Friday, December 21, 2007

திருவேங்கடம் ஹரியானது இப்படித்தான்:-) பகுதி 2


முதல் பயணம்: இங்கே

வேலிப்பக்கமிருந்த படலைத் தள்ளித்திறந்துகொண்டு உள்ளே வந்த ஹரியைப் பார்த்து 'இவ(ர்)ன் யார்?' என்ற மிரட்சி,கண்களில் தெரிய 'பாட்டி, பாட்டி'ன்னு கத்திக்கொண்டே உள்ளே ஓடினான் சுகுமாரன். கொடியில் காயவைத்திருந்த துணிகளை ஒவ்வொன்னாக எடுத்து ஒரு தோளில் கோபுரம் கட்டிக்கொண்டிருந்த ஒரு பதினைஞ்சு வயசுப் பெண் அசட்டையாத் தலையை மட்டும் திருப்பிப் பார்த்தாள். ம்ம்ம்.... புதுசா இருக்கானே.........கூடவே ஒரு பயமும் வந்தது. மூணு நாள் பயணம் செஞ்சு, அழுக்கு உடை(அதுவும் கொஞ்சமும் பரிச்சயமில்லாத பைஜாமா) தாடி மீசைன்னு வேஷம் கட்டி இருந்தானே ஹரி!

வெளித் திண்ணைக்கு வந்த பாட்டி, கண்ணை இடுக்கிப் பார்த்து, 'யாருப்பா நீ? என்ன விஷயம்?' என்று கேட்டுக்கொண்டே.....வீட்டின் உள்ப்பக்கம் கையை வீசினாங்க. யார் வந்திருக்காங்க என்ற ஆவலோடு எட்டிப்பார்க்க வந்த பெண்களுக்கு இந்த சிக்னல் புரிந்துவிட்டது. இனியும் தலையை வெளியில் காண்பித்தால் 'பாட்டு'த்தான் கேட்கவேண்டி இருக்கும்.

தலைமுடிதான் 'கொல்'லென்று நரைத்திருக்கே தவிர, பாட்டியின் முகத்தில் அவ்வளவாக மாற்றமில்லை என்று நினைத்துக்கொண்டே, 'பாட்டி, நாந்தான் திருவேங்கடம்' என்றான். ஒன்றும் புரியாமல் நின்ன பாட்டியிடம், திருவேங்கடம் பாட்டி. காணாமப் போனத் திருவேங்கடம் வந்துருக்கேன் பாட்டி. 'திருட்டுத் திருவேங்கடம்' என்று தன் பால்யகாலத்துப் பட்டப்பெயரையும் சேர்த்துச் சொன்னான்.

வீட்டில் எல்லோருக்கும் அழுது அழுது கண்கள் சிவந்திருந்தன. ஒரு மணிநேரத்துக்கும் மேலாகச் சுற்றி உட்கார்ந்து அழுதா பின்னே எப்படி இருக்குமாம்?

'ராமர் வனவாசம் போனமாதிரி பதினாலு வருசம் பிரிஞ்சு போயிட்டேப்பா'ன்னு பாட்டி சொல்லிச்சொல்லி மாய்ந்தாங்க.

என்னவெல்லாமோ நடந்து போச்சேப்பா........உங்க அம்மாவும் அந்த ராட்சஸன் தொல்லையிலே இருந்து தப்பிச்சு ஒரேடியாப் போயிட்டா. உங்க அப்பன் திருந்தவே இல்லை. தாயில்லாப் பிள்ளைங்க படற கஷ்டம் தாங்காம நாந்தான் இங்கே கொண்டாந்து வச்சுருக்கேன்.

இதுகளுக்கு ஒரு கல்யாணம் காட்சியெல்லாம் செஞ்சு பார்க்கணுமுன்னு அவனுக்குத் தோணவே இல்லை பார். உங்கம்மா போட்டுருந்த பீ பித்தாளையெல்லாம் அப்பவே அழிச்சுட்டான்.

"அண்ணி பக்கத்துலே படுத்துத் தூங்கறாப்போல இருந்து அர்த்தராத்திரியில் தாலிக்கயித்தை மெதுவாப் பல்லாலே கடிச்சு அதுலே இருக்கும் கா சவரன், தங்க குண்டுன்னு களவாடிக்கிட்டுப் போயிருவாராமே அண்ணன்"

சமயசந்தர்ப்பம் தெரியாமல் சித்தி சொன்ன 'ஜோக்கை'க் கேட்டு அத்தனைபேரும் சிரித்த சப்தம் சோகச்சூழலைக் கொஞ்சம் குறைத்தது.

அண்ணனை வைத்த கண் மாறாமல் 'ஆ'வென்று பார்த்துக்கொண்டிருந்தனர் தங்கைகள்......

"அப்பா இப்ப எங்கே இருக்கார்?"

" யாருக்குத் தெரியும்? எங்கியாவது சுத்திக்கிட்டு இருப்பான்.அவனுக்குன்னுதான் ஒரு சோம்பேறிக் கூட்டம் நண்பர்கள் என்ற பெயரில் இருக்கே"

" தங்கச்சிங்களைப் பார்க்கவாவது வந்து போகிறாரா?"

" ஆங்.......எப்பவாவது ஒரு மூணு நாலு மாசத்துக்கொரு தடவை வருவான். வர்றதுதான் வர்றானே அதுகளுக்கு ஒரு பொட்டலம் சேவு கூட வாங்கி வரமாட்டான். இதுங்க என்ன பாவம் பண்ணுச்சுங்களோ, இவனுக்குவந்து பொறந்ததுங்க"

உலகிலேயே ஒசத்தியான தின்பண்டமுன்னா பாட்டிக்கு அது காராசேவுதான்:-)))

இதைக்கேட்டதும் இவனுக்கு 'ச்விக்' என்று இருந்தது. இவனும்தான் வெறுங்கையோடு வந்தவன். அவசரமாகத் தன் குர்த்தா ஜேபியைத்தடவி, கிடைத்த சில ரூபாய் நோட்டுக்களை ஒரு தயக்கத்துடன் கஸ்தூரியிடம் நீட்டினான்.

" அது இருக்கட்டும். வீட்டை எப்படிக் கண்டுபிடிச்சே? உனக்குத்தான் நம்ம பாஷையே மறந்து போயிருக்குமே. நீ பேசறது எனக்கே புரியலை. யார்கிட்டே என்னன்னு கேட்டே?"


'வாயில இருக்கு வழி' என்பதில் பாட்டிக்கு ஒரு அசைக்கமுடியாத நம்பிக்கை.

"ஸ்டேஷனைவிட்டு வெளியில் வந்ததும் எல்லாமே அப்படியே இருக்கறமாதிரிதான் பாட்டி. பழைய ஞாபகத்தில் தெருமூலை திரும்பி,மெயின் ரோட்டு மேலே ஏறி வந்தேன். வேலிதான் புதுசாத் தெரிஞ்சது. "

'ஆமாம்ப்பா....இப்பத்தான் ஆறுமாசம் ஆச்சு இந்த வேலியைப்போட்டு. ஊர் மாடுகள் எல்லாம் வந்து செடிகளை மேஞ்சுட்டுப் போயிருது. தொலையட்டுமுன்னு பார்த்தா......ஒரு நாள் கொடியில் காயப்போட்டுருந்த
புடவையை ஒரு மாடு பாதி தின்னுருச்சு."

அதுகிடக்கட்டும் விடு. எப்பச் சாப்புட்டியோ என்னவோ.....போய் குளிச்சுட்டு வா. சாப்புடலாம் என்று கிணற்றுப் பக்கம் கை காட்டினார் பாட்டி.

பேரன் பக்கத்தில் உட்கார்ந்து அவன் சாப்பிடுவதைக் கவனித்துக்கொண்டே.....
'எல்லாம் உன் தங்கச்சிங்க சமையல்தான். நல்லா இருக்கா?

வீட்டுக்கதைகளும் பஞ்சாப் நாட்டுக்கதைகளுமாக ஒரு பத்து நாள் போனது. சோறு மட்டும் சாப்பிட்டால் ஒன்னும் சரியாகவில்லை என்று சப்பாத்திக்கு அடிபோட்டான் ஹரி. அவனுக்காகக் கோதுமை வாங்கி, மில்லில் அரைத்தானது.

தட்டில் விழுந்த சப்பாத்தியைப் பார்த்து நொந்துபோனான் ஹரி. இதென்ன? தோலில் செய்ததா? மறுநாளில் இருந்து தானாகவே சப்பாத்தியைச் செய்துகொண்டான். அடுப்படியில் குத்துக்காலிட்டு அமர்ந்து மாவையும் தண்ணீரையும் மட்டுமே சேர்த்துக் குழைத்து, மெத்தென்ற ரொட்டி உருவாகும் விந்தையை முதலிரண்டு நாட்கள் 'ஆ'வென வாய் பிளந்து பார்த்த குடும்பம் மெல்லப் பின்வாங்கி விட்டது.

'உனக்கு வேணுங்கறதை நீயே செஞ்சுக்கோயேன்.......'

தோட்டத்தில் பூச்செடிகள் பூத்துக்குலுங்கின. நந்தியாவட்டை, செம்பருத்தி, அரளியெல்லாம் புது மெருகுடன் இருந்தது. கொஞ்சமும் சோர்வில்லாமல் கிணற்றில் இருந்து நீர் இறைத்துச் செடிகளுக்குப் பாய்ச்சினான். அடிமண்ணையெல்லாம் கொத்திவிட்டு, மண்ணைக் குவித்துப் பாத்திகள் கட்டிச் சீரான அழகுடன் ஜொலித்தது வெளிவாசல்.

வீட்டில் யார் என்ன வேலை செய்தாலும் பாய்ந்து ஓடிக் கையில் உள்ள வேலையைப் பிடுங்கிச் செய்து கொடுத்தான்.

'ம்ம்....கொஞ்சமாவா தின்னுறான். செய்யட்டுமே இன்னும் கொஞ்சம் வேலை'

அவ்வப்போது பாட்டியின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, அப்பாவையும் தங்கைகள் திருமணம் பற்றியும் பேசினான். வரிசையா நிக்கும் வயசுப்பெண்கள் மூவரையும் எப்படிக் கரையேத்தப் போறோமோன்னு கலங்கி நின்ன பாட்டிக்கு இந்தப் பேச்சு ரொம்ப ஆசுவாசமாக இருந்தது. கூடவே ஒரு மண்டைக் குடைச்சலும்.

இன்னும் இவன் எத்தனை நாள் இங்கே இருக்கப்போறானோ? தேவா வந்தே மூணு மாசத்துக்கு மேலாச்சே..எப்போ வருவானோ? அப்பனும் பிள்ளையும்
சந்திக்கும் சந்தர்ப்பம் இருக்குமா? தங்கைகள் கல்யாணத்துக்கு காசு கொண்டு வந்துருப்பானோ? எவ்வளவுன்னு அவனாச் சொல்வான்னு பார்த்தால் வாயைத் திறக்கலையே! பெரியவளுக்கும் ஆச்சே 20 வயசு. இன்னும் தள்ளிப்போட்டா நல்லாவா இருக்கும்? இப்பவே முத்தல்னு சொல்லிருவாங்களே...........

'இவனா என் மகன்' என்ற ஆச்சரியமும் பெருமிதமும் கலந்த பார்வையுடன்
திண்ணையில் உட்கார்ந்திருந்தார் தேவா. எதிர்பாராத சந்திப்பு. மகள்களைப் பார்த்துவிட்டுத் தாயின் கைகளில் நாப்பதோ அம்பதோ கொடுத்துவிட்டுப்போக வந்தவருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டம்.

மறுநாளே தகப்பனும் மகனுமாகக் கிளம்பிப் போனார்கள். மற்ற சித்தப்பாக்களின் வீடுகளுக்கும், அத்தைகள் வீடுகளுக்குமாய் போய்வருவார்களாம்.

பயமா, மகிழ்ச்சியா என்று இனம்பிரிக்கமுடியாத ஒரு கலந்து கட்டுன மனோநிலையில் ஒரு பெட்டியில் தங்களது சாமான்களைத் திணித்துக்கொண்டிருந்தனர் லலிதா, விஜயா & கஸ்தூரி. அண்ணனுடன் போகிறோம். அங்கே எப்படி இருக்குமோ?

அப்பாடா....ஒரு பாரம் தீர்ந்தது. இந்த தேவா கில்லாடி. அவனாச்சு, அவன் குடும்பமாச்சு. எனக்கோ வரவரத் தள்ளலை. கொள்ளிபோடவாவது வருவானோ என்னவோ...........பாட்டி

இந்தப்பொண்கள் இருந்தது வீட்டுவேலைக்கு சுலபமா இருந்தது. பையன் சுகுவுக்கும் விளையாட்டுத் துணை. இனி எல்லா வேலையும் என் தலையிலெ விழுந்துருமே...........ச்சின்ன அத்தை.

இந்த அட்லஸில் இவர்கள் ஊர் எங்கேன்னு போடலையே? ச்சின்ன ஊராமே. புதுசாக் கட்டிக்கிட்டு இருக்கும்
பக்ரா நங்கல் அணையிலிருந்து பத்து மைல் தூரத்தில் இருக்காம். எங்கேன்னு
யாரைக் கேக்கலாம்............சுகுமாரன்.

நல்லவேளை. சமயத்தில் இவன் வந்து சேர்ந்தான். இவனைத் தாஜா பண்ணி, மனசைக் கரைச்சுப் பொண்ணுங்களை இவனே பொறுப்பாக் கட்டிக்கொடுக்கறேன்னு சொல்ல வச்சுட்டேன். ஒரு வாரம் இதே வேலையாப் போச்சு. போகட்டும். இந்த அளவில் எனக்கு வெற்றிதான்......தேவா.

அப்பாகிட்டே, நானே எல்லாப் பொறுப்பையும் ஏத்துக்கறேன்னு ஒரு உணர்ச்சிவேகத்தில் சொல்லிட்டேனே....எப்படியாவது மா ஜியிடமும் பிதா ஜியிடமும் கெஞ்சி இவுங்களை அங்கே நல்ல இடத்தில் நம்ம கிராமத்துலேயேக் கட்டிக்கொடுத்துறலாம். அவுங்களுக்கு ரொம்ப இளகுன மனசு. மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க. நம்ம கிராமத்துலேயும் பசங்க இருக்கானுங்களே. சாப்பாட்டுக்கும் துணிக்கும் பஞ்சமில்லாம ஒரு வாழ்க்கை கிடைக்கும். எனக்கும் நம்ம குடும்பத்து மனுசங்கன்னு அங்கே ஆதரவு இருக்கும்.....பாவம். பொண்ணுங்க .....அப்பாவால ரொம்பக் கஷ்டம் அனுபவிச்சு இருக்குதுங்க..........ஹரி.

மொத்தக் குடும்பமும் அன்று செண்ட்ரல் ரயில் நிலயத்தில். மெயில் வண்டியில் அண்ணந்தங்கை நால்வரையும் ஏற்றி அனுப்பியாச்சு. பெரியவளும் கடைக்குட்டியும்தான் தேம்பித்தேம்பி அழுதவண்ணம் இருந்தனர். நடுவுள்ளவள் விஜயா, கொஞ்சம் கெட்டி. நடப்பது நடக்கட்டும் என்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ரயில் நகர்ந்தது.

மூன்றாம் பயணம் தொடரும்................

24 comments:

said...

சோகமா எதுவும் முடிச்சீங்களோ தெரியும் சேதி:-)))))

துளசி, துளசி கோபால் ஆனது எப்படி?? அத எப்ப சொல்லுவீங்க?

said...

வேலைக்கு கிளம்பும் அவசரம்...ரயில் பிடிக்கவேண்டிய அவசியம் இல்லை. :-)
பிறகு வருகிறேன்.

said...

தனியாப் போன கந்தன் திரும்பி வரும் போது நாலு பேரா வரானா!!

அட சட், கந்தன் இல்லையா - ஹரி ஹரி!! என்னமோ கன்பியூஷன். என்ன செய்ய? :))

said...

வாங்க தங்ஸ்.

சோகமோ மகிழ்ச்சியோ நம்ம கையிலேயா இருக்கு?

நடப்பது நடக்கட்டும். அது நாராயணன் செயல்:-)

said...

வாங்க குமார்.

ஏற்கெனவே 55 வருசம் லேட். இதுலே இன்னும் எவ்வளவு பிந்தினால்தான் என்ன?

said...

வாங்க கொத்ஸ்.

தங்கம் தேடிப்போன கந்தன் மனசுக்குள்ளே(யே) உக்கார்ந்துக்கிட்டான் போல:-)))

நாராயணா நாராயணா....

said...

கதை அருமையாகப் போகிறது - எளிமையான சொற்கள். அலங்காரமில்லாத சொற்கள். இயல்பா பேசிக்கறாங்க - வீட்டுக்கு வரும்போது ஏதாவது வாங்கிட்டுப் போகணும் - தங்கைகளை கரையேத்தணும் - அப்பா சித்தப்பா அதைகள் பாக்கணும் - சேவு ( இனிப்புச் சேவும் இங்கே உண்டு) - வீட்டுக் கதைகள் - பஞ்சாப் கதைகள் - தானே சப்பாத்தி போடறது - குத்துக்கால் போட்டு - வெறும் தண்ணீ ஊத்தி மாவு பெசஞ்சு - ம்ம்ம்ம் - தோட்ட வேலை செய்யுறது - தங்கைகளே கனவோட கூட்டிப் போறது -

எல்லாம் அனுபவிச்சு ரசிச்சு எழுதி இருக்கீங்க - நானும் ரசிச்சேன்.

3ம் பாகம் எதிர் பார்க்கிறேன்.

//சோகமா எதுவும் முடிச்சீங்களோ தெரியும் சேதி:-)))))
//

நாராயணன் செயலோ - துளசி செயலோ - பாத்துக்கங்க

said...

ம்ம்ம்...அடுத்து..?

அப்பா மாதிரி புள்ளையும் இல்லமால் இருந்தால் சரிதான்.

said...

டீச்சர் சூப்பர். இதே போல் எனக்கு பாதி அனுபவம் இருக்கிறது.
உங்கள் நடை நன்றாக இருக்கிறது. படித்ததும் ஞாபகம் வந்தவர் 'கல்கி'பத்திரிகையின் ஆசிரியர் சீதா ரவி.(கல்கியின் பேத்தி) அவர் எழுத்து நடை இந்த கதையின் நடை போல்தான் இருக்கும். வாழ்த்துகள். மூன்றாவது பயணத்தை எதிர்பார்க்கிறேன்.


மேற்படிப் பின்னூட்டம் நம்ம ஆடுமாடு கிட்டே இருந்து வந்துள்ளது. அதன்கூடவே சொந்த விஷயமா ஒன்னு எழுதி இருக்கார். அதான் அதை விட்டுட்டுக் கட் & பேஸ்டா இங்கே போட்டுருக்கேன்.

said...

வாங்க சீனா.

எழுதினதை வரிக்கு வரி அனுபவிச்சுப் படிச்சிட்டீங்க!!!!!

அதுக்கே ஒரு ஸ்பெஷல் நன்றி சொல்லணும்.

சொல்லிக்கறேன்.

said...

வாங்க கோபிநாத்.

தாயைப்போல் பிள்ளைன்னுதானே பழமொழி இருக்கு:-))))

தகப்பனை எதுக்கு இழுக்கறீங்க?

எனக்கும் ஹரி, அப்பனைப்போல் இருக்கக்கூடாதுன்றதுதான் விருப்பம்.

பார்க்கலாம். காலம் எப்படி மக்கள் மனசை மாத்துதுன்னு.

said...

வாங்க ஆடுமாடு.

உங்க பின்னூட்டத்தை வெட்டி இங்கே போட்டேன்.

பெரியவங்க நடை மாதிரி இரூக்குன்னு சொல்லிட்டீங்க. கிடைச்ச புகழை நாலு பேருக்குச் சொல்லிக்கவேணாமா? அதான்.......

சீதாரவி எழுதுன ஒண்ணையும் இதுவரை படிச்சதில்லீங்களே.

நீங்க சொன்னபிறகுதான் தெரியும் இப்படி ஒருத்தர் இருக்காங்கன்னு.

தமிழ்நாட்டுடன் முக்கியமா கல்கியுடன் தொடர்பு விட்டுப்போய் முப்பது வருசத்துக்கு மேலே ஆச்சு.

கல்கி ராஜேந்திரன் வரை தெரியும்.

said...

நல்லா போய்கிட்டிருக்கு. தொடருங்கள்.

said...

நன்றி மங்கை.

தொடர்ந்து நீங்களும் வந்துபோங்க.

said...

துளசி உங்கள் பதிவுக்கு அடிக்கடி வருவதுண்டு. நேற்று இங்கு ஆஸ்திரேலியாவில் உங்கள் ஊரில் நில நடுக்கம் என்று டிவியில் காட்டினார்கள்.நீங்கள் எங்கே என்று தெரியாது. இருந்தாலும் உங்கள் குடும்பத்துக்கோ உங்களுக்கோ ஒன்றும் இல்லை என்று தெரிந்துகொள்ள இந்த பின்னூட்டம்.

said...

வாங்க சீதா.

நில நடுக்கம் வடக்குத்தீவில்தான். வியாழன் ராத்திரி 8.55 மணிக்கு ஏற்பட்டது.6.8 அளவு. நான் வசிக்கும் கிறைஸ்ட்சர்ச் நகரத்திலும் இது( தெற்குத்தீவு) உணரப்பட்டதாம். அந்த சமயம் நாங்கள் லேட் நைட் ஷாப்பிங் முடிச்சுக் காரில் வந்துக்கிட்டு இருந்தோம். ஒண்ணும் வித்தியாசமா தெரியலை.

ஒருத்தர் இறந்துட்டாங்க. அதுவும் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் அதிர்ச்சியில் மாரடைப்பு.

பொருட்சேதாரம் கூடுதல். இங்கே நியூஸியில் இருக்கும் மற்ற 2 பதிவர்களும் வெலிங்க்டனில் இருக்கிறார்கள்.

நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி கிஸ்பர்ன்/ஹாக்ஸ் பே ஏரியா. நியூஸியின் கிழக்குப்பகுதி.

தங்கள் அன்பான விசாரிப்புக்கு நன்றி சீதா.
அனைவரும் நலமே.

said...

அப்பா சரியில்லாத பல குடும்பங்கள் மூத்த பிள்ளையின்
(பெண்ணின்) தியாகத்தினால் எழுந்து நின்றதும் உண்டு.
அதே சமயம் மூத்தவனின் அலட்சியத்தால் சிதறியதும்
உண்டு. இந்த ஹரி (திருவேங்கடத்தான்) என்ன செய்யப்
போகிறானோ தெரியல்லையே?
நிற்க. ஹரி தன் பிள்ளை இல்லை எனத்தெரிந்த எனது
அண்டை வீட்டு ப்பெண்மணி ஹரி என்ன படிப்பு,
என்ன வயசு, என்று என்னைப் பிடித்துத் தின்கிறாள்.
ஹரிக்கு ஒரு கலியாணத்தைப்பண்ணி வைக்க
உத்தேசமிருக்கிறதா‌
துளசி மேடம் ?

சுப்புரத்தினம்
தஞ்சை.

said...

இப்பத்தான் படிக்க முடிந்தது. அடுத்த பதிவுக்கு காத்திருக்கிறேன்.

said...

வாங்க சுப்புரத்தினம்.

கல்யாணவயசுலேதானே இருக்கான் ஹரி. பின்னே அவனுக்கொரு கல்யாணம் பண்ணிப்பார்க்கணும்தானே?

கன்னி இருக்கக் காளை மணை ஏறலாமா? அதுவும் மூன்று கன்னிகள்.

முதலில் அவுங்களைக் கரையேத்திட்டு
வரட்டுமே.....

அவனுக்குன்னு ஒருத்தி பிறந்திருப்பாள்தானே?

said...

வாங்க மதுரையம்பதி.

கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துலே 'மூழ்கி' இருக்கேன்.

ரெண்டொருநாளில் அடுத்தபதிவை எதிர்பார்க்கலாம்:-)

said...

சேவு தான் உயர்ந்த பண்டம்.. :)
ம்... ரொம்ப நல்ல வர்ணிச்சிருக்கீங்க ஒவ்வொரு நிகழ்ச்சியையும்..

said...

வாங்க முத்துலெட்சுமி.

சேவிற் சிறந்தது யாதுள? ன்னு பாட்டியைக் கேட்டிருக்கணும்:-)))))

said...

கதை ரொம்ப வேகமா ரயில் வேகத்துல தான் போகுது அக்கா. நல்லா இயற்கையா இருக்கு.

கொத்தனாரின் கந்தன் குழப்பம் தங்கம் தேடிப் போனக் கந்தனால மட்டும் இல்லை திருவண்ணாமலைக் கந்தனாலயும்னு நினைக்கிறேன். :-) சரியா கொத்ஸ்?

said...

வாங்க குமரன்.

குழப்பத்தின் மறு பெயர் 'நம்ம' கொத்ஸ்? :-))))))