Friday, May 29, 2020

To 'SEE' foods :-) (பயணத்தொடர் 2020 பகுதி 58 )

கோட்டையிலிருந்து கார்பார்க் வரும்போது செல்லம் ஒன்னு எந்தபயமும் இல்லாம நடு ரோடுலே நிதானமா நடந்து போகுது !  இங்கே(யும்) இதுக்கு தான் ஒரு சாமின்னு தெரிஞ்சுருக்கும்போல !  கொஞ்ச தூரத்துலே யாரோ பூனைக்கான பிஸ்கெட்ஸ் வச்சுட்டுப் போயிருக்காங்க.!  புண்ணியவான் நல்லா இருக்கட்டும் !

இப்பவே மணி ஒன்னரை தாண்டியாச்சு. லஞ்சு முடிச்சுக்கலாமான்னு  ரெய்னா கேட்டாங்க.  இங்கே ஒரு 'Sea Food Restaurant'  ரொம்ப நல்லா இருக்குமாம்.  ஆனா... உங்களுக்கு வெஜ் கிடைக்குமான்னு தெரியலை. வேற இடம் பார்க்கலாமுன்னு சொன்னாங்க.

"எங்களுக்குப் பிரச்சனை ஒன்னும் இல்லை. நீங்க உங்க விருப்பப்படியே Sea Food  போங்க.  எப்படியும் எனக்கு  See Food தானே?"

ரெஸ்ட்டாரண்டுக்குப் போன் போட்டுக் கேட்டாங்க.  வெஜ் செஞ்சு தர்றதாச் சொன்னாங்களாம். ' பாஸ்த்தா  பரவாயில்லையா'ன்னாங்க.

"தாராளம். "

 அங்கேயே போகலாமுன்னு முடிவாச்சு.

கோட்டையில் இருந்து ரொம்பவே பக்கம். ஒரு ஒன்னரை கிமீ தூரம்தான்.


வளாகத்துக்குள் நுழையும்போதே 'சமாதி' இருக்கு :-)
ஃபிஷ் மார்கெட்னு ஒரு கட்டடம் அடுத்தாப்லே இருக்கு.  இந்தாண்டை  க்ராண்ட் கஃபே ! அந்தாண்டை முதல் மாடியில் சிக்கன் டிக்கா. ரெண்டாவது  மாடியில் நமக்கான ஃபிஷ் மார்கெட் ரெஸ்ட்டாரண்ட்.   பெயருக்கேத்தபடி  ஃபிஷ் அன்ட் சிப்ஸ் இங்கே ஃபேமஸ்!  அப்புறம் நிறைய  கடலுயிர்கள் வச்சுருக்காங்க. நீங்க என்ன வேணுமுன்னு சொன்னால், ஆக்கித் தருவாங்க.  

இடம்  கிடைக்கும்வரைக் காத்திருக்கணுமாம்.  உக்கார்ந்த அடுத்த நிமிட், டேபிள் ரெடின்னு ஒருத்தர் வந்து கூப்புட்டுப்போனார்.




அட்டகாசமான வியூ !  இதையும் கண்ணால் தின்னால் ஆச்சு ! இப்போ நாம் பார்த்துட்டு வந்த கோட்டை, செல்லம்போல் தெரியுது !

ரெய்னா போய்  (நமக்கு) என்ன வேணுங்கறதைச் சொல்லிட்டு வந்தாங்க.
மேசையில் எலுமிச்சம்பழம் 'டூட்டு' போட்டுக்கிட்டு இருந்துச்சு. ஐடியா வெரி குட் !  பிழியும்போது கொட்டை சாப்பாட்டில் விழாது !
(மேலே : சுட்ட படம். நன்றி )

ரெஸ்ட் ரூம் தேடிப்போனப்ப,  சமைக்க வச்சுருந்த  கவுன்ட்டரைப் பார்த்தேன். நல்லவேளை  ஒன்னும் 'நெளியலை'......   சீனா மாதிரி அவ்ளோ மோசம் இல்லை.... அங்கே தேளும் பாம்புமா....  ஐயோ...

ஊறுகாய் மாதிரி வினிகரில் போட்ட  வெள்ளரிக்காய், பீட்ரூட்,  ஸாலட், தயிர், ஹம்மஸ், கூடையில்  'அட்டை' ரொட்டி எல்லாம்  முதலில் வந்துச்சு.
அப்புறம்  நம்ம   ரெய்னா, இஸ்லாம் ரெண்டு பேருக்கும் ஃபிஷ் அன்ட் ப்ரௌண் ரைஸ், நமக்கு பாஸ்த்தா அண்ட் சிப்ஸ்.

வேகவச்ச கேரட் அண்ட்  ப்ரோக்கொலி.   சேம்பு இலைக்குள்  கேபேஜ் வச்சுச் சுருட்டி ஆவியில் வச்செடுத்த சமாச்சாரம் ஒன்னு....   Dolma  Kadhabaனு பெயராம்.  திராக்ஷை இலையில் உள்ளே  சேமியா, வெங்காயம், தக்காளி எல்லாம்  வச்சு உருட்டுவாங்களாம். வெஜ் ஸ்பெஷல் !!! எல்லாத்துலேயும் ஒரு சேமியா.....     சொல்ல மறந்துட்டேனே.... நம்ம ஸோமாஸ் மாதிரி ஒரு இனிப்பு  வேற !  உள்ளே என்ன இருந்ததுன்னு தெரியலை.....  தின்னு பார்க்கலை.... கேட்டோ !
நம்ம கூட வந்து உக்காரத் தயங்குன இஸ்லாமை, இங்கேதான் உக்காரணுமுன்னு  கண்டிப்பாச் சொன்னதும்  உக்கார்ந்தார். மரியாதை எல்லாம் மனசுலே இருந்தால் போதாதா ?
சாப்பாட்டை முடிக்கும்போது ரெண்டரை மணி போல ஆகிருச்சு.  கிளம்பி இன்னொரு சமாச்சாரம் பார்க்கப்போனோம்.  ஒரு அஞ்சரை கிமீதூரம்.
ரெய்னா டிக்கெட் வாங்கப் போயிருந்தாங்க. நான் வளாகத்தைக் க்ளிக்கிக்கிட்டு இருந்தேன்.

கல்லூரி மாணவிகள் போல் ஒரு இளம்பெண்கள் கூட்டமா இருந்தாங்க.  அதுலே  ஒரு பெண்,  என்னிடம் வந்து  'இண்டியாவா?'ன்னு கேட்டுட்டு 'ஆமாம்'னதும்  'ஐ லவ் யூ'ன்னு சொல்லிக் கை குலுக்கிட்டுப் போனாங்க......!!

ஹிந்தி சினிமா நிறைய பாப்பாங்களாம்.....


தொடரும்..... :-)



Wednesday, May 27, 2020

கோட்டையைப் புடிச்சாச் :-) (பயணத்தொடர் 2020 பகுதி 57 )

அடுத்துப்போன இடத்தைப் பார்த்தவுடன் 'நம்மவர்' முகம்  அப்படியே மலர்ந்து போயிருச்சு.  எங்கே போனாலும் கோட்டைன்னு இருந்துட்டால் போதும்....  கோட்டைவிடாமப் போய் பார்த்துருவார் இந்தக் கோட்டைப்ரேமி !
பொம்பெய் தூணில் இருந்து ஒரு ஆறு கி மீட்டருக்கும் கொஞ்சூண்டு குறைவுதான்.  கடைவீதியைத் தாண்டி இங்கே வந்து சேர ஒரு இருவது நிமிட் ஆச்சு.   வாசல் இப்படி.
வாசலைக் கடந்து உள்ளே போனதும் வழக்கம்போல் ரெய்னா போய் டிக்கெட் வாங்கி வந்தாங்க.   முகப்பில் நல்ல கூட்டம்.....  எல்லோரும் க்ளிக்கறதில் பிஸி. நாமும் ஜோதியில் கலந்தோம்.

Qaitbay Citadel  கைக்கடக்கமா, கச்சிதமா சின்னக் கோட்டை !  சட்னு பார்க்கும்போது லீகோ ப்ளாக்ஸ் வச்சுப் பண்ணதுபோல சிக்னு இருக்கு :-)   முற்றத்தின் ரெண்டு பக்கமும்  நவ்வாலு பீரங்கிகள்.
அப்போ  ரெண்டு இளைஞர்கள், நம்மாண்டை வந்து, 'நம்மவரிடம்'  ஆர் யூ ஃப்ரம் இன்டியா?
 எஸ்ஸூ....

 விச் ப்ளேஸ்?

 சென்னை !

அட! நாங்களும் தமிழ்நாடுதாங்க. என் பெயர் ரிஷி.  திருப்பூர். இவர் சையத்.  சென்னைதான். கொளத்தூர் !   க்ரூப்பா வந்தீங்களா ?

இல்லைங்க. தனியாத்தான் வந்துருக்கோம். ஆமாம்... நீங்க இப்பவும் திருப்பூர்தானா ?

ஆமாங்க. அங்கேதான் டெக்ஸ்டைல்ஸ்லே வேலை. இவர் என் க்ளாஸ் மேட்.  நாங்களும் தனியாத்தான் வந்துருக்கோம்.

திருப்பூர்லே ஜோதி கணேசன்னு ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் இருக்கார்.  அவரும் டெக்ஸ்டைல்தான். தெரியுங்களா ?

ஙே............ 

 முழிக்கறதைப் பார்த்தால் படிக்கிற பழக்கமே இல்லைன்னு தெரிஞ்சது....  போகட்டும். விட்டுறலாம்.... ரெண்டு க்ளிக்ஸ் ஆச்சு.
ஆனால் ஒன்னு.... இப்படிச் சின்னவயசுலேயே சுற்றுலா போறது ரொம்ப நல்லது. என்னைமாதிரி வயசான காலத்துலே போனா.... மனம் ஒத்துழைச்சாலும் உடல் ஒத்துழைக்க மாட்டேங்குதே.....

கோட்டையைச் சுத்தி ஆர்மி ஆட்கள் தங்கும் இடங்கள். மூணு பக்கமும் இருக்கும் மத்திய தரைக்கடலுக்கு முதுகைக் காமிச்சுக்கிட்டு நிக்குது இந்தக்கோட்டை.
அஞ்சாறு படிகள் ஏறி உள்ளே போறோம்.  நல்ல கார்பெட் டிஸைன்லே  டைல்ஸ் போட்டுருக்காங்க. முதலில் சாமியறை என்பதுபோல் ஒரு மசூதி. ஓரளவுக்குப் பெருசுதான்.  அடுத்தாப்லெ இருக்கும் அறைகளை மூடி வச்சுருந்தாலும் உள்ளே என்னன்னு போர்டு போட்டு வச்சது பிடிச்சுருக்கு !

இந்தக் கோட்டை ரொம்பப் பழைய காலத்து (அதான் அந்த ரெண்டாயிரத்து முன்னூத்துச் சொச்சம் ) சமாச்சாரம் இல்லைன்னாலும்.....   ரொம்பப் பழையகாலத்து அதிசயம் ஒன்னோடு சம்பந்தப்பட்டுருக்கு !   பழைய காலத்துக் கலங்கரை விளக்கு இங்கே இதே இடத்துலேதான் இருந்துருக்கு ! கப்பலுகளுக்கு வழிகாட்டிக்கிட்டு நின்னுக்கிட்டு இருந்த பாவத்த.... பதினோராம் நூற்றாண்டுலே  வந்த நிலநடுக்கம்  ஆட்டி வச்சுட்டுப் போச்சு. அப்பவெ கொஞ்சம்  அழிஞ்சதுதான்....  சரிப்படுத்தி வச்சதைத் திரும்ப பதினாலாம் நூற்றாண்டுலே வந்த இன்னொரு நிலநடுக்கம், மொத்தமா அழிச்சுட்டுத்தான் போயிருக்கு. இடம் அதுக்கப்புறம் சும்மாவே கிடந்துருக்கு.....
ஆரம்ப காலத்துக் கோட்டைக்கதவு (பித்தளை ) ஒன்னை இங்கெ படுக்க வச்சுருக்காங்க. ஹைய்யோ.... அட்டகாசமா இருக்கு !

இன்னொரு அறையின் மூலையில்  சுத்துச்சுவர் வச்சு ஒரு வட்டம். எட்டிப் பார்த்தால் கீழே தரை தெரிஞ்சது.  உள்ளே நுழையும்போதே படிகளேறி  வந்ததால்.... கீழே நிலவறை இருக்குமோன்னு நினைச்சது சரியாப் போச்சு.  கீழே மாவு அரைக்கும் இடமாம்.  அப்படியே  சமையலறையும்  இருக்குமோ என்னவோ.... படைவீரர்களுக்குத் தேவையான  ரொட்டிக்கான மாவு தயாரிப்பு இங்கே. தானியத்தை மூட்டைமூட்டையா உள்ளே அனுப்புவாங்களாம். தள்ளிவிட்டால் ஆச்சு !
மாடிப்படி ஏறிப்போறோம். அடுத்த தளத்தில் நடுவே பெருசா பரந்து விரிஞ்சுருக்கும்  ஹால்.  சுவர் ஓரங்களில் கம்பி இல்லாத பொந்து பொந்தா  ஜன்னல்கள்.  படை வீரர்கள்  அதுக்குள்ளே போய் உக்கார்ந்து பொந்துவழியா துப்பாக்கி நீட்டிச் சுடுவாங்க. அதைப்போல நாமும் கெமெராவால் படங்களைச் சுட்டாச் :-)


இந்த பாதுகாப்புக்கான கோட்டைகள் எல்லாம் ஏறக்கொறைய ஒரே டிசைனில்தான் கட்டறாங்க இல்லே.... நோக்கம்.... எதிரியைக் கண்டதும் சுட்டுடணும். ஒழிஞ்சான்.... நாம்  அவனைப் பார்க்கணும். ஆனால்  அவன் நம்மைப் பார்க்கமுடியாத கோணத்தில் நாம் இருப்போம்:-)
'நம்மவருக்குக்' கோட்டைன்னா பிரியமுன்னு சொன்னேனில்லையா.....  இதுக்கு முன்னால்  சமீபத்துலே ( ஆச்சு மூணு வருஷம்) பார்த்த கோட்டை... எதுன்னா.... நாம் நியாகரா பார்க்கப்போயிருந்தோமே   அப்ப, அமெரிகா பக்கம் இருந்த Old fort Niagara.

அது கடலாட்டம் இருக்கும் நியாகரா நதிக்கரை ஓரம். இது  அச்சு அசல் கடலோரம் !

அங்கே கோட்டை ரொம்பப்பெருசு. இங்கே கச்சிதமா அழகாச் சின்னது !

அது வயசில் சின்னது.... பார்க்க ரொம்பவே பழசா இருக்கும்.  இது  சுமார் இருநூறு வருஷம் மூத்தது....  ஆனால் பார்க்கப் புதுசா இருக்கு !
இந்தக் கோட்டையைக் கட்டுனது பதினைஞ்சாம் நூற்றாண்டில்தான். பதினைஞ்சாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் அப்போது மன்னரா இருந்து இந்த நாட்டை ஆட்சி செஞ்சுக்கிட்டு இருந்த சுல்தான் (The Mameluk Sultan) Al-Ashraf Qaitbay இந்தப்பக்கம் வந்துருக்கார்.  இந்த நாட்டுக்கும் அக்கம்பக்கம் இருக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையில் சமாதானம் இல்லாத  காலம். அந்த அண்டைநாடு, இவுங்களை எப்படியாவது அடக்கிடணுமுன்னு  இருக்கு.

Mameluk Sultan என்றதுகூட ஒரு சுவாரஸியமான சமாச்சாரம்தான். படையில் சேர்த்துக்கறதுக்காக  இளைஞர்களை  வெவ்வேற நாட்டில் இருந்து விலைகொடுத்து வாங்கி வருவாங்களாம்.  அதுலேயும்  சிலர் படையில் சேர்ந்து தன் திறமையை வெளிப்படுத்தி,  மன்னருக்கு விசுவாசமா இருந்து நல்ல பதவியில் இருந்தவர்களும் உண்டு. அவுங்களில் சிலர்,  அரசரால்  மற்ற சில பகுதிகளுக்குச் சுல்தானாகவும்  நியமிக்கப் பட்டார்களாம்.  அவுங்க ஆட்சி உண்மையிலேயே ரொம்ப நல்லதா இருந்ததாகவும் தகவல் உண்டு.

ஆனால்  சிலருக்கு விதி வேற மாதிரி....   அப்படி வாங்கப்பட்டவர்களை,  கொஞ்சநாள் கழிச்சு வேற  அரசருக்கு விற்பதும் உண்டாம். சில சமயம்   அப்படி வாங்கினவர்களை....   சுதந்திரமா இருக்கச் சொல்லிப் போகவும் விட்டுருவாங்களாம்..... 

பகைவன் இருக்கான்னா.... நாமும் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தானே இருக்கணும். அதனால்  இங்கே ஒரு கோட்டையைக் கட்டுனா, நம்ம நாட்டுக்கு ஒரு பாதுகாப்பு அரணாக இருக்குமுன்னு நினைச்ச சுல்தான்,  இடிஞ்சு கிடக்கும் இடத்தில்  ஒரு கோட்டையைக் கட்டச் சொன்னார்.   ரெண்டே வருஷத்தில் கோட்டை தயார். ஏற்கெனவே இடிஞ்சு விழுந்துருந்த லைட் ஹௌஸின் கற்களையும் கோட்டை கட்டப் பயன்படுத்திக்கிட்டாங்க.

ஒரு மூணு நூற்றாண்டுவரை ஒரு ஆபத்துமில்லாமல் கோட்டை அப்படிக்கப்படியே இருந்துருக்கு! பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் இந்தப்பக்கம் வந்த  ஃப்ரெஞ்சுப் படை தளபதியின் கண்களில் கோட்டை விழுந்தது.... அவ்ளோதான்  படைகளோடு வந்து முற்றுகை நடத்தி கோட்டையையும் நாட்டையுமே புடிச்சுக்கிட்டாங்க.  படைத்தளபதி ரொம்பக் கேட்ட பெயரா  நமக்கு இருக்கும்!  நெப்போலியன் ! Napoleon Bonaparte....  சாதாரணக்குடும்பத்தில் பிறந்து ஃப்ரெஞ்சுப் படையில் சேர்ந்த  இளைஞன்.

சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்தால் என்னெல்லாம் விநோதங்கள் நடந்துருக்குன்றது தெரியும். என்ன ஒன்னு....  எந்தப் பக்கமும் சாயாமல்  நடந்தது நடந்தபடி எழுதுன சரித்திரமா இருந்தால் ரொம்ப நல்லது. ஆனால்  அப்படி  எழுதப்பட்ட சரித்திரம் ரொம்பவே அபூர்வம்.

சிலருக்கு  வாழ்க்கையில் முன்னேறிப்போக காலமும், நடக்கும் சம்பவங்களும் காரணமாப் போயிருது. கடவுள் கொடுக்க நினைச்சது..... எப்படியும்  யார் தடுத்தாலும்  கிடைச்சே தீரும் என்ற விதிதான் !

 நெப்போலியனுக்குப் ஃப்ரெஞ்சுப் புரட்சி ரொம்ப உதவி செஞ்சுருச்சு. சாதாரணப்பதவியில் இருந்தவர், அடுக்கடுக்கா அடுத்தடுத்த உயர்பதவிகளை வகிச்சு ஒரு கட்டத்தில் மொத்தப்படைக்கும் தளபதி ஆனார்.  புரட்சி முடிஞ்ச  கொஞ்சநாளில், தனக்குத்தானே இன்னொரு பெரிய பதவியையும் கொடுத்துக்கிட்டு, ஃப்ரெஞ்சு நாட்டுக்கு மன்னரா முடிசூட்டிக்கிட்டார் !  (முப்பத்தியஞ்சு வயசில் பேரரசர். அம்பத்தியொரு வயசில் சாமிகிட்டே போயாச்சு.)

மன்னரானதும்,  யூரோப்பில் இருக்கும் மற்ற நாடுகளுக்கும்  ஒரு சிம்ம சொப்பனம்போலத்தான்..... ஒரே அதிரடி....
ஆனால் பாருங்க......  ஒருவனை மிஞ்சும் ஒருவனும் உலகத்துலே இல்லாமலா போயிருவான்....  ப்ரிட்டனின்  கப்பல்படைத் தளபதி நெல்ஸன், நெப்போலியனைத் தோற்கடித்தார்...  (வல்லவனுக்கு வல்லவன் )

 காலப்போக்கில்  (1805  முதல் 1848 வரை ) ஈஜிப்ட் நாட்டை ஆட்சி செஞ்சுக்கிட்டு இருந்த Muhammad Ali Pasha  , இந்தக் கோட்டையை இன்னும் கொஞ்சம் நல்லபடியா சீரமைச்சார்.
நாம் Bபாஷான்னு சொல்றதை இவுங்க  Pபாஷான்னு சொல்றாங்க போல.... எந்த உச்சரிப்பு சரி?  B or P ?    விளக்கம் தேடுனால்  BP வந்துருமோ :-)

நாடு பிடிக்கும் ஆசையில் இருந்த ப்ரிட்டிஷ் அரசு, 1882 ஆம் வருஷம் பெரிய கடற்படையுடன் வந்து  இந்தப் பகுதியைத் தாக்குச்சு.  முக்கிய காரணம் சூயஸ் கால்வாய்.  ஈஜிப்ட் அரசு, ஃப்ரெஞ்சு அரசுடன் சேர்ந்து ஒப்பந்தம் ஒன்னு செஞ்சுக்கிட்டு, சூயஸ் கால்வாயை வெட்டி  மத்தியத்தரைக் கடல் & செங்கடல்னு ரெண்டு கடலையும் இணைச்சுட்டாங்க. பத்துவருஷமா இந்த வேலை நடந்து 1869 இல் முடிச்சுட்டாங்க.
இது இந்தியா வந்து போக சுருக்குப் பாதையா ஆகிருச்சு.
தன்னுடைய அதிகாரத்தின் கீழ் இது வந்துட்டால்  எல்லாம் எளிதாக இருக்குமேன்னு ஒரு கணக்குதான். இந்தத் தாக்குதலில்  அலெக்ஸாண்ட்ரியா கோட்டை ரொம்பவே  பதிக்கப்பட்டுருச்சு.  ஈஜிப்ட் நாட்டைப் பிடிச்சுக்கிட்ட ப்ரிட்டிஷார் 1922 வது வருஷம் சுதந்திரம் கொடுத்துட்டோமுன்னு  சொல்லிக்கிட்டே  அங்கேயேதான் இருந்துருக்காங்க. அதுக்கப்புறமும் அவுங்களை நாட்டை விட்டு விரட்ட  முப்பத்திநாலு வருஷம் எடுத்துருக்குன்னா பாருங்க.

பராமரிப்பு இல்லாமல் அப்படியே கிடந்த  கோட்டையை,  தன்னுடைய மாளிகையா மாத்திக்கலாமேன்னு   King Farouk  , சீரமைக்கும் வேலையை ஆரம்பிக்கச் சொன்னார்.  வேலை முடிஞ்சதும் ஈஜிப்ட்டின் கப்பல் படை, அங்கே ம்யூஸியம் வச்சுருச்சு.

சமீபத்தில் 1984 இல்தான்  ஈஜிப்ட்  நாட்டின் பழைய பாரம்பரியச் சின்னங்கள், கலைப்பொருட்கள்  போன்றவைகளைக் காப்பாற்றி எடுக்கும் Egyptian Antiquities Organization , இப்ப நாம் பார்க்கும் இந்தக்கோட்டையைத் திரும்ப நல்லபடியா சீரமைச்சுப் பொதுமக்கள் பார்வைக்கு வச்சுருக்காங்க.

மேல்தளத்தில்  கோட்டையின் நடுப்பகுதியில் சுல்தான்,  மற்ற தளபதிகளுடன் ஆலோசனை செய்யும்  ஹால் ஒன்னு இருக்காம். அங்கே போகும் வழியை மூடி வச்சுருக்காங்க... இப்போ....
ஒரு இடத்தில் கண்ணாடிப்பொட்டிக்குள் கோட்டையின் மாடல் !

இங்கேயும்  ஒரு  எண்கோண வடிவில்  ஒரு சுத்துச்சுவர் கட்டி வச்ச சின்ன அமைப்பு.  எட்டிப் பார்த்தால் கீழே தரைத்தளம் தெரியுது !   மேலே இருந்து கூப்பிடலாம்.... 'யாரங்கே ? '   இன்டர்காம் மாதிரி :-)



ஆனால் இதுக்கான பயன் என்னன்னு அங்கே ஒரு போர்ட் வச்சுருக்காங்க..... பாருங்க.....
அடராமா...... எவ்ளோ எண்ணைய்ன்னு காய்ச்சறது? எப்படித் தூக்கிக் கீழே ஊத்தறது ?  அதுவரை  எதிரி அங்கேயே நின்னுக்கிட்டு இருப்பானா ? அதெல்லாம் போகட்டும்....  தரையெல்லாம் இருக்கும் அந்த எண்ணெயைச் சுத்தம் செய்யறது எவ்ளோ கஷ்டம்.........  (அடுக்கடுக்காத் தோணுதே.... )

அடுத்த சுத்தில்  மேல் தளத்துக்குப் போனோம்.  மொட்டை மாடி !  சுத்திவரக் கடல்,  அதோ அக்கரையில் (!) இப்போதையக் கட்டடங்கள்......
சுத்திவரப்  பார்க்க , நீலக்கடல்...  ரொம்பவே அழகா இருக்கு !  இந்த அழகுக்காகவே ஒரு முறை போகலாம் !


அலெக்ஸாண்டர் காலத்துக்குப்பின்  வெவ்வேற ஆட்சியில் இந்த ஊர் கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்துக்கிட்டே இருந்தது உண்மை.

தொடரும்....... :-)