Tuesday, December 11, 2007

வருசாவருசம் என்னத்தைச் சொல்றது?

வருசாவருசம் என்னத்தைச் சொல்றது?

'டாண்'ன்னு ரெண்டு மணிக்குத் தொடங்கிரும். எல்லாரும் சீக்கிரம் போய் இடம் பிடிக்கணும். வேடிக்கை 'பார்க்'க இடம் கிடைச்சிரும்.வண்டி 'பார்க்' பண்ண இடம் கிடைக்காது. இந்த கஷ்டத்துக்காக மக்கள்ஸ் ஒரு மணிநேரம் முன்னால் போறதும் உண்டு.
ஊர் பழக்கத்தையொட்டி நாங்களும் போனோம்..... ஆனால் ஒரு பதினைஞ்சு நிமிஷம் முன்னால். ஒரு அஞ்சு நிமிஷ நடையில் பக்கத்துத் தெருவில் ஒரு வொர்க்ஷாப்பின் பார்க்கிங்லே வண்டியை விடறது நம்ம வழக்கம்! ஞாயித்துக்கிழமை லீவுதானே. அதுவுமில்லாம அந்த சுவத்துலே 29ன்னு எழுதியிருக்கும். நம்ம வீட்டு எண். அதனால் ஒரு உரிமை:-)

இருபது வருசமா இதைத்தானே பார்த்துக்கிட்டு இருக்கோம். ஒரு அசுவாரசியம்தான். ஆனாச் சின்னப்புள்ளைங்க முகத்தைப் பார்க்கணுமே......
ஃப்ளோட் கண்ணுக்குத் தெரியாமப்போயிருமோன்னு ஒரு கவலை அந்தப் பிஞ்சின் முகத்தில். இது முதல்முறையான்னு 'அப்பா'கிட்டே கேட்டேன். ரெண்டாவது முறையாம். போனவருசம் பார்த்தது நினைவில்லை. வயசு மூணுதானே......

எங்களுக்கு முன்னால் நிற்க இடம் கொடுத்தோம். நடைபாதையும் நிறைஞ்சு, சாலையிலும் உக்கார்ந்துருக்காங்க. கிளை பிரியும் தெருக்களில் போக்குவரத்துக்குத் தடா.ஒரு 'மைல்' தூரம் போகும் ஊர்வலம். கொஞ்சம் 'சரித்திரத்தைத் திரும்பிப் பார்த்தால்'......சரியா அறுபது வருசத்துக்கு முன்னே நாலே நாலு அலங்கார வண்டிகளுடன் ஆரம்பிச்சதாம். 'ஹேஸ்' என்னும் வியாபார நிறுவனம் ( எல்லாம் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ்தான் ) கிறிஸ்மஸ் சமயம் வியாபாரத்தைப் பெருக்கச் செய்தத் தந்திரமான விளம்பரம். கொஞ்சம் கொஞ்சமா வண்டிகளின் எண்ணிக்கை பெருகியிருக்கு. அதுக்கப்புறம் அந்தக் கடைக்குப் 'ஃபார்மர்ஸ்' என்ற பெயர் மாற்றம். நாங்க இங்கே வந்தப்ப 'ஃபார்மர்ஸ் சேண்ட்டா பரேட்' என்ற பெயர்தான் விழாவுக்கு இருந்தது. இப்பச் சில வருஷங்களா இது 'ஸ்மித் சிடி சேண்ட்டா பரேடு'ன்னு ஆகி இருக்கு. யார் மெயின் ஸ்பான்ஸாரோ அவுங்க பேரை வச்சுருவாங்க. 'டுல்ஸீஸ் சேண்ட்டா பரேட்'ன்னா நல்லா இருக்காது?:-))))பொதுவா இது குழந்தைகளுக்குக் களிப்பூட்டும் ஊர்வலம் என்றதாலே அந்தந்த வருசம் பிரபலமா இருக்கும் குழந்தைகளுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வரும் கேரக்டர்கள் வேசத்தில் அலங்கார வண்டிகளில் இருக்கும் நபர்களுக்கு
வரவேற்பு பலமாவே இருக்கும்.கெர்மிட் & மிஸ் பிக்கி, சிம்ஸன்ஸ், ஸ்பைடர் மேன்,சூப்பர் மேன் தவறாமல் வருவாங்க.


ஆல் டைம் ஃபேவரிட் என்றதுபோல ஃபேரி டேல்ஸ் கதாபாத்திரங்கள் உண்டு. சிண்டெரல்லா, த்ரீ லிட்டில் பிக்ஸ், மதர் கூஸ் இத்தியாதிகள்.
நானும் 20 வருசமாப் பார்த்துக்கிட்டுத்தானே இருக்கேன்....... சில அலங்காரவண்டிகள் அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் அதே வர்ணத்தில்( எல்லாம் புதுப் பெயிண்ட் அடிச்சு) மினுக்கலா வர்றதுதான்.ஆமா.....வருசம் ஒருக்கா வெளிவரும் இதுகளை எங்கே வச்சுக் கட்டி(?)க் காப்பாத்தறாங்க? இதுக்குன்னே ஒரு ட்ரஸ்ட் இருக்காமே. அவுங்கதான் பொறுப்பாப் பார்த்துக்கறாங்களாம்.

ஒரு பத்துவருசமா, நம்ம 'ஹரே கிருஷ்ணா' கோயிலின் தேர்/ரதம் இதுலே கலந்துக்குது.மத்த அலங்கார வண்டிகள் மாதிரி மோட்டார் வச்சு இயக்காம, கையாலேயே வடம் பிடிச்சு இழுத்துக்கிட்டு வர்றதுதான். வேட்டி/புடவை கட்டுன இயக்கத்தினர்கள் வடம் இழுப்பதோடு, 'பஜனை' செஞ்சுக்கிட்டு, மிருதங்கம் வாசிச்சுக்கிட்டுப் போறது 'நமக்கு நல்லாத்தான் இருக்கு பார்க்க'.
இந்த முறை மொத்தம் 130 அலங்காரங்கள் கலந்துக்கிட்டாங்க. அறுபதாண்டுக் கொண்டாட்டம். ஆக்லாந்து நகர் சேண்ட்டா பரேடில் தடை செஞ்ச சீனர்களின்
'ஃப லூன் டாஃபா கொங்' இங்கே தடை ஏதும் இல்லாம ரெண்டாவது வருசமா
ஊர்வலத்தில் வந்தாங்க.

ச்சின்ன சப்பரம் மாதிரி அலங்கரிச்சதைப் பல்லக்கு மாதிரி தோளில் சுமந்துக்கிட்டு ஜப்பானியர்கள், கொரியன் மேளத்தோடும், பாரம்பரிய உடைகளோடும் கொரிய மக்கள், உள்ளூர் மவோரி இனக்குழு, சிங்க நடனம் ஆடிக்கிட்டே (குட்டிப்பாப்பா சிங்கம் கூட அப்பப்ப ஆடுச்சு)வண்டியில் நின்ன
ச்சீனக்குழு, ச்சின்மயா சங்கத்தின் ஆட்கள்,இந்தோனேசியக் கலாச்சார அலங்காரத்துடன் வந்த மக்கள், பேக் பைப் வாசிக்கும் ஹைலேண்ட் குழு, சர்க்கஸ் காமிச்சபடி அக்ரோபடிக் பள்ளிக்கூடப் பசங்கள், BMX Bike group,
அக்கார்டியன் கற்றுக்கொடுக்கும் பள்ளிக்கூடம், நாடகம்/நடிப்புக்கான பள்ளிகள், பேலே நடனம் சொல்லித்தரும் பள்ளிக்கூடம்( இது நம்ம வீட்டுக்கு ரெண்டாவது கட்டிடத்தில் இயங்கும் பள்ளி.அதனாலே என்னவோ நாமே பங்கெடுத்துக்கற மாதிரி ஒரு மகிழ்ச்சியில் பசங்களுக்கு ஜோராக் கையாட்டினேன்)இப்படி வந்த வரிசையில் 'பெல்லி டான்ஸ் சொல்லித்தரும் பள்ளி' முதல்முறையாக் கலந்துக்கிச்சு. தமிழ் சினிமாவில் நடனக்காட்சிகள் பார்த்துப் பழகின நமக்கு இது அவ்வளவா அதிர்ச்சியைக் கொடுக்கலைன்னு வையுங்க. ஆனால்........

குஞ்சும் குளுவானுமா இருக்கும் கூட்டத்தில் பெற்றோர்களுக்குக் கொஞ்சம்(??!!) அப்படி இப்படி இருந்துச்சோன்னு ஒரு நினைப்பு. அரைகுறை உடுப்போட ( அதுக்குன்னு இருக்கும் காஸ்ட்யூமே அப்படித்தானே?) ஆடிக்கிட்டு இருக்கற வண்டி போனதும் கொஞ்ச நேரத்தில் பால்ரூம் டான்ஸ் பள்ளி மக்கள்ஸ், குழுவா நடந்து வந்து அஞ்சு நிமிசத்துக்கொரு ஆட்டம் போட்டுக்கிட்டுப் போனாங்க.
எனக்கு ரொம்பப் பிடிச்சதுன்னா குட்டிக் குதிரைகளும், கென்னல் க்ளப் நாய்களும்தான். அதிலும் அந்த போனி க்ளப் குதிரைகள் ரொம்பவே க்யூட்.வழக்கம்போல கடைசி ஃப்ளோட் சேண்டாவோடது. வழக்கத்துக்கு மாறா பாட்டு ஒண்ணும் இல்லாம சைலண்டா வந்தது என்னமோபோல இருந்துச்சு எனக்கு. ஒருவேளை ஆடியோக்கு ஏதும் வந்துருச்சோ? கிறிஸ்மஸ் தாத்தா வரும்போது கேரல்ஸ் முழங்கணுமா இல்லையா? என்னவோ போங்க.
ஊர்வலம் ஆரம்பிச்சதுலே இருந்து இதுவரை சரியா ஒன்னரை மணி நேரம் ஆச்சு.

கூட்டம் கலைய ஆரம்பிச்சதும் பரபரன்னு அஞ்சு குப்பை வண்டிகள் வந்து பின்னாலேயே சுத்தம் செய்ய ஆரம்பிச்சு வீதி எல்லாம் பளிச்.

இந்தப் பதிவை எழுதவேணாமுன்னு முதல்லெ நினைச்சேன்.வருசாவருசம் அதே தானே? என்னாத்தைன்னு எழுதறதுன்னு.


ஆனா..... ஊர்வலம் முடிஞ்ச மூணாம் நாள் உள்ளூர் செய்தித்தாளில் வந்த ஆசிரியருக்குக் கடிதம் ஒன்றைப் பார்த்ததும் சில கேள்விகள் மனசில்......
உள்ளூர் குடும்பம் எழுதி இருக்காங்க இப்படி.
"இந்தப் பரேடு கிறிஸ்மஸ் பண்டிகைக்கானது. நம்ம மக்களுக்கு பண்டிகை ஸ்ப்ரிட்(???) வர்றக்காகன்னு ஏற்பட்டது. இதுலே மத்த இனத்தார்களின்
அலங்கார வண்டிகள் வர்றது கொஞ்சம் கூடப் பொருத்தம் இல்லை. இந்திய மதத்தைச் சேர்ந்த ஹரே கிருஷ்ணா, ச்சீனாவில் தடை

செய்யப்பட்ட ஃப லூன் டாஃபா எல்லாம் எதுக்காக இதுலே வரணும்?"
அவுங்க சொல்றதுலே இருக்கும் நியாயம் புரியுதுதான். சம்மதிக்கிறோம்.ஆனா.........ஒரு லட்சத்து முப்பாதாயிரம் மக்கள் கூடும் இடத்துலே மற்ற இனங்கள் தங்களை வெளிப்படுத்திக்கலைன்னா...... எப்படி? (எங்க ஊரின் மொத்த ஜனத்தொகை 4 லட்சம்)
இவுங்களும் இந்த நகரத்தில் இருக்கறவங்கதானே?தனியாத் தேர்த்திருவிழா, சீன விழான்னா எப்படி விளம்பரம் செய்யமுடியும்? நமக்கு ஆடியன்ஸ் எப்படிக் கிடைப்பாங்க? அப்படியே சிட்டிக் கவுன்சிலிடம் அனுமதி வாங்கி ஊர்வலம் வந்தாலும் பார்க்க யார் இருக்காங்க? என்றைக்கு அதுக்கு நாள் ஒதுக்கறது?
அப்படியே வந்தாலும், சாலைகளைச் சுத்தப்படுத்த ஆகும் செலவை யார் கொடுக்கறது? கட்டுப்படி ஆகுமா?மற்ற இனத்துடன் கூடி வாழும் வாழ்க்கை ஏன் சிலருக்குப் பிடிக்கலை. இந்த வெறுப்பு அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பெருசாகி பின்னாளில் ஏதாவது விபரீதம் ஆகுமா?
இப்படி எல்லாம் எண்ண ஓட்டம் வந்துக்கிட்டு இருக்கு. இது நல்லதுக்கான்னே தெரியலை(-:படங்கள் சிலவற்றை அடுத்த பதிவிலும் போடவேண்டியதுதான் போல.
மக்களின் வேண்டுகோளை முன்னிட்டுப் போன வருசம் நடந்த ஊர்வலம் இங்கே பாருங்க.
பார்த்துட்டு ஆறு வித்தியாசம் கண்டு பிடிக்கணும்.ஆமா.......

44 comments:

said...

1,2,3,4

said...

தெளிவாத்தான் கேள்வி கேட்டு இருக்கீங்க. இங்க என்னடான்னா கிருத்துமஸ் டயத்தை லைட்டா மாத்தி பண்டிகைகள் சீசன் அப்படின்னு சொல்ல ஆரம்பிச்சாச்சு. இந்த நேரத்தில் ஒரு யூத பண்டிகையும் வருதாமே. எல்லாத்தையும் சேர்த்து பண்டிகை அப்படின்னு கொண்டாடினா போதும் இந்த மதத்துக்கான குறியீடுகள் எல்லாம் வேண்டாமுன்னு ஒரு சாரர் சொல்லும் அளவுக்குப் போயாச்சு.

நிறையா பேரு மெரி கிருத்துமஸ் அப்படின்னு சொல்லாம / கார்ட் அனுப்பாம ஹேப்பி ஹாலிடேஸ் எனச் சொல்லத் தொடங்கியாச்சு.

இதுல பாரம்பரியம் போகுதேன்னு வேறு சிலருக்குக் கவலை. என்னமோ போங்க ரீச்சர்.

said...

இது என்ன நீங்களே முதல் பின்னூட்டம் போட்டுக்கற கெட்ட பழக்கம். யாரைப் பார்த்து கத்துக்கிட்டீங்க! :))

said...

அருமையா சொல்லி இருக்கீங்க

படங்கள் அருமை.

said...

//மற்ற இனத்துடன் கூடி வாழும் வாழ்க்கை ஏன் சிலருக்குப் பிடிக்கலை. இந்த வெறுப்பு அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பெருசாகி பின்னாளில் ஏதாவது விபரீதம் ஆகுமா?

இப்படி எல்லாம் எண்ண ஓட்டம் வந்துக்கிட்டு இருக்கு. இது நல்லதுக்கான்னே தெரியலை(-: //

..இப்டியே ஆரம்பிச்சதுதான் எல்லா இடத்துலயும்...உங்க ஊர்லயுமா?

திரும்பியும் இந்த வருஷம் எழுதியதற்கு நன்றி..புதுசா வந்த நாங்கள்ளாம் பாக்கிறோம்ல..

said...

//இந்தப் பதிவை எழுதவேணாமுன்னு முதல்லெ நினைச்சேன்.வருசாவருசம் அதே தானே? என்னாத்தைன்னு எழுதறதுன்னு.//

நாங்கலாம் புதுசா பதிவு எழுதறோம். நாங்க, இப்படிலாம் இருக்குன்னு தெரிஞ்சுக்க வேணாமா?

//மற்ற இனத்துடன் கூடி வாழும் வாழ்க்கை ஏன் சிலருக்குப் பிடிக்கலை. இந்த வெறுப்பு அப்படியே கொஞ்சம் கொஞ்சமா பெருசாகி பின்னாளில் ஏதாவது விபரீதம் ஆகுமா? //

எங்க பல நாட்டுல அப்படித்தானே நடந்துகிட்டு இருக்கு. ஆனா ஒண்ணு. 'இன ரீதியான ஒடுக்குமுறை ஆரம்பிக்கும் போது அங்க நிச்சயம் புரட்சி வரும்"னு எங்கேயே படிச்சிருக்கேன்.

said...

வாங்க கொத்ஸ்.

நெசமத்தான் சொல்றீங்களா?

பி.க. யாரைப் பார்த்துப் படிச்சேன்னு
மெய்யாலும் தெரியாது? :-)))))

நம்மூர் கொஞ்சம் கன்ஸர்வேடிவ் நகரம். த மோஸ்ட் இங்கிலீஷ் சிட்டி என்ற பெருமையில் ஆடுது.

400க்கும் மேற்பட்ட எத்னிக் க்ரூப் ஆளுங்க இருக்காங்கன்னு போன வருசம் மேயர்கிட்டே பேசிக்கிட்டு இருந்தப்பச் சொல்லி இருக்கார்.

பொறுத்துப் பார்க்கலாம்,

மாற்றம் வருதான்னு.

said...

வாங்க புதுகைத் தென்றல்.

இன்னும் படங்கள் நிறைய இருக்கு. நேரம் கிடைச்சால் தனியா ஃப்ளிக்கரில் போடுவேன்.

said...

வாங்க பாசமலர்.
//..இப்டியே ஆரம்பிச்சதுதான் எல்லா இடத்துலயும்...உங்க ஊர்லயுமா?//

இப்பத்தான் ஒரு குடும்பம் சொல்லுது.

போகப்போகத்தான் தெரியும்.

said...

வாங்க ஆடுமாடு.

சில நிகழ்ச்சிகள் எத்தனை வருசம் கழிச்சுப்பார்த்தாலும் ஒரே மாதிரிதான் இருக்கும் போல.

வேடிக்கை பார்க்க வரும் ச்சின்னப்பிள்ளைகள்தான் இங்கே புதுசு:-))))

பழைய பதிவுகளுக்கு ஒரு லிங்க் போட்டுவிடவா?

said...

//தனியாத் தேர்த்திருவிழா, சீன விழான்னா எப்படி விளம்பரம் செய்யமுடியும்? நமக்கு ஆடியன்ஸ் எப்படிக் கிடைப்பாங்க? அப்படியே சிட்டிக் கவுன்சிலிடம் அனுமதி வாங்கி ஊர்வலம் வந்தாலும் பார்க்க யார் இருக்காங்க? என்றைக்கு அதுக்கு நாள் ஒதுக்கறது//
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நாள் ஊர்வலம் போறத விட ஒண்ணா போனா போலிசுக்கும் பாதுகாப்புக்கு வசதி, மக்களுக்கும் போக்குவரத்து அடிக்கடி தடை படாது. ஆனா அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தங்கறமாதிரி,ஃப லூன் டாஃபா க்கும் , கிறிஸ்துமஸ்க்கும் என்ன சம்மந்தம்னு ஒருசிலர் கேக்கத்தான் செய்யறாங்க.

said...

போன வாரம் இங்க டச்சுக்காரர் ஒருத்தர் கிட்ட பேசிக்கிட்டிருந்தேன். அப்ப அவர் சொன்னாரு.

சிண்ட் கிளாஸ்...சாண்டா கிளாஸ் மாதிரிதான். முந்தி ஸ்பெயின்ல இருந்து ஒரு கிருஸ்துவச் சாமியார் வந்து ஊர்வலம் போவாராம். அவருக்கப்புறம் இங்க இருக்குறவங்களே ஊர்வலம் நடத்தீருக்காங்க. இப்ப என்னடான்னா...அது மத ஊர்வலம்னு இல்லாம பண்டிகை ஊர்வலம் மாதிரி ஆயிருச்சாம். மக்களும் பெருசா எடுத்துக்கலை. மாறாம வெச்சிருந்தா அழுகீரும். ஆனா எதைச் சேக்கனும்னும் இருக்கு.

மொத்தத்துல கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.

said...

//'டுல்ஸீஸ் சேண்ட்டா பரேட்'ன்னா நல்லா இருக்காது?:-))))//

நல்லவேளை கேள்விக்குறி போட்டீங்க.

said...

பரேட் நல்லா இருக்கு.
வருசா வருசம் வந்தா என்ன.
அழகாத்தானெ இர்உக்கு.
கொண்டாட ஒருநாள்.


சாப்பிட ஒண்ணும் கொடுக்கலியா:))

said...

வாங்க ச்சின்ன அம்மிணி.

ஆக்லாந்துலே(யே) வேணாமுன்னு சொன்னதை இங்கே எதுக்குச் சேர்க்கணுமுன்னு சிலபேரோட வாதம்.

இந்த 'யே' எதுக்குன்னா அங்கே ஆக்லாந்தில் 'ஹீரோ பரேடு' நடக்குதே....................

said...

வாங்க ராகவன்
//மொத்தத்துல கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. அவரவர் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.//

????????????????/

கொஞ்சம் உதைக்குதே:-))))

அவரவர் இடத்தில் இருந்தால் அப்புறம் எங்கே கூடி, எங்கே வாழ்வது?

said...

வாங்க உமையணன்.

'பாய்ண்ட்டை' யாருமே புடிக்கலையேன்னு இருந்தேன்:-))))

said...

வாங்க வல்லி.

வருசம் ஒரு நாள் திருவிழா பார்க்க நல்லாத்தான் இருக்கு. எழுதத்தான் ஒரு சோம்பல்(-:

தின்னவா?

கொடுக்கலைப்பா. அந்தப் பையனோட அப்பாவே கெஞ்சு கெஞ்சுன்னு கை நீட்டிக்கிட்டே இருந்தப்ப, ரொம்ப நேரம் கழிச்சு மனசில்லா மனசோட கையில் இருந்த ஒரு ப்ளாஸ்டிக் பையில் இருந்து ஒரு அரை ச்சிப்ஸை நீட்டினான் பொடியன். இதுலே எனக்கெங்கே கிடைக்கும்? :-)))))


பலூன், மிட்டாய்ன்னு விழாவுலே விநியோகம் பண்ணவங்க கிட்டே இருந்து நாந்தான் வாங்கி இந்தப் பக்கத்தில் இருந்த குழந்தைக்குக் கொடுத்தேன்.

said...

//உள்ளூர் குடும்பம் எழுதி இருக்காங்க //
அரசியல் கட்சிங்க இந்த மாதிரி விஷயத்த ஊதி ஊதி பெருசு பண்ணாம இருந்தா சரி..

கோபால் சார், பெல்லி டான்ஸ் போட்டோக்களுடன் ஒரு பதிவு போடுங்க :-))))))))

said...

டீச்சர் - உங்க ஊருக்கு கூகுள் வந்துருச்சே கவனிச்சிங்களா?

said...

// அந்த சுவத்துலே 29ன்னு எழுதியிருக்கும். நம்ம வீட்டு எண். அதனால் ஒரு உரிமை:-)//

அவ்வ்வ்வ்வ்வ்......

said...

// இப்படி வந்த வரிசையில் 'பெல்லி டான்ஸ் சொல்லித்தரும் பள்ளி' முதல்முறையாக் கலந்துக்கிச்சு.//
அப்படியா?.. துளசி அக்கா , ஏன் முன்னாடியே இதை எனக்கு சொல்லலை ?.. நம்ம கோபால் மாமாவைக்கூட அந்த சமயத்துல தலை நிமிறக்கூடாதுன்னு கண்டீசன் போட்டுத்தான் கூப்பிட்டுகின்னு போனிங்களாமே..இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

said...

// "இந்தப் பரேடு கிறிஸ்மஸ் பண்டிகைக்கானது. நம்ம மக்களுக்கு பண்டிகை ஸ்ப்ரிட்(???) வர்றக்காகன்னு ஏற்பட்டது. இதுலே மத்த இனத்தார்களின்
அலங்கார வண்டிகள் வர்றது கொஞ்சம் கூடப் பொருத்தம் இல்லை. இந்திய மதத்தைச் சேர்ந்த ஹரே கிருஷ்ணா, ச்சீனாவில் தடைசெய்யப்பட்ட ஃப லூன் டாஃபா எல்லாம் எதுக்காக இதுலே வரணும்?"/./

இந்த கேள்வியே எனக்கு வருத்தத்தை குடுக்குது..

said...

எல்லா போட்டோக்களுமே அருமை.. நேருல பாத்தா மாதிரி ஒரு உணர்வு.. நல்லாயிருக்குங்க அக்கா..

said...

அழகான படங்கள்.நேரில் பார்த்த உணர்வைத் தருகிறது.

said...

பரேட் படங்கள் நல்லாயிருக்கு,
முக்கியமா அந்த வெளிநாட்டுப்பெண்கள் இந்திய கலாச்சார உடையான புடவையில் பார்க்க ரொம்ப நல்லாயிருந்தது.

said...

மேடம்,

இதுக்கு நான் ஏற்கெனவே பின்னூட்டம் போட்டேன். இப்போ ஞாபகத்தில் இருக்கற வாக்கியங்களை எழுதறேன்.

அழகான புகைப்படங்கள், கூடவே பொருத்தமான உங்க கமெண்ட்டரி வரிகள் என்று நேரில் பார்த்த உணர்வு ஏற்படுகிறது.

சிறிய வயதில் மேலமாசிவீதியில் யானையும் ஒட்டகமும் முன் செல்ல ஆடி அசைந்து வருமே மீனாட்சி சொக்க நாதர் தேர்கள் அந்தத் திருவிழாவினை ஒரு கையில் பலூன் மறு கையில் குச்சி ஐஸ் என்று பார்த்த ஞாபகம் அடிமனதில் எழுந்தது.

said...

//நட்பும் பரிவும் காட்டவேண்டிய இந்த விழாக்காலத்தில்//

டீச்சர், நட்பும் "பரிசும்" ன்னு நினைச்சி தானே அதை டைப் பண்ணீங்க? தட்டச்சுப் பிழை தானே அது? :-))

அது எப்படி நீங்க லீவு வுடலாம்? சாண்டா வேடமிட்டு, எங்களுக்குப் பரிசு எல்லாம் கொடுப்பார்களே பள்ளிக்கூடத்தில்! அதெல்லாம் எங்கே????????

நீங்க ஒரு மாதம் எங்கு போனாலும், பின்னாலயே அந்த யானை மேல் ஏறி, அழகிகளுடன் வந்து எல்லாப் பரிசையும் வாங்கிக்க மாட்டமா என்ன? எதுக்கும் கிப்ட் வ்ராப் பண்ணும் போது கொஞ்சம் உள்ள என்ன இருக்குன்னு தெரியுறா மாதிரி சுத்தி வையுங்க டீச்சர்!

Happy Holidays, Merry Christmas, Happy New Year and இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

said...

அட, டீச்சர் எப்போ லீவு போட்டாங்க-ன்னு கேக்குறீங்களா?
அது போன வருசப் பின்னூட்டம்-ப்பா! :-)

டீச்சர் இந்த வருசம், பரேடு-ல யானையே இல்லையா? இதை எப்படி நீங்க அனுமதிச்சீங்க!
சென்ற ஆண்டு, யானையும் அதன் மேல் அழகிகளும்-னு எவ்ளோ நல்லா இருந்திச்சி? :-))

said...

இதையே இன்னொரு கோணத்தில் இருந்து பார்த்தால், இதிலும் நியாயம் இருப்பது தெரியவரும்.

பிள்ளையார் சதுர்த்தி அன்று வரும் ஊர்வலத்தில் மற்ற மத ஆட்டங்களோ, இல்லை, பக்ரீத் ஊர்வலத்தில் ஒரு முருகன்ரதத்தையோ இழுத்துச் செல்ல அனுமதிப்பார்களா?

பெயர் ஸேண்ட்டா பரேட் என இருக்கும் போது, அது கிறிஸ்து பிறப்பை ஒட்டி வரும் ஊர்வலமென்றுதானே ஆகிறது?

மத நல்லிணக்கம் வரணும் முதலில்.

அப்போதான் இதெல்லாம் சாத்தியமாகும்.

ஜனவரி 1-ம் தேதி அல்லது சுதந்திர தினத்தன்று இது போல் ஒன்றை நடத்த அனைத்து மதத்தினரும் முயற்சிக்கலாமே!

படங்கள் அட்டகாசம் டீச்சர்!

பதிவு வழக்கம் போலவே சூப்பர்!

said...

வாங்க தங்ஸ்.

அரசியல் கட்சிங்க இதை ஊதாது. இங்கே வருசத்துக்கு இவ்வளோ குடியிருக்க உரிமை கொடுக்கறாங்களே.

பெல்லி டான்ஸ் ஒரு நிமிஷ வீடியோவில் இருக்கு. என்னத்துக்குத்தான் வலை ஏத்தலை:-)

said...

வாங்க நாகு.

நீங்க சொன்னபிறகுதான் அந்தச் சுட்டியில் போய்ப் பார்த்தேன்.

தகவலுக்கு நன்றி.

நம்ம வீடு தெரியுது. முந்தி ஒரு முறை பலூன்லே பறந்தப்பப் பார்த்திருக்கேன் நம்ம வீட்டை:-))))

said...

வாங்க ரசிகன்.

பெ.டா.வுக்கு இப்படி உணர்ச்சிவசப்பட்டா எப்படி? :-)))
அதான் முதல்முறையா வருதுன்னு சொன்னேனே.

அடுத்தவருசம், கோபாலைக் கண்ணைக்கட்டிக் கூட்டிக்கிட்டுப்போகணும்.:-))))

//நேருலே பாத்தா மாதிரி //

அப்ப காந்திலே?

ச்சும்மா .....ஒரு கடி:-)

said...

வாங்க ரிஷான்.

வருகைக்கு நன்றி. மீண்டும் வருக.

said...

வாங்க திவ்யா.

//இந்திய கலாச்சார உடையான புடவையில் பார்க்க //

இன்னும் சல்வார் கமீஸ் ஆகலையா?:-))))

ச்சும்மா சொல்லக்கூடாது. புடவையில் அழகா இருக்காங்க.

said...

வாங்க ரத்னேஷ் அப்பா.

இதுதாங்க உங்க முதல் பின்னூட்டம் இங்கே.

எனக்கு ஒரு சந்தேகம். மதுரை கோயிலில் ஒட்டகம் பார்த்தேன். யானை சரி.ஒட்டகம் எப்படி கோயிலுக்கு வந்தது? அதுக்கு எதாவது 'கர்ணபரம்பரை கதை 'இருக்கா?

said...

வாங்க KRS.

இந்த வருசம் நம்ம யானையை யாரோ ஒ(ளி)ழிச்சு வச்சுட்டாங்கப்பா.
எனக்கே 'திக்'ன்னு ஆகிப்போச்சு. பெயிண்ட் அடிக்க முடியலையோ என்னவோ?

உங்க எல்லாருக்கும் கிஃப்டா ஒரு (நிஜ)யானையைத் தரணும். நல்லா வச்சுக் காப்பாத்துவீங்கதானே?

நாளுக்கு நாலுமுறை தீனி போட்டால் போதும்.

ஆனா ஒண்ணு....கிஃப்டை வ்ராப் பண்ணாமத்தான் தருவேன்:-)))))

சம்மதமா?

விழாக்கால வாழ்த்து(க்)களுக்கு நன்றி.

said...

வாங்க VSK.

அவுங்க சொல்ற நியாயம் சரிதான்.

//பிள்ளையார் சதுர்த்தி அன்று வரும் ஊர்வலத்தில் மற்ற மத ஆட்டங்களோ, இல்லை, பக்ரீத் ஊர்வலத்தில் ஒரு முருகன்ரதத்தையோ இழுத்துச் செல்ல அனுமதிப்பார்களா//


நீங்க சொல்றது சரி. நம்மூர் கூட்டத்துக்குத்தான் குறைவில்லையே.

ஒரு பைத்தியத்தைச் சுத்தியும் பத்துப்பேர் இருப்பாங்க.

இங்கே நாலு பேர் இருந்தால் அது கூட்டம் என்று கொள்க.

அப்புறம் எங்கே மத்தவங்க ஊர்வலம் போறது?

ஜனவரி ஒன்னு லீவு சீஸன். கிற்றிஸ்மஸ் முடிஞ்ச மறுநாளில் இருந்து மக்கள் சுற்றுலா, கேம்பிங்ன்னு கிளம்பிருவாங்க.

சுதந்திரதினம்?

அப்படி ஒண்ணு(ம்) இங்கே இல்லை.

said...

போன வருஷம் நீங்க போட்டதை நான் படிக்கலை போலிருக்கு. அதனால இந்த வருஷம் இன்னொரு தடவை நீங்க எழுதுனது நல்லதா போச்சு. உங்க மேயர் மின்னஞ்சல் முகவரி இருந்தா சொல்லுங்க. அடுத்த வருஷம் 'துள்சீஸ் பரேட்'ன்னு விளம்பரம் போடச் சொல்லி சிபாரிசு பண்றேன். :-)

உங்க ஊருல இப்ப வெயில் காலம்ங்கறதால இதெல்லாம் எத்தனை மணி நேரம் ஆனாலும் உக்காந்து/நின்னு பார்க்கலாம். எங்க ஊருலயும் இப்படி ஒரு பரேட் நவம்பர் கடைசியில இருந்து கிறிஸ்துமஸ் வரைக்கும் தினமும் ராத்திரி 7 மணிக்கு வருது (5 மணிக்கே இருட்டிப் போகுது இப்ப எல்லாம்). இந்தக் குளிர்ல எங்க போயி அதை எல்லாம் பாக்குறது. போன வருஷமும் அதுக்கு முந்தின வருசமும் போனோம். இந்த வருசம் போகலை. :-(

கொத்ஸ் சொன்னது மாதிரி இது மத விழாவா இல்லாம இப்ப எல்லாம் இங்கே வெறும் பண்டிகை மாதிரி கொண்டாடறாங்க. எங்க அலுவலகத்துல நிறைய (மூன்றில் ஒரு பங்கு; ஏறக்குறைய 1000 பேர்) இந்தியர்கள் வேலை பாக்குறதால தீபாவளியில இருந்து பண்டிகைக் காலம்ன்னு சொல்லத் தொடங்கியாச்சு. :-) Holiday Greetingsனு எல்லாருக்கும் (இந்தியர், அல்லாதவர் எல்லோருக்கும்) தீபாவளிக்கு முந்தின நாள் வாழ்த்து அட்டை வந்தது.

said...

வாங்க குமரன்.

தினமும் பரேடா?

அட!!! கூட்டம் சேருதா? எப்படி?

தெருவைச் சுத்தம் செய்ய, போலீஸ் பாதுகாப்புன்னு செலவு எக்கச் சக்கமாயிறதா?

said...

நான் இது வரைக்கும் ஆறேழு வருடங்கள் பாத்திருக்கேன் அக்கா. பாக்குறப்ப எல்லாம் கூட்டம் இருந்திருக்கு. பெரும்பாலும் வார நாட்களில் தான் போயிருக்கேன். அதனால் தினமும் கூட்டம் வருதுன்னு தான் நினைக்கிறேன்.

செலவு பத்தி தெரியலை. ஒரு வேளை அம்புட்டு ஸ்பான்ஸர்கள் இருக்காங்க போல.

said...

குமரன்,

ஆச்சரியமா இருக்கு.

உங்க ஊர் ஜனத்தொகை எவ்வளவு?

said...

The city lies on both banks of the Mississippi River, just north of the river's confluence with the Minnesota River, and adjoins Saint Paul, the state's capital. Known as the Twin Cities, these two cities form the core of Minneapolis-St. Paul, the fifteenth largest metropolitan area in the United States, with about 3.5 million residents.

துளசி அக்கா. இதோ நீங்கள் கேட்ட தகவல் - விக்கிபீடியாவிலிருந்து.

said...

குமரன்,

3.5 மில்லியனா? அப்ப எங்களைப்போல பத்து மடங்கு.

அப்ப.....தினமும் கூட்டம் சேருவது அதிசயமில்லை:-)))))

இங்கே மொத்த நாட்டுக்கும் 4.1 மில்லியந்தான் மக்கள்.

தகவலுக்கு நன்றிப்பா.