Wednesday, February 19, 2014

சொன்ன பேச்சைக் கேட்டவன்!

அஷ்டபுயங்கரத்தானில் இருந்து கிளம்பின  மூணாவது நிமிசம் கோவில் கோபுரம் கண்ணில் பட்டது.  அட! இவ்ளோகிட்டவா இருக்குன்னு வியப்புதான்!  சரியாச் சொன்னால் வெறும் 650 மீட்டர் தூரமே!



பெரிய திருக்குளம் கண்ணில் பட்டது.  பொய்கை!  இதில்  ஒரு பொற்றாமரையில்தான் அவதரித்தார் பொய்கை ஆழ்வார்.  பனிரெண்டு ஆழ்வார்களில் முதல்வர்  இவரே!


திருவெஃகா என்பது  இத்தலத்தின் பெயர்.  இதை திருவெக்கா, திரு வேகான்னு  கூடச் சொல்றாங்க.  இங்கத்துப் பெருமாளுக்கு வேகா, ஸேதுன்னும்  பெயர்கள் உண்டு.

பிரம்ம லோகத்தில் சரஸ்வதி வீணை வாசிக்க,  ப்ரம்மா தாமரைப்பூவில் அமர்ந்து அதைக் கேட்டுக்கிட்டேஇருக்கார். மற்ற தேவர்களும் முனிவர்களுமா சபை நிறைஞ்சு இருக்கு. எல்லோரும் மகிழ்ச்சியா இருந்தால் கூட சில பெரியவர்களுக்குப் பொறுக்காது போல!

 மஹாலக்ஷ்மி, சரஸ்வதி இவர்களில் யார் சிறந்தவர்ன்னு ப்ரம்மாவிடம் விநயமாகக் கேட்டார்  ஒருவர்.  (கொளுத்திப்போட்டுட்டார்யா.... கொளுத்திப்போட்டுட்டார்...... )   ப்ரம்மா  ஒருவிநாடி கூட யோசிக்காமல் மஹாலக்ஷ்மின்னார் . எப்படின்னு  விவரம் சொல்லுங்கன்னதும்,  மஹாவிஷ்ணுவின் மார்பில் உறைவது  மஹாலக்ஷ்மி இல்லையோன்னார்.

கணவர் தன்னை  ஒசத்தியாச் சொல்லலைன்னு  கலைவாணிக்கு  லேசா ஒரு கோபம் முளைக்குது.

கொளுத்துனவர்,சும்மா இருக்காமல் பூலோகத்தில்  கங்கை நதி, சரஸ்வதி நதி இதில் எது சிறந்தது?  என்றுகேட்க,  ப்ரம்மா உடனே  'கங்கைதான். அதுதானே  பெருமாள் காலைத் தொட்டு, அதான்பின் பூமிக்கு வருது' ன்னதும்  சரஸ்வதியின் கோபம்  சரசரன்னு அதிகரிச்சு ப்ரம்மலோகத்தை விட்டு நீங்கி, பூலோகத்தில் சரஸ்வதி நதிக்கரையில் வந்து  தவம் செய்ய  உக்கார்ந்துட்டாங்க.

காஞ்சியில்  ஒரு யாகம் செய்ய ப்ரம்மா உத்தேசிச்சு இருந்த சமயம் அது. யாகத்துக்கு   மனைவியுடன்  மணையில் இருக்கணும் என்பது சாஸ்த்திர விதி. வசிஷ்ட்ட முனிவரிடம் சேதி சொல்லி சரஸ்வதியைக்கூட்டி வரணுமுன்னு கேட்டுக்கிட்டார். முனிவர் போய் காரியத்தைச் சொன்னாலும், பிடிவாதமா இருந்த சரஸ்வதி,வரமாட்டேன்னுபோய்ச் சொல்லுங்கன்னு முனிவரைத் திருப்பி அனுப்பிட்டாங்க.

சரி போகட்டுமுன்னு விட்டுட்டு ப்ரம்மா தன்னுடைய இன்னொரு மனைவி சாவித்திரியுடன் யாகம் செய்ய ஆரம்பிச்சுட்டார்.  இந்த யாகத்தைக் கலைக்கணுமுன்னு வந்த அசுரர்கள், சமாச்சாரம் தெரிஞ்சதும் நேரா சரஸ்வதிகிட்டே போய்   பிரம்மாவை பற்றிக் கோள்மூட்டி, 'அங்கே உம்முடைய  வீட்டுக்காரனின் ஸ்மால் ஹௌஸ் மணையில் இருக்கா'ன்னதும் சரஸ்வதிக்குக் கோபம் தலைக்கேறி,வேகவதி நதியாக  உருவெடுத்து சீறிப்பாய்ஞ்சு யாகசாலையை அழிக்க வர்றாங்க. மஹாவிஷ்ணு உடனே    சேஷனுடன் வந்து அந்த ஆற்றின் குறுக்கே படுக்கையைப்போட்டு வெள்ளத்தைத் தடுத்து நிறுத்திட்டார். அந்த இடமே வேகா என்றுபெயர் பெற்று காலப்போக்கில் வெஃகான்னு ஆகி இருக்காம்.



கோபுரவாசல் கடந்து  உள்ளே போனதும்  பலிபீடமும் கொடிமரமும்.   மூலவர் சந்நிதிக்குப்போகுமுன்  கோவிலை வலம் வந்தோம். பெரிய முற்றத்தில் அங்கங்கே சந்நிதிகள்.  கோவிலின் அம்சம் இல்லாமல் சாதாரணக் கட்டிடமும் அறைகளுமாத்தான் இருக்கு! கருவறை விமானங்கள் மட்டும் கட்டிடத்துக்குள்ளே இருந்து  எட்டிப்பார்க்கின்றன.







 கோபுரவாசலில் இருந்து இடது பக்கம் திரும்பினால் ஆண்டாள் சந்நிதி.  பூமாலை அலங்காரத்துடன் ஆளுயரஆண்டாள். அருகில் ஒரு பட்டர் திருப்பாவை சொல்லிண்டு இருந்தார். மார்கழிமாசம் இல்லையோ! அதான் கவனிப்பு.





பொய்கை ஆழ்வார் அவதார மண்டபம், பவித்ரோத்ஸவ மண்டபம் எல்லாம் சமீபத்திய  காங்க்ரீட்  சமாச்சாரம்.


 பழைய மண்டபங்கள் ஒன்னுரெண்டு இருந்தாலும் பராமரிப்பு என்னும் பெயரில்  வெள்ளையடிச்சு வச்சுருக்காங்க.கற்றூண்களில் இருக்கும் சிற்பங்கள் எல்லாம்  மூக்குமுழி தெரியாமல்  வெள்ளையோ வெள்ளை:(

இங்கே தாயார்  கோமளவல்லி  என்ற பெயரில் தனிச் சந்நிதியில். ரொம்பவே சாதாரணக் கட்டிடம்:(

மூலவர் யதோக்தகாரி தரிசனம்  நல்லாவே கிடைச்சது.  பெருமாள்   புஜங்க சயனமா மேற்கு  நோக்கிக் கிடக்கார். அநந்த சயனம் என்றால் பொதுவா கிழக்கு  நோக்கிக் கிடப்பதுதான் வழக்கம். ஏன் திசை மாறிக்கிடக்கார்ன்னா அதுக்கும்  'கதை' ஒன்னு இருக்கு.

 நடந்தது என்ன?  நம்ம  திருமழிசை   ஆழ்வாருக்கு ஒரு சிஷ்யப்பிள்ளை இருந்தார். பெயர், கணி கண்ணன்.  ஆசானும் சீடருமா காஞ்சியில் இருந்து பெருமாளுக்குக் கைங்கர்யம் பண்ணிக்கிட்டு இருக்காங்க.  அப்ப இவுங்க சேவையில் பங்கெடுத்து உதவி செய்த ஒரு  மூதாட்டியை, ஆழ்வார்  தன்னுடைய   சக்தியைப் பயன்படுத்தி   பேரழகுள்ள இள மங்கையா மாத்திடுவார்.

விவரம் தெரியாத  அவ்வூர் மன்னன் பேரழகியைக் கல்யாணம் பண்ணிக்குவார். கொஞ்ச நாள் கழிச்சு பேச்சு வாக்கிலே   மனைவி இந்த அதிசயத்தை  மன்னரிடம் சொல்லப்போக, அவரும் திருமழிசையைப் பார்த்து என்னையும் இளைஞனா மாத்தியே ஆகணுமுன்னு கேட்டுக்கறார்.  முடியாத காரியம்னு திருமழிசை மறுக்க,அப்படீன்னா இந்நாட்டை விட்டு  வெளியேறுன்னு கடுமையா ஆணை போட்டார்.

குரு கிளம்புனதும் சிஷ்யனும் கூடவே கிளம்பறார்.  இவுங்க போயிட்டா நமக்கு யாரு  ஸேவை செய்யப்போறாருன்னு பெருமாள் முழிக்க,

கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டாம்
துணிவுடைய செந்நாப்புலவனும் போகின்றேன் நீயும்
உன் பைநாகப் பாயை சுருட்டிக்கொள்'

'இதா பாரு...  கணிக்கண்ணன்  (என்னோடு) கிளம்பிட்டான். நீ என்னத்துக்கு இன்னும் இங்கே படுக்கைப் போட்டபடி கிடக்கே? உன் பாம்புப் பாயைச் சுருட்டிக்கிட்டுக் கிளம்பு'ன்னு  சொன்னதும்  மறு பேச்சுப்பேசாம  பாயைச் சுருட்டிக்கிட்டுக் கிளம்பிட்டான் எம் பெருமாள். பெருமாள் கிளம்புனதும் கூடவே மஹாலக்ஷ்மியும்  கிளம்பிட்டாள்.  மச்சான் போறதைப் பார்த்துக்கிட்டுச் சும்மா நிக்க முடியுமா? சிவன் & ஃபேமிலியும்  மூட்டையைக் கட்டிருச்சு. மற்ற தேவர்கள் எல்லாம் படை போல் பூமி அதிரக்   கூடவே கிளம்பிட்டாங்க.

எல்லாம் கிளம்பி வரிசையாப் போறாங்க. ஸ்ரீதேவி  போனதும் நாட்டின் செல்வம், அழகு எல்லாம்  சட்னு மறைஞ்சுருது.  தரித்திர தேவதையான அக்கா மூதேவி  இடம்பிடிக்க ஓடி வர்றாள்.  எல்லாத்தையும் பார்த்த மன்னனுக்கு  திகிர்னு கிலி பிடிச்சது. 'ஐயோ வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இல்லாமல்  நானே அழிவைத்  தேடிக்கிட்டேனே'ன்னு பதறி, ஓடிப்போய்  திருமழிசை காலில் விழுந்து 'என்னை மன்னிச்சுடுங்கோ.அறியாமையால்  இப்படி அசட்டுத்தனமா நடந்துக்கிட்டேன்'னு அழறார்.

போயிட்டுப்போறது போன்னு மன்னிச்சுட்டு,  சிஷ்யப்பிள்ளையைப்பார்த்து  'வா, நாம் இந்த ஊருலேயே  இருக்கலா'முன்னு சொல்லித் திரும்பி வர்றார். கூடவே போன பெருமாளும்,பாயும், பட்டாளமும்  கூடவே திரும்பி வர்றாங்க.

  கக்கத்துலே சுருட்டிவச்ச பாயுடன் பெருமாள்  இப்ப என்ன செய்யணும்னு தெரியாம திருதிருன்னு முழிக்கிறார்.  சுருட்டச் சொன்னவர் விரிக்கச் சொல்லலையே?  இப்படியே நிக்கணுமான்னு யோசனை. இந்தப் பாம்பு என்னா கனம் கனக்குதுன்னு  பாரேன்னு மனசுக்குள்ளே புலம்பறார். ஆயிரம் தலையுடைய சேஷன் இல்லையோ!  ஆழ்வார் பார்த்தார். அடடா....

(உண்மையிலேயே பாம்பு  பயங்கர கனம்தான். ஜஸ்ட்  உடம்பைக் கொஞ்சம் தூக்கிப் பார்த்ததே  போதுமுன்னு ஆச்சு. இதுலே ஐஸ் கட்டியைத் தொட்டது போல சில் வேற.  முன்பொருக்கில்  சிங்கை ஜூவில்  மகளுக்கு மலைப்பாம்பைத் தோளில் போட்டுப் படமெடுத்துக்கணுமுன்னு  ஒரே ஆசை. சரின்னு  தலை ஆட்டி வச்சேன்.  இவள் கொஞ்சம் கூடப் பயமே இல்லாமல்  கழுத்துலே போட்ட பாம்பை வருடிக்கொடுக்கிறாள். இதுலே  நீயும் வந்து  தொட்டுப்பாருன்னு    என்னையும் பலமுறை கூப்பிட்டதும்  சரின்னு போய்ப் பக்கத்தில் உக்கார்ந்து   வாலைத் தொட்டுத் தூக்கிப் பார்த்தேன்.)

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ நிற்க வேண்டாம்
துணிவுடைய செந்நாப்புலவனும் போக்கொழிந்தான் நீயும்
உன் பைநாகப் பாயில் படுத்துக்கொள்

ஓக்கேன்னுட்டு பாயை விரிச்சுட்டு அப்பாடான்னு  கிடந்தான். அவசரமாப் பாயைப்போட்டதில் இடப்பக்கம் இருக்க வேண்டிய தலையணையும் அரவக்குடையும்   வலது பக்கம்  வந்துருச்சு. அப்படியே ஓடிப்போய் படுக்கையில் விழுந்தவன் இன்னிக்கும்  அப்படியே  கிடக்கிறான்.  இதேபோலத்தான் திருவெட்டாறு ஆதிகேசவனும் மேற்கே பார்த்துப் புஜங்க சயனத்தில் கிடக்கான். அவனுக்கு அங்கே கதை வேற போல!:)

சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்று அழகுத் தமிழில் பெயர் இருந்தாலும்  யதோக்தகாரி (இதையுமே யதோத்காரி என்றுதான் ) பெருமாள் கோவில் என்றே  மக்கள்ஸ் சொல்றாங்க.

பெருமாளே சொன்னதைக் கேக்கறான்.   வெறும் ஆளோ? ஹூம்............

தொடரும்......:-)





18 comments:

said...

வணக்கம்

தங்களின் பயணம் பற்றிய அனுபவம் நன்றாக உள்ளது... படங்களும் அழகு
வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

said...

நீங்க வேற துளசி. சில சமயம் அவனுக்குக் காது கேக்கறதில்ல. நாமும் ஆழ்வார் இல்லையே>(

said...

முன்பொருக்கில் சிங்கை ஜூவில் மகளுக்கு மலைப்பாம்பைத் தோளில் போட்டுப் படமெடுத்துக்கணுமுன்னு ஒரே ஆசை. சரின்னு தலை ஆட்டி வச்சேன். இவள் கொஞ்சம் கூடப் பயமே இல்லாமல் கழுத்துலே போட்ட பாம்பை வருடிக்கொடுக்கிறாள்..

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் இந்தமாதிரி பாம்பு ,உடும்பு போன்ற பிராணிகளை கழுத்தில் போட்டு சிரித்தவாறு மகன் எடுத்து அனுப்பிய படங்களைப்பார்த்து நடுங்கிப் போனேன் நான்..

இந்தியாவில் இருந்த போது கரப்பான் பூச்சியைப்பார்த்து பயந்த சிறுவனா இவன் என ஆச்சரியம் எழுந்தது..!

said...

பாம்போடு, அழகிய புன்னகையோடு மகளை பார்த்ததும் அசந்து தான் போனேன். கொஞ்சம் கூட பயமில்லை என்பது தெரிகிறது .
கதைகளோடு நல்ல பயணம் எங்களுக்கும் , நன்றி துளசி !!

said...

வாங்க ரூபன்.

வணக்கம்.

தொடரும் ஆதரவுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

வாங்க வல்லி.
என்ன இப்படிச் சொல்லீட்டீங்க!

முந்தி எல்லாம் வெறும் 12 ஆழ்வார்கள்மட்டுமே. இப்ப என்னடான்னா வீட்டு வீட்டுக்கு சிலபல ஆழ்வார்கள்!

யாரு பேச்சைதான் கேக்கணுமுன்னுப் புரியாமக்'கிடக்கான்' கேட்டோ:-)

said...

வாங்க இராஜராஜேஸ்வரி.

இளங்கன்று பயமறியாது என்பது இதுதான்.

குழந்தைப்பருவத்தில் பயம் நாம் உண்டாக்குனதுதானே? தொடாதே..... ஊ கடிச்சுரும்!

said...

வாங்க சசி கலா.

அது அப்ப! இப்ப பாம்பைத் தொடுவாளான்னு தெரியலை.

ஒருமுறை Eel ( மீட் ஈட்டிங் ஃபிஷ்) நான் குச்சியில் சாப்பாடு போட்டப்ப, இவள் அதன் தலையை வருடித் தொட்டுப்பார்த்தாள். அந்த மீனும் தண்ணீரை விட்டு பாதி உடம்பை கல்லில் கிடத்தி அவளுக்கு முதுகு காமிச்சதுப்பா!

ஆனா அதுவும் அவள் ரொம்பச்சின்ன பெண்ணா இருந்தபோதுதான்.
நியூஸியில் சுற்றுப்பயணம் செஞ்சுக்கிட்டு இருந்தோம் அங்கே 100 வயசு கிழ மீன்கள் இருக்குன்னு பார்க்கப்போனோம்:-)

said...

teacher,

you have visited this so far 2 temples of vishu in and near kachi. Actualy there are around 17 vishu/siva temples we visit those in 2 days trip from chennai around 5-6 years back my family visited almost 40-50 vishu temples out 108 so far you have stayed in chennai for around a week and forgot to call me
take care

said...

"ஏன் திசை மாறிக்கிடக்கார்ன்னா அதுக்கும் 'கதை' ஒன்னு இருக்கு."
தெரிந்துகொண்டோம்.

said...

வாங்க அனந்து.

டீச்சரை இப்படி மிரட்டலாமா:-))))))

சென்னையிலிருந்து ஒரு நாள் உங்களை செல்லில் கூப்பிட்டுப் பேசினேனே.மறந்துட்டீங்களா?

காசிப்பயணம் முடிஞ்சு வந்ததும் ஒருநாள் சந்திக்கலாமுன்னு சொன்னதுதான் நடக்கலை:(

எப்படியோ நேரம் ஓடிப்போச்சு. அடுத்தமுறை ஒரு பதிவர் சந்திப்பு நடத்தணும்.ஓக்கேதானே?

said...

வாங்க மாதேவி.

நலமாப்பா? உங்கள் வருகை மகிழ்ச்சியைத் தந்தது!

said...

சொல்லிய வண்ணம் செய்த பெருமாள்.

ரொம்பப் பேரு வண்ணம் என்ற சொல்லுக்கு நிறம்னு பொருள் சொல்லிக்கிறாங்க. அது தப்பு. வர்ணம் வேற. வண்ணம் வேற.

சொல்லிய வண்ணம் - சொல்லிய படி
கை வண்ணம் - கையின் சிறப்பு
மேனி வண்ணம் - மேனியின் சிறப்பு

இப்படித்தான் பொருள் வரும்.

சரசுவதி கதை ரொம்பவே male chauvinist கதையா இருக்கே. பாவம் அந்தம்மா. புருஷன் தான் ஒதுக்குறான்னா... மாமனார் வேற இப்படி குறுக்க படுத்திருக்காரே. கதை எழுதுறவங்களோட கற்பனைக் குறைவுன்னு வெச்சுக்கலாமா?

என்ன இருந்தாலும் கல்வியைக் குறைச்சுச் சொன்னது பொறுக்கலை. கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பாச்சே!

யதோத்காரின்னே சொல்றதச் சொல்றீங்களே.. தமிழ்க்கடவுளுக்கு ஆறுபடை வீடுகளிலும் வெவ்வேறு பேரு. திருச்செந்தூர் செந்தில், திருப்பரங்குன்றம்/பழமுதிர்ச்சோலை முருகன், தணிகை வேலன். ஆனா எல்லாக் கோயில்லயும் சுப்ரமண்ய சுவாமின்னே இப்பல்லாம் பெருசு பெருசா எழுதி வைக்கிறாங்க. கழுத.. முருகன் கோயிலுக்குப் போகனுங்குற ஆசையே குறஞ்சு போச்சு.

said...

//கணவர் தன்னை ஒசத்தியாச் சொல்லலைன்னு கலைவாணிக்கு லேசா ஒரு கோபம் முளைக்குது.//

அடடா!!.. கடவுள்களே அப்படீன்னா நாமெல்லாம் எந்த மூலைக்கு :-)))

said...

உங்களுடன் நானும் பயணித்த உணர்வு.......

தொடர்கிறேன்.

said...

வாங்க ஜிரா.

ஆமாங்க நீங்க சொல்வது எல்லாமே உண்மைதான்.

குமரனைக்கூட சுப்ரமணியஸ்வாமின்னுதான் குமரக்கோட்டத்தில் எழுதி வச்சுருக்காங்க!

கற்பனைப்பஞ்சமுன்னா சொல்றீங்க:-))))

said...

வாங்க சாந்தி.

அவுங்கதானேப்பா நமக்கு முன்மாதிரி.
அதான் அப்படியே கத்துக்கிட்டோம்:-))))

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர்ந்து வருவது மகிழ்ச்சியே!

ஒரு டீச்சருக்கு இதைவிட வேறென்ன வேணும்?