Tuesday, February 28, 2012

குகையில் கல்யாணம், கொட்டாயில் சாப்பாடு:-)

குறுகலா இருந்த சர்ச்சின் முன்பக்கத்து வழியாக் காரைக்கொண்டுப்போய் பின்பக்கம் நிறுத்துன இடத்தில் கொஞ்சம் தள்ளி ஒரு தகர மறைப்போடு Dடன்னி இருந்துச்சு. ரொம்பப் பழைய சர்ச். சின்னச்சின்ன ஜன்னல்கள், வலமும் இடமுமா ரெண்டு வாசல். வெவ்வேற வடிவில் இருந்த வெறும் கற்களை வச்சே கட்டி இருக்காங்க. இடப்பக்கம் சின்ன வாசலும் வலப்பக்கம் பெரிய கதவுகளுமா இருக்கு.

வண்டி வருவதைப்பார்த்து ரொம்பவே சிரிச்ச முகத்தோடு எங்களைப் பார்த்த கேமெராக்காரர் மாப்பிள்ளை பொண்ணு பேரைச்சொல்லி அந்தக் கல்யாணத்துக்குத்தானே வந்துருக்கீங்கன்னு விசாரிச்சார். ஆமான்னதும் அவருக்கும் நிம்மதி, சரியான இடத்தில்தான் இருக்கோமுன்னு! கிறைஸ்ட்சர்ச்காரர். மணப்பெண்கள் மாப்பிள்ளைகள் என்ற பெயரில் கல்யாணப்படப்பிடிப்புகள் நடத்தும் வியாபாரமாம். பெயர் ஜெஃப்.

வீடியோக்காரர் சும்மா இருக்காரேன்னு நம்ம கெமெராவைக்கொடுத்து நம்மை ஒரு படம் எடுங்கன்னதும் சந்தோஷமாத் தலையாட்டிக்கிட்டே பரபரன்னு புல்சரிவில் இறங்கிப்போய் லாங் ஷாட்டில் பின்னணியில் முழு சர்ச்சும் இருப்பது போல ஒன்னு, மிட் ஷாட்டா ஒன்னு, க்ளோஸ் அப் ஒன்னு க்ளிக்கினார். ஒவ்வொரு க்ளிக்குக்கும் ஒன் டூ த்ரீ சொல்லி சரியாக ஃபோட்டொக்ராஃபர் என்று உறுதிப்படுத்தினார்.
ரெண்டு கிறைஸ்ட்சர்ச்காரர்கள் சேர்ந்தால் பேசும் பொதுவான டாபிக் இப்பெல்லாம் எர்த்க்வேக் என்பதால் நாங்களும் நியதியைப் பின்பற்றினோம். கண்கள் மட்டும் குன்றின்கீழே பதிச்சிருந்தேன். இன்னும் கல்யாணப் பார்ட்டிகளைக் காணோம். இந்தச் சர்ச்தானான்னு மனசுக்குள்ளே ஒரு சந்தேகம் இருந்துக்கிட்டே இருக்கு.

அப்ப ஒரு கார் மலையேறிவந்து நம்ம வண்டிக்குப் பக்கத்தில் நின்னுச்சு. ஒரு வயசானவர் இறங்கிவந்தார். கழுத்துப்பட்டியைப் பார்த்ததும் 'பூஜாரி'ன்னு தெரிஞ்சது. ஃபாதர் ப்ரையன் ஃபென்னஸ்ஸி. பொண்ணுமாப்பிள்ளைப் பெயரை ஒருக்கா விசாரிச்சதும் இதே சர்ச்சுன்னு நிம்மதி வந்துச்சு. நேத்து உள்ளே அலங்காரம் எல்லாம் செஞ்சுட்டுப் போனாங்க. சாவி அவுங்ககிட்டேதான் இருக்குன்னார். மணி ரெண்டேகால் ஆகுது இன்னும் யாரும் வரலையேன்னார். பொண்ணு ஹாஃப் இண்டியன். அதான் எங்க வழக்கப்படி நேரம் கடைப் பிடிக்கிறாங்கன்னேன்:(

கோவிலுக்கு வயசு எம்பது. உள்ளே பூசைகள் எல்லாம் நிறுத்தியே கனகாலமாச்சாம். எதாவது விசேஷமுன்னா மட்டும் பயன்படுத்தறாங்களாம். அதுவும் இந்தச் சர்ச்சைப் பத்துன விஷயம் தெரிஞ்ச ஆட்கள் வந்து கேட்டுக்கிட்டாங்கன்னா........

நியூஸியில் பொதுவா கல்யாணங்கள் வருசத்துலே ஆறுமாசம் மட்டுமே நடக்குது. வசந்தம் & கோடையில் மட்டுமே கல்யாண சீஸனாம். அது ஒரு ஆறுமாசம்தானே? சனிக்கிழமையா வேற இருக்கணுமாம் கல்யாணம் நடத்த. அப்படிப் பார்த்தா ஒரு 26 சனிக்கிழமை. இங்கே பலபிரிவுகளில் சர்ச்சுகள் ஏகப்பட்டது இருந்தாலும் 'ஆகி வந்தவை'கள் என்ற வகையில் அதிகமாத் தேறாதாம்.

மேற்படி பாரா தோழியின் முதல்மகள் கல்யாணத்துக்குப் போய் வந்து எழுதுனது. முழு விவரத்துக்கு இங்கே:-)

கல்யாண சீஸனில் பிஸியான்னு ஃபாதரைக் கேட்டேன். ஆமாம். இந்த வருசம் இது ரெண்டாவது கல்யாணமுன்னார்!!!!!
கொஞ்ச நேரத்தில் அரக்கப்பரக்க வண்டியில் இருந்து இறங்கி சரிவில் மூச்சுவாங்க மேலே ஏறிவந்தாங்க தோழி. கையில் சர்ச்சின் சாவி. கதவைத் திறந்து உள்ளே போனோம். சின்னதா அடக்கமா இருக்கு. 120 பேர் உக்காரும் வசதி. உசரே இருக்கும் ரெண்டு மூணு ஜன்னல் மூலமா மெல்லிய வெளிச்சம். வெளிப்பக்கம் கம்பிவலை போட்டு வச்சுருந்தாங்க. ஜன்னல் கண்ணாடிகளில் யேசுகிறிஸ்துவின் வாழ்க்கையின் சில சம்பவங்கள்!

நடுவில் நடைபாதை வச்சு ரெண்டு பக்கமும் உக்கார வரிசையா பெஞ்சுகள். பெஞ்சின் முனைகளில் வெள்ளையா ஒரு ரிப்பன் கட்டிவிட்டுருக்காங்க. அலங்காரம் அம்புட்டுதான்! (அதான் கலர்ஃபுல்லாக்க நாங்க இருக்கோமே!)

உள்ளே முழுக்க முழுக்க மரத்தரை. பெஞ்சுகள் எல்லாம் ரொம்ப இழைக்காம, கோணமாணயாப் பார்க்கக் கொஞ்சம் கச்சாவா இருக்கு. (ஃப்ளின்ஸ்டோனின் ஸ்டோன் ஏஜ் !) எங்கேயும் இரும்பு ஆணிகள் பயன்படுத்தலையாம். மர ஆணிகளே வச்சுப்பிடிப்பிச்சு இருக்காங்க. சுவர்களில் அங்கங்கே பெயர்கள் செதுக்கி வச்சு வருசங்கள் போட்டுவச்சுருக்கு. 1850 முதல் 1858 வரை! கூடவே பெயர்களுக்குப்பக்கத்தில் அறுபதாயிரம்., இருபத்தியஞ்சாயிரம், லட்சத்து அம்பதினாயிரமுன்னு எண்கள் வேற ! கோவில் கட்டி எம்பது வருசம்தான் ஆச்சுன்னா..... இந்த வருசங்கள் எல்லாம் என்னன்னு தெரியலை. ஒருவேளை இந்தக் குடும்பங்கள் நியூஸிக்குக் குடிபெயர்ந்த காலங்களா இருக்குமோ? கொஞ்சம் ஆராயவேண்டியது இருக்கு!!!
இதுக்குள்ளே ஃபாதர் அங்கியை அணிஞ்சுக்கிட்டு வாசலில் வந்து நின்னு வரவேற்புக்கு தயாரானார். மாப்பிள்ளையின் குடும்பம் வந்து சேர்ந்தாங்க. சம்பந்தியம்மா...... லார்ட் ஆஃப் த ரிங்ஸ் படத்தில் வருவதுபோல ஒரு உடுப்பில்!!!!! (தமிழ்ப்பட மாமியார்கள் மனசுலே நிற்பதால்.... எனக்கு பகீர்ன்னு இருந்துச்சோ)
சம்பந்தியம்மா (கருப்பு உடையில்)


கோபால் போய் பெரிய கதவை விரியத் திறந்து வச்சார். விருந்தினர்கள் கொஞ்சம் கொஞ்சமா வந்து சேர்ந்து சர்ச் நிரம்பியது. பஸ் வந்துருச்சுபோல. சரியா ரெண்டரைக்கு மாப்பிள்ளை உள்ளே வந்தாச்சு. மாப்பிள்ளையின் பாட்டி பத்து நிமிசத்துக்கு முன்னாலேயே வந்துட்டாங்க. பழுத்த வயசு. 95! தனியாத்தான் வசிக்கிறாங்க. கைத்தடியின் உதவியால் நடந்தாலும் நல்ல செயலாத்தான் இருக்காங்க. பையர் பொண்ணைப் ப்ரப்போஸ் செஞ்சதும் பாட்டிக்கு ஃபோன் செஞ்சு அடுத்த வருசம் கல்யாணம் வச்சுருக்கேன். நீங்க கட்டாயம் வர்றீங்கன்னு சொன்னாராம். சரின்னு சொல்லிக் கொடுத்த வாக்கைக் காப்பாத்திட்டாங்க!!!!
பாட்டியம்மாகூட ஒரு நாள் இந்தப்பக்கம் ரைடு வந்தபோதுதான் இந்தச் சர்ச் கண்ணுலே பட்டுருக்கு. மனசை இழுத்துப் பிடிக்குதேன்னு இதையே கள(னா)மா முடிவு செஞ்சுட்டாங்க மணமக்கள்.

மணப்பெண்ணை அப்பா கூட்டிவரும் ஐதீகம். காத்திருந்தோம். அதுவரை அக்கம்பக்கத்து விருந்தினருடன் சின்னப்பேச்சில் ஈடுபட்டிருந்தோம். புடவையைப் பார்த்ததும் ஓவர்ஸீஸ் கெஸ்ட், எக்ஸ்டெண்டட் ஃபேமிலின்னு புடவைகளுக்கும் ப்ரவுண் முகங்களுக்கும் ஏகப்பட்ட மரியாதை கேட்டோ:-))))
தோழிக்கு உறவினர்களும் நண்பர்களும் உலகம்பூராவும். முதல்மகள் கல்யாணத்துலே பயங்கரக்கூட்டம். இந்த முறை கொஞ்சம் எண்ணிக்கை குறைவுதான்.
மலேசியத்தோழியின் வளையோசை:-)

கல்யாணவீடுகளுக்கே களைகட்டும்விதமா இருக்கும் டும்டும் பீப்பீ எல்லாம் இல்லாம ஒருவித அமைதி(எங்கள் பேச்சுச் சத்தத்தைத்தவிர) அங்கே. பொண்ணு தன் பெயருக்கேத்த விதமாப் பண்னிப்பிட்டாளே! சாந்தி நிலவ வேண்டும் என்பதைத் தப்பாப் புரிஞ்சுண்டாள் நம்ம ஷாந்தி (ஷேண்ட்டி) ஏற்பாடு இப்படின்னு தெரிஞ்சுருந்தால் நம்ம வீட்டில் இருந்து நாதஸ்வர ஸிடியைக் கொண்டு போயிருக்கலாம். இந்தச் சர்ர்சில் பியானோ கூட இல்லைப்பா:(

நேரம் போகப்போக ஃபாதருக்கே.ஒருமாதிரி இருந்துச்சு. கண்ணைப் பார்த்தேன். அடுத்தது காட்டிய பளிங்கு. மாப்பிள்ளையும் மாப்பிள்ளைத் தோழர்களும்(Groomsmen) ஆல்டர் முகப்பில் 'அச்சனுடன்' இருந்தார்கள். எல்லோருடைய கவனமும் பெரியகதவு வாசலில். சட்டென்று ஒரு அமைதி. ஃப்ளவர் கேர்ள்ஸ் உள்ளே வர்றாங்க. ஒரு கேர்ளுக்கு வயசு 13 மாசம்! தத்தித் தத்தி நடக்கும் மழலை தரையில் என்னவோ பார்த்துட்டுச் சட்ன்னு குனிஞ்சது:-)))))
ஃப்ளவர் கேர்ளும் ப்ரைட்ஸ்மெய்டும்:-)

அடுத்து ஒருவர் பின் ஒருவராக Bridesmaids. இது என்னப்பா ஒரு வெள்ளைக்காரச் சொல்? அழகா தோழிப்பெண்கள் என்று சொல்றதை விட்டுட்டு.......brideswomen, bridesfriends ....... நல்லா இருக்காதா?
ப்ரைட்ஸ் மெய்ட்ஸ்

தோ...... ஃபிலிப் மகளைக் கூட்டிக்கிட்டு வர்றார். பொதுவா கல்யாணப்பெண் நுழையும்போது ஆர்கனில் வாசிக்கும் சம்பிரதாயப்பாடல் 'ட......டட்டடா..... ட....டட்டடா.........' இல்லாம வெறிச்ன்னு இருந்துச்சு. ஜனங்களுக்குத் தாங்கலை கேட்டோ! கெமெரா இல்லாத கைகள் லேசா தட்டி ஒரு ஒலி எழுப்புச்சு. (பேசாம ஒரு சிடி ப்ளேயராவது வச்சு இந்த ம்யூஸிக் போட்டுருக்கலாம்) மணி மூணு. அரைமணி(தான்) லேட்.
அப்பா மணமகளை கைப்பிடிச்சு அழைச்சு வர்றார். முதல்மகள் கல்யாணத்துலே இருந்தமாதிரி அவ்வளவா உணர்ச்சி வசப்படலை! பழகிப்போச்சோ:-))))

பைபிள் வசனங்கள் மூணு, பெண்ணின் மாமாபொண்ணு, மாப்பிள்ளையின் தங்கை, கல்யாணத்தை நடத்தும் ஃபாதர்னு மூணுபேரால் வாசிக்கப்பட்டன. தலா ரெண்டு நிமிஷம். கல்யாண உறுதி மொழிகளை விவரிச்சார் ஃபாதர். பொண்ணும் மாப்பிள்ளையும் ஐ டூ, ஐ வில் சொன்னதும் ஆசீர்வதிச்ச மோதிரம் அணிவித்தல். ஜெபம். ஆசிகள் வழங்குதல்.. அரைமணியில் முடிஞ்சது.
ஐ டூ .....ஐ வில்

சர்ச் உள்ளே மேலே தொங்கும் சரவிளக்கைத்தவிர வேற ஒளி இல்லை. எடுக்கும் படங்கள் எல்லாம் சுமாராத்தான் இருக்கு. நாம் ப்ளாஷ் போட்டால் எதிரில் இருப்பவங்களுக்குச் சங்கடமாச்சேன்னு அடக்கி வாசிக்கவேண்டியதாப் போச்சு. எப்படியும் வீடியோ எடுக்க ஒரு ஒளிவெள்ளம் பாய்ச்சுவாங்கல்லே, அதில் குளிர்காயலாமுன்னா..... அப்படி ஒன்னும் விளக்கே யாரும் பிடிக்கலை:( இந்தியாவில் வீடியோக்காரருடன் ஒருத்தர் விளக்கேந்திப்போவாரே...ஏன் இங்கே இல்லை?
இந்த அழகில் படம் எடுக்கன்னே நடுப்பாதை ஓரமா இருந்த நான் வயசான ஒரு தம்பதிகளுக்கு இடம் கொடுக்கவேண்டியதாப் போச்சு. வேற வழி இல்லாமல்....கேமெராவை கோபாலிடம் கொடுத்தேன்.
மூணரைக்கு சர்ச்சைவிட்டு வெளியேறின மணமக்களுடன் மக்கள்ஸ் எல்லோரும் வாசலில் குழுமினோம். மணமக்களை பத்துவிநாடி கட்டிப்பிடிச்சுக் கைகுலுக்கி வாழ்த்தினோம். கெமெராக்கள் கிளிக்கின. கல்யாணப்படங்கள் எடுக்க இன்னொரு ஃபோட்டாகிராஃபர் பெண்மணி வந்துருந்தாங்க. சரிவான புல்வெளி வசதியா காலரி அமைச்சுக் கொடுத்துச்சு.
ஃபாரீன் டெலிகேட்ஸ்:-))))


மற்ற விருந்தினர்களுடன் ஹலோ ஹலோ சுகமா எல்லாம் கேட்டு நாலு வருசத்து இடைவெளி விஷயங்களைப் பகிர்ந்து கொண்டோம். மொத்தம் அஞ்சு புடவைகள். வெய்யில் பளிச்சுன்னு காய்ஞ்சது. டபுள் டெக்கர் பஸ்ஸில் வந்தவங்க எல்லோரும் கிளம்பி மாப்பிள்ளை வீட்டுக்குப் போகணும். அங்கேதான் ரிஸப்ஷன் & டின்னர்.
நாங்க கிளம்பி டிமரு மோட்டலுக்கு வந்து சேர்ந்தோம். பிடிச்சது ஒரு பெருமழை! மறுபடியும் வேஷம் மாறி மழை நிக்கக் காத்திருந்தோம். மாப்பிள்ளை வீடு மோட்டலுக்குப் பக்கம்தான் இருக்கு. ஒரு 12 நிமிஷ ட்ரைவ். விலாசம் தேடிக்கிட்டே போனப்பத் தகவல் பலகை பளிச்:-)
பெரிய பண்ணை. வண்டிகள் நிறுத்த பார்க்கிங் போர்டெல்லாம் வச்சு ஜமாய்ச்சுருக்காங்க. ஒரு பக்கம் பெருசா துணிக் கொட்டகை. Jazz இசைக்குழு வாசிச்சுக்கிட்டு இருக்கு. சிறுதீனிகள் தட்டைக் கையிலேந்திய மங்கையர் குறுக்கும் நெடுக்கும் நடமாட விருந்தினர்கள் கோப்பை ஏந்திய கைகளுடன் அங்கங்கே சின்னச்சின்ன முடிச்சுகளா தங்களுக்குள்ளேயே அறிமுகம் செஞ்சுக்கிட்டு அளந்துக்கிட்டு இருக்காங்க.. பப்பத்து ஆட்கள் அமரும்வகையில் வட்ட மேசைகள் பதினொன்னு.( இந்தக் கொட்டாய் (marquee) எனக்கு ரொம்பப்பிடிச்சது. ஆனால் இதுக்கான வாடகையைக் கேட்டால் மயக்கம் வந்துரும்!)

டான்ஸ் ஃப்ளோர்!!!!

கொட்டகையின் முன்பக்கம் ஒரு மேசையில் நடுநாயகமா ஒரு சின்ன ப்ரீஃப் கேஸ். "விஷ்ஷிங் வெல்". என்ன பரிசு வாங்கணுமுன்னு தலையை உடைச்சுக்க வேணாம். எவ்ளோ கொடுக்கலாமுன்னு தலையைப்பிச்சுக்கிட்டால் போதும்:-) இதுக்கு ரெண்டு பக்கமும் மாப்பிள்ளை வீட்டில் பொண்ணு வீட்டில் கடந்த மூணு நாலு தலைமுறைகளில் நடந்த கல்யாண ஃபோட்டோக்கள். இன்னாருடைய எள்ளு, கொள்ளு,பேரன்/பேத்தி. மகன்/மகள் இப்படி வம்சம் சொல்லுது.
மொய்????????

ஒரு கூடை நிறைய வளையல்கள். அவ்வாறா எண்ணிவச்சு ரிப்பன் முடிஞ்சவை. (மணமகளின் விருப்பப்படி இண்டியன் டச்!!!) யார்யார் எந்த டேபிள்ன்னு போட்டுவச்ச தகவல்கள் ஒரு பக்கம். விருந்தினர் வருகையையும் வாழ்த்துகளையும் பதிவு செய்ய ஒரு கெஸ்ட் புக்.

தமிழில் எழுதுன்னு கோபால் வற்புறுத்தியதால் தமிழில் வாழ்த்தினேன்:-) (பொண்ணோட அம்மா எழுத்துக்கூட்டி வாசிச்சுச் சொல்லட்டும். நாந்தான் ரெண்டு வருசம் அவுங்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்!)
டின்னருக்கான நேரம் வந்துச்சு. கிறைஸ்ட்சர்ச்லே இருந்து வந்த கேட்டரிங் கம்பெனி. சகிக்கலை:( டிஸ்ஸர்ட் வரட்டும் அதுலே பசியாறலாமுன்னு காத்திருந்தோம். இதுக்கு நடுவில் மணமகள், மணமகன், பெஸ்ட் மேன், பெண்ணின் தந்தை இப்படி ஸ்பீச்சஸ். எல்லோருமே மெனெக்கெட்டு 'நகைச்சுவை'யோடு தயாரிச்சுக் கொண்டு வந்துருந்தாங்க. அடுத்து கல்யாணக் கேக் வெட்டினாங்க. நிகழ்ச்சிகளை ஒருங்கிணைச்சது எங்கூர் பத்திரிகையாளர் ஒருவர். (இங்கே ஒரே ஒரு டெய்லி பேப்பர்தான் இருக்கு. த ப்ரெஸ்) எங்கூர் நிலநடுக்கத்தில் இவுங்க இருப்பிடம் போயிருச்சு. அப்போ தங்க இடம் கொடுத்தது இந்த மணமக்கள்தான். அதான்......இப்ப......... நன்றிக்கடன்:-)
டிஸ்ஸர்ட் வந்துச்சு..... இதுவும் சொதப்பல்.... தோழி வந்து சாப்பாடு சரியே இல்லைன்னு மன்னிப்புக் கேட்டாங்க. மோட்டல் அறை ஃப்ரிட்ஜ்லே வச்சுட்டு வந்த புளியோதரையை நினைச்சுக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கிட்டேன். மறுநாள் இங்கேயே ஒரு பார்பிக்யூ வேற ஏற்பாடு செஞ்சுருக்காங்க. அதுக்கு 'ஜகா' வாங்கிக்கணும். தோழியிடம் ஒரு மன்னிப்பு கேட்டு வச்சுக்கிட்டேன். (ரெண்டு வேளைப் பட்டினி தாங்காது கேட்டோ!)

அடுத்து நடனம். டான்ஸ் ஃப்ளோர்ன்னு சின்னதா சதுரக்கற்கள் பாவிவச்சுருக்காங்க. இதுக்கு வாசிக்கன்னு தனி இசைக்குழு வேற! . ஒரு காஃபியைக் குடிச்சுட்டு ஆடறவங்க ஆடட்டுமுன்னு ..... கிளம்பினோம். நம்ம ஜெஃப் வாசலில் வீடியோ கெமெராவுடன் நின்னு மணமக்களுக்கு எதாவது சொல்லுங்க. நான் ஒன் டு த்ரீ சொல்வேன்னார். 'பசிக்குது'ன்னு சொல்லலாமா? ச்சீச்சீ..... வேணாம். 'நல்லா இருங்க'ன்னு சொல்லிட்டு வந்தோம்.

தொடரும்.........................:-)


Monday, February 27, 2012

கட்டுச்சோறு, கல்யாணம், கடவுள் இன்னபிற.....

தோழியின் வீட்டில் இது கடைசிக் கல்யாணம். ரெண்டாவது மகளின் திருமண ஏற்பாடுகள் ஒரு வருசமா ஜரூரா நடந்துக்கிட்டு இருக்கு. மணமக்கள் ஒரு தேதியைத் தீர்மானிச்சுட்டு அன்றைக்கு நாள் நல்லா இருக்கான்னு கேட்டு மெயில் அனுப்புனாங்க. தோழி வீட்டுக்கு நாந்தான் 'அன் அஃபீசியல் ஜோதிடர்':-)

அப்ப சண்டிகரில் இருந்தேன். அடுத்த வருசப் பஞ்சாங்கம் வரவே இன்னும் ரெண்டு மாசம் இருக்கு. அதுவும் சண்டிகரில் கிடைக்குமான்னு தெரியாது. அதுக்காக ...நம்புனவங்களை நட்டாத்துலே விட முடியுதா? பெருமாள் மேல் பாரத்தைப் போட்டுட்டு நல்ல நாள். கவலைப்படாதீங்க. எதுக்கும் புதுப் பஞ்சாங்கம் கிடைச்சதும் இன்னொருக்காப் பார்த்துச் சொல்றேன்னேன்.

வைகாசிக் கடைசியில் சென்னைக்குப் போனபோது மறக்காம பஞ்சாங்கம் வாங்கிக்கிட்டேன். கல்யாணத்தேதி பார்த்தால் நல்லா(வே) இருந்துச்சு. வெள்ளிக்கிழமை!!! நியூஸி வந்து சேர்ந்தபின் கல்யாணப்பொண்ணே பலதடவை கேட்டுட்டாங்க நாள் நல்ல நாள்தானேன்னு. நம்ம ஸ்வாமிநாராயண் கோவிலில் சாமிச்சிலைகள் (வரப்போகுதுன்னு முந்தி சொல்லி இருந்தேன் பாருங்க....) பிரதிஷ்ட்டை செய்வதை முன்னிட்டு அந்த வெள்ளி சனி ஞாயிறுன்னு மூணு நாள் உற்சவம். கவலையே படாதே. நாள் ரொம்ப நல்லா இருக்குன்னுதான் கோவில் விசேஷமே வச்சுருக்காங்கன்னேன்.

அழைப்பிதழ் கொண்டுவந்து கொடுத்துட்டுக் கட்டாயம் கல்யாணத்துக்கு வந்தே தீரணுமுன்னு வாக்கு வாங்கிக்கிட்டுப் போனாங்க அம்மாவும் பொண்ணுமா. பத்திரிகையை வாங்கிப் பார்த்துட்டு சாமியறையில் கொண்டு வச்சேன். மூணுமாசமா அது அங்கே இருக்கு.

கல்யாணத்தேதியைச் சொல்லி அன்னிக்கு ஊரில் இருக்கணும். ஆஃபீஸ் வேலை அது இதுன்னு போனீங்க தெரியும் சேதின்னு கோபாலைக் கொஞ்சம் மிரட்டி வச்சுருந்தேன். மாப்பிள்ளை ஊர் டிமரு என்றபடியால் விசேஷம் அங்கேன்னு முடிவாகி இருந்துச்சு. எப்படியும் ரெண்டரை மணி நேர டிரைவ்.

சொல்லிவச்ச மாதிரி(யே) அவசர அலுவலக வேலைகள் வந்துருச்சுன்னு ரெண்டு வாரம் அஞ்சாறு நாடுகளுக்குக் கிளம்பிப்போயிட்டார். எப்படியும் கலியாணத்துக்கு முதல்நாள் வந்துருவேன் என்னும் வாக்கோடு. ராத்திரி பனிரெண்டரைக்கு வீடுவந்து சேர்ந்து தூங்கி எழுந்து காலை ஒன்பதுக்குப் புறப்பட்டுப் போய்க்கிட்டு இருக்கோம்.

இந்தப்பக்கங்களில் பயணம் செஞ்சே கனகாலம் ஆகி இருக்கு. நியூஸியின் முகமே மாறுதோன்னு எண்ணும்படி...... ஆட்டு மந்தைகளைக் கண்ணுலேயே காணோம். ஆளுக்கு 12ன்னு இருந்தது பத்தாச்சு இப்ப என்னென்னன்னா....ரெண்டு கிடைச்சாலே வரம்தான்போல:-) அதுக்காக ஒன்னுமே இல்லாதவங்கன்னு எங்களை நினைச்சுக்காதீங்க. ஒரே ஒரு எழுத்து வித்தியாசத்துலே ஆளுக்கு ஆறுன்னு மாடுகள் இருக்கும்! ஏகப்பட்ட மாடுகள் மந்தை மந்தையா மேய்ஞ்சுக்கிட்டு இருக்குதுங்க. அதுவும் ஏதோ ஆரம்பப்பள்ளி வகுப்புகள் போல ஆறுமாசம், ஒருவயசு, ஒன்னரைவயசுன்னு தெருவோர வயக்காடுகளில் தனித்தனிக் குழுக்கள்!
ஆடு போய் மாடு வந்தது டும்டும்டும்

பாலில் நல்ல காசுன்னு பலரும் ஆட்டை விட்டுட்டு மாட்டுக்கு மாறிட்டாங்க. அப்படியும் உள்ளுரில் பால் விலை குறையலை:( ஆனால் ஒரு நல்ல சமாச்சாரம் ஆரம்பப்பள்ளிகளில் எல்லாக் குழந்தைகளுக்கும் இலவசப்பால் அரசாங்கம் கொடுக்க ஆரம்பிச்சுருக்கு. இந்த அழகில் இங்கிருக்கும் பெரிய பால்பண்ணைகள் சிலதை சீனநாட்டு ஆட்கள் வாங்கினதை எதிர்த்து மவோரிகள் கிளர்ச்சி பண்ண ஆரம்பிச்சுருக்காங்க. வரவர வெளிநாட்டு மக்களுக்கு எதையெதை விக்கலாம் என்ற விவஸ்தையே இல்லாமல் அரசு எல்லாத்தையும் விக்க ஆரம்பிச்சுருக்கு. எங்களையெல்லாம் கூட சீக்கிரம் வித்துருவாங்களோ?
சாலைகள் எல்லாம் வழக்கம்போல நல்ல பாராமரிப்புடன் இருக்கு. அங்கங்கே ஏகப்பட்ட பாஸிங் லேன்கள். 'ரோட் ரேஜ்' வராம இருக்க நல்ல ஏற்பாடு! வெள்ளிக்கிழமை, வேலைநாள் என்றபடியால் போக்குவரத்து(ம்) கூடுதல். அஞ்சாறு வண்டிகள்!
429 பேர் வசிக்கும் டன்ஸண்டெல் என்ற கிராமத்தைக் கடக்கும்போது அருமையான சர்ச் ஒன்னு கண்ணில் பட்டது. நூறு வருசப்பழசு. அடுத்துவந்த ஊர் ரக்கையா. இந்த ஊரில் ஒடும் நதிக்கும் இதே பெயர்தான். நியூஸியின் பெரிய நதிகளில் இதுவும் ஒன்னு. மீன் புகழ் கொண்ட ஊர். ஸால்மன் மீன்களுக்கு தலைமையகம்! ஊருக்குள்ளே நுழையும்போது மீன்தான் நம்மை வரவேற்கும். வண்டியில் இருந்தபடியே ஒரு க்ளிக்.
டோண்ட் பீ ஸோ மீன்:-)

ஆஷ்பர்ட்டன். இங்கே ரயில்வே ஸ்டேஷன்தான் சரித்திரம் படைச்சது. அந்தக்காலத்தில் நியூஸியின் தென்கோடிவரை போட்ட ரயில்பாதைகள் இப்பவும் பயன்படுதுன்னாலும் வெறும் சரக்கு வண்டிகளுக்கு மட்டுமேன்னு .....ஒன்னே ஒன்னு கண்ணேகண்ணுன்னு ஓடிக்கிட்டு இருந்தபயணிகள் வண்டியை பத்து வருசத்துக்கு(2002) முன்னே நட்டம் அதிகமாப் போச்சுன்னு நிப்பாட்டிட்டாங்க:(
ரயில்வே ஸ்டேஷன் கட்டிடம் பழுதாகிப்போச்சாம். இப்போ பயனும் இல்லையாம். இடிக்கப்போறோமுன்னு மிரட்டிக்கிட்டு இருக்காங்க.


எங்கூர்லே பஸ்களில் பலசமயங்களில் ஒரே ஒரு பயணி மட்டும் போறதைப் பார்த்தால் வயிறு எரிஞ்சு போயிரும். நட்டக்கணக்குதானே? இதைப்போல வீம்புக்காக ரயிலை ஓட்ட முடியுமா? என்ன நாஞ்சொல்றது?

ஆஷ்பர்ட்டனில் ஒரு பதினெட்டாயிரம் பேர் வசிக்கறாங்க. கொஞ்சம் பெரிய டவுன்தான். நியூஸி நாட்டில் பஸ் கட்டும் வேலை இங்கே மட்டுமே நடக்குது. விலை உயர்ந்த கார்களான பெண்ட்லி, ரோல்ஸ் ராய்ஸ் வண்டிகளைப் பழுதுபார்த்துச் சீரமைக்க இந்த ஊரை விட்டா வேறு இடம் இல்லை நாட்டிலே!

ஊருக்கு நடுவிலே அழகான தோட்டம், அதுலே ஒரு மணிக்கூண்டு. கடிகாரத்தின் பல்சக்கரங்கள் எல்லாம் வெளியே தெரியும்படி கண்ணாடிக் கூண்டிலே 'ஆடி'க்கிட்டே இருக்கும்.

வீட்டுச்சாப்பாடு இல்லாம ரெண்டுவாரம் செத்த நாக்கை சோதிக்கவேணாமுன்னு புளியோதரை, ததியன்னம் தொட்டுக்க உருளைக்கிழங்குக் கறின்னு செஞ்சு எடுத்துக்கிட்டுப்போறேன். கல்யாணம் பகல் ரெண்டரைக்கு. மாப்பிள்ளை வீட்டுலே இருந்து பஸ் ஒன்னரைக்குப் புறப்படுது.

ரொம்ப அலைச்சலா இருக்குமேன்னு டிமருவில் ஒரு மோட்டல் பதிவு செஞ்சுருந்தோம். செக் இன் பகல் 2 மணிக்காம். 'சரிப்படாது கல்யாணத்துக்குப் போகணு'முன்னு சொன்னதுக்கு 'நீங்க வாங்க ஏற்பாடு செஞ்சுதரேன்'னு மோட்டல் வரவேற்பில் சொல்லி இருந்தாங்க. பதினொன்னே காலுக்குப்போய்ச் சேர்ந்தால் அறைச்சாவி எடுத்துக் கொடுத்தாங்க. பால் வேணுமான்னதுக்கு வேணாமுன்னு சொல்லிட்டு அறைக்குப்போனால்.... சுத்தம் செய்யாமக் கிடக்கு. சொன்னதும் ரெண்டுபேர் வந்து பதினைஞ்சு நிமிசத்தில் சுத்தம் செஞ்சு கொடுத்துட்டுப் போனாங்க. படுக்கை விரிப்புகளை மாத்தி, சலவை விரிப்புகளை போடுவது சரியாச் சொன்னால் ஒரு கலை! ஆஸ்பத்திரிகளிலும் ரெண்டு பேர் வந்து படுக்கைவிரிப்புகளை மாத்துவதை பலமுறை கவனமாக் கவனிச்சாலும் வீட்டில் அதைப்போல் செஞ்சுக்க வர்றதில்லைப்பா:(

காஃபி போட்டுக்கலாமான்னு தோணல். பாலை வேணாமுன்னு சொல்லிட்டமேன்னு .....ரிஸப்ஷனுக்குப்போய் பால் வாங்கிக்கிட்டு அப்படியே செயிண்ட் டேவிட் சர்ச் எங்கே இருக்குன்னதுக்கு தெரியாதுன்னு பதில் வருது. 'கேவ்' என்ற இடம்? தெரியாதாமே:( அடராமா..... என்ன மோட்டல் நடத்துறாங்க? உள்ளூர் விவரம் தெரிஞ்சுவச்சுக்க வேணாமா?

அப்போ அங்கே வந்த எதிர் அறை விருந்தாளி, நாங்களும் கல்யாணத்துக்கு வந்தவங்கதான். ஒன்னேகாலுக்குக் கிளம்பி அங்கேதான் போறோம். நீங்க உங்க வண்டியில் எங்களைத் தொடர்ந்து வாங்கன்னு சொன்னாங்க.

இந்த 'குகை' எங்கே இருக்கு? இனிமேல் 'வாயிலெ இருக்கு வழி' என்ற பழமொழியைக் கடாசிட்டு, 'கூகுளில் இருக்கு வழி' என்ற புதுமொழியைப் பிடிச்சுக்குங்க. ப்ளாக்பெர்ரியில் கூகுளிச்சுப் பார்த்தால் 35 கிலோமீட்டர் தூரத்துலே இருக்கும் வேறொரு ஊர்! அதான் பஸ் யாத்ரையா? கூகுளாண்டவர் வழி சொல்லிட்டாரே.... நாமே நேரடியாப்போயிரலாமுன்னு தீர்மானிச்சோம். கட்டுச்சோத்தைப் பிரிச்சுத் தின்னோம். பிக்னிக் போறதைப்போல் தட்டு கரண்டி எல்லாம் கொண்டுபோனது வசதியா இருந்துச்சு. மோட்டலில் பாத்திரபண்டங்கள் எல்லாமும் வச்சுருப்பாங்கதான். ஆனால் வழியில் எங்காவது நிறுத்திட்டு சாப்பிடணுமுன்னா நாம் கொண்டுபோனால் நல்லது. மீதி இருந்த உணவை ஃபிரிஜ்ஜுக்குள்ளே வச்சுட்டு நிதானமா வேஷம் மாறிக் கிளம்பினோம்.
ப்ளெஸண்ட்பாய்ண்ட் சர்ச்

ஊருக்குள்ளே தேசிய நெடுஞ்சாலை ஒன்னில் வந்த வழியாவே ஒரு 6 கிமீ போய் இடப்பக்கம் திரும்பி அரவமே இல்லாத தேசீய நெடுஞ்சாலை எட்டில் போய்க்கிட்டே இருக்கணும். ப்ளெஸண்ட் பாய்ண்ட் என்ற ஊரைக் கடக்கும்போது அழகான சர்ச் ஒன்னும் தொட்டடுத்து சின்னதா ஒரு ரயில்வே ஸ்டேஷனும்.. ரோட் ரயில் ஒன்னு ஓடுதாம். கொஞ்ச தூரத்தில் பலகைவச்சு அடிச்ச சின்னச்சின்ன ஷெட் ஒரு வயல்பூராவும் சிதறிக்கிடக்கு. உத்துப் பார்த்தால் பயங்கர உறக்கத்தில் வராகங்கள். பன்றிப்பண்ணை!
ஒருவழியா குகைக்குப் போனோம். வரவேற்புக்கு ஒரு பப். ரெண்டு பெண்களும் மூணு ஆண்களுமா வாசலில் பெஞ்சில் உக்கார்ந்து தாகசாந்தி. சர்ச் எங்கேன்னதும் ஒரே சமயத்தில் ஐவரும் கையை உயர்த்தி 'அதோ'ன்னு காமிச்சாங்க. பத்து எட்டு! கிட்டப்போய்ப் பார்த்தால் ஆள் அரவமில்லை. ஆல்செயிண்ட்ஸ் சர்ச்ன்னு பேர் போட்டுருக்கு. திரும்பிவந்து இது இல்லை. டேவிட் சர்ச்க்குப் போகணுமுன்னோம். கொஞ்சம் யோசனை..... ஒருத்தர் உள்ளே போய் விசாரிச்சுக்கிட்டு வந்தார். நேராப்போய் இடதுபக்கம் சாலையில் திரும்பி வளைஞ்சு வளைஞ்சு போகணும் என்பதைச் சொன்னாங்கன்னு நினைக்கிறேன். ஐவரும் வெவ்வேற திசையில் கைகளை உயர்த்தி கோபாலுக்கு வழி சொல்லிக் காமிக்கிறாங்க. போச்சுடா...... ஒருவேளை நாம்தேடிவந்த குகை இதுவாக இல்லைன்னா...... ராத்திரி டின்னர் & டான்ஸ் முடிய 12 ஆகிரும். அதுக்குள்ளே தேடிப் போய்ச் சேர்ந்துடமாட்டோமா?
வார் மெமோரியல்

ஐவர் காட்டிய வழியில் போனோம். கைகாட்டி மரத்தில் செயிண்ட் டேவிட் சர்ச்ன்னு போட்டுருக்கு. மலைப்பாதையில் வண்டி ஏறுது. திருப்பதியில் கல்யாணம் வச்சுக்கிட்டாங்களா என்ன? வளைஞ்சு போகும் பாதையில் ஒரு இடத்தில் ஓரமாப் பெரிய பாறை! கல்(வெட்டு) வார் மெமோரியல்! உலகப்போர்களில் ஈடுபட்டவர்கள் பெயர்களும், வீரமரணம் அடைந்தவர்களின் பெயர்களும். ஆன்ம சாந்தி கிடைக்கட்டுமுன்னு ஒருவிநாடி பிரார்த்தித்தேன். ஒரு ரெண்டு கிலோமீட்டர் போனபிறகு வலப்புறம் திரும்பும் பாதையைக் காமிக்கும் கைகாட்டியில் சர்ச் பெயரும் 'வெட்டிங்'ன்னு எழுத்தும். ஆஹா.....
குன்றின்மேல் சர்ச்

பாதையில் வண்டியை விரட்டினால் கொஞ்ச தூரத்தில் ஒரு சின்னக் குன்றின்மேல் ஒரு சர்ச். அக்கம்பக்கம் ஈ காக்கா இல்லை:( இவர் சரசரன்னு சரிவுப்பாதையில் காரை ஏத்தி மேலே கொண்டுபோறார். ஒரே ஒரு ஆள் கையில் கேமெராவுடன் சர்ச்சுக்கு வெளியே .............

தொடரும்................:-)

Tuesday, February 21, 2012

ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே..... (நேற்றையப் பதிவின் தொடர்ச்சி.)

ஒரு 11 வயசுப் பையன் Bபென் செஞ்சுவச்ச டிஸைந்தான் மாஸ்டர் பீஸ்ன்னு நினைக்கிறேன். செஞ்ச விவரம் தகவல் பலகையில். எங்க கதீட்ரலைச் செஞ்சு வச்சுருக்கார். தகவலில் 'உள்ளே பாரு உள்ளே பாரு'ன்னதும் உள்ளே பார்த்தேன். ஓட்டைக் கண்ணுக்கு ஒன்னுமே தெரியலை. மகளைப் பார்க்கச் சொன்னேன். அதுக்குள்ளே 'நிறையப்பேர்' வரிசையில் நின்னுட்டாங்க. எல்லோரும் போனதும் நான் இன்னொருக்கப் பார்க்கலாமுன்னு குனிஞ்சப்பதான் ஐடியா வந்துச்சு. ஊனக்கண்ணில் தெரியாதது ஞானக்கண்ணில் தெரியாதா? மூணாவது கண்ணை உள்ளே அனுப்பினேன். சூப்பர்! ஆனால்.... சோகம்:(
போன வருசம் இதே சமயம் நடந்த நிலநடுக்க அழிவு உள்ளே அப்படியே இருக்கு. அன்னைக்குப் பூட்டுன கோவிலை இதுவரைக்கும் பொதுமக்களுக்காகத் திறந்து காமிக்கலை. மீட்புப்பணிக்கு உள்ளே போன காவல்துறையினர் எடுத்த படங்களைத்தான் எங்களுக்குக் காமிச்சுக்கிட்டு இருக்காங்க. போலீஸ் ஃபோட்டோக்ராஃபர்ஸ் எடுத்த படங்களைத் தொகுத்து
அவுங்களே ஒரு புத்தகம் வெளியிட்டு இருக்காங்க. என்ன ஏது எப்படி இருந்துச்சுன்னு தெரிஞ்சுக்கும் ஆர்வத்தில் இதை வாங்காத வீடுகளே இந்த ஊரில் இருக்குமான்றது சந்தேகம்தான்.
உள்ளே பார்த்தால்.................

தோட்டத்தின் புல்வெளிகளைப் பாழாக்காமல் பரவலா நல்ல இடைவெளி விட்டு அங்கெ ஒன்னு இங்கெ ஒன்னுன்னு அலங்காரக் காட்சிகளை வச்சுருப்பதால் சனக்கூட்டம் சட்ன்னு கண்ணுக்குப் படலை. ஆனாலும் நாலுபேருக்கு மேல் இருந்தால் கூட்டம் என்ற கொள்கையின் படி.... தோட்டம் முழுசும் கூட்டம்தான்.
முறுக்கு மரம் ஒன்னு முறுக்கிக்கிட்டே பிரமாண்டமா நிக்குது. பேசாம இதுக்கு மாப்பிள்ளை மரமுன்னு பேர் வச்சுடலாம். பெரிய மரங்களுக்குப் பக்கத்தில் நிக்கும்போதுதான்..... மனுசன் எவ்ளோ சின்னவன்னு புரியுது! பெரிய புல்வெளி ஒன்னில் இசை நிகழ்ச்சிக்காக சின்னதா ஒரு மேடை அமைச்சுருந்தாங்க. பாட்டுக்கேக்க ஒரு கூட்டம் ஆல்ரெடி கூடி இருக்கு. பாடகர்கள் கிதார்களை ட்யூன் பண்ணிக்கிட்டும் ஸ்ருதி எத்தனை கட்டைன்னும் பார்த்துக்கிட்டு மேடைக்குப்பின்னால் நின்னுக்கிட்டு இருந்தாங்க.(ஷண்முகி மாமி நீங்க எத்தனை கட்டை?....ம்ம்ம்ஹும்....அஞ்சு) புல்வெளியின் ஒரு பக்கத்தில் மூணு கழிப்பறைகள்.
எனக்கு நியூஸியில் பிடிச்ச விஷயம் இந்த ஏற்பாடுகள்தான். எத்தனை சின்னக்கூட்டமா இருந்தாலும் பொது நிகழ்ச்சின்னதும் மக்களின் இயற்கை அழைப்புக்கு ஏற்பாடு செஞ்சுட்டுதான் மறுவேலை. வீடு கட்ட, இல்லே இடிக்கன்னு எதா இருந்தாலும் பணியாட்களுக்கான கழிப்பறை ஒன்னு கொண்டுவந்து வச்சுட்டுத்தான் வேலையை ஆரம்பிப்பாங்க. அதான் ஊர் நல்லா சுத்தமா இருக்கு. மகளிடம் நல்ல ஏற்பாடுன்னு சொல்லிக்கிட்டே அந்தப் பகுதியைக்கடந்து போறோம், கண்முன்னே.......

இப்படி ஒரு கைகாட்டி. அடக்கடவுளே இதுவுமா காட்சிக்குன்னு போய்ப் பார்த்தால்..... எங்க ஊரு மக்கள்ஸ்க்கு நகைச்சுவை உணர்ச்சி ரொம்பவே அதிகம் என்பதும் துன்பத்திலும் சிரிப்போம் என்பதும் உண்மையாச்சு:-)

நம்ம ஹென்றி அதாங்க..... க்ரஹாம் ஹென்றி, ஆல்ப்ளாக்ஸ் ரக்பி குழுவின் பயிற்சியாளர் டாய்லெட்டில் உக்கார்ந்துருக்கார். உலகக்கோப்பையை நியூஸிக்கு ஜெயிச்சுக் கொடுத்தவர். இப்ப இவர் வெறும் ஹென்றி இல்லை. ஸர் பட்டம் கொடுத்து கௌரவிச்சுருக்கு அரசு. ஸர் க்ரஹாம் ஹென்றி.
ரெண்டாவது கழிப்பறையில் இந்த ஊரின் கஷ்மீர் பகுதியில் நிலநடுக்கம் காரணம் ப்ளம்பிங் சேதமடைஞ்ச ஒரு வீட்டம்மா. இந்த நிலையிலும் வீட்டுத்தோட்டத்தை அழகாப் பராமரிச்சு வச்சுருக்காங்க. பொதுவா கழிப்பறை என்ற இடத்தை ஏனோ தானோன்னு விடாம, உண்மைக்குமே நாம் கொஞ்சம் அலங்கரிச்சு வைக்கணும். சின்னதா ரெண்டு செடிகளோ, இல்லை பூச்சாடியோ வச்சு கெட்ட மணத்தைபோக்க ஏர் ஃப்ர்ஷ்னர், நல்ல மணத்துக்கு ரெண்டு நாப்தலீன் உருண்டைகள், இப்படிப்போட்டு வச்சால் மனசுக்கு ரிலாக்ஸா இருக்கும்.
மூணாவதா பழைய காலத்து லாங் ட்ராப். பார்த்தாலே நடுங்கும்விதமா ...... ரிமோட் ஏரியாக்களில் இன்னும் சில இப்படி இருக்கும். ஆனால் கழிப்பறை இல்லாமல் மட்டும் இருக்கவே இருக்காது. (கழிப்பறையின் அவசியம் இன்னும் நம்ம நாட்டு மக்களுக்குப் புரியலையேன்னு நினைக்கும்போது மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. வந்தா வந்த இடத்தில்ன்னு..... ப்ச்)
இந்தப் பக்கம் ரெண்டு மூணு ரெயிண்டீர் வகை மான்கள் நின்னுக்கிட்டு. இருக்கு. ஓடிட்டா யார் போய் புடிச்சாறது? அதுவும் தோட்டத்துலே இருக்கும் செடிகளில் வாய் வச்சுட்டா..... எச்சில் ஆகிடாது? நல்லவேளை பட்டிக்குள்ளே நிக்குந்துங்க. அலங்கார வளைவுக்கு அங்கொரு தாற்காலிக அமைப்பு. உள்ளூர் நர்ஸரியின் உபயம்.மெண்டல் ஆர்ட்


என்வைரொன்'மெண்ட்டல்' ஆர்ட்ன்னு கூந்தல்பனையின் மட்டைகளை வச்சு ஒன்னு, ஒன்னும் புரியலை. அப்ப இது மாடர்ன் ஆர்ட்:-) பெரிய பந்துபோல ஒன்னு வச்சு அதுலே இங்கே ஒரு வகைச்செடியின் நல்ல பாசிமணி போல் இருக்கும் ஆரஞ்சுக் காய்களை ( a kind of berry) குண்டூசி வச்சுக் குத்தி வச்சுருக்கு, டிஸைனைப்பார்த்தால் தென் அமெரிக்காவோன்னு தோணல். பக்கத்துலே அந்தக் காய்கள் கொத்து ஒன்னு கிடக்கு. கொஞ்சம் ஊசியும் வச்சுருந்தால் என்ன? நாமும் நம்ம பங்குக்கு ஒரு நாட்டையோ தீவையோ உண்டாக்கி இருக்கலாமுல்லெ?

ஆரஞ்ச்பெர்ரி

தோட்டத்தில் வழக்கம்போல் வருசாவருசம் அலங்கரிச்சு வைக்கும் பாத்திகள் இந்த வருசம் குறைவுதான். மயில் நீரூற்றுலே தண்ணீர் பொங்கிவந்துக்கிட்டு இருக்கு. நல்லவேளை நிலநடுக்கத்தில் பழுதாகலை. இதுக்கும் மயிலுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லைன்னாலும் மயில்போல நாலு பறவைச்சிற்பங்களை அதில் வச்சுருக்காங்க. சரியாச்சொன்னா இந்த நீரூற்றுக்கு வயசு 101. அப்போ பார்லிமெண்ட் அங்கமா இருந்த ஹானரபிள் J T Peacock என்றவர் ஊரை அழகுபடுத்தும் திட்டத்துக்காக இங்கிலாந்துலே இருந்து இங்கே கொண்டுவந்து வச்சார். அதான் அவர் பெயரால் பீகாக் ஃபவுண்டெய்ன். ஒரு காலத்துலே கலர்ஃபுல்லா அடிச்சுவச்ச நிறங்களைக் காணோம். அதைப்பற்றிக் கவலைப்பட நேரமில்லாத நடந்துபோன நிகழ்வுகளின் மௌன சாட்சிகளான வாத்துகளும், கடல்புறாக்களும் அங்கங்கே இடம்பிடிச்சு உக்கார்ந்திருந்தன,
பீகாக் பவுண்டெய்ன்

இப்ப நாம் தோட்டத்தின் மெயின் கேட்டுக்கு வந்துருந்தோம். சுற்றுலாப்பயணிகள் பயன்படுத்தும் வாசல் அது. தொட்டடுத்து மியூஸியம் இருப்பதால் அங்கே போய்ப் பார்த்துட்டு இங்கேயும் எட்டிப் பார்ப்பாங்க. நாம்தான் உள்ளூர்வாசிகளாச்சே.....புழக்கடை வழிகள் ரெண்டில், ஒன்னில் வந்திருந்தோம்.
கச்சேரி களை கட்டியாச்சு

அநேகமா எல்லாத்தையும் பார்த்துட்டோமுன்னுதான் நினைப்பு. கிட்டத்தட்ட ஒன்னரைமணி நேரம் நடந்துருக்கோமே! தகவல் நிலையத்தில் ப்ரோஷர் வாங்கியாந்திருக்கலாம். திரும்பிப்போகும் வழியில் பாட்டுக்கச்சேரி களைகட்டி இருந்துச்சு. வரவேற்பூ குளத்தில் ஆறு மக்களுடன் ஒரு இளம்தாய். முதல் பிரசவமாத்தான் இருக்கணும். கண்ணும் கருத்துமாப் புள்ளைகளைக் கவனிக்குது. சின்னதுகள் சொன்ன பேச்சைக் கேக்காம தாயை விட்டு மறுபக்கம் ஓடுவதும் கொஞ்சதூரம் போய் சட்ன்னுத் திரும்பிப்பார்த்து லபோதிபோன்னு தாயை நோக்கி ஓடியாறதுமா...ஜாலியா இருக்குதுங்க.
இளம்தாய்

தகவல் அலுவலகத்தின் வாசலிலேயே மலர்க்காட்சி விவரங்கள் வச்சுருந்தாங்க. மொத்தம் 12 டிஸ்ப்ளே! கண்ணை ஓட்டிட்டு எல்லாம் பார்த்துட்டோமேன்னு ........

கார்டன் கஃபே இருக்கே. காஃபி குடிக்கலாமான்னு மகள் கேட்டதால் உள்ளே நுழைஞ்சு வரிசையில் நின்னோம். புதுக்காப்பிக்கொட்டை அரைக்கும் வாசனை 'கம்'ன்னு தூக்குது.,. மணம் பிடிச்சுக்கிட்டே வரிசையில் முன்னேறி கவுண்டர் கிட்டே போகும்போது காஃபி வேணாம் ஐஸ்க்ரீம் வாங்கலாமான்னாள். நோ ஒர்ரீஸ்....வாட் எவர் யூ லைக்.......
கேஃபே வாசலில் கண்ணுக்கு ஒரு விருந்து


ரெண்டு ஐஸ்க்ரீம் (ராஸ்பெர்ரி வேணாம்) வாங்கிக்கிட்டு வரவேற்பூ பக்கத்தில் இருந்த பெஞ்சில் உக்கார்ந்து குளமெங்கும் நீந்தியோடிக் கும்மாளம் போடும் வாத்துகளைப் பார்த்து ரசிச்சுக்கிட்டே தின்னுட்டு நடை பாலத்தைக் கடந்து வீடுவந்து சேர்ந்தோம். பாலத்தின் கீழே ஓடும் நதியில் ஒரே வாத்துக்கூட்டம். ஏராளமான பெண்களுக்கு நடுவில் பச்சைக் கழுத்துடன் ரெண்டு கிருஷ்ணாஸ். ஜலக்ரீடை:-)))
கைப்பையில் இருந்த மலர்க்காட்சி விவரங்களை எடுத்து மேஜையின் வைக்கும்போது பார்க்கிறேன்..... அச்சச்சோ..... யானையை விட்டுட்டேனே:( அம்மாம் பெரிய உருவம் கண்ணில் படாத மர்மம் என்ன? மார்ச் நாலுவரை இருக்கு. இன்னொருநாள் போய் கண்டுகிட்டு வரணும்.


PIN குறிப்பு:
நாளை 22 ஃபிப்ரவரி, 185 உயிர்களைக் காவு வாங்கிய நிலநடுக்கத்தின் முதலாம் ஆண்டு நினைவுநாள். தோட்டத்தில் காலை பத்து மணிக்கு ஒரு நினைவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செஞ்சுருக்காங்க. நினைவுச்சின்னம் ஒன்னும் திறந்து வைக்கப்போறாங்க. விபத்தில் உயிரிழந்த அனைத்து மக்களுக்கும் நகர மக்களின் இரங்கல்கள்:(