Wednesday, September 01, 2010

பெண்ணும் பேரழிவும் (அம்ரித்ஸர் பயணத்தொடர் - 2)

வலையில் பார்த்து புக் பண்ணி இருந்த ஹொட்டேலைத் தேடி கொஞ்சம் அலைஞ்ச பிறகு ரஞ்ஜித் அவென்யூவைக் கண்டுபிடிச்சோம். தெரு பூராவும் ' கார் ச்சலானா சிக்கோ' னு மரத்துலே பேனர் கட்டி வச்சுருக்கும் ட்ரைவிங் ஸ்கூல்கள்!!!! ஒரு ஷாப்பிங் செண்டருக்குப் பின்பக்கம் இருந்துச்சு இந்த ஹொட்டேல். அறைக்குப்போய் ஜன்னலைத் திறந்தா எங்க ஊர் 'அம்மா'வை (நியூஸி ஹெலன் க்ளார்க்) நினைவுக்குக் கொண்டுவரும் HK Clarks Inn. நேரெதிரே இருக்கு.
பகல் சாப்பாட்டுக்கு அப்படியே வெளியே போயிட்டுப் பொற்கோவிலை வெளியே இருந்து ஒரு பார்வை பார்த்துட்டு வாகா பார்டர் போயிட்டு வந்துறலாமுன்னு திட்டம்.

ரெஸ்டாரண்ட் என்ற பெயரில் ஒன்னுமே கண்ணுலே தென்படலை. எங்கே பார்த்தாலும் தாபா தாபா. தாபாவைத்தவிர வேறொன்னும் இல்லை. ஒரு இடத்தில் ஃபேமிலி ரூம்ஸ் இருக்குன்னு போட்டுருக்கு. ஓக்கே.... இந்த தாபா என்பது இங்கத்து உணவகங்களுக்குப் பொதுவான பெயர்னு மனசிலாச்சு. வரிசை வச்சது போல வரிசையா உணவுப்பதார்த்தங்களை தெருவைப் பார்த்தமாதிரியே வச்சுருக்காங்க

இதுதான் ஒரிஜனல் தாபா

ரயில்வே ஸ்டேஷன் எதிரில் ஊர்ந்து வந்துக்கிட்டு இருந்தப்ப (அமிதாப்?) பச்சன்'ஸ் வைஷ்ணவோ தாபா ன்னு ஒன்னு பார்த்துட்டு அங்கே போனோம். மாடியில் சின்ன ஹாலில் மேசை நாற்காலிகள் போட்டுருக்காங்க. திரைச்சீலைகள் எல்லாம் போட்டு பரவாயில்லாமல் இருந்துச்சு. 'ப்ளெய்ன் தாலி' வாங்கிக்கிட்டோம். சிம்பிள். மூணு ரொட்டி, பருப்பு, சனா கறி & தயிர். இந்த வைஷ்ணவோ சாப்பாட்டில் வெங்காயம், பூண்டு எல்லாம் இருக்காது.

பச்சன்'ஸ் தாபா
சாப்பாடு ஆனதும் அப்படியே கோவிலைப் பார்க்கப்போனோம். காந்தி கேட் என்ற தோரண வாசல் இருக்கும் சாலையில் நுழைஞ்சு போறோம். ரெண்டு பக்கமும் பழைய கட்டிடங்கள் நிற்கும் பரபரப்பான தெரு. இங்கே சாலைகள் தெருக்கள் எல்லாம் கொஞ்சம் அகலமாவே இருக்கு. சைக்கிள் ரிக்ஷாக்கள் ஏராளம். . தெருவின் கடைசியில் சிட்டிக் கவுன்ஸில் கட்டிடம். இதுக்குப் பக்கத்திலே அங்கே இந்த ஊர் பாரளுமன்ற அங்கத்தினரா இருந்த நவ்ஜோத் சிங் சித்து (க்ரிக்கெட் விளையாடினவர்) தொகுதி முன்னேற்றமுன்னு ஒரு அலங்காரச்சின்னம், சின்னதா ட்ராஃபிக் ஐலண்ட் தோட்டமுன்னு ஏற்பாடு செஞ்சுருக்கார்.


காந்திகேட்
கடைத்தெரு


நேராப் போய் வலது பக்கம் திரும்புனதும் ஜாலியன்வாலா பாக் இருக்கு. கோவிலை அப்புறம் பார்க்கலாமுன்னு அங்கேயே இறங்கிக்கிட்டோம். 1919வது வருசம் ஏப்ரல் மாசம் 13 ஆம்தேதி வருசப்பிறப்பு கொண்டாட இந்த பார்க்கில் கூடி இருந்த இருவதாயிரம் சாதாரண ஜனங்களை, எந்த முன்னறிவிப்பும் இல்லாம படபடன்னு குருவி சுடுவதுபோல் சுட்டுத்தள்ளிய இடம். பாதகம் செஞ்சது அப்போ ப்ரிட்டிஷ் இந்தியாவில் மிலிட்டரி ஆஃபீஸரா இருந்த ரெஜினால்ட் எட்வர்ட் ஹேரி டையர்(Reginald Edward Harry Dyer)

மொத்தம் 20 நிமிஷம் இடைவிடாம 1650 ரவுண்ட் சுட்டுருக்காங்க. ஏறக்கொறைய 2000 பேர் மரணம். வெளியே வர சின்னதா மூணு வாசல் இருந்துக்கு. ஆனால் ரெண்டு வாசல்களில் பீரங்கி வண்டிகளை வழிமறிச்சு நிறுத்திட்டு சுட ஆரம்பிச்சதும் மக்கள் திகைச்சுப்போய் கடைசியா இருந்த ஒரு சின்ன சந்து வழியா வெளியேற முயற்சி செஞ்சு கூட்டத்தில் நசுங்கியும், குண்டடிபட்டும், சிதறி ஓடுனப்ப அங்கே இருந்த மொட்டைக் கிணற்றில் விழுந்தும் செத்தாங்க.
இதுதான் அந்தச் சந்து

ஊருக்குள்ளே வரும்போது இருந்த மகிழ்ச்சி ஆர்வம் எல்லாம் ஒடுங்கிப்போய் வயித்துலேயும் நெஞ்சுலேயும் சங்கடமா ஆகிப்போச்சு.
அப்போ இங்கே சின்னதா ஒரு கட்டிடம் மட்டும்தான் இருந்துருக்கு. சம்பவம் நடந்த சில வருசங்கள் கழிச்சு இந்த இடத்தை இண்டியன் நேஷனல் காங்ரெஸ் வாங்கி இங்கே நினைவுச்சின்னம் கட்டி இருக்காங்க. மொட்டைக் கிணற்றைச் சுவர் எழுப்பிக் கம்பிவலை போட்டு வச்சுருக்காங்க.
நினைவுச்சின்னம்

இண்டியன் ஆயில் கம்பெனி புண்ணியத்தில் அங்கே அமர்ஜோதி ஒன்னு இந்த 2000 ஆண்டு முதல் இடைவிடாம எரிஞ்சுக்கிட்டு இருக்கு. மக்கள் வந்து உட்கார ரெண்டு பக்கமும் அலங்காரமா பூச்செடிகள் வச்ச இடங்கள். நேரெதிரா நடுவில் நினைவுச்சின்னம். இடது பக்கம் அந்தக் கிணறு ( 120 சடலங்களை இங்கிருந்து எடுத்தாங்களாம்) வலது பக்கம் குண்டுகள் பாய்ந்திருக்கும் சுவர்கள் இப்படி மனசை சோகமாக்கிருச்சு.


துப்பாக்கி குண்டுகள் பாய்ஞ்ச இடம்




கிணறு



வெளியே வரும் வழியில் ஒரு சின்ன ஹாலில் சம்பவம் நடந்த சமயம் எடுத்த புகைப்படங்கள், நெஞ்சால் ஊர்ந்து வரும் சட்டம் போட்டு வெள்ளைக்காரன் படுத்திய கொடுமைகள் எல்லாம் இருக்கு. இங்கே படம் எடுக்க அனுமதி இல்லை.

கண்ணாடிப்பெட்டிக்குள் அப்போது பயன்படுத்திய துப்பாக்கிகள். உத்தம் சிங்கின் அஸ்தி ஒரு பித்தளைச் சொம்பில் வச்சுருக்காங்க.

யார் இந்த உத்தம் சிங்?

ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த சமயம் இவர் 20 வயது இளைஞர். நடந்த அநியாயத்தைக் கண்டு நாடே கொதிச்சுப்போனப்ப இளரத்தம் கொதிச்சு இருக்காதா? சுதந்திரப்போராட்ட வீரரா ;கதார் பார்ட்டி' என்ற புரட்சிக்காரர்களுடன் சேர்ந்துக்கிட்டார். ஜெனரல் டையரை எப்படியாவது கொல்லணும் என்ற வெறி அப்போ இளைஞர்களுக்கு இருந்துச்சு.

மூணு வருசம் இந்த கதார் பார்ட்டியில் இருந்து பயிற்சி எடுத்துருக்கார். அப்படி இப்படின்னு அமெரிக்காவுக்குப் போய் நிறைய வெடிமருந்துகள் துப்பாக்கிக் குண்டுகள், கைத்துப்பாக்கி எல்லாம் சேகரிச்சு இருக்காங்க இவரும் இவரைச் சேர்ந்த் இன்னும் 25 இளைஞர்களும். பகத்சிங் கட்டளைன்னு இந்தியா திரும்பினது ஜூலை 1927 இல். ஜாலியன் வாலா பாக் படுகொலை நடந்து எட்டு வருசமாயிருக்கு. ஆனாலும் அது மூட்டிய தீ கொஞ்சம்கூட அணையாமல் தீவிரமா ,மனசுக்குள்ளே கொழுந்து விட்டு எரிஞ்சுக்கிட்டேதான் இருந்துருக்கு.

இங்கிலாந்துக்குத் திரும்பிப்போயிட்ட ஜெனரல் டையர் இந்த 1927வது வருசம்தான் தன்னுடைய 63 வது வயசில், ஸ்ட்ரோக் வந்து ரத்தக்குழாய்கள் வெடிச்சுச் செத்தார். சரியான கொடுங்கோலன்.

அடுத்த மாசமே (ஆகஸ்ட் 1927) உரிமம் இல்லாமல் துப்பாக்கி வச்சுருந்தார்னு உத்தம்சிங்கைச் சிறையில் அடைச்சுட்டாங்க. நாலு வருசம். இவர் சிறையில் இருந்த சமயம்தான் பகத்சிங்கும் சந்த்ரசேகர் ஆஸாதும் பிடிபட்டுத் தூக்கில் இடப்பட்டாங்க. நடந்த வருசம் 1931 மார்ச் 23. பகத்சிங்கின் வயசும் அப்போ 23தான்:(

பகத்சிங் தூக்கிலிடப்பட்ட ஏழுமாசம் கழிச்சு உத்தம்சிங் விடுதலை ஆகி வெளியே வந்தார். 32 வயசு அப்போ.

நம்ம ஜாலியன்வாலா பாக், படுகொலை நடந்துச்சுன்னு சொல்ற ஏப்ரல் மாசம் 13, 1919 தினத்துக்குச் சிலநாட்கள் முன்னே நடந்த சம்பவங்கள்தான் டையரின் சினத்துக்கு தீப்பொறியா இருந்துருக்கு. என்னன்னு கொஞ்சம் பார்ப்போம்.......


சரியா மூணு நாளைக்கு முன் ஏப்ரல் பத்து, சிறையில் இருக்கும் ரெண்டு முக்கிய உள்ளூர் தலைவர்களை அந்த மாநிலத்தில் இருந்து வெளியேறச் சொன்னதை ரத்து செய்யணுமுன்னு கோரிக்கைவச்சு அம்ரித்ஸர் ஜனங்க, டிப்டி கமிஷனரைப் பார்க்க ஊர்வலமாப் போயிருக்காங்க. அங்கே அவுங்களைக் கலைஞ்சு போகச்சொல்லி ராணுவம் துப்பாக்கி எடுத்துச் சுட்டு பயமுறுத்தி இருக்கு.


எப்பவும் கூட்டமா இருப்பவர்களின் மனநிலை, சரியாச் சிந்திக்காது. அதான் இவ்வளவு பேர் இருக்கோமே என்ற முரட்டு தைரியத்தில் அரசாங்கக் கட்டிடங்கள், பிரிட்டிஷ் பேங்க் எல்லாம் தீ வச்சு ரகளை செஞ்சுக்கிட்டே போறாங்க. அங்கே இங்கேன்னு வெறியாட்டத்தில் ஏழு ப்ரிட்டிஷ்காரர்களைக் கொன்னும் போட்டுட்டாங்க. ராணுவமும் கலகம் நடந்த இடங்களில் சுட்டத்தில் 20 இந்தியர்களும் கொல்லப்பட்டாங்க.

அப்போ மார்ஸெல்லா ஷெர்வுட் என்ற பெண்மணி , (சர்ச் ஆஃப் இங்கிலாந்து மிஷினரியா வந்து இங்கு டீச்சரா 15 வருசமா இருக்கறவங்க) ஒரு சின்ன சந்து வழியா சைக்கிளில் போய்க்கிட்டு இருந்தாங்க. கூட்டம் அவுங்களை வளைச்சுக் கீழே தள்ளி, கையில் இருந்த கட்டைகளால் அவுங்க தலையில் சரமாரியா அடிச்சு, உதைக்கவும் ஆரம்பிச்சுருக்கு. அவுங்க எழுந்து ஓட ஆரம்பிச்சதும் விடாம வளைச்சு அடிச்சுருக்கு. இந்த கலாட்டாவில் எப்படியோ தப்பிச்சு எழுந்து ஓடி, திறந்துருந்த ஒரு வீட்டுக்குள்ளே நுழையப்போனப்ப, வீட்டுலே இருந்த ஆளுங்க உள்ளே வரவிடாமக் கதவை மூடிக்கிட்டாங்க. பின்னாலேயே ஓடிவந்த கூட்டம் திரும்பத்திரும்ப அவுங்களைத் தாக்கி இருக்காங்க. அப்புறம், ரொம்ப ஆபத்தான நிலையில் மயங்கி இருந்தவங்களை விட்டுட்டு ஓடிப்போயிருக்கு கூட்டம்.


இதுக்குப்பிறகு இவுங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் சேர்த்தது இந்தப் பக்கம் வந்த சில ப்ரிட்டிஷ் ராணுவத்தினர். இங்கே அமிரித்ஸரில் அடுத்த ரெண்டு நாட்கள் அமைதியா இருந்தாலும் வேற பகுதிகளில் ரயில்வே தண்டவாளத்தைப் பெயர்த்துப்போடுவது, தந்தி ஒயர்களை அறுப்பது, அரசுக் கட்டிடங்களுக்குத் தீ வைப்பதுன்னு கலவரம் நடந்துக்கிட்டுத்தான் இருந்துச்சு. இப்ப மூணு ப்ரிட்டிஷார் அங்கங்கே கொல்லப்பட்டாங்க.

டீச்சரைத் தாக்கிய மூணாம்நாள் மதியம்தான் பஞ்சாப் மாகாணத்துக் கலவரங்களை அடக்க ராணுவ நடவடிக்கை எடுத்தே ஆகணுமுன்னு தீர்மானம் ஆச்சு. அப்போ ப்ரிகேடியர் ஜெனரலா இருந்த ரெஜினால்ட் எட்வர்ட் ஹேரி டையர், பிரிட்டிஷ் ராணுவத்தின் இந்தியப்பிரிவில் இருந்த அம்பது சிப்பாய்களுடன் உடனே கிளம்பி ஜாலியன் வாலா பாக் என்ற தோட்டத்துக்கு வந்துருக்கார்.

அன்னிக்கு பஞ்சாபிகளுடைய புது வருசம் பைஸாகி. அதைக் கொண்டாட அங்கே சுமார் இருபதாயிரம் மக்கள் குடும்பத்தோடு கூடியிருக்காங்க. மக்கள் கூட்டம் கூடிட்டால் கலாட்டாவில் முடியுது. அதனால் இப்படியெல்லாம் கூட்டம் கூட விடக்கூடாதுன்னு ராணுவம் முடிவு செஞ்ச பிறகும், சட்டையே பண்ணாமல் கூடிய இந்தக் கூட்டத்துக்குச் சரியான பாடம் கற்பிக்கணுமுன்னு சந்துவழியா உள்ளே நுழைஞ்ச அதிகாரி, அங்கே கடல் போல் கூடி இருந்த ஜனத்திரளைப் பார்த்ததும், கலைஞ்சு போங்க என்ற எச்சரிக்கை கூடச் சொல்லாமல், அவுங்களையெல்லாம் சுட்டுத்தள்ளும்படி ராணுவவீரர்களுக்கு உத்தரவு கொடுத்துட்டார். என்னதான் இந்தியன் ட்ரூப்பா இருந்தாலும், ராணுவத்திலே அதிகாரி சொன்னதை அப்படியே கடைப்பிடிக்கணும் என்ற நியதிப்படி அவுங்களும் படபடன்னு 1650 ரவுண்டு சுட்டுத்தள்ளிட்டாங்க.

அடுத்துவந்த சிலநாட்களில், இந்த இந்தியர்களை எப்படியெல்லாம் கேவலப்படுத்தினால் அவுங்க மனோதைரியம் ஓடிப்போகுமுன்னு யோசிச்சு, மிஸ். மார்ஸெல்லா ஷெர்வுட் தாக்கப்பட்ட அந்த சந்தின் ரெண்டு முனையிலும் வீரர்களை நிக்க வச்சு, அந்த சந்தின் வழியாப் போகும் இந்தியர்கள் யாரும் நடக்கக்கூடாது. தவழ்ந்து, நெஞ்சால் ஊர்ந்து போகணுமுன்னு சொல்லித் தப்பித்தவறி அந்தப் பக்கம் போன மக்களை அடிச்சு ஊர்ந்துபோகச் சொல்லி இருக்காங்க. சந்தின் நீளம் ஒரு 600 அடி தூரம் இருக்கும். இந்த சந்திலே குடி இருந்தவங்களுக்கும் வெளியே வந்தால் இதே தண்டனைதான். கொடுமைக்குப் பயந்து எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருந்துருக்காங்க.

மாலையில் எட்டு மணியில் இருந்து காலை ஆறு வரை ஊரடங்கும் சட்டம் இருந்ததால் அப்பவும் வெளியில் வர இயலாது. நல்லவேளையா இந்த ஊர்ந்து போகும் சட்டம் ஏழு நாளில் முடிவுக்கு வந்துச்சு. அம்பது சிவிலியன் ஜனங்கள் இதுலே மாட்டிக்கிட்டு நெஞ்சு வயிறு எல்லாம் புண்ணாகி ரத்தம் சொட்டச்சொட்ட ஊர்ந்து போகக் கட்டாயப்படுத்தப்பட்டாங்க.

இதெல்லாம் நடந்த சமயம் பஞ்சாப் கவர்னரா இருந்தவர் Michael O'Dwyer. இவர் ஜெனரல் டையருக்கு ஆதரவா இருந்தவர். ஏற்கெனவே டையர் 1927 இல் செத்துட்டார் என்பதால் அவரைக் கொன்னுப் பழி தீர்த்துக்கும் சான்ஸ் போயிருச்சு. இனி இப்போ ஆதரவா இருந்த கவர்னர் மைக்கேல் ஓ ட்வையர் பாக்கி. இவர் இங்கிலாந்துக்குத் திரும்பிப்போய் பலவருசங்கள் ஆச்சுன்னாலும் விடறதில்லைன்னு திட்டம் போட்டு , மைக்கேல் ஒரு மீட்டிங்லே கலந்துக்கிட்ட சமயம் அவரைச் சுட்டுத்தள்ளியவர்தான் இந்த உத்தம் சிங். இது 13 மார்ச் 1940 நடந்தப்ப ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்து 21 வருசங்கள் ஆகி இருந்துச்சு.


சுட்டுத்தள்ளிட்டுத் தப்பி ஓடாம இருந்தவரைப் பிடிச்சுச் சிறையில் அடைச்சு கேஸ் நடத்தி நாலரை மாசம் கழிச்சுத் தூக்கில் போட்டாங்க. அவரோட உடலை எரிச்ச அஸ்திதான் இங்கே ஜாலியன்வாலா பாக் தோட்டத்துலே நினைவகத்தில் வச்சுருக்காங்க.

மகாபாரதக்கதைபோல ஆகிருச்சு. பெண்ணை இம்சை செய்ததால் வந்த பேரழிவு.

கனத்த மனசோடும், இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வாங்கிய சுதந்திரத்தைக் கணக்கில் எடுக்காம, நம்ம அரசியல் வியாதிகள் எப்படியெல்லாம் நாட்டைச் சுரண்டிக்கிட்டு இருக்காங்க என்ற வருத்தத்தோடும், இந்த மாதிரி இடங்களைப் பார்க்கும்போது சட்னு ஏற்படும் தீவிர தேசபக்தி உணர்ச்சியோடும் கிளம்பி மேற்கு நோக்கி பயணிச்சோம்.....

தொடரும்..................:-)

19 comments:

said...

hummm... so sad to read.

said...

Teacher,

Kannu kalangiduthu... Nama ellam oru thadavai kattayama nera poi parkavendiya edam...

-Sri

said...

நெஞ்சை பிழியும் தகவல்கள்.
:(

//சம்பம் நடந்த சில வருசங்கள்//

சம்பவம் என்று வரனும்

said...

வாங்க குமார்.

அன்னிக்கு ரொம்பவே மனம் கனத்துப்போச்சு என்பது உண்மை:(

said...

வாங்க ஸ்ரீநிவாஸன்.

முதல்லே நம்ம அரசியல் வியாதிகள் எல்லாம் போய்ப் பார்த்துட்டு வரட்டும்.
அப்பவாவது திருந்துவாங்களான்னு பார்க்கலாம்:(

said...

வாங்க கோவியாரே.

டீச்சருக்கே டீச்சரா!!!!!!

தட்டச்சுப்பிழை. (அப்படி என்ன அவசரம் எனக்கு? )

திருத்திட்டேன். நன்றி.

நம்ம மக்கள் வரிக்குவரி கவனமாப் படிக்கிறாங்களான்னு பார்க்க டெஸ்ட் வச்சேன்னு சொல்லிக்கவா?:-)))))

said...

நடந்து எவ்வளவு நாட்கள் ஆனாலும் படித்தவுடன் மனதுக்கு வருத்தமாக இருக்கிறது டீச்சர்:(

said...

bayangaramaa irukkuppa.

said...

I saw your blog & stories in
Sept month

Ladiesspl magazine.

Really u are Gr8.
Good to see u.

said...

பொருத்தமான தலைப்பு.
ஒரு ச்சின்ன விஷயம் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்குப்பா.

நீங்கள் சொல்லும் விதம் தான் ஆர்வத்தை அதிகப் படுத்துகிறது.அந்த தாபாவும்,சாப்படும் அமிர்தமா இருக்கு பார்க்க.

said...

ஜாலியன் வாலா பாக் ரொம்ப கொடுமையான விஷயம்தான்..

வெங்காயம், பூண்டு சேர்க்காத வைஷ்ணோ சாப்பாட்டை, ஜெயின் சாப்பாடுன்னும் இங்கே சொல்லுவாங்க..

said...

வாங்க சுமதி.

இதெல்லாம் வடுவா மாறிட்டாலும் இப்போகூட தொட்டால் ஒரு வலிதான்:(

said...

வாங்க வல்லி.

ஆமாம்ப்பா. சிறு பொறி எப்படிப் பத்திக்கிச்சுப் பாருங்க.

எண்ணித்துணிகன்னு சும்மாவா சொல்லிவச்சுருக்கு?

பசி நேரத்துக்கு அன்னிக்கு சாப்பாடு (ஓரளவு) நல்லாவே இருந்துச்சு. சுடச்சுட அந்த ரொட்டி.... மிருதுவா... நைஸ்

said...

வாங்க விஜி.

ஆஹா..... தகவலுக்கு நன்றிப்பா.

நான் வலையில் நீங்க சொன்னபிறகு போய்ப் பார்த்தேன்.

ஜூலை மாசம் ஒருமுறை நம்மளைப்பத்திப் போட்டுருந்தாங்க. இப்ப செப்டம்பரில்.

அப்படியா பஞ்சம் வந்துருக்கும்:-))))

ஆனா ரெண்டு முறையும் கொஞ்சம் சொதப்பிட்டாங்க.

மூணாம் முறை சரி செஞ்சுருவாங்கன்னு நினைக்கிறேன்!

said...

வாங்க அமைதிச்சாரல்.

ஜெயின் சாப்பாட்டுலே பூமிக்கடியில் விளையும் எதுவும் இருக்காதேப்பா.

எப்படியோ மரக்கறி சாப்பாடு கிடைச்சால் போதுமுன்னு ஆகிருது இப்பெல்லாம்.

said...

தெளிவான கட்டுரை..அழகான படங்களுடன்..அருமை நண்பரே

said...

தெளிவான கட்டுரை..அழகான படங்களுடன்..அருமை நண்பரே

said...

வாங்க படைப்பாளி.

வணக்கம்.

முதல் வருகைக்கு நன்றிகள். அம்ரித்ஸர் தங்கக்கோவில் பார்க்கப்போன பயணத்தில் எழுதிய கட்டுரைகள் இவை. நேரம் இருந்தால் நூல் பிடிச்சுப்போய் வாசிக்கலாம்:-)

said...

நன்றாக எழுதுகிறீர்கள் .....நெஞ்சு கனத்து விட்டது ......