Friday, March 30, 2012

சண்டிகரின் பல சனிகளில் ஒரு சனி

வடக்கே போகப்போக சனிகளின் ஆதிக்கம் அதிகமா இருக்குமுன்னுதான் தோணுது. இல்லேன்னா ஏன் இப்படி அநேகமா எல்லாக் கோவில்களிலும்? நம்ம பக்கங்களில் பாருங்க.... முக்கியமா எல்லா சிவன் கோவில்களிலும் நவகிரக சந்நிதிகள் இருந்தாலும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு திருநள்ளாறில் தனிச்சந்நிதியா வச்சுருக்காங்க.

சண்டிகர் நகரில் நான் பார்த்தவரை சிவன் கோவில், பெருமாள் கோவிலுன்னு தனித்தனியாக் கோவில்கள் இல்லை. பெயர் மட்டும், ஷிவ் மந்திர், லக்ஷ்மிநாராயண் மந்திர் இப்படி வச்சுருந்தாலுமே கோவில்களுக்குள் நுழைஞ்சோமுன்னா அநேகமா ராதா கிருஷ்ணர், சீதையுடன் ராமர்& கோ, அனுமார். புள்ளையார், சிம்ஹவாஹினியா அம்பாள், சந்த்ரகண்டா, க்ருஷ்மாண்டா, ஷைலபுத்ரி, ப்ரஹ்மச்சாரிணி, ஸ்கந்தமாதா, காத்யாயனி, மஹாகௌரி, ஸித்திதாத்ரி, காலராத்ரி பல பெயர்களில் அஷ்ட மாதாக்கள்சண்டிகரில் இருக்கும் ஒரே ஒரு தென்னிந்தியக் கோவிலான ஶ்ரீ கார்த்திகேயஸ்வாமி கோவிலிலும் அனுமன், மகாவிஷ்ணு சந்நிதிகளும் தென்னிந்திய ஸ்டைலில் ஒரு மேடையில் நவகிரஹங்களும் உண்டு.

யார் யாருக்கு எந்த சாமி விருப்பமோ அதைக் கும்பிட்டுக்கோ என்ற சுதந்திரம்தான்!எல்லாக் கோவில்களிலும் ஒரு பக்கத்துலே கோபுரத்துக்கான இடத்தில் பெரிய சிவலிங்கம். சட்னு பார்த்தால் வாட்டர் டேங்கோன்னு இருக்கும்!! அதுக்குக்கீழே தனி அறையில் தரையில் பதித்த சிவலிங்கம். இங்கெல்லாம் நாமே இறைவனுக்கு அபிஷேகம் செஞ்சுக்கலாம் என்றபடியால் மக்கள்ஸ் செம்பில் நீர் மொண்டுவந்து லிங்கத்தின்மேல் ஊற்றியபடியே இருப்பாங்க. வீட்டில் இருந்து செம்பு தூக்கிப்போகணும் என்பதில்லை. கோவிலிலேயே செம்புகள் (லோட்டா) வச்சுருப்பாங்க.

சனி பகவானுக்காக தனியா கருப்பு டைல்ஸ் பதிச்ச சின்ன அறை. சாமி சிலை இருப்பதுகூடச் சட்னு கண்ணுப் புலப்படாது. அப்படி ஒரு டார்க் ரூம். சின்ன விளக்கு முணுக் முணுக்ன்னு எரிஞ்சால் பிழைச்சோம். சனிக்கிழமைகளில் மட்டும் அபாரக்கூட்டம். சனி என்றால் பயம்.

கிட்டத்தட்ட 60 வயசாகும் இந்த ஊரை நிர்மாணிக்கும் போதே சமூகக்கூடங்கள், தோட்டங்கள். பார்க்குகள், விளையாட்டுத்திடல்கள், வழிபாட்டுத்தலங்கள், பள்ளிகள் இப்படி இடம் அங்கங்கே ஒதுக்கி விட்டுருக்காங்க. அதனால் இங்கே மேற்படி சமாச்சாரங்கள் எல்லாத்துக்குமே கூடிவந்தால் அறுவது வயசுக்கு மேல் இல்லை.

நாம் இருந்த செக்டரில் ஒரு குருத்வாரா மட்டும்தான். பக்கத்து செக்டரில்( 20) மார்கெட், ஷாப்பிங் பகுதியை ஒட்டி ஒரு இடம் கோவிலுக்கு ஒதுக்கியதில் அங்கே ரெண்டு கோவில்கள் உருவாச்சு. அடுத்தடுத்து என்பதால் ரெண்டுமே ஒரே வளாகத்தை பார்க்கிங் ஏரியாவா வச்சுருப்பதால் நமக்கும் போய்வர வசதி.
அதுலே ஒன்னுதான் லக்ஷ்மிநாராயணன் கோவில். இங்கே மற்ற கோவில்களைப்போல் இல்லாமல் 'ஷனி மந்திர் ' கொஞ்சம் விசாலமான இடத்தில் அழகாக் கட்டி இருக்காங்க. ஒரே வளாகம் என்றாலும் இது தனிக்கட்டிடம். நல்ல வெளிச்சமுள்ள சந்நிதி. படிக்கட்டில் தொடங்கி எல்லாமே கருப்பு. வலம்வரும் வகையில் ஒரு பிரகாரம்.


காக்கை வாகனத்தில் ஜம்முன்னு சனி அமர்ந்திருக்கும் படம். இன்னொரு படத்தில் .....பாவம்...அந்தக் காக்கா. இவ்ளோ பெரிய உருவத்தைத் தேருடன் எப்படி இழுக்குமோ........
படிகள் ஏறி சந்நிதிக்குள் போனால்.... எருமை (ஒருவேளை கருப்புக் காளையோ?)வாகனத்தில் சனி! இந்தப் பக்கம் நாலு, அந்தப்பக்கம் நாலுன்னு பாக்கி உள்ள எட்டு கிரக நாயகர்கள். . எல்லோரும் எல்லோரையும் பார்த்தபடி!!!!
விசாரிச்சதில் அது எருமைதானாம். சூரியனுக்கும் அவர் மனைவி ச்சாயா தேவிக்கும் பிறந்தவர். யமனுக்கு அண்ணனாம். (அதான் தம்பியின் காரை இரவல் வாங்கி இருக்கார் போல!)

ஐயோ....இதென்ன புதுக்குழப்பம்? நம்மூர்லே எமன், தருமதேவதையின் மகன் என்றுதானே சொல்வாங்க??? ஒருவேளை சனிக்கு இவர் கஸின் ப்ரதரா இருப்பாரோ?

அங்கே இங்கேன்னு கொஞ்சம் துருவுனதில் சில தகவல்கள் கிடைச்சது. சூரியனுக்கு ரெண்டு மனைவிகள். முதல் மனைவி உஷா தேவிக்குப் பிறந்தவர் யமன். ரெண்டாம் மனைவி ப்ரத்யூஷாவுக்குப் பிறந்தவர் சனி.

ஒரு சமயம் யமனுக்குக்கோபம் வந்து சனியை எட்டி உதைச்சதால் சனிக்குக் காலில் அடி. அதனால் கொஞ்சம் விந்திவிந்திதான் மெதுவா நடப்பாராம். அதனால் சனீச்சரண் என்ற பெயர் காலப்போக்கில் சனீஸ்வரன் என்றாகி இருக்கு. ஒருவிதத்தில் இதுகூட சரிதான். ரொம்ப பவர்ஃபுல். பிடிச்சால் சட்ன்னு விலகாது. குறைஞ்சபட்சம் ஏழரை வருசம்!

சனியின் சிறப்புக்கள் என்று 'இந்த வீட்டில் இருந்தால் இந்தப் பரிகாரம்' ' இப்படி வரிசையா இருக்கும் பட்டியல் ஒன்னு வலையில் பார்த்தேன். ஒன்பதாம் வீட்டில் இருந்தால் மொட்டை மாடியில் புல் வளர்க்கக்கூடாதாம்!!!!!!!!!!!!!!!

ஆனால் ஒன்னு சனியைப்போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை என்று சொல்லக் கேட்டுருக்கேன்.

கொடுக்கணுமுன்னா நல்ல பதிவுகள் எழுத வரம் கொடுன்னு வேண்டிக்கலாமா?

PINகுறிப்பு: பக்கத்துக் கோவிலைப் பற்றி இன்னொருநாள் பார்க்கலாம். உண்மையா அந்தக் கோவிலைப்பற்றி எழுத வந்து ....... இப்படி ...... ஹூம்.... சனி முந்திக்கொண்டது:-))))

Tuesday, March 27, 2012

கொன்னிச்சிவ்வா.... கொலுவுக்கு வா!!!

நாங்க வழக்கமா எல்லா ஞாயிறும் ரேஸ் கோர்ஸ் போவோமுன்னா நீங்க நம்பமாட்டீங்கதானே? நம்மூர் குதிரைப் பந்தய மைதானம், ரிக்கர்டன் பார்க் என்ற பெயரில் ஏகப்பட்ட இடத்தை வளைச்சுப் போட்டுருக்கு. இதுக்கு வயசு 150 வருசம். கிறைஸ்ட்சர்ச் நகர் உருவானபோதே கூடவே சேர்ந்துக்கிட்டதுதான். மனுசன் குடியேறும்போதே குதிரை ஓட்டமும் வந்துருக்கு.

வருசத்துக்கு அங்கே 20 நாட்கள் மட்டுமே குதிரைப் பந்தயங்கள் நடக்கும். பாக்கி நாட்கள் எல்லாம் சும்மாக் கிடக்கறதுதான். ஒரு இருபது வருசத்துக்கு முன்னே எந்தப் புண்ணியவானோ இதை நம்ம மக்களுக்கும் சமூகத்துக்கும் பயன்படும்படியா ஆக்கலாமேன்னு யோசிச்சதில்......
முழுக்கட்டிடத்தையும் புனரமைச்சு மாடியில் பந்தயம் பார்க்க கேலரிகள்.கீழே ஏழு ஹால்கள் அமைச்சுட்டாங்க. எல்லா ஹால்களுக்கும் குதிரைப்பந்தய சம்பந்தமுள்ள பெயர்கள். ஃபாப்லேப்( Phar Lap) என்ற பெயரில் ஒரு ஹால் இருக்கு. இது நியூஸிக் குதிரை. அண்டைநாடான அஸ்ட்ராலியாவில் ஏகப்பட்டப் பந்தயங்களில் கலந்து சரித்திரம் படைச்சது. ஆனால் ஆறே வயசுலே சாமிகிட்டே போயிருச்சு. எதிரிகள் விஷம் வச்சுட்டாங்கன்னு அப்போ பெரிய புரளியா இருந்துச்சு. நெருப்பில்லாமல் புகையுமா? கடைசியில் அதுதான் உண்மை:( குதிரை இறந்து 76 வருசம் ஆனபிறகு நிபுணர்கள் கண்டு பிடிச்சுட்டாங்க.

ஃபார்லேப்பின் (எதையும் தாங்கும்) இதயம் அஸ்ட்ராலியா (கென்பரா) தேசீய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுருக்கு. அதன் தோலை மட்டும் எடுத்து நியூயார்க் சிடி டாக்ஸிடெர்மிஸ்ட் ஒருத்தர் அசல் குதிரை செஞ்சு கொடுத்துட்டார். மெல்பேர்ண் கப் ரேஸ் ஆரம்பிச்சு 150 வருசம் ஆச்சுன்னு அந்தக் கொண்டாட்டத்துக்குக் கடன் வாங்கிட்டு போயிருக்காங்க. இப்போ மெல்பெர்ண் ம்யூஸியத்துலே உயிர்ப்புடன் நிக்குது. (மனுசன் தோல்தான் எதுக்கும் லாயக்கில்லை) எலும்பை மட்டும் ஏன் விட்டுவைப்பானேன்னு முழு எலும்புக்கூடும் நியூஸி வெலிங்க்டன் மியூஸியத்துலே! தன் மறைவுக்குப்பிறகு கூட மூணு இடத்தில் நினைவுச்சின்னமா நிக்குது பாருங்க.
இங்கே பொதுவா சனிக்கிழமைகளில்தான் குதிரைப் பந்தயங்கள் நடக்கும். அதுவும் கடுங்குளிர் காலங்களில் ரெண்டு மாசத்துக்கு இருக்காது. 345 நாட்கள் காலியாவேக் கிடக்கும் கார்பார்க், அதைச்சுற்றியுள்ள இடங்களையெல்லாம் இப்போ ஒரு பதினைஞ்சு வருசமா ரோட்டரி க்ளப் மார்கெட் நடத்திக்க விட்டுட்டாங்க. அதான் எங்கூர் சண்டே மார்கெட். சொன்னா நம்ப மாட்டீங்க... ஒரு காலத்துலே இந்த மார்கெட் . நம்மூட்டுக்கு முன்னால் இருந்த ஷாப்பிங் செண்டர் கார்பார்க்குலேதான் ஆரம்பிச்சாங்க. நானும் குக்கர் ஆனதும் அரைமணி நேரம் நீராவியெல்லாம் அடங்கவிட்டுட்டு சாலயைக்கடந்து போய் மார்கெட்டை வேடிக்கை பார்த்துட்டு வருவேன். இப்ப மார்கெட் ரொம்ப விரிஞ்சுக்கிட்டே போய் சவுத் ஐலண்ட்லே பெருசுன்னு டூர்ஸ்ட் மேப்லே இருக்கு, லண்டன் போர்ட்டபெல்லா ரோடு மார்கெட் மாதிரி:-))))

நாங்களும் ரேஸ்கோர்ஸ் சமீபமாவே வீடு கட்டிக்கிட்டு வந்துட்டதால் சண்டே மார்கெட் சுத்தறதை இன்னும் விடலை:-)

கார்பார்க் இப்படி தரும காரியத்துக்குன்னு விட்டதைப்போல பந்தய மைதானப் புல்வெளிகளில் போலீஸ் நாய்களுக்கும். போதைமருந்து கண்டுபிடிக்க உதவும் நாய்களுக்கும் பயிற்சி கொடுக்கவும் இடம் தர்றாங்க. கட்டிடத்துக்குள்ளே இருக்கும் ஹால் வசதிகளை சமூகக்காரியங்களுக்கும், தனிப்பட்ட விழாக்களுக்கும், பார்ட்டிகளுக்குமுன்னு வாடகைக்கு விடறாங்க.
அப்படி ஒரு விழாவுக்கு ரெண்டு வாரம் முந்தி போய்வந்தோம். ஜப்பான் சுநாமி 2011 நடந்த முதலாம் ஆண்டு நினைவு விழா. கட்டிடங்களுக்கு முன்னே இருக்கும் பரந்த வெளிகள் பூராவும் கூடாரங்கள் போட்டுச் சாப்பாட்டுக்கடைகளா இருந்துச்சு. கால் வைக்கக்கூட இடம் இல்லாம இவ்வளோ கூட்டமான்னு ஆச்சரியம்தான்! இன்னிக்கு ஞாயிறு .... அதான் வழக்கமா மார்கெட் வரும் கூட்டமும் இங்கே எட்டிப் பார்த்துட்டுப் போகுது!

அவுங்க கலர் சிம்பிளா சிகப்பும் வெள்ளையும் என்றதால் ரைஸ் பேப்பரில் குண்டு குண்டு அலங்கார தோரணங்கள் கட்டிவிட்டுருக்காங்க. சிமபிள் அண்ட் ஸ்வீட்! டகொயாகியைப் பார்த்ததும் பிடிச்சுப்போச்சு. அதை வாங்க பெரிய வரிசை காத்து நின்னது. எனக்கு அதை ருசிக்கவேணாம். சுட்டெடுக்கும் பாத்திரம்தான் அள்ளிக்கிட்டு போகுது மனசை. சமயத்துக்குப் பல்லாங்குழி கூட ஆடிக்கலாம் அது இருந்தால்! எல்லாம் நம்ம குழிப்பணியாரச்சட்டிதான். 28 பணியாரம் ஒரே சமயம் சுட்டு ஜமாய்க்கலாம். இங்கே அஞ்சுவரிசை வச்சு ஒரு ஈடு 140 பணியாரம் சுட்டுப்போட்டுக்கிட்டே இருக்காங்க. ஆனாலும் வரிசை குறைஞ்சபாடில்லை!
ஒஸாகா பேன்கேக், சூஷி, இரால்மீன் வரிசைகளைக் குச்சியில் சக்கரம் சக்கரமா குத்தி வச்ச வகைகள், துருவுன ஐஸ், அப்புறம் வாயிலே நுழையாத பெயர்களில் பலவகைன்னு சமைக்க அவுங்களும், வாங்கி ருசி பார்க்க நம்ம மக்களும் அசரலையே!!!!
ஒரு பக்கமா மேடை ஒன்னு. அதை வரும்போது , கவனிக்கலாமுன்னு கட்டிடத்துக்குள்ளே போனோம். விழாவைப்பற்றிய விவரங்கள், ஒரு விசிறி எல்லாம் கொடுத்து அன்பான வரவேற்பு. பக்கத்துலே அட்டகாசமான ஒரு கொலு! எட்டுப்படிகள்! (ஐய்ய.... ஒத்தப்படையா வச்சுருக்கக்கூடாதோ?) மாட்டுவண்டி ஒன்னு சூப்பர்!

இடதுபக்க ஹாலில் சுநாமி அழிவுகள் படங்கள். பார்க்கும்போதே மனக்கஷ்டமாப் போச்சு. அதையும் எவ்வளோ சிக்கிரமா க்ளியர் செஞ்சு மறுவாழ்வுக்கு வேகமா வந்துட்டாங்க. அதைப் பாராட்டத்தான் வேணும். நாங்க ..... இன்னும் நிலநடுக்க அழிவுகளை முழுவதுமா அப்புறப்படுத்தலை. ஒவ்வொரு பெரிய கட்டிடத்தையும் ஒவ்வொரு மாடி பை மாடியா எடுத்துக்கிட்டு இருக்கோம். ஒரு கட்டிடத்தை முழுசும் எடுக்க நாப்பதைஞ்சு வாரம். அறுபது வாரம் இப்படிக் கணக்குச் சொல்லி வேலைகள் நடக்குது. சுத்தி வலை அடிச்சுட்டு அண்டர் க்ரவுண்டில் பாம் வச்சுத் தகர்க்க மாட்டாங்களா? எத்தனை படத்துலே பார்த்துருக்கோம்.? அது என்னமோ இவுங்க டெக்னிக் வேறமாதிரி இருக்கு. எதாவது காரணம் இருக்கலாம்)
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், பேங்க் ஆஃப் நியூஸி, கோல்ஃப் விளையாட்டுக்கான குச்சிகள்ன்னு காசு பார்க்க சில நிறுவனங்கள் அங்கொன்னும் இங்கொன்னுமா இருக்க, ஜப்பானின் பாரம்பரிய உடைகளில் குட்டிப்பசங்க உலாத்திக்கிட்டு இருந்தாங்க. விசிறி செருகிவச்சுக்க வாகா இருக்கு. பேசாம என் விசிறியையும் கொஞ்சநேரம் வச்சுக்கச் சொல்லலாமா?

வலப்பக்க ஹாலில் இகபானா கலையின் மலர் அலங்காரங்கள் வரிசை கட்டி இருக்க ஒரு பக்க சுவரில் சுநாமியில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபச் செய்திகளை அந்நாட்டுக் குழந்தைகள் எழுதியும் வரைந்தும் அனுப்பியவைகளை ஒட்டிவைத்திருந்தனர். ஜப்பான் மொழியில் சில சொற்களை எழுத நமக்குச் சொல்லிக்கொடுத்த வகையில் நான் ஆடுன்னு எழுதினேன்:-))))) எழுதிய காகிதத்தை நமக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார்கள். இப்ப நம்ம ஆடு வீட்டில் புத்தக அலமாரிக்குப் பக்கத்தில் நிக்குது:-)


இந்த ஹால் கொஞ்சம் பெருசுன்றதால் ஒரு பக்கம் டீ ஸெரிமனி, இன்னொரு பக்கம் ஜூடோ சண்டையின் டெமோ, காகிதத்தில் பொருட்களை வடிவாக்கும் ஒரிகாமி இப்படி கண்ணுக்கும், விருப்பம் இருந்தால் நம் கைகளுக்கும் சின்னச்சின்ன விருந்துகள். யாழ் போல ஒரு நரம்பு இசைக்கருவி இருந்துச்சு. மீட்டிப்பார்த்தேன். அட! எனக்கும் வாசிக்க வருதே:-))))
ஜப்பான் நாட்டுக்கும் மக்களுக்கும் நாம் செய்தியோ வாழ்த்தோ, பாராட்டோ எழுதித் தரலாமாம். கிடைச்சதை விடாம தமிழில் ரெண்டு சொற்களை எழுதிக்கொடுத்தேன். என்னாலான தமிழ்ச் 'சேவை' ' பு(ழி)ரிஞ்ச திருப்தி கேட்டோ:-) பக்கத்துலே நின்னவர் ஐடியாவைக் காப்பி அடிச்சுட்டார், அவருடைய மொழியில்:-)))

வெளியே மேடையில் அலிபாபா ட்ரம் போல ஆள் ஒளிஞ்சுக்கும் அளவில் பெரிய ட்ரம்ஸ் அஞ்சு கொண்டுவந்து அடுக்குனாங்க. ஆரம்பிச்சது. அடி! தூள் கிளப்புனாங்கன்னுதான் சொல்லணும். நடுநடுவில் ஆள் உண்மையாவே ஒளிஞ்சாங்கப்பா!!! அநேகமா ஒரே உயரம், ஒரே வயசு, வாசிப்பும் ஒரே ஸ்டைலுன்னு அட்டகாசமான அடி!!!! உங்களுக்காக ரெண்டு பிட் போட்டுருக்கேன் பாருங்க:-))))) குழிப்பணியாரக் க்யூ குறைஞ்சபாடில்லை. ஜில்லாலிபில்லாலின்னு நகைநட்டு சமாச்சாரம் ஒரு பக்கம். இருக்கட்டும். 24 கேரட் பாழாப்போகுது:-))))


வழக்கத்தை விடவேண்டாமேன்னு மார்கெட் ஏரியாவில் நுழைஞ்சால் அங்கேயும் மேடை ஒன்னு போட்டுவச்சு ட்ரம்ஸ் முழக்கம்! கேர்ள்ஸ் தனியா, பாய்ஸ் தனியா அப்புறம் ரெண்டு குழுவும் சேர்ந்துன்னு அமர்க்களம்தான்:-) எங்க மக்களும் ரொம்ப ஆதரவா புல்வெளியில் உக்கார்ந்து ரசிச்சாங்க.
இருபதாயிரம் பேர் மறைஞ்ச சோகத்தை எப்படியெல்லாம் ஆத்திக்கிறாங்க பாருங்க. அன்று இரவு உள்ளூர் தொலைக்காட்சியில் ஜப்பான் சுநாமி சமயம் வெவ்வேறு ஆட்கள் எடுத்த தனி வீடியோக்களின் தொகுப்பு ஒன்னு காமிச்சாங்க. ஒழுங்கு முறைக்குப்பேர் போன நாடுன்றது சும்மா இல்லை. அறிவிப்புன்னு கூவுனதும் ஆட்கள், உடனே குழந்தைகுட்டிகளுடன் வரிசையா குடி இருப்புகளைவிட்டு வெளியேறுனாங்க. இந்த கலாட்டாவில ஒருத்தர் டிவி பொட்டியைத் தூக்கிக்கிட்டுப்போறார்!!!!!Friday, March 23, 2012

ஊருலகத்துக்கு முன்னே உகாதி கொண்டாட்டம்

டேட் லைனில் இருப்பது இப்படி ஒரு வசதி. அதிலும் இப்ப டே லைட் ஸேவிங்ஸ் வேற இருக்கா........ முந்திரிக்கொட்டைகள்தான் நாங்க.

போனவருசம் உகாதி புஷ்கரில்! அந்த வைகுண்டநாதன் கையேந்தி பவன் விருந்து வச்சான்.

இந்த வருசம் மெனு இப்படி.


ரைஸ்குக்கர் பாதாம் ஹல்வா, பலாப்பிஞ்சு கறி, ஓலன், சப்பாத்தி , மெதுவடை, ரவாலட்டு.
கடைசி இரண்டு அயிட்டங்கள் உள்ளூர் தோழி (ஆந்திரா) கொண்டுவந்து கொடுத்தாங்க.

நேத்து இந்தியன் கடைக்குப் போனப்ப நம்ம 'எம் டி ஆர் பாதாம் ஃபீஸ்ட்'
கண்ணில் பட்டது. தேவையான எல்லாப் பொருட்களும் இருன்தால் ஆறு நிமிசத்தில் செஞ்சுறலாம்.
இப்பெல்லாம் ரைஸ் குக்கர் பரிசோதனைகள் நடப்பதால் இதுவும் இப்படியே.

இனிப்பில்லாத கோவா உங்க ஊரில் கிடைச்சால் விசேஷம். இல்லைன்னா என்னோட ட்ரிக் சொல்லிடறேன்.

ஒரு கப் பால்பவுடரை லேசாப் பால் தெளித்துப் பிசைந்து உருண்டையா உருட்டி நீராவியில் அஞ்சு நிமிசம் வச்சு எடுங்க.
ஒரு பாக்கெட் பாதாம் ஃபீஸ்ட் பவுடர், உதிர்த்த கோவா உருண்டை, அரைக் கப் பால் சேர்த்து ஒரு நான்ஸ்டிக் ரைஸ்குக்கர் பாத்திரத்தில் போட்டு குக்கரை ஆன் செஞ்சுருங்க. மரக்கரண்டியால் அப்பப்பக் கிளறிக்கிட்டே இருக்கணும். மூணு நிமிஷம் ஆனதும் கால் கப் நெய் சேர்க்கணும். இப்ப கீப் வார்ம் செட்டிங்கே போதும். மூணு நிமிசம் கிளறுனதும் ஹல்வா தயார்!அனைவருக்கும் உகாதிப் பண்டிகைக்கான இனிய வாழ்த்து(க்)கள்.
PINகுறிப்பு: பாதாம் ஹல்வாவுக்கே உரிய இளம் மஞ்சள் நிறம் மிஸ்ஸிங்:( அடுத்த முறை ரெண்டு சொட்டு ஃபுட் கலர் மஞ்சள் நிறம் சேர்க்கணும்.

PIN குறிப்பு 2: இந்த இனிப்பின் பெயரை மாத்திட்டேன். தின்னு பார்த்த பின்தான் தெரிஞ்சது, இது பாதாம் ஹல்வா இல்லை! பாதாம் திரட்டிப்பால்:-))))))


Tuesday, March 20, 2012

அதி'காரம்'

எல்லாம் இந்த வாஸ்கோட காமா... தீஸ்கோடா ராமான்னு கொண்டுவந்து கொடுத்த வினை. நிம்மதியா உடம்புக்கு கெடுதல் செய்யாத மிளகை வச்சுச் சமாளிச்சுக்கிட்டு இருந்தோம். மிளகாய்ச்செடி வந்து சேர்ந்த வருசம் சரியாத்தெரியலை. போர்த்துகீஸியரான இவர் மூணுமுறை1498, 1500, 1524 வருசங்களில் பாரதம் வந்துருக்கார். மொதவாட்டியே காரத்தைக் கொண்டுவந்துட்டாரான்னு தெரியலை. அதனால் நடுப்பயணத்தில் கொண்டுவந்துருக்கலாமுன்னு என் யூகம். (இவர் பிறந்த வருசமும் 1460 இல்லை 1469ன்னு ஒரு குழப்பமும் இருக்கு)
மிளகாயின் சரித்திரத்தைக் கவனிச்சால் அதுக்குக் கிட்டத்தட்ட பத்தாயிரம் வயசு!!!! நமக்குப் பரிச்சயமாகி வெறும் 600 வருசங்கள்தான் ஆகுது! தென் அமெரிக்கக் கண்டத்திலே விளைஞ்சு குமிஞ்சு இருந்ததை கொலம்பஸின் கடல்பயணத்தில் கூடவே போன ஒரு டாக்குட்டர்தான் கொண்டுவந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அறிமுகம் செஞ்சு வச்சுருக்கார். 1493 இல் கரீபியன் தீவுகளுக்குப்போய் வந்தப்பக் கையோடு பிடிச்சுக்கிட்டு வந்து ஸ்பெயின் நாட்டுலே நட்டுருக்கார்ப்பா.

இதோட மருத்துவ குணத்துக்காக ஸ்பெயின் & போர்ச்சுகல் நாடுகளில் சாமியார்கள் மடத்தில் பயிரிட்டு வளர்ந்துருக்காங்க. இந்த மாங்க்ஸ்க்கு (Monks)வேற வேலையே இல்லை போல! உ.பா. பீரை (Beer) முதல்முதலில் ஐரோப்பாவில் தயாரிச்சதுகூட இந்த சாமியார்கள் கூட்டம்தான். ஜெர்மெனி நாடுன்னு கேள்வி.

இந்தியாவில் காஷ்மீரி மிளகாய், குண்டு மிளகாய், ஜ்வாலா மிளகாய், காந்தாரி மிளகாய்ன்னு இப்போ பதினாலு வகைகள் பயிரிடறாங்க. காஷ்மீரி மிளகாய்க்கு அவ்வளவா காரம் இல்லை. ஆனால் கலர் மட்டும் அட்டகாசமான சிகப்பு. நிறத்துக்காகவே இதைக் கறிகளில் சேர்ப்பாங்க. ஆனால் இந்த காந்தாரி இருக்கா பாருங்க ... பேருக்கேத்த வகை. துரியோதனின் அம்மா போலவே அப்படி ஒரு உறைப்பு. சின்னதா இருக்கும் இதை ஒரு குழம்புக்கு ஒன்னு போட்டாலே முடியைப் பிச்சுக்கிட்டுப் போயிரும்!

தேஜ்பூர் மிளகாய்ன்னு மெக்ஸிகோ வகை ஒன்னு உலகிலேயே 'அதி(க)காரம் கொண்டதுன்னு சொல்றாங்க.

குஜராத், மகாராஷ்ட்ரா, ஆந்த்ரா, தமிழ்நாடு, கோவான்னு பல மாநிலங்களிலும் மிளகாய் விளைச்சல் சக்கைப்போடு போடுது. காலநிலை அதுக்கு ரொம்ப உகந்ததா இருப்பதே காரணம்.

அது போகட்டும். எப்படியோ மிளகாய் வந்து இங்கே நல்லா காலூணிருச்சு. இந்தியச் சமையலுன்னா கரம் மசாலா இல்லைன்னாலும் பரவாயில்லை மொளகாய் இருந்தே ஆகணுமுன்னு ஆகிக்கிடக்கு பாருங்க. நாக்குக்குக் காரம் வேண்டித்தான் கிடக்கு. மளிகை வாங்கணுமுன்னா உப்பு புளி .மொளகாய்ன்னுதானே ஆரம்பிக்கிறோம்.

இங்கே நியூஸிக்கு வந்த புதுசுலே பச்ச மிளகாய், வெள்ளைப்பூண்டு தேடித்தேடி நகரத்துக்கு வெளியில் கொஞ்சம் போனால் பக்கத்தூருலே கிடைக்குதுன்னு விவரம் சேகரிச்சோம். பூண்டு பதினைஞ்சு டாலர் கிலோன்னு ஒரு இடத்தில் கிடைச்சது. மிளகாய்க்கு இன்னும் ஒரு பத்துகிலோ மீட்டர் பயணம் செஞ்சு ஹாட் ஹவுஸ் விளைச்சல் இடத்துக்குப் போனோம். தண்ணீரில் வச்சு (Hydroponics)வளர்க்கறாங்க. நியூஸியில் சூப் டின்கள் தயாரிக்கும் கம்பெனிக்கு மொத்தமா வித்துருவாங்களாம்.

மிளகாய் வாங்க வந்துருக்கோமுன்னதும் நீங்களே பறிச்சுக்கணுமுன்னு கண்டிஷன் போட்டார் உடமையாளர். கிடைச்சது பாக்கியமுன்னு நாலுகைகளால் பரபரன்னு மூணு கிலோ அறுவடை செஞ்சோம். கிலோ இருவது டாலர் மேனிக்குக் கொடுத்தார். வருசத்துக்கு போதுமுன்னு கழுவித் துடைச்சு ஃப்ரீஸரில் வச்சுக்கிட்டேன்.

அதுக்கப்புறம் சில வருசங்கள் தொடர்ச்சியா அவரோடு ஒரு வியாபாரம். ஒரு சமயம் பேசிக்கிட்டே மிளகாய் எடுக்கும்போது, 'இண்டியன்ஸ் எப்படித்தான் மிளகாய் தின்னறீங்களோ? காரம் நாக்குலே எரியாதா?'ன்னார். நம்மாளு, இதெல்லாம் ஜுஜுபி.... நாங்க பச்சையாக்கூடக் கடிச்சுக்கிட்டு சோறு திம்போமுன்னு மிதப்பாச் சொல்லிக்கிட்டே ஒரு மிளகாயை எடுத்து அந்த ஆளுக்குக் கடுப்பத்தறேன்னு வீரமா வாயில் வச்சு ஒரு நறுக். கரகரன்னு பற்கள் அரைக்க அரைக்க அந்த ஆளுக்குக் கண் நட்டுக்கிச்சு. நம்மாளுக்குக் கண்ணுலே மளமளன்னு தண்ணீர் ஊற்று. ஐயோ ன்னு கத்த அவர் தன்மானம் இடங்கொடுக்கலை. பதறிப்போன நாந்தான் ஓடிப்போய் வண்டிக்குள் இருந்த கோக் பாட்டிலை தூக்கியாந்தேன். அப்புறம் வீட்டுக்கு வர்ற வழியெல்லாம் நான் பாட, அவர் கேக்க, மகள் முழிக்கன்னு ......

அதுக்குப்பிறகு அங்கே இங்கேன்னு இன்னும் சிலர் மிளகாய் வியாபாரம் தொடங்குனாங்க. விலையும் கொஞ்சம் கொஞ்சமா இறங்கிக்கிட்டே போச்சு. கடைசியா வாங்குனது கிலோ பனிரெண்டு கோடை முடியும் சமயம் சனிக்கிழமை பேப்பரில் கண்ணு வச்சுக்கிட்டே இருந்தால் எப்பவாவது விளம்பரம் வரும். பிக் யுவர் ஓன். உனக்கு வேணுமுன்னா நீ பறிச்சுக்கிட்டுக் காசைக்கொடு.

உள்ளுர் இந்தியன் கடைகளில் ஃபிஜியில் இருந்து காய்கறிகள் வரும்போது பச்சைமிளகாயும் சிலசமயம் வரும். எப்பவாவது இறக்குமதியாகும் காய்களில் ஒரு புழு பூச்சி இருந்தால் ஒட்டுமொத்த இறக்குமதியையும் அழிச்சுட்டு அப்படியே இனி காய்கறிகள் வரக்கூடாதுன்னு தடை போட்டுருவாங்க. இறக்குமதி வியாபாரம் செய்யும் கம்பெனிகள் அஞ்சாறுமாசம் கழிச்சு மறுபடி அரசாங்கத்திடம் கெஞ்சிக் கூத்தாடி எல்லா நிபந்தனைகளுக்கும் ஆமாஞ்சாமின்னு தலையாட்டிட்டு பல பரிசோதனைகளுக்கு ஈடு கொடுத்து மறுபடி காய்கறிகளைக் கொண்டுவருவாங்க. எப்போ கிடைக்கும் எப்போ கிடைக்காதுன்ற நிலையாமை இருந்ததால் விலையை ரொம்பவும் கவனிக்காமல் கொஞ்சம் வாங்கியாந்துக்குவோம்.

சீனர்கள் இங்கே குடியேறிய பின்னே அவுங்க நடத்தும் கடைகளில் பச்சைமிளகாய், சிகப்பு மிளகாய், இன்னும் அவுங்க சாப்பாட்டு சமாச்சாரமெல்லாம் உறையவச்சதா கிடைக்க ஆரம்பிச்சது. நல்ல தரமான பேக்கிங், சுத்தமான பொருட்கள். பருப்புவகைகள் அரிசின்னு நாங்களும் சீனக்கடைகளையே நம்பி இருந்தோம். இந்தியக்கடைகள் ஒன்னு ரெண்டு முளைச்சது அதுக்கப்புறம்தான்.

ஒரு ஏழெட்டு வருசமுந்தி உறையவச்ச காய்கறிகள் இந்தியாவில் இருந்து வர ஆரம்பிச்சது. இந்தியக்கடைகளில் இறக்குமதி செஞ்சாங்க. ப்ரோஸன் பராத்தா, ரொட்டின்னு ஆரம்பிச்சுக் காய்கறிகள் (முருங்கைக்காய் கூட!) கிடைச்சது. முக்கியமா பஞ்சாப், தில்லி கம்பெனிகள். தெற்கேன்னா கேரளா. ஏற்கெனவே அமீரகத்துக்கு அனுப்பிக்கிட்டு இருந்தாங்கதானே! அப்படியே கொஞ்சம் இங்கேயும்.......
இப்போ ஃப்ரொஸன் பச்சைமிளகாய், துருவிய தேங்காய் வர ஆரம்பிச்சுருக்கு.

ரெடி டு ஈட் வகைகளில் நம்ம MTR வகைகள் உட்பட பலதும் கடைகளில் இடம் பிடிச்சாச்சு. இதிலும் கேரளாவில் இருந்து நிறைய வருது. தமிழ்நாட்டு வகைகளோ, தயாரிப்புகளோ ஒன்னும் இல்லை ஒரு சில மசாலாப் பொடிகளைத் தவிர. சக்தி மசாலா புளியோதரைப்பொடி, எலுமிச்சை சாதப்பொடின்னு பார்த்துட்டு ஆசையா வாங்கிவந்தேன். த்ராபை:( வாயில் வைக்க வழங்கலை:( செய்முறை விளக்கம்கூட சரியாத்தரலை. என்னவோ போங்க.....

ஒரு நாள் உள்ளூர் காய்கறிக் கடை ஒன்னில் பச்சைமிளகாயைப் பார்த்தேன். என்னதான் உறைஞ்ச மிளகாயை வச்சுச் சமைச்சாலும் ஃப்ரெஷ் மிளகாய்க்குன்னு ஒரு வாசம் இருக்கே அதை எப்பவாவது அனுபவிக்கலாமுன்னு ஆசையா மிளகாயைக் கையில் எடுத்தப்பத்தான் எனக்குள்ளே இருந்த விவசாயி உறங்கி முழிச்சது.... சீச்சீ.... அந்த மிளகாய் ஒரே புளிப்பு கீழே போடுன்னு குரல்! விவசாயிதான்.... டாலர் 1.95 Each மிளகாய். குடும்பம் வெளங்குனாப்பொலதான்.....
நம்மூட்டு மிளகாய்

மகளிடம் புலம்பினால்..... 'நான் மிளகாய்ச்செடி ஒன்னு வாங்கி வீட்டில் வச்சுருக்கேன். ஆறெழு மிளகாய் வந்துருக்கு'ன்னாள். இத்தைப் பார்றா...... என்ன விலை அந்தச் செடி? அதிகமில்லை, ஒன்னு ஏழு டாலர்(தானாம்) ஜாலபெனோ Jalapeno வகை. நல்ல கரும்பச்சை நிறத்தில் காய்கள். கொஞ்சம் தடியா ஸாலிடா இருக்கு. அதி'காரம்' உள்ளவை.
ஏழான்னு யோசிச்ச ஒரு நாளில் பூச்செடிகள் வாங்க ஒரு கார்டன் செண்டருக்குப்போனபோது அங்கே ஆறு ஜாலபெனோ மிளகாய்ச்செடிகள் நாலரைக்கு ஆப்ட்டது. வாங்கியாந்து நட்டேன். அப்புறம் சண்டே மார்கெட் சந்தையில் சில்லி பெப்பர் செடிகள் ரெண்டும் ஒரு எக் ப்ளாண்ட் (நம்ம கத்தரிக்காய்தாங்க)செடியும் ஒவ்வோர் டாலர் மேனிக்குக் கிடைச்சது.
வெளியே

உள்ளே

தொட்டிகளில் நட்டு, கரிசனமும் கவனிப்புமா இருந்து உள்ளே வெளியே, வெளியே உள்ளேன்னு காலநிலைக்குத் தகுந்தாப்போல ஆட்டம் எல்லாம் ஆடி அறுவடையும் செஞ்சாச்சு. முதல் கொய்த்து கழிஞ்ஞு. ஒரு செடியில் பத்து பதினைஞ்சு மிளகாய்கள் தேறும். அந்த சில்லிபெப்பர் செடிகளில் கொஞ்சம் பெருசா இருக்கும் காய்களைப் பார்த்ததும் பஜ்ஜி பஜ்ஜின்னு பஜனை செய்ய ஆரம்பிச்சார் நம்மாள். கத்தரிக்காயும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு காய்ச்சது!

MTR போண்டா பஜ்ஜிமாவு கிடைச்சது. அதுலே தோய்ச்சுத் தோய்ச்சு கத்தரி, மிளகாய்ன்னு போட்டுக் கொடுத்தேன்.


கோடை முடிஞ்சு ஒரு மாசம் ஆகப்போகுதுன்னாலும் கன்ஸர்வேட்டரியில் இருப்பதால் இன்னொரு கொய்த்துக்குக் காய்கள் கிடைக்கும் என்று இருக்கேன்.
தோழி சொன்னாங்க..... பச்சை விரலாம்.

எனக்கே தெரியாமல் எனக்குள்ளே ஒரு விவசாயி இருக்கார்ப்பா!

Friday, March 16, 2012

மீண்டு(ம்) வருமா? ( கதீட்ரல் தொடர்ச்சி) Christchurch Earthquake 9

நிலநடுக்கம் ஒன்னும் இந்த ஊருக்குப் புதுசுல்லேன்னாலும் இப்படி ஒரேடியா மேலேயும் கீழேயும், இந்தப்பக்கமும் அந்தப்பக்கமுமா சாய்ஞ்சு ஒரே சமயத்தில் ஏற்பட்ட குலுக்கல்களும் ரொம்பவே புதுசு:(

1881, 1888, 1901 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களினால் இந்த பெல் டவர் கும்மாச்சிக்குத்தான் எப்பவும் சேதம் ஏற்பட்டு திரும்பத் திரும்ப சீராக்கும் வேலை நடந்துச்சுன்னாலும் கடந்த 2010 செப்ட்ஃம்பர் முதல் இதுநாள் வரை நிக்காமல் தொடரும் நடுக்கங்களால் பெல்டவர் ஒரேடியா மொட்டைக் கோபுரமா நிக்குது. கீழே விழுந்த கூம்பை எடுத்து ஒரு மரத்தடியில் வச்சுருக்காங்க.

டவர் போனாப் போகட்டும், கோவில் நல்லா இருந்தால் சரின்னு நினைக்க முடியாம 2011 ஃபிப்ரவரி பூகம்பத்தில் உள்ளே நிறைய அழிவு. ஸ்ட்ரக்ச்சர் முழுசும் பாழாகிப்போச்சு. இனிமே இதை வெறுமனே விட்டுவச்சாலும் ஆபத்துதான்னு சொல்றாங்க. சம்பவம் நடந்தசமயம் இதுக்குள்ளே 22 பேர் மாட்டிக்கிட்டாங்கன்னு சேதி வந்து பதைபதைச்சு நின்னோம். டவரில் ஏறிப்பார்த்துக்கிட்டு இருந்தவங்க நாலுபேர் அப்படியே கல்லோடும் மண்ணோடும் புதைஞ்சுட்டாங்கன்னு தகவல். நல்லவேளையா எல்லாம் வதந்தீன்னு தெரிஞ்சப்போ நிம்மதி ஆனோம். இந்த வதந்'தீ' பரப்புவதில் மட்டும் உலகமெல்லாம் ஒரே ஒற்றுமை!!!!
Sue Spigel என்ற பெண், மாடியில் பூஜாரிகளுக்கான மேலங்கி தயாரிக்கும் வேலையில் இருந்துருக்கார். இடிபாடுகள் தலையில் விழுந்து, முகமெல்லாம் ரத்தம் ஒழுக, ஒரு கை ஒடிஞ்ச நிலையில் ஜன்னலை ஒருமாதிரித் திறந்து, உதவி கிடைக்குமான்னு இருந்தபோது ஒரு போலீஸ் ஆஃபீஸர் கண்ணில் விழுந்ததால் உடனே காப்பாற்றப்பட்டார்.

கதீட்ரல் உள்ளே இருக்கும் தூண்களைப்பத்தியும் சொல்லணும். மொத்தம் 14 தூண்கள். ஒவ்வொன்னும் ஒரு குடும்பம், நிறுவனம் இப்படிக் கோவிலுக்காக நிதி கொடுத்து அமைச்சுருக்காங்க. 1851 இல் பாடம் சொல்லிக்கொடுத்த நியூஸியின் முதல் டீச்சருக்கு பள்ளிக்கூடப்பிள்ளைகள் எல்லாம் சேர்ந்து ஒரு தூண் வச்சுருக்காங்க. கோவில் ரெக்கார்டுகளில் யார் யார் எந்தத் தூண்களுக்கு நிதி உதவி செஞ்சாங்கன்ற விவரம் இருக்கே தவிர, நல்ல வேளையா தூண்களில் இன்னாரின் உபயம் என்று எழுதிவைக்கலை:-)

முகப்புச் சுவரில் ரோஸ் விண்டோன்னு ஒன்னு மிகவும் புகழ்பெற்றதா இருந்துச்சு. 25 அடி குறுக்கு விட்டம். முதல் பிஷப் ஹார்ப்பர் அவர்களின் மகனும் மருமகளும் இதுக்கு நிதி கொடுத்துருக்காங்க. வெனிஸ் நகரத்தில் உருவாக்கப்பட்டு இங்கே கொண்டுவந்தது. தேவாலயத்துக்குள்ளே நுழைஞ்சதும் தலையைத் தூக்கி மேற்கே வாசல்பக்கம் பார்க்காம யாருமே இருந்துருக்கவே முடியாது. அப்படி ஒரு அழகும் வேலைப்பாடும்!!!!


ரோஸ் முதல் க்வேக்கில் கொஞ்சம் தப்பியது, டிசம்பர் ஆட்டத்தில் தப்பிக்கலை:(

இழப்பை சகிக்கமுடியாத ஒரு கேக் அலங்கார நிபுணர் இந்த ஜன்னல் அலங்காரத்தைத் தான் செய்த பாவ்லோவா என்னும் கிவி ஸ்பெஷல் இனிப்பில் கொண்டுவர முயற்சி செஞ்சார். இந்தப் படம் பாருங்க. 20 கிலோ மார்ஷ்மல்லோ, 25 கிலோ அரிசிப்பொரி, ஏராளமான முட்டைகளின் வெள்ளைக்கரு, ஐஸிங் சக்கரைன்னு மூணு மீட்டர் குறுக்கு விட்டம் அளவில் பிரமாண்டமான தயாரிப்பு.
கருவறை(ஆல்ட்டர்)க்கு முன்னால் இருந்த மூணு தேவதைகளின் உருவங்களும் கட்டிடம் இடிஞ்சப்பக் கீழே விழுந்துருச்சு. அதில் உடையாமல் தப்பிச்ச 'கேப்ரியல்' என்னும் தேவதூதனை ஒரு க்ரேன்லே கட்டிவிட்டு நகரத்தைப் பார்க்கும்படி வச்சுருக்காங்க. எப்படியோ நகரம் காப்பாற்றப்படணும்.
முந்தி இருந்ததைப்போலவே இந்த தேவாலயத்தைத் திருப்பிக் கட்டணுமுன்னா குறைஞ்சபட்சம் 100 மில்லியன் டாலர் செலவுன்னு ஒரு கணக்கு. எங்க மாட்சிமைதாங்கிய எலிஸபெத் ராணியம்மா அவுங்க காசுலே இருந்து 20 மில்லியன் தரேன்னு சொல்லி இருக்காங்க. மீதி 80 எப்படி சேர்க்கப்போறோமுன்னு தெரியலை. இன்ஷூரன்ஸ் பணம் அவ்ளோ கிடைக்காது. கோவில்வேற ((அல்ப்பமா) பத்து டாலர் டொனேஷன் கொடுங்கன்னு கேக்குது. எங்க ஊர் ஜனத்தொகையே மூணரை லட்சம்தான். எல்லோரும் தவறாமக் கொடுத்தாலும் மூணரை மில்லியன்தான் தேறும். அப்ப பாக்கி????

பத்தே மில்லியன் டாலர் செலவில் ஜப்பானியர் ஒருத்தர் இதே மாதிரி ரிப்ளிகாவை அட்டையில் தயாரிச்சுத் தரேன். அதை கோவிலாப் பயன்படுத்தங்கன்னு சொல்லிக்கிட்டு இருக்கார். நம்ம தோட்டா தரணியிடம் பயிற்சி பெற்றாரா என்ன? (இப்ப எதுக்குப் புது சட்டசபை செட் விவகாரம் மனசில் வருது? அடங்கு மனசே)

ஸ்டெய்ண்டு க்ளாஸ் stained glass என்ற வகையில் தேவாலயத்துக்குள்ளே ஏராளமான கண்ணாடி அலங்காரங்கள், ஒரு முப்பது இருக்கும். இவையும் உள்ளூர் மக்களால் பல நாடுகளில் இருந்து வாங்கப்பட்டு, கோவிலுக்குக் கொடுத்த தானங்களே!

ஆன்னா ஊன்னா இந்த ஊர்லே பொதுமக்களிடம் கருத்துக் கேட்டு அவுங்க சொன்னதை இலவச தினசரியில் போட்டுருவாங்க. பொதுவா எல்லாத்துலேயும் அஞ்சு சாதகமாவும் அஞ்சு பாதகமாவும் இருக்கும். இந்த ஒரு விஷயத்துலேதான் பத்துக்கு எட்டு 'கூடாது'ன்னு சொல்லுது. நம்ம சிட்டிக் கவுன்ஸிலர் ஒருத்தர் நம்ம பக்கம்!

ஒரு நாளைக் குறிப்பிட்டு கதீட்ரலின் தலைவிதியின் தீர்ப்பு பகல் ரெண்டு மணிக்குச் சொல்வோமுன்னதும் ஊரே டிவியில் கண்ணும் ரேடியோவில் காதுமாக் கிடந்துச்சு.

ரெண்டு சனி ரெண்டு ஞாயிறு சதுக்கத்துக்குள்ளே விடுவோம். கண்ணாரப் பார்த்துக்குங்க. அப்புறம் சொல்லாமக்கொள்ளாம போயிருச்சுன்னு புலம்பக்கூடாது. ஒரு சனி ஞாயிறு போச்சு. பாக்கி இன்னும் ஒரே ஒரு வார இறுதி.
கல்யாணத்துக்குப் போகலைன்னாலும் சாவுக்குக் கட்டாயம் போகணும் என்ற பண்பாடு இன்னும் நம்ம ரத்தத்தில் இருக்கே. ரெண்டு பக்கமும் ஆள் உயர வலைக்கம்பித் தடுப்பும் இடையில் நாலைஞ்சு மீட்டர் அகலமுமா பாதையும். உள்ளே போக ஒரு மூணு நிமிசக் காத்திருப்பு. வரிசை ஒன்னும் இல்லை. ஆனாலும் யார்மேலேயும் இடிச்சுத்தள்ளாமல் அப்படியே போனோம். நிகழ்ச்சி நடந்த ஃபிப்ரவரி 22க்குப்பிறகு முதல்முறையா கதீட்ரலை நேருக்குநேர் சந்திப்பது ஒருவிதமான ஆவல், எதிர்பார்ப்பு, ஐயோ என்ற மனக்கஷ்ட,ம் எல்லாம் சேர்ந்து ஒரு கலப்படமான உணர்வு.


தேவாலயத்துக்கு முன்னால் சதுக்கம் ஆரம்பிக்கும் இடத்தில் இடுப்புயரத்தில் ஒரு தடுப்பும் ஆறேழு மீட்டர் இடைவெளிவிட்டு இன்னொரு தடுப்புமா அமைச்சுருக்காங்க. தப்பித்தவறி இப்போ எதாவது நிலநடுக்கம் வந்தாலும் விழும் கற்கள் நம்மகிட்டே வர வாய்ப்பே இல்லை. ஏற்கெனவே உருண்டு விழுந்த உருண்டைக் கற்களை ஒரு கம்பிக்கூண்டுக்குள் சேர்த்து வச்சுருந்ததைப் பார்த்தால் வியப்பா இருக்கு. எங்கே இருந்து வந்தவைகள்????
மணிக்கூண்டு முக்கால்வாசி உடைஞ்சு போய் மொட்டையா நிக்க, தேவாலயத்தில் முன்பக்கச்சுவர்கள் இடிஞ்சு கிடக்கு. இரும்புச்சட்டங்களை அங்கங்கே முட்டுக்கொடுத்து வச்சுருக்காங்க.. ரோஸ் ஜன்னல் இருந்த இடத்தில் பெரிய ஓட்டை:(
சதுக்கத்தில் மக்கள் ஓய்வெடுக்கக் கட்டிவச்சுருந்த ரெண்டு மேடைகளிலும் மக்கள் ஏறி நின்னு கண்கொட்டாமல் கோவிலைப் பார்த்து திகைச்சு நிக்கறாங்க. மனசில் ஓடும் எண்ணக் குவியல்கள் முகத்தில் தெரியுது. ஏறக்கொறைய நிசப்தம். பேச நாக்கும் எழும்புதா என்ன? எழவு வீட்டில் இருப்பதைப்போலத்தான் இருக்கு:(
இந்தச் சதுக்கத்தில் எத்தனைமுறை எத்தனை விழாக்கள், கூட்டம் எல்லாம் நடந்து கலகலப்பா இருந்துருக்கு. ஊருக்குள்ளே நல்லது கெட்டது எதுன்னாலும் இங்கேதானே கூடுவோம்! இந்தியன் க்ளப் தீபாவளி விழாவைக்கூட ரெண்டுமுறை இங்கே நடத்துனோமே! நம்ம ஹரே க்ருஷ்ணா குழுவில் ஒரு கல்யாணம்கூட இங்கே சதுக்கத்தில் கோலாகலமா ஊர்த்திருவிழா போல நடந்துச்சே!

சிலசமயம் எனக்கு மனசு சரி இல்லைன்னா பஸ் பிடிச்சு நேரா இங்கே வந்துருவேன். தேவாலயத்துக்குள்ளே போய் பெருமாளை தியானிச்சுட்டு சதுக்கத்தில் வந்து கொஞ்ச நேரம் உக்கார்ந்து போற வர்ற மக்களை வேடிக்கை பார்த்துக்கிட்டு இருப்பேன். வரும்போது வாங்கின பஸ் டிக்கெட் மூணு மணி நேரம் வரை செல்லும் என்பதால் ரெண்டரை மணிநேரம் சுத்திக்கிட்டு இருந்துட்டு அதே டிக்கெட்டில் வீட்டுக்கு வந்துருவேன். மனசு லகுவாகிப்போகும். புலம்பல் சொல்ல அப்போ ப்ளொக் இல்லை பாருங்க:-)
குறைஞ்சது ரெண்டு மூணு வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் சதுக்கத்திலும் கோவிலிலுமா நடமாடுவாங்க. சதுரங்க ஆட்டம் சதுக்கத்தில் நடக்கும். ரெண்டு டாலர் செலவு. இடுப்புயர பொம்மைகள். படைவீரனையும் குதிரையையும் கோட்டையையும் ராஜாவையும் ராணியையும் தூக்கிப்போய் வைக்கணும்.

பகல் 12 ஆனதும் டவுன் க்ரையர் என்றவர் பழங்கால உடுப்புகளுடன் சதுக்கத்தில் வந்து நின்னு அன்று ஊரில் நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளை கையில் உள்ள சுருட்டி வச்ச ஓலையைத் திறந்து வாசிப்பார். நம்மூர் மந்திரவாதி ஒரு சின்ன ஏணியில் நின்னு நாட்டு நடப்பையும் எப்படி உலகம் கெட்டுக்கிடக்குன்னும் சொல்லிக்கிட்டு இருப்பார். உலகத்தின் வரைபடம் ஒன்னு தலைகீழாய் வரைஞ்சது இவர் வச்சுருப்பார். சுருக்கத்தில் சொன்னால் லண்டன் ஹைடு பார்க் போல ஆளாளுக்கு 'உசரமா நின்னு' பேசலாம்.
டூரிஸ்ட் அட்ராக்ஷனா ட்ராம் வண்டிகள் மீண்டும் ஓட ஆரம்பிச்சதும் சதுக்கத்தைச் சுற்றி கலகலப்பு இன்னும் கூடுனதென்னவோ நிஜம். இப்போ வெறிச்சோடிக்கிடக்கும் இடம் பார்த்தாலே மனசைக் கலக்குது:(

ஹூம்..... எல்லாம் போச்சு.
தேவாலயத்துக்கு வடக்குப்பக்கம் ஒரு வார்மெமோரியல் வச்சுருந்தாங்க. அதுக்குப்பின்பக்கம் 1995 இல் புதுசா ஒரு விஸிட்டர்ஸ் செண்டர் கட்டிடம் கட்டி அதை எங்க மாட்சிமை தாங்கிய ராணியம்மாதான் திறந்து வச்சாங்க. சுற்றுலாப்பயணிகள்/பார்வையாளர்களுக்கான தகவல்கள், காஃபி ஷாப், நினைவுப்பொருட்கள், கிஃப்ட்ன்னு இருந்தாலும் அது கோவில் டிஸைனுக்கு ஒட்டாத eye sore ன்னு எனக்கு ஒரு நினைப்பு. ஆனாப் பாருங்க..... இது அழிவிலே இருந்து தப்பிச்சமாதிரிதான் தெரியுது!


தேவாலயத்தின் தெற்குப்பக்கத்தில் பிரமாண்டமான மூணு தூண்களை வச்சு அதை Columbarium ன்னு ஐரோப்பிய நாடுகளின் ஒரு வழக்கத்தை அனுசரிக்கும்விதமாச் செஞ்சுருக்காங்க. மதங்கள் நம்பிக்கைகள் இப்படி எந்த வித்தியாசமும் இல்லாம ஊர் மக்கள் அனைவருக்கும் பொதுவா, நம்ம குடும்பத்தில் இறந்து போனவர்களின் அஸ்தியை ஒரு சின்னப்பெட்டியில் வச்சுக் கொடுத்து அதுக்கான ஒரு கட்டணமும் கட்டினால் அதுக்குள்ளே வச்சுருவாங்களாம். 700 அஸ்திகள்வரை வைக்கலாமாம். முன்கூட்டியே இதுக்கான ஏற்பாடுகளையும் செஞ்சுக்கலாம். அந்தத் தூண்கள் சேதம் ஆகாமல் இப்போதைக்கு நிலையாத்தான் நிக்குது. (பாங்காக் நகரில் ஒரு கோவிலில் இப்படி அஸ்திகள் அழகழகான ஜாடிகளில் வச்சுருப்பதைப் பார்த்த நினைவு வருது)
உலோகச்சிற்பமான சலீஸ் சேதாரம் ஒன்னும் இல்லாம இருந்தாலும் அதுக்குள்ள கம்பீரம் குறைஞ்சுபோய் சோகமா நிக்குதோ?

வலைக்கம்பி வேலியில் மஞ்சள் நிற ரிப்பன்களில் ஊர்மக்கள் சேதி எழுதி கட்டியிருக்காங்க. அநேகமா எல்லோரும் கோவிலைக் காப்பாத்த நினைப்பவர்கள்தான்.

ரெண்டு தடுப்புகளுக்கிடையில் ஒரு போலீஸ் கார் மக்கள் பாதுகாப்புக்காக நிக்குது. நம்ம சோகத்துலே பங்கெடுத்துக்குது போல. அங்கே ஒன்னு இங்கே ஒன்னு ரெண்டு செக்யூரிட்டி. தனக்கு நாட்டாமை கொடுத்தமாதிரி மக்களைப் போ போ நிக்காதேன்னு சொல்லி விரட்டும் எண்ணமே இல்லாம தூரத்துலே கைகட்டி அமைதியா நிக்கறாங்க.
இந்தப் படத்தில் தெரியும் புதுசு, பழசுன்னு அத்தனை கட்டிடங்களுமே இடிபடப்போகுது.:(
சிட்டிமாலின் இந்தப்பகுதி மொத்தமும் இடிச்சுடப்போறாங்க. நகரின் நடுவில் ஒரு 12 சதுர கிலோமீட்டர் பரப்பு முழுசும் காலியாகுது:(


நமக்கு எவ்வளோ நேரம் இருந்து பார்க்கணுமோ அவ்ளோ நேரம் மனம் அடங்கும்வரை நின்னு நிதானமா சோகத்தை ஜீரணிக்கும்வரை இருக்கலாம். பாழும் கண்ணீர்தான் திரைபோட்டுக்கிட்டே இருக்கு. நமக்குப் பழக்கமே இல்லாத யார்யாரோ ஆறுதலா தோளைத்தட்டிப் போறாங்க. பொது சோகத்துக்கு ஊரே பழக்கபட்டுருக்கு.
மெள்ள நடந்து வெளியே வர்றோம். பாதை முடிவில் கடைசியில் ஒரு டொனேஷன்ன்னு ஒரு ப்ளாஸ்டிக் வாளி வச்சுருக்காங்க. கொஞ்சம் காசைப்போட்டால் தேவலைன்னு இருந்துச்சு. இதே வாளியை சதுக்கத்தில் கோவிலுக்கெதிரில் இருக்கும் இடுப்பளவு தடுப்புக்கு முன்னே வச்சுருந்தால்...... நிறைய கலெக்ஷன் ஆகச் சான்ஸ் இருக்கு. மக்கள் எமோஷனலா இருப்பாங்க இல்லே? அதென்னவோ போங்க..... பொழைக்கத் தெரியாத ஊர்..... நானூறு மீட்டர் நடந்து வந்தபிறகு துக்கம் குறைஞ்சு நிகழ்கால நடைமுறைக்கு வந்துறமாட்டோமா?

ஆச்சு. நாளைக்கும் நாளன்னைக்கும்தான் கடைசி நாள். இன்னொருமுறை கட்டக்கடசியா முகம் பார்க்கலாமுன்னு இருக்கேன். கோபால் சம்மதிக்க மாட்டார்.

" அங்கே போய் என்னத்துக்கு அழறே..... அதை இங்கேயே உக்காந்து அழுது முடியேன்"