Friday, May 31, 2019

அண்டைநாட்டில் அடி எடுத்து வச்சாச் :-) (பயணத்தொடர், பகுதி 98 )

நம்ம லோடஸ்ஸிலே எனக்குப் பிடிச்சவிஷயம் என்னன்னா......   இங்கிருந்து அக்கம்பக்கம் டூர் போகக்கிளம்பினா, நம்ம பெரிய் பெட்டிகளை ஸ்டோரேஜில் போட்டுட்டுப் போகலாம்.  போகுமிடத்துக்கெல்லாம் தேவையில்லாமக் கட்டிவலிக்கேண்டா...
நியூஸிக்குப் போகும் சாமான்களையெல்லாம் பெட்டிகளில் அடுக்கி வச்சுட்டு, ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போனோம்.  ரெண்டுங்கெட்டானா  இருக்கப்போகுதுன்னு  ஹெவியா சாப்பிட்டேன்.  ஃப்ளைட்டுக்கு மூணு மணி நேரம் இருக்கும்போது ஏர்ப்போர்ட் போயிடணுமாம்.....

நம்ம ஃப்ளைட் நாலு மணிக்கு. அப்போ ஒருமணிக்கு ஏர்ப்போர்ட்.  அங்கே போக ஓலா புக் பண்ணிக்கணும். அதுக்குப் பயணநேரமா சுமார் ஒரு மணி ஒதுக்கணும்.  ட்ராஃபிக் அதிகமா இருந்தால்  கஷ்டம். கூட்டிக்கழிச்சுப் பார்த்து  பனிரெண்டுக்கு கேப் புக் பண்ணனுமோ?

அதெல்லாம் ஒன்னும் வேணாம். ஒன்னே காலுக்கு வண்டிக்குச் சொல்லலாம்.  ரெண்டுமணிக்கு ஏர்ப்போர்ட்டில் இருந்தால் போதும்னார் 'நம்மவர்' இந்த ஃப்ளைட்டுக்குக் கூட்டம் இருக்காதாம். ஓ....

அதே போல் ஆச்சு. உள்ளே  போறதுக்குமுன்னால்  எங்கெயாவது  எதாவது சாப்பிடலாமுன்னு தேடுனவர் கண்ணில் 'சங்கீதா' பட்டது. எனெக்கென்னமோ இந்த சங்கீதா மேல் அவ்வளவா  விருப்பம் இல்லை.  நம்ம  அடையார் சங்கீதாவுக்கு அடிக்கடி போயிருக்கோம் சென்னை வாழ்க்கையின் போது.  ரொம்பவே சுமார் ரகம்தான். அதுக்கு சரவணபவன் தேவலைன்னு என் எண்ணம். இப்போ இதையெல்லாம் பார்க்க முடியுமா?  சரின்னுட்டு அங்கெ போய்  பட்டியலைப் பார்த்து, நெய் இட்லி சொன்னோம்.
முதலில் காசைக் கட்டிடணும். கட்டியாச்.  இட்லி வருது. நெய் இல்லையாம். தீர்ந்துபோச்சாம்.  அப்ப எனக்கு வேணாம்னு சொன்னதுக்கு.....  'பில் போட்டாச்சு மேடம்....  இனி திருப்பி எடுக்க முடியாது'ன்னு பதில்.  நான் நினைக்கறேன்.....  நெய் என்ற சமாச்சாரம் ஆரம்பம் முதலே இல்லை.  அன்றைக்குத் தீர்ந்து போயிருந்தால் கடைசியா  யாருக்காவது  கொடுத்துருக்கும்போது இதோடு  தீர்ந்ததுன்னு நினைவில் இருக்காதா? என்னவோ போங்க.....  வியாபாரத்துலே அல்பம் அதிகம். சரி. சாம்பாராவது இருக்கான்னா....  பாத்திரத்தின் அடியில் சுரண்டுது அந்தப் பொண்ணு.  எனக்கு வெறுத்துப்போச்சு......

பயணிகள் 'பயண அவசரத்தில்' இருப்பதைத் தங்களுக்கு சாதகமாப் பயன்படுத்திக்கும் அல்பகுணம்.  காசைத் திருப்பிக் கொடுத்தால் வேலையாட்கள் சம்பளத்துலெ பிடிச்சுக்குவாங்களாம். 'தொலையட்டும் போ' ன்னு  அதைத் திருப்பிக்  கொடுத்துட்டு உள்ளே போனோம். சங்கீதாக்காரனுக்குப் போன ஜென்மத்துக்குக் கடன்  பாக்கி தீர்ந்தது.

இதை எதுக்கு இப்படி விலாவரியாச் சொல்றேன்னா.... நீங்க யாராவது  அங்கே போய் எதாவது வாங்கணுமுன்னா முதல்லெ  நீங்க  வாங்க நினைக்கும் பொருள், அதுக்கான ஆக்செஸரீஸ் எல்லாம் இருக்கான்னு கேட்டு கன்ஃபர்ம் பண்ணிக்கிட்டு காசைக் கொடுங்க. நெய் இட்லிக்குக் காசு வாங்கிக்கிட்டு இட்லியே இல்லைன்னு சொன்னாலும் சொல்வாங்க.  டில்லில் என்ட்ரி போட்டா அது யானைவாயில் போன கரும்பு. 
உள்ளே போனால்.....    எங்கோ ஒரு மூலையில் ஸ்ரீலங்கன் ஏர்வேஸ் செக்கின் கவுண்ட்டர்.  பெட்டிகளை ஒப்படைச்சு, செக்கின் செஞ்சு போர்டிங் பாஸ் வாங்கியாச்சு.  ஏர்ப்போர்ட்டின் இந்தப் பகுதி நல்லாவே இருக்கு. புதுசு போல!

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸில் ஒரு கால் கிலோ இனிப்பு  (ஸ்பெஷல் கலா கண்ட்) வாங்கினேன். கூடவே கொஞ்சம் மிக்ஸரும் காரத்துக்கு!   வழித்துணைக்கு இருக்கட்டுமே. ஒரு வழியா  மூணே முக்காலுக்கு  விமானத்துக்குள்ளே போனோம்.   சொன்ன நேரத்துக்குக் கிளம்பலை. பத்து நிமிட் லேட்.


எல்லாத்துலேயும் தமிழில் எழுதித்தான் இருக்கு.  முதலில் சிங்களம், ரெண்டாவது தமிழ், மூணாவதா இங்லிஷ்.
இண்டர்நேஷனல் ஃப்ளைட் என்பதால்   சாப்பாடு உண்டு.  பொதியைத் திறந்தால்  ஒரு ஜூஸ் & ஒரு ரோல்.  நம்ம  சாம்பார் சாதத்துக்குத் தொட்டுக்க உண்டாக்கும் காரம் போட்ட உருளைக்கிழங்குக் கறிதான் ஃபில்லிங்.  தொண்டைக்குள் மாட்டி விக்கிக்காமல் இருக்க அந்த ஆப்பிள் ஜூஸ்.   திங்க லாயக்கு இல்லை.... ப்ச்....

(ப்ரிஸ்பெர்ன் முருகன் கோவிலில்  ஒருமுறை வாங்குன மசால் தோசைக்குள்ளும் இப்படித்தான் உ. கிழங்கு வச்சுருந்தாங்க.  மசால்தோசை, பூரி வகைகளுக்குண்டான  உ.கி. செய்முறை, இலங்கை மக்களுக்குத் தெரியலைன்னு நினைக்கிறேன்.....  )


பண்டாரநாயகெ  விமானநிலையத்தில் இறங்குனப்ப மணி அஞ்சரை.  எழுபது நிமிட்  ஃப்ளைட். விஸா எல்லாம் ஆன்லைனில் வாங்கினதுதான். ஒரு பிரச்சனையும் இல்லாமல் இமிக்ரேஷன் முடிஞ்சது.
ஏர்ப்போர்ட்  சின்னதா இருந்தாலும் பளிச்ன்னு சுத்தமா இருக்கு.  ஆரவாரமான இடத்துலே  புத்தர் அமைதியா உக்கார்ந்துருக்கார்.
உள்நாட்டுப் பயனுக்கு ஒரு ஸிம் கார்ட் வாங்கிக்கணும். அதுவும் ஆச்சு.   கொஞ்சம்  ஸ்ரீலங்கன் காசும் எடியெம்மில் எடுத்துக்கிட்டோம்.
 முழிபெயர்ப்பு சரியான்னு தெரியலை....    இலங்கைத்தமிழோ என்னவோ?


வெளியே வந்தோம்.  கோபால் & துள்ஸிக்காக மஞ்சு வந்து காத்திருந்தார்!

இலங்கைப்பயணம் போகலாமுன்னு முடிவு செஞ்சப்பவே நம்ம தோழி புதுகைத் தென்றலிடம் விவரங்கள் கேட்டுக்கிட்டோம்.    அங்கேயெ பல வருஷங்களா  வேலை செஞ்சுக்கிட்டு இருந்த அவுங்க ரங்க்ஸ்  இந்தியாவுக்கே வந்துட்டாலும் கூட இப்பவும் வேலைவிஷயமா அடிக்கடி போயிட்டுத்தான் வர்றார். அவரும்  நம்ம குடும்ப நண்பர் என்பதால் , 'கவலையை விடுங்க. நானே எல்லா ஏற்பாடும் செஞ்சு கொடுத்துடறேன்'னார். தென்றலும் பல வருஷங்கள்  இலங்கையில் குப்பைகொட்டுனவுங்கதான்  :-)

நம்ம பயணத்திட்டம் எத்தனைநாள், எங்கெங்கே போக விருப்பம் எல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு அதுக்கேத்தாப்லெ ஏற்பாடுகள்.

நம்மை ஏர்ப்போர்டில் இருந்து கூப்பிட்டுக்கொண்டுபோய், பயணநாட்கள் முடியும்வரை நம்மோடவே இருந்து, புறப்படும்நாளில் திரும்ப  ஏர்ப்போர்ட்  கொண்டுவிடும்வரை ஒரு காரும், அதுக்கான ட்ரைவரும்  வேணுமுன்னு சொல்லி இருந்தோம்.

முதல்  ரெண்டு நாட்கள் கொழும்பு. அங்கே  அவருக்குத் தெரிஞ்ச கெஸ்ட் ஹௌஸில் தங்கல். அதன்பிறகு நம்ம பயணத்திட்டத்தின்படி அங்கங்கே ஹொட்டேலில் தங்குவதற்கான ஏற்பாடுகளை,  அவருடைய நண்பர் (அந்த கெஸ்ட் ஹௌஸ் உரிமையாளர்) செஞ்சுதர்றார். நல்லது.

  அந்த கெஸ்ட் ஹௌஸ் நகரத்துக்குள் இல்லைன்னு நினைக்கிறேன். அநேகமா ஒரு நாப்பது கிமீ தொலைவு. சுமார்  ஒரு மணி நேரமாச்சு (55 நிமிட் இருக்கும்) அங்கே போய்ச் சேர. இருட்டிப்போனதால் வழியில் எங்கும் படங்கள் எடுக்கலை.  தெருக்கள் எல்லாம் அகலக்குறைவாச் சின்னதா சந்துபோலவே வந்துக்கிட்டு இருக்கு!

நண்பரின் நண்பர் நம்மை வரவேற்று விட்டு, நமக்கான அறைகள் தயாரா இருக்குன்னார். சிங்களவர்கள்தான். இங்கெ ரெண்டு பேர் உதவிக்கு இருக்காங்க. அவுங்களிடம் சொன்னால் நமக்குத் தேவையானவைகளைச் சமைத்துத் தருவாங்கன்னுட்டு கிளம்பிப்போனார். நாங்களும் மாடியில் இருக்கும் அறைக்குப் போனோம். நல்ல விசாலமான பெரிய அறை! பால்கனியும்  இருக்கு!  ஆனால் இருட்டில் ஒன்னும் தெரியலை. கதவைத் திறந்தால்  காட்டுப்பூச்சிகளும், கொசுவும்  வரும் என்றதால் இரவு நேரத்தில் கதவைத் திறப்பது உசிதம் அல்லவாம். இதே போல  இன்னும்  மூணு அறைகள் இருக்காம்.  ஒரு தளத்துக்கு ரெண்டு என்ற கணக்கு.  அதுக்குமேலே மொட்டை மாடி!

 இரவு டின்னருக்கு  சமைக்கட்டுமான்னு  உதவியாளர்கள் கேட்டாங்க. அந்த நேரத்துலே தொல்லைப்படுத்த வேணாம், வெளியில் போய் சாப்பிட்டு வரலாமுன்னு  நம்மவர் சொன்னார். காலையில் ஒழுங்காய் ப்ரேக்ஃபாஸ்ட் எடுத்ததோடு சரி.  வேறொன்னும் சரி இல்லை. இப்போ பசி அதிகமா இருக்கு போல!


நல்ல ரெஸ்ட்டாரண்ட்  போகலாமுன்னு மஞ்சுவோடு கிளம்பிப் போறோம். சந்துத்தெருக்களில் போகும்போது   ஒரு இருவது நிமிஷப் பயணத்தில் சூப்பர்மார்கெட் போல ஒன்னு கண்ணில் பட்டது. எட்டிப் பார்த்துட்டுக் கொஞ்சம் பழங்கள் வாங்கினோம்.
அங்கிருந்து இன்னும் ஒரு அரைமணித் தொலைவில்  'தாலீஸ்' வாசலில் நிறுத்தினார் மஞ்சு. இந்தியர்கள் நடத்தும் ரெஸ்ட்டாரண்ட். வடக்கு, தெற்குன்னு எல்லாவித உணவும் இருக்காம்!

நான்  ஆனியன் ஊத்தப்பம். 'நம்மவர் ஆனியன் ரவா தோசை, மஞ்சு மஸால் தோசை. கூடவே ஆளுக்கொரு வடை.    விலை கொஞ்சம் அதிகமோன்னு ஒரு தோணல். இப்படியாகும் சமயங்களில்,  அதை நியூஸி காசுக்கு மாத்திப் பார்த்தால்  சின்னத் தொகையாக வந்துரும் :-)
கெஸ்ட் ஹௌஸுக்குத் திரும்பிட்டோம். மஞ்சுவுக்கு வீடு  இதே ஊரில்தான் என்பதால் அவர் காலை எட்டரைக்கு வந்தால்  போதும்.

நாமும் போய்த் தூங்கலாம். நாளை முதல் ஊர் சுத்தலாம்! சரியா?

தொடரும்......


Wednesday, May 29, 2019

அகஸ்தியர் கோவில் (பயணத்தொடர், பகுதி 97 )

முஸ்கி :  ஒருமாத லீவு முடிஞ்சதுன்னு நினைவூட்டிய நண்பர் விஸ்வநாத் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி !

மறுநாள் காலையில் எல்லாம் வழக்கம்போல். ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டு வந்து, செய்ய வேண்டியவை என்னென்னு பார்த்தால்.... ரிப்பேர் வேலை ஒன்னு இருக்குன்னார்.  ஒரு பெட்டியை பூட்டமுடியலை.  ஸிப்பை இழுத்துப் பூட்டுப்போடும் இடத்தில் உடைஞ்சுருக்கு.
ஏர்லைன்ஸ்காரர்கள் பொட்டிகளைத் தூக்கித்தூக்கி வீசியடிக்கறாங்க பாருங்க......  அதுவும்  'கண்ணாடி, கவனம் தேவை'ன்னு ஸ்டிக்கர் ஒட்டியிருந்தோமோ....  தொலைஞ்சது. ஃபுட்பால் விளையாடிட்டுத்தான்  பொட்டியைத் திருப்பித் தருவாங்க.....
பாண்டிபஸார் வணிகவளாகத்துக்குள் பெட்டி ரிப்பேர் பண்ணித்தர நம்ம கடை ஒன்னு இருக்கே!  பெரியவர் பெயர் இஸ்மாயில்னு நினைவு.  அவராண்டை கொண்டு கொடுத்தால் போதும். போனோம். வேலை ஆச்சு.  அங்கே பக்கத்துலேயே கொஞ்சம் அலங்கார லேஸ் வகைகளை வாங்கிக்கிட்டு வந்தோம்.
பகல் சாப்பாட்டுக்குக் கிளம்புனவங்க..... பிக்பஸாருக்குள் முதலில் நுழைஞ்சோம். இந்த ரெண்டு லிட்டர்  குக்கர் ஒன்னு 'பார்க்கணும்'  இந்த OPOS Cooking  பைத்தியம் பிடிச்சதுமுதல்  இப்படித்தான். அமெரிக்கப்பயணத்தில் ஒரு சின்ன குக்கர் வாங்கியாந்தேன்.  அப்புறம் பார்த்தால் அது மூணு லிட்டராம். ரெண்டேதான் வேணுமுன்னு ஒத்தைக் காலில் நிக்கறாங்க 'அந்த வகை' சமையல் நிபுணர்கள்!

நம்மவரோ..... எடை எடைன்னு புலம்பிக்கிட்டே இருக்கார். அதான் ச்சும்மாக் கண்ணுலே பார்த்துட்டாவது வரலாமுன்னு போனால்.....  'சரி. வாங்கிக்கோ. ஆனால் வேறெதுவும் இனி 'எங்கேயும்' வாங்கக்கூடாது'ன்னு 'கைகேயன் ' மாதிரி சத்தியம்  செய், செய்ன்னா.....   சரின்னு தலையை ஆட்டி வச்சேன் .
எதிர்வாடையில் பகல் சாப்பாடு ஆச்சு, பாவ்பாஜியும் பேல்பூரியுமா.... எதோ புது ரெஸ்ட்டாரண்டு.....

இனி 'நோ ஷாப்பிங்'னு அறைக்கு வந்துட்டோம்.
சாயங்காலம் ஆனதும்  இவர்தான் ஆரம்பிச்சார்......  'வெளியே போயிட்டு வரலாமா'ன்னு....  :-)

எப்பவும்  கலகலன்னு சந்தடியா இருக்கும் பாண்டிபஸாருக்குப் பின்னாடி இருக்கும் தெருவில் அப்படி ஒரு அமைதி நிறைஞ்ச கோவிலை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.....  நம்ம கீதா கஃபேயின் எதிர்வாடைக்குப் போயிடணும்.  அங்கே இருந்து  சிவஞானம் தெருவழியே போனால் ஒரு நாலு நிமிட் நடைதான் ராஜாத் தெரு.
அந்தக் காலத்துலே இப்படி எல்லாம்  போக்குவரத்து கிடையாது. அகலமான பாண்டிபஸார் சாலையைக் குறுக்கே கடப்பதெல்லாம்  ஜூஜுபி. எல்லாம் ஒரு  நாப்பத்தி ஆறு வருசங்களுக்கும் முந்தியாக்கும், கேட்டோ! ரங்கநாதன் தெருவில் கைவீசி நடந்து மாம்பலம் ஸ்டேஷன் போய்வரலாம் தெரியுமோ!!!!

அகஸ்தியர் கோவில்னுதான் அப்ப சொல்லிக்கிட்டு இருந்தோம். அகஸ்தியருக்கும் அவர் மனைவி லோபாமுத்திரைக்கும் ஒரு சந்நிதி.  இந்தாண்டை புள்ளையார் சந்நிதி.  நிறைய மரங்கள். அவ்ளோதான் கோவிலே!

கொஞ்சம் இருட்டாக்கூட இருக்கும் பகல் வேளைகளிலும்.....
கோடைவெயிலில் மரநிழலில்   நிம்மதியா உக்கார்ந்து அரட்டையடித்த நாட்கள் பல !

ஒவ்வொரு இந்தியப்பயணத்திலும் ஒருக்காப் போய்வரணுமுன்னு நினைச்சுக்கிட்டே இருந்தது இன்றைக்கு வாய்த்தது.  கொஞ்சம் மழையா இருக்கேன்னு தயக்கம் இருந்தாலும், பரவாயில்லைன்னு கிளம்பிப்போனோம்.  ஆட்டோதான்.
ராஜகோபுரம் எல்லாம் கட்டி இருக்காங்க!


கடந்து உள்ளே நுழைஞ்சால்  பளிங்குத்தரையும் கொடிமரமுமா, சுத்திவர சந்நிதிகளும் எல்லாத்தையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவந்ததைப் போல் பெரிய  தகரக்கூரையுமா இருக்கு!   மழையின் சுவடே கோவிலுக்குள் இல்லை!  மரங்கள் எல்லாம் எங்கே?

ஒரு  சந்நிதிக் கட்டடத்தில்  ஒரு பக்கம் ஸ்ரீசுப மங்கள கல்யாண வரதராஜர், இன்னொரு பக்கம் ஸ்ரீலக்ஷ்மிநாராயணர்னு டூ இன் ஒன் !
அடுத்தாப்லெ துர்கை தேவி. பட்டர்கள் அவுங்கவுங்க சந்நிதி வாசலில் உக்கார்ந்தபடி ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கலாம்.
நெருக்கமா சந்நிதிகள்....  சிவனும் பார்வதியும்...  ஸ்ரீ சுந்தர வணிபேஸ்வர் மற்றும் ஸ்ரீ சுந்தர வடிவாம்பிகை என்ற பெயரில் !
முருகன் வள்ளி தேவசேனாவுடன், ஐயப்பன், ஹனுமன், நவகிரஹங்கள், நம்ம புள்ளையார் சித்திபுத்தியுடன்.....  இப்படி எல்லாக் கடவுளர்களையும் ஒருங்கிணைச்சாச்சு.  எங்கடா  நம்ம அகஸ்தியரைக் காணோமேன்னு பார்த்தால்  பாவம்..... அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டுருக்கார்.


நவக்ரஹ மண்டபம்தான் ரொம்பவே அழகு! எல்லோரையும் எதாவதொரு க்ரஹம் புடிச்சு ஆட்டுதே......
நவக்ரஹ சந்நிதிக்கு நேரா இருப்பவர் புள்ளையார்!
தனிக்கோவில் போல.... சுத்திவர வெராண்டா வச்ச  உயரமான  சந்நிதி. சந்நிதியைச் சுத்தியும் (கோஷ்டத்தில்)  வெராண்டாவின் வெளிப்புறச் சுத்துச்சுவரிலும்..... அடடா.....  ராமாயணமும் மஹாபாரதமும்! 
அம்பு பறக்குதுப்பா ! கஜமுகாசுரனுடன் போர் !
ஆமாம்....  தினைப்புனம் காத்த வள்ளியை யாராவது பார்த்திருக்கோமோ?  இங்கே  புள்ளையார் தம்பிக்கு உதவி பண்ண கதையும் இருக்கு!


சும்மாச் சொல்லக்கூடாது.....  சின்னச்சின்னச் சிற்பங்களா இருந்தாலும் புராணக்கதைகள் எல்லாம் புரியும் வகையில் செதுக்கி இருப்பதோடு, பெயர்கள், சம்பவங்கள் எல்லாம் சுருக்கமாப் போட்டுருக்காங்க. சின்னப்பிள்ளைகளுக்குக் கதை சொல்லி விளக்கலாம். இளமனசில் சட்னு பதிஞ்சுரும்.


இந்தச்சிற்பங்கள் எல்லாம் எனக்குமே புதுசாத்தான் இருக்கு. கோவிலுக்கு வயசு ஒரு எழுபத்தியஞ்சுக்கு மேலேன்னு சொன்னாலும், இதெல்லாம் சமீபத்துச் சமாச்சாரமாத்தான் இருக்கணும். நான் பார்த்த காலத்தில் இதெல்லாம் இல்லவே இல்லை.....
நம்ம சென்னையிலேயே கூட  நவகிரஹக் கோவில்கள் இருக்கு. கிரஹதோஷம் இருப்பவர்கள், சட்னு போய்க் கும்பிட்டுக்கலாமுன்னு   கொஞ்சவருஷங்களாத் தகவல்கள் வந்தபடி இருக்குன்றதை யாராவது கவனிச்சீங்களா?   போரூர் சாலையில் போகும்போது கேது தலம்னு பார்த்த நினைவு இருக்கு.  இந்தக் கணக்கில் இந்த அகத்தியர் கோவில்  சந்திரனுக்குள்ளதாம்! 

 வலையில் கொஞ்சம் தேடிப்பார்த்தால்   அவுங்கவுங்க வெவ்வேற பட்டியல் போட்டு வச்சுருக்காங்க! எதை நம்பலாம்?  நம்பினால்தானே சாமி? பேசாம எல்லா கிரஹங்களுக்கும் அதிபதியான சிவனை வணங்கினால் போதாது?  பொதுவா சிவன் கோவில்களில்தான்  நவகிரஹ சந்நிதிகள் இருக்கும்.   நவகிரஹத்தலங்களில் அந்த சிவனையே பின்னுக்குத் தள்ளிட்டு கிரஹமூலவரை நோக்கியே சனம் பாயும் என்பதை நம்ம கும்மோண நவகிரஹத்தல பயணத்தில் பார்த்தோமே.... நினைவிருக்கோ?

விதிவிலக்காக ஒரு சில வைணவத்தலங்களில் நவகிரஹ சந்நிதிகள் இருக்கு, நம்ம மதுரைக் கூடலழகர் கோவில் போல!  பொதுவா வைணவர்களுக்கான நவகிரஹத் தலங்கள் திருநெல்வேலிக்குப் பக்கம் நவதிருப்பதி என்ற பெயரில் இருக்கு. இந்த ஒன்பது கோவில்களும் நம்ம திவ்யதேசப் பட்டியலில் இருப்பதால் டூ இன் ஒன் என்று போயிட்டு வரலாம்,  தோஷமும் போச்சு, தரிசனமும் ஆச்சுன்னு !அங்கெல்லாம்  அந்தந்தப் பெருமாள்தான் (மூலவர்) கிரஹ அதிபதியாக இருக்கார்.  அவரையே வணங்க தோஷம் விலகும்! 

இங்கே  அகஸ்தியர் கோவிலில் எல்லா விழாக்களையும் ரொம்ப நல்லமுறையில் கொண்டாடறாங்க. ஆடி மாச ஸ்பெஷல்ஸ் என்னன்னு போட்டுருப்பதையும் பார்த்தேன்.
என்னோட வியப்பு என்னன்னா.... இது  அறநிலையத்துறை நிர்வாகம் செய்யும் கோவிலாம். அட!   அதிலும் இறைநம்பிக்கையோடு இருக்கும் நல்லவங்களும் தப்பித்தவறி இருக்காங்க போல!
நல்ல கோவிலும், நல்ல தரிசனமுமா அமைஞ்சது, ரொம்பவே மகிழ்ச்சி!

வாசலிலேயே  ஆட்டோ கிடைச்சது.  கீதா கஃபேயில் டின்னர் (பூரி உருளைக்கிழங்கு) முடிச்சுட்டு லோட்டஸ் திரும்பினோம்.

மறுநாள்  'வெளிநாட்டுப் பயணம்' போறதால் அதுக்குத் தேவையானவைகளைத் தனிப்பெட்டியில் வச்சுட்டு, மற்றவைகளை இங்கே விட்டுவச்சுட்டுப் போகும் பெரிய பெட்டிகளில் அடுக்கி வச்சதில்  கொஞ்சம் பிஸியாகிப் போச்சு.

எல்லோரும் பாஸ்போர்ட், விஸா எல்லாம் சரி பார்த்துக்குங்க. நாளைக்குக் கிளம்பலாம் :-)

தொடரும்....  :-)