Friday, February 28, 2014

புள்ளுக்கும் இரங்கிய பெருமாள் திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவன்.

சரவணபவனில்  வழக்கம்போல்  தென்னிந்திய சாப்பாடுதான் நமக்கு.  ஒரு  நாளைக்கு  ஒருமுறையாவது  குழம்பு கூட்டு கறிகளுடன் சாப்பாடு சாப்பிட்டால்தான் ஊர்சுற்றத் தெம்பு வருமுன்னு கோபாலின் கணிப்பு. பக்கத்துக்கட்டிடம்தானே  நடந்தே ஹொட்டேலுக்குப் போனோம்.  இது  முக்கிய சாலைகளில் ஒன்னு என்பதால்   கலகலன்னு கூட்டமும் கடைகளுமா இருந்தது.  ஒரு பழக்கடையில் ஒரே ஒரு மாம்பழம் வாங்கினோம்.  டிசம்பரில் மாம்பழம் எங்கிருந்து வருதோ?

ஒரு மணி நேர ஓய்வுக்குப்பின்  கிளம்பினோம்.  நம்ம  ஜிஆர் டியில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு  வச்ச  மாட்டுத்தொழுவம்  அலங்காரம் அப்படியே புது வருசம்வரை இருக்குமாம்.  கோவில்நகரத்தில் இருக்கோம் என்பதால் வெளி வாசலில்  செயற்கைக்குன்று அருவி, கோவில் எல்லாம் செயற்கையா வச்சுருக்காங்க. அழகாத்தான் இருக்கு. என்ன ஒன்னு.......  மெயின் ரோடுலே இருந்து ரொம்ப  உள்ளே  தள்ளி இருக்குக் கட்டிடம். வாசலில் பெரிய உருளியில் பூக்களுக்குப் பதிலாக  மீன்கள்.

கார்பார்க் ரொம்ப பிஸியா இருக்கு.  ஃபாரின் இளவரசிஒருத்தர் வந்துருக்காங்களாம். ஏகப்பட்ட வண்டிகள் (8 ) அவுங்களோடு வந்துருக்குன்னார் நம்ம ட்ரைவர் சீனிவாசன். நம்மைத்தான் சொல்றாங்களோன்னு ஒரு விநாடி திகைப்பு.  நம்மகிட்டே ஏது எட்டு வண்டி?  ஸோ நாமில்லை:-)

வேலூர் போகும் வழியில்  13  கிலோமீட்டர்  போனால் பாலுச்செட்டி சத்திரம் என்ற ஊருக்குப் பக்கத்திலே  ஒரு அரைக்கிலோ மீட்டர் உள்ளே போனால் திருப்புட்குழி என்னும் இடம் வருது.

 ஸ்ரீ தாயார் மரகதவல்லி உடனுறை ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோவில்.  ஆழ்வார்களால் பாடல் பெற்ற  108 திவ்யதேசத்தில் ஒன்னு.
விசேஷம் என்னன்னா...  ராம அவதாரத்தோடு சம்பந்தமுள்ள கோவில் இது என்பதே!  சீதையைக் கவர்ந்து கொண்டு ராவணன் ஆகாய மார்க்கமா இலங்கையை நோக்கிப்போறான்.  அப்ப  கழுகரசன் ஜடாயு, சீதையை எப்படியாவது காப்பாத்தணும் என்று அரக்கனுடன்  மோதிச் சண்டை போடுது.  சண்டையில் ராவணன் ஜடாயுவின் சிறகுகளை  வெட்டிமுறிச்சதும்  தொபுக்கடீர்னு கீழே விழுந்து உயிருக்குப் போராடிக்கிட்டே இருக்கு.  சீதையைத் தேடிக்கிட்டு ராமன், தன் தம்பி லக்ஷ்மணனுடன் காட்டில் நடந்து வரும்போது , அதுவரைத் தன் உயிரைக் கையில்(?) பிடிச்சு வச்சுக்கிட்டு இருந்த ஜடாயு,  சீதை போனவழியைக் காட்டி  சமாச்சாரம்  முழுசும் சொல்லிட்டு, ராமா.... நீயே எனக்கு இறுதிக்கடன் செய்யணுமுன்னு  கேட்டுக்கிட்டுத் தன் உயிரை விட்டது.

அந்தப்பறவையை (புள்)  ராமர்  குழி தோண்டிப் புதைச்சு இருப்பார் போலன்னு நான் நினைச்சேன். ! புள் + குழி = புட்குழின்னு ஆகி இருக்கு. ஆனால் சிதை மூட்டி இறுதிக்கடன் செய்தார்னு சொல்றாங்க.

நம்ம வீட்டுலே நம்ம ரஜ்ஜு ஒரு முறை ஸில்வர் ஐ ஒன்னு பிடிச்சுக்கிட்டு வந்து எனக்குப் பரிசளித்தான். ரொம்பச் சின்னதாச்சா.... இவன் தொட்டதுமே பயத்தில் உயிரை விட்டிருக்கும். பாவம்.......  செல்லம்போல இருக்கு.  நம்ம இவனும்  பெருமிதத்தோடு  என்னப் பார்க்கிறான்.


தேங்க்ஸ். ஆனால் இனிமேல் இப்படிப்பட்ட கிஃப்ட் எனக்கு வேணாமுன்னு சொன்னேன். புரிஞ்சு இருக்குமோ என்னவோ! அப்புறம்  வேறொன்னும்  கொண்டு வரலை!  நம்ம தோட்டத்திலும் ஒரு புட்குழி  இருக்கு .

ஒரு ஒன்னரை வருசத்துக்கு முன் நாம் புள்ளிருக்கு வேளூர்  போகலாமா?ன்னு போனதைப்பற்றி எழுதுன பதிவில்  எழுதியது  கீழே!   நமக்கு அப்ப ஒரு பேச்சு இப்பபேச்சு இல்லை கேட்டோ:-))))

இந்தப்புள் தான் 'அந்த' ஜடாயு.  ராவணன் சீதையைத் திருடிக்கொண்டு போன சமயம் பார்த்துட்டு அவனோடு சண்டை போட்ட அதே ஜடாயுவேதான். சண்டையில் இறகுகள் வெட்டப்பட்டு குற்றுயிராகக் கிடந்தது. சீதையைத் தேடிக்கொண்டு ராமலக்ஷ்மணர்கள் அந்த வழியில் வந்தபோது சமாச்சாரத்தைச் சொல்லிவிட்டு உயிர் நீத்த அற்புதப் பறவை. அதற்கு சிதை மூட்டி உடலைத் தகனம் செய்த இடம்தான் இந்தக்கோவிலில் இருக்கும் ஜடாயு குண்டம்.



காஞ்சீபுரத்திலிருந்து ஒரு 12 கிமீதூரத்தில் திருப்புட்குழின்னு ஒரு ஊர் உண்டு. அங்கே பெருமாள் ஸ்ரீ விஜயராகவன் கோவில் கொண்டுள்ளார். இது திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற ஸ்தலம். அந்த 108 இல் ஒன்னு. இங்கே விசேஷம் என்னன்னா.... ஜடாயுவுக்கு  ஸ்ரீராமர் ஈமக்கடன் செய்தது.  இப்படி ஒரு இடம் இருக்க,   இங்கே சுமார் 235 கிமீ தாண்டி வைத்தீஸ்வரன் கோவிலில் எப்படி ஜடாயுவை  தகனம் செய்த குண்டம் இருக்கு(ம்) என்பது கொஞ்சம் புரியத்தான் இல்லை.  ஆனாப் பாருங்க.... இது  சிவஸ்தலம். இங்கே ஜடாயு குண்டம் என்பது இன்னொரு சிறப்புதான் இல்லையா?  ஒரே சம்பவம் ரெண்டு இடத்துலே ஒருத்தருக்கே சம்பவிச்சதை  ஒரு அதிசயமுன்னு  எடுத்துக்கலாம். இன்னும் நான் திருப்புட் குழி போகலை. பெருமாள் வரச்சொல்லலைன்னு  அர்த்தம்.

புலம்பல் கேட்டு, இப்பப் பெருமாள் கூப்புட்டு கோவிலுக்கு வரச் சொல்லிட்டார் கேட்டோ!

இருபத்தியஞ்சு நிமிசப்பயணம்.  கோவில் திறக்கும் நேரம்தான் இப்போ. நாலுமணியாகப்போகுது.  கோவிலுக்கு வெளியே இருக்கும் முன்மண்டபத்தில் தரிசனத்துக்கு சிலர் காத்திருந்தாங்க. பலிபீடமும், கொடிமரமும் இங்கே  இந்த மண்டபத்தில் தான் இருக்கு.
 கோவிலையொட்டி திருக்குளம்.  ஹப்பா! நல்ல சுத்தமா , சூப்பர்.  ஜடாயுவுக்கு  ஈமக்ரியை செய்ய  ஸ்ரீராமன் தன் அம்பினால்  தரையில் குத்தியதும் உண்டான குளமாம். இதுக்கு ஜடாயு தீர்த்தம் என்றே பெயர்.

 கோவிலுக்கு நேரெதிரில் தெருவின் கடைசியில் இன்னொருகோவில் கண்ணில்பட்டது. ஆஞ்சநேயர் கோவில்.  அப்புறம் போகலாமுன்னு நினைச்சுக்கிட்டே மறந்து போயிட்டோம்:(

குளத்துக்கு எதிரில்  இன்னொரு சந்நிதியும்  அடுத்த முற்றத்தில்  சின்னசின்ன மாடக்கோவில்களுமா இருக்கு.  இதையொட்டி இருக்கும் வீட்டுக் குழந்தைகளுக்கு விளையாட ஜோரான இடம்!

சும்மா அங்கே சுத்திப்பார்த்துவரும் சமயம் வாகனமண்டபமுன்னு  தனியா பார்க்கிங்  இருக்கு பெருமாளுக்கு.  இந்தக் கோவிலில் கல்குதிரை ரொம்ப விசேஷமுன்னு  கேள்வி.  மூணுபகுதியா இருக்கும் துண்டுகளை இணைச்சால் குதிரை வந்துருமாம்!  ஒருவேளை இங்கே இந்த மண்டபத்தில் தான் வச்சுருக்காங்களோ என்னவோ!

கோவில்திறந்து வெளியே காத்திருந்த மக்கள்ஸ் உள்ளே போவதைப்பார்த்து நாமும் பின்தொடர்ந்தோம்.






கோவிலைப்பற்றிய தகவல் சுவாரசியம். அதைவிட சுவாரசியம் கட்டண விபரத்தில் இருந்தது.  பயறு முப்பது ரூபாய்.

அட! என்னவா இருக்கும்.? விசாரிக்கத்தான் வேணும்.

இங்கத்துத் தாயார்  மரகதவல்லி  ஒரு குழந்தைப்பேறு மருத்துவ ஆலோசகரா இருக்காங்க.  அந்தக் காலத்துலே பார்த்தீங்கன்னா........
 தம்பதிகளுக்குக் குழந்தை பிறக்கலைன்னா....  காரணம்  மனைவி மட்டுமே என்ற அசைக்கமுடியாத  நம்பிக்கைதான்  ஊருலகத்துக்கு:(  மாட்டுப்பொண்  விதவிதமான  ஏச்சுக்களைப் புகுந்தவீட்டில் சகிச்சுக்கொண்டு வாழணும்.  ஓசைப்படாம  கணவருக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வச்சுருவாங்க:(  அப்போ அந்தப்பெண்ணின் மனசு எப்படிப் புண்பட்டுக்கிடக்கும் பாருங்க.

அதுக்குத்தான் ஆலோசகரா இங்கே தாயார் உதவி செய்யறாங்க. பயறுக்குக்குப் பணம் கட்டியவர்கள் இங்கே இருக்கும் ஜடாயு தீர்த்ததில் முங்கி எழுந்து , கோவில் மடைப்பள்ளியில்   ஏற்கெனவே 'வறுத்து ஊறவச்சுருக்கும் 'பயிறை வாங்கி மடியில் கட்டிக்கிட்டுத் தூங்கிடணும். கோவிலிலேயே தான்னு நினைக்கிறேன்.

மறுநாள் காலையில் மடியை அவிழ்த்துப்பார்த்தால்.............

பயிறில் முளை விட்டுருந்தால்  அந்தப் பெண்ணுக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. அததுக்கு நேரம் மட்டும் வரணும். எத்தனையோ பெண்களுக்கு மன நிம்மதி  இதனால் கிடைச்சிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமே  இல்லை.

நம்ம ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் , காஞ்சி யாதவப்ரகாசரிடம்  கல்வி பயின்றார்னு கேட்டுருக்கோமே பல உபந்நியாசங்களில்....   அந்த  இடம் கூட இங்கே தான். நம்ம ஸ்ரீ யின் பதிவில் அந்த மண்டபத்தின் படத்தைப் போட்டுருக்கார்.

ஏகப்பட்ட கல்வெட்டுகள் இங்கே கிடைச்சதுன்னும் சொல்றாங்க. பிரகாரச்சுவற்றில் கூட பழைய தமிழ் எழுத்துகளைப் பார்க்கலாம்.

ஜடாயுவை தன் தொடையில்  வைத்துள்ளாராம்  மூலவர்.அதுக்கும் சேர்த்தே தைலக்காப்பு. மூலவர் ஸ்ரீ விஜயராகவப்பெருமாளுக்கு  இருபுறமும் தேவிமார் உண்டு.  ஜடாயுவுக்கு மூட்டின சிதையின் சூடு தாங்காமல்  ஸ்ரீதேவி ,பூதேவி நாச்சியார் இடம் மாறி அமர்ந்து இருக்காங்க.

ராமாவதாரம் ஏகபத்னி ஸ்பெஷல் இல்லையா?அதெப்படி ரெண்டு தேவிகளும் மூலவரோடு இருக்காங்க என்பது  மனசின் ஓரத்தில்  இப்போ எழுந்த கேள்வி.


ஜடாயுவுக்கு தனி சந்நிதி உண்டு. பெருமாள் புறப்பாட்டின்போது இவரும் கூடவே கிளம்பிடறாராம்.

பிரகார மண்டபங்களில் ஒரு பக்கம் வாகனங்களுக்கு  அறைகள் கட்டி உள்ளே வச்சுருக்காங்க. ரொம்பநல்லது. சீக்கிரம்  கேடு வராமலிருக்கும். கோவிலுக்கு வெளியே,உள்ளேன்னு டபுள் பார்க்கிங் ஸ்பேஸ்.


கோவில் சுத்தமா இருக்கு என்றாலும் கண்டாமுண்டா சாமான்களை எடுத்து சீராக்கி அடுக்கி வச்சுருந்தால் இன்னும் நல்லா  இருக்கும்.

ஸ்ரீராமனே ஈமக்ரியை செய்த இடமென்பதால்  பித்ரு தர்ப்பணங்கள்  செய்ய இந்த ஊர் விசேஷம்.தைஅமாவாசையில் கூட்டம்  நெரியுமாம்.

பொதுவா ஒரு கோவிலுக்குப்போனால்   குறைஞ்சபட்சம்  ஒருமணி நேரமாவது இருந்து சுற்றிப்பார்க்கணும் என்று எனக்கு விருப்பம். ஆனால்   ஒருநாள் மட்டுமே காஞ்சியில் தங்கல் என்பதால் ஓடியோடிப் பார்க்கும்படி ஆச்சு.   இதோ கிளம்பி மறுபடி காஞ்சி நகரத்துக்குள் போய்ச் சேர்ந்தோம்.

 தொடரும்...............:-)




Wednesday, February 26, 2014

சங்கர மடத்துக்குள்ளே ...............


தெருமுழுசும் அடைச்சு நின்னிருக்கும் கூட்டம் பார்த்து ஒரு  கணம் அரண்டுதான் போனேன்.  பட்டரிடம் பேசிக்கொண்டிருந்த நபரும்  'இன்று  சங்கரமடத்தில் ஆராதனை. அதுக்குத்தான் வந்தேன் ' என்றார்.  அதான் என்னன்னு பார்க்கணும்.


இந்த அடுக்கு மாடங்கள்  இருப்பது சங்கரமடத்தில். பராமரிப்பு வேலைகள் நடக்குது இப்போ.



நியூஸியின் நம்ம தோழியின் வீட்டுக்கு ஒரு விஸிட் போனபோது அங்கே 'சம்மர் க்ளீனிங் செஞ்சுக்கிட்டு இருக்கோம்.  அலமாரியைச் சுத்தம் செய்யும்போது  இந்த செட் கிடைச்சது'ன்னு ஏழு புத்தகங்கள் உள்ள தொகுப்பைக் காட்டி, நீங்க படிச்சுட்டுத்தாங்கன்னு சொன்னாங்க.



மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்.  வானதி பதிப்பக வெளியீடு.

அப்போ கொஞ்சநாள் முந்திதான் நம்ம வல்லியம்மா  'கலியுக வரதன் கண்ணன் காட்சி கொடுப்பது காஞ்சியிலே'ன்னு ஒரு பதிவு போட்டுருந்தாங்க.

அது நினைவுக்கு வரவே சம்பவத்தை தோழியிடம் சொன்னபோது,  இது இந்தப் புத்தகங்கள் ஒன்றில் இருக்குன்னாங்க.  ஆஹான்னு எடுத்து வந்தவள் தினமும் தூங்குமுன் வாசிப்புன்னு  கொஞ்சம் கொஞ்சமா  மூணு புத்தகங்களை முடிச்சுட்டு நாலாவதில் பாதியில் இருந்தேன்.  அப்போதான் நம்ம இந்தியப்பயணம் ஆரம்பிச்சது. வந்து வாசிக்கலாமுன்னு  நியூஸி வீட்டுலே வச்சுட்டு வந்திருந்தேன். இந்தப்பதிவு எழுதும் சமயம்  மொத்த தொகுதியையும் வாசித்து முடிச்சு புத்தகங்களைத் தோழிக்குத் திருப்பிக் கொடுத்தாச்சு



புத்தகத்தில் இருக்கும் சம்பவங்கள் ஒவ்வொன்னும்  அவர்மேல்  இருக்கும் மதிப்பை உயர்த்தியதால்   நடமாடும் தெய்வம் என்று அவர் பக்தர்கள் சொன்னது  ரொம்பச் சரி என்று தோணுச்சு.  அவர் மேல் பக்தியும் அன்பும் மனசில் வந்தது உண்மை.

சங்கரமடத்துக்கு  ஒருநாப்பது வருசத்துக்கு முந்தி  என் அறைத் தோழியுடன் போயிருக்கேன். தோழியின் வீடு காஞ்சிபுரத்தில்.  தினமும் சென்னைக்கு வந்து போவதில் சிரமம் இருக்குன்னு  ஹாஸ்டலில்  எங்களோடு இருந்தாங்க. மாதம் ரெண்டு முறை வீகெண்ட் விஸிட்  உண்டு. அப்படிப்போனப்பதான் ஒருமுறை நானும் போயிருந்தேன்.  ஊரைச்சுற்றிப் பார்த்துக்கிட்டு இருந்தப்ப, இதுதான் சங்கரமடம்னு சொல்லி அதுக்குள்ளே சட்னு நுழைஞ்சதும்   முதலில் எனக்கு ஒன்னும் புரியலை. ஒரு முற்றத்தை அடுத்திருந்த  பெரிய வெராந்தாவில் மணையில் அமர்ந்து இருந்தவரை நாங்கள் இருவரும் விழுந்து வணங்கினோம். கல்கண்டு  பிரசாதம் கிடைச்சது.  வெளியே வந்தபின்  அவர் யாருன்னு  கேட்டேன்.  சங்கராச்சாரியார் என்றும்  பெரியவர் வேறு இடத்தில்  தவம் செய்கிறார்.  இவர்  புதுப்பெரியவர். என்றாள். எனக்கு அப்போ அவ்வளவா  விவரமில்லை.  மனம் முழுக்க  அஞ்ஞானம்:(  இப்போ ஞானியான்னு கேக்காதீங்க. குறைஞ்சபட்சம்  உலக அறிவு ஒரு சதவீதம்  வந்துருக்கு:-)

ஆதிசங்கரரே ஸ்தாபிச்சது  இந்த காஞ்சி காமகோடி பீடம் என்றே  பலரும் சொல்கிறார்கள்.  நம்ம மகாபெரியவர் ஸ்ரீ  சந்த்ரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இந்த மடத்தின்  68வது பீடாதிபதியாக பலவருசங்கள் இருந்து,பின்பு புதுப்பெரியவர்  என்ற  ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ,அறுபத்தியொன்பதாவது  பீடாதிபதியாகப் பொறுப்பேற்றுக் கொண்டதும் தவம் செய்ய  தேனம்பாக்கம் என்ற சிறு கிராமத்துக்கு (இதுவும் காஞ்சிக்கு அருகில்தான் இருக்கு) போய்விட்டார்.


கூட்டத்தில் நீந்தி  உள்ளே போனோம். அங்கங்கே எதோ  நீண்ட வரிசைகள். மூங்கில் கூடையில்  இருந்து என்னவோ பிரசாத விநியோகம் செய்யறாங்க.  இதுக்கிடையில் போவோரும் வருவோருமா இருக்காங்க. எங்கே போறோமுன்னு ஒரு விவரமும் இல்லாம உள்ளே போகும் மக்களைப் பின்தொடர்ந்து  போறோம்.

ஒரு  பெரிய ஹாலில் மக்கள்ஸ் நெருக்கியடிச்சுத்  தரையில் உக்கார்ந்துருக்காங்க. எனக்கு திகிலாப் போச்சு, எல்லோரும் எப்படி எழுந்துக்குவாங்கன்னு! நம்மை வச்சுத்தானே எல்லா எண்ணமும் வருது.  எல்லோருக்கும் என்னைப்போல் முட்டி வலி இருக்காதுன்னு   அப்புறம் தோணுச்சு. அவர்கள் பார்வை போகும் திக்கில்  கண்ணை ஓட்டினேன். தூரத்தில் பூஜை ஒன்னு நடந்துக்கிட்டு இருக்கு.   இவர் இப்ப இருக்கும்  புது சங்கராச்சாரியார்னு  கோபால் சொன்னார்.  ஓ.... அப்ப அங்கே நடப்பது சந்த்ரமௌளீஸ்வரர் பூஜையா இருக்குமுன்னு சொன்னேன். மூணரைப்புத்தக வாசிப்பில் கிடைச்ச தகவல்களை பயன்படுத்த வேணாமா? :-)

மேலே உள்ளது வலையில் சுட்டது.  ஆண்டவருக்கு நன்றி.

இங்கிருந்தே ஒரு கும்பிடு. நகர்ந்து  அடுத்த வாசலில்  போனதுமே  கோவிந்தா  கோபாலான்னு  பஜனைக்குரல் கேக்குது. இந்த  ஹால் ரொம்பப்பெரூசு.  ஆனால்  இங்கேயும் நல்ல கூட்டம்.  கூட்டத்துக்கு நடுவில் வீடியோ எடுத்துக்கிட்டு இருக்காங்க பலர். இன்னும் சிலர் நிகழ்ச்சியை செல்லில் பதிவு பண்ணறாங்க. அப்பதான் தோணுச்சு,  உள்ளே நுழைஞ்சது முதல்  கெமராவை க்ளிக்கவே இல்லையேன்னு.

பஜனை பாடுபவர்  ரொம்ப  புகழ் பெற்றவராம். பெயர் விட்டல்தாஸ் என்று விவரம் சொன்னவர் நம்ம கோபால்தான்.  எப்படி இதெல்லாம் இவருக்குத் தெரியுமுன்னு எனக்கு வியப்புதான்.  நிறைகுடம்!

இந்தப் பக்கத்துலே  இன்னொரு பூஜை நடக்குது. ஆராதனைன்னதும் சரியா விவரம் ஒன்னும் தெரியாம வந்துருக்கேன்.  இன்னிக்கு  மகா பெரியவாளின்  வருஷாப்திகமாம். இருபது  வருசங்களாகி  இருக்கு அவர்  விண்ணுலகம் ஏகி.  இப்போ பூஜை நடப்பது அவருடைய அதிஷ்டானத்துக்கு!  லேசாப் புரிஞ்சது  இது  பெரியவரின் சமாதி என்று.   எனக்குத் தெரிஞ்சவரை ப்ருந்தாவனம் என்று தான் அம்மம்மா சொல்வார்கள்.

திண்ணைபோன்ற  கொஞ்சம் உயரமான  இடத்தில் நின்னாலும்  கேமெராவை எடுத்துக்கிளிக்க  இடமில்லாமல் கூட்டத்தில் நசுங்கிப் போய்க்கிட்டே இருக்கேன்.  கோபால் கேமெராவை வாங்கி  கையை நல்லா உயர்த்தி  சில படங்கள் எடுத்தார். தாளமுடியாத ஒரு கணத்தில் சட்னு அங்கிருந்து இறங்கி வேற வழியில் வெளியே போனோம்.

வழியில்  கண்ணாடிச் சுவருள்ளில்  பெரியவரின் உருவச்சிலை.  நல்ல ஜீவகளையோடு  இருக்கு.  பிரதிபலிப்பின் காரணம் படம் சரியா வரலை:(

காஞ்சி மடத்தில்  நமக்குக் காணக்கிடைச்ச  இடங்களில் எல்லாம் யானையோ  யானை!  ரொம்பப்பிடிச்சதுன்னு  தனியாச்சொல்லணுமாக்கும்:-))))



மடம் ரொம்பவே பெருசுபோல.  விசேஷம்  இல்லாத ஒரு நாள் வந்தால்  ஆற அமர சுற்றிப்பார்க்க விடுவாங்களான்னு................    தெரியலையே:(

கிளம்பி வெளிவரும்போது  யாரோ நம்ம கையில்  என்னமோ திணிச்சாங்க. என்னன்னு பார்த்தால்  ஐஸ்க்ரீம்! மடத்துக்குள் வரும் யாரையுமே  சாப்பாடுபோடாமல் அனுப்புவதில்லையாம்(புத்தகத்தில் இருந்தது)

இன்றைக்கு  மடத்துள்ளே  வெவ்வேறு  கூடங்களில்   வேதபாராயணம்,  ருத்ரம்  சொல்லுதல் எல்லாம் நடப்பதால் அதெல்லாம் முடிஞ்சு  இலை போட  நாலுமணி ஆகுமுன்னு  யாரோ  சொல்லிக் கொண்டிருந்தார்.

நமக்கு சரவணபவனில் சாப்பாடு!

தொடரும்..........:-))


PIN குறிப்பு: நேத்து காலையில் காஞ்சி வரும் வழியில் பெரியசிவன் சிலையும் நந்தி சிலையும் கண்ணில்பட்டதுன்னு சொன்னேன் பாருங்க.  அதைப்பற்றிய விளக்கம் ஒன்னு நம்ம கீதா சாம்பசிவம் பதிவிலிருந்து இன்று காணக் கிடைச்சது.  அதில் ஒரு முக்கியபகுதி கீழே!

"சங்கரமடம் மற்றும் அதன் பக்தர்கள் இணைந்து 65 அடி உயர சிவன் சிலையும், 32 அடி உயர நந்தியையும் இங்கு உருவாக்கியுள்ளனர். சுப்பையா என்ற சங்கர மடத்தின் ஆஸ்தான ஸ்தபதி இந்தச் சிலைகளை உருவாக்கியுள்ளார். "


அவுங்க பதிவில் தெளிவான  படங்களும் இருக்கு. ஒரு நடை அங்கேபோய் எட்டிப்பார்த்து மகிழலாம்.








Monday, February 24, 2014

மனிதன் பாதி மிருகம் பாதி கலந்து வந்த கலவை

பனிரெண்டு மணிக்குக் கோவிலை மூடிருவாங்களேன்னு வண்டியிலிருந்து இறங்கி அரக்கபரக்க ஓடினோம். விளக்கொளிப்பெருமாள் கோவிலில் இருந்து  முன்னூறு மீட்டர் தூரத்தில்தான் இருக்கார் அழகிய சிங்கர். ஆளரின்னு அன்றே ஆழ்வார் சொல்லி வச்சுருக்கார்!!!!

நம்ம ஸ்ரீயின் பதிவில் இருந்து சுட்ட படம் மேலே! மனம் நிறைந்த நன்றி ஸ்ரீ

கோவில் பூட்டி இருக்கு.  ஒரு ரெண்டு மூணு பேர் நம்மைப்போல பேந்தப்பேந்த முழிக்க,  பட்டர் வந்துக்கிட்டு இருக்கார்னு  இன்னொருத்தர் சேதி சொன்னார்.  அவர்தான் கூப்பிடப் போனாராம். கொடிமரம் மட்டும் நெடுநெடுன்னு  நிக்க பெரிய திருவடியின் சந்நிதி. குட்டிக்கதவுகள்.  இருட்டுக்குள் எட்டிப்பார்த்து கன்னத்தில் போட்டுக்கிட்டு 'ஆஜர் ஹோ' சொன்னேன்.

காலை  ஏழு முதல்  பதினொன்னு, மாலை அஞ்சு முதல் ஏழரை மட்டும்தான் கோவில் நேரங்கள்.  முதலிலேயே தெரிஞ்சுருந்தால்   இப்படிச்  சரியா  பகல் பனிரெண்டு மணிக்கு வந்து  நிக்கமாட்டோம்.

அது என்ன எல்லாக் கோவில்களையும்  உச்சிகாலபூஜை முடிஞ்சு சாயங்காலம் அஞ்சு வரை மூடி வச்சுடறாங்க?  முந்தி ஒரு காலம் போலவா..... இப்பதான்  சுற்றுப்பயணம், கோவில்விஸிட் எல்லாம் கூடிப்போயிருக்கே......  அதுக்குத் தகுந்தாப்போல்  கோவிலைத் திறந்து வைக்கும் நேரங்களை மாத்தி அமைக்கக்கூடாதா?  பூஜை செய்பவர்கள் ஷிஃப்ட் முறையில் வந்தால் கூடப்போதுமே.

மனசு இப்படி  ஏடாகூடமாக நினைச்சாலும்,  நடைமுறையில் சரிவருமான்னு தெரியலை. ரொம்பப்பெரிய கோவில் என்றால் பகல் முழுசும் திறந்துதான் இருக்கு . இந்த மாதிரி  கொஞ்சம் சின்னக் கோவில்களை (ஆனால் புகழ்பெற்றவை கேட்டோ!) நாள் முழுசும் திறந்து வச்சால் அர்ச்சகர்/பட்டர்  உண்மையில் தேவுடுதான் காக்கணும்.  அங்கே அம்மும் கூட்டம்  மாதிரி  இங்கும்  மக்கள்ஸ் வந்தால்தானே?

இந்தக் கோவிலின் கதையும்   போன ரெண்டு பதிவுகளில் பார்த்த அந்த ப்ரம்மா X சரஸ்வதி சம்பவத்தின் தொடர்ச்சிதான்.   யாகத்தைக் கெடுக்க அரக்கர்களை மீண்டும் அனுப்பறாங்க  அம்மையார். என்னடா இது  நிம்மதியா ஒரு யாகம் செய்ய முடியலையேன்னு ப்ரம்மா கலக்கத்தோடு  மஹாவிஷ்ணுவிடம்  உதவி செய்து காத்தருளும்படி வேண்ட,  அவரும் அரக்கர்களுக்கு  சிம்மசொப்னமா இருக்கட்டுமுன்னு நரசிம்மர் உருவிலே வந்து அரக்கர்களையெல்லாம் ஓட ஓட  விரட்டிட்டு, இனி  நீ யாகத்தைத் தொடங்குன்னு சொல்லி  இங்கேயே  யோக நரசிம்மராக,  மேற்கு நோக்கி  அமர்ந்தாராம்!

என் நெருங்கிய தோழியின் இஷ்ட தெய்வம்  நரசிம்மர்தான்.  சிங்கம் என்றாலே ஒரு பயம் வந்துருமேன்னு  நான் சொல்ல,'அவரைப் போன்ற கருணை உள்ளம் யாருக்குமே இல்லை.  சரணம் என்று சொன்னாலே ஓடோடிவருவார் காப்பாற்ற!   குழந்தை ப்ரகலாதன் ,'ஆமாம். இங்கே இருக்கார்னு சொன்ன உடனே    எப்படி  தூணைப்பிளந்து வந்து  காப்பாற்றினார்'னு சொன்னாங்க.....  

"ஆமாம்..... குழந்தை எந்தத் தூணைக் காண்பிப்பான்னு  தெரியாததால்  அங்கே சபையிலிருந்த அத்தனை தூண்களிலும் ரெடியாக நின்னுக்கிட்டு இருந்தாராம். ஒரு உபன்யாசத்தில்கேட்டுருக்கேன்.  ஹைய்யோ... என்ன ஒரு ஸ்நேகமுள்ள சிம்ஹம்! "

சந்நிதி முன் நிற்கும்போது  தோழியை நினைக்காமல் இருக்க முடியலை!

மூலவர் பெயர்  முகுந்தநாயகன்   மற்றும் அழகிய சிங்கர்.
தாயார் வேளுக்கை வல்லி என்ற  அம்ருதவல்லி  என்கிற பெயரில்!
இந்தக் கோவில்  இருக்கும் இடத்துக்கு  திருவேளுக்கை என்ற பெயர் .

அந்தக் காலத்தில்  எல்லாமே ரொம்பக்கிட்டக்க கிட்டக்க, சின்னசின்ன தொகுப்புகளா அமைஞ்சிருக்கும்  இடங்கள்  ஒவ்வொன்னுக்கும் ஒரு ஊர்ப் பெயர் இருந்துருக்கு போல!  திருவெஃகா, திருத்தண்கா, தூப்புல், திருவேளுக்கை இப்படி.  இப்ப அதெல்லாம் காஞ்சி நகருக்குள்ளே இருக்கும் பேட்டைகளா இருக்கு.

இதோ.... கொத்துச்சாவியுடன் பட்டர்  வேகநடையில் வர நாங்கள் (மொத்தம் ஆறுபேர்)  அவரைத் தொடர்ந்து ஓடினோம். ஆளரியின்  தரிசனம் ஆச்சு. இங்கேயும் உற்சவர் சிரிச்ச முகத்தோடு ' பெரியவர்  எண்ணெய் தேய்ச்சுண்டு  உள்ளே இருக்கார்' னு சொன்னார்.

கோவிலுக்கு  எதோ காசோலை கொடுத்தார் ஒருவர்.  பட்டர் அதை வாங்கிக்கிட்டே....   கோவிலுக்கோ இல்லை எதாவது தர்ம ஸ்தாபனங்களுக்கோ வெறும் காசைத் தூக்கித் தர்றதைவிட  அவுங்களுக்கு அப்போதைய தேவை என்னன்னு பார்த்து பொருளா வாங்கித் தர்றதுதான் உத்தமம் என்றார். முக்கியமா ஆதரவற்றோர் பள்ளிகளுக்கு  நிறையச் செய்யலாம்.  குழந்தைகளுக்குத் தேவையான  சிலேட்டு, பல்ப்பம், பேனா, நோட்புக், புத்தகமுன்னு  எவ்ளோ வேண்டி இருக்கு.  பெருமாள் கூட  கோவிலுக்கு கொடுப்பதைவிடக்   கல்வி நிறுவனங்களுக்குக் கொடுத்தால்  சந்தோஷப்படுவார்  என்றது எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு.  உங்க பெயரென்னன்னு  கேட்டேன்.  எதுக்கும்மா?  நல்லதை யார் வேணுமுன்னாலும் சொல்லலாமேன்னார்!

பரபரன்னு வந்ததைப்போல அதே வேகத்துடன் கோவில்கதவை இழுத்துப் பூட்டிட்டு கிளம்பினவரிடம் ஒன்னும் சொல்லத் தோணலை.   அப்புறம் தான்  ஞாபகம் வருது கோவிலைச் சுத்திப் பார்க்கலையேன்னு:(  படங்களையும்  எடுக்கலை. நேரமிருந்தால்  இன்னொரு முறை வரணும்.  ஆனால்  வாய்க்கலையே:(

அப்புறம் நியூஸி வந்தபின் நம் ஸ்ரீ எழுதும் 'இணைய நண்பர்களுக்காக  பதிவில் போய் படங்களை ரசித்தேன்.  நீங்களும் கண்டு மகிழலாம்.



காசோலை கொடுத்த நபரிடம், என்ன இன்றைக்கு  தரிசனமுன்னு ( ரொம்பத் தெரிஞ்சவரா இருக்கணும்) பட்டர்  குசலம் விசாரித்தபோது , நமக்கொரு  சேதி கிடைச்சது. ஒரு எட்டு அங்கே போய்ப் பார்த்துட்டு சரவணபவன் போகணும்.

தொடரும்........:-)