முதல் பயணம் இங்கே
அன்புள்ள பாட்டிக்கு,
நாங்கள் நல்லபடியாக வந்து சேர்ந்தோம். இங்கே எல்லாம் நல்லா இருக்கு. குளிர்தான் தாங்கலை. எங்களை நல்லபடியாப் பார்த்துக்கறாங்க...
ரெண்டு வாரம் கழித்துக் கோணா மாணா என்ற எழுத்தில் விவரம்தாங்கி வந்தது கடிதம், கஸ்தூரியின் கையெழுத்தில். நல்லவேளை. விலாசம் எல்லாம் மறக்காமல் எழுதிக்கொண்டு போனார்கள்............
ஒரு தபால் கார்டு வாங்குவதற்கு இவ்வளவு கஷ்டப்படணுமா என்று நினைத்தாள் லலிதா. அடுத்த கிராமத்தில் இருக்கும் தபாலாபீஸில் போய் வாங்கிவர வேண்டுமாம். அல்லது இங்கே தபால்காரர் வரும்போது அவரிடம் இருந்தும் வாங்கிக் கொள்ளலாமாம். அவர் எப்போது வருவாராம்? யாருக்குத்தெரியும்? இங்குள்ளவர்கள் யாருக்காவதுக் கடிதம் வந்தால் வருவாராம்.
"இங்கேயும் கூடிய சீக்கிரம் தபாலாபீஸ் வரப்போகிறதாம். எப்போது என்றுதான் தெரியவில்லை".... ஹரி
அண்ணனுடன் மூவரும் வீடு வந்து சேரும்போதே சாயுங்காலம் ஆகிவிட்டிருந்தது. மூன்று நாள் ரயில், பஸ், அப்புறம் காளைவண்டி, நடை.
மா ஜிக்கு வியப்பும், ஆனந்தமும் ஒருசேர வந்தது. படபடவென பஞ்சாபியில் தாயும் மகனுமாகப் பேசிக்கொண்டனர்.
முதலில் எதாவது சாப்பிட்டுவிட்டு மற்றதைக் கவனிக்கலாமென்று பெண்களிடம் சொன்னார்கள். லலிதாவுக்கு எதுவுமே வேண்டி இருக்கவில்லை. முதலில் குளிக்க வேண்டும். மூன்று நாள் பிசுக்கு உடம்பில்.
வெந்நீர்க்குளியல். ஹூம்....எவ்வளோ நாளாச்சு இப்படி வெந்நீரில் குளிச்சு..........
அடுப்படியில் இவர்களை உட்காரவைத்துவிட்டுச் சுடச்சுட ரொட்டிகளைச் சுட்டெடுத்துத் தட்டில் போட்டபடி மா ஜி. தணலில் நேரடியாக் காண்பித்ததும் அப்படியே உப்பி வரும் ரொட்டியை வேடிக்கை பார்த்தபடி இருந்தாள் கஸ்தூரி.
தொட்டுக்கொள்ள தால். என்னவோ மொழுக்கென்று ஒரு தனி மணத்துடன் இருந்தது. இதே வாசனை இந்த ரெண்டு நாளாக மூக்கைச் சங்கடப்படுத்திக் கொண்டிருந்தது. தாளிப்பில் கடுகு எண்ணெயாம்.
அடித்துப்போட்டதுபோல் தூங்கி எழுந்ததும் நாக்கு பரபரவென்று அலைந்தது ஒரு வாய் காஃபிக்கு. பாட்டி வீட்டை விட்டுக் கிளம்பியது முதல் வழியெல்லாம் அங்கங்கே 'ச்சாய்' தான். குமட்டல்.
பாவம். மா ஜி அனைவருக்கும் 'ச்சாய்' தயாரித்துச் சொம்பில் ஊற்றினார்கள். பெரிய லோட்டா அத்துடன்.
பக்கத்து டவுனில் இருந்து காப்பித்தூள் வாங்கித் தருகிறேன் என்று தங்கைகளைச் சிரித்தமுகத்துடன் நோக்கியபடிச் சொன்னான் ஹரி.
மா ஜி, பிதா ஜி கேட்டவைகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தனர் மூவரும். மொழிபெயர்ப்பாளனாக நடுவில் ஹரி. நேரம் செல்லச் செல்ல அக்கம்பக்கத்து வீடுகளில் இருந்து பெண்கள் வந்தவண்ணம் இருந்தனர்.
ஆரம்ப அதிர்ச்சிகள் எல்லாம் ஓரளவு ஓய்ந்தது. சர்சூ கா சாக், உர்தி தால்
செய்வதில் லலிதா தேர்ச்சி பெற்றுவிட்டாள். ரோட்டித்தான் இன்னும் சரிவரவில்லை. வீட்டின் மற்ற வேலைகளை மூவருமாகச் சேர்ந்து செய்தனர்.
கிராமத்து வீட்டில் வேலைக்காப் பஞ்சம்? ஹரி வெளிவேலைகளையும் பார்த்துக்கொண்டுத் தங்கைகளுக்கும் அவ்வப்போது உதவி செய்தான்.
பெரிய பெரிய வாளிகளில் பாலைக் கறந்துவைப்பது அதிகாலையில் அவனது முதல் வேலை.
ஆனாலும் இந்தக் கடுகெண்ணெய் வாசனை பழகத்தான் ரொம்பவே கஷ்டமாகப் போய்விட்டது. அதென்ன? தலைக்கும் அதையே தடவிக்கொண்டு, சமையலுக்கும் அதையே விட்டுத் தாளிக்க.........
மூணாவது வீட்டில் நம்ம கஸ்தூரியின் வயதில் ஒரு பெண் இருந்தாள். அவளுடன் சேர்ந்து வயல்வெளிகளில் சுற்றுவது ஒரு ஆனந்தமான அனுபவம்.
கண்ணுக்கெட்டியதூரம் வரை மஞ்சமஞ்சேரென்று பூவைப் பார்த்தது அதிலொன்று. கடுகுப்பூவாமே! ஹைய்யோடா................
மா ஜிக்கு மனம் நிறைவாக இருந்தது. . நிறைய ஓய்வு கிடைத்தது. வீட்டில் மஹாலக்ஷ்மி வந்ததைப்போல பெண்குழந்தைகள்.
வாசலில் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக்கொண்டு அக்கம்பக்கத்துப் பெண்களுடன்
குளிருக்கு இதமாக வெய்யில் காய்ந்துகொண்டே ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருப்பார். இன்னும் குளிர் கடுமையாக வருமுன் இவர்களுக்குத் தேவையான கம்பளி ஆடைகளைத் தயாரித்து வைக்கவேண்டுமே........ கைகள் பரபரவென்று பின்னிக்கொண்டிருந்தன. இந்த வருடம் குளிர் குறைவாக இருக்கிறதாம்!
' குளிர்காலம்தானே இப்போது. இதைவிடக் குளிருமா என்ன?' திகைத்தனர் பெண்கள்!
இந்த எட்டுமாத காலத்தில் பஞ்சாபிப் பேசவும், குடும்பப் பழக்கங்களை அனுசரிக்கவும் கற்றுக்கொண்டனர். காஃபி, இட்டிலி, தோசை எல்லாம் கனவில் இப்போதெல்லாம் வருவதே இல்லை. பிஜ்யா மட்டும் எப்போதாவது கோதுமை மாவைக் கரைத்துத் தோசையாகச் செய்வாள். அவளுக்கு உண்மையில் பிடிக்காத ஒன்று இருந்ததென்றால், அது அவள் பெயர் பிஜ்யா ஆனதுதான். என்ன செய்வது? 'வ, வி' எழுத்துக்களெல்லாம்தான் அங்கே ப, பி ஆகி விட்டதே. அவர்களுக்கு அப்படித்தான் சொல்ல வருகிறதாம்.
நாளை இரவு இங்கே 'லோரி' பண்டிகை கொண்டாடுவார்கள். நாமெல்லாரும் போகலாம் என்று ஹரி சொன்னதுமுதல் ஒரே எதிர்பார்ப்பு. இவர்கள் கிளம்பிப்போனபோது, கிராமத்தின் பொதுத் திடலில் சின்ன சொக்கப்பனைபோல எரியும் தீ. குளிருக்கு ரொம்ப இதம். ஊரே அங்கே திரண்டு வந்துவிட்டிருந்தது. ஒரே பாட்டும் கூத்தும் கேலியுமாக நேரம் போனதே தெரியவில்லை.
'இன்று ஜனவரி மாதம் 13 அல்லவா. நம்மூரில் போகிப் பண்டிகை. அதற்காகவென்றே சேமித்து வைத்த பழைய முறம், பாய், துடைப்பம் போன்றவைகளை அதிகாலையில் தீமூட்டி எரிப்போமே...அதையே இவர்கள் இரவு நேரத்தில் செய்கிறார்கள் போல!'.....லலிதாவின் மனம் பாட்டி வீட்டுக்குப் பறந்தது.
'பட பட பட பட் பட் பட பட..........' தெரித்து விழுந்தது மக்காச் சோளப்பூக்கள்.
எரிந்து கொண்டிருக்கும் தீயைச்சுற்றி வலம்வந்த இளைஞன் ஒருவன் கையிலிருந்த மக்காச் சோளத்தைத் தீயில் தூவிக்கொண்டே 'சோனா' என்று கூவினான். பெண்கள் கூட்டத்தில் ஒரே சிரிப்பும் கலகலப்பும். ஒரு இளமங்கைத் தன்கைகளால் முகத்தை மூடிகொண்டு அங்கிருந்து ஓட முயன்றாள். பெண்கள் கூட்டம் ஒன்று அவளைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடவிடாமல் செய்துகொண்டிருந்தது. கடைசியில் அந்தப்பெண் சோனா நாணிக்கோணிக்கொண்டேத் தீயினருகில் வந்து கொஞ்சம் மக்காச் சோளத்தை அதில் தூவினாள். அதைத்தொடர்ந்து இளைஞர்கள் பகுதியில் ஒரே ஆரவாரம்.
அவனுக்கு அவளைப் பிடித்திருக்கிறது. அவள் மன நிலை எப்படியோ என்று தெரிந்து கொள்ளத்தான் அவள் பெயரைச்சொல்லி சோளம் தூவினான். அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தால் பதிலுக்குச் சோளம் தூவினால் போதும். அவன் காதலை ஏற்றுக்கொண்டாள் என்று பொருள். இப்படியாக அவர்களுடைய காதலை ஊருக்குத் தெரிவித்தாகிவிட்டது. இனி உறவினர்களும், பெற்றோரும் சேர்ந்து அவர்கள் திருமணத்தை நடத்தி வைப்பார்கள்.
மா ஜியின் விளக்கத்தைக் கேட்டு அதிசயித்தாள் கஸ்தூரி.
ஒருவேளை அந்தப் பெண்ணுக்குப் பிடிக்கவில்லை என்றால்? இது பிஜ்யாவின் சந்தேகம்.
பிடிக்கவில்லை என்றால் அந்தப் பெண் பதில் சோளம் தூவமாட்டாள். அவனுக்கும் அவள் உள்மனம் தெரிந்துவிடும். தீர்ந்தது கதை. என்று சொல்லிச் சிரித்தார் மா ஜி.
வசந்தகாலம் தொடங்கிவிட்டது. வயல் வெளிகளிலும் வேலைகள் ஜரூராக ஆரம்பித்துவிட்டன. நிற்க நேரமில்லாமல் வேலைகளில் மூழ்கிப்போனான் ஹரி.
அவசரத்துடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் அருகில் வந்து உட்கார்ந்தார்
மா ஜி. அவனுடன் என்னவோ முக்கியமாகப்பேச வேண்டும் என்ற பாவனை முகத்தில்!
"அம்மா.....என்ன விஷயம்? எதோ சொல்லவேண்டுமா?"
"ஆமாம் ஹரி. நீ சாப்பிட்டுவிட்டு வாயேன். கொஞ்சம் நிதானமாப் பேசலாம். இப்போதெல்லாம் உக்கார்ந்து பேச நேரமே இல்லை. நீயும் எதாவது வேலையில் மூழ்கிப்போய் விடுகின்றாய்"
ஆமாம் அம்மா. இப்போதும் உடனே தோட்டம் வரை போகவேண்டும். அங்கே மோட்டார்பம்பு ரிப்பேராகிவிட்டது. மெக்கானிக் வரேன்னு சொல்லி இருக்கார்.
அப்படியா.....நானும் அந்தப்பக்கம் போயே நாளாகிவிட்டது. இப்போது உன்கூடவே வரட்டா? பேச்சுத் துணைக்காச்சு.
இந்தவருட விளைச்சலைப்பற்றிப் பேசிக்கொண்டே இருவரும் நடந்தார்கள். திடீரென்று, 'நம்ம பிரேந்தரின் அம்மா வந்து போனார்கள்' என்றார்.
"நானும் பலமுறை அவர்களை வழியில் வைத்துப் பார்த்தேன். நின்று பேச நேரமில்லைம்மா. என்ன விஷயமாம்? பிரேந்தர்தான் பாவம். மனசொடிஞ்சு கிடக்கிறான். மூஞ்சில் சொரத்தே இல்லை."
" அவன் விஷயமாகத்தான் வந்திருந்தார்.....ம்ம்ம்ம்....உன்னிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றேன்"
"என்னிடமா? எதாவது உதவி வேணுமா?
" இல்லைப்பா..... அவனுக்கு நம்ம லலிதாவைக் கேட்கிறார்....... அதான் உன்னிடம்......"
அருமையான இளைஞன். ரெண்டு வருசம் முன்பு ஜாம்ஜாம் என்று திருமணம் ஆனது. அந்தப் பொண்ணும் அழகும் அடக்கமுமா இருந்தாள். விதியைப் பழிக்காமல் என்ன செய்வது? கஷ்டப் பிரசவம். தாயும் பிழைக்கவில்லை. சேயும் பிழைக்கவில்லை. இந்த ஒரு வருஷமா அவன் முகத்தில் சிரிப்பே போய்விட்டது.....
பிரேந்தரின் அம்மா, பர்மீந்தர் நம் மா ஜியின் சிறிய வயது தோழி. மிகவும் நல்ல சுபாவம். இருவரும் ஒரே ஊரில் வாழ்க்கைப்பட்டு வந்ததை எண்ணி மகிழாத நாளே இல்லை.
'நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் அம்மா?"
" இதில் நினைக்க என்ன இருக்கிறது ஹரி? எனக்கொரு பெண் இருந்திருந்தால் அவளை பர்மீந்தருக்குத்தான் மருமகளாக்கி இருப்பேன்"
"எதற்கும் லலிதாவை ஒரு வார்த்தைக் கேட்டுவிட்டு முடிவு சொல்லலாம் அம்மா"
லலிதா கோர்( கெளர்) & பிரேந்தர் நிச்சயதார்த்தம் வீட்டளவில் நடந்தது. பைஷாகி கொண்டாட்டங்கள் முடிந்த பிறகு திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று தீர்மானம் ஆனது. மிகவும் எளிய முறையில் செய்தால் போதும் என்று பிரேந்தர் கண்டிப்புடன் சொல்லிவிட்டான்.
"அட! நம்மூர் வருசப்பிறப்பு தினம்தான் இவர்களுக்கும் வருஷப் பிறப்பாம்.
அப்ப சித்திரை பிறந்ததும் அக்காவுக்கு டும் டும் டும்"
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg6AFvEJ9QQ-x6-Q-8pouTGi20IRbj2r-I01yC-5-1qH6uiNX4mBk1nsFjxYdhG3kYX2kef7ZN2L0g1f2K9kT9x8nRAVHtSE6gxgM4wWHCoCDo-wMkqJPO0X-HL2R3OQPaiogym/s400/kalyaanam.jpg)
கஸ்தூரிக்கு ஒரே குதூகலம். "அத்தான் நன்றாக இருக்கிறார். அக்காவுடன் ஜோடிப்பொருத்தம் பலே. ஆனால் அக்கா ரொம்பக் குள்ளமோ? 'களுக்' என்ற சிரிப்பைக்கேட்டதும், என்ன சிரிப்பு என்று திரும்பிப் பார்த்த லலிதாவிடம்," ஒண்ணுமில்லேக்கா. அத்தான் பக்கத்துலே நீ நின்னப்ப ஒரு பொம்மை போல இருந்தே. எங்கே அத்தான் 'டக்'ன்னு உன்னை இடுப்பில் தூக்கிக்கிட்டு நடந்துருவாரோன்னு பயந்துட்டேன்."
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjC1_zmbWfxutUzHM9dOWq3R8m69O9ncvRQEekY8QJIbsPMRgukG_bYk50-DaijNcnIi_ngcEJtwRLQDKZMIa55sxJgALkOxHS_zkCqu2L7eDqzz8AzWI9VYsSodY4wU3ftfIdl/s400/mehandi.jpg)
லலிதாவின் வாழ்க்கைப் பயணத்தில் இன்னொரு இஞ்சினில் அவளைக் கோர்த்துவிடுவார்கள், ரயில்பெட்டி மாதிரி. நாமெல்லாருமே ரயில் பெட்டிகள்தானோ? ஆனந்தமும் துக்கமும் நம் பெட்டியில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறதோ? அப்ப அடுத்தது நானா? பிஜ்யாவின் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள்..............
நான்காம் பயணம் தொடரும்.....................
நண்பர்கள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டுக்கான இனிய வாழ்த்து(க்)கள்.