Sunday, September 30, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 28

11/12
இன்னைக்கும் காலையிலே ஏழரைக்கே இவர் போனாரு. பில்டர் வரேன்னு சொல்லியிருக்காராம். முன் கதவு சாவி அவர்கிட்டே இல்லையே!
இவர்போய்க் கதவைத் திறந்து வச்சபிறகு, பில்டர் வந்துட்டாராம். இன்னைக்கு கதவுங்களுக்கு கைப்பிடியெல்லாம் போடறேன்னு சொன்னதாலே
இவர் திரும்பி வந்து எல்லாப் பூட்டும் கைப்பிடிகளும் இருக்கற பெட்டியைக் கொண்டுபோனார்.அப்புறம் பேப்பர் பார்த்தப்போ, பக்கத்துத் தெருவிலே ஒரு கராஜ் சேல் இருக்கு. ஃபிரிட்ஜ் இருக்காம். மகளோடத் தனிக் குடுத்தனத்துக்கு
வேணுமே! போய்ப் பார்த்தா நல்லாவே இருந்துச்சு. $200க்கு பேசி அட்வான்ஸ் கொடுத்தோம். கொஞ்சம் ப்ளாஸ்டிக் கன்டைனர்ஸ் $ 5 க்கு
கிடைச்சது. ரெண்டு மார்பிள் பொம்மைங்க $10க்கு வாங்கினேன். வழக்கம்போல கோபால் மூஞ்சை''க் காண்பிச்சார்! விக்கறவர் தனி ஆளா இருக்கார்.
அவருக்கு வயசு ஒரு 65 இருக்கும். புத்துநோய். ஆப்பரேஷன் ஆகப்போகுது. அதுக்கப்புறம் ஹோஸ்பைஸ் போறாராம். நல்ல வீட்டுக்கு
இந்த பொம்மைகள் போகணுமுன்னு ஒரு ஆசையாம். 'சிகிச்சை முடிஞ்சுத் திரும்ப வருவேனான்னு தெரியலை''ன்னு சொன்னார். 'அதெல்லாம் கவலைப் படாதீங்க. கட்டாயம் வருவீங்க. எங்க வீடு இதோ பக்கத்து தெருதான். எப்ப வேணுமுனாலும் வந்து பொம்மைகளைப் பாருங்க. நான் நல்லபடியா
வச்சுக்குவேன்னு சொன்னேன். அவர் இன்னும் சில டெர்ரக்கோட்டா ப்ளாண்டர்களை எனக்குச் சும்மாவே கொடுத்தார். காசு கொடுத்தப்ப
வேணாமுன்னு கண்டிப்பாச் சொன்னார். ( அதுக்கப்புறம் ஒரு ஆறுமாசம் கழிச்சு, வாக் போனப்ப அவரைப் பார்த்தேன். நம்ம பழைய
வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் முதியோர் இல்லத்தில் இப்ப இருக்காராம். ஒரு நாள் வந்து பார்க்கிறேன்னு சொல்லிட்டு, ஒரு மாசம் கழிச்சுப் போனேன். அங்கே மூணு வாரத்துக்கு முன்னாலே அவர் இறந்துட்டார்னு சொன்னாங்க. ஹார்ட் அட்டாக். பாவம்.)ப்ச்...............
அங்கிருந்து வீட்டுக்குப் போனா, பாத்ரூம்லே கேவிட்டி கதவுக்கு லாக் போட்டாச்சு. திறக்கக் கொள்ள கஷ்டம், கைவச்சு இழுக்க இடம் இல்லே.
பெயிண்டர்ங்க வேலை செஞ்சுகிட்டு இருந்தாங்க. அப்படியே ஒரு ரெண்டு கராஜ் சேல் போனோம். மகளுக்கு ஒரு வாஷிங் மெஷின்
வேணுமே. கிடைக்கலே. ஆனா சின்னச் சின்ன பொருள்கள் சில கிடைச்சது!
மறுபடி 'நாப்ஸ் அண்ட் நாக்கர்ஸ் போனோம். ப்ரைவஸி லாக் பெருசு வாங்கலாம்னா, 98 டாலர்! அப்புறம் 20 டாலருக்கு இன்னோரு சாமான்
ஒரு ப்ளேட் மாதிரி இருக்கு, அதைப் பொருத்திட்டு, விரலாலே இழுக்கலாம்! சரி இருவதோட போட்டும்ன்னு வாங்கிக் கொண்டுபோய்க் கொடுத்தோம்.அப்படியே 'கிச்சன்திங்க்ஸ் கடைக்குப் போய் கொஞ்சநாளாவே பார்த்துவச்சுருந்த ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மைக்ரோவேவ் வாங்கினோம். $299 ஆச்சு. வர்றப்ப மகளுக்குப்
ஃபோன் போட்டு வீட்டுக்கு வரச் சொன்னோம். அவளுக்கு ஒரு மைக்ரோவேவும் தேவையா இருக்கு. நமக்கும் அப்கிரேடு ப்ண்ணற சமயம்:-))
அவ வந்தவுடனே இவுங்க எல்லாம் போய் அந்த ஃப்ரிட்ஜ்ஜைக் காருலேயே ஏத்திக் கொண்டுபோய் மகள் வீட்டுலே வச்சாங்க. நானும் பழைய
மைக்ரோவேவ் எடுத்து மகளுக்குக் கொடுத்தேன். இன்னும் சில சாமான் மின்சார வாணலி எல்லாம் எடுத்துக் கொடுத்தேன். எடுத்துகிட்டுப்
போனாள். இங்கே பொதுவா, பிள்ளைகள் ஃப்ளாட்டிங் போகும்போதுதான்
அம்மாக்கள் வீட்டுச் சாமான்களை புதுப்பிக்கற நேரம். அந்த ஆகிவரும் பழக்கத்தை நாம மீற முடியுமா?மத்தியானம் 3 மணிக்கு ஷாலினி குழந்தை சுஹானாவோட பிறந்த நாள் விழாவுக்குப் போனோம். மகளும் ஒரு நாலரை மணிக்கு வந்தாள்.
அங்கிருந்து திரும்பிவர வழியிலே ( நமக்கு எங்கேயிருந்து வந்தாலும் திரும்பி வர வழின்னு ஒண்ணே ஒண்ணுதானே இருக்கு!)வீட்டுக்குப்
போனா, அங்கே கேரி மட்டும் லைட் வேலை செய்யறாரு.சில கதவுங்களுக்கு கைப்பிடி போட்டாச்சு. பைஃபோல்ட் கதவுக்குப் பிடியைத்
தப்பா போட்டிருக்கார் க்ரேக்! என்னா பில்டரோ?அப்புறம் கோயிலுக்குப் போனோம். அங்கிருந்து திரும்ப வரப்போ இன்னோரு விஸிட் வீட்டுக்கு! எல்லோரும் வேலையை முடிச்சுகிட்டுப்
போயிருக்காங்க!


12/12
இன்னைக்குக் காலையிலே போய் எல்லாக் கதவுங்களையும் 'செக்'செஞ்சோம். நிறைய கதவுகளை சரியா வைக்கவே இல்லை!
சின்னதா சந்து தெரியுது! விளக்குகளைப் போட ஆரம்பிச்சுருக்காரு கேரி! வெளியே போட்ட சிமெண்ட்டு காயத் தொடங்கியிருக்கு.
இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமையாசே. ரொம்ப கொயட்டா இருக்கு.


மத்தியானத்துக்குமேல கிங் வரேன்னு சொன்னாராம். அவரு
ஃபேக்டரியிலே, கிச்சன் பெஞ்சுக்குக் கீழே வரும் கிக் போர்டுக்குப் போடப்போற ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பட்டையை
வெட்டிக்கிட்டு இருக்காராம்!இதுக்கு நடுவிலே நாம நேத்து வாங்கின மைக்ரோவேவ் ரெண்டு ஸ்டேஜ் சமையல்தான் செய்யுது. நமக்கு வேண்டியது 3 ஸ்டேஜ்.
அதுனாலே அதைத் திருப்பிக் கொடுக்கப் போனோம். அதுலே சமையல் செஞ்ச ஸ்பைஸ் வாசனை வருதுன்னு சொன்னாங்க ஸில்வியா.
நாந்தான் நேத்து சமையலே செய்யலையே! அப்புறம்தான் ஞாபகம் வந்தது, புளி சாதத்தை 1 நிமிஷம் சுடவைச்சேன்னு!அங்கே இருக்கும் மைக்ரோ அவன்களில் வேற ஒண்ணும் சரியில்லே. நமக்கு வேணுங்கறதைச் சொல்லி விசாரிக்கச் சொன்னோம்.
அப்படியே 'ஹார்வி நார்மன்' போய் மைக்ரோவேவ் பார்த்தா, நமக்கு வேணுங்கற மூணு ஸ்டேஜ் ஃபங்ஷன் உள்ளது இருக்கு. முழுவதும் ஸ்டெயின்லெஸ்
ஸ்டீல் இல்லை. ஆனா முகப்பு மட்டும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்! விலை449$.

அந்த மாடல் நம்பரை எடுத்துக்கிட்டுக் 'கிச்சன்திங்ஸ் போய் அது வேணுமின்னு சொன்னோம்.விலை 429க்கு தரேன்னாங்க ஸில்வியா. ஆர்டர் கொடுத்து, ரெண்டு மூணு நாளுலே வருமாம்.
நான் அதுவரை, சமைக்க அடுப்பே இல்லைன்னு 'அழுது'ட்டு வந்தேன்.நமக்கு ஃ·ப்ளை பையிலே ஒரு ரேடியோ க்ளாக் புக் செஞ்சிருந்தேன். இலவசம்தான்! அதையும் வாங்கிகிட்டு வந்தேன்.
அப்புறமா பீச்சுக்குப் போனோம். காத்து வாங்க இல்லே. எப்பவும் நமக்கு பீச்சுதான் 'ப்ளானிங் மீட்டிங்' நடத்துற இடம்.
நாளையிலே இருந்து என்னென்ன செய்யணும், எல்லா வேலைகளுக்கும் செய்யற/ செய்யப்போற ஆளுங்க ஃபோன் நம்பர் எல்லாம் குறிச்சு
ஒரு 'வொர்க் ஆர்டர்' எழுதுனாரு. சனிக்கிழமை 'ச்சீனா போறாரில்லையா?

அப்புறம் அங்கேயிருந்து அப்பா, அம்மாவைப் பாக்க
இந்தியாவுக்கும் போறாரு. ஜனவரி முதல் தேதிக்கு இங்கே திரும்ப வர்றதா ப்ளான். அந்த சமயம் கிறிஸ்மஸ் விடுமுறையும் இருக்கறதால் அவ்வளவா வீட்டு வேலைகள் நடக்காது. திட்டம் எல்லாம் பக்காவா எழுதி வச்சுக்கிட்டு, நாங்க பீச்சுலெ இருந்து கிளம்பி வரும்போது அப்படியே ஒரு ரைடு வீட்டுப் பக்கம்!
13/12
நம்ம வீட்டிலே மைக்ரோவேவ் இல்லை! எல்லா வேலையும் ரொம்ப 'ஸ்லோ'வா நடக்குது! ஒரு பத்தேமுக்காலுக்கு நான் போய் என்ன
நடக்குதுன்னு பார்த்தேன்.பெயிண்டர்ங்கதான் வேலை செய்யறாங்க. தூணுக்கு ஸ்டீல் க்ரே அடிக்கறாங்க. காலையிலே கிங் வந்து கொஞ்சம்
வேலை செஞ்சுட்டுப் போயிருக்கார். அப்ப அங்கே எங்க இவரும் வந்தார். அங்கிருந்து அடுக்களை டைல்ஸ் பார்க்கப் போனோம்.
வெள்ளையிலே கொஞ்சம் கேபினெட் கலர் வர்றது ( முன்னமேயே சாம்பிள் கொண்டுவந்தது) முடிவாச்சு. அங்கிருந்து கிச்சன் திங்ஸ்க்கு ஃபோன்
போட்டா, நம்ம மைக்ரோவேவ் வந்திருச்சாம். அதையும் வாங்கிகிட்டு அப்படியே 'மெட்ரொ டைல்ஸ்' கடைக்குப் போய் பாத்ரூம் டைல்ஸ் முடிவு செஞ்சுட்டு வந்தோம்.

மத்தியானம் ரெண்டரைமணிக்கு 'டிஷ் ட்ரா' டெலிவரி இங்கே 311க்கு கொண்டு வந்துட்டாங்க. அவுங்களை புது வீட்டு விலாசம் கொடுத்துப் போகச் சொல்லிட்டு நானும் போய் பார்த்தேன். இறக்கி வச்சிட்டுப் போயிருக்காங்க. தூணுக்கு கலர் அடிச்சாச்சு. நல்லாதான் இருக்கு!
சாயந்திரமா ஒருக்காப் போகும்படியாச்சு. இவருக்குப் போகமுடியாது, மீட்டிங்கு இருக்கு. நீ போய் கதவைச் சாத்துன்னாரா, நான் போனா,
இவரும் மீட்டிங்கு கேன்சல் ஆயிடுச்சுன்னு அங்கெ வரார். அப்புறம் நான் வந்துட்டேன். இவரும், மத்தவங்களும் சேர்ந்து அடுப்பை வெளியே
எடுத்து வச்சுப் பார்த்தாங்களாம். கிங்தான் சாயந்திரம் வரதா இருக்கார்.
கிங் வந்து போனபிறகு இன்னைக்கு கட்டாயம் அலாரம் போடணும்! அதுக்கு ஒருதடவை போயிட்டு வந்தோம். நாங்க போறதுக்குள்ளெ கிங் வந்துட்டு கொஞ்சம் கார்நீஸ் ப்ளெயினா இருக்கறது, பேண்ட்ரீ வரும் இடத்தில் போட்டுட்டுப் போயிருக்காரு. அவருக்கு ஃபோன் செஞ்சு அலாரம் ஆன் செஞ்சு இருக்கற விவரம் சொன்னோம்.

இல்லாட்ட அவர் பாட்டுக்கு உள்ளே போயிட்டா?


அடுப்புக்கு பின்னாலே ஒரு splash guard கண்ணாடித் தடுப்பு வருது! அதுக்கு இடையூறா ஸ்விட்ச் இருக்கு. அதையும் மாத்தணும்.14/12
இன்னைக்கு காலையிலே ஏழரைக்கு கேஸ் இணைப்புக்கு ஆளு வருது! இவரு, பாவம் காலேலெ ஓடுனாரு.நான் ஒரு 9 மணிக்குப் போனேன். பில்டர், இவுங்களுக்கு ஃப்ரீ ஸ்டேண்டிங் அடுப்புன்னு சொல்லலையாம்! அதுக்கு வேற மாதிரி ஃபிட்டிங்காம்! இடம் சரியில்லைன்னு இன்னோரு பெரிய ஓட்டை சுவத்துலே போட்டாங்க! கேரி வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு. அடுப்புக்கிட்டே ஸ்விட்ச் சொன்னேன். அப்படியெ ஒரு ப்ளக் போடச் சொன்னேன். அங்கேயே மைக்ரோவேவ் வச்சுக்கலாம்!


தொடரும்..................

Thursday, September 27, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 27

மறுபடியும் கிளம்பி கடை கடையாப் போறதுதான் வேலைன்னு ஆகிடுச்சு! லைட்டிங் கடைக்குப் போய் சங்கு லைட்டுகளுக்கு ( அது பேரு என்ன தெரியுமா? கிறிஸ்டீனா!) ஆர்டர் கொடுத்துட்டு,மகள் வேலை செய்யும் இடத்துக்கு எதிரே இருக்கும் இன்னொரு லைட்டிங் கடைக்கும்போய், 'ஐ லிட் பல்க் ஹெட் லைட்'டுங்களுக்கும் (மொத்தம் 9 லைட்டுங்க)ஆர்டர் கொடுத்தோம். ஒண்ணு $39க்குன்னு கிடைச்சது!

(இதுதான் அந்தக் க்றிஸ்டீனா)

அப்படியே ஏற்கனவே வாங்கி வச்சிருந்த அடுப்பையும் டெலிவரி செய்யச் சொன்னோம். நம்ம கிச்சன் டிஸைனர் ரேச்சல் எங்களைப் பார்த்துட்டு 'வீடு எந்த நிலையிலே இப்ப இருக்கு?'ன்னு கேட்டாங்களா, நானும் 'அடுக்களை வேலைதான் நடக்குது'ன்னு சொன்னேன். 'முடிஞ்சவுடனே சொல்லுங்க. வந்து பார்க்கிறேன்'னு சொன்னாங்க. வந்து பார்த்தால்லே தெரியும், அவுங்க டிஸைனை நாங்க வேற மாதிரி மாத்திட்டோம்ங்கறது! பார்த்தபிறகு ஹார்ட் அட்டாக் வராம இருக்கணும்!திரும்பவந்து,வீட்டைப் போய்ப் பார்க்கலாம்ன்னு போனா, ஜன்னலுங்களைப் பாதி போட்டுட்டு போயிருக்காங்க! ரெண்டு ஜன்னலுக்கு ஹிஞ்சு தப்பா போட்டுட்டாங்களாம்! அப்புறம் ஒரு அரைவட்டக் கண்ணாடி முன்வாசலுக்கு மேலே வருதே, அதையும் பாதி(?) அதாவது டபுள் க்ளாஸ்லே ஒரு பக்கம் இருக்கு. மறுபக்கம் உடைஞ்சுடுச்சாம். இது 4 வது தடவை! ஜன்னல்கள் எல்லாம் டபுள் க்ளேஸ்டு அதுவும் டிண்ட் செஞ்சிருக்கு. இந்த வைத்தியம் UV ரேவைத் தடுக்கத்தான்.


நம்ம முன்வாசல் மேற்கே பார்த்தமாதிரி இருக்கு. மாலை வெய்யில் முன்கதவுலே பட்டு, நம்ம யானைப் புள்ளையார் சுவத்தில் அழகா 'காட்சி' கொடுக்கறார்.
சாயந்திரம் 7 மணிக்கு மறுபடி போனோம். கிங் வேலை செய்யறார். கை கழுவற கண்ணாடிப் பாத்திரத்தை வைக்க ஒரு ஸ்டேண்டு வேணுமுன்னு சொன்னோம்.. செஞ்சுறலாம்ன்னு ஒரு டிஸைன் வரைஞ்சு காமிச்சார். நல்லாத்தான் இருக்கு. காசு? $700 ஆகுமாம்.யோசனை செய்யலாம்............. பேசாம கை கழுவாம இருந்துட்டா.......... பிரச்சனையே இல்லை:-) கிங்கிட்டே ஒரு குணம். எதுவுமே முடியாது என்றதில்லை. "டோண்ட் வொரி. நத்திங் இஸ் இம்பாஸிபிள்' இதுதான் அவரோட மாட்டோ!9/12
ஜன்னலுக்குக் கண்ணாடி போட்டாச்சு. ஒரு ரூம் இன்னும் பாக்கி. அப்புறம் அந்த அரைவட்டமும் பாக்கி. ஸ்டடிலே கண்ணாடி இருக்கு, ஆனா அது ப்ளெயினா இருக்கு. உள்ளே கம்பிக் கட்டம் வரணுமே! அதுக்கு இப்ப டெம்ப்ரரியா வெறும் கண்ணாடி போட்டுருக்காங்களாம்.அப்புறம் சரியானது செஞ்சு கொண்டுவருவாங்களாம். இவுங்ககூட மாரடிக்க முடியலேப்பா. ஓய்ஞ்சு போகுது உடலும், மனசும்!அடுப்பு வருதுன்னு ஃபோன் வந்துச்சு. கிளம்பிப் போனேன். அதுக்குள்ளே டெலிவரி செஞ்சுட்டுப் போயிட்டாங்க! கிங்கும், போவும் வேலை செய்யறாங்க. செக்யூரிட்டி அலாரம் போட ஆளு வந்திருக்கு. கேரியும் லைட்டுங்களுக்கு வேலை செய்யறார். பெயிண்டருங்க வழக்கம்போல மும்முரமா இருக்காங்க.வெளித் தூணுக்கு வெள்ளைக் கலர் அண்டர்கோட் அடிக்கிறாங்க.


பெயிண்டர் சொன்னாரு, வேக்குவம் க்ளீனர் கொடுத்தா கொஞ்சம் சுத்தம் செஞ்சுட்டு பெயிண்ட் அடிப்பாராம். மத்தியானம் கொண்டுவரேன்னு சொன்னேன்.


மத்தியானம் இவர் அரைநாள் லீவுபோடறேன்னு சொல்லியிருந்தார். ஆனா போடலையாம்.நாங்க போனப்ப அலாரம் ஆளு வேலை செய்யறார். கொஞ்சம் நேரம் காத்திருந்தா, அலாரம் ஒப்பந்தம் கையெழுத்துப் போடலாம்ன்னு இவரு சொன்னார். அப்ப நம்ம எலிநோரும், ஜானும் வந்தாங்க! அந்தப் பக்கம் போய்கிட்டு இருந்தாங்களாம். அவுங்க மகன் கிறிஸ் இப்ப ஒரு வீடு கட்டப் போறாரே, அதுக்காக சுத்திகிட்டு இருக்காங்க. உள்ளே வந்துபாத்துட்டு, ரொம்ப நல்லா இருக்குன்னு புகழ்ந்துக்கிட்டே இருந்தாங்க! பில்டரும் வந்தாரு. கிங்கும், போவும் அடுக்களை சிங்கை போட்டுக்கிட்டு இருந்தாங்க. எலிநோருக்கு ரொம்பப் பிடிச்சுடுச்சாம். அவுங்களுக்கு 'லாண்டரி' செஞ்சு தரமுடியுமான்னு கிங்கு கிட்டே கேட்டாங்க.அப்புறம் இவர் ஆஃபீஸ் போயிட்டார். மறுபடி 3.30 வந்தார். வாஷ் ஸ்டேண்டு தேடப் போனோம். ஒண்ணும் சரியா இல்லை. விலையும் 1800, 2400ன்னு இருக்கு. பேசாம கிங்குகிட்டே 'பார்கெயின்' செஞ்சு ஒரு 600க்கு முடிச்சுடலாம். புது டிஸைனா, யுனீக்காவும் இருக்கும்!சாயந்திரம் ஆகுதேன்னு அங்கே போனா, கிச்சன் ஹூட் சரியா வைக்க இடம் இல்லேன்னு ஒரு குண்டைத் தூக்கிப் போடறாங்க. வெண்ட் மேல் பக்கத்துலே இருக்கு. சைடுலேதான் சுவர் ஓட்டை வருது! இங்கே 311 லே ஹூட் வேலை செய்யும்போது ஃபேக்டரியில் இருக்கற மாதிரி சத்தம். அதனாலே ரொம்பச் சத்தம் இல்லாம இருக்கணுமுன்னு தேடி வாங்குனது இது. கொயட்டா இருக்குன்னு 1500 டாலர் அழுதேன். சரி, வேற ஏதாவது வழி இருக்கான்னு பாருங்கன்னா, கேரி சொன்னாரு, மேற்புறம் ஓட்டை போட்டு அதுவழியா ஹோஸ் கொண்டு போலாம். . ...ஓட்டுக்குள்ளே ஓட்டை போட்டுறாமல், அந்த ஹோஸை வளைச்சு சாஃபிட்லே கொண்டு வந்துருங்கன்னு ஒரு ஐடியாக் கொடுத்தேன். அட! எனக்குக்கூட இப்படி யோசனைகள் வருதே!

சரின்னு இன்னோரு ஓட்டை. இப்படி ஓட்டை ஓட்டையாச் செஞ்சுகிட்டு இருக்காங்க. ஏற்கெனவே செஞ்ச ஓட்டைக்கு ஒரு க்ரில் போடலாம்ன்னு சொன்னாங்க. வீட்டைக்கட்டி முடியறதுக்குள்ளேயே, போட்ட காநீஸ் எடுத்தோம். சொல்ல மறந்துட்டேனே. அடுக்களையிலே வடக்கு மூலையிலே ஒரு சின்ன ஓட்டையிலே ஒரு ஒயர் இருக்கு. அது எதுக்குன்னே தெரியலை. அப்புறம் விவரம் கிடைச்சது. அண்டர் ஃப்ளோர் ஹீட்டிங் போடவாம். இடுப்பு உயரத்துலே, சுவத்துக்கு நடுவிலே அண்டர் ப்ளோர்(!) ஜிப் போடறவங்க அதைத் தப்பா மேலெ வச்சிட்டாங்களாம். அதைச் சுத்தி சுவர் வந்திருச்சு!அதைச் சரி செஞ்சவுடனே, சுவத்துலெ ஒரு ஓட்டை! தப்பான இடத்துலே ப்ளம்பர் பைப் ஓட்டை போட்டு, அதைச் சரி செஞ்சப்ப , சுவத்துலே அங்கே ஒரு பொக்கு. இப்படி ஓட்டைகள் ஏராளம். பட்டினத்தார் பாட்டுலே மனுஷனுக்கு 9 ஓட்டைன்னு வரும். இந்த வீட்டுக்கோ 90 ன்னு வச்சுக்கலாமா? பட்டினத்தாரை மறக்கமுடியலையே......


ஒரு வழியா அலாரம் போட்டாச்சு. 30 விநாடியிலே வெளியிலே போகறமாதிரி செட்டிங்காம்! 'கராஜ்' லெயிருந்து 30 விநாடியிலே வண்டியை எடுத்துக்கிட்டுப் பூட்ட முடியுமா? 45 க்கு வைக்கிறேன்னு சொன்னார். நைட் வாட்ச் இல்லையாம் அதுக்குப் பதிலா இன்னோரு கீ பேடு நம்ம படுக்கையறையில் போட்டுருக்கு. கட்டில் தலைமாட்டுலே 'பேனிக் ஸ்விட்ச்'. ஒண்ணிருந்தா ஒண்ணு இல்லை! தூக்கக் கலக்கத்துலே, தெரியாம அதை அமுத்துனா...........தூக்கம் போச்:-)சாயந்திரம் எல்லாரும் போனபிறகு, அலாரம் போட்டுட்டு வந்துட்டோம். ரிக்கர்ட்டன் மால் எல்லாம் சுத்தி 9 மணிக்கு வீட்டுக்கு வந்தா,கிங் ஃபோன் செஞ்சிருக்காரு. இன்னைக்குப் பாத்து ஃபோனை வீட்டுலே விட்டுட்டுப் போயிட்டோம். அவர் உள்ளெ போனாராம் அலாரம் அடிக்க ஆரம்பிச்சுடுச்சாம். இப்ப வரோம்ன்னு போனோம். நான் மெயின் கதவைத் திறந்து 'கீ பேடு போக ஒரு 3 விநாடிதான் ஆகும். அதுக்குள்ளே அலற ஆரம்பிச்சுடுச்சு! ஓடிப் போய் நிறுத்துனேன். 30 விநாடியை மூணே விநாடியா வச்சிட்டாருபோல!


பெஞ்சு டாப் மெலே ஒரு கப் போர்டு 'கேட்ஜட் கராஜ் வருதே அதைக் கொண்டுவந்து வச்சிட்டுப் போனாரு கிங். அலாரத்தை முழுசா நிறுத்திட்டோம். சாவிங்க 3 பேரு கையிலே இருக்கு. எல்லாருக்கும் 'கோடு' சொல்லிக்கிட்டு இருக்கமுடியுமா?


10/12
பத்தரை மணிக்குப் போனென். கொஞ்ச நேரத்துலே காங்க்ரீட் ஆளுங்க வந்துட்டாங்க. போட ஆரம்பிச்சாச்சு. பெயிண்டருங்கதான் வேலை செய்யராங்க. கிங் வந்து அந்த கப்போர்டை மேலெ ஏத்திட்டுப் போயிருக்காரு. கெரிக்கு சுவத்துலெ ஒரு நோட்! அங்கெ இருக்கற ப்ளக்கைக் கொஞ்சம் மாத்தணும். போடு....... இன்னோரு ஓட்டை! ஓட்டையடி ஓட்டையடி, வீடு முழுக்க ஓட்டையடி! "தலைக்குமேலே வெள்ளம் போனால் ஜானென்ன முழமென்ன?"ஏற்கெனவெ கட்டுன வீட்டை வாங்குனா நல்லாயிருந்திருக்கும்ன்னு இவர் சொல்றாரே. அங்கெயும் இந்த மாதிரி எத்தனை ஓட்டைங்களோ? கடைசியில் பூசி மொழுகிட்டா எல்லாமே படு சுத்தம்.மூணு மணிக்கு ஒருதடவை போனேன். காங்க்ரீட் ஊத்துன இடத்துலே அம்மைத் தழும்பு போல காசு காசா தேசலா இருக்கு. கூரையிலே இருந்து மழைத் தண்ணி சொட்டிய இடங்கள். நல்ல வேளை, பெருமழையா இருந்திருந்தா எல்லாம் கரைஞ்சு வெளியே ஓடியிருக்கும். இன்னைக்குத்தான் மழைக்குன்னு இருக்கற நாளு! எல்லாம் நம்ம அதிர்ஷ்டம்!


கேரியும், பெயிண்டர்களும் வேலை செய்யறாங்க. நல்ல நல்ல பலகைகள் வெளியே கிடக்கு. பில்டர் வந்துட்டுப் போனாராம்!!!!!!!!! அதானே பார்த்தேன்:-)))) அப்புறமாப் போய் முன்கதவைச் சாத்தணும்!சாயந்திரம் மறுபடி போனப்ப கிங்கும், போவும் அடுக்களையிலே ஷெல்ஃப் எல்லாம் போட்டுக்கிட்டு இருந்தாங்க. கொஞ்ச நேரம் இருந்தோம். அப்புறம் எல்லோருமாக் கிளம்பி வந்துட்டோம். சிமெண்ட் போட்டது இன்னும் அப்படியே ஈரமா இருக்கு.ஆனா இவரு ஆஃபீஸிலே இருந்து வரும்போது அங்கே போனப்ப, ஒரு ஆளு வந்து சிமெண்ட்மேலே ப்ரூம் ( துடைப்ப ப்ரஷ்ங்க) வச்சு அதை சமப்படுத்திகிட்டே இருந்தாராம்! எதுக்குன்னா அப்பத்தான் சொர சொரன்னு இருக்கும், நடந்தா வழுக்காது! வீட்டு டெக் & மார்னிங் கோர்ட்டுக்கு முன்னாலே லேசா வழு வழுன்னு இருந்தாத்தானே காலுக்கு நல்லாயிருக்கும்! அப்புறம் இவர் சொன்ன பிறகு, அந்த இரண்டு இடங்களை விட்டுட்டு மத்த இடத்துலே ப்ரஷ் பண்ணாராம்!


தொடரும்.......................
---------------------------


Wednesday, September 26, 2007

இன்னும் வால் மட்டும் நுழையலை(-:

ஒருவாரமா முட்டி மோதி, முங்கியெழுந்து விஸ்ட்டாவை புரிஞ்சு(???)க்கிட்டு ஒருவழியா பின்னூட்டம் மட்டும் தமிழில் போடப் படிச்சேன்.

இந்த விஸ்ட்டா ரொம்பவும் 'நோஸி''யா இருக்கோன்னு ஒரு பயம் வந்துருக்கு. அப்படியெ கண் குத்திப் பாம்பாட்டம் நம்மையே கவனிக்குது.
ஒருவிதத்தில் வேண்டாத யாரையும் வீட்டு வாசலைக் கடக்க விடலைன்றது நல்லாத்தான் இருக்கு. ஆனா வீட்டு முன்னாலெ கூட்டம் சேருதோன்னும் கவலை.

கலப்பையை அப்பப்ப எடுத்து வச்சுரணும் இல்லேன்னா தமிழ் வராது. பாதிவேலையில் இருக்கும்போது எல்லாத்தையும் மூடுன்னதும் ‘கப்சுப்’ன்னு மூடிக்கணும்!


நம்ம கணினியில் கைரேகை அடையாளம் வச்சாப் போதுமாம். அதுக்குக்கூட நான் கைநாட்டுன்னு தெரிஞ்சுருக்கு:-) ஆனா நாம் என்ன லேசுப்பட்ட ஆளா? கட்டைவிரல் வச்சாத்தானே கைநாட்டு? நான் மத்த விரலை வச்சுட்டேன். தப்பித்தவறி நான் ‘சடார்’னு மண்டையைப் போட்டுட்டா, கோபாலுக்குக் கஷ்டம். அண்டர்டேக்கர்கிட்டெ சொல்லி என் அடையாள விரலை எடுத்துப் பாடம் பண்ணிக்கணும். அப்ப நினைவிருக்குமான்னு தெரியலை(-:

சாப்புடறப்ப மட்டும் ரேகை வைக்கமுடியலை. எச்சக் கையில் *** ஓட்டமாட்டேனோ என்னவோ?

அதுவுமில்லாம ஒரு வாரமா கைரேகைக் கொஞ்சம் தேஞ்சமாதிரி வேற இருக்கு(-:

நம்ம இளாவோட ஐடியா நல்லா வொர்கவுட் ஆகுது.


செய்யவேண்டியது எல்லாம் கணினி தொறந்ததும் தானே வர்ற ‘தமிழா’வை போயிட்டு அப்புறம் வாப்பான்னு அனுப்பிட்டு, நம்ம கலப்பை ஃபைலைத் தொறந்து இப்ப நிறுவுன்னு ஒரு உத்தரவு போட்டால் அது சொல்லும் பேச்சுக்கு ,’உம்’ கொட்டிக்கிட்டெ இருந்தால், அது கட்டக் கடைசியாக் கேக்கும், பழைய ‘கீ போர்டை’ கடாசவான்னு. அதுக்கும் ஒரு ‘உம்’ போட்டா வேலை முடிஞ்சது. யூனிகோடில் சிகப்பு ‘அ’ வந்து வயித்துலே காஃபி வார்க்கும் (காலையில் பால் ஆவறதில்லை)


அப்படியே தமிழ்மணத்துலே ஒரு உலாத்தல். பின்னூட்டம் கொடுக்க நினைச்சா............ மஜாவா அங்கே தமிழில் எழுதலாம்.


எல்லாஞ்சரி. நோட்பேடு மட்டும் நம்மைப் பார்த்தாவே பதுங்குது. அங்கேதான் நுழையமுடியலை. அதுக்காக நாம் ஆத்தும் தமிழ்ச்சேவையை
விட்டுற முடியுமா? உனக்காச்சு எனக்காச்சுன்னு இப்ப மைக்ரோசாஃப்ட் வேர்டுலே புழங்கறேன். அதுவும் ரெண்டு மாசத்துக்கு ஓசியாம். அப்புறம் ?


அந்தப் பாலம் வரும்போது அதைக் கடக்கலாம். இது என்ன பெரிய ராமர் பாலமா?


‘ராவணனிடம்’ தஞ்சம் புகுந்தேன்.................


சுரதா இருக்குன்னாலும், ‘கிழ நாய்க்குப் புது வித்தையைக் கத்துக்குடுக்கறது ரொம்பக் கஷ்டமாமே.’..............பழமொழி சொல்லுது.


இப்ப வாலை நுழைக்க எதாவது குறுக்குவழி இருக்கான்னு தெரிஞ்சவுங்க சொல்லுங்க.


காத்துருக்கேன்.................

Tuesday, September 25, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 26

4/12
இன்னைக்கு 9 மணிக்கு சிடிகேர் ஆளுங்க வந்து மண்ணையெல்லாம் நிறுவி, சின்ன ரோலர் போட்டுச் சரி பண்ணிட்டாங்க. சும்மா ஒரு 3 மணி நேரத்துலே எல்லா வேலையும் நடந்தது! ஆனா 'பிட்'லே இன்னும் ரொப்பலே! அதுக்கு வேற நாளு வருவாங்களாம்.
பல்க் ஹெட் லைட்டுக்கு கொஞ்சம் அலைஞ்சோம். வேனிட்டி லைட்டுக்கு ஆர்டர் கொடுத்தோம். கிங்குகிட்டே வாஷ்பேசின் வைக்கறதைப்பத்திப் பேசுனோம். அப்பத்தான் தெரியுது அந்த இடத்துலே போதுமான ஸ்டட் இல்லையாம். ஃப்ரீ ஸ்டேண்டிங் டிஸைனாத்தான் வைக்கணும். ஒரு வாஷ் பேஸினுக்குக்கூட என்ன தகராறு பாருங்க(-:இன்னைக்கு டோனி மட்டும் வந்து பெயிண்ட் அடிச்சுகிட்டு இருக்காரு. ராத்திரி போய்ப் பூட்டிட்டு வர்றது இப்ப இன்னோரு வேலை!


மறுபடிக் காலையிலெ போய் திறந்துவிடணும்! ஒரு நாளைக்கு ச்சும்மா 10 தடவை போய்க்கிட்டே இருக்கோம்.


வார்டுரோப்க்கு $1477 ஆகுமாம். இந்தக் காசுக்கு எத்தனை புடவை வாங்கிக்கலாம்?
5/12
இன்னைக்கு மகள் வீடு மாத்தறா. இவர் ஒரே கவலையா இருக்கறாரு. நானும்தான்! மத்தியானமாப் போய் இன்னும் சில லைட்டிங் கடைகளைப் பார்த்துட்டு அப்படியே ஹார்வி நார்மனுக்குப் போனோம். ஃப்ரீ ஸ்டேண்டிங் ஸ்டாண்ட் கிடைக்கலே. யோசனையா இருக்கு. இன்னைக்கு அந்த பால் ( அஞ்சு பிள்ளைக்காரர்) வரேன்னுட்டு வரலை. அந்த ஆளு பூசுன சிமெண்ட்டு அதுக்குள்ளே பேர்ந்திட்டு இருக்கு!6/12
இன்னைக்கும் ப்ளம்பர் வரலெ. காலையிலெ ·போன் செஞ்சதுக்கு, 'ஆஸ்பத்திரியிலே ஸ்கேன் பண்ண வெயிட் செய்யறேன். 9 மணிக்கு வரேன்'னு சொன்னார். அப்புறம் வரவே இல்லை!
நான் 2 மணிக்குத்தான் போனேன். பில்டர் வெளியே காங்க்ரீட் போட பாக்ஸ்ஸிங் செஞ்சு வச்சிருக்கார். கராஜ்லே மேன் ஹோலுக்கு சட்டம் அடிச்சுகிட்டு இருந்தாரு.பெயிண்ட்டிங் நடக்குது! கிங்கும் போவும் அடுக்களை சரி செஞ்சுகிட்டு இருக்காங்க. கைப்பிடி போட்டுகிட்டு இருந்தாங்க.ப்ளம்பர் இதுவரைக்கும் வரலே! அப்புறம் ஃபோன் செஞ்சு கேட்டா சொல்றாரு, அவராலெ வரமுடியாதாம்! அவரோட மனைவிக்கு 'மிஸ்கேரேஜ்' ஆயிடுச்சாம்! கேக்கவே ஐய்யோன்னு இருக்கு! ஆனா நம்ம வேலையை இப்படி அந்தரத்துலே விட்டுட்டாரே. முதல்லேயே வர மாட்டேன்னு சொல்லியிருந்தா நாம் வேற ஏற்பாடு செய்யலாமில்லே?சரி, ஆனது ஆச்சு. 'இந்த மாதிரி விஷயமெல்லாம்' சொல்லிட்டா ஆகுது? நல்லபடியா குணமாகி வீட்டுக்கு வரட்டும்! பாவம்தானே பொம்பிளைங்க!
நம்மோட ரெகுலர் 'ப்ளம்பர்'க்கு ( இத்தனை வருஷமா நம்மோட வீட்டுலே ஏதாவது குழாய் தகராறுன்னா வந்து சரி செய்யற மால்கம் & மைக்கேல் கோவைப்ளம்பர்)க்கு ஃபோன் போட்டுச் சொல்லி, இந்த ஒரு வேலையைச் செய்யமுடியுமான்னு கேட்டோம். நாளைக்கு காலையிலே வரேன்னு சொல்லியிருக்கார்.இந்த வீடு ஆரம்பிச்சப்பவே இவுங்களுக்குத்தான் சொன்னோம், ப்ளம்பிங் வேலைக்கு ஒரு க்வோட் கொடுங்கன்னு. இவுங்கதான் 'ரொம்ப பிஸி. சின்னச் சின்ன வேலையிலெதான் நிறையக் காசு'ன்னுட்டு வரலை. பார்க்கலாம், நாளைக்கு இவுங்களாவது வராங்களான்னு!7/12
அப்பாடான்னு இருக்கு. ப்ளம்பர் வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு! நம்ம மைக்கேல்தான்! பெயிண்டிங்கும் நடக்குது! நான் அப்படியே லைப்ரரிக்குப் போயிட்டேன். இன்னிக்கு செவ்வாய் ஆச்சே! படுக்கை அறையிலே உள்ள ஸ்கர்ட் போர்டுக்கு என்ன கலர் அடிக்கணும்ன்னு முடிவாச்சு! நாங்க வெள்ளையா விட்டுடலாம்ன்னு நினைச்சோம்.ஆனா, பெயிண்டருங்க சொல்றது, ஃபீச்சர் வால் கலர்தான் அடிக்கணும். மத்த இடத்துக்கு காஸ்மிக் ப்ளூ அடிச்சுடலாம்! சரின்னுட்டேன். அடுக்களை பக்கத்துலே வர ஃபீச்சர் வாலுக்கு 'பேக்குடு பீட்ரூட்' ( கலரோட பேருங்க! எல்லாம் நம்ம கத்திரிக்காய் கலர்தான்)) அடிக்கலாம்ன்னு சொல்லிட்டேன்!தூணுங்களுக்கு 'நியூ டெனிம் ப்ளூ' நம்ம மேற்கூரைக் கலர் அடிச்சாதான் நல்லா இருக்கும். சுவரோட கலர் அடிக்காதீங்க. தூண் இருக்கறது தெரியாதுன்னு டோனி அபிப்பிராயப்பட்டார். அவுங்க தொழிலே பெயிண்டிங்தான். அவுங்க சொன்னா சரியா இருக்கும்ன்னு நினைச்சு, நாங்க மனசுலெ வச்சிருந்த சுவர் கலரைவிட கொஞ்சம் (3 ஷேட் டார்க்) அழுத்தமா இருக்கணும் என்ற எண்ணத்தை மாத்திக்கிட்டோம்!கேரியும் ஸ்விட்ச்செல்லாம் போட்டுக்கிட்டு இருந்தாரு. பாத்ரூம்க்குப் போடற ஃபோர் இன் ஒன் வேணும்ன்னு சொன்னாரு. எப்படியும் மத்தியானம் வரணுமே, அப்ப கொண்டாரேன்னு சொன்னேன். எல்லாம் எப்பவோ சேல் பார்த்து வாங்கி வச்சிருக்கு!மத்தியானம் 1 மணிக்கு 'டான் Don' ட்ரெண்டி மிர்ரர் ஆளு கண்ணாடிக்கு அளக்க வராரில்லையா? டானும் வண்டி பங்ச்சர் ஆயிடுச்சுன்னு அரைமணி லேட்டா வந்தாரு. ரெண்டு பாத் ரூம்லேயும் வேனிட்டிக்கு கண்ணாடி அளந்தாச்சு! கோபாலும் ரெண்டுநாளா கை கழுவற கண்ணாடிப் பாத்திரத்தை வண்டியிலேயே வச்சு அலைஞ்சுகிட்டு இருக்கார். அதுக்குத்தான் ஒரு ஸ்டேண்டு பாக்கணும்!ஸ்விட்ச் வச்ச இடம் சரியில்லே அதனாலே 'ஸ்விங்கிங் ஹீட்டட் டவல் ரெய்ல்' போடறது கஷ்டமாம்! அதையும் இவரு போய் மாஸ்டர் ட்ரேட்லெ இருந்து எடுத்துகிட்டு வந்தார். மெயின் பாத் ரும்லேயே வேற இடத்துலே வைக்கலாம்ன்னு முடிவாச்சு!நம்ம பாத்ரூம்லேதான் இடம் நெருக்கமா இருக்கு! பாக்கலாம்!
முன்வாசக் கதவுக்கு நம்ம பிள்ளையார்/யானைக் கண்ணாடியும், உள் வாசலுக்கு பூனைக் கண்ணாடியும் வந்து போட்டுட்டாங்க! அட்டகாசமாஇருக்கு! என் கண்ணே பட்டுடும்போல!நாம் கொடுத்த படம் நல்லாவே டிஸைன் செஞ்சு வந்துருக்கு.


டி.வி. ஏரியல் போடவும் ஒரு பையன் வந்தார்! கையிலே காசு கொடுத்துடணும்ன்னு ஏற்பாடாம். வேலை முடியறவரை அங்கேயே இருந்தேன். 250$ காசு வீட்டுலே இருந்து கொண்டுபோனதைக் கொடுத்தேன்.
நம்ம கேரியோட மனைவிக்கு நாளைக்கு ஒரு ஆபரேஷன் இருக்காம். 'வெரிகோஸ் வெயின்' தொல்லையாம். அதனாலெ நாளைக்கு வர நேரம் இருக்காதுன்னு, இன்னைக்கே நிறையநேரம் வேலை செஞ்சுகிட்டு இருந்தார்.
8/12
ஒரு பத்து மணிக்குப் போனா, அங்கெ ஜன்னலுக்கு கண்ணாடி போடற ஆளுங்க வந்திருந்தாங்க! ஆனா ரைலாக் ஆளுங்க இல்லே! 'பில்கிங்டன் க்ளாஸ்' உடனே இவருக்கு ஃபோன் போட்டுச் சொன்னேன். வந்தாரு. யாரு போட்டா என்ன ,வேலை முடிஞ்சாச் சரி! ரைலாக்குக்கு முடியாம இவுங்களைப் போடச் சொல்லியிருக்காங்களோ? அங்கெ ரைலாக்குலே என்ன தகராறோ? முன்வாசக்கதவுக்கு மேலே ஒரு பெரிய அரைவட்டக் கண்ணாடி இன்னும் போடலை. அந்த ஃப்ரேம்லேயும் மூணு கம்பிகள் ரெண்டு கண்ணாடிக்குள்ளேயும் வருது.
பெயிண்டருங்கதான் ஒழுங்கா வேலை செய்யறாங்க! அடுக்களை வேலை செய்ய கிங் சாயந்திரமா வருவாராம்!வாஷ் ஸ்டேண்டுக்கு வாங்கின 'சங்கு' லைட்டை பெட்ரூமுக்கு வச்சுப் பார்த்தா நல்லாதான் இருக்கு! இப்ப இன்னும் கொஞ்ச நேரத்துலே இவர் வந்தார்ன்னா, இன்னும் ரெண்டு லைட்டுக்கு ஆர்டர் கொடுக்கணும்!


தொடரும்..............


======================


Saturday, September 22, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 25

கிங் ( கிச்சன்) சாயந்திரம் 7 மணிக்கு அடுக்களை பெஞ்சுங்களையெல்லாம் கொண்டு வரார்ன்னு சொன்னாரு.

நமக்கு மகளோட புதுவீட்டுச் சொந்தக்காரரைப் பார்க்க வேண்டியிருந்தது, காசு கொடுக்கறதுக்கு. அந்த வீடு ரொம்ப சுமார்தான். ஆனா, இவ மகிழ்ந்துபோய் இருக்கா! எலிவளையானாலும் தனி வளை:-))) $720 கொடுத்தோம். 4 வார வாடகை. 2 வாரம் அட்வான்ஸ், ரெண்டுவாரம் பாண்டு!


அங்கிருந்து 7.30க்கு 29 போனா, அதுக்குள்ளே கிங் கொஞ்சம் சாமான்களை வச்சிட்டுப் போயிருக்காரு. தரையெல்லாம் அழுக்கு. அதுலேயெ அடுக்களைக் கேபினெட்டை வச்சிருவாங்களோன்னு நாங்க ஒரு பக்கெட்டும் மோப்பும் கொண்டு போய் துடைச்சோம். அப்புறம் கிங் இன்னும் ரெண்டு ட்ரிப் அடிச்சாரு. நாங்க வீட்டுக்கு வந்து சாப்பிட்டுட்டுப் போனோம். இருட்ட ஆரம்பிச்சுடுச்சு. லைட் போட்டுக்கலாம்ன்னு பார்த்தா அங்கெ இருக்கற டெம்ப்ரரி போர்டுலெ எல்லா ப்ளக்கையும் உடைச்சு வச்சிருக்காங்க!


கிங் கடைசியா 4 வது ட்ரிப் போயிட்டு வந்தார். கூடவே ஒரு லாந்தர். அதை வச்சு, ஒரு வழியா சமாளிச்சோம். எல்லாம் நல்ல கனம்! சாமான்கள் எல்லாம் இருக்குதே என்று வீட்டைப் பூட்டிக்கொண்டு வந்தோம். காலையிலே போய் திறந்து வைக்கணும்!


30/11
இவர் காலையிலே சீக்கிரமாகப் போய் கதவைத் திறந்து வைக்கணும் என்று போனபோது, அங்கே இவருக்கு முன்னாலேயே வெளியே சிமெண்ட் பூசற ஆட்கள் வந்து வேலையை ஆரம்பிச்சு இருந்தாங்களாம்! சிமெண்டு மூட்டையெல்லாம் உள்ளெ இருக்கே, எப்படி உள்ளே வந்தீங்கன்னு கேட்டதுக்கு, ஜன்னல் வழியான்னு சொன்னாங்களாம்! அதுவும் சரி. ஜன்னலுக்குத்தான் இன்னும் கண்ணாடி வரலையே. நாங்க மட்டும் மறக்காமக் கதவைப் பூட்டிக்கிட்டு வர்றோம்:-))))


நான் இன்னைக்கு லைப்ரரி போறதுக்கு முன்னாலே அங்கே போனேன். நம்ம கிங்கும், கிங்கோட தம்பி 'போ'வும் வேலை செஞ்சுகிட்டு இருந்தாங்க. பெயிண்டர்ங்களும் அவுங்க வேலையைப் பார்த்துக்கிட்டு இருந்தாங்க. வெளியிலே பூசற ஆளுங்க 'காஃபி ப்ரேக்' எடுத்துகிட்டு இருந்தாங்க. வேலை ஏறக்குறைய இருந்தாலும் இந்த வெள்ளைக்கார ஆளுங்க டைம் டைமுக்கு சாப்பிட உட்கார்ந்துடுவாங்க. ஒரு மினிட் இப்படி அப்படி போயிடக்கூடாது! அது ஒரு நல்ல பழக்கம்தான். நம்மைப் போல வேலையே கதின்னு சோறு தண்ணியில்லாம இருக்கறது நல்லாவா இருக்கு?


அங்கேயிருந்து லைப்ரரி வேலைக்குப் போயிட்டேன். 12 மணிக்கு மறுபடி அங்கெ போனேன். நம்ம பிள்ளையாருங்களை இன்னும் ஒட்டலையே. அதுக்காகத்தான் திரும்பத் திரும்பப் போய்கிட்டு இருக்கேன். அதைச் சரியானபடி ஒட்டறாங்களா, நேரா இருக்கான்னு பார்க்கணுமே! அடுக்களை வேலை நடக்குது, ஆனா, நாம கஷ்டப்பட்டுப் போட்ட கார்நீஸ் கீழே கிடக்குது! எனக்கு ஐய்யோன்னு போச்சு. அடுக்களைப் பான்ட்ரீ அங்கே இடிக்குதுன்னு எடுத்துட்டாங்களாம்!


நம்ம அடுக்களையிலே டபுள் பாண்ட்ரீ வைக்கறோம். ஸ்டேண்டர்ட் அளவுன்னா ரெண்டு மீட்டர் உயரம்வரை வைக்கறாங்க. அதுக்கும் சீலிங்குக்கும் இருக்கும் இடைவெளியில் எதாவது சாமான்கள் டிஸ்ப்ளே செஞ்சுக்கலாம். இல்லேன்னா இன்னும் சாமான்கள் வைக்கலாம். அதான் மாடுலர் கிச்சன் டிஸைனில் பார்த்துருப்பீங்களே. இதுலே ஒரு பெரிய தொந்திரவு என்னன்னா, அந்த இடைவெளியில் இருக்கும் கேபினெட் மேல் பலகையில் அழுக்கு சேர்ந்துருது. வெறும் அழுக்குன்னாக்கூடக் கொஞ்சம் கஷ்டப்பட்டு மாசம் ஒருநாள் துடைச்சு விட்டுறலாம். நம்ம சமையலில்தான் இந்த தாளிக்கும் சமாச்சாரங்கள் கூடுதலா இருக்கே. அந்த எண்ணெய்ப் பிசுக்கெல்லாம் காத்துலே பரவி அப்படியே மேலே போய் அந்தத் தட்டுலே படிஞ்சுருது. கிச்சன் ஹூட் ( சிம்னி) வச்சும் இப்படித்தான் ஆகுது. சுத்தம் செய்யறதுக்குள்ளெ தாவு தீர்ந்துரும்.


அதனால், இங்கே நம்ம பேண்ட்ரீயைத் தரையில் இருந்து சீலிங் தொடும் உயரத்துக்கு வச்சுட்டோம். அங்கே பை ஃபோல்ட் கதவு போட்டதாலே, ஒரே இழுவையிலே முழுசும் திறந்துரும். தட்டுகள் போட்டப் பிறகும் ஒரு ரெண்டு ஆள் நிக்கறமாதிரி இடம் இருக்கு. ச்சும்மாக் கவுத்துப் போட்ட 'ப' வடிவம் வைக்காம கொஞ்சம் சுவாரசியமா இருக்கட்டுமேன்னு ஒரு வளைவு நெளிவோட இடைவெளி விட்டுருக்கு. சீலிங் வரை இருக்கறதாலே ஒரு தட்டுக் கூடுதலாவும் போடமுடிஞ்சது. இதைத் தொட்டடுத்து இன்னொரு பேண்ட்ரீ இதே மாதிரிதான், ஆனா சாதாரணமாப் பலகைகள் மட்டும். ரெண்டுக்குமே கதவைத் திறந்தவுடன் உள்ளெ விளக்கு எரியறமாதிரி வச்சுருக்கு.அடுக்களை மேடையில் மைக்ரோவேவ் வைக்க ஒரு இடம். அங்கேயே பவர் ப்ளக். இந்தப் பக்கம் வேலை செய்யும் மேசையிலேயே , அந்தப் பக்கம் உக்கார்ந்தா ப்ரேக்ஃபாஸ்ட் பார். அங்கே மொட்டையா மரம் தெரியாம ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் தகடு முழுசுக்கும் போட்டுருக்கு.


இதையொட்டி, கிச்சன் பெஞ்சு மேலே இன்னொரு கப்போர்ட் சீலிங் தொடும்படிஇருக்கு. இதுதான் கிச்சன் காட்ஜெட்(gadget) கராஜ். அதுலெ அடித்தட்டு கிச்சன் பெஞ்சுதான். அங்கே நம்ம ஆட்டுக்கல், அம்மிக்கல்,ப்ரெட் டோஸ்ட்டர், ஃபுட் ப்ராஸசர், எலெக்ட்ரிக் கெட்டில் இத்தியாதிகளை ஒளிச்சுவச்சுக்கலாம். உள்ளேயே ப்ளக் பாயிண்ட்ஸ் வச்சுருக்கு. கதவைத் திறந்து கொஞ்சம் இதுகளை வெளியே இழுத்து அரைக்க வேண்டியதை அரைச்சுக்கிட்டு, அப்புறம் உள்ளே தள்ளிவிட்டுறலாம். கதவை மூடுனா கண்ணுலே இருந்து காட்சி மறைஞ்சுரும்:-) மேல்தட்டுகளில் நமக்கு வைக்கவா சாமான்கள் இல்லை?


அடுக்களை சிங்கின் தண்ணீர் தெறிச்சாலும் சுலபமாத் துடைக்க பெஞ்சு டாப் சுவரோடு சேரும் பகுதியில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பட்டி சுவரில் சுத்திவரப் பதிச்சிருக்கு. சமையல் செய்யும்போது குழம்பு கொதிச்சுத் தெறிக்கும் இடத்துலே Splash Guard அடுப்புக்குப் பின்னால் வரும் சுவரில் அடுப்பு அகலத்துக்கு ஒரு கண்ணாடி. ஒரு ஈரத்துணியால் துடைச்சாப் போதும். அடுக்களையில் இருக்கும் மற்ற சாமான்களுக்குப் பொருத்தமா இதுக்கு என்ன கலர் வேணுமுன்னாலும் மறுபக்கம் ஒட்டிக்கலாம். நமக்கு ஸ்டீல் க்ரே. தரையிலும் கிக் போர்டு வர்ற இடத்தில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் போட்டுட்டா, தரையைத் துடைக்கும்போது ஈரம் கப்போர்டுலே படியாது. வேலைக்கு உதவியாளர்கள் இல்லாததால் கூடியவரை சுளுவா நம்ம வேலையாகணும்னு பார்த்துக்கிட்டேன்.


முதலாவது, நம்ம ஒரிஜனல் டிஸைன்லே அங்கே கார்நீஸ் கிடையாது. இந்த பில்டர் சரியான இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்காம விட்டதுலே இந்த ரிச்சர்டு கார்நீஸை அங்கேயிருந்து ஆரம்பிச்சு வைச்சாச்சு! அதனாலெ மத்த இடத்துக்கு பத்தாமப் போய் இன்னும் ஒரு 8 வேற வாங்கும்படியாச்சு.சரி இருந்துட்டுப் போகட்டும்ன்னு விட்டுட்டோம். அப்புறம் அடுக்களையை பெயிண்ட் அடிச்சப்ப, கார்நீஸ் பெயிண்டைக் கலக்கற ஆளு வரலைன்னு ரெண்டு நாள் லேட் ஆச்சு. இப்படிக் கஷ்டப்பட்ட கார்நீஸ் இப்ப கீழே கிடக்குது!


ஸ்கர்ட் போர்டுக்கு என்ன கலர்ன்னு சொல்லுங்க. நீங்க சொன்னதை எழுதி வச்சேன், ஆனா இப்ப அது கிடைக்கலேன்னு டோனி சொன்னார்.அப்புறமா பார்த்துட்டுச் சொல்றேன்னுட்டு, இன்னும் பிள்ளையார் வைக்கலேன்னு வந்துட்டேன்.


மத்தியானம் ஒரு ரெண்டு மணிக்கு கிங் ஃபோன்லே கூப்பிட்டு ஏதோ ஒரு ப்ராப்ளம் இருக்குன்னார். அங்கெ போனா, ஸிங் வைக்கற இடத்துலே இல்லாம குழாயோட கனெக்ஷன் தள்ளியிருக்குன்றார். ப்ளம்பரைக் கூப்பிட்டு என்னன்னு கேக்கணும்ன்னா அவர் ஃபோன் நம்பர் எங்கிட்டே இல்லே. அங்கெ யிருந்து கோபாலைக் கூப்பிட்டேன். அவர் வந்தார். ப்ளம்பருக்கு ஃபோன் போட்டு விஷயத்தைச் சொன்னதுக்கு, நாளைக்குக் காலையிலெதான் வர முடியும்ன்னு சொல்லிட்டார். காலையிலே ஏழரைன்னு முடிவாச்சு!
ஒண்ணும் சரி பண்ண முடியாதுன்னா, கட்லரி ட்ரேயை இந்தப் பக்கம் கொண்டுவந்துட்டு சிங்கை இடதுபக்கம் நகர்த்தலாம்னு முடிவாச்சு.
மத்தியானம் நம்ம எலிநோர் போய்ப் பார்த்துட்டு என்னைப் ஃபோன்லே கூப்பிட்டு, வீடு ரொம்ப நல்லா இருக்கு. ரொம்பப் பிடிக்குதுன்னு சொன்னாங்க!கேக்கறதுக்கு சந்தோஷமா இருந்தாலும் வேலை இப்படி சுணங்குதேன்னு இருக்கு!

சாயந்திரம் வேலையிலிருந்து வரும்போதே இவர்போய் பார்த்துட்டு வந்தார். கிங் வேலை செய்யப் போறாராம். மார்னிங் கோர்ட்லே ஓடு சரிசெஞ்சாச்சு. தப்பா ரைலாக் ஆளுங்க டிஸைன் செஞ்சுட்டதாலெ ஏதோ செஞ்சு அட்ஜஸ்ட் பண்ணி வச்சிருக்காங்க.இந்த ரைலாக்கோட மாரடிச்சே வாழ்க்கை நொந்துபோச்சு(-:


நாங்களும் 7 மணிக்குப் போனோம். கிங் வேலையை ஆரம்பிச்சு இருந்தார். அவருகிட்டே ஒரு சாவியைக் கொடுத்துட்டு, நீங்களே பூட்டிட்டுப் போங்கன்னு சொல்லிட்டு நாங்க வந்துட்டோம்.


1/12
இவரு காலேல அங்கெ போயிட்டார். ப்ளம்பரும், கிங்கும் வந்து இருந்தாங்களாம். அப்புறமா எனக்குப் போன் செஞ்சு வரச் சொன்னாரா, நான் கிளம்பற அவசரத்துலே ச்சாந்துப் பொட்டு குப்பி கீழே விழுந்து கொஞ்சம் கொட்டிடுச்சு! கார்பெட் பாழாயிருமேன்னு அவதி அவதியா அதைத் துடைச்சுச் சுத்தம் பண்ணிட்டு ஓடுனேன்.


அங்கே போனா, ப்ளம்பர் இல்லை. ஆனா சொல்லிட்டாராம் 'நான் வெள்ளிக்கிழமை வந்து அதை மாத்தி வச்சிடறேன்'னு! அந்த மூலையிலெ கிச்சன் காட்ஜெட் கராஜ் வருது. சிங்கை நகர்த்துனா அங்கெ கொஞ்சம் இடிக்குமோன்னு பயமா இருக்கு. அதுவுமில்லாம சோப் தண்ணி தெறிக்காதா? சரி. பைப்பையே நகர்த்தட்டும்னு வந்துட்டேன்.


மத்தியானம் 1 மணிக்கு பேவன் கார்பெட், வைனல் போட அளவெடுக்க வந்தாரு. கிங்கும், போவும் வேலை செஞ்சுக்கிட்டு இருந்தாங்க.
நான் அங்கிருந்து நடந்தே வந்துட்டேன். மறுபடி வழக்கம் போல மாலை விசிட் போனப்ப யாரும் இல்லை. பான்ட்ரீங்க ரெண்டும் வச்சிருந்தது! நல்லா பெரூஊஊஊஊசா இருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்சது. லாண்டரியிலேயும் கப்போர்டு போட்டு வச்சிருந்தது. ராத்திரி வேலை செய்வாங்கன்னு நினைக்கிறேன். கொஞ்சம் ஃபோட்டோ எடுத்துகிட்டு வந்துட்டோம்.


2/12
இன்னைக்கும் பெயிண்டிங் வேலைதான் நடந்துகிட்டு இருக்கு. கதவுங்களையெல்லாம் ஒரு அண்டர் கோட் அடிச்சுட்டாங்க. முன்னாடி வாசக் கதவுக்குப் பூட்டுப் போட்டாச்சு! ஆனா இன்னும் ஜன்னலுங்களுக்குக் கண்ணாடி வைக்கலையே! கிங்கும் போவும் வந்து 'என்னமோ' செஞ்சுகிட்டு இருக்காங்க. வெளியிலே பூசறவேலையும், வெளிப்புறம் பெயிண்டிங்கும் அநேகமா முடிஞ்சிடுச்சு. இன்னும் கொஞ்சமே கொஞ்சம் பாக்கி இருக்கு. தூண் மேடையிலே அதுக்குள்ளே பூசுனது பெயர்ந்துடுச்சு. என்ன வேலையோ? இன்னும் நம்ம பிள்ளையாரை வைக்கலே!


பாத்ரூம் வேனிட்டியும் ஸ்பாவும் வந்து இறங்கியிருக்கு. பவுடர்ரூம் குட்டி வேனிட்டியும் வந்துருச்சு!

3/12
காலையிலே 9.30க்கு வார்டுரோப் அளக்க ஆளுவருதுன்னு அங்கே போனேன். ப்ளம்பர் வரேன்னுட்டு வரலையாம்! மத்தியானம் வரேன்னு சொன்னாராம்! கிங் வந்து பார்த்துட்டுப் போயாச்சு! வெளியே காங்க்ரீட்டு போடறதுக்கு, தரையைச் சரி செய்யறதுக்கு, சிடிகேர்' ஆளுங்களும் வரோம்ன்னு சொல்லிட்டு வரலை! இப்போதைக்கு ஒழுங்கா வேலை செய்யறது பெயிண்டருங்கதான்!'ஜில் எட்வர்ட்ஸ்'ன்னு ஒருத்தர் வந்து வார்டுரோப் அளந்தாங்க. நான் சொன்ன டிஸைனை எழுதிக்கிட்டுப் போனாங்க. எல்லா வேலையும் முடிஞ்சுக் கார்பெட் போட்டபிறகுதான் அவுங்களுக்கு வேலையாம். எஸ்டிமேட் அனுப்பறேன்னு சொன்னாங்க.வெளி வேலைக்குக் கல்லும் மண்ணுமாக் கொட்டிட்டுப் போயிட்டாங்க. ரப்பிஷ்க்கு வச்சிருக்கறதை எடுக்க ஃபோன் போட்டிருக்கு. சாயந்திரம் போனப்ப அப்பத்தான் ரப்பிஷ் ஸ்கிப் ( என்ன ரப்பிஷ்? எல்லாம் படு வேஸ்ட்டு...... நல்ல நல்ல பலகை அது இதுன்னு அதுக்குள்ளே இருக்கு!) எடுக்க ஆள் வந்துச்சு. ஒரு ட்ரக்லே அப்படியே அலாக்கா எடுத்துட்டுப் போயிடறாங்க! ஒரு ஆளுதான் இந்த வேலை செய்யறது!


ப்ளம்பர் மத்தியானமும் வரலே! நாங்க இன்னைக்கு ஆஃபீஸ் கிறிஸ்மஸ் பார்ட்டிக்குப் போயிட்டோம். அங்கே போறதுக்கு முன்னாடிக்கூடவீட்டைப் பார்த்துட்டுத்தான் போனோம்:-)

தொடரும்..................


மக்கள்ஸ்,

இன்னிக்கு நம்ம வீட்டுலே ஒரு ச்சின்னக் கொண்டாட்டம்.
துளசியின் 'கோபாலுக்கும்', துளசியின் 'தளத்துக்கும்' இன்னிக்குப் பொறந்தநாள்.
உங்கள் அன்பும் ஆதரவும் வேணுமுன்னு கேட்டுக்கறேன்.


என்றும் அன்புடன்,
துளசி.

========================

Thursday, September 20, 2007

இப்பவோ எப்பவோ..........

விறுவிறுப்பா தமிழ்ச்சேவை(?) செய்யும்போது இப்படி ஒரு முன்னறிவிப்பும் இல்லாமச் 'சட்'னு மண்டையைப்போடும் பழக்கத்தை எங்கே யார்கிட்டே இருந்துக் கத்துக்கிச்சு இது? பத்துப் பதினைஞ்சு நாளா இதே நிலமை. போனதும் பதறாமல்( முதல் முறை பதறுனது கணக்கில் வருமா? )சுவத்தில் இருக்கும் பவர் சுவிட்சை அணைச்சுட்டு, எண்ணி அஞ்சே நிமிஷத்துலே மறுபடி,எல்லாத்தையும் முதல்லே இருந்து ஆரம்பிச்சா, என்னவோ இப்பத்தான் புதுநாளைத் தொடங்கறதுபோல, 'என்னடா........ இப்படிச் செஞ்சுட்டோமே'ன்ற குற்ற உணர்வு கொஞ்சம்கூட இல்லாம வேலை செய்ய ஆரம்பிக்குது.


வாரண்டி இருக்கா இல்லே தீர்ந்துபோச்சான்னு நினைவில்லை. வாங்குன பில்லைக் காணொம்.ரெண்டுநாளா இதே வேலையா இருந்து தேடுனோம். அஞ்சுவருசம் மூணுமாசம், நாயா பேயா உழைச்சுருக்கு.ஆனா அதுக்கு எப்படித் தெரிஞ்சது நாம் அஞ்சு வருசத்துக்குத்தான் வாரண்டி வாங்குனோமுன்னு!!!! கில்லாடி.வேட்டை ஆரம்பம். வீட்டுக்கு வரும் ஜங்க் மெயில் போதாதா என்ன? வகைவகையா கூவிக்கூவி விக்கறாங்க.கண்ணில் பட்ட முதல் கடையிலே மூவாயிரத்துலே ஆயிரம் குறைச்சுக்கலாமாம்.Hewlett Packard Multi Media PC Package.21" LCD MonitorModel M81701.6 GHZ Pendium D processor1 GB DDR2 RAM 320 GB Hard Drive DVD Super Multi Drive HP printer C5280


கண்ணில் பார்க்கணுமேன்னு கடைக்கு நேரில் போனா, அட்டகாசமா இருக்கு. கார்ட்லெஸ் மவுஸ் & கீ போர்டு. இதுலே டிவியும் பார்த்துக்கலாமாம். ரிமோட் இருக்கு.


நல்லா இருக்குன்னு சொன்னாலும் அப்படியே வாங்கிறமுடியுதா? ரெண்டு இடத்துலே விசாரிக்க வேணாம்?அடுத்தகடை. இங்கே நமக்குத் தெரிஞ்ச பையன் ஒருத்தர் வேலை செய்யறார். மேற்படி எல்லாம் அடங்குனதுஇங்கே 2200. முதல் கடையைப் பத்திச் சொன்னதும் ஒரு அஞ்சு வினாடி யோசிச்சுட்டு, நாங்க அதே விலையை மேட்ச் பண்ணறோம். ஆனா HP மானிட்டர் இல்லை. 21க்குப் பதிலா 22 இஞ்ச்சு Acer மானிட்டர் தர்றோம்.ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......... இதுக்குப் பக்கத்துலேயே அடுத்தமாடல் M 8190 உக்காந்து இருக்கு. நாலாயிரம் ஆகுது. நம் தமிழ்ச்சேவை ஆற்றும் அழகுக்கு நாலாயிரம் கொஞ்சம் கூடிபோகுதே...........


இப்பத் தெரிஞ்ச பையன் அடுத்த குண்டைத் தூக்கிப் போட்டார். உங்களுக்கு என்னாத்துக்கு டெஸ்க் டாப்? அதுக்குன்னு ஒரு இடம் வச்சுக்கிட்டு அந்த அறையை அனாவசியமா ஹீட் பண்ணனுமா? லேப்டாப் அருமையா இருக்கு. ஒரு லைஃப் டைம் கேரண்டியோட wireless router 86 டாலருக்கு இருக்கு. நீலப்பல்லு. வீட்டுலே எங்கே வேணுமுன்னாலும் வச்சுக்கலாம். வேலை முடிஞ்சதும் மூடி அலமாரியில் போட்டுறலாம். இதைப் பாருங்கன்னு காமிச்சார்.Pentium Core 2 Duo. 160 GB Hard Drive. இதுலேயே ஒம்போது படம் டவுன்லோடு பண்ணிக்கலாம். 16000போட்டோஸ், இன்பில்ட் கேமெரா, மைக்ரோஃபோன், ஸ்க்ராட்ச் ப்ரூஃப் (பூனை?) கீபோர்டு, கைரேகை லாக்ன்னு இன்னபிற அம்சம்ங்கள்.


மாடல் DV 9514TX 2498 க்கு தராங்க. 200$ குறை(ரை)ச்சிருக்காங்களாம்.இப்ப சேல் இருக்கு. கொஞ்சம் யோசிச்சுட்டு வரேன்னு சொல்லிட்டு வந்தோம். நம்ம விக்கிப் பசங்களில் விஸ்டா வேணுமா வேணாமான்னு வெங்கட் எழுதுனதைக் கொஞ்சம் மேலோட்டமாத்தான் படிச்சுருந்தேன். அதனாலே விஸ்டா இல்லாம ஹெச். பி கிடைக்குமான்னு கேட்டா............. அதல்லாம் பழய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்து. யாருக்கு வேணும்? இனிமே புது யுகத்துக்கு விஸ்டாதான்னு பதில்.வீட்டுக்குவந்து மேஜையா, மடியான்னு மண்டையைக் காய்ச்சிக்கிட்டு இருந்தப்ப, நம்ம இலங்கை நண்பர் ஒருத்தர் வந்தவர், விஸ்டா வேணவேவேணாம். எல்லாத்தையும் ஒரிஜனலாப் போடச் சொல்லும். பேசாம ஹெச்பி கிடைக்குதான்னு பாருங்கன்னார். மேஜை என்னாத்துக்கு, பேசாம மடியையே வாங்குங்க. ஆனா டோஷிபாவா இருக்கட்டும். அதுதான் ரொம்ப நல்லது. ஸ்க்ரீனை வளைச்சாலும் வளையாதுன்னார். ( எதுக்காக ஸ்க்ரீனை வளைக்கணுமாம்? ஙே.............)


எதாவது வாங்கித்தான் ஆகணும். இதுவேற 'பொட் பொட்'டுன்னு போறதும் வாரதுமா இருக்கே. ராத்திரி கடக்கட்டும். மறுநாள் சேல் முடியப்போகுது.
கடைசிநாள் இன்னிக்குத்தான். போனோம். யானையை வாங்கியாச்சு. மடிமேலே வச்சுக்கலாம். யானைக்கு ஒரு பணம், அங்குசத்துக்குஅரைப்பணம். வீட்டுக்குக் கொண்டுவந்ததும் நம்ம ஜிகேவுக்கு பரம சந்தோஷம். எதாவது பொட்டியைத் தொறந்தா ஓடிவந்துருவான், வேடிக்கை பார்க்க.
ரொம்ப நோஸி:-)கலப்பையை இறக்குனாத்தானே தமிழ்ச்சேவை செய்ய முடியும். ஆச்சு. ஆனா கீபோர்டு மாத்தமுடியலை. நம்ம முகுந்துக்கு அவசர மயில். சிலபேருக்கு வேலை செய்யுமாம். சிலபேருக்கு இல்லையாம். இல்லாத பாவிகளில் நான் இருக்கேன். புதுக்கலப்பை செஞ்சுக்கிட்டு இருக்காராம். காத்துக் கிடக்கறேன்.


அது வர்றதுக்குள்ளே வேற எப்படியாவது தமிழ் எழுத்து வரவழைக்க என்ன செய்யலாமுன்னு இப்ப இன்னொரு மண்டைக்காச்சல். பராஹாவை இறக்குனேன். எமெஸ் வேர்டுலே கொஞ்சம் காப்பாத்த வருது. ஆனா நோட்பேடுலே தமிழே வர்றதில்லைப்பா.....................


போதாக்குறைக்கு பொன்னம்மான்னு, வாங்குன router ம் கனெக்ட் பண்ண முடியலை(-:


ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன. சேவை இனி உங்கள் கையில்:-)))

Wednesday, September 12, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 24

இந்த ஜன்னல் போடாம இருக்கறதாலே பலவேலைகள் நின்னு போச்சு.
முதலாவது வீட்டைப் பூட்ட முடியாது! ( ஜன்னல் வழியா ஆளுங்க வந்துரலாமே! அப்புறம் பூட்டி என்ன பயன்?)


வீட்டைப் பூட்ட முடியாததாலே எலக்ட் ரிக் லைட் ஃபிட்டிங், பாத்ரூம் ·பிட்டிங் எதுவும் போட முடியாது!


அடுப்பு வாங்கிக் கடையிலேயே வச்சுருக்கு. அதுக்கு இப்ப ஸ்டோரேஜ் கொடுன்னு கேக்கறாங்க. பூட்டாத வீட்டுலே எப்படி 4000 டாலர் அடுப்பை வச்சிட்டுப் போகமுடியும்? இத்தனைக்கும் அடுப்பு வாங்குனப்பவே, டிசம்பர் கடைசியில் அடுக்களை வேலை முடிஞ்சப்புறம்தான் டெலிவரி செய்யணுமுன்னு ஒப்பந்தம் போட்டுருக்கு. அதை ஞாபகமா மறந்துட்டாங்க:-)

அடுக்களையை எப்பவோ செஞ்சு வச்சிருக்காரு 'கிங்' அதை எப்படி இங்கே போடறது? அப்புறம் 'டிஷ் வாஷர்' எல்லாம் திருடுபோயிடாதா?
ஜன்னல் இல்லாம 'திருடர்கள் பயப்படுற (?)அலார்ம்' எப்படிப் போட முடியும்? பூட்டு & அலார்ம் போடலைன்னா இன்சூரன்ஸ் கம்பெனி எதாச்சும் நடந்தா பொறுப்பு எடுத்துக்காது


இப்படி பல வேலைங்க பாதிக்கப்பட்டு இருக்கு! என்ன செய்யறது? கடவுள் கிட்டேதான் முறையிடணும்.26/11
இன்னைக்கு இவர் வெலிங்டன் போயிருக்கார். அங்கெ இருந்து ஃபோன் செய்றார், இந்த பில்டர் கூப்பிட்டுச் சொன்னாராம் அவராலே நேத்து வாங்கிவச்ச பலகைங்களைக் கொண்டு நம்ம 'வாக் இன் ரோப்' லே ஷெல்ஃப் போட முடியாதாம்! அந்த வேலை அவருக்கு வராதாம்!வேலை வராதவுங்க எதுக்கு பில்டர்ன்னு பெத்த பேரு வச்சிருக்காங்க? இதை என்கிட்டே நேரடியாச் சொல்லி இருக்கலாமில்லையா?நான் போனேன். பில்டர் அங்கே இருந்தாரு.என்னா விஷயம்னு கேட்டேன். பலகை அடிச்சு போட்டுடுவாராம். ஆனால் அந்த வேலை நீட்டா இருக்காதாம். அதுக்குன்னு இருக்கற ஆளுங்கதான் நல்லபடியாச் செய்வாங்களாம்! வேணும்ன்னா சொல்லுங்க நான் செய்யறேன். ஆனா நல்லா வராது! இது எப்படி இருக்கு?

உள்ளெ போனா, ரெண்டு கப்போர்டுக்கும் பலகை அடிச்சிருந்தது. பரவாயில்லை! ரெண்டு பெட் ரூம்லே ரெடிமேட் வார்டுரோப் போட்டிருக்கு. சின்ன ரூம்து பரவாயில்லை. சுமாரா இருக்கு. மேல்தட்டை இறக்க முடியாதாம். சரி தொலையட்டும். அங்கே யாரு புழங்கப்போறான்னு விட்டுட்டேன். இன்னொரு ரூம்லே போட்டு வச்சிருக்கு. எப்படித் தெரியுமா? தட்டு தட்டா வர செல்ஃப் நட்ட நடுவிலே! அதுக்கு ரெண்டு ஸ்லைடிங் கதவு வருமுல்லே. சரியா நடுவிலே இருந்தா கை எப்படி போகும்? துணி வைக்க, எடுக்க ஈஸியா வழி வேணாமா? சொன்னதும் 'திகைச்சுப் போயிட்டார்!' இப்படித்தான் எல்லாத்துக்கும் ஒரு 'திகைப்பு!' கொஞ்சம் யோசிச்சுப் பார்க்க வேணாமா? நம்ம கிச்சன் கிங் எப்படி எல்லாத்தையும், விஷுவலைஸ்' பண்ணிச் சொல்றாரு! 'வெள்ளைக்காரனுக்கே புத்தி மட்டு' தானோ?


அதை கொஞ்சம் தள்ளிவைக்கச் சொன்னேன். அப்ப துணி தொங்க விடற கம்பியை ச்சின்னதா ஆக்கணுமாம்! ஆக்குன்னேன்.கொஞ்சமா அதை வெட்டிட்டு தள்ளி வைச்சாரு.அப்படியே இடது பக்கத்துலே தட்டுப் போடச் சொன்னேன். மூணு தட்டுக்கு ஏற்பாடு ஆச்சு!அங்கேயே இருந்து பார்த்தேன். அப்புறம் இன்னோரு கம்பி வாங்கி போடச் சொல்லிட்டு, அப்படியே மேலே இன்னொரு நீள தட்டு குறுக்காப் போடச் சொல்லிட்டு வந்தேன்.
இந்த அழகுலே வேலை நடக்கறப்ப, பில்டர் சொல்றாரு,' டிசம்பர் 15க்கு முன்னாடி வேலை முடிஞ்சிரும்! எப்ப குடி வரப் போறே?'


முதல்லே முடியட்டும். வந்தா ஜன்னலு இல்லாமத்தான் பலகை அடிச்சுட்டு வரணும்! 'திறந்தவெளி அரங்கு!!!!!!!!!!!!!!'


பெயிண்ட் வேலை நடக்குது! அடுக்களை முடியற நிலை! ஒரு சின்னப் பையன் தூங்கி வழிஞ்சுக்கிட்டே ச்சின்ன சின்ன ஓட்டைங்களை அடைக்கிறான்ஒரு ஃபில்லிங் வச்சுகிட்டு. மூஞ்சைப் பார்த்தாவே தெரியுது சோம்பேறின்னு! இன்னோரு க்ளிண்டன் இந்த ஸ்டீவன்! வந்து வாய்க்குதுங்க பாரு! நம்ம பெயிண்டர் டோனியோட தங்கச்சி பையனாம். பள்ளிக்கூடம் லீவு விட்டாச்சு. இது அவனுக்கு ஹாலிடே ஜாப். 'வெரி நைஸ் பாய். லேர்னிங் வெரி ஃபாஸ்ட்.........' தாய் மாமன் கொடுக்கற சர்டிஃபிகேட். எல்லாம் நம்ம நேரம். நல்லவேளை டோனிகூட இன்னொரு அனுபவம் வாய்ஞ்சவர் வந்து வேலை செய்யறார்.

ஸ்டடியிலே பெயிண்ட் அடிச்சு காய வச்சிருக்காங்க!

கேரி வந்து லைட்டு வேலை செய்றார். வெளியிலே பூசறது நிப்பாட்டியிருக்கு. ஏன்னு தெரியலை! கராஜ்க்கு மேலே நேத்து போட்டு வச்சிருந்த பாலீஸ்டைரீன் பாதி கழட்டி எடுத்திருக்கு. போட்டும் அதுவே கோணையாத்தான் இருந்தது!


மழை பேஞ்ச இடமா? ஒரே நத நதன்னு இருக்கு!இவரு வெலிங்டன்னுலே இருந்து மறுபடி ஃபோன் செஞ்சு, என்ன நடக்குதுன்னு கேட்டார். சொன்னேன். பெயின்டர் கிச்சனை முடிச்சுட்டாங்கன்னு சொன்னதுக்கு, கார்நீஸ் பெயிண்ட் அடிச்சுட்டா அடுக்களை வச்சிரலாமேன்னு அதை முதல்லே முடிக்கச் சொல்றயான்னு கேட்டாரா, நான் மறுபடியும் போனேன்.


பெயிண்டைக் கலக்கறதுக்கு ஒரு ஆள் இருக்காராம்! அவரு ஆக்லாந்து போயிருக்காராம். ஞாயிறு ராத்திரிதான் திரும்பி வருவாராம். திங்கள் காலையிலே 8 மணிக்கு கலரைக் கலக்கித் தந்தார்ன்னா, மத்தியானத்துக்குள்ளெ அடிச்சுடுவாங்களாம். இதுதான் கிடைச்ச கதை!பில்டரும் வார்டுரோப்லே பலகையை வெட்டிப் போட்டுக் காமிச்சார். அப்பத்தான் கராஜ்மேலே இருந்த பாலீஸ்டைரீன் என்ன ஆச்சுன்னுகேட்டேன். காத்துலே பறந்து போயிருச்சாம்! ஹூம்....காலையிலே வேலைக்கு வந்தப்ப பார்த்தா, காத்துலே கீழே விழுந்து கிடந்துச்சாம்! ட்ரெவர்க்கு ஃபோன் போட்டாராம். அது சரியா வெட்டலைன்னு சொல்லி வேற கொண்டுவருவாராம்! என்னமோ நடந்துகிட்டு இருக்கு! மத்த பலகைங்களையெல்லாம் திருப்பிக் கொடுக்கச் சொன்னேன். பழைய பாலீஸ்டைரீன் ஷீட்டுங்களையும் திருப்ப முடியுமான்னு கேளுன்னு சொல்லியிருக்கேன். குறவ(ன்)ர் மாதிரி முழிக்கிறார்!


சொல்ல மறந்துட்டேனே, தூண் இருக்குல்லே அதுக்கு கீழே வர்ற மேடையைச் செஞ்சு இருக்காங்க. 'பாலீஸ்டைரீன்'தான். அதை ரெண்டு பாகமாச் செஞ்சு ஒட்ட வச்சுட்டுப் போயிருக்காங்க! அகஸ்மாத்தா மேலே பார்த்தா, முகப்புலே வர்ற பாலி போர்டும் போட்டுட்டுப் போயிருக்காங்க. அப்ப....கராஜ்? அட! அங்கேயும் வேலை முடிஞ்சிருக்கு. அப்பாடான்னு இருக்கு. ப்ளாஸ்டரிங் பண்ணறவங்களுக்குச் சொல்லிறலாம்.

27/11
வழக்கம் போல காலையிலேயே போனப்ப ஆளுங்க பெயிண்ட் அடிச்சுகிட்டு இருந்தாங்க. என்ன ப்ரொஃபஷனல் பெயிண்டர்களோ? நாங்க அடிக்கற மாதிரிதான் இருக்கு. நாங்களும் இப்ப இருக்கற வீட்டை இந்த 17 வருஷத்துலே 2 தடவை பெயிண்ட் அடிச்சு இருக்கோமே!டைல்ஸ் கடைக்குப் போய் அங்கிருந்து வாங்கிட்டு வந்த சாம்பிள் எல்லாத்தையும் திருப்பிக் கொடுத்தாச்சு. இப்ப வேற கலர் தேர்ந்தெடுத்துச் சொல்லிட்டு வந்தோம். அந்த பார்டர் ரொம்ப நல்லா இருக்கு! போடமுடியுமான்னு தெரியலை.


28/11
இன்னைக்கு ஞாயிறு! நாங்க ச்சும்மாப் போயிட்டு கொஞ்சம் ·போட்டோ எடுத்துகிட்டு வந்தோம். ரொம்ப நாளாச்சு படங்கள் எடுத்து! தினம் நடக்கற இந்த கலாட்டாவுலே கேமெரா எடுத்துக்கிட்டுப் போக மறந்து போகுது.


29/11
மத்தியானம் போய்,அண்டர் ஃப்ளோர் ஹீட்டிங் கண்ட்ரோலர் ஸ்விட்ச் ரெண்டு இடத்துலே பார்த்துட்டு வந்தோம். அப்படியே புது வீட்டுக்குப் போனோம். அங்கெ வெளியிலே கலர் அடிச்சுகிட்டு இருந்தாங்க. அதுக்குள்ளே முக்கால் வாசி அடிச்சுட்டாங்க! வெளியே ப்ளாஸ்டரிங் செஞ்சு,பெயிண்ட் அடிக்கன்னு தனிக் குழுவுக்கு ஒப்பந்தம்.


வீட்டுக்கு உள்ளெயும் பெயிண்ட் வேற ஆளுங்க அதுதான் நம்ம 'டோனி ஆளுங்க' அடிச்சுகிட்டு இருந்தாங்க! அடுக்களையிலே கார்னீஸ் முடிச்சுட்டாங்க. லாண்டரியும் முடிச்சுட்டாங்க.


முக்கியமா,ரைலாக் ஆளுங்க ஜன்னல் ஃப்ரேம் சரி பண்ணிக்கிட்டு இருந்தாங்க. வார்டுரோப் உள்ளே வர பலகையை ஒரு பையன் வெள்ளைப் பெயிண்ட் அடிச்சு வச்சிகிட்டு இருக்கான். கப் போர்டுக்குள்ளேயும் வெள்ளைக் கலர் அடிச்சு வச்சிருக்கான்.


ரைலாக் ஆளுங்க கிட்டே வேலையை முடிச்சுட்டுப் போறப்ப ஜன்னலுக்கு அட்டையை வச்சு அடைச்சுட்டுப் போங்கன்னு சொல்லிட்டு வந்தோம். சாயந்திரம் ஒரு 6 மணிக்குப் போனா, ஜன்னல் எல்லாம் 'பா'ன்னு திறந்து இருக்கு! சொன்ன கேக்கற ஆளுங்க! ரிச்சர்டு இன்னும் கார்நீஸ் சரிபண்ணிகிட்டு இருந்தாரு. திருப்பித் திருப்பிச் சொல்லிகிட்டே இருக்கேன், முன் வாசக் கதவுக்கு உட்புறம் மேலெ 'கேப்' இருக்கு. அங்க ஒருபீஸ் கார்நீஸ் வெட்டிப் போடுங்கன்னு. கேட்டுருவாங்களே! நீ பாடறதைப் பாடு. நான் செய்யறதைச் செய்யறேன்னுதான்! இன்னோருக்காச் சொன்னேன். ஒரு வழியா இன்னைக்கு செய்யறேன்னு பதில் வந்தது!

தொடரும்......................
===========================

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 23

23 லெங்த் (1 x 3 மீட்டர் நீளம்) கார்னீஸ் வாங்கியிருக்கு. அது பத்தாதுன்னு இன்னும் ஒரு 8க்கு பில்டர் ஆர்டர் கொடுத்திருக்காராம்! எதுக்கு அளவுக்குமீறி வாங்கி வீணாக்கணும்? இந்த ஆளுக்கு இதே வேலையாப் போச்சு. எதுன்னாலும் தேவைக்கு மேல வாங்கறாரு. காசு வீணாப் போகுதுன்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லே. செலவு பண்ணறவங்களுக்குக்குத்தானே கஷ்டம் தெரியும்?


இங்கே ஒண்ணு சொல்லிக்கறேன். சாமான்கள் எல்லாம் நாங்க வாங்கித் தர்றதாய் ஒப்பந்தமுன்னு சொன்னேன் இல்லையா? இங்கே பில்டர்கள், ப்ளம்பர்கள், எலெக்ட்ரீஷியன் ன்னு தொழில்முறைப் படிப்புப் படிச்சவங்க, அவுங்க பேரை அந்தந்த தொழில்முறை சங்கத்துலே பதிஞ்சுக்குவாங்க. ரெஜிஸ்டர்டு ட்ரேட்ஸ்மென்.


பில்டிங் சப்ளைஸ்ன்னு சாமான்கள் விக்கற கடைகளில் இவுங்களுக்கு எதாவது ஒரு கடையில் கணக்கு இருக்கும். இதெல்லாம் மொத்த விற்பனைக் கடைகள். 'டூ இட் யுவர்செல்ஃப்' னு ச்சின்னசின்னதா எதாவது வீட்டு வேலைகள் செஞ்சுக்கறதுக்கு, சாமான்கள் வாங்கிக்க 'ரீடெய்ல்' கடைகள் நிறைய இருக்கு. இங்கேதான் நம்மைப்போல உள்ள ஆட்கள் எதாவது ஒரு ச்சின்ன வேலைக்கு பயன்படும் சாதனம் வாங்கிக்குவோம்.வீடு கட்டறது போல இருக்க பெரிய வேலைகளுக்கு ஏராளமா சாமான்கள் வேணுமே. அதெல்லாம் நாம் போய்க்கேட்டு நேரிடையா வாங்க முடியாது. அக்கவுண்டு இருக்கும் ட்ரேடு ஆட்கள்தான் வாங்கிக்க முடியும். அதிகபட்சமா 30 % தள்ளுபடிக்கும் சாமான்கள் அவுங்களுக்குக் கிடைக்கும்.


பில்டர் , அவர் அக்கவுண்டுலே வேணுங்கற சாமான்கள் வாங்கிப்பார். பில் வரவர நாம் அதை அடைச்சுக்கிட்டே வரலாம். தேவையான அளவைக் கரெக்ட்டா வாங்கிக்காமக் கூட கொஞ்சம் சேர்த்து வாங்கிப்பாங்க. பாதி வேலைக்கு நடுவில் இன்னும் கொஞ்சம் வேணுமுன்னா வேலையை விட்டுட்டு ஓட முடியாதில்லையா? அந்த வேலை முடிஞ்சதும் மீதம் ஆகற கட்டைகள், பலகைகள் முதலானதைத் திருப்பிக் கொடுத்துக்கலாம். இப்படி அப்பப்பத் திருப்பிக் கொடுத்துட்டாப் பிரச்சனையில்லை. நம்ம பில்டர் வாங்குறதோட சரி. ஒரு நாளும் எதையும் திருப்பி அனுப்புறதில்லை. மீதம் ஆகற நல்ல சாமான்களையும் 'ரப்பிஷ் ஸ்கிப்லே போட்டுருவார். ஒரு நாள் அதுக்குள்ளே எட்டிப் பார்த்தப்ப நல்லநல்ல பலகைகள் கிடக்குது. அடுத்தவாரம் இன்னும் பலகைகள் வாங்குவார். அப்பப்ப வீட்டைச் சுத்தம் செய்யறேன்னு எல்லாத்தையும் கழிச்சுக் கட்டிருவார். திருடும் எண்ணம் இல்லை. எல்லாம் ஒரு அலட்சியம். இப்படி அவர் அனாவசியமா தூக்கிப் போட்டதே ஒரு இருபதாயிரம் டாலர் வரை ஆச்சு. கூடுதலாச் சொல்லிட்டேனா? ஒரு பதினைஞ்சு இல்லேன்னா பத்து கட்டாயம் இருக்கும்.


18/11 மத்தியானம் சாப்பாட்டுக்கு வந்த கோபால் சொல்றாரு, அடுக்களையெல்லாம் கார்னீஸ் போட்டுட்டாங்க! ஐய்யோடா......... உடனே போய்ப் பார்த்தா அடுக்களையெல்லாம் 'ஜம்'ன்னு இருக்கு! ஆனா அங்கே வேற மாதிரி வரணும். இப்ப எல்லாம் குழம்பியாச்சு. ஆனாலும் இப்ப 'டூ லேட்' . கிச்சன் கிங்குக்கு ஃபோன் போட்டு விவரம் சொல்லியாச்சு!சாயந்திரம் மறுபடி நாங்க ரெண்டுபேரும் போனோம். 'ரிச்சர்டு வேலை செய்யறார். ரொம்ப நல்ல ஆளு! பேசறப்ப குரல்கூட எழும்பாமபேசறார். மூக்குலே மூக்கு வளையம் வேற. நம்ம ஊர்லே குழந்தை தக்காட்டி, மூக்கு குத்தி சாமிக்கு நேர்ந்துக்குவாங்களே, அது ஞாபகம் வருது! இன்னோரு 8 கார்னீஸ் வந்து இறங்கியிருக்கு. இப்ப அதுவும் பத்தாதாம்! இன்னும் 8 வேணுமாம்! ஒண்ணு 30 டாலர். வேற வழி? வாங்கித்தானே ஆகணும்? இல்லாட்டி பாதிலே நிக்காதா?


19/11
பொழுது விடிஞ்சதும் கார்நீஸ் 8 வேணும்ன்னு ஃபோனில் சொல்லியாச்சு.ஆனா ஸ்டாக் இல்லையாம். செவ்வாய்க்கிழமைதான் வருமாம்.

காலையிலே யாருமே வரலையாம். அப்புறம் வெளியே பூசற ஆளுங்க வந்தாங்களாம். ஜிப் சேண்டிங் செய்யறவுங்க வரணும். ஆனா மத்தியானம் வரைக்கும் வரலை! மொத்தம் மூணு கோட்டிங் சிமெண்ட் பூச்சு வெளியே பூசறாங்க. முதல்லே பார்க்க என்னவோ லேசா ச்சும்மாப் பேருக்குப் பூசுனதா இருந்துச்சு. அதுக்கப்புறம், இன்னும் கொஞ்சம் கூடுதல்ன்னு ஆகி இப்ப மூணாவது நல்லா பட்டையா ப்ளாஸ்டர் செஞ்சுருக்கு. ஜன்னல், கதவு எல்லாம் நல்லபடியா ப்ளாஸ்டிக் ஷீட் போட்டு மூடிட்டு, கவனமாத்தான் ப்ளாஸ்டர் போட்டாங்க.

ஒரு நாலு மணிக்கு இவர் ஃபோன் செஞ்சு சொன்னார், அங்கே சேண்டிங் வேலை நடக்குது! சாயந்திரம் போனப்ப எல்லாத்தையும் 'சேண்டிங்' செஞ்சுட்டுப் போயிருந்தாங்க. ஆனா, டஸ்ட் எல்லாம் அப்படியே இருக்கு! அதை யாரு சுத்தம் செய்வாங்கறது தெரியலை. இவர்தான் துடிச்சிகிட்டு இருக்காரு. கொஞ்சம் விட்டா 'சித்தாளு' வேலை செய்ய நம்ம ஆளு ரெடி!
ரிச்சர்டு, லவுஞ்சிலே கார்நீஸ் போட்டு முடிச்சாச்சு. சாமி அறையும் ஃபோயரும் பாக்கி.

ஆர்டர் கொடுத்திருந்த லைட்டுங்க வந்திருச்சாம். திங்கள் அன்று போய்க் கொண்டுவரணும்!

20/11
காலையிலே வழக்கம்போலப் போனோம். இன்னைக்கு சனிக்கிழமையாச்சே. யாரும் வேலை செய்யலே! சாமி இடத்துக்குக் கார்நீஸ்ப் போட்டு முடிச்சு இருக்கு ! வீட்டைப் பூட்டிட்டு வந்தோம்! தினம் திறந்துதான் இருக்கும். ஆனா ஆளுங்க வேலை செய்ய வந்துக்கிட்டு இருப்பாங்க! நாளைக்குச் சாயந்திரமாப் போய்சைடு கதவுப் பூட்டைதிறந்து வச்சிட்டு வரணும்!

அப்படியே டைல்ஸ் கடைக்குப் போய் இன்னும் சில சாம்பிள் வாங்கிட்டு வந்தோம். இது பார்க்க 'மார்பிள்' மாதிரி இருக்கு.எனக்குப் பிடிச்சிருக்கு!பாக்கலாம் எது அமையுதுன்னு! அங்கங்கே வாங்கிவந்த சாம்பிள்களைத் திருப்பிக் கொண்டுபோய் கொடுக்கறதுன்னு புது வேலையும் சேர்ந்துக்கிச்சு.


22/11
இன்னைக்கு லீவு எடுத்திருக்கார். காலையிலே போய்ப் பார்த்துவிட்டு வந்து சொன்னார். வெளியே பூசறதுக்கு ரெண்டுபேர் வந்து வேலை நடக்குது! 'ட்ரெயின் லேயர்' ரெண்டுபேர் வந்து பைப் போட தோண்டிகிட்டு இருக்காங்க! பெயின்டர் ரெண்டுபேர் பெயின்ட் அடிச்சுக்கிட்டு இருக்காங்க! கேக்கவே எவ்வளவு நல்லா இருக்கு பாத்தீங்களா? மறந்துட்டேனே. ரெண்டு பேர் 'ஜிப் சேண்டிங்' செஞ்சுகிட்டு இருந்தாங்களாம்.


எங்க இவரு சொன்னாராம், 'அதை முடிச்சிட்டு, சேண்டிங் பண்ணப்ப விழுந்த டஸ்ட் சுத்தம் செஞ்சிடுங்க. பெயிண்ட் அடிக்கறவங்களுக்கு ஸர்பேஸ் சுத்தமா இருக்கணும்'


அதுக்கு அந்த ஆளு என்ன சொன்னாராம் தெரியுமா? 'எல்லாம் எங்களுக்குத் தெரியும்' ( 'மூடிகிட்டுப் போ'ன்னு சொல்லாதவரை லாபம்!)மரியாதை பார்த்தீங்களா எப்படி இருக்குன்னு! இங்கத்து 'ஆட்டிட்யூட்' இப்படி. 'ரஃப் அண்ட் டஃப்' தான்! இதுவரை இந்தமாதிரி ஆளுங்களைச் சந்திக்க நமக்கு வாய்ப்பே இல்லாம இருந்துச்சு. கடை கண்ணிகளில் நாம் பார்க்கிற மக்கள், வியாபாரிகள் வேற வகை. இனிமை & மரியாதையாப் பேசுவாங்க. இதைவச்சு, எல்லா மக்களும் இப்படி இருப்பாங்கன்னு நாமே நினைச்சுக்கிட்டு இருக்கோம். ஒவ்வொரு மட்டத்திலும் ஒவ்வொரு விதமான மக்கள். ஒருவேளை இனிப்பாப் பேசுனா இவுங்க தொழிலுக்கு ஆகாதோ என்னவோ?


ரெய்லாக் ஆளுங்களுக்கு ஃபோன் செஞ்சு மெசேஜ் விட்டுருக்கு! நம்ம பேரைப் பார்த்தாலே ஓடி ஒளியறாங்க!

டைல்ஸ் கடை ( சாலீஸ்பரித் தெரு) போனோம். ஒண்ணும் சரியா இல்லே. அங்கிருந்து கார்பெட் வைனல் போனோம். சில டிஸைன் பரவாயில்லே! அங்கிருந்து 'லைட்டிங்' கடைக்குப் போய் ஆர்டர் கொடுத்த சாமான்கள் வந்திருந்ததை எடுத்துகிட்டு வந்தோம். வர வழியிலே பெயிண்ட் பார்க்கலாம் என்று 'பிளேஸ் மேக்கர்' போனா அங்கே துணி காய வைக்கறது clothes line 'சேல்' போட்டிருந்தது. கிட்டத்தட்ட 90 $ லாபம். அதையும் வாங்கிகிட்டு வந்தோம்!23/11
வேலை நடந்த அடையாளம் இல்லே! சாயந்திரம் கார்நீஸ் போடற ரிச்சர்டுதான் வந்து வேலை செஞ்சாரு. வாசக் கதவுக்கு உள்புறம் மேலே கொஞ்சம் 'கேப்' இருக்கு. அதை அப்படியே விட்டுட்டா அசிங்கமா இருக்காதா? அதை சரி செய்யச் சொன்னா, தலையை ஆட்டுறாரே தவிர வேலையை பூர்த்தி செய்யலையே!


24/11
வீட்டுக்குள்ளே பெயிண்டிங் வேலை நடந்துகிட்டு இருக்கு. அவுங்களும் 'பெட் ரூம்'லே இருந்துதான் ஆரம்பிப்பாங்களாம்! எப்படியோ செய்யுங்கன்னு விட வேண்டியதுதான்! நாளைக்கு 'ரைலாக்' ஆளுங்க வந்து அளக்கப் போறாங்களாம். அப்புறம் ரெண்டு வாரத்துலே ஜன்னலுங்களைப் போடுவாங்களாம்! ஃபோயர்லே போட்ட 'ஸீலிங் ரோஸ்'க்கு பக்கத்துலே இருக்கற லைட்டுங்க கொஞ்சமே கொஞ்சம் 'தேடா'வா இருக்கு. ஒரு நேர் கோடா வர வேண்டாமா?
25/11
நம்ம பில்டர்க்கு 'வாக் இன் ரோப்' டிஸைன் கொடுத்து ரொம்ப நாளச்சு. இதுவரைக்கும் ஒண்ணுமே செய்யலே. எப்ப கொடுத்ததுன்னா, இவர் மலேசியா போனாரே அப்ப நவம்பர் 8. இப்ப கிட்டத்தட்ட 3 வாரம் கழிச்சு, மறுபடி அதே டிஸைனை ( நல்ல வேளை, ஃபோட்டோகாப்பி எடுத்து வச்சிருந்தோம்!) கொடுத்து, 'ப்ளேஸ் மேக்கர்'லே போய் எந்த பலகைன்னு காமிச்சாச்சு. பழைய ப்ளானை மாத்தி, மத்த ரெண்டு ரூமுக்கும் ரெடிமேட் டிஸைன் வாங்கிக்கச் சொன்னோம். அவருக்கு வேலை கம்மி! அப்படியே போட்டுடலாம். எல்லாம் 'காம்ச்சோர்'ஆளா இருக்காங்க!அங்கிருந்து வரப்பவே 'ரைலாக்'க்குக்கு ஃபோன் செஞ்சார். மத்தியானம் வரதாச் சொன்னாங்க.சாயந்திரம் வரைக்கும் ரைலாக் ஆளுங்க வரவேயில்லை. இவர் ஃபோன் செஞ்சு கேட்டதுக்கு, அந்தப் பொண்ணு 'லிஸா' சொல்லுதாம்,'வேற வேலையிலே இருந்துட்டாங்களாம். நாளைக்கும் வர முடியாதாம். திங்கள் கிழமைதான் வருவாங்களாம். அவுங்களைப் பத்திப் புகார் கொடுக்கணும்ன்னா கொடுங்க'ன்னு அலட்சியமா சொல்றாங்களாம்!


இவுங்க வந்து ஆர்டர் கேட்டப்ப நாந்தான், 'ச்சின்னப் பொண்ணு. இப்பத்தான் பிஸினஸ் செய்ய வந்திருக்காங்க ( அப்பாவால முடியலைன்னு அந்தக் கம்பெனிப் பொறுப்பை எடுத்து நடத்துறாங்களாம்) ஐய்யோ பாவம்'ன்னு அவுங்களையே ஜன்னல்ங்க சப்ளை செய்யச் சொன்னதுக்கு இதுதான் கூலி!


புத்தி கொள்முதல். பாடம் எண்...........?
தொடரும்...................
==================

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 22

8/11
காலையிலே 10 மணிக்குப் போய்,'லெட் லைட்' கண்ணாடி வேலை செய்யறவங்களைப் பார்த்து, 'பின்' கதவுக்கு 'மியாவ்' டிஸைனைச் சொல்லி ஏற்பாடு செஞ்சிட்டு .........

நம்ம வீட்டுலே இப்ப அஃபிஷியலா ரெண்டு பூனைங்க இருக்கு. அதுகளும் வீட்டு அங்கத்தினர் என்ற அந்தஸ்த்தோட இருக்கணுமுன்னா, நாமும் சில உரிமைகள் கொடுக்கணுமில்லையா? இதோ...... வீட்டில் உங்களுக்கான பங்குன்னு ஒரு கண்ணாடிக் கதவை இவுங்களுக்குன்னு ஒதுக்கினேன். அதுலே வர்ற ரெண்டு துண்டுகளுக்கும் ஒரே டிசைன். பூத்துக் குலுங்கும் ஒரு செடியின் அடியில் உக்கார்ந்து வெயில் காயறாங்க. நல்லவேளை ரெண்டு பேரும் கறுப்பாவே இருக்கறதாலே பிரச்சனையில்லை:-)


அப்படியே 'ட்ரெண்ட்டி மிர்ரர்' கடைக்குப் போய் விவரம் சொன்னேன். வியாழன் காலையிலே 10.30 க்கு 'ஜான்' வந்து பார்த்து அளவெடுக்கறேன்னு சொன்னார்.


4.30க்கு வெளிப்புறம் 'டெக் ஏரியாவுலே காங்க்ரீட் போட இடத்தை சமன் செய்யற ஆளு வர்றதா இருந்தது. நானும் க்ரேகும் 5.05 வரை காத்திருந்தோம். யாரும் வரலை! கப்போர்டுங்களுக்கு பலகை போடறதுக்கு இவர் டிஸைன் வரைஞ்சு தந்துட்டுப் போயிருந்தார். அதைக் கொடுத்தேன். முகத்துலே ஒரு சின்ன(!) அதிர்ச்சியோட அதை வாங்கிப் பார்த்துட்டு விவரம் கேட்டார் பில்டர். சொன்னேன்.பெயிண்ட் ஆளுங்க வந்து 'சா·ஃபிட் பெயிண்ட்' ஒரு தடவை அடிச்சு முடிச்சிருக்காங்க! நல்லா பளிச்சுன்னு இருக்கு!9/11
உள்ளே ஜிப் ஆளுங்கதான் வேலை செஞ்சிகிட்டு இருக்காங்க! இவர் வேற ஊருலே இல்லையா, அதனாலே ரொம்பவே 'கொயட்டா'இருந்தது! ச்சீ ....பாவம்......


இவரா அப்பச் சத்தம் போடறது? :-)))))) நாளைக்கு வந்துருவார்.10/11
இவர் வந்துட்டாரு! வெளியே ப்ளாஸ்டர் பூசறதுக்கு காசு கொடுத்தா, மறுநாளு வேலையை ஆரம்பிக்கறோம் என்று செங்கல் வைக்கற குழுவின் 'டீம் லீடர்' மத்தியானம் வந்து சொல்லிக் காசை வாங்கிக்கிட்டுப் போனாரு. இப்பெல்லாம் இங்கே வெளியே செங்கலோட அப்படியே விட்டுடறாங்க. அதுக்கு நிறைய கலர்களிலும் கிடைக்குது செங்கல்லுங்க. ப்ளாஸ்டர் போடறது, அதுக்கு மேலே பெயிண்ட் அடிக்கறதுன்னு செலவு மிச்சம். எனக்கு என்னவோ அது பிடிக்கறதில்லை. நம்ம ஊர்ப் பக்கம் செங்கல் வச்சுக் கட்டிட்டு, அப்புறம் நிதி நிலையைப் பொறுத்துக் கொஞ்சம் கொஞ்சமா ஒவ்வொரு சுவரா பூசுவாங்க . இதெல்லாம் அந்தக் காலத்தில். வெறும் செங்கல்லுன்னா 'பணித் தீராத வீடு'ன்றது மனசுலே பதிஞ்சு போச்சு. நம்ம வீட்டைஅப்படியே விடும் எண்ணம் எனக்கில்லை. செலவைப் பார்த்தா முடியுமா? மனத்திருப்தி முக்கியமில்லையா?


நாங்க மத்தியானமாப் போய் வீட்டையும் பார்வையிட்டு வந்தோம். நாலுமணிக்கு லைட்டிங் செலெக்ட் செஞ்சு சொல்லிடணும்ன்னு நம்ம எலக்ட்ரீஷியன் சொன்னதாலே எந்த லைட் எங்கே போடணும்ன்னு புஸ்தகத்தைப் பார்த்து 'மண்டையை உடைச்சிக்கிட்டதுதான்' மிச்சம்! வீட்டைச் சுத்தி வெளிப்புறம் வரும் விளக்குகள் மட்டும் 'ரக்பி பந்து ஷேப்' இருக்கட்டும். வீட்டுக்குள்ளெ ஹாலோஜென் லைட்ஸ், டவுன் லைட்ஸ்ன்னு வெவ்வேற விதமா இருந்துட்டுப் போகட்டும்.


11/11
காலையிலே 10.30க்கு 'மிர்ரர்' கண்ணாடி போடறவர் வந்து பார்த்துட்டு அளவெல்லாம் எடுத்துக்கிட்டுப் போனார். ஃபோயர்லே கதவுக்கு ரெண்டு பக்கமும் ஒரு செவ்வக மாடம் வச்சுருக்கு. அதுக்குள்ளே கண்ணாடி பதிச்சு மேலே இருந்து விளக்கு வெளிச்சம் வர்றமாதிரி வைக்கணும். மாடத்துலே அலங்காரச் சிலைகளை வைக்கலாம். பாத்ரூம் வேனிட்டிக்கு கண்ணாடி. ஹால் டேபிள் போடும் இடத்தில் ஒரு கண்ணாடி. இதெல்லாம் இல்லாம ஒரு பெரிய கண்ணாடி 1.2 x 1.5 மீட்டர் அளவுலே ஒண்ணு வருது. புடவை கட்டிக்கிட்டுச் சரியா இருக்கான்னு பார்க்கறதுக்கு. ஆமாம்........... ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கொரு நாள்னு புடவை கட்டுற லட்சணத்துக்கு இதுதான் கொறைச்சல்னு உள்மனசு சொன்னாலும்................... கேட்டுட்டுத்தான் மறுவேலை:-)

பெரிய வசந்த மாளிகை.............. இதெல்லாம் இல்லாம முடியாது. யாருக்காக......... இது யாருக்காக? துளசிக்காகக் கட்டும் துளசிமஹால்னு சொல்லிக்கலாமுன்னா, இன்னும் துளசி 'மேலே' போகலையேங்க.

12/11
இன்னைக்குத் தீபாவளிப் பண்டிகை. இங்கே 'ஷோ டே' ஆனதால் லீவு! பட்டிக்காட்டு ஆடு, மாடு, கோழி,பன்னியெல்லாம் பட்டணத்துக்கு வந்து மூணுநாள் இருந்துட்டுப் போகும். நாங்களும் 'ப்ரைஸ் வின்னிங் அனிமல்ஸ் பார்க்கணுமில்லே? நம்ம பிள்ளைகளும் 'கண்ட்ரி அனிமல்ஸ் பார்க்க நல்ல ச்சான்ஸ்:-) ஆனா வெளியிலே பூசறவரு வந்து வேலை செஞ்சுகிட்டிருந்தாரு. லீவு எடுக்கலையான்னு கேட்டதுக்கு, 'இல்லை. எனக்கு 5 புள்ளைங்க! வீட்டுலே இருக்கறதைவிட இங்கிருந்தா நல்ல சமாதானமா இருக்கும்' என்று சொன்னாரு! இதையெல்லாம் அதுங்களை பெத்துக்கறதுக்கு முந்தியில்லே யோசிச்சு இருக்கணும்:-)


ராத்திரி பத்து மணிக்கு மேலே பட்டாஸு கொளுத்தினோம். எங்களுக்கு இப்ப வசந்தகாலம் முடியப்போகுது. சூரியன் எட்டுமணிவரைக்கும் இருக்கான். இருட்டுனாத்தானே கம்பிமத்தாப்பூக் கொளுத்துனா நல்லா இருக்கும். இந்த வீட்டுலே (311) இது கடைசி தீபாவளி.13/11
ஜிப் ஆளு வந்து வேலை செய்றார்! சாயந்திரம், தமிழ்ச் சங்கத்திலே தீபாவளிக் கொண்டாட்டம். நல்லா நடந்து முடிஞ்சது! கை ஃபாக்ஸ் புண்ணியத்தில் கிடைக்கும் பட்டாஸ்களை வாங்கி வச்சு இங்கேயும் கொளுத்திக்கிட்டு இருக்கோம். இங்கே நியூஸியில் வெடிகள் வெடிக்கத் தடா. கிடைக்கவும் கிடைக்காது. அதனால் எல்லாமே வண்ணம் பொழியும் வாண வேடிக்கைகள்தான்.14/11
டைல்ஸ் கடைக்குப் போய் 'சாம்பிள்' வாங்கினோம். அகஸ்மாத்தா, ஒரு லைட்டிங் கடையைத் தாண்டினோம். அங்கெ போனா ஒரு நல்ல (நம்ம ஐவேஜ்க்குத் தகுந்த) 'சாண்டிலியர்' கிடைச்சது. வாங்கி ( பதிவு செஞ்சு) வச்சிட்டு வந்தோம்! ஃபோயர் கூரை மட்டும் 2.6 மீட்டருக்கு நல்ல உசரமா இருக்கு. அங்கே தொங்கும் விளக்கும், லவுஞ்சில் கூரையோடு பதிஞ்சு இருக்கும் விளக்கும் சரியா இருக்கும். இது சங்கு மாதிரி டிஸைனில் இருக்கு.15/11
தினம் பொழுது விடிஞ்சவுடனே,'இன்னைக்கு வேலைக்கு யாராவது வரப்போறாங்களா? நமக்கு என்ன வேலை இருக்கு? நாமயாரையாவது பாக்கறதுக்கு முன்பதிவு செஞ்சிருக்கோமா'ன்றதே முதல் எண்ணமா இருக்கு!
ஒரு பத்துமணிக்குக் கிளம்பி, முதல்லே 'லெட் லைட்' கடைக்குப் போய் பின்கதவுலே வரப்போற சூரியனுக்கு கொஞ்சம் 'சக்தி' கொடுக்கணும். இ-மெயிலில் படத்தை அனுப்பி இருந்தாங்க. பூனை, பூக்கள் எல்லாம் சரி. சூரியன்தான் பாக்கறதுக்கு 'சந்திரனைப் போல மஞ்சளா' இருக்குது!


அங்கே போனேன். 'பேட்' வேற வேற கலர் போட்டுப் பார்த்துட்டு, மஞ்சள் கலந்த சிகப்புன்னு முடிவாச்சு. அங்கிருந்து 'நேச்சுரல்லி டைல்ஸ்' கடையிலே போய் கொஞ்சம் டைல்ஸ் செலெக்ஷன் பார்த்துட்டு 'சாம்பிள்' எடுத்துகிட்டு, அப்படியே 'யூரொப்பியன் டைல்ஸ்' போய் விவரம் கேட்டுட்டு வந்தேன்.


16/11
காலையிலே எட்டரைக்குப் போகணும். கராஜ் கதவுக்குள்ள ஆட்டோமாடிக் ஓப்பனரை மாத்த ஆள் வருது! போனோம். 'கோப்ரா க்ரோம்' சரியா வேலை செய்யறதில்லையாம். நிறைய புகார் வருதாம். பெல்ட் எரிஞ்சு போகுதாம்! 'கோப்ரா ஐஸ்' மாடல் செயின் இருக்கறது மாத்தியாச்சு. க்ரேக் வந்து காசு வாங்கிட்டுப் போயாச்சு.


சாயந்திரம் கேரியைப் பார்த்து விளக்கு ஃபிட்டிங்க்ஸ் சொல்லியாச்சு!


வீட்டு முகப்புப் பிள்ளையார் வந்தாச்சு. சிமெண்டு ப்ளாஸ்டர் போட்டு அனுப்பி இருக்காங்க. முகப்புலே பொருத்திட்டா, பெயிண்ட் அடிக்கும்போது இதுக்கும் ஆச்சு. உள்ளெ மட்டும் தூண் கலரை அப்புறமா அடிக்கச் சொல்லணும்
17/11
இவர் வந்து சொல்றாரு அங்கே யாருமே இன்னைக்கு வரலே! இது ஒரு எரிச்சலான விஷயம். எப்ப வராங்க, என்னைக்கு, எதுவும் தெரியாது. வந்தா வரவுன்னு போகுது!என்னன்னு பாக்கலாம்ன்னு சாயந்திரம் போனா, அங்கே ஒருத்தர் பேரு 'ரிச்சர்டு' , கார்னீஸ் போட்டுகிட்டு இருக்கார். ராத்திரியும் வேலை செய்வாராம். இங்கே 'பவர்' இருக்கு ஆனா 'லைட்' இல்லேன்னோம். லைட் வீட்டுலே இருந்து கொண்டு வருவாராம்!


தொடரும்................
=================

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 21

2/11
கடமை கடமைன்னு காலையிலேயே கிளம்பியாச்சு! கதவுங்களுக்குக் கைப்பிடி போடணும் இல்லையா? 311 லே இருக்கறமாதிரி ரொம்ப உயரத்துலே வைக்கக் கூடாதுன்னு சொல்லியிருந்தேன். 311 லே 'எல்' ஷேப்புலே இருக்கறது, போறப்ப வர்றப்ப நம்மை இழுக்கும்! சரியா அது என் மார்பு உயரம் வேற. சில சமயங்களிலே அடிச்சுடும்........ படற வேதனை இருக்கே! ஐய்யோ.......
அதனாலே எல்லா கைப்பிடியுமே உருண்டையா வாங்கியிருக்கு! உயரம் ஜஸ்ட் எனக்குத் தகுந்தாப்போலே! நான் கதவுகிட்டே நின்னால் என் முழங்கை இருக்கும் உயரம். எது எது எங்கே போகுதுன்னு பார்த்துச் சொல்லியாச்சு! குமிழ்கள் எல்லாம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் நிறம்.
சிலது 'டம்மி' சிலது ப்ரைவஸி லாக் உள்ளது.


வயரிங் வேலைதான் இன்னும் நடந்துகிட்டு இருக்கு! வீட்டைச் சுத்தி வெளியில் எல்லாப் பக்கமும் ரெவ்வெண்டு விளக்கு. ரெண்டு இடத்துக்கு செக்யூரிட்டி விளக்குகள், சென்ஸார் வச்சது. திறந்த வெளியா இருக்கும் பகுதிகளில் சில ப்ளக் பாய்ண்டுகள். அவுட் டோர் டிஸைன்கள். இல்லேன்னா மழைத்தண்ணியாலே ஆபத்தாச்சே.
3/11
காலையிலே எதுக்கோ போனோம். ஆங்.... பாக்கி இருந்த செங்கல் எல்லாம் வச்சிட்டாங்க! முன்னால பாக்க நல்லாதான் இருக்கு! ஜிப் ஆளுங்க வந்து வேலையை முடிச்சிட்டாங்க! இனி ஜிப் ஸ்டாப்பர்ங்க வந்து அதை ப்ளாஸ்டர் செய்யணுமாம். என்னத்தை ஸ்டாப் செய்வாங்க? எதுக்கு இந்தப் பேரு? ஒண்ணும் புரியலை. இப்ப இருக்கும் வீட்டைப் 311 புதுப்பிச்சப்பவும் இதெல்லாம் நடந்துச்சுன்னாலும், அப்ப நான் சரியாக் கவனிக்கலை. ப்ளாக் எழுத ஆரம்பிக்காத காலம் இல்லியா? 'கிரேக்' கதவுங்களுக்குப் பிடி வர்ற இடத்துலே துளை போட்டு வச்சிட்டாரு!எலக்ட்ரீஷியந்தான் வேலையை செஞ்சுகிட்டே இருக்காரு! டவுன் லைட் வர்ற இடத்துக்கு ஓட்டை போட்டு வச்சிருக்காரு! கராஜ்லே ஆட்டோமேட்டிக் கதவுக்கு மோட்டார் பொருத்தியிருக்காங்க! ஆனால் நாம் சொன்னது இல்லை. வேற ஒண்ணு. டப்பா மாதிரி இருக்கு, நல்லாவே இல்லை! மொதல்லெ இதை மாத்தச் சொல்லணும்


சாயந்திரம் 'கிங்' ஊஞ்சல் பலகை கொண்டுவந்தாரு. அங்கே வச்சுப் பார்த்து அளவு குறிச்சோம். இன்னும் அதுலே பித்தளைக் கொக்கி பிடிப்பிக்கணும். சங்கிலிக் கம்பி போட்டுப் பார்த்தா நல்லா அம்சமா இருக்கு. ஆனா............ பலகை பயங்கர கனம்! அதுவே ஒரு 100கிலோ வருமோ? கிங் சொல்றாரு அது ஒரு 60 கிலோதானாம்! ஆஸ்ட்ராலியன் மரத்தில் செஞ்சதாம். ஜார்ரா டிம்பர்.

அவ்வளவு வெயிட் தாங்குமான்னு பாக்கணும்! 500 கிலோ தாங்கற மாதிரிதான் ஹூக் போட்டுருக்காங்க!


4/11
லேண்ட் ஸ்கேப் ஆளு வராருன்னு 10 மணிக்குப் போனேன். அந்த ஆளு வரலை! மத்தியானம் 4 மணிக்கு கோபால் சீக்கிரம் வந்து நாங்க 'மாஸ்டர் ட்ரேட்' போனோம். சாப்பாட்டறைப் பகுதியிலே கை கழுவுற வாஷ் பேஸின் இன்னும் சரியா அமையலே!
ஜிப் ஸ்டாப்பர்ங்க வேலையை ஆரம்பிச்சுட்டாங்க! இதுக்குன்னே இருக்கும் ஒரு ப்ளாஸ்டர் காம்பவுண்ட் கலவையைச் சுவத்துலே அப்படியே அப்பிவிட்டுப் பூசறாங்க.

காலேல நம்ம முன்வாசக் கதவுக்கானப் பிள்ளையார்/யானை டிஸைன் செஞ்சு முடிஞ்சாச்சுன்னு லெட்லைட் கடையிலிருந்து ஃபோன் வந்தது. நேரம் கிடைச்சாப் போகணும்.

சாயந்திரம் போனப்பக் கடையை மூடியிருந்தாங்க! ஆனா, உள்ளே ஜன்னல் கட்டையில் அலங்காரமா உக்காந்துருக்கு. பார்கக நல்லாவே இருக்கு. கதவுக்கு ரெண்டுன்னு மொத்தம் நாலு. நாளைக்குக் கடை திறந்ததும் போகணும்.

5/11
எட்டு மணிக்குக் கிளம்பி நேரா 'கார்னிஸ்' cornice வாங்கப் போனோம். அவுங்க ( மான்ட்ரீயல் தெரு)இப்ப விக்கறதில்லையாம். இங்கே நம்ம ஊர்லே ஒரே ஒரு இடத்துலேதான் செய்யறாங்களாம். எந்த இடம் தெரியுமா? நம்ம 'தூண்' செஞ்சு கொடுத்தவுங்கதான்!ஆனா 'க்ளாஸ் ப்ரிக்' சின்னது ஒரு டாலர்ன்னு வச்சிருந்தாங்க! ஆசைக்கு ஒன்னே ஒண்ணு வாங்கினோம். கம்ப்யூட்டர்லே பதிவாகலேன்னு சும்மா எடுத்துக்கச் சொல்லுச்சு அந்தப் பையன். 50cent. இவர் ஒரு டாலரைக் கொடுத்து 'சாரிட்டி பாக்ஸ்' லே போடச் சொல்லிட்டாரு!

அங்கிருந்து நேரா, ஷார்ட் லேண்ட் ஸ்ட்ரீட் போய் கார்னிஸ், சீலிங் சென்டர் ( ரோஸ்) எல்லாம் தேர்ந்தெடுத்து ஆர்டர் கொடுத்துட்டு வந்தோம். மாடர்ன் டிசைன் வீடுகளில் கார்நீஸ் வைக்கறதில்லை. ஆனா இது வச்சாத்தான் ஒரு அழகும் அம்சமும் இருக்குன்னு எனக்கு எண்ணம். விக்டோரியன் லுக்! பூமாலைச் சரத்தில் அங்கங்கே ரிப்பன் முடிச்சுப் போட்டு வச்சுருக்கற டிஸைனைத் தேர்ந்தெடுத்திருக்கேன். எப்பவும் விழாக்கோலமா இருக்கட்டுமே. வீட்டுக்குள்ளே நுழைஞ்சவுடன் இருக்கும் ஃபோயரில் ஒண்ணும், ஃபார்மல் லவுஞ்சில் ஒண்ணுமா சீலிங் ரோஸ் வைக்கறோம். அதுலே இருந்து ஷாண்டிலியர்(!) தொங்கும்.


அப்படியே, முன்வாசக் கதவுக்கு யானை டிஸைன் பண்ணிவச்சிருந்தாங்கன்னு சொன்னேன் இல்லையா, அதையும் போய்ப் பார்த்தோம்.ரொம்ப நல்லா வந்திருக்கு!


பகல் ரெண்டரை மணிக்கு நடந்தே 'அங்கே' போனேன். லேண்ட்ஸ்கேப் ( ஹார்டு) வந்தார். எங்கெங்கே மண்ணை நிரவி, சிமெண்ட் போடணும்ன்னு சொன்னோம். எவ்வளவு செலவாகும்ன்னு பாத்துச் சொல்றேன்னுட்டுப் போனார். என்னை நம்ம இவர், வீட்டுக்குக் கூட்டிவந்து விட்டுட்டு ஆஃபீஸ் போனார்!


ஜிப் ஸ்டாப்பர்ங்க வேலையை ஜரூரா சீக்கிரமா முடிச்சுகிட்டு இருந்தாங்க! 3 கோட்டிங்கு போடணுமாம். லெவெல் 4 ன்னு சொல்றாங்க!

இன்னைக்கு 'கை ஃபாக்ஸ் டே'Guy Fawkes Day வாணவேடிக்கை பாக்க மகள் எங்ககூட வர்றேன்னு சொன்னதாலே அவளுக்கு இஷ்டமான 'புட்டு' சமைச்சேன். அவளும் இந்த டிஸம்பர்லே வீடு மாறணும் என்று சொல்லி, ஒரு வீடு, வாடகைக்குத்தான் பார்த்திருக்கா. அங்கே அதைப் பார்வையிடப் போகறதுக்கு முன்னாலே 'அங்கே' போனோம். இதுதான் மகள் முதல் முறையா இதைப் பார்க்கவர்றது! ஒரு வினாடி அப்படியே திகைச்சு நின்னாள்.

"இப்படி இவ்வளோ நல்லா இருக்குமுன்னு எனக்குத் தெரியாது"" ஏன்? பின்னே எப்படி இருக்குமுன்னு நினைச்சே? "" ரொம்ப சுமாரா இருக்குமுன்னு இருந்தேன்"

" அதான் ஏன்?"

" நீங்கதான் கஞ்ச(பிசுநாரி)ங்களாச்சே.."ஹா ஹா........... நம்மைப் பத்தின கருத்துக் கணிப்பு பார்த்தீங்களா!!! இது எப்படி இருக்கு:-)இவருக்கு ஒரே சந்தோஷம்! உள்ளே கூட்டிட்டுப்போய் எல்லா விளக்கமும் சொல்லி சுத்திக் காமிச்சார். அவளும் 'நாக்குலே நல்ல சுருள் கத்தி' வச்சிக்கிட்டுப் அவளோட கருத்துக்களைப்(!)பேசினாள்.எல்லா வருசமும் நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி 'கை ஃபாக்ஸ் டே' கொண்டாடறாங்க. இந்த 'கை ஃபாக்ஸ்' என்ற ஆள், 1605 ஆம் ஆண்டு, ப்ரிட்டிஷ் பார்லிமென்ட் கட்டிடத்தைத் தகர்ப்பதற்காகத் திட்டம் போட்டவர். ஆனால் திட்டம் நிறைவேறும் முன்பே, வெடி மருந்துடன் பிடிபட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். அந்த நாளையே ஆங்கிலேயர்கள், 'கை ஃபாக்ஸ்' தினமாகக் கொண்டாடுறாங்க. இந்த நாளுக்கு ஒரு வாரம் இருக்கும்போது, நியூஸியில் பட்டாஸ் விற்பனை உண்டு. அப்பக் கிடைக்கும் பட்டாஸை நாங்க வாங்கிப் பத்திரப்படுத்திக்கிட்டு, நம்ம தீபாவளிக்கு வச்சுக்குவோம். சுருக்கமாகச் சொன்னால் கை ஃபாக்ஸ், ஆங்கிலேயர்களின் 'நரகாசுரன்'!


சிட்டிக் கவுன்ஸில் பெரிய அளவுலே இந்த வாண வேடிக்கை நடத்தும். எல்லாம் ரொம்ப ஆர்கனைஸ்டு ஃபயர்வொர்க் ஷோ. கடற்கரையில் நடக்கும் இந்த கொண்டாட்டத்துக்கு சாயந்திரம் 7 முதல் இசைநிகழ்ச்சி உண்டு. கடைசியில் ஒம்போதரை மணிக்கு வாணவேடிக்கைத் தொடங்கும். என்ன......... இளையராஜா நிகழ்ச்சியா நமக்காக நடக்குது? அதான், சரியா பட்டாஸ் விடும் நேரத்துக்குப் போய்ப் பார்த்துட்டு ஓடிவந்துருவோம். இதுக்குன்னு ஒரு இடம் பார்த்து வச்சுருக்கோம். கடற்கரையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் இப்புறம். நல்ல மேடான இடம்.அங்கே இருந்து வா(ன)ண வேடிக்கை பார்த்துட்டுக் கடைசியா இடைவிடாம ஒரு பத்து நிமிஷக் காட்சி முடிஞ்சவுடன்,வேகமாக் கிள்ம்பிட்டோமுன்னா ட்ராஃபிக் ஜாம்லே இருந்து தப்பிச்சுடலாம்.
இன்னைக்கும் வழமை மாறாம இதைக் கடைப்பிடிச்சாச்சு:-)))))6/11
வழக்கம்போல கோயிலுக்குப் போறதுக்கு முன்னே வீட்டைப் போனோம். வாசக்கதவு பேப்பர் கிழிஞ்சு இருந்துச்சு. மத்தியானம் போய் ஒட்டணும்!கோயிலிலே சாமியைக் கும்பிட்டுக்கிட்டு அப்படியே 'ரெட் பாத்'ன்ற ஒரு எலக்ட்ரிக்கல் சாமான் விக்கற கடைக்குப் போனோம். கும்பிடப்போன தெய்வம் குறுக்கெ வந்த மாதிரி நம்ம 'கேரி' யை அங்கெ பார்த்தோம். லவுஞ்சிலே லைட் போடறதுக்கு செஞ்சிருக்கற துளைகள் சமதூரத்திலே இல்லாம இருக்கேன்னு நினைச்சென். கேரிகிட்டே சொல்லி அதை மாற்றி வைக்கச் சொன்னேன்.

மத்தியானம் போய் பேப்பரையெல்லாம் ஒட்டினோம். துளையை ஏற்கனவே வெட்டிட்டாங்கல்லையா? அந்த வெட்டுன வட்டத்தைத் தேடி மறுபடி டேப் போட்டு ஒட்டுனோம்! தப்புத் தப்பா வெட்டுனதை பூசறதுக்கு முன்னாலே ஒட்டிட்டா அசிங்கமாத் தெரியாது. இல்லேன்னா நானும் பட்டினத்தார்(?) மாதிரி மனுஷனுக்கு ஒன்பது ஓட்டை, இந்த வீட்டுக்கு ஒன்பதினாயிரம் ஓட்டைன்னு பாடவேண்டி இருக்கும். வீட்டைப் பூட்டிட்டு வந்துட்டோம். நாளைக்குப் போய் திறக்கணும்!7/11
சாயந்திரம் நானும் மகளும் போய், பக்கவாட்டுக் கதவைத் திறந்து வச்சிட்டு வந்தோம்.தொடரும்................

Tuesday, September 11, 2007

வீடு 'வா வா'ங்குது ! பகுதி 20

காலையிலெ இவரு மறுபடி இன்ஸ்பெக்ஷன் வந்த ஆளைப் பார்த்தாராம். என்னென்ன செய்யணும்ன்னு சொன்னாங்களாம். அந்த வேலையைத்தான் அங்கே இப்பக் க்ளீண்டன் செய்யறானாம். இவ்வளவு காசைப் போடறோம். ஒரு கத்துக்குட்டி அங்க வேலை செய்யுது!


இவரு சொன்னார் 'எல்லா ஓட்டையையும் நல்லதா மூடி பேட்ஸ் போடணும்ன்னு சொல்லியிருக்கேன்' பாக்கி எல்லாத்தையும் ப்ளாஸ்டிக் பையிலே போடுன்னு சொன்னா 'ஒரு மாதிரி தந்திரமா( இந்த சொல் உபயம் என் மாமியார்) சிரிக்கிறான். க்ரேக்கிட்டே சொல்லியாச்சுன்னா தலையை மறுபடி ஒரு மாதிரி ஆட்டுறான். மூக்குக்கு 'மாஸ்க்' இருக்கான்னா, இல்லையாம். நாங்க வாங்கித் தர்றோம்ன்னு சொன்னோம். இவர் போய் வாங்கிவந்து கொடுத்தார். பிங்க் பேட்ஸ் கண்ணாடி இழைன்றதாலே க்ளவ்ஸ் & டஸ்ட் மாஸ்க் முக்கியமாப் போட்டுக்கிட்டுத்தான் வேலை செய்யணும்.

லெட்லைட் 'பேட்' வந்து 'டிஸைனை'க்காட்டி எதுன்னு தெரிவு செஞ்சோம். அளவு எல்லாம் எடுத்தாங்க. காசு $550 ஆகுமாம்.

சாயந்திரம் 7 மணிக்குத்தான் போனோம். எல்லாக் கதவும் 'பா'ன்னு திறந்திருக்கு. வேலையை முடிச்சவங்க, மூடிக்கிட்டுப் போகக்கூடாதா?ஜன்னலை எல்லாம் திறந்து அப்படியெ போட்டு இருக்காங்க! எனக்கு ஒரே கோவம்.( அடக்கு அடக்கு)

ஜிப் போர்டுங்க வந்து இறங்கியிருக்கு. 7000$க்கு. யாரோ அதுமேலே நடந்து ஒண்ணை உடைச்சு வச்சிருக்காங்க! காசு மரத்துலெயா காய்க்குது?
நாங்களெ எல்லாத்தையும் மூடினோம். அப்பத்தான் கவனிக்கறோம், 5 இடத்துலே பேட்ஸ் போடவே இல்லை! இது எப்படி இருக்கு! ப்ளான் கொடுத்திருக்கோம். அதுலெ எல்லாம் விளக்கமா இருக்கு. அதைப் பாக்க வேணாமா? ஜிப் போடறதுக்கு முன்னாலே எல்லாம் சரிபாக்கணுமா இல்லையா? ரத்தம் கொதிக்குது! படுக்கை அறையிலே ஒரு பக்கம் மட்டும் பேட்ஸ் போட்டா குளிராதா? அங்கே வேற ஹீட்டிங் வராது! அந்தப் பையன் க்ளிண்டன் சரியான 'காம் ச்சோர்' நல்லா தூங்கிட்டு, ப்ரிக்கிங்க வாயைப் பாத்துக்கிட்டு இருந்துட்டு ஒரு வேலையும் சரியாச் செய்யாமப் போயிருக்கான்.

அவனைச் சொல்லி என்ன பிரயோஜனம்? அவன்கிட்டெ, கிரேக் இல்லே பக்கத்துலெ இருந்து வேலை வாங்கணும்! இவன் ஆள் இருந்தா ஒரு மாதிரி, ஆள் இல்லைன்னா ஒரு மாதிரி வேலை செய்யறான். சின்னப் பசங்களை வேலைக்கு வச்சா இப்படித்தான். இந்தப் பையனுக்கு அந்த 'ட்ராயிங்' படிக்கத் தெரியுமான்னே எனக்குத் தெரியலை! படிப்பு ஏறாததுங்கதானே இந்த வேலைக்கு வருதுங்க. இங்கே 'ட்ரேட்' சொல்லிக் கொடுக்கற இடத்துலெயும் ஒரு கண்டிப்பும் கிடையாது எது எப்படிச் செஞ்சாலும் 'க்ரேட்'ன்னு இளிச்சிருவாங்க.
வாங்கற கூலிக்கு நியாயமா வேலை செய்யணுமா இல்லையா? வயிறு எரிஞ்சு போச்சு! 'சாபம்' விடறதுக்கு வாய் துடிக்குது! இதென்ன ஆம்லெட் போடற மாதிரியா? ஒண்ணு தீஞ்சுட்டா வேற போட்டுக்கறதுக்கு? வீடு கட்டறது எவ்வளவு பெரிய ப்ராஜக்ட்? எல்லாம் சரி பாக்க வேணாமா? ஒன்னுக்கு பத்து தடவை செக் செய்யணுமா இல்லையா?

நம்ம ஊர்லே இருக்கற வேலை ஆளுங்களுக்கும் இதுங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை. சரி. வித்தியாசம் இருக்கு. ஒத்துக்கறென் .எதுலே? தோல் நிறமும், பேசற பாஷையும்தான்! எல்லாம் 420ங்க!

வீட்டுக்கு வந்து மறுபடி பில்டருக்கு ஃபோன் போட்டு விஷயத்தைச் சொன்னோம். அவருக்குப் பிடிக்கலை போல. நாளைக்கு காலையிலெ7.30க்கு வரேன்னார். இன்னும் அடுக்களை பக்கத்துலெ ஃபீச்சர் வால்' சரிபண்ணலே! நாளைக்குக் காலேல போய் எல்லாம் சொல்லிச் சரி செய்யணும்! எனக்கு நானே சொல்லிக்கறேன், 'ஆத்திரப்பட்டுக் கத்தக்கூடாது'. நமக்கு வேலை ஆகணும். 'காரியம் ஆறவரைக்கும் கழுதைக் காலையும் பிடிக்கணும்'ன்னு பழமொழி இருக்கே!

27/10
பாவம்! இவருதான் காலையிலே 6 மணிக்கே எழுந்து ரெடியாயிட்டாரு. என்னை வரவேணாம்ன்னு சொல்லிட்டாரு. ஊஞ்சலுக்கு 'க்ளாம்ப்' செஞ்சு வந்திருச்சாம். அதை ஆஃபீஸ்லேயே வச்சிட்டாராம் அதைக் கொண்டுபோய் போட்டுடறேன்னு சொல்லிப் போனாரு! ஜிப் போடறதுக்கு முன்னாலெ இந்த வேலை முடியணுமே! 250 கிலோ கனம் தாங்குமாம், ஒவ்வொண்ணும். நான் அரை டன் எடையா இருப்பேன்?

எனக்கு ஒரே கவலையா இருக்கு! இவருக்கு அவ்வளவு பலம் இல்லே. 'வெஜிடேரியன்' இல்லைதான், ஆனாலும்....! அப்புறம் கைக்கு ஏதாவது செஞ்சுக்குவாரோ, மேலே ஏறும்போது ஏதாவது நடந்துருமோன்னு ஒரே பயம் ! ஏன்னா இவருதான் நம்ம வீட்டு 'டிம் த டூல் மேன், ஆக்ஸிடண்ட் ப்ரோன்' ஆளு!

போல்ட்டை நல்லா முடுக்கணுமே, ஊஞ்சல் கனத்தைத் தாங்க வேணாமா? கவலையா இருக்கு. மனசு சமாதானமெ இல்லை.அங்கிருந்து ஃபோன் செஞ்சாரு. 'க்ளாம்ப்' போட்டுட்டாராம்! பில்டரும் அந்தப் பையன் க்ளிண்டனும் வந்து வேலையை ஆரம்பிச்சிருக்காங்களாம்!

'க்ளாஸ் ப்ரிக்' இல்லவே இல்லை. மண்ணுதான்! எரிச்சலா இருக்கு! இவரு வேற கோவமா மூஞ்சை வச்சிகிட்டு இருக்காரு. ஒருவேளை நான் வாயைத் திறக்காம இருக்கறதுக்காக இவரு இப்படி நடிக்கறாரோ? பாருங்க என் குரங்கு மனசு என்னெல்லாம் நினைக்குதுன்னு(-: ' ஃபீச்சர்வால் ஷெல்·ப்' ப்ளான் கொடுத்திருக்காராம்! எப்படி வருமோ?

28/10
என்ன வேலை நடந்துச்சுன்னே தெரியலை. செங்கல்லு இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு. வீட்டுக்குப் பின்னாலே முடிச்சுட்டாங்க. பிரதான வாசலுக்கு முன்னேயும், ஸ்டடிக்கு பக்கத்துச் சுவரும் கொஞ்சமே கொஞ்சம் வேலையை முடிக்காம விட்டிருக்காங்க!

29/10
'ஜிப் GIB' போடற ஆளுங்க அஞ்சாறுபேர் வந்திருக்காங்களாம்! சாயந்திரம் போனோம். ஃபிஜியிலிருந்து அமீத், மஹேஷ் பையா' வந்திருந்தாங்க. அவுங்களையும் கொண்டுபோனோம். உள்ளெ போனா, ஜிப் ஏறக்குறையப் போட்டு முடிச்சுட்டாங்க! இன்னும் கொஞ்சம்தான் பாக்கி! ஒரே நாளுலே 95% வேலையை முடிச்சிருக்காங்க! இதே வேகத்துலே எல்லா வேலையும் நடந்தா இன்னும் 4 வாரத்துலே முடிஞ்சிடுமே! இப்பப் பாக்கறதுக்கு ரொம்ப நல்லா இருக்கு!

உள்ளே ஜிப்ஸம் நிறைச்ச போர்டுகளை (gypsum plaster board) ஜிப்ன்னு சொல்றாங்க. அதை மரச்சட்டங்களா நிக்கும் வீட்டு உள்புறத்தில் வச்சு மூடிக்கிட்டே வராங்க. ரெண்டு போர்டை இணைக்கும் இடத்தில் வலைமாதிரி ஒரு அகலமான டேப் போட்டு ஒட்டறாங்க. வேணுங்கற அளவை அறுத்துப் போட்டுக்கிட்டே போறாங்க. வேலை பரபரன்னுதான் நடக்குது. Drywalls சிஸ்டம்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. இந்த போர்டும் மூணு விதமா வந்துருக்கு. பாத்ரூம் பக்கம் வர்றதுக்கு தண்ணியாலே பாதிப்பு இல்லாம இருக்கும் ரகமாம். GIB Aqualine , GIB Noiseline , GIB Fyreline இப்படி மூணு வகை.

30/10
காலையிலே கோவில் போறதுக்கு முன்னாலே போனா, அடிக்கற காத்துலே ஜன்னல் மறைப்பு எல்லாம் விழுந்து கிடக்கு! வாசக்கதவுலே நாங்க ஒட்டி வச்ச பேப்பரை எல்லாம் காணோம்!

ஒரு மாதிரி 'அட்ஜஸ்ட்' செஞ்சு வச்சிட்டு வந்தோம். மத்தியானம் திரும்ப வந்து எல்லாம் சரி செஞ்சு ஒட்டணும்! நாங்க எடுத்துவச்ச பிங்க் பேட்ஸ் பைங்க ஒண்ணையும் காணோம்! ஸ்டடி ரூம் கதவை மாத்திப் போட்டிருக்கறதை இப்பத்தான் கவனிச்சோம். லிவிங்லே இருந்து லாண்டரி போற கதவை இங்கே மாத்திப் போட்டிருக்காங்க! இது ஒரு ஸ்பெஷல் கதவு. நம்ம பூனைகளுக்கு டெடிகேட் செஞ்சது.

லவுஞ்சுக்குப் போற கதவுலே என்னவோ தகராறு. மூட வராம இடிக்குது! என்னன்னு பாக்கணும்!

சமையல் அறைக்கு 'டைல்ஸ்' மாதிரிகள் கொண்டுவந்தோம். கலர் சரியில்லேன்னு மகள் சொன்னாள். எங்களுக்குப் பிடிச்சிருக்கு. முக்கியமா விலை குறைவு! எதுக்கும் கிச்சன் கிங் கிட்டே கேக்கணும்!

31`/10
வீட்டுக்கு சோஃபா வாங்கணுமே! இங்கே ஒரு புதுக்கடை 'பாலி (Bali)' திறந்திருக்காங்க, அங்கே தேக்கு மரத்துலே செஞ்சது ஒன்ணு ரொம்பநல்லா இருக்கு. யோசிக்கணும். அங்கே ஒரு 'பூனைப் பிச்சைக்காரன் பொம்மை' இருக்கு! நம்ம ஜிகே மூஞ்சியேதான். கையிலே பாத்திரம் ஏந்திப் பிச்சை கேக்கறமாதிரி நிக்குது! பரிதாபமா இருக்கு! வாங்கலாமான்னு பாக்கறேன்!

இன்னும் என்னென்ன வேலை பாக்கின்னு இவர் ஒரு லிஸ்ட் போட்டார். நாலு மாசம் முடியுது. வேலை ரொம்பவே மெதுவா நடக்குது!
மத்தியானம் நம்ம வீட்டுக்கு ( 311லே) எதிர் வரிசையிலே இருக்கற 'பவர் ஸ்டோர்' போனோம். அங்கே 12% கழிவு மற்றும் 12 மாசத் தவணையிலே வட்டியில்லாம சாமான்கள் தராங்களாம்!

நமக்கு வேணும்ன்னு முடிவு செஞ்சிருக்கற 'டிஷ் வாஷர்' விலை குறைவா கிடைக்குமான்னு பாக்கணும். ஏற்கனவே 'ஃ பார்மர்ஸ்' கடையிலே $1213.52 ( ஜஸ்ட் ஃபார் ஒன்)க்கு தரேன்னு சொல்லியிருக்காங்க! ஆனா தவணைன்னா வட்டி கட்டணும். இங்கே முதல்லே 1250ன்னு சொன்னாங்க (12% கழிவு) அப்புறம் ஃபார்மர்ஸ்லே எழுதி வாங்கினதைக் காமிச்சோம். அதை ' பீட் பண்ணறோமுன்னு $1200க்கு தரேன்னு சொல்லிட்டாங்க! நமக்கு இன்னும் 3 வாரம் கழிச்சுதான் வேணும்ன்னு சொன்னோம். அப்ப இருந்து கணக்கு வச்சுக்கறோம்ன்னு சொன்னாங்க!சாமான் எடுக்கறப்ப $350 கட்டணும். மீதி மாசம் 176 கட்டுனாப் போதும்! நல்ல 'டீல்'தான்!
அடுக்களையிலே கூடியவரை இருடியம் வகையா போடணும்.அப்பத்தான் ஒண்ணுக்கொண்ணு பொருத்தமா இருக்கும். நமக்கு டபுள் டிஷ் ட்ராயர். ஒண்ணுங்கீழ் ஒண்ணுன்னு இல்லாமத் தனித்தனியா அடுக்களை சிங்குக்கு ரெண்டு பக்கத்திலும் போடணும். முதுகுக் குனியாம பாத்திரம் போட, எடுக்கன்னு இந்த ஏற்பாடு. (நான் ஒரு வளையாபதி. உடம்பை வளைக்க மாட்டேன்............) இப்பத்தான் கவனிக்கிறோம் அடுக்களையில் தப்பான இடத்தில் 'வெண்ட்' ஓட்டை போட்டு வச்சுருக்காங்க.

சாயந்திரம் மறுபடிப் போய் கண்ணாடி ஸ்லைடிங் கதவு பூட்டை மட்டும் திறந்து வச்சிட்டு வந்தோம், காலையில் வேலைக்கு வருவாங்களேன்னு.

1/11
ஜிப் ஆளுங்க வேலைக்கு வரலே! ஒரு நாளு வந்தா ஒம்பது நாளு மட்டம்! அது என்ன வேலை சிஸ்டமோ? பில்டர் மட்டும் வந்து முகப்பு வேலை செய்துகிட்டு இருக்காராம்! அது முடிச்சாதான் மீதி செங்கல்லு வைக்கணுமாம்!

கதவுங்க மாறிடுச்சுன்னு சொன்னேன் இல்லையா? அதுங்களை மாத்தி வச்சு இருந்தது. லவுஞ்சு கதவை சரி செஞ்சிருக்காங்க. ஆனாலும் கரெக்டா இல்லாத மாதிரி ஒரு தோணல். 'கேவிடி டோரும்' கொஞ்சம் சரி செய்யணும்.
கைப்பிடி குமிழ் எங்கே இருக்கணும்ன்னு அளந்து குறிச்சு வச்சிட்டு வந்தோம். வார்டுரோப் அளவு எடுத்தோம்.

மனசு ஒண்ணும் சரியில்லே. கொடுக்கற காசுக்குத் தகுந்த வேலைங்க நடக்கறது போல இல்லே! கடவுள் தான் பாக்கணும்!தொடரும்..............

Monday, September 10, 2007

இது என்ன?

பழம் தின்னு 'கொட்டை' போட்டதில் விளைஞ்சது.


வந்தது வந்தீங்க, அப்படியே இந்தப் பூவின் பெயரையும் சொல்லுங்க.
உங்களுக்குத் தெரியுதான்னு பார்க்கலாம்.

-----------

காலையில் நாள்காட்டியின் தாளைக் கிழிச்சதும் கண்ணில் பட்டது.........

இன்று நம் முண்டாசின் நினைவுநாள்.

மகா கவிக்கு மனமார்ந்த அஞ்சலிகள்.