் இருக்கும் நேரமுன்னு டுக்டுக் காரருக்கு சப்போர்ட் செய்யறார்,
'சலோ... சிலோம் ( SILOM )ரோடு'ன்னு போகும்போது எங்கெங்கியோ சந்து பொந்து, சின்னத்தெருக்களில் நுழைஞ்சு அப்பப்ப மெயின் ரோடு போக்குவரத்தில் மாட்டி, கார்களின் வரிசைக்கிடையில் புகுந்து போய் (நம் சென்னை ஆட்டோக்காரர்களுக்கு ஈடான செயல்!!!) ஆட்டோக்காரர்களின் இலக்கணப்படி பிழை இல்லாம அரைமணி நேரத்தில் கோவிலுக்கு எதிர்புறம் மெயின் ரோடில் கொண்டு போய் நிறுத்தி,'அதோ கோவில்'னு கையைக் காட்டுனார். கோவில் வாசலில் கொண்டு விடணுமுன்னு சொன்னதுக்கு, ரொம்பச் சுத்திக்கிட்டு எதிர்வரிசைக்குப் போகணுமேன்றார். நடுவில் மீடியன் வச்ச ஆறு லேன் ட்ராஃபிக். விர்விர்னு கார்கள் பறக்குது.
பாங்காக்கில் தமிழ் எழுத்துக்கள்.
நான் ஒரு மாதிரியா முழிச்ச உடனே..... 'வாங்க என்கூட'ன்னு அவரே போக்குவரத்தைக் கடந்து எங்களைக் கூடவே 'நடத்திக் கொண்டுபோய்' கோவில் வாசலில் விட்டுட்டு இப்பக் கோவில் வாசல் வந்தாச்சுன்றார்:-)))
இது எப்படி இருக்கு!!!!!
வடக்குவாசல் கோபுரம்
சின்னக்கோபுரமா இருக்கேன்னு நினைச்சுக்கிட்டு உள்ளே நுழைஞ்சேன். தேவிகள் உருவங்கள் உள்ள அலங்காரக்கதவு பிரமாதம். உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை என்ற தகவல். 'ஓம் சக்தி ஓம்' னு தொடர்ச்சியா ஒரு குரல் ஜெபிச்சுக்கிட்டே இருக்கு.
இப்பெல்லாம் கோவில்களில் இருட்டுக்குள் இருக்கும் சிவனுக்கும் சரி, நகைநட்டு ஜொலிப்போடு இருக்கும் பெருமாளுக்கும் சரி 'ஓம் நமசிவாயா, ஓம் வெங்கடேசாய நமஹ'ன்னு சாமிக்கேத்தபடி இடைவிடாமல் ஒலிக்கும் இப்படி ஒன்னை வச்சு ஆன் செஞ்சு விட்டுடறாங்க. ஆகமவிதிகள் இதைப்பத்தி என்ன சொல்லுதோ?
வலது பக்கம் ஒரு தோட்டம் போல ஒன்னு. எல்லாம் ஒரே டிஸைனில் இருக்கும் பெரிய பெரிய அலங்காரத்தொட்டிகளில் மரங்கள். இடது பக்கம் கோடியில் நாற்புறமும் திறந்த மண்டபத்தில் ஒரு நான்முகமுள்ள தேவி. அடுத்ததாக ஒரு சந்நிதி நவகிரகங்களுக்கு. எதிப்புறம் காசி விஸ்வநாதருக்கு ஒரு தனிச் சந்நிதி. நவகிரங்களைக் கடந்தால் நமக்கிடதுபுறம் வெளியே போகும் ஒரு வாசலும் நேரெதிரா வலதுபுறம் மஹாமாரியம்மன் கோவில் மூலவர் சந்நிதியும்! அப்புறம்தான் தெரிஞ்சது இதுதான் மெயின் வாசல். ராஜகோபுரம் இங்கேதான் இருக்கு. கிழக்குப்பார்த்த சந்நிதியும் ராஜகோபுரமும். நாம் நுழைஞ்ச சின்னக்கோபுரம், சிலோம் ரோடு பக்கம் பார்க்கும் வடக்கு வாசல்.
நான்முகதேவி. கோவிலுக்கு வெளியில் இருந்து எடுத்தபடம்
கருவறை முன்மண்டபத்துலே இடப்பக்கம் உற்சவ மூர்த்திகளா அழகான வெங்கலச்சிலைகள். எல்லாம் பெரிய சைஸ்களில். பிள்ளையார், புத்தர், ஷக்தி, நடராஜர், புல்லாங்குழலோடு இருக்கும் வேணு கோபாலன், வீணையோடு சரஸ்வதி......
மூலவராக உமாதேவி. கையில் ஒரு திரிசூலம். வலப்பக்கம் தனிச்சந்நிதியில் கணேசரும் இடப்பக்கம் தனி(யா) முருகனும்.
குருக்கள் தூத்துக்குடிக்காரர். வந்து ஆறேழு வருசமாகுதுன்னார். தீபாரதனை காமிச்சு பூ, குங்குமம் விபூதிப் பிரஸாதங்கள் கொடுத்தார்.
கருவறை விமானம்
முன்மண்டபத்துக்குமேல் இருக்கும் சுதைச்சிற்பம்
கருவறைக்கு வெளியில் இருக்கும் முன்மண்டபத்தில் தாய் ஸில்க்லே செஞ்ச ஒரு பெரிய புள்ளையார் நின்னுக்கிட்டு இருக்கார். வெளியே வந்து கோவிலை வலம் வந்தால் வளாகத்தின் சுவரையொட்டிய மண்டபத்தில் மூன்று மாடங்களில் அய்யப்பன், சப்தமாதாக்கள், காத்தவராயன், அவன் மனைவிகள் இருவர், ஒரு பூசாரி ன்னு இருக்காங்க.. பின்பக்கம் கருவறைச்சுவரில் சின்னச்சின்ன மாடங்களில் தேவியின் பல்வேறு உருவங்கள் சிலைகளா இருக்கு.
தலவரலாறு!
மனுஷன் எங்கே போனாலும் தன் மதத்தையும் கடவுளையும் கூடவே கொண்டு போவான் என்ற வழக்கப்படி இங்கேயும் முதன்முதலில் வந்த இந்திய மக்களால் 1879வது வருசம் சின்னதா ஒரு கொட்டகையில் ஆரம்பிச்ச கோவில் இந்த 131 ஆண்டுகளில் தென்னிந்தியக் கட்டடக் கலையழகோடு பாங்காக்கிலே ஒரு லேண்ட் மார்க்கா ஆகி இருக்கு. சிலைகள் எல்லாம் இந்தியாவிலே இருந்து கொண்டுவந்து பிரதிஷ்டை செஞ்சுருக்காங்க. நாங்க அங்கே சுத்திப் பார்த்துக்கிட்டு இருந்த நேரத்தில் தாய் மக்கள் பலர் வந்து சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. வேற்றுமை அவுங்களுக்கும் இல்லை நமக்கும் இல்லை1
நவராத்திரி/தசராப்பண்டிகை ரொம்ப அமர்க்களமாக் கொண்டாடுவாங்களாம். கடைசி நாளன்று சாமிகள் ஊர்வலம் கூட உண்டாம். அன்னிக்கு இந்தத் தெருக்களில் போக்குவரத்தை நிறுத்திட்டு கடவுளர்களின் நகர் வலத்துக்கு ஏற்பாடு செஞ்சு தருமாம் அரசு.
ராஜகோபுரம். கிழக்குவாசல்
பக்தி சமாச்சாரங்கள் விற்கும் கடை. அம்மன் பாட்டு சி. டி.க்கள் ஏராளம். பாட்டு முழங்கிக்கிட்டே இருக்கு.
ராஜகோபுரம் வழியாக வெளியில் வந்தோம். கோவில் வாசலுக்கு எதிரா கலைப்பொருட்கள் விற்கும் கடைப்பெயர் மாரியம்மா!!! அடுத்து இருக்கும் ஒரு ஸெவன் லெவன் கடையில் போய் ஒரு சிம் கார்டு வாங்கிக்கிட்டோம். ப்ரீபெய்டு. அம்பது பத். தொடர்புக்குன்னு ஒன்னு வேண்டி இருக்குதானே? சிங்கை போல பாஸ்போர்ட் எண் எதுவும் தேவை இல்லை. லாலிப்பாப்போ, முட்டாயோ வாங்குவதுபோல காசைக் கொடுத்துட்டு வாங்கிக்கலாம்.
அந்தத் தெருவே கலகலன்னு தென்னிந்திய நாட்டுலே இருக்கும் ஒரு தெருவைப்போல இருக்கு, கொஞ்சூண்டு குப்பைகள் உட்பட!
சிலோம் ரோடில் ஒருத்தர் பெரிய தோசைக்கல்லைச் சூடாக்கி 'பேன் கேக்' மாதிரி ஒன்னும் செஞ்சுக்கிட்டு இருந்தார்
ஏழரை ஆச்சேன்னு கிளம்பினோம். டுக் டுக் ஓட்டுனரிடம் எரவான் கோவிலுக்கு எவ்வளோ சார்ஜ்ன்னால் அவர் தாய் நடன ஸ்டைலில் கைகளால் அபிநயம் புடிச்சுக் காமிச்சுட்டு எம்பது பத்ன்னார். அடிச்சுப்புடிச்சு அறைக்கு வந்தப்ப மணி 7.50. எட்டரை மணியாகியும் புன்னகை வரலை. ஆனா அவுங்க ஃபோன் வந்துச்சு. ஏழரைக்கு வந்துருந்தாங்களாம். (ஐயோ!) நாங்க இல்லைன்னதும் சாப்பாட்டுப் பையை கீழே வரவேற்பில் கொடுத்துட்டுப் போயிருக்காங்களாம். அடடா...... கிளம்புமுன் ஒரு ஃபோன் போட்டு வெளியே போறோமுன்னு சொல்லி இருக்கலாமோ:(
எட்டரை மணிக்கு வரேன்னு சொன்னதைமட்டுமே மனசுலே வச்சுக்கிட்டதால்.......
மன்னிப்புக் கேக்கவேண்டியதாப் போச்சு.
சின்னவயிறு மக்களைக் கணக்கில் எடுக்காம இன்னும் ரெண்டு எக்ஸ்ட்ரா வயிறுக்கான உணவும் அந்தப் பையில் இருந்துச்சு. அதிகப்படி இருந்ததை எடுத்து அறையில் இருந்த ஃப்ரிட்ஜில் வைத்தேன்.
தொடரும்...............:-)
Posted by துளசி கோபால் at 7/27/2010 02:45:00 AM 29 comments