Tuesday, July 28, 2020

இலையே மலராய்...........

ரொம்ப வருஷமா அந்தத் தெருவில் போறப்பெல்லாம் கண்ணுலே விழுந்துக்கிட்டு இருந்தது  ஒரு செடி. வாசல் ஃபென்ஸ் பக்கத்திலே கட்டைச்சுவரையொட்டி..... அந்த வீட்டைக் கடக்கும்போதெல்லாம்  அதுக்கு என்ன பெயரோன்னு நினைப்பேன்.
போன வருஷம்தான் ஒரு நாள் அந்தப் பக்கம் போகும்போது,  வண்டியை நிறுத்தச் சொல்லி  ஒரு படம் க்ளிக்கினேன்.  கார்டன் சென்டருக்குப் போகும்போது அதைக் காமிச்சுக் கேக்கணுமுன்னு  எண்ணம்.  வேறேதோ வாங்க  ஒரு பெரிய ஹார்ட்வேர் கடைக்குப் போயிருந்தோம்.

எனக்கு  ஹார்ட்வேர் கடைகள் ரொம்பவே பிடிக்கும் ! கத்தி, சுத்தின்னு  இல்லாம  க்ராஃப்ட்,  லைட்டிங்ஸ், செடிகள், பூந்தொட்டிகள்,  வாட்டர் ஃபௌன்டெய்ன் இப்படி நிறைய  இருக்கும். நம்ம வீட்டு  வாழைமரம் கூட இந்தக் கடையில்தான் வாங்கினோம். ஆச்சு 15  வருஷம் !
எப்பப் போனாலும் செடிகள் பகுதியில் ஒரு சுத்து சுத்தாம வரமாட்டேன்.  அன்றைக்கும் அதே போல் சுத்தப் போனால்  நான் தேடும் செடி  வச்சுருக்காங்க.    அப்பதான் அதுக்கு என்ன பெயர்ன்னே தெரிஞ்சது.  Leucadendron.   இதுலே பெருசும் சிறுசுமா ரெண்டு வகை  இருந்துச்சு. நான் சின்ன சைஸ் ஒன்னு வாங்கினேன். எல்லாம் இது போதும். நாலைஞ்சு நிறங்களில்  உண்டுன்னாலும்,  ஒவ்வொன்னா சேகரிக்கலாம். மொதல்லே இது ஒழுங்கா வருதான்னு பார்க்கலாம். 
நாம் வாங்கியது Leucadendron Harvest NZ. லேசான மஞ்சள் (க்ரீம் கலர்) போன வருஷம் செப்டம்பரில் வாங்கியது.  ஆச்சே பத்து மாசம். கொஞ்சம் பெருசா வளர்ந்துருக்கு.  கட் ஃப்ளவர், பொக்கே வகைகளில் வச்சு அலங்கரிக்கலாமாம். தென் ஆப்ரிக்கா  சமாச்சாரம் !


மொட்டு வரும்போது அசப்பில் கொஞ்சம்  நம்ம  மனோரஞ்சிதம் போல....... ஆனால் அதைப்போல கீழே பார்க்காமல்  மேல் நோக்கிப் பார்க்குது !
Leucadendron என்றது குடும்பப்பெயர் போல !   இதுலே ஏகப்பட்ட வகைகள்.
ப்ரோட்டீயா செடிகளும் இந்தக் குடும்பம்தானாம்! 




Monday, July 20, 2020

வீட்டு(லே இருந்து ) வேலை...............

வணக்கம் நட்புகளே!

இந்தக் கொரோனா நாட்களில் எல்லோரும் எப்படி இருக்கீங்க ?

ஒரு விஷயம் உங்களோடு கேட்கலாமுன்னு இருக்கேன்.

நம்மில் பலர் இந்த Work From Home வகையில் இருப்பாங்க.

வெளியில் வேலைக்குன்னு போகாம வீட்டுலேயே ஹோம் மேனேஜரா இருக்கறவங்க வேற வகை. வருஷம் 365 நாட்களும் (லீப் வருஷமா இருந்தால் 366) வேலை வேலை வேலைதான். இதுக்குச் சம்பளம் எல்லாம் கிடையாது. தொலையட்டும்.    ஒரு நன்றி விசுவாசம்....  ஊஹூம்.......

போகட்டும், இப்போ பாய்ன்ட்டுக்கு வர்றேன்.

கொரோனா நாட்கள் எல்லாம் முடிஞ்சபிறகு.....

இந்த WFH என்பதை எத்தனை பேர் விரும்புவீங்க ?

ஆண்களைக் கணக்கில் எடுத்துக்கலை....  அவுங்களுக்கு எப்படியாவது வீட்டை விட்டுத் தொலைஞ்சால் போதுமுன்னுதான் இருக்கு என்பது 'அனுபவம்' :-)  விதிவிலக்காக இருப்பவர்கள், உங்கள்  கருத்து சொல்லுங்க....

பெண்கள் ஆஃபீஸ் வேலையையும் பார்த்துக்கிட்டு, வீட்டில் இருப்பதால் கூட எக்ஸ்ட்ரா வேலைகளையும் பார்த்துக்க வேண்டி இருக்கு. நம்ம சமூக அமைப்பு அப்படி.

அழுதாலும் பிள்ளை அவள்தான் பெறவேண்டும் வகை ....

இந்த WFH பற்றி மகளிடம் கேட்டேன். எஸ்ஸன்ஷியல் சர்வீஸ் வகையில் அவள் இருப்பதால் கொரோனா நாட்களில் வீட்டில் இருந்துதான் வேலை.
அவள் இதிலுள்ள சாதகம், பாதகங்களை ச் சொல்லி இருக்காள். அவள் சொன்னது இது.

Pros & Cons from her view.

Hi ma,

I like working from home, if I had a choice when everything gets back to 'normal' I would opt for 3 days at work and 2 days at home at least but that won't happen.

Pros of working from home:

- Comfortable clothes

- no need to get dressed if you don't want to, including makeup

- don't have to get up as early

- no need to find a park

- you can choose the temperature

- you can choose the lighting level

- not as noisy

- you can listen to anything you want or nothing at all

- can look out the window

- can open windows/doors for fresh air flow

- can take breaks when you need to, don't have to work around others (at work we need someone at our pod at all times)

- can sit outside for lunch and/or breaks

- easier to get some sunshine

- can diffuse oils or candles

- can be more flexible with hours

- can work extra after dinner or on weekends if you want to

- no need to pack lunch and snacks

- better work life balance

- no commute time to and from work

- save petrol

- can have a shower in your lunch break (I did today )

- Jupiter cuddles

Cons of working from home:

- no office banter

- no printer

- don't have access to everything on the systems (this hasn't been a problem so far though)

- using more electricity with computer and heating

- need to remember to get up often and walk around.(At office I would be walking to the printer all the time, etc)

That's all I can think of at the moment. Let me know if you want me to expand on anything.

உங்க கருத்துக்களைச் சொல்லுங்க.

என் கருத்து :  பெண்கள் வெளியே வேலைக்குப் போனால்தான் ஓரளவு  ரெஸ்ட் கிடைக்கும்.  வீடு திரும்பியபின்  விட்டுப்போனதையெல்லாம் செஞ்சு முடிக்கணும் என்றாலும்   குறைந்தபட்ச ஓய்வு வெளியில்தான் ! 

Friday, July 10, 2020

நீவிர் யாராக இருந்தாலும் ஐஸொலேஷனில் இருக்கக்கடவது.....(மினித்தொடர் பாகம் 5 நிறைவுப்பகுதி)

லாக்டௌன் சமயத்துலே, நம்ம குடும்ப நண்பர் ஒருவருக்கு உடல்நிலை ரொம்பவே சரி இல்லைன்னு  ஃபிஜியில் இருந்து  ஏர் ஆம்புலன்ஸில் கூட்டிவந்து ஆக்லாந்து ஆஸ்பத்ரியில்  சேர்த்துருந்தாங்க. ஃபிஜியில் கொரோனா கிடையாது.  நாங்க நியூஸி வருமுன் ஃபிஜித்தீவுகளில் ஆறு வருஷம் குப்பை கொட்டிக்கிட்டு இருந்தோம் என்பது உபரித்தகவல்.
அவருக்குக் கொடுத்த சிகிச்சையில்  பலனில்லாம  நண்பர் சாமிகிட்டே போயிட்டார். செய்தி வந்ததும் துடிச்சுப்போயிட்டோம்.  அவருக்கு ஒரே மகன். ஃபிஜியில் இருக்கார். பெரிய குடும்பம் .  பலரும் அங்கேதான்  இருக்காங்க. மற்ற நெருங்கிய உறவினர் சிலர் அண்டை நாடுகளில்.

மகன் உடனே  தனிவிமானத்தில் கிளம்பி வந்துட்டார்.  அன்றைக்குத்தான்  அந்த ரெண்டு பெண்மணிகள்  காரை ஓட்டிக்கிட்டுக் கிளம்பிப் போனநாள்.  'எப்படி விடப்போச்சுன்னு மக்கள் கொதிச்சுக்கிட்டு இருந்தோம்தானே.....   இந்த கலாட்டாவினால்  நோ இரக்கமு'ன்னு அறிவிச்சுட்டாங்க.  இப்ப மகன் வந்தும்  பதினாலுநாள் ஐஸொலேஷனில் இருக்கவேண்டியதாப் போயிருச்சு.  இத்தனைக்கும் ஃபிஜியில் கொரானாவே இல்லை என்றாலும் கூட..... அதான் 'நீவிர் யாராக இருந்தாலும் ஐஸொலேஷனில் இருக்கக்கடவது'ன்னு ஆகிப்போச்சே....

சரி.ஆனது ஆச்சு. பதினாலுநாள் முடிஞ்சதும்  இங்கேயே சவ அடக்கம் செஞ்சுக்கலாமுன்னு குடும்பம் முடிவு பண்ணிருச்சு. எனக்கு மனசுலே ஒரு சங்கடம். சாமிக்கிட்டே போன பரத் பையாவுடனும்  அவர் மனைவியுடனும் ஆறு வருஷங்கள் தாயா பிள்ளையா பழகி இருக்கோம். இப்ப  ரெண்டு வாரம் ஒத்திப்போட்டு வச்சுருப்பதால், பையாவுக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை. அவர்பாட்டுக்கு ஹாயா மார்ச்சுவரியிலே படுத்துருப்பார்.  மனைவிக்கு எப்படி இருக்கும் என்பதுதான்...... என் மனசைப்பிசையுது.

மரணம் என்பதை யாருமே தவிர்க்க முடியாதுதான். ஆனால்  மரணம் சம்பவிச்ச ஓரிருநாட்களில்  சவ அடக்கம் நடந்து போச்சுன்னா....  உற்றவர்களுக்கு   அளவில்லாத துக்கம் இருந்தாலுமே கொஞ்சம் கொஞ்சமா மனசு ஆறத்தொடங்கும் இல்லையா....  இன்னைக்கு அவுங்க.... நாளைக்கு நாம் என்றதுதானே....  இப்ப மகன் வந்துட்டாலும் ரெண்டுவாரம் கழிச்சுத்தான் எதுவுமே செய்ய முடியும் என்ற நிலை?   அனிதாபென்,  தூங்குவாங்களா? சாப்பிடுவாங்களா ?  மனுஷஜன்மத்துக்கு வயித்துப்பசி இல்லாம இருக்குமா ?  பெத்தவங்ககிட்டே சொல்லி அழக்கூட முடியாம அவுங்கெல்லாம் ஃபிஜியிலே இருக்காங்களே ?  இப்படியெல்லாம்  யோசனையில் எனக்கும் மனசு சரியே இல்லை.... 

எல்லா செய்திகளும் ஆக்லாந்துலே இருந்து ஃபிஜி போய் அங்கிருந்து நமக்கு வந்துக்கிட்டு இருக்கு.  ஒருவழியா  இருபத்தியொன்பதாம் தேதி மாலை, மகனை வீட்டுக்கு அனுப்புவாங்க. மறுநாள் ஃப்யூனரல்.  செய்தி கிடைச்சதும்  ஆக்லாந்து ஃப்ளைட் புக் பண்ணால்  ஏகப்பட்ட டிமாண்ட்.  காலை ஒன்னு, ராத்ரி ஒன்னுன்னு ரெண்டே ஃப்ளைட்தான் கொரோனா காலம் என்பதால்.  லக்டௌனில் உள்ளூர் போக்குவரத்துக்கும் தடா இருந்ததால் ஏர்லைன்ஸெல்லாம்  நஷ்டத்துலே தவிக்கிறதாகவும் தகவல். இதுலே சமூக இடைவெளி அனுசரிக்கணும் என்பதால்  குறைஞ்ச எண்ணிக்கையில் பயணிகளைக் கொண்டு போவாங்க.  இதன் காரணம், வழக்கமான டிக்கெட்  சார்ஜ்,  நாலு மடங்காகி இருக்கு.  பக்கத்துலே இருக்கும்  காலி இருக்கைகளுக்கும்   சேர்த்து நாம்தான் பணம் கொடுக்கணும்..... ப்ச்....

காலை ஏழுமணிக்கு ப்ளைட்.  ஒரு ஒன்னேகால்- ஒன்னரை, மணி நேரப்பயணம்.  ஏர்ப்போர்ட்டுலே இருந்து  நேரா  க்ரெமடோரியம் போயிட்டு, சவச்சடங்கு முடிஞ்சதும்  சாயங்காலம்  ஆறு மணி ஃப்ளைட்டுலே திரும்பி வர்றதா திட்டம்.

கொஞ்சநாளைக்கு முன்னால் மாஸ்க் போடமறுத்தவரைப் பயணம் செய்ய அனுமதிக்காமல் இறக்கி விட்டுட்டாங்கன்னு சேதி பார்த்ததால்.... எதுக்கு வம்பு? மாஸ்க், கைக்குத் தடவிக்கக் குட்டி பாட்டிலில் ஸானிடைஸர்,  இத்யாதிகளுடன்  கிளம்பிப் போகச் சொன்னேன்.

இந்த மாஸ்க் பொறுத்தவரை, நம்ம வீட்டில் ஏற்கெனவே வாங்கி வச்சுருந்தாலும்.... இதுநாள்வரை பயன்படுத்தவே இல்லை. லாக்டௌன் நாட்களில் நாம்  எங்கேயும் சுத்தப்போகலை. சமூக இடைவெளி கடைப்பிடிப்பதாலும்,   வழியில் பார்க்கும் யாரோடும் சின்னப்பேச்சு கூடாதுன்னு கவனமாத் தள்ளிப் போனதாலும்  தேவையிருக்கலை. பொதுவா அதாவது கொரோனா காலத்துக்கு முந்தி இருந்தே .... எங்கூரில்  க்ளீன் ஏர்  என்பதால்  மாஸ்க் சமாச்சாரமே யாரும் நினைச்சுக்கூடப் பார்க்கலை. ஆனால் சீனர்கள் மட்டும் (அதிலும் எல்லோரும் இல்லை.....  )  மாஸ்க் போட்டுக்கிட்டுச் சுத்துவாங்க.  அவுங்க ஊர்ப்பழக்கம் அது என்பதால் இங்கேயும் தொடருது. ' பாரு.... நல்ல ஊரில் இருந்துக்கிட்டு,  மாஸ்க் போடறதை' ன்னு நினைச்சுப்பேன்.  புதுசா வந்தவங்களா இருக்கும். கொஞ்ச நாள் போனால்  கழட்டிருவாங்க.....

இப்ப இதே போல் மாஸ்க் (சீனர்கள் மட்டும் !) போட்டுக்கிட்டு, தெருக்கள், கடைகண்ணிகளில் சுத்தறது கண்ணில் படும்போது எரிச்சல் வந்தது உண்மை. ' பாரேன்..... ஊர் உலகமெல்லாம் வைரஸை பரப்பி விட்டுட்டு, தாங்கள் மட்டும் உயிர்பிழைச்சு வாழணும் என்ற எண்ணம் பிடிச்சதுகள்.... மொத்த உலகையும் பிடிச்சுக்கட்டும். நாமெல்லாம் செத்துத் தொலையலாம்.....'  மனசு அதுபாட்டுக்கு கோச்சுக்குது..... ப்ச்...

காரை எடுத்துப்போய் ஏர்ப்போர்ட்டில்  ஒன்டே பார்க்கிங்கில் போட்டுக்கிட்டால் நல்லது .  ரெண்டு வாரமா மழைவேற நசநசன்னு  ஸல்யம்.....  மேற்கூரை இருக்கும்  கவர்டு பார்க்கிங்கில்  போட்டுக்கிட்டால்  நனையாமப் போய் வரலாம். அப்படியே ஆச்சு.

'நம்மவர்' வெளியூர் போகும் சமயங்களில்  நான் ஸ்டேண்ட் பை யில் இருப்பேன்.  அப்பப்ப (ஃப்ளைட்  போகும்போது தவிர ) சேதி அனுப்பிக்கிட்டே இருப்பார்.   உள்ளூர் பயணம் என்பதால்  அரைமணி முன்னால் போனாலும் போதும். அதான் கையில் லக்கேஜ்கூட ஒன்னும் இல்லையே....

   'பயங்கரக்கூட்டம், யாரும் மாஸ்க் போட்டுக்கலை, செக்கின் ஆச்சு..... 'ன்னு  தகவல் வந்துக்கிட்டே  இருக்கு.  ஃப்ளைட் உள்ளே போனால்.... ஒரு இடைவெளியும் இல்லையாம்.  ஃபுல்னு சொல்றார்.  அதான் ஜூன் 8 முதல் லெவல் 1 வந்துட்டோமில்லையா... எல்லாம் வழக்கம்போல் நார்மல். பார்டர் மட்டும் திறக்கலை. அடப்பாவி.... நாலு மடங்கு டிக்கெட் விலை வச்சது அநியாயமில்லே ?

ஆக்லாந்து போனால் பாதி ஃபிஜியைப் பார்க்கலாம். அதிலும் அங்கே நம்ம ஊரில் இருந்து நியூஸியில் குடியேறிய மக்கள் நிறையப்பேர் இருக்காங்க.  அதுவும் நாங்க இருந்த டவுனில் எல்லோரையும் எல்லோருக்கும் தெரியும் :-) பிஸினெஸ் கம்யூனிட்டி மக்கள்தான்.  ராணுவப் புரட்சி (Coup ) நடந்தப்ப, இங்கே வந்து செட்டில் ஆனவர்கள்.

சடங்கில் கலந்துக்க வந்த மக்களில்  பலரும் தெரிஞ்சவங்க என்பதால்.....  ரொம்பவே  வருத்த உணர்ச்சியோடு நடந்ததாம்  எல்லாம். ஹிந்து முறைப்படி (குஜராத்திகள் ) எல்லாம் நடந்துருக்கு... கடைசியில்  எரியூட்டும் வரை அங்கேயே  இருந்து பார்த்துட்டுத்தான்  எல்லோரும் கிளம்பியிருக்காங்க.  பரவாயில்லையே.... அப்பவே எரியூட்டிட்டாங்க !

 இங்கே எங்க ஊரில் (க்றைஸ்ட்சர்ச்) இந்த  எரியூட்டும் சமாச்சாரம்  நிசப்தமா இருக்கும்  நடு இரவில் மட்டும்தான்.  க்ளீன் ஏர் ஸிட்டி என்பதால்  இப்படி ஒரு ஏற்பாடு.  சவச்சடங்கில் கடைசியில் கொள்ளி வைப்பவர்,  சடங்கின் முடிவில்  ஒரு மின்சார பட்டனை அமர்த்துவதோடு முடியும். நான் முதல்முதலில் இங்கே ஒரு சவச்சடங்கில் கலந்துக்கிட்டப்ப,  நிகழ்வு முடிஞ்சதும், வெளியே வந்து சிம்னியில் புகை வருதான்னு பார்த்தேன். ஒன்னையும் காணோம். அப்புறம் நம்ம ரமண் பைய்யாதான் சாஸ்த்திரத்துக்கு பட்டன்  அமர்த்துவதுதான். உண்மையான எரிப்பு ராத்ரியில்தான்னார். மறுநாள்  சாம்பல் கொடுப்பாங்க.

கனத்த மனதோடு கொஞ்சநேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு,  நரேன் காகா பொண்ணும் மாப்பிள்ளையும் இவரை ஏர்ப்போர்ட்டில் கொண்டு வந்து விட்டுட்டுப்போனாங்களாம். நான் இவுங்களையெல்லாம் பார்த்தே பனிரெண்டு வருஷமாச்சு.   இப்ப இறந்துபோனாரே  பரத் பைய்யா,  அவரோட மகனின் கல்யாணத்துக்குப் போனதுதான்.  நம்மவர் மட்டும் அப்பப்ப ஃபிஜி போய் வருவார். அந்தக் கம்பெனிக்கும் இவர்தான் தொழில்நுட்ப ஆலோசகர்.

நாங்க ஃபிஜிக்குப் போனதே அந்த தொழிற்சாலையை நிறுவுவதுக்குத்தான்.  மெஷீன்கள் எல்லாம்  வந்து இறங்கி இருந்துச்சு.   அதையெல்லாம்  கமிஷன் செஞ்சு,   ப்ரொடக்‌ஷன் ஆரம்பிச்சு அப்படியே  தொழில் அபிவிருத்தியடைஞ்சு, ஆறு வருஷம் ஆனபிறகுதான் நாம் நியூஸிக்கு வந்தோம்.  அப்போ நடந்த ராணுவப்புரட்சியும்  ஒரு காரணம்.  அங்கிருந்தும் அடிக்கடி அவுங்கெல்லாம்  இங்கே நியூஸி ஃபேக்டரிக்கு வந்து போவாங்க.  அப்படியே நம்ம வீட்டுக்கும் விஸிட் உண்டு.  வீட்டுப்பெண்களைத்தான்  பார்த்து நாளாச்சு.....
இந்தக் கொரோனா ஒழியட்டும். ஒருமுறை ஃபிஜிக்குப் போய் வரணும்.
கண்ணுக்குக்குத் தெரியாத கிருமி இப்படி ஊர் உலகத்தை ஆட்டி வச்சுருச்சே...........


இங்கே நியூஸியில் கொரோனா நுழைஞ்சவுடனே.... சரியான நடவடிக்கைகள்  எடுத்து அதைக் கட்டுக்குள் கொண்டுவந்துட்டாங்க. இதில் எங்க பிரதமருக்கு  ரொம்ப நல்லபெயர் கிடைச்சு, அவுங்க புகழ் உலகெல்லாம் பரவி இருக்கு!  இப்படி ஒரு பெரிய காரியம் நடத்தறது இல்லாமல் சின்னச்சின்ன செய்கைகளால்  கூட மக்கள் மனதில் இடம் பிடிக்க முடியும். உண்மையில் இந்தச் சின்ன சமாச்சாரங்கள் தான்  சட்னு நினைவுக்கு வரும்:-)


லாக்டௌன் சமயம் எல்லா வியாபாரங்களும் மூடியாச்சுல்லே...   இதுலே ரெஸ்ட்டாரண்ட்ஸ்களும்தான்.  என்னதான் வீட்டுலே வகைவகையா சமைச்சாலும்....  சனத்துக்கு வெளியே போய் சாப்பிடணும்ற ஆசை ஒன்னு இருக்கே!  ஒருவிதத்தில் நல்லதுதான்.... வீட்டில் சமைக்கிறவங்களுக்கு ஒரு வேளை ஓய்வு தேவைதானே !

லெவல் மூணு வந்தவுடன்,  ரெஸ்ட்டாரண்டுகள் வியாபாரம் செய்ய அனுமதி கிடைச்சது.  உக்கார்ந்து சாப்பிட முடியாது. வீட்டுக்கு வாங்கிப்போய் சாப்பிட்டுக்கும் டேக் அவே மூலம்  மட்டும்தான்னு.  சனம் காரை எடுத்துக்கிட்டுப் பறந்து போய் வாங்கியாந்தாங்க.

அப்புறம் லெவல்  ரெண்டு வந்ததும்  உள்ளே போய் உக்கார்ந்து சாப்பிடலாம். ஆனால் சமூக இடைவெளி இருக்கணும். ஈஷிண்டு உக்காரப்டாது.....   என்பதால் ஸீட்டிங் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.  இந்தக் காலத்தில் ஒருநாள் பிரதமரும் அவுங்க பார்ட்னரும் இன்னும் அவுங்களைச் சார்ந்த சிலரும் ஒரு ரெஸ்ட்டாரண்டுக்குச் சாப்பிடப் போனாங்க. ஏற்கெனவே இடம் வேணுமுன்னு புக் பண்ணிக்கலை.

லிமிட்டட் ஸீட்ஸ் என்பதால் உள்ளே  நிறைஞ்சதும், மத்தவங்க வெளியே வரிசையில் காத்திருந்தாங்க.  உள்ளே இடம் காலியாக ஆக வரிசை மெள்ள உள்ளே போய்க்கிட்டு இருக்கு.  வரிசையில் பிரதமர் அண்ட் கம்பெனி நிக்கறாங்க. பணியாளர் ஒருவர்  வெளியே வந்து உள்ளே இடமில்லை,   மேஜை காலியாகும்வரை காத்திருக்கணுமுன்னு  சொல்லிட்டுப் போயிட்டார்.

இதுக்குள்ளே உள்ளே இருந்த இன்னொரு குடும்பம் பிரதமரை அடையாளம் கண்டுக்கிட்டு, நம்ம இடத்தை அவுங்களுக்குக் கொடுத்துடலாமுன்னு எழுந்தப்ப,  கடை மேனேஜருக்கு பிரதமர் வெளியே லைனில் காத்திருப்பது தெரிஞ்சதும்,  தனியா இருக்கைகளைப் போட்டு அவுங்களை உள்ளே அனுமதிச்சுட்டார்.

மீடியாக்கள் எதுக்கு இருக்கு ? இவ்ளோ எளிமையான பிரதமர் னு .....  ஓக்கே... நம்மில் ஒருவர்னு எல்லோருக்கும் தோணாதா ? தோணுச்சு.

ஏற்கெனவே போனவருஷம், இங்கே ஒரு  அஸ்ட்ராலியன் வந்து, கிறைஸ்ட்சர்ச் (எங்க ஊர் )மசூதியின் தொழுகை நேரத்தில் உள்ளே புகுந்து படபடன்னு  தொழுகையில் இருந்த மக்களைச் சுட்டுட்டான்.  இங்கிருந்து கிளம்பி இதே ஊரில்  இருக்கும் இன்னொரு மசூதிக்கும் போய் அங்கேயும் சுட்டுருக்கான். மொத்தம் 51 பேர் அல்லாவாண்டை போயாச்சு.

 அந்த சம்பவத்தில் எங்க பிரதமர், ரொம்ப நல்லா செயல்பட்டாங்கன்னு அவுங்க புகழ் உலகெங்கும் பரவுச்சு. முக்கியமா இஸ்லாமிய நாடுகளில் இவுங்களுக்கு ரொம்ப நல்ல பேரு.  இஸ்லாமியர்களுக்கு  ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஹிஜாப் கூடப் போட்டுக்கிட்டு இருந்தாங்க.

இப்ப இந்த கொரோனா.... மறைமுகமா இவுங்க புகழை இன்னும் ஏத்திவிட்டு இருக்கு!

இன்னும் ரெண்டே மாசத்தில் இங்கே நியூஸியில் பொதுத்தேர்தல் வருது. தேதிகூட செப்டம்பர் 18ன்னு அறிவிச்சுட்டாங்க.

அதூக்குள்ளே கொரோனாவை நாட்டைவிட்டே துரத்தும்  வேலையும் முடிவுக்கு வந்துரும்.  பிரதமரின்  லேபர் கட்சி போனமுறை மாதிரி  இன்னொரு கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி  அமைச்சதுபோல் இல்லாம  இந்தமுறை முழு மெஜாரிட்டியில் ஜெயிக்கும் அறிகுறி தெரியுது.  ஆனாலும்  தேர்தலுக்குக் கூட்டு சேர்ந்துருக்காங்கதான்...

பார்க்கலாம்..... கொரோனாவுக்கும், ஆட்சிக்கும் என்ன ஆகப்போகுதுன்னு....

மினித்தொடர் இத்துடன் நிறைவு.


PINகுறிப்பு:  இன்றைக்கு ஒரு ஆள்,  வேலியை வெட்டிட்டு, வெளியில் போகும்போது புடிச்சுட்டாங்க.  வயசு அம்பதாம். ஆன வயசுக்கு அறிவு வளரலையே......  முழுவிவரம்   இன்னும் வரலை. வந்தாட்டு சொல்றேன்.....




Wednesday, July 08, 2020

வேலிதாண்டிய வெள்ளாடுகள்..... கொரோனா காலத்தில்...( மினித்தொடர் பாகம் 4 )

பேசாம  சிறைச்சாலைக்குள் இருக்கும் கூடங்களில் கொண்டுபோய் தங்கவச்சுருக்கணும். அதை விட்டுட்டு, நக்ஷத்திர ஹொட்டேல்களில் வச்சு அம்மா, ஐயான்னு தாங்கு தாங்குன்னு தாங்கிக்கிட்டு இருந்தால் (அதுவும்  நம்ம  வரிப்பணத்தில் )  தலைக்குமேல் ஏறாமல் இருப்பாங்களா ?
இங்கே நியூஸியில்  ஒரு இருபத்திநாலு நாட்களுக்கு, கொரோனா தொற்று உள்ளவர் யாருமே இல்லைன்னு விவரம் கிடைச்சதால்   உள்நாட்டுலே லெவல் 1 போகலாமுன்னு அரசு முடிவு செஞ்சது.  மற்ற நாடுகளில்  கொரோனா தீவிரமாப் பரவிக்கிட்டு இருப்பதால்தான்  நியூஸி பார்டர் மட்டும் மூடியே இருக்கு.  நாங்க யாரும் வெளிநாடுகளுக்குப் போய் வர அனுமதி இல்லை.

ஆனால் அங்கிருந்து வருபவர் யாராக இருந்தாலும்  ரெண்டு வாரங்கள்  கட்டாயம் ஊருக்குள் வராமல், அரசு ஏற்பாடு செஞ்சுருக்கும் இடங்களில் போய் தங்கிக்கணும்.  கொரோனா நோய் அறிகுறி இருக்கறவங்களை க்வாரன்டைனுக்கும்,  தற்சமயம் அறிகுறி ஒன்னும்  தெம்படாதவங்களை மேனேஜ்டு ஐஸொலேஷன் என்று  தனிமைப்படுத்திக்கும்  இடங்களும் அனுப்பறாங்க.  ஒரு குடும்பமா வர்றவங்களைத்  தனிமைப்படுத்தும்போது குடும்பமாத்தான் தங்க விடறாங்க.  க்வாரன்டைனில்  இருப்பவர்களில் அதிகம் பாதிப்பு இருப்பவர்களுக்கு ஆஸ்பத்ரியில் சிகிச்சை.  மத்தவங்களுக்கு  உடலில் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் விதம்  கவனிப்பு.   எல்லாம் நல்லாத்தானே போய்க்கிட்டு இருக்கு.

நம்ம ஸ்ரீராமர், தகப்பன் சொல்லச் சொன்னாருன்னு  சின்னம்மா சொன்னதுக்காகப் பதினாலு வருஷம் வீட்டை விட்டுக் காட்டுக்குப் போனார். நாம் பதினாலு நாட்கள்  அரசு சொன்னதுக்காக , அவுங்க ஏற்பாடு செய்த இடங்களில்  தங்கிட்டு வீட்டுக்குப்   போனால் என்ன?

 ஐஸொலேஷனில் இருப்பவர்களுக்கு முதல் மூணாம் நாள் கோவிட் டெஸ்ட். ஒன்னும் இல்லைன்னா.... திரும்ப பனிரெண்டாம் நாள் இன்னொரு டெஸ்ட்.  இந்தக் கோவிட் சனியன் இருக்கே.... டெஸ்ட் பண்ணால்  சட்புட்டுன்னு 'இருக்கு,  இல்லை'ன்னு சொல்லிடாது. ஆற அமர ரெண்டுநாள் டைம் எடுத்துக்கிட்டுத்தான் ரிஸல்ட் காமிக்கும்.

அண்டைநாடான அஸ்ட்ராலியாவிலிருந்து வந்த  ஆறுபேர் அடங்கிய (தனிமைப்படுத்தப்பட்ட ) குடும்பம் ஒன்னு , சொந்தக்காரங்க சாவுச் சடங்குலே கலந்துக்கணும், இரக்கம் காட்டுங்கன்னு  சொன்னதும்..... சரி போயிட்டு வாங்கன்னு அரசு ஏற்பாடு செஞ்சுருக்கு.  ஒரு ஒன்னரை மணிநேரப் பயணம்தான்.  மவொரி இனத்தில் இந்தச் சவச்சடங்குகளில் Tangihanga (சுருக்கமாச் சொன்னால்  Tangi )ன்றது அவுங்க கலாச்சாரம் சார்ந்த ஒரு சமாச்சாரம்.  இதுக்கு ரொம்பவே முக்கியத்வம் இருக்கு.  இந்த ஆறுபேரையும்  மூணாம் நாள் பரிசோதிச்சதில் நோய் இல்லைன்னு ரிஸல்ட்.  Tangi போக அனுமதிகேட்ட அன்னிக்கு ஒன்பதாம் நாள். இனி பனிரெண்டாம் நாள் பரிசோதனைக்கு  இன்னும் மூணுநாள் இருக்கேன்னுதான்  போயிட்டு வர அனுமதி கொடுத்தாங்க. ஆனாலும் போற இடத்துலே கவனமா  சமூக இடைவெளி விடறது, ஸானிடைஸர் வச்சுக் கைகளில் தடவிக்கறது, சோப்பு போட்டுக் கை கழுவறதுன்னு எல்லாத்துலேயும் கவனமா இருங்கன்னும்  சொல்லித்தான்  அனுப்பி இருக்காங்க.

அங்கே  சடங்கு முடியும் நேரம், ரெண்டு பசங்க  (ஒன்னு 18, ஒன்னு 8 வயசு ) நைஸா  வெளியேறி எங்கேயோ ஓடிட்டாங்க. திரும்பிவரும் நேரம் பார்த்தால் இருவர் மிஸ்ஸிங்.  ஐய்யய்யோ..... என்னதான் நெகட்டிவ் ரிஸல்ட்டுன்னாலும்....  இன்னும் அஞ்சுநாள் தனி இடத்தில் இருக்க வேண்டியவங்க இல்லையோ ?  தேடு தேடுன்னு காவல்துறை அலைஞ்சு, அந்த எட்டுவயசைக் கண்டுபிடிச்சுக் கூட்டிவந்துட்டாங்க. பெரிய பையனைத்தான் கண்டுபிடிக்கமுடியலை அப்போதைக்கு.  இந்த ஐவரையும் திரும்ப அவுங்க ஐஸொலேஷனில் இருந்த இடத்துக்குக்   (அதே ஒன்னரை மணி நேர ட்ரைவ்)கொண்டுவந்து சேர்த்தாச்சு.   அப்புறமா அந்தப் பெரியவனையும் தேடிக்கண்டுபிடிச்சு அந்த ஊருலேயே தனிமைப்படுத்தி வச்சுருக்காங்கன்னு தகவல் வந்துச்சு.  அவனை பரிசோதிச்சதில் நெகட்டிவ்னு ரிஸல்ட்டாம். நல்ல வேளை! இல்லேன்னா அந்த ஊரில் நோய் பரவி இருக்கும்.   இந்த அஞ்சு பேரும்  'எங்களையும்  பெரியவன் இருக்குமிடத்துக்கு அனுப்புங்க'ன்னு ஆரம்பிச்சாங்க.  எல்லாம் இருக்குமிடத்துலேயே இருங்கன்னதும் கப்சுப்.  ச்சும்மா இருக்குதுங்களா ?


இந்த அழகுலே சுகாதார அமைச்சர் வேற , 'இதெல்லாம் நடந்ததே எனக்குத் தெரியாது. யாரும் என்னாண்டை சொல்லலை'ன்னு..... போதுண்டா சாமி...... தெற்குத்தீவில் இருக்கும் எங்களுக்கே இதெல்லாம் நேஷனல் டிவி மூலமும்,  கொரோனாவுக்கான  வெப்ஸைட் மூலமும் தெரிஞ்சுருக்கு. மந்திரியைக் கூப்பிட்டு  உக்காரவச்சுக் காதில் சொல்லணுமாக்கும் ?  அவனவன்  டென்ஷனில் இருக்கான்........    முக்கியமாக் காவல்துறை.....

இதெல்லாம் போதாதா எங்களுக்கு? திரும்ப சாமியாட ஆரம்பிச்சோம்......  'பயப்படாதீங்க..... கவனமாத்தான் பார்த்துக்கறோம்.  நோய் திரும்ப நாட்டுக்குள்  நடமாடாது'ன்னு........ திரும்பத்திரும்பச் சொல்லிக்கிட்டே இருக்கு அரசு.

இவ்ளோ நடந்துருக்கும் நிலையில்  வடக்குத்தீவில் தங்க வச்சுக்கிட்டு இருந்த ஹொட்டேல்ஸ் எல்லாம்,    திரும்பி வந்த கிவிக்களால் நிறைஞ்சு வழியுதுன்னும் இன்னும் ஹொட்டேல்கள் வேண்டி இருக்குன்னும்  சொல்லிக்கிட்டு இருந்த அரசு தெற்குத்தீவில் இருக்கும் பெரிய ஹொட்டேல்களுக்கு  நாடு திரும்பும் மக்களை அனுப்பப்போறதாகச் சொன்னதும் ....    ஐயோ, வேண்டாத வேலைன்னு ஆச்சு!  இதுக்கும் ஒரு சாமியாட்டம் நடத்தினோம்.  இவுங்க  சொல்லும்  பெரிய ஹொட்டேல்கள் இருக்கறது எங்க ஊர் ஆக்கும், கேட்டோ !


இங்கே சட்டம், மக்கள் உரிமை  எல்லாம் எல்லோருக்கும் ஒன்னுபோலன்னு அப்பப்பப் பெருமை பீத்திக்குவேனில்லையா....  அதே போலத்தான் நோய் பரவும் நிலை வந்தால் எல்லா ஊர்களுக்கும் சம அளவில் பரப்பும் எண்ணமோ என்னவோ !   விடலாமா ?

"ஏம்ப்பா..... நாடு முழுக்க ஒரே மாதிரி நோயாளிகளை நிரப்பப்போறீங்களா ?  குறைஞ்சபட்சம் ஒரு ஊரையாவது கொரோனா இல்லாத ஊர் என்ற நிலையில் வச்சுக்கப்டாதா ? அதுவும் எங்க ஊரில் ஏன் ?  வேறெங்கியாவது கொண்டு போய்  வவச்சுக்குங்க "

"இல்லைங்க துல்ஸி.  போதிய வசதியுள்ள பெரிய ஹொட்டேல்ஸ்  தேவைப்படுது. அது இந்த ஊர்லேதான் இருக்கு, நாங்க ரொம்பக் கவனமா அவுங்களை சமூகத்துக்குள்ளே  விடாம பத்திரமா வச்சுக்குவோம். பதினாலு நாட்களுக்குப்பின்  நெகடிவ் ரிஸல்ட் வந்தவங்களைத்தான் அவுங்கவுங்க வீடுகளுக்கு அனுப்புவோம்.  அதனால்  ஊருக்கும் பரவும் என்ற அபாயம் இல்லை. "

அரசின் சார்பில் இதைப்பத்திப்பேச ஒரு ஸ்போக்ஸ்பெர்ஸன் இருப்பாரில்லையா....  அவர்தான் எங்க கேள்விகளுக்கெல்லாம் பொறுமையா பதில் சொல்லிக்கிட்டு இருக்கார்.

ஐயாயிரம் மக்களுக்கு மேல்  வந்தாச்சு. இன்னும் வந்துக்கிட்டே இருக்காங்களாமே!

ஒண்டவந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டுச்சுன்ற கதைதான்....  நாலு பெரிய ஹொட்டேல்களை எடுத்துக்கிட்ட அரசு இப்போ அஞ்சாவது  ஹொட்டேலைப் பிடிச்சுக்கிச்சு. ஆறு மாசத்துக்கு  மற்ற வெளியாட்களுக்கு இங்கே தங்க அனுமதி இல்லை.   ஒன்லி கோவிட்....  அந்த ஹொட்டேல்களும் , அரசுக்கு நாங்க உதவி செய்யறோமுன்னு ஒரு பெருமிதத்தோடு இருக்குதுகள்.  சுற்றுலாப்பயணிகள் வரத் தடா என்பதால் நஷ்டத்தில்  போகாமல் இருக்க ஒரு வாய்ப்புன்னு இருக்காங்க.  கோவிட் நாட்டை விட்டே ஒழிஞ்சதும்,  இந்த ஹொட்டேல்களைப் புடம் போட்டு எடுக்கணும்.

தங்கவைக்கப்படும் மக்களுக்கு என்னென்ன தர்றாங்கன்னு 'நம்மவர்' சொல்லிக்கிட்டு இருந்தாரா.... எனக்கு அப்படியே கண்ணெல்லாம்  விரிஞ்சே போச்சு. சாப்பாடு எல்லாம் சாய்ஸ் உண்டு. மூணு வேளை சாப்பாடு மட்டுமில்லை.... இடையிடையே  எதாவது தின்னணுமுன்னா ரூம் சர்வீஸிலே  சொன்னால் கொண்டுவந்து தருவாங்களாம். ஒருநாளைக்கு  ஆளுக்கொரு ஒயின் பாட்டில், ஆறு பியர் கேன் வேற ! துணி துவைச்சுக்க இலவச லாண்டரி சர்வீஸ்.  ஃப்ரீ வைஃபை !  மத்தபடி  டிவி, ரேடியோ இதெல்லாம்  ஏற்கெனவே அறையில் இருக்கு ! இன்னும் ஜிம், ஸ்விம்மிங் இப்படி  உடற்பயிற்சி செஞ்சுக்கும்  வசதிகள் !

அடடா.....  கொரோனா அறிகுறி லேசா வந்துருக்கக்கூடாதா.... நிம்மதியா ரெண்டு வாரம் ரெஸ்ட்  கிடைச்சுருக்குமேன்னு தோணுது எனக்கு !   ஒரு ஹொட்டேலில்  தங்கிய  மக்களில் யோகா டீச்சர் ஒருத்தர் இருந்தாங்கன்னு அவுங்க மூலம் யோகா சொல்லிக்கொடுக்கக்கூட அரசு அனுமதி கொடுத்துருக்கு. 


ஆரம்பத்துலே ஐஸொலேஷன் மக்களுக்குப் போரடிக்குமுன்னு பீச்சுக்குக் கூட்டிப்போய் வந்துருக்காங்க. அப்படியே ஊருக்குள் வாக்கிங் எல்லாம் கூட.  அந்த ரெண்டு லேடீஸ் சம்பவத்துக்குப்பின்  (எட்டுமணி நேரம் காரோட்டிக்கிட்டுப் போனது ) வெளியே கூட்டிப்போய் வர்றது நிறுத்தப்பட்டது. ஹொட்டேல் வேலிக்குள்  தோட்டத்தைச் சுத்திக்குங்கன்னு சொன்னாங்க.


இப்படி வேலிக்குள் சுத்துன ஒரு அம்மிணி, ஒருநாள் வேலியைத் தாண்டிக்குதிச்சு, ஒரு ஒன்னரை மணிநேரம் ஊரெல்லாம் சுத்திப்பார்த்துட்டுத் திரும்ப ஹொட்டேலுக்கு வர்ற வழி தெரியாம, ஒரு போலிஸாண்டை ஹொட்டேல் பெயரைச் சொல்லி வழி கேட்டுருக்கு!  அப்ப கொரோனாவுக்கு நாலு ஹொட்டேல்ஸ்தான்.  காவல்துறைக்கு இந்த விவரம் எல்லாம் அத்துபடி இல்லையோ ?

அங்கே எதுக்குப் போகணுமுன்னு விசாரிச்சதும், நான் அங்கேதான் தங்கி இருக்கேன்னு அம்மிணி சொல்ல, எப்படிம்மா வெளியில் வந்தேன்னு கேக்க, நான் வேலி வழியா வந்தேன்னு .....   ஆஹா.... இது வேலிதாண்டிய வெள்ளாடுன்னு போலிஸ் பிடிச்சுக்கிட்டு போயிருச்சு. இப்ப அம்மிணி ஜெயில் வாசம்.

இப்ப கோவிட் பாதுகாப்பு பொறுப்பேத்துக்கிட்ட  அமைச்சர் (எங்கூரு எம் பி தான்! )  இப்படி சட்டத்தை மதிக்காமல் மீறும் ஆட்களுக்கு ஆறுமாசம் சிறை தண்டனையும், நாலாயிரம் டாலர் அபராதமும்னு சொல்லி இருக்காங்க.  அந்த ஆறுமாசம் சிறை கூட இங்கே கொண்டாட்டம்தான். தண்டனையா இது ?  இந்த ஊர் ஜெயில் லக்ஷணம் தெரியாதா என்ன ?  நக்ஷத்திர ஹொட்டேல் மாதிரிதான் இங்கத்து ஜெயிலும்..... என்னவோ போங்க....
மூணாம் நாள்,   டெஸ்ட் ஆரம்பிச்சதும்  ரெண்டு, மூணுன்னு நோயாளிகள் எண்ணிக்கை பெருக ஆரம்பிச்சது.  அதெல்லாம் பயப்படவே வேணாம். நாங்க  ரொம்பவே கவனமா இருக்கோமுன்னு  அரசு தரப்பில் தினமும் எங்களுக்கு ஆறுதல்....சொல்றாங்க.

 இன்றையக் கணக்கு.... நோயாளிகள் எண்ணிக்கை 22.

தொடரும்......... (-:


Monday, July 06, 2020

இறக்கம் நல்லது. ஆனால் இரக்கம் ? (மினித்தொடர் பாகம் 3 )

மே மாசம் 18 முதல் பள்ளிக்கூடங்களைத் திறந்துட்டாங்க. சின்னப்பிள்ளைகளுக்கும் (தாய்மார்களுக்கும்தான்)ரொம்பவே சந்தோஷம்.

நோய் இருக்குமோ என்ற நிலையில் இருப்போரை அவரவர் வீட்டுலேயே தனிமையில் இருக்க சொல்லி இருந்தாலும், சௌகரியப்படாதவர்களைத் தனிமையில் வைக்க என்ன செய்யலாமுன்னு பலவித ஐடியாக்கள் வருமா இல்லையா ? அதுலே ஒன்னு கேம்பர் வேன்கள்!  பார்டரை மூடிட்டதால்  டூரிஸ்ட் வருகைதான் மொத்தமா நின்னு போச்சே....  அவுங்களுக்காக் காத்திருந்த வேன்களுக்கு இப்படியும் ஒரு சேவை செய்ய வாய்ப்பு கிடைச்சுருச்சு!
கொரோனா நோயாளிகள்  ஒவ்வொருத்தரா குணமாகி வீட்டுக்குப் போக ஆரம்பிச்சாங்க. ஆஸ்பத்ரியில் ஒரே ஒரு நோயாளி மட்டும் கொஞ்சம்நிறைய நாட்கள்  இருந்தார். தினமும் ஆஸ்பத்ரியில் இருக்கும் நபர்கள் எத்தனைபேர்னு நான் கவனமாப் பார்த்துக்கிட்டே இருந்தேன்.  கடைசியில் அவரும் நோய் நீங்கி குணமடைஞ்சு வீட்டுக்குத் திரும்பினார்.  இதுவரை 22 பேரைக் கொரோனா காவு வாங்கியிருந்தது.

உலக சுகாதார நிறுவனத்துக்கு நோயாளிகள் விவரம், கணக்கு, குணமடைஞ்சவுங்க எண்ணிக்கை, 'போனவர்கள்' எண்ணிக்கை எல்லாம்  அனுப்பிட்டோம். தினமும் கொரோனா செய்திகளில்  'புதுசா யாருக்கும் கொரோனா தொற்று வரலை. நோ நியூ கேஸஸ்'  என்று சொல்ல ஆரம்பிச்சாங்க. மனசு நிறைய மகிழ்ச்சிதான்.

"இன்னைக்கும் ஒன்னும் இல்லைதானே ?  "

"ஆமாம். இல்லை"

 ஹப்பாடா...... வாட் அ ரிலீஃப் !"

நம்ம சனாதன் தரம் ஹாலில்  வழக்கமா செவ்வாய்க்கிழமை மாலைகளில்  ராமாயணம் வாசிக்கும் நிகழ்ச்சி நடக்கும். கொரோனா லாக்டௌனில் இதுவும் நின்னுபோய் இருந்தது.  லெவல் 2 இல்  கோவில்கள் திறப்பதுடன்,  அம்பதுபேர் வரை ஒன்று கூடலாமுன்னு சொன்னதும்,  ஜூன் ரெண்டாம்தேதி செவ்வாய்க்கிழமை  ராமாயணவாசிப்பைத் தொடரலாமுன்னு  சேதி  அனுப்பி இருந்தாங்க. சமூக இடைவெளி கட்டாயம் அனுசரிக்கணும் என்ற ஒரே ஒரு கண்டிஷன்தான்.  நாங்களும் போய்ச் சேர்ந்தோம்.  நல்ல இடைவெளிவிட்டு நாற்காலிகள் போட்டு வச்சுருந்தாங்க. பண்டிட்,  ராமாயணம் வாசிப்பவர்கள், பஜனைப் பாடல் பாடும் இசைக்குழுவினர்னு மேடையில் பெரிய கூட்டம் வழக்கமாக இருக்குமிடத்தில் அஞ்சே பேர் இருந்தாங்க.  அப்புறமா இன்னும் இருவர் வந்து சேர்ந்தார்கள் .  மேடையில் எழுவர்.  சபையினரா ரெண்டு பேர். யாருன்னு ஊகிப்பது சுலபம் :-)  மற்றவர்களுக்கு சேதி போய்ச் சேரலை போல !





பூஜை முடிச்சு, கொரோனாவில் இருந்து காப்பத்தின கடவுளுக்கு நன்றி சொல்லி முடிச்சார் பண்டிட்.

இன்னும் சிலநாட்களில் எங்க  மணநாள் வருது. பொதுவா  நம்ம  ஹரே க்ருஷ்ணா கோவிலில் ஞாயிற்றுக்கிழமைகளில் விருந்து உண்டு.   சொந்த விழாக்கள் எதாவது இருந்தால் அந்த விருந்துக்கான செலவை பக்தர்கள் ஏத்துக்குவாங்க. நாமும்  மணநாளுக்குச் சமீபம் வரும்  ஞாயிறில் இப்படிச் செய்யறதுண்டு. இப்ப லாக்டௌன் காரணம் விருந்தெல்லாம் நிறுத்தியிருந்தாங்க.

இதே போலதான் சனாதன் தரம் ஹால் வாங்கியதில் இருந்து  பொறந்தநாள், மணநாள் இப்படி விசேஷங்களை அங்கே நடத்தத் தொடங்கி இருந்தோம். அதுவும் லாக்டௌன் காரணம் இப்போதைக்கு இல்லைன்னு ஆகிருச்சு.  ரெண்டு இடங்களில் எங்கேயும் நடத்த முடியாது என்பதால் , நம்ம் விழாவுக்கு ஒதுக்கி வைத்த தொகையை ரெண்டாகப்பிரிச்சு, ரெண்டு இடங்களிலும்  கொடுத்துடலாமுன்னு முடிவு செஞ்சோம். பொழைச்சுக்கிடந்தால் அடுத்த வருஷம் நாப்பத்தியேழைக் கொண்டாடினால் ஆச்சு.
ஜூன் அஞ்சாம்தேதி  நம்ம கோவிலுக்குப் போய் வந்தோம்.

இதுக்கிடையில் மற்ற நாடுகளிலும் லாக்டௌனும், வெளிநாட்டு விமானப் போக்குவரத்துத்தடையும் இருந்ததால்.... அங்கெல்லாம் மாட்டிக்கிட்ட கிவிக்களை ( நியூஸி மக்களுக்கான செல்லப்பெயர் ! ) நாட்டுக்குத் திரும்ப அழைச்சுக்க ஏற்பாடு செய்யணுமுன்னு அரசின் முயற்சி தொடங்கியிருந்துச்சு.  இப்படித்தான்  மற்ற நாடுகளும் அவுங்கவுங்க மக்களைக் கூப்பிட்டுக்க ஆர்வமா இருந்தாங்க.

அரசுகளுக்கும் பேசி முடிச்சு, குறிப்பிட்ட சில மார்க்கங்கள் மூலமா கொண்டுவரலாமுன்னு  முடிவு செஞ்சாங்க.  எல்லா ஏர்ப்போர்ட்டுகளையும் இதுக்காகத் திறந்து வைக்க முடியாதுல்லையா?  ப்ரிட்டனில் இருந்து, தோஹா, அங்கிருந்து ப்ரிஸ்பேன்(ஆஸி)பிறகு ஆக்லாந்து (நியூஸி) ன்னு    ஒரு  ரூட். நம்ம  இந்தியாவும் 'வந்தே பாரத்'னு ஏர் இந்தியா விமானங்களை  (தில்லி - ஆக்லாந்து  ரூட் ) அனுப்ப ஆரம்பிச்சுருந்தது.  நாங்க ஏர் நியூஸிலாண்ட்.

மார்ச் மாசம் லாக்டௌன் ஆரம்பிக்கறதுக்கு ஒருவாரம் முன்னாலேயே நியூஸி பார்டரை மூடிட்டாங்க.  ஏராளமான கிவிக்கள் அங்கே இங்கேன்னு பலநாடுகளில் மாட்டிக்கிட்டாங்க.  இதில் இந்தியாவுக்குப் போன மக்களில் என்னுடைய தோழி ஒருவரும் உண்டு. இஸ்கான் பக்தை. மதுராவுக்குப் போயிருந்தாங்க. அவுங்களுக்குத் தங்கற இடம், சாப்பாடு இதெல்லாம் பிரச்சனை இல்லை. கோவிலின் கவனிப்பில் எல்லாம் கிடைச்சது.  ஆனால் அவுங்க பயணத்திட்டத்தின்படி திரும்பி வரத்தான் முடியலை.

இங்கே  நம்ம கோடைகாலத்தில்  குடும்பத்தினரைப் பார்க்க வந்த  இந்தியர்கள் பலர், திரும்பிப்போக முடியலை. விஸா காலம் வேற முடிஞ்சுருச்சு...... ஓவர் ஸ்டே....   இந்தக் கொரோனாவால் எவ்ளோ சல்யம் பாருங்க..ப்ச்...

இங்கே லாக்டௌன் அறிவிச்சவுடனே செயல்பட்டது  ஜெர்மனிதான். அவுங்க நாட்டுக்காரர்கள் பனிரெண்டாயிரம் பேர், நியூஸியில்  பலவேலைகள் நிமித்தம்  இருக்காங்க. அவுங்களைத் திரும்பக் கொண்டுபோக  லுஃப்தான்ஸாவை  அனுப்பிட்டாங்க. அவுங்க தூதரகம் துரிதமா செயல்பட்டது ! ஏப்ரல் பத்தாம் தேதி முதலே ஆக்லாந்தில் இருந்தும், கிறைஸ்ட்சர்ச்சில் இருந்தும் (எங்கஊர்) அவுங்க மக்களை ஏத்திக்கிட்டுப் போக ஆரம்பிச்சாங்க. விமானம் பறக்கும் சத்தம் கேட்டதும் ஆசைஆசையா வெளியே வந்து ஆகாயத்தைப் பார்த்தேன். எப்போ கொரோனா அடங்கி, எப்போ நாம்  பயணம் போவோம் என்ற பெருமூச்சுதான். தினம் காலையில் ரெண்டு ஃப்ளைட் கிளம்பிப்போகும்.
எங்க ஊருக்கு நன்றி சொல்லி மேலே ஒரு வட்டம் போட்டுட்டுப்போனார் ஒரு பைலட் !

A German airline pilot has performed a tribute flyover of Christchurch to thank the city for its hospitality of Germans stuck in New Zealand.

Christchurch Airport has been working with airline Lufthansa to get thousands of German nationals home after they became stranded because of border closures during the coronavirus pandemic, airport spokeswoman Yvonne Densem confirmed on Wednesday.

Upon departure from Christchurch on Monday morning, the captain of Lufthansa flight LH355 requested permission to fly over the city to thank its people for looking after stranded Germans and helping them get home, Christchurch Airport chief executive Malcolm Johns said in a Facebook post.

கடந்த இருபத்திநாலு நாட்களா ( மே 22 முதல் ) புது நோயாளிகள் யாரும்  இல்லை !

ஜூன் 8 ஆம் தேதி இரவு பனிரெண்டு முதல் லெவல் 1 வந்துட்டோம். மொத்தம் 105 நாட்கள் !  அரசுக்கு ரொம்பவே மகிழ்ச்சி. எங்கள் பொறுமையை ரொம்பப் பாராட்டி, ஒத்துழைப்பு கொடுத்து நடந்துக்கிட்ட நாட்டுமக்களுக்கு  நன்றிகளைச் சொல்லுச்சு !  பிரதமர் ஜெஸிண்டாவுக்கு, இங்கேயும், மற்ற வெளிநாடுகளிலும் ரொம்பவே நல்ல பெயரை வாங்கிக்கொடுத்துருச்சு இந்த கோவிட் 19.
வெளிநாட்டில் இருந்து வர்றவங்களைத் தனிமைப்படுத்த  ஆக்லாந்து நகரில் சில ஹொட்டேல்களை அரசு ஏற்பாடு செஞ்சுருச்சு. நாலு நக்ஷத்திர வசதி உள்ளவை. எல்லா செலவும் அரசுதான்.  மூணாம் நாளும் பனிரெண்டாம் நாளும் கோவிட் டெஸ்ட் நடத்துவாங்களாம். தொற்று  ஒன்னும்  இல்லாதவங்களைப் பதினாலு நாட்களுக்குப்பின் வீட்டுக்கு அனுப்பிருவாங்க. வீட்டுக்குப்போனாலும் ஒரு வாரம் தனிமைப்படுத்திக்கச் சொல்லியிருந்தாங்க.

ப்ரிட்டனில் இருந்து ரெண்டு கிவிக்கள், தோஹா, ப்ரிஸ்பேன் வழியா வந்தவங்க, அவுங்க தகப்பன்  மரணப்படுக்கையில் இருக்காருன்னு (கொரோனா இல்லை) போய்ப் பார்க்கணுமுன்னு விண்ணப்பிச்சுருக்காங்க.  மனிதாபிமானத்தின் அடிப்படையில்  அவுங்களை வெளியில் விட்டுருக்கு அரசு. என்னமோ ஒரு குழப்பம்..... இவுங்களுக்கு கோவிட் டெஸ்ட் எடுக்கவே இல்லையாம் !

இந்த ரெண்டு பெண்களும் ஆக்லாந்தில் இருந்து வெலிங்டன் நகருக்கு (642 KM )ஒரு உறவினரின் காரை இரவல் வாங்கித் தாங்களே ஓட்டிக்கிட்டுப் போயிருக்காங்க. தகப்பன் முதல்நாளிரவே சாமிக்கிட்டே போயிட்டார். ஆக்லாந்து நகரை விட்டுக்கிளம்பும்போது வழிதெரியாமல் தடுமாறினதாயும்,  அவுங்க நண்பருக்குப் ஃபோன் செஞ்சு அவர் வந்து சந்திச்சு வழி சொன்னதாகவும், கிவி வழக்கப்படி   இவுங்க கட்டியணைச்சுட்டுப் போனதாகவும் அப்புறம்  செய்தி கிடைச்சது  !  இவுங்களுக்கு கோவிட்டும் இருந்துருக்கு....   இவுங்க போய்ச் சேர்றதுக்குள்ளே  தகப்பன் உடல் மார்ச்சுவரிக்குப் போயிருச்சு.  எட்டுமணி நேர ட்ரைவ்.

சேதி வெளிவந்ததும்  சுகாதார இலாகாவைக் காய்ச்சி எடுத்தோம். அதெப்படி இவுங்களை  டெஸ்ட் எடுக்காமல் வெளியில் விடப்போச்சுன்னு.....  அங்கே போய்ச் சேரும்வரை இவுங்க ரெண்டுபேரும்  வெலிங்டன் போகும் வழியில் எங்கெங்கே போய் கொரோனாவைப் பரப்பிவிட்டாங்களோ ?

'இவுங்க ரெண்டுபேரையும்  இப்போ வீட்டுலேயே தனிமைப்படுத்தி வைக்கச் சொல்லிட்டோம். வழியிலே எங்கேயும் நிறுத்தலை, அப்படி இப்படி'ன்னு சப்பைக்கட்டுக் கட்டிக்கிட்டு இருந்தாங்க  இதுசம்பந்தப்பட்ட அதிகாரிகள்.


அதெப்படி? கிட்டத்தட்ட எட்டுமணி நேரம் வண்டியை நிறுத்தாமலும், ரெஸ்ட்ரூம் போய்வராமலும் இருந்துருப்பாங்களா ?  அப்புறம் வழியில் சாப்பிடாமலே போயிருப்பாங்களா?

நாங்களும் விடலை.  ஃபேஸ்புக்கில் நம்ம கொரோனாவுக்காக  அரசு ஒரு பக்கம் வச்சுருக்கே.... அதில்மட்டும் ஏகப்பட்ட காமென்ட்ஸ். சுமார் ஆயிரம் .... ஒரே திட்டலும் நக்கலுமாகத்தான்....   'நோய் பரவுச்சுன்னா  இன்னொருக்கா லாக்டௌனில் போகமாட்டோமு'ன்னு கத்திக்கிட்டு இருந்தோம்.

அந்த சவ அடக்கத்தையும் இப்போ இவுங்க ரெண்டுபேரும் ஐஸோலேஷனில் இருந்து வெளிவரும் வரை தள்ளிப்போட்டுருக்காங்க. முன்னாலேயே வெளியே விடாமல் இருந்துருக்கலாம். வேண்டாத வேலை...... வேலியிலே போன ஓணானை எடுத்து மடியில்  வச்சுக்கிட்டாப்லெ..............

இந்த கொரோனா கலாட்டாக்களுக்கிடையில் ஓசைப்படாம  இங்கத்து மக்கள் தொகை அஞ்சு மில்லியன் ஆகிப்போயிருக்கு. யாரும் எண்ணிக்கையை கவனிக்கலை.  'அஞ்சு மில்லியன் டீம் ஒர்க்கினால் கொரோனா ஒழிஞ்சது'ன்னு அரசு சொன்னப்புறம்தான் கவனிச்சோம். இப்ப இந்த ரெண்டுபேர் கொரோனாவை ஊருக்குள் கொண்டு வந்துட்டதால் அஞ்சு மில்லியன் கஷ்டப்படும்படி ஆச்சுன்னு அதுக்கொரு மண்டகப்படி ஆச்சு அரசுக்கு.  பாவம்... எங்க  டைரக்டர்  ஜெனரல் ஆஃப் ஹெல்த்  டாக்டர் ஆஷ்லி ப்ளூம்ஃபீல்ட்.......   மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லி மாளலை.
தினம் தினம் டிவியில்  மலர்ந்த முகத்தோடு வந்து நாட்டுமக்களுக்கு நல்ல சேதி சொல்லிக்கிட்டு இருந்த ப்ரதமரைக் காணோம். .....   ஆஹா.....
'இனிமேப்பட்டு நாட்டுக்குள் வர்றவங்க எல்லோரையும் கவனமா ரெண்டு வாரத்துக்குத் தனிமைப்படுத்துவோம். யாருக்கும்  இரக்கம் காட்டப்போறதில்லை' ன்னு கதறும்வரை விடலை. நியூஸியில் இதுதான் ஒரு தொல்லை......   இங்கே மனுசர் சொல்வதை நம்பிருவோம்.  எந்த  பொது விசாரிப்புன்னாலும்  இப்படியே.  சாட்சி கொண்டா,  சர்ட்டிஃபிகேட் கொண்டா, ஆதார் கார்ட் கொண்டான்றதெல்லாம் இல்லை.  காய்ச்சல் இருக்கா? இருமல் இருக்கா? அது இருக்கா ...இது இருக்கா? இல்லை இல்லைன்னதும் நம்பிட்டாங்க. Too Naive

ஏர் இண்டியா கொண்டு வந்த மக்களில்  நிறையப்பேருக்கு கோவிட் இருக்கு.   அங்கே இங்கேன்னு வெவ்வேற நாடுகளில் இருந்து  இங்கே வந்து சேர்ந்தவர்களில் கோவிட் இருக்கற  பதினெட்டு  மக்களில்  இந்தியர்கள் பதினொருவர்.  ப்ச்.... நல்லவேளை ஆஸ்பத்ரி  வாசம் செய்யும் அளவுக்கு இல்லை.

இப்படி இருக்கும் நாளில் நமக்கு எதிர்பாராமல் ஒரு அதிர்ச்சி கிடைச்சது....


தொடரும்......   :-(

PIN குறிப்பு : இந்தப் பதிவு எழுதும் வேளையில்  டிவி நியூஸ் போய்க்கிட்டு இருக்கு.    இன்றைக்கு மூவருக்கு நோய் பாஸிட்டிவ். தில்லியில் இருந்து வந்து ஐஸொலேஷனில் இருக்கும் மக்கள்.   ஆறு பேர் அடங்கிய ரெண்டு குடும்பம். (-:


Friday, July 03, 2020

என்னென்ன புது அனுபவங்கள் பாருங்க, இந்தக் கொரோனா காலத்துலே! (மினித்தொடர் பாகம் 2 )

எப்பவும் வீட்டுலேயே இருக்கோமா....  பைத்தியம் பிடிச்சுப் பாயைச் சுரண்டத்தான் போறோமோன்னு இருக்கு.  மனுசன் சமூகத்தொடர்பில் இருக்க விரும்பும் குணாதிசயங்கள் இருப்பவன் இல்லையோ ?  நல்ல வேளையா வலை மூலமாவே  கூட்டம் கூட்டவும் கத்துக்கிட்டான்.  Zoom meeting  என்றும்,  வீடுகளில் நடக்கும் விழாக்களையும் 'லைவ்'வாக் காமிச்சால் ஆச்சு.  அதான் எல்லோர் கையிலும்  மொபைல் ஃபோனும், இணைய வசதியும் தாராளமா இருக்கே!   இந்தக் கலிகாலத்தில் செல் இல்லாதவன் புல் இல்லையோ ?
ஒன்பதுநாள் ராமநவ்மி கொண்டாட்டங்களை, அவரவர் பதிவு செஞ்சும், நேரடி ஒளிபரப்பாகவும் அனுப்பிக்கிட்டு இருந்தாங்க. நானும் 'போன வருசம் இப்படி எல்லாம் கொண்டாடினோமே'ன்னு அப்போ எடுத்த வீடியோ க்ளிப்புகளைப் பகிர்ந்துக்கிட்டேன்.

நம்ம புள்ளையார் கோவில் சத்சங்கப் பூஜைகளையும்  Zoom meeting   மூலமாகப் பார்த்து கொஞ்சம் மனசமாதானம் ஆச்சு. நம்ம பண்டிட் , வெலிங்டன் நகரத்துலே இருக்கார். அவர் வீட்டில் சம்ப்ரதாயமாப் பூஜை நடத்த, நாம் க்றைஸ்ட்சர்ச் நகரத்திலே அவரவர் வீடுகளில் பார்த்துப் பூஜையில் கலந்துக்கிட்டோம்.
நாம்  பங்கேற்கும் யோகா குழுவுடனும், வாரம் ஒருமுறை  Zoom meeting  மூலமாகவே  ஒரு ஒன்றுகூடல் நடத்தினோம். குறைஞ்சபட்சம்  ஒவ்வொருவர் முகத்தைப் பார்த்துக்கலாம் இல்லையா ?  இந்த மீட்டிங்கில் யோகா செய்வது கஷ்டம் என்றபடியால்,  பொது அறிவுக்கேள்வி பதில்,  சினிமாப் பாட்டு க்விஸ்,  அந்தாக்ஷரி என்ற பாட்டு விளையாட்டுன்னு அது ஒரு பக்கம். நாலு வாரத்தைத் தள்ளணுமே.....

குழுவில் இன்னொரு ஐடியாவும் கொடுத்தாங்க. தினம் மாலை அஞ்சு மணிக்கு தியானம் செய்யலாம். ஒரு இருபது நிமிட்தான். அதுக்கென்ன செஞ்சால் ஆச்சுன்னு நாங்க ஆரம்பிச்சோம். அதுபாருங்க.... ஒரு வழக்கமாகவே மாறிப்போய், இன்றுவரை செஞ்சுக்கிட்டுதான் இருக்கோம்.  21 நாட்கள்  தொடர்ந்து  எந்த விஷயத்தைச் செஞ்சாலும் அது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிடுமாமே !   இதுலே ஒரு ப்யூட்டி என்னன்னா... நம்ம ரஜ்ஜுவும்  தியானத்துலே கலந்துக்கறதுதான் :-)  சில சமயம் அப்பாவுக்கு முன்னால், சிலநாட்கள் அம்மாவின் பக்கத்தில் வந்து உக்கார்ந்துக்குவான். இது நமக்குத் தெரியாது. ஓசைப்படாமல் 'பூனை மாதிரி' ஏறி உக்கார்ந்துருவானே!  டைமர் செட் பண்ணி அலார்ம் அடிச்சதும்  நாம் கண்ணைத் திறந்து பார்த்தால் செல்லம் இருக்கும். பட்டுச் செல்லம்! சிலசமயம் மணி அடிச்சதும் எழுப்பும் :-)

லாக்டௌன் ஆரம்பிச்சு முதல் ரெண்டு வாரம் கடந்து போன சமயம், நம்ம புதுவருசம் பொறக்கும் நாளும் வந்துச்சு. தமிழ்ப்புத்தாண்டு & விஷூ ரெண்டுமே சேர்ந்தேதான் வரும், இல்லையோ ? பழவகைகளுக்கு எங்கே போக ?  வீட்டில் உள்ளவைகளை வச்சே விஷுக் கணியும் கண்டு.  கூடவே ஒரு சக்கப்ரதமனும் ! பெருமாளே.... இந்தக் கொரோனா சீக்கிரம் உலகத்தை விட்டு ஓட  வழி செய் என்பது மட்டுமே வேண்டுகோள்.

இதுக்கிடையில் இந்தியாவுலே கொரோனா  வேகமாப் பரவ ஆரம்பிச்சதுன்னு வரும் சேதிகள் மனக்கவலையைக் கூட்டிருச்சு...  சிலபல சமூக விரோதிகள்,  அரசு ஒன்னும் செய்யலைன்னு புரளி கிளப்பிவிட்டுக்கிட்டு இருந்தாங்க. 

அரசு என்ன செஞ்சாலும் அதுக்கு எதிராக் கூவறதுதான் எதிர்க்கட்சியின் முக்கிய வேலையாக இருக்கு. நாட்டுக்கு நல்லது எதாவது செய்ய அரசு திட்டமிடும்போதும், செயல் படுத்தும்போதும், அனைத்துக் கட்சிகளும் ஆதரவு கொடுக்கணுமா இல்லையா? 

இங்கே எங்க நியூஸியில் நாட்டுக்கு ஒரு நல்லது செய்யும்போது, கட்சிப்பாகுபாடு, காழ்ப்புணர்வு இல்லாமல்  எல்லா பார்லிமெண்டு அங்கங்களும்  ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுக்கும். நாடு நல்லா இருக்கணும் என்பதற்குத்தானே இவுங்களை சனம் தேர்தல் மூலம் தெரிஞ்செடுத்துருக்கு ! கொரோனா சம்பந்தமான எல்லா திட்டங்களுக்கும்  எல்லாக் கட்சிப் பிரதிநிதிகளும் அரசுக்கு உதவியாகத்தான் செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க.

  இங்கே நாங்க இணைஞ்சுருக்கும் ஹிந்து ஸ்வயம் ஸேவக்  பிரிவின் தலைவர் திரு ஹனுமந்தராவ் ஜி,  இந்தக் கொரோனா தாக்குதல் சமாச்சாரங்களில் இந்திய அரசு எந்தவிதமான நிலைப்பாடுகள் எடுத்துருக்கு, இன்னும் என்ன செய்யப்போறாங்க? இன்னும் என்ன செய்யலாம்?  என்பதையெல்லாம் தெளிவுபடுத்தி விவாதிக்கும் ஒரு  ஸூம் மீட்டிங்கில் என்னைக் கலந்துக்கச் சொன்னார்.  எனக்கு முதலில் கொஞ்சம் திகைப்பாத்தான் இருந்துச்சு. இதுலே நான் என்னன்னு விவாதிக்க முடியும் ? விவரம் உள்ளவர்கள் கலந்துக்கிட்டால்தானே நல்லதுன்னேன்.  நீங்க எழுத்தாளர். இதில் கலந்துக்கிட்டு, விவரங்களை எழுதுங்க. இங்குள்ள மக்களுக்கு விவரம் தெரியணும். அதே சமயம் உங்க வலைப்பதிவு மூலம்  இந்தியாவில், முக்கியமா தென்னிந்தியப் பகுதிகளில்  இருப்போர்க்கும்  அரசின் நடவடிக்கை தெரியவரட்டுமுன்னு சொன்னார்.

சரி. நமக்கும் ஒரு நல்ல வாய்ப்புன்னு அவுங்க சொன்ன நேரத்துலே அந்த சந்திப்புலே கலந்துகிட்டேன். உலகின் பலநாடுகளில் இருந்து பலர் கலந்துக்கிட்ட சந்திப்பு அது.

பிஜேபி கட்சியின்  பொதுச்செயலாளராக இருக்கும் திரு சந்தோஷ்ஜி , முதலில்  அரசு என்ன நடவடிக்கை ஆரம்பிச்சதுன்னு தெளிவாக ஆரம்பிச்சு பேசினார். ஜனவரி எட்டு தேதியன்று  நம்ம நாட்டுமக்கள் பாதுகாப்புக்கு என்ன செய்யலாமுன்னு திட்டம் தொடங்கி இருக்கு !   எனக்கு உண்மையிலேயே இது புதுச் செய்தி ! 

 இங்கே நியூஸியில்  ஃபிப்ரவரி மாதக் கடைசியில் நாட்டுக்குள் கொரோனா (இரான் போய் வந்த பயணி மூலம்) நுழையறதுக்கு முந்தி  இதைப்பற்றி ஒன்னும் பெருசா பேசிக்கிட்ட  மாதிரி தெரியலை.   உலகத்தின் கடைசி மூலையில் இருக்கும் நம்மைத் தேடி வைரஸ் வரப்போகுதா என்ன ?என்ற நினைப்புதான் போல !  கடைசியில் நினைப்பே பொழப்பைக் கெடுத்துருச்சுன்றது வேற விஷயம்,....  ப்ச் 


சந்திப்பு ஒரு ஒன்னரை மணி நேரம் நடந்துச்சு. பல விஷயங்களைத் தெரிஞ்சுக்க முடிஞ்சது. அதுவரை தென்னிந்தியா சமாச்சாரங்கள், முக்கியமாகத் தமிழ்நாட்டுலே என்ன நடக்குதுன்னு எப்பவும் கவனிச்சு வச்சுக்கும் எனக்கு,  மேற்படிக் கொரோனா விஷயத்தில் அரசின் நடவடிக்கை ஒன்னுமே  மக்களைப்போய்ச் சேராதவகையில் எதிரிக்கட்சிகள் வ்யூகம் வகுத்து வச்சுருக்கோன்னுதான் தோணுச்சு.

அரசியல் கட்சிகள் ஆளுக்கொரு சேனல் வச்சுக்கிட்டு, பொய்யுரைகளைப் பரப்பி விடும் பம்மாத்து எல்லாம் நியூஸியில் இல்லை.  வேண்டாத கணவனின் கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம்னு சொல்லும் பழமொழிக்கேற்ப  மத்திய அரசு, முக்கியமா பிரதமர் மோடியின்  மேலே உள்ள வெறுப்பெல்லாத்தையும் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் பதிவுகளாகக் கொட்டி வச்சுக்கிட்டு இருந்தாங்க பலரும். இவர்களில் நம் நண்பர்களும் உண்டு. இது என்னைப்பொறுத்தவரை மிகப்பெரிய சோகம்.

பொதுவாக வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு,  நம்ம நாடு என்ற பாசமும், புரையோடிக்கிடக்கும் ஊழலில் இருந்து  வெளிவராதா என்ற ஏக்கமும்  ஏராளம்.  இதுலே  ஜிஎஸ்டி கொண்டுவந்ததைப்பற்றிக்கூட  வெறுப்பும், இகழ்ச்சியும் கலந்த பதிவுகள் அடக்கம்.   உலகில்  எந்த நாடானாலும்  வரி வசூலிக்காம அரசாங்கத்தை நடத்த முடியுமா?  இங்கே நியூஸியில் கூட பத்து சதமானமாக ஆரம்பிச்ச ஜிஎஸ்டி, பனிரெண்டரை ஆகி, இப்போ பதினைஞ்சாகி இருக்கு.

இங்கே வரி கட்டாத மக்களே இல்லை. பள்ளிக்கூடச் சின்னக்குழந்தைகளுக்கான   சேமிப்புன்னு இருக்கும் போஸ்ட் பேங்கில் கூட  அவர்களுக்குக் கிடைக்கும்  கொஞ்சூண்டு வட்டியில் துளியூண்டு வரிப் பிடித்தம் உண்டு. என்ன ஒன்னு சகல பொருட்களுக்கும்  ஒரு  ரொட்டி, ஒரு முட்டாய் உட்பட  இந்த ஜிஎஸ்டி, பொருளின் விலையிலேயே சேர்க்கப்பட்டுருக்கும்.  கடைக்காரர்களும் எல்லா சமாச்சாரங்களுக்கும்  பில் போட்டுக் கொடுத்துருவாங்க.  ஏமாத்தும் எண்ணம் பொதுவா யாருக்குமே இல்லை.

ஆனால்... கசப்பான விஷயம் ஒன்னும் சொல்லித்தான் ஆகணும்.  இந்தியர் பலர் குடியேறிவந்தபின் அவர்களோடு குணக்கேடுகளும்  கூடவே வந்தாச்சு.   இன்னும் சில குறிப்பிட்ட நாட்டினரும்  இதில் சேர்த்தி.  வரி ஏய்ப்பை ஆரம்பிச்சு வச்சும்,    வெல்ஃபர் கவர்மென்ட் என்றபடியால், இரக்கம் கொண்டு கொடுக்கும் உதவித்தொகையிலும் தாராளமாப் பூந்து விளையாடிக்கிட்டு இருக்காங்க.  இப்ப கொரோனா காலத்தில் மூடிவைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டத்தைச் சரிக்கட்ட அரசு கொடுக்கும் தொகையில் ஒரு இந்தியர் அஞ்சு லக்ஷம் டாலர் (சராசரி டாலருக்கு அம்பது ரூபாய்னு வச்சுக்கலாம். கணக்குப்போட்டுக்கறது சுலபம் )ஏமாத்திட்டார்.  தினசரியிலும்,  டிவியிலும், வலையிலும் வெளியிட்டுட்டாங்க.  இந்தியன் என்ற  வகையில் நமக்கு   ரொம்ப அசிங்கமாப் போச்சு கொமாரு....   ப்ச்.... நமக்கு நல்லாவே தெரிஞ்சவர் என்பதால்......   சீன்னு போச்சு.


 கடுமையாகப் பாதிக்கப்பட்டு  மருத்துவமனையில் இருந்த  கொரோனா நோயாளிகள்  எண்ணிக்கை படிப்படியாகக் குறைஞ்சுக்கிட்டே வந்தது.  மருத்துவமனையில் இல்லாமல் தனிமைப்படுத்தப்பட்ட  கொரோனா நோயாளிகள் அரசின் கவனிப்பில் தனி அறைகளில்   இருந்தாங்க. மருந்துதான் இதுக்குக் கண்டுபிடிக்கலையே.....   சத்தான உணவும் , கனிவான கவனிப்பும் இருந்ததால்  மெல்ல மெல்ல  இவுங்க எண்ணிக்கையும் குறைஞ்சுக்கிட்டே வந்தது.

தினமும் பகல் ஒருமணிக்குக் கோவிட் செய்திகள்  டிவியில்  சொல்றதைக் கேட்டபிறகுதான் நமக்குப் பகல் சாப்பாடு என்று  ஒரு டைம்டேபிள் போட்டுக்கிட்டோம் நம்ம வீட்டில் . இப்பவும் அப்படியேதான். 
இன்னைக்கு சொல்லிட்டானா ?  புதுக்கேஸ் ஒன்னும் இல்லை. சிலநாட்கள்  மூணு  பேர், ரெண்டு பேர் னு  கேட்டதும்  அதுக்கேத்தபடி  சந்தோஷமும், துக்கமுமாக நாட்கள் போய்க்கிட்டு  இருந்துச்சு.  நாலு வாரம் ஆனதும் ஓரளவு கட்டுக்குள் வந்தாச்சுன்னு   அலர்ட் லெவல் 3 னுக்குப் போறோமுன்னு  அரசின் அறிவிப்பு வந்தது. ஏப்ரல் 27 முதல் ஒரு படி கீழிறங்கியாச்சு !   33 நாட்கள் ரொம்ப மன அழுத்தத்தோடுதான் கடந்து போச்சு.

இதுக்கிடையில்  ரெண்டுநாள் முந்தி ஏப்ரல் 25 அன்று இங்கே ANZAC Day  ( Australia New Zealand Army Corps Day)அஸ்ட்ராலியா நியூஸிலாண்ட்  படையினர் , முதல் உலகப்போரில் ப்ரிட்டிஷ் சாம்ராஜ்யத்துடன் இணைஞ்சு சண்டை போட க் கிளம்பிப்போய்த்  துருக்கியிலே இருக்கற Gallipoli Peninsula என்ற இடத்துலே மாட்டிக்கிட்டு 2721 படைவீரர்கள் 'வீரமரணம் ' அடைஞ்சநாள். எல்லா வருஷமும் இந்த நாள் அரசு விடுமுறைதான். காலையில் சூரியன் வருமுன்  நாட்டின் எல்லா ஊர்களிலும்  கொடியேற்றி  போரில் வீழ்ந்த படையினருக்கான  ப்ரேயர் சர்வீஸ் நடக்கும். Dawn Service.  சின்னச்சின்ன கிராமங்களில் கூட அங்கிருந்துபோய் போரில் கலந்துக்கிட்டவர் ஒரே ஒரு நபராக இருந்தாலும் கூட வார் மெமோரியல் ஒன்னு கட்டி வச்சுருக்காங்க. 

நாங்களும் இங்கே நியூஸி வந்த நாளாய் (அதுஆச்சு 33 வருஷம்) ஒரு சர்வீஸில்  கலந்துக்கணுமுன்னு நினைச்சோமே தவிர, அதிகாலை நாலரைக்கு எழுந்து சர்வீஸ் நடக்கும் இடத்துக்குப் போக ஒரு சோம்பல்.  இந்த வருஷம் லக்டௌன் காரணம் இது ஏதும் இல்லை. எங்க ப்ரதமர் ஒரு அறிக்கை  விட்டாங்க.  25 ஆம் தேதி காலை 6 மணிக்கு அவுங்கவுங்க  வீட்டு வாசலில்  வந்து நில்லுங்க.  ப்ரேயர் சர்வீஸை ரேடியோவில் ஒலிபரப்புவாங்க.  அதைக் கேட்டுக்கிட்டே  அஞ்சலி செலுத்தலாம்.
அட! இது நல்லா இருக்கே.  காலையில் நம்மூட்டு வாசல்தானே, நின்னாப்போச்சுன்னு நின்னோம். நம்ம ரஜ்ஜூ கூட  வந்து கலந்துக்கிட்டான்.  இதுக்கு முதல் ரெண்டு நாட்கள் சின்னப்பிள்ளைங்க இருக்கும் வீடுகளில், பிள்ளைகளுக்கான ஆக்டிவிட்டின்னு பாப்பிப் பூவின் படம் வரைஞ்சு   அலங்கரிப்பதும் நடந்தது. நம்ம பக்கத்து வீட்டுப் பிள்ளைகள் படங்கள் வரைஞ்சு ஃபென்ஸ் கட்டைகளில்  ஒட்டி வச்சாங்க.
லெவல் மூணு வந்ததும்  அடைச்சு வச்ச பிஸினஸ்கள், நிறுவனங்கள் , தொழில்கள்னு  சிலபல வகைகள்  வேலைக்குத் திரும்பியாச்சு.  நம்ம மருமகன், ரொம்ப மகிழ்ச்சியோடு வேலைக்குத் திரும்பிப்போனார். வீட்டுலேயே இருந்து போதும் போதுமுன்னு ஆகிருச்சாம்.  கூண்டுக்குள் அகப்பட்ட புலி :-)

வீட்டுக்குள்ளே, தன் பேட்டைக்குள்ளேன்னு அடைஞ்சுருந்த மக்களுக்கும் சின்னதா ஒரு சுதந்திரம் கிடைச்சது.  அவுங்கவுங்க ஊருக்குள்ளே மட்டும் கொஞ்சம் போய் சுத்திக்குங்கன்னாங்க.  ஆனால்  குமிழிக்குள்ளேயே இருக்கணும்.  அடுத்தவங்களைத் தொடப்டாது.  ஆஹா....  மடி காக்கமாட்டோமா,என்ன ?   நாங்களும் பீச் வரைக்கும் போயிட்டு வந்தோம். போய்வர்ற வழியில்தான் நம்ம சனாதன் தர்ம ஹால் இருக்கு. அப்படியே அந்த கேட்வரை போய், ஆஞ்சி சந்நிதிக்கு ஒரு கும்பிடு போட்டுட்டு வந்தோம். மூடிக்கிடந்தது. விளக்கைக்கூடக் காணோம். ப்ச்.... பாவம் ஆஞ்சி....
அடுத்த ரெண்டரை வாரம் முடிஞ்சதும்  மே மாசம் 13 முதல்  அலர்ட் லெவல் 2 . கொஞ்சம் விதிகள் தளர்த்தினாங்க.  மகளும் வீட்டு ஆஃபீஸைக் காலி செஞ்சுட்டு வேலையிடத்துக்குப் போனாள். 

கோவில்களையும் திறக்கலாமுன்னு சொன்னாங்க.  எல்லோரும் சமூக இடைவெளி  ரெண்டு மீட்டர் கடைப்பிடிக்கணும்.  கோவிலில் ரெஜிஸ்டர் வச்சு எத்தனை மணிக்கு உள்ளே போறோம். எத்தனை மணிக்கு வெளியே வர்றோம், நம்ம பெயர், ஃபோன் நம்பர் எல்லாம் எழுதிவைக்கணும். நாளைபின்னே  யாருக்காவது  கொரோனா வந்துட்டால்  அவுங்க போன இடத்தில் வேற யார்யார் இருந்தாங்கன்னு  கண்டுபிடிச்சு அவுங்களையும் பரிசோதிக்கணும் என்பதுதான் காரணம்.

ஹரேக்ருஷ்ணாவில்  சாமி கூட கம்பிக்கதவு வழியாத்தான் தரிசனம். சோஸியல் டிஸ்டன்ஸ் மெயின்டெய்ன் பண்ணறார்.

சுமார் அம்பது நபர்கள் வரை ஒன்னாக்கூடலாம். ஆனால் அப்பவும்  அதே இடைவெளி விட்டே ஆகணும்.  எந்தவகை கூட்டம் என்றாலும்  நபர்களின் விவரங்களைப் பதிஞ்சு வைக்க வேண்டியது முக்கியம்.
நாங்களும் எப்போ எப்போன்னு  இருந்தோமா....    எங்க சனாதன தர்ம ஹாலில் பிரதிஷ்டை செஞ்சுருந்த ஆஞ்சியைப் பார்க்க ஓடுனோம். மே 16 ஆம் தேதி.

அன்றைக்கு ஒரு மரணம் , சொந்தத்துலே.... நம்ம சம்பந்தியம்மாவின்  தாய் சாமிக்கிட்டே போயிட்டாங்க.   ரெண்டுமூணு வருஷமாவே உடல்நிலை சரி இல்லாமல் மருத்துவமனையோடு கூடிய  சீனியர் சிட்டிஸன் ஹோமில் இருந்தாங்க.  அவுங்க கணவரும் இங்கே இதே ஊரில்  வேறொரு  ஹோமில்தான் இருக்கார். கொரோனா லாக்டௌன்  அறிவிக்கும் முன் வரை, தினமும் மனைவியைப் பார்க்கப் போய் வருவார்.  உடல்நிலை காரணம், அவுங்களுக்குப் பார்வை போயிருந்தது. தினமும் கணவருக்காகக் காத்திருக்கும் மனைவி,  இவர் போனதும் தான்  சாப்பிடுவாங்க.  ரெண்டுபேரும் கொஞ்சம் பேசிக்கிட்டே  கை கோர்த்து உக்கார்ந்துருப்பாங்க.  இதுதான் அவுங்க நாளின் மகிழ்ச்சியான நேரம். லாக்டௌன் வந்தபிறகு,  கணவரால் வெளியே ஹோமை விட்டுப் போக முடியாது.  அங்கே மனைவியும் வேற யாரையும்  சந்திக்கவும் முடியாது. ஹோமுக்குள் வர யாருக்குமே அனுமதி இல்லை. உள்ளேயே இருந்து வேலை செய்யும்  பணியாட்கள் தவிர. பயம்தான்....  கொரோனாவுக்கு சீனியர் சிட்டிஸன்களை ரொம்பவே பிடிக்குமாம்!

இப்ப லெவல் 2 வந்தது முதல் திரும்ப  மனைவியைப் பார்க்க அனுமதி கிடைச்சுப் போய்வர ஆரம்பிச்சார்.  ஆனால் எண்ணி மூணாம் நாளிலேயே நிரந்தரப்பிரிவு ஏற்பட்டுப்போச்சு. 69 வருஷ மணவாழ்க்கை !   சவ அடக்கத்துக்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பிச்சாங்க சம்பந்தியம்மாள். மே மாசம் 22 தேதின்னு முடிவாச்சு. பாட்டிக்கு வயசு 92.

அலர்ட் லெவல் 4 இல் சவ அடக்கத்துலே  அநேகமா  யாருமே கலந்துக்க முடியாது.  அதனால் இயற்கை மரணம் அடைஞ்சவங்கள் எல்லாம் மார்ச்சுவரியில் காத்திருந்தாங்க.  கொரோனா மரணத்தைத்தான் உடனுக்குடன் எரிக்க அனுமதி இருந்தது.  அதுவுமே உறவினர் உற்றார் இல்லாமல்தான்.

லெவல் 3 இல் இருபதுபேர்வரை, சவ அடக்கம், கல்யாணம் போன்றவைகளில் கலந்துக்கலாமுன்னு சொன்னாங்க. ரெண்டு மீட்டர் இடைவெளி கடைப்பிடிக்கணும்.

இப்போ லெவல் 2 இல்  அம்பதுபேர் வரைன்னு கணக்கு. உள்நாட்டுப் பயணத்துக்கும் அனுமதி கொடுத்துருந்தாங்க.  எல்லாம் லிமிட்டட் ஃப்ளைட்டுகள்தான். அதிலும்  குறைஞ்ச அளவு ஆட்களை மட்டுமே அனுமதிக்கிறாங்க. சமூக இடைவெளி விமானத்துக்குள்ளும்தான்.

சம்பந்தி வீட்டுலே பெரிய குடும்பம். வெளிநாடு, உள்நாடுன்னு  நெருங்கிய சொந்தம் ஏராளம்.  வெளிநாட்டு உறவினர் யாருமே வர முடியாது.  நியூஸி பார்டர் மூடியாச்சு. உள்நாட்டு சொந்தங்கள் தான் பல ஊர்களிலும் இருந்து.  இவுங்களே  நிறையப்பேர் என்பதால் நாங்க சவ அடக்கத்துக்குப் போகலை.  இங்கத்து வழக்கப்படி, சவ அடக்கத்துக்கான  ப்ரேயர் சர்வீஸ் முடிஞ்சதும்,  சின்னதா  சிற்றுண்டிகளுடன்  ஒரு கெட் டு கெதர் இருக்கும்.  பொதுவா  இது   ஃப்யூனரல் பார்லரிலோ, அவுங்க போகும் சர்ச்சுகளிலோ,  மின்மயானத்திலோ இருக்கும் ஹாலில் தான் நடக்கும்.
கொரோனா காரணம் எல்லாத்திலும் மாற்றம் (தாற்காலிகம்தான்) வந்துட்டதால், நம்ம மகளின் வீட்டில்  இதை வச்சுருந்தாங்க. சம்பந்தியம்மாவின் வீடு   வேற ஊரில்!  நாங்க மகள் வீட்டுக்குப் போய், சம்பந்தியம்மா குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லிட்டு  வந்தோம்.  தாத்தாவைப் பார்க்கதான் மனசுக்குக் கஷ்டமாப் போச்சு.  வெளிநாட்டுலே இருந்த குடும்ப அங்கங்கள் (தாத்தா பாட்டியின் மகன்கள், உடன்பிறந்தவர்கள் ) எல்லோரும் Zoom வழியில்   கலந்துக்கிட்டாங்க . மறுநாள் தாத்தாவுக்குப் பொறந்த நாள். 93 !  உறவினர் எல்லாம் இப்போ அங்கே கூடி இருப்பதால், இன்றைக்கே பொறந்தநாளை, கேக் வெட்டிக் கொண்டாடியாச்.  எல்லாம் மகளின் ஏற்பாடுதான் ! ஜனனம்,மரணம் ரெண்டும் ஒரே நாளில் கொண்டாடியாச்சு!

பாருங்க.... எனக்கு என்னென்ன அனுபவங்கள் கிடைக்குதுன்னு.....

தொடரும்..........  :-(


Wednesday, July 01, 2020

கொரோனா காலம், நியூஸியில் ! (மினித்தொடர் . பாகம் 1 )

ஒருவேளை புதுவருஷம் 2020 பொறந்த நேரம் சரியில்லையோன்னு....  தோணுது.....  என்றாலும் அப்படி ஒன்னும்  சொல்ல முடியாதுதான்.......  ஏற்கெனவே ஒருமாசம் முந்தி,   ச்சீனாவில் ஆரம்பிச்சதை,  ஓசைப்படாம  அதன் வாயை மூடிவச்சு,  மத்த உலகநாடுகளையெல்லாம்  கழுத்தறுத்துட்டாங்கன்னுதான்  சொல்லணும்.
போனவருஷம் டிஸம்பர் மாசமே  அங்கே  ஆரம்பிச்சு ஒரு ஆட்டம் போட்டுக்கிட்டு இருந்துருக்கு. அதுவும் ஒரே ஒரு பகுதிக்குள்ளே மட்டுமேன்னு அவுங்க சொல்றாங்க.  அங்கெல்லாம் அவுங்க சொல்றதைத்தான் நாம் நம்பணும்.  மத்த நாடுகளில்  இன்வெஸ்டிகேட் பண்ணறோமுன்னு சொல்லி உள்விவகாரங்களில் போய்ப் பார்க்கிறதைப்போல்,   சீனத்தில்  அவுங்க சனம் உட்பட யாருமே மூக்கை நுழைக்க முடியாது,  எத்தனை பேர்  மரணம்னு கூட அவுங்க சொல்லும் எண்ணிக்கைதான்.    (டியனமன் சதுக்கத்தில்  1989 இல் மாணவப்புரட்சி நடந்தப்ப , உண்மையில் எத்தனை  மரணமுன்னு இதுவரை சொல்லலை , பாருங்க..... ) இதுக்கிடையில் உலக சுகாதார நிறுவனம், முழுப்பூசணிக்காயைச் சோற்றில்   மறைக்கவும்  செய்தது. 'இந்த புது வைரஸ், அப்படியெல்லாம்  தொட்டால் ஒட்டிக்கிட்டுப் பரவாதாக்கும் 'னு !

இனி   மூணாம் உலகப்போர் வருமுன்னால்..... பழைய இரண்டு போர்கள் மாதிரி ஆயுதம் எல்லாம் எடுக்காமல் கெமிக்கல் வாராக  (Chemical War ) மட்டுமே வருமுன்னு,  யூகங்கள் கிளம்பினது யாருக்காவது ஞாபகம் இருக்கோ ? இப்ப என்னன்னா....  வந்தது வைரஸ் வார் ஆகிப்போச்சு !


சீனப்பொருட்களைத் தடை செய்யணுமுன்னு சொல்லிக்கிட்டே இருந்தாலும், அதெல்லாம்  கையை விட்டுப்போன கேஸ்.  அங்கே மலிவு விலையில்  தயாரிச்சுத் தர்றாங்கன்ற   பேராசையில் ,  'என்ன செய்யணும், எப்படிச் செய்யணும்' என்ற  டெக்னாலஜியைத் தூக்கி லட்டு மாதிரி அவுங்க கையில் கொடுத்துருச்சு பல உலக நாடுகள்.  இங்கே எங்க நியூஸியில் கூட,  நல்லா இருந்த பல தொழிற்சாலைகளை மூடிட்டு,  அங்கே இருந்து வாங்கி வித்தால் போதுமுன்னு  ஆரம்பிச்சுப் பல வருஷங்கள் ஆகிப்போச்சு.  உள்ளூர் தொழில்களை அபிவிருத்தி செஞ்சால்தானே உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், இல்லையோ !


இப்படிச் சீனச்சாமான்கள்   உலகெல்லாம், அந்தந்த நாடுகளுக்கேற்பக் கிடைப்பது   இப்போ ஒன்னும் புதுசில்லே.....  நாங்க முதல்முறையா 1996 இல்  அமெரிக்கா போனபோது (மகளுக்கு டிஸ்னி லேண்ட் சுத்திக்காமிக்கும் பயணம்) அங்கே  ஒவ்வொரு  ரைடு முடிச்சதும்  விற்பனைக்கு வச்சுருக்கும் நினைவுப் பொருட்கள் எல்லாமே சீனாவில் செஞ்சவைகள்தான்.


போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு ஒரு சிலநாடுகள் முட்டாள்த்தனமான நடவடிக்கையை வேற நடத்துச்சு. சீனர்கள் மேல், மக்களுக்கு  ஒரு வித மனவெறுப்பு இருக்குன்னும், அதைப்போக்கக் கட்டிப்பிடி வைத்தியம் செய்யணுமுன்னு ஒரு  நகர மேயர் ஆரம்பிச்சு வைக்கப்போய்.....   வைத்தியம் செய்யறதுக்குப் பதிலா வம்பை வாங்குன கதையாச்சே!


நாங்க இந்தியப் பயணம் ஒன்னு போன நவம்பர் கடைசி வாரம் கிளம்பிப்போய், வருஷம்  முடியும் நாளான டிசம்பர் 31 க்கு நியூஸிக்குத் திரும்ப வந்தோம். நமக்குப் பின்னால் கொரோனா துரத்திக்கிட்டு ஓசைப்படாம வந்துருக்கு !   ஜனவரி, ஃபிப்ரவரி  மாதங்கள்,  கொரோனா  மற்ற நாடுகளில் தன் வேலையைக் காட்டத்தொடங்குனது அப்போதான்.  'அடடா, ஐயோ, ஐய்யய்யோ' ன்னு பலவிதமா துக்கப்பட்டுக்கிட்டு இருந்தோமா..... 


ஈரானுக்கு லீவுலே போய் வந்த ஒருவர்,  இந்த வருஷம்  ஃபிப்ரவரி  மாசம் 28 ஆம் தேதி இங்கேயும்  கொரோனாவைக் கொண்டுவந்து துவக்கி வச்சாங்க, ஏதோ ஒலிம்பிக் டார்ச் கொண்டு வந்து ஏத்தி வைக்கறதைப்போல !  இவுங்க கொண்டு வந்ததைக்கூட ஒரு நாலைஞ்சு நாட்களுக்கப்புறம்தான்  கண்டு பிடிச்சாங்க. அறிகுறி  ஆரம்பிச்சதும், டாக்டரைப் பார்க்கப்போனப்பதான் ' இது  அது' ன்னு  தெரிய வந்துருக்கு. அதுக்குள்ளே இவுங்க வீட்டாரோடும், நண்பர்கள், உறவினர்கள் சந்திப்பு, கடைகண்ணிக்குப்போய் சாமான்கள் வாங்கி வந்தது இப்படின்னு பல மக்களுக்குப் பரப்பியும் விட்டுருந்தாங்க.


தீ பிடிச்சதைப்போல் பரவ ஆரம்பிச்சது. இதுக்கிடையில் மற்ற நாடுகளில் இருந்து  திரும்பி வந்த மக்களும், பரப்பி விடுற ஜோதியில் கலந்தாச்சு.  தீவிரத்தைப் பார்த்த அரசு  முதலில் அலர்ட் லெவல்  2 ன்னு ஆரம்பிச்சு,  அடுத்த ரெண்டாம் நாளே   லெவல் 3 ன்னு  சொல்லி, அதுக்கடுத்த  ரெண்டாம் நாள் கொரோனா  நோயாளிகள் எண்ணிக்கை முப்பத்தியாறு ஆனதும்,  நாடே ஆடிப்போச்சு. சகலரும் ஒழுங்கு மரியாதையா  'வீடடங்குங்க'ன்னு சொல்லி அலர்ட் லெவல் 4  அறிவிச்சது. நாலு வாரத்துக்கு நாடு மொத்தமும் லாக்டௌன்.  அவசரகால நிலை அறிவிப்பும் ஆச்சு. நேஷனல் எமர்ஜன்ஸி . ராணுவம் ஊருக்குள் வந்துரும்.  அன்றைக்கு நம்ம யுகாதிப் பண்டிகை.
வருஷ ஆரம்பம். வீட்டோடு கிட.   Stay home, Be kind என்பதே தாரக மந்திரம் !




ஏகப்பட்ட  அறிக்கைகள். என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாதுன்னு  பிரதமரும், ஹெல்த  டைரக்டரும்,  நியூஸி போலீஸ் கமிஷணரும்  டிவியில் வந்து நாட்டு மக்களுக்கு செய்தி அறிக்கைகள் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.  தினமும் பகல் ஒரு மணிக்கு 'டான் 'னு  கொரோனா  செய்தி வரும்.  நம்ம கொரோனாவுக்கு  ஒரு செல்லப்பெயரும் கிடைச்சுருச்சு. கோவிட் -19   (COVID-19 )  கோவிந்த்னு வச்சுருந்தால் போறவழிக்குப் புண்ணியமாவது கிடைச்சுருக்கும் !
'எல்லோரும்'   டிவி முன்னால் தவம் கிடக்க ஆரம்பிச்சோம். நாட்டு மக்கள் அனைவரையும்  ஒரே சமயம் எச்சரிக்க ஒரு சாதனமா மொபைல் ஃபோன் மூலம்  ஒரு அலர்ட் சிக்னல் கொடுக்கப்போறோமுன்னு சொல்லி அதையும் செஞ்சாங்க.  அதான் ஆளாளுக்கு ஒன்னு கையில் இருக்கே!
இத்தனை பேரை பரிசோதனை செஞ்சாங்க, இத்தனை பேருக்கு வந்துருக்கு. அதுலே இத்தனை பேர் ஆஸ்பத்ரியில் கிடக்கறாங்க. இத்தனைபேர் குணமாகி வீட்டுக்குப் போயிட்டாங்க, இத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டு  இருக்காங்கன்னு சேதி சொல்றதும்..... கூடவே வீட்டுலே அடங்கி ஒடுங்கிக் கிடங்க. ஊர் சுத்தற வேலையெல்லாம் வேணாம். ஸ்டே ஹோம், ஸ்டே ஹோம். மனுசனுக்கு  விதிக்கப்பட்டது !

லாக்டௌன் ஆரம்பிச்ச மூணாம் நாள் கொரொனாவுக்கு  முதல் பலி, இங்கே நம் தெற்குத்தீவின் மேற்குக்கரையில் 70+ களில் இருந்த ஒரு பெண்மணி.  இன்ஃப்ளூயன்ஸா மாதிரி இருக்குன்னு ஆஸ்பத்ரிக்குப் போயிருந்தாங்க.  மற்ற நாடுகளின்  மரணச் செய்திகளை டிவியில்  சொல்லக் கேட்டுக்கிட்டு இருந்தோமா... இப்ப நம்ம நாட்டுலேயே....   ப்ச்....


நியூஸியில் கொரோனாவால் மரணமுன்னு பார்த்தீங்கன்னா இன்று இதுவரை 22 நபர்கள்.  எங்க ஊரில் மட்டும் 12 பேர்.  ஒரே சீனியர் சிட்டிஸன் ஹோமில் இருந்தவுங்க ...   அங்கேயும் வெளிநாட்டுக்கு லீவில் போய் வந்த  ஒரு நர்ஸம்மாவால்  பரவினதாகச் சொன்னாங்க.  உள்ளூர் ஆஸ்ப்த்ரியில் கொரோனாவுக்கான தனி இடத்தில்   இந்த முதியோர்கள் அனுமதிக்கப்பட்டு, ஒவ்வொருத்தரா...........   பலி ஆனது ரொம்பவே துக்கம்தான். மற்ற மரணங்களைப்போல் இல்லாமல்  உறவு நட்பு இப்படி யாரையும் கடைசி நேரத்தில் கூடப் பார்க்கமுடியாமல் தன்னந்தனியே  'போறது'  எவ்ளோ துயரம் பாருங்க.....


சவ அடக்கம் கூட ஒரு பிரச்சனையாப் போயிருச்சு. கொரோனா மரணமுன்னு இல்லை.... பொதுவா  இயல்பா நடந்த வேறவகை மரணங்களுக்கும்தான். லாக்டௌன் அறிவிச்சபின்  நடந்த வேறவகை முதல் மரணம். ஃப்யூனரல் பார்லரில்  கொண்டு போய் வச்ச தன் தாயை, கடைசி முறை ஒரு மூணே மூணு நிமிட்டுக்குப் போய்ப் பார்த்துவரக்கூட  அனுமதி இல்லைன்னுட்டாங்க.  தாய் புற்றுநோயால் மரணம்.

இந்த முழு லாக்டௌன் என்றது எல்லோருக்கும் புது சமாச்சாரம் இல்லையோ !  அதுவும்  பிரச்சனைகள் இல்லாமல் அமைதியா இருக்கும் எங்க நாட்டுக்கு ?  அந்தந்த பேட்டை மக்கள்  'எங்க ரோடு இப்படி இருக்கு, அப்படி இருக்கு'ன்னு படங்கள் அனுப்பறதைப் பார்த்துக்கிட்டு இருந்தோம்.


அத்தியாவசியமான துறைகளில் வேலை செய்பவர்கள் போலிஸ், ராணுவம், ஆஸ்பத்ரி, போக்குவரத்துக்கான  பேருந்து,  துப்புரவு (ரப்பிஷ் கலெக்‌ஷன்) போன்றவைகளில்  பணி செய்வோர்  மட்டும் வழக்கம் போல் வேலை செய்யலாம்.  இதுலே பேருந்து ஓட்டுநர்தான் பரிதாபம். நல்ல நாளிலேயே பஸ்ஸில் பத்துப்பேர் இருந்தால் பயங்கரக்கூட்டம்! இந்த அழகில் ஊரடங்கு சமயத்தில்  ஓட்டுநர்கள் 'மட்டும்'  தனியா ஊரைச் சுத்தி வந்துக்கிட்டு இருந்தார்கள்.

மற்ற  நிறுவனங்கள் , கம்பெனிகள் எல்லாம்  அடைப்புதான். இன்னும் சிலபல  அவசிய சேவைகளில் இருக்கறவங்க,   அவரவர் வீட்டில்   இருந்தே  வேலை செய்யணும்.  முழுசா அடைச்சு இருக்கும் இடங்களில்  வேலைசெய்பவர்களுக்கு  சம்பளம் எல்லாம் நிறுத்தலை.  அரசு,  அவர்களுக்குண்டான சம்பளத்தை  அவுங்கவுங்கக் கம்பெனி மூலமாகக் கொடுக்கும். கவலைப்படாதேன்னுட்டாங்க. சம்பளத்தோடு கூடிய விடுமுறை.  மகள் தன்   வீட்டிலிருந்து வேலை.  ஆஃபீஸ் செட்டப் வீட்டில் செஞ்சுக்கணும்.  ஆச்சு. மருமகன் நிறுவனம்  மூடிட்டதால்  லீவு கிடைச்சுருச்சு.  இந்த ஒர்க் ஃப்ரம் ஹோம் சமாச்சாரத்தில் ரொம்பவே சந்தோஷப்பட்ட ஜீவன், அவுங்க வீட்டுப் பூனைதான்  :-)

கடைகண்ணிகளில்கூட  சூப்பர் மார்கெட், மருந்துக்கடை மட்டுமே  திறந்து வைப்பாங்க.   வீட்டுக்கு  ஒரு ஆள் மட்டும் கடைக்குள் போய் வாங்கிக்கிட்டு வாங்கன்னாங்க.  ( அப்ப  மனுஷன் உயிர்வாழ இந்த ரெண்டு கடைகள் மட்டும் போதும்தானே ? என்னத்துக்கு ஊர்ப்பட்ட கடைகள், பொருட்கள்னு  காசை விரயம் பண்ணிக்கிட்டு இருக்கோம் ? )



பேங்க், பெட் ரோல் ஸ்டேஷன்  கூடத் திறந்து வச்சுருக்காங்கதான்.  காசைக் கையால் தொடப்டாதுன்னா....   பேங்க் எதுக்கு ?  கார்டு இருந்தால் போதும்தானே ?  இல்லைன்னா   ஆன்லைன் பேங்க் போதுமே !   அப்புறம்....    அந்த பெட் ரோல் பங்க் ? வீடடங்கு,  ஊரடங்குன்னா  அது காருக்கும்தானே ?
வண்டியை வெளியே எடுக்காமல் போட்டு வச்சு, பேட்டரி ஃப்ளாட் ஆகிப்போய்,  நம்ம இன்ஷூரன்ஸ் கம்பெனி மூலம் ரோட்சைட்  ரெஸ்க்யூ அஸிட்டண்ட் வந்து வண்டியை ஸ்ட்டார்ட் பண்ணிக்கொடுத்துட்டு, அரை மணி நேரம் வண்டியை ஓட்டிக்கிட்டு இருங்கன்னு சொல்லிட்டுப் போனார். நம்ம பேட்டைக்குள்ளேயே  வட்டம் போட்டுக்கிட்டு  இருந்தோம். நைஸா மகள் வீட்டாண்டை போய் வீட்டு வாசலையும் பார்த்துத்துட்டு வந்தோம். இதே பேட்டைதான்.

இதுலே ஒரு கெட்டது (என்னைப் பொறுத்தவரை) கடைக்குள் ஒரு ஆள் மட்டும் போகலாம் என்பதே.....   நாம் ஒன்னு சொன்னால் நம்மவர் வேறொன்னு வாங்கி வருவார்.  ரெண்டு பேராப் போய் வாங்கும்போதே  நாம் கண்ணயர்ந்த நேரத்தில் வேண்டாத ஒன்னு ட்ராலிக்குள் வந்துருக்கும்.  முக்கியமா நம்ம ரஜ்ஜூவுக்கு சாப்பாடு வகைகள் வாங்குவதில் எப்பவும் ஒரு குழப்பம்தான்.  சரி போகட்டும். வகைவகையாத் தின்னட்டுமே 'அவன் ' என்று இருக்க முடியாது.  குறிப்பிட்ட ஒரு வகையில், குறிப்பிட்ட ஒரு ருசியைத்தவிர  வேறொன்னையும்  நாக்கால் நக்கிப் பார்க்கக்கூட மாட்டான். அப்படி  ஒரு ருசி கண்ட பூனை :-)  'நீயே போய்  உனக்கு வேணுங்கறதை வாங்கிக்கோடா'ன்னா .........  அதுவும் முடியாதாம் :-)
தனியான ப்ரெட் கடை, காய்கறிக்கடை, பழக்கடைகள், ரெஸ்ட்டாரண்டுகள்,  டேக் அவே  வாங்கும்  சின்ன உணவுக்கடைகள், பள்ளிக்கூடங்கள், முக்கியமா மால்கள், சினிமா தியேட்டர்கள் எல்லாம் குளோஸ்.

எள்ளுதான் எண்ணெய்க்கு வெயிலில்  காயணும். எலிப்புழுக்கை ஏன்  காயணும்?  என்ற பழஞ்சொல்லுக்கு  ஏத்தாப்ல,  வீடுகளில் வளர்க்கும் செல்லங்களை வெளியே நடக்கக் கொண்டு போகலாம்.  நாய்ப்பசங்க எப்படி  இருபத்தினாலு மணி நேரமும் வீட்டுலேயே இருக்கும்? பாவம் இல்லையோ.....   'எல்லா' சமாச்சாரமும் அதுகளுக்கு வீட்டுக்கு வெளியில்தானே ?  நல்லவேளை பூனைகளுக்கு  பிரச்சனையே இல்லை.  சுதந்திர ஜீவிகள் !


செல்லம் இல்லாத மக்கள், உடற்பயிற்சிக்காக  வெளியே நடக்கப் போகலாம். ஆனால்  உங்க பேட்டைக்குள்ளே  மட்டுமே  போகணும்.  சமூக இடைவெளின்னு ரெண்டு மீட்டர் தூரம் நமக்கிடையில் கட்டாயம்  இருக்கணும்.  கெட்டதில் ஒரு நல்லது என்னன்னா....  ஒரே கூரையின் கீழ் இருக்கும் குடும்பத்தைக் குமிழி (பப்புள்)  என்று குறிப்பிட்டு  உங்க குமிழிக்குள் இடைவெளி வேண்டாம்.  குமிழிகள் சேர்ந்தே  நடக்கப்போகலாம் என்பதே....
நம்ம குடும்பத்து மக்கள் என்றாலும் கூட  யாரும் யார் வீட்டுக்கும்  போகக்கூடாது.  அதுதான் கொஞ்சம் கஷ்டமாப் போச்சு. மகளைப் பார்க்கவே முடியலை.


நமக்கு உடம்பு சரி இல்லைன்னாக்கூட டாக்குட்டரைப் போய்ப் பார்க்கப்டாது.  ஃபோன் செஞ்சு சமாச்சாரம் சொன்னால், அவுங்களும் ஃபோன் மூலமே வைத்தியம் பார்த்துருவாங்க. காசை மட்டும்  அவுங்க சொல்லும் அக்கௌண்டுக்கு   நெட் மூலம் அனுப்பிவிட்டுறணும்.   எங்களைப்போல  உடம்பைக் கண்டிஷனில் வைக்காத மக்கள், மூணு மாசத்துக்கொருக்கா டாக்டரைப் பார்த்து, உடம்பைப் பரிசோதிச்சுக்கிட்டு, மூணு மாசத்துக்கான மருந்தை எழுதி வாங்கிக்கறதுதான் இங்கத்து வழக்கம்.  அதுலேயும் சின்ன மாற்றம் வந்துச்சு.   வெளியே இருந்து வரும் மருந்துகள்   தடை இல்லாமக் கிடைக்குமோ, கிடைக்காதோ  என்ற  பயத்தில்,  ஒவ்வொரு மாசத்துக்குண்டானது மட்டும் கொடுக்கச் சொல்லி  மருந்துக்கடைக்கு ஆர்டர்.   அதான்  பார்டரை  மூடிட்டாங்க இல்லையா?   விமானப் போக்குவரத்தே இல்லைன்னா மருந்து சப்ளை ?  எனக்கொரு சின்ன சம்ஸயம்.....    ஒருவேளை  மூணு மாசத்துக்குள் நாம் மண்டையைப் போட்டுட்டால், அரசுக்கு   மருந்து மிச்சம்னு......   இல்லையோ ?


இந்த சமயம் இன்னொன்னும் சொல்லணும்....    ஜூன் மாசம்  இங்கே  அஃபிஸியல் குளிர்காலம்  ஆரம்பிக்கறதால்  மக்கள்   ஃப்ளூ தடுப்பு ஊசி போட்டுக்கணும். சீனியர் சிட்டிஸன்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள்   இந்த வகையில் இருப்பவர்களுக்கு மட்டும்  இது இலவசம்தான்.  நாம் மறந்துட்டாலும்  நம்ம டாக்டர் க்ளினிக்லே இருந்து  கூப்பிட்டுச் சொல்வாங்க...'வந்து ஊசி குத்திக்கிட்டுப் போ'ன்னு .  இப்போ லாக்டௌனில்  டாக்டரைப்  பார்க்கமுடியாதுன்னா ஊசி எப்படி ? அதுக்கும் ஒரு வழி சொன்னாங்க. மருந்துச்சீட்டு வாங்கிக்க வரும்போது அப்படியே ஊசியும் குத்திக்கோ.  க்ளினிக் உள்ளே நாம் போகப்டாது.  கார்பார்க்கில் வண்டியை நிறுத்திட்டு, க்ளினிக்கை ஃபோனில் கூப்பிட்டு 'வந்துட்டேன். என் கார் கலர் *** '.   வண்டியை விட்டு இறங்கப்டாது.  டாக்டரோ, நர்ஸம்மாவோ  வந்ததும்  கார் ஜன்னல் கண்ணாடியை இறக்கி விட்டு, மேற்கையைக் காட்டுனா போதும். நறுக் !


நம்ம மருந்துச் சீட்டையும்  வாங்கிக்கிட்டு நேரா நம்ம மெடிக்கல் ஷாப்.  அங்கேயும்  ஒருத்தர் மட்டும் உள்ளே போய் மருந்துச் சீட்டைக் கொடுக்கணும்.  நாம் எவ்ளோ தூரத்தில் நிற்கணும், நமக்குப் பின்னாலோ முன்னாலோ இருக்கறவங்க  எங்கே நிக்கணும் என்றதுக்கெல்லாம் தரையில்  அடையாளம்  போட்டு வச்சுருக்காங்க.  மருந்துச் சீட்டை கடை வாசலுக்கு வந்து வாங்கிப்பாங்க. கடையே ஒரு ஷாப்பிங் செண்டருக்குள்ளேதான் இருக்கு.  இதைத்தவிர வேற ஒரு கடையும் திறந்து வைக்கலை.  காமணி நேரம் கழிச்சு நாம் திரும்ப உள்ளே போய் வாசலில்  நின்னால் மருந்து நம்ம கைக்கு வந்துரும். அதுக்குண்டான காசை மட்டும் கார்டுலே அடைக்கணும். கேஷ்லெஸ்.   ஆமாம்ப்பா..... காசைக் கையாலே கூடத் தொடமாட்டோம்....

இந்தக் கொரோனா இருக்கு பாருங்க.... அது  யார் என்னன்னு பார்க்காம எல்லோரையும் புடிச்சுக்குமுன்னு இருந்தாலும்,  முதியோர்,  உயர் ரத்த அழுத்தம்,  சக்கரை, ஆஸ்த்மா இதையெல்லாம் சொத்தாக வச்சுருக்கறவங்களை அளவுக்கு மீறி ரொம்பப் பிடிக்கும் என்பதால்..... இந்த வகை மக்கள் ரொம்பவே கவனமாக இருக்கணுமுன்னு அரசு  கதறிக்கிட்டு இருக்கு.  நமக்கு  மேற்படி சொத்து அளவுக்கு அதிகமா இருப்பதால்  , ஊர் சுத்தும் கால்களை மடக்கி வச்சுக்கிட்டு வூட்டுக்குள்ளேயே இருப்பது உத்தமம்.

பொதுவா இங்கத்து சனம், அரசாங்கம் சொல்வதைக் கேட்டு அதன்படி நடக்கும் மக்கள்தான், என்றாலும் இதுலேயும்  கிறுக்கனுங்க  இருப்பாங்க இல்லையா ?  அந்த வகையில்  'வீடடங்கு'ன்னு சொன்னதைக் கேக்காமல் ஊர் சுத்தப் போனதுகள் ஒரு 105 பேர். காவல்துறை மடக்கிப் பிடிச்சுருச்சு.  இனிமேப்பட்டு இப்படிச் சுத்துனா ஒரு மாசம் ஜெயில்னு சொன்னதும்   இந்த எண்ணிக்கை  உயராமல் அப்படியே நின்னுருச்சு.
இதுலேகூடப் பாருங்க.... இப்படி அவுங்க பேட்டையை விட்டு, பக்கத்தூர் பீச் வரைக்கும் குடும்பத்தைக் கூட்டிப்போனது யார் தெரியுமோ? சுகாதார அமைச்சர்.  கிழிஞ்சது போங்க....   விவரம் தெரிஞ்சதும், சட்னு ராஜினாமாக் கடிதம்   கொடுத்துட்டார்.  பிரதமர், அதை வாங்கி வச்சுக்கிட்டு,  நீவிர் செய்த குற்றம், குற்றமே!  ஆனால்  இப்போ இருக்கும்  நாட்டுநிலைமை கொஞ்சம் சரியாகட்டும். அப்புறம் நடவடிக்கை எடுக்கப்படும்னு சொல்லி இருக்காங்க.
இந்த அமைச்சரைத் தூக்கணுமுன்னு சனம் சொல்லுது. அதுக்கான கோரிக்கையில்  கையெழுத்துப் போடுன்னு நம்மைக் கேட்டுக்கிட்டு  இருக்காங்க. இவரை உள்ளூர் மக்கள் , ஃபேஸ்புக்கில் கிழி கிழின்னு கிழிச்சுக்கிட்டு இருக்காங்க.

சரி, நாம் கொரோனாக் கதையைப் பார்க்கலாம்.


அது ஒருபக்கம் ஆட.... நாங்க இன்னொருபக்கம் ஆடிக்கிட்டு இருந்தோம். யுகாதிப் பண்டிகையே ச்சும்மா பேருக்குத்தான்  வீட்டுலே கொண்டாடினோம். ஒரு பத்து நாளுக்கு முன்னால்தான் நம்ம 'சனாதன் தரம்' ஹாலில்  ஆஞ்சி ப்ரதிஷ்டை நடந்துச்சு. பாவம் அவரும் இங்கே வந்து சுமார் நாலுமாசம்  இடமில்லாமல் இருந்தார். புது சந்நிதி கட்ட அனுமதி வாங்கி, வேலை முடிய இவ்ளோ நாளாகிப் போச்சு. இதுக்கிடையில் நம்ம பண்டிட் வேற இந்தியப் பயணம் போயிருந்தார்.  அவர் வந்ததும் நல்ல நாள் பார்த்து, ஸ்ரீ ராமநவமிக்கு முன்னால் பிரதிஷ்டை  செஞ்சுடலாமுன்னு சொல்லி  மார்ச் பதினேழு, மூல நக்ஷத்திரத்தில் நல்லபடியா  எல்லாம் ஆச்சு.

இப்பப் பாருங்க...இந்த லாக்டௌன் காரணம் எந்த ஒரு கோவிலும் திறக்கறதோ, கூட்டம் கூடுறதோ கூடாதுன்னு ஆகிருச்சுல்லே.....  பாவம்... நம்ம ஆஞ்சி.  நமக்கும் சனிக்கிழமை கோவில்னு நம்ம இஸ்கான் ஹரே க்ருஷ்ணா கோவிலுக்கும் போக முடியலை.  ஆனால் நல்லவேளையா, அங்கே கோவிலிலேயே தங்கி இருக்கும் பண்டிட்கள் தினப்படி அலங்காரம், பூஜை எல்லாம் தவறாமல் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க .  கோவிலே தினமும்  காலை பூஜை முடிஞ்சதும் அன்றைய அலங்காரத்தோடு படங்களை  அனுப்பிவச்சுக்கிட்டு இருக்கு.   இப்பவும் படங்கள் வருது !


நம்ம  ஃபிஜி இண்டியன் குழுவில்  முக்கியமான பண்டிகைகளான  ஸ்ரீராம நவமி, ஸ்ரீ க்ருஷ்ண ஜெயந்திகளை ஒன்பது, எட்டு  நாள்னு ப்ரதமை முதல் கொண்டாடும் வழக்கம். அதை அனுசரிச்சு யுகாதிக்கு மறுநாள் ஸ்ரீராம்நவ்மி  விழா ஆரம்பம்.  ஆனால்  இந்தக் கொரோனாவால் எல்லாமே ரத்து ஆனது.  கம்ப்ளீட் லாக்டௌன் !  நாங்களும் நவமியன்றைக்கு வீட்டுலெயே  பண்டிகையைச் சின்ன அளவில்  கொண்டாடினோம். நம்ம ஹிந்துப் பண்டிகைகளில் ரொம்பவே எளிமையான பண்டிகை இதுதான். மூணே மூணு ப்ரஸாதவகைகள்தான்.  எப்பவும் ரொம்ப மெனெக்கெடாம செஞ்சுருவேன். இந்த முறையும் ஆச்சு.


தொடரும்........  :-)