Monday, February 20, 2012

Dடாட்டருடன் ஒரு Dடேட்

வாழ்ந்து கெட்ட குடும்பத்தில் பண்டிகைகள் முன்னைப்போலக் கொண்டாட முடியுமா? முடியாதுதான். ஆனா..... என்ன ஆனா ஆவன்னா.....
அதுக்காகக் கொண்டாடாம அம்போன்னு விட்டுடமுடியுமா சொல்லுங்க. இப்போ இருக்கும் சக்திக்கு ஏத்தபடி கொஞ்சமாவது செய்ய வேணாமா? அதி ஏமி ஏமோ பழமொழி சொல்வாங்களே.... ஆங்.... பொன் வைக்கிற இடத்தில் பூன்னு. அப்படி.

புகலிடமான ஹேக்ளி பார்க்குலேதான் கொண்டாட்டம். எங்கூர் ஃப்ளவர் ஷோ! எல்லா வருசமும் காதலர்தினத்தையொட்டியே எப்படியாவது ஏற்பாடு செஞ்சுருவாங்க. இந்த வருசம் சீன தீபத் திருவிழாவோடு 'க்ளாஷ்' ஆகிருமேன்னு கொஞ்சூண்டு தள்ளி வச்சதுதான். ஒருத்தருக்கொருத்தர் ஆதரவா இருக்கணும்தானே? அங்கே வந்த சனம்தானே இங்கேயும் வரப்போகுது இல்லீங்களா? இந்த வருசம் ஃபிப்ரவரி மாசம் 17 முதல் மார்ச் 4 வரைன்னு கணக்கு.

சம்மர்(!!!!) டைம் ஃபெஸ்டிவல். (இங்கே இருக்கற சம்மருக்கு இதெல்லாம் டூ மச். இன்னும் 10 நாளில் கோடைகாலமே முடியப்போகுது. காலண்டரில் மட்டும்தான் வெய்யில்காலம். காணாமப்போன சூரியனை இந்தக் கோடைக்கால மூணுமாசமாய் தேடிக்கிட்டே இருக்கோம். இன்னும் ஆப்டலை. கையில் மட்டும் கிடைக்கணும்.அப்ப இருக்கு அவனுக்கு!)

கதீட்ரலின் மலர்விரிப்பு (ஃப்ளோரல் கார்பெட் .2009 மலர்க் கண்காட்சி)

அந்தக் காலத்துலே ( 2011 வரை) எங்கூர் கதீட்ரலில் நடுவில் நடைபாதை இருக்கும் பாருங்க அந்த இடத்தில் ஃப்ளோரல் கார்பெட்ன்னு 20 மீட்டர் நீளத்துக்கு மலர்விரிப்பு போட்டு வைப்பாங்க. உள்ளே ஒரு தூண் விடாமல் மலர் அலங்காரம், பக்கத்து தெருவில் இருக்கும் விக்டோரியா சதுக்கத்தில் பூக்களால் அலங்காரம், இதையொட்டியே ஓடும் ஏவொன் நதியில் மிதவைகளிலும், கரையில் அங்கங்கே பலவித டிஸைன்களிலும் அலங்கரிச்சு விளக்குப்போட்டு ஜெகஜோதியா இருக்கும். டவுன் ஹாலில் இந்த நாட்களில் விசேஷ கச்சேரிகள், வெவ்வேற தலைப்புகளில் உலக மணப்பெண்கள், உலகக்குழந்தைகள், இப்படி அலங்கார அணிவகுப்புகள் எல்லாம் நடக்கும். எங்க ஊர் வேற கார்டன் சிட்டி ஆஃப் நியூஸி என்ற பெத்தபேர் படைச்சுருப்பதால் அட்டகாசமாக் கொண்டாடுவோம், கொண்டாடினோம்.


ஏற்கெனவே பொட்டானிக்கல் கார்டனில் பூக்கள் பரவாயில்லாமப் பூத்துக் குலுங்கி இருக்கு. அங்கே வச்சுக்கிட்டால் அலங்காரச்செலவு கொஞ்சம் குறையும். கோபால் வேற நாட்டில் இல்லையே போகணுமா வேணாமான்னு ஒரு யோசனை. மகள் ஃபோனில் கூப்பிட்டு நாளைக்கு என்ன ப்ரோக்ராமுன்னு கேட்டாள். குறிப்பிடும்படியா ஒன்னுமில்லைன்னேன். அப்போ ஃப்ளோரல் ஃபெஸ்டிவல் போகலாமான்னாள். ஆஹா....கரும்பு அதுவே கிடைக்கும்போது.......

பகல் சாப்பாட்டுக்குப்பிறகு போகலாமுன்னு முடிவாச்சு. 'பகல் சாப்பாட்டை என்னோட சேர்ந்து சாப்பிடு'ன்னு சொன்னதும் டீல் ஓக்கே ஆச்சு. எப்பவும் படு பிஸியா இருக்கும் மகளை இப்படி இழுத்தால்தான் உண்டு. இட்ஸ் அ டேட்! எல்லாம் தோளுக்கு மிஞ்சினா தோழி என்ற கணக்குதான்.

அடை, தேங்காய்ச் சட்டினி, மாம்பழ சர்பத்ன்னு எளிமையான பகல் உணவு. ( அடை அவியல் காம்பினேஷன் எனக்குப்பிடிக்காது. ரொம்ப ஹெவியா இருக்கும்) கிளம்பிப் புகலிடத்துக்குப் பயணப்பட்டோம். 16 டிகிரி என்பதால் குளிர் தாங்கும்விதமா உடை:( கார்பார்க்கிங்கில் இடம் தேடிக் கொஞ்சம் அலைஞ்சோம். ஊரே வந்துருக்கு போல! இடம் கிடைச்சதும் நிறுத்திட்டு ஏவொன் நதியின் நடைபாலம் கடந்து தோட்டத்துக்குள்ளே நுழைஞ்சோம். சைக்கிளும் நாயும் உள்ளே வர அனுமதி இல்லை. நல்லவேளை எனக்கு வாலில்லை:-)
வரவேற்பூ

தகவல் அலுவலகத்தையொட்டிய குளத்தில் நாலு பெங்குவின், ஒரு டெர்ன் பறவை, ஒரு திமிங்கிலம் வரவேற்கிறோமுன்னு சோகமா நின்னதுகள். தோட்டம் சுற்றிப்பார்க்க ரெண்டு பெட்டிகளுடன் வண்டி பயணிகளை ஏத்திக்கிட்டு இருக்கு. அடை தின்ன காலுக்கு நடை ஒரு கஷ்டமா? பொடிநடையாப் பார்த்துக்கிட்டே போனோம்.
முதல் 'மரியாதை' எங்க CERAவுக்கு! ( Canterbury Earthquake Recovery Authority) உள்ளூர் எம் பியும், நிலநடுக்க மீட்டெடுப்புக்கான மந்திரியாகவும் இருக்கும் ஜெர்ரி ப்ரௌண்லீயும் ( Canterbury Earthquake Recovery Minister Gerry Brownlee) ஸெராவின் தலை (CEO. Roger Sutton ) ரோஜர் சட்டனும் நாற்காலியில் நின்னு உடைஞ்சு போன ஊரை (சிம்பாலிக்கா இதுக்கொரு சிலை)பார்த்துக்கிட்டு இருக்காங்க. எங்க மந்திரி நல்ல ஸாலிட்டா இருப்பார். ரெண்டு பேரின் முகமும் அச்சு அசலா அந்த பொம்மைக்கு இருந்துச்சு. க்ரேட்!!!!!!
புதுமையா ஒரு ஆர்ட்ன்னு சின்னதா ஒரு சுழல் அமைப்பு. வெளியே நீல நிறம், உள்ளே வயலெட்டில் இருந்து ஆரம்பிச்சு சிகப்புவரை படிப்படியா வானவில்லின் நிறங்களும் அதுலே படங்களுமா வரைஞ்சு வச்சுருந்தாங்க.
இந்தப் பக்கம் ஒரு விண்டேஜ் வண்டியில் விண்டேஜ் உடுப்புடன் ஒரு ஜோடி பிக்னிக் பிரம்புக்கூடையுடன் இங்கேயும் அங்கேயுமா சுத்தி வந்துக்கிட்டு இருந்தாங்க. பென்னி ஃபார்திங் சைக்கிளோடு இன்னொரு ஜோடி ஒருபக்கம். அந்தக் காலத்தைக் காமிக்குறாங்களாம். கொசுவத்திக்கே கொசுவத்தி!
பென்னி ஃபார்திங்
மவொரிகள் பகுதிக்கான இடத்தில் (Te Puna Ora)ஸ்ப்ரிங் ஆஃப் லைஃப் என்ற நீர் ஊற்று புதர்மண்டிக்கிடக்கு:( தோட்டம் முழுசும் அங்கங்கே இருக்கும் நீர்நிலைகளிலும் புல்தரைகளிலும் வாத்துக்குடும்பங்கள் கூட்டங்கூட்டமா உலாத்திக்கிட்டு இருந்தாங்க. 'இன்னிக்கு என்ன ஆடுது? ஏன் இம்மாங்கூட்டம்'ன்னு நம்மைப் பார்த்துத் தலையாட்டிக்கிட்டே போகுதுங்க.
பதின்ம வயதுப்பிள்ளைகளுடன் ஒரு தாய் .

மவொரி நீர் ஊற்று

பூத்திருவிழாவுக்காக எங்கே அலங்காரம் வச்சுருக்காங்கன்னு சின்னச்சின்ன தகவல் அறிவிப்புகள் வச்சுருந்தாங்க. அதைக் கவனிச்சு அங்கங்கே போய்ப் பார்த்துக்கணும். எனக்குப் பிடிச்ச பகுதியில் ( பெரணி மரங்கள் அடர்ந்த மழைக்காடு) Eyes (I) Spy ன்னு நாமும் கலந்து மகிழும்விதமா ஒன்னு. ' I spy with my little eys something green'னு சொன்னதும் மகளுக்கு பழைய விளையாட்டு ஞாபகம் வந்துருச்சு:-) yeah. everything is green here ஹாஹாஹாஹா.


அங்கங்கே ரெண்டு விழிகள் இருக்கும் படத்தை க்ளூவா வச்சுருக்காங்க. அங்கே நின்னு சுத்துப்புறத்தில் கண்ணை ஓட்டினால் இந்த மாதிரி எதாவது ஆப்டும்:-) ஒரு அஞ்சாறு சமாச்சாரம் கிடைச்சது!
ஒரு அம்மாவும் குழந்தையும் மெதுநடையில். அம்மா கேமெராவுக்குப் பழக்கப்பட்டுருக்கு போல. கிளிக்கும்வரை நின்னு போஸ் கொடுத்துச்சு.ஒருவேளை நம்மூட்டுக்கு வந்து போன அம்மாவா இருக்குமோ!!!!


ரோஸ் கார்டன்
ரோஸ் கார்டனில் பூக்கள் எக்கச்சக்கம். அந்த பச்சைவேலியைச் சுத்திக் குட்டிக்குட்டிக் காய்களுடன் வளைந்து போகும் கொடிக்கு பெயர் கோல்டன் ஹார்னெட்!
எட்டுப்பொட்டி வரிசை....

இன்னொரு புல்வெளியில் பொட்டிபொட்டியா எட்டுப் பொட்டிகள் வச்சு ஒவ்வொன்னிலும் ஒரு அலங்காரம். எல்லாம் ஊரின் நிலையைக் காமிக்கும் விதமா! உடைஞ்ச ஓடுகள் செங்கற்கள் வச்சுச் செஞ்ச மலர் அலங்காரம், இடிஞ்சு போன சர்ச்சுகளின் மணிகளைக் கொண்டு செஞ்ச பூந்தொட்டிகள் எல்லாம் மனசில் ஒரு சின்ன வலியை உண்டாக்கியது:(
இதுக்கிடையில் நம்பிக்கையே வாழ்வுன்னு எங்க Chalice டிஸைனில் பூச்சாடி ஒன்னு. 'அட...நம்ம சலீஸா'ன்னதுக்கு 'இந்த வருஷ ஃப்ளவர் ஷோவின் ஐகான் இதுதான்'னு மகள் சொன்னதும்தான்...... கவனிச்சேன். எல்லா தகவல் அறிவிப்புகளிலும் இதைத்தானே போட்டுருக்காங்க, சில நேரங்களில் கண் பார்ப்பது மூளைக்குப் போறதில்லை!!
அலங்காரப் பூச்சாடி...........

சலிஸ் அப்போ ஊருக்கு 150 வயசுக் கொண்டாடினபோது! கீழே படம் நம்ம கதீட்ரலின் முன். இனிமே இவைகளைப் படத்தில்தான் பார்க்கணும். கதீட்ரல் முற்றிலும் இடிஞ்சு விழுந்துருச்சு. நகரமையம் இனி இல்லை:( இந்த சலீஸ் மட்டும் நிக்குது. இதையும் வேறு இடத்தில் கொண்டுபோய் வைப்பாங்கன்னு நினைக்கிறேன்.தொடரும்......:-)


PIN குறிப்பு: பதிவின் நீளம் கருதியும் படங்கள் அதிகம் இருப்பதாலும் இரண்டு பகுதிகளாக வெளிவருகிறது மலர்க்கண்காட்சி.

30 comments:

said...

அருமையான பதிவு.
அற்புதமான படங்கள்.
நன்றி அம்மா.

said...

வால்லா சீ நல்லா இருக்கு படங்கள். உங்களுக்கு வால் இல்லைனு படிச்சேனா! அதே நினைப்பு! :P :P

said...

Beautiful pictures and your post. Thanks for sharing.

said...

படங்களும் விவரிப்பும் அருமை.

//பதிவின் நீளம் கருதியும் படங்கள் அதிகம் இருப்பதாலும் இரண்டு பகுதிகளாக வெளிவருகிறது மலர்க்கண்காட்சி.//

:) அது மட்டுமில்ல, பதிவு நீளமானால் விரல்வலிக்கும் நாளைக்கு எழுத முடியாது. எனக்கு பிரச்சனை தொடர்ச்சியாக தட்டச்சினால் மூச்சுவிட கஷ்டமாகும்

said...

மாம்பழ சர்பத் #ரஸ்னா?

:-)))))))

said...

சாலீஸ் நிற்கிறதா. ஹைய்யோ அதுவும் இல்லைன்னு நினைச்சேன்பா:(
சந்தோஷமோ சந்தோஷம்.
வாத்தம்மா தான் இங்க வந்துவிட்டது. சந்தேகமே இல்லை.

படங்கள் அற்புதம்னு சொல்லிக் கை வலிக்கறது;)
இவ்வளவு சோகத்தையும் தாண்டி வந்து நல்லா இருங்கப்பா.

said...

வாங்க ரத்னவேல்.

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

said...

வாங்க கீதா.

விடுவிடுன்னு நடக்கும் மகளின் பின் குடுகுடுன்னு ஓடவேண்டி இருக்கே:-)))))

said...

வாங்க ஓலை.

முதல் வருகைக்கு நன்றி.

நம்ம தளத்தில் இது வெறும் 1301வது பதிவு. நேரம் கிடைக்கும்போது பழசைக் கொஞ்சம் புரட்டுங்க:-)))))

said...

வாங்க கோவியாரே.

உங்களைப்போல் ஒரு நாளைக்கு ரெண்டு மூணு பதிவெல்லாம் என்னால் முடியாது.

ஒரேடியா கணினியில் அமர முடியாது. எதாவது வேலைகள் குறுக்கே வந்துகொண்டே இருக்கும். அது ஒரு ப்ரேக்:-))))

said...

வாங்க ஹுஸைனம்மா.

ரஸனா இல்லைங்க. இங்கே அல்ஃபோன்ஸா மாம்பழக்கூழ் டின்னில் கிடைக்குது. அதை ஃப்ரீஸர் ட்ரேயில் ஊத்தி ஐஸ் க்யூப்ஸ் பண்ணி வச்சுக்குவேன்.

மில்க்ஷேக் என்றால் நாலைஞ்சு ஐஸ் க்யூப்ஸ், கொஞ்சம் பால், ஒரு டீஸ்பூன் சக்கரை

மேங்கோ லஸ்ஸின்னா பாலுக்குப் பதிலா தயிர்.

சர்பத்ன்னா வெறும் தண்ணி கூடவே கொஞ்சம் வறுத்தரைத்த சீரகப்பொடி.

ப்ளெண்டரில் ஒரு சுத்து. ரெடி ஆகிரும்.

said...

//போகணுமா வேணாமான்னு//

சமீப வருடங்களா நானும் இப்படி குழப்பத்தில் இருப்பேன். அப்புறம் பத்திரிகை செய்தி வரவர (கேமராப்) பொட்டியத் தூக்கிட்டு கெளம்பிடறது வாடிக்கையாயிட்டு:)!

ஃப்ளோரல் கார்ப்பெட் அழகு.

வலிகளையும் நம்பிக்கையாய் மாற்றி வடிவமைத்திருக்கிறார்கள்.

//நீளம் கருதியும் படங்கள் அதிகம் இருப்பதாலும் //

உங்கள் ஊரின்(கார்டன் சிட்டி) தங்கை கொண்டாடிய குடியரசுதினக் கண்காட்சியின் இரண்டாம் பாகம் நானும் இனிதான் வெளியிடணும். இந்த வாரம் செய்கிறேன்.

said...

வாங்க வல்லி.

சலீஸ் ஒரு 12 வருசமா சதுக்கத்தில் சர்ச்சுக்குப் பக்கத்தில் இருக்குப்பா.உள்ளூர் சிற்பக்கலைஞர் செஞ்சது. நல்லா கருப்பு க்ரானைட் பேஸ் வச்சு பிடிப்பிச்சு இருக்காங்க. அகலமும் கூடுதல். கீழ்பகுதி சுற்றளவு மட்டும் 2 மீட்டர். மேல்பகுதி 8.5 மீட்டர். உசரம் 18 மீட்டர். நல்ல ஸ்டீல் ஸ்ட்ரக்ச்சர். அதான் தாக்குபிடிச்சிருக்கு இதுவரை (டச் உட்)

said...

படங்கள் பகிர்வுக்கு நன்றி....

அங்கிங்கெனாதபடி எல்லாத்தையும் ரசித்தேன்...

said...

படங்கள், குறிப்பு என அனைத்தும் அருமை....

//சைக்கிளும் நாயும் உள்ளே வர அனுமதி இல்லை. நல்லவேளை எனக்கு வாலில்லை:-)//

ரசித்தேன்...

said...

//சைக்கிளும் நாயும் உள்ளே வர அனுமதி இல்லை. நல்லவேளை எனக்கு வாலில்லை//

ஹா..ஹா..ஹா..

மிக அழகிய படங்களுடன் அற்புதமான பதிவு.
அடுத்த பகுதி இருக்கா? ரசிப்பதற்கு காத்திருக்கிறேன்.

said...

படங்கள் ரொம்ப அழகா இருக்கு.. விண்டேஜ் வண்டி சவாரி செய்யலையா நீங்க :-)

said...

everything is green here

எவர் கிரீன் நினைவுகள்.....

said...

வாங்க ராமலக்ஷ்மி.

//வலிகளையும் நம்பிக்கையாய் மாற்றி வடிவமைத்திருக்கிறார்கள்.//

ஊரே இந்த விஷயத்தில் ஒன்றுபட்டுக் கிடக்கு. இடைவிடாத போராட்டம் என்றாலும் எப்படியும் மீண்டும் துளிர்த்து வந்துருவோம்!!

அக்காவுக்கு இருக்கும் ஆள்பலம் தங்கைக்கு இல்லைப்பா. அதான் ஹீனமாக் கொண்டாடிக்கறோம்.

said...

வாங்க பாசமலர்.

ரசிப்புக்கு நன்றிப்பா. மீண்டும் ரசிக்க வருக:-)

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரொம்ப'கழியுது'ன்னு இருந்த வாலை ரெண்டு மாசத்துக்கு முன்னே வெட்டிவச்சுருக்கேன்:-)))))

said...

வாங்க ராம்வி.

அடுத்த பகுதியை வெளியிட்டாச்சு, ரசீப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்.....

said...

வாங்க அமைதிச்சாரல்.

அதுக்குன்னு ட்ரெஸ்ஸப் பண்ணிக்கலையேப்பா:( அப்பத்தானே நல்லா இருக்கும்???

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

நினைவுகள் எல்லாம் க்ரீனாவே இருந்துட்டா....... எவ்வளோ நல்லா இருக்கும்!

said...

படங்களுடன் பதிவு மிக மிக அருமை
நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற உணர்வை
ஏற்படுத்திப் போனது.பகிர்வுக்கு நன்றி
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்க

said...

வாங்க ரமணி.

ரசிப்புக்கு நன்றிகள். அடுத்த பகுதியை இன்னிக்கு பதிஞ்சுருக்கேன்.

said...

மலர்க் கண்காட்சி அழகான படங்களுடன் சூப்பரா இருந்தது டீச்சர்....

பகல் உணவாக அடை, தேங்காய் சட்டினி, மாம்பழ சர்பத்.....சூப்பர்ர்ர்ர்ர்ர்

said...

வாங்க கோவை2தில்லி.

ரசிப்புக்கு நன்றி.

எங்கே வாழ்ந்தால் என்ன..... நாக்கு சொன்ன பேச்சை எங்கே கேக்குது?:-)))))

said...

சுழல் அமைப்பில் நீலநிறங்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றன.:)

மனதுக்கு இனிய படங்களுடன் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கின்றது.

said...

வாங்க மாதேவி.

தவறாமல் வந்தமைக்கு நன்றிப்பா.