Monday, June 29, 2015

கார் பார்க்குன்னு நினைச்சது...... கண்ணாடி மாளிகையா!!!!

நம்ம ஊருக்கு  நிலநடுக்கம் வந்து போன ஒரு  அஞ்சாம் மாசம் நாங்க  இந்தியாவில் இருந்து  திரும்பி வந்து இங்கே பூமித்தாய்(!!!??)  ஆடிட்டுப்போனதால் ஏற்பட்ட அவலங்களையும் அழிவுகளையும் பார்த்துப் பொருமிக்கிட்டே  வீக் எண்ட் ஆச்சுன்னா நகரில் என்ன நடக்குதுன்னு  பார்க்கப் போய் ஒரு பாட்டம் அழுதுட்டு வர்றது வாடிக்கையா இருந்துச்சு.

சென்ட்ரல் சி(ட்)டியை  ரெண்டு வருசத்துக்கு  மூடியே வச்சுருந்துச்சு( CERA) செரா. (Canterbury Earthquake Recovery Authority)  அப்புறம் ஒவ்வொரு பகுதியா திறக்க ஆரம்பிச்சாங்க. மூடுன பகுதிக்குள்ளே  இடிபாடுகளை அப்புறப்படுத்தி காலி இடமா விட்டதும்தான், இங்கே முந்தி என்ன இருந்துருக்குமுன்னு  ஒரு மனக்குடைச்சல்.

புண்ணியவான் கூகுள் எர்த், 'கவலைப்படாதே நான் காட்டறேன்'னு  கருணை காட்டுனது உண்மை. அடடா... இப்படியா இருந்துச்சு!  சரியாக் கவனிக்காமப் போனமே....  இவ்ளோ அழகா?  அச்சச்சோ... நிரந்தரமுன்னு மெத்தனமா  இருந்தோமேன்னு  சுய இரக்கம்:(   இனிமேலே....  கவனிக்கணும். இன்னும் நல்லா எல்லாத்தையும் கவனிக்கணும் ... தீர்மானம் எடுத்தது அப்போதான்!

'மக்கள்ஸ், உங்களுக்குப் புது நகரம் கிடைக்கப் போகுது.  யாரும் கவலைப்படாதீங்க'ன்னு   ஒரு பக்கம்  அறிக்கை விட்டுக்கிட்டே, எங்கூர் நகரசபை மண்டையைப் பிச்சுக்கிட்டு, நில நடுக்க நிபுணர்களோடும், கட்டிடக்கலை விற்பன்னர்களோடும் சேர்ந்து  சிலபல டிஸைன்களை  பரிசீலித்து,  கட்டிக்குங்கன்னு அனுமதியும் கொடுத்துருக்கு. Futuristic Christchurch  இப்படி இருக்கப்போகுது அப்படி இருக்கப்போகுதுன்னு  தினசரியிலும்,  நிலநடுக்கத்துக்குப்பின் , வீடுவீடா தகவல் அனுப்பிக்கிட்டும்  இருக்கு. Canterbury Regional Council   Environment Canterbury அவுங்க பங்குக்கு   தகவலை அனுப்பி வச்சுடறாங்க.  Rebuild Christchurch  கொஞ்சமும் சளைக்காம ஃபேஸ்புக்லேயும்  தகவல்களைக் கொடுத்துக்கிட்டே நகர மக்களை அப் டு டேட்டா வச்சுருக்குன்னா பாருங்க.

அழிஞ்சு போன கட்டிடங்களின்   சொந்தக்காரர்கள் சிலர், இன்ஷூரன்ஸ் காசை  வாங்கிக்கிட்டு அந்த இடத்தில் திரும்ப கட்டிடங்களை கட்டி எழுப்பாமல், நிலத்தை வித்துக்கிட்டும்  இருக்காங்க.    யாராவது வாங்கும்வரை சும்மாக்கிடக்கும் இடம்,  எதாவது சம்பாரிச்சுக் கொடுக்கட்டுமேன்னு  அதையெல்லாம் ஒரு  கார்  பார்க்கிங் கம்பெனி லீஸுக்கு எடுத்துக்கிட்டு  ஜமாய்க்குது.  ஊருக்குள்ளே எங்கே பார்த்தாலும் கார் பார்க்குகள்தான்.  ஒரு மணி நேரத்துக்கு 2 டாலர்னு  வசூலிக்கறாங்க.  ஒரு பகல் பூராவும் நிறுத்திக்கணுமுன்னா அஞ்சு டாலர் கட்டணும்.  எல்லாம் மெஷீந்தான்.  ஆளாவது அம்பாவது! (மகள்  தினம்  அஞ்சு டாலர் கட்டிட்டு அடுத்துள்ள ஆஃபீஸ்க்குப் போறாள்.) சிட்டிக்குள்ளே  பார்க்கிங் ஸ்பேஸ்   வச்சுருக்கும் கம்பெனிகள் இனிமேல்  வராது போல!  மாடர்ன் லிவிங்:-(

ஒருநாள் நகர்வலம் (வழக்கமானது ) போறோம்....  கீழ்ப்பக்கமா மறைப்பு  வச்சுக் கட்டிக்கிட்டு இருந்தது  வளர்ந்து  இப்போ மேலே தலையை நீட்ட ஆரம்பிச்சுருக்கு.  பெரிய பெரிய  இரும்புப் பாளங்களா என்ன இது?   கார் பார்க்கிங் கட்டிடமா இருக்கணும். இருந்துட்டுப் போகட்டும். அதுவும் வேண்டித்தானே இருக்கு!

(இனிமேல் எங்கூரில் ஆறுமாடிக்கு மேல் கட்ட அனுமதி   இல்லை. அப்ப  ஏற்கெனவே இருந்ததை என்ன செய்வாங்களாம்?  இருந்தாத்தானே எதாவது செய்ய?  இருந்த நாலைஞ்சும் நிலநடுக்கத்தில் மண்டையைப் போட்டுருச்சே!  எனக்குத் தெரிஞ்சு இப்போ ரெண்டே ரெண்டு கட்டிடங்கள்தான்   நகரத்தில்.  ஒன்றின் விதி இன்னும் முடிவாகலை.  இன்னொன்னு எப்படியோ தப்பிச்சுருச்சு.)








இது ஒரு கார்னர் சைட்.  பக்கத்துலே இருந்த காலி இடத்தையும் சேர்த்து வாங்கிக் கட்டிக்கிட்டு இருந்தாங்க.  மொத்தம் 6000 சதுர மீட்டர்.  ஆறுஅடுக்கு.  இதுலே  உச்சியில் இருக்கும் ரெண்டு அடுக்குகளை  Deloitte  என்ற பெயருள்ள    Accountancy firm  எடுத்துக்கிட்டாங்க. ஆதிகாலத்தில் இதே தெருவில் இருந்த (!) கட்டிடங்களில் ஒரு சின்ன இடத்தில் இருந்தவங்க, இப்போ முன்னணிக்கு வந்து மேஜர் டெனன்ட் ஆகிருக்காங்க.

 அவுங்க பெயர்தான்  கட்டிடத்துக்கும்!  மீதி இருக்கும்  நாலு அடுக்குகளை  வாடகைக்கு  விடறதாப்பேச்சு.   இதோ இதை எழுதிக்கிட்டு இருக்கும் இந்த நிமிசம்  80%  இடத்துக்கு  கம்பெனிகள்   லீஸுக்கு எடுத்தாச்சு!

வெளிப்புறம் சுவர்களுக்குப் பதிலா கண்ணாடிகளையே வச்சுக்கட்டிட்டு, அதுக்கு வெளிப்புறமா இன்னொரு வகைக் கண்ணாடிகளை  அமைச்சுருக்காங்க.  வெளிப்புறக் கண்ணாடிகளை  முழுசுமாக வெவ்வேற கோணத்தில் திருப்ப முடியுமாம். எல்லாக் கண்ணாடிகளும் மூடி இருக்கும் சமயம்  எதிர்ப்புறமுள்ள ஏவான் நதியும் அதையொட்டி நிற்கும் தோட்டங்களும்   இந்தக் கண்ணாடிகளில் ப்ரதிபலிச்சு  பெரிய உயிரோவியம்  போல  இருக்குமாம்!  வெளிப்புறக் கண்ணாடிகள்  ஒரு சமயம்  அக்வா க்ரீன் போலவும், ஒரு ஆங்கிளில்  இளநீலமாவும்   என் கண்ணுக்குத் தெரியுது.






இந்தக் கட்டிடத்தில் முக்கியமான சமாச்சாரமாகக் கணக்கில் எடுத்துக்கவேண்டியது  இதோட அடித்தளத்தில் பொருத்தி இருக்கும் Base Isolators (the most advanced seismic protection system) தான்.  சமீபகாலங்களில்  ஏற்பட்டுக்கொண்டிருக்கும் நிலநடுக்க அட்டூழியங்களால்  ( After the seismic activities) கட்டிடத்தில் இருக்கும் எவருக்கும்  ஆபத்து ஏற்பட வாய்ப்பே இல்லை என்ற  அளவில் பாதுகாப்பான  கட்டிடமாக இது இருக்கு(ம்)
ஆர்வம் உள்ளவர்கள் இந்த சுட்டியில் போய் இந்தக் கருவிகள் வேலை செய்யும் முறையைப் பார்த்துக்கலாம்:-)





Southbase Construction கம்பெனிதான் இதைக் கட்டிக்கிட்டு இருக்காங்க.  ரெண்டு மாசத்துக்கு முன் கட்டிடம் பூர்த்தி ஆயிட்டாலும் இன்னும்கொஞ்சம் அக்கம்பக்க வெளி வேலைகள் பாக்கி இருக்கு.  நம்மூரில் பெயர் சொல்லக்கூடிய சிலபெரிய ப்ராஜெக்ட்டுகளை இந்தக் கம்பெனிதான் இப்பச் செஞ்சுக்கிட்டு இருக்கு! அண்டை நாட்டிலும் சிலபல கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்துருக்காங்க.

ஒரு சதுர மீட்டருக்கு   3070  டாலரென்ற கணக்கில் கட்டிடத்துக்கு மட்டும் 22.5 மில்லியன். மத்தபடி நிலம் அது இதுன்னு  40 மில்லியன் மட்டும்தான் செலவாச்சாம். எல்லாத்துலேயும் வெளிப்படையா இருக்கணுமென்பதும் (ட்ரான்பரன்ஸி?) எந்தக் கட்டிடம்  கட்டுறாங்களோ அதில் வேலை செய்யும் ஒவ்வொருவருக்கும் எல்லாவிவரமும்  கொடுத்துடணுமென்பது  இவுங்க கொள்கையா இருப்பதால்,  வேலையில் ஈடுபடும் ஒவ்வொருவரும் உண்மையாக உழைக்கிறாங்கன்னு  சொல்றாங்க கம்பெனி மேலிடத்தார்.   எப்படியோ  வாங்குற சம்பளத்துக்கு நல்லபடி உழைக்கிறது ரொம்பச் சரி.
டிஸைனிங் ஆரம்பிச்சு ஒவ்வொரு சிறப்பு வேலைக்கும் யார்யார் பொறுப்பு என்பதையெல்லாம் கூட அவுங்க   வலைப்பக்கத்தில் போட்டு வச்சு நமக்கும் சொல்லிட்டாங்க:-)

எங்கூருக்கு புது லேண்ட் மார்க்கா இனி இதுதான் இருக்கும்!  ( அதான் பழைய லேண்ட் மார்க்கான  கிறைஸ்ட்சர்ச்  கதீட்ரல்  இடிஞ்சுபோய்க் கிடக்கே!)
மேலே படம்:  இப்படி இருக்குமுன்னு  எங்களுக்குப்போட்டுக் காமிச்சப் படம். எங்கூர் கூவத்துலே படகில் போய்க்கிட்டே அழகை ரசிக்கலாம்:-)


நம்மூர் போலீஸ் ஸ்டேஷனுக்குக் குண்டு வச்சாங்க பாருங்க, அன்றைக்குத்தான்  இந்தக் கண்ணாடி மாளிகையைக் கிட்டப் போய்ப் படம் எடுக்கும் வாய்ப்பு கிடைச்சது. எழுதணுமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தேன்.  மற்ற வேலைகள் செய்யும்போது இடையூறா இந்த எண்ணங்களே  வந்துக்கிட்டு இருக்கே....   இதை நிறுத்த என்ன வழின்னு  யோசிச்சால்....   கண்டது ஒன்னுதான். எழுதிமுடிச்சுட்டு, சிஸ்ட்டத்திலிருந்து (!!) வெளியேத்திடலாம்:-)

  நம்ம வடுவூர் குமார் இதைப்பற்றித் தெரிஞ்சுக்க ஆர்வமா இருப்பார் என நினைக்கிறேன். உண்மையைச் சொன்னா இந்தப் பதிவே அவருக்காகத்தானோ:-)))) சிங்கையில் இதைவிட க்ராண்டா இருக்கும் எத்தனையோ கட்டிடங்களுக்கு அவர் பணி செஞ்சுருப்பார் என்றாலும், உள்ளூர் பெருமை எனக்குச் சொல்லாமலிருக்கமுடியுதோ!!!!

PINகுறிப்பு:இந்தக் கண்ணாடி மாளிகையின் ,  காரணம் தலைநகர் பயணத்தொடர்  வரும் திங்களன்றுதான். உள்ளூருக்கு முன்னுரிமை!




Friday, June 26, 2015

கரிகாலன் கட்டி வைத்த கல்லணை! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 61)

கோவிலடியில் இருந்து கிளம்பி நாம் வந்த வழியாகவே போறோம்.  கொஞ்ச தூரத்தில் இடது பக்கம் திரும்பினால் காவிரி பாலம்(நாம் திரு அன்பிலில் இருந்து வந்தவழி) வரும். எங்கேயும்திரும்பாமல் நேராகப் போனால் கல்லணை. கிளம்பின பத்தே நிமிட்டில் இங்கே வந்துட்டோம்.  வெறும் 7 கிமீதான். எதோ அன்னப்பறவை சிறகை விரிச்சு நிக்கறதுபோல் ஒரு  பால் வெள்ளைக் கட்டிடம்.  என்னன்னு பார்க்கலாமுன்னு இறங்கிப் பார்த்தால் இது கரிகால் சோழன் மணி மண்டபம்.


பொதுப்பணித்துறை கட்டி இருக்காங்க. திறந்து வச்சே ஒரு ஒன்பது மாசம்தான் ஆகுது. நிறைய சுற்றுலாப்பயணிகள்  இருந்தாங்க.



உள்ளே போய்ப் பார்த்தோம். அநாவசிய அலங்காரங்கள் ஏதும் கண்களை உறுத்தாமல்  நட்ட நடுவிலொரு பெரிய யானைமேல்  அமர்ந்திருக்கும் கரிகால சோழனின் சிலை! யாரும் அருகில் போய் தொடமுடியாமல்  தடுப்பு வேலி.  வெண்கலச்சிலையாம்.  இவ்ளோ பெரிய  வெங்கலச் சிலையா!!!! இருக்குங்கறீங்க?  சரி. இருக்குமுன்னு நம்பிட்டுப்போகலாம்.




பாவம்  குழந்தை, தன்னைக்கட்டும் சங்கிலியைத் தானே தூக்கிக்கிட்டுப் போகுது!





ரெண்டாம் நூற்றாண்டு சமாச்சாரம். காவிரியில்  வெள்ளம் பெருகி  ஊரே வெள்ளக்காடாகும் நிலைதான் அப்போ. அதானே.....  காவிரியில்  அப்போ எங்கேயும்  அணைகளோ, நீர்த்தேக்கங்களோ கிடையாதே!  தலைக்காவிரியில் மழை பெய்யப்பெய்ய  காவிரியில் தண்ணீர் பெருகி ஓடுவதுதான் வழக்கம்.
வெள்ளக் காலங்களில் நாட்டு மக்கள் படும் துன்பங்களையும்,  மழை இல்லாத கடும்கோடையில்  விவசாயம் செய்ய முடியாமல் இருக்கும் பயிர்கள் வாடுவதையும்   கண்டு, இதுக்கு ஒரு வழி கண்டுபிடிக்கணுமுன்னு  மன்னன் கரிகாலன் உக்கார்ந்து யோசித்ததன் விளைவுதான்  இந்தக் கல்லணை!
1080 அடி  (329.184  மீட்டர்) நீளம். 66 அடி அகலம். 18 அடிஉயரம் இப்படிக்  கணக்கு சொல்றாங்க.


ஆமாம்...  சீறிப்பாயும் தண்ணிக்குள்ளே எப்படி அணை கட்டுனாங்கன்னு பார்த்தால்...........  நமக்கு மட்டுமில்லை, உலகத்துக்கே வியப்புதான்!

பெரிய பெரிய பாறைகளைக் கொண்டு வந்து ஒருவரிசையில் போடணும்.  ஓடும் தண்ணியில் மணல் அதை அரிச்சுக் கீழே கொண்டு போய் செருகிடும். அப்படியே கொஞ்சநாள் விட்டுட்டு நல்லா பூமியில் ஆத்துக்குள்ளே அழுந்தினபிறகு  இன்னொரு கல்வரிசை அதுக்கு மேலே!  ரெண்டு கல் வரிசைக்கு இடையிலும் தண்ணியில் கரையவே கரையாத களிமண். (அந்தக் காலத்து ஃபெவிகால்!)  இப்படியே அதே இடத்துலே 18 அடி உசரம் வரை ஏத்தி இருக்காங்க.  பாறைகள் எல்லாம் திருவெறும்பூர் மலையைச் சுத்தி இருந்தவையாம்!  (யானை இழுத்தாந்துருக்கும்,  இல்லே!)   கல்லை வச்சுக் கட்டுனதால் இதுக்கு கல்லணை என்ற பெயரே பொருத்தமா அமைஞ்சுருக்கு!
இந்தக் கல் அண்ட் களிமண்  ரகசியம் எப்படி நமக்குத் தெரிஞ்சதுன்னா....   ஒரு சுவாரசியமான  சம்பவம் நடந்துருக்கு.



ஆர்தர் காட்டன் என்ற   ப்ரிட்டிஷ் ஆர்மி எஞ்சிநீயர் , நீர்ப்பாசனங்களைப் பற்றி ஆராய்ஞ்சுக்கிட்டு இருந்த  ஸ்பெஷலிஸ்ட்.  தன்னுடைய 18 வது வயசில் இந்தியாவுக்கு    ஆர்மி சர்வீஸில் வேலைக்காக வந்து சேர்ந்தார். இந்தியாவுக்கும் சிலோனுக்கும்(அப்ப இந்தப்பெயர்தான்!) பாம்பன் வழிப்போக்குவரத்துக்கான  மரைன் சர்வே எல்லாம் நடத்துனவர். 1828 லே (25 வயசு)  ஆர்மி கேப்டனா பதவி உயர்வு. அதேசமயம் காவிரி நீர் பாசன ஆராய்ச்சி பணியும் இவருக்குக் கிடைச்சிருக்கு.


கல்லணையைப் பார்த்து பிரமித்த இவர்  இவ்ளோ  மணல்பாங்கான  நதியில் எப்படி அணை கட்டி இருப்பாங்கன்னு  (கொஞ்சம் ரகசியமாவே) ஆராய்ஞ்சு பார்த்தப்பதான்  கல் அண்ட் களிமண் ரகசியம் புலப்பட்டு இருக்கு. (பாருங்களேன்....  இதைக்கூட வெள்ளைக்காரர் வந்துதான் கண்டு பிடிக்கணுமுன்னு  இருந்துருக்கு!) இவருடைய வியப்பு இப்பப் பன்மடங்காப்பெருக,    க்ராண்டா  கட்டி இருக்கும் அணைக்கட்டுன்னு  க்ராண்ட் அணைக்கட்  (Grand Anicut) என்று குறிப்பிடப்போய்  வெள்ளையர்களின் ப்ரிட்டிஷ் இண்டியாவில் இதே பேரால் குறிப்பிடப்பட்டுருக்கு.
அணைக்கு மேல் பாலம் கட்டுனதுகூட  1839இல் தானாம்.

அப்புறம் முக்கொம்புகிட்ட  காவிரியில் மேலணை கட்டுனதும் இவர் திட்டம்தான். அப்புறம்  ஆந்திராவில் கோதாவரி நதியில்  கட்டுன  அணையும்  இவர் கைவண்ணம்தான். க்ருஷ்ணா நதி அணையும் இவர் கட்டிக் கொடுத்ததுதான்.  ப்ரிட்டிஷ் இந்தியாவில் நீர்ப்பாசன சம்பந்தமான பலபணிகள் செஞ்சு கொடுத்துருக்கார். கூடவே அப்பப்பப் பதவி உயர்வுகளும் கிடைச்சுக்கிட்டே வந்து  1860 ஆம் ஆண்டு  பணி ஓய்வு  கிடைச்சப்ப  ப்ரிட்டிஷ் ஜெனரலா  இருந்தார்.  அதுக்கு அடுத்த  ஆண்டு இவரது சேவைகளை  மெச்சி, இவரைக் கௌரவிக்கும்விதமா  ஸர் பட்டம்  கொடுத்துருக்கு  ராஜாங்கம்.

யானையை க்ளிக்கும் இளைஞர் ஒருவர்  ஒவ்வொருமுறையும் ஃப்ளாஷ் போட்டுக்கிட்டே படங்கள் எடுப்பதும் அதை ரீவைண்ட் செஞ்சு பார்த்துட்டுத் தலையை ஆட்டி, உதட்டைப்பிதுக்கி டிலீட் செஞ்சுட்டு மறுபடி க்ளிக்குவதுமாக இருந்தார்.  பிட்  வகுப்பு மாணவியான எனக்குப் பார்க்கப்பொறுக்கலை.  அவரிடம்போய் ப்ளாஷ் இல்லாமல் எடுங்க.  அப்பத்தான் சரியா வரும். அப்புறம்  பிக்காஸோவில்  கொஞ்சம்  வெளிச்சம் சேர்த்துக்கலாமுன்னு சொல்லி என் கெமெராவில் எடுத்த படங்களைக் காமிச்சேன். (எதோ என்னால் ஆன ரெண்டு ரூ) அதன்படியே அவரும் ஃப்ளாஷ் இல்லாமல் எடுத்துப் பார்த்துட்டு  திருப்தியுடன் சிரிச்சுக்கிட்டே வந்து  தேங்ஸ் மேடம்னு ரெண்டுமுறை சொல்லிட்டு மேற்கொண்டு க்ளிக்க ஆரம்பிச்சார்.

இந்த மண்டபத்துக்கு உள்ளே வர  நாலுபக்கமும் வழி இருக்குன்னாலும்  ஒரு வழியை மட்டும் திறந்து வச்சுருக்காங்க. இதுதான் முக்கியவாசல் போல!
பளிச்சுன்னு புது மெருகோடு இருக்கும் இந்த மணிமண்டபத்தை இதே நிலையில்  பராமரிக்கணும். இப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின்  ஆட்சி காலத்தில் அடிக்கல்நாட்டி, ஒரே வருசத்தில் கட்டிடமும் பூர்த்தியாகி அவர் கையால்  12 ஃபிப்ரவரி 2014 இல் திறப்பு விழாவும் நடந்துருக்கு. தற்கால கல்வெட்டுக்கள் சேதி சொல்லுது.  ஆனால்.... கல்வெட்டுகளை சரியாப் பராமரிக்கலை போல இருக்கே!

எனக்கு இந்த இடத்தில் மனதில் உறுத்திக்கிட்டு இருக்கும் ஒரு விஷயத்தைச் சொல்லிக்கணும். நாட்டுமக்களுக்காக  அந்தந்த மாநில அரசுகளும், மத்திய அரசும் செய்துதரும் எல்லா சமாச்சாரங்களும்  மக்கள் வரிப்பணத்தில் இருந்து அமைக்கப்பட்டவைகளே! எந்த அரசியல்வியாதியும்  தன் சொந்தக் காசைச் செலவு செஞ்சு  சாலைகளும் பாலங்களும் இதைப்போன்ற நினைவுச் சின்னங்களும்  கட்டறதில்லை என்பதை நினைவில் வச்சுக்கணும்.

பொதுப்பணித்துறை  கட்டுதுன்னா அது அரசுக்காகச் செய்யுதே தவிர  ஆட்சியில் இருக்கும் அரசியல்வியாதிக்காக இல்லை என்பதை அவுங்களும் நினைவு வச்சுக்கணும். யார் இருந்தாலும் யார் போனாலும் ஏற்கெனவே அரசு ஆரம்பிச்சு வச்ச மக்கள் நல திட்டங்களை (இவை ஏற்கெனவே சட்ட சபையின் ஒப்புதல் பெற்று  ஆரம்பிச்சு நடந்துக்கிட்டு இருப்பவைகள்தானே?) ஆட்சி கைமாறுச்சுன்னு   அதை அம்போன்னு விடறது சரி இல்லை  என்பதை இங்கே சொல்லிக்கறேன்.

ஆனால் அதுக்காக இலவசமா  மக்களுக்கு  ஆட்டுக்கல் தரேன், அம்மிக்கல் தரேன்னு  ஆரம்பிச்சு  இலவசத்துக்கு அலையும் ஒரு கூட்டத்தை வளர்த்து விடுவதிலும் எனக்கு உடன்பாடில்லை. போதாக்குறைக்கு  அரசு ஊத்திக் கொடுக்கும் வியாபாரம் செய்வதை நினைக்கும் போதே எரிச்சலா இருக்கு. இதையெல்லாம் விட்டுத்தொலைச்சுட்டு,  மக்கள் உழைச்சு வாழும்வகையில் தொழிற்சாலைகளைத் தொடங்குவது, விவசாய வேலைகளுக்கு உதவிகள் செஞ்சு  அவைகள் நலிந்துவிடாமல்  காப்பது போன்றவைகளைச் செஞ்சால்  அநேகமாக  அனைத்து மக்களும்  உழைத்து சம்பாரிச்சுத் தன்குடும்பத்துக்கு வேண்டிய ஆட்டுக்கல்லோ அம்மிக்கல்லோ வாங்கிக்க மாட்டாங்களா என்ன? அப்படி தன் காசில் வாங்கி குடும்பம் செழிப்பது கௌரவமா இல்லையா?

கல்வியும் மருத்துவமும் அரசின் பொறுப்பாக இருக்கணுமே தவிர தனியார்களுக்குத் தாரை வார்த்துக்கொடுத்துட்டுக் கண்ணை மூடிக்கிட்டு இருக்கப்டாது. தன் நாட்டு மக்களுக்கு   கல்வி அறிவும்,  நல்ல உடல்நலமும் கொடுப்பது அரசாங்கத்தின்  முக்கிய  கடமை இல்லையோ? சொல்றதைச் சொல்லிட்டேன்....  என்னமோ பார்த்துச் செய்யுங்க!

விவசாயத்தை மட்டும்  நாம் விடவே கூடாது. காலத்துக்குத் தகுந்த மாதிரி  விவசாயத்தில் மாற்றங்கள்  கொண்டுவந்து சிறப்பாகச் செய்ய முயற்சிக்கணும்.  விவசாயம் முக்கியம் என்பதால்தானே   கல்லணையே கட்டும் திட்டம் வந்துச்சு இல்லையா?


 மாலைநேரத்தில் பறவைகள் கூடணையும் முன்னே  உடற்பயிற்சி செஞ்சுட்டுத்தான் தூங்கப்போறாங்க. அதான் எதுக்குமே தொப்பை இல்லை:-)


மணிமண்டபத்தை அஞ்சரைக்கு மூடிட்டாங்க. நாங்க அக்கம்பக்கமிருக்கும் தோட்டத்தையும் அணையையும் பார்த்துட்டுக் கிளம்பினோம்.  அவ்வளவா தண்ணீர் இல்லை. மண்டபத்துக்குப் பக்கத்திலே  ஒரு சின்னக்கோவில் இருக்கு.  மதில் மேல் சிங்கமா இல்லை புலியான்னு தெரியாதவகையில் ஒரு காட்டு மிருகம்!  அநேகமா காவிரி அம்மன் கோவிலாக இருக்கலாம்!




ஒரு அஞ்சு வருசத்துக்கு முன் இந்தப்பக்கம்  வந்தப்ப  யானை மேல் கரிகாலன் இருக்கும் சிலையும்,  அகத்தியரின் சிலையும் பார்த்துருக்கேன்.  அவையெல்லாம் இப்போ காணோம்!  ஒரு வேளை அது வேற வழியாக இருக்குமோ? தெரிஞ்சவங்க சொல்லுங்க.



இனி நேரா ஸ்ரீரங்கம்தான்...............  சலோ

தொடரும்......:-)



Wednesday, June 24, 2015

கொடிமரம் இப்படி படிமரமா ஆகிருச்சே! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 60)

பக்தர்கள் பரமனை ரசிக்க படிகளேறி உள்ளே ஓடினால்....  நானும் வருவேன்னு அடம்பிடிச்சு இப்படிப் படிகளில் ஏறிப்போகுது பாருங்க!

திரு அன்பில் வடிவழகனை தரிசித்த கையோடு திருப்பேர்நகர் போறோம். காவிரிக்கு அந்தாண்டை இருக்கார். எங்கேன்னு யாரோ கேக்க, அப்பாலே இருக்கார்ன்னு  பதில் கிடைச்சதோ என்னவோ இவர் அப்பாலரங்கனா ஆகிட்டார். கோவிலடி என்றும் ஒரு பெயர் உண்டு இந்தத் தலத்துக்கு! உண்மையில் கோவிலடி என்றால்தான் உள்ளூர் மக்கள்ஸ்க்கு நல்லாவே தெரியுது!


கிடந்த கோலத்தில் இருப்பு! நம்ம ஸ்ரீரங்கத்து  ரங்கனுக்கும்  மூத்தவராம்!

பஞ்சரங்கத்தலங்களில் ஆதிரங்கத்துக்கு (ஸ்ரீரங்கபட்டினம் மைசூர்) அடுத்தது  இந்த அப்பாலரங்கம்தான்.  மூணாவது இடம்தான் ஸ்ரீ ரங்கத்தில் பள்ளி கொண்டவனுக்கு.  நாலாவது சதுர்த்தரங்கம் கும்பகோணம் சாரங்கபாணி,  அஞ்சாம் இடம் நம்ம  இந்தளூர் (மாயவரம்)பரிமளரங்கனுக்கு!

சரியாச் சொன்னால் திரு அன்பில் கோவிலுக்கு நேரா குறுக்கால் போனால் நாலே கிமீயில் இந்தக் கோவில் வந்துரும் என்றாலும், கொள்ளிடம் நடுவில் இருக்கே!  அதனால்  கொஞ்சதூரம் கிழக்கே போய்  கொள்ளிடம் பாலம் கடந்து பூண்டி  போகும் வழியில் போய் மறுபடியும் மேற்கே  போகணும். சுத்துதான் ஆனாலும் ரொம்ப தூரமோன்னு  நினைக்க வேணாம். ஒரு பதினாறு கிமீ இருக்கலாம்.


நான் சொன்ன 'கொஞ்சதூரம் ' போகும்போதே  நிறையப்பேர் கைகளில் பூஜை சாமான்களுடன் நடந்து போறாங்க. பார்த்தால் கிறித்துவமதம் சேர்ந்தவர்களாத் தெரிஞ்சது. சிலர் தலையில் ஒரு கூடையுடன்.  கூடைக்குள்ளில் கரிஅடுப்பு போல சின்னதா ஒன்னு புகைஞ்சுக்கிட்டு வேற இருக்கு!  என்னவா இருக்குமுன்னு யோசிக்கும்போதே இடதுபக்கம் சிலுவைகள் புதைந்திருக்கும் இடம் பார்த்ததும்  இன்றைக்குக் கல்லறைத் திருநாளோ (All souls day)என்று நினைச்சதும் சரியாத்தான் போச்சு!







வலப்புறம் திரும்பிப் பாலம் கடந்ததும் ஏதோ வனத்துக்குள் போகுது பாதை.  வனப்பயணம் அலுக்கவே இல்லை.  பாதையில் அங்கங்கே மயிலாரின் நடமாட்டம்!  கொஞ்சம் ஆடக்கூடாதோ?  வாகன நடமாட்டத்துக்குப் பழகிய மயில்கள் என்பதால் வண்டிச்சத்தம் கேட்டவுடன் நிமிர்ந்து பார்த்துட்டு, பக்கவாட்டுப் புதர்களுக்குள் போயிருதுங்க


இடதுபக்கம் திரும்பும்படி உத்தரவாச்சு.  திரும்பினோம். வழி தவற சான்ஸேஇல்லை!  கோவில் வாசலுக்குப் போயாச்சு.  கோவிலடி!  கொஞ்சம் உயரமான இடத்தில் இருக்கு கோவில். மூணுநிலை ராஜகோபுரம்!  சின்னதா ஒரு தேர் கார்நிறுத்துமிடத்துக்கு அருகில்.


வழக்கமில்லாத வழக்கமா இவர் 'துளசி' வாங்கினார்.  'பாவம்'  துளசின்னு தோணி இருக்கும் போல!  இருக்கட்டும்! கோபுரவாசல் கடந்து உள்ளே போறோம். எதிரில் இன்னும் ஒரு இருபது படிகள் ஏற்றம். இதுலேதான் கொடிமரமும் ஏறி நடுவழியில் நிக்குது! போறபோக்கில்  இதையும் கும்பிட்டுவிட்டு உள்ளே நுழையறோம்.


நம்ம பெருமாள், மேற்கு பார்த்து கிடந்த நிலையில்  ஸேவை சாதிக்கிறார்.   ஒரு கை பாம்புப் படுக்கையின் அருகில் உக்கார்ந்திருக்கும் உபமன்யூ தலையைத் தொட்டு ஆசி வழங்கும் நிலையிலும், இன்னொரு கை ஒரு சின்னக்குடத்தை அணைத்துப்பிடிச்சுத் தூக்கி வச்சுருக்கும் நிலையிலும்  காட்சி தர்றார். அந்தக்குடம்தான் அப்பக்குடம். அதனால் அப்பக்குடத்தான் என்ற பெயரும் வந்துருக்கு.


தாயார் பெயர்  கமலவல்லி. இந்திரா தேவின்னும் ஒரு பெயர் உண்டு.

சொல்லிவச்சாப்லெ இந்தக் கோவிலுக்கும் நிறைய கதைகள் இருக்கு! ஒன்னொன்னும் ஒரு விதம்:-)


 உபமன்யூ என்னும் அரசன், ஒருநாள்  தியானம் செஞ்சு அதில் ஆழ்ந்துபோயிருக்கும்போது...  துர்வாஸ மகரிஷி வர்றார்.  மன்னன் உடனே தன்னைக் கவனிச்சு மரியாதை செய்யலைன்னு  மூக்குக்குமேல் கோபம் வந்து, 'பிடி சாபம். உன் பலம் அழியட்டும்' என்றார்.   அரசனுக்கு பயம் வந்துருச்சு. புராணங்களின் வழக்கப்படி சாபவிமோசனம் என்னன்னு கேட்க,   பலாசவனத்துக்குப் போய்   ஒரு லக்ஷம்பேருக்கு அன்னதானம் செய்' என்றாராம். இந்த திருப்பேர் நகருக்கு,  அப்போ இப்படி ஒரு பெயர் இருந்துருக்கு.



அதன்படியே  சாபவிமோசனத்துக்கான அன்னதானம்  தினமும் நடந்துக்கிட்டு இருக்கு. பெருமாள் பார்க்கிறார் .  ஒருநாள்  கிழவராக  உருவம் எடுத்து  சாப்பாட்டுக்கு வர்றார். சாப்பிட ஆரம்பிச்சவர் , அன்றைக்கு செஞ்சுவச்ச சமையல் முழுசையும் சாப்பிட்டுவிட்டு, இன்னும் எதாவது இருக்குமா என்ற கேள்வியுடன்  பார்க்க,   திகைப்புடன் இருந்த உபமன்யூ' இன்னும் எதாவது தேவையா பெரியவரே'ன்னு  கேட்டதும், ஒரு குடம் அப்பம் வேணும் என்றாராம்.  உடனே அப்பம் தயாரிக்க ஆரம்பிக்கிறார்  சமையல்காரர்.

பெருமாள்  ஒரு அலங்காரப்ரியன் என்று சொல்லக்கேள்வி. இப்பப் பார்த்தால்...  சரியான சாப்பாட்டுப்ரேமியுமா இருக்காரே! வைகுண்டத்தில் பெருமாளுக்கு  அமைஞ்ச  சமையல்காரர்  சரியா சமைக்கறதில்லை போல!  

அப்பக்குடம்  கிழவர் கைக்கு வந்ததும் உபமன்யூவின் சாபம் தீர்ந்து  பெருமாள் தரிசனம்  கொடுத்தார். இவ்ளோ சாப்பிட்டால் அசதியா இருக்காதா? அதான் படுக்கை(யும்) போட்டாச்சு.  பக்தர்கள் மனதில் இருந்து  இடம் பெயரக்கூடாது என்று விண்ணப்பித்தபடியால் சரி ன்னுட்டு இங்கேயே இருந்துட்டார்.  அதுவும் திருப்பேர் நகர் என்ற பெயருக்கும் காரணமா இருக்கு.

இன்னொரு கதை என்னன்னா....  இதே உபமன்யூ சிறு குழந்தையா இருக்கும்போது  பசிக்குப் பால் வேணுமுன்னு அழுதாராம். அப்போ சிவன் , 'இந்தா பாற்கடலை உனக்குத் தர்றேன். குடிச்சுக்கோ'ன்னார் (சிவபுராணம் சொல்லுதாம்!)  பக்கத்தில் இருந்த  பெருமாள், 'என்னடா இவர் நம்முடைய பாற்கடலை எடுத்து தாராளமா தானம் கொடுக்கறாரே (கடைத்தேங்காய் + வழிப்பிள்ளையார்) என்று(அல்ப்பமா) நினைக்காமல்,   ஒரு குடம் நிறைய அப்பம் எடுத்துக் கொடுத்தாராம், பாலில் தொட்டுச் சாப்பிட்டுக்கோன்னு!!

ஆட்டைக் கடிச்சு  மாட்டைக் கடிச்சு.... என்றதைப்போல  நம்ம பெருமாளையே   கடன் வாங்கிட்டு ஓடுனவரா ஆக்கிப்பிடுத்து இன்னொரு கதை!

நம்ம அழகர்கோவில்  கள்ளழகர் ,  அவருடைய ஊரில் அப்பம் சுட்டு விற்கும் ஒரு கள்ளர் இனத்துப் பெண்ணிடம், ஏராளமா அப்பங்கள் வாங்கி முழுங்கிட்டு, அதுக்குண்டான காசைக் கொடுக்காமல்  கள்ளனாட்டம்  ஓடி வந்துட்டாராம்.(அப்போ, ஒளிஞ்சு   ஓடி வந்து கிடந்தது கோவிலடியில்போல!)

இது மெய்தான்னு  சொல்லும் சாட்சியமும்  இருக்கே!  அழகர்கோவில் உற்சவர் சுந்தரராஜர்  ஊர்வலம் வரும் போது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும்  மேளதாளங்கள் எல்லாம் அடிக்காமல் நிறுத்திப்பிட்டு,  கப்சுப்ன்னு ஓசைப்படாமல்  உற்சவர் பல்லக்கைத் தூக்கிக்கிட்டு ஓடும் வழக்கம்  இப்பவும் இருக்காமே!  கள்ளன். இந்தப் பழக்கம் க்ருஷ்ணாவதாரத்திலும் தொடர்ந்திருக்கு பாருங்க. அங்கே அப்பம், இங்கே வெண்ணெய்!

எது எப்படியோ....  அப்பக்குடத்தானுக்கு  இங்கே அனுதினமும் அப்பம் நிவேத்தியம் செஞ்சு ப்ரஸாதமா பக்தர்களுக்கு  விநியோகிக்கறாங்க. அது  சாயரக்ஷைக்கு என்பதால் நமக்கு லபிக்கலை:(

காலையில் எட்டரை முதல் பகல் பனிரெண்டு, மாலை  நாலரை முதல்  இரவு  எட்டுன்னு கோவில் திறந்து இருக்குது.

பெரியாழ்வார், திருமங்கை ஆழ்வார், திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார்  வந்து தரிசனம் செஞ்சு, பாசுரங்கள் பாடி மங்களாசாஸனம் செய்துருக்காங்க. திவ்யதேசக் கோவில்களின்  பட்டியலில் இடம் உண்டு. நம்மாழ்வார், தன்னுடைய கடைசி பாசுரத்தை  இங்கு பாடிட்டு, திருநாடேகினார் என்கிறார்கள்.

கோவிலில் கட்டுமான வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கு. மற்ற சந்நிதிகள் எல்லாம் மூடித்தான் இருந்துச்சு. ஒரு சந்நிதிக்கு  வெளியே நம்ம ஆஞ்சி மட்டும் கைகூப்பி உக்கார்ந்துருந்தார்.  மூடிக் கிடந்தது ராமர் சந்நிதியாக இருக்கலாம்!

பார்க்கலாம், திருப்பணி வேலைகள் முடிஞ்சதும் கோவில் பளிச் என்றாகணும்!

சின்ன ஊரா இருப்பதால் நிதானமா நின்னு சேவிக்கலாம். முதலில் கோவில் வேலைகள் முடியட்டும்.


மணி இப்ப மாலை அஞ்சு இருவது.  நேரத்தோடு திரும்பி ஸ்ரீரங்கம் போகணும். பதிவர் சந்திப்புக்குச்  சான்ஸ் இருக்கும்போல:-))))