Saturday, March 30, 2024

நூறு வயசு ஆகிருச்சாமே !!!!

நம்மைவிடப் பண்டிகைகள் கொண்டாடறதுலே கடைக்காரர்களுக்குத்தான் ஆர்வம் அதிகம், இல்லே ? 
நம்மூருலே  லேபர் டே வீக்கெண்ட் போனகையோடு (அக்டோபர் நாலாம் திங்கட்கிழமை ) எல்லா மால்களிலும், கடைகளிலும் க்றிஸ்மஸ் சம்பந்தப்பட்ட பொருட்கள்  எல்லாமே விற்பனைக்கு வந்துரும். நியூஸியில்  ஹாலோவீன் கொண்டாட ஆரம்பிச்சபின்னும் இப்படியேதான்.....  ஒரு பக்கம்  பேய் பூதம் பிசாசு பில்லிசூனியம்னு குவிச்சுருந்தாலும் ஒர் பக்கம் க்றிஸ்மஸ் சமாச்சாரங்களே ! 

இந்த வருஷம் என்ன புதுசா வந்துருக்குன்னு  போய்ப் பார்க்கத்தான் வேணும்.  சீனவனும், லேசுப்பட்டவனா ? நமக்காக, அவன் மண்டையை உடைச்சுக்கிட்டுப் புதுசுபுதுசா கண்டுபிடிச்சுத் தள்ளறான், இல்லையோ !
பசங்களுக்கு சான்ட்டா ஸூட் வந்துருக்கு !  ரஜ்ஜுவுக்கு ஒன்னு வாங்கலாமுன்னா.... அவன் போட்டுக்கமாட்டான்.....

 நல்லா இருப்பதைப் பார்த்து வச்சுக்கணும்.  பண்டிகை முடிஞ்ச மறுதினம்,  விற்காமல்  மிஞ்சிப்போனதையெல்லாம் ஸேலில் போட்டுருவாங்க.  இது  இன்னும் ஆறேநாளில் வரும் புதுவருஷம் வரை  போகும்.  முதல்நாள் அம்பது சதம் கழிவுன்னு ஆரம்பிப்பது.... அடுத்த சிலநாட்களில் 80 இல்லை 90 சதம் கழிவில் இருக்கும். நான் அப்போதான் போய்ப் பார்த்து, ஆசைப்பட்டது இருந்தால் வாங்குவேன்.   இது நம்ம  பண்டிகை இல்லைதானே ? அடுத்த வருஷ அலங்காரத்துக்கு எடுத்துவச்சால் ஊசிப்போகுமா என்ன ? 

நம்ம வீட்டில்  பண்டிகை இல்லைதானே தவிர பண்டிகைக்கான அலங்காரம் உண்டு. 

அக்டோபர் கடைசியில் ஆரம்பிக்கும் விற்பனைகள், க்றிஸ்மஸுக்கு ஒரு மாசம் இருக்கும்போது   சூடு பிடிச்சுரும். மால்களிலும் பெரிய பெரிய க்றிஸ்மஸ் மரங்களும், சாண்ட்டா வீடும்,  வந்துரும். கூடவே ஒரு ஃபோட்டோ எடுக்கும்  கடையும். சின்னப்பசங்கள் சான்ட்டாவைச் சந்திச்சுப்பேசி, அவரோடு படங்கள் எடுத்துக்கலாம். பதினைஞ்சு நிமிட்லே ப்ரிண்ட் போட்டு படத்தைக் கையில் கொடுத்துருவாங்க. குழந்தைகளின்  முதல் க்றிஸ்மஸ் படங்கள் எடுத்தே ஆகணும்தான், இல்லே ? 

கல்வி நிறுவனங்களுக்கு  விடுமுறைக்காலம் என்பதால்  சாண்ட்டாவாக நடிக்கும் வேலையும்  இளைஞர்களுக்குக் கிடைக்கும். பஞ்சுதாடியும், வெளுத்தமுடி விக்கும் இருக்கும்போது  வேறென்ன கவலை? 

நம்ம மாலில் எல்லா ஏற்பாடுகளும் நடந்துமுடிஞ்சுருக்கு ! நாந்தான் பலநாட்களா மாலுக்குள் போய்ச் சுத்தாமல் சூப்பர்மார்கெட்டும், கேட் ஃபுட்டுமா இருந்துட்டேன். 

டிஸ்னிக்கு வயசு நூறு ஆயிருச்சுன்னு ஒரு பெரிய ஹாலில் டிஸ்ப்ளே வச்சுருக்காங்க. நம்ம சொந்த சாண்ட்டா க்ளிக்ஸும் ஆச்சு:-)



நம்ம மால் சான்ட்டா..... ரெய்ன்டீர்களுக்குத் தீவனம் போடப்போயிருந்தார்.  வழக்கமா சான்ட்டாவிடம் நாலு வார்த்தை பேசிட்டு வருவேன்.  ப்ச்.... 
அப்புறம் இன்னொருநாள் வேறொருமாலில் பார்க்க முடிஞ்சது !

இந்த வருஷம் நம்ம வீட்டு டிஸ்ப்ளேக்கு என்ன செய்யலாமுன்னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன்.  டேபிள் அலங்காரமா  ஸ்நோபால் செய்யலாமா ? அதுக்குள்ளே நிக்கும் அளவிலே ஒரு க்றிஸ்மஸ் மரம் தேடியதில் சரியா ஒன்னும் அமையலை. நானே   சுமாரா ஒன்னு செஞ்சேன்.  மரத்தின் நிறம் சரிவரலை. அப்புறம் இன்னொன்னு சரியான நிறத்தில் செய்ய முடிஞ்சது.  நம்ம கிடங்கில் இருக்கும் க்றிஸ்மஸ் பொட்டிகளைக்  குடாய்ஞ்சதில் ரெய்ன்டீர் ஆப்ட்டது. 

வாசலுக்கான  வளையத்தையும் மாட்டியாச்சு.   தரை அலங்காரத்தில் நேட்டிவிட்டி ஸீன் வைக்கணும்.  முதலில் ஒன்னு செஞ்சு பார்த்துட்டு, மனசுக்குத் திருப்தியில்லைன்னு  வேறொன்னுக்கு மாத்தினேன் !



எல்லாம் இது போதுமுன்னு இருக்கவேண்டியதுதான் !


PIN குறிப்பு :  துக்கவெள்ளியன்னிக்கு பொறந்தநாள் அலங்காரம் போடவேண்டியதா அமைஞ்சுருக்கு !  வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் சேர்ந்தே வருதுல்லே !!!!!


Wednesday, March 27, 2024

தீபத்திருநாள் !

திரும்பிப்பார்த்தால் கார்த்திகை தீபம்..... இதோ நான் வந்துட்டேங்குது.... அதுக்குள்ளேயா ? 
"பின்னே.... நீ பாட்டுக்குத் தீபாவளிகளைக் கொண்டாடிக்கிட்டு இருந்தால் அது முடியும்வரை நான் காத்திருக்கணுமா ? "

"சொல்றது சரிதான்.... இந்த வருஷம் தீபலக்ஷ்மிகள் வேற வந்துருக்காங்க...... கொண்டாடினால் ஆச்சு !"
முக்கியமா தீபம் ஏத்தணும்!  ஏத்தியாச் :-) 












சம்ப்ரதாயமா செய்றதெல்லாம் இங்கே முடியலை...... தெரிஞ்சவரை செய்யறதுதான்.... அதுவுமே  இந்தியப் பண்டிகைகளைக் கொண்டாடும்  வகையில்  நம்ம குடும்பச்சங்கிலியில்  கடைசியில் நிக்கறது நாந்தான்...... விடக்கூடாது !

என்ன ஒரு சோகமுன்னா.......   இந்த கலாட்டாவில் நம்ம தோட்டத்துலே இருக்கும் கன்ஸர்வேட்டரியை எட்டிப்பார்க்கலை..... பதிமூணு வருஷமாக் காத்திருந்த கள்ளியில் அன்றைக்கு மொட்டு வந்துருச்சேன்னு கொண்டாடிட்டு, தினமும் ஒரு பார்வை பார்க்காமல் போனது என் தப்புதான்.


முந்தாநாள் பூத்துருக்கு ! இதன் வாழ்வு 24 மணி நேரந்தான் என்றபடியால் வாடி நிற்கும் பூவைப் பார்த்துக்  கண்ணில் ஜலம் வச்சுண்டேன்.............. ப்ச்...
ஆனால் ஒரு அல்ப சந்தோஷம்.... நான் யூகிச்சதுபோல பூவின் நிறம் வெள்ளை !


Tuesday, March 26, 2024

படிப்படியா............... யம்மா.... இவன் லேசுப்பட்டவன் இல்லை.....


போதும் போதும்னு  சொல்லும் வகையில் தீபாவளியைக் கொண்டாடித் தீர்த்தோம் ! இனி ஒழுங்கு மரியாதையா வீட்டில் விட்டு வச்சு வச்சுருக்கும் வேலைகளை முடிக்கணும். இப்போதைக்கு அது கொலுப்படி :-)
 படிகளுக்குப் பலகை போட்டு முடிக்கணும். அதுக்கு முதலில் படியை எங்கே வைக்கப்போறோமுன்னு  முடிவு செஞ்சுக்கணும். நம்ம பழைய படி இருக்குமிடத்துலேயே வைக்கலாம் என்று பார்த்தால்  இது  தரையில் நீளமா நீட்டி வருது.  நமக்கு அறைக்குள் போகவரக் கஷ்டம்தான். காலில் இடறினால் அவ்ளோதான்:-(
ஸ்வாமி மேடைக்கு நேரெதிரா இருக்கும் சுவரையொட்டி  அளந்து பார்த்தால் சரியா இருக்கு. என்ன ஒரு ப்ராப்லமுன்னா அங்கே போட்டு வச்சுருக்கும் சோஃபாவை எடுத்து வேறிடத்தில் போடணும்.  இருக்கும் 'மூளை'யைக் கசக்கிப்பிழிஞ்சதில் ஊஞ்சலுக்கந்தாண்டை இருக்குமிடம் பரவாயில்லை. ஆனால் அங்கே இருக்கும் பொம்மை வரிசையை இடம் மாத்தணும். யாஹாங் ஸே வஹாங்னு.... பொம்மைகளைப் ஃபோயருக்கு மாத்தினோம். 
சோஃபா இங்கே வந்தது. நம்ம வைஷுவும் ஐஷுவும்  புது இடத்து மாறினாங்க. இந்த இடம் நம்ம ரஜ்ஜுவீட்டாண்டை ! சின்னவன் வண்டியைப் பார்க் செய்வது அங்கேதான் !
கொலுப்படிக்கு ஒரு உறையும்  கிரியே விற்பதால் அதையும் சேர்த்தேதான் வாங்கி அனுப்பினார் நண்பர்.  மொத்தமே மூணு நிறங்கள்தானாம்.  சிகப்பு, மஞ்சள் & வெள்ளை. பச்சை இல்லயேன்னு கொஞ்சூண்டு கவலைப்பட்டுட்டு ,   மஞ்சள் சொன்னேன்.   எல்லாம் போட்டுப் பார்த்ததும்   நல்லா இருக்கான்னு யோசிக்குமுன்னேயே நம்மவனுக்குப் பிடிச்சுப்போச்சு போல !










சரசரன்னு ஏறுவதும் இறங்குவதுமா  டைம்பாஸ் ஆகுது !  இறங்கும்போது துணியை நகங்களால் பிடிச்சு இழுத்துக்கிட்டே இறங்கறான்.  ஐயோ.... இது வேலைக்காகாது.  பொம்மைகள் இருக்கும்போது துணியைப் பிடிச்சு இழுத்தால்  எல்லா பொம்மைகளும் விழுந்து வைக்கும் ! 

அதனால் கவர் இல்லாமல் இருக்கட்டும்னு முடிவு.  'அது ஒன்னும் எனக்குப் பிரச்சனையே இல்லை. ஜங்கிள் ஜிம் போல இருக்கு !  அடிவழியா நுழைஞ்சு போய் அங்கிருந்து எது வசதியோ அந்தப் படிக்குத் தாவி ஏறுவேன்'னு  அவன் முடிவு. எப்படியானாலும் தலைவலி பொம்மைகளுக்குத்தான்..... உடைஞ்சுபோனால் நான் என்ன செய்ய ? 







கடைசியில் வேற வழி இல்லாமல்  பக்கவாட்டில் கட்டங்கட்டமாய் இடைவெளி  தெரியும்  ஜங்கிள் ஜிம்மை மறைக்கும்படி ஆச்சு. திருப்பதி தேவஸ்தானக் காலண்டர் பழசு ஒன்னை எடுத்து அந்தப் படங்களை ஒட்டிவச்சோம்.

முன்பக்கத்துக்கு, வால்பேப்பர் ரோல் ஒன்னு வீட்டில் இருந்ததை அளவு பார்த்து வெட்டி ஒட்டியாச். ஒட்டறதுன்னா..... ப்ளூடாக் போட்டுத்தான்.   வேண்டாமுன்னா பிரிச்சு எடுப்பது சுலபம்.  

இவ்வளவும் ஆனபின், நம்மவர் சொல்றார்.... இனி எல்லாத்தையும் பிரிச்செடுத்துப் பெட்டியில் வச்சுடலாமா ? அடுத்தவருஷம் கொலுவுக்குத் திரும்பப் படி கட்டினால் போதாதா ?
ஐயோ.....  ப்ளாஸ்டிக் தண்டுகளை இணைப்பது  அவ்வளவு சுலபமில்லை.  மரக்கட்டையால் தட்டித்தட்டித்தான் இணைக்கணும்.  பலமாத் தட்டினால் ப்ளாஸ்டிக் ஃபணால்......... ஒன்னா ரெண்டா...... இத்தனை இணைப்பை பிரிக்கவும் திரும்பப் பொருத்தவும்  இனி மெனெக்கட முடியாது.... 
அதுபாட்டுக்கு அப்படியே இருந்துட்டுப் போகட்டும் !


ததாஸ்து...........................