யதேச்சையாக் கடையில் பார்த்த மார்கோ ஸோப், அம்மம்மாவின் நினைவைக் கொண்டுவந்துச்சு. என்னமோ அம்மம்மாவையே வீட்டுக்குக் கூட்டி வந்த மாதிரி இருந்துச்சு மார்கோவை வாங்கிக்கிட்டு வீட்டுக்கு வந்தப்ப.
மறுநாள் குளிக்கும்போது அந்த மார்கோவைப் பிரிச்சதும்........ ஹம்ம்ம்ம்ம்ம்ம்ம்முன்னு அம்மம்மா வாசனை. உடம்பு தேய்ச்சுக்கும்போது நுரைச்சுக் கையில் வழுவழுத்துத் துள்ளி கீழே விழப்பார்த்த சோப்புக்கட்டி கைக்கு அடங்கியும் அடங்காமலும் இருக்கு. அம்மம்மா வீட்டுலே இப்படி ஒரு முழு சோப்பை கையில் பிடிச்ச அனுபவமே எங்க யாருக்கும் இருக்கச் சான்ஸே இல்லை.
மளிகை சாமான்கள் மாசத்துக்கொருமுறை வந்து வீட்டில் இறங்குனதும் மத்த சாமான்களையெல்லாம் சித்தியைப் பார்த்து எடுத்துவைக்கச் சொல்லிட்டு ஒரு கத்தியைத் தூக்கிட்டு வருவாங்க அம்மம்மா . பைக்குள் துழாவி மார்கோக்களை எடுப்பாங்க. மொத்தம் மூணு கட்டி. ஒரு மரஸ்டூலின் மேல் வச்சு, மார்கோவின் ஆடையைக் களைந்து அம்மணமாக்கி குறுக்கும் நெடுக்குமா, வெட்டு ரெண்டு . துண்டு நாலு . இப்படியே மத்த ரெண்டு கட்டிகளையும். பன்னெண்டு துண்டுகளையும் ஒரு பாரீஸ் மிட்டாய் தகர டின்னுக்குள்ளே எடுத்து வச்சதும் முதல் வேலை அந்த மர ஸ்டூலை வெளியே கொண்டுபோய் கழுவி வெயிலில் காயவைப்பாங்க. கண்ணைச் சுழட்டி நாங்க யாராவது இருக்கோமான்னு பார்க்கறதுக்கு முன்னே, எங்கே இந்த வேலை நமக்கு வந்துருமோன்ற பயத்துலே நாங்க எல்லோரும் 'எஸ்' ஆகிருவோம்.
இந்த மர ஸ்டூல் மட்டும் இல்லேன்னா அம்மம்மாவுக்குக் கையும் ஓடாது காலும் ஓடாது. ரொம்ப உயரம் குறைவான அகலமான ஸ்டூல் இது. அம்மம்மாவுக்குன்னே , சில வேலைகள் வீட்டுலே அலாட் ஆகி இருக்கும். அதுலே ஒன்னு அரிசியில் கல், நெல் எல்லாம் பொறுக்குதல். கண்ணாடி போட்டுக்கிட்டுக் காலை ஒரு பக்கம் நீட்டிக்கிட்டு, காப்படி ஒன்னுலே அரிசியை வாரி எடுத்து அந்த ஸ்டூலின் மேலே குவிச்சு வச்சு, கொஞ்சம் கொஞ்சமா, முன்னுக்குத் தள்ளிவிட்டு சொத்தை அரிசி, கல், நெல் எல்லாம் பொறுக்கி வாசலில் வீசுவாங்க. சட்னு பார்த்தால் இந்த வேலைக்காகவே ஜென்மம் எடுத்து வந்தாங்களோன்னு தோணும். அவ்வளவு கவனம். நேரம் ஆக ஆக கண்ணாடி கொஞ்சம் கொஞ்சமா நழுவி மூக்கு நுனிக்கு வந்துரும். அப்பப் பார்த்து சித்தி எதாவது கேக்கவோ, இல்லை சாதம் வெந்துருச்சான்னு கேக்க ஜல்லிக்கரண்டியில் நாலு பருக்கைகளை ஏந்தியோ வந்து நிக்கும்போது, தலையைக் கொஞ்சம் கூட நிமிர்த்தாம கண்ணைமட்டும் உசத்தி ஒரு பார்வை பார்ப்பாங்க...... எனக்கு ஒரே வேடிக்கையா இருக்கும்.
சிலசமயம் சித்திக்கு வேலை ஒன்னும் இல்லைன்னா அவுங்க அம்மம்மாவுக்கு எதிரில் உக்காந்து மடியில் ஒரு முறத்தை வச்சுக்கிட்டு ஸ்டூலின் மறுபுறம் அரிசியைப் பொறுக்கிக்கிட்டே எதாவது பேசிக்கிட்டு இருப்பாங்க.
அம்மம்மா வீட்டுக்கு ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை அரிசிக்காரர் ஒருத்தர் நெல்லூரில் இருந்து, அரிசி கொண்டுவந்து தருவார். குடும்பம் பெரூசா இருந்த தாத்தா காலத்தில் மாசாமாசம் அரிசிக்காரர் வருவாராம். அப்போ மூட்டையா வாங்குவாங்களாம். அரிசி தீர்ந்து போச்சேன்னு சிலசமயம் உள்ளுரில் கடையில் கிடைக்கும் அரிசியை வாங்கி சோறாக்குனா தாத்தாவுக்குச் சாப்பிடவே பிடிக்காதாம். சொத்து சுகம் எல்லாத்தையும் உதறித்தள்ளிட்டு ஊரைவிட்டு வரமுடிஞ்ச தாத்தாவால் சோத்து ருசியை மட்டும் தள்ளமுடியலைன்னு அம்மம்மா சொல்வாங்க.
தாத்தாவுக்குப் பூர்வீகமே நெல்லூர்தான். அவருடைய மாமனார் ரொம்ப செல்வாக்கானவராம். நிலம் நீச்சுன்னு லட்சுமி கடாக்ஷம் நிறைஞ்ச குடும்பமாம். மூலிகை மருந்துகளில் ஆர்வம் அதிகமா இருந்ததாலே அவரே இதையெல்லாம் அங்கங்கே சாதுக்களிடம் போய்த் தெரிஞ்சுக்கிட்டு ஊருக்கே வைத்தியம் பார்ப்பாராம். ஒத்தைக்காசை நோயாளிகள்கிட்டே இருந்து வாங்க மாட்டாராம். யாராவது காசை நீட்டுனா..... 'நேராப்போய் கோயில் உண்டியலில் போட்டுப் போ' ன்னுருவாராம். பொம்பளைங்க வைத்தியம் பார்த்துக்க வந்தால் ஒரு பட்டுத்துணியைக் கை மேலே போட்டு நாடி பிடிச்சுப் பார்ப்பாராம். அப்படி ஒரு கற்புக்கரசன் அவருக்கு ரொம்ப நாளாக் குழந்தைங்களே இல்லை. நாகதோஷம் காரணமாம்.
அவருடைய முன்னோர்கள் காலத்துலே ஒரு சம்பவம் நடந்து போயிருக்கு. அந்தக் காலத்துலே வீட்டுவீட்டுக்கு பசுக்களை வச்சு போற்றிக்கிட்டு இருந்தாங்களாம். இவுங்க வீட்டுலேயும் ஆறெழு மாடுகளாம். பாலைக் கறந்ததும் பெரிய மண்பானையில் ஊத்திக் காய்ச்சுவாங்களாம். காய்ச்சுன பாலைப் பத்திரமா சாமி அறையிலே கொண்டுபோய் வைக்கறதுதான் வழக்கமாம். யாரும் தப்பித்தவறி அதுமேலே விழுந்தோ, இல்லை கைபட்டோ கால் பட்டோ பானை ஒடைஞ்சு போச்சுன்னா?
இப்படி ஒரு நாள் பாலைக் காய்ச்சி, அது சூடா இருக்கக்கொள்ளவே வீட்டில் இருந்த பாட்டியம்மா பானையைத் துணிவச்சுத் தூக்கியெடுத்து சாமு ரூமுக்குள்ளே போய் அங்கிருந்த பிறிமணையில் வச்சுட்டு வந்துருக்காங்க.
கொஞ்ச நேரத்துலே என்னவோ பொசுங்குற மணம் லேசா வந்துருக்கு. முதல்லே அவ்வளவாக் கண்டுக்கலைன்னாலும், நேரம் போகப்போக என்னவோ ஒரு மணம் ரொம்ப வருதேன்னு என்ன ஏதுன்னு தேடிப் பார்த்துருக்காங்க.
அந்த வீட்டுலே ஒரு மனைப்பாம்பு இருந்துருக்கு. யாரையும் தொந்திரவே செய்யாதாம். தானுண்டுன்னு இருந்துருக்கு. அதுதான் அன்னிக்குச் சாமி அறையில் சுருண்டு படுத்துத் தூங்கிக்கிட்டு இருந்துருக்கு. பாட்டியம்மாவுக்கோ பார்வை கொஞ்சம் மட்டு. பிறிமணைன்னு நினைச்சுப் பானையைப் பாம்பு மேலே வச்சுருக்காங்க:(
பாவம், பாம்பு தப்பிச்சு ஓடாம அப்படியே கருகி உசுரை விட்டுருக்கு:(
விஷயம் தெரிஞ்சதும் ஏதேதோ பரிகாரமெல்லாம் செஞ்சும், அந்தக் குடும்பத்தை நாகதோஷம் பிடிச்சுக்கிச்சாம். இனி உங்க பரம்பரையில் பெண்குழந்தைகளே பிறக்காதுன்னு நாகம் சாபம் விட்டதா ஒரு பேச்சு.
கனவுலே வந்து சொல்லி இருக்குமோ என்னவோ? எப்பவும் சாமிங்க எல்லாம் கனவுலே தானே வந்து நான் இங்கே இருக்கேன். இப்படி இருக்கேன், இங்கே கோவில் கட்டுன்னெல்லாம் கட்டளை போடுது, இல்லையா?
அது போகட்டும், குழந்தைகளே பிறக்காதுன்னாலும் ஏதோ பொருள் இருக்கு. அதைவிட்டுட்டுப் பொண்குழந்தைங்க பிறக்காதுன்னா என்ன அர்த்தம்? இந்தக் காலமா இருந்தா நல்லதாப்போச்சுன்னு மக்கள்ஸ் நிம்மதியா இருப்பாங்க. ஒருவேளை அந்தக் காலத்துலே பெண் குழந்தைகள் மஹாலக்ஷ்மிக்குச் சமானமுன்னு நினைப்பு இருந்துருக்கலாம்.
இவுங்க வீட்டுலேயும் நாலைஞ்சு தலைமுறைக்கு பெண் வாரிசுகளே இல்லை. பரிகாரம், பூஜை, தீர்த்தயாத்திரை, காசிக்குப்போய் பாவம் தொலைச்சுட்டு வர்றதுன்னு பல உபாயங்களும் செஞ்சுக்கிட்டே இருக்க இருக்க...சாபம் நீர்த்துப்போய், வைத்தியர் வீட்டுலே ஒரு பொண் குழந்தை பொறந்துருக்கு. நாக தேவதையை வேண்டிப் பூஜையெல்லாம் செஞ்சு குழந்தைக்கு நாகரத்தினம் னு பெயர் வச்சு வளர்த்துக்கிட்டு இருக்காங்க.
அந்தக் கால வழக்கப்படி அஞ்சு வயசுலே கல்யாணம். மாப்பிள்ளை பெயர் ராஜகோபால். உள்ளூர்க்காரர். ஏதோ சொந்தமும் கூட. வீட்டுக்கு ஒரே புள்ளை. அப்பா அம்மாவைச் சின்னவயசுலேயே இழந்துட்டாராம். அதனாலே மருமகனும் ஒரு மகனா இருக்கட்டுமுன்னு மாமனார் வீட்டோடவே வந்துட்டார்.
ரொம்ப வருசங்களுக்குப்பிறகு வைத்தியர் ஐயா வீட்டுலே ரெண்டாவது குழந்தை. அதுவும் பெண். ஸோ சாபம் முற்றிலும் தீர்ந்தே போயிருச்சு. ஜெயம்மாள்ன்னு பேர் வச்சுக் கொண்டாடிக்கிட்டு இருக்காங்க. வீட்டுலே கூப்புடும் பேர் பங்காரு. அப்படின்னா தங்கம்ன்னு பொருள்.
நாகரத்தினம், ராஜகோபால் தம்பதிகளுக்கு முதல் குழந்தை பிறந்தப்ப நம்ம பங்காருவுக்கு வயசு மூணு. ரெண்டு குழந்தைகளும் ஒன்னா வளர்ந்து வீட்டுலே எல்லோரையும் மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடிச்சுக்கிட்டு இருந்துச்சு.
சரி....மீதிக்கதையை நாளைக்குச் சொல்றேன்.
PIN குறிப்பு: நாள் இன்னிக்கு நல்லா இருக்கேன்னு நம்ம 'அப்புறம் கதைகள் ஆயிரத்து ஐநூறு' வுக்கு அடிக்கல் நாட்டியாச்சு. எதுவுமே வீட்டில் இருந்தே ஆரம்பிக்குது என்றதால் அம்மம்மா முதலில் வர்றாங்க.
உங்க அன்பும் ஆதரவும் தொடரும் என்ற நம்பிக்கையுடன்.
Wednesday, September 29, 2010
அம்மம்மாவின் அழகுசாதனங்கள். ( அ.க.ஆ.ஐ. 1)
Posted by துளசி கோபால் at 9/29/2010 11:41:00 PM 43 comments
Labels: அனுபவம்
Monday, September 27, 2010
இந்தவாரம் கிடைச்ச போனவாரத்து கல்கி
ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துருச்சு. நமக்குத் தெரிஞ்ச அஞ்சு பேரின் கதை, கட்டுரைகள் ஒரே இதழில் இடம்பிடிச்சுக்குங்க!
நம்ம ராம்சுரேஷ்(பினாத்தலார்) அவர்களின் சிறுகதை, 'திரைகடல் ஓடியும்... '
நம்ம எல்லேராமின் நகைச்சுவைக் கட்டுரை, 'டீ குடி குடித்தபின் அடி'
நம்ம கமகம் லலிதாராமின் கட்டுரை. சிறப்பு என்னன்னா நம்ம பதிவர் ஈரோடு நாகராஜ் அவர்களைப் பற்றி. 'பயமுறுத்தும் படிகள்' (ஆஹா.... இதுதான் ஒரே கல்லில் ரெண்டு மாங்கா)
அஞ்சாவது யாருன்னா...... நம்ம ஞாநிதாங்க. 'ஓ' அவரும் நமக்குத் தெரிஞ்சவர்தானே?
அனைவருக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.
கல்கி இதழ்: 19.9.2010
PIN குறிப்பு: வார இதழ்கள் எல்லாம் இங்கே சண்டிகரில் ஒரு வாரம் லேட்டாத்தான் கிடைக்குது. தமிழ்நாட்டுலே போன வாரம் விக்காம நின்னுபோன சரக்கை அனுப்பிவிடறாங்களோன்னு ஒரு சம்சயம்.
Posted by துளசி கோபால் at 9/27/2010 04:35:00 PM 27 comments
Labels: பதிவர் சதுரம்
Friday, September 24, 2010
இந்த நாள் .......இனிய நாள்.
நீங்கதான் சொல்லணும் தலைப்பு சரியா இருக்கான்னு. சரியா ஆறு வருசத்துக்கு முந்தி..............என்னவோ ஒரு 'வீக் மோமெண்ட்'லே ஆரம்பிச்சது இந்த துளசிதளம். ஒரே கல்லுலே ரெண்டு மாங்காய்னு நம்ம கோபாலின் பொறந்தநாளும் அன்னிக்குத்தான்.
வாழ்க்கையின் ரெண்டு முக்கிய விஷயங்களை ஒன்னோடொன்னு முடிச்சுப்போட்டு வச்சுக்கிட்டால் பின்னாளில் தடுமாற்றம் வராது பாருங்க. அதுக்குத்தான் இந்த உபாயம்:-)
பரவாயில்லாம வண்டி ஓடுது. இதுவரை சம்பாரிச்சது உலகெங்கும் இருக்கும் நட்புகள். இதைவிட வேறென்ன பெரிய பரிசு இருக்கு ஒரு எழுத்துக்காரிக்கு?
உங்கள் அன்பும் ஆதரவும் வழக்கம்போல் இந்த ஏழாம் வருசமும் தொடர்ந்து கிட்டும் என்ற நம்பிக்கையில், 'துளசிதளம்' மகிழ்ச்சியோடு அனைவருக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
நன்றி மக்களே.
என்றும் அன்புடன்,
துளசி கோபால்.
Posted by துளசி கோபால் at 9/24/2010 04:28:00 AM 55 comments
Labels: அனுபவம்
Thursday, September 23, 2010
ராவணனின் மாமனார் ( போன பகுதியின் தொடர்ச்சி)
நாம் போகும் வழியில் Zirakpur ட்ஸிரக்பூர் என்ற ஊர் இருக்கு. சண்டிகர் எல்லையைக் கடந்து ஒரு அஞ்சு கிலோமீட்டரில் இருக்கும் இந்த ஊரில்தான் ஷாப்பிங் செய்யன்னு அடிக்கடி வந்து போவோம். பெரிய வளாகத்தில் பலதரக்கடைகளும், முக்கியமாக 'Bபிக் பஸாரும்' இருக்கு. அரிசி பருப்பு வாங்க இங்கே வரும்போது சகிக்க முடியாத ஒரு கஷ்டம் என்னன்னா...... பப்ளிக் அட்ரெஸிங் சிஸ்டமுன்னு தொணதொணன்னு ஸேல் அயிட்டங்களைக் கூவிக்கிட்டே இருப்பாங்க. ஒரு தடவை ரெண்டு தடவைன்னு பத்து நிமிச இடைவெளியில் சொல்லக்கூடாதா? வாடிக்கையாளர்கள் காது அறுந்து கீழே விழணுமுன்னு எஜமான்கள் முடிவு எடுத்துட்டா...... மைக்லே சொல்லும் ஆட்கள், கட்டளையை மீற முடியுமா? காதுக்குள்ளே வச்சு அடைச்சுக்கும் இயர் ப்ளக் எடுத்துக் கைப்பையில் வச்சுக்கிட்டுத்தான் கடைக்கே கிளம்பணும்.
என்ன ஒரு ஆறுதலுன்னா..... உப்புப்புளி மிளகாய் வாங்கும் கையோடு தங்க வைர நகைகளையும் பிக்பஸாரில் வாங்கிக்கலாம். குஜராத் ஜாம்நகரில் அம்பானி சாம்ராஜ்யத்தில்தான் இப்படி ஒன்னு பார்த்தேன். அப்போ....அம்பானியால் இதெல்லாம் முடியுமுன்னு ஆச்சரியப்படாமல் நகர்ந்து போனதென்னமோ நிஜம்.. இப்போ.... பிக் பஸாரில்.......மக்களுக்கு 'வாங்கும்' திறன் கூடி இருக்குன்றதுக்கு இதைவிட வேற ஆதாரம் தேவையா?
ஊருக்குள் நுழையாமல் டெல்லி போகும் வழியில் இருக்கும் மேம்பாலத்தில் சுற்றுமுற்றும் இருக்கும் காட்சிகளைப் பார்த்துக்கிட்டே பிள்ளையார் 'விர்'ன்னு வேகம் எடுத்தார். நேஷனல் ஹைவே 21. தமிழர் குடியிருப்பில் இருந்து கிளம்புன நாப்பதாவது நிமிசம் நாங்களும் 22 கிலோமீட்டர் வந்துட்ருக்கோம். Gagar ககர் நதியின் குறுக்கே போகும் மேம்பாலத்தைக் கடந்து இடதுபக்கம் ஜகாவாங்கி பாலத்துக்கடியில் போய்ச் சேர்ந்தோம். ஒரு சின்னக் கூட்டம் அங்கே புள்ளையாரை நதியில் முக்கி எடுப்பதுபோல 'பாவனை' காமிச்சுக்கிட்டு இருக்காங்க.
மூணுமுறை இதோ இதோன்னு பாவ்லா காமிச்சுட்டு அவரைக் கொண்டுபோய் வண்டியில் வச்சுட்டு, சின்னதா ஒரு புள்ளையாரை பழம் வெத்தலைபாக்கு, அகல்விளக்கோடு ஒரு தட்டில் வச்சு கேமெராவுக்குப் போஸ் கொடுத்துட்டு தட்டோடு தண்ணீரில் மூழ்கடிச்சாங்க. ஏற்கெனவே மூணுநாலு இளைஞர்கள் நடு ஆத்தில் தண்ணீரில் நின்னுக்கிட்டு பிள்ளையார் கரைப்பவர்களுக்கு உதவி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. இன்னிக்குக் கொஞ்சம் காசு பார்த்துடனும்தானே?
அப்போதான் கவனிச்சேன் இன்னொரு கூட்டம் கொண்டுவந்து வச்சுருந்த சிலையை. அட! யானை இருக்கேன்னு பார்த்தால் அழகான அம்சமான முகம் உள்ள சாமி யானை வாகனத்தில் சாய்ஞ்சு நிக்கறார். யார்ரா இதுன்னு யோசிக்கும்போதே இவரைப்போல இன்னும் ரெண்டு மூணுபேர் வந்து இறங்கிட்டாங்க. கையில் தராசு, ஏதோ கருவிபோல ஒன்னு இப்படி விதவிதமா இருக்கு.
ஜிலுஜிலுன்னு கோட்டுப்போட்ட பேண்ட் வாத்திய கோஷ்டி ஒன்னு அப்பப்ப வாசிச்சுக்கிட்டு இருக்காங்க. நம்ம புள்ளையாரை வண்டியில் இருந்து இறக்கி ஆத்தங்கரையில் ஒரு பக்கம் வச்சோம். மத்த சாமிகள் எல்லாம் கொட்டுமுழக்கோடு போகும்போது நம்ம சாமி? இன்ஸ்டண்ட்டா பேண்ட் வாத்திய கோஷ்டியை வாடகைக்குப் பிடிச்சோம். ஹிந்திப் பாட்டு முழங்க, நம்மாட்கள் ரெண்டு குத்தாட்டம் போட புள்ளையாருக்கு முகத்தில் அப்படி ஒரு சிரிப்பு.
கரடுமுரடாய் கல்லும் மண்ணும் நிறைஞ்ச ஆற்றின் கரையில் நம்ம புள்ளையாரைத் தூக்கிக்கிட்டு நம்ம சனம் கஷ்டப்பட்டு மெள்ள மெள்ள நீருக்கு அருகில் கொண்டு போனாங்க. பயங்கர கனம் நம்மாளு. வெறுங்களிமண்ணும் வைக்கோலுமா வச்சு. மரச்சட்டத்தில் நிக்க வச்சுச் செஞ்ச அஞ்சடி உருவம்.
கடைசிநாளில் எல்லோரையும் சேர்த்தே ஆற்றுக்குக் கொண்டு போகலாமுன்னு நம்ம புள்ளையாருக்குத் துணையா வீடுகளில் வச்சு வணங்கிய சின்ன சைஸ் பிள்ளையார்கள் கோவிலில் ஒரு ஒம்போது வந்து சேர்ந்திருச்சு. அவுங்களையும் ஆளுக்கொன்னாப் பிடிச்சுத் தூக்கிக்கிட்டுப் போனோம்.
குருக்களைக் கூடவே கொண்டுபோயிட்டதால் செய்யவேண்டிய சாஸ்திரங்களைச் செய்து தீபாராதனை காமிச்சு எல்லோரும் வணங்கி விடை கொடுத்தோம். 'மூஷிக வாகன மோதக ஹஸ்த...' பாடினேன்(மெள்ள எனக்கு மட்டும் கேக்கும்படி) இத்தனைநாள் தினமும் பார்த்தவரைப் பிரியணுமேன்னு சின்னதா ஒரு சங்கடம். நதிநீர் பாய்ஸ்கிட்டே சொல்லி நல்ல ஆழத்துலே கரைக்க ஏற்பாடு செஞ்சுட்டு ஆண்கள் எல்லோருமா சேர்ந்து புள்ளையாரைத் தூக்கிக்கிட்டுத் தண்ணீரில் இறங்குனாங்க.
தண்ணீர் வேகம் நிறைய இருந்துச்சு. அதான் ஒரு மாசமா மழை விடாமப் பேய்ஞ்சுக்கிட்டு இருக்கே! தண்ணீரில் விட்ட புள்ளையாரைப் பசங்க ஆழமான பகுதிக்கு அப்படியே தள்ளிக்கிட்டுப் போயிட்டாங்க.
தண்ணியில் விடப்போறோம்
கோஷங்கள் முழக்கம் கேக்குதேன்னு தலை உயர்த்திப் பாலத்தைப் பார்த்தா..... ஏராளமான வண்டிகளில் மக்கள்ஸ் சிலைகளோடு வந்துகிட்டு இருக்காங்க. தலையில் உடம்பில் முட்டாய்க்கலர் குங்குமமும், பிச்சுப்போட்ட பூவிதழ்களுமாக!
இத்தனை கலாட்டாவில் சின்னதா ஒரு பந்தல் போட்டுக்கிட்டு முட்டைகளை அவிச்சுச் சுடச்சுட விற்பனை நடக்குது! ஒரு ஒம்போதுநாள் இருந்த வெஜ் விரதத்தை முடிச்சுவைக்க நான் வெஜ் ஐட்டம்?
யானைச்சாமி என்ன ஏதுன்னு விசாரிக்கணுமே? இவர் விஸ்வகர்மாவாம். யூ மீன் தேவ தச்சன். தேவ்லோக்கா கார்பெண்டர்?''
'கார்பெண்டர் நை. யே தேவ்லோக் கே சோனார்!' இவர் நகையை தராசுலே வச்சு எடை பார்க்கிறார். இன்னொரு விஸ்வகர்மாவுக்குக் கையிலே ஒரு உளி மாதிரி ஒன்னு. இப்பப் புரிஞ்சு போச்சு. அவரவர் தொழில் அனுசரிச்சு அவர் கையிலே ஆயுதம், கருவிகளைக் கொடுத்துருக்காங்க.
அப்போதான் சொல்றார் கோபால்...... முந்தாநாள் எங்க ஃபேக்டரியில் கூட ஏதோ பூஜைன்னு வேலை நடக்கலை. அப்படியா? விசாரிச்சுருவோம்....
ஈரேழு உலகின் கட்டிடக்கலையின் தலைமை ஆர்க்கிடெக்ட் இந்த விஸ்வகர்மா என்னும் மயன். தேவதச்சன்ன்னு இங்கே நம்ம பக்கங்களில் சொல்றோம். இவர்தான் ராவணனின் மாமனார். மண்டோதரியின் தந்தை. பொண்ணுக்கு சீர் வரிசையாத்தான் ராவணனுடைய மாளிகைகளைக் கட்டிக் கொடுத்துருக்கார். அந்த மாளிகைகளின் அழகை சுந்தரகாண்டத்தில் வர்ணிச்சிருப்பாரு பாருங்க வால்மீகி......அடடான்னு இருக்கும்.
சுவர்க்க லோகத்தை, சத்திய யுகத்திலும் நிர்மாணிச்சவர் இவர். த்ரேதாயுகத்தில் இலங்கையில் மாளிகைகளை கட்டுனார். அதுக்குப் பின்னே த்வாபர யுகத்தில் த்வாரகையில் ஸ்ரீ கிருஷ்ணபரமாத்மாவுக்கு அரண்மனைகளைக் கட்டித்தந்தார். மகா பாரதத்தில் வரும் ஹஸ்தினாபுரம், இந்திரப்பிரஸ்தம் நகரங்களை நிர்மாணிச்சவரும் இவரே. இவை எல்லாம் இவருடைய மாஸ்டர் பீஸ்களில் சில! பூரியில் இருக்கும் ஜகந்நாத் கோவிலையும் இவர்தான் கட்டித் தந்தாராம்!
இவரை விசேஷமா இங்கே இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில், ஒரிஸ்ஸா, மேற்கு வங்காளம், ஜார்கண்ட், திரிபுரா, மாநிலங்களிலும் ஹரியானா உத்தர்கண்ட் மாநிலங்களிலும் கொண்டாடுறாங்க. தச்சுவேலை, இரும்பு வேலை, தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பல்வேறு ஊழியர்கள், கைவினைப்பொருட்கள் செய்யும் கலைஞர்கள், தங்கம் வெள்ளி வேலை செய்யும் சமூகத்தினர் இப்படி தொழிற்கருவிகளை வச்சு வேலை செய்பவர்கள் அனைவரும் வழிபட்டு வர்றாங்க.
இவருக்கு வாகனம் நம்ம யானை! ஒரு கோவிலில் (பாபா ரத்னசாமி கோவில்) இவரோட சந்நிதி ஒன்னு பார்த்தேன். அப்போ இவர் யாருன்னே எனக்குத் தெரியாது, வயசான வெண்தாடிச் சாமி ஒரு அன்னப்பக்ஷியுடன் இருந்தார். பீஷ்மரோன்னு நினைச்சேன். இப்ப என்னடான்னா யானை வாகனமும் இளவயதுத் தோற்றமாவும் இருக்கார்.
எல்லாத்தையும் ஜஸ்டிஃபை பண்ணிருவேனே. அதன்படி இளவயதில் முறுக்கா இருந்தப்ப யானை வாகனம். தாவி ஏறி கட்டடங்களைக் கட்டித் தூள் பரத்தி இருப்பார். வயசானதும் ரிட்டயர் ஆகி உக்காரும்போது நிதானமா நடக்கும் அன்னப்பறவையை வாகனமாக்கிக்கிட்டார். தியரி சரி வருதுங்களா?
விருந்தும் மருந்தும் சாமியும் பக்தியும் மூணுநாள் என்ற கணக்கின்படி அவரையும் கரைக்க ஆத்துக்குக் கொண்டுவந்துட்டாங்க. இன்னிக்கு ஞாயித்துக்கிழமையா வேற ஆகிருச்சு பாருங்க. அதான் கூடுதல் கூட்டம்.
கதையெல்லாம் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு பாக்கி இருந்த பாதி பக்கெட் சுண்டலை எல்லோருக்கும் கொடுத்து, நாங்களும் தின்னுட்டு பொழைச்சுக்கிடந்தா அடுத்த வருசம் வந்து பார்க்கலாமுன்னு சொல்லிட்டு வீடுவந்து சேர்ந்தோம்.
முதல் முறையா கணபதி கரைக்கப்போன அனுபவம்....... நல்லாவே இருந்துச்சு.
அனைவருக்கும் 'வி'நாயகனின் அருள் கிடைக்க வேண்டுகின்றேன். வணக்கம்.
====================================
Posted by துளசி கோபால் at 9/23/2010 04:05:00 AM 24 comments
Labels: அனுபவம்
Wednesday, September 22, 2010
அம்பதாயிரமா!!!!!! நெசமாவா??????? ( போன பதிவின் தொடர்ச்சி)
இடைவெளியில்லாத கட்டங்கட்டமாக் கட்டுன கட்டடங்களின் கூட்டத்தில் இருந்து, சட்னு பிரிஞ்சு போகுது பாதை. தொழிற்பேட்டைகளா இருக்கும் பகுதி. ஏராளமான ட்ரக்குகள் கேன்வாஸ் போர்வை போர்த்தி வரிசைகட்டி நிக்குது. நெருக்கமான குடியிருப்புகள் இருக்கும் பகுதிக்குள்ளே ஒரு சின்னக் கூட்டம் நடைபாதையில் கூடி நிற்குமிடம் போய் புள்ளையார் நின்னார்.
தேங்காய் பழம், ஊதுவத்தி, கற்பூரம்ன்னு பூஜை சாமான்கள் உள்ள தட்டுகளும், இனிப்புகளுமா சிலர் வந்து வணங்குனாங்க. நம்ம குருக்கள் பிரகாஷ், பூஜைத் தட்டுகளை வாங்கி தீபாராதனை செய்தார். நாம் கொண்டு போயிருந்த சுண்டல், சாம்பார் சாதங்களை விநியோகிச்சோம். லேசா மழை தூற ஆரம்பிச்சது. பிள்ளைகள் எல்லோரும் வரிசையில் வந்து பிரசாதங்களை வாங்கிக்கிட்டாங்க. இந்தப்பகுதி, மிகுதியாக தமிழர்கள் வசிக்கும் இடமாம். வாதாம் கொட்டைகளைத் தலையில் சுமந்து விற்கும் வட இந்தியப்பெண்களின் நடமாட்டம் அங்கே இருந்தது.
ராம்தர்பாரை விட்டுக் கிளம்பி ஏதேதோ சாலைகளைக் கடந்து சட்னு கிளை பிரிஞ்சு போகும் வழியில் போய் இடதுபக்கம் திரும்பினால்...... குறுகலான தெருக்கள், கூட்டம்......மேற்கு மாம்பலம் வந்துட்டோமா என்ன? இங்கேயும் கூட்டமாகக் காத்திருந்த மக்கள் புள்ளையாரை வரவேற்று, உள்ளே போகும் வழியை அவருக்கு காமிச்சாங்க. நியூ மௌலி விகாஸ் நகர். முத்துமாரியம்மன் கோவில் வாசலில் போய் நின்னார் புள்ளையார்.
கோவில் பூசாரி ஐயா, சூடத்தட்டை குருக்களிடம் கொடுத்தவுடன், அதை வாங்கி சூடம் கொளுத்தி அர்ச்சனை செய்துத் திருப்பித் தந்தவுடன், தேங்காய் பழம், பொரி ஊதுவத்தி எல்லாம் வச்சுருக்கும் பூஜைத் தட்டுக்களோடு வரிசையில் வந்து நின்ன மக்களுக்கெல்லாம் துன்னூறு வச்சார். நானும் போய் எனக்கும் துன்னூறு வையுங்கன்னதும் ஒரு வினாடி திகைச்சு நின்னவர், வாயெல்லாம் சிரிப்போடு நடுங்கும் கைகளினால் கவனமாக என் நெத்தியில் திருநீறு வச்சது ஒரு புது அனுபவம்.
பிள்ளைகள் எல்லோரும் ஓடிவந்து என்னைச் சூழ்ந்துக்கிட்டாங்க. காரணம் நம்ம கையில் இருக்கும் கேமெரா. நல்லாத்தமிழ் பேசறாங்க. பள்ளிக்கூடம் போகாததும் கூட ஒருகாரணமா இருக்கலாம். இந்தப்பகுதி முழுசும் தமிழர்கள்தான்.
கள்ளக்குறிச்சிக்கு அருகில் அந்தியூர் கிராமத்தில் இருந்து மாரியம்மாள், கலியாணம் முடிச்சு இங்கே வந்து வருசம் இருவதாச்சு. ரெண்டு பெண் குழந்தைகள். இவுங்க மாமியார், தங்கை இப்படி பல சொந்தங்கள் இங்கேதான்.
பூஜைகள் முடிஞ்சதும் இங்கே மாரியம்மன் கோவிலில் விருந்துக்கு எல்லாம் தயாரா சமைச்சு வச்சுருக்காங்க. மணி இப்பவே மூணே முக்கால். இதுவரைக்குமா சாப்பிடாமக் காத்துருந்தாங்க? அடடா...... விருந்தோம்பலை ஏத்துக்க முடியாமப் போயிருச்சு. ஏற்கெனவே சாப்பிட்டு முடிச்சுதான் கிளம்பி இருந்தோம். மேலும் இருட்டுமுன்னே பிள்ளையாரை நதிக்கரைக்குக் கொண்டு போகணும். நம்ம கோவில்வகையில் கொண்டுபோயிருந்த சாம்பார் சாதம் சுண்டல் வகைகளை எல்லோருக்கும் விநியோகம் செஞ்சோம். அரை பக்கெட், சுண்டல் பாக்கி இருக்கு.
தமிழர்கள் இங்கே வந்த வரலாறைக் கொஞ்சம் பார்த்தோமுன்னா..... இங்கே சண்டிகர் நகர நிர்மாணத்திற்கு (1954) வேலை செய்ய, காமராஜர் ஆட்சி காலத்தில் இங்கே அனுப்பி வைக்கப்பட்டவர்கள். ,வேலையில்லாத் திண்டாட்டத்தில் இருந்து தப்பியவர்கள், இங்கே சண்டிகர் நகராட்சியில் நிரந்தரப் பணியாளர்களாக நல்ல மாதச் சம்பளத்துடன் வாழ்கிறார்கள். மூணுதலைமுறையா ஆகி இருக்கு. குடும்பங்கள் பெருகி இன்னிக்கு ஏறக்கொறைய அம்பதாயிரம் தமிழர்கள். நகரின் மொத்த ஜனத்தொகையில் பத்து சதமானத்துக்கும் மேல்.
இவ்வளவு பேர்கள் இருந்தும் முருகன் கோவிலில் ஏழெட்டு நபர்களுக்கு மேல் சந்திச்சதில்லையே:( காரணங்கள் பலவும் இருக்கு. கோவிலுக்கும் இந்தக் குடியிருப்புக்கும் தூரம் அதிகம். அதனால் என்ன..... தினமுமா வரணும்? நல்ல நாட்களில் விசேஷ நாட்களில் வரலாமேன்னு 'மூக்கை நுழைச்சேன்'.
குடியிருப்புகளில் இருப்பவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட இனம் என்று சொல்லப்படும் பல்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள். ஆலயப்பிரவேசம் அரிதாக இருந்த காலங்களின் வடு இன்னும் மறையாமல் நெஞ்சிலே காலங்காலமா நிக்குது. அதுலே உண்டான தாழ்வு மனப்பான்மையால் மற்ற தமிழின மக்களுடன் கலந்து பழக முன்வரலை. அதுக்காக சாமி கும்பிடாமல் விடமுடியுமா? தங்கள் குடியிருப்பிலேயே அரசாங்கத்தின் பொது இடத்தில் ஒரு கோவிலைக்கட்டி மாரியம்மன் சிலைகளை ப்ரதிஷ்டை செஞ்சு அவுங்க வழக்கமா கும்பிடும் முறைகளில் வழிபாடு நடத்திக்கிட்டு இருக்காங்க.
சின்னதா இருந்தாலும் அழகான கோவில். ரெண்டு அறையாப் பிரிச்சு உள்ளே கருவறையில் ' ட' வடிவத்துலே ஒரு மேடையில்
அஞ்சாறு மாரியம்மன் சிலைகளும், உற்சவ மூர்த்தியா ஒரு உலோகச்சிலையும், அய்யனார் சிலை ஒன்னுமா வச்சுருக்காங்க.
விஜய் என்ற சிறுவன்தான் என்னை உள்ளே கூட்டிப்போய் சாமி தரிசனம் செஞ்சு வச்சுட்டு, சாமிகூட ஒரு படம் எடுத்துக்கணும்னு கேட்டுக்கிட்டார். தமிழ் நல்லாவே பேச வருது. பள்ளிக்கூடம் போறதில்லை என்றது வருத்தமா இருக்கு.
தமிழை ஒரு பாடமொழியா வச்சு இங்கே ஒரு பள்ளிக்கூடத்தை ஏன் வைக்கலை? அரசு ஏன் எந்த உதவியும் செய்யாமல் இருக்கு? இத்தனை பேர் இவ்வளோ ஓட்டு இருக்கும்போது இவுங்களுக்கு ஏன் பிரதிநிதி யாரும் இல்லை? கொஞ்சம் உள்ளே போய் ஆராயத்தான் வேணும்.
அப்புறம் பார்க்கலாமுன்னு விடாமல் இப்பவே கொஞ்சூண்டாவது தெரிஞ்சுக்கணுமுன்னு எனக்கொரு வேகம். அரசாங்கச் சலுகைகள் ஏதும் இல்லையான்னதுக்கு வந்த பதில் இல்லை. நம் தமிழ்நாட்டில் இருக்கும் சலுகை பெறக்கூடிய சாதிகள் பட்டியலுக்கும், இங்கே வடநாட்டில் இருக்கும் சாதிப்பட்டியலுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்காம். அந்தப்பெயர் இங்கத்துப் பட்டியலில் இல்லாததால் உரிமையோடு கேட்டு வாங்கும் சலுகைகள் ஒன்னுமே கிடைப்பதில்லையாம்:(
கனரா பேங்க் அதிகாரி ஒருவர் சிலவற்றை எனக்கு விளக்கினார். இங்கே கோவிலையொட்டிய இடத்தில் வாராவாரம் தமிழ்மொழி வகுப்புகள் எடுக்கலாமேன்னால்..... அதற்கும் ஆரம்ப காலங்களில் முயற்சி செய்தும் சிலர் படிக்க முன்வந்து..... கொஞ்ச காலத்துக்குப்பிறகு படிப்படியாக் குறைஞ்சு , இப்போ யாரும் வருவதில்லை என்ற குறை. மேலும் இங்கே இளைஞர்களுக்கு, இலவசக் கணினிப்பயிற்சி கொடுக்கலாமென்று அதே வங்கியின் மூலம் பத்து கணினிகள் ஏற்பாடு செய்தும் கொடுத்துருக்கார் இந்த அதிகாரி. மேலும் இவர்களுக்கு ஆபத்தில் உதவியாக இருக்கட்டும் என்று இன்ஷூரன்ஸ் திட்டம் ஒன்றையும் அறிமுகப்படுத்தி இருக்கார் இவர். வருடம் வெறும் ஒம்போது ரூபாயைக் கட்டினால் ஒரு லட்சத்துக்கு காப்பீடு என்ற திட்டம். அதில் நிறையப்பேர் சேர்ந்துள்ளார்களாம். எல்லாம் நாலைஞ்சு வருசமா ஓசைப்படாமல் நடக்கும் விஷயங்கள்.
செம்மொழி மாநாடு நடத்திய தமிழக அரசு, இங்குள்ள தமிழர்களையும் கொஞ்சம் கண்டுக்கிட்டால் மொழி இங்கே அழியாமல் இருக்கும்.
அந்த இடத்தில் இருந்த நேரம் முழுசும் ஏதோ தமிழக கிராமங்களில் இருப்பதுபோலத்தான் எனக்கு தோணுச்சு. எல்லோரும் தமிழையே பேசி, காது நிறைஞ்சதென்னமோ நிஜம். படிப்பு என்ற விஷயத்தை யாரும் மறந்துறக்கூடாதேன்னு என்ற பதைப்பும் எனக்கு இருக்கு. எப்படி உதவலாம் என்றதுதான் புரியலை.
சண்டிகர் தமிழ்மன்றமும் செயல்பாடு அவ்வளவா இல்லாமக் கிடக்குதாம். தமிழர்களையும், மன்றத்தையும், கோவில்களையும் சேர்த்து ஒருங்கிணைச்சு ஏதாவது செஞ்சா நல்ல நிலைக்குக் கொண்டு வந்துறலாம் என்ற நப்பாசை. 'எதாவது செய்யணும் பாஸ்' என்றதுதான் இப்போதைக்கு.
முக்கால் மணி நேரம், மக்கள் அன்போடு அளித்த பூஜைகளையும், நைவேத்தியங்களையும் ஏத்துக்கிட்ட பிள்ளையாருக்கு, அந்த ஏரியா தமிழர்களின் 'தலை,' தேங்காயில் கற்பூரம் வச்சு திருஷ்டி கழிச்சுச் சூறைத்தேங்காய் உடைச்சதும் நாங்க கிளம்பி பதினைஞ்சு நிமிசத்தில் சண்டிகர் எல்லையை விட்டு, பஞ்சாப் மாநிலத்துக்குள்ளே நுழைஞ்சோம்.
தொடரும்.....................:-)
Posted by துளசி கோபால் at 9/22/2010 12:55:00 AM 29 comments
Labels: அனுபவம்
Monday, September 20, 2010
நீங்க வரலையா? அதனால் என்ன? நான் வரேன்!
கிளம்புனவரோடு ஒட்டிக்கிட்டே நானும் போயிட்டேன். இப்படி ஒரு எளிமையான பக்தியைப் பார்க்கும் ச்சான்ஸ் கிட்டுமுன்னு எதிர்பார்க்கவே இல்லை!
போனவருசம் புள்ளையார் சதுர்த்தியை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உதவியுடன் முடிச்சுக்கிட்டேன். போதும் ஒருமுறை நோகாம நோம்பு கும்பிட்டதுன்னுட்டான் கணேசன். கொழுக்கட்டை வழக்கம்போல் தகராறு. விட்டேனா பாருன்னு சின்னக் கிண்ணம் நிறைய தேங்காய், வெல்லம் சேர்த்து இனிப்புப் பூரணம் பண்ணி வச்சுக்கிட்டேன். தோழி ஒருத்தரின் அம்மா சொல்வாங்களாம், பூரணம் பண்ணாவே கொழுக்கட்டை செஞ்ச பலன் வந்துருமுன்னு. வாழைப்பழச் சோம்பேறிக்கு வசதியான பொன்மொழி! இந்த மாதிரி நல்ல விஷயங்களைமட்டும் என்ன ஏதுன்னு கேக்காம 'கப்'னு பிடிச்சுக்குவேன்.
ஒரு கப் அரிசிமாவு.......... சரி வேணாம் விடுங்க. எண்ணி அஞ்சே அஞ்சு கொழுக்கட்டைகளை அஞ்சாமல் செஞ்சு, பாகிஸ்தானில் இருந்து மடியா வந்த பத்லா சேமியாவைப் பாயசமாக்கி, ஒரு கொண்டைக் கச்சான் சுண்டலும் பண்ணி வச்சு, அஞ்சு மணிக்கு வரப்போகும் கோபால் வருகையை எதிர்நோக்கி இருந்தேன். அவர்தான் புள்ளையாரான்னு கேக்கப்பிடாது!
தாய்லாந்தில் இருந்து அன்னிக்குத்தான் வர்றார். வந்தார். ரெண்டுபேருமா சேர்ந்து சாமியைக் கும்பிட்டோம். கொழுக்கட்டையை (கஷ்டப்பட்டு) தின்னும் நேரம் வேதனையைப் பொறுக்க முடியாமல் பவர் போயிருச்சு. மெழுகுவத்தி வெளிச்சத்தில் மேக்கப் போட்டுக்கிட்டு நான் தயாரானதும், நாங்க கிளம்பி நம்ம கோவிலுக்குப் போனோம். அடைமழை வேறு பிடிச்சுக்கிச்சு.
அடடா...... என்னன்னு சொல்வேன்? ஜகஜ்ஜோதியா புள்ளையார் ஜொலிப்போட நிக்குறார். கரண்டு நின்ன கலாட்டாவில் கேமெராவை எடுக்காமப் போயிட்டேனே:(
'இதுக்குப்போய் பெருசாக் கவலைப்படாதே. நான் இன்னும் ஒரு எட்டுநாள் இருக்கப்போறேன்'னு சொன்னார் பெரியவர். கோவிலில் வலம் வந்தால், சின்ன அரங்கமேடையில் லவகுசர்கள், சீதா, கண்ணன், யசோதா, வால்மீகி, தொட்டில் கண்ணன், ஒய்யாரமாக் கால்நீட்டி அமர்ந்திருக்கும் பிள்ளையார் இப்படி ஒரு கொலு! கண்ணை ஓட்டுனப்ப ஒரு சங்கு ஆப்ட்டது, என்னப்பா ஒரு ஆச்சரியம்? பிள்ளையார் மாதிரி தும்பிக்கை சுழிச்சு இருக்கு!!!!
தினமும் மாலை 7 மணிக்கு பஜனை உண்டு. அதுக்குப்பிறகு லங்கர். 'கட்டாயம் போயிறணும்.' அட.....சாப்பாட்டுக்கில்லைங்க. பக்திப் பரவசத்தில் பஜனை செய்யணுமுன்னுதான். இன்னிக்குக்கூடப் பாருங்க மெனு.....இட்லி, சட்னி & சாம்பார் ஆளுக்கு நவ்வாலு வச்சு விளம்பிடலாம்னு திட்டம். நான் சாப்பிடாமலே கிளம்பிட்டேன். இவருக்கும் பயண அலுப்பு. சீக்கிரம் வீட்டுக்குப் போகலாமுன்னுதான். வீட்டுக்கு வந்தால் மழையும் விட்டபாடில்லை கரண்டும் வந்தபாடில்லை:(
மறுநாள் கோவிலுக்குப் போனால் எதிரில் இருக்கும் மைதானத்தில் டெண்டுகொட்டாயில் திடீர் கோவில் (நேற்றுப்பெய்த மழையில்)முளைச்சுருக்கு. ஏர்ஃபோர்ஸில் இருக்கும் மராட்டியர்களின் கைவரிசை. நமக்குத்தான் எல்லாத்துக்கும் ஒரு கொசுவத்தி இருக்கே! பூனா வாழ்க்கையை மனசில் ஓட்டிக்கிட்டே அங்கே போய் தரிசனம் முடிச்சுக்கிட்டோம்.
அடுத்து நம்ம கோவிலுக்குப் போய் வேணுங்கற அளவு க்ளிக் செஞ்சுக்கிட்டேன். நமக்கு இப்போ கோவிலின் (அன்)அஃபீஸியல் ஃபோட்டாக்ராஃபர் என்ற உரிமம் வேற கிடைச்சுருக்கு.
பஜனை நடந்துக்கிட்டு இருக்கு. கேரள சமாஜ பஜனைக்குழு அன்பர்கள் போடுபோடுன்னு போட்டுக்கிட்டு இருக்காங்க. இந்தப்பக்கம் தமிழர்களா ஒரு ஏழெட்டுப்பேர் உக்கார்ந்துருந்தோம். இந்தப்பக்கம் ஒரு பாட்டு தொடங்கறதுக்குள்ளே விநாடி இடைவெளியில்லாம அவுங்க சுப்ரமண்யா, ஐயப்பான்னு எடுத்துவிட்டுக்கிட்டு இருக்காங்க. கடவுளுக்கு மொழித்தகராறு இல்லை. ஆனால் நம்ம ஆளுங்களுக்கு(ம்) ஒரு ச்சான்ஸ் கொடுக்கவேணாமா? மைக்கை நகர்த்தி வைக்கக் கிடைச்ச 001 விநாடி கேப்புலே ' ஒருமணிக்கொருமணி எதிரெதிர் ஒலித்திட' ஆரம்பிச்சுட்டார் ராஜசேகர்! இவர்தான் முருகனின் காரியதரிசி. நாங்களும் கூடவே சிந்து பாட ஒட்டிக்கிட்டோம். அவுங்க விடறதா இல்லை. நாங்களும்தான். சபாஷ் சரியான போட்டி!!!! ஆறெழுத்து மந்திரமுன்னு ஆரம்பிச்சு அஞ்சு நாலு மூணு ரெண்டு ஒன்னுன்னு குறைச்சுக்கிட்டே வந்த ஒரு மலையாளப்பாட்டு அட்டகாசமா இருந்துச்சுன்றதையும் ஒத்துக்கொள்ளத்தானே வேணும். அண்ணாவில் ஆரம்பிச்சு, நைசா தம்பியே எல்லாத்தையும்,( நான் புகழ் பாடும் பாட்டைச் சொல்றேன் ) எடுத்துக்கிட்டார். தம்பி முருகனுக்கு அரோஹரா!
ஒம்போது மணிக்கு பஜனை, மகா ஆரத்தி முடிஞ்சு சாப்பாடு உண்டு. நமக்கு அவ்ளோநேரம் இருக்க முடியாது. முழங்கால் வலி முடுக்க ஆரம்பிச்சதும் எழுந்து வந்துட்டோம். நாளைக் கதை நாளைக்கு..... .
அடுத்தநாளில் டெண்டுக் கொட்டாய் காணாமப்போய் இருந்துச்சு. ஒவ்வொருநாளும் போக இயலாமல் கிடைக்கும் நாட்களில் போய் ரெண்டு பஜனைப் பாட்டுகளைக் கேட்டுட்டு வந்தோம். சனிக்கிழமை போனப்ப புள்ளையாருக்கு முன்னால் ஒரு நந்தி முளைச்சுருந்தார். நம்ம கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்திக்கு ஏற்ற பொருத்தமான சைஸ்! அரசு மருத்துவமனையில் கட்டிடங்களை விரிவாக்க அங்கே இருந்த சின்ன கோவிலை இடிச்சுட்டாங்க. சாமி எங்கே போனாரோ தெரியலை. நந்தி மட்டும் நம்ம கோவிலுக்கு வந்துட்டார். (கிடைக்கணும் என்பது கிடைக்காமல் போகாது!) இனிமேல் ப்ரதோஷ பூஜைகளை ஆரம்பிச்சுடலாமுன்னு ராஜசேகர் அறிவிச்சார்.
மறுநாள் பிள்ளையாரை விஸர்ஜனம் செய்யப்போறோம். பதினொன்னுக்குப் பஜன், 12 மணிக்கு ஆரத்தி, பனிரெண்டரைக்குச் சாப்பாடு. 1.31க்கு கிளம்பி ஆறுநோக்கிப் போறோம் ஒன்னரைவரை எமகண்டம். பக்கா ப்ளான். எல்லாமே சரியா 'இந்திய நேரத்துக்கு' நடந்துச்சு:-)
இன்னிக்கு பஜனை ஸ்பெஷல் ஏர்ஃபோர்ஸ் மனைவியரின் தீர்த்தமண்டலி. முதல் நாள் புள்ளையார் சதுர்த்தியன்னிக்கு இவுங்க வந்து பாடித்தான் ஆரம்பமே ஆச்சு. இந்தியா பூராவும் வந்து பாடுனதா அர்த்தம். காஷ்மீர் முதல் கன்னியாகுமரிவரை பரதகண்டம் அனைத்துப் பாகங்களிலும் உள்ளவர்களின் பிரதிநிதிகளாச்சே! அதனால் கடைசி நாளிலும் நீங்க வந்து பாடி அவரை வழி அனுப்புன்கன்னு கேட்டதும் சந்தோஷமா வந்தாங்க. தென்னிந்தியாவில் காணக்கிடைக்காத விசேஷம் இவுங்க ஆட்டம் & பாட்டம். ஒருத்தர் எழுந்து ஆடிப்பாட, பின்பாட்டுக்கு மொத்தக்கூட்டமும் கரைகாணா மகிழ்ச்சியுடன் மேளங்கொட்டி, தாளம்தட்டி ஆடுவதைப் பார்த்தால் நமக்கும் கூடவே போர் ரெண்டு குத்தாட்டம் ஆடலாமான்னு தோணியதென்னவோ நிஜம். என்ன நெளிவு, என்ன ஆட்டம், என்ன Bபாவம். மனத்தளைகளை மீறிய கொண்டாட்டம் அது!
பனிரெண்டரைக்கு சாப்பாடு கொண்டுவந்து தரச்சொல்லி கார்த்திக் ரெஸ்ட்டாரண்ட் உரிமையாளர் குணாவிடம் சொன்னால்..... சொன்ன பேச்சைக் கேக்கமாட்டேன்னு அடம்பிடுச்சு 12.25க்கே மணக்க மணக்க சாம்பார்சாதத்தைக் கொண்டுவந்து இறக்கிட்டார். இன்னொரு பெரியபாத்திரத்தில் தனியா சாம்பார் வேற! இதுக்கிடையில் 12 மணிக்கு ஸ்வாமிகளுக்கு நைவேத்தியம் 'காமிச்சு' சக்கரைப் பொங்கலை விநியோகித்து ஆடிப்பாடும் கோஷ்டிக்குக் கொஞ்சம் குளுகோஸை ஏத்துனோம். கோவில் குருக்கள் ப்ரகாஷின் கைப்பக்குவம்.
பாட்டுகளுக்கிடையில் திடீர் திடீர்னு, 'வெற்றிவேல் முருகனுக்கு' ன்னு ராஜசேகர் ஆரம்பிச்சதும் ஏர்ஃபோர்ஸ் தீர்த் மண்டலி கப்சுப்ன்னு ஒடுங்கிரும். அதுக்காக விட்டுறமுடியுமா? புதுசா ஒன்னுமில்லை. பயந்துறாதீங்க. ஹரஹரான்னு நீங்க சொல்றதுதான் இது. கொஞ்சம் நீட்டி ஹரோஹரான்னு சொல்லுங்கன்னு சொல்லவச்சுட்டாருல்லே. அடுத்தமுறை அந்த ஹ வை அ வாச் சொல்லிக் கொடுத்துத் தமிழ் கற்றுத்தந்த புண்ணியத்தைத் தேடிக்கப்போறேன்:-)
தீபாரதனை முடிஞ்சு பிள்ளையாரை ஸ்தானத்தில் இருந்து நகர்த்த ஆரம்பிச்சப்போ மணி சரியா 1.32. எமகண்டத்தில் நகருவேனான்னு கெட்டியா இடம் புடிச்சு களிமண் புள்ளையாரா உக்கார்ந்துருந்தார். அலங்கரிச்ச வேனில் ஏத்தும்போதுதான் களிமண் கனம் தெரிஞ்சது.
இந்தப்பக்கம் அவரை சரியா நிக்கவச்சு ஆடாமல் இருக்க ஏற்பாடுகள் நடக்கும் சமயம் இன்னொரு பக்கம் சாம்பார்சாத விநியோகம். சுடச்சுட இருக்கும் சாம்பார் சாதத்தில் இதயம் நல்லெண்ணையைச் கலந்து கோரியெடுத்து தட்டுகளில் விளம்புனதும் அப்படியே வாயில் வழுக்கிக்கிட்டுப்போய் வயித்தில் விழும்போதே இதயத்தில் இடம் பிடிச்சது. அட்டகாசமான ருசி.
இந்த வடநாட்டு மக்களுக்கு சாம்பாரின் மகிமை நம்மைவிட நல்லாவே தெரிஞ்சுருக்கு! ஆப் லோகோங்கோத் தரா சாம்பார் பனானாகே ஹம்கோ நை ஆத்தி. அடியாத்தீ............அதெப்படி வரும்? நாங்க நாங்கதான், நீங்க நீங்கதான்! கவலைப்படாதீங்க. முருகன்போடும் சோறு. ருசியே தனி. வெளுத்துக் கட்டுங்க! சொன்ன பேச்சை மறுக்காமல் ஒரு கட்டு கட்டுனாங்க.
நாங்க எல்லோரும் சாப்பிட்டு முடிச்சுக் கோவிலைச் சாத்திப் பூட்டிட்டுப் புள்ளையாரை வளாகத்தைவிட்டு வெளியில் கொண்டுவரும்போது மணி சரியா 2.25. ஒன்லி 55 நிமிஷம் லேட்.
முன்னால் ஒரு வண்டி, பின்னால் நம்ம வண்டி. நடுவிலே புள்ளையார், நமக்குப்பின் கோவில் ஏற்பாடு செஞ்சுருந்த பஸ்.
ராம்தர்பாரை நோக்கிப் போனோம். நானே வரேன்னு தமிழர்கள் குடி இருப்பை நோக்கி அண்ணல் போறார். அவரைத் தொடர்ந்து நாங்களும் போறோம்.
பதிவின் நீளம்கருதி மீதி நாளை.
தொடரும்..............:)
Posted by துளசி கோபால் at 9/20/2010 08:43:00 PM 28 comments
Labels: அனுபவம்