Monday, May 04, 2020

ஆளாளுக்குக் கையிலே ஹேண்ட் பேக்.... (பயணத்தொடர் 2020 பகுதி 47 )

ராம்தான் ரொம்பவே ஆகிவந்த பெயர் போல இருக்கு!  நிறைய அரசர்கள் பட்டத்துக்கு வந்தவுடன்  ராம் பெயரை வச்சுக்கறாங்க.  ஒவ்வொரு மன்னருக்கும்  அஞ்சு பெயர்கள் இருக்குமாம். பொறந்தவுடன் வைக்கிற பெயர் இல்லாம.. ஒவ்வொரு காலத்திலும் ஒரு பெயர்னு வச்சுக் கடைசியில் பட்டத்துக்கு வந்தாட்டு அஞ்சாவது பெயர் வந்துருமாம்.
Rameses / Ramses   பெயரில் பதினொரு  பேரரசர்கள் இருந்துருக்காங்க.  இவர்கள் வரிசையில் ஒன்பதாம் பேரரசரின்  கல்லறைக்குகைக்குள்தான் இப்போ போறோம்.  இதுதான் கடைசி நமக்கு. மூணுதானே கணக்கு :-)
வழக்கமான முறையில்தான் நுழைவு கேட்.  குகையின் கீழ்பாகம் சமாதி என்பதால் இங்கேயும் சரிவுப்பாதைதான். ஆனால் அவ்ளோ சரிவாக இல்லை.  ரொம்பதூரம் நடந்த பிறகு கடைசிப் பகுதியில்தான் சரிவு அதிகம்.
இந்த  சமாதிக்குகை தோண்ட ஒரு பேட்டர்ன் வச்சுருக்காங்க.... மலையை அப்படியே  நேராக் குடையாம, கீழே சரிவாத் தோண்டிக்கிட்டு மலைக்குக் கீழே அடியில் போறது.....  அதுலேயும் ஒரு  கணக்கா.... ஒரு நூறு மீட்டர் தூரம் வரை (அப்போ ஏது இந்த மீட்டர் எல்லாம்....  அவங்களுக்குன்னு எதோ நீட்டளவு இருந்துருக்காது ?)   தோண்டிக்கிட்டே போறதுதான். அதனால் எல்லா சமாதிக்குகைக்கும்  கீழே இறங்கிப்போகும்படி  ஆகிருது.....
சுவர்களில் இவர்கள்   வழக்கம்போல்  சேதி சொல்லும் Hieroglyphs சித்திர எழுத்துகள்.  இதுலே கூடப் பாருங்க..... இந்த எழுத்துகள் ஏழு நூறுக்கும் மேலே இருக்காம்.  தனிப் படமா இருக்கும்  ஒரு எழுத்து, ஒரே ஒரு எழுத்தாக இல்லாம...ஒரு சொல்லாகக்கூட இருக்குமாம். அப்படி இருக்க  இந்தச் சித்திர எழுத்துகளை டீகோட் பண்ணிட்டோமுன்னு சொல்லி  A B C D  வகையில் இதுக்கு இது, அதுக்கு அதுன்னு பண்ணி வச்சுருக்கறதை என்னன்னு சொல்றது?
ஏழு நூறு எங்கே ? வெறும்  இருபத்தியாறு எங்கே ? ஙே........  இதை வச்சு....  சுவரில் இருப்பதையெல்லாம் படிச்சுப் பார்த்துட்டோமுன்னு சொல்றதை........    ப்ச்..... (எனக்கென்னமோ இது ஒரு பம்மாத்து வேலையாத்தான் தெரியுது....   )  அந்த நாட்டுலேயே   இந்த எழுத்தைப் பயன்படுத்துவது  ஏழாம் நூற்றாண்டிலேயே வழக்கொழிஞ்சு போச்சாம். எப்போ? கிறிஸ்துவம்  வந்து இடம் புடிச்சாட்டுன்னு  ஒரு தகவல்.


பாம்புகள் ஏராளம் !!!  இவுங்க கலாச்சாரத்தில்  நாகங்களுக்கு முக்கிய இடம். அதனால்தான்  தலை அலங்காரத்தில்  நெத்திச்சுட்டியைப்போல் பாம்பு படம் எடுத்து உக்கார்ந்துருக்கு.  அதுவும் இந்த  Pharoah Head dress லே ரெட்டைப்பாம்பு வேற !  பெண்களுக்கு சிங்கிள் பாம்புன்னு நம்ம க்ளியோவைப் பார்த்தால் தெரியுது...





இந்தக் குகையை ரொம்ப காலத்துக்கு முன்னாலேயே கண்டு பிடிச்சுட்டதா ஒரு தகவல். கண்டுபிடிச்சவர் 1827 இல் சாமிகிட்டே போயிட்டதால், கண்டுபிடிச்ச காலம்   அதுக்கு முன்னால்தான் இருக்கணும், இல்லே?
அப்போ இந்த மாதிரிச் சுற்றுலாப்பயணிகள்  கூட்டங்கூட்டமா வந்துருக்க வாய்ப்பே இருந்துருக்காது.

இந்தக் கல்லறைக் குகைகளுக்குள் போய், அங்கிருக்கும்  பொருட்களைத் திருடிக்கிட்டுப் போகும்  கூட்டம் ஒன்னு  அண்டை நாடுகளில் இருந்து  வந்துருக்கு. நிறைய சமாச்சாரங்களை அபேஸ் பண்ணிட்டாங்க. பேரரசருக்கு இந்த விவரம் தெரியவந்ததும்.... எப்படிக் காவல் காப்பது என்ற குழப்பத்துலே, மிச்சம் மீதி இருக்கும்  மம்மிகளும் திருடு போயிருமோன்னு  மம்மிகளையும், மற்ற பொருட்களையும் இங்கிருந்து எடுத்துப்போய்  வேற இடத்தில் காப்பாத்தி வச்சுருக்கும்படி ஆச்சு.

திருட்டுக்கூட்டம், சுவர்களில் கிறுக்கியும் வச்சுட்டுப் போயிருக்காம். எல்லாம்  பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்தான்.

ஆமாம்.... அப்போவே செல்ஃபோன் கண்டுபிடிச்சுட்டாங்களா என்ன ?

இது  சமீபத்திய வேலைப்பாடா இருக்கணும், இல்லே?  செங்கல் செல்ஃபோன் எல்லாம் இருந்த காலம் நினைவிருக்கோ?  இதைப் பார்த்தால் எஸ் 9+ மாதிரியில்லே இருக்கு :-)
இங்கே    Pharoah  ஒருவர்,  HORUS   (God of Vengeance) என்னும் சாமியாண்டை என்னை மன்னிச்சுருன்னு சொல்லும்விதம் கைகளை வச்சுக்கிட்டு இருந்தார். இப்போ ? சாமியை க்ளிக்கறார்....   இதுக்குத்தான்  சாமியைப் படம் எடுக்காதேன்னு நம்ம பக்கங்களில் சொல்றாங்க  போல :-) என்னமோ போங்க....
பழையகாலச்சித்திரத்தில் யாரோ நைஸா சிலுவையை நுழைச்சுட்டுப் போயிருக்காங்க....

முற்காலத்துக் கடவுளர்கள்தான் எல்லா இடங்களிலும் இருக்காங்க. இதுலே கடவுளர்களும் சரி,  அரசர்களும் சரி...  வளையம் போட்ட சிலுவை போல ஒன்னைக் கையில்  ஹேண்ட்பேக் மாதிரி பிடிச்சுக்கிட்டு இருக்காங்க. இதுக்கு Ankh என்று பெயராம் Eternal life and Immortality யைக் குறிக்கும் .  ரொம்பவே பவர்ஃபுல் அடையாளம்.
ஆட்டுக்கடா சாமி பெயர் Amun. இவர்  சாமிகளுக்கெல்லாம் சாமி !  இவர் சூரியனோடு சேர்ந்து Amun Ra ன்னும் இருக்கார்.  ஆமென்னு சொல்ற சொல் கூட இந்த ஆமுன் லே இருந்து வந்ததாம் !
கீழே இறங்கிப்போகும்போது ரெண்டு பக்கங்களிலும் சதுரத் தூண்கள். அதுலேயும் ஒரு சித்திரம்..... புலித்தோல் உடை போட்டுக்கிட்டு இருக்காங்க. அப்பத்துப் பூசாரிகளாம். !

கடைசியில் இருக்கும் சரிவில் இறங்கிப்போனால்  சமாதி .... ஆனால்  வெறும் தரைதான். நடுவில் இருக்க வேண்டிய  கல்லால் ஆன சமாதியைக் காணோம்.  பின்பக்கச் சுவரிலும் பக்கச் சுவர்களிலும் விதானத்திலும் கடவுளர்கள்.  நிறம் மங்காமல் கொஞ்சம் பளிச்ன்னுதான் இருக்கு.

இவருடைய ஆட்சி காலத்தில்தான்  கல்லறைத் திருடர்களுக்குப் பயந்து மம்மிகளை இடம் மாத்துனது. இப்பப் பார்த்தால் இவரையும் இடம் மாத்தியிருக்காங்க ! அப்புறம் இவரை வேறொரு இடத்தில் கண்டுபிடிச்சுட்டாங்களாம்.

 போன பதிவில் பழைய கால ஈஜிப்ட் நாட்டுலே முப்பது அரசர்கள் ஆட்சி செஞ்சுருக்காங்கன்னு சொல்லி இருந்தேனில்லையா  அந்த வரிசையில் இவர் இருபதாவது மன்னர்.  பதினெட்டு வருஷங்கள் ஆட்சி செஞ்சுருக்கார் !

ஆஞ்சியைப் பார்த்ததும் ஆச்சரியம்தான்.... இவர் எங்கே இங்கே ?   Babi / Baba  ன்னு பெயராம்.  பாதாள லோகத்தின் சாமி இவர் !
சரிவில் ஏறி மேலே வந்து  நடையாய் நடந்து குகைக்கு வெளியில் வந்தோம். ஆச்சு நம்ம மூணு கல்லறைக்குகை தரிசனங்கள். இனி கிளம்ப வேண்டியதுதான்.  இந்த மலையின் முகட்டில் பிரமிட் ஒன்னை இயற்கையே கட்டி வச்சுருக்கு ! அடுத்தடுத்து கல்லறைக்குகைகள் இருக்கு. இருக்கட்டும் :-)


வாசலில் காத்திருந்த இதிஹாபுடன்  ட்ரெய்லர் வண்டி இருக்குமிடத்துக்குப் போனோம். வண்டி ரெடி !     மூணே நிமிட்டில் முகப்புக் கட்டடம்!



இனி கிளம்ப வேண்டியதுதான்.....

சலோ......

எங்கே போறோமாம் ?

தொடரும்.......  :-)


12 comments:

said...

அவர், சாமிக்கு கண்ணாடி காட்டுறார்னு உங்களுக்குத் தோணலையா?

த்வாரகாநாத்ல, ஒவ்வொரு சின்ன மாறுதல் செய்தாலும் கண்ணனுக்கு பூசாரி, கண்ணாடி காட்டுவதைப் பார்த்தோம்.

போன ஜென்மத்துல (முன் ஜென்மம்) எகிப்து, அரசர்/அரசி இவைகளின் தொடர்பு இல்லாம இந்தப் பகுதிக்கெல்லாம் போக முடியாதாமே!

மூணு சமாதி - நீங்க தேர்ந்தெடுக்கலாமா இல்லை அவங்க சொல்றது அல்லது டூரிஸ்ட் ஆபீஸுக்கு சுலபமாள்ளதா?

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

பொதுவா ஷோடச உபசாரம் , ஸ்வாமிக்குச் செய்யும்போது கண்ணாடி காட்டுவாங்க. அது இல்லாம, திருமஞ்சனம் முடிஞ்சு அலங்காரம் ஆனதும் கண்ணாடி காண்பிக்கணும். நானே நம்ம பெருமாளுக்கு அலங்காரம் முடிச்சதும் கண்ணாடி காண்பிப்பேன். அது முழு உருவமும் ஆடை அலங்காரமும் தெரியும் விதம்.

இங்கே என்னன்னா..... செல்ஃபோன் சைஸுலேயே ஒன்னைக் காமிக்கறதுதானே ?

போனஜென்மத்துலே 'க்ளியோ'வுக்கு (ம்) டீச்சரா இருந்திருப்பேனோ என்னவோ.... :-)

பொதுவா கோவில்களுக்குப் போகும் போது, ஏதோ முன்வினைத் தொடர்பு இருந்தால்தான் அங்கே போகவே வாய்க்குமுன்னுதான் சொல்வாங்க !

திறந்து வச்சுருக்கும் எட்டு சமாதிகள் வரிசையில் எந்த மூணுக்கும் போகலாம். ஆனால் நமக்கு எது எதுலே எதுன்னு தெரியாததால்.... கைடு சொன்னபடி போய்ப் பார்த்தோம்.

டிக்கெட்டைக் கையில் வாங்கினபிறகுதானே மூணுன்னு நமக்குத் தெரிஞ்சது. இதைப்பற்றியெல்லாம் இதுவரை யாரும் விளக்கமா எழுதலைன்னு நினைக்கிறேன். இனி துளசிதளம் பாருங்கன்னு சொல்லிடலாம் :-)

said...

அனைத்து தகவல்களும் சிறப்பு.

தொடர்ந்து பயணிக்கிறேன் உங்களுடன்.

said...

அருமை நன்றி
அடுத்து நீங்கள் எங்கு அழைத்துச் சென்றாலும் வரத் தயார்.

said...

நம்ம ஊர் கல்வெட்டு எழுதுதுகளே தலை சுற்ற வைக்கும் ஈஜிப்டில்கேட்கவே வேண்டாம்

said...

ஆட்டுக்கிடா சாமி நம்ம நந்திதேவரை நினைவூட்டின.

said...

அருமை

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

தொடர் வருகைக்கு நன்றி !

said...

வாங்க விஸ்வநாத்,

நம்பிக்கை வச்சதுக்கு நன்றி !

அப்படியெல்லாம் ஆபத்தான இடத்துக்குக் கூட்டிப்போக மாட்டேன் :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.


ஈஜிப்ட் எழுத்துக்கு இவுங்க சொல்ற விளக்கம் கேட்டால் இன்னும் தலை சுத்தும்..... உண்மையான பொருள் தெரியாம அடிச்சு விடறாங்களோன்னு இன்னும் சம்ஸயம் உண்டு

said...

வாங்க மாதேவி,

ஆட்டுக்கடா, அக்னி தேவனின் வாகனமாம். தீயில் பார்பெக்யூன்னு அன்னிக்கே முடிவு பண்ணிட்டாங்களா என்ன ?

said...

வாங்க தமிழ்மொழி,

முதல் வருகைக்கு நன்றி !