Showing posts with label Bangkok. Show all posts
Showing posts with label Bangkok. Show all posts

Wednesday, August 25, 2010

மூன்று நாடுகள்...............( தாய்லாந்து, கம்போடியாப் பயணம் நிறைவுப்பகுதி )

ஹொட்டேல் வரவேற்பறையில் ஒரு ரெட்டை மாட்டுவண்டி டிஸைன் கண்ணை இழுத்துச்சு. சக்கரம் அச்சுலே இருந்து கழண்டு வராதபடி அருமையா ஒரு எக்ஸ்டென்ஷன் கட்டை கொடுத்து அமைச்சுருக்காங்க. அந்தக் காலத்து டிஸைனா இருக்கலாம். கண்டு பிடிச்சவர் தமிழ் சினிமா பார்த்துருக்க வாய்ப்பில்லைன்னு நினைக்கிறேன். வில்லன் கடையாணியைப் பிடுங்கி வச்சுருவார். இதை அறியாத நாயகன், காளைகளை விரட்ட, அது ஓடு ஒடுன்னு ஓட, கடையாணி இல்லாத சக்கரம் கொஞ்சம் கொஞ்சமா அச்சுலே இருந்து கழல..... நாமெல்லாம் பல்லைக் கடிச்சபடி இருக்கை நுனிக்கு வர ( இயக்குனர் விருப்பப்படி) பயங்கர த்ரில், இப்படிக் கட்டை வச்சு இருந்தா...பாழாய்ப் போகாதோ!!!!!

ரெண்டு மணிக்கெல்லாம் கிளம்பினோம். விமானநிலையம் வர மெயின் சாலையில் போகும்போது ரெண்டு பக்கமும் அட்டகாசமான ஹொட்டேல்கள் அணிவகுத்து நிக்குது. ஆஹா...... வரும்போது இருட்டுனதாலே இதெல்லாம் கண்ணில் படலை. சொல்லிவச்சாப்போலே எல்லாத்திலும் நுழைவு வாசலில் அஞ்சு தலை. அதென்னடா..... இங்கே இவர் மேலே அப்படி ஒரு ஈர்ப்பு!!!!
மெயின் ரோடிலேயே நடைபாதையை அடுத்து தாமரைக் குளங்கள். பச்சைக்குப் பச்சை, அழகுக்கு அழகு. காசுக்குக் காசு.

ஏர்போர்ட் வாசலிலே போய் இறங்கிக்கலாம்

இருவது நிமிசத்துலே விமான நிலையம் வந்து சேர்ந்தாச்சு. உள்ளே செக்கின் செய்யப்போனால்...... ஒரு ஈ காக்கா இல்லை. சின்ன விமான நிலையம்தான். நாட்டின் டூரிஸம் வருமானத்துக்கு இதில்தான் முதலிடம். ராத்திரி எட்டரைக்கு ஒரு ப்ளைட் பாங்காக் போக இருக்குன்னாலும் பலநாட்களில் அது ரத்து ஆயிருமாம். நம்ப முடியாதுன்னு பாங்காக் ஏர்லைன்ஸ்காரர்களே சொல்றாங்க. நமக்கோ மறுநாள் காலை ஏழரைக்கு டெல்லி ப்ளைட் பிடிக்கனும். வம்பு வேணாமுன்னுதான் இப்பவே கிளம்பிட்டோம்.

எண்ணி ஒன்பது பேர் நம்ம ஃப்ளைட்டில். வரும்போது கொடுத்த மாதிரியே வெஜிடபிள் சேண்ட்விச். ஒருவேளை வருசத்துக்கு மொத்தமா வாங்கி வச்சுருக்காங்களோ??? அதே 50 நிமிசப்பயணம். பாங்காங் நகரைக் கொஞ்சம் தாழ்வான உயரத்தில் பார்த்தேன். வாட்டுகள் அங்கங்கே தாரளமா இடம்பிடிச்சு இருக்குது.
பாங்காக் நகரின் நதி 'ச்சாவ் ப்ராயா'
சுவர்ணபூமியில் இறங்கினோம். பறந்த நேரத்தில் பாதியை விமானத்திலிருந்து எங்களைக் கூப்பிட்டுப் போன பேருந்தில் செலவு செஞ்சோம். அது என்னங்க, வேற ஊரிலே இறக்கிட்டாங்களா என்ன? போறோம் போறோம் போய்க்கிட்டே இருக்கோம். ஏழெட்டு கிலோமீட்டர் மெதுப்பயணம்.

எட்டு நாளைக்கு முன் இங்கே வந்து இறங்கினவுடன் ஓடுன வேகத்தில் அர்ரைவலில் இருக்கும் அழகான விஷயங்களைப் படம் எடுக்க விட்டுப்போச்சு. அதை இப்ப எடுத்து நம் கடமையை முடிச்சுக்கலாமுன்னு கேமெராவைத் தீட்டி வச்சுக்கிட்டுக் காத்திருந்தேன். ஆனா.....

பேருந்தைவிட்டு இறங்கி விமானநிலையக் கட்டடத்துக்குள் நுழைஞ்சால் கண்ணெதிரே குடியுரிமை வழங்கும் இடம். இந்தமுறையும் நோ ச்சான்ஸ்:(

நாளைக்குக் காலை ஆறு மணிக்கு இங்கே இருக்கணுமே என்பதால் நகருக்குள் போகாமல் விமானநிலைய ஹொட்டேலில் ஒரு இரவு தங்கிக்க ஏற்பாடு. நோவோடெல் (NOVOTEL). அவுங்களுடைய இலவச பிக்கப் வண்டியில் உக்கார்ந்தா..... அதுவும் இங்கே சுத்தி அங்கே சுத்தின்னு விமானநிலைய வளாகத்துலேயே வட்டம் போட்டு பத்துப் பதினைஞ்சு நிமிசம் சுத்திக்காட்டிட்டு நம்மளைக் கொண்டுவிட்டுச்சு.

தேவைக்கும் அதிகமான பிரமாண்டம் இங்கேயும். எங்கேயும் போக வேண்டாம். நல்லா ஓய்வு எடுக்கணுமுன்னு தீர்மானிச்சதால் சாப்பிடக்கூட கீழே போகாமல் ரூம்சர்வீஸில் முடிச்சுக்கிட்டோம். ஜன்னலில் பார்த்தால் கையெட்டும் தூரத்தில் விமானநிலையம் ஜொலிக்குது. நிமிசத்துக்கொரு விமானம் ஏறுவதும் இறங்குவதுமா இருக்கு. தரை ஊர்திகள் போக்குவரத்து ஏராளம். ஆனால் ஒரு சத்தமும் இல்லை. ஊமைப்படம் பார்த்துக்கிட்டு இருக்கேன்! நல்லத்தான் கட்டி இருக்காங்க! அமைதியோ அமைதி.

அதிகாலை அஞ்சரைக்கு எழுந்து குளிச்சுக் கிளம்பி விமானநிலையக் கட்டிடத்துக்குள் வந்து சேர்ந்தப்ப ஆறரை. அதான் இங்கே காஃபி வொர்ல்ட் இருக்கேன்னு அறையில் இருக்கும் காஃபியைச் சட்டை செய்யலை. ஆனா எப்படியோ அது இருந்தபக்கம் போகாம வேற பக்கம் திரும்பிட்டோம்போல! .

லேசான தலைவலி ஆரம்பிச்சது. இந்த காஃபிச் சனியனை விட்டொழிக்கணும். வேண்டாத சமாச்சாரத்தையெல்லாம் எப்படிப் பழக்கி வச்சுருக்கோமுன்னு லேசா ஒரு கோபம். (நல்ல காஃபி கிடைச்சதும் கோபத்தை மறந்துருவொம்லெ)

கோபால் புண்ணியத்துலே லவுஞ்சுக்குப்போய் லேசா ஒரு ப்ரேக்ஃபாஸ்ட் & காஃபியை முடிச்சுக்கிட்டு நம்ம கேட்டுக்கு வந்தோம்.
இந்த முறை 'தாய் ஏர்வேஸ்' விமானத்துலே நம்ம இருக்கைக்கு முன் டிவி ஸ்க்ரீன் இருக்கு. நிகழ்ச்சிகள் அவ்வளவா சுவாரசியப்படலை. பெண் பயணிகளுக்கு 'ஆர்கிட் பூ ப்ரோச்' ஒன்னு கொடுத்தாங்க.

நாலரை மணிப் பயணம் முடிச்சு டெல்லியில் வந்து இறங்கினோம். அதே பழைய டெர்மினல்தான். புதுசு மறுநாள் முதல் பயனுக்கு வருதாம். 2 நமக்காக வந்து காத்துருந்த வண்டியில் சண்டிகரை நோக்கிக் கிளம்பிட்டோம். டெல்லி மா 'நரக'த்துக்குள்ளே போகலை. அதென்னவோ டெல்லி ட்ராஃபிக்லே மாட்டிக்க மனசே வரமாட்டேங்குது:( ஆனாலும் பிதாம்பூர் வரை கொஞ்சம் மெதுவான பயணம்தான். பகல் பனிரெண்டு மணி ஆகுது. போக்குவரத்து அதிகமில்லைன்னு ஓட்டுனர் சொன்னார்.

எல்லாம் நாம் விட்டுட்டுப்போன மாதிரியே இருக்கு. பத்து நாளுக்கு ஒரு மாற்றமும் இல்லை. வழியில் சாப்பிடன்னு இடம் தேடிக்கிட்டே ஹைவேயில் வந்து மூணு மணி நேரப் பயணத்தில் 'ஹவேலி'யை அடைஞ்சோம். அழகான செடிகள். கார் பார்க்கிங் ஏரியா நல்லாவே இருக்கு. அங்கேயே ரெஸ்ட் ரூம்ஸ் ஒரு பக்கம். நாட் பேட். சுத்தமாத்தான் இருக்கு. தோட்டத்தின் ஒரு பக்கம் ஒட்டைச்சிவிங்கி குடும்பம் ஒன்னு.

ஹவேலி
பஞ்சாபி தாபாதான். ஆனால் மாளிகை செட்டிங்ஸ். பெரிய வளாகத்தில் இருக்கு. ஒரு பக்கம் ரெஸ்டாரண்ட், அதுக்கு நேர் எதிர்ப்புறம் கொஞ்சம் கடைகள். பயணிகளுக்கான பொருட்களா கேமெரா, பேட்டரிகள், குடிதண்ணீர் பாட்டில், ஷால், பரிசுப்பொருட்கள்ன்னு கிடக்கு. இடைவெளியில் கயித்துக் கட்டில்கள், ஒரு கிணறு. அதுலே தண்ணி இறைச்சுக் குடத்தைத் தலையில் சுமந்துகிட்டுப்போறாங்க ஒரு பெண். இன்னொருத்தர் தண்ணி இறைச்சுக்கிட்டு இருக்காங்க.
இந்தப்பக்கம் ரெண்டு ஆண்களும் ஒரு பெண்ணுமா பாங்ரா நடனம் ஆடிக்கிட்டே இருக்காங்க.

ரெஸ்டாரண்டை ஒட்டி வெளியே பானிபூரி, குல்ஃபி, லஸ்ஸி, ஆலு டிக்கா, சாட் வகைகள் இப்படி தனித்தனியா அடுப்பு வச்சு சமைச்சுத்தரும் வகையில் அமைச்சுருக்காங்க. சாயந்திர வேளையில் கயித்துக்கட்டில்களில் ஹாயா உக்கார்ந்து வேணும் என்பதை வாங்கி உள்ளே தள்ளலாம். காசை வாங்கிப்போட்டுக்க கணக்குப்பிள்ளை ஒருத்தர், ஆனால்........... இந்தப்பக்கம் அம்மாவும் பொண்ணுமா ரெண்டு லேடீஸ், உக்காந்து தலைவாரி விட்டுக்கிட்டு இருக்காங்க. சாப்பாட்டுக் கடைவாசலில் இப்படி இருந்தா நல்லாவா இருக்கு? கண்டுக்காம உள்ளே போகவேண்டியதுதான்:)

மினி மீல்ஸ் வித் ஸ்வீட்ன்னு கொஞ்சம் சோறு, பருப்பு, கூட்டு, அப்பளம், கொஞ்சூண்டு பாயசம் நமக்கு. ஆனால் விலை கொள்ளை. 250 ரூ. ரெண்டு மீல்ஸ், அதிகமில்லையோ? ஹைவேன்னா இப்படித்தானாம். கோபால் சொல்றார்.
அங்கிருந்து ஒரு ரெண்டரை மணிப்பயணத்துலே வீடு வந்து சேர்ந்தோம். மணி சரியா நாலே முக்கால். முதல்லே நல்லதா ஒரு காஃபி போட்டுக் குடிச்சுட்டுத்தான் மறுவேலை.

இப்படியாக நம் தாய்லாந்து கம்போடியாப் பயணம் நிறைவுற்றது. இதுவரை பொறுமையாகக் கூடவே வந்த நம் வகுப்புக் கண்மணிகளுக்கு நன்றியும் பாராட்டுகளும்.

என்றும் அன்புடன்,
உங்கள் டீச்சர்.


பயணம் செய்வது உடலுக்கும் உள்ளத்துக்கும் நல்லது. நெடுந்தூரப் பயணமா இருக்கணும் என்ற அவசியம் இல்லை. பக்கத்து ஊருக்குக்கூடப் போய்வரலாம். ஆனால் அங்கே இருக்கும் புராதனச்சின்னங்களையோ, மற்ற இயற்கைக் காட்சிகளையோ கண்ணையும் மனசையும் திறந்து வச்சுப் பார்த்து அனுபவிக்கணும்.

ஆதலினால் பயணம் செய்வீர்!

Wednesday, August 04, 2010

தோசகாந்த்!!!........................(தாய்லாந்து பயணம் பகுதி 13)

ஸ்ரீகாந்த், விஜயகாந்த், ரஜினிகாந்த், நளினிகாந்த் இப்படி நமக்குச் சில காந்துகளைத் தெரியும். யாருக்காவது டோ(தோ)சகாந்த் தெரியுமா? இன்னிக்கு அவரைச் சந்திக்கும் பாக்கியம் கிடைச்சது.

பகல் மூணுமணிவரை கூடுதல் டைம் கிடைச்சுருக்கு செக் அவுட் செய்யன்னு துணிமணிகளை அடுக்கறதும் இடைக்கிடையே ஆபீஸ் மெயில்களுக்கு மறுபடி அனுப்பறதுமா ஒருத்தர். வேளை வரட்டுமுன்னு நிதானமா வலைமேய்வது இன்னொருத்தர்.

"ஒரு மணி ஆச்சே...போய் சாப்பிட்டுட்டு வரலாமா? "

"ச்சைனா டவுன் போயிட்டு வந்து சாப்பிடலாம்."

"அடடா..... மறந்தே போயிட்டேன். ஒரு மணி நேரமாச்சு நான் வந்து . அப்பவே சொல்லி இருக்கக்கூடாதா?"

"பரவாயில்லை நீங்க உங்க வேலையைப் பார்த்து முடிக்கட்டுமுன்னு பொறுமையா இருந்தேன். என்ன செய்யறது? அப்பப்ப உங்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா வந்துருதே!"

டாக்ஸியில் போகும்போது....... 'அங்கே என்ன வாங்கணும்? இல்லே....ச்சும்மா வேடிக்கை பார்க்கவா? '

"மாத்திக்கணும். ஹாங்காங்கா இல்லை பேங்காக்கான்னு முடிவு செஞ்சுக்கலை. ஹாங்காங்கே இருக்கட்டும். அதுதான் நீங்களா ஒருமுறை வாங்கி வந்தது."

"சொல்லவே இல்லை.....கொண்டு வந்தியா அதை? "

" பின்னே?"

கால்நூற்றாண்டுக்கு முன் வந்த கடை எப்படி நினைவிருக்கும். போற போக்கில் சட்னு ஒரு கடையில் நுழைஞ்சோம். பயங்கரக்கூட்டம். சின்னதா இருக்கும் கவுண்டரில் எட்டிப்பார்க்கவும் தலையை நுழைக்க முடியாது. கொஞ்சம் மங்கலான நிறத்தில் மூணு அடுக்களாத் தொங்குது.

கிடைச்ச இடைவெளியில் நுழைஞ்சோம். நின்ன நேரத்தில் பார்த்து வச்ச ஐட்டத்தைக் காமிச்சவுடன் பரபரன்னு எடுத்துக் கையில் கொடுத்தார் 1 விற்பனையாளர். ரெண்டு தாய்பத் வெயிட்.

இங்கே தங்கத்துக்கு எடை, நம்மூர்போல கிராம், பவுன் கணக்கு இல்லை. கேரட்டும் கூடுதல். எல்லாம் 23 கேரட் மட்டுமே. நகை வகைகளிலும் காதணின்னு ஒன்னுமே இல்லை. நெக்லேஸ், கல்லுவச்சதுன்னு கிடையவே கிடையாது. சங்கிலிகள் மட்டுமே. ஒன்னு, ரெண்டுன்னு பத்து தாய்பத் எடைகள்.
(பத்துன்னதும் ஆதிகேசவனின் செயின் நினைவுக்கு வந்துச்சு.அம்மாம் பெருசெல்லாம் இங்கே இல்லை )

நீளம், குட்டைன்னு ரெண்டே அளவு.

ஒரு தாய்பத் தங்கம் = 15.16 கிராம்.

அன்றைய விலையைச் சாக்பீஸால் கண்ணாடியில் எழுதி வைச்சுடறாங்க. சேதாரம் செய்கூலின்னு தனித்தனியா இல்லாம எல்லாமே 'அடக்கம்'
ரெண்டு தாய்பத் எடைக்கு ஒன்னு செலக்ட் செஞ்சாச்சு. நம்ம ஹாங்காங் ட்விஸ்ட் செயினை மாத்திக்கணும். எடைபோட்டுப் பார்த்து அதுக்கு ***** விலை போட்டாச்சு. அனைத்துவகைக் கடனட்டையும் எடுப்பாங்கன்னு ஒட்டிவச்ச படங்களைப் பார்த்துட்டு க்ரெடிட் கார்டை வெளியில் எடுத்தால் 3 சதமானம் கூடுதல் கொடுக்கணுமாம்.

எதிரில் இருக்கும் ஏடிஎம்மைப் பார்த்துவச்சுக்கிட்டது நல்லதாப் போச்சு. கேஷாவே எடுத்துக் கொடுத்துடலாம். அங்கே போனால் அப்படியே வரமுடியுதா.... அதுக்குப் பக்கத்தில் இருக்கும் இன்னொரு நகைக்கடையில் எட்டிப் பார்த்தேன். ஈ காக்கா இல்லை. வாய் வார்த்தையா இந்த செயின் எவ்வளவு பெறுமுன்னு கேட்டால் கணக்கான கணக்கைக் கேல்குலேட்டரில் போட்டு அழிச்சுப்போட்டு.......ரொம்பக் குறைவா ஒரு தொகை சொன்னாங்க. முந்திக்கடையை விட மூவாயிரம் கம்மி.

பணத்தோட பழைய கடைக்கே போனோம். அஞ்சே நிமிசம். வேலை முடிஞ்சது. நம்ம ஹாங்காங்கை ஒரு திரவத்தில் போட்டு எடுத்துவந்து சின்ன பாலித்லீன் கவரில் போடும்போது பார்த்தால் அப்படி ஜொலிக்குது. 'ஐயோ..... மாத்திட்டோமே'ன்னு மனசுலே அல்லாடல்.

சைனா டவுன் பரபரப்பில் டாக்ஸி பிடிச்சால்..... இலவசமாக் கொண்டு விடறேன்..... ஒரு நகைக்கடைன்னு ஆரம்பிச்சார் ட்ரைவர். ஆளை விடு சாமி. மீட்டரைப்போடு. நேரா ஹொட்டேல். வந்து சேர்ந்து பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு செக்கவுட் செஞ்சுட்டு இன்னொரு டாக்சியில் சுவர்ணபூமிக்குப் போய்ச் சேர்ந்தோம்.
அங்கேயும் அரசர் பலபடங்களில் பலவித போஸ்களில் நின்னு நம்மை நமஸ்காரம் செஞ்சு, வந்துட்டுப் போறவங்களுக்கு நன்றின்னார்.

வழியெல்லாம்....... ' என்னமோ ஒரு கடையில் நுழைஞ்சு இப்படி இவ்வளோ காசை தண்டம் பண்ணிட்டே. நல்ல தங்கமோ என்னவோ..... இந்தியாவைவிடக் கூடுதல் ரேட்டோ.....' ன்னு ஒரே தொணப்பல்.

"இதுக்காச்சும் ரீஸேல் உண்டு. நீங்க சொன்ன ஹேண்ட் பேகை வாங்கி இருந்தால்...................." (போதுண்டா சாமி)

அப்புறம் வலையில் கடைப்பெயரைத் தேடுனதில் அது புகழ்பெற்ற நம்பிக்கையான பெரிய கடைகளில் ஒன்னா இருக்கு. Hang Seng Heng ( Thailand ) Co., Ltd
நாம் இப்போ போறது பாங்காக் ஏர்வேஸில். கம்போடியாவில் இருக்கும் சியாம்ரீப் என்னும் ஊருக்குப் போறோம். செக் இன் ஒரு சிரமமும் இல்லாமல் முடிஞ்சது. ஏகப்பட்ட கவுண்ட்டர்கள் திறந்து வச்சுருக்காங்க.
அரண்மனைக்காவலுக்கு நிற்கும் பூதங்களும் அரக்கர்களும் இங்கே வரிசைக்கு ஒன்னா அலங்காரமா நிக்கிறாங்க. Askan Mara, Sahassadeja, Viruncamban, இப்படி மொத்தம் பனிரெண்டு பேர். இவுங்க வாழ்க்கை வரலாறுக் குறிப்புகள் கூட எழுதி வச்சுருக்காங்க.
ராவணனை இங்கேதான் முதலில் பார்த்தேன். இவருதான் அவரு. அந்த டோசகாந்த்.
மரகத புத்தரின் காவலன் சகஸ்ஸதேஜா, நம்ம ராவணனோட பெஸ்ட் ஃப்ரெண்டாம். இவருக்கு ஆயிரம் முகங்களும் ரெண்டாயிரம் கைகளுமாம். இவரைக் கொன்னது ஹனுமான்தானாம்.


முதலில் பாங்காக் வரும் பயணிகளை வரவேற்கும் விதமா அர்ரைவல் ஹாலில்தான் இவுங்களை வச்சுருந்தாங்களாம். அங்கே வேலை செய்யும் பணியாளர்கள், இது நாட்டுக்கு துரதிர்ஷ்டத்தைக் கொண்டுவருமுன்னு அபிப்ப்ராயப்பட்டதால் இந்த பன்னெண்டு பேரையும் வழியனுப்புப் பகுதிக்கு அனுப்பிட்டாங்க. கெட்ட சமாச்சாரம், துரதிர்ஷ்டமெல்லாம் பயணிகளுடனே கிளம்பிப் போயிறட்டுமுன்னு!

.
விமானநிலையம் அமைக்க வாங்குன இடம் வெறும் எட்டாயிரம் ஏக்கர் நிலம்!!!! வளாகம் மட்டும் அறுபது லட்சத்து அறுபதாயிரம் சதுர அடிகள். உலகத்துலேயே அதி உயரமான கண்ட்ரோல் டவர் 434 அடி. முன்னூத்தி அறுபது செக்கின் கவுண்டர்கள் இப்படி எல்லாமே பிரமாண்டம்.
இந்த செப்டம்பர் 2010 வந்தால் சுவர்ணபூமிக்கு நாலு வயசு. இதைக் கட்டுனதும் உலகெங்கும் உள்ள ராஜகுடும்பத்தினரை இங்கே வரவழைச்சு பெருசாக் கொண்டாட்டம் நடத்தி இருக்காங்க.


இவ்வளவு பெரிய இடம் நகரத்துக்குள்ளே கிடைக்குமா? அதான் பாங்காக் நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்துலே சுவர்ணபூமியைக் கட்டி இருக்காங்க.

இமிக்ரேஷன் முடிஞ்சது. இங்கேயும் தரையில் கால் வரைஞ்சு வச்சுருக்கு. அதுக்குமேல் ஒவ்வொருத்த்ரா நிக்கணும். நம்மை ஒரு படம் புடிச்சு வச்சுக்கறாங்க. அப்புறம் கையில் கொண்டுபோகும் பையையும் கேபின் பேக், கணினி எல்லாம் வெளியில் எடுத்து ட்ரேவில் வச்சு ஸ்கேன் பண்ணும் சமயம் நம்ம காலணிகளையும் கழட்டி தனியா அதுக்குன்னு இருக்கும் ட்ரேவில் வச்சு ஸ்கேன் பண்ண அனுப்பனும்.
இதைக் கடந்தால் பாற்கடல். வாசுகியைக் கயிறாக்கி, மந்தரமலையை மத்தாக்கித் தலைப்பக்கம் பக்கம் அசுரரும் வால் பக்கம் தேவர்களுமா பாற்கடலைக் கடைஞ்சுக்கிட்டு இருக்காங்க.
வேடிக்கை பார்த்துக்கிட்டே போய் காஃபி வொர்ல்ட்லே கப்புச்சீனோ வாங்கிக் குடிச்சுட்டு நம்ம கேட்டை நோக்கிப் போனோம். இங்கே வெளிவிலைக்கும் விமானநிலைய விலைக்கும் வேறுபாடு ரொம்ப ஒன்னும் இல்லை. இந்த காஃபியே பாருங்க வெளியில் ஒரு நாள் இதே கடையில் குடிச்சது 70 பத். இங்கே 80. நம்மூர்போல் உள்ளே கொள்ளை அடிக்கறதில்லை(யாக்கும்)

வந்து நின்ற ஒரு விமானத்தில் இருந்து பைகளை இறக்குவதையும், சாப்பாட்டு கண்டெய்னர்கள் இறக்குவதையும் வேடிக்கை பார்த்துக்கிட்டு நிம்ம்மதியா சலனமில்லாம இருந்த என் மனசுலே கோபால் கல்லைத் தூக்கிப் போட்டார். சும்மா இருக்காம கம்போடியா விஸா ஃபார்ம் வாங்கிவரேன்னு போனவர் கொண்டுவந்து கொடுத்ததைத் திறந்தால்..............

ஃபோட்டோ ஒட்டணுமாம். கைவசம் இல்லையே!


ஙே :(


PIN குறிப்பு. டுக் டுக் படம் போடவில்லையாமே இதுவரை? இதோ போட்டாச்சு.



தொடரும்.....................:-)

Monday, August 02, 2010

ராசாவூட்டுத் தண்ணீர் பந்தல்........................(தாய்லாந்து பயணம் பகுதி 11)

அந்த மரகதபுத்தர் இருக்கும் வளாகத்துலே ஒரு பக்கம் பூராவும் தங்கமாகவும், கல் வச்சதும், கண்ணாடி பதிச்சதும், போர்ஸலீன் பூக்களை வச்சுப்பிடிப்பிச்சதுமா ஏராளமான ச்செடிகள் இருக்கு.. இதெல்லாம் நட்டு வச்ச செடிகளா? இல்லையில்லை. 'கட்டி வச்ச ச்செடிகள்'. நட்டு வச்ச செடிகள் எதையுமே தன்னிச்சையா தழைச்சு வளர விடலை இங்கே. போன்ஸாயா குறுக்கியும் அலங்காரமா வெட்டியும் வச்சதுகள்தான் எல்லாமே. மரக்கிளையில் கூட இலைகள் உருண்டையா பந்துபந்தா இருக்குன்னா பாருங்களேன்!

ச்செடின்னதும் நினைவுக்கு வரும் ஒரு விஷயம்..... அரண்மனையை விடக் கூடுதலா ச்செடி (chedi) இருப்பது நம்ம 'கிடந்தார் புத்தர்' கோவிலில்தான் .சின்னதும் பெருசுமா 99 செடிகள் அங்கே இருக்கு இங்கே ஒரு எழுபதுவரை இருக்கலாம். வெவ்வேற காலக்கட்டத்தில் வெவ்வேற அரசர்களால் கட்டப்பட்டதால் இந்த வளாகம் என்னவோ திட்டமிடாமல் கட்டுனதைப்போல ச்செடிகள் எல்லாம் கூட்டங்கூட்டமா நெருக்கியடிச்சு நிக்குதோன்னு ஒரு தோணல்.

தங்கச்செடியைத் தாங்கி நிற்கும் அரக்கர்கள்
மரகத புத்தர் வளாகத்தைச்சுற்றிலும் ப்ரமாண்டமான அகலத்தோடு வெராந்தா ஓடுது. சுவர் முழுக்க ராமக்கீயம் வரைஞ்சு வச்சுருக்காங்க. நம்ம ராமாயணம்தான் இது. ஆடை அலங்காரம் எல்லாம் அவுங்க வழக்கபடி இருக்கு. சில சித்திரங்கள் அட! போடவைக்குது.


போரில் 'நாகபாச'த்தால் அடிபட்டு மயங்கி வீழ்ந்த லக்ஷ்மணனை ராமன் மடிமேல் வச்சுக்கிட்டுப் புலம்புவது, மேலாடை இல்லாத சீதை அசோகவனத்து 'பங்களா'வில் ராவணன் கெஞ்சிகிட்டே பின்னால் வர போ போன்னு முன்னால் வேகமா நடப்பது, காட்டில் அருவியில் ராமன் குளிப்பது, ஹனுமன் கடலரக்கியோடு சண்டை போடுவது, வாலில் அரக்கனைக்கட்டி ஆத்துலே அமுக்கறது இப்படி ஏராளம் ஏராளம்!!!!

நின்னு நிதானமா இந்தச் சித்திரங்களைப் பார்வையிடவே ஒரு மூணு நாலு மணி நேரம் எடுக்கும். அந்த அளவுக்கு விஸ்தாரமாவும் நுணுக்கமான விவரிப்புகளுடன் வரைஞ்சுருக்காங்க. இதைப் பராமரிப்பது மாபெரும் வேலைதான். காலத்தால் வெளிறிப்போன வண்ணங்களுக்கு மறு உயிர் கொடுத்து புதுப்பிக்கும் வேலை மட்டும் உண்மையான ஆர்வம் உள்ள ஒரு கலைஞனுக்குக் கிடைச்சதுன்னா........அவன் வாழ்நாள் போதாது!!!!

இந்தப்பகுதியைப் பார்வையிடும் வெள்ளைக்காரச் சுற்றுலாப் பயணிகளுக்கு, அவர்களின் வழிகாட்டி விளக்கிச் சொல்றதைக் கேட்டு 'ஹைய்யோ'ன்னு ஆகிப்போச்சு. பயங்கரமா ரீல்ஸ் விட்டுக்கிட்டு இருந்தார். ஒருவேளை நாம் கம்பனை(மட்டும்) படிச்சவங்களா இருப்பதாலும், ராமாயணக்கதைகளைச் சிறுவயதில் இருந்தே கேட்டு வளர்ந்தவர்களா இருப்பதாலும் இப்படித் தோணுதோ என்னவோ! அந்தச் சுற்றுலாக் குழுவினரும் கதையைக் கவனமாக் கேட்பதுபோல எனக்குத் தோணலை.
தோட்டம் அழகு. அருமையான பராமரிப்பு. அங்கங்கே சிலைகள். மரகத புத்தர் கோவிலுக்கு முன்னே முற்றத்தில் ரெண்டு பக்கமும் எருமைகள் நிற்கும் ஒரு தனிச்சந்நிதி. சுத்திவர ஊதுவத்தி ஸ்டேண்டா தொட்டிகள். அங்கிருக்கும் புத்தருக்கு வழிபாடாத் தங்கரேக் ஒட்டிவைச்சுக்கிட்டு இருக்காங்க உள்ளூர் பக்தர்கள். நான் மடத்தனமாக் கையில் தண்ணீர் பாட்டில் கொண்டு போகலை. நாக்கோ வரளுது. வெய்யில் வேறு இந்தப்போடு போடுதேன்னு ஓய்வுக்காக ஒரு அஞ்சு நிமிசம் இதுக்குப் பக்கத்தில் இருக்கும் மேற்கூரை போட்டு, நாலுபக்கமும் திறந்த மண்டபம் ஒன்னில் உக்கார்ந்துருந்தேன்.
அப்போ என்னைக்கடந்து போன ஒரு பிஞ்சு, (கூடிப்போனால் ஒரு மூணுவயசு இருக்கும்) என்னைத் திரும்பிப் பார்த்துட்டு, 'சட்'னு ரெண்டு கைகளையும் குவிச்சு ஒரு வணக்கம் போட்டுச்சு. குழந்தையிலிருந்தே இந்தப் பழக்கம் வளர்ந்துருது. நம்ம ஹொட்டேலிலும் அந்தஸ்து, பதவி வேறுபாடுகள் இல்லாம 'கேட் மேனு'க்குக்கூட மேனேஜர் கைகூப்பி வணக்கம் சொல்வதைப் பார்த்துருக்கேன்.
மரகத புத்தர் கோவிலைச்சுத்தி இப்படித் திறந்தவெளி மண்டபங்கள் பனிரெண்டு இருக்கு. உசரம் குறைஞ்ச திண்ணையில் உக்காருவதுபோல இங்கே உக்கார்ந்து ஓய்வெடுத்துக்கலாம்.
அங்கோர்வாட் மாடல்

கூட்டமாக் கோவில்களுக்கு மத்தியில் ஒரு மேடையில் நம்ம கம்போடியா 'அங்கோர் வாட்' மாடலைச் செஞ்சு வச்சுருக்காங்க. இது அரசர் நாலாம் ராமா காலத்துலே உண்டாக்குனதாம்.

பாதி மிருகம் பாதி மனிதன், பாதிப்பறவை மீதி மனிதன்னு ஏராளமான சிலைகள் அங்கங்கே. கின்னரர்களாம். கையில் ஏன் இசைக்கருவிகளை வைக்கலை?
போதி மரம் ஒன்னு சுற்றிலும் மேடையோடு ஒரு முற்றத்தில். இது 'கன்றாக' இலங்கையிலிருந்து கொண்டுவரப்பட்டதாம். மேடையைச்சுத்தி இருக்கைகள் போட்டுருக்காங்க. ஞானம் வேணுமுன்னு நாமும் தவம் இருக்கலாம். பாங்காக் நகரத்திலும் எங்கே பார்த்தாலும் அரசமரங்கள்தான். நாங்க இப்போ வசிக்கும் சண்டிகர் நகரில் இப்படி இருப்பதால் வரும் ஞானம் வராமலா இருக்கப் போகுதுன்ற 'ஞானம்' பெற்று தெளிவடைந்தேன்.

மரகதபுத்தர் வளாகத்தைவிட்டு வெளியில் வந்தால் மகாராஜா வச்சுருக்கும் தண்ணீர்ப்பந்தல் இருக்கு. ராயல் சாரிடபிள் ப்ராஜெக்ட் தவிச்ச வாய்க்குத் தண்ணீர் தருவது புண்ணியமில்லையோ? 25 பத்துக்கு லைச்சி ஜூஸ் கிடைக்குது. நல்லா இருக்கட்டும் புண்ணியவான். குடிச்சுட்டு அடுத்த வளாகத்துக்குப் போனேன்.
PHRA VIHARN YOD

வெவ்வேற வளாகத்துக்குப் போகும் வாசல்களில் எல்லாம் காவல்கார பூதங்கள் நிக்குது. அவுங்களுக்கு தனித்தனி பெயரெல்லாம் உண்டு.
எமரால்ட் புத்தரின் காவலன் ஸஹஸ்ஸ டேஜா ( GIANT SAHASSADEJA)


ஆயுதசாலை ஒரு பெரிய ஹாலில் அமைஞ்சுருக்கு. இதுக்குள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. அந்தக்காலப்போர் ஆயுதங்களைப் பார்வையிடலாம். இதையொட்டி இருக்கும் ஒரு பெரிய கட்டிடத்தின் (Chakri Mahaprasat Hall) ரெண்டு புறமும் யானைகள் நிற்கும் மாடிப்படிகளின் நுழைவு. ரெண்டு படிகளுக்கும் முன்னால் ஒவ்வொரு போர்வீரர் மணைபோல ஒரு மரப்பெட்டி மேல் ஏறி நின்னு காவல் காக்கறாங்க.
அப்போ அங்கே இன்னொரு போர்வீரர் வந்தார். இடுப்பில் இருந்து என்னவோ ஒன்னை (சாவி?) பரிமாறிக்கிட்டதும் புதியவர் இடம் மாறி மணைமேல் ஏறி நின்னுட்டார். பழையவர் டக் டக்''ன்னு லெஃப்ட் ரைட்டு போட்டுக்கிட்டு மிடுக்கா நடந்து போனார். காவல் பணி நேரம் முன்னவருக்கு முடிஞ்சுருச்சு போல. சேஞ்சிங் ஆஃப் கார்ட்ஸ்''ன்னு பக்கிங்ஹாம் அரண்மனை வாசலில் பார்த்தது நினைவுக்கு வந்துச்சு ( எப்படி அங்கே(யும்) போனதை நைஸா உங்களுக்கு சொல்றேன் பாருங்க! )

நாம் நுழைவுக்கட்டணமா செலுத்தும் 350 பத், கொஞ்சம் கூடுதலோன்னு நினைக்கவிடாம இன்னும் ரெண்டு சமாச்சாரங்களுக்கும் சேர்த்தேதான் இதுன்னு சொல்லும்விதமா Vimanmek Mansion என்னும் தேக்குமரத்தால் கட்டப்பட்ட ஒரு அரசமாளிகைக்கு (ஆசியாவிலேயே பெருசாம்) இலவசமாப் போய்ப் பார்க்க அனுமதியும் (தனியா இங்கே போகணுமுன்னா 100 பத் கொடுக்கணும்) அரசரோட அரச உடைகள், மரகதபுத்தரின் மற்ற ரெண்டு காலத்துக்கான தங்கத்தாலான மாற்று உடைகள், பழங்கால நாணயங்கள் காட்சிப்பொருளா வச்சுருக்கும் ஒரு இடத்தையும்(Pavilion of Regalia) இலவசமாப் பார்த்துக்கலாம். முதல் அனுமதிச்சீட்டு வாங்குன ஏழுநாள் வரை இது செல்லுபடியாகும். அதானே ஒரே நாளில் அங்கிட்டும் இங்கிட்டுமா எப்படிப் பார்க்கறது? ஆனா அந்த ரெண்டு இடங்களுக்கும் போக நேரமில்லாமப் போச்சு:(

கிராண்ட் பேலஸ் வளாகம் பெருசுன்னாலும் பொதுமக்கள் பார்வைக்கு மூணில் ஒரு பாகம் மட்டுமே அனுமதி. கம்பிகேட்டுகளுக்குள்ளில் ராஜகுடும்பத்துக்காரர்கள் மாளிகை தெரியுது. இப்போ இருக்கும் அரசர் வேற ஒரு இடத்தில் அரசமாளிகையில் (சித்ரலதா மாளிகை) குடி இருக்கார். அரசகுடும்பத்துப் பிள்ளைகளுக்கான பள்ளிக்கூடமா இது முந்தி இருந்துச்சாம்.

இவருக்கு முன்னால் இருந்த எட்டாவது ராமர் அரண்மனையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டதும்கூட இந்த இடமாற்றத்துக்கு ஒரு காரணமா இருக்கலாம். இந்த சேதி தெரியவந்தவுடன், ராத்திரி நேரங்களில் ச்செடிகளைச்சுற்றி 'காவியமா நெஞ்சில் ஓவியமா'ன்னு தாய்மொழியில் பாடிக்கிட்டு உலாத்துவாங்களோ முன்னோர்கள் என்ற எண்ணம் என் மனசில். கோட்டை மதில்கள் நல்ல உசரமா இருப்பதால் நம்ம கண்ணுக்குப் புலப்படமாட்டாங்க இல்லே? உசரம் மட்டுமில்லை, சுத்தளவும் கூடுதல்தன். மதில் சுவர்களின் மொத்த நீளம் 1900 மீட்டர்கள்!!!!!


ஏராளமான படங்களை எடுத்துத் தள்ளிட்டேன் . அரண்மனைன்னு ஒரு ஆல்பத்துலே போட்டுவச்சுருக்கேன். விருப்பம் இருப்பவர்கள் பார்த்துக்கலாம்.




தொடரும்.............................:-)

Friday, July 30, 2010

அரண்மனை ........................(தாய்லாந்து பயணம் பகுதி 10)

அட! வாங்க உள்ளே. உடம்பு எப்படி இருக்கு? நலமா?
முதலில் நம்மை வரவேற்பவர் கண்ட்ரி டாக்குட்டர். இவர்தான் தாய்க்கு மருந்து மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை செய்த 'தாய் தன்வந்திரி'! மருந்து அரைக்க எவ்வளோ பெரிய குழவியும் அம்மிக்கல்லும் வச்சுருக்காரு பாருங்களேன்!


சொகம்தானுங்கன்னு சொல்லிக்கிட்டுத் திரும்புனா...............வானத்துக்கும் பூமிக்குமா(ச்சும்மா ஒரு பேச்சுக்கு) நின்னு மிரட்டும் தோரணையில் த்வாரபாலகர்கள் வாசலுக்கு உட்புறம். வெவ்வேற இடங்களிலும் ரெவ்வெண்டு பேரா பக்கத்துக்கொன்னா நிக்கறாங்க. அச்சுலே வார்த்த மாதிரி ஒன்னுபோல இருந்தாலும் வண்ணங்கள் மட்டும் ஜோடிக்கொன்னுன்னு இருக்கு. இன்னும் கொஞ்சம் கவனிச்சுப்பார்த்தால் தலையில் கமுத்தி வச்சுருக்கும் ஹெல்மெட் டிசைன்கூட வெவ்வேறதான். க்ரீடமுன்னு சொல்லலாமுன்னா ராஜா முதல் காவலாளிவரை கிரீடம் வச்சுருப்பாங்களா என்ன? இல்லே.... எல்லோரும் இந்நாட்டு மன்னர் வகையோ?

இந்த வர்ணம் பற்றியும் ஒன்னு சொல்லிக்கணும்.இங்கே இதுக்கு முன்னே இருந்த அரசர்கள் எல்லாம் கலர்கோட் ( colour code) போல ஆளுக்கொன்னு நிறமுன்னு பிரிச்சு வச்சுருந்தாங்க. அவுங்க சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் ச்செடிகளும் கூட அந்தந்த நிறத்தில்தான்.

முதலாம் ராமா ----பச்சை

ரெண்டாம் ராமா --வெள்ளை

மூன்றாம் ராமா-- மஞ்சள்

நான்காம் ராமா --- நீலம்

அஞ்சாம் ராமாவுக்கு இந்த ஐடியா பிடிக்கலையோ என்னவோ.....நிறங்களைப்பற்றி ஒன்னும் காணோம். ஆனா இவரோட திட்டம் வேற ஒன்னு. பெரிய குடும்பஸ்த்தர். 77 பிள்ளைகள். 44 பொண்ணு 33 பையன். இவர் கலைப்பொருட்களில் ஆர்வமுள்ள கலைஞர். பலநாடுகளில் இருந்து அலங்காரப்பொருட்களைக் கொண்டுவந்து கோவிலில் அடுக்கி வச்சுருக்கார்.

தமிழ்நாட்டு அரசர் ஒரு கலர் கோட் வச்சுருப்பது யாருக்காவது நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல

சரி சரி இது இருக்கட்டும். கொஞ்சூண்டு சரித்திரம் பார்க்கலாம். இந்த அரண்மனையைக் கட்டுனவர் அரசர் முதலாம் ராமா அவர்கள். வருசம் 1782. இங்கே வருமுன் தலைநகரம் தொன்புரி என்ற இடத்தில் இருந்துச்சு.
இது சாவ் பராயா ஆற்றின் அக்கரை. அதுக்கும் முன்னால் அயுத்தியாதான் தலைநகரம். (அடடா..... என்ன ஒரு பொருத்தம் பாருங்க. ராமன் இருந்த இடம் அயோத்தியா இல்லையோ!) பர்மாகூட நடந்த போரினால் அப்ப இருந்த அரசர் டாக்சின் அயுத்தியாவை விட்டு வெளியேறும்படியா ஆச்சு. இவர்தான் தொன்புரி வம்சத்தின் கடைசி அரசர். சக்ரி வம்சம் அதுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்துச்சு. அவுங்கதான் பட்டம் சூட்டிக்கிட்டதும், ராமா ன்னு பெயர் வச்சுக்கிட்டவங்க. (இப்போது இருக்கும் அரசர் ஒன்பதாம் ராமா)

அரண்மனை வளாகம் மொத்தம் 60 ஏக்கர். இங்கே ராஜகுடும்பத்துக்குன்னு வசிக்கும் மாளிகைகள் கட்டுனாங்க. அரசாங்க அலுவல்கள் பார்க்கத் தனி இடங்கள். அரசவை இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா கட்டிடங்கள் வளர்ந்துகிட்டே போச்சு. சாமி கும்பிட ஒரு கோவில் கட்டி அதுலேதான் மரகத புத்தரைப் பிரதிஷ்டை செஞ்சாங்க. இந்தக் கோவிலுக்கு WAT PHRA KAEW ன்னு பெயர். வாயிலே நுழையலைன்னா பரவாயில்லை. எமரால்ட் புத்தர்ன்னு சொன்னால் ஆச்சு.


மூணு வாசல் உள்ள முகப்பு. சுத்துச்சுவர்கள் எல்லாம் கண்ணாடிச்சில்லுகள் பதிச்சு அழகான வர்ணங்களால் டிஸைன் செஞ்சுருக்காங்க. சுத்திவர அடிப்பாகம் முழுக்க தங்க கருடன்கள் கையில் ரெவ்வெண்டு சர்ப்பம் பிடிச்சுக்கிட்டு ஒன்னோட ஒன்னு கை கோத்தமாதிரி நிக்குதுங்க.


முகப்பில் நடுவாசலுக்கு வெளியே ஒரு பெரிய வெண்கலக் கும்பாவில் புனித நீர் வச்சுருக்காங்க. பக்கத்தில் தாமரை மொட்டுகள் இரு தட்டுகளில் அந்த பூவின் காம்பைப்பிடிச்சு அந்த புனித நீரில் தொட்டு அந்த நீரைத்தலைக்குத் தெளிச்சுக்கணும். கோவிலுக்கு வந்த புண்ணீயம் நம்ம கணக்கில் ஏறும் அதே சமயம் செஞ்ச பாவங்கள் எல்லாம் போச்!
கம்போடியாவில் இருந்து கொண்டுவந்த வாலில்லா சிங்கங்களில் ஒன்னு.

இடப்பக்கம் உள்ள வாசலில் நுழைஞ்சு அவரை தரிசனம் செஞ்சுக்கிட்டு வலது பக்க வாசலில் வெளி வரணும். உடைக்கட்டுப்பாடுகள் இருக்கு. அதெல்லாம் நாம் கவலைப்படவேண்டியதில்லை. வெள்ளைக்காரர்கள் தான் கவனிக்கணும். உடலை மூடும் உடை சரியாக இல்லாதபட்சத்தில்
கோட்டை வாசலிலேயே விஷயத்தை விளக்கிச் சொல்லிடறாங்க. அங்கே கிடைக்கும் சராங்கை வாங்கி இடுப்பில் கட்டிக்கொண்டும் உடலில் போர்த்திக்கொண்டும் வரலாம். உங்க பாஸ்போர்ட்டையோ இல்லை க்ரெடிட் கார்டையோ அங்கே கொடுத்துட்டு துணிகளை வாங்கிக்கலாம்.

மரகதமுன்னு சொல்றாங்களே தவிர இவர் அசல் மரகதக் கல்லில் செய்யப்படவில்லை. பச்சை நிறமுள்ள ஜேட் கல்லில் செதுக்கி இருக்காங்க. 66 செ.மீ உயரம். அகலம் (அவர் ரெண்டு முழங்கால்களுக்கிடையில்) 48.3 செமீ. புத்தர் மறைவுக்குப்பின் ஐநூறு ஆண்டுகள் கழிச்சு இவரை உருவாக்கினாங்களாம். இந்தியாவில் செதுக்கப்பட்டதோன்னு கூட ஒரு ஐயம் இருக்கு. ஒரு சமயம் நடந்த உள்நாட்டுப் போரில் இருந்து இவரைக் காப்பாத்தனுமுன்னு சிலோனுக்கு அனுப்பிட்டாங்களாம். அதுக்குப்பிறகு 457 வது வருசம் பர்மா அரசர் அனுருத் சிலோனுக்கு அவரது ஆட்களை அனுப்பி, எங்க நாட்டுலே புத்தமதத்தைத் தழைக்க வைக்கப்போறோம். சிலையை எங்களுக்குத் தாங்கன்னு வேண்டுனதும் அவுங்க எடுத்துக் கொடுத்துருக்காங்க. பர்மாவுக்குப் புறப்பட்ட கப்பல் நடுவழியில் புயலில் சிக்கி, சிலை எப்படியோ கம்போடியா ( காம்போஜம்) போயிருச்சு. தாய்கள் கம்போடியா அங்கோர் வாட்டைக் கைப்பற்றியதும் சிலை வந்து சேர்ந்துச்சு தாய்லாந்துக்கு. இந்த கலாட்டாவில் இவரை யாரோ சுண்ணாம்பும் மண்ணும் கலந்த கலவையில் மறைச்சுவச்சு அது இறுகி ஒரு பாறையா ஆகி இருக்கு.

1454வது வருசம் அந்த பெரிய காரைப்பாறையில் மின்னல்தாக்கி அது பிளந்துருக்கு. அதுக்குள்ளே இவர் இருந்தததைக் கண்டுபிடிச்சாங்களாம் புத்த பிக்குகள். பூமியில் புதைச்சு பசுவின் காலிடறி, இல்லே அரசனின் ரதம் இடறி, அதுவும் இல்லேன்னா கனவில் இன்ன இடத்தில் புதையுண்டு இருக்கேன்னு சேதி அனுப்பி இப்படியெல்லாம் நாம் கேள்விப்பட்ட 'கதைகளா' இல்லாம இங்கெல்லாம் மின்னல் தாக்கியோ இடி இறங்கியோ வெளிப்பாடுகள் நடக்குது. முந்திகூட அஞ்சரை டன் தங்க புத்தரும் இப்படித்தானே வெளிப்பட்டார் இல்லையா?

அரசர் தலைநகரை மாற்றும்போதெல்லாம் இவரும் கூடவே அயூத்தியா, தொன்புரி, ரத்னகோஸின்னு மாறிக் கூடவே வந்துருக்கார். ரத்னகோஸின் என்பது பாங்காக்கின் பழைய பெயர்.

வருசத்து மூணு முறை இவருக்கு வெவ்வேற உடுப்புகள் போட்டு அலங்கரிக்கறாங்க. நினைச்சபோது உடுப்பை மாற்றிட முடியாது. அரண்மனை ஜோசியர்கள்/ பண்டிதர்கள் நல்ல நாள், முகூர்த்தம் எல்லாம் பார்த்துக் கொடுக்கணும்.

கோடைக்கு கூம்பு க்ரீடம், கழுத்திலிருந்து கால்வரை தங்க நகைகள்

குளிர்காலத்துக்குத் தங்கக்கம்பிகளாலும் தங்க மணிகளாலும் பின்னிய மெல்லிய வலைபோன்ற கம்பி உடை

மழைகாலத்துக்கு சஃபையர் கற்கள் பதிச்சு எனாமல் வேலைப்பாடுகளுமா உள்ள தங்கத்தொப்பி, இடதுதோளை மூடி இருக்கும் தங்க உடுப்பு பாதங்களில் தங்க ஆபரணம் இப்படி. வலதுதோள் மட்டுமே பச்சை நிறத்தைக் காமிக்குமாம்.

கடிகாரச்சுற்றில்: கோடைகால உடை, எமரால்ட் புத்தர் அபிஷேகத்துக்கு முன், குளிர்கால உடை, மழைக்கால உடை.



இந்தக் கோவிலைப் பற்றிய ரெண்டுவருசத்துக்கு முந்தி எழுதுன இடுகைகளின் சுட்டிகள் இதோ

அரண்மனையில் ஒரு மரகதம்

மரகத புத்தர்


கருவறைக்குள் படம் எடுக்க அனுமதி இல்லை. ஆனால் வெளிவராந்தாவில் இருந்து zoom செய்து எடுத்த படம் இது.

இங்கே எழுதியுள்ள விவரங்கள் கோவில் வராந்தாவில் விற்கும் தலபுராணம் ( 20 பத்) புத்தகத்தில் இருந்து பெறப்பட்டவை. மேலும் முக்கால உடை அலங்காரங்கள் படங்கள் தனியாக ஒரு செட் ( 4 படம்) 80 பத்துக்கு கிடைக்குது. விற்கும் தொகை முழுசும் கோவிலைப் புதுப்பிக்கவாம். நம்மாலான கைங்கர்யம்!

அரண்மனையில் இன்னும் ஏராளமாப் பார்க்கணும். ஒவ்வொன்னாப் பார்த்துக்கிட்டே போகலாம், வாங்க.

தொடரும்............................:-)