Wednesday, December 19, 2007

திருவேங்கடம் 'ஹரியானது இப்படித்தான்:-)


உண்மைக்குமே ரொம்ப நாளுக்குமுன்னே எழுத ஆரம்பிச்சு அப்படியே வச்சிருந்தது. எல்லாம் ஒரு பயிற்சிக்காகத்தான். நடை'யைப் பார்த்தாலே புரிஞ்சிருக்குமே. தலைப்பு என்னவோ ரயில் பயணங்கள் ன்னுதான் வச்சுருந்தேன். இப்ப நம்ம வலைப்பதிவுகளில் சூடா ஓடிக்கிட்டு இருக்கும் சமாச்சாரத்தைப் பார்த்தபிறகு, ஜோதியில் இப்படியாவது கலந்துக்கலாமுன்னுத் 'தலைப்புக் கயமை' செஞ்சுருக்கேன். என்ன செய்யறதுங்க? ட்ரெண்ட்:-)))

மினித்தொடர். அநேகமா மூணு பகுதிகளில் முடிக்கப்பார்க்கிறேன். ரயில்வண்டித்தொடர் போல நீளமாகாமல் இருக்கணுமுன்னு 'ஹரி'யையே வேண்டிக்கலாம்.



ரயில் பயணங்கள்
*******************
ரயில் பயணத்தால், வாழ்க்கை மாறிவிடலாம் என்று யாராவது சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால்
ஹரியின் வாழ்விலேதான் இந்த ரயில் என்னமாதிரி அவன் வாழ்க்கைப் பாதையையே திசை
திருப்பிவிட்டது!

முதலாவது பயணம்:
******************
ஹரியின் பெயர் ஹரியே இல்லை! தாத்தாவும் பாட்டியும், தாயும் தகப்பனும் ஏகோபித்து அவனுக்கு வைத்த பெயர் திருவேங்கடம்.
வீட்டிற்கு தலைச்சன் பிள்ளை. அவனுக்குப் பிறகு, லலிதா,விஜயா, கஸ்தூரி என்று மூன்று பெண்கள்.
வாழ்க்கை என்னவோ ஒரே சீராகத்தான் போய்க் கொண்டிருந்தது, அவனுடைய 'முதலாவது ரயில்ப் பயணம் ' ஏற்படும் வரையில்!

நம்ம திருவேங்கடத்துக்கு 'கை கொஞ்சம் நீளம்'. 'போதாதற்கு பொன்னம்மா'என்று அவனுடைய அம்மாவும்
ரொம்பச் செல்லம் கொடுத்துக் கெடுத்து வைத்திருந்தாள். அப்பன் தேவராஜனும் சரியில்லை. ஏதேதோ சூதாட்டங்களிலும்,
குதிரையிலுமாய் கடையிலிருந்து வரும் வருமானத்துக்கு வேட்டு வைத்துக்கொண்டு இருந்தார். அந்தக் கடையுமே திருவேங்கடத்தின்
தாத்தாவின் கடைதான். தாத்தா இறந்தபின், மூத்த மகன் என்ற ஹோதாவில் இருந்த தேவாவுக்குக் கடை கிடைத்தது.
இதனால் தேவாவின் தம்பிகளுக்கு கொஞ்சம் வருத்தம், (கொஞ்சமென்ன கொஞ்சம்? நிறையவே தான்)இருந்தது.

'நாலு புள்ளைங்களைக் காப்பாத்த வேண்டாமா?' என்று நினைத்து தேவாவின் அம்மாதான், தன் மற்ற பிள்ளைகளிடம்
கொஞ்சம் சண்டையும் போட்டு, சொத்து பாகம் பிரிக்கும்போது, கடை தேவாவுக்குக் கிடைப்பதற்கு உதவினாள்.

'என்ன இருந்தாலும் அவன்தானே எனக்குக் கொள்ளி வைக்கப்போறவன்'என்ற நினைப்பு வேறு! மேலும் அவனுக்குப்
பாரமாக இருக்கவேண்டாம் என்று தனிவீட்டிலே, சிறுவயதிலேயே 'மூளி'யாகிப்போன மகளுடனும், அவள் குழந்தையுடனும்
வேறு ஊர்லே இருந்தாள்.

தப்பித்தவறி, புருஷன் கொடுக்கும் காசில் திருவேங்கடம் 'கை'வைக்கும் போதெல்லாம் வீட்டில் சண்டைதான். அவனுடைய அம்மாவும்
தான் என்ன செய்வாள்? ஆறு வயித்துக்குச் சோறுபோட வேண்டாமா? இதெல்லாம் அவனுக்குப் புரியுமா? இன்னும் குழந்தைதானே?
பத்து வயசுங்கறது ரொம்பப் பெருசா?

அடி வாங்கியவுடன், அழுதுகொண்டே பாட்டி வீட்டுக்குப் போய்விடுவான். அப்பல்லாம் பட்டணத்துலே 'ட்ராம்' ஓடுன காலம்.
ராயப்புரத்துலே இருந்து, சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்து அங்கிருந்து ரயிலில் அம்பத்தூருக்குப் போனால் பாட்டி வீடு!

டிக்கெட் எடுக்காமல் திருட்டு ரயில்தான் எப்போதும்! பிடிபட்டாலும், அழுதுகொண்டிருக்கும் சின்னப் பையன் என்பதால்,கொஞ்சம்
மிரட்டலோடு விட்டுவிடுவார்கள்.

அன்றும் அதேதான் நடந்தது. எப்படியோ சென்ட்ரல் ஸ்டேஷனுக்கு வந்தவன்,வழக்கமான பிளாட்பாரத்திற்குப் போய், அங்கு நின்றிருந்த
ரயிலில் ஏறி உட்கார்ந்தான். ஒரே பசி வேறு! இன்றைக்கென்று பார்த்து, கையில் 'காசு வரும்முன்பே' சண்டை வந்துவிட்டது. சரி, பாட்டி
வீட்டில் போய்ச் சாப்பிடலாம் என்று இருந்தவனுக்கு, களைப்பின் மிகுதியால் தூக்கம் கண்ணைச் சுழற்றிக் கொண்டு வந்தது! மேலே
சாமான்கள் வைக்கும் இடத்தில் ஏறிப் படுத்தான். அவ்வளவுதான்.

தூக்கத்தில் இவன் கும்பகர்ணன்.

ஆட்கள் வந்து நிரம்பியதும், வண்டி புறப்பட்டதும் எதுவுமே அவனுக்குத் தெரியாது. கண் விழித்த போது, முதலில் அவனுக்குத் தான்
எங்கே இருக்கிறோம் என்றே புரியவில்லை. அங்கிருந்து கீழே பார்த்தபோது, எல்லா இருக்கைகளிலும் ஜனங்கள் தூங்கிக்கொண்டு
இருக்கிறார்கள். ரயிலோ 'பேய்' வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது! ஜன்னல் கதவுகள் எல்லாம் இறுக்கமாக அடைபட்டுள்ளன. ரயிலின்
சத்தத்தையும் மீறின மழையின் சத்தம்! கீழே இறங்குவதா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு சொல்லத் தெரியாத
ஒரு பயம், வயிற்றில் என்னவோ வேதனை.

கீழே படுத்துக்கொண்டிருந்த ஒரு பெண், புரண்டு படுத்தபோது, அகஸ்மாத்தாகக் கண்களைத் திறந்தவள், மேலே இவன் கொட்டக் கொட்ட
விழித்தபடி இருப்பதைப் பார்த்துவிட்டு, 'க்யா, நீந்த் நஹி ஆயா?' என்று கேட்டாள்.

இவன் மலங்க மலங்க விழித்ததைப் பார்த்ததும், 'க்யா பேடா, க்யா தேக்தா? அப்னா பரிவார் கஹாங்?' என்றாள்.

இவனால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. வேற்று மனிதர்கள், வேறு பாஷை! வண்டியோ நிற்பதற்கான அடையாளமே
இல்லாமல் பேயோட்டம் ஓடுகிறது!
அழுகை கொஞ்சம் கொஞ்சமாக வெடித்துக்கொண்டு வருகின்றது!

அவ்வளவுதான், அடுத்த விநாடி, அவனைச்சுற்றி ஒரு வடக்கிந்தியக் கும்பல்! அதுவே அவனுக்குத் தெரிந்திருக்கவில்லை, அவர்கள்
வடக்கிந்தியர் என்பது! ஆளாளுக்கு அவனிடம் வேறுமொழியில் விசாரணை செய்தாலும் அவனுக்கு ஏதாவது புரிந்தால் தானே?
அந்த ரயில்ப்பெட்டி முழுதும் தென்னிந்திய யாத்திரைக்கு என்று வந்த வட இந்தியர்களுக்கான' ஸ்பெஷல் கோச்'!

பாட்டியின் பெயரோ, விலாசமோ ஒன்றுமே அவனால் சொல்ல முடியவில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் பாட்டியின் வீடு மட்டுமே!
முதன் முதலில் அவனிடம் பேசிய பெண்ணின் கண்களில் கருணை இருந்தது மட்டும் அவனுக்குப் புரிந்தது. அவர்கள் தந்த உணவு
அந்த நேரத்துக்கு அமிர்தமாக இருந்திருக்க வேண்டும். கடைசியில் அவர்களுடனேயே போகும்படி ஆனது. அந்த வயதான தம்பதிகள்
ராமேஸ்வரம் யாத்திரைக்காக தென் இந்தியாவுக்கு வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

பிள்ளையில்லாத அவர்கள், தங்களுடனேயே அவனைக் கூட்டிக் கொண்டு போய்விட்டார்கள். ஏராளமான சொத்து! நிறைய நிலபுலன்கள்.
அந்தக் குடும்பத்திலேயே வேரூன்றிவிட்டான் நம் திருவேங்கடம்.அந்த ஊரில் எல்லோருக்கும் இப்போது அவன் ஹரி! எல்லோருக்கும்
நல்லவனாக இருந்தான். படிப்புதான் ஏறவில்லை. அவனைச் சொல்லி என்ன பிரயோஜனம்? பஞ்சாபி எழுத அவனுக்கு வந்தால்தானே?
பேச்சு மட்டும் சரளமாக வந்துவிட்டிருந்தது! சின்னக் கிராமமானதால் அநேகமாக எல்லார் வீட்டுப் பிள்ளைகளும் படிக்காமல் கோதுமை
வயல்களில்தான் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்படிப் பெருசாகப் படித்துக் கிழிக்கவும் அங்கே ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத்தைத்
தவிர வேறு ஏதாவது இருந்தால்தானே?

சப்பாத்தியும், பாலும், நெய்யும் அவனை அடியோடு மாற்றியிருந்தது! ஆச்சு, பதினான்கு வருடங்கள். உழைத்து, உழைத்து மெருகேறிய
நல்ல உரம் வாய்ந்த உடம்பு. ஏற்கெனவே அவன் நல்ல நிறம்தான். இன்னும் சொல்லப்போனால் அவன் தான் அம்மாவைக் கொண்டு
பிறந்திருந்தான். அவன் தங்கைகள் எல்லாம் ஒரு மாற்றுக் கம்மிதான்.

கொஞ்ச நாட்களாக அவன் மனதில் ஏதோ ஒரு மாற்றம். பெற்றோர் வேறு இப்போதெல்லாம் கனவுகளில் வருகின்றனர்! இதுவரை வேறு
நினைவுகளுக்கு அவன் ஆளானதே இல்லை.

'மா ஜி' (அம்மாவை அப்படித்தான் கூப்பிடுகின்றான்) அவனது மாற்றத்தை உணர்ந்தவர்போல் இருந்தார்.

"ஹரி ஏன் ஒரு மாதிரி இருக்கின்றாய்? சரியாகச் சாப்பிடுவதுகூட இல்லையே?"

" ஒன்றுமில்லை மா ஜி. நன்றாகத்தானே சாப்பிடுகின்றேன். இன்னொரு ரோட்டி போடுங்கள்"

" உனக்கில்லாததா? இன்னும் கொஞ்சம் சப்ஜி எடுத்துக் கொள். உன் முகத்தில் ஒரு வாட்டம் இருக்கிறதே.

'இந்த அம்மா'வுக்குச் சொல்லலாம் என்று நினைத்தால் சொல்லு"

அன்பில் தோய்ந்த வார்த்தைகள்.அன்பு என்றால் அப்படியே மனத்தை உருக்கும் அன்பு! இதற்குமேல் அவனால் வாயை
மூடிக்கொண்டிருக்க முடியவில்லை.

" மா ஜி, என் அப்பா, அம்மாவின் ஞாபகம் அடிக்கடி வருகிறது? என் தங்கைகள் எல்லாம் எப்படி இருக்கிறார்களோ?

அவர்களும் என்னை மாதிரி வளர்ந்து, இப்போது பெரிய பெண்களாக இருப்பார்கள் அல்லவா?"

" இதில் சந்தேகம் என்ன? கடவுள் அருளால்,கட்டாயம் அவர்கள் நன்றாகவே இருப்பார்கள்."

இப்படியே சில மாதங்கள் போனது. ஆனால் அடிக்கடி இதைப் பற்றிய சம்பாஷணைகள் மட்டும் தொடர்ந்தன. இப்போதெல்லாம்
'பிதா ஜி'யும் இதில் கலந்து கொள்கின்றார்.

பேச்சு வாக்கில் ஒரு நாள் அவன் சொன்னான், 'ஒரு முறை மத்ராஸ் சென்று அவன் பெற்றோரைப் பார்க்க வேண்டும்' என்று.
ஒரு நிமிஷம், ஒரே ஒரு நிமிஷம் தயங்கின 'மா ஜி' புன்சிரிப்போடு சொன்னது, 'போய்விட்டு வாயேன்'


ரெண்டாவது பயணம் தொடரும்.........

36 comments:

said...

திருவேங்கடம் ஹரி ஆகறதா ஆச்சரியம்? முருகன் ஹரியாகறதுதான் அப்படின்னு அரைப்பிளேட் சொல்லறார். ஆனா அதுவா ஆச்சரியம்? புத்தர் ஹரியாகறதுதான்னு கல்வெட்டு சொல்லறாரு. ஒரே வெட்டு குத்தா இருக்கும் போல!!

said...

வாங்க கொத்ஸ்.

ஊர் ரெண்டு படுது.

குளிர் காஞ்சுக்கவா? :-))))

said...

ஜி க்கு முன்னாடி ஒரு கேப் எல்லா இடத்திலும் விழுந்திருக்கு போல!
தேவை கருதி தானோ? இப்படியுமா/அப்படியுமா அர்த்தம் செய்துகொள்ளலாம் அல்லவா?

said...

ஆமாங்க..பழைய நடை நல்லாவே தெரியுது. எடிட் பண்ணாம அப்படியே போடுங்க..சுவாரஸ்யமாவே போகுது..

said...

இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்:-)

யாரெல்லாம் ஹரியாகலாம்?
யாரெல்லாம் ஹரியாக முடியாது?

said...

கதையா டீச்சர். நச் போட்டிக்கு இல்லையே? ஏன்னா பெரிய தொடர்கதை போல இருக்குது. :)

said...

நல்லா இருக்கு....
தொடருங்கள்.... :)))

said...

டீச்சர்...கலக்கல்!
அப்படியே ரெண்டாவது பயணத்தைச் சீக்கிரம் போடுங்க! ஹரி ஹரி! அட நான் இங்கிலீஷ் Hurry ஐச் சொன்னேங்க! :-))

said...

வாங்க குமார்.

யாராவது கவனிக்கிறாங்களான்னு பார்த்தேன்.

'பாயிண்டைக் கப்'னு புடிச்சீங்க:-)

said...

வாங்க தங்ஸ்.

தேங்க்ஸ்ங்க. எடிட் ஒன்னும் செய்யப் போறதில்லீங்க. சோம்பலா இருக்கு:-))))

said...

வாங்க மது.

நட்சத்திரங்கள் பகலில் அலைவது ஏனோ?

கேள்விகேட்டே ஆகணுமுன்னு இருக்கீங்க போல.....

கேட்டவங்க கதி என்ன ஆச்சு? :-))))

இப்போ பதில்.

எல்லாருமே அவுங்கவுங்க விருப்பத்தை அனுசரித்து ஹரியாகவோ, அல்லது ஹரியில்லாமலோ ஆகலாம். ஆனா ஒண்ணு, நம்ம எல்லோருக்குமே 'அரி' கட்டாயம் வேணும்.

உயிர்ப்பிரச்சனை.ஆமாம்.

அரி= அரிசி ( மலையாளத்தில்)

said...

வாங்க காட்டாறு.

போட்டிக்கெல்லாம் இல்லைப்பா. அதுக்கு நச்னு இருக்கவேணாமா?

வேணுமுன்னா ....'தொடரும்' ன்னு போடறதுக்குப் பதிலா 'நச்'ன்னு போட்டுக்கவா?

ரெண்டாவது பயணம் நச்:-)))

said...

வாங்க கே ஆர் எஸ்.

தமிழோ இங்கிலிஷோ ஹரிக்கு ஹரி எதுக்கு?

நானும் இங்கே இருக்கும் Harry என்ற பேருடைய பையனை ஹரின்னு சொல்லிக்கூப்பிடறதுதான்.

அப்படியே Chris= கிருஷ் ஆயிட்டான்.

said...

அற்புதமான பாத்திரப்படைப்புகள்.
உற்சாகமாக நீங்கள் தொடங்கிய சிறுகதை துவக்கித்திலேயே விறுவிறுப்பாக உள்ளது.
போகப்போக தான் திடுக்கின்றெது என் மனது. Similar to the story narrated by my neighbour. When I told her, she says,
"அது சரி. இப்ப ஹரி யின் விலாசம் என்ன?
ஹரி மதராஸ் சென்றானா அல்லது செல்லப்போகிறானா?
பயணத்திற்கான முன்பதிவு செய்துவிட்டானா?
ஸ்லீப்பர் கோச்சா? அல்லது ஏ.ஸி. 2 டையரா?
நான் ஹரியை 15 வருடமாக எதிர்பார்த்து காத்து கிடக்கிறேன்.
நிஜம்தான்.
சென்ட்ரல் ஸ்டேஷனில் நான் அவனை எதிர்பார்க்கிறேன்.
ஏனெனில்
நான் தான் அவனுடைய‌
அம்மா."

Let me check up. Go fast with your story. I can't stand the suspense.
subburathinam
Thanjavur.

said...

டீச்சர்,

நல்ல சஸ்பென்ஸ்.
சீக்கிரமா அடுத்த பதிவ போடுங்க....

Anonymous said...

\\ரயில் பயணத்தால், வாழ்க்கை மாறிவிடலாம் என்று யாராவது சொன்னால் நம்ப முடிகிறதா\\ இப்பல்லாம் நம்ப முடியுது. ரயில் சினேகம் மாதிரி எல்லாருக்கும் சில சினேகங்கள் டக்குன்னு முடிஞ்சு போயிடறதில்லையே.
கதையை சோகக்கதை ஆக்கிடாதீங்க

said...

நான் கூட அரைபிளேடு மேட்டருக்கு தான் எழுதியிருக்கிங்கன்னு நினைச்சேன்..


\\ராயப்புரத்துலே இருந்து\\

ஆஹா..ஏரியா பெயரை வேற போட்டுட்டிங்க அப்படியே ரயில் பயணத்துக்கு எனக்கும் ஒரு டிக்கெட் போட்டுடுங்க...;)))

நன்றாக கொண்டு போறிங்க கதையை....அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்க ;)

said...

மால்குடி டேஸ் கதை சாயலில் பாத்திர படைப்புகள் எல்லாம் ரொம்ப எளிமையா அருமையா இருக்கு. ரெண்டாவது பார்ட்டுக்காக அவலுடன் வெய்டிங்க். :)

வெறும் வாய்க்கு மெல்ல அவல் கிடச்சது போலிருக்கு நிறைய பேருக்கு. :p

said...

திருவேங்கடம் ஹரியானது எப்படின்னு கேள்விக்கு இப்பிடின்னு விடை சொல்றீங்க.

ஆனா...திருவேங்கடம் திருவேங்கடமானது எப்படின்னு யாராச்சும் கேட்டு வெச்சுட்டா என்னங்க பண்றது? :/

ரொட்டி சப்ஜின்னா இந்தியால சாப்புடுறதுதான. நல்லாருக்குமே. ஒரு செட்டு முடிஞ்சா பார்சல் அனுப்புங்களேன். :)

நீங்களும் காதாசிரியையாயிட்டீங்க. வாழ்த்துகள். :) இது கதை எழுதும் நேரம் போல.

said...

ம்ம்ம்ம் - வழக்கமான கதை தான். இருந்தாலும் துளசியோட கைவண்ணத்துலே மிளிருது. அடுத்த பகுதிக்கு ஆவலோட காத்துருக்கோம்.
இயல்பா ஓடுது

said...

:) (ஸ்மைலி தலைப்பிற்கு).

பத்து வயசுப் பையன் பாட்டியோட பேரோ அட்ரஸோ தெரியாம இருப்பானா.

ஹரி "சிங்"கின் தென்னக விஜயம் நலமாக இருக்கட்டும்.

முருகா ஹரியை நீதாம்பா பார்த்துக்கணும் :)

said...

உம் அப்பறம் என்னாச்சு ?

(நேத்து ரெணடு மூணு தடவை பின்னூட்டம் போட முயன்று போய்ச்சே ரலை ப்ளாக்கருக்கு....பாக்கலாம் இப்பவாச்சும் எடுக்குதான்னு)

said...

டீச்சர். ஸ்டோரி ப்போத் அச்சாஹே. பட்னேக்கலியே அச்சா லஹ்ரேஹே.

ஸ்டோரிமே தொடா டீடெய்ல் வோனா ஜேயி. ஓ ரேஹா து தொடா ஜாதா இன்வால்வ் ஆஜாயஹா.

டீ.கே.

ரெண்டாவது பயணத்தையும் எதிர்பார்க்கிறேன்.

said...

வாங்க ஜெகதீசன்.

தொடரத்தான் வேணும். நான் கூர்க்கா மாதிரி.

கத்தி ரத்தம் பார்க்காம உறைக்குத் திரும்பாது:-)))))

said...

வாங்க சுப்புரத்தினம்.

அம்மா செண்ட்ரலில் காத்துக்கிட்டு இருக்காங்களா?

அடடா......

உங்க பின்னூட்டம் பார்த்துட்டு அப்படியே 'ஆடி'ப் போயிட்டேன்.

ஹரிக்கு என்னங்க, எந்த ரயிலில் வரப்போறான்னுகூடச் சொல்லத் தெரியலை பயபுள்ளைக்கு(-:

said...

வாங்க மதுரையம்பதி.

பின்னூட்டத்துக்குப் பதில் சொல்லக் கொஞ்சம் பிந்திருச்சு.

அடுத்த பாகம் இன்னிக்குப்ப் போட்டுருக்கேன்.

வேணும், தங்கள் தொடர்ந்த ஆதரவு.

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

ரயில் சிநேகம் இப்ப மாறித்தான் போச்சு போல.

நம்ம ஹரியின் காலத்துலே எப்படி இருந்துருக்கும் என்று யோசிக்கணும்.

சோகமோ மகிழ்ச்சியோ அதது வர்றதுபோலவே.....இங்கேயும்

said...

வாங்க கோபிநாத்.

ராயப்புரங்களா? டிக்கெட் போட்டுரலாம். பிரச்சனை இல்லை:-)

said...

வாங்க அம்பி.

கிருஷ்ணன்னு சொன்னதும் 'அவல்' வந்துருச்சு பாருங்க:-))))

நான் 'உமி' மட்டும்தான் கலந்து வச்சேன்:-)

said...

வாங்க ராகவன்.

'இதழில்' கதை எழுதும் நேரமிது.

அதான் பழசைத் தூசு தட்டி எடுத்தேன்:-)

said...

வாங்க சீனா.

எல்லாக் கதைகளிலும் 'வழக்கம்' இல்லாம இருக்குமா என்ன?

அடுத்தது போட்டாச்சு:-)

said...

வாங்க அரைபிளேடு..

இப்பத்துப் பசங்களுக்கு எக்ஸ்போஷர் கூடுதல். அஞ்சு வயசுலேயே என்ன போடு போடுதுன்னு பார்த்துக்கிட்டு இருக்கேனே....

ஹரி ஒரு அப்பாவி. ஒரு ரெண்டு தலைமுறைக்கு முந்தி பிறந்தவன்.


தலையில் குட்டிட்டுக் கையில் கொடுத்தால் வாங்கித் தின்னும் ரகம்.
அவ்வளவா விவரம் இல்லாதவன். இதுலே என்னான்னு சொல்றது(-:

said...

வாங்க முத்துலெட்சுமி.

இந்த ப்ளொக்கர் செய்யும் 'சதி'யைப் பாருங்க.

அடுத்தபகுதி போட்டாச்சுங்க.

said...

வாங்க ஆடுமாடு.

தோடா டீடெயில்.....? இது ஜ்யாதா ஹோகயாதோ?

அதுதான் அடக்கமா எழுதுனேன்:-)))

said...

அடடா. ஒரே பிள்ளையை இப்படி காணாம அடிச்சுட்டீங்களேன்னு சொல்ல வந்தேன். அப்புறம் தான் 'ஆகா. ஆணாதிக்க மனப்பான்மைன்னு வறுத்து எடுத்துருவாய்ங்களே'ன்னு சுதாரிச்சுக்கிட்டேன். :-)

இப்பத் தான் படிக்கத் தொடங்கியிருக்கேன் அக்கா. பழசாறதுக்குள்ள எல்லாத்தையும் படிச்சு முடிச்சிருவேன்னு நினைக்கிறேன்.

said...

வாங்க குமரன்.

உங்களைமாதிரி ஆன்மீகக்கதையா இருக்காது.

சாதாரணக்குடும்பங்களில் நடக்கும் கதைதான்.